5.7.09

விடுதலை பெற.....

08-09-1995,
ஆதளவிளை.

அன்புடன் அண்ணாச்சிக்கு,

வணக்கம்.

தீவட்டி இதழை பாளை இளைஞர் பீட்டர் மூலம் உங்களுக்கு கொடுத்து அனுப்பியிருந்தேன். சில நாட்களுக்கு முன்பு தொ.பேசி மூலம் கேட்டபோது நீங்கள் சென்னை சென்றிருப்பதாக அறிய முடிந்தது.

தாராமதி இதழ் கட்டுரைகளைப் படித்தேன், மார்க்சியம் கட்டுரை எழுதி முடித்து வைத்திருக்கிறீர்களா? அக்கட்டுரை வந்த தாராமதி இதழ்கள் இருக்கின்றனவா?

நீங்கள் எழுதியிருந்த தமிழ்த் தேசியம் கட்டுரையின் ஒரு பகுதி விடுதலை பெற..... என்ற தலைப்பில் தீவட்டியில் வெளியிடப்பட்டதற்கு கடிதமொன்று வந்துள்ளது.


இதற்கு விடை மடல் எழுத வேண்டும். அடுத்த இதழில் வெளியிட 2 (அ) 3 பக்க அளவில் நிற்குமாறு ஒரு கட்டுரை தேர்ந்தெடுத்து வையுங்கள் அல்லது எழுதுங்கள்.

அன்புடன்
அசுரன்
தீவட்டி, "விடியல் இல்லம்" ஆதள விளை, வெள்ளமடம் (அஞ்), குமரி – 629 305.


===============

கடிதம்:

குமரிமைந்தன் எழுதிய விடுதலை பெற... என்ற கட்டுரையினை வாசிக்கும் போது தீவட்டியின் நோக்கம், குறிக்கோள் என்ன என அறிய ஆர்வம் ஏற்படுகிறது.

தேசிய இனச் சிக்கலில் ஒடுக்கும் தேசம்/ஒடுக்கப்படும் தேசியம் என இரு கூறுகள் இருக்கும். இந்தியாவில் ஒடுக்கப்படும் தேசியமாக தமிழ் தேசியம் உள்ளது. ஆனால், அதே சமயம் ஒடுக்கும் தேசமாக இந்திய தேசியம் இல்லை. பார்ப்பனர்களால் தங்களது வசதிக்காக, தங்களது ஆளுமைக்காக, சுரண்டலுக்காக கட்டப்பட்டதே ′இந்திய தேசிய′ மாயையாகும்.

இதில் பார்ப்பனர்களால் மறுக்கப்பட்ட கல்வியினை பெறுவதற்கான போராட்டமே வகுப்புரிமைப் போராகும். இன்றைய சமுகம் சாதி எனும் கொடிய அமைப்பால் மக்களை பிரித்து வைத்துள்ளது. இத்தகைய சாதியினை ஒழிக்க வழிதான் என்ன? மனிதனின் பிறப்பு என்பதும் அவனது தொழில் என்பதையும் அவனது சாதியே நிர்ணயிக்கிறது. சாதியின் பெயராலேயே அவனுக்கு தரப்படும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

எனவே, எந்தச் சாதியின் பெயரால் உரிமை மறுக்கப்பட்டதோ அதே சாதியின் பெயரால் உரிமைகளைப் பெறுவதே வகுப்புரிமை எனப்படும் இட ஒதுக்கீட்டு முறையாகும். இதனைக் கொச்சைப்படுத்தி வெறும் வேலைவாய்ப்பு என சுருக்கியுள்ளார் குமரிமைந்தன்.

மேலும், தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்களாக பார்ப்பனர்களே உள்ளனர். எனவே பார்ப்பனர்களே நமது எதிரிகள். மேலும் பிற மாநிலத்தவர் இங்கு சுரண்டுவதும் கண்டிக்கத் தக்கதே. மார்வாரிகளின் சுரண்டல் பார்ப்பன ஆதரவுடனேயே நடைபெறுகிறது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.


மேலும், பொருளியல் விடுதலையும், மண் விடுதலையும் மட்டுமே ஒரு நாட்டின் விடுதலையைப் பெற்றுத் தராது. மக்கள் விடுதலை மட்டுமே உண்மையான விடுதலையாக அமையும். மண்ணுக்கு மட்டும் விடுதலை வாங்கி எவ்வித பயனுமில்லை. வெள்ளைக்காரர்களிடம் இருந்து பெற்ற ′விடுதலை′ என்பது மண்ணுக்கான விடுதலையே மக்களுக்கான விடுதலை அல்ல. பெரியார் கூற்றுப்படி ′மேடோவர்′ செய்யப்பட்ட ′அதிகார மாற்று′ ஆகும்.

மக்களுக்கான விடுதலை என்பது மக்களைச் சாதியத் தளையிலிருந்து விடுவித்து, பெண்ணடிமையை ஒழித்து, பெறும் விடுதலையே சிறந்ததாகும்.

சாதிய ஒழிப்பிற்கு முன் நடவடிக்கையாக SC/BC ஒற்றுமையை வசப்படுத்துவதே, ஏற்படுத்துவதே சரியானதாகும். அதற்கான வழிமுறை இட ஒதுக்கீட்டு முறையே ஆகும்.

எனவே, தமிழ் தேசியத்திற்கு முன் நிபந்தனையாக சாதி ஒழிப்பு (SC/BC ஒற்றுமை), பெண் விடுதலை, போன்றவற்றை நடைமுறைப்படுத்தியாக வேண்டும்.

பூ. மணிமாறன்
மதுரை.

=================

விடை மடல்:

தமிழக் மக்களைத் திராவிட இயக்கம் எவ்வளவு குழப்பி வைத்துள்ளது என்பதற்குத் தோழர் மணிமாறனின் கடிதம் ஒரு சிறந்த சான்றாகும்.

1. இந்தியத் தேசியம் ஒடுக்கும் தேசியம் இல்லை. பார்ப்பனர்களால் தங்களது வசதிக்காக தங்களது ஆளுமைக்காக, சுரண்டலுக்காக கட்டப்பட்டதே இந்தியத் தேசியம்.


2. பார்ப்பனர்களால் மறுக்கப்பட்ட கல்வியைப் பெறுவதே ஒதுக்கீட்டின் நோக்கம். வேலைவாய்ப்பு தான் ஒதுக்கீட்டின் நோக்கம் என்பது அதனைக் கொச்சைப் படுத்துவதாகும்.

3. மார்வாரிகளின் சுரண்டல் பார்ப்பனர்களின் ஆதரவுடனேயே நடைபெறுகிறது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.

4. மண்ணின் விடுதலை என்பது மக்களின் விடுதலை அல்ல.

5. சாதியை ஒழித்து, பெண்ணடிமையை ஒழித்துவிட்டுத்தான் தேசிய விடுதலையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

6. சாதிய ஒழிப்பிற்கு முன் நடவடிக்கையாக பிற்படுத்ததப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமையை வசப்படுத்துவதே சரியாகும்.

முதலில் தேசிய ஒடுக்குமுறையின் நோக்கம் பற்றிய தோழரின் கருத்து என்னவென்பதே குழப்பமாக இருக்கிறது. ஆனால் இதில் முதலில் தெளிவு வேண்டும்.

1. தேசிய ஒடுக்குமுறையின் இறுதி நோக்கம் பொருளியல் சுரண்டலே. இந்தியாவிலுள்ள அனைத்துத் தேச மக்களின் உழைப்பினையும் செல்வங்களையும் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருப்பவர்கள் மார்வாரிகள், அவர்களுக்கும் துணைபுரிந்து வல்லரசுகளுக்கும் இந்நாட்டின் செல்வங்களை எல்லாம் அள்ளிக்கொடுத்து அதில் பங்கு பெற்று இந்நாட்டின் மீது முழு ஆதிக்கம் செலுத்துபவர்கள் இந்திய அரசின் அதிகாரக் கூட்டம். அந்த அதிகாரக் கூட்டத்துக்கு மூடுதிரையாக அமைந்து இந்தத் தேசியக் கொள்ளையில் பங்கு போடுவதற்காக ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருக்கின்றன அரசியல் கட்சிகள்.

இந்த அதிகாரிகள் கும்பலில் பார்ப்பனர்கள் பெரும்பான்மையினர். பிற சாதியினர் இந்த அணியில் சேர்ந்தாலும் கொள்ளை நோக்கத்தில் மாறுபடுவதில்லை. இந்திய அரசியல் கட்சிகளிலும் ஆதிக்கம் செலுத்துவோர் பார்ப்பனரே, பிற சாதியைச் சேர்ந்த கட்சியினரிடமும் இந்தக் கொள்ளையிலோ அல்லது அதற்குத் துணைபோவதிலோ மாற்றமில்லை.

2. மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியைப் பெறுவது தான் ஒதுக்கீட்டின் நோக்கம் என்று உறுதிபடக் கூறுகிறார் தோழர். ஆனால் அதற்கு ஒதுக்கீடு ஏன் என்று தான் தெரியவில்லை. அனைவருக்கும் கட்டாய இலவசத் தொடக்கக் கல்வி இருந்தால் தானே அனைவரும் கல்வி பெற முடியும். ஆனால் கல்வியை விரிவுபடுத்து, அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்விக்கு வகை செய் என்ற முழக்கத்தை இந்த ஒதுக்கீட்டுப் போராளிகள் இதுவரை முன் வைக்கவில்லையே ஏன்? தோழர் சிந்தித்துப் பார்க்கட்டும். கல்வி விலைப் பொருளாகிறதே. நாளுக்கு நாள் கீழ்மட்டத்து மக்களின் வறுமை பெருகுகிறதே; கல்வியின் செலவு உயர்கிறதே; பணம் படைத்தோர் பிள்ளைகள் மட்டுமே கல்வி பெற முடியும் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டதே இதற்கு எதிராக இந்த ஒதுக்கீட்டு முழக்கம் செயல்படுகிறதா? கல்வியை இன்னும் ஒரு சலுகையாகக் காட்டுவது தானே ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையின் உட்பொருள். ஆகவே ஒதுக்கீடு என்ற முழக்கம் தானாகவே கொச்சைப்பட்டு நிற்கிறது. இன்று வேறு யாரும் அதைக் கொச்சைப்படுத்தத் தேவையில்லை. எனவே அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி என்ற போராட்டமே மறுக்கப்பட்ட கல்வியை அனைவரும் பெறுவதற்குரிய வழி.

3. தமிழகத்துப் பார்ப்பனர்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் கூட முதலிடத்திலில்லை. தொழில் முதலாளிகள் என்ற நிலையிலும் தமிழக மக்களில் அவர்களுக்குத் தான் முதலிடம். (அவர்களுக்கு இணையாகவோ அல்லது அடுத்த கட்டத்திலோ செட்டியார்களும் அதற்கடுத்து நாடார்களும் வரக்கூடும்.) அவர்களது தொழில் நிறுவனங்களை விழுங்க மார்வாரிகள் ஓயாமல் முயன்று கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. தொழில் நிறுவனங்களின் ஆள்வினைக்கு (நிர்வாகத்துக்கு)த் தேவையான கல்வித் தகுதிகள் உள்ளவர்கள் என்பதாலேயே பார்ப்பனர்களை அவர்கள் வைத்திருக்கிறார்கள். அத்துடன் அயலவர்க்குத் தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவையே காலங்காலமாக விற்றுவிற்றே ஆதாயம் அடைந்துகொண்டிருப்பவர்கள் பார்ப்பனர்களும் தமிழகத்திலுள்ள வெள்ளாளர்களும். இதுவும் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டிய ஒன்றாகும்.

4. மண்ணின் விடுதலை என்பது வெறும் அரசியல் விடுதலை அல்ல. பொருளியல் விடுதலை தான் உண்மையான மக்களின் விடுதலை. மண்ணின் வளத்தின் மீதும் அந்த வளத்திலிருந்து உருவாகும் செல்வத்தின் மீதும் அந்த மக்களுக்குக் கிடைக்கும் தடையற்ற உரிமை தான் அந்த மண்ணுக்கும் மக்களுக்கும் கிடைக்கும் அடிப்படை உரிமை. அந்த உரிமையிலிருந்துதான், அந்த உரிமைக்கான போராட்டத்தின் போதுதான், அந்தப் போராட்டம் கூர்மை பெற்று உச்ச கட்டத்தை அடையும் போதுதான் அனைத்து மக்களின் ஒற்றுமையின் தேவை அனைவராலும் உணரப்பட்டு அதற்கான உண்மையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அம்முயற்சிகள் தாம் உண்மையான மக்கள் ஒற்றுமையை உருவாக்கும்.

5. மண்ணின் உரிமைக்கான, அதாவது பொருளியல் உரிமைக்கான போராட்டத்தில்தான் சாதிய ஒழிப்புக்குரிய களம் உருவாக முடியும். அப்போராட்டத்தில்தான் பெண்ணடிமைக் கருத்துகள் தளரும். பொருளியல் உரிமையோடு அனைவருக்கும் கல்வியும் கைவந்து வேலைவாய்ப்புகள் மட்டின்றிப் பெருகிப் பெண் தன் காலில் நிற்கும் சூழலில்தான் பெண் உரிமை முழுமை பெறும். சாதிகள் தொழிலடிப்படையில் அமைந்தவை தானே. அத்தொழில்கள் சிதைந்து அனைவரும் ஈடுபடத்தக்க பெருந்தொழில்களால்தான் சாதியத்தின் தொழிலடிப்படை முடிவுக்கு வரும். அது மட்டுமல்ல இன்று இருக்கின்ற ஊர்களின் அமைப்பே சாதித் தகர்ப்புக்குத் தடையானவையாகும். இந்த ஊர் மக்கள் தங்கள் இருப்பிடங்களைக் கைவிட்டு வெளியேறுமளவுக்குப் பொருளியல் வேகம் பெற்றால்தான் சாதியம் கலைந்து சிதையத் தேவையான பின்னணி உருவாகும். இந்த உண்மைகள் நாட்டுப்புறத்தைச் சார்ந்தவர்களுக்கே எளிதில் விளங்கும். அதுவரை சாதி ஒழிப்பும் பெண்ணடிமை ஒழிப்பும் வெற்றுக்கனவாகவும் வெறும் முழக்கமாகவும் தானிருக்கும்.

6. சாதிய ஒழிப்புக்கு முன் நடவடிக்கையாக பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமையை வசப்படுத்துவதே சரியாகுமாம். இதற்கு ஏதாவது வசிய மருந்து வைத்திருக்கிறாரா தோழர். இன்று பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் தான் முரணி நிற்கின்றனரா? பிற்படுத்தப்பட்டோர் என்ற வகைப்பாட்டினுள் வரும் அனைத்துப் பிரிவினரும் ஒதுக்கீட்டில் தத்தமக்கு அதிகப் பங்கு வேண்டும் என்பதற்காகத் தானே தனித்தனிச் சங்கங்கள் அமைத்து அனைவருக்கும் சாதி வெறியூட்டிக் கொண்டிருக்கிறார்கள். தோழர் கண்ணையும் காதுகளையும் இறுகப் பொத்திக் கொண்டுள்ளாரா? அல்லது நாம் அவ்வாறு பொத்திக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா? இல்லாத அல்லது அருகி வரும் வேலை வாய்ப்புக்கு பிற்படுத்தப்பட்டோர் சாதிகளாகப் பிரிந்தும் சாதிகள் உட்சாதிகளாகப் பிரிந்தும் சண்டை போடுவது அவருக்குப் புரியவில்லையா?

தாழ்த்தப்பட்டோரிலும் வேலை வாய்ப்புக்காகவும் சாதிய ஒடுக்குமுறையினாலும் தம்முள் பள்ளர், பறையர், சக்கிலியர் எனப் பிரிந்து நிற்பதைத் தோழர் அறியாரா?

பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் முரண்பாடு இரண்டு கேள்விகளை எழுப்புகிறது. சாதியக் கொடுமைகளுக்குப் பார்ப்பனர்கள் மட்டும் தான் காரணமா? இந்த மக்களின் குருதியோடு கலந்து விட்ட ஒரு செயற்பாட்டின் உச்சியிலிருப்போர் தானே பார்ப்பனர். மக்களுக்குள் நிலைத்துவிட்ட இந்தச் சாதிக் கொடுமையின் அடையாளம் தான் பார்ப்பனர்களே ஒழிய வேறில்லை. சாதியம் அனைத்து மக்களிலும் நிலைத்து நிற்கிறது. இந்தச் சாதியம் இந்த நூற்றாண்ணில் இருமுறை தமிழகத்தில் இளகியது. ஒருமுறை ′இந்திய′ விடுதலைப் போரின் போது, மறுமுறை திராவிட இயக்கம் தமிழக அதாவது திராவிட விடுதலையையும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பார்ப்பனரல்லாதார் அனைவருக்கும் ஒதுக்கீடு கேட்டுப் போராடிய போதும் அந்த ஒதுக்கீடு என்று கிடைத்ததோ அன்றே அதில் பங்குச் சண்டைக்காகச் சாதிச் சங்கங்கள் மீண்டும் வலுப்பெறத் தொடங்கி விட்டன. எனவே இன்றைய நிலையில் இல்லாத வேலை வாய்ப்புக்காக வலிந்து ஒதுக்கீட்டுப் போராட்டம் நடத்துவது தமிழ்க் குமுகத்தைச் சிதைத்து அழித்துவிடும்.

கண்முன் நடப்பது தமிழக வளங்கள் சுரண்டப்படுவது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டுச் செல்வத்தை வைத்திருப்போர் மார்வாடிகளாலும் வல்லரசு விசைகளாலும் இந்திய மாநில அரசுகளாலும் ஒடுக்கப்படுவதும் கொடுமைப்படுத்தப்படுவதுமாகும். அந்தச் செல்வத்துக்குத் தமிழக மக்கள் அனைவரும் உரிமையுள்ளவர்கள். அதற்காகப் போராடுவோம். அப்போராட்டத் தீயில் சாதி வேற்றுமைகளைப் பொசுங்க வைப்போம். இதைத் தன்னுணர்வுடன் திட்டமிட்டுச் செய்வோம்.

பார்ப்பனர்கள் அரசுப் பணிகளில் மட்டும் வேலைவாய்ப்புகளைப் பெறவில்லை. எண்ணற்ற தங்கள் தொழில் நிறுவனங்கள் மூலமாகவும் பெறுகிறார்கள். அதே போல் பிற சாதியினரும் சாதி வேறுபாடின்றி தங்கள் வேலைவாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ளும் வகையில் தங்களிடமிருக்கும் வளங்களைத் திரட்டித் தமிழகத்தின் தொழில் வளத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். அதற்குத் தடையாக நிற்கும் அரசின் சட்ட திட்டங்களையும் கட்டுத்திட்டங்களையும் எதிர்த்து அனைவரும் சாதிவேறுபாடின்றிப் போராடி வெற்றி பெற வேண்டும்.

ஆனால் இந்த ஒதுக்கீடு என்ற மாயமான் பிற சாதிகளிடையில் செய்யும் சிதைவு வேலையைப் பார்த்தீர்களா? தமிழகத்தில் பார்ப்பனர்களை அடுத்துச் செல்வம் படைத்தவர்களாகிய நாடார்கள் பணம் திரட்டி மாநாடு கூட்டி தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோரென்று அறிவிக்கக் கேட்கிறார்கள்.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர்கள் இருந்த நிலைக்கும் இன்று அவர்கள் எய்தியிருக்கும் உயர் நிலைக்கும் அவர்களை பந்தயத்தில் முதலில் வந்தவன் போன்று இறுமாப்பெய்தித் தங்களை முற்பட்டவர்களென்று அறிவிக்க வேண்டுமென்று கேட்டிருக்க வேண்டும். அவ்வாறு தமிழக மக்களின் ″பிற்பட்டோர் மனப்பான்மை″யை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் மிகப்பிற்படுத்தப்பட்டோர் என்று அறிவிப்பதற்காகக் கையூட்டு கொடுக்கவும் இன்று அவர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். இது எவ்வளவு கொடுமை? இந்த ″பிற்படுத்தப்பட்டோர் மனக்கோளாறு″ நம்மை எங்கே கொண்டு நிறுத்தியிருக்கிறது பார்த்தீர்களா? ″நாங்கள் எவருக்கும் சளைத்தவரில்லை″ என்று ஒவ்வொரு குழுவினரும் போட்டி போட்டு முன்னேறி வெளி எதிரிகளை அடித்துத் துரத்த வேண்டிய ஒரு சூழலில் என்னைப் பிற்படுத்து, மிகப்பிற்படுத்து என்று கைக்கூலி கொடுத்துக் காலைப் பிடித்துத் தன்மானமிழந்து கெஞ்சும் நிலைக்கு இந்த ஒதுக்கிட்டு முழக்கம் தமிழக மக்களைக் கொண்டு நிறுத்தியிருப்பது உங்கள் மனதைக் கலக்கவில்லையா? ஐம்பது ஆண்டுகளுக்கு முன் புரட்சிகரமாக இருந்த இந்த முழக்கம் தமிழக மக்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டிச் சாதி வேறுபாடுகளைப் பின்னுக்குத் தள்ளி நெருங்க வைத்தது. அப்போதே பொருளியல் உரிமைகளுக்காகவும் போராட்டத்தைத் தொடங்கி நடத்தியிருந்தால் ஒதுக்கீட்டிலும் வெற்றியடைந்திருப்போம்; ஒட்டு மொத்தமான வேலைவாய்ப்பிலும் நிறைவை எய்தியிருப்போம்; தமிழக மக்களின் உரிமைகள், தன்மானம் அனைத்தும் காப்பாற்றப்பட்டிருக்கும்.

கானல் நீரைத் தேடி ஓடும் மான்களாகத் தமிழக மக்கள் திசையறியாமல் ஓடுவது மனதை வாட்டுகிறது தோழரே. அருள்கூர்ந்து அவர்களுக்குச் சரியான வழி காட்டுங்கள்.

குமரிமைந்தன்.

0 மறுமொழிகள்: