8.7.09

தமிழக நிலவரம்(2009) .....1

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 400க்கு மேற்பட்ட தமிழக மீனவர்களை இந்திய அரசு மற்றும் கடற்படை உதவியுடன் சிங்களப் படையினர் தமிழகக் கடல் எல்லைக்குள்ளும் எல்லைக்கு வெளியிலும் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இது குறித்து தமிழீனத் தலைவர் தில்லிக்கு மடல்கள் தீட்டி அதைப் பற்றி தாளிகைகளுக்குத் தெரிவிப்பதற்கு மேல் எதுவும் செய்யவில்லை. பணம் விளையும் அமைச்சகங்கள் கேட்பதற்காகத் தில்லிக்குப் போவார், ஈழத்தவர்களின் பெயரைச் சொல்லி தீர்மானம் போட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் விலகல் மடல்களையும் வாங்கி வைத்துக்கொண்டு 80,000 கோடி ஊழல் குற்றச் சாட்டைக் கைவிட வைக்க அவற்றை வைத்து மிரட்டவும் செய்வார்.

சிவசங்கரமேனனையும் எம்.கே.நாராயணனையும் வரவழைத்து ஈழத்தவர்களை அழிப்பதற்கும் தமிழக மக்களை ஏய்ப்பதற்கும் அறிவுரைகள் வழங்குவார். ஆனால் அவரது இந்த நடவடிக்கைகளை எதிர்த்து குறிப்பிடத்தக்க குரல் எதுவும் “தமிழ்த் தேசிய” இயக்கங்கள், “தமிழ்” அமைப்புகள் ஆகியவற்றிலிருந்து எழவில்லையே ஏன்? மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்தும் போது ஒரு சில ஆயிரங்கள் என்ற அளவில்தானே இவர்களால் தொண்டர்களை ஈர்க்க முடிகிறது, அது ஏன்? அந்த ஒரு சில ஆயிரம் பேரை வைத்துக்கொண்டு தொடர்ந்து மாநாடுகள், கருத்தரங்குகள், சிறுசிறு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு இவர்களுக்குப் பணம் வந்துவிடுகிறது. உண்ணா நோன்பிருந்த வழக்கறிஞர்களிடையில் காவல்துறையினரைக் கொண்டு கருணாநிதியும் சுப்பிரமணியம்சாமியும் திட்டமிட்டுக் கலவரத்தை உருவாக்கிய பின்னர் அவர்களை ஒருங்கிணைக்க எவரும் இல்லையே ஏன்? தன்னெழுச்சியாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் களத்தில் இறங்கிய போது அவர்களோடு தொடர்பு கொள்ளவும் எந்த நடவடிக்கையும் இல்லையே அது ஏன்? இவை அனைத்துக்கும் முடிவுரை கூறுவது போல் “ஈழச் சிக்கலால் தமிழகத் தேர்தல் களத்தில் எந்தத் தாக்கமும் இல்லை” என்று கருணாநிதியின் திருமகன் தாலின் அறிவித்தாரே, அந்தத் தன்னம்பிக்கை எங்கிருந்து வந்தது? “தமிழ்த் தேசிய” இயக்கங்கள், “தமிழ்” அமைப்புகள் அனைத்துமே எப்போதுமே கருணாநிதியுடன் இணங்கியே வந்துள்ளதுதான் இதற்கெல்லாம் காரணம். உள்ளே உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும். வெளியிலிருந்து கூர்ந்து நோக்குவோருக்கும் தெரியும். அதனால்தான் ஒரு பக்கம் கருணாநிதியின் “மனிதச் சங்கிலி” என்றால் இன்னொரு பக்கம் நெடுமாறனின் “மனிதச் சங்கிலி” என்று ஈழத்தவர்க்கான தமிழகத்தின் எதிர்வினை கூத்தாடிகளின் தெருக்கூத்தாகிப் போனது.

“தமிழ்த் தேசிய” இயக்கங்கள், “தமிழ்” அமைப்புகளின் இன்றைய திரைத்துறை மின்னல்களான சீமான் வகையறாக்களின் துணையோடு நெடுமாறன் தலைமையில் பேரவைக் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக மட்டும் தேர்தல் பரப்புரை செய்தனரே, அதன் பொருள் கருணாநிதியின் செயல்பாடுகளில் இவர்களுக்கு முழு உடன்பாடு என்பதா அல்லது அது கருணாநிதியின் நடவடிக்கைகளில் எந்தக் குறைபாடும் இல்லை என்ற இவர்களின் கணிப்பின் வெளிப்பாடா?

தேர்தல் முடிவுகளில் ஈழத்தவர்களுக்கு எதிராக வெளிப்படையாகப் பேசித்திரிந்த பேரவைக் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோற்க வென்ற வேட்பாளரைச் சரிக்கட்டி சிதம்பரம் மட்டும் “வென்றாரே” அது பற்றிய “ஆதாய – இழப்புக் கணக்கை”க் கொஞ்சம் பார்ப்போமா?

சின்னப் பயல்கள் போல் “கிளாய்த்து”க்கொண்டு(கேட்டது கிடைக்கவில்லை என்றால் முறுக்கிக்கொண்டு சிறுவர்கள் மூலையில் போய் அமர்ந்துகொள்வதை இச்சொல்லால் குமரி மாவட்டத்தில் குறிப்பிடுவர்) தில்லியிலிருந்து திரும்பிவந்தாரே தமிழீனத் தலைவர் தன் “சுற்றத்தாருடன்”, அவரைத் தட்டித் தடவிச் சரிக்கட்ட தில்லியிலிருந்து தூதுவர்கள் வந்ததும் கேட்ட அமைச்சகங்களெல்லாம் இவரைவிடக் கூடுதல் உறுப்பினர்களை வத்திருந்த வங்கத்து மம்தாவை விட முன்னுரிமையுடன் வழங்கப்பட்டதும் எதனால்? நெடுமாறன் வகையறாக்கள் இன்னும் என் பின்னால்தான் இருக்கிறார்கள்; நான் நினைத்தால் பேரவைக் கட்சியையே தமிழகத்தில் தடம் தெரியாமல் செய்துவிடுவேன் என்று மிரட்டுவதற்கான களத்தை அமைத்துக் கொடுத்ததனால்தானே? அப்படி இல்லாமலா தமிழக அமைச்சரவையில் இடம் கேட்கச் சென்ற பேரவைக் கட்சியினரிடம் இனி கருணாநிதிதான் உங்கள் தலைவர் என்பது போல் சொல்லி விடுப்பார் “தலைவி”?

அரசியலில் பழமும் தின்று பல கொட்டைகளையும் போட்ட, எதிர் எதிர்ப் பக்கங்களிலும் இருந்து ஆதாயங்களைப் பெறுவதில் கைதேர்ந்த தமிழகத்து “மாவீரனு”க்கு(நா, கண், காது கூசுகிறதா? எமக்கும் மனமும் எழுதுகோலும் கூசத்தான்கின்றன பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறதே!) இந்தக் கணிப்பெல்லாம் இல்லாமலா இருக்கும்?

இவையெல்லாம் ஒரு முன்னேற்றப்படிதானே என்று மகிழ்ச்சி காட்டிய “தோழர்” மு.தனராசு வகையறாக்களுக்கெல்லாம் கூட “இவையெல்லாம்” முன்கூட்டியே தெரிந்திருக்குமோ?

இந்த நாடகத்தில் “வாழும் கலை” ரவிசங்கர், செயலலிதா, வைக்கோ, இராமதாசு ஆகியோரின் இடம் எது என்பது தெளிவாகவில்லை. தேர்தல் களத்தில் செயலலிதா பணம் ஏதும் இறக்கவில்லை என்று கூறப்பட்டதற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ?

நாடகமே உலகம்! தமிழகமே நாடக மேடை! உலகத் தமிழர்களோ நாடகக் காட்சிகளை உண்மைகள் என்று நம்பும் ஏமாளிகள்!

கோடிகளில் கோடிகள் புரள்கின்றன. உலகத் தமிழர்களின் வாழ்வு அதனாலேயே பிறழ்கின்றது.

இரண்டிலக்கம் ஈழத்தவர்களையும் 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களையும் கூசாமல் கொடியவர்கள் கொன்ற பின்னரும் தமிழகத்தில் நிலவிய இந்த பிண அமைதியை நினைத்துப்பாருங்கள்! நாளை, நாள்தோறும் பெருகிவரும் மார்வாரி ஆதிக்கம் ஓர் ஊரில் பசித்துக் கிடக்கும் நம் மக்களையே கூலிப்படையினராக்கி நம் மக்களைத் தாக்கினால் ஓடிச் சென்று நம்மவர்களுக்கு உதவ நம் மக்கள் முன்வருவார்கள் என்று எப்படி ஐயா நம்ப முடியும்? தமிழகத்தில் ஆறரைக் கோடிப் பேரும் வெளியே இரண்டு கோடிக்கு மேலும் இருந்தும் மொத்தமுள்ள எட்டரைக் கோடிப் பேரும் ஆளற்றவர்களாக தனித்தனி மனிதர்கள் என்றல்லவா அம்மா ஆகிப்போனோம்!

இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? இதற்கான விடையைத் தேடுவோம்.

தமிழகத்தில் பல்வேறு மக்கள் குழுக்களுக்கென்று சங்கங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கருணாநிதியின் அறிவுரையால் அமைந்தவை. ஒரு குறிப்பிட்ட சிக்கல் குறித்து ஒரு துறை சார்ந்த சிலர் அணுகினால் சங்கம் அமைத்துக்கொண்டு வரச் சொல்லுவார். சங்கம் அமைத்துப் பணம் திரட்டிக் கொண்டு உரிய இடத்தில் சேர்த்தால் சில வேண்டுகைகள் நிறைவேறும். பணம் திரட்டுவோர் ஒன்றுக்கு இரண்டாகத் திரட்டித் தமக்கு எடுத்துக் கொள்வர். இவர்கள் அரசுக்கு எதிராகச் செயற்படுவார்களா?

இன்னொரு வகை, வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தில் இங்கு சங்கங்களை அமைத்து நம் ஆட்சியாளரோடும் தொடர்பு வைத்திருப்போர். தமிழ்நாட்டு மீனவர்கள் இவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றனர். அதனால்தான் சிங்களர் பறித்த ஒவ்வொரு உயிருக்கும் ஒன்றோ இரண்டோ இலக்கங்களைக் கொடுத்து நம் மீனவர்களைக் கருணாநிதி அரசால் அமைதிப்படுத்த முடிந்தது. ஆனால் “தமிழ்த் தேசிய” இயக்கங்கள் என்ன செய்தன? ஓராண்டுக்கு முன்னால் ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்த் தேசிய விடுதலை இயக்க மாநாட்டில் இப்பொருள் பற்றி நான் பேசத் தொடங்கியதுமே எனக்கு ஒதுக்கப்பட்ட நேரம் கடந்து விட்டதாகச் சீட்டு வந்தது. பின்னர் பேசிய ஒருவர் நான் கொடுக்கப்பட்ட தலைப்புக்கு வெளியே சென்றுவிட்டதாகக் குற்றம் சாட்டினர்.

“தமிழ்த் தேசியம்”, “தமிழ்மொழி” பற்றிப் பேசுவோர் ஒன்றாகக் கலந்துதான் செயற்படுகின்றனர். அவர்கள் தமிழக மக்களிடமிருந்து முற்றிலும் அயல்பட்டு நிற்கின்றனர். ஒரு எடுத்துக்காட்டு மேலே நாம் சொன்னது. இன்னொன்று தமிழகத்தைக், தமிழகப் பொருளியலைக் குலைக்கக் கருணாநிதி அரசு நிகழ்த்தும் தொடர் மின்வெட்டு. 1974இல் இருந்தே தமிழகத்தில் தேவையில்லாமல் மின்வெட்டைக் கொண்டுவந்து தொழிலகங்களுக்கு ஒதுக்கீடு என்று ஊழலைத் தொடங்கி வைத்தவர் கருணாநிதி. அன்றிலிருந்து எப்போது மின்சாரம் வரும் எப்போது போகும் என்று எவரும் அறியமுடியாத நிலையில் நினைத்துப் பார்க்க முடியாத பகிர்மானக் குளறுபடிகள். இங்கு பற்றாக்குறை என்று கூறிக்கொண்டே அயல் மாநிலங்களுக்கு மின்சார விற்பனை. இன்று அயல் மூலதனம் என்ற பெயரில் உருவாக்கப்படும் சிறப்புப் பொருளியல் மண்டலங்கள் என்றும் பல்வேறு வளாகங்கள் என்றும் கூறிக்கொண்டு ஆளுவோர் தங்கள் சொந்த மூலதனத்தில் நடத்தும் தொழிலகங்களுக்குத் தடையில்லா மின்சாரம். சிறு, குறு தொழில்கள் இன்றைய பகிர்மானக் குழப்பத்திலும் காலம் குறிப்பிடாத, குறிப்பிட்ட காலத்தைக் கடைப்பிடிக்காத மின்வெட்டால் இயங்க முடியாமல், போட்டிகளை எதிர்கொள்ள முடியாமல் அழிந்து போக அதனால் ஆதாயம் அடையும் போட்டிக் குழுக்களுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டும் ஆதாயம் பார்க்கும் ஆட்சியாளர்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடக்கும் இந்தக் கொடுமையைக் குறித்து “தமிழ்த் தேசியம்”, “தமிழ்மொழி” பேசும் எவராவது ஒரு மூச்சு விட்டிருக்கிறாரா? அதே நேரத்தில் செம்மொழி அறிவிப்பு, திருவள்ளுவர் சிலை, பாவாணர் சிலை, பாவாணர் கோட்டம் என்று மொழியின் பெயரைக் கூறிக்கொண்டு உண்மையில் மக்களின் வாழ்வுக்கு பயன்படாத வேலைகளுக்காகக் கூக்குரல் இட்டு அதை நிறைவேற்றினார் இதை நிறைவேற்றினார் என்று கூறி கருணாந்திக்குப் பாராட்டும் நன்றியும் கூறித் திரியும்”தமிழ்த் தேசியம்”, “தமிழ்மொழி” பற்றிப் பேசுவோரால் தமிழக மக்களுடன் என்ன தொடர்பை ஏற்படுத்த முடியும்? மக்களிடமிருந்து முற்றிலும் அயல்பட்டு நிற்கும் இவர்களால் தமிழர்களுக்கோ தமிழகத்துக்கோ தமிழுக்கோ என்ன நன்மை செய்ய முடியும்?


(தொடரும்)

0 மறுமொழிகள்: