17.11.16

சிலப்பதிகாரப் புதையல் - 14 - வேட்டுவ வரி



12. வேட்டுவ வரி

கடுங்கதிர்  திருகலின் நடுங்கஞர் எய்தி
ஆறுசெல் வருத்தத்துச் சீறடி சிவப்ப
நறும்பல் கூந்தல் குறும்பல வுயிர்த்தாங்கு
ஐயை கோட்டத் தெய்யா வொருசிறை
5.      வருந்துநோய் தணிய இருந்தனர் உப்பால்
வழங்குவில் தடக்கை மறக்குடித் தாயத்துப்
பழங்கட னுற்ற முழங்குவாய்ச் சாலினி
தெய்வ முற்று மெய்ம்மயிர் நிறுத்துக்
கையெடுத் தோச்சிக் கானவர் வியப்ப
10.    இடுமுள் வேலி எயினர்கூட் டுண்ணும்
         நடுவூர் மன்றத் தடிபெயர்த்  தாடிக்
         கல்லென் பேரூர்க் கணநிரை சிறந்தன
         வல்வில் எயினர் மன்றுபாழ் பட்டன
          மறக்குடித் தாயத்து வழிவளஞ் சுரவாது
15.     அறக்குடி போலவிந் தடங்கின ரெயினரும்
கலையமர் செல்வி கடனுணி னல்லது
         சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள்
         மட்டுண் வாழ்க்கை வேண்டுதி ராயின்
         கட்டுண் மாக்கள் கடந்தரு மெனவாங்கு
20.    இட்டுத் தலையெண்ணும் எயின ரல்லது
        சுட்டுத் தலைபோகாத் தொல்குடிக் குமரியைச்
        சிறுவெள்ளரவின் குருளை நாண் சுற்றிக்
குறுநெறிக் கூந்தல் நெடுமுடி கட்டி
இளைசூழ் படப்பை இழுக்கிய வேனத்து
25.     வளைவெண் கோடு பறித்து மற்றது
முளைவெண் திங்க ளென்னச் சாத்தி
மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற
மாலை வெண்பற் றாலிநிரை பூட்டி
வரியும் புள்ளியு மயங்கு வான்புறத்து
30.     உரிவை மேகலை உடீஇப் பரிவொடு
கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத்
திரிதரு கோட்டுக் கலைமே லேற்றிப்
பாவையுங் கிளியுந் தூவி யஞ்சிறைக்
கானக் கோழியும் நீனிற மஞ்சையும்
35.     பந்துங் கழங்குந் தந்தனர் பரசி
வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும்
புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் மேவிய விரையும்
ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின்வர
40.     ஆநெறி பறையுஞ் சூறைச் சின்னமும்
கோடும் குழலும் பீடுகெழு மணியும்
கணங்கொண்டு துவைப்ப அணங்குமுன் னிறீஇ
விலைப்பலி யுண்ணும் மலர்பலி பீடிகைக்
கலைப்பரி யூர்தியைக் கைதொழு தேத்தி
45.     இணைமலர்ச் சீறடி இனைந்தனள் வருந்திக்
கணவனோ டிருந்த மணமலி கூந்தலை
இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி
தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய
50.     திருமா மணியெனத் தெய்வமுற் றுரைப்பப்
        பேதுறவு மொழிந்தனள் மூதறி வாட்டியென்று
அரும்பெறற் கணவன் பெரும்புறத் தொடுங்கி
விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப
மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி
55.     நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்
பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி
நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து
அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்
துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி
60.    வளையுடைக் கையிற் சூல மேந்தி
ரியின் உரிவை போர்த்தணங் காகிய
அரியின் உரிவை மேகலை யாட்டி
சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி
வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை
65.     இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன்
தலைமிசை நின்ற தையல் பலர்தொழும்
அமரி குமரி கவுரி சமரி
சூலி நீலி மாலவற் கிளங்கிளை
ஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கைப்
70.     பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை
ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை
தமர்தொழ வந்த குமரிக் கோலத்து
அமரிளங் குமரியும் அருளினள்
வரியுறு செய்கை வாய்ந்ததா லெனவே;            
உரைப்பாட்டுமடை.

வேறு

1.      நாகம் நாறு நரந்தம் நிரந்தன
         ஆவும் ஆரமும் ஓங்கின எங்கணும்
         சேவும் மாவும் செறிந்தன கண்ணுதல்
         பாகம் ஆளுடை யாள்பலி முன்றிலே;

2.      செம்பொன் வேங்கை சொரிந்தன சேயிதழ்
         கொம்பர் நல்லில வங்கள் குவிந்தன
பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கிளந்
திங்கள் வாழ்சடை யாள்திரு முன்றிலே;

3.      மரவம் பாதிரி புன்னை மணங்கமழ்
குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர்மேல்
அரவ வண்டினம் ஆர்த்துடன் யாழ்செயும்
திருவ மாற்கிளை யாள்திரு முன்றிலே;

வேறு

4.      கொற்றவை கொண்ட அணிகொண்டு நின்றவிப்         
பொற்றொடி மாதர் தவமென்னை கொல்லோ
         பொற்றொடி மாதர் பிறந்த  குடிப்பிறந்த
விற்றொழில் வேடர் குலனே குலனும்;
5.      ஐயை திருவின் அணிகொண்டு நின்றவிப்
பையர வல்குல் தவமென்னை கொல்லோ
பையர வல்குல் பிறந்த குடிப்பிறந்த
எய்வில் எயினர் குலனே குலனும்;

6.      பாய்கலைப் பாவை அணிகொண்டு நின்றவிவ்
ஆய்தொடி நல்லாள் தவமென்னை கொல்லோ
ஆய்தொடி நல்லாள் பிறந்த குடிப்பிறந்த
வேய்வில் எயினர் குலனே குலனும்;

7.       ஆனைத்தோல் போர்த்து புலியின் உரியுடுத்துக்
கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால்
வானோர் வணங்க மறைமேல் மறையாகி
ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய்;

8.      வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக்
கரியதிரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால்
அரியரன்பூ மேலோன் அகமலர்மேல் மன்னும்
விரிகதிரஞ் சோதி விளக்காகி யேநிற்பாய்;

9.      சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச்
செங்கண் அரிமால் சினவிடைமேல் நின்றாயால்
கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து
மங்கை யுருவாய் மறையேத்த வேநிற்பாய்;

வேறு
10.    ஆங்குக்,
கொன்றையுந் துளவமுங் குழுமத் தொடுத்த
துன்று மலர்ப்பிணையல் தோள்மே லிட்டாங்
கசுரர் வாட அமரர்க் காடிய
குமரிக் கோலத்துக் கூத்துள் படுமே;

வேறு
11.    ஆய்பொன் னரிச்சிலம்பும் சூடகமும் மேகலையும்
                  ஆர்ப்ப வார்ப்ப
மாயஞ்செய் வாளவுணர் வீழ நங்கை மரக்கான்மேல்
                  வாளமலை யாடும் போலும்
மாயஞ்செய் வாளவுணர் வீழ நங்கை மரக்கான்மேல்
                  வாளமலை யாடு மாயின்
காயா மலர்மேனி யேத்தி வானோர் கைபெய் மலர்மாரி
                  காட்டும் போலும்;

12.     உட்குடைச் சீறூரொருமகன்ஆ னிரைகொள்ள வுற்ற காலை
வெட்சி மலர்புனைய வெள்வா ளுழத்தியும் வேண்டும் போலும்
வெட்சி மலர்புனைய வெள்வா ளுழத்தியும் வேண்டின் வேற்றூர்க்
கட்சியுட் காரி கடிய குரலிசைத்துக் காட்டும் போலும்;

13.    கள்விலை யாட்டி மறுப்பப் பொறாமறவன் கைவில் ஏந்திப்
புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரைகருதிப் போகும் போலும்
புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரைகருதிப் போகுங் காலைக்
கொள்ளுங் கொடியெடுத்துக் கொற்றவையும் கொடுமரமுன்
                                                                         [செல்லும் போலும்;

வேறு
14.     இளமா வெயிற்றி இவைகாண்நின் னையர்
தலைநாளை வேட்டத்துத் தந்தநல் ஆனிரைகள்
கொல்லன் துடியன் கொளைபுணர் சீர்வல்ல
நல்லியாழ்ப் பாணர்தம் முன்றில் நிறைந்தன;

15.     முருந்தேர் இளநகை காணாய்நின் னையர்
கரந்தை யலறக் கவர்ந்த இனநிரைகள்
கள்விலை யாட்டிநல் வேய்தெரி கானவன்
புள்வாய்ப்புச் சொன்னகணி முன்றில் நிறைந்தன;

16.     கயமல ருண்கண்ணாய் காணாய்நின் னையர்
அயலூர் அலற எறிந்தநல் ஆனிரைகள்
நயனில் மொழியின் நரைமுது தாடி
எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன;
                                                           துறைப்பாட்டுமடை.

வேறு

17.     சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும்
இடர்கெட அருளும்நின் இணையடி தொழுதேம்
அடல்வலி எயினர்நின் அடிதொடு கடனிது
மிடறுகு குருதிகொள் விறல்தரு விலையே;

18.    அணிமுடி அமரர்தம் அரசொடு பணிதரு
மணியுரு வினைநின மலரடி தொழுதேம்
கணநிறை பெருவிறல் எயினிடு கடனிது
நிணனுகு குருதிகொள் நிகரடு விலையே;

19.     துடியொடு சிறுபறை வயிரொடு துவைசெய
வெடிபட வருபவர் எயினர்கள் அரையிருள்
அடுபுலி யனையவர் குமரிநின் அடிதொடு
படுகடன் இதுவுகு பலிமுக மடையே;

வேறு

20.     வம்பலர் பல்கி வழியும் வளம்பட
அம்புடை வல்வில் எயின்கடன் உண்குவாய்
சங்கரி அந்தரி நீலி சடாமுடிச்
செங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்;

21.     துண்ணென் துடியொடு துஞ்சூர் எறிதரு
கண்ணில் எயினர் இடுகடன் உண்குவாய்
விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய்;
22.    பொருள்கொண்டு புண்செயி னல்லதை யார்க்கும்        
அருளில் எயினர் இடுகடன் உண்குவாய்
மருதின் நடந்துநின் மாமன்செய் வஞ்ச
உருளுஞ் சகடம் உதைத்தருள் செய்குவாய்;

வேறு

23.     மறைமுது முதல்வன் பின்னர் மேய
பொறையுயர் பொதியிற் பொருப்பன் பிறர்நாட்டுக்
கட்சியுங் கரந்தையும் பாழ்பட
வெட்சி சூடுக விறல்வெய் யோனே.
பொழிப்புரை

அங்ஙனம் அடைந்தவர் கதிரவனின் கடும் வெப்பமுள்ள கதிர்கள் முறுகுதலால் மணமுள்ள பலவாக முடிக்கப்படும் கூந்தலையுடைய கண்ணகி வழிச் செல்கின்ற வருத்தத்தினால் மிக்க துன்பத்தினை அடைந்து சிறிய அடிகள் சிவந்ததினாலே மூச்சுவாங்கி அத் துன்பம் தணியும் வண்ணம் கொற்றவையின் கோயிலில் யாவரும் அறியாத ஒரு பக்கத்தில் இருந்தனர்.

அப்படி இருந்த வேளையில், மறுபக்கத்தில் அம்பினைச் செலுத்தும் வில்லை ஏந்திய பெரிய  கையை உடைய, மறவர் குடியில் பிறந்த மக்கள் குழுவைச் சேர்ந்தவளும் முன்பு நேர்ந்த கடனைக் கொடுத்துப்போக வந்தவளுமாகிய முழங்குகின்ற வாயை உரிய தேவராட்டி

மறவர் வியக்கும் வண்ணம் தெய்வம் கொண்டு உடல் மயிர் சிலிர்த்துக் கைகளை உயர்த்தி முள்வேலி இடப்பட்டதாகிய, மறவர் ஒன்று கூடி உண்ணும் ஊர் நடுவில் உள்ள மன்றத்திலே கால்களைப் பெயர்த்து ஆடினாள்.

பழங்கடன்(நேர்த்தி) கொடாமையால் லியினையுடைய இடையர்களின் பெரிய ஊர்களில் திரண்ட ஆநிரைகள் பெருகின. வலிமையான வில்களைக் கொண்ட மறவருடைய மன்றுகள் பாழ்பட்டன,

மறக்குடியினருக்கு உரிமைப்பட்ட வழியானது தனது வழமையான வளத்தை வழங்காமையால்க்குடியில் பிறந்தவர் போல் சினம் குறைந்து செருக்கு அடங்கிவிட்டனர்,

மான்கலை, அதாவது ஆண் கலைமான் மீது அமர்ந்திருக்கும் கொற்றவை தான் கொடுத்த வெற்றியின் விலையாகிய உயிர்ப்பலியை உண்ணாமல் வில்லை நிலைக்களனாக் கொண்ட, அதாவது வில்லினால் வரும் வெற்றியைத் தரமாட்டாள்,

களவு செய்து வாழும் மக்களே உங்களுக்குக் கள்ளுண்டு களிக்கும் இனிய வாழ்வு தொடர  வேண்டுமாயின் கொற்றவைக்கு நேர்ந்த நேர்ச்சையாகிய கடனைத் தாருங்கள் என்று கூறினாள்.

வழிப் போக்கராகிய பிறர் தலையை வீழ்த்தி எண்ணிக்கையைப் பெருக்குவதும் அதில் சாவதும் அன்றி நோயால் செத்து எரிக்கப்படாத பழைய குடியாகிய எயினர் குடியில் பிறந்த குமரியை,

சிறிய வெண்மையான பாம்பின் குட்டியாகச் செய்யப்பட்ட வெள்ளியால் ஆகிய கயிற்றால் குறுகிய நெளிந்த கூந்தலை நீண்ட சடையாகச் சுற்றிக் கட்டி கட்டு வேலி சூழ்ந்த தோட்டப் பயிரை அழித்த பன்றியின் வளைந்த வெண்மை ஆன கொம்பைப் பிடுங்கி அதனை வெண்மையான பிறை என்னுமாறு பொருத்தி

ம் (அஞ்சாமை, கொடுமை, வீரம்) பொருந்திய வலிமையுள்ள புலியின் வாயைப் பிளந்து எடுத்த வெண்மையான பல்லை ஒழுங்காக கோத்த தாலி மாலையைப் பூட்டி, புள்ளிகளும் கோடுகளும் கலக்கப் பெற்ற தூய வெளிப்பக்கத்தை உடைய தோலினை மேகலையாகக் கட்டி பெருமை மிகு வில்லை எடுத்து அவள் கையிலே பரிவுடன் கொடுத்து

திருகிய கொம்புகளை உடைய ஆண் மான் மீது அர வைத்து பாவையையும் கிளியையும் சிறு மயிரினைக் கொண்ட அழகிய சிறகினையுடைய காட்டுக் கோழியையும் நீல நிறமுடைய மயிலையும் பந்து கழங்கு ஆகியவற்றுடன் வைத்துப் படைத்து வணங்கினர்.

வண்ணக் குழம்பும் சுண்ணப்பொடியும் குளிர்ந்த மணமுள்ள சந்தனமும் சுண்டலும் எள்ளுருண்டையும் இறைச்சியோடு சேர்ந்த சோறும் மலர்களும் புகையும் விரும்பத்தக்க மணப்பொருட்களும் ஆகிய இவற்றை பணி செய்யும் மறக்குடிப் பெண்கள் ஏந்தியவாறு பின்னால் சென்றனர்.

வழிபறிக்கும் போது கொட்டும் பறையும் சூறையாடும் போது ஊதும் சின்னமும் கொம்பும் புல்லாங்குழலும் பெருமை பொருந்திய மணியும் ஆகிய இவை தம்முள் ஒத்து நின்று ஒலிக்குமாறு அவ் வணங்கு முன்னே நின்றன.

தான் தந்த வெற்றியின் விலையாகிய பலியினை உண்ணுகின்ற விரிந்த பலீபீடத்தை முதலில் தொழுது ஆண்மானாகிய ஊர்தியில் செல்பவளாகிய கொற்றவையைக் கையால் வணங்கி நாவால் போற்றி

மலர் போலும் சிறிய இணையான காலடிகள் வருந்தினவளாகத் துன்புற்றுத் தன் கணவனோடு அமர்ந்திருந்த மம் நிறைந்த கூந்தலையுடைய கண்ணகியைக் காட்டி, இப் பெண் கொங்கு நாட்டுக்குச் செல்வமாயுள்ளவள் குடமலை மேற்கு நாட்டினை ஆளும் செல்வி, தென்தமிழ் நாட்டின் பாவை, உலகோர் செய்த தவத்தின் கொழுந்து போன்றவள் இவ் வுலகிற்கு ஒப்பற்ற முழு மாணிக்கம் போன்ற உயர்ந்த அழகிய பெண்மணி என்று சாலினி தெய்வமேறி அவளைக் கூறினாள்.

அது கேட்ட கண்ணகி இந்த மூதறிவு உடைய பெண்மணி மயக்கத்தால் கூறுகிறான் என்று பெறுதற்கரிய தன் கணவனின் பெரிய முதுகின் பின்னர் மறைந்து புதிய புன்முறுவல் தோன்ற நின்றாள்.

பிறையாகிய வெண்மையான இதழைச் சூடும் தலையினையும் நெற்றியைத் திறந்து விழிந்த இமையாத கண்ணனையும் உடையவள் பவளம் போன்ற வாயினை உடையாள், நஞ்சினை உண்டதனால் கறுத்த கண்டத்தினை உடையவள் கொடிய சினத்தையுடைய வாசுகி என்னும் பாம்பாகிய நாணைப் பூட்டி நெடிய மேருவாகிய  வில்லை வளைத்தவள்,

துளையுள்ள பற்களையுடைய பாம்பாகிய கச்சணிந்த முலையினை உடையவள், யானையின் தோலைப் போர்த்து கொலைவருத்தம் தரும் அரிமாவின் தோலை மேகலையாக உடுத்தவள்,

ஒரு பக்கம் சிலம்பும் மறுபக்கம் வீக்கழலும் ஒலிக்கும் சிறிய அடிகளையும் மேலான வெற்றியைத் தரும் செயல்திறனுள்ள வாளையுமுடைய கொற்றவை,

தலையும் உடலும் இருவேறு வடிவினையுடைய அரக்கனது தலையின் மீது நின்றவள்,

யாவரும் வணங்கும் மரணமில்லாதவள், குமரியான கருநிறமுள்ளவள், போரில் வல்லவள், சூலம் ஏந்தியவள், நீல நிறமுள்ளவள், திருமாலுக்கு இளையவள், தலைவி, திருமகள், கொடிய வாளினைப் பெரிய கையில் தாங்கிய, தாவும் கலையை ஊர்தியாக உடைய பெண், பசிய பொன்னால் ஆன வளையை அணிந்த பாவை, கலைகளை ஆய்ந்த பாவை, அரிய அணிகலன்களை அணிந்த பாவை.

சுற்றத்தார் தொழவந்த கன்னியின் கோலத்தினையுடைய யாவரும் விரும்பும் அக் குமரியும் அவள் கொண்ட வரிக்கோலம் வாய்ப்புடையது என்று கண்டோர் கூற அருளினாள்.

1.   நாகம் எனும் செம்மரமும் மணம் உள்ள நாரத்தையும் வரிசையாக உள்ளன, ஆச்சாவும் சந்தனமும் உயர்ந்து வளர்ந்தன, எங்கும் சேமரமும் மாமரமும் நெருங்கின, நெற்றியில் கண்ணுடைய சிவனது இடப்பாகத்தை ஆள்பவளாகிய கொற்றவையின் பலி பெறும் முற்றத்திலே.
2.   வேங்கை மரங்கள் சிவந்த பொன் போன்ற மலர்களைச் சிந்தின, நல்ல இலவமரங்கள் தம் கொப்புகளிலுள்ள சிவந்த பூவிதழ்களை உதிர்த்துக் குவித்தன. புங்க மரங்கள் பழம் பூக்களாகிய வெண்மையான பொறியைச் சிந்தின. பிறை தங்கிய சடையை உடையவளது அழகிய முற்றத்திலே.
3.   வெண்கடம்பும் பாதிரியும் புன்னையும் மணம் வீசும் குராவும் கோங்கமும் ஆய இவை பூத்தன, அவற்றின் கொம்புகளில் ஒலியினையுடைய வண்டுக் கூட்டம் முழங்கி வீணை போலப் பாடும் திருமாலுக்கு இளையாளுடைய முற்றத்திலே.
4.   கொற்றவை தனக்கு அணியாகக் கொண்டவற்றைத் தான் அணியும் அணியாகக் கொண்டு நிற்கும் இந்தப் பொன்னாலான வளையலையுடைய குமரி முன் செய்த தவம் யாதோ, பொன் வளையலை அணிந்த இக் குமரி பிறந்த குடியில் பிறந்த வில் தொழில் வல்ல எயினர் குலமே சிறந்த குலம்.
5.   கொற்றவையின் அழகினை ஒப்ப அழகு கொண்டு நின்ற இந்த அரவின் படம் போன்ற அங்குலை உடையாள் செய்தவம் யாதோ, அரவின் படம் போன்ற அங்குலை உடையாள் பிறந்த குடியில் தோன்றிய அம்பினை எய்யும் வில்லையுடைய எயினர் குலமே சிறந்த குலம்.
6.   தாவும் கலைமானை ஊர்தியாகக் கொண்ட கொற்றவையின் அழகினைக் கொண்டு நின்ற இந்த அழகிய வலையலை அணிந்தவளான பெண்ணின் தவம் எத்தகையதோ, இந்த அழகிய வளையலை அணிந்தவளுடைய குலமே சிறந்த குலம்.
7.   யானையின் தோலை மேலே போர்த்துப் புலியின் தோலை உடுத்து காட்டு எருமையின் கரிய தலையின் மீது நின்றவளே தேவர் யாவரும் வணங்க வேதங்களுக்கு அப்பாற்பட்ட மறைபொருளாய அறிவின் கொழுந்தாகி நிலை தடுமாறாமல் உன்னால் நிற்கவும் முடியும்.
8.   வரிகள் பொருந்திய வளையணிந் கையில் வாளைத் தாங்கிப் பெரிய மையிடாசுரனை வென்று அழித்து கரிய முறுக்கிய கொம்பினையுடைய கலைமான் மீது நின்றவளே, திருமாலும் சிவனும் நான்முகனும் ஆகியோருடைய உள்ளமாகிய மலரின் மீது நிலைபெற்றிருக்கும் விரிந்த கதிர்களை உடைய அழகிய விளக்காகி நீ நிற்கிறாய்.
9.   சங்கினையும் சக்கரத்தினயும் தாமரை போன்ற கைகளில் தாங்கி சிவந்த கண்களையுடைய அரிமாவாகிய சினமுள்ள ஊர்தி மீது நின்றவளே, கங்கையினைச் சடைமுடியிலே அணிந்த நெற்றிக் கண்ணை உடையோனது இடப்பாகத்தில் பெண்ணுருவாகி வேதங்கள் போற்ற   நிற்கவும் செய்வாய்.
10.  அங்கு, கொன்றை மலரும் துளசியும் சேரக் கட்டிய மலர் செறிந்த மாலையைத் தோள் மீது சூட்டி குமரியின் கோலத்தோடு அசுரர் வாடும் வண்ணம் தேவர்க்கு வெற்றியுண்டாக ஆடிய மரக்கால் கூத்து ஆடுதற்கு உட்படும்.
11.  அழகிய பொன்னால் செய்த பருக்கையினை உடை சிலம்பும் வளையும் மேகலையும் ஒலிக்க வஞ்சம் புரிகின்ற வாள் தொழிலில் சிறந்த அசுரர்கள் ஒழியுமாறு கொற்றவை மரக்காலின் மீது ஒள்வாள் அமலை ஆடுவாளாயின் இவளுடைய காயாம்பூப் போன்ற மேனியைப் போற்றித் தேவர்கள் சொரியும் மலர் மழை அதைக் கூட்டும்.
12.  பகைவர்க்கு அச்சத்தை ஊட்டும் சிற்றூரிலுள்ள ஒப்பற்ற ஒரு வீரன் ஆநிரையைக் கொள்ள முனையும் போது நிரை கவரும் போர்ப் பூவாகிய வெட்சி மாலையைத் தான் சூட வெண்மையான வாளையுடைய கொற்றவையும் அவ்வாறு தானும் சூட விரும்புவாள் போலும். வெட்சி மாலையைக் சூட வெள்வாளைக் கொண்டு உழுபவளாகிய கொற்றவையும் அவ்வாறு விரும்புவாளாயின் பகைவர் ஊரைச் சூழ்ந்த காட்டிடத்து கரிக் குருவி தனது கொடிய குரலால் அவர்க்கு வரும் கேட்டினைக் கூறி உணர்த்தும்.
13.  கள்ளினை விற்பவள் இவன் பழங்கடனைச் செலுத்தாததால் கள் கொடாது மறுக்க அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத மறவன் கையில் வில்லை ஏந்தி பறவைகள் தன் பின்னே தொடர்ந்து வர பகைவரது ஆநிரையைக் கொள்ளக் கருதிப் போவான். அங்ஙனம் பறவைகள் பின் தொடர பகைவரது ஆநிரையைக் கொள்ளக் கருதிக் போகும் போது தான் கைக் கொண்ட அரிமாக் கொடியினை எடுத்துக் கொற்றவையும் வில்லின் முன்னே செல்வாள்.
14.  மாமை நிறத்தை உடைய இளமை பொருந்திய வேட்டுவ மகளே, நினது தந்தை முதலியோர் முன்னாள் வேட்டையில் கவர்ந்த பசுக் கூட்டங்களாகிய இவற்றைப் பார். அவை, வேல் வடித்துத் தரும் கொல்லன், துடி கொட்டும் துடியன், பாட்டுகளைத் தாளத்துடன் புணர்க்கவல்ல நல்ல யாழினையுடைய பாணர் ஆகியவர்களின் முற்றங்களை நிறைத்து நிற்பதைப் பார்.
15.  மயிலிறகின் அடியை ஒத்த அழகிய முற்றாத பற்களை உடையவளே, கரந்தையார் அலற அற உன் தந்தை முதலியோர் கவர்ந்து வந்த ஆநிரைகள் கள் விற்பவள், நல்ல உளவறிந்து கூறும் ஒற்றன், புள் நிமித்தம் பார்த்துக் கூறிய நிமித்தகன் ஆகியோரது முற்றங்களில் நிரம்பியுள்ளதைப் பார்.
16.  குளத்திலுள்ள தாமரை மலர்போன்ற, மையுண்ட கண்களை உடையவளே, உனது பகைவரது அண்டை ஊர் அலறும் வண்ணம் அவர்களைத் துரத்திவிட்டு கொண்டு வந்த ஆநிரைகள் கொடுஞ் சொல்லையும் நரைத்த முடியினையும் கொண்ட எயினர், ஏயிற்றியர் ஆகியோர் முற்றங்களில் நிறைந்து நிற்பதை பார்.
17.  கதிரவனுடனே சுழன்று திரியும் முனிவர்கதளும் தேவர்களும் ஆகியோருடைய துன்பம் ஒழியும் வண்ணம் அருளுகின்ற உனது இரு திருவடிகளையும் தொழுதோம், கொல்லும் வலிமையுள்ள எயினர் உன் அடியினை தொட்டு நேர்ந்த வெற்றிக்கு விலையாகத் தரும் கழுத்திலிருந்து சிந்துகின்ற இந்தக் குருதியான இக் கடனை ஏற்றுக் கொள்.
18.  அழகிய முடி சூடிய தேவர்கள் தம் அரசனாகிய இந்திரனோடு வந்து வணங்குகின்ற நீமணி போன்ற நிறத்தினை உடையவளே உன்னுடைய மலர் போன்ற திருவடிகளைத் தொழுதோம், ஆநிரைகளின் திரளினைப் பெறும் வெற்றியை பெற்ற எயினார்களாகிய நாங்கள் அதற்குரிய விலையாக இடும் கொழுப்புடன் சிந்தும் குருதியாகிய கடன் இது.
19.  துடியுடனே சிறுபறையும் கொம்பும் ஒலி எழுப்ப நிலம் வெடிக்கும் படி நள்ளிரவில் வருபவர்களாகிய கொல்லும் புலியை ஒத்த எயினர்கள் குமரியே உன் அடியினைத் தொட்டு நேர்ந்த கடனாகிய கழுத்திலிருந்து சிந்தும் குருதி இது.
20.  சங்கரியே, அந்தரியே, நீலியே, சிவந்த பாம்பினை இளம் பிறையோடு சேர்த்துக் சடைமுடியில் சூடுபவளே புதியவர்கள் பெருகி வழிகளும் அவர்கள் கொண்டு செல்லும் செல்வங்களும் பெருகுமாறு அம்பு பொருந்திய வலிய வில்லை ஏந்திய எயினர் தரும் பலியாகிய நேர்த்திக் கடனை உண்பாய்!
21.  விண்ணிலுள்ள தேவர்கள் சாவா மருந்தாகிய அமுதத்தை உண்டிருந்தும் செத்துப் போக, எவரும் உண்ணாத நஞ்சை உண்டு இறவாமல் இருந்து அருள் செய்பவளான நீ கேட்டார் துணுக்குற்று நடுங்குமாறு துடியோடு தூங்கும் ஊர் மக்களைக் கொல்லும் இரக்கமற்ற எயினர் இடும் பலியினை உண்பாய்!
22.  இரு மருத மரங்களிடையே நடந்து அவற்றைச் சாய்த்து உன் மாமனாகிய கஞ்சன் செய்த வஞ்சத்தால் தோன்றிய உருண்டு வந்த சக்கரத்தை உடைத்தவளாகிய நீ பிறருடைய பொருட்களைப் பறித்துக் கொண்டு அவர்கள் புண்படுமாறு தாக்குவது அன்றி இரக்கம் என்பது இல்லாத எயினர் இடுகின்ற நேர்த்திக் கடனை உண்பவளே,!
23.  வேதங்களை அருளிய முதல்வனாகிய சிவபெருமானுக்குப் பின்னோனாகிய அகத்தியன் எழுந்தருளிய குன்றுகள் உயர்ந்த பொதிய மலையை உடைய பாண்டியன் பகைவருடைய முனையிடமும் அவர் நிரை மீட்கும் முயற்சியும் பாழாகும் வண்ணம் அவன் விரும்பும் வெற்றியை எய்தி வெட்சி மாலையைச் சூடுவானாக.

இக்காதையில் வரும் சிறப்புச் செய்திகள்

1.       மறக்குடித் தாயத்துப் பழங்கட னுற்ற முழங்குவாய்ச் சாலினி என்பதில் மறக்குடியின் தலைவியாகவும் பூசாரியாகவும் சாமியாடியாகவும் அவள் இருந்தது தெரிய வருகிறது. தாயம் என்பது தாய்வழியாக வந்த பங்கு என்பதிலிருந்து மரபுவழிச் சொத்துரிமை(தாயபாகம்) என்ற பொருளில் இந்தியா முழுவதும் சட்டத்துறையில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. நிலங்களின் கிடப்பை தரையில் கட்டங்களாக வரைந்து அவரவர் எறியும் கல் விழும் கட்டத்துக்குரிய நிலம் வழங்கப்பட்டதிலிருந்து தாயம் எனும் விளையாட்டு வந்ததென்று குமுகவியலார் கூறுவர். இங்கே பெண் தலைமை இருப்பதால் இவர்கள் தாய்வழி மரபினர் என்று கொள்ள இடமிருக்கிறது. பல சாதியினரிடையில் தாய்வழிப் பிரிவுகள் இருந்தாலும்   மறவர்களிடையில் குறிப்பிடத்தக்க விகிதத்தில் உண்டு. பழங்கடன் என்பதற்கு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நடத்தப்பட வேண்டிய திருவிழாக்கள் என்று பொருள்கொள்ள வேண்டும். குமரி மாவட்டத்தில் இவ் விழாக்களைக் குறிக்கும் கொடை என்ற பொருத்தமான சொல் இன்றும் வழக்கில் உள்ளது. தனியார் நேர்ச்சைகளை சிறப்பு என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்கள்.

கூட்டுண்ணல் என்பதற்கு கவர்ந்த பொருளை சேர்ந்துண்ணல் என்று வேங்கடசாமியார் கூறியிருக்கும் பொருள் பொருத்தமாகத் தெரியவில்லை. குறிப்பிட்ட சூழல்களில் குடியைச் சேர்ந்த அனைவரும் கூடி சமைத்து உண்பதையை குறிக்கும் எனத் தோன்றுகிறது.

ஓர் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வரை திருமணம், சடங்கு எனப்படும் பூப்பெய்தல், பால்காய்ப்பு எனப்படும் புதுமனை புகுவிழா, குளிமுறை என்றும் கருமாதி என்றும் கூறப்படும் பதினாறாம் நாள் நிகழ்வுகள் ஒரு வகையில் கூட்டுணவுகளாகவே இருந்தன.

குமரி மாவட்ட ஊர்ப்புறங்களில் திருமணம்(கல்யாணம்) என்பது தாலிகட்டுவதற்கு முந்திய நாள் நிகழ்வுகளையே குறித்தது. அன்று மாப்பிள்ளை, பெண் இருவர் வீடுகளுக்கும் பகலில் அவரவர் ஊரிலுள்ள வீடுகளிலிருந்து நார்ப்பெட்டிகளில் அரிசி வந்துவிடும். அன்று இரவு விருந்து உண்டு. உள்ளூர் மக்களும் உறவினர்களும் வந்து சாப்பிட்டுச் செல்வர். மொய்யும் அப்போதே எழுதிவிடுவர். அடுத்த நாள் பெண் வீட்டில் திருமணம், அது பெண் வீட்டார் செலவு. மாலையில் பெண் வீட்டார் செலவில் மாப்பிள்ளை வீட்டில் விருந்து.

ஊராருக்கு மண அழைப்பு வைப்பது கூட ஊர்ப் பொறுப்பு. ஊர்க் கோயிலில் ஊரார் கூடி மண வீட்டார் தரும் வெற்றிலையையும் பாக்கையும் நார்ப்பெட்டிகளில் எடுத்துப் போய் வீடு வீடாகக் கொண்டு போய்ச் சொல்லிக் கொடுப்பர். இதைக் கொண்டு செல்வோர் தமக்கு தனிப்பட்ட முறையில் வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு காட்டாமல் மண வீட்டார் விரும்புவோருக்குக் கொடுக்க வேண்டும்.

அதற்கும் முந்திய காலங்களில் ஒரு கிழமை வரை இரு வீட்டினரும் மணமகன் ஊரில் தங்கி விருந்துண்டு விளையாடிக் களிப்பார்களாம். அதில் மணமக்கள் குடும்பத்தினர் ஒருவரையொருவர் கேலி செய்வதில் சண்டைகள் ஏற்பட்டு இந் நடைமுறை நின்று போனதாகக் கூறுவர். ஒரே தன்மையாக இருந்த வாழ்க்கை முறை பல வகையாக விரிவடைந்த சூழலால் இந் நடைமுறை உருவாக்கிய மன அழுத்தங்களும் அதனால் உருவான எரிச்சல் உணர்வும் கூட இந்தச் சண்டைகளுக்குக் காரணமாக இருக்கலாம்.

சடங்கு வீட்டுக்கு காலையிலேயே அரிசிப் பெட்டியும் குப்பியில் தேங்கெண்ணெய்யும் வந்துவிடும். பெண்ணைக் குளிப்பாட்டுவதற்கு என்ற நோக்கில் எண்ணெய் வழங்குவதாகக் கொள்ள வேண்டும். மதிய விருந்துக்குப் பின் மொய் எழுதுவர்.

குளிமுறை வீட்டுக்கும் அரிசிப் பெட்டியும் தேங்கெண்ணெய்யும் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வந்து விடும். இரவில் பட்டினி இருந்து விடிகாலை பயிறு அவித்து உண்ட பின் காலையில் அனைவரும் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு வீட்டுக்குச் சென்று விடுவர். மாலையில் தொடங்கும் குளிமுறைச் சடங்குகள் முடிந்த பின் இரவில் விருந்து நடைபெறும். அதன் பின்னர் மொய் எழுதுவர்.

இந்த நிகழ்ச்சிகள் முடிந்து விருந்தினர் விடைபெறும் போது அரிசிப் பெட்டியில் வெற்றலை பாக்கு பழம் அத்துடன் நிகழ்ச்சிக்காகச் செய்திருக்கும், விருந்தின்னர்கள் கொண்டுவந்திருக்கும் தின்பண்டங்கள் ஏதாவதிருந்தால் அவற்றிலும் கொஞ்சமும் எண்ணெய் கொண்டுவந்திருந்தால் குப்பியையும் வைத்துத் நிகழ்ச்சி வீட்டினர் தருவர். அதாவது ஊரிலுள்ள எவர் வீட்டிலும் நடைபெறும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தத் தேவையான பணத்துக்கும் அடிப்படைப் பண்டங்களுக்கும் அவ் வீட்டார் திண்டாடாமல் இருக்க மொத்த ஊரும் கூட்டுச் செயல்பாடு மூலம் ஒவ்வொருவருக்கும் உதவும் ஒரு கூட்டுறவு முறையாக இது இருந்தது. சமையலைக் கூட ஊராரே ஆணும் பெண்ணும் கூடிச் செய்வர்.

      இங்கே இளங்கோவடிகள் காட்டும் கூட்டுண்ணும் மண்டபம் ஒவ்வொரு வழிப்பறி அல்லது நிரை கவர்தலுக்குப் பின்னரும் கிடைத்த செல்வங்களையும் பண்டங்களையும்  ஆநிரைகளையும் தங்களுக்குப் பண்டங்கள் வழங்குவோருக்கும் பணிகள் செய்வோருக்கும் செலுத்தி பெற வேண்டியவற்றைப் பெற்று ஒன்று கூடி சமைத்து உண்டு விளையாடும் இடமாக இருக்கும்.

      குமரி மாவட்ட அம்மன் கோயில்களில் ஊர்க் கணக்கில் வாங்கப்பட்டு பலியிடப்படும் ஆட்டின் இறைச்சியைக் கூட்டாகவும் குழம்பாகவும் வைத்து வெண்பொங்கலும் சமைத்து ஊராருக்கு வரிக் கணக்கில் பங்கீட்டுக் கொடுப்பர். கோயிலில் விருந்து வைக்கும் வழக்கம் அப்போது இல்லை. இப்போது ‘இந்து’ இயக்கத்தினரின் தலையீட்டில் ‘அன்ன தானம்’ என்ற பெயரில் பணம் படைத்தோர் வெளியூர்களில் இருந்தெல்லாம் மகிழுந்தில் வந்து உண்டு செல்கின்றனர். ஏழை பணக்காரர் என்றில்லாமல் ஊர் மக்களிடம் வரியைக் கறந்து இளந்தலைமுறையினரில் ஒரு கும்பல் குடித்துக் கூத்தாடுகிறது.    

      கூட்டுண்ணுதல் என்பதற்கு கூடி உண்ணுதல், முற்றும் அனுபவித்தல், திறை கொள்ளுதல், கலவி செய்தல் என்ற பொருள்களைத் தருகிறது கழகத் தமிழ் அகராதி. கலவி செய்தல் தனியோர் இணையின் கலவியா கூட்டுக் கலவியா என்பது தெரியவில்லை. 1968 – 69இல் நான் உடன் ஊழியர்களுடன் ஆரணியை அடுத்த செண்பகத்தோப்பிலும் வேலூரை அடுத்த அமிர்தியிலும் அணைகளுக்கான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது இன்றைய வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை ஒரு புறமும் சேலம், தருமபுரி மாவட்டங்களை மறுபுறமும் கொண்ட, ஏறக்குறைய 150 கிலோமீற்றர் நீளமுள்ள சவ்வாது மலைத்தொடரில் உள்ள மலையாளம் காடுகளில் வாழும் மலையாளிகள்[1] எனப்படும் தமிழ்ப் பழங்குடி இளைஞர்களை உதவிக்கு வைத்திருந்தோம். சித்திரை வெள்ளுவாவன்று அவர்களது சாமி ஆற்றில் இறங்குவார் என்றும் அப்போது ஆணும் பெண்ணும் தங்களுக்கு விருப்பமான எவருடனும் உடலுறவு கொள்ளலாம் என்றும் கூறினர். நாங்களும் கலந்துகொள்கிறோம் என்று விளையாட்டாகக் கேட்டோம். அயலாரை விடுவதில்லை என்று கூறிவிட்டனர்.

      இன்றும் மதுரையில் கள்ளழகர் வையையில் இறங்கும் இரவில் சில குறிப்பிட்ட குழுவினர் இது போன்ற ‘கூட்டுண்ணலி’ல் ஈடுபடுவதாகக் கூறுகின்றனர். அதே இரவில் தமிழகம் முழுவதும் ஆறுகளில் திருமால் இறங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அவற்றில் எங்கெல்லாம் இத்தகைய ‘கூட்டுண்ணல்’ நிகழ்கிறது என்று ஆய்வது பயனுள்ள விடைகளை நமக்குத் தரலாம்.  

2.   பாவையுங் கிளியும் என்பதில்(வரி 33) பாவை என்பதற்கு குயில் என்ற பொருளைத் தருகிறது கழகத் தமிழ் அகராதி.

3.   மறக்குடியினர் தம்முடைய கொடுமை மனநிலையை இழந்து மென்மையான தன்மையை எய்திவிட்டமையால் அண்டையிலுள்ள குடிகளிடம் ஆநிரைகள் பெருகிவிட்டன என்பதுடன் நீங்கள் வழிப்பறித்து வாழ விரும்பினால் கொற்றவைக்கு உரிய கொடையை வழங்குங்கள் என்று சாலினி கூறுவது உழைத்து வாழ்வது வழிபறித்து வாழ்வதைவிட இழிவானது என்ற அவர்களது கருத்தைப் புலப்படுத்துகிறது.

4.   உயிர்களின் நிலைப்புக்கு ஆண் – பெண் இணைவு இன்றியமையாதது. அதன் அடையாளமாக நம் பண்பாட்டில் முதன் முதல் உருவானது ஒன்றையொன்று சுற்றியவாறு புணர்ச்சியில் இருக்கும் பாம்பு வழிபாடு. அதனை மனித இனத்துக்காகச் சுருக்கியது கீழே ஆண்குறியும் மேலே பெண்குறியும் கொண்ட குறி(லிங்க) வழிபாடு. திருமண உறவு நிலைப்பட்டதன் பின் உருவானது ஆணொரு பாகத்தாளாக இளங்கோவடிகள் இங்கே காட்டும் கொற்றவையின் தோற்றம்.

4.   யானையின் தோலால் உடல் முழுவதையும் மூடி அதன் மேலே இடையில் அரிமாவாகிய சிங்கத்தின் தோலை உடுத்திருந்தாள் என்பதிலிருந்து கேடயம், கவசம் போன்ற பாதுகாப்புக் கருவிகளுக்கு முன்னோடியாக யானையின் முரட்டுத் தோல் பயன்பட்டதன் மரபுப் பதிவாக இதைக் கொள்ள வேண்டும்.

5.   திரிதரு கோட்டுக் கலை என்பதற்கு திருகிய கொம்பையுடைய மான் என்று பொருள் கூறிய வேங்கடசாமியார் ஊரில் திரிகின்ற மான் “எனலும் ஆம்” என்கிறார். முதற்பொருளைக் கொள்வதானால் இன்றைய ஆகமக் கோயில்களில் இறைவனை அமர்த்தி ஊர்வலம் செல்லும் ஊர்தி(வாகனம்) என்றும் பொருள் கொள்ள வேண்டியிருக்கும். இந்த வகை வழிபாடு பிற்காலத்தில் தோன்றியதாதலால் எயினர் குடிகளில் மான்கள் அச்சமின்றி நடமாடின என்று கொள்ள வேண்டியிருக்கிறது.

6.   தெய்வமேறிய சாலினி கண்ணகியைப் போற்றிக் கூறும் சொற்கள் படிப்போருக்கு மூலக் கதையுடன் இந்த வரி நிகழ்ச்சியின் தொடர்பை நினைவூட்டுவதற்கும் அவர்களுக்கு கதைப்போக்கில் ஆவலை உருவாக்கவும் கடைப்பிடித்த உத்தி என்று சொல்ல்லாம்.
    
7.   அடிகள் விளக்கும் கொற்றவையின் தோற்றம் அவளை முதன்மைப்படுத்தி சிவனை அவளுள் அடங்கியவனாகக் காட்டுகிறது. நாகரிகக் கூறுகளை உருவாக்கிய பெண் தலைமையைப் பறித்து ஆணுக்கு வழங்கும் முயற்சியை இதிலும் காண முடிகிறது. கடலாடு காதையில் பாரதியாடிய பாரதி அரங்கம் என்று சுடுகாட்டைக் குறிப்பதன் மூலம் கொற்றவைக்கு உரியதே சுடுகாடு என்று புரிய வைத்தது போல் கொற்றவைக்கு உரிய ஆடை அணிகளைச் சிவனுக்கு வழங்கி அவளை இரண்டாம் நிலைக்குத் தள்ளிவிட்டனர் என்பதை இங்கும் புரிய வைக்கிறார்.

8.       ஆம் ஆம் பாடல்களில் தரப்பட்டுள்ள மரங்கள் நீர்ச் செழிப்புள்ள நிலத்தில் மட்டும் வளர்வன. குறிப்பாக புன்னை மரத்தைக் கூறலாம். ஏறக்குறைய 65 ஆண்டுகளுக்கு முன் குமரி மாவட்டத்தில் வந்த ஒரு வரட்சியின் போது எங்கள் நிலத்தில் நின்ற புன்னை மரங்கள் வாடத் தொடங்கியதால் என் தந்தையும் நானும் விடியும் முன்பே எழுந்து வாய்க்காலிலிருந்து ஏறக்குறைய 1½ படைச்சாலை(பர்லாங் = 200 மீற்றர்கள்) மிஞ்சிய தொலைவுக்குச் சுமந்து மரங்களைச் சுற்றி பிடிக்கப்பட்டிருந்த வரப்பினுள் ஊற்றினோம். தொடர்ந்த ஆண்டுகளிலும் வரட்சி இருந்ததனால் அந்த வட்டாரத்தில் புன்னை மரங்களே அருகிப் போய்விட்டன. நாகர்கோயிலுக்கு நெல்லையிலிருந்து செல்லும் வழியில் தோவாளைக்கு மேற்கே கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் நீரோட்டம் இருக்கும் வாய்க்கால் கரைகளில்தான் புன்னைகளைக் காண முடிகிறது. அப்படியானால் நீர் வளம் மிக்க ஒரு நிலப் பகுதி வழிப்பறியாளர்களாகிய எயினர்களின் கொடுமைகளால் பாலையாகிய ஒரு நேர்வாக இளங்கோவடிகள் இதை நமக்குக் காட்டுகிறாரோ? முந்திய காதை முடிவிலும் கொற்றவைக் கோட்டத்தின் இதே சூழலை அவர் கூறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

9.   கொற்றவையோடு இணைத்து எயினர்களின் குலப் பெருமையையும் அவளது கோலம் தாங்கிய குமரிப் பெண்ணின் நல்லூழையும் விளக்கும் அடிகள் கடலாடு காதையில் கூறியவாறு, சேர, சோழ, பாண்டியர்கள் தெற்கிலிருந்து இரண்டாம் கடற்கோளுக்குத் தப்பி இன்றைய தமிழகத்துக்கு வந்த போது புலையர்களின் அரசனான பாணனை எதிர்த்து நடத்திய போரை மையிடனான அசுரனுடன் நடத்திய போராகக் காட்டியுள்ளார், பாடல்கள் , ஆகியவற்றில். ஆணொரு பாகத்தாள் ஆகிய கொற்றவை வழிபாட்டை மாதொருபாகன் என்று சிவனைக் குறிப்பிடுவதன் மூலம் பின்னணிக்குத் தள்ளியுள்ளனர். அத்துடன் கொற்றவை வழிபாட்டினருக்கும் புதிதாகப் புகுந்த சிவ வழிபாட்டினருக்கும் இணக்கம் காண்பதற்கும் சிவனின் இந்தப் புதிய வடிவம் பயன்பட்டிருக்கும். அத்துடன் அவளைத் திருமாலின் தங்கை என்பதன் மூலம் கொற்றவை வழிபாட்டினருக்கும் மாலியர்களுக்கும் இணக்கம் காண முற்பட்டிருக்கின்றனர். ஆனால்,
அரியரன்பூ மேலோன் அகமலர்மேல் மன்னும்
விரிகதிரஞ் சோதி விளக்காகி யேநிற்பாய்
அடிகள் மூலம் அவளை மூவரின் போற்றலுக்கும் உரியளாக எயினர் வழிபடுவதைக் காட்டுகிறார்.

10.                                                                               ….வேற்றூர்க்
கட்சியுட் காரி கடிய குரலிசைத்துக் காட்டும் போலும்  
      என்ற 12ஆம் பாடலின் வரும் காரி என்ற சொல்லுக்கு கரிக்குருவி, காகம் என்ற பொருள்களும் உண்டு. கரிக்குருவி என்பது கிளியை விடச் சிறிதாக கறுப்பாக சிறிது நீண்ட வாலுடன் இருக்கும். வாலின் முனை அம்பின் வால் போல் இரண்டாகப் பிரிந்து சிறிது மேல் நோக்கி வளைந்து காணப்படும். இதை ஊர்க் குருவி என்றும் கூறுவர். இக் குருவி மிக உயரமாகப் பறக்கும் ஆற்றலுடையது. அதனால்தான் “உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?” என்ற சொலவடை. ஊர்க்குருவி என்ற பெயர் இது ஊர்களை அண்டி மக்களைச் சார்ந்து வாழ்ந்த பறவையாக இருந்திருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. காகம் அதைத் துரத்தியிருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. கடந்த 50, 60 ஆண்டுகளுக்குள் அவை காணாமல் போயுள்ளன. காகம் உயரத்துக்கு அஞ்சும் ஒரு பறவை. அதன் அலகுகள் மென்மையானவை. அதனால் பெரும்பாலும் செத்த சிற்றுயிர்களையும் எச்சில்களையும்தான் உண்ணும். எலி, கோழிக் குஞ்சு போன்றவற்றை உயிருடன் பிடித்து உண்பதுண்டு. அதனால் அவை குடியிருப்புகளைச் சார்ந்தே வாழ்கின்றன. கொடைக்கானலில் மனித நடமாட்டம் வெள்ளையர்களின் காலத்தில்தான் தொடங்கியது, எனவே அங்கே அண்மைக் காலம் வரை  காக்கைகளின் நடமாட்டம் இல்லை எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். சிறிது சாம்பல் கலந்த நிறத்தைக் கழுத்தில் கொண்ட இயல்பான காகம் அல்லாத, முற்றிலும் அடர்ந்த கறுப்பான அண்டங்காக்கை எனப்படுவதை வல்வாய்க் காக்கை என்று பண்டை இலக்கியங்கள் கூறுகின்றன. அவற்றின் அலகுகள் வன்மையானவை போலும்.

      காகம் கரைந்தால் விருந்தினர் வருவர் என்றொரு நம்பிக்கை நம் மக்களிடையே உண்டு. இந்த நம்பிக்கை பழங்காலங்களுக்குப் பொருந்தியிருக்கலாம். குடியிருப்புகள் குறைவாக இருந்த காலங்களில் ஓர் ஒற்றையடிப் பாதை ஒரேயொரு ஊரை நோக்கியே செல்வதாகவே பெரும்பாலும் இருந்திருக்கும். இந்தப் பின்னணியில் ஒரு கொடிப்பாதையில் ஒரு மக்கள் கூட்டம் செல்வதாயின் அது ஒரு குறிப்பிட்ட ஊரை நோக்கித்தான் செல்லும் என்பது உறுதி. செல்பவர்கள் நண்பர்களாகவோ பகைவர்களாகவோ இருக்கலாம். உறவினராக இருந்தால் விருந்தில் எச்சில் தாராளமாக விழும், பகைவர்களாக இருந்தால் பிணங்கள் விழும். எதுவாக இருந்தாலும் நல்ல வேட்டைதான். எனவே கூடி வேட்டையாடும் இயல்பு கொண்ட காகங்கள் அந்த ஊருக்குச் சென்று தங்கள் இனத்தாரை அழைக்கக் கரைவதுதான் நம் மக்களால் ஒரு புள் நிமித்தமாக, அதாவது சகுனமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

11.  எயினர்களின் கொடுமையால் வேளாண்மை சீர் குலைந்த அந்த வட்டாரத்தில் தங்களுக்குக் கள் வழங்குவோர், குறி சொல்வோர் என்று அனைத்துப் பண்டங்கள், பணிகளை வழங்குவோர்க்கும் ஆயர்களைத் தாக்கிப் பறித்த ஆக்களைக் கொடுப்பதால் ஆயர்களின் வாழ்வும் சிதறடிக்கப்பட்டுள்ளது. அது போல் வழிப்பறிக்கு அஞ்சி வாணிகமும் தேங்கிப் போயிருக்கும். ஆக, இந்த எயினர் கூட்டத்தால் தமிழகப் பொருளியலின் கழுத்து நெரிபட்டுக்கொண்டிருந்ததை இந்த வேட்டுவ வரி மூலம் வெளிப்படுத்துகிறார் அடிகள். இக் கருத்தின் பிழிவாக இறுதியிலுள்ள ௧௭ முதல் ௨௨ வரையுள்ள பாடல்கள் உள்ளன.


[1] இவர்களை மலையாளக் கவுண்டர் என்று சேலம் மாவட்டத்தில் குறிப்பிடுவார்கள் என்று தெரிகிறது.

0 மறுமொழிகள்: