5.7.09

தஞ்சை நெல் கொள்முதல்

“தஞ்சை நெல் கொள்முதல்” - தினமணிக்கு மடல்

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

7.2.95 தினமணியில் தஞ்சையில் நெல் கொள்முதலில் தனியார் கை ஒங்குவது பற்றிய செய்தியைப் படித்தேன். தனியாரின் போட்டியை எதிர்கொள்வதற்காக அரசு தன் அரியாசனத்திலிருந்து இறங்கி மக்களிடம் வரத் தொடங்கியிருப்பது ஒரு நல்ல அறிகுறி. இருந்தாலும் தனியாரின் கையை முறுக்கி வழிக்குக் கொண்டும் வரும் வசதிகள் அரசுக்கு உண்டு.

தஞ்சையில் பெரும்பாலும் விளைவிப்பது மோட்டா ரகம் எனப்படும் பருக்கன் நெல்லாகும். இது கேரளத்து மக்களுக்கென்றே விளைவிக்கப்படுகிறது. இது தஞ்சை மண்டலத்து உழவர்களுக்கும் தெரியும், ஆள்வோருக்கும் தெரியும், வாணிகர்களுக்கும் தெரியும். இருந்தாலும் தமிழகம் அரிசியில் பற்றாக்குறை மாநிலமென்றும் அதனால் கேரளத்துக்கு நெல் செல்வதைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றும் ஒரு பொய்யான காரணம் கூறப்படுகிறது. உண்மையில் கேரளத்து மக்களுக்குத் தேவையான அரிசி தமிழகத்திலிருந்து சென்றுகொண்டுதான் இருக்கிறது. ஆனால் எல்லையை "அடைத்து" விடுவதனால் கேரளத்து மக்கள் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். அந்த அதிக விலையில் வாணிகர்களும் அதனை விட அரசாள்வோரும் பங்கு பெறுகிறார்கள். விளைப்போராகிய தஞ்சை உழவர்களும் உண்போராகிய கேரள மக்களும்தான் இழப்பெய்துகிறார்கள்.

இப்போது தஞ்சையில் முற்றுரிமைக் கொள்முதலைக் கைவிட்டதனால் ஊக்கம் பெற்றுவிட்ட வாணிகர்களை எல்லைகளை இன்னும் "இறுக்கமாக" மூடுவதன் மூலம் நெருக்கடிக்குள்ளாகிப் பைகளை நிரப்பிக் கொள்வர் ஆள்வோர்.

தஞ்சை, மேற்குமலைத் தொடரின் அடிவாரம் ஆகிய இடங்களில் கேரளச் சந்தையை மனதில் கொண்டு நெல் விளைவிக்கப்பட்டு தமிழக அரசாள்வோருக்குக் கப்பம் கட்டப்பட்டு கேரளத்துக்குச் செல்கிறது. அதே போல் ஆந்திர நெல்தான் எப்போதும் தமிழக மக்களின் பசியைப் போக்குகிறது. இவ்வாறு ஆந்திரம், தமிழகம், கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களும் நெல்லைப் பயன்படுத்துவதில் ஓரே மண்டலமாகச் செயற்படுகின்றன. இந்த நிலையைப் பயன்படுத்தி இம்மாநிலங்களை ஆள்வோர் தத்தம் எல்லைகளை அடைத்து மக்களின் உணவு எனும் அடிப்படைத் தேவையைப் பயன்படுத்தி ஏறக்குறைய முப்பதாண்டுகளாக வழிப்பறி செய்து வருகின்றனர்.

மேற்படி மூன்று மாநிலங்களும் ஒரே மண்டலமாகச் செயற்படுவதை மறைத்துத் தமிழகம் பற்றாக்குறை மாநிலமென்ற பொய் அரங்கேற்றப்பட்டுள்ளது. ம.கோ.இரா. ஆட்சிக் காலத்தில் ஆந்திர எல்லையைக் "கண்காணிக்காமல்" இருந்ததனால்தான் அக்காலகட்டத்தில் என்றென்றும் தமிழகத்தில் மக்களுக்கு அரிசிப் பஞ்சமே வரவில்லை.

1989இல் தி.மு.க. மறுபடியும் ஆட்சிக்கு வந்தபோது உணவமைச்சரான ஆர்க்காட்டு வீராசாமி ஆந்திர எல்லையில் விளையாடியதும் அதன் காரணமாக அரிசி விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்ததும் இதைக் காரணமாகக் காட்டி திருச்சி வட்டார அரிசி ஆலைகளுக்கு அவர் பெரும் தொல்லை கொடுத்ததும் அவரது அட்டூழியங்களைப் பொறுக்க முடியாதபோது அவரை வெளியேற்றித் தன்னைக் கருணாநிதி தற்காத்துக் கொண்டதும் இன்றும் நினைவில் நிற்கும் நிகழ்ச்சிகள்.

இன்று ஆந்திர முதலமைச்சர் 2 உரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டம் அறிவித்திருக்கிறார். அவருடன் தமிழக முதல்வர் அடிக்கடி கூடிக் குலாவி வருகிறார். இரு மாநில உழவர்கள் வயிற்றிலும் மூன்று மாநில மக்கள் வயிற்றிலும் மண்ணள்ளிப் போட என்ன இரகசியத் திட்டம் வகுத்திருக்கிறார்களோ என்ற கலக்கம் ஏற்படுகிறது.

சாராயம், போதைப் பொருட்கள், வெடி மருந்து போன்ற நச்சுப் பொருட்களின் கடத்தல் தங்கு தடையின்றி அரசாள்வோரின் ஆதரவுடன் நடந்துகொண்டிருக்கிறது. காற்று, நீர் போன்று மக்களின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவுப் பொருளின் போக்குவரத்தில் குறுக்கீடு செய்து அந்தப் போக்குவரத்தைக் "கடத்தல்" என்ற இழிசொல்லால் குறிப்பிடுவதும் அதைப் பொதுமக்கள் பொருட்படுத்தாமல் பொறுத்துக்கொள்வதும் கொடுமை. வெடிப் பொருள்கள், நச்சுப் பொருட்கள் ஆகியவற்றின் விற்பனைக்குத் தேவைப்படுவது போல் உணவுப் பொருட்கள் வாணிகத்திலும் உரிமம் பெற வேண்டுமென்பது பகுத்தறிவற்ற செயல். விருப்பமும் வாய்ப்பும் உள்ள எவருக்கும் உணவுப் பொருட்களை வாங்கவும் விற்கவும் உரிமை வேண்டும். குறிப்பாகச் சில்லரை வாணிகர்கள் உணவுப் பொருள் விற்பனையில் தங்கு தடையின்றி ஈடுபட வேண்டும். அப்போதுதான் விளைப்போருக்கும் உண்போருக்கும் இடையில் ஏறக்குறைய நேரடியான தொடர்பு ஏற்படும். தேவைக்கும் வழங்கலுக்குமாக உறவு பேணப்படும். பதுக்கல்காரர்களின் முயற்சிகளை நுண்ணுயிரிகள் போல் சிதைக்கும் ஆற்றல் இந்தச் சில்லரை வாணிகர்களுக்கு உண்டு.

நம் நாட்டில் உணவுப் பொருள் பற்றாக்குறை இல்லை என்பது நாமனைவரும் அறிந்ததே. அப்படியிருக்க போக்குவரத்துக் கட்டுப்பாடும் வாணிகத்துக்கு உரிமமும் எதற்காக? பொது வழங்கலுக்காக என்றால் அரசு வெளிச் சந்தையில் வாங்கி வழங்கட்டுமே. ஏழைகளின் பெயரைச் சொல்லி உழவனின் வயிற்றிலடித்து வேளாண்மையை நசுக்கி மண்ணைத் தரிசாக்கினால் இந்த நாட்டு ஏழைக்கு எங்கிருந்து வாழ்வு கிடைக்கும். இந்தக் கேள்வி அனைவர் அறிவிலும் உறைக்க வேண்டும்.

குமரிமைந்தன்,
12, தெற்குக்கடைவீதி(மாடி),
பாளையங்கோட்டை - 627002.

0 மறுமொழிகள்: