தமிழில் வழிபாடு - 1
தமிழில் வழிபாடு[1]
குமரிமைந்தன்
தமிழகத்தில்
வழிபாட்டு மொழி பற்றிய சிக்கல் அவ்வப்போது சுடுபிடிக்கும். தமிழில்தான் வழிபாடுகள்
நடத்தப்பட வேண்டும் என்ற முழக்கத்துக்குப் பல்வேறு தரப்புகளிலிருந்தும் ஆதரவு
உருவாவது போல் தோன்றும். இதில் ஈடுபடும் குழுக்களின் கலவை ஐயப்பாடுகளை எழுப்பிக்
குழப்பத்தில் ஆழ்த்துவது வழக்கம். எனவே இது பற்றிய ஓர் ஆழமான புரிவை நாம் எய்த
வேண்டியுள்ளது.
தமிழில்தான் வழிபாடு நடத்த
வேண்டுமென்று கேட்போரின் கூற்று, தமிழ்தான் முதலில் வழிபாட்டு மொழியாக இருந்தது
என்பது. வடமொழி எனப்படும் சமற்கிருதம் வேண்டுமென்போர் கூறுவது, ஆகம[2]
முறைப்படி சமற்கிருதந்தான் பூசைக்குரிய மொழி என்பது. இருசாரார் கூற்றிலும் உண்மை
இல்லாமல் இல்லை.
சமற்கிருத வழிபாடு அல்லது வேத வழிபாடு
சிலர் கூறுவது போல் பல்லவர் காலத்திலோ பிற்காலத்திலோ தோன்றியதல்ல. கழக (சங்க)க்
காலத்தின் மதுரைக் காஞ்சி, வேத முழக்கங்கள் மதுரை மாநகரை அதிரவைத்ததைக்
கூறுகிறது. கரிகாலன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போன்ற
மன்னர்கள் மாபெரும் வேள்விகளை நடத்திப் பார்ப்பனர்களுக்குக் கணக்கற்ற பொன்னையும்
பொருளையும் அள்ளிக் கொடுத்தனர். வஞ்சியில் சேரன் செங்குட்டுவனுக்கு சிவன் கோயிலில்
மறையவர்கள் காட்டிய நறும்புகை அவனது மாலையை வருத்தியதாக இளங்கோவடிகள் கூறுகிறார்.
இளங்கோவடிகள் மனதையும் வருத்தியது போலும். வேத வழிபாடு சிவன் கோயிலினுள் அப்போதே
நிகழ்ந்ததைக் காண்கிறோம்.
நாம் பேசுவது ஆகம வழிபாட்டை. ஆகம
வழிபாட்டுக்கும் வேத வழிபாட்டுக்கும் வேறுபாடுண்டு. சங்கர மடம் போன்றவை வேத
வழிபாட்டு முறையைப் பின்பற்றுகின்றன. இதனை வேதிய(வைதீக) முறை, நிகம முறை,
சுமார்த்த முறை என்றெல்லாம்கூட கூறுவர். வேதங்களை ஓதி வேள்விகள் நடத்துவதுதான் வேத
முறை வழிபாடு.
ஆகம வழிபாட்டு முறை வேத வழிபாட்டு
முறையிலிருந்து வேறுபட்டது. அது சிறுதெய்வ வழிபாட்டிலிருந்து திரிவாக்கம்(படிமுறை
வளர்ச்சி) பெற்றது. அப்பர், சம்பந்தர், போன்றோரின் பின்னால் உருவானது. சிறுதெய்வ
வழிபாட்டிலிருந்து ஆகம வழிபாட்டு முறைக்குத் திரிவாக்கம் பெறும் நிகழ்முறை இன்றும்
தொடர்கிறது. எங்கோ ஒரு காட்டில் ஓர் உடை(நாட்டுக் கருவை அல்லது சாள்) மரத்தடியில்
வெறும் கல் ஒன்று நடப்பட்டிருக்கும். ஒரு நாள் திடீரென்று எங்கிருந்தெல்லாமோ
மக்கள் வந்து கூடுவார்கள். ஆடு, கடா, கோழி, பன்றி வெட்டிக் காவு கொடுத்து ஆடல் பாடல்களுடன்
ஒன்றிரண்டு நாட்கள் விழா கொண்டாடிவிட்டுச் செல்வர். அந்தக் கல் மட்டும் நிற்கும்.
அந்த மக்கள் அந்தக் கல் தெய்வத்தை அடுத்து இருந்த அல்லது இன்றும் இருக்கும் ஓர்
ஊரிலிருந்து இடம்பெயர்ந்தவர்களின் வழித்தோன்றல்கள். சில இடங்களில் கல்லறை ஒன்றின்
மீது சிறு சிவக்குறி (சிவலிங்கம்) நடப்பட்டிருக்கும். அங்கும் ஒரு குறிப்பிட்ட
நாளில் மக்கள் கூடி மேற்கூறியவாறு வழிபடுவர். இவர்கள் அந்தக் கல்லறையில்
புதைக்கப்பட்டவரின் பிறங்கடைகள்(சந்ததிகள்). எங்காவது புறம்போக்கில் ஒருவர் ஓர்
அரச மரக் கன்றையும் வேப்ப மரக் கன்றையும் நடுவார். அவை வளர்ந்ததும் அதனடியில் ஒரு
பிள்ளையார் சிலையை வைப்பார். அது பின்னால் சிறுகச் சிறுக வளர்ச்சியடைந்து
நாளடைவில் ஒரு பெரும் கோயிலாகும் வாய்ப்பு உண்டு.
சிறுதெய்வங்களின் தோற்றம் இவற்றுடன்
அடங்கிவிடவில்லை. கற்பனைக் கெட்டாத காலப் பழமையுடைய மாடன், இயக்கி, சாத்தான்,
ஐயனார், மாரி, முத்துமாலை, பத்திரகாளி, திரெளபதி போன்ற தெய்வங்களும் சுடலைமாடன்,
பன்றிமாடன், தீப்பாய்ஞ்சம்மன் என்று எண்ணற்ற தெய்வங்களும் உண்டு. அவற்றில்
குடும்பப் பகை, அரசப் பகை, சாதி - சமயக் கொடுமைகள் போன்றவற்றால் வன்கொலையாய்ச்
செத்தவர்கள் உண்டு. மதுரை வீரன், காத்தவராயன் போன்றவர்களைக் கொன்றதனால் மக்களிடையில்
எழுந்த சீற்றத்தை அடக்க அரசர்களே அவர்களைத் தெய்வங்களாக்கினர். கொலைப்பட்ட கோவலன்
மனைவி கண்ணகிக்குச் சேரன் செங்குட்டுவன் கோயில் எழுப்பியதும் இத்தகையதே.
கொலைக்குக் காரணமானவர்கள், செத்தவர்களின் ஆவி தம்மையும் தம் குடும்பத்தாரையும்
பழிவாங்கும் என்று அஞ்சி வழிபடுவது உண்டு. தற்செயலாக அல்லது தற்கொலை செய்து கொண்டு
இளம் வயதில் இறப்பவர்களின் ஆவிகள் தொல்லை கொடுக்குமென்று கருதியும் வழிபடுவது
உண்டு.
காவிரியாற்றின் கல்லணைக்குக் கிழக்கே
வெண்ணாற்றின் கரையில் ஒரு சிறுதெய்வக் கோயில் உள்ளது. கோடைக்காலத்தில் ஆற்றில் நீர்
இல்லாத போது நண்பகலில் ஓர் இளம்பெண் கைக்குழந்தையுடன் ஆற்றைக் கடந்தாள். மணல்
சூடு(பொடிச் சூடு என்பர்) பொறுக்க முடியாமல் கைக்குழந்தையைக் கீழே போட்டு அதன்
மீது நின்றாள். இதுபோன்ற சூழ்நிலையில் சிக்கிய பட்டறிவுள்ளவர்கள் அவளது இந்த
நடவடிக்கைக்காக வியப்படையமாட்டார்கள். குழந்தை இறந்துவிட துயரமும் மானவுணர்வும்
தாக்க அவள் அங்கேயே தற்கொலை செய்துகொண்டாள். இதுபோன்ற நிகழ்ச்சிகள் பற்றிப் பல
இடங்களில் கேள்விப்படலாம். ஆனால் வெண்ணாற்றின் கரை தவிர வேறெங்கும் கோவில்
இருப்பதாகத் தெரியவில்லை.
ஒரு பெண் தன் கணவன் இருக்கும் போதே
கணவனின் தம்பியாகிய கொழுந்தனுடன் உறவு கொண்டிருந்தாள். அறிந்த கணவன் தம்பியைக்
கொன்றுவிட்டான். மனைவியோ கொழுந்தனோடு உடன்கட்டை ஏறி மாண்டாள். அவளையும் தெய்வமாக
வழிபடுகின்றனர். இவ்வாறு ஆற்றின் தோற்றத்தையும் முனிவரின் தோற்றத்தையும்(நதிமூலம்
ரிசிமூலம்) போல் தெய்வத்தின் தோற்றத்தையும் ஆய்ந்தால் பெருமைப்படும்படியான
முடிவுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. மக்களுக்கு ஏற்பட்ட
நெருக்கடிகளை அல்லது பெரும் ஏதங்களை(ஆபத்துகளை), இடுக்கண்களைத் தங்களது உயிர்களை ஈந்து
களைந்தோரை அவர்களால் பயனடைந்தோர் தெய்வமாக வணங்குவதும் உண்டு.
இத்தகைய தெய்வங்களுக்கு முதலில்
கூரையற்ற மூன்று பக்கங்களில் மட்டும் சுற்றுச் சுவர் எழுப்புவர் அல்லது கூரையுடன்
சிறுகோயிலை அமைப்பர். சில காலத்துக்கு முன் மண்ணால் சுவர்கட்டி ஓடு அல்லது
செங்கல்குத்து எனப்படும் மட்டப்பாவுக் கூரையுடன் முன்புறம் மரத்தால் ஆன அளி
(கிராதி)யுடன் இக்கோயில்கள் காட்சியளிக்கும். இப்போது செம்மூந்து(சிமென்று),
செங்கல் சுவருடன் திண்ணக்க(கான்கிரீட்)க் கூரையுடன் இரும்பு அளியுடன் இவை
உருவாகின்றன. பிள்ளையார் கோயில் தவிர பிற கோயில்களில் கோழி, பன்றி முதலியவற்றைக்
காவு கொடுக்க கழுமரம் போன்று இரும்புத்தடி நிறுவப்பட்டிருக்கும். சில இடங்களில்
பனைமட்டையைக் கூராகச் சீவி நட்டிருப்பதையும் காணலாம்.
இவ்வாறு உருவாகும் கோயிலில் நல்ல
வருமானம் கிடைத்தாலோ செல்வம் படைத்த ஒருவர் அத்தெய்வத்தால் பெரும் நன்மை ஏற்பட்டது
அல்லது பெரும் கேடு நீங்கியது என்று நினைத்தாலோ அக்கோயிலை விரிவுபடுத்த முன்வருவார்.
இத்திருப்பணிகளில் உட்புகுந்து பெயர், வாணிக விளம்பரங்களுக்கு ″உபயம்″ செய்யும்
″இறையன்பர்″களும் உண்டு. இவ்வாறு வளர்ச்சியடையும் கோயில்களுக்கு, தம் பிள்ளைகள்
மீது வெறுப்புற்று அல்லது அத்தெய்வத்தின் மீது கொண்ட பற்றுதலால் அல்லது பிள்ளைகளே
இல்லாத நிலையில் சொத்துகளை எழுதிவைப்போர் உண்டு. தம் பின்னடிகள்(சந்ததிகள்) தாம் விட்டுச்
செல்லும் சொத்துகளை அழித்து விடக்கூடாது என்பதற்காக அச்சொத்திலிருந்து வரும்
வரும்படியிலிருந்து இன்ன தெய்வத்துக்கு இன்ன ″அறங்களை″ச் செய்ய வேண்டுமென்று ″கட்டளை″களை
ஏற்படுத்துவதும் உண்டு. அவ்வாறு அமர்த்தப்படுவோருக்குப் பின்னடி இல்லாமல் போனால்
அந்தச் சொத்துகள் கோயிலுக்கு முழு உரிமையாகும். கோயிலை நடத்துவோர்
நேர்மையாளர்களாயிருந்து கோயில் வருமானத்தைக் கொண்டு கோயில் சொத்துகளைப்
பெருக்குவதும் மிக அரிதாக நடப்பதுண்டு. இவ்வாறு கோயில் சொத்துகள் வளரும் சுழலில்
கோயிலை நடத்துவோரிடையில் பங்குச் சண்டைகள் உருவாவது இயல்பு. வெளியிலுள்ளோர் கூடச்
சில வேளைகளில் சச்சரவுகளை உருவாக்குவர். அப்போது அவர்களில் ஒருவர் ஏதோவோர் அரசுத்
துறையில் முறையிட்டாலும் போதும். இதற்காகவே வாய்பிளந்து காத்து நிற்கும் இந்து
அறநிலையத் துறையின் கைகளில் கோயில் சிக்கிக் கொள்ளும்.
இதுவரை எந்த வகைப் பூசை
நடந்திருந்தாலும் இப்போது பார்ப்பனர் பூசாரியாக்கப்படுவார். உயிர்ப்பலி நிறுத்தப்படும்.
பலியிடக் கொண்டுவரப்படும் உயிரிகள் ஏலம் விடப்படும். தெய்வத்தின் பெயரின் முன்
″அருட்திரு″ என்ற அடைமொழி சேரும். அம்மன், அம்மை என்று முடியும் பெண் தெய்வப்
பெயர்கள் அம்பாள் என்று முடியுமாறு பெயர்மாற்றம் செய்யப்படும். வழிபடச் செல்லும்
மக்கள் காசு கொடுத்துச் சீட்டு வாங்கினால் அவர்கள் சொல்லும் பெயரில்
சமற்கிருதத்தில் போற்றி(அர்ச்சனை) கூறி பூசாரி ஆண்டவனிடம் ″பரிந்துரை″ செய்வார்.
″சிறுதெய்வ″க் கோயில் இப்போது ″பெருந்தெய்வ″க் கோயில் தகுதி பெற்று விடும்.
கோயிலுக்கு நல்ல வரும்படி இருந்தால் ″திருப்பணிகள்″ நடைபெறும்.
முன்பிருந்த கோயில் சுவர்
மண்ணாயிருந்தால் அதை இடித்துவிட்டுப் புதிய சுவரைக் கட்டுவர். இது
கருவறை(கர்ப்பக்கிரகம் அல்லது மூலத்தானம்) ஆகும். கருவறை மீது மேற்கட்டு(விமானம்)
என்ற ஒன்றை அமைப்பது வழக்கம். அது பார்ப்பதற்குத் கோபுர வடிவில் இருக்கும். ஆனால்
பெரும்பாலும் சதுரமாக இருக்கும். பெரும்பாலும் சிறுகோயில்களின் அடித்தளம் இதற்குப்
போதுவதில்லை. எனவே சிறு இடைவெளியிட்டு, இதில் ஆள் நுழைய இடமிருக்காது, நாற்புறமும்
இன்னொரு சுவர் எழுப்பி அதன் மீது மேற்கட்டை அமைப்பர். கோயிலை மேலும்
விரிவுபடுத்தும் நிலை வரும் போது கொடிமரம், பலிபீடம், மூலத்தெய்வத்தின் ஊர்தி(சிவனுக்குக்
காளை, அதாவது நந்தி, பிள்ளையாருக்கு மூஞ்சிறு போன்றவை), சுற்றுச் சுவர்,
மடைப்பள்ளி(சமையல் புரை), துணைத் தெய்வக் கோயில்கள், அறுபத்து மூவர் அல்லது
பன்னிரு ஆழ்வார்கள், ஒன்பான் கோள்கள்(நவக்கிரகங்கள்) ஆகியவற்றின் திருமுன்கள் (சந்நிதிகள்),
கிணறு, உள்மண்டபம், வெளிமண்டபங்கள், உட்சுற்று, வெளிச்சுற்று மதில்கள் மாடக்
கோபுரம் எனப்படும் மதிலில் இணைந்துள்ள கோபுரம் என்று படிப்படியாகக் கோயில்
வளர்ச்சி பெறும். இறைவன் திருவுலா வருவதற்காகப் பல ஊர்திகளும் தேரும்
வடிக்கப்படும். இந்த ″வளர்ச்சி″யில் வருமானவரி செலுத்த விரும்பாதவர்கள் தங்கள்
வருமானத்தை தம் ″மனதுக்குகந்த″ வழியில் திருப்பி விடும் பணத்துக்கும் பெரும்பங்கு
உண்டு.
இது போன்ற ″திருப்பணிகள்″
முடிந்தவுடன் ″கீழ்ச்சாதி″ மக்களான சிற்பிகள், பல்வேறு கட்டிடத் தொழிலாளர்கள்,
பொதுமக்கள் போன்றோரின் கை, கால்கள் பட்டதால் ″தீட்டாகி″ விட்ட கோயிலைத் ″தூய்மை″ப்
படுத்த வேள்வி, குடமுழுக்கு போன்றவற்றைப் பார்ப்பனர் நடத்துவர்.
நில உச்சவரம்பிலிருந்தும் குத்தகை
ஒழிப்புக்கும் கோயில்களுக்கு விலக்கிருப்பதால் பணம் படைத்தோர் ஒரு கோயிலைக் கட்டி
அதற்குத் தன்னையும் தம் பின்னடிகளையும் ″மரபு(பரம்பரை) அறங்காவலர்″களாக ஆக்கி
அக்கோயில் பெயரில் நிலங்களை வாங்கிச் சேர்ப்பதும் உண்டு. ஒருவர் தன் தம்பியைக்
கொன்றுவிட்டார். தம்பியின் ஆவி தன்னைப் பழிவாங்கும் என்று அஞ்சி தம்பிக்கு ஒரு
கோயில் எழுப்பினார். அக்கோயில் பெயரில் நாம் மேலே குறிப்பிட்டது போல் சொத்துக்களை
வாங்கிச் சேர்த்து அறங்காவலராக இருக்கிறார் என்று ஒரு நிகழ்ச்சியைச் சில
காலத்துக்கு முன்பு நண்பர் ஒருவர் கூறினார். இது இன்றைய நிலை. பண்டைய நிலை
என்னவென்று பார்ப்போமா!
கழக(சங்க)க் காலத்தில்
மன்னர்களுக்கும் அவர்களுக்கு இணையாகச் செல்வாக்கும் செல்வமும் பெற்றிருந்த
வாணிகர்களுக்கும் அதிகாரப் போட்டி உருவாகி வளர்ந்து வந்தது. வாணிகர்கள் மக்களின்
துணையை நாடாமல் வெளியிலிருந்து வந்த புத்த, அம்மணர்களின் துணையை
நாடினர். அம்மணர்கள் கலிங்க நாட்டை ஆண்ட காரவேலன் என்னும் மன்னனால்
தமிழகத்துக்குத் துறவிகள் என்ற பெயரில் விடுக்கப்பட்ட ஒற்றர்கள்[3].
அதற்கு முன் வெளியாரின் படையெடுப்புகளை முறியடிக்கத் தமிழக மூவேந்தர்கள் ஒரு
கூட்டணி அமைத்திருந்தனர். 1300[4]
ஆண்டுகள் நிலைத்திருந்த அக்கூட்டணியைத் தான் உடைத்ததாக கி.மு. இரண்டாம்
நூற்றாண்டில் வாழ்ந்த காரவேலன் அத்திகும்பா எனுமிடத்தில் பொறித்த கல்வெட்டில்
குறிப்பிட்டுள்ளது இதைத்தான் என்று கொள்ளலாம்.
இவ்வாறு ஒற்றர்களாக வந்த துறவிகள்
வெளிபடையாகச் செயற்படாமல் ஊருக்கு வெளியே இருக்கும் மலைகளில் உள்ள குகைகளில்
வாழ்ந்து மக்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டனர். இந்தக் குகைகளைத்தான் தொல்லியல்
ஆய்வாளர்கள் அம்மணப் படுக்கைகள் என்று கூறுகின்றனர். பிற்காலத்தில் அம்மணம் அரச மதமாக
ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னரும் இதே மரபைப் பின்பற்றி மலைக்குகைகளில் அம்மணப்பள்ளிகள்
நிறுவப்பட்டன.
சிலப்பதிகாரக் காலத்தில் கூட அம்மணத்
துறவிகள் தலைநகரங்களுக்குள் நடமாடியதாகத் தெரியவில்லை. கவுந்தி அடிகள் கூட புகார்
நகரத்தின் வெளியே தோன்றி மதுரை நகரின் வெளியிலிலேயே நின்று விடுகிறார். கோவலன்
கொலையுண்டதற்கு அவன் அம்மணனாயிருந்ததும் ஒரு காரணமாயிருக்குமோ என்ற ஐயத்தை
ஏற்படுத்தும் நுணுக்கமான குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளது.
கரிகால் சோழன் இலங்கையிலிருந்து 12000
வீரர்களைச் சிறைபிடித்து வந்ததற்குப் பழிவாங்கக் காத்திருந்த புத்தனான இலங்கைக்
கயவாகு மன்னனுக்கு மணிமேகலை நல்வாய்ப்பாகக் கிடைத்தாள்.
இவ்வாறு அயலவரான புத்த, அம்மணர்களின்
சூழ்ச்சிக்கு இரையானதால் சேர,சோழ, பாண்டிய அரசுகள் வீழ்ந்தன. 17ஆம் நூற்றாண்டு
இங்கிலாந்தில் மக்களைத் திரட்டி முதலாம் சார்லசு மன்னன் தலையைக் கொய்து
மக்களாட்சியை நோக்கி நாடு நடைபோட வழியமைத்த ஆலிவர் கிராம்வெலுக்கு வாய்த்தது போன்ற
ஒரு வாய்ப்பு அன்றைய தமிழக வாணிகர்களுக்கு இருந்தது. அவர்கள் மக்களைச் சாராமல்
இன்றைய அரசியல் இயக்கங்களைப் போல் ″எளிய″ வழிகளில் தம் ″இலக்கை″ எய்த நினைத்தால்
தமிழகத்துக்கு நேர்ந்த அவலம் இது. இந்த அவலம் இன்று வரை தொடர்கிறது.
புதிதாக வந்த களப்பிரர்கள் தமிழக
எல்லையில் வாழ்ந்த மலைவாழ் மக்களும் உள்நாட்டிலுள்ள உழவர் குடிமக்களும்
கலந்தவர்களாயிருக்கக் கூடுமென்று தோன்றுகிறது. அவர்கள் சமற்கிருதத்தைக் கொண்டு
வரவில்லை. ஏற்கனவே அரண்மனையில் இருந்ததைப் பரவலாக்கினர். அவ்வளவு தான்.
புத்த, அம்மண சமய ஊடுருவல்களால்
தங்கள் இருப்புக்கு வர இருக்கும் கேடுகளைத் தவிர்ப்பதற்காகக் கழகக் காலத் தமிழக
மூவேந்தர்கள் வேத சமயத்துக்கு ஊக்கமளித்தனர். வேள்விகளை நடத்தினர்.
பார்ப்பனர்களுக்கு முற்றூட்டாகவும் இறையிலியாகவும் நிலங்களையும் ஊர்களையும்
வழங்கினர்.
களப்பிரர்கள் தொடக்கத்தில்
மாலியர்(வைணவர்)களாக இருந்திருக்கலாம் என்பது அவர்களது பெயர்களிலிருந்து
தெரிகிறது. பின்னர்தான் அம்மணர்களாக மாறியிருக்கின்றனர். அவர்கள் பல முற்றூட்டுகளைப்
பிடுங்கி தமிழகத்தை அடுத்த பகுதிகளிலிருந்து புதிதாகப் பார்ப்பனர்களை வரவழைத்து
அவர்களுக்கு வழங்கியுள்ளனர் பல இடங்களில் முற்றூட்டு நிலங்களில் குத்தகைக்குப்
பயிரிட்ட மக்களே இந்த நூற்றாண்டில் அண்மைக் காலம் வரை நடைபெற்றது போல், தங்களிடம்
வைத்துக் கொண்டனர்.
களப்பிரர் காலத்தில் வெளிப்படையாகக்
காலூன்றிய அம்மண, புத்த சமயங்களைப் பயன்படுத்தி வெளியார் தமிழக வாணிகத்தைத் தங்கள்
கைப்பிடிக்குள் கொண்டுவந்தனர். வேளாண்மையும் சுரண்டப்பட்டது. அத்தகைய ஒரு கட்டத்தில்தான்
வாணிகர் குலப் பெண்மணியான காரைக்காலம்மையார் சிவனிய(சைவ) எழுச்சி எனப்படும் பத்தி
இயக்கத்துக்குக் கால்கோள் இட்டார். அம்மணத்திலிருந்து சிவனியத்துக்கு மாறிய
மருள்நீக்கியார் தன் பெயரைத் திருநாவுக்கரசர் என மாற்றி இயக்கத்தை
வலுப்படுத்தினார். பார்ப்பனரான சம்பந்தர் எழுச்சியை ஏற்படுத்தினார். சமய
அடிப்படையிலான ஓர் ஒற்றுமை உருவானது. சிவன் புதருக்குள்ளிலிருந்து தம்மை அழைத்தான்
என்று அவர்கள் கூறியிருக்கும் இடங்கள் நாம் தொடக்கத்தில் குறிப்பிட்டவாறு வெறும்
கற்களாக இருந்திருக்கும் அல்லது கல்லறைகளில் நடபட்ட சிவக்குறிகளாக இருந்திருக்கும்
அல்லது அண்மைக்காலம் வரை புல் தடுக்கியது, கல் தடுக்கியது, தோண்டிப் பார்த்தோம்
சிவக்குறி தோன்றியது என்று கூறிக் கோயில்களைக் கட்டினார்களே அது போல் அன்றும்
நடந்திருக்கலாம்[5]. அயலவர்களான
புத்த, அம்மணர்கள் மீது மக்களுக்கிருந்த வெறுப்பைப் பயன்படுத்தி பார்ப்பனர்களும்
வெள்ளாளர்களும் தங்கள் விருப்பம் போல் செயற்பட்டனர்.
அம்மணர்களாலும்
புத்தர்(பவுத்தர்)களாலும் தமிழ்மொழி அடையாளம் தெரியாமல் சிதைந்து போயிருந்தது.
சமற்கிருதமும் தமிழும் கலந்த ஒரு இழிமொழி உருவாகி இருந்தது. அதனை மணிப் பவளம்(மணிப்பிரவாளம்)
எனப் பெருமைபடக் கூறிகொண்டனர். மணியும்(இரத்தினமும்) பவளமும் கலந்தாற் போன்ற
சிறப்புடையதாம் அது. இன்று தம் வாணிக இதழ்களும் ஏன், சில ″முற்போக்கு″ இதழ்களும்
கூடத்தான், இன்றைய கலப்பு மொழியை மக்கள் மொழி என்று பெருமைப்படுத்தவில்லையா?
அப்பர், சம்பந்தர் ஆகியோர் தமிழைத்
தூய்மைப்படுத்தி மீட்டனர். அடித்தள மக்களிடம் வழங்கிய தூய தமிழ்ச் சொற்களைத் தம்
பாடல்களில் கையாண்டனர்.
சிவனிய நாற்குரவர்களாகிய அப்பர்,
சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரில் சம்பந்தரிடம் தமிழ் நிலத் தேசிய
உணர்வைத் தடம்பிடிக்க முடிகிறது. இராவணனை ஒரு தமிழகத் தேசிய வீரனாக அவர்
கருதியிருக்கிறார். அவர் பாடிய ஒவ்வொரு பதிகத்திலும் ஒரு பாடலில் இராவணனுக்கு
அருள்புரிந்தவராகக் சிவனைப் போற்றுகிறார். அம்மண, புத்தர்களின் வடமொழிகளை(பாலி,
பிராகிருதம)ப் பழித்திருக்கிறார். சாதி வரம்புகளை மீறி ஒரு வாணிகர் குலப்பெண்னை
அவர் திருமணம் செய்வது பொறுக்காமல் பார்ப்பனர்களே அவர்களைக் கொன்றிருக்கலாம்.
இன்றும் தம் சாதியை விடத் ″தாழ்ந்த″ சாதியில் மணமுடிப்பவர்களை ″மேல்″ சாதியைச்
சேர்ந்தவர்கள் கொல்வது நடைமுறையிலிருக்கிறது. அத்துடன் தம் குழுவில் உள்ள
போட்டியாளர்களைத் தீர்த்துக் கட்டிவிட்டு எதிர்க் குழுவின் மீது பழிபோடுவதும்
நடந்து கொண்டுதானே உள்ளது!
இந்தப் பிண்னணியில் பல்லவர்கள் சிறுகச்
சிறுகத் தமிழ்மொழியை ஏற்கத் தொடங்கினர். மூன்றாம் நந்திவர்மன் என்ற பல்லவன் தன்
மீது பாடப்பட்ட கலம்பகத்தைக் கேட்கத் தன் உயிரையே ஈந்தான் என்று கூறப்படுகிறது.
ஒருவன் மீது கலம்பகம் பாடப்பட்டால் அவன் இறந்து போவான் என்றொரு நம்பிக்கை.
அறம்பாடுவது என்றும் இதனைக் கூறுவர். அதன்படியே நந்திவர்மன் அமர்ந்திருந்து
கலம்பகம் கேட்ட பந்தலும் தீப்பிடித்து எரிந்தது என்பது செவிவழிச் செய்தி.
நந்திவர்மனுக்கு அரண்மனையில் அரசுரிமைப் போட்டியில் எதிரிகள் உண்டு. அவர்கள் தாம்
பந்தலுக்குத் தீவைத்தனர் என்பர். ஆனால் நத்திவர்மனின் முடிவு பற்றிய இந்தக் கூற்றை
ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
கலம்பகத்தைப் பற்றிக் குறிப்பிட்டதும்
1998ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்று கவனத்துக்கு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு
நகர்களிலிருந்து தமிழர் என்ற அடைமொழியைத் தாங்கிய ஏதோவொரு இயக்கப் பெயருடன்
கருணாநிதியைத் திட்டும் அறிக்கைகள் அச்சிடப்பட்டு ″மக்களுக்கு வழங்குக″ என்ற
வேண்டுதலுடன் பலருக்கும் யாரோ விடுத்துக் கொண்டிருந்தனர். அதன் முடிவுரையாகக்
கருணாநிதியின் மீது கலம்பகம் ஒன்றை இயற்றி அவர்கள் தங்கள் கையாலாகாமையைக் காட்டி
நிறுத்திக் கொண்டனர். கருணாநிதி தமிழகத்துக்குச் செய்து வரும் இரண்டகங்களை
முறியடிக்கும் அரசியல் நடைமுறைகளை மேற்கொள்ள இயலாதவர்களின் செயலே இது. கலம்பகம்
என்பது பல்வேறு பாவகைகளைச் கலந்து எழுதப்பட்ட ஓர் இலக்கிய வகை. கதம்பம் எனப்படும்
சொல் இதன் திரிபே.
பல்லவர்கள் தமிழுக்குத்
திரும்பியதற்கு ஒரு முகாமையான காரணம் இடைக் காலத்தில் அரண்மனையில் தோன்றிய
அரசுரிமைப் போட்டிகள்தாம். எனவே மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்கு அவர்கள்
ஒருவரோடொருவர் போட்டி போட்டுத் தமிழை ஆதரித்தனர்.
சம்பந்தரால் வெறியூட்டப்பட்டு மதுரைக்
கோட்டையினுள் 8000 அம்மணர்கள் கழுவேற்றப்பட்டனர். அன்பே சிவம்! நாட்டினுள்
மக்களிடையில் எத்தகைய கொலைவெறிக் தாண்டவம் நடைபெற்றிருக்கும் என்பதை எண்ணிப்
பார்த்துக் கொள்ளலாம். இந்தக் கலவரங்களில் சமய அடையாளம் தெரிவதற்காகத்தான்
திருநீறு போன்ற வெளி அடையாளங்கள் பூணுதல் தொடங்கியிருக்க வேண்டும்.
எண்ணாயிரம் அம்மணர்கள்
கழுவேற்றப்பட்டனர் என்பதை எண்ணாயிரம் என்ற ஊரிலிருந்த அம்மணர்கள்
கழுவேற்றப்பட்டனர் என்று இப்போது சிலர் விளக்கம் செய்கின்றனர். மதுரை மீனாட்சி
அம்மன் கோயிலில் இன்றும் நடைபெறும் சடங்குகள் இவ்விளக்கத்தைப் பொய்யாக்குகின்றன.
இத்தகைய மனநிலையிலிருந்த மக்களால்
கல்களும் கல்லறைகளும் சிறுதெய்வக் கோயில்களும் நாம் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள
படிமுறை வளர்ச்சியில் பெருங்கோயில்களாகச் சிறுக சிறுக மாறி வந்தன. சாலைகளில்
செல்லும் போது கவனமாகப் பார்த்தோமாயின் இப்படிமுறை வளர்ச்சியின் பல்வேறு
கட்டங்களில் நின்றுவிட்ட பல்வேறு காலங்களைச் சேர்ந்த பழங்கோயில்களை இன்றும் காண
முடியும். இன்று நடைமுறையிலிருக்கும் பழங்கோயில்களிலும் பெரும்பாலானவற்றில்
கோயில்கள் சிறுகச் சிறுக விரிவாக்கப்பட்டதைத் தடம்பிடிக்க முடியும். இவ்வாறு
படிப்படியாக விரிவாக்கப்பட்டமையால் இக்கோயில்களில் வெளிச்சமும் காற்றோட்டமும்
இன்றி ஈரங்கலந்த புழுங்கல் நாற்றமும் வெளவால்களின் நாற்றமுமாக உடல் நலத்துக்கு
ஒவ்வாத இடங்களாக அவை அமைந்துள்ளன. தஞ்சைப் பெரிய கோவில் போன்று ஒரே நேரத்தில்
திட்டமிடப்பட்டு உருவான கோயில்கள் மட்டும் விதிவிலக்குகளாக நின்று நல்ல
வெளிச்சமும் காற்றோட்டமுமாகத் தமிழகத்தின் கட்டிடக் கலையின் உயர்வுக்குச் சான்று கூறுகின்றன.
மேலே கூறிய படிமுறை வளர்ச்சியினூடாகச்
சிறிது சிறிதாக ஆகம முறை வடிவம் கொண்டது. ஆகம வழிபாடு என்பது கடவுளை அரசனைப் போல்
கருதி அரசனுக்குரிய அனைத்துப் பணிவிடைகளுடனும்(சோடச உபசாரங்கள் = பதினாறு வகைப்
பணிவிடைகள்), பரிவாரங்களுடனும் வழிபடுவது. கோயில் என்பதன் பொருள் அரண்மனை
என்பதாகும்(கோ = அரசன், இல் = வீடு).கழக இலக்கியங்கள் அரண்மனையைக் கோயில் என்ற
சொல்லாலாயே குறிப்பிடுகின்றன. வழிபாட்டிடங்கள் கோட்டங்கள் என்றும் அழைக்கப்பட்டன.
கோட்டங்கள் எனப்படுபவை, பொதுவாக, கூரையின்றி மூன்று புறமும் உயர்ந்த சுவர்களால்
சூழப்பட்டவையாகும். இத்தகைய கோட்டங்களை இன்றும் தென்மாவட்டச் சிறுதெய்வ
வழிபாட்டிடங்களில் காணலாம். இவற்றைக் காவு என்று அழைக்கும் மரபும் இருந்துள்ளது.
ஆரியங்காவு என்பது இத்தகையதே. முகம்மதியர்கள் மெக்காவில், ஆண்டுக்கொரு முறை
வழிபடச் செல்லும் இடமான காபா என்பதும் காவு என்ற தமிழ்ச் சொல்லின் திரிபுதான்
என்று முகம்மதிய நண்பர் அப்பாசு மந்திரி கருத்து தெரிவித்தார். கோயில்கள்
உருவாவதற்கு முன்பிருந்த கூரையுடைய சிறு வழிபாட்டிடங்களைத் தளி என்று அழைத்தனர்.
கழகக் காலத்தில் தொடங்கி புத்த, அம்மண
சமயங்கள் வலுப்பெற்றிருந்த காலங்களில் பல்வேறு சமயத்தினர் தத்தம் சமயங்களைப் பற்றிய
மெய்யியல்(தத்துவ)ப் போர்களில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் பத்தி இயக்கம் எனப்படும்
சிவனிய, மாலிய எழுச்சிகளின் போது, இறைவன் மெய்யியல்களுக்கு கட்டுப்படாதவன்;
அவனிடம் அடைக்கலம் புகுவதே உய்வுக்கு வழி எனும் அடைக்கலக் கோட்பாடு (சரணாகதித்
தத்துவம்) உருவானது. அதற்கிசைய அரசன் என்பவன் திறனாய்வுக்கு அப்பாற்பட்டவன்;
அவனிடம் அடைக்கலமாவதே வளமான வாழ்வுக்குவழி என்ற அரசியல் கோட்பாடு நடைமுறைக்கு
வந்தது. இதன் வெளிப்பாடகவே கோயில்களின் நடைமுறைகளாக ஆகமமுறை உருவானது.
வரி விதித்தல், தண்டுதல்(வசூலித்தல்)
முதலியவற்றில் கழகக் கால அரசர்களைக் குறைகூறிய புலவர்கள் இருந்தனர். அவர்கள்
பெரும்பாலும் வாணிகர்களாகவும் வேளாண்மையில் ஈடுபட்ட கிழார்களாகவும் இருந்தனர்.
அவர்களுக்கு மாறாக அரசர்களை வானளாவப் புகழ்ந்து அளவிறந்த பொன்னையும்
முற்றூட்டுகளாக நிலங்களையும் ஊர்களையும் பார்ப்பனப் புலவர்கள் பெற்றுச் சென்றனர்.
அரசர்களை வேள்விகளில் ஈடுபடுத்தினர். இந்தப் ″போற்றுதல்″ முற்றித்தான் அரசியலில்
அரசனுக்குக் கேள்விமுறையற்ற முற்றதிகாரத்துக்கும்(சர்வாதிகாரம்) சமயத்தில்
அடைக்கலக் கோட்பாட்டுக்கும் இட்டுச் சென்றது.
அரசனைத் திறனாய்ந்தோர் புத்த, அம்மணச்
சார்பினராயிருந்தனர். எனவே அவற்றின் எதிர்ச் சமயமாகிய வேதியத்தை அரசர்கள்
ஆதரித்தனர். புத்த, அம்மண சமயங்களின் தாக்குதலால் நிலை குலைந்திருந்த
பார்ப்பனர்கள் இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டனர். எனவே தமிழ்
அரசர்களைப் பார்ப்பனர்கள் ஏமாற்றினர் என்று சொல்லுவது தவறு. இருவரும் தத்தம்
நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள ஓர் இறுக்கமான கூட்டணியை அமைத்துக் கொண்டனர் என்பதே
சரி. புதிய சமயங்களின் சார்பான அரசுகள் தோன்றிய போதும் அரசுக்கும் சமயத்துக்குமான
இந்தத் தீய கூட்டணி தொடர்ந்தது. இது பார்ப்பனியம் எனும் நிகழ்முறையின் முகாமையான
கூறுகளில் ஒன்றாகும். இன்றும் இந்தக் கூட்டு தொடர்கிறது. நம் நாட்டைப் பொறுத்த வரை
இது சாதி சமய எல்லைகளைக் கடந்த ஒன்று.
ஆகம முறைக் கோயில்களில் இறைவனுக்குச் செய்யும் 16 வகைப்
பணிவிடைகள் அடிப்படையானவை. அரசனுக்குப் போன்று திருப்பள்ளி எழுச்சி தொடங்கி
குளிப்பாட்டல், உடுத்தல், ஒப்பனை செய்தல், சமைத்து ஊட்டல், சாமரம் வீசல், பாடியும்
ஆடியும் போற்றலும் மகிழ்வித்தலும், ஊர்திகளிலும்(வாகனங்களிலும்) தேரிலும்
″திருவுலா″(நகர்வலம்) வருதல், உறங்க வைத்தல் என்று இவை அமைந்துள்ளன.
ஆகமக் கோயில் அரண்மனையின் சிற்றுருவாக
மட்டும் அமையவில்லை. படையரணாக, படைவீடாகவும் அமைந்துள்ளது. உயர்ந்த சுற்றுச்
சுவர்களுக்குள் படைவீரர்கள் பேணப்பட்டனர். சுற்றுச் சுவரின் வாயிற்புறத்தில்
அமைந்த மாட(அடுக்கு)க் கோபுரம் சுற்றிலும் உள்ள நடமாட்டங்களை, எதிரிப் படைகள் அல்லது
மக்கள் எழுச்சிகளை நோட்டமிடும் காவல் கோபுரமாகவும் செயற்பட்டது.
ஏற்கனவே புத்த, அம்மணர்களுக்கு
மாற்றாக உருவான வேத வழிபாட்டில் பார்ப்பனர்கள் பூசகத் தொழிலில் இருந்ததனால் புதிய
ஆகமக் கோயில்களில் இந்தப் பார்ப்பனப் பூசாரிகள் புகுந்தனர். கழகக் காலத்திலேயே தமிழகத்தில் இன்றைய நால் வருணமுறை[6]
வலுவடைந்துவிட்டது. எனவே இக்கோயில்களின் அமைப்பு அதற்கிசையவே இருந்தது. மூலத்தானம்
எனப்படும் கருவறை பார்ப்பனர்களுக்கும் தேவரடியார்களுக்கும், உள்மண்டபம்
அரசனுக்கும் அதிகாரிகளுக்கும் ஆட்சித் தலைவர்களுக்கும், உள்சுற்று வாணிக - வேளாளருக்கு
என்றாகியது. பிற மக்கள் வெளியில் நின்று கொண்டு கோபுரத்தைத்தான் பார்க்க முடியும்.
கருவறைச் சிலையைப் பார்க்க முடியாது. ஊர்தி (சிவனுக்கு நந்தி, பிள்ளையாருக்குச்
மூஞ்சுறு போன்று), கொடிமரம், பலிபீடம் போன்றவை மறைக்கும். எனவே ″இறைவன்″
ஊர்திகளிலும் தேரிலும் உலாவரும் போதுதான் தொலைவில் நின்று வணங்க முடியும். இதுவும்
மன்னனுக்கும் மக்களுக்குமான உறவின் மறுவடிப்பே.
சிலப்பதிகாரக் காலத்தில்
வாணிகர்களால் அரசர்களின் அதிகாரத்துக்கு வந்த அறைகூவலைத் தமிழக அரசர்கள்
மறக்கவில்லை. எனவே வாணிகர்களையும் தொழில்வல்லாரையும் ஒடுக்கத் தொடங்கினர்.
இவ்விருசாரருக்கும் பல உரிமைகள் மறுக்கப்பட்டன. செருப்பணிதல், குடைபிடித்தல்,
தலைப்பாகை கட்டுதல், பல்லக்கில் செல்லுதல், ஆயுதம் வைத்திருத்தல் என்று 72 வகை
உரிமைகள் பறிக்கப்பட்டன. கோயில்கள், படைத்துறை, ஆட்சித்துறை சார்ந்தவர்களுக்கு
இவ்வுரிமைகள் மறுக்கப்படவில்லை.
இந்தப் பாகுபாட்டின் விளைவாக மக்கள்
அனைவரும் வலங்கை தொண்ணூற்றெட்டு சாதியினர், இடங்கை தொண்ணூற்றெட்டு சாதியினர் என்று
தங்களுக்குள் அணிதிரண்டு கலவரங்களில் ஈடுபட்டனர். தங்கள் இரு தரப்பினரையும்
ஒடுக்கும் அரசனிடமும் பார்ப்பனரிடமும் இருசாரரும் முறையிட்டு மண்டியிட்டுக்
கிடந்தனர். சூழ்ச்சியால் கொலையுண்ட ஆதித்த கரிகாலன் என்ற இராசராசனின் அண்ணன்
காலத்திலேயே இந்தக் கலவரங்கள் நடந்தமைக்கான கல்வெட்டுக் சான்றுகளை வரலாற்றாய்வாளர்கள்
காட்டுகின்றனர்.
வலங்கை – இடங்கைப் பிரிவு உலகத்தில் மிகப் பழங்காலந்தொட்டே நிலவி வருகிறது. கி.மு.
5ஆம் நூற்றாண்டில் எகிப்தை ஆண்ட மன்னனொருவன் உள்நாட்டுப் போர்வீரர்களை விட
வெளிநாட்டிலிருந்து அவன் வருவித்த வீரர்களுக்கு அதிகச் சலுகைகள் வழங்கியதால்
உள்நாட்டு வீரர்கள் தங்களை இடங்கையினர் என்று கூறி நாட்டை விட்டு வெளியேறியதாக
வரலாறு உள்ளது.
வலங்கை - இடங்கைப் பிரிவு இன்றைய
″வலதுசாரிகள்″ ″இடதுசாரிகள்″ என்ற பாகுபாட்டுக்கு இணையானது. வலங்கையினர்
என்பவர்கள் ஆட்சியாளர்களின் கொள்கைகள், கோட்பாடுகள், நடைமுறைகளை ஆதரிப்பவர்கள்,
அவற்றால் ஆதாயம் பெறுபவர்கள். இடங்கையினர் எனப்படுவோர் அவற்றால் இழப்பெய்துவோரும்
ஒடுக்கப் படுவோரும்; எனவே அவற்றை ஒழித்துக் தங்களுக்கு நலம் தரும் மாற்றங்களை
வேண்டிப் போராடுவோர். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் இன்று ″இடங்கையினர்″(இடதுசாரிகள்)
எனப்படுவோர் அந்த வகைப்பாட்டுக்குப் பொருந்தி வரவில்லை. இன்றைய ″இடங்கையினர்″
முன்வைத்திருக்கும் செயல்திட்டம் ஆட்சியாளர்களுக்கு அதிக அதிகாரத்தை வழங்கி
அவர்கள் ஒட்டுமொத்த மக்கள் மீதும் அளவிறந்த அதிகாரத்தைச் செலுத்த வகை செய்துள்ளது.
இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் அவர்கள் உள்நாட்டு மக்களை ஒடுக்கி
அயல்நாட்டவருடன் சேர்ந்து நாட்டை விலைபேசிச் சுரண்டி வெளிநாடுகளுக்குக் கடத்த
முடிகிறது. ஆட்சியாளரின் வரம்பு மீறிய இந்த அதிகாரங்களை முறியடிக்கும் சிந்தனை
எதுவுமின்றி அவற்றை வளர்க்கும் திட்டங்களை மேலும் வலியுறுத்திக் கொண்டே அயலார்
ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமென்ற அவர்களின் (இடது சாரி″களின்) முழக்கம் வெறும்
ஏமாற்றாகவே முடிகிறது. உள்நாட்டு மக்களையும் அயல்நாட்டினரையும் ″தனியார்″ என்ற ஒரே
சொல்லில் இவர்கள் குறிப்பதால் அதைப் பயன்படுத்திக்கொண்டு உள்நாட்டு மக்களின்
முனைவுகளை, பொருளியல் நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் நசுக்குகிறார்கள். அதே நேரத்தில்
அயலவரின் நுழைவைத் தடுக்க இந்த ″இடதுசாரி″களினால் முடியவில்லை. இவ்வாறு
நடைமுறையில் அவர்கள் அயலவரின் நுழைவுக்கு வழிவகுக்கும் வகையில் உள்நாட்டு விசைகளை
செயலிழக்கச் செய்து களமமைத்துக் கொடுப்போராகவே செயற்படுகின்றனர். எனவே இவர்களை
வலங்கையினராகவே வகைப்படுத்த வேண்டியுள்ளது.
வலங்கை - இடங்கை பற்றிய கருத்தாடல்
சோவியத் நாடு உடைவதற்கு முந்திய சூழலில் அங்கு எழுந்தது. சோவியத் பொதுமைக் கட்சியை
எதிர்த்த குழுவினர் ஆட்சியாளர்களின் கொள்கை, கோட்பாடு, நடைமுறைகளை எதிர்க்கும்
தாங்களே உண்மையான இடங்கையினர்; ஆட்சியாளரும் பொதுமைக் கட்சியினரும்தாம் வலங்கையினர்
என்றனர். ஆட்சியாளரை எதிர்த்தவர்களுள் ஒரு சிலர் ஆட்சியாளர்களால் ஊழல் மூலம்
திரட்டப்பட்ட பணத்தையே உள்நாட்டு மூலதனமாகக் கொண்டு உள்நாட்டு மக்களின் நுகர்வு
சார்ந்த ஒரு சந்தைப் பொருளியலை உருவாக்கலாம் என்றனர். ஆனால் அமெரிக்காவுக்கு
விலைபோய்விட்ட கார்ப்பசேவ், எல்த்சின் போன்றோர் அமெரிக்க மூலதனத்தை இறக்குமதி
செய்து ஆதாயம் கண்டனர். எனவே அங்கும் உண்மையான இடங்கை இயக்கம் உருவாகவில்லை.
உருசியாவில் ஊழல் மூலம் ஆட்சியாளர்கள்
கையில்தான் பணம் திரளமுடியுமென்ற சூழ்நிலை இருந்தது. ஆனால் இந்தியாவில் வருமான
வரிக்கும் பிற ″சோசலிச″ மிரட்டல்களுக்கும் அஞ்சிப் பொது மக்களிடம் பதுங்கிக்
கிடக்கும் பணம் கணக்கிலடங்காது. எனவே ஊழல் பணத்தைப் பறிமுதல் செய்து வருமான வரியை
ஒழித்துப் பதுங்கிக் கிடக்கும் பணத்துக்கு விடுதலையளித்து நாம் ஓர் உள்நாட்டுச்
சந்தைப் பொருளியலை உருவாக்கி விட முடியும். ஆனால் இங்கு ″இடதுசாரிகள்″ எனப்படுவோர்
மக்கள் மீதான ஆட்சியாளர்களின் பொருளியல் ஒடுக்குமுறைகளுக்கு வலுச்சேர்க்கும்
கொள்கைகளையே வைத்துள்ளனர்.
உலகிலுள்ள நாடுகளில், அதிலும்
குறிப்பாக ஏழை நாடுகளின் ஒட்டுமொத்தமான நிலையே இதுதான். உலகம் முழுவதையும்
பூதங்களாக வளர்ந்து நிற்கும் பன்னாட்டுப் பணத் திமிங்கலங்களிடம் ஒப்படைத்துவிட்டு
அவற்றுக்குப் பாதுகாப்பளிக்கும் அடியாள் வேலையை அரசுகள் செய்து வருகின்றன. பொதுமை,
நிகர்மை(சோசலிச)க் கட்சிகள் அவற்றுக்கு ″மக்கள் நல அரசுகள்″ எனும் கோட்பாட்டு அரண்
வகுத்துக் கொடுத்துள்ளன. மொத்தத்தில் உண்மையான ஓர் இடங்கைக் கோட்பாடும் இயக்கமும்
உலகம் தழுவிய அளவில் உருவாகி உலக வாணிகத்தை அடிப்படையாகக் கொண்ட இன்றைய ஆட்சியாளர்
கும்பலின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டியுள்ளது.
தமிழகம் குறித்து,
விட்ட இடத்திலிருந்து தொடர்வோம். சோழ ஆட்சியாளர்கள் மனித உரிமைகளைப் பறித்து
மட்டும் வாணிகர்களை ஒடுக்கவில்லை. தமிழகத்துக்குள்ளும் வெளியிலும் ஐந்நூற்றுவர்,
திசையாயிரத்து நாற்றுவர், நானாதேசிகள் என்ற பெயர்களில் கழகங்கள் அமைத்துச் செயற்பட்ட
வாணிகக் குழுக்களைப் படைகொண்டு அழித்தனர். கடல் கடந்து தென்கிழக்காசியாவுக்குக்
குடிபெயர்ந்து கடல் வாணிகம் செய்து வந்த தமிழ் வாணிகர்களை ஒடுக்கவென்றே இராசேந்திர
சோழன் படையெடுத்துச் சென்று சீன வாணிகர்களுக்கு உதவினான். தமிழ் வாணிகர்களால்
முன்பு போல் தன் அதிகாரத்துக்கு வரவிருந்த அறைகூவலை முறியடித்தான். கடற்பயணம்
செய்வோர் இழிகுல மக்கள் என்பதான ஒரு மரபு தமிழகத்திலும் இந்தியாவிலும்
உறுதிப்பட்டது இந்தக் கால கட்டத்தில்தான். அரசர்களுக்காகப் பார்ப்பனரால்
உருவாக்கப்பட்ட இந்த மரபு சென்ற நூற்றாண்டில் பார்ப்பனர்களின் செயற்பாடுகளுக்கே
தடையாக இருந்தமையால் இன்று கைவிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மக்களிடம் பொருளியல் வலிமை
ஏற்பட்டுத் தங்கள் அதிகாரத்துக்கு அறைகூவலாக வளராமல் தடுக்க மக்களிடமிருந்து
நிலங்களைப் பிடுங்குவதற்கு ஒரு கருவியாகவும் அரசர்கள் தங்கள் படைகளை நாட்டின்
பல்வேறு பகுதிகளில் நிறுவிப் பராமரிக்கும் செலவுகளை எதிர்கொள்ள வசதியாகவும் மக்கள்
எழுச்சிகளைக் கண்காணித்து அடக்குவதற்குக் காவல் அரண்களாகவும் புதிய கோயில்கள்
அமைக்கப்பட்டன. பழைய கோயில்கள் ″திருப்பணி″ மூலம் விரிவாக்கம் பெற்றன.
இந்த விரிவாக்க நிகழ்முறையில்
இறைவனைப் போற்றுவதற்கான பாக்கள் சமற்கிருதத்தில் வடிக்கப்பட்டன. கும்ப முழுக்கு(கும்பாபிசேகம்),
″சம்ரோச்சணம்″ போன்றவை சமற்கிருதத்தில் நடைபெற்றன. பணம் படைத்தவர்களுக்கும்
ஆட்சித் தலைவர்களுக்கும் மேற்சாதியினருக்கும் மட்டுமே கோயில்கள் பயன்பட்டு வந்தன.
உழவர்களோ கோயில்களோடு இணைக்கப்பட்ட நிலங்களிலிருந்து கோயில்களுக்குச் செலுத்த
வேண்டிய குத்தகை வாரத்தால் நலிவுற்றனர். கோயில்கள் கட்டுவதற்கும்
படையெடுப்புகளுக்கும் மக்கள் மீது விதிக்கப்பட்ட எண்ணற்ற, நம்ப முடியாத வரிகளினால்
மக்கள் நசுங்கினர். மக்களிடையில் எதிர்ப்புணர்வு வலுத்தது. அதனை எதிர்கொள்ளத்
திட்டமிட்டான் இராசராசன். தன்னை ஒரு தமிழ்ப் பற்றாளனாகக் காட்டிக்கொள்ள முடிவு
செய்தான் கருணாநிதியைப் போல்.
இந்தக் கோயில்களின் தோற்றத்துக்குக்
காரணமாயிருந்த சிவனிய எழுச்சியின் மூலவர்களின் படைப்புகளாகிய தேவாரத் திருமுறைகள்
புதிதாக உருவான பார்ப்பனப் பூசாரிகளால் கைவிடப்பட்டன. அவை தில்லை(சிதம்பரம்) நடவரசர்
கோயிலின் நிலவறைகளுக்குள் சிறைப்பட்டுக் கிடந்தன. இராசராசன் தில்லை சென்று தேவாரப்
பாடல்களைத் தருமாறு பூசகர்களைக் கேட்டான். தேவாரம் பாடிய அப்பர், சம்பந்தர்,
சுந்தரர் மூவரும் வந்தால் தருகிறோம் என்றனர் அவர்கள். இராசராசன் அம்மூவரின் சிலைகளையும்
பல்லக்கிலேற்றி இதோ மூவர் வந்துள்ளனர் என்றான். பூசகர் பாடு திண்டாட்டமாயிற்று.
அவை வெறும் சிலைகள் என்று கூறினால் சிலைகளைக் கடவுள் எனக்கூறி அவர்கள் நடத்தும்
பிழைப்பு அம்பலத்துக்கு வந்து விடுமே! எனவே திருடனும் திருடனும்(அரசனும்
பூசகர்களும்) ஒருவரையொருவர் புரிந்துகொள்ள, தேவாரத் திருமுறைகள் வெளிச்சத்துக்கு
வந்தன. ஆனால் அவற்றைக் கருவறையில் ஓதுவதற்கு இராசராசன் முயன்றானா என்பது
தெரியவில்லை. அப்படி முயன்றிருந்தால் அவன் பூசகர்கள் முன் வெற்றி பெற முடியவில்லை
என்பது உறுதி. எனவே புதிதாக ஆட்களைப் பயிற்றுவித்து அவர்களைக் கொண்டு மண்டபத்தில்
நின்று தேவாரம் ஒதும்முறை பழக்கத்துக்கு வந்தது. ஓதுவார் என்ற புதிய சாதி
உருவானது. மக்களை ஏமாற்ற இராசராசனும் பூசகர்களும் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட
ஓர் ″அமைதி உடன்படிக்கை″ இது.
ஆனால் மக்களின் எதிர்ப்பு
நின்றுவிடவில்லை. அதன் சான்றாக, இராசராசனின் மகன் இராசேந்திரன் கட்டிய கங்கை கொண்ட
சோழபுரக் கோயிலையும் அரண்மனையையும் கூறலாம். தஞ்சாவூர் போல் மக்கள்
சூழ்ந்திருக்கும் தலைநகரில் வாழ்ந்தால் மக்கள் எழுச்சிக்குத் தான் இரையாக நேரிடும்
என்பதால் மக்களிடமிருந்து விலகியிருந்த ஓரிடத்தில் தன் அரண்மனையை அமைத்தான்.
இதற்கிடையில் சிவனிய, மாலிய மடங்கள்
உருவாயின. அவற்றின் கட்டுப்பாட்டினுள் பல கோயில்களும் அவற்றின் கீழிருந்த
பெரும்பெரும் நிலப்பரப்புகளும் திரண்டன. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர்
மடங்களைத் தொடங்கிய முன்னோ பின்னோ சிவனிய, மாலிய மடங்கள் தோன்றியிருக்க வேண்டும்.
இந்த மடங்களிலும் கோயில்களிலும் பூசகர்களாக இருந்தோர் பலகலப்பினர். பழைய
பார்ப்பனர்களோடு, சிறு கோயில்களிலிருந்த பூசகர்கள் தாமும் மாறி வளர்ந்து
பூணூலணிந்து பார்ப்பனரானோரும் இருந்தனர். போதாத போது இராசராசன் போன்றோர்
தமிழகத்துக்கு வெளியிலிருந்தும் பார்ப்பனர்களை வரவழைத்தனர்.
இந்தக் காலகட்டத்தில் 8 ஆம்
நூற்றாண்டளவில் அரேபியர்கள் கேரளக் கடற்கரையில் முகம்மதியத்தைப் பரப்பத்
தொடங்கினர். சேரமான் பெருமாள் என்னும் மன்னர் முகம்மதியத்தைத் தழுவி மெக்கா சென்று
வந்ததாக அரேபிய வரலாற்றாசிரியர்கள் கூறியுள்ளனர். (சேரமான் பெருமாள் என்பது
ஒருவகைத் தேர்தல் முறையில் அமர்த்தம் பெற்ற ஆட்சித் தலைவர்களின் பதவிப் பெயர்
என்று தெரிகிறது.) இந்த அறைகூவலை எதிர்கொள்ள பார்ப்பனர்களும் மேற்சாயினரும்
மேற்கொண்ட முயற்சியின் விளைவுதான் கேரளத்தில் பிறந்த ஆதிசங்கரர் எனப்படுபவரின்
தோற்றமும் வளர்ச்சியும்.
[1]
பொருளியல்
உரிமை இதழ் 13 {1998 நவம்பர் – திசம்பர்(உரிமை
– 2, முழக்கம் 8)} முதல் இதழ் 17 – 20 {1999 மார்ச் – சூலை (உரிமை 3, முழக்கம் 3 –
6} வரை வெளிவந்த கட்டுரைத்தொடர்
[2]
ஆகமம் என்ற சொல்லை ஆகியது, தானே
தோன்றியது என்ற பொருளில் தோன்றியம் என்று கூறுவார் பாவாணர். ஆனால் அது ஆகியதுமல்ல
தோன்றியதுமல்ல, ஆக்கப்பட்டதுதான், தோற்றுவிக்கப்பட்டதுதான். எனவே ஆகியிருந்தாலும்
சரி, ஆக்கப்பட்டிருந்தாலும் சரி ஆகமம், தோன்றியம் என்ற இரு சொற்களும் சரிதான்.
[3]
அரசைத் தன்
மகனிடம் ஒப்படைத்துவிட்டுத் துறவுபூண்டு தென்னாடு வந்த சந்திரகுப்தன் அழைத்து வந்த
அம்மணர்களும் தனித்து இயங்கினர்.
[4] 1300 ஆண்டுகள் என்றிருந்தது நம்ப
முடியாதது என்று கருதிய கல்வெட்டுப் படியெடுப்பாளர்கள் அதனை 113 ஆண்டுகள் என்று
பதிந்து தமிழக வரலாற்றை இருட்டடித்துள்ளனர். இந்த உண்மையை ப.கந்தசாமி என்பவர்
அண்மையில் வெளிக்கொண்டுவந்துள்ளார்.
[5] சிலப்பதிகாரத்தில் அழகர்மலை(திருமாலிருஞ்சோலை), திருவரங்கம், திருப்பதி போன்ற திருமால்
திருப்பதிகளை நோக்கி பார்ப்பனர்கள் செல்வதைக் காண முடிகிறது. ஆனால் சிவன்
கோயில்களோ தலைநகரங்களுக்குள்ளும் அரண்மனைகளின் உள்ளேயும்தான் காணக்கிடக்கின்றன.
இதிலிருந்து சிவனியக் கோயில்கள் மக்கள் நடுவில் சிவனியக் குரவர்கள் காலத்தில்தான்
தோன்றின என்று கொள்ள வேண்டியுள்ளது.
[6] நால்வருண முறையை உருவாக்கியவர்கள்
தமிழர்களே. அந்தணர், அரசர், உழவர் - வாணிகர், பாணர் - கூத்தர் என்றொரு நால்வருணப்
பிரிவு முன்னொரு காலத்தில் இருந்துள்ளதை சிலப்பதிகாரத்தின் அழற்படுகாதையால்
அறிய முடிகிறது. அந்த வருணப் பாகுபாடு தொல்பழந்தமிழர்களிடையில் நிலவிய ஒரு
மக்களின் பேராளர்(பிரதிநிதிகள்) அமைப்பென்று தோன்றுகிறது. பின்னர் அது இன்றாய
வடிவத்துக்கு மாறியதுடன் மேலிருந்த பார்ப்பனர், அரசர் என்ற சொல் குறிக்கும் ஆளும்
கூட்டம் என்ற இரு குழுக்களும் கூட்டுச்சேர்ந்து பெரும்பான்மை மக்களை ஒடுக்குவதாக
மாறிவிட்டது. காந்தியைப் போல் அதை மீட்க வேண்டும் என்ற பரிந்துரையுடன் இதை நாம்
இங்கு கூறவில்லை. அந்தக் காலத்தை விட்டு நாம் முற்றிலும் வெளியேற வேண்டும் என்பதை
வலியுறுத்தவே. கற்பனையான ஆரிய இனத்தின் மீது பழி போட்டு நாம் தப்ப முயன்றால்
வரலாறு நம்மைத்தான் பழிவாங்கும்.
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக