8.7.09

தமிழக நிலவரம்(2009) .....3

பார்ப்பனியம்தான் தமிழகத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார்கள். பார்ப்பனியம் என்றால் ஆரியம் என்கிறார்கள்.

ஆரியம் என்பது வட இந்தியாவைக் குறிப்பது. ஆரிய “இனம்” என்பது 19 ஆம் நூற்றாண்டில் மாக்சுமுல்லர் என்னும் செருமானிய மொழி ஆய்வாளர் உருவாக்கிப் பின்னர் எதிர்ப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கைவிட்ட ஒன்று. இட்லர் போன்றோரும் ஐரோப்பியரும் இந்திய, தமிழக அரசியலாளரும் ஆள்வோரும் தத்தம் நலன்களுக்காகத் தூக்கிப் பிடிக்கும் ஒரு போலிக் கோட்பாடு. ஆரியர்கள் உருவாக்கியவை என்று கூறப்படும் வேதங்களில் தொல்காப்பியத்தில் வரும் வருணனும் இந்திரனும் தலைமையான தெய்வங்கள். கடலைப் பற்றியும் கப்பலைப் பற்றியும் இடியைப் பற்றியும் வேளாண்மையைப் பற்றியும் மருத நில மக்களைப் பற்றியும் வேதங்களில் கூறப்பட்டிருக்கிறது. அவர்களை மாடுமேய்க்கிகள் என்றால் முல்லை நிலத் தெய்வமான திருமால் தமிழர்களுக்கு அயலா? இராமனும் தமிழன், இராவணனும் தமிழன். ஆனால் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்தவர்கள். தொன்மங்களில் இதற்குச் சான்று உண்டு. இராமயணப் போரை கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் கிரேக்கர்களும் சமண, புத்தங்களால் வீழ்ந்த வட இந்தியப் பார்ப்பனரும் சேர்ந்து ஓமரின் இலியத்துக் காப்பியத்தை அடியொற்றி இலக்கியமாக்கினர். வேதங்கள் பொதுமக்களுக்குப் புரியாமல் மறைவா(யா)க இருக்க வேத மொழியும் மக்களுக்குப் புரியாத மொழியில் ஆட்சியையும் சமயத்தையும் தொழில்நுட்பங்களையும் வைத்திருக்கச் சமற்கிருத மொழியும் தமிழர்களால் படைக்கப்பட்ட ஒரு முழுச் செயற்கை மொழி.

சிந்து வெளி நாகரிகம் குமரிக்கண்ட வாணிகர் அமைத்திருந்த ஓர் இடைத்தங்கல். கடல் மட்டம் சிறுகச் சிறுக உயர்ந்ததாலும் சிந்தாற்று வெள்ளங்களாலும் அவற்றுக்கு இணையாகக் குமரிக் கண்டம் கடற்கோள்களுக்கு உட்பட்டதாலும் கொஞ்சம் கொஞ்சமாக அது வலிமை இழக்க ஏதோ ஒரு சூழலில் பாலைக்கு அப்பால் வாழ்ந்த வளர்ச்சி நிலையில் தாழ்ந்த முல்லை நில மக்கள் அதைத் தாக்கி அழித்துள்ளனர்.

தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் சாதியற்றிருந்ததாகச் சுட்டிக் காட்டும் பண்டை இலக்கியம் எதுவுமே கிடையாது. தொல்காப்பியம் கூறும் ஐந்நிலங்களுமே வருணன், இந்திரன், திருமால், முருகன், கொற்றவை என்ற 5 தெய்வப் பூசாரிகளால் ஆளப்பட்டவை. முதலில் பெண் பூசாரிகளாய் இருந்தது ஆண் பூசகர்களுக்கு மாறியது. ஆனால் இந்தப் பூசகர் - பெண் உறவு இன்றுவரை தொடர்கிறது. அண்ணாத்துரையும் கருணாநிதியும் பிறந்த போது இருந்தது போல் இவ்விரு சாரருக்கும் அவ்வப்போது சிறு பிணக்குகள் ஏற்பட்டு, அரசியல் செல்வாக்குப் பெற்றதும் அண்ணாத்துரையும் கருணாநிதியும் பார்ப்பனர்களுடன் மறைவாகவும் வெளிப்படையாகவும் இணைந்துகொண்டது போல் இணைந்துகொள்வர்.

தொல்காப்பியம் ஆளும் கூட்டமாகிய பூசகர், அரசர், வாணிகர், நிலக்கிழார் ஆகியோரைத் தவிர அடிமைகள், கைவன்மைத் தொழிலாளர் ஆகிய மிகப் பெரும்பான்மையான மக்களை,
அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
கடிவரை யிலபுறத்து என்மனார் புலவர் என்கிறது (அகத்திணை இயல் - 25).

அதாவது அடிமைகளுக்கும் தொழில் செய்வார்க்கும் களவு கற்பு என்ற ஒழுக்க நெறிகள் கட்டாயமல்ல, அவர்கள் அவ்வொழுக்க நெறிக்கு வெளியே (புறத்தே)வாழ்கின்றவர்கள் என்பது இதன் பொருளாகும், அதாவது அவர்கள் ஒழுக்கங்கெட்டவர்கள் என்பதாகும்.

மேல்தட்டினர் கணக்கற்ற பெண்களைக் காதற்கிழத்திகளாகவும் வேலைக்காரியாகவும் வைப்பாட்டியாகவும் இருந்த வெள்ளாட்டி என்று இடைக்காலத்தில் வழங்கப்பட்ட நிலையிலும் வைத்திருந்தனர். செவிலி என்பவள் இந்த இரண்டாம் வகைப்பாட்டினுள் வருகிறவள்.

இவைதான் மனுச் சட்டத்தின் விதை என்பதை யார்தான் மறுக்க முடியும்?

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனே,
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பா லொருவனும்
அவன்கட் படுமே
என்று மேல் கீழ் என்பதைத் தெளிவாகக் கூறுகிறான்.

திருவள்ளுவரே,
சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் (குறள். 972) என்று கூறி தொழிலால் வரும் ஏற்றத்தாழ்வையும் பிறப் பொழுக்கம் குன்றக் கெடும் (குறள். 134) என்று கூறி பிறப்பால் வரும் ஏற்றத்தாழ்வையும் கூறுகிறார்.

ஆக, ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று திருமூலர் ஓதுவதற்கு முன் தமிழ் இலக்கியத்தில் சாதிய ஏற்றத்தாழ்வை மறுத்த எந்தக் கூற்றையும் காண முடியாது.

சிலப்பதிகாரம் கூறும் செய்திகளின்படி தமிழ்நாட்டில் எந்த ஓர் அரசு அல்லது பொது நிகழ்ச்சியும் வருண பூதங்கள் நான்கையும் வழிபட்டே தொடங்கின. அந்த வருணங்கள் கூட இன்று நாம் அறிபவற்றுக்கு மாறாக 1) அந்தணர், 2) அரசர், 3) வாணிக – வேளாளர், 4) பாணர் – கூத்தர் என்றிருந்து பின்னால் இன்றைய வடிவத்துக்கு மாறியுள்ளது.

எனவே சாதிகள், வருணங்கள் தமிழர்கள் படைத்தவையே. உலகில் உரோம், பிரான்சு, சப்பான் ஆகியவற்றில் வருணங்கள் இருந்துள்ளமை வரலாற்றால் அறியப்பட்டுள்ளது. பிரான்சிலும் சப்பானிலும் தொழிற்புரட்சியாலும் முதலாளியத்தாலும் அவை அழிந்துள்ளன. ஐரோப்பாவில் தொழிற் சாதிகள் இருந்ததை மார்க்சு மூலதனம் முதல் மடலத்தில் குறிப்பிட்டு, தொழிற்புரட்சியால் அவை அழிந்ததைக் கூறியுள்ளார்.

வருணங்களின் தோற்றம் ஓர் ஆட்சியின் கீழ் வாழும் மக்களை அவர்களின் குமுகப் பங்களிப்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தி அந்தந்த வகைப்பாட்டின் கீழ் வரும் மக்களின் பேராளர்கள்(சட்ட மன்றம், பாராளுமன்றம் போன்று) மூலம் ஆட்சியாளர்களைக் கட்டுப்படுத்துவதே. நாளடைவில் படையைக் கையில் வைத்திருந்த ஆட்சியாளர்கள் பூசகர்களின் துணையுடன் பெரும்பான்மையினரை ஒடுக்குவதாக உலக அளவில் அது இழிந்துபோயிற்று. எனவே அதைத் தோற்றுவித்ததில் நமக்கு இழுக்கு ஒன்றுமில்லை. அதன் எச்சங்கள் இன்றும் நம்மைத் தொடர்வதே அவலம். அவற்றை முற்றாக ஒழிப்பதற்கான சூழல் உருவாவதைத் தடுப்பவர்களாக “தமிழ்த் தேசியம்”, “தமிழ் மொழி” பற்றி முழங்குவோர் இருப்பதுதான் அதைவிடப் பெரும் அவலம்.

சாதி சார்ந்த தொழிலும் தொழில் சார்ந்த சாதியும் உறைந்து போன தொழில்நுட்பத்தின் விளைவாகும். இடைவிடாத தொழில்நுட்ப மேம்பாடும் மக்களின் இடப்பெயர்ச்சியும் சாதி என்ற ஒன்று தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லாமல் செய்துவிடும்.

நம் தோழர்கள் கூறுவதுபோல் சாதியும் வருணமும் இவர்கள் கூறும் கற்பனை “ஆரியர்”களால் இங்கு பரப்பப்பட்டது என்பதை ஓர் உரையாடலுக்காக வைத்துக்கொள்வோம். அயலாரால் புகுத்தப்பட்டது என்று தெரிந்து ஏறக்குறைய மாக்சுமுல்லர் காலத்திலிருந்து 160 ஆண்டுகள் ஆகியும் ஏன் அதனை நம்மால் அகற்ற முடியவில்லை? அயலார் கூறும் பொய்ம்மைகளை இனங்காணவோ இனங்கண்டாலும் அதனைப் புறக்கணித்து உண்மையின் பக்கம் நிற்கவோ திறனற்ற மூளைக் குறைபாடு உள்ளவர்களா நாம்?

சரி அப்படித்தான் அயலாரே நம்மிடம் புகுத்திவிட்டனர் என்று வைத்துக் கொண்டாலும் அந்த அயலாரைத் திட்டுவதாலோ அடிப்பதாலோ (அடிப்பதாவது! இவர்கள் பார்ப்பனர்களைத் தங்களது வழிகாட்டிகளாகவல்லவா இயக்கங்களுக்குள் வைத்துள்ளனர், தங்களது ஆசான் கருணாநிதியைப் போல்) அதனை ஒழித்துவிட முடியுமா? ஒருவருக்கு நோய் எதிர்ப்புத்திறன் குறைவால் நோய்த் தொற்று இன்னொருவரிடமிருந்து வந்தவிட்டதென்றால் நோய்த்தொற்றுக்குக் காரணமானவரை வைதுகொண்டாயிருப்பார்கள்? மூளை கலங்கியவர்கள்தாம் அதைச் செய்வர். இயல்பானவர் நோய்த் தொற்றியவனுக்கு உடனடியாக மருத்துவமல்லவோ செய்வர்? சாதி குறித்து அந்த மருத்துவத்தைப் பற்றி இவர்கள் சிந்தித்ததுண்டா?

ஒருவர் தன்னிடம் குறை இருக்கிறது என்று புரிந்து ஏற்றுக்கொள்வது அவர் தன்னை மேம்படுத்திக்கொள்ள விரும்புகிறார் என்பதற்கு அறிகுறி. பிறர் மேல் பழிபோட்டால் எவரும் தப்பிக்க முடியாது என்பது உறுதி. பிழைகள் மேல் பிழைகள் தலைமேல் ஏறி அவர் அழிவதும் உறுதி. அந்த அழிவுதான் இன்று உலகத் தமிழ் மக்களை கிட்டத்தில் வந்து நின்று அச்சுறுத்துகிறது.
(தொடரும்)

0 மறுமொழிகள்: