14.4.16

தமிழில் வழிபாடு - 4



 தமிழில் வழிபாடு - 4

மாலியக் கோயில்களில் பெரும்பாலனவை தென்கலைக் கோயில்கள். ஒன்றிரண்டு கோயில்கள் மட்டும் இரு சாரருக்கும் உரிமையுள்ளவை. இவ்விடங்களில் இரு சாரருக்கும் மோதல்கள் நிகழ்வதுண்டு. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் திருவிழாக் காலங்களில் வன்முறைக் கலகங்கள் மூண்டதுண்டு. கோயிலில் எந்த நாமம் போடுவதென்று நயமன்றத்தில் வழக்குகள் நடந்து வெள்ளை நயவர்கள் தீர்ப்பும் வழங்கியுள்ளனர்.

            இராமானுசர் உருவாக்கிய தென்கலைக் கோட்பாடு, அதாவது எச்சாதியில் பிறந்தாலும் திருமாலடியவர் எவரும் வீடுபேறடையலாம், பூணூல் அணிந்து பார்ப்பனராகிப் பூசை செய்யலாம் என்ற கோட்பாடு, அவரோடு மறைந்து போயிற்று. அவரால் பார்ப்பனராக்கப்பட்டவர்கள் தங்கள் முன்னாள் சாதியினரோடு உள்ள உறவை முறித்துக்கொண்டார்கள். இப்பார்ப்பனர்கள் தம் சாதியிலிருந்து மாறியவர்கள் என்பது கூட அச்சாதியினருக்குத் தெரியாது. ஆனால் பார்ப்பனர்களுக்கு எந்தெந்த ஊர் ஐயங்கார்கள் எந்தெந்த சாதியிலிருந்து வந்தவர்கள் என்பது தெரியும். பெரும்பாலான திருமணங்கள் கூட இந்த அடிப்படையில்தாம் முடிவு செய்யப்படுகின்றன என்று தெரிகிறது. அண்மைக் காலமாக இந்தப் பிரித்துணர்வுகள் ஓரளவு மங்கி வருகின்றன.

            இராமானுசரால் தமிழகத்தில் விரிவடைந்த மாலியம் விசயநகர ஆட்சியாளர்களுக்குச் சிறந்த உள்நாட்டு அடித்தளமாக அமைந்தது. விசயநகரத்தார் மாலியத்தை வெளிப்படையாக ஆதரித்தனர். சில நிகழ்ச்சிகள் குறிப்பிடப்பத்தக்கவை. 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் விசயநகரப் பேரரசின் திருச்சி தஞ்சைப் பகுதிகளின் அலுவலனாகப் பணியாற்றிய கோனேரிராயன் என்பவன் பேரரசிலிருந்து விடுவித்துக்கொண்டு தன்னாட்சியுடன் செயற்பட்டான். திருவரங்க(சிறீரங்க) மாலியக் கோவிலுக்குரிய சொத்துக்களைக் திருவானைக்கா சிவன் கோயிலின் கீழ்க்கொண்டுவந்தான். திருவானைக்கா என்பது திருவரங்கத்தின் ஒரு பகுதி. திருவரங்கத்து மாலியப் பார்ப்பனான கந்தாடை இராமானுசன் என்பவன் விசயநகரப் பேரரசையாண்ட நரச நாயக்கனுக்கு முறையிட்டான். அவன் படையோடு வந்து கோனேரிராயனைத் தண்டித்து திருவரங்கக் கோயில் சொத்துகளை மீட்டான்.

            தில்லை நடவரசர் கோயிலிருந்து குலோத்துங்கனால் கோவிந்தப் பெருமாள் சிலை கடலில் வீசியெறியப்பட்டதென்பதைப் பார்த்தோம். அதற்கு மாற்றாக வேறொரு சிலையை நரச நாயக்கன் அங்கு நிறுவினான். இதை எதிர்த்துத் தில்லைத் தீட்சதர்கள் போராட்டம் நடத்தினர். கோபுரத்தின் மேல் ஏறி நின்று தம் பெண்டு பிள்ளைகளுடன் குதித்து உயிரை விடப் போவதாகக் கூறினர். அவர்களை அவன் குண்டுமிழிகளால்(பீரங்கிகளால்) சுட்டு வீழ்த்தினான். இவ்வாறு கோயில் சொத்துக்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக அரசர்களும் சிவனியர்களும் மாலியர்களும் மாறிமாறி அணியமைத்துப் போரிட்டனர்.

            போசாளர்களும் (ஒய்சாளர்களை இப்படியும் அழைப்பர்) விசயநகரத்தாரும் தமிழகத்தின் மீது படையெடுத்த போது இராமானுசரால் விரிவாக்கப்பட்ட மாலிய சமயத்தாரின் ஆதரவு அவர்களுக்கு இருந்தது. நாயக்கர்கள் காலத்தில் கிட்ணாபுரம், முத்துக்கிட்ணாபுரம், திம்மராசபுரம் என்ற பெயர்களில் பல ஊர்கள் உருவாக்கப்பட்டன. இங்கெல்லாம் பெருமாள் கோயில்கள் கட்டப்பட்டன. அவற்றைச் சுற்றி ஆயர்குல மக்கள் வாழ்ந்தனர். அவர்கள் வாழ்ந்த ஊர்களில் கோயில்கள் கட்டப்பட்டனவா அல்லது கோயிலைச் சுற்றி அவர்கள் அமர்த்தப்பட்டனரா என்பது தெரியவில்லை. இரு வழிகளிலும் நடைபெற்றிருக்கலாம். இக்கோயில்களைச் சுற்றியுள்ள நிலங்கள் ஆயர் குலத்தினருக்கே இன்று வரை சொந்தமாக உள்ளன. ஆயர்கள் வாழும் முல்லை நிலத்தில் அளவில் பெரிய மாலியக் கோயில்கள் அமைக்கப்பட்டது தமிழகத்தில் இதுவே முதன்முறை. இவை தவிர சிவனிய வேளாளர்கள் தளபதி சமுத்திரம், தளவாய்புரம், அரியநாயகிபுரம் போன்ற பெயர்களில் ஊர்களை அமைத்தனர். தமிழகத்தில் நாடு என்ற ஆட்சிப் பிரிவுகளை ஒழித்துப் பாளையங்கள் என்ற புதிய பிரிவுகளை உருவாக்கி நாயக்கர்களுக்குத் தளவாய் அரியநாத முதலியார் என்ற சிவனிய வெள்ளாளர் செய்த உதவிக்குக் கைம்மாறாக இந்தச் சலுகைகளை அவர்கள் பெற்றனர். மீனாட்சிபுரம் என்ற பெயரில் பார்ப்பனர்கள் ஊர்களை அமைத்தனர். தமிழகத்து ஊர்ப்புறக் கலைகளான தெருக் கூத்திலும் வில்லுப் பாடல்களிலும் இராமாயண, மகாபாரதக் கதைகள் மிகுதியாக இடம் பெற்றது நாயக்கர் ஆட்சிக்காலத்தில்தான் போலும். இராமாயணக் கதையைக் கூறும் தோல்பாவைக் கூத்தும் இக்காலத்தில்தான் தமிழகத்தில் நுழைந்திருக்கும். ஆனால் சிலப்பதிகாரம் அரங்கேற்றுக் காதை உரையில் பாவைக் கூத்து பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. அப்போது என்ன கதை கூறப்பட்டதென்று தெரியவில்லை.

            நாடார்கள் என்று அழைக்கப்படும் சாணார்களின் சாதி வரலாற்றில் மூன்று மாற்றுக் கதைகள் சொல்லப்படுகின்றன. சப்த மாதர்கள் எனப்படும் ஏழு தாயார்களுடன் இந்திரன் கலந்து அவர்கள் தோன்றியதாக ஒரு கதை கூறுகிறது. அப்பெண்கள் கண்ணனுடன் சேர்ந்து பிறந்தனர் என்பது இன்னொரு கதை. மூன்றாவது கதை வித்தியாதர முனிவருடன் சேர்ந்தனர் என்பது. இந்த வித்தியாதர முனிவர் என்பவர் விசயநகரப் பேரரசை உருவாக்க அரிகரனுக்கும் புக்கனுக்கும் அறிவுரை கூறிய அவர்களது குருவான வித்தியாரண்யரையே குறிக்க வேண்டும். சாணார்களும் விசயநகரத்தாரோடு நெருங்கியிருக்க முயன்றுள்ளார்கள் என்பற்கான ஒரு சான்றாக, இதைக் கூறலாம். தமிழகத்திலுள்ள ″கீழ்ச்சாதி″ களின் தோற்றக் கதைகளில் எல்லாம் இந்த ஏழு பெண்கள்தாம் தாயாராக வருகின்றனர். (சில சாதியினர் அண்மைக் காலத்தில் ஏதொவொரு முனிவரிடமிருந்து தாங்கள் தோன்றியதாகக் கதையை மாற்றிக்கொண்டுள்ளனர்.) அதனால்தான் தமிழர்கள் ஏழு பெண்களின் பெயரிலமைந்த ஏழு குக்குலங்களிலிருந்து தோன்றியவர்கள் என்று முன்பு கூறினோம்.

            வெளியிலிருந்து வந்த விசயநகரத்தாரோடும் நாயக்கர்களோடும் நம் நாட்டிலுள்ள வெவ்வேறு சாதியினர் நெருக்கம் கொள்ள தனித்தனியாக முயன்றுள்ளதற்கான தடயங்களாக மேற்கூறியுள்ள செய்திகளைக் காணலாம். இந்த நிலை இன்று முற்றி நிற்பதை நம்மால் எளிதில் காணமுடியும். இந்தப் பிளவுப் போக்கு ஒரு திட்டவட்டமான வடிவத்தை அடைந்தது குலோத்துங்கன் காலத்தில்தான் எனல் வேண்டும்.

            விசயநகர ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் பூசாரியராயிருந்த தமிழ் பேசும் மக்களை அகற்றிவிட்டுத் தெலுங்கு பேசும் பூசகர்களை அமர்த்தினர். இராமபிரான் அடியாரும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவருமான தியாகராசர் இயற்றிய தெலுங்கு இசைப்பாடல்கள் தமிழகக் கோயில் மேடைகளிலும் பிற அரங்குகளிலும் பிடித்த இடத்தைத் தமிழால் இன்றும் மீட்க முடியவில்லை. தெலுங்கு மற்றும் மாராட்டியப் பார்ப்பனரின் ஆதிக்கத்துக்கு எதிராகத் தமிழ்ப் பார்ப்பனர்கள் தொடங்கி வைத்த தமிழகத் தேசிய இயக்கத்தைப் பார்ப்பன எதிர்ப்பியக்கமாகப் பெரியார் திசை திருப்பியதால் தமிழர் பிற மொழியினர் என்ற வேறுபாடின்றி பார்ப்பனரனைவரும் தமிழ் எதிர்ப்பு நிலையை எய்தியுள்ளனர். அதனைப் பயன்படுத்தித் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பார்ப்பனர்கள் தமிழெதிர்ப்பின் தலைவர்களாகத் தங்களை வைத்துக்கொள்ள முடிந்தது.

விசயநகரப் பேரரசின் தோற்றம். ″இந்து சமய″த்தை முகம்மதியர்களின் தாக்குதலிலிருந்து காப்பதை நோக்கமாக்க் கொண்டது என்று பொதுவாகக் கூறப்படுகிறது. ஆனால் மேற்சாதியினரின் ஆதிக்கத்தை மீட்பதே அதன் நோக்கம் என்பதுதான் உண்மை. இதன் பின்னணியைப் பார்ப்போம்.

            தமிழகத்தில் குலோத்துங்கன் அரியணை ஏறும் முன் நடைபெற்ற மக்கள் கலவரத்தைப் போல் இன்றைய ஆந்திரம், கன்னடம், ஒரிசாவின் பகுதிகள் வரையிலும் எழுச்சிகள் நடந்துள்ளன என்று கருதத்தக்க தடயங்கள் உள்ளன. இதன் விளைவாக இடங்கைச் சாதியினருக்குச் சில சிறப்புரிமைகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று பொற்கொல்லர்கள் ஊர் ஆள்வினைப் பதவிகளைப் பெற்றது. விசயநகரப் பேரரசின் புக்கன் அதனைப் பறித்துப் பார்ப்பனர்களுக்குக் கொடுத்தான் என்று முன்பே கூறினோம். எருமை வளர்ப்பதிலும் தோல் தொழிலாலும் செல்வமும் செல்வாக்கும் பெற்ற மடிகர்கள் எனப்படும் சக்கிலியர்கள் பார்ப்பனர்களின் மீது வெற்றி கொண்டதன் தடயங்கள் இன்றைய இந்து சமயத்தில் திராவிடக் கடவுள்கள்[1] எனும் நூலில் எல்மோர் என்பவர் காட்டும் சில வழிபாட்டு முறைகளிலிருந்து கிடைக்கின்றன. அவர்கள் கம்பிலி அரசனையே வென்றனர் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. இவை தவிர வேறொரு முகாமையான நிகழ்ச்சியும் உண்டு.

            11 ஆம் நூற்றாண்டின் சாளுக்கிய நாட்டை ஆண்ட காலச்சூரி மரபைச் சேர்ந்த விச்சாலன் பத்மாவதி என்ற பார்ப்பனப் பெண்ணை மணந்தான். அவளது அழகில் மயங்கிய அவன் அவளது உடன்பிறந்தனாகிய பசவன் என்பவனிடம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்துவிட்டு அரண்மனையிலேயே அடைந்து கிடந்தான். விச்சாலன் அம்மண சமயத்தவன். பசவன் அம்மணத்தை வெறுப்பவன். அது மட்டுமல்ல பார்ப்பனனாகப் பிறந்த அவன் இளம் பருவத்திலிருந்தே பார்ப்பனியத்தை வெறுத்தான். பூணூல், வேதங்கள், சிறார் மணம், கைம்மைக் கொடுமைகளை எதிர்த்தவன். பதவியிலிருந்த அம்மண அதிகாரிகளை அவன் அகற்றினான்; தன் புதுச் சமயமாகிய லிங்காயத்துச் சமயம் எனப்படும் வீரசிவனியத்தைப் பரப்பினான். அதனால் அரசனுக்கும் அவனுக்கும் மோதல் உருவானது. பசவன் விச்சாலனைக் கொன்றான். விச்சாலனின் மகன் ராயமுராரி சோவி தந்தையின் சாவுக்குப் பழிவாங்கப் பசவனைத் துரத்தினான். ஓடி ஓடிக் களைத்த பசவன் ஒரு கிணற்றினுள் குதித்து இறந்தான்.

            பசவனுடைய வீரசிவனியம் கன்னட நாட்டைச் சுற்றி விரைந்து வளர்ந்தது. தில்லி முகம்மதியப் பேரரசர்களும் அவர்களது ஆளுநர்களும் படைத்தலைவர்களும் சமயச் சாயம் பூசிக்கொண்டு மக்களைக் கொடுமைப்படுத்தியதும் கோயில்களைச் சூறையாடியதும் மக்களிடையில் விளைவித்த எதிர்ப்புணர்ச்சியுடன் பார்ப்பனர்களின் ஆதிக்க எதிர்ப்பையம் சாதி மறுப்பையும் முன்னிறுத்திய வீரசீவனியத்தின் கவர்ச்சி மக்களை அதன்பால் ஈர்த்தன. வலங்கை - இடங்கை என்று பாகுபட்டு நின்ற மக்களின் ஏற்றத்தாழ்வை ஒரு முடிவுக்கு கொண்டுவந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் புதிய வெளிச்சம் காட்டிய போராட்ட வெற்றியும் அத்துடன் இணைந்தது. வடநாட்டு புத்த, அம்மண சமயங்களையும் மக்கள் கைவிட்டனர். இவற்றால் வேகம் பெற்ற மக்களிடையில் முகம்மதியத்துக்கெதிராகப் புதிய ஒரு அரசை உருவாக்கும் தலைவர்கள் ஆங்காங்கே உருவாகிக் களத்தில் இறங்கி நின்றனர். இவ்வாறு பார்ப்பனியத்துக்கு முன்னெப்போதுமில்லாத அறைகூவல் எழுந்து நின்றது. (வீர சிவனியத்தின் மிகப்பெரும் வலுக்குறை அது புலாலுணவை மறுத்தது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.)

விசயநகர ″இந்து″ப் பேரரசை நிறுவிய உடன்பிறந்தோரான அரிகரனும் புக்கனும் காகதீய மன்னனிடம் அலுவல் புரிந்தவர்கள். ஒரு போரில் இவர்களைத் தில்லிப் படைகள் பிடித்துச் சென்றன. முகம்மதியத்தை தழுவிய அவர்கள் தில்லியில் நல்ல பதவியில் அமர்ந்தனர். முகம்மதியர்களுக்கு எதிரான மக்கள் இயக்கங்கள் தென்னிந்தியாவில் உருவாகி வருவதை அடக்க இவர்கள் இருவரையும் சுல்தான் விடுத்தான். அவர்களை வித்தியாரண்யர் என்ற பார்ப்பனர் தலைமையில் பார்ப்பனர்களும் மேல்சாதியினரும் அணுகி, முகம்மதியத்துக்கு எதிராக மக்களிடையில் உருவாகியிருந்த எதிர்ப்புணர்வைப் பயன்படுத்திப் பழைய வருணமுறை ″இந்து″ சமயத்தை மீட்க அவர்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டனர். மக்களின் எதிர்ப்புணர்வைப் பயன்படுத்தி அவர்களே ஒரு பேரரசை நிறுவமுடியும் என்று அவாவூட்டினர். இவ்வாறு அடிப்படை மக்களின் எழுச்சியை மழுங்கடித்து பழைய வருணக் குமுகத்தை மீட்க, முகம்மதிய எதிர்ப்பு என்ற பெயரில் உருவானதுதான் விசயநகர ″இந்து″ப் பேரரசு.

            இவர்கள் பழைய கோயில்களுக்குத் ″திருப்பணி″ செய்தனர். புதிய கோயில்களைக் கட்டினர். அவற்றுக்கு மக்களின் நிலங்களை அளித்தனர். இவ்வாறு மக்களின் பொருளியல் வலிமையைக் குலைத்து அதே நேரத்தில் அவர்களைப் பொய்ம்மைகளால் மகிழ்வித்துத் தங்கள் கொள்ளையை நிலைப்படுத்திக் கொண்ட இந்த ″இந்து″ அரசர்களுக்கு அக்கோயில்கள் சிவனியக் கோயில்களாயிருந்தாலென்ன? மாலியக் கோயில்களாயிருந்தாலென்ன? எனவே இரு சமயக் கோயில்களையும் பேணினர். ″திருப்பணி″கள் செய்தனர். இதை வைத்துத்தான் நம் அரசர்களின் சமயப் பொறை(சகிப்புத் தன்மை)யையும் நடுவுநிலையையும் இறைப்பற்றையும் மக்களின் ″பண்பாட்டு மேன்மை″யை(ஏமாளித்தனத்தை)யும் நம் வரலாற்றாசிரியர்கள், அவர்கள் எந்தச் சாயம் பூசியிருந்தாலும் வானளாவப் புகழ்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகளைப் படிக்கும் போது நேயர்களுக்கு இன்றைய ஆட்சியாளர்களின் செயல்கள் அவற்றின் அச்சுப்படிகளாக இருப்பது மனதில் உறைக்கும் ″வரலாறு திரும்புகிறது″ தோழர்களே!

            விசயநகரப் பேரரசு நாம் முன்பு குறிப்பிட்ட மடிகர்களைக் கொடுமையாக ஒடுக்கியது. அவர்களை மலம் சுமப்போராகத் தாழ்த்தினர். தமிழகத்திலும் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் பகடைகள் என்றும் சக்கிலியர்கள் என்றும் கூறப்படும் மக்கள் மாடு, எருமை ஆகியவற்றின் வளர்ப்பின் மூலமும் தோல் தொழிலின் மூலமும் செல்வமும் செல்வாக்கும் பெற்றிருந்ததை முத்துப்பட்டன், சின்னத்தம்பி, மதுரைவீரன் கதைகள் புலப்படுத்துகின்றன. மதுரை வீரனுக்கும் திருமலை நாயக்கனுக்கும் உண்டான பகைமையின் பிறகு அவர்கள் தமிழகத்தில் ஒடுக்கப்பட்டனர். கட்டபொம்மனின் முன்னோரில் ஒருவன் அவர்களுக்கு ஆதரவு அளித்ததால் அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரோடு போரிடும் போது அவனுக்குப் பெரும் துணையாக நின்றனர்.

            மீண்டும் நாம் வழிபாட்டு மொழியைப் பார்ப்போம். சிவனிய வேளாளர்களின் கையிலிருக்கும் சிவனிய மடங்களுக்கும் பார்ப்பனர்களின் உடைமையாய் இருக்கும் மாலிய மடங்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு ஒன்றைப் பார்ப்போம். ″சிவனியமும் தமிழும்″ என்று ஓங்கி முழங்கும் சிவனியர்களின் பொறுப்பிலிருக்கும் கோயில்களின் கருவறைகளில் தமிழ் ஒலிக்க முடியாது. கருவறைக்கு வெளியிலும் பார்ப்பனப் பூசாரி தமிழ் வழிபாட்டுப் பாடலைப் பாடமாட்டார். ஓதுவார் என்ற தனிச் சாதியினர்தாம் பாடுவர். ஆனால் பார்ப்பனர்க்குச் சொந்தமான மாலியக் கோயில்களின் கருவறைகளில் பார்ப்பனப் பூசாரி ஆழ்வார்களின் தமிழ்ப் பாசுரங்களை முழங்குவார். அவற்றைத் தமிழ் வேதங்கள் என்று அவர்கள் பெருமையுடன் கூறுவர். இந்த முரண்பாடு பற்றி வரலாற்றாசிரியரும் ஆய்வாளருமாகிய கே.கே. பிள்ளை கூறுவதைப் பார்ப்போம். ″இம்மடங்கள்(சிவனிய மடங்கள்) சமயத்தை வளர்த்தன என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆனால் அவை தமிழை வளர்க்கவில்லை. இன்றும் சைவ மடங்கள் பிராமணருக்கும் வடமொழி மரபுகளுக்கும் அளித்துவரும் அத்துணைச் சலுகைகளைத் தமிழ்ப் புலவர்களுக்கும் திருமுறை ஒதுவார்களுக்கும் அளிப்பதில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்″. (தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், 1981 பக். 320 - 21) கே.கே. பிள்ளையவர்கள் சிவனிய வெள்ளாளர் என்பதும் சிவனிய சமயத்தின மீது ஆழமான பற்றுள்ளவர் என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கன.
சில ஆண்டுகளுக்கு முன் தமிழில் வழிபாடு என்ற போராட்டத்தில் முன்னணியில் நின்று அமைச்சர் தமிழ்க்குடிமகனையும் துணை சேர்த்துக் கொண்டு சிவனிய மடத்தலைவர்களுடன் சேர்ந்து ஈடுபட்ட சிவனிய வேளாளரான பழ.நெடுமாறனுக்கு இந்த உண்மைகள் தெரியாவா? பார்ப்பனர்களைத் தமிழுக்கு எதிரிகள் என்று சுட்டிக்காட்டும் இந்தக் கூட்டம் சிவனிய மடத் தலைவர்களையும் எதிர்ப்பதற்கு மாறாக அவர்களைத் துணைசேர்த்துக் கொண்ட உள்ளரங்கம் என்ன? இந்தக் கேள்விக்கு விடையை நாம் சற்றுப் பின்னால் காணலாம்.

            சிவனிய மடங்களோடு ஏதோ காரணத்தால் முரண்பட்ட போலிச் சோழனான குலோத்துங்கன் அவற்றின் நிலங்களைப் பிடுங்கினான் என்று கண்டோம். ஒருவேளை அதிராசேந்திரன் கொல்லப்பட்ட கலவரத்தின் பின்னணியிலிருந்த நிலக்கிழார்களோடு அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களைத் திருப்பி தருவதாக அவன் உடன்பாடு செய்ததன் காரணமாக இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம். ஆனால் மடங்களின் உறுதியான போராட்டங்களால் அவர்களோடு இணக்கம் கண்டான். அது மட்டுமல்ல. சிவனிய வேளாளரான சேக்கிழாரைத் தன் அமைச்சராகக் கொண்டதுடன் அவரைக் கொண்டு சிவனியக் குரவர்கள் மற்றும் நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் பெரிய புராணத்தையும் இயற்றினான்.

            குலோத்துங்கன் பதவியேற்றதும் மக்களின் கலவரத்துக்கு காரணமான வரிகளை நீக்கினான். ″சுங்கம் தவிர்த்த சோழன்″ என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டான். ஆனால் என்ன செய்தானோ தெரியவில்லை, அவன் காலத்துக்கு பின் வலங்கை - இடங்கைப் போர் 700 ஆண்டுகள் அதுவரை இல்லாத கொலை வெறியோடு பேயாட்டம் ஆடியது. நம் வாழ்நாளில் பொருளியலிலும் குமுகியலிலும் ஒதுக்கவும் ஒடுக்கவும் பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உருப்படியான எதையும் செய்யாமல் பெயர்கள் சூட்டுதல், சிலைகள் திறத்தல், மண்டபங்கள் கட்டுதல், இலவயங்கள் என்ற பெயரில் மக்கள் பெறுபவற்றுக்கு கூடுதலான தொகையைக் கைக்கூலியாகச் சுருட்டுதல் என்று செய்துவிட்டு அவர்களுக்கு அதைச் செய்தேன் இவர்களுக்கு இதைச் செய்தனே என்று விலாவாரியாகப் பட்டியல் போட்டுத் தமுக்கடித்து மக்கள் குழுக்கள் ஒன்றோடு ஒன்று பொறாமையும் பொச்சரிப்பும் கொண்டு மோதவிட்டுக் கொண்டிருக்கும் கருணாநிதியின் உத்தியை அவனும் கையாண்டிருக்க வேண்டும். அத்துடன் நாட்டைக் காட்டிக்கொடுப்போர் நல்வாழ்வு வாழ முடியுமென்ற எண்ணத்தையும் அடித்தளம் வரை ஊடுருவவிட்டான். அதனால்தான் நாயக்கர்களும் முகம்மதியர்களும் தமிழகத்தைக் கைப்பற்றிய போது அவர்களுக்கு எதிராக உள்நாட்டு அரச மரபுகளைத் தூக்கிப் பிடிக்கத் தக்க மக்களெழுச்சிகள் உருவாகவில்லை. மாறாகப் போர்த்தொழில் மேற்கொண்டு, இன்று முக்குலத்தோர் என்றும் வன்னியர் என்றும் வன்னியக் கவுண்டர் என்றும் அழைக்கப்படுவோரின் முன்னோர்களின் தலைவர்கள் எதிரிகள் கையோங்கியதும் அவர்கள் பக்கம் சார்ந்து நின்றனர். இறுதிவரை எதிர்த்தோரை அவர்களே ஒடுக்கினர். இதை மெய்ப்பிக்கக் கல்வெட்டுகளோ செப்பேடுகளோ இலக்கியச் சான்றுகளோ அயல்நாட்டினரின் பயணக் குறிப்புகளோ தேவையில்லை. இன்று பிற்படுத்தப்பட்ட சாதியினர் என்று அழைக்கப்படும் சாதியினர் அனைவரும் சாணார் அதாவது நாடார் நீங்கலாக தெலுங்கர்களுடனும் முகம்மதியர்களுடனும் மாமன் - மச்சான், சிற்றப்பன் உறவு வைத்துப் பேசுகின்ற ஒன்று மட்டும் போதும். நாடான் என்ற ஆட்சிப் பதவிப் பெயர் ஒரு பகுதி மக்களின் சாதிப்பெயராக மாறியதும் பின்னர் அது நாடார் என்று ″பெருமை″ பெற்றதும் சென்ற நூற்றாண்டின் இறுதிக்குப் பின்னர்தான். ஆக, பிற்படுத்தப்பட்ட சாதிகளிலும் தாழ்த்தப்பட்ட சாதிகளிலுமுள்ள பெரும்பான்மை மக்கள் ஒரே சாதிகளாயிருந்து போர்களின் போது முறையே எதிரியின் பக்கம் சேர்ந்தவர்களும் அவ்வாறு சேராததினால் அவர்களாலேயே ஒடுக்கப்பட்டோருமேயாவர். இவ்விரு சாதியினர் தவிர்த்த பிற தொழிற்சாதியினர் முகம்மதியத்தைத் தழுவியுள்ளனர்.

            இவ்வாறு சாதியின் உள்ளடக்கம் வன்முறை, அரசியல் சார்ந்த வன்முறை, வன்முறை சார்ந்த பொருளியல் ஒடுக்குமுறை இணைந்த குமுகியல் ஒடுக்குமுறை ஆகியவைதாம். மேற்சாதியினரும் படித்தவரும் இதற்குக் காரணமாக மனுநூல், வேதங்கள் என்று காட்டிவிட்டு ஒதுங்கியிருந்தனர் அல்லது திசைதிருப்பிவிட்டனர். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கோ இதிலிருந்து விடுதலை பெற எந்த வழியுமில்லாதவாறு எதிரி அரசோடு கைகோர்த்து நின்ற ஆயுதந்தாங்கிய பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கெதிராக எதுவும் செய்யமுடியாத நிலையில் தங்கள் தலைவிதி இதுவென்று பொறுத்துக் கொள்வதை தவிர வேறு வழியிருக்கவில்லை. இது மேலேயிருந்து புகுத்தபட்ட கோட்பாடு என்பதை விட அவர்களது வாழ்க்கைச் சுழலிலிருந்து வெளிப்பட்ட உண்மை என்பதுதான் சரியாகும். இன்று பேட்டைப் போக்கிரியைப் பார்த்து நடுங்கும் சராசரி மக்களைப் போல் வருமானவரித் துறையினரைப் பார்த்து மிரண்டு நிற்கும் பணக்காரர்கள் தங்கள் கையாலாகாத்தனத்தை மறைக்க வருமானவரியை ஞாயப்படுத்துவது போல்தான் இதுவும்.

            இனி, ஆமக வழிபாட்டின் இன்றியமையாக் கூறுகளில் ஒன்றான தேவரடியார் முறையைப் பார்ப்போம். பண்டைய வராறுகளிலும் தொன்மங்களிலும் உலகமெங்கும் கோயில் கணிகைகள், விலைமகளிர் அல்லது பெண் பூசாரிகளை நாம் நிறையவே பார்க்கிறோம். கோயில்களின் வருவாய்க்காக இவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. அதற்கும் முந்திய நிலையில் நம் இந்தியத் தொன்மங்களில் இந்திரன் அவையில் இருந்த அரமகளிர்(அப்சரசுகள்) பற்றி அறிகிறோம். இந்திரப் பதவியை எய்துவதற்காகத் தவமியற்றுவோரையும் தேவர்களுக்கு எதிராகப் போர் தொடுக்கும் அசுரர்கள், அரக்கர்களையும் மயங்கிக் கெடுப்பதற்கு இவர்கள் பயன்பட்டனர் என்று கூறப்படுகிறது. இவர்களுக்குத் துணையாக யாழ் தாங்கிய நாரதன் பயன்பட்டான்.

            இந்திரன் என்ற பதவி உலகத்தில் மன்னராட்சி தோன்றியதன் தொடக்கமாகும். குமரிக் கண்டத்தில் 7 குக்குலங்கள் இருந்ததாக முன்னர் கண்டோம். அவை பெண்களின் வழிவந்தவை, பின்னர் அக்குக்குலங்கள் 7 பூசாரிகளான முனிவர்கள் தலைமையில் இயங்கின என்பதையும் கண்டோம். முன்பு பெண் தலைமையில் இயங்கிய குமுகம் பெண்ணாதிக்கம் முடிவுக்கு வந்து ஆணாதிக்கம் உறுதிப்பட்ட போது பெண் பூசாரிகள் ஆண் பூசாரிகளுக்கு அடிமையாயினர். இருப்பினும் பெண் தலைமையின் சுவடுகள் நம் கோயில்களில் இன்றும் காணக்கிடக்கின்றன. தொல் குமுகத்தில் பெண் பூப்பெய்தும் காலத்தில் அதாவது மாதவிடாய்க் காலத்தில் தெய்வத் தன்மை பெற்றவளாகப் போற்றப்பட்டாள். மாதவிடாய்க் குருதி(இது தூமை எனப்படும். தூய்மை?) புண்ணியம் மிக்கதாகக் கருதப்பட்டது. அதனை நெற்றியில் இட்டுக்கொள்ளும் பழக்கத்திலிருந்தே இன்றைய குங்குமப் பொட்டு தோன்றியது என்று மாந்தநூலார் கருதுகின்றனர். இன்றும் பெரிய கோயில்களில் பெண் தெய்வங்கள் மாதவிடாய் அடைந்ததாகப் பாவித்து அப்போது அத்தெய்வத்துக்குச் சார்த்தப்படும் சேலையை மதிப்புமிக்கதாகக் கூறி விற்பதைக் காணலாம். நாட்டுப்புறப் பெண் தெய்வங்களுக்குச் சிவப்புச் சேலை உடுத்துவதும் இதை உணர்த்தத்தான். அந்த தெய்வத்துக்குப் பூசை செய்யும் ஆண் பூசகர்கள் சிவப்பு ஆடை அணிந்து கொள்வது முன்பு பெண்கள் இந்தப் பூசையைச் செய்தனர், அதுவும் மாதவிடாய்க் காலத்தில் என்பதைக் காட்டும் தடயங்களில் ஒன்றுதான்.

            ஒரே நிலப்பரப்பில் 7 குக்குலத் தலைவர்களின் கீழ் வாழ்ந்த மக்கள் ஒரே ஆட்சியமைப்பின் கிழ் வரவேண்டுமென்று விரும்பியதன் விளைவுதான் இந்திரப் பதவியின் தோற்றம். இந்திரனைத் தேர்ந்தெடுப்பதும் அவனைக் கட்டுப்படுத்துவதும் தேவைப்படும் போது இருப்பவனைப் பதவி இறக்கிவிட்டுப் புதியவனைப் பதவியலமர்த்துவதும் இந்த 7 முனிவர்களின் கடமையும் உரிமையுமாகும். இது போன்ற மரபை பண்டைய எகிப்திய வரலாற்றில் காட்டுகின்றனர் மாந்தநூலார். அங்கு இந்தப் பதவி குறிப்பிட்ட கால அளவுக்கு வரையறுக்கப்பட்டிருந்தது. உலகமெல்லாம் இது போன்று குறிப்பிட்ட கால அளவுக்கு வரையறுக்கப்பட்ட அரச பதவிகள் நிலவியதற்கான மாந்தநூல் சான்றுகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிகளிலெல்லாம் அரசர்கள் மாறிக்கொண்டிருந்தாலும் அரசி இறப்பது வரையில் பதவியிருந்தாள். இந்திரன் மனைவியும் அப்படித்தான் என்பது மகாபாரதத்தில் வரும் நகுசன் கதையிலிருந்து உறுதிப்படுகிறது. இந்திரனவையில் இந்த முனிவர்களுக்கு இருந்த அதிகாரம் நம் தொன்மங்களில் தெளிவாக வெளிப்படுகிறது. அவர்களில் அகத்தியர் தலைமை நிலையில் காணப்படுகிறார். மகாபாரதத்தில் நகுசன் கதையும் சிலப்பதிகாரத்தில் மாதவியின் வரலாறும் இந்திரனவையில் அகத்தியருக்கிருந்த மட்டில்லா அதிகாரத்தை வெளிப்படுத்துகின்.

இப்போது அகத்தியரின் பெருமைகளில் ஒன்றான அகத்தியம் என்ற இலக்கண நூலின் தேவையும் பயனும் விளங்கும். அகன்ற பெரும் பரப்பில் மலை முதல் கடல் வரையுள்ள பல்வேறு இயற்கைச் சூழல்களில் வாழ்ந்த 7 குக்குல மக்களும் பேசிய மொழி வழக்குகளைத் தொகுத்து ஓர் இலக்கண நூல் இயற்றியது அவர்தான் என்பது உறுதியாகிறது. இந்திரன் என்பவனும் ஏழு முனிவர்களும் அதே பெயர்களில் வழிவழியாக வந்தவர்கள் என்பதை மனதில் இருத்திக்கொள்ள வேண்டும்.

            இந்திரனுடைய கடமை தனித்தனிக் கோட்டையாக அமைத்துக் கொண்டு தனியாட்சி நடத்தி வந்த பல்வேறு மருத நிலக் குழுவினரையும் பிற மக்களையும் வென்று அடக்கி ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவருவதாகும். அதனால்தான் இந்திரனைக் கோட்டைகளை அழிப்பவன் என்று வேதங்கள் போற்றுகின்றன.

            நாளடைவில் இந்திரனின் அதிகாரம் வலுப்பெற்றது. புதிய போர்க் கருவிகளும் தொழில்நுட்பங்களும் உருவாயின. தொழில் சார்ந்த பல மக்கள் குழுக்களும் உருவாயின. இவர்கள் தங்களுக்குள் தனித்தனிக் குழுஉக்குறிகளை வைத்திருந்தனர். அத்துடன் முனிவர்களுக்கும் இப்போது வலிமை பெற்றுவிட்ட இந்திரனுக்கும் அதிகாரப் போட்டிகள் உருவாயின. மொழிக் கோட்பாடு குறித்தும் முரண்பாடுகள் தோன்றின. இந்திரன் பெயரால் ஐந்திரம் எனப்படும் புதிய இலக்கணக் கோட்பாடு உருவாக்கப்பட்டது. ஒலி, உந்தி எனப்படும் தொப்புள் பகுதியிலிருந்து தோன்றி நெஞ்சு முதலியவற்றைக் கடந்து தொண்டை வழியாக உதட்டை அடைந்து வெளிவருகிறது எனும் தொல்காப்பியர், தான் தன் நூலில் (தொல்காப்பியத்தில்), தொண்டையில் பிறக்கும் ஒலிகளைப் பற்றியே கூறுவதாகத் தெரிவிப்பதுடன் உந்தியிலிருந்து தோன்றும் ஒலிகள் மறைகளில் உள்ளன என்று கூறுகிறார். அவர் ஐந்திரம் தெரிந்தவர் என்று பாயிரம் கூறுகிறது. எனவே மொழியை மக்கள் மொழி என்றும் மறைமொழி என்றும் பிரித்து கூறிய நூலே ஐந்திரம் என்று கூறலாம். சமற்கிருத மொழி இலக்கணக்களும் ஐந்திரத்தையே மூலநூலாகக் காட்டுகின்றன. அவ்வாறு பிரிக்கப்பட்ட மறைமொழியே இன்றைய சமற்கிருத்துக்கும் அதற்கு முந்தியதாகிய வேதமொழிக்கும் மூலமொழி என்று கூறவேண்டும். மக்கள் மொழி, வேதமொழி ஆகிய இவை இரண்டுக்கும் இடைப்பட்டவையே சிந்து சமவெளிக் குறியீடுகள்.

            அகத்தியத்துக்கும் ஐந்திரத்துக்கும் இடையில் நீண்ட நாள் மோதல் இருந்திருக்கிறது. ஐந்திரக் கட்சியினர் அகத்தியரை இழிவுபடுத்த பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது தெரிகிறது. தொல்காப்பியன் வரலாறாகக் கூறப்படும் கதையிலும் தென்னகத்தை அமிழ்த்தி இமயமலையை உயர்த்துவதற்காகவே அவர் தென்னாடு வந்தார் என்ற கதையிலும் இந்த முயற்சியைக் காணலாம்.

            அகத்திய ஐந்திர மோதல்களின் சூவடுகளைக் கழகக் காலத்திலும் தடம்பிடிக்க முடிகிறது. ″ச″ என்ற எழுத்து சொல்லின் முதலில் வராது என்பது தொல்காப்பிய விதி. இவ்விதி பற்றி உரையாசிரியர்கள் நடுவில் பெரும் கருத்து மோதல்கள் உண்டு. திருவள்ளுவர் தொல்காப்பிய விதியைக் கடைப்பிடுக்கிறார். ″பீலிபெய் சாகாடும் அச்சிறும்....″ என்று தொடங்கும் குறளில் வண்டியைக் குறிக்கும் சகடு என்ற சொல்லைச் ″சாகாடு″ என்று அவர் குறிக்கிறார். இளங்கோவடிகள் ″ச″வைத் தாராளமாகக் கையாள்கிறார். வேறு பல தொல்காப்பிய விதிகளையும் அவர் மீறுகிறார்.

தமிழில், சொற்களின் முதலில் வருவதிலிருந்து யி, யீ, வு, வூ, யெ, யே, வொ, வோ ஆகிய எழுத்துகள் விலக்கப்பட்டுள்ளன. இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ போன்ற உயிரெழுத்துக்களோடு சேர்ந்து குழப்பம் ஏற்படாமலிருக்க இந்த விலக்கு தேவைதான். ஆனால் ட, ண, ய, ர, ல, வ, ழ, ள, ற, ன போன்ற எழுத்துகள் விலக்கப்பட்டமைக்கு நாம் மேலே கூறிய மொழிப் பிரிவினையன்றி வேறு காரணம் கூற முடியவில்லை. எனவே இந்த எழுத்துக்களைப் பிறமொழிச் சொற்களை அல்லது பெயர்களைக் குறிப்பிடக் கையாளலாம் என்பது நன்னூலார் கருத்து. உருசியன் போன்ற மொழிகளில் இத்தகைய விதிகள் உள்ளன. ஆனால் தமிழில் இவ்வெழுத்துகளுக்கு முன் தகுந்த உயிரெழுத்தை வைத்து எழுதுவதன் மூலம் இந்த முரண்பாடு நீக்கப்படுகிறது. ஆங்கிலத்திலும் இதைக் காண்பது வியப்பே. டபுள்பூவைத் தொடர்ந்து ஆர்வரும் சொற்கள் பெரும்பாலும் டபிள்யூ ஒலி இன்றியே ஒலிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு ரைட்(எழுது), ராங்(தவறு). லாகு(log) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மரக்கம்பு அல்லது தடி, ஒரு முகத்தலளவு, செல்கை(பயண)க் குறிப்பு என்ற பொருட்கள் உண்டு. இச்சொல்லின் முன் ″உ″ சேர்த்தால் உலக்கை, உழக்கு, உலவு, ஆகிய தமிழ்ச் சொற்கள் கிடைக்கும். மேலே குறிப்பிட்ட இவ்வகைச் சொற்கள் கிரேக்க, இலத்தீன் மொழிகளின் வழியாக ஆங்கிலத்தை அடையவில்லை. குமரிக் கண்டத்திலிருந்து கிழக்காசியக் கடற்கரை வழியாகச் சீனம், உருசிய நிலப்பரப்புகளைக் கடந்து ஐரோப்பாவை அடைந்த ″அநாகரிக″ மக்களிடமிருந்தே வந்துள்ளன. எனவே அகத்தியத்துக் கெதிரான ஐந்திரக் கோட்பாடு குமரிக் கண்டம் முழுகிக் கொண்டிருக்கும் போதே உறுதிப்பட்டுவிட்டதெனக் கொள்ளலாம். இப்போது நம் முன் நிற்கும் கேள்வி, சமற்கிருதம் தமிழிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஒரு மொழியென்றால், அம்மொழியிலுள்ள தமிழில் விலக்கப்பட்ட ஒலிகளை மீண்டும் தமிழில் சேர்த்துக் கொள்வதில் என்ன தவறு என்பதாகும். தமிழிலிருந்து சமற்கிருதத்தின் மூலவடிவம் பிரிக்கப்பட்ட போது இருந்த சூழல் வேறு இன்றிருக்கும் சூழல் வேறு. அன்று ஒரு அறிவியல் - தொழில்நுட்ப, அரசியல் - குமுகியல் சூழலில் குமுகத்தின் தேவை கருதி மொழியில் இத்தகைய ஒரு பிரிவினை தேவைப்பட்டது. இன்று சமற்கிருதம் மக்களை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கும் ஒரு கூட்டத்தின் அடையாளமாகவும் கருவியாகவும் தமிழ் அதை ஏதிர்த்துப் போரிடும் பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்களின் குமுக, தேசிய அடையாளமாகவும் கருவியாகவும் உள்ளன. மொழிக் கலப்பினால் இந்த அடையாளத்தை ஒடுக்கப்படும் மக்கள் இழந்து விடும் இடர் உள்ளது. இந்தச் சாதிய வேறுபாடுகளும் ஒடுக்குமுறைகளும் தேசிய ஒடுக்கலும், குறிப்பாகப் பொருளியல் அடிமைத்தனமும் முடிவுக்கு வந்த பின்னர் நாம் இது நாள் வரை கட்டிக்காத்து வந்த நம் தாய்மொழியின் கட்டுக்கோப்பில் நாம் மேலே கூறிய சில நெகிழ்வுகளுக்கு இடம் கொடுக்கலாம்.

            கடும் ஒலிகள் அகற்றப்பட்டு மிகக் குறைந்த ஆற்றல் செலவில் ஒலிக்கத்தக்க ஒப்பற்ற அமைப்புடைய தமிழ் மொழியமைப்பைக் கொண்டே தமிழ் மக்கள் நெடுங்காலம் வாழ்ந்து பழகிவிட்டனர். குழுஉக்குறிகளுக்கென ஒதுக்கப்பட்ட மொழி தனக்கு வழங்கப்பட்ட கடமையிலிருந்து பிறழ்ந்து மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு சிறு கும்பலுக்குப் பயன்படும் நிலை வந்தது. தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் உழைக்கும் மக்கள் அத்தொழில்கள் பற்றிய எழுத்தறிவைப் பெற்றுவிடாமல் இம்மறையொழி தடுத்தது. எனவே தமிழ் மொழியிலேயே அனைத்து அறிவியலையும் தொழில்நுட்பங்களையும் கலை நுணுக்கங்களையும் தமிழ் அறிஞர்கள் படைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவ்வப்போது அந்நூல்களை சமற்கிருதமாகிய செயற்கை மொழிக்குள் பெயர்த்து வைத்துக்கொண்டு தமிழ் நூல்களை அழிக்கும் தொழிலை இந்த மேல்மட்ட ஒட்டுண்ணிக் கும்பல் செய்துகொண்டுவந்தது. உழைக்கும் மக்கள் கல்வி கற்பதிலிருந்த தடை இந்தத் திருட்டை எளிதாக்கியது. இக்காரணங்களால் சமற்கிருத்தில்தான் அனைத்து அறிவியல்களும் அறிவியங்களும் தோன்றின; தமிழ் அவற்றை இரவல் வாங்கியது என்ற கருத்து எளிதாகப் புகுத்தப்பட்டது. எவருக்கும் தாய்மொழியில்லாத சமற்கிருதம் எவ்வாறு உழைக்கும் மக்களின் தொழில்நுட்பங்களைப் பெற்றது? சமற்கிருதம் பார்ப்பனர்களுக்குத் தாய் மொழி என்ற உண்மைக்குப் புறம்பான கருத்தை ஏற்றுக்கொண்டாலும் உழைப்பை அறியாத, உழைப்பை வெறுக்கிற அவர்களின் மொழியில் உழைப்பிலீடுபடும் மக்களின் தாய்மொழியிலில்லாத தொழில்நுட்ப நூற்கள் எவ்வாறு தோன்றின? இக்கேள்விகளே இந்தப் பொய்ம்மையை வெளிச்சம் போட்டு காட்டிவிடும்.

            இனி, இந்திரனுக்கும் தேவரடியார்களுக்கும் உள்ள உறவு பற்றிய தேடலைத் தொடர்வோம். இந்திரனவையில் இருந்த அர மகளிருக்கும் அவனுக்கும் இருந்த உறவு அரசன் ஆடற் பெண்டிர் - பெண் ஒற்றர் என்ற அளவோடு நின்றது. இவர்களுக்கு யாரையும் காதலிக்கவோ குடும்பம் நடத்தவோ உரிமையில்லை. அந்த இந்திரனவையிலிருந்து அகத்தியரால் விலக்கப்பட்டு சோழ நாட்டுத் தலைநகராகிய பூம்புகாருக்கு வந்த உருப்பசி(ஊர்வசி) எனப்படும் மாதவியின் வழிவந்தவளும் கோவலனின் காதலியுமாகிய மாதவியும் அரண்மனை நாடகக் கணிகையாகவே இருந்தாள். அவளது பணி குறிப்பிட்ட விழாக் காலங்களில் மக்கள் முன்பு நடனமாடி அவர்களை மகிழ்விப்பதாக இருந்தது. அவளது வருவாய்க்காக அவள் பரத்தமை செய்து அரசன் நிறுவிய கட்டணத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இந்த அரசப் பரத்தை முறையும் மாதவியோடு முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் உலகின் பிற பகுதிகளில் குறிப்பாக எகிப்து, மெசப்பொட்டோமியா பகுதிகளில் கோயில் பரத்தைகளைப் பற்றிய செய்திகளே கிடைக்கின்றன. பாபிலோனியக் காப்பியமான கில்காமேசின் கதைத் தலைவனான கில்காமேசு இந்திரனைப் போன்று பரத்தையரை வைத்திருந்தான். எங்கிடு என்ற வலிமை மிக்க காட்டு மனிதனை வசக்குவதற்கு(பழக்குவதற்கு) அவன் ஓர் அரண்மனைப் பரத்தையையே விடுத்தான். அவள் எங்கிடுவோடு ஆறு பகல்களும் இரவுகளும் கூடியிருந்து அவனை வயப்படுத்தி தலைநகருக்கு இட்டுவந்தாள். எங்குடுவை உயிர் நண்பனாகக் கொண்ட கில்காமேசு அவன் நோயால் இறந்துவிட அவன் உயிரை மீட்கலாம் என்ற நம்பிக்கையில் இறப்பில்லாதவன் என்று அறியப்பட்டவனும் கடற்கோளுக்குக் தப்பியவனும் இருமலைகளுக்கிடையிலிருந்த ஒரு பெரும் கதவின் வழியாக மட்டுமே அடையத்தக்கவனுமான உட்நாப்பிட்டிம் என்பவனைத் தேடிச் சென்றான். இந்த உட்நாப்பிட்டிம் யூத மறைநூலான விவிலியத்தில் பெருவெள்ளத்துக்குத் தப்பியவனாகக் கூறப்படும் நோவாவின் மூலவடிவம். மச்சபுராணத்தில் வைவசுவத மனு என்று கூறப்படுகிறவன், இந்தியத் தொன்மங்களில் தென்திசைக் கடவுள் என்று கூறப்படும் எமன் ஆகியோரின் நகலாகக் கருதத்தக்கவன். இவற்றிலிருந்து தெரிவது என்னவென்றால் கில்காமேசு காப்பியம் குமரிக் கண்டத்தில் வாழ்ந்த இந்திரனை மனதில் கொண்டு எழுதப்பட்டது என்பதாகும். அவன் தாண்டிச் செல்லும் பெருங்கதவு கபாடபுரத்தை (கபாடம் = கதவு) நினைவுட்டுகிறது. ஆக உலகில் இந்திரனுக்குப் பின் அரசுசார் பரத்தையரை வைத்திருந்தவர்கள் கழகக் காலச் சோழர்களே என்பது புலனாகும்.

            நம் பண்டைத் தொன்மங்கள் மற்றும் மறவனப்புகளான(இதிகாசங்களான) இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றில் ஆந்திர மக்கள் இந்திரனோடும் மருதநிலப் பண்பாட்டோடும் தொடர்புடையவர்கள் என்பதற்கு எண்ணற்ற தடயங்களைக் காண முடிகிறது. இங்கு கோயில்களுக்குக் கட்டுப்பாடமல் தனியே பரத்தைமைத் தொழில் செய்து வாழும் பெண்கள் தனிச் சாதியினராக வாழ்கின்றனர். இவர்களுக்குக் கணவன் இல்லாததால் அவர்கள் கைம்மையே அடைவதில்லை. அதனால் அவர்களை நித்திய கல்யாணிகளென்றும் அழைக்கின்றனர். இவர்கள் மங்கலத்துக்கு அடையாளமாகக் கொண்டாடப்படுகின்றனர். திருமணங்களின் போது இவர்களின் கைகளால் தாலியை எடுத்துக் கொடுத்தல் சிறப்பாகக் கருதப்படுகிறது. இத்தகைய ஆந்திர நாட்டிலிருந்துதான் இராசராசன் தனக்கு உடனடியாகத் தேவைப்பட்ட தளியிலாப் பெண்டிர் எனப்படும் தேவரடியாரை இறக்குமதி செய்தான். பின்னர் சோழ மன்னர்கள் கடைப்பிடித்த கோயில் சார்ந்த பொருளியலின் விளைவாக மக்களிடையில் உருவான தாங்கமுடியா வறுமையால் ஆதரவற்ற பெண்கள் தங்களையும் தங்கள் பெண் மக்களையும் கோயில்களுக்கு அடிமைகளாக விற்றுக்கொண்டனர். இது நாயக்கர் ஆட்சிக் காலம் வரை தொடர்ந்தது.

            கோயிற் பெண்டிரின் பணி கோயிலைத் துப்புரவு செய்தல், நெல்லை அவித்துத் குத்தி சமைத்தல், தோட்டங்களில் உழைத்தல் என்று மிக விரிவானது. அவர்களில் ஆடல், பாடல் திறனும் அழகும் வாய்க்கப் பெற்றவர்கள் ″இறைவனுக்கு″ நேரடியாகப் பணிவிடை செய்யும் வாய்ப்புப் பெற்றனர். தெய்வப் படிமம் எனப்படும் பொம்மை முன் ஆடுவதும் ″சோபனம்″ பாடி ″அவரை″த் தூங்க வைப்பதும் திருப்பள்ளி எழுச்சி பாடித் துயிலெழுப்புவதும் அப்பொம்மை ஊர்தியிலோ (வாகனத்திலோ) தேரிலோ தெருவலம் வரும்போது முன்னும் பின்னும் சதிராடுவதும் இவர்களது அடிப்படைக் கடமைகள். இவர்களை ″இறைவனு″க்குத் திருமணம் செய்து வைப்பதன் அடையாளமாக நடைபெறும் பொட்டுக் கட்டுதல் எனும் சடங்கின் போது பொட்டு எனப்படும் தாலியை அவள் கழுத்தில் கட்டுபவன் பூசாரியாகிய பார்ப்பான்தான். அவள் இறந்தால் கணவன் செய்ய வேண்டிய கருமாதி முதலியவற்றை ″இறைவனின்″ பெயரால் செய்பவனும் பார்ப்பனப் பூசாரிதான். ஆக, தேவதாசிகள் நடைமுறையில் பார்ப்பனப் பூசாரியின் மனைவிகள்தாம். அத்துடன் கருவறையில் பார்ப்பனர் தவிர நுழையும் உரிமை பெற்றவர்களும் இவர்களே. இந்த வகையிலும் நம் சாதி அமைப்பில் பார்ப்பனர்க்கு அடுத்தவராகவும் பிற அனைத்துச் சாதியினரை விட மேலடுக்கிலும் வைக்கத் தகுந்தவர் தேவதாசிகளே!

            தேவதாசிகள் மீது பார்ப்பனப் பூசாரிகளுக்கு இருந்த இந்த ″மனைவி″ போன்ற உரிமையை அவர்களால் முழுமையாக நடைமுறையில் பயன்படுத்த முடிவதில்லை. அந்தப் பெண்களின் அழகு, கலைத் திறன், அறிவு, பழகுந்திறன், சூழ்ச்சித் திறன், நல்வாய்ப்பு ஆகியவற்றுக் கேற்ப அரசன், அமைச்சன், படைத்தலைவன், நாடு எனும் உள்ளூர் ஆட்சித் தலைவன், சிற்றரசன், பண்ணையார்கள் போன்றோருக்கு வைப்பாட்டியாக (இற்பரத்தை, காமக்கிழந்தி, காதற்பரத்தை என்றெல்லாம் அழைக்கப்படுபவர்) அமைவர். இத்தகைய நல்வாய்ப்பு அமையப் பெறாதவர்கள் தெருவில் நின்று தங்கள் உடலை விலைபேசி விற்கும் விலைமகளிராக இழிந்த வாழ்க்கையை நடத்தினர்.

            கணிகையரை எண்ணெண் கலையினர் என்று அழைக்கும் மரபு நம் பண்டை இலக்கியங்களில் காணப்படுகிறது. என்ணென் கலை என்றால் அறுபத்து நான்கு கலைகள் என்று பொருள். அறுபத்து நான்கு கலைகள் என்றதும் சிலருக்குப் பெரும் உள்ளக் கிளர்ச்சி ஏற்படக் கூடும். ஆண் பெண் புணர்ச்சியில் 64 நிலைகள் உண்டு என்று நம் பண்டைக் காம நூல்கள் கூறுகின்றன. இவற்றைக் கரணங்கள் என்ற சொல்லாலேயே அவை குறிப்பிடுகின்றன. அவற்றைப் படங்களோடு விளக்கிய நூல்களும் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தன. ஆனால் நாம் கூறும் 64 கலைகள் அவையல்ல. அவை மிக உயர்ந்த அறிவியல், தொழில்நுட்பவியில், பண்பாட்டியல், அறிவுகளின் தொகுதியாகும். பல்வேறு துறைகளில் இன்றைய வளர்ச்சி நிலையுடன் ஒப்பிடும் போது அவை நம்மை மலைப்பிலும் வியப்பிலும் வாய்பிளக்கச் செய்வதுடன் பெருமையில் தலைநிமிரச் செய்பவையுமாகும். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்: மலையேறுதல், யானையேற்றம், குதிரையேற்றம், வசியம், சோதிடம், உடற்கூறறிதல்(சாமுத்திரிகா லட்சணம்) இசை, நாட்டியம், இலக்கணம், இலக்கியம், உரையாடல், வானிற்புகுதல், வானிற்பறத்தல், நீர்த்தடை, வளித்தடை, நெருப்புத் தடை என்று விரிகிறது. இவற்றில் நம்மை உறுத்துபவை வானிற்புகுதலும் வானிற்பறத்தலுமாகும். வானிற் புகுதல் என்பது விண்வெளிச் செலவு, வானிற் பறத்தல் என்பது வானூர்தியில் செல்லல். இவற்றை நம் மக்கள் அறிந்திருந்தனரா என்ற ஐயம் அறிஞர்கள் உள்ளத்தில் எழுவது இயற்கைதான். ஆனால் இயக்கர்கள் என்றும் விஞ்சையர்கள் என்றும் காந்தருவர் என்றும் யாழோர் என்றும் நம் இலக்கியங்களிலும் தொன்மங்களிலும் குறிக்கப்படுவோர் வானில் பறந்தனர் என்று கூறப்படுவதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். மேலும் மிகத் தொல்பழங்காலத்தில் வானில் பறந்து சென்ற மக்கள், குறிப்பாகப் பெண்கள் உலகிலுள்ள மிகப்பழைய நாகரிகங்களைத் தோற்றுவித்தனர் என்ற பழங்கதைகள் தொல்நாகரிக மக்களிடையில் வழங்கி வந்துள்ளன. அதுவும் பொன்ம(உலோக)ச் சிறகுகளை உடைய பெண் பருந்துகள் என்று அவர்கள் குறிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து எண்ணற்ற தடயங்களையும் சான்றுகளையும் காட்ட முடியும். விரிவஞ்சி விடுகிறோம். நீர்த்தடை, வளித்தடை, நெருப்புத் தடை என்பவை வாட்டர் புரூபிங், எயர்புரூபிங், பயர்புரூவிங் எனும் தொழில்நுட்பங்களாகும். இத்திறன்களைக் கணிகையர்களாகிய பெண்கள் மேல் ஏன் ஏற்றிச் சொன்னார்கள் என்ற ஐயம் எழுக்கூடும். கந்தருவர் என்றும் யாழோர் என்றும் அறியப்படும் மக்கள் திருமணமில்லா வாழ்க்கையினர். இன்று தொழில்நுட்பமும் அறிவியலும் பொருளியலும் வளர வளர மக்கள் குமுகம் சென்று கொண்டிருக்கும் ஓர் இலக்கை எய்தியவர்கள். இங்கு பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள் என்ற நிலையைத் தாண்டி ஆண்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலையைக் கூட எய்திருக்கக் கூடும். இவற்றைத் தடம் பிடிக்க நாம் 40,000 ஆண்டுகளுக்கும் கூடுதலாக பின்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கும். இந்த வரலாற்று நினைவின் சாயலைத் தான் திருமணமில்லா வாழ்க்கையை உடைய கணிகையர் மீது அவர்கள் வாழ்ந்த காலத்திலில்லாத இந்தத் திறன்களாக ஏற்றிச் சொல்லியிருக்க வேண்டும்.

64. கலைகளின் பட்டியலிலுள்ள பலவற்றை சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் நாம் நம்பத்தகாதவை என்று ஒதுக்கியிருக்கக் கூடும். இன்று வானூர்திகளும் விண்வெளி ஓடங்களும் மலிந்து விட்ட நிலையில் புற உளவியல் (பாராசைக்காலசி) போன்ற ஆய்வுகள் வளர்ச்சியுற்ற நிலையில் வசியம் போன்றவற்றையும் நாம் ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. அப்பட்டியலில் ஏற்கத்தகாதது ஒன்று உண்டென்றால் அது கூடுவிட்டுக்கூடு பாய்வதுதான். இது உயிர் பற்றிய அறிவியல் உண்மைகளுக்கு முற்றிலும் புறம்பான ஒரு கற்பனையாகும்.

பண்டைய அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி இங்கு நாம் விரித்துரைப்பது திராவிட இயக்கத்தவர் போன்றோ, இந்து சமய இயக்கத்தவர் போன்றோ, நம்மிடம் எல்லாம் இருக்கின்றன என்ற இறுமாப்பில் நமக்கு நாமே பெருமைப்பட்டுக் கொண்டு வாளாவிருப்பதற்கல்ல. ஒரு காலத்தில் இத்தகைய உச்சிகளை நம்மால் எய்த முடிந்ததென்றால், இன்றும் அது முடியும். அதற்குத் தேவை இன்று ஆட்சியாளர்களும் உள்ளும் புறமும் உள்ள அவர்களது கூட்டாளிகளும் நம் அறிவியல், தொழில்நுட்ப, பொருளியல் வளர்ச்சிக்களுக்கு திட்டமிட்டு ஏற்படுத்தி வைத்திருக்கும் தடைகளை உடைப்பதுதான் என்ற உண்மை நிலையை எடுத்துரைக்கத்தான்.

            கோயிற் கணிக்கையர் நக்கன் என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டுள்ளனர். நக்கன் என்பதற்கு அம்மணமானவன்(ஆடையற்றிருப்பவன்) என்றொரு பொருளுண்டு. இவர்கள் ஆடையில்லாமல் இருக்க வேண்டிய சூழ்நிலையில் வாழ்ந்தனரா என்று தெரியவில்லை. ஆனால் நம் கோயில்களிலுள்ள பெண் சிலைகளுக்குக் கோயில் கணிகைகள் தாம் ஒப்புருக்களாக(மாடல்களாக) இருந்திருக்க வேண்டும். மற்றும் இப்பெண்களில் உடல்திறன்(சிம்னாட்டிக்) பயிற்சி மிக்கோரும் இருந்திருக்கின்றனர். ஆடையணியாத பெண்கள் பலர் சேர்ந்து குதிரை போன்றும் யானை போன்றும் நின்றும் படுத்தும் தொங்கியும் அமைந்திருக்கும் சிற்பங்கள் கோயில்களில் உள்ளன. இவற்றுக்கு ஒப்புரு வழங்கிய பெண்கள் ஆடையின்றித்தான் இருந்திருக்கிறார்கள்.

            பதியிலாப் பெண்டிர் என்றும் தளியிலாப் பெண்டிர் என்றும் வழங்கப்படும் இத்தேவரடியார்களில் பலர் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து கோயில்களுக்குப் பெரும் கொடைகள் வழங்கியுள்ளனர். இவர்களது வாழ்க்கைக்கென்று நன்செய் நிலங்கள் வழங்கப்பட்டிருந்தன.

            தேவதாசிகளின் மேலுள்ள உரிமையில் பார்ப்பனர்களுக்கும் பிற மேல் சாதியினருக்கும் போட்டிகள் நிலவியதற்கான தடயங்கள் உள்ளன.

            ஆங்கிலராட்சியில் ஒரு கட்டத்தில் பார்ப்பனர்கள் முகாமையான பதவிகளைப் பிடித்துக்கொண்டனர். அதற்கு அப்பார்ப்பனர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த கோயில் தாசிகளையே பயன்படுத்தியுள்ளனர். அத்தகைய ஓர் அதிகாரி ஓர் ஊருக்கு வரும்போது அவ்வூரிலுள்ள கோயில் தாசி அவ்வூர் நுழைவாயிலில் சதிராடி அவரை வரவேற்க வேண்டும். அவர் அங்கு தங்கியிருக்கும் வரை அவருடனிருந்து அவருக்கு வேண்டிய ″பணிவிடைகள்″ அனைத்தையும் செய்ய வேண்டும். அவர் ஊரைவிட்டுப் போகும் போது ஊர்க்கோடி வரை அவருடன் சென்று சதிராடி வழியனுப்ப வேண்டும். இந்தச் செய்தியை, புகழ்பெற்ற எட்கர் தர்ட்டன் எழுதியுள்ள தென்னிந்தியாவின் சாதிகளும் பழங்குடிகளும் எனும் நூல் தருகிறது. இச்செய்திகளைத் திரட்டித் தந்தவர் தர்ட்டனின் உதவியாளராகிய ஒரு பார்ப்பனர் என்ற குறிப்பும் நூலிலுள்ளது. பார்ப்பனர்களின் இந்த நடவடிக்கைக்குக் காரணம் அன்றைய பார்ப்பனப் பெண்கள் கல்வியறிவற்றவராய், தூய்மையும் துப்புரவும் அறியாதவராய், பண்பாட்டு மட்டத்தில் மிகத் தாழ்ந்தவராய் இருந்ததுதான் என்கிறார் அவர். அப்படியிருந்த பார்ப்பனப் பெண்களிடம் இன்று காணப்படும் பண்பாட்டுப் புரட்சி எவ்வாறு தோன்றியது என்பதைச் சற்றுப் பின்னர் பார்ப்போம்.
 

ஓர் இடைக்குறிப்பு: இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பார்ப்பனர் எதிர்ப்பின் அமைப்பு வடிவமாய் முதன்முதலில் உருவாகிய தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் பின்னணி வலிமையைக் கொடுத்த மேற்சாதிப் பணக்காரர்களில் பார்ப்பனரின் இந்த போட்டியால் வெறுப்புற்றிருந்தவர்களும் இருந்திருக்கலாம் என்பதே.


[1] Dravidian Gods in Modern Hinduism by WILBER THEODORE ELMORE

0 மறுமொழிகள்: