16.11.16

சிலப்பதிகாரப் புதையல் - 12



10. நாடுகாண் காதை

வான்கண் விழியா வைகறை யாமத்து
மீன்றிகழ் விசும்பின் வெண்மதி நீங்கக்
காரிருள் நின்ற கடைநாட் கங்குல்
ஊழ்வினை கடைஇ யுள்ளந் துரப்ப
5.       ஏழகத் தகரும் எகினக் கவரியும்
தூமயி ரன்னமும் துணையெனத் திரியும்
தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின்
நீணெடு வாயில் நெடுங்கடை கழிந்தாங்கு
அணிகிள ரரவின் அறிதுயி லமர்ந்த
10.    மணிவண்ணன் கோட்டம் வலஞ்செயாக் கழிந்து
பணையைந் தோங்கிய பாசிலைப் போதி
அணிதிகழ் நீழ லறவோன் றிருமொழி
அந்தர சாரிக ளறைந்தனர் சாற்றும்
இந்திர விகார மேழுடன்  போகிப்
15.     புலவூண்  டுறந்து பொய்யா விரதத்
தவல நீத்தறிந் தடங்கிய கொள்கை
         மெய்வகை யுணர்ந்த விழுமியோர் குழீஇய
ஐவகை நின்ற அருகத் தானத்துச்
சந்தி யைந்துந் தம்முடன் கூடி
20.     வந்து தலைமயங்கிய வான்பெரு மன்றத்துப்
பொலம்பூம் பிண்டி நலங்கிளர் கொழுநிழல்
நீரணி விழவினு நெடுந்தேர் விழவினுஞ்
சாரணர் வரூஉந் தகுதியுண் டாமென
உலக நோன்பிக ளொருங்குட னிட்ட
25.     இலகொளிச் சிலாதலந் தொழுது வலங்கொண்டு
மலைதலைக் கொண்ட பேர்யாறு போலும்
உலக விடைகழி யொருங்குட னீங்கிக்
கலையி லாளன் காமர் வேனிலொடு
மலய மாருதம் மன்னவற் கிறுக்கும்
30.     பன்மல ரடுக்கிய நன்மரப் பந்தர்
          இலவந் திகையி னெயிற்புறம் போகித்
          தாழ்பொழி லுடுத்த தண்பதப் பெருவழிக்
          காவிரி வாயிற் கடைமுகங் கழிந்து
          குடதிசைக் கொண்டு கொழும்புனற் காவிரி
35.     வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து
          காவதங் கடந்து கவுந்திப் பள்ளிப்
          பூமரப் பொதும்பர்ப் பொருந்தி யாங்கண்
          இறுங்கொடி நுசுப்போ டினைந்தடி வருந்தி
          நறும்பல் கூந்தல் குறும்பல வுயிர்த்து
40.     முதிராக் கிளவியின் முள்ளெயி றிலங்க
மதுரை மூதூர் யாதென வினவ
          ஆறைங் காதநம் மகனாட் டும்பர்
          நாறைங் கூந்தல் நணித்தென நக்குத்
                     தேமொழி தன்னொடுஞ் சிறையகத் திருந்த
45.     காவுந்தி யையையைக் கண்டடி தொழலும்
          உருவுங் குலனு முயர்பே ரொழுக்கமும்
பெருமகன் றிருமொழி பிறழா நோன்பும்
          உடையீ ரென்னோ வுறுக ணாளரிற்
          கடைகழிந் திங்ஙனங் கருதிய வாறென
50.     உரையாட் டில்லை யுறுதவத் தீர்யான்
          மதுரை மூதூர் வரைபொருள் வேட்கையேன்
          பாடகச் சீறடி பரற்பகை யுழவா
          காடிடை யிட்ட நாடுநீர் கழிதற்கு
          அரிதிவள் செவ்வி அறிகுநர் யாரோ
55.     உரிய தன்றீங் கொழிகென வொழியீர்
          மறவுரை நீத்த மாசறு கேள்வியர்
          அறவுரை கேட்டாங் கறிவனை யேத்தத்
          தென்றமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்
                     கொன்றிய வுள்ள முடையே னாகலின்
60.     போதுவல் யானும் போதுமி னென்ற
          காவுந்தி யையையைக் கைதொழு தேத்தி
          அடிக ணீரே யருளுதி ராயினித்
          தொடிவளைத் தோளி துயர்தீர்த் தேனெனக்
          கோவலன் காணாய் கொண்ட விந்நெறிக்
65.     கேதந் தருவன யாங்கும்பல கேண்மோ
          வெயினிறம் பொறாஅ மெல்லியற் கொண்டு
          பயில்பூந் தண்டலைப் படர்குவ மெனினே
          மண்பக வீழ்ந்த கிழங்ககழ் குழியைச்
          சண்பக நிறைத்த தாதுசோர் பொங்கர்
70.     பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக்
          கையறு துன்பங் காட்டினுங் காட்டும்
          உதிர்பூஞ் செம்மலி னொதுங்கினர் கழிவோர்
          முதிர்தேம் பழம்பகை முட்டினு முட்டும்
          மஞ்சளு மிஞ்சியு மயங்கரில் வலயத்துச்
75.     செஞ்சுளைப் பலவின் பரற்பகை யுறுக்கும்
          கயனெடுங் கண்ணி காதற் கேள்வ
          வயலுழைப் படர்குவ மெனினே யாங்குப்
          பூநா றிலஞ்சிப் பொருகய லோட்டி
          நீர்நாய் கெளவிய நெடும்புற வாளை
80.     மலங்குமிளிர் செறுவின் விலங்கப் பாயிற்
         கலங்கலு முண்டிக் காரிகை யாங்கண்
         கரும்பிற் றொடுத்த பெருந்தேன் சிதைந்து
         சுரும்புசூழ் பொய்கைத் தூநீர் கலக்கும்
          அடங்கா வேட்கையின் அறிவஞ ரெய்திக்
85.    குடங்கையி னொண்டு கொள்ளவுங் கூடும்
        குறுந ரிட்ட குவளையம் போதொடு
         பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை
         நெறிசெல் வருத்தத்து நீரஞ ரெய்தி
         அறியா தடியாங் கிடுதலுங் கூடும்
90.    எறிநீ ரடைகரை இயக்கந் தன்னிற்
         பொறிமா ணலவனு நந்தும் போற்றாது
         ஊழடி யொதுக்கத் துறுநோய்  காணில்
தாழ்தரு துன்பந் தாங்கவு மொண்ணா
வயலுஞ் சோலையு மல்ல தியாங்கணும்
95.    அயல்படக் கிடந்த நெறியாங் கில்லை
நெறியிருங் குஞ்சி நீவெய் யோளொடு
குறியறிந் தவையவை குறுகா தோம்பெனத்
தோமறு கடிஞையுஞ் சுவன்மே லறுவையும்
காவுந்தி யையைகைப் பீலியுங் கொண்டு
100.  மொழிப்பொருட் டெய்வம் வழித்துணை யாகெனப்
பழிப்பருஞ் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர்
கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
கால்பொரு நிவப்பிற் கடுங்குர லேற்றொடுஞ்
105.   சூன்முதிர் கொண்மூப் பெயல்வளஞ் சுரப்பக்
குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு
கடல்வள னெதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
ஓவிறந் தொலிக்கு மொலியே யல்லது
110.   ஆம்பியுங் கிழாரும் வீங்கிசை யேத்தமும்
ஓங்குநீர்ப் பிழாவு மொலித்தல் செல்லாக்
கழனிச் செந்நெற் கரும்புசூழ் மருங்கில்
பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக்
கம்புட் கோழியுங் கனைகுர னாரையுஞ்
115.  செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும்
கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்
உள்ளும்  ஊரலும் புள்ளும் புதாவும்
வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்
பல்வேறு குழூஉக்குரல் பரந்த வோதையும்
120.   உழாஅ நுண்தொளி உள்புக் கழுந்திய
கழாஅமயிர் யாக்கைக் செங்கட் காரான்
சொரிபுறம் உரிஞ்சப் புரிஞெகிழ் புற்ற
குமரிக் கூட்டிற் கொழும்பல்  லுணவு
கவரிச் செந்நெற் காய்த்தலைச் சொரியக்
125.   கருங்கை வினைஞருங் களமருங் கூடி
ஒருங்குநின் றார்க்கு மொலியே யன்றியும்
கடிமலர் களைந்து முடிநா றழுத்தித்
தொடிவளைத் தோளும் ஆகமுந் தோய்ந்து
சேறாடு கோலமொடு வீறுபெறத் தோன்றிச்
130.  செங்கயல் நெடுங்கட் சின்மொழிக் கடைசியர்
வெங்கட் டொலைச்சிய விருந்திற் பாணியும்
கொழுங்கொடி யறுகையுங் குவளையுங் கலந்து
விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழ
135.   ஏரோடு நின்றோர் ஏர்மங் கலமும்
அரிந்துகால் குவித்தோர் அரிகடா வுறுத்த
பெருஞ்செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும்
தெண்கிணைப் பொருநர் செருக்குட னெடுத்த
மண்கணை முழவின் மகிழிசை யோதையும்
140.   பேரியாற் றடைகரை நீரிற் கேட்டாங்
கார்வ நெஞ்சமோ டவலங் கொள்ளார்
உழைப்புலிக் கொடித்தே ருரவோன் கொற்றமொடு
மழைக்கரு வுயிர்க்கும் அழற்றிக ழட்டின்
மறையோ ராக்கிய ஆவுதி நறும்புகை
145.  இறையுயர் மாட மெங்கணும் போர்த்து
மஞ்சு சூழ் மலையின் மாணத் தோன்றும்
மங்கல மறையோ ரிருக்கை யன்றியும்
பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
150.   உழவிடை விளைப்போர் பழவிற லூர்களும்
பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து
மங்குல் வானத்து மலையிற் றோன்றும்
ஊரிடை யிட்ட நாடுடன் கண்டு
காவத மல்லது கடவா ராகிப்
155.   பன்னாட் டங்கிச் சென்னா ளொருநாள்
ஆற்றுவீ யரங்கத்து வீற்றுவீற் றாகிக்
குரங்கமை யுடுத்த மரம்பயி லடுக்கத்து
வானவ ருறையும் பூநா றொருசிறைப்
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்காப்
160.   பெரும்பெய ரைய ரொருங்குட னிட்ட
இலங்கொளிச் சிலாதல மேலிருந் தருளிப்
பெருமக னதிசயம் பிறழா வாய்மைத்
தருமஞ் சாற்றுஞ் சாரணர் தோன்றப்
பண்டைத் தொல்வினை பாறுக வென்றே
165.   கண்டறி கவுந்தியொடு காலுற வீழ்ந்தோர்
வந்த காரணம் வயங்கிய கொள்கைச்
சிந்தை விளக்கிற் றெரிந்தோ னாயினும்
ஆர்வமுஞ் செற்றமு மகல நீக்கிய
வீர னாகலின் விழுமம் கொள்ளான்
170.   கழிபெருஞ் சிறப்பிற் கவுந்தி காணாய்
ஒழிகென வொழியா தூட்டும் வல்வினை
இட்ட வித்தி னெதிர்ந்துவந் தெய்தி
ஒட்டுங் காலை யொழிக்கவு மொண்ணா
கடுங்கால் நெடுவெளி யிடுஞ்சுட ரென்ன
175.   ஒருங்குட னில்லா வுடம்பிடை யுயிர்கள்
அறிவ னறவோ னறிவுவரம் பிகந்தோன்
செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன்
தரும முதல்வன் றலைவன் றருமன்
பொருளன் புனிதன் புராணன் புலவன்
180.   சினவரன் றேவன் சிவகதி நாயகன்
பரமன் குணவதன் பரத்தி லொளியோன்
தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்
சித்தன் பெரியவன் செம்மல் திகழொளி
இறைவன் குரவன் இயல்குணன் எங்கோன்
185.   குறைவில் புகழோன் குணப்பெருங் கோமான்
                                    சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன்
அங்கம் பயந்தோன் அருகன் அருள்முனி
பண்ணவன் எண்குணன் பாத்தில் பழம்பொருள்
விண்ணவன் வேத முதல்வன் விளங்கொளி
190.   ஓதிய வேதத் தொளியுறி னல்லது
போதார் பிறவிப் பொதியறை யோரெனச்
சாரணர் வாய்மொழி கேட்டுத் தவமுதற்
காவுந்தி யுந்தன் கைதலை மேற்கொண்
டொருமூன் றவித்தோ னோதிய ஞானத்
195.   திருமொழிக் கல்லதென் செயவியகந் திறவா 
காமனை வென்றோ னாயிரத் தெட்டு
நாம மல்லது நவிலா தென்னா
ஐவரை வென்றோ னடியிணை யல்லது
கைவரைக் காணினுங் காணா வென்கண்
200.   அருளறம் பூண்டோன் றிருமெய்க் கல்லதென்
                                    பொருளில் யாக்கை பூமியிற் பொருந்தாது
அருக ரறவ னறிவோற் கல்லதென்
இருகையுங் கூடி யொருவழிக் குவியா
மலர்மிசை நடந்தோன் மலரடி யல்லதென்
205.   தலைமிசை யுச்சி தானணிப் பொறாஅது
இறுதியி லின்பத் திறைமொழிக் கல்லது
மறுதர வோதியென் மனம்புடை பெயராது
என்றவ னிசைமொழி யேத்தக் கேட்டதற்கு
ஒன்றிய மாதவ ருயர்மிசை யோங்கி
210.   நிவந்தாங் கொருமுழம் நீணிலம் நீங்கிப்
பவந்தரு பாசம் கவுந்தி கெடுகென்று
அந்தரம் ஆறாப் படர்வோர்த் தொழுது
பந்தம் அறுகெனப் பணிந்தனர் போந்து
காரணி பூம்பொழிற் காவிரிப் பேர்யாற்று
215.   நீரணி மாடத்து நெடுந்துறை போகி
மாதரும் கணவனும் மாதவத் தாட்டியும்
தீதுதீர் நியமத் தென்கரை யெய்திப்
போதுசூழ் கிடக்கையோர் பூம்பொழில் இருந்துழி
வம்பப் பரத்தை வறுமொழி யாளனொடு
220.   கொங்கலர் பூம்பொழிற் குறுகினர் சென்றோர்
காமனுந் தேவியும் போலும் ஈங்கிவர்
ஆரெனக் கேட்டீங் கறிகுவம் என்றே
நோற்றுணல் யாக்கை நொசிதவத் தீருடன்
ஆற்றுவழிப் பட்டோர் ஆரென வினவவென்
225.   மக்கள் காணீர் மானிட யாக்கையர்
பக்கம் நீங்குமின் பரிபுலம் பினரென
உடன்வயிற் றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை
கடவது முண்டோ கற்றறிந் தீரெனத்
தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக்
230.   காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க
எள்ளுநர் போலுமிவர் என்பூங் கோதையை
முள்ளுடைக் காட்டின் முதுநரி யாகெனக்
கவுந்தி யிட்ட தவந்தரு சாபம்
கட்டிய தாகலின் பட்டதை யறியார்
235.   குறுநரி நெடுங்குரற் கூவிளி கேட்டு
நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி
நெறியின் நீங்கியோர் நீரல கூறினும்
அறியா மையென் றறியல் வேண்டும்
செய்தவத் தீர்நுந் திருமுன் பிழைத்தோர்க்
240.   குய்திக் காலம் உரையீ ரோவென
அறியா மையினின் றிழிபிறப் புற்றோர்
உறையூர் நொச்சி யொருபுடை யொதுங்கிப்
பன்னிரு மதியம் படர்நோ யுழந்தபின்
முன்னை யுருவம் பெறுகவீங் கிவரெனச்
245.   சாபவிடை செய்து தவப்பெருஞ் சிறப்பின்
காவுந்தி யையையுந் தேவியுங் கணவனும்
முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கிய
புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்தென்.

                            கட்டுரை

முடியுடை வேந்தர் மூவ ருள்ளும்
தொடிவிளங்கு தடக்கைச் சோழர்குலத் துதித்தோர்
அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்
பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும்
5.                  விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும்
ஒடியா வின்பத் தவருறை நாட்டுக்
குடியும் கூழின் பெருக்கமும் அவர்தம்
தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும்
பொய்யா வானம் புதுப்புனல் பொழிதலும்
10.     அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும்
பரந்திசை யெய்திய பாரதி விருத்தியும்
திணைநிலை வரியும் இணைநிலை வரியும்
அணைவுறக் கிடந்த யாழின் றொகுதியும்
ஈரேழ் சகோடமும் இடநிலைப் பாலையும்
15.    தாரத் தாக்கமும் தான்தெரி பண்ணும்
ஊரகத் தேரும் ஒளியுடைப் பாணியும்
என்றிவை யனைத்தும் பிறபொருள் வைப்போ
டொன்றித் தோன்றுந் தனிக்கோள் நிலைமையும்
ஒருபரிசா நோக்கிக் கிடந்த
20.    புகார்க் காண்டம் முற்றிற்று.

வெண்பா
காலை யரும்பி மலருங் கதிரவனும்
மாலை மதியமும்போல் வாழியரோ - வேலை
அகழால் அமைந்த அவனிக்கு மாலைப்
புகழால் அமைந்த புகார்.
பொழிப்புரை
வானிற்குச் சிறந்த கண்ணாகிய கதிரவன் தோன்றாத வைகறையாகிய யாமத்திலே மீன்கள் ஒளிரும் வானத்திலிருந்து வெண்மதி நீ்ங்கி, கரிய இருள் பின்னிரவில் நின்ற கடைசி இரவின் இருளில், முன் செய்த தீவினை வந்து உள்ளத்தைச் செலுத்துதலால்,

ஆட்டுக் கடாவும் கவரிமானும் தூய சிறகினையுடைய அன்னமும் ஒன்றுக்கொன்று துணையாக இயங்கும் தாழோடு செய்யப்பட்ட பெருமை பொருந்திய சிறப்பினைக் கொண்ட மிகப் பெரிய கதவையுடைய நெடிய வாயிலைக் கடந்து அங்கிருந்து,

அழகு விளங்கும் பாம்பணையின் மீது அறிதுயிலில் இருக்கும் நீல மணி போலும் நிறமுடைய திருமாலின் கோயிலை வலம் செய்து அகன்று,

உயர்ந்த ஐந்து பருத்த கிளைகளையும் பசுமையான இலைகளையும் உடைய மாபோதியின் எழில் விளங்கும் நிழலில் எழுந்தருளிய புத்த தேவன் அருளிச் செய்த ஆகமத்தை வானில் இயங்குவோராகிய சாரணர் மறைவாக இருந்து பொருள் சொல்வதாகக் கூறப்படும் இந்திரன் ஆக்கிய விகாரங்கள் ஏழினையும் முறையே கண்டு அவற்றைத் தாண்டிச் சென்று,
                                                                                                                       
புலால் ஆகிய உணவைக் கைவிட்டு பொய் கூறாமையாகிய நோன்பைக் கடைப்பிடித்து அழுக்காறு, அவா முதலியவற்றைக் நீக்கி கோட்பாடுகளை அறிந்து அடக்கமுடைய கொள்கையை உடையவராய் மெய்யியல்களை அறிந்த சீரியோர் கூடிய அருகன் கோயிலில் அருகர், சித்தர், உபாத்தியாயர், ஆசிரியர், சாதுக்கள் எனும் ஐவகை பஞ்ச பரமேட்டிகளும் நிலைபெற்ற ஐந்து சந்திகளும் தம்முடன் வந்து கூடிக் கலந்திருக்கும் உயர்ந்த பெரிய மன்றத்தின் கண் பொற் பூவினையுடைய அசோகின் எழில் விளங்கும் கொழுவிய நிழலின் கண்ணே நீரணி (திரு அபிடேக) விழா நாளிலும் தேர்த் திருநாளிலும் சாரணர் வந்து தங்குவதற்கு தகுதியுடையதாய் சாவகர் யாவரும் கூடி இட்ட ஒளிவீசும் சிறப்பினையுடைய சிலாதலத்தை வணங்கி வலம் செய்து,

மலையில் தன் தோற்றுவாயைக் கொண்ட ஒரு பெரிய ஆறு போன்று உலகிலுள்ளோர் போக்குவரத்து செய்வதற்கேற்ற பெருநகரின் இடைகழி வாயிலை தம்மைப் போன்ற பிற மக்களுடன் கலந்து சென்று கடந்து,

சோழ அரசனுக்குக் காமன் அழகிய இளவேனிலோடு தென்றலையும் திறையாகத் தருகின்ற பல மலர்களைப் பரப்பிய நல்ல மர நிழலையும் காவலையும் உடைய, அரசனும் உரிமை மகளிரும் நீராடும் நீர்வாவி(நீராவி)யைச் சூழ்ந்த சோலைகளைக் கொண்ட இலவந்திகையின் மதிலின் வெளியே செல்லும் பெரிய பாதையை உடைய காவிரிக் கரையிடத்திலுள்ள சங்கமத்துறை வாயிலையும் கடந்து மேற்கு நோக்கி,

வளமிக்க நீரையுடைய காவிரியின் பெரிய வடக்குக் கரையிலுள்ள சோலையினைக் கடந்து அங்கிருந்து ஒரு காவதம் நடந்து சென்று  கவுந்தியடிகள் தங்கியிருந்த பள்ளிக்கு அடுத்து பூமரங்கள் செறிந்த சோலையை அடைய, நறிய பலவான கூந்தலை உடைய கண்ணகி ஒடிந்துவிடும் எனத்தக்க கொடி போன்ற இடையும் கால்களும் மிக வருந்தி மூச்சு வாங்கி முற்றாத மழலைச் சொற்களால் கூரிய பற்கள் பளிச்சிட மதுரை என்னும் பழம்பதி எது என்று கோவலனைக் கேட்டாள்.

நீ கேட்ட மதுரை அகன்ற நமது நாட்டிலிருந்து ஆறு ஐந்து காதத் தொலைவில் அண்மையிலேயே உள்ளது என்று சிரித்தவாறே கூறினான்.

பின்னர் தேனை ஒத்த மொழி பேசும் கண்ணகியோடு சென்று பள்ளியினுள் இருந்த கவுந்தி அடிகளைக் கண்டு அவரை அடி வணங்கினான்.

அழகும் உயர்குடிப் பிறப்பும் உயர்ந்த பெருமை மிக்க ஒழுக்கமும் அருக தேவனின் அறமொழிகளிலிருந்து தப்பாத நோன்பும் ஆகியவற்றை உடையோராகிய நீங்கள் தீவினையாளரைப் போல் உங்கள் இருப்பிடத்தைவிட்டு இவ்வாறு வருவதற்குக் காரணம் யாதோ எனக் கவந்தியடிகள் கேட்டனர்.

மிகுந்த தவத்தினை உடையீர், தங்கள் கேள்விக்கு யான் சொல்லத்தக்க விடை எதுவும் இல்லை. ஆனால் நான் மதுரை மூதூர் சென்று பொருள் ஈட்டும் ஆவலைக் கொண்டுள்ளேன் என்பதை மட்டும் கூறுவேன் என்றான் கோவலன்.

அது உங்களது கருத்தாயின் இவளது பாடகம் அணிந்த சிறிய அடிகள் பருக்கை மண்ணின் கொடுமையைத் தாங்க மாட்டா. எனவே காடும் நாடுமாகிய இவ்வழியைக் கடப்பதற்கு இவளது தன்மை ஏற்றதல்ல என்பதையும் இவளது தகுதியையும் எவரும் அறியவில்லை என்று கவுந்தி அடிகள் கூறினார்.

நீங்கள் மேற்கொண்டுள்ள இவ் வழிச் செலவைத் தவிருங்கள் என்ற அறிவுரையையும் நீங்கள் ஏற்க மறுக்கிறீர்கள். எனவே மறம் குறித்த உரைகள் நீக்கிய குற்றமற்ற கேள்வி அறிவை உடையவர்களுடைய அறவுரைகளைக் கேட்டு அவ் வகை கேட்டவாறே அருக தேவனை வழிபடுவதற்குத் தமிழ்நாட்டின் தெற்கில் உள்ள குற்றமற்ற சிறப்புடைய மதுரைக்குச் செல்வதற்கு எண்ணியுள்ளேன் ஆதலால் நானும் வருகிறேன், நீங்களும் என்னுடன் வாருங்கள் என்று கூறிய கவுந்தி அடிகளின் அடிகளைக் கைதொழுது வணங்கி நாவால் போற்றி அடிகளாகிய தாங்களே இவ்வாறு அருள் செய்வீர்களாயின் வளையணிந்த தோளை உடைய இந்த கண்ணகியுடைய துன்பமெல்லாவற்றையும் போக்கினவன் ஆவேன் நான் என்றான் கோவலன்.

கோவலன் நான் கூறுவதனை அறிந்து கொள். நாம் செல்ல இருக்கும் இவ் வழியில் நமக்கு இடர் தருவன எங்கும் பலப்பல உண்டு. அவற்றைக் கேட்டுக்கொள்:

வெயிலின் கொடுமையைத் தாங்க முடியாத மெல்லிய இயல்பினை உடைய இவளை அழைத்துக்கொண்டு மலர்கள் மிகுந்த சோலையின் வழியில் செல்வோமாயின் நிலத்தைப் பிளந்து இறங்கிய வள்ளிக் கிழங்கைத் தோண்டி எடுத்த குழியை சண்பக மரங்கள் நிரப்பிய பூந்துகளை உதிர்த்த பழைய பூக்கள் பொய்க் குழிகளாக்கி வைத்திருந்து, கவனமின்றிச் செல்வோரை செயலறச் செய்யும் துன்பத்தைத் தந்தாலும் தரும்.

உதிர்ந்த பூச் செம்மல்கள் உண்டாக்கியுள்ள பொய்த்தரைகளைத் தவிர்த்து ஒதுங்குவோர் தேன் நிறைந்த முதிர்ந்த பலாப் பழங்களாகிய பகையோடு முட்ட வேண்டியிருக்கும்.

மஞ்சள் இஞ்சி முதலியவை கலந்து வளர்ந்திருக்கும் தோட்டங்களில் சிவந்த சுளைகளை உடைய பலாவின் கொட்டைகளாகிய பரல்கள் பகையாகிக் கால்களை உறுத்தும்.

கயல் மீனை ஒத்த கண்ணை உடையவளின் அன்பு நிறைந்த கணவனே வயல் வழியே செல்வோமென்றாலும்,

அங்கெல்லாம் மலர்களின் மணம் கமழும் குளங்களில் தம்முள் சண்டையிடுகின்ற கயல் மீன்களைத் துரத்தி நீர்நாய் கவ்விய நீண்ட முதுகினை உடைய வாளை விலாங்குகள் ஒளிர்கின்ற வயலின் குறுக்காகப் பாயுமானால் இப் பெண் கலக்கமடையக் கூடும்.

கரும்பில் கூடுகட்டியிருக்கும் பெருந்தேன் கூடு சிதைந்து ஒழுகி வண்டுகள் சூழ்ந்த வாவிகளின் தூய நீரோடு கலந்துவிடும். தணியாத நீர் வேட்டையால் அறிவு சோர்ந்து அந்த நீரை இவள் தன் உள்ளங்கையால் அள்ளிக் குடிக்கவும் கூடும்.

களைபறிப்போர் பறித்து வரப்புகளில் இட்ட குவளைப் பூவுடன் புள்ளிகளையும் வரிகளையும் கொண்ட வண்டினங்கள் சேர்ந்து கிடக்கும் இடங்களை வழி நடக்கும் துன்பத்தினால் நீங்கள் சோர்வுற்று அறியாது அங்கெல்லாம் கால் பதித்து நடந்து அவ் வண்டுகள் இறக்கக் காரணம் ஆகும்.

பாய்ந்தோடும் நீரையுடைய வாய்க்காலின் கரையாகிய பாதையில் புள்ளிகளால் அழகு பெற்ற நண்டினையும் நத்தையையும் கவனிக்காது இயல்பாக நீங்கள் அடியிட்டுச் செல்லும் செலவினால் அவற்றுக்கு பெரும் நோய் உண்டானால் அதனால் வரும் துன்பம் நம்மால் பொறுக்கவும் முடியாது.

இங்கு எவ்விடத்திலும் வயலும் சோலைகளும் அல்லாமல் வேறு வகைப்பட்ட வழி இல்லை. எனவே நெளிந்த கரிய கொண்டையாகிய குஞ்சியினை உடையவனே நீ விரும்பும் உன் மனையாளுடன் அவ்வவ் விடங்களை இனங் கண்டு அவற்றைத் தவிர்த்துப் பாதுகாப்பாயாக என்று சொன்னார்.

இரப்புக் கலத்தையும் தோளில் இடும் துணியால் ஆகிய உறியையும்(சுவல் நால் பை - தோளில் தொங்கும் பை - சோல் நாப்பை?)  மயில் தோகையையும் கொண்டு பொருள் மொழியாகிய  தெய்வம் அதாவது மந்திரம் நமக்குப் பாதையில் காவலாக இருக்குமென்று பழிப்பில்லாத பெருமையுடைய ஒழுக்கத்தோடு தம் வழிச் செலவைக் கவுந்தி அடிகளின் துணையுடன் தொடர்ந்தனர்.

சனிக்கோள் புகைந்தாலும் வால் வெள்ளி தோன்றினாலும் விரிந்த கதிரினை உடைய வெள்ளிக் கோள் தென்  திசைக்குச் சென்றாலும் காற்று மோதும் குடகு மலையின் உச்சியின் மீது கடிய குரலை உடைய இடியுடன் கரு முற்றிய மேகம் மழைப் பொழிவாகிய வளத்தைச் சுரப்பதால் அம் மேற்கு மலையில் பிறந்த செழிப்பான பல பண்டங்கள் கடல் தன் வளங்களோடு எதிர்கொள்ளும் வண்ணம் கயவாயாகிய புகாரைக் குத்தி இடிக்கும் கடும் விரைவில் வரும் காவிரியின் புது நீர் வாய்த்தலை மதகின் கவின் மீது எழுந்து விழும் ஒலியல்லது பன்றிப் பத்தகும் பூட்டைப் பொறியும் கமலையும் ஒலி மிகுந்த ஏற்றமும் நீர்மிகு இறை கூடையும் ஒலித்தல் இல்லாத வயல் பரப்புகளில் செந்நெல்லும் கரும்பும் சூழ்ந்த வயலின் இடைப்பட்ட பசுமையானதும் பூக்கள் நிறைந்ததுமான தாமரைக் காடாகிய நீர் நிலையில்,

சம்பங் கோழியும் ஒலிக்கும் குரலையுடைய நாரையும் சிவந்த காலை உடைய அன்னப் பறவையும் பச்சை நிறமுள்ள கால்களுடைய கொக்கும் கானாங் கோழியும் நீரில் நீந்தும் நீர்க்காக்கையும் உள்ளானும் குளுவையும் கணந்துள் பறவையும் பெரு நாரையும் வெற்றியை நாடிப் போரிடும் போரில் வல்ல வேந்தர்கள் போரிடும் களம் போல பல்வேறு குழுக்களின் குரல்கள் பரந்து நிற்கும் ஒலியும்,

உழப்படாத நுண்ணிய சேற்றுள் புகுந்து ஆழ்ந்த கழுவப்படாத மயிரினை உடைய உடலையும் சிவந்த கண்ணையுமுடைய எருமை ஊரல் எடுக்கும் முதுகினை உராய்தலாலே தளர்வுற்ற கன்னி நெற்கட்டின் உள்ளிருக்கும் சுவையான பலவகைப் பண்டங்கள் கவரி போன்ற செந்நெல்லின் கதிர்களின் மீது சிந்துவதைப் பார்த்து,

வலிய கையை உடைய தொழிலாளர்களும் நிலம் பயிர் செய்யும் உழுகுடியினரும் கூடி நின்று எழுப்பும் ஒலி மட்டுமின்றி,

மணமுள்ள மலர்களையுடைய ஆம்பல் முதலியவற்றைப் பறித்து எறிந்து அங்ஙனம் பறித்த இடத்தில் முடியின் நாற்றைப் பகிர்ந்து நட்டு வளைந்த வளையலணிந்த தோள்களிலும் மார்பிலும் படிந்த சேறாடுகின்ற கோலத்தோடு பெருமைபெறத் தோன்றி சிவந்த கெண்டையை ஒத்த நெடிய கண்களையும் இழிந்த மொழியினையும் உடைய கடைசியரது மிகுந்த மயக்கந்தரும் கள்ளை உண்டு தொலைத்ததனால் புதிய இசையைக் கொண்ட பாடலும்

செழுமையான நீண்ட கொடியாக வளர்ந்த அறுகையும் குவளையையும் சேர்த்து விளங்கும் நெற்கதிரோடு தொடுத்த மாலையை ஏரிலே அணிந்து நிலத்தைப் பிளப்பவர் போல் போற்றுவோர் வணங்க ஏரைப் பூட்டி நின்றார் (நல்லேர் பூட்டுதல், பொன்னேர் பூட்டுதல்) பாடுகின்ற ஏர்மங்கலப் பாட்டும்

நெல்லினை அறுத்து ஓரிடத்துக் குவித்தோர் சூட்டினைக் கடாவிடுதலிலுண்டான பேரளவு நெல்லினை முகந்து தரும் முகவைப்பாட்டும்

தெளிந்த ஓசையினைக் கொண்ட தடாரியையுடைய கிணைப்பொருநர் செருக்குடன் எடுத்த மண்கணை எனும் முழவின் மகிழ்ச்சியைத் தரும் இசையின் ஒலியும் ஆகிய இவ் வோசைகளை பெரிய ஆற்றங்கரையில் ஒன்றன் பின் ஒன்றாய்க் கேட்டு ஆர்வம் கொண்ட உள்ளத்தோடு வருத்தத்தினை உணராதாராய்,

புலியைத் தன்னிடத்தில் கொண்ட  கொடியை உயர்த்திய தேரையுடைய வலியோனாகிய சோழனது வெற்றியோடு மழைக்குக் கருப்பத்தினைத் தோற்றுவிக்கின்ற அழல்(தீ) இடம் பெறுகின்ற வேள்விச் சாலையில்,

வேதியர் ஆக்கிய வேள்வியின் நறிய புகை இறப்புகளை(இறவாணங்களை) உடைய ஓங்கிய மாடங்களின் எல்லா இடங்களையும் போர்த்துதலால் மேகம் சூழ்ந்த மலைபோல் மாட்சிமையுடன் காணப்படும் மங்கலம் பொருந்திய அந்தணர்களது இருப்பிடங்களும் அவை அன்றியும்,

நீர் பரந்த காவிரிப் பாவையின் புதல்வரும் இரப்போரது சுற்றத்தையும் அரசரது வெற்றியையும் தம் உழுதொழிலிலிருந்தே தோற்றுவிப்போருமாகிய வேளாண் மக்களுடைய தூற்றாப் பொலியாகிய நெற்குவியல்கள் கரும்பாலை புகையினால் பரக்கப் பெற்று இருண்ட மேகம் சூழ்ந்த உயர்ந்த மலை போலக் காணப்பெறும் பழம் சிறப்பினை உடைய ஊர்களும் ஆகிய இவ் விருவகை ஊர்களும் இடையிடையே உள்ள நாடு எல்லாவற்றையும் கண்டு ஒரு நாளில் ஒரு காத தொலைவுக்கு மேல் நடக்க முடியாதவராய் பல நாட்கள் தங்கிச் செல்லுகின்ற ஒருநாள்,

ற்றை மறைக்கும் அரங்கத்தினுள் வேறிடத்தில்லாத தனித்தன்மை உடையதாக, வளைந்த மூங்கில் முள்ளால் வளைக்கப்பட்ட வேலியை உடைய, மரங்கள் நெருங்கிய சோலையிடத்தில் விண்ணவர் தங்குவதற்கு ஒத்த மலர்கள் மிகுந்து தோன்றும் ஒரு பக்கத்தில் பட்டினப் பாக்கத்தை விட்டு நீங்கி பெரும் புகழினை உடைய உலக நோன்பிகள் ஒருங்கு கூடி அப் பட்டினப் பாக்கத்தில் இட்ட விளங்கும் ஒளியினை உடைய சிலா வட்டத்தின் கண் எழுந்தருளி அருக தேவனால் செய்யப்பட்ட அதிசயங்களாகிய சகசாதிசயம், கர்மச்சயாதிசயம், தெய்வீகாதிசயம் எனும் மூன்றும் தப்பாத உண்மையான அறவொழுக்கங்களை அருளிச் செய்யும் சாரணர் வந்து தோன்ற,

அச் சாரணர்கள் வந்தமையைக் கண்டுணர்ந்த கவுந்தி அடிகளுடன் முன் செய்த பழவினைகள் யாவும் கெட்டொழிக என்று மனதில் கொண்டு அவர்கள் திருவடியில் பொருந்த வீழ்ந்து வணங்கியோர் இங்கு வந்த காரணத்தை விளங்கிய கோட்பாட்டினை உடைய தன் உள்ளமெனும் விளக்கினால் அறிந்தோன் ஆயினும் விருப்பினையும் வெறுப்பினையும் தன்னைவிட்டு அகலும்படி விலக்கிய வீரனாகையால் வரும் துன்பத்துக்கு வருத்தம் கொள்ளாதவனாக, மிக்க பெரும் சிறப்பினை உடைய கவுந்தி, தீவினை யாவராலும் ஒழிக்க ஒழியாததாய்த் துன்பம் நுகர்விக்கும் என்பதனைக் காண்பாயாக,

விளைநிலத்து இட்ட வித்துப் போல பயன் எதிரே வந்தமைந்து பயனை நுகர்விக்கும் காலத்தில் அதனை ஒழிக்கவும் முடியாது,

கடிய காற்றையுடைய நெடிய வெளியில் இடப்பட்ட விளக்கைப் போன்று அழியுமே அன்றி உடலிடை நின்ற உயிர்கள் அவ் வுடம்புடன் நிலைத்து நில்லா.

அறிவன்                           :  எல்லாவற்றையும் அறியும் அறிவுடையோன்
அறவோன்                        :  அறம் செய்தலையே தன் தொழிலாக உடையோன்
அறிவு வரம்பு இகந்தோன்  :  மக்கள் அறிவின் எல்லையைக் கடந்து நின்றோன்.
                                       :  (மக்கள் தம் அறிவினால் அறியவொண்ணாதவன்)
செறிவன்                          :  எல்லா உயிர்களுக்கும் இடனாய் உள்ளவன், சலியாதவன்  
சினேந்திரன்                     :  எண்வகை வினைகளையும் (ஞானாவரணீயம், தரிசனாவரணீயம், வேதநீயம், மோகநீயம், ஆயுசுயம், நாமம், கோத்திரம், அந்தராயம்) வென்றோன்
சித்தன்                             :  செய்யத் தகுவனவற்றைச் செய்து முடித்தோன், கன்மங்களைக் 
                                                கழுவினோன்                  
பகவன்                             :  முக்கால உணர்ச்சியுடையோன்
தரும முதல்வன்                 :  அறங்களுக்கு மூலமாயுள்ளோன்
தலைவன்                         :  எவ்வகைத் தேவர்க்கும் தலைவனாயுள்ளான்
தருமன்                             :  தானே அறமானவன்
பொருளன்                        :  உண்மைப் பொருளாய் உள்ளவன்
புனிதன்                            :  தூய்மை உடையவன்
புராணன்                          :  பழமையானவன்
புலவன்                            :  யாவர்க்கும் அறிவாயுள்ளோன்
சினவரன்                          :  சினத்தைப் கீழ்ப் படுத்தியவன் - சினத்தை வென்றவன்
தேவன்                             :  தேவர்க்கெல்லாம் முதல்வனாகிய தேவன்
சிவகதி நாயகன்                :  வீட்டுலகிற்கெல்லாம் தலைவனானோன்
பரமன்                              :  மேலானவன்
குணவதன்                        :  குணத்தை உடையவன் - குணவிரதன் என்றும் கொள்ளலாம் (குணவிரதம் திக்குவிரதம், தேசவிரதம், அநர்த்த தண்ட விரதம்)
பரத்தில் ஒளியோன்           :  மேலான உலகிற்கு விளக்கமாயுள்ளோன்
தத்துவன்                          :  தத்துவங்களையுடையோன்
சாதுவன்                          :  அடங்கியோன்
சாரணன்                          :  விசும்பியங்குவோன் (- சரியா? ஊர் சுற்றுவோன் என்பதே சரி)
காரணன்                          :  எல்லாற்றுக்கும் முதலாயுள்ளோன்.
சித்தன்                             :  எண்வகைச் சித்திகளையும் உண்டாக்கினவன். (உண்டாக்கியவனா,
                                                எய்தியவனா?)      
செம்மல்                           :  தலைமையில் சிறந்தோன்.
திகழ்ஒளி                          :  விளங்கும் ஒளியாய் உள்ளோன்
இறைவன்                        :  எல்லாவற்றிலும் தங்குவோன்.
குரவன்                             :  ஆசிரியனாக உள்ளோன்.
இயல்குணன்                    :  இயல்பாகவே தோன்றிய குணங்களை உடையோன்
எங்கோன்                         :  எங்கள் தலைவன்
குறைவில் புகழோன்          :  நிறைந்த சீர்த்தியை உடையோன்
குணப்பெரும் கோமன்       :  நற்குணங்கள் யாவும் நிறைந்த சிறந்த தலைவன்.
சங்கரன்                           :  நன்மை புரிவோன்.
ஈசன்                                :  எவ்வகைச் செலவங்களையும் உடையோன்.
சுயம்பு                              :  தானே தோன்றியவன்
சதுமுகன்                          :  நான்முகன்.
அங்கம் பயந்தோன்           :  அங்காகமத்தை அருளினோன்
                                          அங்காகமம் 12.
                                          1. ஆசாராங்கம்                                7.உபாசகாத்தியயனாங்கம்
                                          2. சூத்திர கிருதாங்கம்,                      8. அந்தக் கிருத தசாங்கம்
                                          3. தானாங்கம்                                  9. அநுத்தரோபாதியக தசாங்கம்
                                          4. சமவாயாங்கம்                             10. பிரச்சிநவியாகரணாங்கம்
                                          5. வியாக்கியாப் பிரக்ஞப்த்யங்கம்      11. விபாக சூத்திராங்கம்
                                          6. ஞாத்ருகதாங்கம்                           12. திருட்டி வாதாங்கம்
ருகன்                            :  போற்றத் தக்கான்.
ருள்முனி                        :  எல்லா உயிர்களிடத்தும் அருள் கொண்டொழுகும் முனிவன்
பண்ணவன்                      :  கடவுள்
எண்குணன்                      :  எட்டுக் குணங்களை உடையோன்
                                          மூன்று வகை குணங்களும் அவற்றினுள் அடங்கும் எட்டெட்டும் கீழ்வருமாறு:
.     . சத்துவம்,                . இராசதம்,                 . தாமதம்.
                                             1.ஞானம்                       1.மனவூக்கம்         1.பேருண்டி
                                             2.அருள்                         2.ஞானம்              2.நெடுந்துயில்
                                             3.தவம்                          3.வீரம்                 3.சோம்பு
                                             4.பொறை                     4.தவம்                 4.நீதிவழு
                                             5.வாய்மை                     5.தருமம்               5.ஒழுக்கவழு
                                             6.மேன்மை                    6.தானம்               6.வஞ்சம்
                                             7.மோனம்                      7.கல்வி                7.மறதி
               8.ஐம்பொறி அடக்கல்     8.கேள்வி              8.பொய், கோபம், காமம், கொலை
                                                           -அபிதான சிந்தாமணி, குணம் பார்க்க.
பாத்தில் பழம்பொருள்        :  பகுத்தற்கரிய பழம்பொருளாயுள்ளோன், ஓட்டற்ற பொன்னை ஒப்பான்.
விண்ணவன்                     :  மேலுலகத்துள்ளான்
வேதமுதல்வன்                  :  ஆகமம் மூன்றிற்கும் முதலாக உள்ளோன்
விளங்கு ஒளி                     :  அறியாமை என்னும் இருள் நீங்கத் விளங்கும் ஒளியாக உள்ளோன்.

மேற்கூறிய பெயர்களை உடைய ஆகமத்தில் விளங்கும் ஒளியாகிய அருக தேவனைச் சார்ந்தல்லது பிறவியாகிய மூடப்பட்ட அறையிலுள்ளோர் வெளிவாரார் என்று சாரணர் தலைவன்  கூறினான்.

தவத்திற்கு முதல்வியாகிய கவுந்தியடிகளும் சாரணர் அருளிச் செய்த பொருள் பொதிந்த மொழிகளைக் கேட்டுத் தமது கைகளைத் தலைமீது வைத்துக் கொண்டு,

எனது செவிகள் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்றினையும் கெடுத்தோனாகிய அருகதேவன் அருளிச் செய்த பேரறிவு தரும் அறவுரைக்குத் திறப்பின் அல்லது வேறொன்றுக்கும் திறவா.
           
எனது கண்கள்  ஐம்புலன்களையும் வென்றோனுடைய திருவடிகளைக் காண்பதல்லது மற்றைக் கடவுளர் அடிகளைக் கையகத்தே காணினும் காணா.

எனது நாவானது காமன் செயலை வென்றோனுடைய ஆயிரத்தெட்டு நாமங்களைச் சொல்வதல்லாது வேறொரு நாமத்தைக் கூறாது.

எனது பயனில்லா இவ் வுடல் அருளையும் அறத்தினையும் மேற்கொண்டோனுடைய திருவுடலத்திற்கல்லது பிறிதொன்றுக்காக நிலத்தில் வீழ்ந்து வணங்காது

என் இரு கைகளும் அருகர்க்கு அறங்கூறுவோனாகிய அறிவன் பொருட்டுச் சேர்ந்து குவிதல் அல்லது வேறு தேவர் குறித்துக் குவியா.

எனது  தலையின் உச்சியும் பூவின் மீது நடந்த தாமரை போன்ற அடிகளை அணியப் பொறுக்குமே அன்றி  வேறொன்ரையும் அணியப் பொறாது.

எனது உள்ளமும் முடிவிலா இன்பத்தைத் தரும் இறைவன் அருளிச் செய்த ஆகமத்தை உருவேற ஓதி அசைந்து கொடுக்குமே அன்றி பிறிதொரு மொழியை ஓதி அசைந்து கொடுக்காது என்று கூறி அவ் வருகதேவனது புகழ்மொழிகளைப் போற்றக் கேட்டு அக் கூற்றுக்கு உள்ளம் ஒருப்பட்ட சாரணர் சிலாவட்டத்தினின்றும் எழுந்து நிலத்தை விட்டு நீங்கி அந் நிலத்திலிருந்தும் ஒரு முழம் உயர்ந்து நின்று பிறப்பினைத் தரும் பாசம் கவுந்திக்கு ஒழிவதாக என்று கூறி வான் வழியே சென்ற அச் சாரணரைத் தொழுது பாசம் ஒழிக என்று வணங்கி அவ் விடத்தை நீங்கினர்.

முகிலை அணிந்த, மலர்கள் நிறைந்த சோலைகளை உடைய காவிரியாகிய பெரிய ஆற்றின் நெடுந்துறையைப் பள்ளி ஓடத்தால்(நீரணி மாடத்தில்) கடந்து கண்ணகியும் அவள் கணவன் கோவலனும் கவுந்தியடிகளும் தீமைகளை அகற்றும்  கோயிலை  உடைய தென்கரையை அடைந்து மலர் சூழ்ந்து கிடக்கின்ற பொலிவு பெற்ற ஒரு சோலையினுள் சென்றிருந்த போது,

அடாவடித்தனமுள்ள பரத்தை ஒருத்தி வீண்மொழி பேசும் ஒருவனோடு மணம் பரந்த பூஞ்சோலையை நெருங்கி வந்தனர்.

காமனும் அவனது தேவியும் போலக் காணப்படுகின்ற இவர்கள் யாரென்று கேட்டு அறிவோம் என்று நெருங்கி,

விரதத்தினை மேற்கொண்டதால் இளைத்த உடலையும் தவத்தையும் உடைய தாயே தங்களோடு வழிச் செலவு மேற்கொண்ட இவர்கள் யாரென்று கேட்டனர்.

இவர்கள் நீங்கள் கூறியது போன்று காமனும் அவன் தேவியுமல்லர், மனிதப் பிறவியினர், என் மக்களாவர். வழிச் செல் வருத்தத்தினால் மிகவும் துன்புற்றவர். அவரிடம் செல்லாமல் விலகிச் செல்லுங்கள் என்று கூறினார் கவுந்தி அடிகள்.
           
நூல்களைக் கற்று அவற்றின் பயனை உணர்ந்த பெரியீர் ஒரு வயிற்றுப் பிறந்தோர் கணவனும் மனைவியுமாகக் கூடி வாழ்க்கை நடத்துவது நீர் கற்ற நூல்களில் கூறப்படுதலும் உண்டோ எனக் கேட்டனர் அவர்கள்.

இவ்வாறு அவர்களது இழிந்த கொடுமொழிகளைக் கேட்டு இரு காதுகளையும் பொத்திக் தன் கணவன் முன்னர்க் கண்ணகி நடுங்கி நிற்கவும் இவர்கள் என் பூங்கோதை போன்ற கண்ணகியை இகழ்ந்ததனால் முள் நிறைந்த காட்டில் முதிய நரிகளாகக் கடவதென்று மனத்துள் நினைத்தார் கவுந்தியடிகள். தவவலிமையால் கவுந்தி அடிகள் இட்ட சாபம் அவர்களைப் பற்றியதால் என்ன நடந்ததென்று அறியாத கண்ணகியும் கோவலனும் குறுநரியின் நீண்ட ஊளை ஒலியைக் கேட்டு நடுங்கினர். நல் நெறியிலிருந்து நீங்கிய அறிவில்லா மக்கள் தன்மை அற்ற சொற்களைச் சொன்னாலும் அது அறியாமையால் சொல்லியது என்பதைப் பெரியோர் உணர்தல் வேண்டும். தவம் செய்தவராகிய தாங்கள் தங்கள் திருமுன்பு தவறு செய்த இவர்களுக்கு சாபத் தீர்வுக் காலத்தை கூறி அருள்வீ்ர் என்று கூறினர்.

தமது அறியாமையின் காரணமாக இன்று இழிபிறவி உற்ற இவர்கள் உறையூர் மதில் புறமாகிய காவல் காட்டில் திரிந்து பன்னிரண்டு மாதங்கள் துன்பத்தினால் வருந்திய பின் முந்திய வடிவம் பெறுவார் என்று சாப விடுதலை கூறினார்.

தவத்தால் சிறப்புப் பெற்ற கவுந்தி அடிகளும் கண்ணகியும் கோவலனும் முறம் போலும்  செவியினை உடைய யானையைப் போரில் வென்ற புறத்தே சிறகினையுடைய கோழியின் பெயரைக் கொண்ட நகரினுள் புகுந்தனர்.
கட்டுரை
முடியுடை அரசராகிய சோழர், பாண்டியர், சேரர் என்னும் மூவருள்ளும் வீரவளை விளங்கும் பெரிய கையை உடைய சோழர் குலத்தில் பிறந்தோருடைய அறன் முதலாகப் பாணி ஈறாக உள்ள அனைத்தும் இங்கு சொல்லப்படாத பிறபொருட்களையும் சேர்த்து பொருந்தித் தோன்றும் ஒப்பற்ற முறைமையின் நிலைபேறும் ஒரு நோக்காகக் கிடந்த புகார்க் காண்டம் முற்றுப் பெற்றது.

அறன்                                 -     அறனோம் படை (5:179)
மறன்                                  -     இமயத்துப் புலி பொறித்தது (5:97-8)
ஆற்றல்                               -     அமராபதி காத்தது (6:14)
மூதூர்ப் பண்பு மேம்படுதல    -     ஒடுக்கங்கூறாமை (1:18)
விழவு மலி சிறப்பு                 -     இந்திர விழவு (5)
விண்ணவர் வரவு                  -     (6:72-3)
குடி                                     -     உழவிடை விளைப்போர் (10:150)
கூழின் பெருக்கம்                 -     செந்நெல் காய்த்தலையில் கூட்டின் நெற்சொரிதல்
                                                (10:123-4)
காவிரிச் சிறப்பு                    -     கரியவன் புகையினும் .... ஓலிக்கும் (10: 102 - 9)
பொய்யா வானம் புதுப்புனல்
மொழிதல்                            -     மழைக்கரு உயிர்த்தல் (10:143)
அரங்கும் ஆடலும் தூக்கும்    -     (3)
வரி                                     -     கண்கூடு வரி ஆகிய எட்டு வரியும் (ம்8:74 - 108)
பாரதி விருத்தி                      -     பதினோராடல் (39-63)
திணைநிலைவரி                  -     (7: 17-23)
இணைநிலைவரி                  -     (7)
யாழின் தொகுதி                   -     சித்திரப் படம் முதல் பட்டடை வரையுள்ளன (7:1)
                                                            உழைமுதற் கைக்கிளை முதலாயினவுமாம் (8:32)
ஈரேழ் சகோடம்                    -     ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வி (3:70)
இடைநிலைப் பாலை           -     கோடி விளரி மேல்செம்பாலை முதலாயின (3:88)
தாரத் தாக்கம்                      -     (8:38)
தான்தெரி பண்                    -     அகநிலை மருதம் முதலாயின (8:39-40)
ஊரகத்து ஏர்                        -     ஊரின் வண்ணம் (5)
            ஒளியுடைப் பாணி                -     வெங்கட் டொலைச்சிய விருத்திற் பாணி
                                                முதலாயின(10:131.)

வெண்பா
            காலையில் உதித்து ஒளி விரியும் கதிரவனும் மாலையில் உதிக்கும் வளரும் இயல்புடைய திங்களும் போல வாழ்க கடலாகிய அகழோடு அமைந்த புவனிக்கு மாலை எனப்படும் புகழோடு பொருந்திய காவிரிப்பூம் பட்டினம்.

இந்தக் காதையின் சிறப்புகள்
1.   வான்கண் விழியா வைகறை யாமத்து மீன்திகழ் விசும்பின் வெண்மதி நீங்கக் காரிருள் நின்ற கடைநாட் கங்குல் என்பது நிறைமதி நாளுக்கு முந்திய இரவின் விடியல் பொழுது எனும் பொருளைத் தரும். வளர்பிறையின் போது மாலையில் மேற்கு வானில் தோன்றத் தொடங்கும் நிலவு நாள்தோறும் வளர்வதுடன் சிறிது சிறிதாக கிழக்குத் திசையில் முந்தித் தோன்றி தொடக்கத்தில் முன்னிரவிலும் பின்னர் சிறுகச் சிறுகப் பின்னிரவிலும் மறையும். முழு நிலாவுக்கு முந்திய இரவு விடியும் போது அன்றுதான் பின்னிரவின் கடைசி இருண்ட நாள். இதனைக் கூறியதன் மூலம் இளங்கோவடிகள் சிலப்பதிகார நிகழ்ச்சிகளின் காலத்தைக் குறிப்பாக உணர்த்த முற்பட்டுள்ளார் என்ற அடியார்க்குநல்லாரின் கூற்று உண்மை எனத் தோன்றுகிறது. அவரது முடிவுகள் சரியானவையா என்பதை மட்டும் நாம் பார்க்க வேண்டும்.

நிலவு புவியைச் சுற்றி ஒருமுறை வருவதற்குச் சரியாக 27.322 நாட்கள் ஆகின்றன. புவியிலிருந்து பார்க்கும் போது அது சரியாக 29.53 நாட்களாகத் தெரிகின்றன. இதைக் கிட்டத்தட்ட 29½ நாட்கள் என்று கொண்டால், நாள் ஒன்றுக்கு  = 12°-12'-12" (பாகை, கலை, விகலை) நிலவு வளர்பிறையில் மாலையில் கிழக்கு நோக்கி நகர்ந்திருக்கும். எனவே பின்னிரவு இருட்டு குறைந்துகொண்டே வரும். முழு நிலவுக்கு முந்திய நாள் பின்னிரவின் கடைசி நாள். முழுநிலவன்று பின்னிரவு இருட்டு முடிந்து போயிருக்கும். தேய்பிறையிலிருந்து முன்னிரவு இருட்டு தொடங்கும். அந்த வகையில் கோவலன் மதுரைக்குப் புறப்பட்ட நாள் வளர்பிறையின் கடைசி அதாவது பதினான்காம் பிறை அல்லது பக்கல். அதிகாலை இருளைக் கதிரவன் அகற்றுவதற்கு முன் ஒரு நாளின் 60 நாழிகைகளில் புவி தன் 360 பாகைகளை ஒரு முறை சுற்றுவதால் ஒரு நாழிகையில் 6 பாகைகள் சுழல்கிறது. அவ்வாறு நிலவின் ஒரு நாள் நகர்வுக்கு 12°-12'-12" என்பதற்கு 2 நாழிகை 2 கலை, 2 விகலை அதாவது 24X2 = 48 நொடிகள்

  2 விகலை =    
                           =0.8

மொத்தம் 48 நிலைமயம் 48.8 நொடிகள் அதாவது கதிரவன் வெளிப்படுவதற்கு 48 நிமையம் 48.8 நொடிகளுக்கு முன் உள்ள கடைநாட்கள் காலத்திற்குள் அதாவது விடிகாலை 5 மணி, 11 நிமையம் 11.20 நொடியிலிருந்து 6.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் புறப்பட்டிருக்கிறார்கள்.

2.   கோட்டைக் கதவின் தாழ்ப்பாள் ஆட்டுக் கடா, கவரிமான், அன்னம் ஆகியவற்றின் வடிவத்துடன் செய்யப்பட்ட வேலைப்பாடு கொண்டிருந்தது என்பதை, ஆடும் மானும் அன்னமும் துணையாக உலவும் எனவும் கதவில் சுற்றும் எனவும் பொருள் படுமாறு திரியும் என்ற சொல்லை அழகாகக் கையாண்டுள்ளார் அடிகள்.

3.   இந்த வாயிலுக்கு வெளியே அமைந்துள்ள கோயில்களின் வரிசையொன்றை அடிகள் இங்கு தருகிறார். அவற்றை முதலில் பட்டியலிடுவோம்,
1. பாம்பின் மீது பள்ளிகொண்ட திருமால் கோட்டம்,
2. புத்த சமயத்துக்குரிய இந்திர விகாரங்கள் ஏழு,
3. சமணர்களின் சிலாதலம் – கற்படி.

இந்தக் கோயில்கள் உள்கோட்டைக்கும் புறக்கோட்டைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருந்தன.

இப்போது சென்ற காதையில் கூறியவாறு இதுவரை நூலில் வந்துள்ள கோயில்களின் பட்டியல் ஒன்றைத் தருகிறோம்.

இந்திரவிழவூரெடுத்த காதை
கனாத்திறமுரைத்த காதை
1.காவற்பூதத்துப் பீடிகை
1.கற்பகக் கோட்டம்
2.வச்சிரக் கோட்டம்
2.வெள்யானைக் கோட்டம்
3.வெள்யானைக் கோட்டம்
3.பலதேவன் கோட்டம்
4.கற்பக மரக் கோட்டம்
4.கதிரவன் கோயில்
5.இந்திரன் கோயில்
5.ஊர்க் கோயில் (அம்மன் கோயில்)
6.சிவன் கோயில்
 6.முருகன் கோயில்
7.முருகன் கோயில்
 7.வச்சிரக் கோட்டம்
8.பலதேவன் (பலராமன்) கோயில்
 8.சாதவாகனன் கோயில்
9.திருமால் கோயில்
 9.அருகதன் கோயில்
10.முப்பத்து மூன்று தேவர்கள்
 10.நிலாக்கோட்டம்
11.பதினெட்டுக் கணங்கள்
 11.பாசண்டதச் சாத்தன் கோயில்
12.புறக்கோட்டையில் உள்ள கோட்டங்கள்
       (அருகன், புத்தன்)
 12.காமவேள் கோட்டம்
13.ஐவகை மன்றங்கள்


நாடுகாண் காதை
1.                   திருமால் கோயில்
2.                   புத்த சமயத்துக்கு உரிய இந்திர விகாரங்கள் 7
3.                   சமணர்களின் கற்படி (சிலாதலம்)

4.   மலையிலிருந்து தொடங்கும் ஆற்றினுள் ஆங்காங்கே கிளையாறுகள் வந்து சேர்ந்து இறுதியில் பேராறாக மாறுவது போல் நகரத்தின் பல பகுதிகளிலும் திசைகளிலுமிருந்து வந்து சேர்ந்து பேராற்று வெள்ளம் போல் மக்கள் திரண்டு செல்வதை நகரங்களில் நாம் காலை மாலை வேளைகளில் காணலாம். இதனை இளங்கோவடிகள் மிகச் சிறப்பாகச் சொல்லோவியமாக்கி இருக்கிறார்.

5.   புகாரில் பட்டினப்பாக்கம், மருவூர்ப்பாக்கம் என்ற இரு பகுதிகளில் மருவூர்ப் பாக்கத்தில், வாணிகர்களின் தெருவில் இருந்த கோவலனின் வீட்டிலிருந்து புறப்பட்ட கோலவனும் கண்ணகியும் அப் பகுதிக்குரிய கடைவாயிலைக் கடந்து புகார் நகருக்கா பொது வாயிலையும் கடந்து அதற்கு வெளியில் இருந்த, அரசன் இன்பமாகப் பொழுதுபோக்கும் இவலந்திகைப் பள்ளியின் கோட்டை மதிலையும் தாண்டி காவிரிக்கரையை அடைந்தனர். அவ்வாறு அடைந்தவர்கள் காவிரியின் வடகரையில் இருந்த பூங்காவில் நுழைந்து சென்றனர் என்ற கூற்றிலிருந்து பூம்புகார் நகரின் அமைப்பு தோராயமாக நம் மனதில் உருவாகிறது.

6.   வீட்டை விட்டு வெளியே வராமல் வெளியுலகமே அறியாமல் இருந்தாள் கண்ணகி. அத்துடன் கோவலனைப் பார்த்து எது மதுரைப் பெருநகரம் என்று கேட்டது
                        இறுங்கொடி நுசுப்போ டினைந்தடி வருந்தி
                        நறும்பல் கூந்தல் குறும்பல் உயிர்த்து
                        முதிராக் கிளவியின் முன்னெயி றிலங்க
                        மதுரை மூதூர் யாதன வினவ
      என்ற வரிகள் கண்ணகி மீது நமக்குக் கழிவிரக்கத்தை உண்டாக்குகின்றன.
                        ஆரைங் காதநம் மகனாட் டும்பர்
                        நாரைங் கூந்தல் நணித்தெனக்
      கூறிச் சிரிக்கும் கோவலனின் இரக்கமற்ற செயலைப் பார்த்து சினமும் வருகிறது. அது போல் நகர இன்ப வாழ்வு தவிர இன்னொரு பக்கத்தை அறியாத அவனது அறியாமையையும் அவனது சொற்கள் காட்டுகின்றன.

ஆறைங்காதம் என்பதற்கு ஆறு அல்லது ஐந்து என்றும், ஆறும் ஐந்தும் பதினொன்று என்றும் ஆறு பெருக்கல் ஐந்து முப்பது என்றும் பொருள்கொள்ளலாம். ஆனால் புகாருக்கும் மதுரைக்கும் இருக்கும் தொலைவான ஏறக்குறைய 180 மைல்களை முப்பது கொண்டு வகுத்தால் காதத்துக்கு 6 மைல்கள் ஈவாகக் கிடைக்கும்.

      காதம் போன்ற நீட்டலளவையாக இருந்தாலும் சரி கழஞ்சு போன்ற நிறுத்தலளவையாக இருந்தாலும் சரி நாழி போன்ற முகத்தலளையாய் இருந்தாலும் சரி ஒரே பெயரில் அவை வெவ்வேறு காலத்துக்கு வெவ்வேறு அளவுகளைக் குறிக்கின்றன. இன்று பலரும் கூறுவது ஒரு காதம் என்பது பத்து மைல்கள் என்பது. ஆனால் அபிதான சிந்தாமணி தரும் ஒரு வாய்பாடு இதற்கு முற்றிலும் மாறுபாடான செய்தியைத் தருகிறுது.

      கணித வகை என்ற சொல்லின் கீழ் பூப்பிரமாணம் என்ற பிரிவில் இது வருகிறது. கீழே அதை வரிசைப்படுத்தி இன்றைய அடி அளவு முறையின் இணை அளவுகளையும் தருகிறோம்.

சாண் 2 கொண்டது ஒரு முழம்           = 1½ அடி.
முழம் 12 கொண்டது ஒரு சிறுகோல்   = 18 அடி.
சிறுகோல் 4 கொண்டது ஒரு கோல்   = 72 அடி.
கோல் 55 கொண்டது ஒரு கூப்பிடு     = 3960 அடி.
கூப்பிடு 4 கொண்டது ஒரு காதம்       = 15840 அடி.

      கைவிரல்களை விரித்து பெருவிரல் நுனிக்கும் சுண்டு விரல் நுனிக்கும் உள்ள மிகக் கூடிய இடைவெளி சாண் எனப்படும். அதனை நாம் இன்று முக்கால் அடிகள் என்று கொள்கிறோம். அடி என்பதே அடி எனப்படும் காலின் அடிப்படையில் அமைந்ததுதானே! எனவே மேலே தரப்பட்டுள்ள அடிகளிலான நமது குறிப்பில் தவறேதும் இல்லை. பொதுவாக நம் நீட்டளவையில் 11க்கு ஒரு முகாமையான பங்கு உண்டு. நம் நாட்டிலுள்ள மரபு வண்டிச் சக்கரத்தின் புறவிட்டம் 5¼ அடிகள்.

ஒரு சுற்று வரும் போது அது செல்லும் தொலைவு:
= 16½  அடிகள்.


நான்கு சுற்றுக்கு 66 அடி.                                        = ஒரு தொடரி (சங்கிலி)
பத்து தொடரி                                             = 660 அடி. ஒரு படைசால் (பர்லாங்கு)  தச்சு முழக்கோலின் நீளம்                             =     2¾ அடி
6 தச்சு முழம்                                                         = 16½ அடி
24 தச்சு முழம்                                                        = 1 தொடரி[1].
ஆக 11 அடிப்படை நீட்டலளவாக நம் மரபுகளில் இருப்பதால் அபிதான சிந்தாமணியில் 56 கொண்டது ஒரு கூப்பிடு என்றிருப்பதை நாம் 55 என்று எடுத்துள்ளோம்.

இப்போது, ஒரு காதம் ஆக நாம் கணித்த அடிகளிலான நீளத்தை மைலின் அடிகளிலான நீளத்தால் வகுத்தால் கிடைப்பது             
                                                               
மைல்கள்



                                                                                                           

      நாம் மேலே காதத்துக்குத் தந்திருக்கும் வாய்பாட்டில் கூப்பிடு என்பதும் காதம் என்ற சொல்லின் அடிப்படையான காது என்பதும் நமது மரபு நீட்டலளவைக்கும் ஒலிக்கும் ஏதோ உறவு  இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. எனவே ஒலியின் பண்பு பற்றிச் சிறிது பார்ப்போம்.

      சராசரி புவி வெப்ப நிலையில் ஒலியின் விரைவு நொடிக்கு 1100 அடிகள். ஒரு நாழிகைக்கு இன்றைய மணி, நிமையம், நொடிக்கணக்கில், 

      ஒரு நாழிகை = 24 நிமையம்.
                           = 24×60 = 1440 நொடிகள்
எனவே, ஒரு நாழிகையில் ஒலி செல்லும் தொலைவு
                            = 1440×1100 = 15,84,000 அடிகள்
                             = 100 காதம்.
ஆக, ஒரு நாழிகையில் ஒலி செல்லும் தொலைவில் நூற்றில் ஒன்றாக, காதம் என்ற ஒன்றியை நெடுந்தொலைவுகளைக் குறிப்பதற்காக நம் முன்னோர் கொண்டுள்ளனர் என்பது தெளிவு.

      இதிலிருந்து மீற்றர் அளவு முறைக்கும் நம் அளவு முறைக்கும் உள்ள உறவினை ஆய்ந்தால் பனிநிலையில்(0° சென்றிகிரேடில்) ஒலியின் விரைவு 1089 அடிகள். மீற்றர் 3.3அடிகள் என்று கொண்டால் 10மீ. சதுரத்தின் பரப்பு = 33x33 = 1089 சதுர அடிகள் என்பது கிடைக்கும். இது பற்றிப் பிறிதோரிடத்தில் நாம் விரிவாகப் பார்க்கலாம். ஆனால் ஒன்று மட்டும் உறுதி. நம் பண்டை அறிவியலைத் தடம்பிடிக்கச் சொல்லாய்வுகளை விட நம் மரபுச் செய்திகளும் நடைமுறைகளும் இன்றைய மேலை அறிவியலும் அடிப்படை உண்மைகளைப் பற்றிய சரியான புரிதல்களும்தாம் உண்மையில் உதவும் என்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.

   ஆறைங்காதமே என்ற கோவலன் கூற்றின் மூலம் ஒருவேளை சிலப்பதிகாரக் காலத்தில் ஒரு காதம் என்பது ஏறக்குறைய 6 மைல் தொலைவைச் சுட்டியிருக்கலாம் அல்லது கண்ணகியை அமைதிப்படுத்துவதற்காகத் தன் வாயில் வந்த ஒன்றைச் சொன்னான் கோவலன் என்றும் கொள்ளலாம். ஆனால் கட்டுரை காதையில் ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து அழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று (வரி 133 – 4) மதுரை எரியுண்டது என்று கூறப்பட்டுள்ளதால் வைகாசி மாதம் நிறைமதியன்று புகாரிலிருந்து புறப்பட்டது முதல் மதுரை எரியூட்டப்படுவது வரை ஆனி, ஆடி இரண்டு மாதங்களின் நிறைமதிகளுக்கு இடையில் 59ம் தேய்பிறை எட்டாம் பக்கம் வரை 8  நாட்களும் ஆக மொத்தம் 67 நாட்கள் ஆகின்றன. நாளுக்கு ஒரு காதம் என்ற கணக்கில்(காவத மல்லது கடவா ராகி – வரி 154) பார்த்தால் காதத்துக்கு 3 மைல்களே ஆகிறது.

4.       கவுந்தியடிகளை(கவுந்தி ஐயை என்பதன் மூலம் அவர் பெண் என்பதை அறிமுகத்திலேயே தெளிவாகக் கூறி விடுகிறார் இளங்கோவடிகள். இருப்பினும் புலவர் ஆ.பழனி அவர்களுக்கு ஓர் ஐயம் அவர் ஆணாக இருப்பாரோ என்று)க் கண்டு வணங்கியது, உயர் குடியில் பிறந்தவர் போன்று தோன்றும் அவர்கள் இப்படி பெண்ணோடு ஏன் புறப்பட்டார்கள் என்று கேட்ட போது உரையாட்டில்லை உறுதவத்தீர் என்று கோவலன் கூறினான் ஆயினும் ஒழிகென ஒழியீர் என்ற அடிகளின் கூற்று மூலம் அவனை வற்புறுத்திச் செய்திகளை முழுமையாக அவர் அறிந்திருந்தார் என்பதை இளங்கோவடிகள் புலப்படுத்தி அவர்களது உரையாடலை தவிர்த்திருக்கிறார் என்பது புலனாகிறது.

5.       வயலுஞ் சோலையு மல்ல தியாங்கணும் அயல்படக்  கிடந்த நெறியாங் கில்லை என்று காவிரி ஆற்றுப்பரப்பின்(டெல்டா) ஊடு நடந்து செல்வதில் உள்ள இடர்களைக் கூறுவது போல் அதன் வளமையை எவ்வளவு இனிமையாக எடுத்து வைக்கிறார் கவுந்தியடிகளின் வாய்மொழிகளில் இளங்கோவடிகள்!

      அத்துடன் உயிர்களுக்குத் துன்பம் செய்யாமை, கள்ளுண்ணாமை என்ற அருகநெறி பற்றியும் அவர் வாய்வழி வெளிப்படுத்தி விடுகிறார்.

6.   கோவலன் - கண்ணகியோடு புறப்பட்ட கவுந்தியடிகள் தன்னுடன் கொண்டு சென்ற பொருட்களைப் பட்டியலிடும் இளங்கோவடிகள்,

தோமறு கடிஞையும் சுவன்மே லறுவையும்
.....கைப் பீலியுங் கொண்டு
சென்றதாகக் கூறுகிறார். இதில் சுவன் மேலறுவை என்ற தொடர் நம் கவனத்தை ஈர்க்கிறது. சுவல் என்பது தோள். அறுவை என்பது துணி. எனவே சுவல் மேல் அறுவை என்பது தோளில் தொங்கவிட்ட துணியாலான உறி. இப்போதும் இரந்துண்ணும் (போலிப்)பண்டாரங்கள் அத்தகைய துணியாலான உறியை தோளில் தொங்கவட்டிருப்பதைக் காணலாம்.
     
இளங்கோவடிகள் கையாண்டுள்ள இந்தச் சொல் இன்று சோல்னாப்பை என்ற வடிவு கொண்டு உலவுகிறது. சுவல் + நால் + பை என்பதுதான் சோல்நாப்பையின் விரிவு. சுவல் = தோள், நால்தல் என்றால் தொங்குதல்; சோல் நால் பை என்பதற்கு தோளிலிருந்து தொங்கும் பை என்பதுதான் நேரடிப் பொருள். சோ என்பதற்குக் கிரந்த வடிவம் கொடுத்து வைத்திருக்கிறார்கள். சிலப்பதிகாரக் காலத்தில் வழங்கிய இந்தச் சொல் எங்கு மறைந்திருந்து 20 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில், அதுவும் தமிழை, தமிழகத்தை வெறுக்கும் அல்லது கீழறுக்கும், காட்டிக் கொடுக்கும் முற்போக்குக் கும்பல்களின் வாயிலிருந்து வெளிப்பட்டது என்பது ஆய்வுக்குரிய ஒரு கேள்வி.

7.காவிரி ஆற்றைப் பற்றிய செய்திகள் இவை.
கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
கால்பொரு நிவப்பிற் கடுங்குர லேற்றொடுஞ்
சூன்முதிர் கொண்மூப் பெயல்வளஞ் சுரப்பக்
குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு
கடல்வள னெதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் .....
இவ்வரிகளில்
1.   மழை பொய்ப்பதற்கான வானியல் சூழல்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றில்,
1.       கரியவன், அதாவது சனிக்கோள். சனிக்கோளைச் சுற்றி வட்ட வடிவில் வளையங்கள் இருப்பதை நாம் அறிவோம். அவை நீராலும் பனித்துகள்களாலும் தூசிகளாலும் ஆனவை. சனிக்கோளோ வளிகளாலானது. அவ் வளிகள் கனம் குறைந்தவை. அவற்றைச் சுற்றித் துகள்களாலான வளையங்கள். இது ஒரு விந்தையான கலவை. சனி கதிரவனிலிருந்து மிகத் தொலைவிலுள்ள கதிரவனின் கோள். எனவே அங்கு கதிரவனின் ஈர்ப்புவிசை குறைவு. புகைதல் என்பதற்கு பகை வீடுகளில் சென்று மாறுபடுதல் என்று வெங்கடசாமியார் பொருள் கூறுகிறார். அடுத்துள்ள கோள்கள் அல்லது நெருங்கி வரும் தொலைவிலுள்ள விண்மீன்களால் அதில் புயல்கள் தோன்றுவது என்று பொருள் கொள்ள வேண்டும். அது அரிதாக நடைபெறும் நிகழ்வாக இருக்கக் கூடும்.

நமது மரபு வானியல் அறிவைப் புறக்கணிப்பவர்கள் கூறும் காரணங்கள் மூன்று:
1. கோள்கள் என்று இன்றைய வானியலாளர்கள் கூறும் எண்ணிக்கை 9: அவை
1. புதன்                          6. சனி
2. வெள்ளி                      7. யுரானசு
3. புவி                            8. நெப்டியூன்
4. செவ்வாய்                   9. புளூட்டோ
5. வியாழன்
                             
இவற்றில் 9வதான புளூட்டோவை, அது மிகத் தொலைவில், சிறியதாக இருப்பதாலோ என்னவோ 2006இல் கிரகங்களின் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டார்கள்[2] (அவர்கள் நீக்கினாலும் சரி சேர்த்தாலும் சரி அதைச் சரியென்று ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நாம் மூட நம்பிக்கையாளர்கள் என்பது இங்குள்ள ‘’அறிவியலாளரின்’’ முடிவு ). ஆனால் நம் மரபு கூறுவதோ வெறும் ஏழு கோள்களைத்தான்.

2.இன்றைய அறிவியல்படி கோளே அல்லாத ஒரு விண்மீனான கதிரவனையும் துணைக்கோளான நிலவையும் நாம் கோள்களின் பட்டியலில் சேர்த்துள்ளோம் என்பது.

3.      இன்றைய அறிவியலின் படி வானிலுள்ள எந்தக் கோளாலும் புவியின் மீதும் மனித வாழ்வின் மீதும் அதனால் எந்த விளைவும் கிடையாது என்பது.

இக்குறை கூறல்களுக்கு நாம் இப்போது விடை கூறுவோம். முதலில் 3 ஆம் குறையிலிருந்து தொடங்குவோம்.

மனிதர்களின் மனநிலையோடு நிலவுக்குத் தொடர்பு உண்டு என்பதில் குறிப்பாக, மன நோயாளியைப் பொறுத்தவரை அனைவருக்கும் தெரியும். குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள், குறிப்பாகத் தோல் நோயாளிகள், ஆகியோருக்கு காருவா, வெள்ளுவா நாட்களில் உடல் நலம் பாதிக்கப்படும் என்பதும் தெரிந்ததே. இவ்வாறு தெளிவாகத் தெரிந்த தாக்கம் மிக அண்மையிலுள்ள ஆனால், பிற அனைத்தையும் விடச் சிறியதாகிய நிலவுக்கு இருக்கிறது. அத்துடன் அது புவியின் நேரடி ஈர்ப்புக்கு ஆட்பட்டுத் தன் ஈர்ப்பை புவியின் மீது செலுத்துகிறது. ஓதம் என்றும் ஏற்றவற்றம் என்றும் அறியப்படும் வீங்கலை எனும் இயற்காட்சி நிலவின் ஈர்ப்பு விசையால் உலகக் கடல்கள் மீது இராப்பகல் வேறுபாடின்றி நிகழ்ந்துகொண்டிருப்பதை அறிந்தும் இப்படிக் கூறுவோரின் நாணயமின்மையை அல்லது கண்மூடித்தனத்தை என்னென்று சொல்வது? அது போலவே பிற கோள்களும். அவற்றின் உள்ளடக்கம் வளியா, பாறையா என்பது, பருமை, தொலைவு ஆகியவற்றின் அடிப்படையில் புவியின் மீதும் அதிலுள்ள உயிர்ப்பொருட்கள், ஆற்றல் வாயில்கள் ஆகியவற்றின் மீதும் கொண்டுள்ள தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் கோள்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியிருக்கலாம்.

அடுத்து இரண்டாம் குறைகூறலுக்கு வருவோம். மேலே நாம் கூறியுள்ளபடி புவியின் மீது வான் பொருட்கள் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாகவே அவற்றை நம் முன்னோர் அடையாளம் கண்டுள்ளனர் என்ற அடிப்படையில் நம் வானியல் புவியை நடுவாகக் கொண்ட ஒன்று என்பது புலப்படும். அந்த அடிப்படையில்தான் நாள்களின் பெயரும் அதன் வரிசையும் இடம் பெறுகின்றன. ஒருவேளை புவியின் மீதுள்ள அவற்றின் தாக்கமும் அந்த வரிசைக்கு ஒத்து வருமா என்று பார்க்க வேண்டியது “வானியல் வல்லுநர் என்று எவராவது தமிழர்களுக்குள் இருந்தால் அவர்களது கடமை. இன்றைய அறிவியலின்படி கதிரவக் குடும்பத்தின் வரிசை
1.ஞாயிறு 2. புதன். 3. வெள்ளி 4. திங்கள் - புவி 5. செவ்வாய் 6. வியாழன் 7.சனி.

                       ஞா பு வெ தி புவி செ வி ச           
நாட்களின் வரிசையைப் புவியை நடுவாகக் கொண்டு பார்ப்போம். அது இன்றைய அறிவியலின் படியான உண்மை நிலைக்கு முரணாக உள்ளது. முதலில் இடது பக்கத்தில் இருக்கும் திங்கள் அடுத்து வலது பக்கம் இருக்கும் செவ்வாய், அடுத்து இடது பக்கம் வெளியில் இருக்கும் வெள்ளிக்குப் பகரம் புதன், அடுத்து வலது பக்கம் வெளியில் இருக்கின்ற வியாழன் அடுத்து இடது பக்கம் வெளியிலிருக்கிற புதனுக்குப் பகரம் வெள்ளி அடுத்து வலது பக்கம் கோடியிலிருக்கிற சனி, இறுதியாக இடது கோடியிலிருக்கும் ஞாயிறு.

நாள் பெயர்களின் வரிசை வைப்புக்கு மேலே தந்திருக்கும் விளக்கத்தை வைத்துப் பார்த்தால்,
                     ஞா வெ பு தி புவி செ வி ச
என்று வருகிறது. இதற்கான விளக்கம் எதுவாக இருக்கக் கூடும்?[3]

புதன் என்ற சொல் புதியது எனப் பொருள்படும் புத்தன் என்ற சொல்லின் திரிபு ஆகும். புத்தன்துறை, புத்தன் சந்தை போன்ற எத்தனையோ ஊர்ப் பெயர்களைக் குமரி மாவட்டத்தில் காணலாம். நெல்லை மாவட்டத்தில் கூட புத்தன் தருவை என்று ஓர் இடம் உள்ளது.

புதியது என்பது அறிவைக் குறிப்பதும் ஆகும். இதுவரை அறியாத ஒன்று என்ற வகையில் புதியது அறிவுத் திரட்சியில் இடம் பெறுகிறது. புத்தி என்பதும் அதன் தொடர்ச்சியான சொல்லே. எனவே புத்தரையும் புதனையும் பிற மொழிச் சொற்கள் என்ற கருத்தில் அறிவன் என்று பெயர்த்து வழங்கத் தேவையில்லை.

புதன் கோள் அண்மையிலுள்ள வெள்ளியின் மீது புவியின் ஈர்ப்பு விசையால் வெள்ளியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது; புவி தன் துணைக்கோளான நிலவு மூலம் வெள்ளியை நெருங்கிய ஒரு சூழலில் இது நிகழ்ந்திருக்கும் என்றொரு கருத்து வானியல் துறையில் நிலவுகிறது. இக் கருத்துக்குத் துணையாக நம் தொன்மக் கதை ஒன்று உள்ளது.

திங்கள் தன் ஆசானின் மனைவியுடன் கள்ள உறவு கொண்டு புதன் பிறந்தான் என்று மகாபாரதத்தில் நிலவு மரபினராகக் கூறப்படும் கவுரவர் – பாண்டவர் தோற்றம் பற்றிக் கூறும் ஆதிபர்வத்தில் கூறப்பட்டுள்ளது. குரு என்று இக் கதையில் கூறப்பட்டுள்ளதை தேவ குருவாகிய வியாழன் என்றே பொருள் கொள்கின்றனர் அனைவரும். ஆனால் உண்மையில் அசுர குருவாகக் கூறப்படும் வெள்ளி, அதாவது சுக்கிரனையே இது குறிக்கும். சிலப்பதிகாரம் வெங்கடசாமியார் பதிப்பிலேயே இதற்கு தடயம் ஒன்று உள்ளது. ஊர்காண் காதை 195 – 6 வரிகளில் முத்துகளின் சிறப்பைக் கூறுகையில் சந்திர குருவே அங்கா ரகனென வந்த நீர்மைய வட்டத் தொகுதியும் என்பதற்கு, “சந்திரகுரு – வெள்ளி, வியாழன் என்றால் புராணத்திற் கொத்தது” என உள்ளது. அதாவது மகாபாரதக் கதைமாந்தர் அசுரர்கள், அதாவது நாகர்கள் என்பதை மறைத்து தேவர்கள் என்று கூறும் அந்நக் கதை தோன்றும் முன் தமிழர்களிடையில் சந்திரனின் குரு வெள்ளி என்ற மரபே இருந்திருக்கும் என்பது புலனாகிறது.

கதிரவனை அடுத்து இருந்த வெள்ளியிலிருந்து பிரிந்த புதன் அதனைச் சுற்றி வந்தது. நாளடைவில் புதன் கதிரவனின் ஈர்ப்புக்கு உள்ளாகி அதனைச் சுற்றத் தொடங்கியது. இவ்வாறு கதிரவனுக்கு அடுத்திருந்த வெள்ளியின் இடத்தைப் புதன் பிடித்துக்கொண்டது. அப்படியானால் இன்றாய 7 நாட்களின் பட்டியல் புதன் வெள்ளியைச் சுற்றி வந்த காலத்தில் உருவாக்கப்பட்டிருக்குமா? அவ்வாறாயின் அது எத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன்? அப்போது புவியில் மனிதன் தோன்றியிருப்பானா? இந்தக் கேள்விகள் எழுகின்றன.

இற்றை அறிவியலில் மனிதனின் தோற்றமாகக் கூறும் காலத்துக்கும் பண்டை மனிதன் பதிந்துள்ள புவியியங்கியல் நிகழ்வுகளுக்கும் ஒரு பெரும் இடைவெளியை உலக நாகரிகங்களின் பழம்பதிவுகள் உலகெங்கும் காட்டுகின்றன; ஆனால் அந்த இடைவெளி புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் சுருங்கி வருகிறது என்று அலெக்சாண்டர் கோந்திரத்தோவ் தன் புகழ்பெற்ற மூவாரிகளின் புதிர்கள் நூலில் கூறுகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த சு.கி.செயகரன் என்பாரின் குமரி நிலநீட்சி என்ற நூலில் திபெத்திய மக்களிடையில் வழங்குவதாக ஒரு மரபுச் செய்தியைத் தருகிறார்: கடல் தங்கள் நாட்டை நோக்கி உயர்ந்து வந்ததாகவும் கடவுள் வங்காளத்தில் உடைப்பை ஏற்படுத்தித் தங்களைக் காத்ததாகவும் அப்போது தாங்கள் குரங்கிலிருந்து சற்றே மேம்பட்ட வளர்ச்சி நிலாயில் இருந்ததாகவும கடவுள் மனிதர்களை விடுத்து தங்களுக்கு நாகரிகம் கற்பித்ததாகவும் அக் கதை கூறுகிறது. இந்தியத் தட்டு ஆசியத் தட்டுடன் மோதிய போது உருவான டெத்தீசுக் கடல் பற்றிய செய்தி இது என்பதில் ஐயமில்லை. ஆனால் இம்மரபுக் கதையை அப்படியே விட்டுவிட்டு வேறோர் இடத்தில் டெத்தீசுக் கடல் பற்றிக் கூறி அது 13½ கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது; அப்போது மனிதன் தோன்றவே இல்லை என்கிறார். அப்படியானால் இந் நிகழ்ச்சி எப்படி அம் மக்கள் மரபுக் கதையில் வெளிப்பட்டது?


அவர் இந் நூலெழுதி ஓரிரு ஆண்டுகளுக்கள்ளாக தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்ட 8ஆம் வகுப்பு சமுக அறிவியல் நூல் இந்தியத தட்டு ஆசியத் தட்டுடன் மோதியது 8½ கோடி ஆண்டுகளுக்கு முன் என்கிறது. திரு.செயகரன் தந்தது 19ஆம் நூற்றாண்டில் எய்தப்பட்ட முடிவு. இப்போது அது

% குறைந்துவிட்டது. அதைப் போல் மனிதனின் தோற்றக்காலக் கணிப்பும் அதைப் பின்னோக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது. வல்லரசிய நெருக்குதல்களையும் மீறி இந்தக் கால நெருக்கம் நிகழ்ந்து வருகிறது. ஒருவேளை நம் தொன்மங்கள் கூறும் ஊழிக் காலங்கள் மனிதனின் தோற்றக் காலத்தை முடிவு செய்வதற்குப் பயன்பட்டாலும் படலாம். இந்தப் பின்னணியில் புதன் பற்றிய மேற்கூறிய எம் கருத்துகளை ஆய்வுக்குரியனவாக ஆர்வமும் தொடர்புடைய துறைகளில் அறிவும் உடையோர் கொள்வார்களாக.
    
வியாழன், வெள்ளி முதலியவை கோள்கள். அவை தேவர்களுக்கோ அசுரர்களுக்கோ ஆசான்களாக இருக்க முடியாது. ஆனால் மக்களின் வேளாண்மை, தொழில்கள், கடல் செல்கை போன்றவற்றுக்கு துணை நிற்கும் கால மாற்றங்களுக்கு வழிகாட்டிகளாக நிற்க முடியும். அந்த வகையிலும் இளங்கோவடிகள் தரும் செய்தியை நாம் பார்க்க முடியும்.

பஞ்சாங்கங்கள் எனும் நம் ஐந்திறங்கள் 60 ஆண்டுகள் சுழற்சியைக் கொண்டவை. இந்த 60 ஆண்டுகள் வியாழனின் 5 சுழற்சிகள் என்பர். வியாழனின் சுழற்சி 12 ஆண்டுகள் என்றும் அதை வியாழ வட்டம் என்றும் கூறுவர். நாட்டு வழக்கில் இது “வியாழோட்டம்” எனப்படும். இன்னும் தெளிவின்றி “யாழோட்டம்” என்றும் குறிப்பிடுவர்

உண்மையில் இது 12 ஆண்டுகளல்ல. ஏறக்குறைய 11 ஆண்டுகள் 10 மாதம் 10 நாட்கள் ஆகும். 5 வியாழ வட்டங்களுக்கு ஏறக்குறைய 59 ஆண்டுகள் 3½ மாதங்கள் ஆகின்றன. இதை முழு ஆண்டுகளாகத் தோராயப் படுத்தி 60 ஆண்டுகளாக ஆக்கியுள்ளனர்.

வெள்ளியைப் பொறுத்தவரை சில ஆண்டுகளுக்கு முன் அதன் இடப்பெயர்ச்சி பற்றிய செய்திகள் தாளிகைகளில் வந்தன. அவற்றில் 110 ஆண்டுகளுக்கு ஒன்றும் அடுத்து 8 ஆண்டுகளுக்கு ஒன்றுமாக வெள்ளிக்கு இடப்பெயர்ச்சிகள் உண்டு என கூறப்பட்டது. இது இரண்டு 59 ஆண்டுகளுக்கு சமம். இந்த வகையிலும் 60 ஆண்டுகள் பகுப்பு ஒத்துப் போகிறது.

தேவர், அசுரர் என்ற பிரிவினரையும் அவர்களுக்கு அரச ஆசான்களாக முறையே வியாழனையும் வெள்ளியையும் பற்றியும் நம் தொன்மங்கள் கூறுகின்றன. இது உலகின் இரு பகுதிகளில், ஒருவேளை, முறையே மகரக் கோட்டுக்கு அருகில் ஒன்றும் நில நடுக்கோட்டுக்கு அருகில் இன்னொன்றும் இருந்த நிலப் பரப்புகளில் வாழ்ந்த மக்களை இது குறிக்கலாம். இது பற்றிய ஒரு கதை வடிவிலான குறிப்பை இப்போது காணலாம்.

“அசுரன் வேண்டுகோளின்படி(சுக்கிரன்) சிவமூர்த்தியை எண்ணித் தவத்திற்குச் சென்றிருக்கையில் இந்திரன் சயந்தியை யேவி மணக்கச் செய்ய மணந்து அவளுடன் யார் கண்ணுக்கும் புலப்படாமல் பத்துவருடம் இருக்கையில் வியாழன் சுக்கிரவுருக்கொண்டு அசுரரை மயக்கி அவன் சொற்படி கேட்பிக்கக் கண்டு தான் சென்று உண்மையான சுக்கிரன் நான் எனக் கூறியும் கேளாததனால் அசுரர்களைத் தேவர்களால் அபசயமடையச் சாபம் தந்து மீண்டும் வியாழன் தன் காரிய முடிவில் மறைய அசுரர் தாங்கள் மோசமடைந்தது உணர்ந்து பிரகலாதனை முன்னிட்டு வேண்ட அசுரர்களின் வேண்டுகோளுக்கிரங்கி மீண்டும் அவர்களை மாணாக்கராக்கிக் கொண்டவன்” (அபிதான சிந்தாமணி, சுக்கிரன்,14).

வெள்ளியை அடிப்படையாகக் கொண்டு காலக்கணிப்பும் காலநிலையியல் கணிப்பும் செய்த ஒரு மக்கள் குழுவினர் அசுரர் எனவும் வியாழனை அதே நோக்கத்துக்காக அடிப்படையாகக் கொண்டவர்களைத் தேவர்கள் என்றும் கொண்டால்[4], வான்பொருட்களின் தோற்றத்தில் வெள்ளி கதிரவனின் வெளிச்ச வட்டத்துக்குள் மறைய அந்தக் காலகட்டத்தில் வெள்ளி இருந்த இடத்தில் வியாழன் இருப்பது போல் தோற்றம் தர காலக்கணிப்பிலும் காலநிலைக் கணிப்பிலும் அசுரர் எனப்படுவோர் தவறு செய்து இழப்பெய்தியதை இது குறிக்க கூடும். இந்தக் கதையின் வானியல் பொருளை வெள்ளி, வியாழன் ஆகியவற்றின் இயக்கங்களுடன் ஒத்துப் பார்த்து அதன் பொருளை அறியலாம். இது 118 ஆண்டுகளுக்கொருமுறை வெள்ளி தென்புறம் சென்று திரும்பும் நிகழ்முறையைக் குறிக்கிறதா அல்லது மிக நீண்ட ஒரு கால இடைவெளியில் நிகழும் ஒரு இயற்காட்சியைக் குறிக்கிறதா என்று அறியலாம். இது ஒரு வேளை, பண்டைத் தமிழர்கள் தங்கள் வானியல் அறிவை முழுமைப்படுத்திய காலத்தின் கணிப்புக்கு நமக்கு வழிகாட்டலாம்.

            இந்தக் கதையில் இன்னொரு ஆர்வமூட்டும் செய்தியும் வருகிறது. “அசுரர்……பிரகலாதனை முன்னிட்டு வேண்ட” என்பதிலிருந்து அசுரர் என இக்கதையில் குறிப்பிடப்படுவோர் ஏதோவோரு வகையில் சேரர்களுடன் உறவுடையோராகத் தோன்றுகிறது. சேர நாட்டில் வழங்கப்படும் ஆண்டுமுறையில் வெள்ளிக் கோளின் இயக்கத்தோடு உள்ள தொடர்பு குறித்து ஆய்வது இத்திசையில் ஏதாவது வழிகாட்டக்கூடும். 

அது மட்டுமல்ல வான்பொருட்களுக்கும், குறிப்பாக, கோள்கள் என்று இன்றைய வானியல் நோக்கில் தவறாகக் குறிப்படப்பட்டிருப்பவை என்று திறங்கூறப்பட்டிருப்பவற்றுக்கும் காலநிலைக்கும் உள்ள உறவு பற்றிய நம் முன்னோர்களின் கண்ணோட்டம் பற்றிய தொன்ம வடிவிலான கீழே தரப்படும் இன்னொரு கதை ஆர்வமூட்டுவதாகும்:

இடைக்காடர் எனும் காலநிலையியல் வல்லார் வரும் 12 ஆண்டுகள் மழை பெய்யாது என்று கணிக்கிறார். அதிலிருந்து தப்ப தன் ஆடுகளுடன் கடற்கரைக்குச் சென்று அவற்றுக்கு கடலின் உப்பு நீர்ப் பின்னணியில் செழித்து வளரும் அடம்பக் கொடியை(குமரி மாவட்டத்தில் இதைக் கடம்பாக்கொடி என்பர்)த் தின்ன வைத்துப் பழக்குகிறார். தினை அரிசியை மண்ணில் குழைத்துக் குடிசை அமைக்கிறார். வறட்சிக் காலம் தொடங்கியதும் ஒவ்வொரு நாளும் குடிசைச் சுவரைச் சிறிது தேய்த்தெடுத்து தினையைப் பிரித்து ஆட்டுப்பாலில் கூழ் சமைத்து உண்கிறார். இவ்வாறு 12 ஆண்டுகள் முடியும் நாளில் ஒன்பது கோள்களும் அவரை வந்து சந்திக்கின்றனர். அவர்களுக்குக் கூழ் ஊட்டுகிறார். அவர்கள் வயிறுமுட்ட உண்டு உறங்குகின்றனர். தூக்கக் கலக்கத்தில் அவர்கள் தாறுமாறாகக் கிடக்கின்றனர். அவர் அவர்களை வரிசையாகக் கிடத்திவிட்டுத் தானும் தூங்குகிறார். அன்று இரவு பேயாப் பெருமழை பொழிந்து வரட்சிக் காலம் முடிவுக்கு வருகிறது.

இதன் பொருள், குறிப்பாக, கோள்களை வரிசையாகக் கிடத்தினார் என்பது ஒவ்வொரு நேரத்திலும் கோள்களின் ஒன்றுக்கொன்றான இருப்பு வரிசைக்கும் மழைப் பொழிவுக்குமான தொடர்பை அவர் வரையறுத்தார் என்பதாகும்.

கதிரவனின் ஒளிநிலை, மழைப் பொழிவு, வேளாண் விளைச்சல், பூச்சிதாக்கு, உப்பு விளைச்சல், எண்ணெய் வித்துக்களின் விளைச்சல் என்ற அடிப்படையில் 60 ஆண்டுகளுக்குமான வான்பதவியல் செய்திகளை ண்டுக்கு ஒரு செய்யுளாக வடித்துத் தந்துள்ளார் இடைக்காடர் என்பது மேலே தரப்பட்டுள்ள கதைக்கு நாம் கொடுத்துள்ள விளக்கத்துக்கான மெய்ப்பாகும்.

இவை தவிர மரபுகளாகவும் பதிவுகளாகவும் சில வான்பதவியல் செய்திகளை இங்கு பதிவது பொருத்தமாக இருக்கும்.

புகைக்கொடி என்ற சொல்லுக்கு, “ தூமகேது; வட்டம், சிலை, தூமம் என்னும் கரந்துறை கோட்கள் நான்கினுள் தூமம் எனப்படுவது” என்ற ஒரு செய்தியைத் தருகிறார் வேங்கடசாமியார். இவற்றில் வட்டம் என்பது பரிவேடம் என்றும் பரிவட்டம் என்றும் குறிப்பிடப்படும், நிலவு, கதிரவன் போன்றவற்றைச் சுற்றித் தோன்றும் வட்டங்களாகும். இது குறித்து அபிதான சிந்தாமணி கூறுவது: பரிவேடக்குறி: ஆடி மாதம் பூரணையில் முதற் பத்து நாழிகையில் சந்திரனைப் பரிவேடமிட்டால் ஐப்பசியிலும் இரண்டாம் பத்திலிட்டால் கார்த்திகையிலும் மூன்றாம் பத்திலிட்டால் மார்கழியிலும் இரவு முழுவதும் இட்டிருந்தால் இந்த மூன்று மாதங்களும் மழை உண்டு. சந்திரன், குரு, சுக்ரரும் பரிவேடமிட்டால் நல்ல மழை உண்டு. செவ்வாய், சனியுடன் பரிவேடமிடில் மழையில்லை. கிரகணத்தில் பரிவேடமுண்டாகில் ராஜாக்களுக்கு ஆகாது.[5]

பரிவேடக்குறியின் குறி என்ற தலைப்பில் அபிதான சிந்தாமணி தருவது: பூரம், உரோகிணி, உத்திரம், அத்தம், சித்திரை இந் நாட்களில் மழை பெய்யும் போது வில்லிட்டால் 5, 6, 10, 20, 21 இந் நாட்களுக்குள் மழை பெய்யும், உத்தரம், பூசம், இரேவதி, திருவாதிரை இந் நாட்களிலே சந்திராதித்தர்களைப் பரிவேடிக்கில் 7, 8, 9, 18 நாட்களுக்குள் மழை பெய்யும்.

மேலே தரப்பட்டுள்ளவை வானிலிருக்கும் கோள்களை இனங்காணும் பயிற்சி உள்ளவர்கள் அதற்கென்று நேரம் ஒதுக்கி நோட்டமிட்டுக் கணித்துக் கண்டுபிடித்து சரிபார்க்க வேண்டிய புலனங்களாகும். ஆனால் சராசரியான எவரும் கண்டு தெரிந்துகொள்ளக்கூடிய மழை முன்கணிப்பு உத்திகளும் நம் மரபில் உண்டு.

நிலவைச் சுற்றித் தோன்றும் வட்டம்தான் அது. இந்த வளையம் நிலவை நெருங்கிக் காணப்பட்டால் மழை பெய்யச் சில நாட்களாகும்; நிலவிலிருந்து இந்த வட்டம் விலகிச் செல்லுந்தோறும் மழை நாள் நெருங்கும் என்பது பொதுவான பட்டறிவு.

புவியை அடுத்துள்ளதாகிய வளிமண்டலத்தில் நீராவி செறிந்து நீர்த்துகள்கள் உருவாகியுள்ள நிலையில் நிலவின் ஒளி அத் துகள்களினுள் ஊடுருவி முப்படிகக் கண்ணாடி வழி கதிரவ ஒளி ஊடுருவும் போது போன்று அது சிதறித் தோன்றும் வண்ணமாலை(Spectrum – ஆ.இராசா – கனிமொழியின் அலைக்கற்றை அல்ல) போன்று இந்த ஒளிவட்டம் தோன்றுகிறது. இந்த வட்டம் நிலவை நெருங்கிக் காணப்பட்டால் நீர்த்துகள்களைக் கொண்ட காற்றின் அடுக்கு புவியிலிருந்து நிலவை நோக்கி அகன்றிருப்பதையும் விலகிக் காணப்பபட்டால் காற்றின் அத்தகைய அடுக்கு புவியை நெருங்கியிருப்பதையும் காட்டுகிறது என்ற எளிய விளக்கமே இந்த நிகழ்முறையின் அடிப்படை. இது நம் வானிலை ஆய்வாளர்கள் தரும் முன்கணிப்புகளை விடத் துல்லியமானது.

சிலை என்பதற்கு வில் என்பது பொருள், அதாவது வானவில். இது பகல் வேளையில் மழை பெய்தால்தான் தெரியும். ஒரு பகுதியில் கதிரவன் ஒளிர வேறொரு பகுதியில் மழை பெய்தால் அம் மழைத்துளிகளை ஊடுருவும் கதிரவனின் கதிர்கள் சிதைந்து உருவாகும் வண்ணமாலை மழை பெய்யும் பகுதியிலிருந்து கதிரவன் இருக்கும் பக்கத்துக்கு எதிர்த் திசையில் வானவில்லாகத் தோன்றும்.

பரிவேடம் மழையை முன்கணிக்கவும் வானவில் ஓரிடத்தில் மழை பெய்வதை தொலைவில் உள்ளவர்கள் அறிந்துகொள்ளவும் உதவும் இயற்காட்சிகளாகும்.(மேலே பரிவேடக்குறி என்ற சொல் குறித்து அபிதான சிந்தாமணி தந்துள்ள விளக்கத்தில் வட்டம், சிலை ஆகிய இரண்டையும் வேறுபாடின்றி பரிவேடம் என்ற ஒரே வகைப்பாட்டினுள் வைத்துள்ளனர்.)

இவை அன்றி மார்கழி மாதத்தில் சில நாட்கள் ‘கற்போட்டம்’ என்ற நிகழ்முறை செயல்படுவதாக ஐந்திறங்கள் குறிப்பிடுகின்றன. அதாவது இந்த காலகட்டத்தில் அடுத்தடுத்து நிலவும் வானிலை வரிசைகளுக்கு இசைய அடுத்து வரும் 1½ ஆண்டு கால வானிலை இருக்கும் என்ற முன்கணிப்பாக இது கூறப்படுகிறது.

இன்று மிக முன்னேறியவை எனப்படும் கருவிகளின் துணையுடன் மிக உயர்வானவை என்று நம்பப்படும் கோட்பாடுகளின் அடிப்படையில் வெளியிடப்படும் “வானிலை அறிக்கை”கள் உலகெங்கும் கேலி பேசும் அளவுக்குப் பொய்த்துப் போவதைப் பார்க்கிறோம். பண்டை அறிவியல் மரபுகளை, குறிப்பாக வான்பொருட்களுக்கு புவியில் வாழும் உயிர்கள் மீது எந்த விளைவும் கிடையாது என்று, சோதிடர்களை மனதில் கொண்டு, புறக்கணிப்பதைக் கைவிட்டு ஐந்திறங்களில் பொதிந்து கிடக்கும் மிக விரிவான வானியல் செய்திகளை ஆய்ந்து கால ஓட்டத்தில் அவற்றுக்கும் வான் பொருட்களின் இன்றைய இருப்புக்கும் மாற்றங்கள் காணப்பட்டால் அவற்றுக்கேற்ப வேண்டிய திருத்தங்கள் செய்து அப் புதிய நிலையிலிருந்து சென்ற சில நூற்றண்டுகளில் மேலையரின் தொடர்பால் நாம் பதிந்துவைத்திருக்கும் காலநிலைச் செய்திகளின் துணைகொண்டு ஆய்வுக்கு உட்படுத்தலாம்.

16ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் முகம்மதியர்களின் தாக்குதல்களால் அதிர்ச்சியுற்ற ஐரோப்பிய அறிவுத்துறையினர் பண்டைக் கிரேக்க அறிஞர்கள் பதிந்து வைத்திருந்த அறிவியல் செய்திகளை அலசி ஆய்ந்து இற்றை அறிவியலுக்கு வழிவகுத்தனர். கிறித்துவம் கூறுபவற்றுக்குப் புறம்பான கண்டுபிடிப்புகளைக் கூறியவர்களைக் கருவறுக்க கிறித்துவத் தலைமை வரிந்து கட்டி நின்ற போதும் அஞ்சாமல் தளராமல் உண்மைகளை உலகுக்குக் கூறும் வரலாற்றுக் கடமையை, குமுகக் கடமையை ஆற்றினர். ஆனால் ஆங்கிலரிடமிருந்து விடுதலை பெற்றுவிட்டோமென்று குறைந்தது ஆண்டுக்கு இரு முறை கொடி ஏற்றமென்றும் மாபெரும் படை அணிவகுப்பென்றும் ஆள்வோர் படங்காட்டும் நம் நாட்டில் இன்றைய நிலை என்ன?

ஆங்கிலர் இந் நாட்டை விட்டு வெளியேறும் முன் இந்திய நிறுவனமான டாட்டா குழுமத்தினர் மூன்று புதிய கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமம் பெற்றதாகவும் “விடுதலை” பெற்று 25 ஆண்டுகளாகியும் இன்று வரை அந்நிறுவனம் ஒரே ஒரு கண்டுபிடிப்பைக் கூட நிகழ்த்தவில்லை என்றும் 1970களின் நடுப் பகுதியில் புகழ் பெற்ற ஆங்கில இதழான Illustrated Weekly of India, Are Our Engineers Any Good? என்ற கட்டுரையில் கூறியது. அதாவது இந்திய ஆட்சியாளர்கள் உள்நாட்டினரின் அறிவியல் - தொழில்நுட்ப முனைவுகளை ஊக்காமல் அழிப்பது அல்லது அவை வெளியே சென்று அங்கிருந்து இறக்குமதியாகி தமக்கு கணிசமான தரகை ஈட்டித் தர வேண்டும் என்பவற்றிலேயே குறியாயிருக்கிறார்கள். ஆங்கிலராட்சியில் மாபெரும் தரகு முதலாளியாக விளங்கிய பனியாவான பிர்லாவின் வளமனையில் பனியாவான மோ.க.காந்தி கைராட்டை சுற்றி நடத்திய “தேசியத் தொழில்நுட்ப வேள்வி”யின் குறிபொருள் தன் சாதியரான பனியாக்கள் தவிர இந்தியாவில் வேறெவரும் இற்றைத் தொழில் - வாணிகத் துறைகளில் வளர்ந்துவிடக் கூடாது என்பதுதான். இந்தக் “குறிக்கோளை” வேறெவர் மறந்தாலும் பாட்டாளிகளை உயர்த்தவென்றே பிறவி எடுத்தவர்களாகத் தம்பட்டமடித்துக் கொள்ளும் பொதுமைக் கட்சியினர், அவர்களிலும் முனைப்பாக மார்க்சியப் பொதுமையினரும் “மீப் புரட்சிகர”மான மார்க்சிய - லெனினியக் குழுவினரும் மறக்காமல் கவனத்தில் கொண்டு செயல்படுகின்றனர்.

இந்தப் பின்னணியில் குறைந்தது கடந்த 1½ நூற்றாண்டுகளில் ஆங்கிலர் புகுத்திய, ஐரோப்பியர் தங்கள் மண்ணில் உருவாக்கிய மக்களியப் படுத்திய அறிவியல் - தொழில்நுட்பக் கல்விமுறையில் பயின்ற ஒரு கோடிக்கும் மேற்பட்டோரிடையிலிருந்து நம் பண்டை அறிவியல் - தொழில்நுட்பங்களை இனம் கண்டு அவற்றை இன்றைய சூழல்களுக்கேற்றவாறு வடிவமைத்து மீட்கும் ஒருவர் கூட வெளிப்படவில்லை.

இன்று உயர் படிப்பு படித்து உயர் பதவிகளில் அமர்ந்து ஓய்வு பெற்றோர் அக் காலத்தில் ஏதாவது செயற்பாட்டால் அது பெரும்பாலும் வல்லரசியம் தன் நலனுக்கென்று அவிழ்த்துவிட்டிருக்கும் பணக்குவியலிலிருந்து ஒரு பங்கை “தன்னார்வ”த் தொண்டு நிறுவனம் என்ற பெயரிலோ அல்லது “அறக்கட்டளை” என்ற பெயரில் உரிய தரகைக் கொடுத்து “நன்கொடை”யாகப் பெற்றோ சுருட்டுவதாகத்தான் இருக்கும். பதவியில் படிப்படியாக உயர்வது என்னும் நடைமுறை கற்றுக்கொடுக்கும் உத்தி இது. இன்னொரு வகையினர் பாடநூல்கள் என்ற பெயரில் வல்லரசியம் வகுத்துக் கொடுத்திருக்கும், தேசிய பண்டைய உயர் எய்தல்களை மறைக்கும் பாடநூல்களை எழுதிப் பணம் பார்க்கின்றனர். சு.கி.செயகரன் போன்றோர் பக்கத்துக்கு சராசரி மூன்றுக்குக் குறையாத “மேற்கோள்”களுடன் “ஆய்வு”களை எழுதிப் பணம் குவிக்கின்றனர். ஒவ்வொரு நொடியும் பணம் பண்ணாத வாழ்க்கை பாழ் என்பது, தமிழ்த் தேசியம் என்பது ஒதுக்கீட்டின் மூலம் உயர் பதவி பெறுவது என்றாகிப் போன தலைமுறையினர் அறுதியிட்டுள்ள வாழ்க்கை முறை. இக் கொடும் நிலையை மாற்றாமல் நம் பண்டையோரின் அளந்தறிய முடியா எய்தல்களை வெளிப்படுத்த முடியாது.           

மேலே கூறியுள்ளபடி வானியல் கையேடாக நம் முன்னோர் நமக்கு வழங்கியிருக்கும் ஐந்திறத்திலாயினும் நாட்களின் பெயரிலாயினும் கோள்கள் எனக் குறிக்கப்பட்டிருப்பவை சராசரி மனிதனின் தொழில் அல்லது வேளாண்மை போன்றவை குறித்த ஒரு வழிகாட்டலுக்காகவே என்ற வகையில் புவி நடு (Geocentric)க் கண்ணோட்டத்தின் அடிப்படையில் புவிக்கு அப்பாலிருக்கும், புவி வாழ்வின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வான்பொருட்கள் என்ற பொது நோக்கிலேயே இருக்கும். “தூய்மையான” வானியலை நம் மரபிலுள்ள தமிழ் அல்லது சமற்கிருத மொழி ஆக்கங்களிலேயே தேட வேண்டியிருக்கும். 

இனி நாம் முதல் குறைகூறலுக்குள் நுழையலாம். மேலே ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி கோள்களின் எண்ணிக்கைக்கு அடிப்படை புவியின் மீது அவை உருவாக்கும் விளைவின் அடிப்படையாகவே இருக்கக் கூடும். இருப்பினும் ஓர் ஐயம்:

நாட்களின் பெயரிலும் ஓரைவட்டத்தில்(ராசி சக்கரம்) உள்ளிலும் இடம்பெறும் ஏழு கிரகங்கள் நீங்கலாக அவற்றுக்கு வெளியே இராகு - கேது என்று இரண்டும் நடுவில் மாந்தை அல்லது குளிகன் என்று ஒன்றும் ஆக மூன்று கோள்கள் உள்ளன. இவற்றுள் இராகு - கேது இரண்டையும், நிழல்கோள்கள்(சாயாகிரகங்கள) அல்லது கரந்துறை கோள்கள் என்றே குறிப்பிடுகிறார்கள். அது போலவே யுரானசு, நெப்டியூன் ஆகியவற்றையும் நிழல்கோள்கள்(Shadow planets) என்றே குறிப்பிட்டனர். புவியோடு ஒப்பிடத் தங்கள் சுழற்சியில் தங்களுக்கு அப்பாலுள்ள வான்பொருட்களில் தோன்றும் மறைப்புகள் மூலமாகவே அவற்றின் இருப்பை முதன்முதலில் இற்றை வானியலாளர் அறிந்து ஆயத் தொடங்கினர். அவ்வாறே நம் முன்னோரும் முதலில் அறிந்திருப்பர். தொடர்ந்த கடற்கோள்கள் போன்ற பேரழிவுகளால் பண்டைய அடிப்படைப் புலனங்கள் மறைந்து பெயர்கள் மட்டும் நிலைத்திருக்கும் இன்றைய நிலையில் கரந்துறை கோள்களைப் பற்றி நம் அகராதிகள் என்ன கூறுகின்றன என்று பார்ப்போம்:

          கழகத் தமிழ் அகராதி:
               வட்டம்                 -              பரிவேடம்,
               நுட்பம்                 -              கரந்துறை கோள்களுள் ஒன்று,
               தூமம்                   -              புகை,
               தூமகேது              -              கேது, வால்நட்சத்திரம், விண்வீழ் கொள்ளி,
               சிலை                   -              தனுவிராசி, மூலநாள்,
               கரந்துறை கோள்   -              இராகு, கேது, பரிவேடம், வானவெள்ளி, வால்வெள்ளி,
               பரிவேடம்             -              வட்டம்,
               இராகு                  -              நவக்கிரகங்களுள் ஒன்று,
               இராகுமண்டலம்    -              புமியின் சாயை,
               கேது                    -              ஒரு கோள், கதிர்ப்பகை, மதிப்பகை, மதியுணி, ஒன்பது கிரகங்களுள் ஒன்று, தூமகேது.
            தமிழ் மொழியகராதி          -
            மொழியகராதி:
               இராகு                  -              கரும்பாம்பு,
               கரந்துறை கோள்   -              காணாக்கிரகம்,
               கேது                    -              ஒரு கோள்,
               தூமம்                   -              புகை,
               தூமகேது              -              கேது, வால்நட்சத்திரம், விண்வீழ் கொள்ளி,
               பரிவேடம்             -              பரிவேசம், சந்திர சூரியரைச் சூழத் தோன்றும் வட்டம்,
               நுட்பம்                 -              (பொருள் இல்லை ),
               வட்டம்                 -              பரிவேடம்.
               பொருளகராதி:  
               இராகு                  -              கரும்பாம்பு, மதிப்பகை, மதியுண்ணி.
            அபிமான சிந்தாமணியில் இச்சொற்களுக்கு வானியல் தொடர்பான பொருள் எதுவும் கூறப்படவில்லை.
           
            குளிகன், மாந்தை, மாந்தன், மந்தன் ஆகிய சொற்களுக்கு அகராதிகள் என்ன பொருள்களைத் தருகின்றன என்று பார்ப்போம்:
            கழகத் தமிழ் அகராதி:
               குளிகன்                -              சொல் இல்லை,
               மாந்தி                  -              குளிகன்,
               மந்தன்                 -              சனி.
            தமிழ் மொழியகராதி:
               குளிகன்                -              அட்ட நாகத்தொன்று, கரந்துறை கோளினொன்று,
               மந்தன்                 -              சனி.
            அபிதான சிந்தாமணி:
               குளிகன்                -              1. ஒரு நாகன், பாதாளவாசி, அட்ட மா நாகங்களிலொன்று, 2. சநியின் குமரன்,
               மாந்தை                -              பொருள் இல்லை,
               மந்தன்                 -              பொருள் இல்லை.

            தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்து பெற்ற அமுதத்தை அசுரர்கள் உண்டால் அவர்களை வெல்ல முடியாது என்று அஞ்சிய திருமால் “மோகினி” வடிவெடுத்து ஏமாற்றி தேவர்களுக்கு மட்டும் அதனைப் பங்கிட்டார். அதைக் கண்ட இராகு, கேது ஆகிய நாகர்கள் தேவர்களாகத் தோற்றம் கொண்டு பந்தியில் அமர்ந்தனர். அவர்களுக்கு அருகில் நிலவும் கதிரவனும் அமர்ந்திருந்தனர். பந்தியில் பரிமாறி வந்த “மோகினி”க்கு நாகர்களைச் சாடையால் அடையாளம் காட்டினர். “மோகினி” இரு நாகர்களின் தலையில் கரண்டியால் அடித்தாள். காட்டிக்கொடுத்த நிலவையும் கதிரவனையும் பழிவாங்க அவர்களை இரு பாம்புகளும் விழுங்கி விழுங்கி கக்கிகொண்டிருக்கிறார்களாம். கிரகணம் எனப்படும் மதி, கதிரவ மறைப்புகள் பற்றிய தொன்ம விளக்கம் இது. ஆனால் இராகு, கேது ஆகிய “கிரக”ங்களின் சுழற்சிக் காலம் 18½ ஆண்டுகள் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. எனவே இராகு, கேது ஆகியவை நிலவு, கதிரவன் மறைப்புகளின் குறியீடுகள் எனபது பொருந்தி வரவில்லை.

குளிகன் என்பதற்கான பொருள்களாக மேலே தரப்பட்டுள்ளவற்றில் நம்மைக் கவர்வன: ஒரு நாகன், பாதாளவாசி, அட்ட நாகத்தொன்று, கரந்துறை கோளினொன்று, சநியின் குமரன் ஆகியவை. சனியின் குமரன் என்பதை சனிக்கோளின் ஒரு துணைக்கோள் அது என்பதற்கான தடயமாகக் கூட  கொள்ளலாம்.
 அது மட்டுமல்ல, இராகு, கேது, குளிகன் போன்றவற்றை பாம்புகள் என்றும் குளிகனை அட்ட மா நாகங்களிலொன்று என்றும் பாதாளவாசி என்றும் ஒரு நாகன் என்றும் குறிப்பிட்டிருப்பதிலிருந்து சில ஐயங்களும் கருத்துகளும் தோன்றுகின்றன.

முதலில் அட்ட மா நாகர் எனப்படுவோர் யாவரென்று பார்ப்போம்:
            1.அநந்தன்,              5.பதுமன்,
            2.வாசுகி,                 6.மகாபதுமன்,
            3.தக்கன்,                7.சங்கபாலன்,
            4.கார்க்கோடகன்,    8.குளிகன்
என்ற பட்டியலை அபிதான சிந்தாமணி தருகிறது. தமிழ் மொழியகராதியும் இதே பட்டியலை வரிசையில் மாற்றத்துடன் தருகிறது.
இந்தப் பட்டியலில் வரும் தக்கனைப் பற்றிய செய்திகளில் ஒன்று, அவன் தன் மகள்களாகிய 27 நாள்மீன்களையும்(நட்சத்திரங்களையும்) நிலவுக்கு மணமுடித்து வைத்தான் என்பது. நிலவும் நாள்மீன்களும் மனிதர்களோ தேவர்களோ அசுரர்களோ அல்லர் வான் பொருட்கள் என்ற உண்மையை நினைவில் கொண்டு பார்த்தால், நிலவு, நாள்மீன்கள் ஆகியவற்றின் இயக்கங்களை இணைத்துக் கணிக்கும் உத்தியை வகுத்தவன் அவன் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அவனை பிரமனின் “மானச புத்திரன்” என்கிறது அபிதான சிந்தாமணி.

வாசுகி என்பவன் தேவர் - அசுரர்கள் பாற்கடலைக் கடைந்த போது தாம்புக் கயிறாக இருந்தவன். அருச்சினனுக்குப் பல வகைகளில் உதவியவன் என்றும் அபிதான சிந்தாமணி கூறுகிறது.

பாற்கடலைக் கடைந்து சாவாமை அளிக்கத்தக்க அமுதத்தைப் பெறுவதென்று தேவர்களும் அசுரர்களும் திட்டமிட்டனர். அதற்கு மத்தாக, மேரு மலையின் உச்சிகளிலொன்றான மந்தாரத்தைப் பெயர்த்தான் மேலேயுள்ள பட்டியலில் முதலில் உள்ள அநந்தன்[6] எனும் ஆதிசேடன். தாம்புக் கயிறானான் வாசுகி. மத்தைத் தாங்குவதற்காக திருமால் ஆமையாக மாறினார். நிலவு கட்டுத்தறியாகப் பயன்பட்டது. அமுதம், தன்வந்திரி(மருத்துவம்), உச்சைசிரவம் எனும் குதிரை, சந்திரன், ஐராவதம், மூதேவி(போர் உத்திகளும் தளவாடங்களும்), திருமகள் முதலியோர் கிடைத்தனர்.
   
இந்தக் கதைக்குக் கீழ்க்கண்டவாறு விளக்கம் கூறலாம்: நாகர்கள் எனப்படுவோர் நாகத்தைத் தோற்றக் குறியாகக் கொண்ட குக்குல மக்கள். ஏழு மாதர்கள், ஏழு தாயர், ஏழு கன்னியர் எனப்படும் எழுவர் வழியில் வந்த ஏழு குக்குலங்களில் இறுதியில் மேலாளுமை செலுத்திய குக்குலத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள். இந்தக் குக்குல முதல்வியைத்தான் அறுவர்க் கிளைய நங்கை(வழக்குரை காதை வரி 37) என்று அடிகளார் கூறுகிறார். கன்னியர் எழுவருள் இளையாளாகிய பிடாரி என்று விளக்கம் கூறுகிறார் வேங்கடசாமியார்(பிடாரன் – பிடாரி).  இவர்கள் பெரும்பாலும் சுறவ(மகர)க் கோட்டை ஒட்டியும் அதற்குத் தெற்கிலும் வாழ்ந்தவர்கள். இராவணனும் இப் பகுதியில் வாழந்தவனாகவே தெரிகிறது(வெள்உவனோடு நான் இணைந்து எழுதியுள்ள தென்னிலங்கை கட்டுரை – இந்திய வரலாற்றில் இலக்கியங்கள், புராணங்கள், வானியல், வேங்கை பதிப்பகம், மதுரை பார்க்க). இவர்களே தமிழர்களின் வானியலுக்கு அடித்தளமிட்டவர்கள் என்று தோன்றுகிறது. அத்துடன் மலை தொடங்கி கடற்கரை வரை குக்குலத்தை இனங்காட்டும் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் மகாபாரதம் காட்டுவது போல் தமக்குள் போரிட்டு நிலத்தின் அடிப்படையில் மண்ணின் மைந்தர்களாகப் பிரிந்து இறுதியாக நானில, அதாவது ஐந்நில ஆட்சிகளை அமைத்தவர்கள் இவர்களே என்றும் தோன்றுகிறது. நகுசன் எனும் நாகன் வழி வந்த யயாதி துரத்திவிட்ட அவன் மகனான யது என்பவன் வழியில் வந்த யாதவனான கண்ணனுக்கும் யயாதியின் இன்னொரு மனைவிக்குப் பிறந்தவன் வழி வந்த கவுரவர்க்கும் நடந்த போரே பாரதப்போர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கும் வடக்கே கடலுக்கு அப்பால் நிலநடுக் கோட்டுப் பகுதியல் வாழ்ந்த மக்களுக்கும் தொடர்புகள் ஏற்பட்டு, கடல் ஆமைகளின் தடத்தைப் பின்பற்றி ஆமை வடிவில் அமைந்ததும் எண்ணெய்யில் மிதப்பதும் ஆகிய காந்தத்தால் இயங்கும் திசைகாட்டியின் உதவியுடன் இற்றை ஐரோப்பியர்களைப் போல் ஆழ்கடல்களைக் கடந்து பல்வேறு துறைகளிலும் அருஞ்செயல்களை நிகழ்த்திய ஒரு செய்தி இக் கதையில் அடங்கியுள்ளது.

இக் கதையில் பளிச்சிடும் ஒரு முரண்பாடு கட்டுத்தறியாகப் பயன்பட்ட நிலவை கடலைக்  கடைந்ததால் கிடைத்த பொருள்களில் ஒன்றாகவும் கூறியிருப்பது. இவர்களின் ஆய்வுகளின் விளைவாக ஒருவேளை நிலவு பற்றிய நுட்பமான செய்திகள் கிடைத்திருக்கும். எடுத்துக்காட்டாக அரேபியர்களைப் போல் நிலவு கண்ணுக்குத் தெளிவாகத் தெரியும் மூன்றாம் பிறையிலிருந்து மாதத்தை தொடங்குவதிலிருந்து இந்தியாவில் நிலவு மாதங்களுக்குக் கடைப்பிடிப்பது போல் காருவா(அமைவாசை)வுக்கு அடுத்த நாளிலிருந்து தொடங்கும் வகையில் நிலவின் இயக்கத்தைத் துல்லியமாகக் கணிக்கத் தொடங்கியிருக்கலாம். நிலவைப் பற்றிய முந்தைய அறிவு ஆழ் கடலில் நாள், நேரம் பற்றிய தெளிவுக்குப் பயன்பட்டிருக்கலாம். அதுதான் நிலவு கட்டுத்தறியாகப் பயன்பட்டது என்பதன் பொருளாக இருக்க வேண்டும். மூன்றாம் பிறையைப் பார்த்தால் கன்னத்தில் போட்டுக்கொள்ளும் நம் வழக்கம் பண்டை மரபின் எச்சமாக நம்மிடையே தொடர்கிறது.

தினமணி சிறுவர்மணியில் பண்டைச் சீனர்கள் எண்ணெய்யில் மிதக்கும் ஆமை வடிவில் அமைந்த காந்தத் திசைகாட்டியைப் பயன்படுத்தினர் என வந்திருந்த செய்தி, பால்கடல் கடைவதில் திருமால் ஆமையாக மந்தார மலையைத் தாங்கினார் என்ற தொன்மக் குறிப்புடன் இணைந்து ஆமை பற்றிய என் முடிவுக்கு வித்திட்டது. இந்த என் விளக்கத்தைக் கேட்ட ஒரிசா பாலசுப்பிரமணி என்பவர் கடல் ஆமையின் நடமாட்டத்தைப் பின்பற்றித்தான் பண்டைக் கடலோடிகள் தங்கள் கடல் நாவிகத் தடங்களை வகுத்தனர் எனத் தன் கள ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளதாகக் கூறுகிறார்.

மேலுள்ள முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால் இராகு, கேது, குளிகன் என்பவர்கள் கோள்கள், துணைக்கோள்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்தவர்கள் என்றும் பின்னாளில் ஐரோப்பியர்கள் தாங்கள் கண்டுபிடித்த கோள்களுக்கு கிரேக்கத் தொன்மக் கடவுள்களின் பெயர்களை இட்டது போல் நம் மூதாதையர் அவற்றைக் கண்டுபிடித்தவர்களின் பெயர்களை இட்டிருக்கலாம். கணியர்(சோதிடர்)கள் பயன்படுத்தும் ஓரை வட்ட(இராசி சக்கர)த்தில் நாள் பெயர்களைக் கொண்ட 7 வீடுகள் மட்டுமே உள்ளே இருக்க இராகுவும் வெளியே இருப்பது அவை யுரானசு, நெப்டியூன் போன்று பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்டதனால் இருக்கலாம. அடுத்தடுத்த கடற்கோள்களினால் அறிவியல் மரபு தொடர்பிழந்து போய்விட இராகு, கேது என்பவை இரு நாகர்களின் பெயர்கள் என்பதாலும் அமுதம் கடைந்தது பற்றிய தொன்ம மரபுகளினாலும் தொன்மர்கள் கதிரவ, நிலவு மறைப்புகளுடன் இவ் விரண்டு கோள்களையும் தொடர்பு படுத்திவிட்டனர் என்று தெரிகிறது. நேரடிப் பார்வைக்குப் படாத கோள்களை காணாக் கிரகங்கள் என்றும் கரந்துறை கோள்கள் என்றும் கூறும் மரபை வைத்து கதிரவ, நிலவு மறைப்புகளையும் வானவில்லையும் கூட அவ் வகைப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளனர் என்று தோன்றுகிறது. வால்வெள்ளியைக் கரந்துறைக்கோள் என்பது, அது எங்கெங்கோ சுற்றி திடீரென்று தோன்றுவதால் சரியான வகைப்பாடுதான்.

சாவாமைக்கும் நாகத்துக்கும் உள்ள உறவு பண்டை உலகில் விரிவான பதிவைக் கொண்டுள்ளது. வஞ்சகமாகத் தங்கள் பங்கு அமுதத்தைப் பறித்துக்கொண்ட தேவர்களிடமிருந்து அதை மீட்டுத் தருமாறு தங்களிடம் அடிமைகளாக இருந்த கருடனையும் அவன் தாயையும் விடுவிப்பதற்குப் பிணையாக நாகர்கள் கூறினர். அவ்வாறே அவன் தூக்கிவர இந்திரன் தந்திரமாக அதை மீட்டுவிட்டதாக மகாபாரதம் கூறுகிறது. ஆனால் மனிதனை மரணம் இல்லாதவனாகப் படைக்க எண்ணிய கடவுளின் திட்டத்தில், தடுக்கப்பட்ட கனியை அவனை உண்ணவத்ததன் மூலம் நாகம் மண்ணைப் போட்டுவிட்டதாக யூத மறை கூறுகிறது. இறந்த தன் நண்பனைப் பற்றித் தெரிந்துகொள்ள பெருவெள்ளத்திலிருந்து தப்பிய உட்நாப்பிட்டிம் என்பவனைச் சந்தித்த கில்காமேசு அவன் கொடுத்த சாவா மருந்தோடு திரும்பிக்கொண்டிருந்த போது பாம்பு அதைத் திருடிவிட்டதாக கில்காமேசு காப்பியம் கூறுகிறது.

இச் செய்திகளோடு அடிப்படையில் வேறுபட்ட இன்னொரு செய்தியை கும்பகோணம் தலபுராணம் கூறுகிறது. ஊழி முடிவில் உலகம் அழிய இருந்த போது உயிரினங்களைக் காக்க அவற்றின் விந்தணுக்களைத் திரட்டி அமுதத்தில் வைத்து அதை ஒரு கும்பத்தில் அடைத்துக் கடலில் விட அது கும்பகோணத்தில் வந்து ஒதுங்கியதாக அதில் உள்ளது. அதன் அடிப்படையில்தான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமகத் திருவிழா நடைபெறுவதாக அது கூறுகிறது. கங்கைக் கரையில் நடைபெறும் கும்பமேளாவுக்கும் இதே விளக்கம்தான் தரப்படுகிறது. முதலது கும்ப ஓரையில் நிறைநிலவு வரும் நாளிலும் மற்றது அதே ஓரையில் காருவா வரும் நாளிலும் நடைபெறுவதுதான் வேறுபாடு. இந்தக் கதைகளில் அமுதம் என்பது சாவா மருந்து அல்ல என்பதும் இற்றை அறிவியலில் உயிரினங்களின் மரபணுக்களைப் பாதுகாக்கப் பயன்படும் நீர்மம் போன்ற ஒன்றுதான் என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அத்துடன் அந்தச் “சாவா மருந்து” “தேவர்கள்” திட்டமிட்டது போல் “எதிரி”களுக்குக் கிட்டாமல் போய்விடவில்லை என்பதும் இந்தக் கதைகளிலிருந்து தெரியவருகிறது.

கதிரவ குலத்தைச் சேர்ந்த நிமி என்பவன் மாண்டுவிட அவனுடலை எண்ணெய்யிலிட்டுக் காத்தனர், பின்னர் அவனுடலைக் கடைந்து மிதிலன்(விதேகன் என்பதும் அவன் பெயர்களிலொன்று) என்ற மகனை உருவாக்கினர் என்ற செய்தியை அபிதான சிந்தாமணி தருகிறது. பண்டை எகிப்தில் இறந்த மன்னர்கள், பெரும் செல்வர்களின் உடல்களை அதற்கென வடிக்கப்பட்ட எண்ணெய்க் கலவையில் ஊறவைத்து மெழுகால் மெழுகி(மம்மிகளாக)ப் பாதுகாத்தனர் என்பதுடன் அவற்றில் இன்றும் உயிராற்றல் உள்ளதால் அவற்றிலிருந்து படியாக்க(பதியம் வைத்தல் - குளோனிங்) முறையில் குழந்தைகளை உருவாக்க முடியும் என்ற இற்றை அறிவியல் கருத்துகளுடன் இணைத்துப் பார்ப்பதையும் அதாவது மீ அண்மைக் கண்டுபிடிப்புகள், அறிவியல் கருத்துகள் என்பவற்றுக்கு இணையான ஒரு வளர்ச்சி நிலை தொல்பழங்காலத்தில் இருந்ததற்கான தடயங்கள் வலுவாக உள்ளன என்பதைத் தொட்டுக்காட்டவே தடத்தை விட்டு இவ்வளவு விலகி வந்ததற்குப் பொறுத்தருள வேண்டுகிறேன்.

8.         காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
ஓவிறந் தொலிக்கு மொலியே யல்லது
            ஆம்பியுங் கிழாரும் வீங்கிசை யேத்தமும்
            ஓங்குநீர்ப் பிழாவு மொலித்தல் செல்லா ….
என்ற வரிகளில் வரும் வாய்த்தலை ஓவிறந் தொலிக்கும் ஒலி என்பதற்கு வாய்க்கால் தலைப்பிலுள்ள மதகின் பலகை மீது நீர் முட்டுவதால் எழும் ஒலி என்பது பொருள். அடிகள் தந்துள்ள இந்தச் செய்தி இன்று காவிரி ஆற்றுப்பரப்பின்(“டெல்டா”வின்) நிலையை எண்ணிப்பார்க்க என்னைத் தூண்டுகிறது. 1962ஆம் ஆண்டு பணி ஓய்வு பெறுபவராக இருந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த (ஆர்.ஏ.கோபாலசாமி என்று நினைவு) தமிழக அரசு தலைமைச் செயரின் முன்முயற்சியில் பொதுப்பணித் துறையில் அமைக்கப்பட்ட மறுவகைப்பாட்டுக் கோட்டத்தில்(Reclassification Division) மேற்பார்வையாளராக(இன்று இளம் பொறியாளர் என்று பதவிப்பெயர் மாற்றம் பெற்றுள்ளது)ப் பணியாற்றினேன். செயலிழந்து போன குடிமராமத்துப் பணிகளின் கீழ் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த வாய்க்கால் தூர்வாரும்(வண்டல் அல்லது எக்கல் அகற்றல்) பணியை மீட்கும் நோக்கத்துடன் வாய்க்கால்களை, பொதுப்பணித் துறை, அப்போது நடைமுறையிலிருந்த பொறுப்பு ஒதுக்கீட்டின்படி வருவாய்த் துறை, வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவற்றின் கீழ் பிரித்து ஒதுக்குவதற்கான ஒரு புது வகைப்பாட்டை வரையறுப்பபது எங்களுக்கு இட்ட பணி. இதற்காக ஆறுகளிலிருந்து புறப்படும் முதன்மை வாய்க்கால்கள் தொடங்கி பத்துப் பதினைந்து அடிகள் நீளம் கொண்ட வயற்கால்கள் வரை என்று அனைத்து வாய்க்கால்களின் நீளங்களையும் குறுக்குத் தோற்றங்களையும் அளவையிடுவது எங்கள் வேலை. அப்போது என் கவனத்தை ஈர்த்த நிலைமை என்னவென்றால் பெரும்பாலும் ஆறுகளிலிருந்து நேரடியாக வாங்கும் முதன்மை வாய்க்கல்கள் தவிர்த்து வேறெதற்கும் தலைப்பு மதகுகள் இல்லை என்பதாகும்.  நம் முன்னோர்க்கு மதகுகள் அமைக்கும் தொழில்நுட்பத் தேர்ச்சி இல்லை போலும் என அப்போது நான் நினைத்தேன். ஆனால் ஏரி, குளங்களில் அமைக்கப்பட்டிருக்கும் வகை வகையான மதகுகள், மறுகால்கள், மடைகளைப் பார்த்த போது அந்த எண்ணம் மாறியது. அது மட்டுமல்ல, 1960களில் தொடங்கி பல்லாயிரம் கோடி உலக வங்கிக் கடனில் நடைபெற்ற காவிரி மேம்பாட்டுத் திட்டத்தில் அனைத்துக் கால்களுக்கும் அமைக்கப்பட்ட மதகுகளை அங்குள்ள வேளாண் மக்கள் புறக்கணித்து கால்வாய்க் கரையை உடைத்து நீரை எடுத்தனர். கசிவு மூலம் நீர் வீணாவதைத் தவிர்ப்பதற்காக கால்வாய்க் கரைகளின் உட்புறத்தையும் படுக்கையையும் இழைக்கப் பதிக்கப்பட்ட சிமென்றுப் பாளங்களையும் பெயர்த்தெடுத்து தங்கள் தொழுவங்களில் பாவினர். தஞ்சைத் தரணி உழவர்களைப் பற்றி அங்கு நிலவும் பொதுவான கருத்து அவர்கள் பெரும் சோம்பேறிகள் என்பதாகும். காவிரியில் வரும் நீர் முதன்மை வாய்க்கால்கள் வழியாக மதகு போன்ற எந்தத் தடங்கலும் இன்றி வயல்களினுள் பாய்ந்து அகன்ற பெரிய ஓர் ஆறு போன்று செல்கிறது என்பதே உண்மை நிலை. அதாவது சோழ மன்னர்கள் திட்டமிட்டுச் செயற்படுத்தியிருந்த பாசனக் குறுக்கமைப்புகளை, சென்ற நூற்றாண்டு இறுதியில் செய்தது போல் வேணாண் மக்கள் உடைத்திருக்கும் வாய்ப்புள்ளது. தமிழக எல்லைக்குள் காவிரி நீரைச் சிக்கனப்படுத்தி அதில் மிஞ்சும் நீரைப் பயன்படுத்தி கன்னட மாநிலத்தில் நெல் வேளாண்மையை விரிவுபடுத்துவது என்ற ஒருங்கிணைந்த திட்டத்தின் அடிப்படையில் இந்த உலக வங்கித் திட்டம் வகுக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

இதில் வேறு சில செய்திகளையும் கணக்கிலெடுக்க வேண்டியுள்ளது. நான் பெரும்பாலும் ஊர்ப்புறங்களிலேயே பணியாற்றியுள்ளேன். தஞ்சையில் ஊர்ப்புறங்களில் பணியற்றிய போது அங்குள்ள சிறு உணவு விடுதிகளில் சம்பா போன்ற பருக்கன் அரிசிச் சோறே கிடைக்கும். கேரள மக்களின் நுகர்வைக் குறிவைத்தே அங்கு நெல் வேளாண்மை செய்யப்படுகிறது என்ற செய்தி அப்போது கிடைத்தது. நிலக்கிழார்கள் தங்கள் சொந்தத் தேவைகளுக்காகவும் நடுத்தர மக்கள், பெரும் உணவு விடுதிகள் ஆகியோரின் தேவைகளுக்காகவும்தான் சன்ன வகை நெல்களைப் பயிரிட்டனர். தஞ்சைத் தரணியில் விளைந்த நெல் கேரளத்துக்குச் சென்றுவிட தமிழகத்தின் அரிசித் தேவையை ஆந்திரத்து வயல்கள் நிறைவு செய்தன. நெல்லை மாவட்டத்து வள்ளியூருக்கு நெல்லூர் அரிசி வந்தால்தான் குமரி மாவட்டத்தில் அரிசி விலை இறங்கும். தமிழகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களும் ஒரே உணவு மண்டலமாகச் செயற்பட்ட இந்த உண்மையை அறியாது, ஆந்திர மாநில அரிசியைச் சார்ந்து வாழும் ஒரு பற்றாக்குறை மாநிலம் தமிழகம் என்று ஏறக்குறைய அனைவருமே கருதுகின்றனர்.

இது இவ்வாறிருக்க, ‘இந்திய விடுதலை’ நாள் தொடங்கி தமிழக – இந்திய ஆட்சியாளர்களின் மறைமுக ஒத்துழைப்புடன் தமிழகப் பாசனத்துக்கு நீர் வழங்கும் ஆறுகளில் பெரும்பான்மையானவையான, அண்டை மாநிலங்களில் தோற்றுவாயைக் கொண்டவற்றின் நீர் வரத்தை, தங்கள் மாநில எல்லைகளில் அணைகளைக் கட்டி தடுத்து தமிழக நெல் வேளாண்மையைப் பெரும்பாலும் முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு திட்டம் நிறைவேறிக்கொண்டிருக்கும் நிலையில் கேரள அரசு சாக்குப்போக்குகளைக் கூறி தமிழகத்திலிருந்து அங்கு செல்லும் சரக்குப் போக்குவரத்தைத் தடுத்துக்கொண்டிருக்கும் விந்தையின் பின்னணியில் என்னதான் நிகழ்கிறது?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலம் வழியாகக் கேரளத்துக்குப் போக தமிழகத்தை விட்டால் வேறு முறையான பாதை கிடையாது. அதனால்தான் நெல்லைக் கூட நாம் மேலே சுட்டியவாறு, ஆந்திரத்திலிருந்து தமிழகம், தமிழகத்திலிருந்து கேரளம் என்றும் கேரளத்தார் தேவைக்காகத் தஞ்சைப் பரப்பில் பருக்கன் அரிசி விளைப்பு என்றும் நடைமுறை இருந்தது. இப்போது கொங்கண் – கோவா இரயில் தடத்தைப் பயன்படுத்தி கன்னட மாநிலம் வழியாக கன்னடத்திலிருந்தும் வட மாநிலங்களிலிருந்தும் தன் தேவைகளை கேரளம் எளிதாகப் பெற்றுக்கொள்ள முடிகிறது என்பதுதான் கேரளத்தாரின் இந்த நடவடிக்கைகளுக்கும் கன்னடம் உட்பட எல்லை மாநிலங்கள் நமக்குக் கிடைத்துவரும் நீர்வரத்துகளில் கைவைப்பதற்கும் பின்னணியாகும். இதில் வட இந்தியப் பனியாக்களின் ஆட்சியாகிய இந்திய அரசும் ஆட்சிக்கு வரும் முன்பே அவர்களுக்கு விலைபோய்விட்ட திராவிடக் கட்சிகளும் உடந்தை.

தண்ணீர் வரத்து சுருங்கிவிட்ட, அறிவிக்கப்படாத ஒரு பொருளியல் முற்றுகைக்கு தமிழகம் உட்பட்டிருக்கும் இன்றைய நிலையில் நம் உணவுத் தேவைகளை எப்படி நிறைவேற்றிக்கொள்வது?

நெல் வேளாண்மையைப் பொறுத்தவரையில் நாம் மிகப் பின்தங்கிய மனப்பான்மையைக் கொண்டுள்ளோம். வரப்புயர நீருயரும், நீருயர நெல்லுயரும் என்ற ஔவை வாக்கை அப்படியே எடுத்துக்கொண்டுள்ளோம். பாசனத்தைப் பேணுவதன் மூலம் மக்களின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவு விளைச்சலுக்குத் தேவையான நீர் வழங்கலை உறுதிசெய்வது அரசனின் அடிப்படைக் கடமை என்ற உண்மையை உணர்த்துவதுதான் அப் பாடலின் நோக்கம். ஆனால் கிடைக்கும் நீர் வயலினுள் வரப்பு முழுகும் அளவுக்கு எப்போதும் தேங்கி நின்றால் விளைச்சல் உயர்ந்துவிடாது என்பது பட்டறிவு. மழை பொய்த்துவிட்டதாலோ வேறு காரணங்களாலோ போதும் போதாது என்று முறைவைத்து நீர் பாயும் காலங்களில் கண்டுமுதல் வழக்கத்தைவிட கணிசமாக மிகுந்திருப்பது இத்தகைய நேர்வுகளில் தவறாமல் நிகழ்கிறது. இதற்கான காரணம் எளிது.

வயலில் நீரின்றி இருக்கும் போது காற்றுடன் தொடர்பு கொண்டு மண் காற்றூட்டம் பெறுகிறது. இது மண்ணை வளப்படுத்துகிறது. அத்துடன் தண்ணீர் கட்டாயம் தேங்கியிருக்க வேண்டிய பருவங்கள் தவிர்த்த காலங்களில் இடையிடையே தண்ணீர் இல்லாமல் இருந்தால் வயலில் இடப்படும் உரங்கள் பயிரின் வேர் எட்டாத ஆழத்துக்குச் சென்று வீணாவது தவிரும். இந்த நடைமுறை மூலம் 40 நூற்றுமேனி வரை நீர்ச் சிக்கனமும் 60 நூற்றுமேனி வரை விளைச்சல் மிகுதியும் பெறலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

நீர்ப் பற்றாக்குறை காலங்களில் இயற்கையில் தவறாமல் இடம்பெறும் இந் நிகழ்முறையைச் செயற்கையில் கையாண்டு பயன்பெற நம் உழவர்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அத்துடன் இங்கு நிலவும் சிற்றுடைமை வேளாண்மை எந்த உடைமையாளரையும் வேளாண்மையை மட்டுமே நம்பியிருக்கும் சூழலை உருவாக்கவில்லை. ஏறக்குறைய அனைத்து வேளாண்மையுமே ஒரு பக்கத் தொழிலாகவே கைக்கொள்ளப்படுகிறது. அதிலும் பெரும் பகுதி பொருளியல் அடித்தளம் இல்லாத, கூலி வேலையை நம்பி வாழும் குத்தகை உழவர்களாலேயே நடைபெறுகிறது. நில உச்சவரம்பு, குத்தகை நிலைப்பை விளைவாகக் கொண்ட குத்தகை ‘ஒழிப்பு’ சட்டங்கள், நெல், அரிசி நடமாட்டக் கட்டுப்பாடுகள், உரிமம் பெற்ற வாணிகன், ‘விலையில்லா’ அரிசி, மலிகை விலை அரிசி, நுகர்வோனை இரப்பாளியாக்கத் திட்டமிடப்பட்ட சாராய வாணிகம் என அனைத்துத் திசைகளிலுமிருந்தும் வேளாண்மை தாக்கப்படும் சூழலில் தொழில்நுட்ப மேம்பாடு பற்றி சிந்திக்கவோ செயல்படவோ யார் முன்வருவர்? ஆட்சியாளர்கள் ‘மதகுக் குழுக்கள்’ என்ற பெயரில் உழவர்களைத் திரட்டி நாம் மேலே சுட்டிய ‘காய்ச்சல் பாய்ச்சல்’ உத்தியைப் பரிந்துரைத்ததில் எந்தப் பயனும் இல்லை. இத் திட்டத்திலும் காவிரி ஆற்றுப்பரப்புக்கு விலக்கு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குத்தகை முறை ஒழிக்கப்பட்டு நில உச்சவரம்பு கைவிடப்பட்டு உழவன் தான் விளைக்கும் நெல்லை தான் விரும்பும் யாருக்கும் விற்கும் உரிமையையும் வழங்கினால் இது போன்ற புதிய உத்திகளைக் களத்தில் கையாளும் நிலை உருவாகும்.

காவிரி ஆற்றுப்பரப்பு எதிர்கொள்ளும் ஒரு சிக்கல் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பெய்யும் கால மழையாகிய மாரி மழையாகும். இம் மழையால் முற்றி நிற்கும் நெற்பயிரும் புதிதாக நட்ட இளம் பயிரும் நாள் கணக்கில் நீரில் மூழ்கி அழிந்து போகின்றன. சோழப் பேரரசன் கரிகாலன் நெற்பயிர்ச் செய்கையைத் தொடங்கும் நாளாக ஆடி மாதம் 18ஆம் நாளாக, ஏறக்குறைய ஆகத்து தொடக்கத்தில் நிறுவினான். வைகாசி இறுதியில்(சூன் 12) மேட்டூர் அணையைத் திறந்து ஆனி தொடக்கத்தில்(சூன் 20) கல்லணையிலிருந்து தண்ணீரை வெளியேற்றும் மரபை ஆங்கிலராட்சி உருவாக்கியுள்ளது. பழையபடி ஆடி 18இல் கல்லணையைத் திறக்கும் வகையில் இதை மாற்றியமைத்து குறுவை முடிந்து மாரிக் காலத்தில் நிலத்தில் பயிர் இல்லாதவாறு அல்லது கோரையாறு, மரக்காக் கோரையாறு கடைமுனைப் பகுதிகளில் கடைப்பிடிப்பது போன்று ஆளுயரம் தேங்கும் நீரில் வளரும் நெல் வகைகளைப் பயிரிடலாம்[7]. தை மாதம் தொடங்கி மூன்றாம் பூ(போகம்) பயிரிடலாம். அணையில் மாரிக் காலத்தில் தேங்கும் நீரை அதற்குப் பயன்படுத்தலாம். பற்றாக்குறை ஏற்பட்டால் கதிரவ ஆற்றலில் இயங்கும் நீரேற்றிகள் மூலம் நிலத்தடி நீரைப் பயன்படுத்தலாம்.

உயர் மட்டங்களில் உள்ள நிலங்களில் காவிரி நீர், கோடை(வெப்பச் சலன) மழை, மாரி மழை, அணை நீர், நிலத்தடி நீர் ஆகியவற்றைக் கொண்டு அதே காய்ச்சல் பாய்ச்சல் உத்தியைக் கையாண்டு மூன்று பூ விளைக்க முடியும்.

கன்னட மாவட்டத்தில் பெருமழை பொழிந்து கட்டுக்கடங்காமல் பெருவெள்ளம் வரும் காலங்களில் ஆற்றின் உயர் மட்டங்களிலிருந்து வாய்க்கால்களை வெட்டி தமிழகத்தின் வரண்ட மாவட்டங்களுக்குத் திருப்பி அங்கெல்லாம் நிலத்தடி நீரைத் தேக்கிவைத்து வாய்ப்புள்ள பயிர்களை விளைக்கலாம்.

காவிரி ஆற்றுப் பரப்பு, அதாவது கடலை ஒட்டிய பகுதி பல நூறு அடிகள் ஆழத்துக்கு பாறை இல்லா நிலமாகும். எனவே அது ஒரு நிலையான நிலத்தடி நீர்த்தேக்கமாகும். எனவே அங்கு பயிர்களை மாற்றி மாற்றி நீர்ச் சிக்கனத்தைக் கையாண்டு ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம்.

காவிரி நீரைக் கொண்டு நீர்ச் சிக்கன உத்திகளைக் கையாண்டு கூடுதல் பரப்பில் பாசனம் செய்வது என்ற அடிப்படையில் தமிழக வேளாண் தலைவர்களுடன் பேச்சு நடத்தவென்று மதுரைக்கு வந்த கன்னட மாநிலத்தின் வேளாண் தலைவர் நஞ்சுண்டசாமியைக் கூக்குரலிட்டு அடித்து விரட்டியதுதான் தமிழ்த் தேசியத்தின் பெயரால் இயக்கம் நடத்துவோர் இத் திசையில் எடுத்த ஒரே நடவடிக்கை.  

பொதுவாக, தாம் வளரும் நிலத்தில் இல்லாத தமக்குத் தேவைப்படும் சத்துகளைத் தாமே உருவாக்கும் தன்மை கொண்ட செடி வகைகள் உண்டு என்பது ஒரு நிலைத்திணையியல் கருத்து. பயிர் செய்யாத நிலத்தில் தாமே வளரும் களைச்செடிகள் எனப்படுபவை மண்ணில் குறைவுபடும் ஊட்டச் சத்துக்கேற்ப இந்த அடிப்படையில் மாறிக்கொண்டே இருக்கும் என்பதை இந்தக் கருத்தின் சான்றாகக் காட்டுகிறார்கள். இந்த அடிப்படையில் பயிர்களையும் மாற்றி மாற்றிக் கையாளலாமா என்பதும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு பொருளாகும். ஆனால் இது போன்ற ஆய்வுகளுக்கு வல்லரசுகளின் ஆய்வுக்களமாக நம் நாட்டை ஆக்கி வைத்திருக்கும் நம் ஆட்சியாளர்களை நம்பி இராமல் நம்மையே நம்பியிருக்க வேண்டுமென்றால் தேவையான அளவு பரப்பில் நிலமும் மூலதனமும் உள்ள உள்(தமிழ்)நாட்டார் கைக்கு வேளாண்மை வர வேண்டும்.

கவுந்தியடிகளும் கண்ணகியும் கோவலனும் கண்டு மகிழ்ந்த சோழ நாட்டின் செழிப்பை வல்லரசுத் தரகர்களான இந்திய ஆட்சியாளர்களும் தமிழகத்தை ஒருவர் பின் ஒருவராக ஆண்ட அவர்களின் அடிமைகளும் தமிழக மக்களுக்கு எதிராக வெறியூட்டுவதையே தங்கள் வாக்குவங்கி அரசியலுக்கு எளிய வழியாகக் கைக்கொண்டு வரும் கன்னட அரசியல்வாணர்களும் செய்துவிட்ட கொடுமைகள் தடமின்றி அழித்துவிட, நிலத்தடி நீரை கதிரவ மின்விசை கொண்டு பயன்படுத்தும் திசை நோக்கி நம்மை நிறுத்தியுள்ளது. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல காலவகையினான என்பதை மனதில் கொண்டு கடந்த கால காவிரி வளமை சோழ நாட்டு உழவர்களிடையில் உருவாக்கி விட்டுள்ள சோம்பலை உதறி வீறுகொண்டு எழ அறைகூவல் விடுப்பதே யாம் இப்போது செய்யத்தக்கது.

9. இவ்வாறு காவிரியாற்றின் வரம்பிலா வளமை பற்றிய பெருமித உணர்வை வெளிப்படுத்தும் அடிகளார் கழனிகளில் வாழும் பல்வேறு பறவைகளின் பட்டியலைத் தருகிறார். அவற்றின் குரல் கலவை போர்க் களத்தில் எழும் பல்வேறு குரல்களின் கலவையை ஒத்திருந்தது என்கிறார். போர்முனை என்பதை முனையிடம் என்ற சொல்லால் குறிக்கிறார். War front என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான ஒரு சொல் இது.
                        
10.                    உழாஅ நுண்தொளி உள்புக் கழுந்திய
கழாஅமயிர் யாக்கைக் செங்கட் காரான்
சொரிபுறம் உரிஞ்சப் புரிஞெகிழ் புற்ற
குமரிக் கூட்டிற் கொழும்பல்  லுணவு
கவரிச் செந்நெற் காய்த்தலைச் சொரியக்
கருங்கை வினைஞருங் களமருங் கூடி
ஒருங்குநின் றார்க்கு மொலி                    
என வரும் 120 -126 வரிகளில் அரிய செய்திகளை அடிகளார் வெளிப்படுத்துகிறார். உழா நுண்தொளி என்பது இயற்கையிலேயே சேறாக இருக்கும் நிலப் பகுதியாகும். புதைசேறு என்பதற்கு முந்திய நிலை இது. ஓடும் நீரில் உருண்டும் கலங்கலாகத் தொங்கியும் வரும் பல்வேறு வகை வண்டல்கள்[8] நீரோட்டத்தின் விரைவு குறையுந்தோறும் கனத்த துகள்கள் படிந்துவிட இறுதியில் படியத் தேவையான ஒப்புச் செறி இன்றியும் பருமைக்கு மிஞ்சிய மேற்பரப்பு இழுவிசை(Surface tension)யும் கொண்ட துகள்கள் நீரில் மிதந்து மேல் மட்டம் மட்டும் உலர்ந்து பொய்த் தரையாகி அடிப்புறம் இறுகாத குழம்பு நிலையில் இருக்க சதுப்பு நிலம் உருவாகிறது. படுகை எனப்படும் ஆற்றோட்டத்தின் ஓரங்களில் நீரின் விரைவு குறைந்திருப்பதால் அங்கும் பருமன் குறைந்த வண்டல் படிந்து படுகை எனப்படும் ஆற்றுறுப்பு உருவாகிறது(படிகை படுகை). வண்டல் கலந்த நீர் வெளியேறும் தாழ் மதகுகளின் பின் புறங்களிலும் இது போன்ற படிவுகள் உண்டு. அதை ஒட்டியுள்ள பாசனப் பரப்புகளை படுவப் பத்து(படிகை + பற்று) என்பது குமரி மாவட்ட வழக்கு. பத்து என்பது பற்று என்பதன் திரிபாகும். ஒரு மதகு, ஏரி அல்லது வாய்க்காலின் கீழ் பாசனம் பெறும் நிலப்பரப்பான ஆயக்கட்டு என்ற சொல்லுக்கு இணையானது பற்று என்ற சொல்[9]. சேற்றைத் தொளி என்ற சொல்லால் குறிப்பிடுவதும் குமரி மாவட்ட வழக்கு. இத்தகைய நிலங்களை உழுவதில்லை. நெல்லை விதைத்து எருமையைக் கட்டி பரம்படிப்பதோடு[10] சரி. எருமை பரம்படி பலகையையும் அதன் மீது நிற்கும் மனிதனையும் இழுத்துக்கொண்டு நீந்திச் செல்லும்.

இத்தகைய “உழாஅ நுண்தொளி”யில் தலையை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு “அழுந்தி”க் கிடப்பது எருமைகளுக்கு மிகப் பிடித்த ஒன்று. (யானை, பன்றி போன்ற கருமை நிறம் கொண்ட உயிரிகளும் வெய்யிலின் கொடுமையிலிருந்து தப்ப நீரில் அமிழ்ந்து கிடப்பதை விரும்புகின்றன. காக்கையும் அடிக்கடி குளித்துத் தன் உடல் காந்தலைத் தீர்த்துக்கொள்கிறது.) நீரிலிருந்து வெளிப்பட்டு அதன் மீது ஒட்டிக்கொண்டிருக்கும் சேறு உலரத் தொடங்கியதும் அது சுருங்கி எருமையின தோலை இறுக்க அதனால் அதற்கு அரிப்பு உணர்வு உருவாகும். இந்த அரிப்பைத் தீர்த்துக்கொள்வதற்காக அந்த எருமை எதிர்ப்படும் மரம் போன்ற எதிலாவது உடம்பைத் தேய்க்கும். இங்கு அடிகளார் காட்டும் கழனியில் அண்மையில் மரம் எதுவும் இல்லையாதலால் அது அங்கிருந்த “குமரிக் கூட்டி”ல் உரசியது. அதனால் “புரி நெகிழ்ந்த” குமரிக் கூட்டிலுள்ள கொழுமையான பலவகை பலகாரங்கள் கவரி போன்ற தோற்றம் கொண்ட நெற்கதிர்கள் மீது சிந்த அது கண்ட உழுதொழிலாளர்கள் எருமையை விரட்ட எழுப்பிய ஒலி என்ற போருள்படும் இவ் வரிகளுக்கு “புரி ஞெகிழ்பு உற்ற குமரிக் கூட்டின் – புரிகள் நெகிழ்தலையுற்ற அழியாத நெற்கூட்டின்கணுள்ள” என்று வேங்கடசாமியார் பொருள் கூறியுள்ளார். அடியில் சொல் விளக்கமாக, “குமரி – அழியாமை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடக்கமாகச் செய்யும் எந்தச் செயலையும் கன்னி அல்லது குமரி என்ற அடைமொழி கொடுத்து அழைப்பது நம் மரபு. ஆங்கிலத்திலும் கன்னி எனப் பொருள் தரும் maiden என்ற அடைமொழி வழக்கிலுள்ளது. எனவே அறுவடை நடவடிக்கைகளை தங்கள் வயல்களில் முதன்முதல் தொடங்கும் போது முதலில் அறுக்கும் கதிர்களைக் கூடு போல் அமைத்து அதனுள் பலகாரங்களை வைத்து வழிபட்டு அதன் பின் அறுவடையைத் தொடங்கும் நடைமுறையில் உருவாக்கப்பட்ட கூட்டைத்தான் குமரிக் கூடு என்று அடிகளார் குறிப்பிடுகிறார். உரையாசிரியர் குமரி என்பதற்கு அழியாத என்ற பொருளைக் கொண்டுள்ளார். ஒவ்வொரு பணிகளின் தொடக்கத்தின் போதும் நடைபெறும் கன்னி வழிபாடுதான் வீடுகளில் இடம்பெறும் கன்னி வழிபாடாக வடிவெடுத்தது போலும். குமரிக் கண்டத்தின் பெயருக்குக் காரணமான குமரித் தாயின் வழிபாடும் இதனுடன் மயங்கியது போலும். நெற்கதிர்களை அடுக்கி வைக்கோற் புரிகளால் கட்டி கூடாரம் போன்ற கூடாக அமைத்ததை “புரி ஞெகிழ்புற்ற” என்பதால் புரியவைக்கிறார் அடிகளார்.          

இந்த வரிகளிலிருந்து வேறொரு செய்தியும் வெளிப்படுகிறது. “குமரிக் கூட்டை”க் கலைத்த எருமையைக் கருங்கை வினைஞரும் களமரும் கூடி நின்று கூச்சலிட்டு விரட்டினர் என்பதாகும் அது. இதில் கருங்கை வினைஞர் என்பதற்கு வலிய கையினையுடைய வினையாளரும் களமர்களும் என்று வரிக்கு உரையெழுதி, கருங்கை – வலிய கை, வினைஞர் – பள்ளர், பறையர் முதலானோர், களமர் – உழுகுடி வேளாளர்” என்று கூறியதுடன் கருங்கை என்பதை வினைஞர், களமர் ஆகிய இருவருக்கும் ஏற்றி அருஞ்சொற் பொருள் கூறுகிறார் வேங்கடசாமியார்.
                        
உழுகுடியினர் என்போர் உழவு, நடவு, களை பறித்தல், அறுவடை, வைக்கோல் உலர்த்தல், இப் பணிகளை ஒருங்கிணைத்து மேற்பார்த்தல் உட்பட அனைத்து உடல் உழைப்புப் பணிகளையும் மேற்கொண்ட, அன்று கடையர் என்று அழைக்கப்பட்டோரைக் குறிப்பதாகும். அவர்களில் பெண்களையே கடைசியர் என்று நான்கு அடிகள் தாண்டி அடிகள் குறிப்பிடுகிறார்.
  
கருங்கை என்ற சொல்லுக்கு தமிழ் மொழியகராதி அரியவேலை என்ற பொருளைத் தருகிறது. கருங்கைக் கொல்லர்(இந்திரவிழவூரெடுத்த காதை வரி 29) என்று அடிகள் கூறுவதையும் காணலாம்.

நம் நாட்டில் நெற்களத்தில் தலையடி(கதிரடித்தல்) முடிந்து பொலி தூற்றியதும் கிடைக்கும் தரமான நெல்லில் ஊர்ப் பணியாளர்களாகிய வண்ணார், நாவிதர், கலப்பை, பண்ணை அரிவாள் போன்றவை செய்யும் கொல்லர் ஆகியோருக்கென்று நிறுவப்பட்ட இன்று “மாமூல்” என்று குறிப்பிடப்படும் வழக்கம் என்ற நெல்லை அளந்தனர். அத்துடன் அறுவடைத் தொழிலாளர்களுக்குரிய கூலியாகிய கொத்தையும் அளந்தனர். அவ்வாறு வழக்கம் வாங்க வந்தவர்கள் எருமையை விரட்டுவதையே மேலேயுள்ள வரிகள் சுட்டுகின்றன.

தலையடி அடித்த நெற்கதிர்களை அடுக்கி ஓரிரு நாட்கள் புழுங்கவைத்து பின்னர் விரித்து மாடுகளை அதன் மீது ஓட்டி போரடிப்பது அடுத்த கட்டம். இதனைச் சூடடித்தல் என்று குமரி மாவட்டத்தில் கூறுவர். தலையடியில் நன்கு விளைந்து முற்றிய முதல் தர நெல்மணிகளே இருக்கும். ஆனால் சூடடியில் விளைச்சல் குறைந்தவையும் சூலேறாத சாவி எனப்படும் பதரும் கலந்திருக்கும். இதில்தான் ஏழை எளியவர்க்கும் இரந்தூண் வாழ்க்கையருக்கும் நெல் அளப்பர். ஏர்க்களம் பாடுநரும் போர்க்களம் பாடுநருமான பொருநருக்கும் இந் நெல்லே அளக்கப்பட்டது என்பதை, 
                           அரிந்துகால் குவித்தோர் அரிகடா வுறுத்த
பெருஞ்செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும்
தெண்கிணைப் பொருநர் செருக்குட னெடுத்த
                                    மண்கணை முழவின் மகிழிசை யோதையும்
என்ற வரிகள் (136 – 139) காட்டுகின்றன. உறவினர், நண்பர் போன்ற மதிப்பிற்குரியோர்க்கு சூடடி நெல்லைக் கொடுப்பதில்லை. எங்கள் குடும்பச் சொத்தான ஒரே வயல் பாகப் பிரிவிளையின் மூலம் என் பெரிய தந்தையாருக்குச் சென்றது. அவரது தாயற்ற பிள்ளைகளை வளர்த்த தாய்மாமனின் பொறுப்பில் அவ் வயல் இருந்தது. அவர் ஒவ்வோர் அறுவடையின் போதும் ஓரிரு மூடைகள் நெல் எங்களுக்குக் கொடுத்தனுப்புவார். என் தாயார் அதனைச் சூடடி நெல் என்று குறை கூறி ஆள் பிடித்துத் திருப்பிவிடுவது அடிக்கடி நடக்கும். என் தாயார் செய்வது மிகை என்பதாக சிறுவனான எனக்குத் தோன்றும். அத்துடன் நெல்லைப் பற்றிய தாயாரின் இந்த மதிப்பீடு துல்லியமானதுதானா என்றும் எனக்குத் தோன்றும். என் தந்தையார் இதில் தலையிடுவதில்லை. இது போல் ஆள் தராதரம் பார்த்து நெல் வழங்கும் முறை இருப்பது அடிகளின் இந்த வரிகளில் இருந்து தெரிகிறது.

முகவைப் பாடல் என்பது நெல்லை அளப்பவர் ஒருவகை இசைப்புடன் எண்ணிக்கையைச் சொல்வது. இவ்வாறு எண்ணிக்கையை இசை சேர்த்துச் சொல்லிக் கொண்டே அளக்கும் போது ஐம்பதை எண்பதாகவும் எண்பதை ஐம்பதாகவும் மாற்றிக் கூறி ஏமாற்றுவதும் நடக்கும்.
                                            
பொதுவாக மரக்கால் என்ற அளவுக்கலனை இதற்குப் பயன்படுத்தினர். திருவிதாங்கோட்டில் (திருவிதாங்கூர்) இன்றைய குமரி மாவட்டப் பகுதிகள் இருந்த போது அங்கு நெல் அளக்க மரக்காலும் புன்னைக்காய்ப் பரலை அளக்க இடங்கழி என்ற அளவும் பொதுமக்களிடையில் வழக்கில் இருந்தன. உலகப் போர்க்காலப் பங்கீட்டு முறை நடப்பிலிருந்த போது பொதுமக்களிடமிருந்து அரசின் கட்டாயக் கொள்முதலுக்கு, பறை என்ற முகத்தல் அளவு பயன்பட்டது. முகந்து அளக்கும் போது பாடப்படுவதால் முகவைப்பாட்டு எனப்பட்டது போலும். பொலி தூற்றும் போது பாடப்படும் பாட்டு என்ற பொருளை வேங்கடசாமியார் தருகின்றார்.

11.                                கடிமலர் களைந்து……..ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்
என்று 127 முதல் 136 வரிகளில் நாற்று நடும் பெண்களின்(கடைசியரின்) பேச்சு, பாட்டு ஒலிகளும் பொன்னேர்(நல்லேர்) பூட்டுவோரின் ஏர்மங்கலப் பாட்டும் என்று இடையில் கூறி உழவு முதல் அறுவடை வரையான செயற்பாடுகள் ஒரு வரிசைமுறையின்றி ஒன்றையொன்று ஊடறுத்துச் செல்வதாகக் காட்டி காவிரி ஆற்றுப்பரப்பில் அன்று இடைவெளியின்றி வேளாண் பணிகள் நடைபெற்று அங்குள்ள மக்களை வளமை குன்றா நிலையில் வைத்திருந்தன என்பதைக் குறிப்பாக உணர்த்துகிறார் அடிகள்.

இது வியப்பூட்டுவதாக உள்ளது. இன்றைய நெல் வேளாண்மை முதலில் நீர் பாய்ச்சி நாற்றுவிடுதல், வயல்களுக்கு நீர் பாய்ச்சி உழுது பதப்படுத்தல், நாற்று நடுதல் என்று நீரோட்டங்களின் மேல் எட்டங்களில் தொடங்கி அணைகளில் நீர் திறந்து ஆற்றிலும் வாய்க்கால்களிலும் கீழ் நோக்கிச் செல்லுந்தோறும் கீழ் நோக்கி வரிசையாகச் செல்லுதல், அடுத்து களை பறித்தல், பின்னர் இடைவெளி விட்டு அறுவடை என்று நடைபெறுகிறது. இதனால் முதல் கட்டமான நடவுக்கும் இறுதிக் கட்டமான அறுவடைக்கும் இடையில் கணிசமான இடைவெளியால் வேளாண் தொழிலாளர் வேலையின்றி ஓய்ந்திருக்கும் நிலைமைக்கு மாறாக கால வேறுபாடின்றி அனைத்துப் பருவங்களுக்கும் பொருந்துவனவாக வேறுபட்ட நெல் வகைகள் நம்மிடம் இருந்தனவா அவற்றை அவ்வவ்வவற்றுக்குரிய பருவத்துக்குப் பயிர் செய்யாமல் ஒன்று அல்லது இரண்டு, மிஞ்சினால் மூன்று பருவங்களுக்குள் சுருக்கி விட்டோமா என்ற கேள்வி எழுகிறது. நம்மிடையில் நிலவி இன்று “பசுமைப் புரட்சி”யால் அகற்றப்பட்டாலும் சிலரால் பாதுகாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் எண்ணற்ற வகை நெல்களின் பயிர்ச் சுழற்சிப் பண்புகளைப் பகுத்தாய வேண்டியுள்ளது. 

இன்று வழக்கொழிந்துகொண்டிருக்கும் சில பயிர்ச் செய்கை முறைகளைப் பற்றி இங்கு கூறுவது பொருத்தமாக இருக்கும்.
           
குமரி மாவட்டத்தில் பொடி விதை, தொளி விதை என இரு முறைகள் உண்டு. முதலதில் சாரல் மழை எனப்படும் தென்மேற்குப் பருவ மழையை எதிர்நோக்கி உலர் நிலையிலேயே வயல்களை உரமிட்டு நன்றாக உழுது புழுதியாக்கி அதில் நெல்லை விதைத்து பரம்படித்து ஆயத்த நிலையில் வைத்திருப்பர். மழை விழுந்ததும் நெல் முளைக்கும். குளம் அல்லது வாய்க்கால் மூலம் கிடைக்கும் நீரில் பயிர் வளரும். இதில் இரு குறைபாடுகள் உண்டு. முதலாவது, இதில் களைகள் நெல்லோடு முளைத்து மண் வளத்தில் பங்குபோடும். களை எடுக்கும் செலவு மிகுதியாக இருக்கும். இரண்டாவது, பயிரின் நெருக்கம் ஒரே சீராக இருக்காது. இதைச் சீர் செய்ய நீண்ட கை(கைப்பிடி) கொண்ட சிறு மண்வெட்டி(நெல்கோரி)யால் ஓரிடத்தில் நின்றுகொண்டு சுற்றி நெருக்கமாக இருக்கும் முளைகளை எடுத்து கலத்தமாக இருக்கும் இடங்களில் இட வேண்டும்.

நடவுமுறையிலுள்ள சிறப்பு என்னவென்றால் அப்போதுதான் உழுது களைகள் சேற்றுக்குள் அழுந்திய நிலையில் இருக்கும் வயலில் ஏறக்குறைய ஒரு மாத வளர்ச்சியடைந்த நாற்று நடப்படுவதால் களைகள் முளைத்து வளர்ந்து பூத்து பிஞ்சு பிடித்து நெல்லுக்குப் போட்டியாக வருவதற்கு முன் நெல் பொதி வந்து பால் பிடித்துவிடும். களை பூப்பதற்கு முன் ஒரேயொரு முறை களையெடுத்தால் போதும். அத்துடன் மண் பதப்படுத்தும் போது உழுது புரட்டப்படும் களை அழுகி உரமாகவும் மாறுகிறது. அதன் விதைதான் புதிய களையாக வெளிவருகிறது. பயிருக்கும் களைக்குமுள்ள உள்ள இந்த வளர்ச்சிப் பருவ வேறுபாடுதான் ஒற்றை வைக்கோல் புரட்சி(One straw revelution) எனும் புதிய வேளாண் உத்தியின் அடிப்படையாகச் செயற்படுகிறது என்று சொல்லலாம்.

2003ஆம் ஆண்டு என் முன்முயற்சியில் குமரி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு வேளாண்துறை நிகழ்ச்சியில் நூறாண்டுப் பயிரான தென்னை வேளாண்மையில் அங்கு கடைப்பிடிப்பது போல் களைச்செடிகளை அழிப்பது தவறு என்றும் அவற்றை அவ்வப்போது உழுது புரட்டினால் போதும், அப்போது முழு நிலப் பரப்பும் காற்றிலிருந்தும் கதிரொளியிலிருந்தும் உரத்தை விளைக்கும் தொழிற்சாலையாகச் செயற்படும் என்ற என் கருத்தை முதலில் ஏற்கத் தயங்கிய வேளாண் துறையினர் என் விளக்கங்களைக் கேட்ட பின் முன்னைப் போல் வயலில் பிடுங்கிய களையை வயல் வரப்பில் இட்டுக் காயவிடாமல் வயலில் சேற்றினுள் அழுத்துமாறு உழவர்களுக்கு அறிவுறுத்துவதாகக் கூறி என் கருத்தை மறைமுகமாக ஏற்றுக்கொண்டனர்.

12. அடுத்து, அரசனுக்கு வெற்றியையும் மழையையும் விளைக்கும் என்று கூறி வேள்வி வளர்க்கும் பார்ப்பனர் இருப்பிடங்களிலிருந்து மலைமேல் மேவும் வெண்மேகம் போல் எழும் வேள்விப்புகையையும் இரப்போர்களின் கூட்டத்தையும் ஆட்சியாளர்களின் அதிகாரத்தையும் தம் உழுதொழிலால் விளைவிக்கின்ற காவிரியின் புதல்வர்களாகிய உழவர்கள் பொலி தூற்றுவதாலும் கரும்பாலைகளிலிருந்தும் வெளிப்படும் புகையாலும் மாலை வானத்து மலை போல் தோன்றும் உழவர் குடியிருப்புகளையும் ஒப்பிட்டு உழவர்களின் பெருமையை மறைமுகமாகக் காட்டுகிறார். புத்த அம்மணர்களாகிய அயல்நாட்டு ஒற்றர்கள் தங்களுக்கெதிராக மக்களைத் துண்டி வருவதை  எதிர்கொள்ள, மக்களின் அரவணப்பை நாடுவதை விட்டு வடக்கில் புத்த அம்மணச் சமயங்களின் தாக்குதல்களிலிருந்து தப்பி இங்கே வந்த வடக்கத்திப் பார்ப்பனர்களைத் தமிழரசர்கள் அரவணைத்த தவறான அணுகலால் அவ் வந்தேறிகள் வளவாழ்வு வாழ்வதை அடிகளார் சுட்டுகிறார். “காவிரியின் புதல்வர்கள்” என்று உழவர்களைக் கூறுவதால் பார்ப்பனர்கள் அயலவர் என்பதையும் குறிப்பால் உணர்த்துகிறார்.

13. புகார் நகருக்கு வெளியே வந்த கோவலன் - கண்ணகியரைக் கண்டு அவர்களது நிலையறிந்து அவர்களுக்குத் துணையாகச் செல்வது துறைவியாகிய தனது மனித நேயக் கடமை என்று முடிவு செய்து, மதுரைக்குச் சென்று அங்குள்ள சமயப் பெரியோரின் அறவுரையைக் கேட்க நெடுநாளாக ஆவலுற்றுருப்பதாகக் கூறி கவுந்தி அடிகள் உடன் செல்கிறார்(வரி 52 – 60). வழியில் திருவரங்கத்தில் சிலாதலம் எனப்படும் ஓர் அம்மணர் வழிபாட்டிடத்தில் சாரணர் எனப்படும் ஊர் சுற்றும் சமயப் பணியாளர் தோன்றினர். அவர்களை கவுந்தி அடிகளும் கோவலன் - கண்ணகியும் காலடியில் வீழ்ந்து வணங்குகின்றனர். அவர்களுக்கு வரப் போகும் கேட்டினை அறிந்தும், அதனால் எந்த உணர்வும் கொள்ளாமல் (ஆர்வமுஞ் செற்றமு மகல நீக்கிய வீர னாகலின் விழுமம் கொள்ளான் – வரி 168 - 69), செய்த வினைகளின் விளைவுகளைத் தவிர்க்க முடியாது என்று “தத்துவம்” பேசியதுடன் இப்படி வழியில் செல்வோரின் மீதெல்லாம் பற்று வைத்து உன்னைக் கெடுத்துக்கொள்ளாதே என்று(பவந்தரு பாசம் கவுந்தி கெடுகென்று – வரி 211) அறிவுரை வேறு கூறிச்சென்றனர். அதுவும் கால் நிலத்தில் பாவாமல் ஒரு முழ உயரத்தில்(நிவந்தாங் கொருமுழம் நீணிலம் நீங்கி – வரி 210 ) பறந்தனராம். இளங்கோவடிகள் எவ்வளவு ஆழமாகக் கிண்டல் செய்கிறார் பாருங்கள்! அதாவது அம்மணம் ஒரு மக்கள் தொண்டு சமயம் என்று அடிமட்டத் தொண்டர்கள் நம்பிச் செயல்பட, மக்களின் சிக்கல்களில் தலையிடுவது துறவுக் கொள்கைக்கு எதிரானது என்று மேல் மட்டத்தினர் நடந்துகொண்டனர். கொல்லாமை என்ற கோட்பாட்டை அடிப்படையாக வைத்து, நடக்கும் போது காலுக்குள் சிக்கி பூச்சி புழுக்கள் செத்துவிடும் என்ற காரணம் காட்டி மயிற்பீலியால் தாம் நடந்து செல்ல வேண்டிய நிலத்தைப் பெருக்கித் தூய்மை செய்யும் மனப்பேதலிப்புக்கு ஆளான அம்மணத் தலைமைகள் உழுது மண்ணைப் புரட்டிப் போடுவதால் உயிர்க்கொலை புரியும் உழவனை இழிவாக நடத்துவது இயல்புதானே. அதாவது இருக்கும் வருண முறை தங்களுக்கு உரிய மதிப்பைத் தரவில்லை என்று தோன்றிய புத்தமும் அம்மணமும் தங்களை நிலைநிறுத்திக்கொண்ட பின் தங்களைக்கு வலிமை வழங்கிய அடித்தள மக்களை ஒதுக்கி ஒடுக்கி வைக்கும் திசையில் நடைபோட்டதை இது காட்டுகிறது என்று சொல்லலாம்.  

கவுந்தியடிகளும் கோவலன் கண்ணகியும் சிலாதலம் செல்வதை வைத்து அம்மணர்களின் வழிபாட்டு முறைகளின் ஒரு பதத்தைத் தருகிறார் அடிகளார்.

வம்பப் பரத்தை வறுமொழியாளன்(வரி 219) கோவலனும் கண்ணகியும் கணவன் - மனைவி என்ற புரிதலுடன் கேட்ட இயல்பான கேள்விக்கு கவுந்தியடிகள் தன் துறவி மொழியில் விடை சொல்ல அவர்கள் அதைக் கேலி செய்தது இத் துறவிகளைப் பற்றி சராசரிப் பொதுமக்கள் மனதில் இருந்த ஒரு தாழ்ந்த படிமத்தைக் காட்டுகிறதென்று கூறலாம். “சிலாதல”க் காட்சியில் வெளிப்பட்ட உணர்வுகளிலிருந்து இது முற்றிலும் முரண்பட்ட ஒன்று. இன்றும் துறவிக் கோலம்போட்டுத் திரியும் இரப்பாளிகளை நாட்டுப்புற எளிய மக்கள் கிண்டலடிப்பதைக் காணலாம்.

அது மட்டுமல்ல, கவுந்தியடிகள் சாவமிட்டதை கோவலன் – கண்ணகி அறியார்(கவுந்தி யிட்ட தவந்தரு சாபம் கட்டிய தாகலின் பட்டதை யறியார் – வரி 233 -34), நரிகள் ஓலமிட்டதைக் கேட்டே அதை அறிந்தனர் என்கிறார் ஆசிரியர்.

உறையூருக்குக் கோழி என்ற பெயர் வந்ததற்குக் காரணமாகக் கூறப்படும் கதையை இன்னொரு கோணத்திலும் பார்க்கத் தோன்றுகிறது. யானையையும் கோழியையும் கொடிகளாகக் கொண்ட இரு அரசர்கள் போரிட்டதில் கோழிக்கொடி கொண்ட அரசன் யானைக்கொடி கொண்டவனை வென்றதாலும் இப் பெயர் வந்திருக்கலாம். பண்டை அரசர்களின் கொடிகளைப் பற்றிய செய்திகளைத் திரட்டினால் புதிய வரலாறு ஏதாவது கிடைக்கக் கூடும்.

இக் காதையோடு நாம் சோழ நாட்டிலிருந்து வெளியேறுகிறோம். எனவே அடிகளார் அந் நாட்டின் நிலவளம், நீர்வளம், காலநிலைகள், மாவடை, மரவடைகள்(ஆங்கிலத்தில் fauna, flora ஆகிய சொற்களுக்கு இணையாக, நெல்லை மாவட்டத்து நிலப் பரிமாற்றம் பற்றிய ஓர் ஆவணத்தில் கண்ட சொற்கள்), உணவு வகைகள், குடும்ப உறவுகள், தொழில்கள், குமுக உறவுகள், அரசியல், கலைகள்,விழாக்கள், தொன்மங்கள், வரலாறு போன்ற பருப்பொருள் பண்பாட்டு(Material culture)ச் செய்திகளைத் கோவலன் – கண்ணகியின் மூலம் தான் தந்துள்ளதாகக் கூறி புகார்க் காண்டத்தை முடிக்கிறார் இளங்கோவடிகள்.     
ª                                            ª                                                    ª
அன்புப் பரிசு
என் அடாவடிகளின் விளைவான சுமைகளை எனக்குத் தெரியாமல் மறைத்து என் புற வாழ்க்கைச் செயற்பாடுகளுக்கு இடம் அமைத்துத் தந்த என் அன்புத் துணைவி இரா.நாராயணிக்கு.  


[1] வண்டிச் சக்கரத்துக்கும் பிரிட்டீசு நீட்டலளவைக்கும் உள்ள இந்த உறவை வெளிப்படுத்தியவர் செங்கம் திரு.கு.வெங்கடாசலம் அவர்கள். குமரி மாவட்டத்தில் வண்டிச் சக்கரத்தைப் பைதா என்பர், உரூபாவில் 28இல் ஒன்றாகும் நாணயத்தைச் சக்கரம் என்பர். பிற மாவட்டங்களில் காசை பைசா என்கின்றனர். வண்டி செய்யும் கொல்லுத் தொழிலாளர்கள் ஆரைக்கால்களுக்கும் சக்கரத்துக்கும் வைத்திருக்கும் அளவுகோல்களை வைத்து கணிதத்தில் வரும் “பை” (π)
எனப்படும் விகிதத்தை எப்படி எடுக்கிறார்கள் என்று அவர் விளக்கினார். அதை வைத்து நானும் நண்பர் வெள்உவனும் “பை”தா, அதாவது “பை”விகிதம் சக்கரத்தில் அடங்கியிருப்பதால்தான் அதைப் பைதா என்று கூறுகிறார்கள் என்று வேடிக்கையாகப் பேசிக்கொண்டோம்.
[2] புளுட்டோவின் விட்டத்தை இவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை என்று தெரிகிறது. கிளார்க் பட்டியலின் (Physical and Mathematical tables by John B.Clark) 1965ஆம் ஆண்டு வெளியீட்டின் படி அதன் ஆரை புவியினதுடன் விகிதத்தில் ஒன்றைவிடக் குறைவு என்றுதான் தரப்பட்டிருக்கிறது. இக்கோள் பற்றிய அடிப்டையான புலனங்களைத் திரட்ட முடியாததனால்தான் அதனைப் பட்டியலிலிருந்து நீக்கியிருக்கிறார்கள் போலும்.
[3] இவ்வாறு புவியை நடுவில் வைத்து பிற கோள்களையும் கதிரவனையும் புவியிலிருந்து அவற்றுக்குள்ள தொலைவுக்கேற்ப வலதும் இடதும் பக்கங்களுக்கு ஒன்று மாற்றி ஒன்றாக வைத்துப் பார்க்கும் உத்தியை முன்வைத்தவர் நண்பர் வெள்வன் அவர்கள்.
[4] போர்களில் வென்றோரைத் தேவர் என்றும் தோற்றோரை அசுரர் அல்லது அரக்கர் என்றும் வகைப்படுத்தும் வழக்கமும் உண்டு.
[5] இந்த இறுதிப் “பலன்” சோதிடர்கள் புகுத்தி நம் பண்டை வானியலை “இற்றை” வானியலார் எனப்படுவோர் கிண்டல் செய்வதற்கான சாக்குப்போக்கைத் தர காரணமானவற்றுக்கான ஒரு சிறந்த பதம்.
[6] அனந்தன் என்ற இந்தப் பெயரடிப்படையில்தான் திருவனந்தபுரம் என்ற ஊர்ப் பெயரும் அனந்த பத்மநாபன் போன்ற ஆட்பெயர்களும் வழங்குகின்றன.
[7] மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளில் ஆறுகளில் நீரில்லா அடைப்புக் காலம் ஒன்றில் மதிப்பீட்டுக்கான அளவை நோட்டங்கள் எடுத்த போது அகலம் மிகுந்த வயற்கால்கள் அங்கிருப்பது குறித்து உசாவிய போது கிடைத்த புலனம் இது. மாரிக் காலத்தில் இங்கு கடலிலிருந்து ஏறக்குறைய 13 கிலோமீற்றர்கள்(8மைல்கள்) வரை கடல் நீரை எதிர்த்து ஆற்று நீர் தேங்கி நிற்கும் என்பதும் அத்தகைய சூழலில் நின்று வளரும் வகை நெல்லை அங்கு பயிரிடுவர் என்றும் நீர் மட்டத்துக்கு மேல் வளர்ந்து தலையை நீட்டி நிற்கும் விளைந்த நெற்கதிரை அகன்ற வயற்கால்களில் படகுகளில் சென்று அறுவடை செய்வர் என்றும் வைக்கோலை அப்படியே வயலில் விட்டுவிடுவர் என்றும் செய்திகள் கிடைத்தன. அத்தோடு உவர் நிலத்திலும் விளையும் உவருண்டான் (வாசறமுண்டான் என்று குமரி மாவட்டத்தில் வழங்குவர் இது உவர் இல்லாத நிலத்திலும் நல்ல விளைச்சலை இன்றைய “வீரிய” விதைகள் அறிமுகமாகும் முன் கொடுத்தது) போன்ற நெல் வகைகளையும் பயிரிடலாம்.
[8] . மண்டுவதால் மண்டல்; மண்டல் வண்டல். (சேறு கலந்த நீர் தேங்கி வற்றிய நிலையில் படியும் சேற்றை மண்டி என்பது குமரி மாவட்ட வழக்கு. நீர் உணவுகளில் அடியில் தங்கும் திடப் பொருள்களையும் மண்டி என்றே குறிப்பிடுவர்). செறிவாக மண்டுவது மண் எனப்பட்டது. அவ்வாது மண்டாதது மண் + அல் = மணல் எனப்பட்டது. ஆனால் நீரோட்டத்தில் படியும் மணலையும் வண்டல் என்பதே பாசனத் துறை மரபு.
[9].  மலையடிவாரத்திலிருந்து மழை நீரைப் பெறும் குளங்கள், ஆறுகளின் குறுக்கில் கட்டப்பட்ட அணைக்கட்டுகள் ஆகியவற்றிலிருந்து பாசனம் பெறும் நிலங்களை அகப்பத்து நிலங்களென்றும் சென்ற நூற்றாண்டில் கட்டப்பட்ட அணைகளிலிருந்து வெட்டப்பட்ட வாய்க்கால்கள் மூலம் பாசனம் பெறும் முன்னாள் புன்செய் நிலங்களைக் காட்டுப்பத்து நிலங்களென்றும் குறிப்பிடுவது குமரி மாவட்ட வழக்கு.  
[10].            இதனை மரமடித்தல் என்று குமரி மாவட்டத்தில் குறிப்பிடுவர்.

0 மறுமொழிகள்: