18.11.16

சிலப்பதிகாரப் புதையல் - 16 - ஊர்காண் காதை



15 .ஊர்காண் காதை

புறஞ்சிறைப் பொழிலும் பிறங்குநீர்ப் பண்ணையும்
இறங்குகதிர்க் கழனியும் புள்ளெழுந் தார்ப்பப்
புலரி வைகறைப் பொய்கைத் தாமரை
மலர்பொதி யவிழ்ந்த வுலகுதொழு மண்டிலம்
5       வேந்துதலை பனிப்ப ஏந்துவாட் செழியன்
ஓங்குயர் கூடல் ஊர்துயி லெடுப்ப
நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும்
உவணச் சேவ லுயர்த்தோன் நியமமும்
மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும்
10      கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்
அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்
மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்
வால்வெண் சங்கொடு வகைபெற் றோங்கிய
காலை முரசங் கனைகுரல் இயம்பக்
15.     கோவலன் சென்று கொள்கையி னிருந்த
காவுந்தி ஐயையைக் கைதொழு தேத்தி
நெறியின் நீங்கியோர் நீர்மையே னாகி
நறுமலர் மேனி நடுங்குதுய ரெய்த
அறியாத் தேயத் தாரிடை யுழந்து
20      சிறுமை யுற்றேன் செய்தவத் தீர்யான்
தொன்னகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்
கென்னிலை யுணர்த்தி யான்வருங் காறும்
பாதக் காப்பினள் பைந்தொடி யாகலின்
ஏத முண்டோ அடிகளீங் கென்றலும்
25      கவுந்தி கூறுங் காதலி தன்னொடு
தவந்தீர் மருங்கின் தனித்துய ருழந்தோய்
மறத்துறை நீங்குமின் வல்வினை யூட்டுமென்
றறத்துறை மாக்கள் திறத்திற் சாற்றி
நாக்கடிப் பாக வாய்ப்பறை யறையினும்
30      யாப்பறை மாக்கள் இயல்பிற்  கொள்ளார்
தீதுடை வெவ்வினை யுருத்த காலைப்
பேதைமை கந்தாப் பெரும்பே துறுவர்
ஒய்யா வினைப்பயன்  உண்ணுங் காலைக்
கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள்
35      பிரிதல் துன்பமும் புணர்தல் துன்பமும்
உருவி லாளன் ஒறுக்குந் துன்பமும்
புரிகுழன் மாதர்ப் புணர்ந்தோர்க் கல்லது
ஒருதனி வாழ்க்கை உரவோர்க் கில்லை
பெண்டிரும் உண்டியும் இன்பமென் றுலகிற்
40      கொண்டோ ருறூஉங் கொள்ளாத் துன்பம்
கண்டன ராகிக் கடவுளர் வரைந்த
காமஞ் சார்பாக் காதலின் உழந்தாங்
கேமஞ் சாரா இடும்பை எய்தினர்
இன்றே யல்லால் இறந்தோர் பலரால்
45      தொன்று படவரூஉந் தொன்மைத் தாதலின்
          தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன்
வேத முதல்வற் பயந்தோ னென்பது
நீயறிந் திலையோ நெடுமொழி யன்றோ
50      வல்லா டாயத்து மண்ணர சிழந்து
மெல்லியல் தன்னுடன் வெங்கா னடைந்தோன்
காதலிற் பிரிந்தோ னல்லன் காதலி
தீதொடு படூஉஞ் சிறுமைய ளல்லள்
அடவிக் கானகத் தாயிழை தன்னை
55      இடையிருள் யாமத் திட்டு நீக்கியது
வல்வினை யன்றோ மடந்தைதன் பிழையெனச்
சொல்லலும் உண்டேற் சொல்லா யோநீ
அனையையும் அல்லை ஆயிழை தன்னொடு
பிரியா வாழ்க்கை பெற்றனை யன்றே
60      வருந்தா தேகி மன்னவன் கூடல்
         பொருந்துழி யறிந்து போதீங் கென்றலும்
          இளைசூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த
இலங்குநீர்ப் பரப்பின் வலம்புண ரகழியில்
பெருங்கை யானை இனநிரை பெயரும்
65      சுருங்கை வீதி மருங்கிற் போகிக்
கடிமதில் வாயில் காவலிற் சிறந்த
அடல்வாள் யவனர்க் கயிராது புக்காங்
காயிரங் கண்ணோன் அருங்கலச் செப்பு
வாய்திறந் தன்ன மதிலக வரைப்பில்
70  குடகாற் றெறிந்து கொடிநுடங்கு மறுகின்
கடைகழி மகளிர் காதலஞ் செல்வரோடு
வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை
விரிபூந் துருத்தி வெண்மண லடைகரை
ஓங்குநீர் மாடமொடு நாவா யியக்கிப்
75      பூம்புணை தழீஇப் புனலாட் டமர்ந்து
தண்ணறு முல்லையுந் தாழ்நீர்க் குவளையும்
கண்ணவிழ் நெய்தலுங் கதுப்புற அடைச்சி
வெண்பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த
தண்செங் கழூநீர்த் தாதுவிரி பிணையல்
   80   கொற்கையம் பெருந்துறை முத்தொடு பூண்டு
தெக்கண மலயச் செழுஞ்சே றாடிப்
பொற்கொடி மூதூர்ப் பொழிலாட் டமர்ந்தாங்கு
எற்படு பொழுதின் இளநிலா முன்றில்
தாழ்தரு கோலந் தகைபா ராட்ட
85      வீழ்பூஞ் சேக்கை மேலினி திருந்தாங்
கரத்தப் பூம்பட்ட டரைமிசை யுடீஇக்
குரற்றலைக் கூந்தற் குடசம் பொருந்திச்
சிறுமலைச் சிலம்பிற் செங்கூ தாளமொடு
நறுமலர்க் குறிஞ்சி நாண்மலர் வேய்ந்து
90      குங்கும வருணங் கொங்கையி னிழைத்துச்
செங்கொடு வேரிச் செழும்பூம் பிணையல்
சிந்துரச் சுண்ணஞ் சேர்ந்த மேனியில்
அந்துகிர்க் கோவை அணியொடு பூண்டு
         மலைச்சிற கரிந்த வச்சிர வேந்தற்குக்
95      கலிகெழு கூடற் செவ்வணி காட்டக்
காரர சாளன் வாடையொடு வரூஉம்
கால மன்றியும் நூலோர் சிறப்பின்
முகில் தோய் மாடத் தகில்தரு விறகின்
மடவரல் மகளிர் தடவுநெருப் பமர்ந்து
100    நறுஞ்சாந் தகலத்து நம்பியர் தம்மொடு
குறுங்கண் அடைக்குங் கூதிர்க் காலையும்
வளமனை மகளிரும் மைந்தரும் விரும்பி
இளநிலா முன்றிலின் இளவெயில் நுகர
விரிகதிர் மண்டிலந் தெற்கேர்பு வெண்மழை
105    அரிதில் தோன்றும் அச்சிரக் காலையும்
ஆங்க தன்றியும் ஓங்கிரும பரப்பின்
வங்க ஈட்டத்துத் தொண்டியோ ரிட்ட
அகிலுந் துகிலும் ஆரமும் வாசமும்
தொகுகருப் பூரமுஞ் சுமந்துடன் வந்த
110    கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்
வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும்
பங்குனி முயக்கத்துப் பனியர சியாண்டுளன்
கோதை மாதவி கொழுங்கொடி யெடுப்பக்
காவும் கானமும் கடிமல ரேந்தத்
115    தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து
மன்னவன் கூடல் மகிழ்துணை தழூஉம்
இன்னிள வேனில் யாண்டுளன் கொல்லென்று
உருவக் கொடியோ ருடைப்பெருங் கொழுநரொடு
பருவ மெண்ணும் படர்தீர் காலைக்
120    கன்றம ராயமொடு களிற்றினம் நடுங்க
என்றூழ் நின்ற குன்றுகெழு நன்னாட்டுக்
காடுதீப் பிறப்பக் கனையெரி பொத்திக்
கோடையொடு புகுந்து கூட லாண்ட
வேனில் வேந்தன் வேற்றுப்புலம் படர
125    ஒசனிக் கின்ற உறுவெயிற் கடைநாள்
வையமுஞ் சிவிகையும் மணிக்கால் அமளியும்
உய்யா னத்தின் உறுதுணை மகிழ்ச்சியும்
சாமரைக் கவரியுந் தமனிய அடைப்பையும்
கூர்நுனை வாளுங் கோமகன் கொடுப்பப்
130    பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப்
பொற்றொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து
செம்பொன் வள்ளத்துச் சிலதிய ரேந்திய
அந்தீந் தேறல் மாந்தினர் மயங்கிப்
பொறிவரி வண்டினம் புல்லுவழி அன்றியும்
135    நறுமலர் மாலையின் வறிதிடங்  கடிந்தாங்
கிலவிதழ்ச் செவ்வாய் இளமுத் தரும்பப்
புலவிக் காலத்துப் போற்றா துரைத்த
காவியங் கண்ணார் கட்டுரை யெட்டுக்கும்
நாவொடு நவிலா நகைபடு கிளவியும்
140    அஞ்செங் கழுநீர் அரும்பவிழ்த் தன்ன
செங்கயல் நெடுங்கட் செழுங்கடைப் பூசலும்
கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை சுருளத்
         திலகச் சிறுநுதல் அரும்பிய வியரும்
         செவ்வி பார்க்குழு செழுங்குடிச் செல்வரொடு
145    வையங் காவலர் மகிழ்தரும் வீதியும்
         சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின்
         முடியர சொடுங்குங் கடிமனை வாழ்க்கை
         வேத்தியல் பொதுவியல் எனவிரு திறத்து
         மாத்திரை யறிந்து மயங்கா மரபின்
150    ஆடலும் வரியும் பாணியுந் தூக்கும்
கூடிய குயிலுவக் கருவியும் உணர்ந்து
நால்வகை மரபின் அவினயக் களத்தினும்
ஏழ்வகை நிலத்தினும் எய்திய விரிக்கும்
மலைப்பருஞ் சிறப்பின் தலைக்கோ லரிவையும்
155    வாரம் பாடுந் தோரிய மடந்தையும்
தலைப்பாட்டுக் கூத்தியு மிடைப்பாட்டுக் கூத்தியும்
நால்வேறு வகையின் நயத்தகு மரபின்
எட்டுக் கடைநிறுத்த ஆயிரத் தென்கழஞ்சு
முட்டா வைகல் முறைமையின் வழாஅத்
160    தாக்கணங் கனையார் நோக்குவலைப் பட்டாங்கு
அரும்பெறல் அறிவும் பெரும்பிறி தாகத்
தவத்தோ ராயினுந் தகைமலர் வண்டின்
நகைப்பதம் பார்க்கும் இளையோ ராயினும்
காம விருந்தின் மடவோ ராயினும்
165    ஏம வைகல் இன்றுயில் வதியும்
பண்ணும் கிளையும் பழித்த தீஞ்சொல்
எண்ணெண் கலையோர் இருபெரு வீதியும்
வையமும் பாண்டிலும் மணித்தேர்க் கொடுஞ்சியும்
மெய்புகு கவசமும் வீழ்மணித் தோட்டியும்
170    அதள்புனை அரணமும் அரியா யோகமும்
வளைதரு குழியமும் வால்வெண் கவரியும்
ஏனப் படமும் கிடுகின் படமும்
கானப் படமும் காழூன்று கடிகையும்
செம்பிற் செய்நவும் கஞ்சத் தொழிலவும்
175    வம்பின் முடிநவும் மாலையிற் புனைநவும்
வேதினத் துப்பவும் கோடுகடை தொழிலவும்
புகையவும் சாந்தவும் பூவிற் புனைநவும்
வகைதெரி வறியா வளந்தலை மயங்கிய
அரசுவிழை திருவின் அங்காடி வீதியும்
180    காக பாதமும் களங்கமும் விந்துவும்
ஏகையும் நீங்கி இயல்பிற் குன்றா
நூலவர் நொடிந்த நுழைநுண் கோடி
நால்வகை வருணத்து நலங்கேழ் ஒளியவும்
ஏகையும் மாலையும் இருளொடு துறந்த
185   பாசார் மேனிப் பசுங்கதிர் ஒளியவும்
பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும்
விதிமுறை பிழையா விளங்கிய சாதியும்
பூச வுருவின் பொலந்தெளித் தனையவும்
தீதறு கதிரொளித் தெண்மட் டுருவவும்
190    இருள்தெளித் தனையுவும் இருவே றுருவவும்
         ஒருமைத் தோற்றத் தைவேறு வனப்பின்
இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும்
காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும்
தோற்றிய குற்றந் துகளறத் துணிந்தவும்
195    சந்திர குருவே அங்கா ரகனென       
வந்த நீர்மைய வட்டத் தொகுதியும்
கருப்பத் துளையவும் கல்லிடை முடங்கலும்
திருக்கு நீங்கிய செங்கொடி வல்லியும்
வகைதெரி மாக்கள் தொகைபெற் றோங்கிப்
200    பகைதெறல் அறியாப் பயங்கெழு வீதியும்
சாத ரூபம் கிளிச்சிறை ஆடகம்
சாம்பூ நதமென ஒங்கிய கொள்கையின்
பொலந்தெரி மாக்கள் கலங்கஞ ரொழித்தாங்கு
இலங்குகொடி யெடுக்கும் நலங்கிளர் வீதியும்
205    நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும்
பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும்
நிறைக்கோல் துலாத்தர் பறைக்கட் பராரையர்
அம்பண வளவையர் எங்கணுந் திரிதரக்
210    கால மன்றியுங் கருங்கறி மூடையொடு
கூலங் குவித்த கூல வீதியும்
பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும்
அந்தியுஞ் சதுக்கமும் ஆவண வீதியும்
மன்றமும் கவலையும் மறுகும், திரிந்து
215    விசும்பகடு திருகிய வெங்கதிர் நுழையாப்
பசுங்கொடிப் படாகைப் பந்தர் நீழல்
காவலன் பேரூர் கண்டுமகிழ் வெய்திக்
கோவலன் பெயர்ததனன் கொடி மதிற் புறத்தென்.
பொழிப்புரை
அங்ஙனம் புகுந்த புறஞ்செரியிலுள்ள சோலையிலும் நீர் நிறைந்த பண்ணைகளிலும் வளைந்த கதிர்களை உடைய வயல்களிலும் பறவைகள் துயில் நீங்கி ஒலி எழுப்ப,  புலர்கின்ற வைகறைப் பொழுதில் குளங்களிலுள்ள தாமரைப் பூக்களின் கட்டவிழ்த்தே உலகிலுள்ளோர் யாவரும் வணங்கும் கதிரவன் பகையரசர்கள் தலை நடுங்கும் வண்ணம் வாளினை ஏந்திய பாண்டியனது ஓங்கி உயர்ந்த மாட மதுரை நகரத்தினைத் துயில் எழுப்ப,

நெற்றியில் விழித்த கண்ணையுடைய சிவபெருமானுடைய கோயிலும்
கருடச் சேவலைக் கொடியாக ஏந்திய திருமாலின் கோயிலும்
வெற்றி தரும் கலப்பையை ஏந்திய வெள்ளையனாகிய பலதேவனுடைய கோயிலும்
சேவல் கோழிக் கொடியை உடையவனான முருகனின் கோயிலும்
அறத்தின் துறைகளைப் பலரும் அறியக் காரணமான முனிவர்களுடைய பள்ளிகளும்
மறம் குறித்த செயற்பாடுகள் சிறந்து விளங்கும் அரசனது கோவிலும் ஆகிய இவ் விடங்களில்

தூய வெண்மையான சங்கோடு கொடை முரசு, வெற்றி முரசு, முறை முரசு என்று மூன்று வகைப்பட்டு ஓங்கி ஒலிக்கும் காலை முரசம் கனைக்கும் உரத்த குரலோடு ஒலியெழுப்ப

கோவலன் சென்று தவநிலையில் இருந்த கவுந்தி அடிகளைக் கையால் தொழுது நாவால் போற்றி

நல்லொழுக்கத்திலிருந்து தவறியோரின் தன்மையை உடையனாகி நறிய மலர் போலும் மேனியை உடைய இவள் நடுக்கந்தரும் துன்பங்களை அடைவதற்குக் காரணமாக,  முன்பின் தெரியாத நாட்டினில் கடுமை மிகுந்த பாதையில் நடந்து வருந்தி தவங்களைச் செய்த தாயே நான் இழிவுற்றேன்,

பழமையான இந் நகரத்திலுள்ள வாணிகர் குலத்தவருக்கு எனது நிலைமையை அறிவித்து நான் திரும்பி வரும் வரைக்கும் பசிய தொடியினை உடை இவள் உங்களது திருவடிகளாகிய காவலை உடையவள் அதனால் அவளுக்கு நேரும் தீங்கு ஒன்றுமில்லை என்று கூறினான்.

அதற்குக் கவுந்தியடிகள, காதலையுடைய மனைவியுடன் அறத்துக்குப் பொருந்தாத செய்கையாலே இணைகூற முடியாத துயரத்தைப் பட்டவனே என்று கூறி,

மறம் சார்ந்த செயல்களிலிருந்து விலகி இருங்கள், இல்லையெனில் வலிய வினை வந்து உங்களை நுகர வைக்கும் என்று அறத்துறை சார்ந்த பெரியோர் அவரவர் திறமைக்கு ஏற்ப, நாவைக் கோலாகக் கொண்டு வாயாகிய பறையில் அறைந்து அறைந்து கூறினும் உறுதியான அறிவில்லாத மக்கள் அதனை தம் இயல்பினுள் சேர்த்துக் கொள்ளமாட்டார். அவற்றின் பயனாகிய தீயவினைகள் வந்து நெருக்கும் காலத்தில் தம் அறியாமையால் மிகவும் கலங்கிப் போய்விடுவார்,

தீவினையின் விலக்க முடியாத பயன்களை நுகரும் காலத்தில் செயலற்று நிற்கமாட்டார் அறநூல்களைக் கற்றறிந்த பெரியோர்,

பெண்களைப் பிரிவதால் வரும் துன்பமும் அவர்களைப் புணர்வதால் வரும் துன்பமும் அக் காலங்களில் காமன் நம் மீது செலுத்தும் நெருக்கடிகளான துன்பமும் பின்னிய கூந்தலை உடையவராகிய பெண்களைப் புணர்ந்தவர்களுக்கு அல்லாமல் ஒப்பற்றதாகிய தனித்த வாழ்க்கையை உடைய பெரியோர்களுக்கு இல்லை.  உலகில் பெண்களும் உணவும் இன்பம் என்று கொண்டு வாழ்பவர்கள் அடையும் தாங்க முடியாத துன்பத்தினைக் கண்டுணர்ந்தவர்களாகி தவிர்த்த, காமத்தைச் சார்ந்து கரைகாண முடியாத துன்பத்தை அடைந்தவர்கள் இக் காலத்தில் மட்டுமின்றி கடந்த காலங்களிலும் பலருண்டு. இது காலங்காலமாக நடக்கும் பழமையான நிகழ்ச்சி.

எனவே, தந்தையின் ஆணைப்படி தன் மனைவியோடு சென்று அவள் பிரிந்ததாலே மிகுந்த துன்பத்தை அடைந்தவன் வேதத்தை அருளிய பிரமனைப் பெற்றவனாகிய திருமால் என்பதை நீ அறிந்ததில்லையா அது எவர்க்கும் தெரிந்த செய்தியல்லவா?

சூதாடும் வட்டிலில் நிலத்தின் ஆட்சியை இழந்து மெல்லியளாகிய தமயந்தியுடன் வெம்மையான காட்டை அடைந்த நளன் விரும்பி அவளைப் பிரியவில்லை, அவளும் குற்றம் செய்யும் தன்மை உடைய சிறுமை கொண்டவளும் அல்லள். அடர்ந்த காட்டுக்குள் இருள் நிறைந்த நடுயாமத்தில் அவளை விட்டு நீங்கச் செய்தது வல்லமை கொண்ட வினை அன்றோ? அது தமயந்தியின் பிழையே காரணம் என்று சொல்வது உண்டாயின் எனக்கு அதை நீ சொல் பார்க்கலாம்.

நீ அவர்களைப் போன்று இல்லை. உன் மனைவியோடு பிரியா வாழ்க்கை வாய்க்கப் பெற்றிருக்கிறாயே.

எனவே நடந்தவற்றை நினைத்து வருந்தாமல் மன்னனது மதுரையில் சேரத்தக்கவரைக் கண்டறிந்து இங்கு திரும்புவாய் என்று கூறினார்.

கட்டுவேலி சூழ்ந்த காவல் காட்டுடன் சேர்ந்து நீர்ப்பரப்பு விளங்கும் வளைந்து கிடந்த வலிமையான அகழியில் பெரிய யானைகளின் கூட்டம் சென்று வரத்தக்க சுரங்க வீதியின் ஓரத்தில் சென்று,

அச்சம் தரும் தோற்றத்தையுடைய மதில் வாயிலில் காவல் செய்வதில் புகழ் பெற்றவர்களும் கொல்லும் வாளை ஏந்தியவர்களுமாகிய யவனர்களைப் பொருட்படுத்தாது புகுந்து,

ஆயிரம் கண்களை உடையவனாகிய இந்திரனுடைய அரிய அணிகலன்களை வைத்திருக்கும் மேழையின் வாயைத் திறந்து வைத்தது போன்ற அந் நகரத்து எல்லையாகிய மதில் வாயிலில்,

மேலைக் காற்று வீசி கொடிகள் அலைகின்ற தெருவில் உள்ள, வரம்புகளை மீறிய பெண்களாகிய பரத்தையர் தம் மீது காதல் கொண்ட செல்வர்களுடன் இடைவிடாது நீர் பாயும் வையை ஆற்றின் மருத மரங்கள் ஓங்கிய திரு மருதத்துறை முன்னர் பரந்து பொலிவுற்ற ஆற்றிடைக் குறையின் வெண்மையான மணலைக் கொண்ட கரையில் உயர்ந்த பள்ளியோடத்தோடு தோணிகளைச் செலுத்தியும் பொலிவு பெற்ற தெப்பங்களைத் தழுவி நீந்தியும் புனலாடினர்.

குளிர்ந்த மணமுள்ள முல்லை மலரும் ஆழமான நீரில் பூத்த குவளை மலரும் கண்போல் மலர்ந்த நெய்தல் மலரும் ஆகிய இவற்றை கன்னத்தைத் தொடுமளவு செறியச் சூடி வெண்மையான மல்லிகைப் பூக்களாலான மாலையோடு குளிர்ந்த செங்கழுநீரின் விரிந்த இதழ்களையும் கொண்டு கட்டிய மாலையை கொற்கைத் துறையில் உண்டான முத்துவடத்துடன் பூண்டு  தென்திசையிலுள்ள பொதியமலையில் பிறந்த சந்தனக் குழம்பை உடல் முழுவதும் பூசி அழகிய கொடிகள் ஆடும் பழைமை பொருந்திய நகரத்தை அடுத்துள்ள சோலையில் விளையாடினர்.

கதிரவன் மறையும் பொழுதில் இளநிலா ஒளி வீசும் முற்றத்தில் தாங்கள் புனைந்த, தங்கள் மனதுக்குப் பிடித்த கோலத்தைத் தம் காதலர்கள் பாராட்ட பூக்கள் சொரிந்த கட்டிலின் மேல் இனிதாக இருந்தார்கள்.

பூப்பின்னலிடப்பட்ட செம்பட்டை, அரையில் உடுத்தி தலையில் வெட்பாலையின் பூங்கொத்துகளைக் கூந்தலில் சூடி சிறுமலை என்று அழைக்கப்படும் மலையில் பூத்த செந்நறுந்தாளிப் பூவுடன் குறிஞ்சியின் மணமுள்ள புதிய பூவைத் தலையில் சூடி குங்குமம் போன்ற வண்ணமுடைய செஞ்சந்தனத்தை (மஞ்சள் நெய்) கொங்கை மீது பூசி செங்கொடுவேரியின் வளமான செழுமையான பூவால் கட்டப்பட்ட மாலையைச் சிவந்த சுண்ணம் பூசிய மார்பிலே அழகிய பவள வடமாகிய அணியுடன் அணிந்து மலைகளின் சிறகை அரிந்த இந்திரனுக்கு ஆரவாரம் பொருந்திய கூடல் நகரத்திலே செவ்வணியைக் காட்டவென்று கார்காலத்தை ஆளும் அரசன் வாடைக் காற்றோடு வரும் காலம் அல்லாமலும்

சிற்ப நூல்  வல்லோரால் சிறப்புறச் செய்யப்பட்ட மேகம் தவழுமாறு உயர்ந்த மாடங்களில் அகில் மரத்தின் விறகால் மடமகளிர் உடலை வருடி விடும் நெருப்பின் பக்கத்தில் அமர்ந்து மணமுள்ள சாந்தை மார்பில் பூசிய மைந்தர்களோடு குறுகிய கண்களை உடைய சரளரங்களை அடைக்கும் கூதிர் காலமும்

வளமனைகளில் வாழும் மகளிரும் ஆடவரும் இளநிலாவை நுகர்வதற்கேற்ற முற்றத்தில் இளவெயிலை நுகருமாறு விரிந்த கதிரையுடைய கதிரவன் மண்டலம் தெற்கில் இயங்கும் வெண்முகில் அரிதாகக் தோன்றும் முன்பனிக் காலமும்

மிகப் பெரும் பரப்பையுடைய கடலில் உள்ள கப்பல்களின் கூட்டத்தால் தொண்டியின் அரசர்கள் திறையாகத் தந்த அகில், பட்டு, சந்தனம்,வாசம், கற்பூரம் என்பவற்றின் மணத்தைச் சுமந்து வந்த கீழைக் காற்றோடு அரசனது தலைநகரான கூடலில் புகுந்து காமனது கொடிய வில் வெற்றிவிழாக் காணும் பங்குனி மாதம் முடியும் பின்பனிக் காலமாகிய அரசன் எங்குள்ளான்,

மாலை போல் பூக்கும் குருக்கத்தி அழகிய கொடியை எடுக்கவும் இளமரக்காவும் பூங்காடுகளும் மணமுள்ள மலர்களை ஏந்தவும் பாண்டியனது பொதிய மலையின் தென்றலோடு அம் மன்னவனது கூடல் மாநகரில் புகுந்து தான் விரும்பும் துணைகளைத் தழுவுமாறு தூண்டும் இனிய இளவேனில் என்பவன் எங்கு உள்ளான் என்று,

பூங்கொடி போன்ற உருவினையுடைய மகளிர் தம்மைக் கொண்ட ஆண்மகன்களோடிருந்து அப் பருவங்களை எண்ணிப் பார்க்கின்ற துன்பம் முடிகின்ற காலமாகிய,

யானைப் பிடியின் கூட்டத்தோடு யானைக் குட்டிகள் அடங்கிய பெண் யானைக் கூட்டத்தோடு அவற்றுக்குத் துணையான ஆண்யானைகளும் நடுங்குமாறு வெய்யில் நிலைபெற்ற  மலை சார்ந்த நல்ல நாட்டில் காடு தீப்பற்றி யெரியுமாறு செறிவான தீயை மூட்டி மேலைக் காற்றோடு வந்து புகுந்து கூடலை ஆட்சி செய்த வேனிலாகிய வேந்தன் வேற்றிடங்களுக்குச் செல்ல ஆயத்தமாகும் வெய்யில் மிக்க முதுவேனிலின் இறுதி நாட்களில்,

கூடார வண்டியும் பல்லக்கும் மணிகள் இழைத்த கால்களையுடைய கட்டிலும் நீராவிச் சோலையில் வந்து சேர்ந்த துணைவர்களுடன் இன்பம் காண்பதும் சாமரையால் ஆ கவரியும் பொன்னால் செய்த வெற்றிலைப் பெட்டியும் கூர் முனையுடைய வாளும் தம் அரசன் கொடுக்க அங்ஙனம் பெற்ற விருதுகளாகிய செல்வம் எக் காலத்தும் மாறாத பொன்வளையலை அணிந்த பெண்கள் புதிய ஆடவருடன் (நித்திய கல்யாணம்) பொருந்தி,

ஏவல் பெண்கள் பொன் கிண்ணத்தில் ஏந்திய அழகிய இனிய கள்ளின் தெளிவை அருந்தி மயங்கி புள்ளிகளையுடைய, வரிபாடுகின்ற வண்டினத்தை அவை இருக்கின்ற இடங்களை விட்டு இல்லாத இடங்களில் பூமாலை கொண்டு விரட்டி இலவம்பூவின் இதழ் போன்ற சிவந்த வாயில் இளம் முத்துப் போன்ற பற்கள் தோன்ற முறுவலித்து ஊடலின் போது வாய்க்கு வந்தவாறு பேசிய நீலோற்பலம் போன்ற கண்களை உடையோர் சொல்பிக்கும் எட்டு இடங்களில் இறுதியிலுள்ள நாவால் சொல்லாமல் சிரிப்பால் கூறும் கலவிப் பொருள் பொதிந்த சொற்களையும் அழகிய செங்கழுநீரின் அரும்பை நெகிழவைத்துப் பார்த்தாற் போன்ற சிவந்த கயலினை ஒத்த நீண்ட கண்ணின் கடை சிவந்து காட்டிய பூசலையும் கொலைத் தொழில் செய்யும் வில் போன்ற புருவத்தின் அழகிய கோடிகள் உள்வளைய திலகம் அணிந்த சிறிய நெற்றியில் அரும்பிய வியர்வையையும் அழகு பார்க்கும் வளமான குடியில் பிறந்த செல்வர்களோடு நாட்டைக் காக்கும் அரசர்க்கும் உயரதிகாரிகளுக்கும் இன்பத்தைத் தரும் வீதியும்

முடிசூடிய அரசரும் பிறர் அறியாதவாறும் பாதுகாப்புடனும் தங்கி இருப்பதற்கேற்ற பெரிய மனையில் வாழும் செங்கல் தலையில் ஏற்றப்பட்டுப் பழி பெறாத சிறப்பினையுடைய வேத்தியல் பொதுவியல் எனும் இருவகைக் கூத்தின் இயல்புகளை அறிந்து அவை தம்முள் மயங்காத வகையில் ஆடும் ஆடலும் பாடலும் தாளங்களும் அவற்றின் வழி வரும் எழுவகைத் தூக்குகளும் அவற்றுடன் கூடி இசைக்கும் தோல்கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி ஆகிய குயிலுவர் கருவிகளையும் உணர்ந்து

குற்றல், இயங்கல், இழுத்தல், கடத்தல் எனும் நான்கு வகைகளையுடைய அவிநயத துறையிலும் குரல் முதலாகிய எழுவகை நிலத்திலும் பொருந்திய ஆடல் பாடல்களை விரிவாகச் செய்யும் நிலைமாறாச் சிறப்பினை உடைய தலைக்கோல் பட்டமெய்திய கணிகையும் வாரப் பாட்டினைப் பாடும் தேரிய மடந்தையும் உகம் எனப்படும் தலைப்பாட்டைப் பாடும் கூத்தியும் ஒளகம் எனப்படும் இடைப்பாட்டைப் பாடும் இடைப்பாட்டுக் கூத்தியும்

நான்கு வெவ்வேறு வகையில் விரும்பத்தக்க முறைமையில் ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன்னிலும் குறையாது நாள்தோறும் பெறும் முறைமையிலிருந்து பிறழாத தீண்டி வருத்தும் தேவதை போன்றவளுடைய கண்ணாகிய வலையில் அகப்பட்டு, 

            பெறுதற்கரிய அறிவும் தம்மை விட்டு நீங்க தவம் புரிந்தோராயினும் மலர் தோறும் சென்று அவற்றின் தேனைப் பருகும் வண்டு போல் அவர்களின் சிரிப்பின் தன்மையறிந்து புதியவர்களை புணரும் இளைஞர்களாயினும் புணர்ச்சி இன்பத்தை நுகர்ந்து அறியாத புதியோராயினும் அவர்களோடு நாள்தோறும் இன்பமாக உறக்கத்தில் கிடக்கும் பண்ணினையும் கிளியினையும் பழிக்கும் இனிய சொல்லையுடைய அறுபத்து நான்கு கலைகளை வல்ல பதியிலாருடைய இரு பெரும் வீதிகளையும்

            கூண்டு வண்டியும் இரண்டு உருளை உடைய சகடமும் (சக்கடா வண்டி) அழகிய தேர் மொட்டும் உடலைப் புகுத்தத் தக்க கவசமும் மனதைக் கவரும் வகையில் மணிகள் பதித்த அங்குசமும் தோலால் செய்யப்பட்ட கைக் கவசமும் அரைப்பட்டிகையும் வளைதடியும் மிகுவெண்மையான கவரிச் சாமரையும் பன்றி முகக் கேடயமும் சிறு கேடயமும் காடெழுதின கேடயமும் குத்துக் கோல்களும் செம்பால் செய்யப்பட்டவையும் வெண்கலத்தால் செய்யப்பட்டவையும் கயிற்றில் முடிபவையும் மாலையாகத் தொடுப்பவையும் மரம் அறுக்கும் வாள் முதலிய கருவிகளும் தந்தத்தைக் கடைந்து செய்த தொழில்கள் உடையவும் தந்தத்தைத் கடையும் கருவிகளும் மணப் புகைக்குத் தேவைப்படுபவையும் உடம்பில் பூசும் சாந்துக்குத் தேவைப்படுபவையும் பூவால் செய்யப்பட்டவையும் ஆகிய வேறுபாடு தெரிவதற்கு இயலாத வளங்கள் கலந்து கிடக்கிற அரசரும் பெற விரும்பும் செல்வத்தை உடைய அங்காடி வீதியும்

            பன்னிரண்டு குற்றங்களில் மிகவும் தீயனவாகிய காகபாதம், களங்கம், விந்து, இரேகை என்னும் நான்கும் நீங்கி தன்மையில் குறைவில்லாத நூலோர் கூறிய மிக நுண்மையான கோடியையும் நால்வகை நிறத்தையும் நலமான ஒளியையும் உடைய வைர வகைகளும்

            கீற்றும் தாரும் எனும் குற்றங்களையும் இருள் என்னும் குற்றமும் நீங்கிய பசுமை நிறைந்த உடலுடைய பசிய கதிரொளி பரந்த மரகத வகைகளும்

            நூல்கள் விதித்த முறை தவறாத பதுமம், நீலம், விந்தம், படிதம் எனும் நால்வகை மாணிக்க வகைகளும்
           
பூச நாள்மீனின் உருவினையுடைய பொன்னைத் தெளித்து போன்ற புருசராக வகையும்

            குற்றமற்ற கதிரவன் ஒளியும் தெளிந்த தேன்துளியின் நிறமும் உடைய வைடூரிய வகைகளும்

            இருளைத் தெளித்து வைத்தது போன்ற நீல மணி வகைகளும் 
           
மஞ்சளும்  சிவப்பும் கலந்தது போன்ற கோமோதக வகைகளும்

            ஒன்றுபட்ட பிறப்பினையும் ஐந்து வேறுபட்ட வனப்பினையும் உடைய விளங்கும் ஒளியை உமிழும் நலம் பொருந்திய மாணிக்கம், புருடராகம், வயிடூரியம், நீலம், கோமேதகம் என்னும் மணிகளும்

            காற்று, மண், கல், நீர் ஆகியவற்றால் உண்டாகும் குற்றம் சிறிதும் இன்றி தெளிந்த ஒளியுடையவையும் வெள்ளியும் செவ்வாயும் போல் வெண்மை, செம்மை நிறங்களுடையனவும் திரட்சியுடையவையும் ஆன முத்துவகைகளும்

            நடுவே துளைபட்டவையும் கல்லிடுக்குக்குள் புகுந்து வளைந்தவையும் திருகியவையும் எனும் இக் குற்றங்கள் அற்ற சிவந்த கொடிப் பவள வகைகளும் என்று

            இவ் வொன்பது வகை மணிகளின் பிறப்பு முதல் இறப்புவரை இயல்புகள் அனைத்தையும் தெரியவல்ல வாணிகர் கூட்டத்தால் உயர்வு பெற்று பகைவர் நெருக்கல் இல்லாத பயன்மிக்க கடைத்தெருவும்.

            சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் எனும் நான்கு சாதிகளாய் ஒங்கிய இயல்பினை உடைய பொன்னின் வகை தெரிந்த பொன்வாணிகர் எப்பொன் எவ்விடத்தில் உள்ளதென்று கலங்கும் துன்பத்தைத் தவிர்க்க அங்கங்கே கொடி நட்டு இருக்கும் நலமிக்க காசுக்கடைத் தெருவும்

            நுண்ணிய பருத்தி நூலிலும் கம்பிளியாலும் பட்டு நூலாலும் நெய்யப்பட்ட அதனதன் வகை துணிவகைகள் தெரிய நூற்றுக் கணக்காக அடுக்கி வைக்கப்பட்ட அடுக்குகள் நூற்றுக்கணக்காக உள்ள துணிக் கடைத் தெருவும்

நிறுக்கும் துலாக்கோலை உடையோராயும் பரிய அரையையும் இரும்பால் வாய்மட்டாகக் கட்டிய கண்ணையுடைய பறையினை உடையோராகவும் அளக்கும் மரக்காலை உடையுடையோராகவும் தரகு செய்வார் ஓரிடத்தில் நில்லாமல் எவ்விடத்தும் நாள் முழுவதும் திரியும், பெரிய மிளகு மூடைகளோடு கூங்களும் குவித்த கூலக்கடைத் தெருவும் 

            பகுதி வேறுபாடுகள் தெரிந்த நால் வருணங்களுக்குரிய நான்கு தெருக்களும் முச்சந்தியும் நாற்சந்தியும் கடைத் தெருக்களும் மன்றுகளும் பல பாதைகள் கூடும் முடுக்குகளும் குறுந்தெருக்களும் உலாவி வானின் நடுவிலே வெம்மை முறுகி நிற்கும் கதிரவனின் கதிர்கள் நுழையாத பசுமையான சிறுகொடிகளும் பெருங்கொடிகளும் எனும் இவற்றின் பந்தலின் நிழலில் பாண்டிய மன்னனது பெரிய நகரினைக் கண்டு மகிழ்ந்து கொடிகளையுடைய மதிலுக்கு வெளியே  மீண்டும் சென்றான் கோவலன்.

இக் காதையின் சிறப்புகள்:
1.   முன் காதையிறுதியில் வைகறைப் பொழுதில் மதுரையின் வட எல்லையில் ஓடும் வையையாற்றுக்கு வடக்கில் இருந்து மதுரை மாநகரில் எழும் காலை ஓசைகளைக் கேட்ட கோவலன் முதலியோர் பின்னர் ஆற்றைக் கடந்து நகரை வலம் வந்து புறநகரில் உள்ள அறவோர் உறையும் சேரியை அடைந்தனர் என முடித்து இந்தக் காதையையும் வைகறைப் பொழுதின் விளக்கத்துடன் தொடங்குவது ஒரு கேள்வியை எழுப்புகிறது.
முன்னாள் முறைமையின் இருந்தவ முதல்வியொடு
பின்னையு மல்லிடைப் பெயர்ந்தனர்
என்று முன் காதையில் குறிப்பிட்டிருப்பது போல் இரவில் விடிவது வரை நடந்தவர்கள் அறவோர் பள்ளியில் ஓய்வெடுத்த பின் அடுத்த நாள் காலையில் நடந்தவற்றையே சொல்லத்தொடங்குகிறார் அடிகளார் என்பது பெறப்படுகிறது. இது போன்ற சிறு சிறு செய்திகளைச் சொல்லாமல் இன்றைய ஆப்ப இற்றையியர்கள்(Post modernists – அப்பம் = உடனே, ஆப்பம் = அப்புறம் மாவு புளித்த பின்) கூறுவது போல் படிக்குநர்களின் சிந்தனைக்கும் கற்பனைக்கும் அடிகளார் வாய்ப்பளித்துள்ளார்.

2.   இந்திரவிழவெடுத்த காதை, கனாத்திறமுரைத்த காதை, நாடுகாண் காதை ஆகியவற்றில் புகார் நகரத்திலுள்ள, நாடுகாண் காதையில் நாம் பட்டியலிட்டுக் காட்டிய 12 கோயில்களுக்கும் அறவோர் பள்ளிகளுகளுக்கும் மாறாக இங்கு சிவன், திருமால், பலதேவன், முருகன் ஆகியோரின் கோயில்களுடன் அறவோர் பள்ளிகளும்தாம் கூறப்பட்டுள்ளன.

      இதைக் கூறும் போது ஓர் ஐயம் எழுகிறது. பிற கோயில்களிலிருந்து வேறுபட்டவையாக புத்த, அம்மண வழிபாட்டிடங்களைப் பள்ளிகள் என்று பிரித்துக் காட்டுவது, சென்ற மூன்று நூற்றாண்டுகளாக கிறித்துவ சமயம் கல்வி நிறுவனங்களை அமைத்து மக்களுக்குக் கல்வியும் வேலைவாய்ப்புகளும் வழங்கி மதமாற்றம் செய்து வருவது போல், அன்று புத்த, அம்மண சமயங்கள் கல்வியுடன் பல்வேறு உதவிகளை வழங்கி மக்களைக் கவர்ந்திருக்குமோ என்பதுடன், “நம்உள்நாட்டுக் கோயில்கள் இன்று போல் அன்றும் திருவிழாக்கள் பெயரில் மக்களிடையில் காணிக்கை தண்டியும் பல்வேறு வேள்விகள், முழுக்குகள் போன்றவற்றில் விலை மதிப்புள்ள, மக்களுக்குப் பயன்படத்தக்க எண்ணற்ற பொருள்களை அழித்தும் கோயில் பூசகர்களை உயர் சாதியராக்கி மக்களைக் கோயில்களிலிருந்து அயற்படுத்தியும் இருக்கும் என்று தோன்றுகிறது.

      இத்தனை நூற்றாண்டுகளாக, இத்தனை முறைகள் பட்டும் தமிழர்களின் மர மண்டைகளுக்குள் இந்த உண்மை புக முடியவில்லை, இன்றைய இந்த சமயக் கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்ற முனைப்பான சிந்தனை இன்றுவரை உருவாகவில்லை.

      தமிழர்களின் இந்த குருட்டுத்தனமான கண்ணோட்டத்திலிருந்துதான் அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் என்ற தொடருக்கு உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் கீழ்க்கண்டவாறு விளக்கம் தந்துள்ளதை வேங்கடசாமியார் குறிப்பிடுகிறார்:      
      அறமும் அதன் துறைகளும் விளங்குவதற்குக் காரணமாகிய அறவோர்களின் இருப்பிடங்களும்; ஈண்டுப் பள்ளி என்றது அவ்விடங்களை. அறத்துறை அறமும் அறத்தின் துறையுமும் என உம்மைத் தொகை. அறமாவது இரு வகைத்து: இல்லறமும் துறவறமும் என. அவற்றுள் இல்லறமென்பது கற்புடை மனைவியோடு இல்லின்கணிருந்து செய்யும் அறம். அதன் துறையாவன: தன்னை யொழிந்த மூவர்க்கும், துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் தேவர்க்கும் முனிவர்க்கும் விருந்தினர்க்கும் சுற்றத்தார்க்கும் பிறர்க்கும் துணையாதலும் வேள்வி செய்தலும், சீலங்காத்தல் முதலியனவும் அருளும் அன்பும் உடையனாதலும் பிறவும்.

        இனித் துறவறமாவது, நாகம் தோலுரித்தாற் போல அகப்பற்றும் புறப்பற்றும் அற்று இந்திரிய வசமறுத்து முற்றத் துறத்தல்.

        அதன் துறையாவன: சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன. அவற்றுள், சரியை அலகிடல் முதலியன: கிரியை பூசை முதலியன;

யோகம் எண்வகைய; அவை: இயமம், நியமம், ஆசனம், வளிநிலை, தொகைநிலை, பொறைநிலை, நினைதல், சமாதி என்பன;

அவற்றுள் பொய் கொலை களவே காமம் பொருணசை இவ் வகை யைந்து மடக்கிய தியமம்எனவும் பெற்றதற் குவத்தல் பிழம்புநனி வெறுத்தல் கற்பன கற்றல் கழிகடுந் தூய்மை பூசனைப் பெரும்பய மாசாற் களித்தலொடு பயனுடை மரபினி யமமைந்தேஎனவும் நிற்ற லிருத்தல் கிடத்தல் நடத்தலென் றொத்த நான்கி னொல்கா நிலைமையொடு டின்பம் பயக்குஞ் சமய முதலிய வந்தமில் சிறப்பி னாசன மாகும்எனவும் உந்தியொடு புணர்ந்த விருவகை வளியும் தந்த மியக்கந் தடுப்பது வளிநிலைஎனவும் பொறியுணர் வெல்லாம் புலத்தின் வழாமை ஒருநிலைப் படுப்பது தொகைநிலை யாமேஎனவும் மனத்தினை ஒருவழி நிறுப்பது பொறைநிலைஎனவும் நிறுத்திய அம்மன அந்நிலை தெரியாமற் குறித்த பொருளொடு கொளுத்துவது நினைவேஎனவும் ஆங்ஙனங் குறித்த அம்முதற் பொருளொடு தான்பிற னாகாத் தகையது சமாதி எனவும் வருவனவற்றான்றிக.

        மேலே தரப்பட்டுள்ள பட்டியல்களில் இல்லறத்தார்தாம் தம் வாழ்வின் செயற்பாடுகளில் பிறருக்குப் பெருமளவில் உதவுவோராக நம் பண்பாட்டு மரபுகளிலிருந்து தெரிய வருகிறது. துறவறம் என்று விளக்கப்பட்டுள்ள செயற்பாடுகளின் பயன்கள் மனிதக் குமுகத்துக்கு எந்த வகையில் உதவுகிறது என்ற கேள்விக்கு தன்னலத்துக்காக, அதாவது சாவுக்குப் பின் மறுபிறவி என்ற கற்பனைத் துன்பத்திலிருந்து தப்ப அல்லது செத்த பின் கிடைக்கும் என்று நம்பப்படும் கற்பனையான முடிவில்லா இன்பம் நிறைந்த தேவருலக வாழ்க்கைக்காக அரிய மனித வாழ்க்கையைச் செயலற்றதாக்கி வீணாக்குவது என்ற விடை கிடைக்கிகிறது. அப்படி ஏதாவது ஆதாயத்தை அவர்கள் இவ் வுலகில் பெறுவதாயிருந்தால் அது வசியம் போன்ற திறன்களை வளர்த்து பிறர் மனங்களின் மீது மேலாண்மை செய்து மிகப் பெரும்பாலும் பிறர்க்குக் கேடு செய்வதாகவுமே முடிகிறது. இவ்வாறு வாழ்க்கையை வீணடிக்கும் இந்தக் கோட்பாடு நம் குமுகத்தில் நிலைப்படாமல் இருந்திருந்தால் மேலை நாடுகளில் போல் அறிவியல் ஆய்வுகளிலும் படைப்புகளிலும் இங்கு வாழ்ந்த மனிதர்களில் அறிவும் ஆற்றலும் வாய்ந்தவர்களாக எண்ணற்றோர் உருவாகியிருப்பர்.

      இன்றும் அம்மண சமயத்தவராகிய பனியாக்களின் வாணிகம் தொடர்ந்து செழிக்க வேண்டுமாயின் உள்நாட்டு மனித ஆற்றல் செயல்படக் கூடாது என்ற அடிப்படையில் கல்விக் கூடங்களிலிருந்து வெளிவரும் திறன் மிக்கோரை வெளிநாட்டுக்குத் துரத்துவதிலும் எஞ்சியோருக்கு மதவெறியூட்டி தியானம், யோகம் என்ற பெயர்களில் ஆற்றலை வீணாக்கும் மனநிலையை வல்லரசியத்தின் துணையுடன் உருவாக்குகின்றனர். மனதை ஒருமுகப்படுத்தும் சரியான உத்தி, தனக்கு உண்மையான ஆர்வமுள்ள துறையிலும் தொழிலிலும் மனம் ஒன்றி ஈடுபடுவதுதான். பணத்துக்காகவும் பதவிக்காகவும் தனக்கு ஆர்வமும் இயற்கையான திறனும் இல்லாதவர்கள் செயற்கையான கல்வித் திட்டங்களில் தேறி பிடிக்காத வேலைகளில் ஈடுபடும் போதே மன அழுத்தங்கள் ஏற்படுகின்றன. எனவே ஆர்வத்துக்கும் இயற்கைத் திறனுக்கும் ஏற்ற கல்வியும் பெரும் ஏற்றத்தாழ்வில்லாத வருவாயும் அமைந்தால் இந்த துறவறக் கோட்பாடும் அதன் மீதான நாட்டமும் நம் நாட்டை விட்டு ஓட்டம் பிடித்துவிடும். அதை எய்துவதற்கு நாம், நம் மக்களின் தேவைக்கான பண்டங்களையும் பணிகளையும் நாமே உருவாக்கி செயற்படுத்தி ஏற்றுமதி இறக்குமதி வாணிகர்களையும் பனியாக்களின் பொருளியல் முற்றதிகாரத்தையும் முடிவுக்குக் கொண்டுவருவதாகிய ஓர் இலக்கை நோக்கி நம்மை நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும்.

3.   நகருக்குள் சென்று வாணிகர்களைக் கண்டு தன் நிலை உணர்த்தி வரப்போவதாக கவுந்தியடிகளிடம் கூறிய போது கோவலன் தன் கடந்த காலத் தவறுகளைக் கூறுவது அவன் மனதளவில் மீட்சியடைந்துவிட்டான் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அதற்கு மறுமொழியாக கவுந்தியடிகள் கூறுகின்ற கோட்பாடு உயிர்களின் தற்காப்பு, இனப்பெருக்கம் என்ற இயங்கியல் எதிரிணைகளில் ஒன்றான இனப்பெருக்கத்தை அதன் பின் விளைவுகளைக் காட்டி மறுப்பதாக உள்ளது. உயிரினங்களின், குறிப்பாக இயங்குதிணைகளின்(நடமாடும் உயிரினங்களின்) காம உணர்வுகள் வெளியிலிருந்து அவற்றை எப்போதும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் பகைகளினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இயற்கையாகவே குறிப்பிட்ட பருவங்களில் மட்டும் கிளர்ந்தெழும் கட்டுப்படுத்த இயலா காம உணர்வால்தான் அவை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. மனிதனுக்கும், நம் நாட்டு காம நூல்கள் கூறுவது போல், காம உணர்வு உச்சத்தை எட்டும் காலமுறைச் சுழற்சி ஒன்று உள்ளது. ஆனால், விலங்குகளைப் போலன்றி, காடுகளை அழித்து தன் இருப்பிடத்தை கொல்விலங்குகளின் தாக்குதல்களிருந்து காத்துள்ளதாலும் உணவு தேடும் வேலை விலங்குகளை விட எளிதாக முடிந்துவிடுவதாலும் உடலுறவு என்பது மனிதனுக்கு ஒரு பொழுதுபோக்காக மாறிவிட்டது.

      விலங்குகளின் காம எழுச்சிக் காலத்தில் ஆண் வகுப்புக்கிடையில் உருவாகும் போட்டிகள் கொலையில் முடிவதில்லை. ஆனால் ஒரு கூட்டத்தில் ஆண் வகையில் ஒன்று மட்டும் இருக்க மற்றவை தனியாகத் துரத்தப்படும் விலங்கினங்கள் உண்டு. இந்தப் போட்டிகள் கொலையில் முடிவதில்லை. ஆனால் மனிதனிடம் கொலையில் முடியும் மோதல்கள் இயல்பாதலால் அதன் தீர்வாகத்தான் பல்வேறு திருமண முறைகள் உருவாயின. அவை பெண் ஆணுக்கு அடிமையாகும் நிலைக்கு இட்டுச் சென்றது. செல்வம், செல்வாக்கு, அதன் பக்க விளைவான ஏழ்மை என்ற காரணிகள் உருவான போது உடலுறவும் ஒரு விற்பனைப் பண்டமாகியது. அதன் விளைவுதான் விலைமகளிரின் தோற்றம். அவ்வாறு உடலுறவை விலை கொடுத்து வாங்கும் ஆடவர்களின் வாழ்க்கை சீரழிந்தது. அதன் எதிர்வினைதான் கவுந்தியடிகள் வெளிப்படுத்தும் மண வாழ்க்கை, அதாவது உடலுறவு வெறுப்பு.

      17ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தில் ஆலய நடைமுறையில் கத்தோலிக்க நடைமுறைகளைக் களைவதையும் ஒழுக்கத்தில் கட்டுப்பாடுகளையும் நோக்கமாகக் கொண்டு உருவான தூய்மைக் கோட்பாடு(Puritanism), விடுதலைப் போரில் அயர்லாந்து ஈடுபட்டதால் ஆங்கில அரசின் ஒடுக்குமுறையிலிருந்து தப்பி அமெரிக்காவுக்குச் சென்றவர்களால் அங்கு செல்வாக்குள்ள மதப்பிரிவாக உள்ளது. உடலுறவு என்பது இனப்பெருக்கத்துக்காகவே அன்றி இன்பத்துக்காக அல்ல என்பது அதன் நிலைப்பாடு (உடலுறவு பற்றிய காந்தியின் நிலைப்பாடும் இதுதான்). இன்று உடலுறவு பற்றி அமெரிக்கர்களின் நிலைப்பாடு நமக்குத் தெரியும். ஆனால், அங்குள்ள தளர்வான இன்றைய பாலியல் உறவு நிலைப்பாடு விலைமகளிரின் செல்வாக்கை மட்டுப்படுத்தி கோவலர்களின் உருவாக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். நம் நாடும் சிறுகச் சிறுக அத்திசை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

      உடலுறவு, குடும்ப வாழ்வு பற்றிய எதிரியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் கவுந்தியடிகள் பிறர்க்கு உதவுவது பற்றியோ மனித வாழ்க்கையின் குறிக்கோள் பற்றியோ ஒரு சொல் கூடக்  கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிறருக்கு, குறிப்பாக கோவலன் கண்ணகிக்கு, உதவுவதைத் தவிர்க்குமாறு சமயப் பெரியோர்கள் குறிப்பாக உணர்த்திய அறிவுரையை அவர் புறக்கணித்தது அவருக்கு இயற்கையில் அமைந்த கருணை உள்ளத்தால்தானே ஒழிய சமயக் கோடுபாட்டுத் தாக்கத்தால் அல்ல.

      அறவோர் பள்ளி என்று குறிப்பிடப்படும் இடங்கள் முன்பு ஒரு கட்டத்தில் மக்களுக்கு கல்வியளித்தல் போன்ற அறப்பணிகளில் ஈடுபட்டு சிலப்பதிகாரம் காட்டும் காலத்தில் பெயர் மட்டும் மிஞ்சி செயல் நின்றுபோயிருக்க வேண்டும். அவ்வாறுதான் மதுரைக் கலவரத்தில் வினைப்பாட்டுடன் செயல்பட்ட சீத்தலைச் சாத்தனாரின் புத்தம் இலங்கைக் கயவாகுவின் உதவியுடன் மணிமேகலையை மக்கள் பணியிலீடுபடுத்தி புகாரிலிருந்த சோழ அரசை அழித்தது.

4.                                 பெருங்கை யானை இனநிரை பெயரும்
சுருங்கை வீதி மருங்கிற் போகி
என்ற தொடர் குறிப்பிடும் சுருங்கை எனப்படும் சுரங்கப் பாதை, அதுவும் யானைகள் கூட்டமாகச் செல்லும் அளவுக்குப் பெரியதாக, அகழியின் கீழாகச் சென்றதைக் குறிப்பதாயின் அத்தகைய ஒரு சுரங்கப் பாதையை அமைத்து நீர் கசியாமல் அதைப் பராமரிக்கும் தொழில்நுட்பம் அன்று இருந்ததா என்ற கேள்வியை எழுப்புகிறது.

5.   மதிலாகிய கோட்டை வாயிலில் யவனர் எனப்படும் வெளிநாட்டார் காவலிலிருந்தார் என்ற செய்தி அரசன் உள்நாட்டு மக்களை நம்பாத அளவுக்கு அவனுக்கும் மக்களுக்குமான உறவு கெட்டிருந்ததன் ஒரு குறியீடாக இருக்குமா?

6.   கோட்டை வாயிலைத் தாண்டியதும் கடைகழி மகளிர் எனப்படும் விலைமகளிரைக் காட்டி அவர்களது அரசியல் செல்வாக்கைக் கூறும் முன்னதாக அவர்கள் வெவ்வேறு பருவ காலங்களில் மேற்கொள்ளும் ஒப்பனைகளையும் தொழில் முறைகளையும் வரிசைப்படுத்துகிறார்.
      1.குட காற்று எனப்படும் ஆடிக் காற்றுக்கு முன்னோடியான முதுவேனிற் காலம்:
காலைப் பொழுது: வையையாற்றின் மருதந்துறை முன்னர் ஆற்றிடைக் குறையின் கரையில் இருந்து உயர்ந்த பள்ளியோடம், தோணி ஆகியவற்றை ஓட்டியதுடன் அழகிய தெப்பங்களைப் பிடித்து நீந்தவும் செய்தனர்.
நண்பகல்: குளிர்ந்த முல்லை மலர், நீரில் பூத்த செங்குவளை மலர், கண் போன்று தோன்றும் நெய்தல் மலர் ஆகியவற்றை கன்னத்தை அடைக்குமாறு கூந்தலில் சூடியும் மல்லிகை மாலையுடன் செங்கழுநீர் மாலையை கொற்கையில் விளைந்த முத்து வடத்துடன் அணிந்து பொதிய மலைப் பிறந்த சந்தனத்தின் குழம்பை உடலெங்கும் பூசி ஊரையடுத்த சோலையில் விளையாடினர்.
மாலைப் பொழுது : நிலா முற்றத்தில் தம் காதலர் பாராட்டத்தக்க கோலத்தைப் புனைந்து படுக்கையில் இனிதாக இருந்தனர்.
      2.வாடைக் காற்றோடு வரும் கார் காலம்: அரையில் செம்பட்டு உடுத்தி தலை மீது வெட்பாலைப் பூவுடன் சிறுமலையில் பூக்கும் செங்கூதாளப் பூவையும் குறிஞ்சிப் பூவையும் சூடி குங்கும வண்ணத்தை மார் மீது எழுதி சிந்துரப் பொடி பூசிய உடலில் பவளம் பதித்த அணியைப் பூண்டு கார்காலத்தை எதிர்கொண்டனர்.

      3. கூதிர் காலம்: மேகம் தழுவுமாறு அமைந்த உயர்ந்த மாடங்களில் குறுகிய கண்களையுடைய சாரளங்களை அடைத்து அகிலை விறகாகக் கொண்ட நெருப்பின் அருகில் இருந்து நறிய சாந்து பூசிய மார்பை உடைய ஆடவர்களோடு கூடி இருந்தனர்.

      4. முன்பனிக் காலம்: விரிந்த கதிர்களையுடைய கதிரவன் தென் அரைக்கோளத்தின் மீது இயங்குவதால் வெண்முகில் கூட அரிதாகவே வானில் தோன்றும் முன்பனிக் காலத்தில் வள மனைகளில் வாழும் மகளிரும் ஆடவரும் இளநிலவை நுகரவென்று அமைந்த நிலா முற்றத்திலிருந்து இளவெயிலை நுகர்ந்தனர்.
                 
        5. பின்பனிக் காலம்: கப்பல்கள் சோழ நாட்டுத் தொண்டியில் இறக்கிய அகில், பட்டு, சந்தனம், வாசம், கருப்புரம் ஆகியவற்றின் மணத்தைச் சுமந்து வந்த கீழ்க் காற்றாகிய கொண்டலோடு பாண்டியனின் மதுரையில் புகுந்து காமனது கொடிய வில் வெற்றியைக் காணும் பங்குனி மாதத்து இறுதியில் வரும் பின் பனிக்காலம் எங்குள்ளது என்றும்
        6. மாலை போல் பூக்கும் குருக்கத்தி அழகிய கொடியை எடுக்கவும் இளமரக் காவும் நந்தவனமும் நறிய மலர்களை ஏந்தவும் பொதிய மலைத் தென்றலோடு கூடல் நகருள் புகுந்து தாம் விரும்பும் துணைகளைத் தழுவுவிக்கும் இனிய இளேனில் எனும் அரசன் எங்குளான் என்றும்,
கொடி போன்ற பொது மகளிர் தம்மோடிருக்கும் பெரிய துணைவர்களுடனிருந்து பருவங்களின் வருகையை எண்ணும் காலம் என்று கூறி பருவங்களின் இயல்புக்கேற்றவாறு அணிகள், மலர்கள், உடைகள், ஒப்பனைகள், களங்கள் என்று மாற்றிக்கொண்டு தொழில் செய்வதை விளக்கிக் கூறுகிறார் அடிகளார்.
                                    வங்க ஈட்டத்துத் தொண்டியோ ரிட்ட
அகிலுந் துகிலும் ஆரமும் வாசமும்
தொகுகருப் பூரமுஞ் சுமந்துடன் வந்த
என்ற வரிகளில் வரும் அகில், துகில், ஆரம், வாசம், கருப்பூரம் ஆகியவற்றின் வகைகள் பற்றி அடியார்க்கு நல்லார் தந்துள்ள பட்டியல் ஒன்றையும் நமக்குக் காட்டுகிறார் வேங்கடசாமியார் அவர்கள்.
       
        அகில்:           1.     அருமணவன்,                    3.     கிடாரவன்,
                                2.     தக்காலி,                             4.     காரகில்.
       
        துகில்:           1.     கோசிகம்,                           13.  சித்திரக்கம்மி,                    25.  கவற்றுமடி,           
                                2.     பீதகம்,                                14.  குருதி,                                 26.  நூல்யாப்பு,
                                3.     பச்சிலை,                            15.  ரியல்,                               27.  திருக்கு,
                                4.     அரத்தம்,                            16.  பேடகம்,                             28.  தேவாங்கு,
                                5.     நுண்டுகில்,                        17.  பரியட்டக்காசு,                 29.  பொன்னெழுத்து, 
                                6.     சுண்ணம்,                           18.  வேதங்கம்,                         30.  குச்சரி,
                                7.     வடகம்,                               19.  புங்கர்க் காழகம்,               31.  தேவகிரி,
                                8.     பஞ்சு,                                  20.  சில்லிகை,                          32.  காத்தூலம்,
                                9.     இரட்டு,                              21.  தூரியம்,                             33.  இறஞ்சி,
                                10.  பாடகம்,                             22.  பங்கம்,                               34.  வெண்பொத்தி,
                                11. கோங்கலர்,                        23.  தத்தியம்,                            35.  செம்பொத்தி,        
                                12.  கோபம்,                              24.  வண்ணடை,                      36.  பணிப்பொத்தி.
                           
        ஆரம்:            1.     மலையாரம்,                      3.     கீழான்பச்சை,                    5.     அரிசந்தனம்,                                                                         2.                தீமுரன்பச்சை,                                   4.     பச்சைவேட்டை,                6.     வேரச்சுக்கொடி.
       
        வாசம்:           1.     அம்பர்,                               6.     குங்குமம்,                           11.  இலவங்கம்,
                                2.     எச்சம்,                                7.     பனிநீர்,                              12.  சாதிக்காய்,           
                                3.     கத்தூரி,                              8.     புழுகு,                                 13.  வசுவாசி,
                                4.     சவாது,                               9.     தக்கோலம்,                        14.  நிரியாசம்,
                                5.     சாந்து,                                10.  நாகப்பூ,                              15.  தைலம்.

        கருப்பூரம்:            1.                                         மலைச்சரக்கு,                            6.     ஆரூர்க்கால்,          11.          உருக்குருக்கு,
                                2.     கலை,                                 7.     கையொட்டுக்கால்,           12.  வாறோசு,
                                3.     அடைவுசரக்கு,                  8.     மார்ப்பற்று,                       13.  சூடன்,
                                4.     மார்பு,                                 9.     வராசரன்,                          14.  சீனச்சூடன்.
                                5.     இளமார்பு,                         10.  குமடெறிவான்,
        இவற்றில் இன்று ஐரோப்பியர்கள் மூலமாக செய்யப்பட்டு அல்லது காப்புரிமம் பெற்று இறக்குமதியாகவோ உள்நாட்டார் கட்டணம் கொடுத்து இசைவுபெற்றோ சந்தையில் விற்கும் பல்வேறு வகைப் பண்டங்களுக்கு இணையாக அன்றும் விற்றிருப்பது பெறப்படுகிறது. இவற்றில் தமிழகத்தின் ஒரு பகுதியில் செய்யப்பட்டு துறைமுகங்கள் மூலம் பிற பகுதிகளுக்குள் இறக்கப்பட்ட பண்டங்களும் இருக்கலாம். அவற்றை இனங்காணுதல் பயனுள்ளதாக இருக்கும்.

7.     நடுத்தர வகுப்பு ஆடவர்க்கு காம இன்பம் அளிக்கும் விலை மகளிரைப் பற்றிக் கூறிய அடிகளார் இப்போது உயர் வகுப்பினருக்கு, குறிப்பாக அரசன், அமைச்சர்கள், படைத்தலைவர்கள் போன்ற, இன்று மிக முகாமையான மனிதர்கள் (வி.வி..பி.க்கள்) என்று அழைக்கப்படும் ஆளும் வகுப்பினருக்கும் பெருஞ்செல்வர்களுக்கும் இன்பமளிக்கும் சிறப்புரிமை பெற்ற விலைமகளிரைப் பற்றி விளக்குகிறார். அதற்குத் தொடக்கவுரையாக கதையின் இந்தக் கட்டத்தில் நிலவும் காலநிலையான(பெரும்பொழுதான) இரு வேனிற்பருவத்துங்களிலும் பொதுவான, எளிய மக்களும் நாட்டிலும் காட்டிலும் வாழும் நிலைத்திணைகள் உட்பட அனைத்துயிர்களும் படும் பாட்டை அவருக்கே உரிய வகையில்,
                                கன்றம ராயமொடு களிற்றினம் நடுங்க
என்றூழ் நின்ற குன்றுகெழு நன்னாட்டுக்
காடுதீப் பிறப்பக் கனையெரி பொத்திக்
கோடையொடு புகுந்து கூட லாண்ட
வேனில் வேந்தன் வேற்றுப்புலம் படர
                        ஒசனிக் கின்ற உறுவெயிற் கடைநாள்
        என்ற வரிகளில் எடுத்துரைக்கிறார். இன்று கோடை காலத்தில் குடிக்க நீரின்றி யானை உட்பட அனைத்து விலங்குகளும் இடம் பெயர்வதும் மக்கள் வாழிடங்களுக்குள் நுழைவதும் போன்று அன்று நிகழ்ந்த குறிப்பில்லை எனினும் இடம் பெயரும் விலங்குகள் அங்கு வாழும் விலங்குகளின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும். காடு தீப்பற்றி எரிவதாலும் விலங்குகள் வாழிடங்களை விட்டுப் பெயர வேண்டியிருந்திருக்கும்.

        இனி உயர்தர விலைமகளிரின் நிலை பற்றிப் பார்ப்போம்:
        1. கூடார வண்டியும் பல்லக்கும் மணிகள் இழைத்த கால்களையுடைய படுக்கையும் நீராவிச் சோலையில்  குளத்தில் துணையாக அமைந்த செல்வக்குடிகளில் பிறந்த ஆடவரோடு நாட்டைக் காக்கும் ஆட்சியாளரோடும் மகிழ்வோடிருக்கவும் கவரிச் சாமரமும் பொன்னால் செய்த வெற்றிலைப் பெட்டியும் கூரிய வாளும் ஆகிய சிறப்புரிமைகளாகிய விருதுகளாக அரசன் கொடுக்க பொன்வளை அணிந்த மகளிர் வாழும் சிறுதனம் பெறுவார் வீதி எனப்படும் தெருக்களும்
        2. சுடுமண் ஏறா(தவறிழைத்ததற்குத் தண்டனையாக தலையில் செங்கல்லைச் சுமந்து ஊரைச் சுற்றி வராத என்று ஒரு பொருளும் ஓடு வேயாமல் பொற்றகடு வேய்ந்த வீடு என்றொரு பொருளும் கொள்ளலாம் என்கிறார் வேங்கடசாமியார். செங்கல் இன்றி முழுவதும் கல்லால் கட்டப்பட்டதாகவும் இருக்கலாமல்லவா?) பெருமை பெற்ற, முடியரசரும் தங்கியிருக்கத் தக்க பாதுகாப்புள்ள வளமனையில் ஆடல், பாடல், நாடகம் என்ற அனைத்துக் கலைகளையும் நிகழ்த்தும் வசதிகளுடன் நாளுக்கு ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் பெறும் கணிகையர் வாழும் தெருக்களும் என்ற விளக்கத்தின் போது முடியரசு ஒடுங்கும் கடிமனை வாழ்க்கை என்றொரு சொல்லைப் பயன்படுத்துகிறார் அடிகள். அதாவது அரசன் மீது இக் கணிகையர் மிகுந்த செல்வாக்குச் செலுத்தினர் என்பதை இச் சொல் மூலம் நமக்கு ஒரு செய்தியை விட்டுச் செல்காறார் என்பது உறுதி. பின்னர், கொலைக்களக் காதையில் அரசன் தேவியின் ஊடலுக்கு இதுவே காரணமாயிருப்பது அறியப்படும். இவர்கள் வாழ்ந்த வீதி பெருந்தனம் பெறுவார் வீதி என்று அழைக்கப்பட்டது என்று வேங்கடசாமியார் குறிப்பிடுகிறார்.

8.     நுழைவாயிலில் பரத்தையர் வாழும் தெருதான் முதலில் இருந்ததா அல்லது கோவலன்தான் அத் தெருக்களைத் தேடி முதலில் பார்த்தானா என்பது தெரியவில்லை. கோயிலை நடுவாகக் கொண்ட தமிழகத்து நகரங்களில் கோயில்களின் மதிலை அடுத்து நாற்புறமும் இருந்த மாடத் தெருக்கள் எனப்படும் ஒற்றைவாடைத் தெருக்களில் 20ம் நூற்றாண்டு வரை பரத்தையரே வாழ்ந்தனர். ஆனால் மதுரையில் அரசன் இருந்ததால் மன்னவன் கோயில் எனப்படும் மனையரணாகிய அரண்மனையைச் சுற்றி அரசனின் பாதுகாவற்படையினரின் பல அடுக்குகள் இருக்குமாதலால் பரத்தையர் நகரின் நுழைவாயில் பகுதியிலோ அரமண்மனையை அடுத்தோ இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே அவன் அதனைத் தேடித்தான் சென்றிருக்க வேண்டும். நான் காஞ்சியில் பணியாற்றிய போது அங்கு எமது துறையான பொதுப்பணித் துறையில் இன்னொரு பணியில் ஈடுபட்டிருந்த திருமணமாகாத நண்பருக்கு பரத்தையர் இன்பத்தில் பெரு நாட்டம். அதைப் பற்றிக் கூறிய அவர், அவ் வூருக்கு முதன்முதலில் பணியில் சேர வந்து பேருந்திலிருந்து இறங்கிய போது, இத்தகையவர்களை பார்வையிலேயே இனம்காணும் இயல்புடைய தரகனான ஒரு மிதி நரவண்டி(சைக்கிள் ரிக்சா) ஓட்டி பரத்தையர் வீட்டுக்குப் போக வேண்டுமா என்று கேட்க அவர் அங்கு சென்று திரும்பித்தான் பணியில் சேர்ந்தாராம். அது போல் கோவலனுக்கு புகார் நகரப் பழக்கத்தைக் கைவிட முடியாமல் வேட்கையைத் தணித்துக்கொள்ள அத் தெருக்களில் நடந்தான் போலும்.

9.     இப்போது கோவலன் பல்வேறு தொழில்கள் நடைபெறும் அங்காடி வீதியினுள் நுழைகிறான்.
        தொழில்களின் ஒரு பட்டியல்:
        1.     கூடார வண்டி,                          9.     வெண் சாமரம்,                     17.  மாலையாகச் செய்தவை,
        2.     ஈருருளைச் சக்கடா வண்டி,     10.  பன்றிமுகக் கேடயம்,            18.  ஈர்வாள்[1] முதலிய கருவிகள்,
        3.     தேர் மொட்டு,                           11.  சிறு கேடயம்,                         19.  தந்தத்தைக் கடைந்து செய்தவை,
        4.     முழு உடல் கவசம்,                    12.  காடெழுதிய கேடயம்,          20.  வாசப் புகை மூலப் பொருள்கள்,
        5.     யானைத் துறட்டி,                     13.  குத்துக் கோல்கள்,                 21.  சாந்து மூலப் பொருள்கள்,
        6.     தோல் கைக் கவசம்,                  14.  செம்பில் செய்தவை,             22.  பூவாலான மாலை முதலியன,
        7.     அரைப்பட்டிகை,                       15.  வெண்கலத்தில் செய்தவை, 23.  இன்னும் கணக்கிலடங்காதவை.
        8.     வளைதடி,                                   16.  கயிற்றால் செய்தவை,                     
        இவற்றில் காடெழுதிய கேடயம் என்பது காடுகளுக்குள் மறைந்திருந்து எதிரிகளைத் தாக்கும் போது பயன்படும் ஒரு கேடயமாக இருக்குமோ?                                                   
       
10. ஒன்பான்(நவ)மணிகள்:                                
        . வைரம்:
            . வயிரங்களில் உள்ள குற்றங்கள் 12:
                1. களங்கம்,                                                5.     துளைகரி,                       9.     கோடிகளில்லாமை,
                2. கீற்று,                                                     6.     விந்து,                             10.  முரிதல்,
                3. சப்படி,                                                    7.     காகபாதம்,                     11.  தாரை,
                4. பிளத்தல்,                                                8.     இருத்து,                         12.  மழுங்கல்.
            . இவற்றில் அணிவோர்க்கு மிகுந்த கேடு தரும் நான்கின் தீய விளைவுகளின் பட்டியல்:
                1. காகபாதம்………………..திறமை குறையும்,                        3. விந்து…………….மன உறுத்தல்,          
                2. களங்கம்………………….உறவினருடன் முரண்பாடு         4. கீற்று……………..மரணம்.
            . வைரத்தின் குணங்கள்:
                1. பலகை எட்டு,                                        2. கோணம் ஆறு,                  3. தாரை,
                4. சுத்தி,                                                      5. தராசம்.
        . மரகதம்:
         .    மரகதத்ததின் வகைகள்:
                1. காடம், அது 2 சாதியாகும்:
                    1. சகுணம், அதன் வகைகளும் தன்மைகளும்:
                        1. காடம்            -       புல்லைப் போன்ற பச்சை நிறம்,    
                        2. உல்லசிதம்    -       மென்மை
                        3. பேசலம்          -       செந்நெல் நிறம்,
                        4. பித்தகம்         -       பச்சைக் கிளியின் நிறம்,
                        5. முத்தம்            -       துளசியின் நிறம்,
                        6. பிதுகம்           -       தாமரை இலையின் நிறம்.
                    2. சதோடம், அதன் வகைகளும் தன்மைகளும்:
                        1. தோடலோசஞ்சிதம்     -       எலுமிச்சை இலையின் திறம்,
                        2. துட்டம்                          -       அலரி(அரளி) இலையின் நிறம், கருங்குவளை நிறம்,
                        3. தோட மூர்ச்சிதம்          -       புல்லின் நிறம்,
                        4. தோடலேசம்                 -       தாமரை இலையின நிறம்,
                        5. மந்ததோடம்                 -       கலாப மயிலின் நிறம்.                 
         . மரகதத்தின் குற்றங்கள்:
            1. கீற்று,                         3. வெள்ளை,              5. மணல்,                       7. தராசம்,
                2. கருகல்,                       4. கல்,                         6. பொரிவு,                    8. இறுகுதல்.
            . அணிவோர்க்குக் கேடு தருவன:
                1. கீற்று,                                                     2. கருகல்,                               3. தராசம்.
            . குணங்கள்:
                1. நெய்த்தல்கிளி,                          4. பொன்மை,                    7. பொன்வண்டின் வயிறொத்தல்,
                2. மயிற்கழுத் தொத்தல்,              5. பசுத்தல்,                         8. தெளிதல்.
                3. பைம் பயிரிற் பசத்தல்,             6. பத்தி பாய்தல்,
        . மாணிக்கம்:
         சாதி:   1.     பதுமம்,                           3.     விந்தம்,                           4.     படிதம்.
                        2.     நீலம்,
                1. பதுமம்பதுமராகம், சதுரங்கம் எனவும் படும். இவை:
                    1.     தாமரை,                             5.     கோபம்,                          8.     விளக்கு,                                 
                    2.     கழுநீர்,                               6.     மின்மினி,                       9.     மாதுளைப் பூவிதை
                    3.     சாதகம்,                              7.     கொடுங்கதிர்,                10.  வன்னி.
                    4.     புட்கண்,                                        
                2. நீலம்நீலகந்தி, சௌகந்தி எனவும் படும்.
                    1.     கோகிலக்கண்,                  3.     கொய்ம்மலர்ப் பலாசம்,           5.     மணிமலர்க் குவளை,               
                    2.     செம்பஞ்சு,                         4.     அசோக பல்லவம்,                    6.     இலவத்தலர்கள்.
                3. விந்தம்குருவிந்தம், இரத்தவிந்து எனவும் படும்.
                    1.     திலகம்,                               4.     கவிர்மலர்,                                 7.     சிந்துரம்,
                    2.     உலோத்திரம்,                   5.     குன்றி,                                        8.     குக்கிற்கண்.
                    3.     செம்பருத்திப்பூ,                 6.     முயலுதிரம்,
                4. படிதம்கோவாங்கு எனப்படும்.
                    1.     கோவை,                            3.     குராமலர்,                                  4.     மஞ்சள்
                    2.     செங்கல்.           
. புருடராகம்: இது பற்றிய பூச வுருவின் பொலந்தெளித் தனையவும் என்ற வரிக்குபூச மீனின் உருவினை உடைய பொன்னைக் களங்கமறத்தேய்த்தா லொத்த புருடராகம்எனப் பொருளுரைத்துள்ள வெங்கடசாமியார், ‘பூனைக் கண் போன்று பொன்னைத் தேய்த்தாற் போன்றவை புருடராகம் என்பர் அரும்பத வுரையாசிரியர்என்ற குறிப்பையும் கொடுத்துள்ளார். இணையத்தில் விக்கிபீடியா கலைக்களஞ்சியம், ‘இவை வெள்ளை, வெளிர் பச்சை, நீலம், தங்க நிறங்களிலும், அரிதாக வெளிர் சிவப்பு நிறத்திலும் கிடைப்பதாகக் கூறுகிறது. இவற்றில் பூனைக்கண் வெளிர் பச்சையையும் பொன்னைத் தேய்த்தாற் போன்றவை என்பது தங்க நிறமென்றும் கூறுவதுடன் பொருந்தி வருகிறது. சிலப்பதிகாரக் காலத்தில் இவ் விரண்டு வகைகள்தாம் இங்கு புழக்கத்தில் இருந்தன போலும்.
.  வைடூரியம்: தீதறு கதிரொளித் தெண்மட் டுருவவும் என்பதற்குகுற்றமற்ற பரிதியி னொளியும் தேன் துளியின் நிறமும் உடையது என உரை கூறுகிறார் வேங்கடசாமியார். ஆங்கிலத்தில் விக்கிபீடியா cats eye, lapiz lazli என்ற சொற்களைத் தந்து தருகிறது. ஆங்கில விக்கிபீடியாவினுள் நுழைந்தால் முதலதற்கு இளம் பச்சைக் கல்லையும் இரண்டாவதற்கு அடர் நீலக் கல்லையும் காட்டுகிறது. வைடூரியத்திக்கான தமிழ்ப் பதிவு அழிக்கப்பட்டதான குறிப்பு உள்ளது. கோமேதகம் என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ளது மேலேயுள்ள இளங்கோவடிகளின் விளக்கத்துக்குப் பொருந்தி வருகிறது. காட்டப்பட்டுள்ள படிகப் படத்தில் நடுநடுவே வெண்பகுதிகள் உள்ளன. வைடூரியத்தைக் கோமேதகம் என்று அரும்பத வுரையாசிரியர் குறிப்பிடுவதாக வேங்கடசாமியார் கூறுகிறார். மூங்கில் இலையும் மயிலின் கழுத்தும் பூனையின் கண்ணுமாகிய இவற்றின் நிறத்தை உடையதாய்வலத்தினும் இடத்தினும் மேலும் கீழும் வீசுகின்ற ஒளியை உடையது இவை முறையே அந்தணர் முதலாக நான்கு வருணத்தார்க்கும் உரிய..வாம் என்று வரத்தமானன் பதிப்பகம் வெளியிட்டுள்ள, பரஞ்சோதியாரின் திருவிளையாடற் புராணத்தின் மாணிக்கம் விற்ற படலத்தின் உரை கூறுகிறது.
   . நீலம்:
      . நீலத்தின் வகைகள்:
      1. இந்திர நீலம்,
      2. மா நீலம், அதன் வகைகள்:
         1. வெள்ளை,
         2. பச்சை,
         3. சிவப்பு,
         4. கருமை.
      என்ற செய்யுளை வேங்கடசாமியார் தந்து சாதிகள் நான்கும் குணம் பதினொன்றும், குறை எட்டுமெனக் கொள்க என்று நிறத்தைக் குறிப்பிடும் வண்ணம் என்ற சொல்லுக்குச் சாதி என்ற பொருளையும் கொண்டுள்ளார்.
.  கோமேதகம்: மஞ்சளும் சிவப்பும் கலந்த உருவை உடையது கோமேதகம் என்ற வேங்கடசாமியார் விளக்கத்துக்கு மேல் செய்தி கிடைக்கவில்லை. வைடூரியத்தைக் கோமேதகம் என்றும் தலைமாறாகவும் அரும்பத உரையாசிரியர் பொருள் கூறியுள்ளதையும் காட்டியுள்ளார். நெய்யின் துளியும் தேனின் துளியும் ஆமாவின்(பசுவின்) மோளும் ஆகியவற்றை ஒத்துச சிவந்த உயர்ந்த பசிய பொன்னிறத்தைப் பெற்றது என்கிறது மேலே குறிப்பிட்ட  திருவிளையாடற் புராணத்தின் உரை. மாட்டு மோள் போல் இருப்பதால்தான் கோமேதகம் எனப்படுகிறதோ! மேதை என்ற சொல்லுக்கு இறைச்சி, கள், தோல், நரம்பு, நிணம் என்ற பொருள்களும் உள்ளன. கழகத் தமிழ் அகராதி பார்க்க.
. முத்து:
         . முத்தின் பிறப்பிடமும் நிறமும்:
            1. சிப்பியிலும் சங்கிலும தோன்றுபவை          -     வெண்மை,
            2. மேகம் ஈன்ற முத்து                                   -     சூரியன் போன்ற செந்நிறம்,
            3. மூங்கில் ஈன்ற முத்து                                 -     மழைக்கட்டி(ஆலங்கட்டி?) போன்றது,
            4. பாம்பு ஈன்ற முத்து                                    -     நீல நிறம்,
            5. பன்றிக கொம்பு முத்து                               -     குருதி நிறம்,
            6. வெண் நெல்லின் முத்து                             -     பசுமை,
            7. மீன் தலையின் முத்து                                -     பாதிரி மலர் போன்ற நிறம்
            8. யானைக் கொம்பு, கரும்பு ஆகியவற்றில்
                  தோன்றுபவை                                       -     பொன்னிறம்,
         . தெய்வங்களோடுள்ள தொடர்பு:
            1. வெண்மை                                               -     வருணனுக்கு உரியவை,
            2. சூரியன் போன்ற செந்நிறம்                        -     சூரியன்,
            3. நீல நிறமுடையவை                                  -     திருமால்,
            4. குருதி போன்ற சிவந்த நிறம்                       -     வாயுவுக்கு,
            5. பசுமை நிறம்                                            -     எமன்,
            6. பொன் போன்ற நிறம்                                -     இந்திரன்.
      முத்தைப் பற்றி மேலே தரப்பட்டுள்ளவை முன் குறிப்பிட்டுள்ள திருவிளையாடற் புராணத்தின் உரையில் உள்ளவை.
     
முத்தைப் பற்றிக் கூறுகையில் அடிகளார் சந்திர குருவே அங்கா ரகனென வந்த நீர்மைய வட்டத் தொகுதியும் என்று குறிப்பிட்டுள்ளதற்கு விளக்கம் கூறவந்த வேங்கடசாமியார், “சந்திரகுரு வெள்ளி, வியாழன் என்றல் புராணத்துக்கொத்ததுஎன்று கூறுகிறார். இதைக் குறிப்பிட்டு சிலப்பதிகாரப் புதையல் புகார்க் காண்டம், நாடுகாண் காதையில்
கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
என்ற வரிகளை விளக்கும் போது கூறியுள்ளோம்.

      முத்து உருவாகும் இடங்களாக 8 இடங்களைக் குறிப்பிடுகிறது மேற்குறிப்பிட்டுள்ள திருவிளையாடற் புராணம். அவையன்றி கோழி எலும்பினுள் முத்தைக் கண்டது என் பட்டறிவு. 1991இல் சென்னையில் ஒரு புலாலுணவகத்தில் கோழிப் புலவுச்சோறு(பிரியாணி) உண்டேன். இறைச்சிக் கோழியின் மென்மையான எலும்பைக் கடித்த போது கல் கடிபட்டது. எடுத்துத் தட்டில் வைத்தேன். கோழி எலும்பில் கல் வந்த விதமென்ன என்ற கேள்வி மனதில் தோன்ற கல்லை எடுத்துப் பார்த்தேன். அது நீள் உருண்டையாக மிகு வெளிர் சாம்பல் நிறத்தில் மொச்சைக் கொட்டை அளவில் இருந்தது. தங்க நகைகளில் பொருத்தப்பட்டிருக்கும் பீங்கானைத் தீட்டிய கற்களைத் தவிர வேறெதையும் பார்த்திராத நான் அப்போது நானிருந்த பாளையங்கோட்டையில் எனக்குத் தெரிந்த பொற்கொல்லரிடம் காட்டினேன். முற்றாத முத்து அது என்று உறுதிப்படுத்தினார். கோழி எலும்பிலிருந்து பெற்றேன் என்பதைக் கேட்டு அவரும் வியப்பெய்தினார். பணப்பையினுள் நெடுநாள் வைத்திருந்தேன். பை தையல் பிரிந்து அது எங்கோ விழுந்து காணாமல் போயிற்று. அதை உரிய இடத்தில் வைத்துப் பாதுகாக்காத என் முட்டாள்தனத்தை நினைத்து இன்றும் வருந்துகிறேன். ஆக, கோழி எலும்பும் முத்து தொன்றும் ஒரு களம் என்பது என்னைப் பொறுத்தவரை உறுதி.
      . பவளம்:
       . பவளத்தின் நிறங்கள்:
            1. முள் முருங்கைப பூ,
            2. கிளியின் மூக்கு,
            3. செவ்வரத்தம் பூ,
            4. மொவ்வைக் கனி
         ஆகிவற்றின் நிறங்கள்.
         . பவளத்தின் குற்றங்கள்:
            1. திருகிக் கோணுதல்,
            2. புழு அரித்தல்,
            3. முகம் ஒடிதல்
      ஆகியவை. பவளம் பற்றிய இந்தச் செய்திகளும் மேலே சுட்டியுள்ள திருவிளையாடற் புராண உரையில் உள்ளவை.

      மேலே தரப்பட்டுள்ள ஒன்பான் மணிகளின் விரிவகைப் பட்டியல் எனக்கு முழு மனநிறைவைத் தரவில்லை. வைரம், மரகதம், மாணிக்கம் ஆகியவற்றுக்குப் போல் வகைகள், குற்றங்கள் போன்ற விரிவான செய்திகளைத் திரட்ட முடியவில்லை. வேங்கடசாமியார் சுட்டியுள்ள இன்னுமொரு திருவிளையாடல் புராணமான திருவாலவா யுடையார் திருவிளையாடல் புராணத்தின் மாணிக்கம் விற்ற திருவிளையாடலில் உள்ள விளக்கங்களையும் பார்த்தால் ஏதாவது செய்தி கிடைக்கக் கூடும். வேறு மூலங்கள் உண்டா என்றும் தேடலாம்.

      ஒன்பான் மணிகளைப் பற்றி வலைதளத்திலிருந்து பெறப்பட்ட ஒரு செய்தி
தலை மணிகள் :- வைரம், முத்து, மரகதம், மாணிக்கம்.
இடை மணிகள் :- நீலம், புஷ்பராகம், வைடூரியம்.
கடை மணிகள் :- கோமேதகம், பவளம்.

      ஒன்பான் மணிகளிள் தோற்றம் பற்றி சுருக்கமாக வேங்கடசாமியார் குறிப்பிட்டுள்ள தொன்மக் கதையை மேற்கூறிய திருவிளையாடற் புராணம் விளக்கமாகத் தருகிறது:
     
      வலன் என்னும் அரக்கன் முன்னாளில் மும்மூர்த்திகளில் சிறந்தவராகிய சிவபெருமானுடைய திருவடிகளில் அர்ச்சனை செய்து வந்த திருத்தொண்டால் அப்பெருமான் மகிழ்ந்து, யாது வேண்டும் என்று கேட்டார்.  

      உடனே வலன்தாழ்ந்து நின்று யான் போரில் யாராலும் பிளவுண்டு இறக்காத வரத்தை அருள்க. ஊழ்வினை சூழ்ந்து இறந்தால் என் உடம்பு துறவிகளும் விரும்பும் ஒன்பான் மணிகளாக வேண்டும்என்று வேண்டினான்.

      இவ்வாறு வரம் கேட்க, இறைவன் அங்ஙனமே அருளினான். அப்பொழுதே போரினை செய்யக் கருதி, தேவேந்திரனோடு எதிர்த்துப் போரிட்டான். அத்தேவேந்திரன் நேர் நின்று போர் செய்யும் ஆற்றல் இல்லாமல் புறம் கொடுத்து ஓடினான்.

      இவ்வாறு தோல்வியுற்ற இந்திரன், இறவாத வரம் பெற்றவன் ஆகையால், திரும்பவும் வந்து இவனோடு போரிட்டாகலும் வெல்ல முடியாது. ஆகையால் சூழ்ச்சியால் வென்று எமன் உலகு அனுப்ப வேண்டும் என்று கருதினான்.

      நஞ்சுமிழும் போர்க்கருவிகள் ஏதுமின்றி தேவர்கள் அனைவரும் சூழ்ந்து வர, தேவயானை போல், போர்க்களத்தை அடுத்து அசுரனாகிய சிங்கம் போன்ற வலனைஅழைத்துக் கூறத் தொடங்கினான்.

      வெற்றியையுடையவனே! உன்னுடைய தோள் வலிமையும் வெற்றிப் பெருக்கும் எல்லாத் திசைகளிலும் பரவி விட்டது. அந்தப் புகழ்ச்சியை எண்ணி, உன் உள்ளத்துக்கு விருப்பம் தரும் வரம்அளிப்பேன். நீ விரும்பும் வரம் யாது? அதனைக் கூறுவாய்என்று கூறினான்.

      மணம்மிக்க கற்பக மரத்தையுடைய தேவர் உலகத்தின் தலைவனாகிய இந்திரன் இதனைக் கூறவும் அச் செய்தி அவுணன் காதுகளில் விழுந்தவுடன், அவன் தன் நீண்ட கைகளை ஒன்றோடொன்று மோதும்படி தட்டி இடியோசை கேட்பது என்று சொல்லும்படி பேசத் தொடங்கினான்.

      யாரும் நகைப்படுமாறு நல்லதாகிய இந்த வார்த்தையை கூறினாய். என்னை நீ புறங்கண்ட வெற்றியும் அந்த வெற்றியினால் அடைந்த புகழும் உன்னுடைய பெருமிதம் இன்று என்னோடு நீ செய்த போரில் காணப்பட்டதே. புகழானது எங்கும் சென்று நிலை பெற்றது. இதே போல் உன் வள்ளன்மையும் நிலை பெறும் அல்லவா?

      சிவபெருமான் அருளிய நல்ல வரங்கள் எனக்கு இருக்கவும், அதற்கும் மேலாக நான் உன்னிடம் பெறக் கூடியது ஏதேனும் உண்டோ? என்னிடம் உனக்கு வேண்டியது யாது? அதனை நீ சொல். இப்போதே கொடுக்கிறேன். அப்படி நான் தரவில்லை எனில் பருந்துகள் வீழ்கின்ற இப்போர்க் களத்தில், உன்னைப் போல் தோல்வியுற்ற பழியைப் பெறுவேன்என்று கூறினான்.
   
      அசுரனது இந்த வார்த்தைகளைக் கேட்ட இந்திரன் மகிழ்ந்து,”மேருமலையை வில்லாக வளைத்துக் கொடிய அவுணர்களின் திரிபுரத்தை எரித்துச் சாம்பலாக்கிய சிவபெருமானுடைய வெள்ளி மலையை அடைந்து, அங்கு ஒரு வேள்வியினை நான் செய்வேன். அப்போது தேவர்களுக்கு அவியூட்ட நீ வேள்விப் பசுவாகி வருவாயாகஎன்றான்.

      உடனே, “அக்காலத்தில் தவத்தில் சிறந்த ததீசி முனிவன் முதுகுத் தண்டு ஒன்று மட்டுமே வச்சிரப் படை ஆகுமாறு மனம் விரும்பிக் கொடுத்த கொடையினால் பெற்ற புகழ் உடம்பு ஒன்றேயாகும். பிறரை வெல்லும் வெற்றியினாலும் பிறரால் அழியாத உடல் முழுவதும் நவமணிகள் ஆகுமாறும் என்னைப் போல, அம்முனிவனுக்கு புகழுடம்பு இரண்டு உண்டோ? (அதாவது முனிவருக்குப் புகழ் கொடையால் மட்டுமே! ஆயின் எனக்கு கொடை, வெற்றி இரண்டாலும் புகழ்). 

       நீ எனக்குப் பகைவன் இல்லை. நீயே நண்பன். தேவர்களின் உண்ணும் இயல்பினால், புண்ணியமும் புகழும் எனக்கே உண்டாகும். பசுவின் உருவாகி வருவாய் என்றாய். அவ்வாறே செய்வேன்என்று வலன் கூறினான். எக்காலத்தும் பிறர்க்குக் கொடுப்பதே பெருமை அல்லாமல், யாசித்தல் இழிவு அல்லவா?

      அவ்வாறு பசுவாய் வர உடன்பட்ட அவுணர் தலைவனான வலன்இந்திரனை முன்னே அனுப்பிவிட்டு மதர்த்த கொடுமையான கண்களையுடைய தன் மகனுக்கு அரச உரிமையைத் தந்துவிட்டு, கலைகளுக்கெல்லாம் முதன்மையான வேத நெறியிலே கூறிய முறைப்படி இலக்கணம் அமைந்த பசுவாகித் தேவர்களுக்கு அவியுணவு ஆக்கும் வேள்விச் சாலையின் அருகில் வந்து நின்றான்.

      சொன்ன சொல் தவறாது நடந்து கொள்ளும் மாட்சிமையும் வள்ளல் தன்மையும் உடையோர் உன்னைப் போல் யார் உள்ளார்கள்?” என்று இந்திரன் வியப்புடன் கூறினான். மிகுந்த ஆணவத்தோடு மேரு மலையோடு பகை கொண்ட விந்த மலை போல் நிமிர்ந்து நின்று, “வேள்விக்காக என்னை தூபத் தம்பத்தோடு கட்டுங்கள் என்று சொல்லி அதன் அருகில் நின்றான் வலன்.

      தருப்பைக் கயிற்றால் கட்டி, தானே தான் கொடுத்த வாக்குறுதிக்காக அடங்கி நின்ற ஆண் சிங்கம் போன்ற வலனது வாயைப் பொத்தி, மூச்சு அடங்கத் தேவர்கள் அவனைக் கொன்றனர். இறந்த வள்ளலாகிய வலனும் கற்பக மலர் பொழிய விமானத்தில் ஏறிப் பிரமன் உலகை அடைந்தான்.

      மணிகள் பதித்த முடிகளை அணிந்த மலைகளின் சிகரங்களை எல்லாம் அரிந்த இந்திரன், பிணித்து உயிர் போக்கப்பட்ட வள்ளன்மையும் பெருந்தகுதியும் உடைய வலனாகிய பசுவினிட மிருந்து வச்சிரப் படையினால் வேதம் விதித்த வபையினை(வயிற்று நாபிக்குள் வெண்துகில் போன்று புரை மடிப்பு ஆகிய நிணம்) எடுத்து, படர்ந்த வேள்வித் தீயானது சுவை பார்க்க இட்டு, தேவர்களுக்கு உண்பித்துக் குற்றமற்ற வேள்வியைச் செய்து முடித்தான்.

      அந்தப் பசுவினது குருதி மாணிக்கமாம். பற்கள் முத்துக்களாம். மயிர் வைடூரியமாம். எலும்பு வைரமாம். பித்தம் மரகதமாம். நிணம் கோமேதகமாம். தசை பவளமாம். நீண்ட கண்டம் நீலமாம். இளைத்தற்கு ஏதுவாகிய கோழை புருடராகமாம். இவையே நவமணிகள் தோன்றிய முறையாகும்.

      மேலேயுள்ள கதை நவமணி வாணிகனாக வந்த சிவபெருமான் கூறியதாக வருகிறது.

      எந்தெந்த மணிகள் எங்கெங்கே கிடைக்கும் என்று தெளிவாகக் கூறும் மேற்படி திருவிளையாடற் புராணத்தில் இத்தகைய இழிவான ஒரு கதையை ஏன் கூறியிருக்கிறது என்பது புரியவில்லை.

      தம்மைப் பணிவது போல் பாசாங்கு செய்வோரிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுரையா? வாமனனிடம் மாவலியும் இந்திரனிடமும் கண்ணனிடமும் கர்ணனும் போல் ஏமாறக் கூடாது என்பதை அறிவுறுத்தவா? இடையெழு வள்ளல்களில் பெரும்பாலோர் மகாபாரதப் போரில் துரியோதனன் பக்கமிருந்து கண்ணனின் சூழ்ச்சிகளால் கொல்லப்பட்டவர்கள் என்பது கருதத்தக்கது. அல்லது வள்ளன்மையிலும் வலிமையிலும் எவ்வளவு மேம்பட்டவர்களாயிருந்தாலும் எங்கள் தந்திரங்களை உங்களால் எதிர்கொள்ள முடியாது என்ற மிரட்டலா? அமெரிக்கக் கொடும் வல்லரசு தன் நடுவண் ஒற்று முகாமை (சி...) தாங்கள் எங்கெங்கு எந்தெந்தக் கலவரங்களைத் தூண்டினோம், எவரெவரை எப்படி யெப்படிக் கொலை செய்தோம் என்று நூல்கள் மூலம் கூறி முழு உலகையும் மிரட்டுவது போல் நம் ஆட்சியாளர் பூசகர் கூட்டணியின் மிரட்டலா?

      தமிழர்களின், குமரிக் கண்ட வரலாற்றின் ஒரு பகுதியைக் கொண்ட மகாபாரதம் (விரிவுக்கு பெருஞ்சோற்று உதியஞ்சேரல் என்ற எமது கட்டுரையைக் காண்க இந்திய வரலாற்றில் புராணங்கள், இலக்கியங்கள், வானியல், வேங்கை பதிப்பகம், மதுரை, 2004 ) தரும் பகவத் கீதை கூறுவது போல் தனிமனித உறவுகளை விட நாம் ஏற்றுக்கொண்ட குறிக்கோள்கள்தாம் நமக்கு முதன்மையானது என்பதை நம் அடிப்படை அணுகலாகக் கொள்ள வேண்டும். தமிழகத்தின் இன்றைய சூழலில் நாம் திருக்குறளைச் சிறிது காலம் அப்புறம் வைத்துவிட்டு போராட்ட காலங்களில் உறவுகளைப் பற்றிய பகவத் கீதைப் படிப்பினைகளைவருணங்களைப் பற்றிய கருத்துகளைப் புறக்கணித்து கையிலெடுக்க வேண்டும் என்ற தெளிவினை இக் கதை நமக்குத் தருகிறது.

      மாட்டிறைச்சியைப் பற்றிப் பெருங்கூச்சலைப் பார்ப்பனத் தலைமையில் செயற்படுவோர் எழுப்பும் இன்றைய சூழலில் இவர்கள் புனிதமானதாகக் கூறும் ஆமாட்டின் வாயைப் பொத்தி மூச்சுமுட்டவைத்துக் கொன்ற கொடுமையையும் அதனை அறுத்து கொப்புளைச் சுற்றியிருக்கும் கொழுப்பை நெருப்பிலிட்டு வேகவைத்து உண்டதையும் கொஞ்சம் நினைத்துப் பார்ப்பார்களாக. இவற்றில் எது இவர்கள் கூறும் இந்து தர்மம்’? ஆமாட்டை மூச்சுமுட்டவைத்துக் கொன்று கொப்புளைச் சுற்றியிருக்கும் கொழுப்பை மட்டும் எடுத்து தீயில் உருக்கி நெய்யெடுத்து உண்டுவிட்டு இறைச்சியை ஏற்றுமதி செய்வதாக இருக்குமோ?
                
      இந்தக் கதையைப் படித்த பின் நவமணிகளை அணிவதை நினைத்தாலே அருவருப்பாக இருக்கிறது.
ஆங்கிலத்தில் கீழ்க்காணும் பட்டியலிலுள்ள 9 மணி வகைகளும் சிறப்பானவையாகக் கூறப்பட்டுள்ளன.
மொத்தத்தில் கீழ்க்காணும் 130 மணிகளின் வகைகளாகக் கூறப்பட்டுள்ளன.
There are over 130 types of minerals that have been used as gemstones. These include:
A-B


C - F


G – L
M - Q


R - Z


         இவற்றில் நம் மரபில் ஒன்பான் மணிகளின் பல்வேறு வகைகளில் எவையெவை பொருந்திவருகின்றன என்பதை இத்தொழிலில் பட்டறிவுடையோர் இனம் கண்டு பட்டியலிடவேண்டுமென்பது நம் அவா.
11.  சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் என்ற நான்கு வகை பொன் வணிகர்களும் வாடிக்கையாளர்களுக்குக் குழப்பம் வராத வகையில் தங்கள் கடைகளில் அறிவிப்புக் கொடிகளைப் பறக்க விட்டிருந்தனர் என்கிறார் அடிகள். இந்த ஒரு நடைமுறை வாணிகர்கள் தமக்குள்ளேயே வகுத்துக்கொண்டதா அல்லது ஆட்சியாளர்கள் முறைப்படுத்தியதா என்ற கேள்விக்கு, அரசனும் அவனை அண்டியிருப்பவர்களும் செய்தவையாக நாம் பின்னால் காண இருப்பவை இந்த ஏற்பாடுகள் வாணிகர்கள் தாமாகவே உருவாக்கிக் கொண்டவை என்ற விடையைத் தரும். ஒரு வேளை மதுரை நகர வாணிகர்களின் ஒருமையான இந்த நாணயம் பற்றி அறிந்துதான் அண்டை நாடுகளிலிருந்து நலிந்த வாணிகர்கள் மதுரைக்கு வரவும் இங்குள்ள ஆட்சியாளர்கள் அவர்களைக் கொல்லவுமான கதைகள் பண்டைக் காலங்களில் பதிவாகியிருக்கின்றனவோ என்று தோன்றுகிறது.
                                                                               
ஒன்பான் மணிகளைப் போன்றே தங்கத்தின் நான்கு வகைகளின் தோற்றத்துக்கும் சிவனைத் தொடர்புபடுத்தி அருவருப்பூட்டும் இரண்டு கதைகள் அபிதான சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளன. சிவனின் விந்தை(வீர்யத்தை) காற்று(வாயுவு)ம் நெருப்பு(அக்கனியு)ம் கங்கையில் விட்டதால் பிறந்தது, இதனால் பொன்னுக்கு காங்கேய மெனவும் ஒரு பெயருண்டு என்பது ஒரு கதை. இன்னொன்று சிவபிரான் விந்தை மேனோக்கிய காலத்துச் சிறிது பூமியில் விழ அது நெருப்பை(அக்னியை)ச் சென்றடைந்தது. ஒளியுடன் ஒளி கூடிப் பொன்னாயிற்று. நெருப்பும் நிலவும்(சந்திரனும்) கூடியதே பொன், இது இன்னொரு கதை. இவையன்றி பொன்னின் உண்மையான தன்மைகளைப் பற்றிய செய்திகளையும் அது தருகிறது.

வலைதளத்தில் இறங்கிப் பார்த்தால் ஆங்கிலத்தில் நான்கு நிறங்களைக் கொண்ட பொன்வகைகள் கிடைக்கின்றன. தூய்மையான வடிவில் அது தங்கம் எனப்படும். தகதகப்பதால் தங்கம் என்ற பெயர் வந்தது என்பார் பாவாணர். எளிதில் வளைந்து நெளியும் தன்மை கொண்டது, எனவே பயனுள்ள எந்தப் பண்டமும் செய்யப் பொருத்தமில்லாதது. எனவே ஏதாவது ஒரு பொன்ம(உலோக)த்துடன் கலந்துதான் தங்கம் பயன்படுகிறது. கலப்புத் தங்கத்தின் பெயர்தான் பொன். இரு வகைத் தங்கத்துக்கும் gold என்ற சொல்தான் ஆங்கிலத்தில் உள்ளது.

தங்கத்தின் ஒளிரும் மஞ்சள் நிறம் கொண்டது தூய தங்கம் என்கிறது.

செம்முளரி(ரோரா)ப் பொன்(Rose gold) என்பது இன்னொன்று. இது சிறிது செம்மை நிறம் கலந்ததாக இருக்கும் என்கிறது மேற்படி வலைப்பதிவு. செம்புச் சேர்மானத்தால் இவ் வண்ணம் அதற்குக் கிடைக்கிறது என்கிறது. நம்மிடையில் செம்பைக் கலந்துதான் தங்கத்தைப் பொன்னாக்கும் வழக்கம் உள்ளது. அதில் சிவப்பு நிறக் கலப்பு இருப்பதை இதுவரைக் கவனித்ததில்லை. ஆடகம் என்ற சொல்லுக்கு துவரை என்ற ஒரு பொருள் உள்ளது. துவர் என்ற சொல்லுக்கு சிவப்பு என்ற பொருளும் உள்ளது. துவரை என்ற சொல்லுக்கு செம்பு என்று ஒரு பொருளிருப்பதாகப் பாவாணர் கூறியிருக்கிறார். துவாரகை என்பது செம்பு என்பதன் அடிப்படையாக வந்தது என்ற அவரது முடிவுக்குத் துணையாக இதைக் கூறியள்ளார். அந்த வகையிலும் சிவப்பு என்ற பொருள் இருப்பதை வைத்தும் ஆடகப் பொன் என்பதைச் செம்பு கலந்த தங்கம் என்று முடிவு கட்டலாம்.

அடுத்து வருவது வெள்ளைப் பொன்(white gold). இது ஏறக்குறைய வெள்ளியின் நிறமுடைய தங்கமாக வெளிறலாக இருக்கும் என்கிறது. நிக்கலைக் கலப்பதால் தங்கம் இந்நிறம் பெறுகிறது என்கிறது அது. சாதரூபம் என்பது இதுவாகுமோ? சாதம், அதாவது சோற்றின் நிறம் வெண்மைதானே!

அடுத்து வருவது பச்சைப் பொன், அதாவது பசும்பொன். இது தங்கத்துடன் செம்பையும் வெள்ளியையும் கலப்பதால் பெறப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இதுதான் கிளிச்சிறை -  கிளியின் சிறகு எனப்படுவது, கிளியின் சிறகு பச்சைதானே?

இறுதியான நான்காவது வகை நீலப் பொன். இது இரும்பைக் கலப்பதால் கிடைப்பது. இதுதான் சாம்பூநதமோ? சம்பு என்பது நாவல் மரமாகும். நாவல் பழத்தின் நிறம் கறுப்பை ஒக்கும் மிக மிக அடர் நீல நிறமென்று சொல்ல்லாமா?[2]

இவை சாதகும்ப மென்னும் சாதரூபம், சதகும்பமென்கிற பர்வத்தத்தில் பிறத்தலாலும், கிளிச்சிறை சற்றுப் பசுமை நிறமுடைமையாலும் ஆடகம் மிக்க ஒளி கொண்டிருத்தலாலும் சாம்பூநதம் என்பது மேருவிற்கருகில் நாவற்பழ ரசத்திலுண்டான நதியிற் பிறத்தலானும் நால்வகை ஆயின என்கிறது அபிமான சிந்தாமணி. தொழில் வல்லாரை இழிவானவர்களாக ஒதுக்கும் தமிழ் பாரதப் பண்பாட்டின் காவலர்களான புராணிகர்கள் தங்கள் கற்பனை போனபடி பாலியல் கற்பனைகளையும் கலந்து எழுதி வைத்த இத்தகைய புளுகு மூட்டைகளை விட்டால் உண்மையான செய்திகள் எதுவும் எழுத்து வடிவில் கிடைப்பது நம் பண்பாட்டில் அரிதாக இருக்கிறது. மேலே வலைதளத்திலிருந்து இறக்கிய செய்திகள் தமிழகத்திலுள்ள சிறீ இலக்குமி நகையாளர்களால்(Sri Lakshmi Jewellers) தங்கள் வலைதள வாணிகத்துக்காக 2009இல் வெளியிட்ட ஒன்றாகும். ஆக, இது தமிழக பொற்கொல்லர்களால் பேணிவரப்பட்ட தொழில்நுட்பச் செய்தியாகத்தான் இருக்க முடியும். தமிழகத்தில், அண்மைக் காலமாக பொன் நகைகளில் தங்கத்துக்கு வலுவூட்ட செம்பும் பற்றவைக்க கியாட்மியம் எனும் பொன்மம் பயனுக்கு வரும் வரை நாமறிய செம்பு வெள்ளிக் கலவைதான் பயன்பட்டது.

எனக்கு 10 அல்லது 12 அகவை இருக்கும் போது என் தாயாருக்கு நகை செய்ய வேண்டுமென்று ஒரு பொற்கொல்லரை ஏற்பாடு செய்தார்கள். பக்கத்திலுள்ள பெருங்குளம் என்ற ஊரிலிருந்து ஓர் ஏழைப் பொற்கொல்லர் வந்தார். அவர்கள் தங்கத்தைத் திருடி விடுவார்கள் என்ற எண்ணத்தில் மிகவும் தயக்கத்துடன்தான் அக் காலத்தில் பொற்கொல்லர்களைத் தேர்வு செய்வார்கள். அதனால் அவர் எங்கள் வீட்டுக்கு வந்துதான் வேலை செய்தார். நான் அவர் பக்கத்தில் இருந்து அவர் வேலை செய்வதைப் பார்த்துக்கொண்டே கேள்விளாகக் கேட்டுத் துளைத்து எடுத்துவிடுவேன். அவர் விரட்டினாலும் நகர மாட்டேன். அந்தக் காலத்து வகை நகைகள் இப்போது இல்லை என்பதால் நான் கண்டவற்றைப் பதிவது நல்லது என்ற எண்ணத்தில் இவற்றைப் பதிகிறேன்.

குமரி மாவட்ட நாடார்களிடையில் தாலி கட்டுவதைக் குறிப்பிட பொன்பூட்டுதல் என்றொரு சொல்லும் வழக்கில் உள்ளது. மணமகனின் உடன் பிறந்தாள் அல்லது உடன்பிறந்தாள் முறையுடைய பெண்தான் தாலிகட்டும் நடைமுறையில் உதவுவாள். அவளுக்குப் பொன்பூட்டுக்காரி என்ற சொல் வழக்கிலிருக்கிறது. அது பொய்ம்பூட்டுக்காரி என்று மருவி வழங்குகிறது. அதாவது தாலி கோர்த்த தொடரி(சங்கிலி)யின் இரு முனைகளிலுமுள்ள கொளுவிகளை ஒன்றோடொன்று இணைப்பதுதான் பொன் பூட்டுவது. இங்கு தாலி என்பது ஒற்றை உருப்படியல்ல.(நகையை உருப்படி எனும் வழக்கு குமரி மாவட்டத்தில் நிலவுகிறது.) தாலியை நடுவில் வைத்து இரு புறங்கிலும் பக்கத்துக்கு 10, 13 என்று உருப்படிகளை தொடரியில் கோர்த்து பூட்டுவதுதான் வழக்கம். தாலியையும் சேர்த்து 21, 27 என்ற எண்ணிக்கையில் உருப்படிகள் தேறும். உருப்படிகளைக் கோர்க்கும் தொடரி பெரும்பாலும் வெள்ளி இழைகளைப் பின்னிச் செய்யப்பட்டதாக இருக்கும். ஏழைகள் நூல் கயிற்றைப் பயன்படுத்துவர். அதில் மூன்று முடிச்சுகள் இடப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை[3].

தாலி தவிர்த்த இந்த 20 அல்லது 26 உருப்படிகள் பன்னீர்ச் செம்பு, மாங்காய், பூசணிக்காய் எனப் பல்வேறு வடிவங்களில் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் இடையில் 8 பட்டைகள் கொண்ட மணி எனப்படும் ஒவ்வோர் உருப்படி இருக்கும். ஊர்ப்புறங்களில் குழந்தைகள் கயிற்றில் கோர்த்து கழுத்தில் அணிந்திருக்கும் சிறு நகைகளின் இருபுறங்களில் இத்தகைய மணிகளை இப்போதும் பார்க்கலாம். இந்த மணிகளின் நடுவில் ஒரு சிறு செப்புக்குழாயைப் பொருத்தியிருப்பார்கள்.  மாங்காய் போன்ற பெரிய உருப்படிகளின் மீது ஒரு பொன் வளையம் பொருத்தியிருப்பார்கள். இவற்றின் ஊடேதான் கோர்க்கும் தொடரி அல்லது கயிறு செல்ல வேண்டும்.
உருப்படி, மணி ஆகியவற்றைப் பொன் தகட்டில் செய்ய வேண்டும். அதற்கென்று அச்சுகள் உண்டு. இந்த அச்சுகள் இரும்பால் செய்யப்பட்டவை. இந்த அச்சுகளைப் பழுக்கக் காய்ச்சி எருமைக் கொம்பில் அழுத்தி இந்த அச்சுக்கு இணையான ஒரு குழிவை உருவாக்குவார்கள். இப்பொழுது இந்தப் பள்ளத்தில் தங்கத் தகட்டை வைத்து அதன் மேல் அச்சை வைத்து சுத்தியலால் அடித்தால் உருப்படியின் பாதி கிடைத்துவிடும். அவ்வாறு இரண்டு செய்து ஒவ்வொன்றிலுமுள்ள பிசிறுகளை அதற்கென்று இருக்கும் கத்திரிக்கோலால் வெட்டி இரண்டையும் இணைத்தால் உருப்படி கிடைத்துவிடும். இப்போது இந்த இரண்டு பாதிகளையும் பற்ற வைத்து இணைக்க வேண்டும். இதற்காக செம்பையும் வெள்ளியையும் சேர்த்து உருக்கி அதை அடித்து மெல்லிய தகடாக்கி சிறிய துணுக்குகளாக நறுக்கிக் கொள்வார்கள். குன்றிமணியின் தோலை அகற்றி கூழ்போல் தேய்த்தெடுத்து அதனுடன் கட்டிச்சன்னாறு என்று நினைக்கிறேன், பெயர் சரியாக நினைவில்லை, ஒரு காரத்தைச் சேர்த்து பட்டறை மீது வைத்து சுத்தியலால் நன்றாகத் தேய்த்துக் குழப்புவார்கள். இதுதான் பசை. இதனுடன் வெட்டிய செம்பு, வெள்ளிக் கலவைத் துணுக்குகளைக் கலந்து ஒரு கைப் பெருவிரலின் பின்புறத்தில் வைத்துக்கொள்வார்கள். இப்போது ஒட்ட வேண்டியவற்றை இணைத்துப் பிடித்துக்கொண்டு படத்தில் காட்டியுள்ள இடுக்கியால் அந்தத் துணுக்குகளை எடுத்து இணப்பின் நெடுகிலும் ஒட்டி உலரவிடுவர். உலர்ந்த பின் அகல் விளக்கை ஏற்றி[4] அதன் சுடரினுள் அதற்கென்று உள்ள, நுனிப் பகுதியில் வளைந்து திரும்பும் முனையையுடைய குழாயின் முனைப்பகுதியை வைத்து மறுமுனையை வாயில் வைத்து ஊதுவார்கள். விளக்கின் மஞ்சள் ஒளி உண்மையில் எண்ணெய் சூடாகி கரியாகச் சிதைய அதில் தீப்பற்றி எரியும் போது எரியாத கரித்துகள்கள் பழுத்து செந்நிறம் கொடுப்பதால் வெளிப்படுவதே. எரிந்த கரித்துகள்களிலிருந்து வெளிப்படுவதே சுடரின் அடிப்பாகத்திலுள்ள நீலப் பகுதி. இதுவே சுடரிலுள்ள மிகு வெப்பப் பகுதி.[5] சுடரைச் சுற்றியுள்ள வளி மண்டவலத்திலிருந்து கிடைக்கத்தக்க பிராண வாயு எனப்படும் உயிர்வளியில்(தீயகம் என்பது நான் உயர்நிலைப் பள்ளியில் படித்த போது திருவிதாங்கூர் அரசு பாடத்திட்டத்தில் இருந்த சொல்) எரிந்த இந்தப் பகுதி போக எஞ்சிய பகுதி நமக்கு வெளிச்சத்தைத் தந்துவிட்டு மேலே புகையாகச் சென்றுவிடுகிறது.   
   

பழுத்த அந்தக் கரிப்புகையினுள் வாய் வைத்து ஊதும் காற்றிலுள்ள உயிர்வளி செல்லும் போது அது கரித்துகள்களை எரித்து நீலச் சுடராக்குகிறது. அந்த வெப்பத்தில் தங்கத்தை விடத் தாழ்ந்த உருகுநிலையுடைய வெள்ளி செம்புக் கலவைத் துணுக்குகள் உருகி இரு பக்கமும் இருக்கும் பொன்தகடுகளை இணைக்கின்றன. இந்த முழுச் செயல்முறையையும் பொடி வைத்து ஊதுதல் என்பர். பின்னர் முழு வடிவம் பெற்ற தகட்டாலான உருப்படியில் துணுக்குகளின் துருத்திக்கொண்டி- ருக்கும் பகுதிகளை அரம் கொண்டு தேய்த்து அகற்றுவார்கள். அப்போது விழும் கலவைப் பொன்மத் தூளை அடியில் தாள் போன்ற ஏதாவதொன்றை வைத்து அதில் திரட்டி மெழுகால் ஒற்றி எடுத்து பின்னர் மெழுகை சிரட்டைக் கரி மீது உலையில் வைத்து ஊதினால் மெழுகு எரிந்துவிட பொன்மக்கலவை கிடைக்கும். இவ்வாறு பற்றவைப்பு இன்றி உள்ள பொன் பகுதிகளைத் தேய்க்கும் போது விழும் தூளைச் சேர்த்தெடுத்து இதரம் எனும் பாதரசத்தை ஊற்றினால் அதில் தூள் கலந்துவிடும். அந்தக் கலவையைத் தீயில் வைத்துச் சூடாக்க இதரம் ஆவியாகிவிட பொன் கிடைக்கும்.

தங்கத் தகட்டால் பொள்ளலான இந்த உருப்படிகளில் மெழுகை நிரப்புவர். இதற்காக வச்சிரம் எனும் மெழுகு வகையை தீயில் காயவைத்து நூல் போன்று இழுத்து ஒடித்து வைத்துக்கொள்வர். உருப்படியில் சிறு ஓட்டையிட்டு நெருப்பில் வைத்து இந்த மெழுகுக் கம்பிகளை இத் துளையினுள் நுழைப்பார்கள். அது உருகி கொஞ்சம் கொஞ்சமாக உருப்படியை நிரப்பி வெளியே துறுமத் தொடங்கியதும் நிறுத்தி உருப்படியை வெளியிலெடுத்து ஆறிய பின் வெளியே மெழுகு ஏதாவதிருந்தால் சுரண்டி எடுத்துவிடுவார்கள். இந்த ஓட்டையை அடைக்கமாட்டார்கள். அணிந்த பின் பொதுப்பார்வைக்குக் கண்ணுக்குத் தெரியாத இடத்தில் இருக்குமாறு இந்த ஓட்டை போடப்படும். வடிகாதில் அணியப்படும் பாம்படம் எனப்படும் பாம்பு படம், தண்டட்டி எனப்படும் தண்டொற்றி போன்ற உருப்படிகள் இப்படி மெழுகு அடைக்கப்பட்டவையே. முடிச்சு எனப்படும் வடிகாதணி மட்டும் மெழுகு இன்றி நூண்ணிய பொன் கம்பியால் பின்னப்பட்டிருக்கும்.

இவ்வாறு பொற்கொல்லரை வீட்டில் வைத்து நகை செய்ய வைப்பது தங்கத்தில் கலப்படம் செய்யாமல் கண்காணிக்கத்தான். அவர்களைப் பற்றிய மக்களின் கணிப்பு அன்று அப்படித்தான் இருந்தது. ஒரு 25 ஆண்டுகளுக்கு முன்பு கூட கடையில் வாங்கிவந்த விலைச் சீட்டை வழியில் ஓரிடத்தில் அமர்ந்து திருத்திய இருவரைக் கண்டிருக்கிறேன். அவர்களுக்கு அந் நாட்களில் வழங்கிய செய்கூலி குறைவாக இருந்ததும் காரணமாக இருக்கலாம். தொழில் போட்டியில் அவர்களே செய்கூலியைக் குறைத்து இந்த உத்தியைக் கையாண்டிருக்கலாம். பொதுவாக சாதியடிப்படையில் தொழிலில் நெடுநாள் புழங்குவோர் தொழிலில் தந்திர உத்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது இயல்பு என்று தோன்றுகிறது. குயவர்களாகிய குலாலர்கள் நடத்தும் செங்கல் சூளைகளில் இதை நான் பாத்திருக்கிறேன். புதிதாக அத் துறையில் நுழைந்திருக்கும் நாடார்களும் பள்ளர்களும் தொழிலில் குலாலர்களை விட நாணயத்துடன் இருக்கிறார்கள்.

இன்று சொந்தமாகத் தொழில் செய்யும் பொற்கொல்லர்கள் அருகிவிட்டனர். பெரும்பாலும் மொத்தமாக வேலைகளை எடுத்துக்கொண்டு கூலிக்கு பொற்கொல்லர்களை வைத்து நகைசெய்து நகைக்கடைகளுக்கு வரும் ஆணைகளுக்கு மட்டுமல்ல கடைகளின் விற்பனைக்கும் மார்வாரிகள் நகை செய்து கொடுக்கும் வழக்கம்தான் நிலவுகிறது. தங்கம் வாங்கிக் கொடுத்து விளக்கப்பட்டியலில்(கியாட்டலாகு) காட்டப்பட்டிருக்கும் உருப்படிகளுக்கு ஆணை கொடுத்தால் நமக்குக் கிடைப்பது மிகப் பெரும்பாலும் வேறொன்றாகத்தான் இருக்கும். எனவே கடைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பவற்றில் ஒன்றைத் தேர்வதுதான் வாடிக்கையாளர்களின் தலைவிதி.

மேலே விளக்கப்பட்டிருக்கும் பழைய முறையில் நானறிந்த வரை சேதாரம் என்று எதுவும் கழிக்கப்படவில்லை. ஆனால் பற்றவைப்பதற்கு சேர்க்கப்பட்ட வெள்ளி செம்புக் கலவையும் சேர்த்து பொன்னாகத்தான் எடைபோடப்பட்டது. கல் என்ற பெயரில் பொருத்தப்படும் பட்டை தீட்டப்பட்ட கண்ணாடிகளைக் அகற்றிவிட்டுத்தான் எடை போட்டார்கள். மெழுகடைத்த நகை வைக்கப்பட்டிருக்கும் தராசின் தட்டை நகையுடன் தண்ணீரில் மூழ்கவைத்து எடைபோடுவார்கள்.

அண்மைக் காலம் வரை கல்லையும் சேர்த்து பொன்னாக எடை போட்டு கல்லுக்கும் விலை சேர்த்து சேதாரம் என்று 20 நூற்றுமேனி வரை சேர்த்து கறந்து வந்தார்கள் இன்றைய நகைக் கடைக்காரர்கள். இப்போது அதில் கொஞ்சம் நீக்குப்போக்கு காட்டுகிறார்கள் போலும். ஆனால் புதுப்பணம் வந்தவர்கள் இவை எவற்றையும் கணக்கிலெடுக்காமல் பெரும்பெயர் கொண்ட கடைகளுக்குச் சென்று அவர்கள் தங்களைக் கொள்ளளையடிக்க விடுகின்றனர். இதில் பொற்கொல்லர்களுக்கு எந்த ஆதாயமும் இல்லை என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். வயிற்றுப்பாட்டுக்குக் கூலிவேலை செய்வோராகவே அவர்கள் வாழ்கின்றனர்.

12.                 நிறைக்கோல் துலாத்தர் பறைக்கட் பராரையர்
                     அம்பண வளவையர்
      என்ற வரிகளில் மூன்று வகை அளவுக் கருவிகளைப் பற்றி அடிகள் கூறுகிறார். நிறுத்தலளவைக்கான துலாக்கோல், முகத்தல் அளவுக் கருவியாகிய பறை, தவசங்களை அளக்கும் மரக்கால் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார். இவற்றில் இரண்டாவதாகிய பறையை தமிழகத்தில் நான் கண்டதில்லை. முன்னாள் திருவிதாங்கூரில் தவசங்கள் கூட பறை எனப்படும் அளவுக் கலனால்தான் அளக்கப்பட்டன. இது ஆங்கிலத்திலுள்ள barrel என்ற சொல்லுக்கு இணையானது. தோல் இசைக் கருவியான பறைக்கு இணையாகவும் இவ் வாங்கிலச் சொல் கையாளப்படுகிறது.

13.  பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும் என்ற வரி வெவ்வேறு வருணத்தாரும் தனித்தனித் தெருக்களில் வாழ்ந்து வந்தனர் என்பதைக் காட்டுகிறது. அந்நாள் நகரமைப்பும் இந்த அடிப்படையில்தான் அமைந்திருந்தது என்பதும் தெரிகிறது. கோவலன் கண்ணகி மதுரை வந்தடைந்த போது மதுரையை ஆண்டவன் எனக் கருதப்படும் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் பாடியதாகிய புறநானூறு 183ஆம் பாடலில் வரும்
                                 வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
                                 கீழ்ப்பா லொருவன் கற்பின்
                          மேற்பா லொருவனு மவன்கட் படுமே
      என்ற வரிகள் பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டும் வருண முறை கடைப்பிடிக்கப்பட்டதைத் தெளிவாகக் காட்டுகின்றன.

14.  அந்தி – மூன்று தெருக்கள் கூடும் முச்சந்தி, சதுக்கம் – நாற்சந்தி, கவலை – பல பாதைகள் கூடும் முடுக்கு, மறுகு – குறுந்தெரு என்ற வகைப்பாடு கவனிக்கத் தக்கது

15.  சிறுகொடிகளாலும் பெருங்கொடிகளாலும் கொடும் வெய்யில் தாக்காதவாறு மூடிய மதுரையின் தெருக்கள் என்பது புதிய செய்தியாக உள்ளது. திருநெல்வேலி போன்ற நகரங்களில் சித்திரை, வைகாசி ஆகிய இரு கடுங்கோடை மாதங்களில் கடைத் தெருக்களின் இரு பக்கங்களிலுமுள்ள கடைக்காரர்கள் கால்கள் நட்டு பந்தல் அமைத்து சாலைகளில் நிழல் விழுமாறு காக்கும் வழக்கம் உண்டு. இதற்கு நகராட்சியும் பொது இசைவு வழங்கியுள்ளது. அதனோடு ஒப்பிடும் போது இது மேம்பட்ட ஒன்றாகும். இப்படிப்பட்ட ஒரு பந்தல் அமைப்பை இன்றைய உள்ளாட்சி அமைப்பினர் ஒழுங்காகப் பராமரிப்பார்களா என்பதே கேள்விக்குறி. 
     
16.  தன் வகுப்பினரான வாணிகர்களைக் கண்டு தன்னிலையை விளக்கி வரும் வரை கண்ணகியைப் பாதுகாக்குமாறு கவுந்தியடிகளை வேண்டி நகருக்குள் புகுந்த கோவலன் மதுரை மாநகரின் மூலைமுடுக்கெல்லாம் அலைந்து ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு வெறுமெனே திரும்பியதைப் பார்த்தால் எதிலும் கவனம் கொள்ளாத, பொழுதுபோக்கில் மட்டும் ஈடுபாடு கொண்டவனோ அவன் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. அல்லது தன் வகுப்பாரிடம் சென்று தன் இழிநிலையைக் கூற அவன் கூசினானா என்ற கேள்வியும் எழுகிறது..சிங்காரம் எழுதியுள்ள கடலுக்கு அப்பால் என்ற புதினத்தில் கீழைத் தீவு ஒன்றில் வட்டிக்கடை வைத்திருக்கும் நகரத்தார் எனப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியாரான தன் தாய்மாமனிடம் வேலை பார்க்கும் கதைத் தலைவன் உலகப் போர்ச் சூழலில் அரசியலில் ஈடுபடுவதால் வெறுப்புற்று அவனை வெளியேற்றி எந்த நல்ல பண்பும் இல்லாதவன் என்று தான் புறக்கணித்த இன்னொரு முறைமாப்பிள்ளைக்குத் தன் பெண்ணை மணமுடித்துக் கொடுக்க முடிவு செய்யவும் கதைத் தலைவனை உயிருக்குயிராய்க் காதலித்த மகளும் ஒரு மறுப்பும் கூறாமல் அதை ஏற்றுக்கொண்டதும் பணத்துக்கு வெளியே பொது நோக்கில் எதிலும் ஈடுபடுவதைத் தவிர்க்கும் அவர்களது மனப்பான்மையைக் காட்டுவதாக அக் கதையின் போக்கு உள்ளது. ஒருவேளை அதுவே கோவலனின் தயக்கத்துக்கும் காரணமாகலாம். ஆனால் பொதுவாக, நகரத்தார், மார்வாரிகள், முகம்மதியர்கள், நாடார்கள் போன்றோர் வாணிகத்தில் இழப்பெய்திவிட்ட தம் வகுப்பாருக்கு ஒரு முறை உதவுவதுண்டு. அதை மனதில் தாங்கி மதுரை வந்த கோவலன் இழிவுணர்ச்சிக்கு ஆட்பட்டு அவர்களைச் சந்திப்பதைத் தவிர்த்திருக்கலாம். ஒரு வகையில் அவனது தன்மான உணர்வை வெளிப்படுத்துவதாகவும் இதைக் கொள்ளலாம்.
                                                         

       



[1] மரம் அறுக்கும் வாள் – கழகத் தமிழ் அகராதி
[2] Pure gold is bright golden yellow in colour. Other metals are alloyed with gold to give strength to the gold.
Rose gold – Rose gold is slightly reddish shade. This colour change is due to mixing of copper.
White gold – It looks pale because it is almost silver coloured gold. It causes due to nickel.
Green gold – Green gold is slight greenish in colour. It is due to mixing of copper and silver.
Blue gold – Blue gold with slight bluish shade. This is caused by iron.
The purity of gold metal depends upon the percentage of mixing of other metals (alloyed). The high karat measurement is undesirable for jewelry because it is bendable and soft. The measurement is gold in international is in troy ounce.
[3]   இந்த மூன்று முடிச்சைப் பற்றி காலஞ்சென்ற திருவாரூர் புலவர் த..தமிழனார் கூறிய விளக்கம் மிகப் பொருத்தமானது. நான் கோயில்பட்டியில் பணியாற்றிய போது கழுகுமலையில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு குடும்பத்தில் தமிழ் முறைப்படி திருமணம் நடத்துவதற்காக வரும் வழியில் என்னோடு ஒரு நாள் தங்கி அடுத்த நாள் இருவரும் சென்றோம். மணமகன் பெண் கழுத்தில் மூன்று மஞ்சள் சரடுகள் கட்டினார். இந்த மூன்று சரடுகள்தாம் மூன்று முடிச்சுகளாகச் சுருங்கியுள்ளன என்று திரு.தமிழனார் கூறினார். அந்த மூன்று கயிறுகளையும் மூன்று பேர் கட்டுவதாக இருந்து பின்னர் மணமகன் கட்டுவதான வடிவம் பெற்றுள்ளதாகவும் விளக்கினார். இந்த மணமகனுக்குப் பெண்ணை மணம் செய்து கொடுக்க பெண்ணுக்கு முதல் உரிமை கொண்ட தாய் மாமன் தன் ஒப்புதலைத் தருவதாக ஒரு கயிற்றை அவர் கட்ட அடுத்து மணமகன் கட்ட பின்னர் அந்தத் திருமணத்தை ஏற்றுக்கொள்வதாக அரசின் சார்பில் ஊர்த் தலைவரான நாட்டாண்மை போன்றவர் மூன்றாவது கயிற்றையும் கட்டுவதாக அவர் விளக்கினார். குமரி மாவட்ட நாடார்களிடையில் இந்த மூன்று வகை உரிமை நடவடிக்கைகளின் வடிவம் பற்றி எமது ஆக்கமான பஃறுளி முதல் வையை வரை நூலில் பார்க்கலாம்.       


[4] . அப்போது மண்ணெய் விளக்குகள் புழக்கத்துக்கு வரவில்லை.
[5] . சிவக்குறி(லிங்கம்) என்பது தீச்சுடரின் வடிவம் என்று நாட்ட முயன்ற மறைமலையடிகள் இந்த நீலப் பகுதியைச் சுடரின் குளிர்ச்சியான பகுதி என்றும் உமையொருபாகனான சிவபெருமானுடன் ஒன்றியிருக்கும் பெண்மையை அது குறிப்பதாகவும் விளக்குவார்.

0 மறுமொழிகள்: