தமிழில் வழிபாடு - 2
தமிழில் வழிபாடு - 2
ஆதிசங்கரரின்
கோட்பாட்டை அத்துவைதம் என்பர். அ+துவைதம், இரண்டன்மை என்று இதை அழைக்கலாம். அது
மூன்று பகுதிகளைக் கொண்டது. அவை ஒன்றுக்கொன்று ஏரண(தருக்க)த் தொடர்பில்லாதவை போல்
தோன்றும். ஆனால் அத்தகைய ஒரு தொடர்பிருப்பதைக் காணலாம்.
1)
ஆதன்(ஆன்மா), பேராதன்(பரமான்மா)
என்று இரண்டு கிடையாது. அனைத்து உயிர்களிலும் இருப்பது ஒரே பேராதன்தான்.
2)
உலகில் நாம் காணும் அனைத்தும மாயையே.
வெறும் உருவெளித்தோற்றங்களே அனைத்தும் மனங்களில்தாம் உள்ளன. அதற்கு வெளியே
எதுவுமில்லை.
3)
இறைவனுக்குப் பணிவிடைகள் தேவையில்லை.
வேதங்கள்தாம் அனைத்துக்கும் மூலமானவை. அவற்றைப் பற்றிய அறிவும் வேதங்களை
ஒதுவதும்தாம் ஆதனை முழுமையடையச் செய்யும் என்பவை.
இவற்றில் முதல் பகுதி சாதி உயர்வு - தாழ்வுக்கு எதிரான ஒரு கோட்பாட்டு அடிப்படையை முன்வைக்கிறது. ஆனால் இரண்டாம்
பகுதி அதைத் தந்திரமாக மறுக்கிறது. சாதிகளில் உயர்ந்தவனாகக் கருதப்படும்
பார்ப்பானும் அனைவருக்கும் அடி மட்டத்திலுள்ளவனாகக் கருதப்படும் அரிப்பனும்
அவர்களுக்கு இடையில் தமக்குள் ஏற்றத் தாழ்வுள்ளவையாக எண்ணற்ற சாதிகளாகவும்
பிரிந்திருப்பவை எல்லாம் உண்மையல்ல, அவை வெறும் உருவெளித் தோற்றங்களே, அவற்றை நாம்
பொருட்படுத்த வேண்டியதில்லை. வெறும் மாயை இருந்தாலென்ன, மறைந்தாலென்ன, இருந்து
விட்டுத்தான் போகட்டுமே! அதற்காகச் சண்டையும் பூசலும் எதற்கு என்பதுதான் அந்தத்
தந்திரம்.
மூன்றாவது பகுதி ஆழமானது,
அடிப்படையானது; தமிழகத்தின் சாதிய இயங்கியலின் இயல்பைப் புரிந்து கொள்ள உதவுவது.
கழகக் காலத்தில் அரசர்களைப் போற்றிப்
பாடி வேள்விகள் நடத்திப் பெரும் பரிசில்களையும் முற்றூட்டுகளாக நிலங்களையும்
பெற்றவர்களும் கோவலனுக்கு மறைவழி காட்டி மணமுடித்து வைத்த மாமுது பார்ப்பானும்
வேதப் பார்ப்பனர்கள் அதாவது சுமார்த்தார்கள். ஆகம முறை வளர்ச்சி பெற்ற போது, அம்மண,
புத்த சமயங்களால் செல்வாக்கிழந்திருந்த இந்த வேதப் பார்ப்பனர்கள் அதில்
ஈடுபட்டனர். அத்துடன் பார்ப்பனரல்லாதவர்களும் பார்ப்பனர்களாக மாறினர்.
இறைவனை அரசனாகக் கருதி பணிவிடைகள்
செய்யும் ஆகமமுறையை மறுத்து வேத முறையைச் சரியென்று சங்கரர் கூறியதன் பொருள்,
பழமையான வேதப் பார்ப்பனர்கள் சாதியுயர்வு பெற்று வந்த ஆகமப் பார்ப்பனரிடமிருந்து
தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டுமென்பதற்கே. இந்த நோக்கத்துடன் பார்ப்பனரான
சங்கரர் நிறுவிய மடங்கள் பார்ப்பனரான சம்பந்தர் தொடங்கி வைத்த சாதி ஒழிப்பு
முயற்சியை மறுத்து ஒரு சுற்றுச் சுற்றி புறப்பட்ட இடத்துக்கே கொண்டுவந்துவிட்டது.
நெருக்கடிகள் வரும் போது நாமெல்லோரும் சமம் என்பதும் நெருக்கடி தீர்ந்ததும் நான்
உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன், உன் பழைய இடத்துக்குப் போய்விடு என்பதும். இது
தமிழகத்தில் திரும்பத் திரும்ப நிகழ்ந்துள்ள ஒன்றாகும்.
மாலியத்திலும்(வைணவத்திலும்) இதைத் தடம்பிடிக்க முடியும்.
மாலியம் சிவனியத்தோடு சரிசமமாக
நிலவிவரும் சமயமாகும். சிவனியம் வேளாண்மை மீது ஆதிக்கம் செலுத்திய வெள்ளாளரின்
சமயமென்றால் மாலியம், கால்நடைகளை வளர்க்கும் ஆயர்கள், குறும்பர்கள் ஆகிய இடைக்
குலத்தாரின் சமயமாகும்.
பொதுவாகவே கால்நடையின் கட்டற்ற
மேய்ச்சல் வேளாண்மைக்கும் அடர்பசுமைக்கும் முரணானது. தொல்காப்பியத்தில்
ஆயர்களின் மேய்ச்சல் களனான முல்லை நிலம் காடும் காடு சார்ந்த இடமுமாகக்
குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இன்று தமிழகத்தில் மேய்ச்சல் நிலங்கள் அரைப் பாலைநிலமாக
விளங்குகின்றன; ஆத்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் புல்வெளிகளாக உள்ளன.
மேய்ச்சலை முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்த யூதர்களின் வாழிடங்களும் வாணிகத்தையும்
மேய்ச்சலையும் தொழில்களாகக் கொண்டிருந்த அரேபியர்களின் வாழிடங்களும்
பாலைநிலங்களாகவே மாறிவிட்டன. காடுகள் மேய்ச்சல் நிலங்களாக மாறிவிட்டால் அதிலுள்ள
மரங்கள் முதுமையடைந்து மடிந்து விட்ட பின்னர் புதிய மரங்கள் வளர்வதற்குக் கால்நடை
மேய்ச்சல் இடம் தராது என்பதுதான் இதற்குக் காரணம். இன்றும் ஆடு - மாடு மேய்ப்பவர்களுக்கும்
வேளாண்மை செய்வோருக்கும் இடையில் சச்சரவுகள் நடப்பதைக் காணலாம். இந்த முரண்பாடு
தமிழகத்தில் இரு சமயங்களின் முரண்பாடாகவே வெளிப்பட்டிருக்கிறது. வரலாற்றுக்
காலத்தில் மாலியத்தின் முதன்மைக் கடவுளாகக் கண்ணனே விளங்குவதற்கு இதுதான் காரணம்.
கண்ணன் வரலாறு இரு பகுதிகளைக்
கொண்டது. ஒன்று தமிழகத் தொடர்புடையது. இன்னொன்று வட இந்தியத் தொடர்புடையது.
தமிழகக் கண்ணன் ஏறுதழுவி ஆயர் பெண்களை மணந்தவனாகக் கூறப்படுகிறான். மாபாரதக்
கண்ணனுக்கு இது கூறப்படவில்லை. தமிழகக் கண்ணனின் காதலி நப்பின்னை. சிலப்பதிகாரம்
ஆய்ச்சியர் குரவையில் தரும்செய்திகளிலிருந்து அவள் கண்ணனின் தங்கை, பின், பின்னை என்றே கூறப்படுகிறாள். மகாபாரதக்
கண்ணனின் காதலி ராதை. தமிழகக் கண்ணனின் தாய் யசோதை. அசோதை பெற்றெடுத்த
என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்; (ஆய்ச்சியர் குரவை). மாபாரதக்
கண்ணனின் தாய் தேவகி. இந்த இரு கண்ணன்களின் சில செய்திகளை இணைத்து
உருவாக்கப்பட்டவன்தான் பதின் தோற்றரவு(தசாவதார)க் கிட்ணன். அவனது குழந்தைப் பருவ
நிகழ்ச்சிகள் குமரிக் கண்டத்தில் வாழ்ந்த தமிழ்க்
கண்ணனுக்குரியவை. அதுவரை இறைச்சிக்காக வளர்க்கப்பட்ட மாடுகள் பாலுக்காகவும்
பால்படுபொருட்களான தயிர், மோர், வெண்ணெய், நெய் போன்ற ஆனைந்துகளுக்காகவும்
உழவுக்கும் பொதி சுமக்கவும் வாணிகப் பண்டங்களாக மாற்றப்பட்டதையே தமிழகக் கண்ணனின்
கதை நமக்குக் கூறுகிறது. காளைகளைப் பயிற்றுவிக்கும், அதாவது வசக்கும் கலையை வளர்ப்பதே ஏறுதழுவலின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.
கழக இலக்கியங்களிலும் தொல்காப்பியத்திலும்
மாடு வளர்ப்போரான ஆயர்(ஆ→ ஆயர்)களைப் பற்றிய குறிப்புகளே உள்ளன. ஆடு
வளர்ப்போர் பற்றிய குறிப்பு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் குறும்பர்
என்ற ஒரு மக்கட் குழுவினரைப் பற்றிய குறிப்பு உள்ளது. தமிழகத்தில் வேளாண்மையை
விரிவுபடுத்திய இரு கரிகாலன்களில்(கரிகாலன் என்ற பெயரில் மூவர் இருந்தனர் என்றும்
கூறுகின்றனர். இராசராசனின் அண்ணனும் அரண்மனைச் சூழ்ச்சியால் கொலைப்பட்டவனுமாக
ஆதித்த கரிகாலனைச் சேர்த்தால் இது சரிதான்) ஒருவன் குறும்பர்களை அடக்கிப் பணிய
வைத்தவனாகக் கூறப்படுகிறான். வேளாண்மை விரிவாக்கத்துக்குத் தடையாக இருந்த
மேய்ச்சலைக் கட்டுப்படுத்திய ஒரு முயற்சியாக இதைக் கொள்ளலாம்.
தமிழகத்தில் இன்று குறும்பர் என்றொரு
வகுப்பார் இல்லை. கோனார்கள் எனப்படும் இடையர்களின் ஒரு பிரிவாக அவர்கள்
இணைந்திருக்கலாம். ஆனால் கேரளத்தில் குறுப்புகள் அல்லது கிட்ணவகையினர் எனப்படுவோர்
இவர்களாகவே இருக்க வேண்டும்.
இந்தியாவில் மாலியத்தின் (வைணவத்தின்) தோற்றப் பின்னணி சரியாக
விளங்கவில்லை. சில தடயங்களிலிருந்து நாகர்களுக்குள் இருந்த எதிரெதிரான இரு குழுக்களுக்குள் ஏற்பட்ட மோதலில் வென்றவரின் அடையாளமாகவும் அரசியல்
அமைப்பாகவும் மாலியம் உருவாகியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
தமிழக மக்கள் ஏழு
குக்குலங்களின்(மூலக்குடிகளின்) தொகுப்பு. அக்குக்குலங்களின் முதல்வர்கள் ஏழு மாதர்கள்
என்றும் ஏழு கன்னியர் என்றும் அழைக்கப்படுவர். பின்னர் இக்குக்குலங்களின் தலைமை
குக்குலப் பூசகர்களிடம் நிலைத்தது. அத்தலைவர்களை ஏழு முனிவர்கள் என்று அழைப்பர்.
ஏழு மாதர்களில் இளையவள்
பிடாரி(பிடாரன்→ பிடாரி).
அவள் மிகுந்த சினமுடையவள். பாண்டியன் அவையில் முறை கேட்பதற்காகக் கையிற்
சிலம்புடன் வாயிலில் நின்ற கண்ணகியைப் பற்றி அரசனிடம் எடுத்துக் கூறும்
வாயிற்காவலன் வாயிலாக கண்ணகியின் சீற்றம் செறித்த கோலத்தை விளக்க,
அறுவர்க் கிளைய நங்கை
இறைவனை
ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக்
கானகம் உகந்த காளி தாருகன்
பேருரங் கிழிந்த பெண்ணு மல்லள்
என்று
கூறுகிறார் இளங்கோவடிகள்.
இளையவளாகிய நாக கன்னிகை என்ற பெண்ணும்
அவளது தமக்கையாகிய தெய்வ கன்னிகை என்ற பெண்ணும் போட்ட பந்தயத்தில் மூத்தவள்
தோற்றுப்போய் தங்கைக்கு அடிமையானாள். அவளது மகனான கருடனின் முயற்சியால் அவள் விடுதலை
பெற்றாள். இந்தக் கதை மகாபாரதத்தில் வருகிறது. இவ்வாறு கருடனுக்கும்
நாகத்துக்கும் இயற்கையில் மட்டுமல்ல அவற்றைக் குலக்குறி (தோற்றக்குறி)யாகக் கொண்ட
மக்களிடையிலும் பகைமை இருந்தது. அது மகாபாரதப் போரிலும் வெளிப்படுகிறது.
துரியோதனனின் கொடி பாம்பு, கண்ணனின் கொடி கருடன் என்பது ஒப்பிட்டுப் பார்க்கத்
தக்கது.
இந்தியத் தெய்வங்கள் அனைத்துடனும்
தொடர்புடையது நாகம். திருமாலின் படுக்கையும் குடையும் நாகமே. ஆனால் சிவனின்
தலையில் இருக்கும் பாம்பு சிவனுக்கும் நாகர்களுக்கும் இடையிலான நெருக்கமான உறவைக்
காட்டுகிறது.
இவ்வாறு சிவனியமும் மாலியமும்
எதிரெதிர் நலன்களைக் கொண்ட மக்கள் குழுக்களின் அடையாளங்களாக, அரசியல் அரங்கங்களாகவே
தோற்றம் கொண்டுள்ளமை புலப்படும்.
வட மதுரையை(இது யமுனை ஆற்றின் கரையில்
உள்ளது) ஆண்ட கிட்ணன் சிசுபாலன் என்ற நாக மன்னனிடம் தோற்று குசராத்துக்
கடற்கரையில் இன்று கடலினுள் முழுகிப் போனதாய்த் தொல்பொருள் ஆய்வர்களால் உறுதி
செய்யப்பட்டுள்ள துவரைக்கு ஓடி அங்கு ஆட்சி அமைத்தது
தொன்மங்களிலிருந்து(புராணங்களிலிருந்து) கிடைக்கும் ஒரு வரலாற்றுக் குறிப்பு.
சிசுநாகர்களிடமிருந்து நந்தர்கள் மகதத்தின் ஆட்சியைப் பறித்ததும் அவர்களிடமிருந்து
மோரியர்கள் பறித்ததும் வரலாற்றுப் பதிவுகள். மோரியர்களின் வீழ்ச்சிக்குப் பின்
மீண்டும் நாகர்கள் சிறு சிறு அரசுகளை அமைத்தனர். அவர்களை வீழ்த்திப் புதிய அரசைக்
குப்தர்கள் அமைத்த இடைவேளையில் கிட்ணனைத் தெய்வமாகவும் பதின்தோற்றரவு(தசாவதாரம்)
அடிப்படையில் திருமாலையும் மாலியத்தையும் உருவாக்கும் முயற்சியிலும் அப்போது
வடமேற்கு இந்தியாவில் ஆட்சியில் இருந்த கிரேக்கர்களின் பங்கு இருக்கலாம் என்று
தெரிகிறது. அதனால்தான் புத்த சாதகக் கதைகளில் ஒன்றான தசரத சாதகத்தில் வரும்
காசியைத் தலைநகராகக் கொண்ட இராமனின் கதையில் கிரேக்கக் காவியமான இலியடின்
கதைக் கருவை இணைத்து இராமாயணம் இயற்றப்பட்டுள்ளது. அவனது தலைநகரமும் அயோத்தி
ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் மகாபாரதத்தில் அத்தகைய கிரேக்கத் தாக்கம்
தெரியவில்லை. ஆனால் அது கிட்ணனுக்கும் நாகர்களுக்குமான போரின் விளக்கமே. அதில் வட இந்தியச்
சிற்றரசர்களின் பங்கு கூறப்பட்டுள்ளது. பல செய்திகள் குமரிக் கண்டத்தில்
நிகழ்ந்தனவாகக் கருத இடமுள்ளது. ″ஆரியர்″ வரவால் நிகழ்ந்தவை எனக் கூறப்படும்
செய்திகள் அனைத்தும் குசராத்துக் கடற்கரையிலும் பிறவிடங்களிலும் வந்தேறிய குமரிக்
கண்ட மக்களுக்குரியனவாக நம்மால் விளக்க முடியும். அவ்வாறு வந்தேறிய, தொடர்ந்த கடற்கோள்களுக்கு
உள்ளான குமரிக் கண்டத்திலிருந்து தப்பிய மக்களுக்கு உரியனவாக நம்மால் விளக்க
முடியும். அவ்வாறு வேந்தேறிய குமரிக் கண்ட மக்களுக்கும் உள்நாட்டு மக்களுக்கும்
இடையில் முரண்பாடுகள் நிலவின. கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து வடமேற்கு
இந்தியாவைக் கைப்பற்றி வைத்திருந்த பாரசிகர்களோடும் கி.மு. நான்காம் நூற்றாண்டில்
படையெடுத்த அலெக்சாண்டரைத் தொடர்ந்து அப்பகுதியில் ஆட்சிபுரிந்த கிரேக்கர்களோடும்
வந்தேறிக் குமரிக் கண்ட மக்கள், உள்நாட்டு மக்களிடமிருந்து வந்த அறைகூவலை
எதிர்கொள்ள ஏற்படுத்திக் கொண்ட கலப்பின் விளைவே இன்று ″ஆரிய இன″ வரவால்
ஏற்பட்டதெனப் பொதுவாகக் கருதப்படும் பண்பாட்டின் தோற்றமாகும். இந்தக்
காலகட்டத்தில் ஆட்சியாளர்களும் பூசகர்களும் உருவாக்கிய முழுச் செயற்கை மொழியாகிய
சமற்கிருதத்தில் பாரசீக, ஐரோப்பிய மொழிச் சொற்கள் கலந்திருப்பதற்கு இந்த
பின்னணிதான் காரணம். இந்தச் சொற்கலப்பை வைத்துத்தான் மாக்சுமுல்லர் கற்பனையான ″ஆரிய
இனத்″தையும் ஆரிய மொழிக் குடும்பம் என்ற தவறான அடிப்படையிலமைந்த ஒரு உலகமொழி
வகைப்பாட்டையும் உருவாக்கிய வரலாற்று நேர்ச்சி(விபத்து) நிகழ்ந்தது. உண்மையில்
சமற்கிருதத்துக்கும் ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையிலுள்ள உறவு, தமிழுக்கும்
ஐரோப்பிய மொழிகளுக்கும் தமிழுக்கும் சமற்கிருதத்துக்கும் இடையிலுள்ள உறவுகளை விட
மிக மெல்லியது.
இருக்கு வேதம், தொன்மங்கள்
ஆகியவற்றைத் திறந்த மனதுடன் ஆய்ந்தால் நெய்தல் நிலத் தலைவன் வருணனுக்கும் மருத
நிலத் தலைவன் இந்திரனுக்கும் அந்த இந்திரனுக்கும் முல்லை நிலத் தலைவன்
கண்ணனுக்கும் நடைபெற்ற போர்களும் அந்தக் கண்ணனும் குறிஞ்சி நிலத்துக்குரிய ஒரு
வேடனால் இறப்பெய்துவதும் தொல்காப்பிய ஐந்திணைக் கோட்பாட்டோடு
பொருந்துவதைக் காணலாம். பாலை நிலம் இந்த மாற்றங்களில் பங்கேற்காமல் தொடர்ந்து பெண்
தெய்வத்தைக் கொண்டிருந்தது. அதாவது தொல்காப்பியத்தின் முன்பே தமிழ்
மக்களிடையில் நிலைபெற்றுவிட்ட ஐந்திணைப் பாகுபாட்டுக்கு முந்திய குமரிக் கண்ட
வரலாற்றுத் தடயங்களாகும் இவை.
மகாபாரதக் கண்ணனின் தந்தையாகக்
கூறப்படும் வாசுதேவன் எந்த மக்கட் பிரிவைச் சேர்ந்தவன் என்று தெரியவில்லை. ஆனால்
அவனது வளர்ப்புத் தந்தையாகக் கூறப்படும் ″நந்த″ கோபன் பெயரை அடிப்படையாகக் கொண்டே
நந்த மரபு வெளிப்பட்டுள்ளது. தொன்மங்கள் கூறுகிறவாறு இவர்கள் ஆயர்களாகவே இருக்க
வேண்டும்.
வடக்கில் போன்று தமிழகத்திலும்
உள்நாட்டு மக்களுக்கும் குமரிக் கண்டத்திலிருந்து வடக்கு நோக்கி நகர்ந்து வந்து
தம் ஆட்சிப் பரப்புகளை ஏற்படுத்திக்கொண்ட மூவேந்தர்களுக்கும் இடையிலான மோதல்கள்
நிகழ்ந்திருக்க வேண்டும். பறையர், துடியர், பாணர், கடம்பர் போன்ற பழந்தமிழ் குடித்
தலைவர்களை மூவேந்தர்கள் ஒடுக்கியிருக்க வேண்டும். பறையரும் துடியரும் பாணரும்
மாந்த நூலார்(மானிடவியலார்) கூறும் சாமன்கள் எனும் தலைவர்கள் ஆவர்.
உள்ளூராட்சி, மருத்துவம், பூசகம், மந்திரம் போன்றவற்றில் வல்லவர்கள் சாமன்கள்.
புலன்களை அடக்கவும் அகமனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் உடலை வருத்தும்
பயிற்சிகளை மேற்கொண்டு இவர்கள் பிறரின் அகமனதுடன் தொடர்பு கொள்ளும் ஆற்றலைப் பெறுகின்றனர்.
இவ்வாறு ஐம்புலன்களை அடக்கிப் புதிய ஆற்றலைப் பெறும் நிகழ்முறையை இறந்து மறுபிறப்
பெய்துதலோடு ஒப்பிட்டுக் கூறுவர் மாந்த நூலார். பார்ப்பனர்களை இருபிறப்பாளர் என்று
கூறுவதற்கும் இதற்கும் சொல் ஒப்புமை இருப்பதைக் காணலாம். சாமன்கள் மேற்கொள்ளும்
உடல் வருத்தும் பயிற்சிகள் எவற்றையும் பார்ப்பனர்கள் மேற்கொள்வதில்லை. ஆனால் நம்
தொன்மங்களில் முனிவர்கள் மேற்கொள்வனவாகக் கூறப்படும் தவ முறைகள் சாமன்களின்
பயிற்சிகளோடு மிகவும் ஒத்து வருகின்றன. அகமனத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும்
பயிற்சிகளால் அவர்கள் எய்தும் ஆற்றல்களில் முகாமையானவை எதிராளியின் மனதை அறிவதும்
அவனது அகமனதோடு தொடர்பு கொண்டு அவனது செயல்களை அதன் மூலம்
கட்டுப்படுத்துவதுமாகும். இன்றைய மருத்துவத்தில் கடைப்பிடிக்கப்படும் இப்னாட்டிசம்,
மெசுமரிசம் போன்ற வசிய ஆற்றல்தான் அது. இந்த ஆற்றலைக் கொண்டு அவர்கள் மக்களுக்கு
நன்மையும் செய்ய முடியும், தீமையும் செய்ய முடியும். முனிவர்களுக்கும் இது
பொருந்தி வருவதைக் பார்க்கலாம். எனவே சாமன்களுக்கு எளிய மக்கள் அஞ்சி அடங்கி
ஒடுங்கி வாழ்ந்தனர். எதிராளிகளை வசியம் செய்ய அவர்களது கவனத்தை ஒருமுகப்படுத்த
வேண்டும். அதற்குத் துணைபுரிவது இசையாகும். சாமன்கள் எப்போதும் தங்களோடு ஒரு தோல்
இசைக் கருவியை வைத்திருப்பார்கள் என்று மாந்த நூல் கூறுகிறது. இன்றும்
குறிசொல்வோரும் பேயோட்டுவோரும் சாமியாடுவோரும் இசைக்கருவிகளை, குறிப்பாக உடுக்கு
போன்ற தோல் கருவிகளைப் பயன்படுத்துவதைக் காணலாம். தெருவில் செப்பிடுவித்தை எனும்
மந்திரவித்தை காட்டுவோரும் குறளி எனும் சிறுபொம்மை, மண்டையோடு போன்ற பொருட்களைக்
கூர்ந்து பார்க்குமாறு கேட்பதையும் உடுக்கு, குடுகுடுப்பை போன்ற கருவிகளை
இசைப்பதையும் காணலாம். அதனால்தான் இதனை குறளிவித்தை என்றும் கூறுவர். இந்த வகையில்
பறையை இசைக்கும் பறையர்களும் துடி எனும் உடுக்கையை இசைக்கருவியாகக் கொண்ட துடியர்
எனப்படுவோரும் பாணர்களும் கடம்பர் எனும் ஒரு மக்கள் குழுவினரும்தாம் குடிகள்
என்றொரு கழக (சங்க)ப் பாடல் குறிக்கிறது. இவர்கள் குமரிக் கண்ட மக்கள் இன்றைய தமிழகத்தில்
குடியேறும் முன்னர் வாழ்ந்த தலைமக்களாக இருக்க வேண்டும். வந்தேறிய மக்களை
எதிர்த்துப் போராடியோரில் தோற்றவர்கள் ஒடுக்கப்பட்டிருக்க வேண்டும். எதிரிகளோடு
இணக்கம் கண்டவர்கள் பெரும் பாதிப்பிலிருந்து தப்பியிருக்க வேண்டும். உள்நாட்டு
மக்களுக்கும் வந்தேறிய குமரிக் கண்டம் மக்களுக்கும் நடைபெற்ற மோதல்களை மறைக்கும்
பணியைக் கழக இலக்கியத்தைத் தொகுத்தோர் செய்துள்ளனர். அவர்களது எச்சரிக்கையையும்
மீறிச் சில சிதறல்கள் அகப்படுகின்றன[1].
அவற்றுள் ஒன்றுதான் நாம் மேலே சுட்டிய பாடல். இந்த மறைப்பு வேலையினால்தான்
கி.மு.நான்காம் நூற்றாண்டுக்கு முந்திய தமிழக வரலாற்றை நம்மால் தடம் பிடிக்க
முடியவில்லை.
மொத்தத்தில் இந்தியாவினுள்ளும்
தமிழகத்தினுள்ளும் ″ஆரியர்″ வருகை என்ற இன்றைய வரலாற்றுக் கருத்துக்கு மாறாகக்
குமரிக் கண்ட மக்கள் வருகை என்ற வரலாற்றுக் கருத்துதான் உண்மையானது.
ஐரோப்பாவில் கி..பி. ஏழாம் நூற்றாண்டு
வாக்கில் காட்டுவிலங்காண்டி(காட்டுமிராண்டி) நிலையிலிருந்த பல்வேறு நாடோடி மக்கள்
அலையலையாகப் பாய்ந்தனர். அன்று முதுமையெய்தி கிழடுதட்டிப் போயிருந்த உரோமப்
பேரரசின் ஆட்சியாளர்களை இந்நாடோடிகள் வெற்றிகொண்டனர். தம்மால் வெற்றி கொள்ளப்பட்ட
மக்களின் உயர்ந்த பண்பாட்டை அந்நாடோடிகள் கைப்பற்றிச் சோர்ந்து கிடந்த ஐரோப்பியக்
குமுகத்துக்குப் புத்துணர்ச்சியளித்துப் புது அரத்தம்(இரத்தம்) பாய்ச்சினர்
என்பார் காரல் மார்க்சின் தோழர் ஏங்கல்சு. அந்நாடோடி மக்களில் முதன்மையானவர்கள் தியூத்தானியர் எனப்படுவோர். இன்றைய செருமானியர்கள் அவர்கள்தாம். கி.மு. 2500
வாக்கில் இந்தியாவினுள் நுழைந்தவராக மாக்சுமுல்லர் 1860களில் கதைகட்டிய ″ஆரிய″ இனத்தின்
இந்தக் கிளைதான் கி.பி. 7ஆம் நூற்றாண்டில்(ஏறக்குறைய 3200 ஆண்டுகளுக்குப் பின்)
ஐரோப்பாவுக்கு வந்ததாம். அவரது இந்தக் கதைதான் செருமானியர்கள்தாம் கலப்பற்ற ″ஆரிய″
மக்கள், அவர்கள்தாம் உலகை ஆளத் தகுதியுடையவர் என்று செருமானிய மக்களுக்கு
வெறியூட்டி இரு பெரும் உலகப் போர்களை மூட்டி பல இலக்கம் யூதர்களைக் கொன்று
கோடிக்கணக்கான உலக மக்களின் சாவுக்கும் காரணமானது. ஏனென்றால் மாக்சுமுல்லர்
செருமானியர்களை மனதில் கொண்டுதான் ″ஆரியர்″களின் உடலைமைப்பை விளக்கியிருந்தார்.
ஐரோப்பாவில் ″ஆரியர்″கள் ஏற்படுத்தியது போன்ற
புத்துணர்ச்சியையும் வலிமையையும் இந்தியாவில் புகுந்த ″ஆரியர்″களும்
இந்தியர்களுக்கு ஊட்டினர் என்று கருதும் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள். ஓர்
எடுத்துக்காட்டு: குணா. ஆனால் இந்தியாவில் நடந்தது ஐரோப்பாவில் நடந்ததற்குத்
தலைகீழான நிகழ்ச்சியாகும். இங்கு வளர்ச்சியடைந்த ஒரு மக்கள் மீது நாடோடிகள் எவரும்
படையெடுக்கவில்லை. குறைந்த வளர்ச்சி நிலையிலிருந்த மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பின்
மீது மிகுந்த வளர்ச்சியடைந்து இயற்கைச் சீற்றங்களால் அலைப்புண்டு தங்களது உயர்ந்த
பண்பாட்டின் அடித்தளமாகிய நிலத்தை இழந்து தொய்வுற்ற குமரிக் கண்ட மக்கள் சிறிது
சிறிதாக தெற்கு, கிழக்கு மேற்குக் திசைகளிலிருந்து பரவினர். அவ்வாறு பரவும் போது
உள்நாட்டு மக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டனர். அவர்களை வெற்றி கொள்ள வளர்ச்சியடைந்த
தம் அறிவுத் திறன், ஆட்சித் திறன், பிரித்தாளும் சூழ்ச்சித் திறன் ஆகியவற்றைப்
பயன்படுத்தினர். அவர்களை அடக்கினர். இறுதி வரை எதிர்த்து நின்றோர்
ஒடுக்கப்பட்டனர். வந்தேறிகள் பக்கம் சார்ந்தோர் பயன் பெற்றனர். இந்தப் பண்பாடு
வந்தோரையும் இருந்தோரையும் ஒருங்கே பற்றிக்கொண்டு இந்திய மண் மீதும் தமிழக மண்
மீதும் பிணச்சுமையாய் நிலைத்து நிற்கிறது. ஒடுக்குவதற்கும் ஒடுக்கலை
எதிர்ப்பதற்கும் அயலவரை நாடும் இந்தப் பண்பாட்டின் அடிப்படையில்தான் நம் குமுகத் தீங்குகள் அனைத்தும் சூழ்ந்து நிற்கின்றன. இத்தீங்குகளை
எதிர்த்துப் போராடப் புறப்பட்டோர் அவற்றின் அடித்தளத்தைப் புரிந்துகொள்ளாமல்
அவற்றுக்கே தாங்களும் இரையானார்கள். பழமையைப் பேணும் விசைகளை எதிர்த்து அவற்றின்
வேர்களைத் தேடி அழிப்பதற்குத் தேவையான விசைகளைத் திரட்டிப் போராடத் தவறினார்கள்.
நம் குமுகத் தீமைகளுக்கு ஒரு
குழுவினரையோ, ஒன்றோ பலவோ சாதியினரையோ குற்றம் சாட்டுவதால் தீர்வு கிடைத்துவிடாது. அதே நேரத்தில் குமுகத்தின் முகாமையான இடங்களில்
அமர்ந்துகொண்டு மாற்றங்களை எதிர்த்துக்கொண்டிருக்கும் குழுக்களையும் அறிந்தும்
அறியாமலும் அவற்றுக்குத் துணைநிற்கும் பிற குழுக்களையும் இந்தத் தீங்குளை
நிலைநிறுத்துவதில் அவை ஒவ்வொன்றும் ஏற்றுவரும் பங்குகளையும் சுட்டிக்காட்டி
மொத்தக் குமுகத்துக்கும் அவை ஆற்ற வேண்டிய பணியினை முன்னெடுத்து வைத்து அனைவரும்
இணைந்தது போராட வேண்டிய ஒரு அரங்கையும் அதற்குரிய கொள்கை - கோட்பாடுகளையும் வகுக்க
வேண்டியது உடனடித் தேவை. அந்தத் தேவையை நிறைவேற்றும் பணியில் காலத்தாழ்ச்சி இன்றி
இறங்குவோம்.
இனி, தமிழகத்தில் மாலியத்தின் வளர்ச்சி
பற்றிப் பார்ப்போம். சிலப்பதிகாரக் காலத்தில் திருமால் வழிபாடு
ஆயர்களுக்குரியதாகவே இருந்தது என்பதை ஆய்ச்சியர் குரவை காட்டுகிறது.
ஆனால் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றிய மாலிய எழுச்சியின் தலைவர்களாக
வெளிப்பட்ட பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் கூட ஆயர்குடியைச் சேர்ந்தவரில்லை என்பது வியப்பான, விந்தையான செய்தி. அது மட்டுமல்ல இன்று விளங்கும் புகழ்பெற்ற மாலியத்
″தலங்களில்″ ஒன்று கூட ஆயர்களின் வாழிடமான முல்லை நிலத்தில் இல்லை. அனைத்தும்
ஆற்றோரங்களான மருத நிலத்திலேயே அமைந்துள்ளன. விதிவிலக்குகளான திருப்பதியும்
அழகர்மலையும் குறிஞ்சி நிலத்தில் உள்ளன. இதிலிருந்து நமக்கு விளங்குவது
என்னவென்றால் மருத நில அரசியலில் மேலோங்கி நின்ற சிவனியர்களின் எதிர் அணியாக
மருத நிலத்தையும் குறிஞ்சி நிலத்தையும் சார்ந்த மக்கள் அமைத்த ஓர் அரசியல் அரங்கமே
தமிழக மாலியம் என்பதாகும்.
சமயங்கள் என்பவை ஆதனிய(ஆன்மிக)
அமைப்புகள் அல்லவே அல்ல. கடவுளுக்கும் சமயத்துக்கும் உயிருறவு எதுவும் கிடையாது.
கடவுள்கள் வெறும் அடையாளங்களே! சமயங்கள் மக்கள் சார்ந்த அரசியல் வடிவங்களே! அதே
நேரத்தில் தெய்வமும் வழிபாடும் தனி மனிதனின் உளவியல் தேவையைப் நிறைவு செய்து அவனது
தன்னம்பிக்கையை நிலை நிறுத்த உதவுகின்றன.
குறுநில மன்னர்களில் அதியமான்
போன்றோர் சேரர் குடியுடன் உறவுடையவர்கள். மலைபடு பொருட்களை உலக வாணிகத்துக்கு
ஈந்து இந்தக் குறுநில மன்னர்கள் தம் வலிமையில் வளர்ந்து வந்தனர்.
மூவேந்தர்களுக்கிடையிலான போர்களில் இவர்கள் சாரும் பக்கம் வெற்றி பெற்றது. எனவே
இவர்களை அழிக்க மூவேந்தர்களும் இணைந்தனர். கழகக் காலத்தின் இறுதியில் குறுநில
மன்னர்கள் அனைவரும் அழிக்கப்பட்டுவிட்டனர். அந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு
தமிழக வாணிகர்கள் வளர்ச்சியடைந்தனர். அவ்வாறு வளர்ச்சிடைந்த வாணிகர்கள்
மூவேந்தர்களுக்கும் அறைகூவலாக நின்றதை முன்பு கண்டோம்.
இந்த நிலையில் குறுநில மன்னர்களின்
கீழ் வாழ்ந்த மக்கள் தங்கள் வாழ்வின் வளத்துக்குத் துணையாயிருந்த உலக வாணிகம் தம்
கையை விட்டுப் போனதால் குமுறிக்கொண்டிருந்தனர். அவர்களில் கள்ளர்கள்
முதன்மையானவர்கள்.
நம் நாட்டில் ஒவ்வொரு சாதியின் தோற்றம் பற்றியும் விதம்
விதமான கருத்துகள் வெளிப்படுத்தப்படுகின்றன. சில பரிவுணர்வோடும் சில
வெறுப்புணர்வோடும் கூறப்படுகின்றன. நடுநிலையோடு கூறப்படுபவை எவை என்பதை உண்மையாக,
ஒட்டு மொத்த தமிழக மக்களின் மீதும் பரிவுணர்வுடையவர்கள் காமம், வெகுளி(விருப்பு,
வெறுப்பு) இன்றி கடின உழைப்பின் மீதுதான் கூற முடியும். நாம் இப்போது கள்ளர்கள்
பற்றி முன்வைக்கும் கருத்துகளை அது போன்ற நடுநிலை ஆய்வாளர்கள் ஆய்ந்து பார்க்க
வேண்டுகிறோம்.
கள்ளர் என்றவுடன் நம் மனதில்
பளிச்சிடுவது களவாடுவதைத் தொழிலாகக் கொண்டோர் என்பதுதான். ஆனால் களவுத் தொழிலில்
ஈடுபடுவோர் இவ்வளவு பெருந்தொகையில் ஒரு நாட்டில் வாழ முடியுமா என்பதொரு கேள்வி.
இன்னொன்று, களவு ஒரு விரும்பத்தகாத தொழிலென்று ஒரு குமுகம் கருதுமானால் இத்தகைய
ஒரு பெயரை ஒரு மக்கள் குழுவினர் இவ்வளவு காலம் தாங்கி வந்திருப்பார்களா என்பது.
ஏனென்றால் சாதிப் பெயர்களை மாற்றிக் கொள்வது தமிழகத்தில் மிகப் பரவலாகவும்
தொடர்ச்சியாகவும் நடைபெறுவதாகும். அப்படி அப்பெயர் களவு தொடர்பானதாகவே இருந்தும்
அவர்கள் அப்பெயரைப் பெருமையுடன் பயன்படுத்துகிறார்கள் என்றால் தமிழக மக்களின் அகப்
பண்பாடும் புறப் பண்பாடும் நடத்தைப் பண்பாடும் கேள்விக்குரியவாகின்றன.
கள் என்ற வினைச் சொல்லுக்குக்
களவாடுதல் என்ற பொருள் உண்டு. ஆனால் கள் என்ற பெயர்ச் சொல்லுக்கு குடிக்கும் கள்
என்பதுதான் பொருள். ஈழத்தில் கள் இறக்குவோரை நளவர் என்கின்றனர். நளவர் ← நறவர் ← நறவு = கள். அது போல் கள் → கள்ளர் என்று ஆகியிருக்கலாம். இப்போது தென் தமிழகத்தில் பனையேறும் மக்கள்
இதே பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கொள்ள முடியுமா என்பது ஐயமே, ஏனென்றால் கள்ளர்களின்
தெய்வம் கருப்பணசாமி(கரும்பனைசாமி?) நாடார்களின் தெய்வம் பத்திரகாளி(ஓலையுள்ள
கறுப்பி?). ஆனால் இரு தெய்வப் பெயர்களிலும் கருமைப் பொருள் பொதுவானது(பத்திரம் =
ஓலை; காளம் = கறுப்பு). ஒரு வேளை நாடார்களின் வரலாற்றில் கள்ளர்களின் வரலாற்றுப் பகுதி
ஒன்று மறைந்து கிடக்கலாம்.
கள்ளிறக்குவோர் தாம் கள்ளர் என்றால்
அவர்களுக்குத் தஞ்சை போன்ற மாவட்டங்களில் செல்வாக்குப் பெறும் வலிமை எங்கிருந்து
வந்தது? இது குறித்துச் சில குறிப்புகள் நமக்குத் கிடைக்கின்றன. யானை
மருப்பு(தந்தம்), மிளகு, ஏலம், சந்தனம் போன்ற எண்ணற்ற மலைச் சரக்குகளைக் காடுகளில்
திரட்டும் மக்கள் அவற்றைக் கள்ளுக் கடைகளில் போட்டு விட்டுக் கள்ளைக் குடித்துச்
சென்றனர் என்றொரு செய்தியைத் தம் சங்க கால வாணிகம் என்ற நூலில் மயிலை
சீனிவெங்கடசாமி தருகிறார். கொற்கையில் பாண்டியன்
முத்துக்குளிப்போரிடமிருந்து முத்துக்களைக் கள்ளைக் கொடுத்துப் பெற்றுக்கொண்டான்
என்று இரா. இராகவையங்கார் தன் தமிழ் வரலாறு நூலில் கூறிகிறார். ஆக,
மக்களிடமிருந்து ஏற்றுமதிக்குரிய பொருட்களைப் பெற்றுக் கொள்ளவும் அதே நேரத்தில்
அவர்களது வாங்கும் ஆற்றலை அழித்து வறுமைப்படுத்தவும் இன்று போல் அன்றும் கள்
பயன்பட்டிருக்கிறது. மலைவாழ் மக்களின் பண்பாட்டு மட்டம் உயர்ந்து விழிப்படைந்து
விடாமலிருப்பதற்காக, அவர்களை அதே மட்டத்தில் வைத்து இதுவரை செய்து வந்த கொள்ளையை
எந்தக் கேள்வியுமின்றிச் செய்வதற்காக உலக வாணிகக் குழுக்கள் மலைவாழ் மக்களின்
மரபிடங்களிலும் வாழ்முறையிலும் மாற்றம் வந்து விடாமல் பார்த்துக் கொள்வதற்கும்
அவர்கள் சிந்தனை அத்திசையில் திரும்பிவிடாமல் மயக்கும் வகையிலும் பல்லாயிரம் கோடி
பணச் செலவில் தன்னார்வ ஒற்று(தொண்டு!) நிறுவனங்களைப் பயன்படுத்திப் பல்வேறு
திசைகளிலிருந்து பல்வேறு துறைகளின் மூலம் பெரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பாளையங்கோட்டை
சேவியர் கல்லூரி, மதுரை இறையியில் கல்லூரி போன்றவை இப்பணியில் தமிழகத்தில்
நடுவங்களாகச் செயற்படுகின்றன.
கவுடில்லியர் (சாணக்கியர்) எழுதிய பொருள்
நூலில் (அர்த்த சாத்திரத்தில்) மகத நாட்டு அரசின் வருவாயை
ஈட்டும் இரு துறைகளாகச் சாராயமும் பரத்தைமை (பாலியல் வாணிகம்)த் தொழிலும்
பயன்பட்டனவாகக் கூறப்பட்டுள்ளது. இவ்விரு தொழில்களையும் அரசே மேற்கொண்டதாம்.
இன்றும் நம் நாட்டில் சாராய வாணிகத்தின் மூலம் அரசு ஏராளமான பணத்தைக்
கொள்ளையடிப்பதைக் காண்கிறோம். அதைவிடக் கூடுதலான பணம் ஆட்சியாளர்களின் பைகளை
நிரப்புகிறது. பரத்தைமைத் தொழிலும் அரசின் ஊக்குவிப்பால் சிறப்புற நடைபெறுகிறது.
அது என்ன அரசின் ஊக்குவிப்பு என்று கேட்கிறீர்களா? அதுதான் சுற்றுலாத் துறை.
சுற்றுலாவால் அரசுக்கு வருமானம் கிடைப்பதாக, அதுவும் ″விலைமதிக்க முடியாத
அயற்செலவாணி″ கிடைப்பதாகக் கூறிக்கொள்கிறார்களே அது அப்பட்டமான பொய். சுற்றுலாத்
துறைக்கு எண்ணற்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதனால் இந்தக் கையால் பெறும்
வருமானம் அந்தக் கையால் சலுகையாகப் போய்விடும். அதே போல் சுற்றுலாத் துறையில்
விடுதிகள் நடத்துவது முதல் உள்நாட்டில் சுற்றுலாப் போக்குவரத்து, கேளிக்கைப்
பகுதிகளை நிறுவுதல் என்று அடிமுதல் நுனிவரை உலகளாவிய நிறுவனங்கள்
நுழைந்துகொண்டிருக்கின்றன. ஆக, இங்கு பாயப்போவதாக இவர்கள் செல்லும் ″அயற்செலாவணி″
முழுவதும் இந்நிறுவனங்களின் கைகளில் விழுந்து வந்த வழியே திரும்பிப் போய்விடும்.
சுற்றுலாவுக்காகப் பல்வேறு வகைகளில் செலவாகும் மின்னாற்றலை உருவாக்கவும்
போக்குவரத்திலும் செலவாகும் கன்னெய்ய(பெட்ரோலியம்) பொருட்களையும் பிறவற்றையும்
இறக்குமதி செய்யத் தேவையான அயற் செலவாணிக் கணக்கையும் சேர்த்தால் மொத்தத்தில்
கடும் இழப்புதான் மிஞ்சும். அத்துடன் சூழல் பாதிப்பின் மதிப்பை அளந்தறிவது கடினம்.
இவ்வாறு சுற்றுலாத் துறையில் வெளியிலிருந்து வருவோருக்கு அடிமை வேலை
செய்வோருக்கும் பரத்தமையிலீடுபடும் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் கிடைப்பது நம்
நாட்டுப் பணமேயொழிய ஒரு சல்லிக்காசு அயற்செலவாணி கூடக் கிடைப்பதில்லை.
நம் நாட்டில் பரத்தமைத் தொழிலின்
தொடர்ச்சி விட்டுப்போகவில்லை. அன்றிலிருந்தே சமயத்தின் பெயரால் சுற்றுலாத் தொழில்
புண்ணியச் செலவு(யாத்திரை) என்ற பெயரில் நடைபெறுகிறது. கோயில்களை அடுத்த மாடவீதிப்
பெண்கள் யார் எவர் என்றில்லாமல் அனைவருக்கும் பயன்பட்டனர். கோயிலிலிருந்து
குறிப்பிட்ட தொலைவுகளுக்குள்ளிருந்த பண்ணையார்களை நிலையான வாடிக்கையாளர்களாகக்
கொண்ட ″இறைப்பணி″க் குடும்பங்களாகக் கட்டளைப் பார்ப்பனர் என்றொரு
வகுப்பினர் இருந்தனர். இவர்கள் கோயில் சிறப்பு நாட்களில் பண்ணையார் பெயரில்
போற்றி(அருச்சனை) செய்து திருவமுது(பிரசாதம்) பெற்று அனுப்புவர். பண்ணையும்
குடும்பத்தோடு சென்றால் திரும்பும் நாள்வரை அவர்கள் வீட்டிலேயே தங்கவும்
உணவுண்ணவும் வசதி கிடைக்கும். பண்ணையார் தனியாகச் சென்றால் அவ்வீட்டுப் பெண்களின்
″பணிவிடை″ அவருக்குக் கிடைக்கும். இவற்றுக்கெல்லாம் பண்ணையார் நன்செய் நிலத்தை
மானியமாக அக்குடும்பத்துக்கு வழங்கியிருப்பார்.
கோயில்கள் தவிர குறிப்பிட்ட நாள்களில்
குறிப்பிட்ட ஊர்களில் வராத்துக்கு ஒரு நாள் வீதம் ஏழு நாளும் நடைபெறும் வாரச்
சந்தைகள் உண்டு. அச்சந்தைகளுக்குச் செல்லும் நிலையான வாணிகர்களுக்கும் பொருட்களை
விற்கவும் வாங்கவும் வரும் சுற்று வட்டார மக்களுக்குமாக பரத்தையர்களும்
அவ்வாணிகர்களுடன் சுற்றி வருவதுண்டு. பால்வினை நோய்கள் பற்றினால் அதற்கு
மருத்துவர்களும் உடன்வருவர்.
தமிழகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே பலவகைப் பரத்தையர் இருந்துள்ளனர். மாதவி போன்ற இற்பரத்தையருக்கு தாலி தவிர
மனைவிக்குரிய அனைத்து உரிமைகளும் உண்டு. அண்மைக் காலம் வரை பண்ணையார்களிடம் இது
நடைமுறையிலிருந்தது. பெரியாரிடம் நெருக்கமாயிருந்த, புகழ்பெற்ற காலஞ் சென்ற நாடக -
திரைப்பட நடிகர் ஒருவருக்குத் தஞ்சை மாவட்டத்தில் அத்தகைய ஒரு இற்பரத்தை
இருந்ததாகக் கூறுவர். பல்வேறு ஊர்களில் வட்டிக்கடை நடத்திவந்த நாட்டுக் கோட்டைச்
செட்டியார்கள் ஊருக்கு ஒன்றாக வைப்பாட்டிகளை வைத்துக் கொள்வதுண்டு. கணவனின்
வைப்பாட்டிகளின் எண்ணிக்கையை மனைவிகள் தங்கள் பெருமையின் அளவுகோலாகக் கொள்வதுண்டு.
பூவிலை மடந்தையர் எனப்படுவோர் ஒரு நாள் முழுவதும் அல்லது ஒரு இரவுக்குத் தொழில்
செய்வோர் என்று பட்டியல் போடுகிறார் இளங்கோவடிகள். மதுரையில்
நுழைந்ததும் பல்வேறு பரத்தையர் தெருக்களைத்தாம் நமக்குக் காட்டுகிறார் ஊர்காண்
காதையில். பூம்புகாரிலும் தெருவில் அலையும் விலைமகளிரைக் காட்டுகிறார்.
பாண்டியன் விலைமகளிருக்குப் பல்வேறு சிறப்புரிமைகள்(விருதுகள்) வழங்கியிருந்தான்.
பாண்டிய மன்னனும் உயரதிகாரிகளும் பரத்தையர் இல்லம் சென்று வந்தனர் என்பதைக்
குறிப்பால் உணர்த்துகிறார்.
மகத அரசு பரத்தைமைத் தொழிலைத் தானே
நடத்தியதாகக் கவுடில்லியர் கூறுகிறார். தொழிலுக்குகந்த பருவத்தைத் தாண்டிய பெண்கள்
அரசுப் பதவிகளில் அமர்த்தப்பட்டனராம். அவர்களில் முதியவர்களுக்கு நல்ல வசதிகள்
செய்து கொடுக்கப்பட்டு மிகவும் மதிக்கப்பட்டார்களாம்.
இன்று நம் நாட்டில் பரத்தைமைத் தொழில் பரவலாகி
விட்டிருக்கிறது. பணி நிமித்தமாகச் செல்லும் அலுவலர்கள் தங்குவதற்கென்று ஊரெல்லாம்
ஆய்வு வளமனை(மாளிகை), போக்கர் (பயணிகள்) வளமனை என்று அரசு கட்டிவைத்திருக்கிறது.
அவற்றில், குறிப்பாகச் சென்னை போன்ற பெருநகரங்களின் சுற்றுவட்டாரங்களில்
விடுமுறைக்கு முந்திய(வெள்ளிக்கிழமை) இரவுகளில் பெரிய மனிதர்களும் அதிகாரிகளும்
பல்வேறு வகைகளிலிமைந்த ஏதோவொரு ″காதலியை″ அழைத்து வந்து தங்கிச் செல்வர். இவர்களது
தங்கல் இரவு 10 மணிக்கு மேல் 2 மணிக்குள்ளாக முடிந்துவிடும். உண்மையாகவே பணியில்
வருவோர்க்கு இடம் கிடைக்காது. இடம் இருந்தாலும் கொடுக்க மனையின் காவலருக்கு மனம்
வராது. ஏதோ காரணத்தால் நடு இரவு நேரத்தில் செல்ல நேர்ந்தால் பெண்கள் தங்கியிருந்து
அப்போதுதான் வெளியேறிய அடையாளமாகப் பல்வேறு மணங்களால் அறைகள் நிறைந்திருக்கும்.
கல்லூரி மாணவிகள், அலுவலகப் பெண்கள் என்று பலரும் வருவாதக் கூறுவார்கள். காவலர்களே
″தொழில்″ நடத்துவதும் உண்டு. இவை தவிர மாவட்டத் தலைமையகங்களிலும் குற்றாலம் போன்ற
சுற்றுலா இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா(சர்க்கியூட்) இல்லங்கள்
அமைச்சர்களுக்கும் உயரதிகாரிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் தங்கள்
வைப்பாட்டிகளோடு காமக் களியாட்டங்கள் நடத்தப் பயன்படுகின்றன. சுற்றுலாத் துறை
விடுதிகளும் அவ்வாறே. தமிழக முதலமைச்சர்கள் இதிலெல்லாம் சளைத்தவர்களிலில்லை. ஒரு
முதலமைச்சரும் நடுவண் அமைச்சர் ஒருவரும் இரு பெண் அதிகாரிகளும் பட்டப்பகலில்
சென்னை அண்ணா சாலையிலுள்ள ஒரு பொதுக் கட்டடத்தின் உயர்த்தி(லிப்ட்)யை மாடிகளுக்கு
இடைப் பகுதியில் நிறுத்தி 40 மணித்துளிகள் ″குடித்தனம்″ நடத்திய இழிசெயல் சில
ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. இச்சய்தி நாளிதழ்களிலும் வெளியானது.
இன்று கவுடில்லியர் காலத்தைப் போல்
அரசுக்கு வருமானம் தரும் துறையாக பரத்தைமைத் தொழில் இல்லைதான். காவல் துறையினருக்கும்
விடுதிக் காவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் நீதிபதிகளுக்கும் நீதிமன்ற
ஊழியர்களுக்கும் தரகர்களுக்கும் பெண்ணும் பணமும் வழங்கும் அளவோடு நிற்கிறது.
அதையும் ஒருங்கிணைத்து முறைப்படுத்தப்பட்ட வருவாய் ஆக்கிட முனைந்து நிற்கின்றனர்
ஆணுறை, பெண்ணுறை வாணிகர்கள். முதலில் பல நகரங்களில் விலைமகளிரைத் திரட்டி ″எயிட்சு
விழிப்புணர்வுப் பேரணிகள்″ நடத்தினர். ஆயிரக்கணக்கான ″எயிட்சு வழிப்புணர்வுக்
கருத்தரங்குகள்″ நடத்தியுள்ளனர். இந்தத் ″தொண்டாற்றும்″ நிலையில் படித்த ஆணும்
பெண்ணுமாக எண்ணற்றோர் வேலை பெற்றிருப்பது மட்டுமல்ல உண்மையான அவலம்;
பணியிலிருப்போரும் ஓய்வு பெற்றோருமான பல்கலைக் கழகத் துணைவேந்தர்களும்
துணைபோவதுதான் மறுக்கம்(பரிதாபம்). அரசு இதற்குக் கணிசமான பணம் ஒதுக்கி முழு
ஒத்துழைப்பு கொடுக்கிறது. இப்போது விலைமகளிருக்கு ″பாலியல் தொழிலாளர்″ என்ற பெயர்
கொடுத்து அவர்களுக்குத் தொழிற் சங்கங்கள் அமைத்து, ″தொழில்″ நடத்த உரிமம் வழங்கி
குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மருத்துவச் சான்றிதழ் வழங்க வேண்டுமென்று
கேட்டுக்கொண்டிருக்கின்றனர் ஆணுறை - பெண்ணுறை வாணிகர்கள். அப்போது அரசு,
ஆட்சியாளர்கள், மருத்துவர்கள் என்று எத்தனையோ பேருக்கு நல்ல ″வரும்படி″ கிடைக்கும்.
நாளடைவில் பருவம் தாண்டிய ″பால்வினைத் தொழிலாளர்கள்″ உயரிய அரசுப் பணிகளையும் அணி
செய்யலாம். நாம் தேர்தல்களையும் கூட்டணிகளையும் ″அணி″ மாற்றங்களையும் கட்சி
மாற்றங்களையும் ஆட்சி அமைப்புகளையும் ஆட்சிக் கவிழ்ப்புகளையும் கொண்ட இடைவிடா
நாடகத்தைப் பற்றிப் பேசுவதிலும் சிந்திப்பதிலும் எழுதுவதிலும் படிப்பதிலும்
மட்டும் நம் சிந்தனையையும் நேரத்தையும் செலவிட்டுக் கவனத்தை அந்தப் பக்கம்
திரும்பி வைத்திருந்தோமாயின் இது நடைபெறப் போவது உறுதி.
கள்ளிலிருந்து தொடங்கி வேறெங்கோ வந்து
விட்டோம். இதைத் தெரிந்தே செய்தோம். எழுத்துக்குச் சுவையூட்டுவதற்காக இவை
சொல்லப்படவில்லை. வரலாற்றுக்குத் தெரிந்த நாளிலிருந்து இன்று வரை உலக வாணிகத்தைக்
கையில் வைத்திருக்கும் ஒரு சிறு கும்பல் அனைத்து நாட்டு ஆட்சியாளர்களையும்
தரகர்களையும் துணை சேர்த்துக் கொண்டு உலகெங்குமுள்ள அடித்தள மக்களின் அடிப்படை
தேவைகளைப் பறித்துக் கொள்ளையடித்துக் கும்மாளமிட்டுக் கொண்டிருக்கின்றன என்பதைக்
காட்டத்தான். இக்கும்பலை நாம் வெற்றி கொண்டாக வேண்டும்; அந்தந்த நாட்டு மக்களின்
தேவைகளை நிறைவேற்றுவதே அந்தந்த நாட்டு அரசனின் குறிக்கோளாக வேண்டும்; அந்தந்த
நாட்டு வளங்களைக் கொண்டே அனைத்து மக்களின் தேவைகளை நிறைவேற்றும் தொழில்நுட்பங்களையும்
அத்தொழில்நுட்பங்களை உருவாக்கும் அறிவியலையும் உருவாக்க வேண்டும்; இன்று வரை
உள்நாட்டு மக்களின் தேவையை அடிப்படையாகக் கொண்ட பொருளியல் கோட்பாடு எதுவும் உலகில்
தோன்றவில்லை; அனைத்தும் உலக வாணிகம் சார்ந்தவையாகவே உள்ளன; உள்நாட்டு மக்கள் நலன்
சார்ந்த பொருளியல் கோட்பாடுகள் உருவாக்கப்படவேண்டும். இன்றைய ″பாராளுமன்ற
மக்களாட்சி″ உலக வாணிக நலன்களைப் பேணுவதற்குத் தோதாக அமைந்தது; அதை அகற்றி,
பொருளியல் வழிப்பட்ட ஒரு மக்களாட்சியை அமைக்கப்பாடுபட வேண்டும் என்பவற்றை
வலியுறுத்தத்தான்.
கள்ளை விட்ட இடத்திலிருந்து தொடர்வோம்.
கள்ளின் தோற்றம் மிகத் தோன்மையானது. ″ஆரியர்″களது படைப்பு எனப்படும் வேதங்களில்
இருவகையான குடிவகைகள்(பானங்கள்) குறிப்பிடப்படுகின்றன, சுரபானம், சோமபானம்
என்று. சுரபானம் என்பது சுரக்கின்ற பானம். நமக்குத் தெரிந்து சுரக்கின்றன பானம்
கள்தான். அது பனை, தென்னை, ஈச்சை போன்ற நிலைத்திணைகளின் (தாவரங்களின்) பூந்தண்டை(பாளையை)ச்
சீவும் போது சுரக்கிறது. சுரபானம் ஒருவகைப் புல்லிலிருந்து சுரப்பது என்கின்றனர்.
ஆம்! பனை, தென்னை, ஈச்சை முதலியன தமிழர்களின் அறிவியல் கோட்பாட்டின் அடிப்படையில்
புற்கள் தாம். புல் என மொழிப புறக்காழனவே என்பது தொல்காப்பிய
நூற்பா. அதாவது வெளிப்பகுதியில் வைரப் பகுதியை கொண்டவற்றைப் புல்லென்றும் நடுவில்
வைரப் பகுதியைக் கொண்டவற்றை மரம் என்பதும் நம் நிலைத்திணைக் கோட்பாடு. இந்நிலைத்திணைகளின்
தழையை முறையே ஓலை என்றும் இலை என்றும் கூறுவர். இன்றைய அறிவியல் படி புல் என்பதன்
விதை முளைசூழ் தசையைக் கொண்டது. மரத்தின் விதை விதையிலையைக் கொண்டது. இது பற்றி தலவிருச்சங்கள்
என்ற தலைப்பில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சோபிதராசு பண்டிதர்
படிப்புக்கு எழுதியுள்ள ஆய்வேட்டில் விளக்கியுள்ளார்.
மதுரையில் ஆயர் குலமகள் மாதரியின்
பாதுகாப்பிலிருந்த கண்ணகி தன் கணவனுக்கு உணவு சமைத்து ஊட்டிய போது பனையோலைத்
தடுக்கில் அவனை அமர்த்தினாள் என்பதனை:
தாலப் புல்லின்
வால்வெண் தோட்டுக்
கைவண் மகடூஉக் கவின்பெறப் புனைந்த
செய்வினைத் தவிசில் ... என்று
இளங்கோவடிகள் கூறுகிறார். (தாலம் = பனை, தோடு = ஓலை; தவிசு = தடுக்கு). எனவே
சுரபானம் என்பது கள்தான் என்பதிலும் அச்சொல் தமிழ்தான் என்பதிலும் ஐயமில்லை. தென்னை, ஈச்சை
போன்றவள்ளின் பூந்தண்டுகளிலும் சுரந்தாலும் கையால் எளிதாக ஒடிக்கத்தக்கது ஆண் பனையான
அலகுப் பனையின் அலகு எனப்படும் பூந்தண்டே. குரங்கு போன்ற விலங்குகள் ஒடித்து நக்குவதைப்
பார்த்து முதலில் அலகுப்பனையிலிருந்து சாறெடுக்கும் உத்தியை வகுத்து பின்னர் பருவப்பனை
எனப்படும் பெண்பனை, தென்னை, ஈச்சை போன்றவற்றுக்கு விரித்திருக்க வேண்டும்.
சோமபானம் என்பதிலுள்ள சோமம் என்ற சொல்
மயக்கத்தைக் குறிப்பதாகும். சோமை, சோம்பல் என்பவை செயலின்மையை, முடங்கிக்
கிடப்பதைக் குறிப்பனவாகும். சோமன் என்பது நிலவைக் குறிக்கும் சொல். சோமன் → நிலவு → மதி. நிலவு மனதை மயக்கும். பித்தர்களின்
நோயை முனைப்படையச் செய்யும் தன்மைகளையுடையது. மதி → மது. ஆக
சோமபானம் என்பதற்கு மது என்பதே பொருள். அது ஒரு புல் அல்லது பூண்டிலிருந்து
பெறப்படுவது என்பர். இந்த மது வேறெதுவுமல்ல, நம் ஊர்ப்புறக் கோயில் விழாக்களில்
இறைவனுக்குப் படைக்கப்படும் மதுக்குடம் தான். இதைச் செய்யும் உத்தி, பீர்
எனப்படும் மேல்நாட்டு மதுவகை செய்யும் தொழில் நுட்பத்துக்கு எவ்வாறு அடிப்படையாக
இருக்கிறது என்பதைப் பேரா. ஆ. சிவசிவசுப்பிரமணியன் அவர்கள் ஒரு கட்டுரையில் அழகுற
விளக்கியுள்ளார்.
கோயில் விழாவில் படைக்கும் மதுக்குடம்
நன்கு பொங்கி வழிந்தால் அந்த ஆண்டு தவச (தானிய) விளைச்சல் நன்றாக இருக்குமென்று
ஊர்ப்புற மக்கள் நம்புகின்றனர். மாவுப் பொருள் நீரில் மதுவாக மாறுவதற்கு ஈசுட்டு(Yeast)
எனும் ஒரு வகை நுண்மி காரணமாகும். இந்நுண்பொருள் காற்றில் மிகுந்திருப்பது
விளைச்சல் பெருகுவதற்கு எவ்வகையிலாவது தூண்டுகோலாக இருக்குமா என்பது குறித்து
ஆய்வு செய்யலாம்.
சுரபானத்தை மனிதர் உட்கொள்ளவும்
சோமபானத்தைக் கடவுளுக்குப் படைக்கவும் பயன்படுத்துவோர் சுரர் என்றும் சோமபானத்தை
மனிதர் பருகவும் சுரபானத்தைக் கடவுளுக்குப் படைக்கவும் செய்வோர் அசுரர்கள் என்றும்
அழைக்கப்பட்டார்கள் என்கின்றனர். நம் நாட்டினர் பொதுவாகக் கள்ளைத்தான்,
சுரபானத்தைத்தான் பருகின்றனர். அந்த வகையில் நம்மைச் சுரர் என்று அழைத்துக்
கொள்ளலாம். பாரசீகர்கள் தம்மை அசுரர்கள் என்று அழைத்துக் கொண்டனர். தங்கள்
தெய்வத்தை அகுரா மசுதா என்றனர். ச ஒலி பாரசீக மொழியில் ஃக எனத் திரியும். ′சிந்து′
′இந்து′வானது அவர்களால்தான். அகுரா மசுதா என்பதன் பொருள் மசுதா என்ற அசுரன் என்பதாகும்.
தாங்கள் அடிமைப்படுத்திய சிந்து மக்களை அவர்கள் தேவர்கள் என்றே அழைத்தனர்.
தேவர்கள் என்ற சொல்லை அடிமைகள் என்ற பொருளில் அவர்கள் பயன்படுத்தினர். எனவே அசுரர்
×
சுரர் என்பது வேறு, அசுரர் × தேவர்
என்பது வேறு. முதலாவது குமரிக் கண்டத்தில் வாழ்ந்த இரு மக்கள் பிரிவினைக்
குறித்திருக்க வேண்டும். பனை, தென்னை, ஈச்சை போன்றவை தாராளமாக இல்லாத
நிலத்தில்தான் அசுரர்கள் வாழ்ந்திருக்க வேண்டும். எனவே கள் வேத காலத்திலேயே அதாவது
குமரிக் கண்ட காலத்திலையே பயனுக்கு வந்துவிட்டது தெரிகிறது.
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக