18.11.16

சிலப்பதிகாரப் புதையல் - 15 - புறஞ்சேரியிறுத்த காதை



  1. புறஞ்சேரி யிறுத்த காதை

பெண்ணணி கோலம் பெயர்ந்தபிற் பாடு
புண்ணிய முதல்வி திருந்தடி பொருந்திக்
கடுங்கதிர் வேனிலிக் காரிகை பொறாஅள்
படிந்தில சீறடி பரல்வெங் கானத்துக்
5.    கோள்வல் உளியமுங் கொடும்புற் றகழா
வாள்வரி  வேங்கையும் மான்கணம் மறலா
அரவுஞ் சூரும் இரைதேர் முதலையும்
உருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா
செங்கோற் றென்னவர் காக்கும் நாடென
10. எங்கணும் போகிய இசையோ பெரிதே
பகலொளி தன்னினும் பல்லுயி ரோம்பும்
நிலவொளி விளக்கின் நீளிடை மருங்கின்
இரவிடைக் கழிதற் கேத மில்லெனக்
குரவரும் நேர்ந்த கொள்கையி னமர்ந்து
15.  கொடுங்கோல் வேந்தன் குடிகள் போலப்
படுங்கதி ரமையம் பார்த்திருந் தோர்க்குப்
பன்மீன் தானையொடு பாற்கதிர் பரப்பித்
தென்னவன் குலமுதற் செல்வன் தோன்றித்
தாரகைக் கோவையுஞ் சந்தின் குழம்பும்
20. சீரிள வனமுலை சேரா தொழியவும்
தாதுசேர் கழுநீர்த் தண்பூம் பிணையல்
போதுசேர் பூங்குழற் பொருந்தா தொழியவும்
பைந்தளிர் ஆரமொடு பல்பூங் குறுமுறி
செந்தளிர் மேனி சேரா தொழியவும்
25. மலயத் தோங்கி மதுரையின் வளர்ந்து
புலவர் நாவிற் பொருந்திய தென்றலொடு
பானிலா வெண்கதிர் பாவைமேற் சொரிய
வேனில் திங்களும் வேண்டுதி யென்றே
பார்மகள் அயாவுயிர்த் தடங்கிய பின்னர்
30. ஆரிடை யுழந்த மாதரை நோக்கிக்
    கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும்
இடிதரும் உளியமும் இனையா தேகெனத்
தொடிவளைச் செங்கை தோளிற் காட்டி
மறவுரை நீத்த மாசறு கேள்வி
35.   அறவுரை கேட்டாங் காரிடை கழிந்து
வேனல்வீற் றிருந் வேய்கரி கானத்துக்
கான வாரணங் கதிர்வர வியம்ப
வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப்
புரிநூன் மார்பர் உறைபதிச் சேர்ந்து
40. மாதவத் தாட்டியொடு காதலி தன்னையோர்
         தீதுதீர் சிறப்பின் சிறையகத் திருத்தி
இடுமுள் வேலி நீங்கி யாங்கோர்
நெடுநெறி மருங்கின் நீர்தலைப் படுவோன்
காதலி தன்னொடு கானகம் போந்ததற்
45. கூதுலைக் குருகின் உயிர்த்தனன் கலங்கி
உட்புலம் புறுதலின் உருவந் திரியக்
கட்புல மயக்கத்துச் கெளசிகன் தெரியான்
கோவலன் பிரியக் கொடுந்துய ரெய்திய
மாமலர் நெடுங்கண் மாதவி போன்றிவ்
50. அருந்திறல் வேனிற் கலர்களைந் துடனே
வருந்தினை போலுநீ மாதவி யென்றோர்
பாசிலைக் குருகின் பந்தரிற் பொருந்திக்
கோசிக மாணி கூறக் கேட்டே
யாதுநீ கூறிய உரையீ திங்கெனத்
55. தீதிலன் கண்டேன் எனச்சென் றெய்திக்
கோசிகமாணி கொள்கையின் உரைப்போன்
இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும்
அருமணி இழந்த நாகம் போன்றதும்
இன்னுயி ரிழந்த யாக்கை யென்னத்
60. துன்னிய சுற்றந் துயர்க்கடல் வீழ்ந்ததும்
ஏவ லாளர் யாங்கணுஞ் சென்று
கோவலன் தேடிக் கொணர்கெனப் பெயர்ந்ததும்
பெருமகன் ஏவலல்ல தியாங்கணும்
அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த
65.    அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும்
வசந்த மாலைவாய் மாதவி கேட்டுப்
பசந்த மேனியள் படர்நோ யுற்று
நெடுநிலை மாடத் திடைநிலத் தாங்கோர்
70. படையமை சேக்கைப் பள்ளியுள் வீழ்ந்ததும்
வீழ்துய ருற்றோள் விழுமங் கேட்டுத்
தாழ்துய ரெய்தித் தான்சென் றிருந்ததும்
இருந்துயர் உற்றோள் இணையடி தொழுதேன்
வருந்துயர் நீக்கென மலர்க்கையின் எழுதிக்
75. கண்மணி யனையாற்குக் காட்டுக வென்றே
மண்ணுடை முடங்கல்  மாதவி யீத்ததும்
ஈத்த வோலைகொண் டிடைநெறித் திரிந்து
தீத்திறம் புரிந்தோன் சென்ற தேயமும்
வழிமருங் கிருந்து மாசற வுரைத்தாங்
80. கழிவுடையுள்ளத் தாரஞ ராட்டி
போதவிழ் புரிகுழற் பூங்கொடி நங்கை
மாதவி யோலை மலர்க்கையின் நீட்ட
உடனுறை காலத் துரைத்தநெய் வாசம்
         குறுநெறிக் கூந்தல் மண்பொறி உணர்த்திக்
85. காட்டிய தாதலிற் கைவிட லீயான்
ஏட்டகம் விரித்தாங் கெய்திய துணர்வோன்
அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்
குரவர்பணி யன்றியுங் குலப்பிறப் பாட்டியோ
90. டிரவிடைக் கழிதற் கென்பிழைப் பறியாது
கையறு நெஞ்சங் கடியல் வேண்டும்
பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி
என்றவள் எழுதிய இசைமொழி யுணர்ந்து
தன்றீ திலளெனத் தளர்ச்சி நீங்கி
95. என்றீ தென்றே எய்திய துணர்ந்தாங்
கெற்பயந் தோற்கிம் மண்ணுடை முடங்கல்
பொற்புடைத் தாகப் பொருளுரை பொருந்தியது
மாசில் குரவர் மலரடி தொழுதேன்
கோசிக மாணி காட்டெனக் கொடுத்து
100. நடுக்கங் களைத்தவர் நல்லகம் பொருந்திய
இடுக்கண் களைதற் கீண்டெனப் போக்கி
         மாசில் கற்பின் மனைவியொ டிருந்த
ஆசில் கொள்கை அறவிபால் அணைந்தாங்கு
ஆடியல் கொள்கை அந்தரி கோலம்
105. பாடும் பாணரிற் பாங்குறச் சேர்ந்து
செந்திறம் புரிந்த செங்கோட் டியாழில்
தந்திரி கரத்தொடு திவவுறுத் தியாஅத்து
ஒற்றுறுப் புடைமையிற் பற்றுவழிச் சேர்த்தி
உழைமுதற் கைக்கிளை யிறுவாய்க் கட்டி
110.  வரன்முறை வந்த மூவகைத் தானத்துப்
பாய்கலைப் பாவை பாடற் பாணி
ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டுப்
பாடற் பாணி அளைஇ அவரொடு
கூடற் காவதங் கூறுமின் நீரெனக்
115. காழகிற் சாந்தங் கமழ்பூங் குங்குமம்
நாவிக் குழம்பு நலங்கொள் தேய்வை
மான்மதச் சாந்தம் மணங்கமழ் தெய்வத்
தேமென் கொழுஞ்சே றாடி யாங்குத்
தாதுசேர் கழுநீர் சண்பகக் கோதையொடு
120. மாதவி மல்லிகை மனைவளர் முல்லைப்
போதுவிரி தொடையற் பூவணை பொருந்தி
அட்டிற் புகையும் அகலங் காடி
முட்டாக் கூவியர் மோதகப் புகையும்
மைந்தரும் மகளிரும் மாடத் தெடுத்த
125. அந்தீம் புகையும் ஆகுதிப் புகையும்
பல்வேறு பூம்புகை அளைஇ வெல்போர்
விளங்குபூண் மார்பிற் பாண்டியன் கோயிலின்
அளந்துணர் வறியா ஆருயிர் பிணிக்குங்
கலவைக் கூட்டம் காண்வரத் தோன்றிப்
130.   புலவர் செத்தாப் பொருந்திய நிவப்பின்
பொதியிற் றென்றல் போலா தீங்கு
மதுரைத் தென்றல் வந்தது காணீர்
நனிசேய்த் தன்றவன் திருமலி மூதூர்
தனி நீர் கழியினுந் தகைக்குந ரில்லென
135. முன்னாள் முறைமையின் இருந்தவ முதல்வியொடு
பின்னையு மல்லிடைப் பெயர்ந்தனர் பெயர்த்தாங்கு
அருந்தெறற் கடவுள் அகன்பெருங் கோயிலும்
பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயிலும்
பால்கெழு சிறப்பிற் பல்லியஞ் சிறந்த
140.காலைமுரசக் கனைகுரல் ஓதையும்
நான்மறை அந்தணர் நவின்ற வோதையும்
மாதவ ரோதி மலிந்த வோதையும்
மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு
வாளோர் எடுத்த நாளணி முழவமும்
145.போரிற் கொண்ட பொருகரி முழக்கமும்
வாரிக் கொண்ட வயக்கரி முழக்கமும்
பணை நிலைப் புரவி ஆலும் ஓதையும்
கிணை நிலைப் பொருநர் வைகறைப் பாணியும்
கார்க்கட லொலியிற் கலிகெழு கூடல்
150. ஆர்ப்பொலி எதிர்கொள ஆரஞர் நீங்கிக்
குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும்
மரவமும் நாகமும் திலகமும் மருதமும்
சேடலும் செருந்தியும் செண்பக வோங்கலும்
பாடலம் தன்னொடு பன்மலர் விரிந்து
155. குருகும் தளவமும் கொழுங்கொடி முசுண்டையும்
விரிமலர் அதிரலும் வெண்கூ தாளமும்
குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும்
பிடவமும் மயிலையும் பிணங்கரில் மணந்த
கொடுங்கரை மேகலைக் கோவை யாங்கணும்
160. மிடைந்துசூழ் போகிய அகன்றேந் தல்குல்
வாலுகங் குவைஇய மலர்ப்பூந் துருத்திப்
பால்புடைக் கொண்டு பன்மல ரோங்கி
எதிரெதிர் விளங்கிய கதிரிள வனமுலை
கரைநின் றுதிர்த்த கவிரிதழச் செவ்வாய்
165. அருவி முல்லை அணிநகை யாட்டி
விலங்குநிமிர்ந் தொழுகிய கருங்கயல் நெடுங்கண்
விரைமலர் நீங்கா அவிரறற் கூந்தல்
உலகுபுரந் தூட்டும் உயர்பே ரொழுக்கத்துப்
புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
170. வையை யென்ற பொய்யாக் குலக்கொடி
தையற் குறுவது தானறிந் தனள்போல்
புண்ணிய நறுமல ராடை போர்த்துக்
கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப்
புனல்யா றன்றிது பூம்புனல் யாறென
175.அனநடை மாதரும் ஐயனுந் தொழுது
பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும்
அரிமுக அம்பியும் அருந்துறை யியக்கும்
பெருந்துறை மருங்கிற் பெயரா தாங்கண்
மாதவத் தாட்டியொடு மரப்புணை போகித்
180.தேமலர் நறும்பொழில் தென்கரை யெய்தி
வானவர் உறையும் மதுரை வலங்கொளத்
தான்நனி பெரிதுந் தகவுடைத் தென்றாங்கு
அருமிளை யுடுத்த அகழிசூழ் போகிக்
கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும்
185.தையலும் கணவனும் தனித்துறு துயரம்
ஐய மின்றி அறிந்தன போலப்
பண்ணீர் வண்டு பரிந்தினைத் தேங்கிக்
கண்ணீர் கொண்டு காலுற நடுங்கப்
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
190.வாரலென் பனபோல் மறித்துக்கை காட்டப்
புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி
வெள்ள நீர்ப் பண்ணையும் விரிநீர் ஏரியும்
காய்க்குலைத் தெங்கும் வாழையும் கமுகும்
வேய்த்திரள் பந்தரும் விளங்கிய இருக்கை
195.அறம்புரி மாந்த ரன்றிச் சேராப்
புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்தென்.
பொழிப்புரை
வேட்டுவக் குமரி அணிந்த கொற்றவை கோலம் நீங்கிய பின்னர், அறநெறியில் முதன்மை பெற்ற கவுந்தியடிகளின் திருந்திய அடிகளைச் சேர்ந்து,

அழகிய பெண்ணான கண்ணகி கடிய கதிரவனின் வெப்பத்தைத் தாங்க மாட்டாள் பருக்கைக் கற்களையுடைய கொடிய காட்டு வழியில் இவள் கால்களில் உள்ள கொப்புளங்களால் இவள் காலை நிலத்தில் ஊன்றி நடக்கக் கூடவில்லை.

செங்கோலையுடைய பாண்டியர் காத்து நிற்கும் நாட்டில் எதிர்ப்பட்டவற்றைப் பறிக்கும் வல்லமையுடைய கரடியும் வளைந்த உச்சியை உடைய புற்றினைத் தோண்டாது, ஒளிரும் கோடுகளை உடைய புலியும் மான் கூட்டத்துடன் முரண்படா, பாம்பும் வனதேவதைகளும் இரை தேடித் திரியும் முதலையும் இடியும் ஆகிய இக் கொடியவை தம்மை அடைந்தார்க்குத் தீங்கு செய்யா என்று எங்கும் பரவியுள்ள புகழ் பெரியது. எனவே,

பகலின் வெப்பத்தை விடவும் பல உயிர்களையும் காக்கின்ற திங்களின் ஒளியாகிய விளக்கில் இரவினிலே இந்த நீண்ட பாதையில் செல்வதால் ஏற்படும் தீங்கு ஒன்றும் இல்லை என்று கோவலன் கூறினான். கவுந்தி அடிகளும் அதற்கு உடன்பட்டமையால் அந்தத் திட்டத்தைக் கைக்கொண்டனர்.

கொடுங்கோல் மன்னனது குடிகள் அம் மன்னன் ஒழியும் காலத்தைப் பார்த்திருப்பது போல, கதிரவன் மறையும் நேரத்தைப் பார்த்திருந்த அம் மூவர்க்கும்

பலவாகிய விண்மீன்களாகிய சேனையோடு பால் போன்ற கதிர்களை விரித்து பாண்டியன் குலத்துக்கு முதல்வனான திங்களான செல்வன் தோன்றினான்.
                                                       
விண்மீன் வரிசை போன்ற முத்துவடமும் சந்தனக் குழம்பும் திருவமைந்த இளமை பொருந்திய அழகிய முலைகளைச் சேரப்பெறாது நீங்கவும் பூந்தாது பொருந்திய குளிர்ந்த குவளை மலர் மாலை முல்லை மலர் சேர்ந்த பொலிவான கூந்தலில் சேராது நீங்கவும் பசிய தளிர்களின் ஆரத்தோடு பல்வேறு பூக்களுடனுள்ள தளிர்கள் சிவந்த மாந்தளிர் போன்ற மேனியில் சேராது நீங்கவும் பொதிய மலையில் தோன்றி மதுரை நகரில் வளர்ந்து புலவர்களது நாவில் இடம் பெறும் தென்றல் காற்றுடன் பால் போன்ற நிலவின் திர்கள் பாவையாகிய கண்ணகி மேல் சொரிய அதைப் பார்த்த நில மகள், இவளுக்கு இப்போது இது ஒன்றுதான் குறை என்பது போல பெருமூச்செறிந்து அடங்கியது பின்னர்.

வழிநடந்து துன்புற்றிருந்த கண்ணகியை நோக்கி, இப் பாதையில் கொடிய புலிகள் உறுமும், பேராந்தை குழறும், கரடியும் முழங்கும், இவற்றைக் கேட்டு நடுங்காது செல் என்று கூறினான்.

தொடி என்னும் வளையலை அணிந்த கண்ணகியின் சிவந்த கையைத் தன் தோளில் போட்டுக் கொண்டு கடுமையான மொழிகளைத் தவிர்த்த குற்றமற்ற கேள்வி அறிவுடைய கவுந்தியடிகளின் அறவுரைகளைக் கேட்டுக் கொண்டே கடினமான  வ் வழியைக் கடந்தனர்.

வெப்பம் நிலைபெற்ற மூங்கில் வெந்து கரிந்து கிடக்கும் காட்டில் காட்டுக் கோழிகள் கதிரவனின் வரவை அறிவித்தன.

வரிப்பாட்டுப் பாடுவதை வழக்கமாகக் கொண்டு வேத நூல் சார்ந்த ஒழுக்கத்திலிருந்து விலகிய வாழ்க்கையுடைய முப்புரிநூல் அணிந்த மார்பினை உடையோர் வாழும் ஊரை அடைந்தனர்.

கவுந்தி அடிகளுடன் கண்ணகியை குற்றமற்ற சிறப்புடைய ஒரு அடைப்புக்கு உள்ளே அமர்த்தி முள்ளால் இடப்பெற்ற வேலியைத் தாண்டி அங்கே நீண்ட வழி மருங்கில் உள்ள ஒரு நீர் நிலையைக் கோவலன் அடைந்தான்.

தன் காதலியோடு காட்டின் வழியாகச் சென்றதனால் உலை ஊதும் துருத்தி போல் மூச்சு வாங்கி உள்ளமும் கலங்கியதால் கோவனின் உருவம் மாறுபட்டிருந்ததால் கௌசிகன் என்பவன் பார்வையால் கோவலனை அறிய முடியாமல் குழம்பினான்.

கோவலன் பிரிந்து சென்றதனாலும் பழிச்சொல்லாலும் கொடிய துன்பத்தை அடைந்த கரி மலர் போலும் நீண்ட கண்களை உடைய மாதவியைப் போல் நீ மலர்களை நீக்கி துன்பமுற்றாயோ மாதவிக் கொடியே என்று பசுமையான இலைகளை உடைய குருக்கத்தி படர்ந்த பந்தலின் கீழ் அமர்ந்து கோசிகனாகிய மாணி கூறக் கேட்ட கோவலன் நீ இங்கு கூறியவற்றின் பொருள் என்ன என்று அவனைப் பார்த்து கேட்டான்.

அதைக் கேட்ட கோசிகன் கோவலன் எந்தத் தீங்கும் இன்றி நலமாக உள்ளான் என்று கோலனிடம் நெருங்கிச் சென்றான்.

கோசிகமானி தான் வந்த குறிக்கோளைக் கூறினான்:
                                               
பெருஞ்செல்வத்துக்குரிய மாசாத்துவானும் அவனது மனைவியும் அரியதாகப் பெற்ற மணியை இழந்த நாகம் போல் ஒடுங்கியதும் இனிய உயிரை இழந்த உடல் போல் நெருங்கிய சுற்றத்தார் துன்பக் கடலில் ஆழ்ந்தும் எல்லாத் திசையிலும் சென்று கோவலனைத் தேடிக் கொண்டு வருக என்று ஏவலாளர்களை மாசத்துவான் ஏவ அவர்கள் சென்றதும்

தந்தையாகிய பெருமகன் ஏவியதைச் செய்வது அல்லாமல் அதைவிட அரச பதவி பெரிதா என்று கடப்பதற்கு அரிய காட்டினை அடைந்த இராமனைப் பிரிந்த அயோத்தியைப் போல பெரிய பெயர் பெற்ற பழம் பதியாகிய பூம்புகாரிலுள்ளோர் அறிவு மிக மயங்கியதும்

வசந்தமாலை கூற அதை மாதவி கேட்டு மேனி பசப்புற்று மனமயக்கம் கொண்டு உயர்ந்த நிலைகளையுடைய மாளிகையின் நடுமாடத்தில் ஓர் பள்ளியறையில் உறங்குவதற்கான கட்டிலில் வீழ்ந்த செய்தியும்

வீழ்த்தும் அத்தகைய துன்பத்தை அடைந்த மாதவியின் துன்பத்தைக் கேட்டு ஆழ்ந்த துயரம் உற்றுத் தான் அங்கு சென்றிருந்ததையும்

மிகுந்த துன்பத்தை அடைந்திருந்த மாதவி உனது இரு அடிகளையும் வணங்குகிறேன் எனக்கு வந்த துன்பத்தைப் போக்குவாயா என்று சொல்லி, மலர் போன்ற தன் கையால் எழுதி, கண்மணி போன்றவருக்குக் காட்டுவாயாக என்று, சொல்லி, இலச்சினை (முத்திரை) இட்ட மடலை மாதவி கொடுத்ததும்

அவ்வாறு அவள் தந்த மடலைக் கொண்டு பல திசையிலும் தான் அலைந்து திரிந்த தேசங்களையும் பாதை ஓரத்தில் அமர்ந்து குறையறச் சொல்லி உடைந்த உள்ளத்தையும் ஆழமான துன்பத்தையும் உடையவளான மலர் விரிந்த பின்னிய கூந்தலை உடைய பூங்கொடி போன்ற நங்கையாகிய மாதவி தந்த ஓலையைக் கோவலனது மலர் போன்ற கையிலே கொடுத்தான்.

தான் அவளுடன் கூடி வாழ்ந்த காலத்தில் பூசிய நறுமண நெய்யின் மணத்தினை, செறிந்த தன்மையுடைய கூந்தலைப் பதித்து மண்ணால் இட்ட முத்திரை காட்டியதால், அதனைக் கையினின்றும் விடுவிக்க எண்ணாதவனாக இருந்துவிட்டு பின்னர் ஏட்டினை விரித்து அம் மடலில் இருக்கும் செய்தியை அறிந்தான்.

அடிகளாகிய தங்கள் திருவடிகளில் வணங்குகிறேன், தெளிவில்லாத ன் சொற்களை உள்ளத்தில் வாங்கிக் கொள்ள வேண்டும்,

முது குரவர்களாகிய பெற்றோருக்கு உரிய பணிவிடைகளைக் கைவிட்டும் உயர்குடிப் பிறந்த கண்ணகியோடு இரவு நேரத்தில் தாங்கள் செல்லுமளவுக்கு நான் என்ன குற்றம் செய்தேன்  என்று என் உள்ளம் செயலற்று நிற்கிறது, அதனைப் போக்க வேண்டும். குற்றம் நீங்கிய அறிவினை உடையோனே போற்றுகின்றேன் என்று அவள் எழுதியிருந்த இசைவான பொருளை அறிந்து அவளது குற்றம் எதுவும் இல்லை என்று தெளிந்து சோர்வு நீங்கி என் குற்றமே எல்லாம் என்று கூறி,

அவ் வோலையில் உள்ளவற்றை உணர்ந்து என்னை ஈன்ற பெற்றோர்க்கு முத்திரையுடைய இந்த ஓலை பொலிவுடையதாகப் பொருளும் உரையும் பொருந்தின, கோசிகனே, குற்றமில்லாத என் பெற்றோரின் மலர் போன்ற அடிகளைத் தொழுதேன் எனச் சொல்லி இம் மடலினை அவர்களிடம் காட்டு என்று அவனிடம் கொடுத்து என் பிரிவால் அவர்க்கு உண்டான பதற்றத்தைப் போக்குவதற்கு இங்கிருந்து விரைந்து செல்வாயாக என அவனைப் போகவிட்டான்.

பின்னர் குற்றமற்ற கற்பை உடைய தன் மனைவியோடு இருந்த தவறில்லாத குறிக்கோளை உடைய கவுந்தி அடிகள் பால் சேர்ந்து அங்கு வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்ட கொற்றவையின் போர்க் கோலத்தைப் பாடும் பாணருடன் உரிமையுடன் கலந்து

சிறப்பாகச் செய்யப்பட்ட செங்கோட்டி யாழில் தந்திரிகரம், திவவு எனும் இரண்டினையும் உறுதிபெறக் கட்டி

செங்கோட்டி யாழ் கோடு, திவவு, ஒற்று பற்று, தந்திரிகம், நரம்பு எனும் ஆறு உறுப்புகளில் ஒற்றினைப் பற்றிடத்தில் சேர்த்து

உழை குரலாகவும் கைக்கிளை தாரமாகவும் நரம்புகளை நிறுத்தி நூல்கள் வரையறுத்துள்ள முறையில் வந்த வலிவு, மெலிவு, சமன் எனும் மூவகை இயக்குதலுக்குரிய இடங்களாலும் பாய்ந்துசெல்லும் கலையில் ஊர்பவளான கொற்றவையின் பாடலாகிய பண்ணை, ஆசான் என்னும் பண்ணியலின் நால்வகைச் சாதியான பண், பண்ணியல், திறம், திறத்திறம் என்னும் பண்ணியலின் திறங்களுடன் பொருந்திவரச் செவிப்புலனால் அறிந்து

இத்தகைய பண்களை அவர்களோடு கலந்து இசைத்து இங்கிருந்து மதுரை த்தனை காவதத் தொலைவில் உள்ளதென்று கூறுங்கள் என்று கேட்க,

யிரம் பாய்ந்த அகில், சந்தனம் குங்குமப் பூங்குழம்பும் புனுகுக் குழம்பும் மணமாகிய நன்மை அமைந்த சந்தன சாந்தும் கத்தூரிச் சாந்துமாகிய இத் தெய்வ மணம் வீசும் இனிய மெல்லிய வளமான சேற்றை அளைந்து,

பூந்தாது(மகரந்தப்பொடி) பொருந்திய கழுநீர் மலரும் சண்பக மலரும் என்னும் இவற்றால் ஆன மாலையோடு குருக்கத்தியும்(மாதவி) மல்லிகையும் வீட்டில் வளர்க்கப்பட்ட முல்லை ஆகியவற்றின் மொட்டவீழ்ந்த மலர்களால் தொடுத்த மாலையையும் உடைய மலர் அணையில் பொருந்தி

அடுக்களைகளில் தோன்றும்(தாளிப்பு முதலாகிய) சமையல் புகையும் அகன்ற கடை வீதியில் இடையீடில்லாத வாணிகர் அப்பம் சுடுவதால் கிளம்பும் புகையும் ஆண்களும் பெண்களும் மேல் மாடத்தில் உண்டாக்கிய இனிய புகையும் வேள்விச் சாலைகளில் எழும்புகையும் ஆகிய பலவேறுபட்ட பொலிந்த புகையை அளைந்து

வெற்றி தரும் போரினையும் அணிகலன் விளங்கும் மார்பினையும் உடைய பாண்டியனது அரண்மனையில் தோன்றும் உணர்வால் அறுதியிட்டுக் காண முடியாத அரிய உள்ளத்தைப் பிணிக்கும் நறுமணக் கலவகை கூட்டம் வெளிப்படத் தோன்றி

புலவர்களது சிறந்த நாவால் புகழ் பெறும் சிறப்பினையுடைய பொதியில் தென்றல் போன்றில்லாது இங்கு மதுரைத் தென்றல் வருவதைப் பாருங்கள்

அதனால் அப் பாண்டியனது செல்வமிக்க மதுரை மிகத் தொலைவில் இல்லை; நீங்கள் தனித்துச் செல்வதாயினும் வழியில் தடுப்பார் எவருமில்லை என்று கூறினர்.

முன் நாளில் சென்ற அதே வகையில் அடுத்த நாளும் பெரிய தவத்திணை உடைய கவுந்தி அடிகளோடு இரவிலேயே சென்றனர். அவ்வாறு சென்ற போது,

அரிய அழித்தல் தொழிலைச் செய்யும் ஆலவாய் இறைவனது(கொற்றவை) அகன்ற பெரிய கோயிலும் பெரும்புகழ் வாய்ந்த பாண்டியனது புகழ் மிக்க அரண்மனையிலும் தமக்கே உரிய சிறப்பினையுடைய இசையில் சிறந் காலை முரசத்தின் செறிவான, முழக்கமாகிய ஓசையும்
அந்தணர்கள் நான் மறைகளையும் பயின்று ஓதும் ஓசையும்
தவ முனிவர்கள் மந்திரம் ஓதுவதால் நிறைந்த ஓசையும்
தன்னிடமிருந்து வெற்றியானது விலகிச் செல்லாத வேந்தனிடம் பெற்ற சிறப்புதனை முழங்கி வாள் வீரர்கள் எழுப்பும் காலை முழவின் ஓசையும்
போரில் பகைவரை வென்று கைப்பற்றிக் கொண்டு வந்த போர் யானைகளின் முழக்கமும் காட்டில் பிடித்துக் கொண்டுவந்த வலிய யானையின் முழக்கமும்
பந்திகளில் நிற்கும் குதிரைகள் கனைக்கும் ஓசையும்
கிணைப் பறையையுடைய மள்ளர் மருத நிலத்து வைகறைக்கண் கொட்டும் ஒலியும் ஆகிய
கரிய கடலின் ஓசை போன்று ஆரவாரம் மிக்க கூடலிலிருந்து எழும்பும் ஒலிகள் எதிர்கொண்டதால் வருத்தும் துன்ப உணர்வுகளெல்லாம் நீங்கி

குரா(குரவம், பேரீச்சம், குறிஞ்சாக் கொடி) மரமும் மகிழ மரமும் கோங்கும் வேங்கைமும் வெண்கடம்பும் சுரபுன்னையும் மஞ்சாடியும் மருத மரமும் உச்சிக் செலுந்தும் செருந்தியும் செண்பக மரமும் பாதிரி ஆகியவற்றுடன் பலவகை மலர்களும் விரித்து

குருக்கத்தியும் செம்முல்லையும் வளமான கொடியிணை உடைய முசுட்டையும் விரிந்த பூக்களை உடைய மோசி மல்லிகையும்(அதிரல்) வெள்ளை நறுந்தாளியும் (வெண்கூதாளம்) வெட்பாலையும் மூங்கிலும் செழுமையான கொடியாகிய பகன்றையும் (சிவதை, சீந்தில்) பிடலமும் (குட்டிப்பிடவம் எனும் கொடி ஒரு வகை மரம்) மயிலை (இவாட்சி), கொடிமல்லிகையும் ஆகிய இவை பிணைந்து கலந்த மாலையாகிய மேகலை எங்கும் செறிந்து சுற்றிச் செல்லும் கரையாகிய அகன்ற உயர்ந்த அல்குலையும்

விரிந்த பொலிவினையுடைய ஆற்றிடைக் குறையில் அடிப்பக்கம் அகன்று பல லர்களால் ஓங்கிய ஒன்றிற்கொன்று ஒத்து விளங்கும் வெண்மணல் குவிந்த மணற்குன்றுகளாகிய ஒளி வீசும் இளமையுள்ள அழகிய முலைகளையும்

கரையில் நின்று முள்முருங்கை உதிர்த பூக்களாகிய சிவந்த வாயையும் அருவி நீரோடு வந்த முல்லை மலராகிய அழகிய நகையினையும் உடையாள்

குறுக்கே மறிந்தும் நெடுக்கே ஓடியும் திரிகின்ற பெரிய மீன் ஆகிய நீண்ட கண்களையும்

மணம் பொருந்திய மலர்கள் நீங்காமல் விளங்குகின்ற கருமணலாகிய கூந்தலையும்

பல பொருட்களையும் விளைத்து உண்பித்து உலகத்தைக் காக்கின்ற உயர்ந்த பெரிய ஒழுக்கத்திணை உடையவளும் புலவர்களின் நாவில் பொருந்திய பூங்கொடியைப் போன்றவளும் பருவம் பொய்க்காத பாண்டியர்களின் குலக்கொடியாய உள்ளவளும் ஆன வையை ஆறானது

கண்ணகிக்கு இனி வரும் துன்பத்தினைத் தான் முன்னரே அறிந்தவள் போல் தூய்மையான மணம் கமழும் மலர்களால் ஆன ஆடையால் தன் உடலைப் போர்த்து தன் கண்ணில் நிறைந்த மிகுந்த நீரினை மறைத்து உள்ளடக்கினாள்

நீர் நிறைந்த ஆறு அன்று இது பூவை நீராகக் கொண்ட ஆறு என்று கண்ணகியும் கோவலனும் வணங்கி

அரிய துறையிலே இயங்கும் குதிரை முக ஓடம்மும் யானை முக ஓடமும் சிங்க முக ஓடமும் ஆகியவையங்கும் பலரும் செல்லும் பெரிய துறையை நோக்கிச் செல்லாது அதற்கு அண்டையிலுள்ள சிறிய துறையில் கவுந்தியடிகளோடு கட்டுமரத்தில் (மரப்புணை) சென்று தேன் மலர்களையுடைய மணம் மிக்க சோலை நிறைந்த தெற்குக் கரையினை அடைந்தனர்.

தேவர்கள் தங்கியிருக்கும் மதுரையை வலஞ்செய்தால் மிகவும் பெரிய நன்மையுண்டு என்று கருதி அங்கே அழித்ததற்கு அரியதாகிய காவல்காடு சூழ்ந்த அகழியைச் சுற்றிப் போனார்கள்.

கரிய நெடிய குவளையும் அல்லியும் தாமரையும் கண்ணகியும் அவள் கணவனும் அடைய இருக்கின்ற துன்பத்தினை ஐயப்பாடு சிறிதும் இன்றி அறிந்திருந்தன போன்று பண் கொண்டு வண்டுகள் பாடும் போது அவற்றுடன் வருந்தி கண்ணீர் கொண்டு கால்கள் வரை நடுங்கின. (வண்டுகள் ஐயமுற்று வருந்திப் பாடுவதால் மலர்ச் செடிகள் நடுங்கின)

பகைவரை போரில் வருத்தி வெற்றி பெற்றதால் மதிலின் மீது அடையாளமாக நிற்கும் வெற்றிக் கொடிகள் மதுரைக்கு வாராதீர்கள் என்று தம் கையால் மறித்துகாட்டுபவை போல் ஆடின.

பறவைகள் அழகு செய்யும் வயல்களையும் சோலைகளையுமாக கொண்டு பெருமளவு நீரினை உடைய பண்ணைகளும் பரந்த நீரினை உடைய ஏரிகளும் குலை குலையாகக் காய்கள் தொங்கும் தென்னையும் கமுகும் வாழையும் மூங்கில் திரளால் இடப்பட்ட பந்தலும் ஆகிய இவை விளங்கி இருந்த அறத்திணை விரும்பும் முனிவர்கள் அன்றிப் பிறர் சென்று சேராத மூதூரின் புறஞ் சேரியினுள் விரும்பிப் புகுந்தனர்.

இக்காதையின் சிறப்புகள்:
1.   காவிரிப் பரப்பின் குளிர்ந்த சூழலில் பசும் புல் போர்த்த ஈரமான மெத்தென்ற நிலத்தில் நாளுக்கு ஒரு காதம் என்ற கணக்கில் இது வரை நடந்துவந்ததால் கண்ணகியின் கால்கள் வெறும் கொப்புளங்களோடு தப்பியது என்று சொல்ல வேண்டும். வீட்டில் அனைத்தையும் பணிப்பெண்கள் பார்த்துக்கொள்ள, கணவனைப் பிரிந்து வாழும் நிலையில் அந் நாட்களெல்லாம் அவள் பெரும்பாலும் நடமாட்டமே இல்லாதிருந்திருப்பாள். எனவே அவளுடைய காலடிகள் புண்ணாகாமல் தப்பித்திருக்க முடியாது. அந்த நிலையில் அவள் கணவன் தோள்மேல் சாய்ந்து சென்றதாக அடிகளார் கூறியிருப்பது அவள் படும் உடல் துன்பத்தை உரிய வழியில் வெளிப்படுத்தவில்லை என்று தோன்றக் கூடும். ஆனால் தன் துன்பத்தை வெளிப்படுத்தாமல் அவள் தாங்கிக்கொள்வது பொறுக்க முடியாமல்தான் கவுந்தியடிகள், மேலே வெய்யிலின் கொடுமை, காலோ தரையில் படிய முடியாத நிலை என்பதை கடுங்கதிர் வேனிலிக் காரிகை பொறாஅள் படிந்தில சீறடி என்பதன் மூலம் இளங்கோவடிகள் வெளிப்படுத்துகிறார் போலும்.  
2.   கரடி புற்றுகளைத் தோண்டாது, வேங்கை மான்களை வேட்டையாடாது போன்ற இயற்கை மீறிய உரைகள் அவர்கள் எப்படியாவது மதுரை செல்ல வேண்டிய சூழலில் பகல் வெய்யிலைத் தப்பி வழி கடக்க வேண்டுமாயின் கரடியையும் புலியையும் பாம்பையும் பேயையும் இடியையும் முதலையையும் பொருட்படுத்தாமல் சென்றாக வேண்டும் என்பதனை பாண்டியனின் செங்கோல் சிறப்பு பற்றிய உலக நம்பிக்கையை எடுத்துக்கூறி ஊக்குகிறார் கவுந்தியடிகள் என்றே கொள்ள வேண்டும். இதையே கோவலன் கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும் இடிதரும் உளியமும் இனையா தேகென கண்ணகியை நோக்கிக் கூறுவதன் மூலம் அடிகள் தருகிறார்.

      பாண்டியன் தலைநகரில் கோவலனுக்கும் கண்ணகிக்கும் நடந்த கொடுமைகளையும் அவற்றினூடும் கட்டுரை காதையிலும் வெளிப்படும் பாண்டிய அரசின் சீர்கேடுகளையும் அவன் ஆட்சியைப் பற்றி மக்களிடையில் நிலவிய உயர்வான கருத்துகளையும் பார்க்கும் போது கழக இலக்கியங்கள், குறிப்பாக புறநானூறு 201 - 400 ஆம் பாடல்கள் தரும் செய்திகளுக்கும் அரசர்களின் மேன்மை பற்றிக் கூறியுள்ள, அவற்றுக்கு முன் பாடல்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கும் உள்ள முரண்பாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது. இன்னோரு புறம் கோவலன் குழுவினர் காட்டு வழியில் நெடுந்தொலைவு இரவில் மட்டும் திருடர் அல்லது விலங்குகளின் இடையூறு எதுவும் இல்லாமல் மதுரையைச் சென்றடைந்தது பாண்டிய நாட்டு மக்களின் பண்பாடு அந் நாட்டு அரசனின் ஆட்சியின் தரத்தை விட மேம்பட்டது என்பதைக் காட்டுகிறது.

3.   கணவனோடு இல்லத்தில் வாழும் நிலையிலிருந்திருந்தால் கதிரவன் மறைந்து விண்மீன்களின் தொகுதியோடு நிலவு ஒளிவீசும் இந்த இராப்பொழுது கண்ணகிக்கு எவ்வளவு இனிமையாயிருந்திருக்கும் என்று ஏங்கும் மனநிலையில் கண்ணகியின் உடல்நிலையும் மேலே சுட்டிக்காட்டியபடி கொடுவிலங்குகளைப் பொருட்படுத்தாமல் நடக்க வேண்டியதால் வாழ்நிலையும் இல்லை என்பதை நோக்கி தான் ஏங்குவதை பார்மகள் மீதேற்றி இளங்கோவடிகள் கூறுகிறார்.

4.   வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் புரிநூன் மார்பர் என்பவர் யார் என்ற விளக்கம் பொருந்துவதாகத் தெரியவில்லை. பூணூல் என்பது எக் காலத்தும் பார்ப்பனர்க்கே உரித்தானது என்ற தவறான கருத்தில் உரையாசிரியர்கள் இதற்கு விளக்கமளித்துள்ளார்கள். பார்ப்பனர்களில் வேளாப் பார்ப்பார் என்றொரு பிரிவு கூறப்படுகிறது. இவர்கள் குயவராக கடவுளரின் மண் படிமங்களை வனைந்து அவற்றைக் கோயில்களில் நிறுவி பூசையும் செய்வோராவர். மதுரை – சிவகங்கை மாவட்ட எல்லைப் புறங்களில் இவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

      பூணூல் என்பது பார்ப்பனர்க்கு மட்டும் உரியதல்ல. திருமணத்தில் மணமகனுக்கும், சாவில் மூத்த மகனுக்கும் பூணூல் அணியப்படுவது, முதலதில் அவன் ஒரு குடும்பத்துக்குத் தலைவனாகப் போகிறான் என்பதும் இரண்டாவதில் செத்தவருக்கு அடுத்து குடும்பத் தலைவன் என்ற அறிவிப்பாகவும் பூணூல் அணியப்படுகிறது. நூல் நூற்போருக்கு அடையாளமாகவே பூணூல் முதன்முதலில் களத்தில் புகுந்திருக்கும். நூற்பும் நெசவும் பெருந்தொழில்களாக மாபெரும் ஏற்றுமதித் தொழில்களாக வளர்ந்த ஒரு வரலாற்றுக் கட்டத்தில் குமுகத் தலைமையின் அடையாளமாக பூணூல் இருந்திருக்கும்.

      அம்பு கொண்டு வேட்டையாடுவோர் பயன்படுத்தும் அம்புறாத்தூணி எனப்படும் அம்புக்கூடையை தோலாலான ஒரு வாரில் பிணித்து அது முதுகுப்புறம் இருக்குமாறும் வலது கையைத் தோளுக்கு மேல் பின்புறம் கொண்டுசென்று அம்பின் அடிப் பகுதியைப் பற்றி வில்லின் நாணில் பொருத்தி இழுத்துவிடுமாறு அவ் வார் வலது தோள் மீதிருந்து இடது கையின் கீழ் வருமாறு அணியப்பட்டது[1]. வேட்டையில் எளிதாகக் கிடைக்கும் மானின் தோலால் ஆனதுதான் இந்த வார். வேடர்களால் கண்டுபிடிக்கப்பட்ட வில்லாலும் அம்பாலும் ஆன இந்த வேட்டைக் கருவி நாளடைவில் ஒரு போர் ஆயுதமாக மாறியது. இந்தப் புதிய ஆயுதத்தைக் கையாள வல்லவர்கள் குமுக மதிப்புக்கு உரியவர்களானார்கள். வில் வீரர்கள் என்பதற்கு அடையாளமாக மான் தோலாலான ஒரு வாரை வலது தோளின் மேலிருந்து நெஞ்சுக்குக் குறுக்கில் இடது கைக்கு அடியில் வருமாறு அணியத் தொடங்கினர். வில் வித்தையில் தேர்ச்சி பெற வேண்டியவனாக இருந்த அரசனும் இந்த வாரை அணிவது வரலாற்றுத் தேவையாகிவிட்டது. மனித நாகரிகத் தொடக்கத்தில் அரசன் தோன்றும் முன் குக்குலங்களின் உள்ளூர்ப் பூசகர்களே தலைவர்களாக இருந்தனர். அவ்வாறு தலைவனாகும் தகுதிகளில் முகாமையானது உயிரைப் பணயம் வைத்து பயிற்சிகளில் ஈடுபட்டு உளவியல் வலிமையால் பிறரைக் கட்டுப்படுத்தும் வசிய வித்தைகளில் தன் கூட்டத்தில் தனக்கு யாரும் நிகரில்லா நிலையை அடைய வேண்டும். இந்த நடைமுறையை இருக்கும் பிறப்பிலிருந்து விடுபட்டு மீண்டும் ஒரு பிறவியை எய்துவதென்று மாந்த நூலார் குறிப்பிடுவர். சாமன்கள் எனும் இப் பூசகத் தலைவர்களை அவர்கள் இருபிறப்பாளர் என்று குறிப்பிடுவர். அண்டை நிலப் பகுதிகளிலுள்ள மக்களின் போட்டியையும் பகைமையையும் எதிர்கொள்ள தங்கள் பகுதிகளிலுள்ள தனித்தனி குடியிருப்புகளை ஒரே அதிகாரத்தின் கீழ் கொண்டுவரும் நோக்கத்தில் இச் சாமன்கள் உருவாக்கியவர்களே அரசர்களுக்கு முன்னோடியான இந்திரன். இந்த அரசர்களுக்கும் சாமன்களுக்கும் உருவான முரண்பாடுகளின் விளைவாக ஒரு கட்டத்தில் சாமன்கள் ஒரு பக்கமும் அரசர்களும் மக்களும் எதிர்ப் பக்கமும், பின்னர் இறுதியாக அரசனும் பூசகர்களும் ஒன்றிணைந்து பிறரனைவரையும் ஒடுக்கும் நிலை வந்தது.

      இருந்தாலும் அரசர்களுக்குப் போட்டியாளராகவே அச்சுறுத்திக்கொண்டிருந்த சாமன்களான பூசகர்களை, வரலாற்று வளர்ச்சிப் போக்கில் உருவான வேதங்களைப் பாராயணம் செய்ததால் கடவுளை நெருங்கிவிட்டவர்கள் தாங்கள் என்று புறப்பட்ட வேதியர்களைக் கொண்டு அரசர்கள் அகற்றிவிட்டார்கள். கடுமையான பயிற்சிகளால் இருபிறப்பாளராக அறிவிக்கப்பட்ட சாமன்களின் இந்த அடைமொழியை வேதக் கல்வி என்பதைக் காட்டித் தங்களுக்கு உரிமையாக்கிக் கொண்டனர் வேதப் பார்ப்பனர்கள்.

      இந்தக் கட்டத்தில் மக்களுக்கிடையிலான உறவுகள் இருந்த நிலையில் இந்த நாகரிகம் உருவாகிய களமாகிய குமரிக் கண்டம் தெற்கிலிருந்து சிறிது சிறிதாக முழுகவே மக்கள் மேற்குக் கடற்கரை வழியாக இன்றைய கட்சு வளைகுடாப் பகுதியில் கரையேறி முதலில் மேற்காக காந்தாரம் எனப்படும் இன்றைய ஆப்கானித்தானுக்கும் பின்னர் இரும்புக் கோடாரி கொண்டு காடுகளை அழித்து கங்கைக் கரையிலும் குடியேறினர். இவர் வெளியேறும் முன்பே குமரிக் கண்டத்தில் சேர, சோழ, பாண்டிய மரபுகள் உருவாகியதற்கான திட்டவட்டமான தடயங்கள் உள்ளன. ஆனால் வடக்கு நோக்கி தங்கள் ஆட்சிப் பகுதிகளை நகர்த்தி தெற்கிலேயே இருந்த சேர, சோழ, பாண்டியர்கள் பூசகர்களைத் தம் கட்டுக்குள் வைத்திருந்தனர். இச் செய்திகளை http://kumarimainthan.blogspot.com எனும் என் இணையப் பக்கத்தில் இருக்கும் சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல், சாதி வரலாறுகளின் ஒரு பதம் – நாடார்களின் வரலாறு ஆகிய ஆக்கங்களில் விரிவாகக் காணலாம்.

      தமிழ் இலக்கியங்களில் பதிவைக் கொண்டிருக்கும் இரண்டாம் கடற்கோள் கி.மு.1700(இ.மு.3800) வாக்கில் தமிழகத்தை இன்றைய இலங்கையைத் தமிழகத்திலிருந்து பிரித்தது. இன்றைய தமிழகத்தினுள் தள்ளப்பட்ட சேர, சோழ, பாண்டியர்கள் அங்கே ஏற்கனவே விரிவான வேளாண்மை நாகரிகத்தில் நுழையாமல் கால்நடை வளர்ப்பிலும் தோல் பொருட்கள் ஏற்றுமதியிலும் வலிமை பெற்றிருந்த பறையர், பாணர், துடியர், கடம்பர் எனப்படும் வலிமையான மக்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. அதே வேளையில் இவர்களுக்கு முன்பே விந்திய மலைக்கு வடக்கில் குடியேறி வலிமை பெற்று அரசுகளை உருவாக்கியிருந்த குமரிக் கண்ட மக்கள் தெற்கு நோக்கிப் படையெடுத்து வருவதை எதிர்கொள்ள இதே மூலக்குடிகளுடன் ஓர் ஒப்பந்தமும் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். மூவேந்தர்களும் மூலக்குடி அரசர்களான குறுநில மன்னர்களும் தமக்குள் போரிட்டால் வென்றவர் எதிரி நாட்டின் நிலத்தைத் தன் நாட்டுடன் இணைக்கக் கூடாது, அந் நாட்டின் மீதுள்ள தன் மேலாளுமையின் அடையாளமாக அந் நாட்டு அரியணையில் ஒரு முறை அமர்ந்து முடிசூடிக்கொள்ளலாம் என்ற இந்த ஒப்பந்தம் 1300 ஆண்டுகள் நிலைத்திருந்தது என்றும் அதைத் தன் சூழ்ச்சியால் உடைத்ததாகவும் அம்மண சமயத்தைச் சார்ந்தவனான கலிங்கத்து மன்னன் காரவேலன் தன் அத்திகும்பா கல்வெட்டில் (கி.மு.123ஆம் ஆண்டில்) பதிந்துவைத்துள்ளான். கி.மு.4ஆம் நூற்றாண்டளவில் குறுநில மன்னர்கள் எனப்படும் மூலக்குடி அரசுகளின் வலிமையை ஒடுக்கிய பின் உருவான பாடல்களைத்தான் கழகக் காலப் பாடல்கள் என்ற பெயரில் தொகுத்திருக்கிறார்கள் பின் வந்த அரசர்கள்.(அவர்களையும் மீறி இடம்பெற்றுவிட்ட சில பாடல்கள் இவர்கள் இருளடையச் செய்த காலத்து வரலாற்றில் தெளிவான வெளிச்சத்தைத் தருகின்றன என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.) கி.மு. நான்காம் நூற்றாண்டுக்கு முன் தமிழர்கள் ஆட்சி அமைத்திருந்ததற்கு சான்றே இல்லை என்ற முடிவுக்கு நேர்மையான ஆய்வாளர்களைக் கூட இது இட்டுச் சென்றுள்ளது.

      கிறித்துவ ஊழிக்கு முந்திய இரு நூற்றாண்டுகளில் மூவேந்தர்களிடையிலான போர்களை முடிவு செய்வோராக இக் குறுநில மன்னர்கள் திகழ்ந்ததால் அவர்களை முற்றிலுமாக அழித்துத் தமிழகத்துக்குக் கேடு செய்தனர் மூவேந்தர்கள். இவ்வாறு யாரும் ஊடுருவ முடியாத தமிழகத்தின் வடக்கு எல்லையில் இருந்த ஓர் உயிரரண் மூவேந்தர்களின் முட்டாள்தனமான முற்றாதிக்க வெறியால் அழிந்தது.

      இந்தப் பின்னணியில் துறவி என்ற பெயரில் 3000 அம்மணர்களோடு ஊடுருவிய சந்திரகுப்த மோரியனும் கலிங்கக் காரவேலனும் ஏவி விட்ட அம்மண ஒற்றர்கள் தமிழகத்து மலைக் குகைகளில் பதுங்கி தங்கள் மன்னர்களை அழித்த மூவேந்தர்கள் மீது வெறுப்புற்றிருந்த முல்லை - குறிஞ்சி நில மக்களை மூவேந்தர்களுக்கு எதிராகத் திரட்ட முடிந்தது. இதே கால கட்டத்தில் வடக்கில் அம்மண, புத்த சமயங்களின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத வேதப் பார்ப்பனர் தெற்கு நோக்கிப் பெருமளவில் பெயர்ந்தனர். அம்மணத்துக்குச் சரியான மாற்று அது தேடிச் சேர்ந்திருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களோடு இணக்கம் காணுதல் என்ற சரியான மாற்றுக்கு மாறாக தமிழக முட்டாள் மூவேந்தர்கள் இவ்வேதப்பார்ப்பனர்களுக்கு அவர்கள் நினைத்துப் பார்க்காத சிறப்பளித்து பொன்னையும் பொருளையும் நிலங்களையும் அளித்து உயரத்தில் ஏற்றி வைத்தனர்.

      இதற்கிடையில் சாமன்கள் ஒரு புறமும் அரசன் உட்பட்ட அனைத்து மக்களும் எதிர்ப்புறமுமாக மோதிய போது வில்வித்தையின் அடையாளமான வலது தோளிலிருந்து இடது கையின் கீழ் இறங்கும் மான் தோலாலான வாரும் நெசவுத் தொழிலின் அடையாளமான பூணூலும் ஒன்றிணைந்து உருவானதே, நூலின் இரு முனைகளையும் மான் தோலைச் சுற்றிப் பிணைப்பதாகிய இன்றைய பூணூல் வடிவம். அரசனின் அணிகளில் ஒன்றாகத் தோன்றிய இதனைப் பின்னர் மக்களோடு மன்னனுக்கு ஏற்பட்ட முரண்பாடுகளின் போது தன்னைக் காத்துக்கொள்ள பார்ப்பனர்களுக்கு அரசர்கள் விட்டுக்கொடுத்துள்ளனர். இதற்கிடையில் குமுகத்தில் வெவ்வேறு மக்கள் குழுவினர் ஏற்கும் பங்கின் அடிப்படையில் அவர்களின் கருத்துகளை அரசன் முன் எடுத்துவைக்கும் அமைப்பாக உருவான வருணப் பிரிவினருக்கு வெவ்வேறு வகை பூணூல்கள் இருந்தன என்ற கருத்தை பத்ரி சேசாத்திரி என்பவரின் பூணூல் என்ற தலைப்பிலான இணைய தள இடுகையாலும் அதன் எதிர்வினைகளாலும் அறிந்துகொள்ள முடிகிறது. தொல்காப்பியம் ஒதுக்கி வைத்துள்ள அடியவர்களுக்கு பூணூல் இருந்ததற்கான சான்றுகள் இல்லை. வினைவலர்களான ஐந்தொழிற்கொல்லர்கள், பெரும்பாலும் முதற்குலோத்துங்கன் காலத்தில் அவனுக்குத் துணை நின்றதற்குப் பரிசாக உரிமையைப் பெற்றிருக்கிறார்கள்.
     
      பூசகர்களின் மேலாளுமை இல்லாத ஒரு குமுகக் கட்டமைப்புடன் இன்றைய தமிழகத்தினுள் நுழைந்த சேர, சோழ, பாண்டியர்களின் குடிகளான குமரிக் கண்டத் தமிழர்கள் கிறித்துவ ஊழியின் தொடக்க காலத்தை ஒட்டிய அரசியல் சூழலில் வடக்கிருந்து வந்த வேதியப் பார்ப்பனர்களுக்கு இடம் கொடுத்து அவர்கள் மட்டுமே பூணூல் அணியும் தகுதியுடையவர் என்று அறிவித்திருக்கலாம். அதை ஏற்காமல் ஏற்கனவே பூணூல் அணிந்த பார்ப்பனரல்லா மக்கள் அதைத் தொடர்ந்திருக்கலாம். அத்தகைய மக்கள் வாழ்ந்த ஊர்களும் இருந்தன என்பதைச் சுட்டுவதற்காகத்தான் இவ் வரிகளை அடிகளார் வைத்துள்ளார் என்று தோன்றுகிறது. வரிநூல் என்பதற்கு காமங் கண்ணிய இசைப் பாடல் என்ற வேங்கடசாமியாரின் விளக்கம் பொருந்துவதாகத் தோன்றவில்லை. வரி என்பதை, போரா.இரா.மதிவாணன் அவர்கள் குறிப்பிடுவது போல் ஓரி என்ற மூலத்திலிருந்து தோன்றிய, ஒருவர் தனியாக நிகழ்த்தும் ஆடல் அல்லது பாடல் நிகழ்ச்சி என்றே பொருள் கொள்ள வேண்டும். வரி என்பதற்கு இரேகை என்ற பொருள்கொண்டால் கைரேகை கூறுவோர் என்றும் பொருள் கொள்ளலாம். குமரி மாவட்டத்தில் கைரேகை பார்ப்பதை கைவரை பார்ப்பது என்றுதான் ½ நூற்றாண்டுக்கு முன்பு குறிப்பிட்டனர். கைவரை பார்ப்பவர்கள் ஒரு தனி மக்கள் பிரிவினராக, தனியான இருப்பிடங்களில் வாழ்ந்து அந்தந்த வட்டாரத்து ஊர்களுக்குச் சென்று தொழில் செய்தனர். அது மட்டுமல்ல உடுக்கு போன்ற கருவிகளை இசைத்து கதைப் பாடல்களைப் பாடி மக்களிடம் பொருள்பெற்றுச் செல்வோரும் இருந்தனர். சிறப்பாக, திருமணம் போன்ற குடும்ப நிகழ்வுகள் முடிந்து உறவினர்களுடன் மகிழ்ந்திருக்கும் இடங்களில் இவர்கள் கதைகளைப் பாடிப் பரிசு பெற்றுச் செல்வர். இவர்கள் ஒற்றை ஆட்களாகவே வருவர். இவர்களும் தனிக் குடியிருப்புகளில் வாழ்ந்து அந்தந்த வட்டாரத்து ஊர்களில் தொழில் செய்தனர்.

      அது மட்டுமன்று அடுத்து வரும் கோசிகன் என்ற பார்ப்பான் போன்று கணிகையருக்கும் பரத்தையருக்கும் தூது செல்லும் பார்ப்பனர்களும் நம் கழக இலக்கியங்களில் நிறையவே வருகிறார்கள். இவர்களையும் இவ்வரிகள் குறிப்பிடலாம். 

புக்கென்னாது சேர்ந்தென்றதனால், அந்தப் பார்ப்பார் இழுக்கிய ஒழுக்க முடைமை தமது சாவக நோன்புக் கேலாமையின், ஊர்க்கயலானதோர் நகரிற் கோயிற்பக்கத்திற் சேந்தனரென்க’ என இவ் வரிகளுக்கு அடியார்க்குநல்லார் கொடுத்துள்ள விளக்கமும் பொருந்தவில்லை. காடுகாண் காதை முடிவில் எயினர் குடியிருப்பைத் தவிர்த்து ஐயைக் கோட்டத்தில் வெய்யில் கொடுமை தாங்காது ஒதுங்கினர் என்பதற்கு மாறாக உறைபதிச் சேர்ந்து என்ற கூற்று அம் மக்களின் குடியிருப்பில் அமர்ந்து இளைப்பாறுவதற்கு அவர்கள் தயங்கவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

      புகாருக்கு வெளியில் கவுந்தியடிகளைக் கண்ட பின் வயல் சூழ்ந்த நிலப்பகுதியில் வேள்விப் புகை மண்டிய மறையோர் இருக்கையையும் கரும்பாலைகளிலிருந்து எழும் புகையால் சூழ்ந்த உழவர் ஊர்களையும் தொலைவுக் காட்சிகளாகக் காட்டிய அடிகளார் அடுத்து வழிப்பறித்தும் அண்டை அயலில் ஆநிரை கவர்ந்தும் கூட்டுண்ணும் எயினர்கள் வாழ்ந்த குடியையும் காட்டியது போல் இப்போது மக்களிடையில் தங்கள் திறன்களைக் காட்டி கூலி பெற்று வாழும் மக்களின் வாழும் ஒரு பதியைக் காட்டுகிறார்.

5.   முள் வேலியிட்ட ஓர் அடைப்புக்குள் இருவரையும் பாதுகாப்பாக இருத்திவிட்டு நெடுஞ்சாலை ஓரம் இருந்த நீர்நிலை நோக்கிச் செல்வதாகக் கூறுகையில் காடுகாண் காதையில் (வரி.168 – 9)
இடைநெறிக் கிடந்த இயவுகொள் மருங்கின்
புடைநெறிப் போயோர் பொய்கையிற் சென்று
என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன. கோவலன் குழுவினர் செல்கை மேற்கொண்ட கடுங்கோடை காலத்திலும் அவர்கள் சென்ற வரண்ட நிலப்பரப்பில் நெடுஞ்சாலைகளில் செல்வோரின் தேவைக்காக சாலை ஒரத்திலும் அச் சாலையிலிருந்து அணுகுசாலையுடனும் (புடைநெறி - புடைத்துச் செல்லும்[2], பிரிந்து செல்லும், கிளைத்துச் செல்லும் நெறி) அமைக்கப்பட்டிருந்த நீர்நிலைகள் இருந்தது தெரிய வருகிறது. அரசர் சிறப்புகளைக் கூறும் போது சாலை அமைத்தல், சத்திரம் கட்டுதல், குளம் வெட்டுதல் போன்றவற்றை வரலாற்று நூற்கள் கூறுவதைக் காண்கிறோம். அவற்றில் குளங்களைப் பற்றிய இலக்கியப் பதிவாக இதை நாம் கொள்ளலாம்.

6.                                 மாதவத் தாட்டியொடு காதலி தன்னையோர்
தீதுதீர் சிறப்பின் சிறையகத் திருத்தி
இடுமுள் வேலி நீங்கி….(வரி. 40 – 42)
      என்ற வரிகள்,
குரங்கமை யுடுத்த மரம்பயி லடுக்கத்து
வானவ ருறையும் பூநா றொருசிறை….
      என்று நாடுகாண் காதையிலும் (வரி 157 – 8) குறிப்பிட்டிருப்பது, வழிச் செல்வோர் தங்கிச் செல்வதற்கு இது போன்று முள் வேலியிட்ட அடைப்புகள்(சிறைகளை) அமைத்திருந்தார்கள் என்று தெரிகிறது. அப்படிச் செல்வோர் உணவுக்கு என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை. இவர்கள் ஊர்களை அடுத்த இது போன்ற அடைப்புகளிலேயே தங்கிச் செல்வதால் அவ் வூர்களிலுள்ள மக்களில் செல்வர்கள் அல்லது அறவுணர்வுடையோர் விருந்தினர் எனப்படும் புதியவர்க்கு உணவூட்டினர் எனக் கொள்வது தவிர வேறெதுவும் தோன்றவில்லை. இந்த அடைப்புகளையும் ஊராரே உருவாக்கியிருக்க வேண்டும். இவற்றில் ஏற்பட்ட சிக்கல்களாலேயே பின்னாட்களில் சத்திரங்கள் எனும் அமைப்பு அரசின் உதவியுடன் உருவாகியிருக்கும் என்று தோன்றுகிறது.

7.   கோவலன் வழித் துன்பத்தால் மட்டுமின்றி மனைவியையும் அழைத்துக்கொண்டு காட்டுவழி செல்ல நேர்ந்த மனத் துன்பத்தாலும் அடையாளம் தெரியாமல் வாடிப்போயிருந்ததைக் கோசிகமாணி மூலமாக நமக்கு அடிகளார் புலப்படுத்துகிறார்.

8.   கண்ணகியோடு கோவலன் புகாரிலிருந்து வெளியேறியதால் புகாரில் அவர்களின் பெற்றோர், சுற்றத்தார், ஊர் மக்கள் நடுவில் உருவான உணர்வுகளையும் விளைவுகளையும் வேறோர் களத்தின் பின்னணியில் முன்னிகழ்வாகக் காட்டும் உத்தியை கோசிகமாணியைப் பயன்படுத்தி நிகழ்த்துகிறார் அடிகள். அத்துடன் அவனுக்குத் தன் ஆற்றாமையை வெளிப்படுத்தி தான் குற்றமற்றவள் என்பதைப் புரியவைக்க வேண்டும் என்ற உந்துதலால் அவள் அவனைத் தேடிக் கண்டுபிடித்து உண்மையைத் தெரிவிக்க கோசிகமாணியைப் பணிக்கும் அவளுடைய பாங்கையும் நமக்கு புலப்படுத்துகிறார்.

9.                                 உடனுறை காலத் துரைத்தநெய் வாசம்
                                    குறுநெறிக் கூந்தல் மண்பொறி உணர்த்திக்
காட்டிய தாதலிற் கைவிட லீயான்
என்ற வரிகள் நெஞ்சை உருக வைப்பவையாகும்.

9.   மாதவி தனக்கு வரைந்த ஓலையின் சொல்லமைப்பே தன் பெற்றோருக்குத் தான் வரையும் மடலாகத்தக்கது எனும் கூற்று மேலே கனாத்திறமுரைத்த காதையில்
சலம்புணர் கொள்கைச் சலதியொ டாடிக்
குலந்தரு வான்பொருட் குன்றந் தொலைந்த
இலம்பாடு நாணுத் தருமெனக் கூறியதில்         
      சலம் என்பதற்கு வஞ்சம், நீர் என இரு பொருள்களும் சலதி என்பதற்கு பொய்யானவள், கப்பல் என்றும்
சிலம்பு முதலாகச் சென்ற கலனோ
டுலந்தபொரு ளீட்டுத லுற்றேன் என்று
கலம் என்பதற்கு அணிலன்கள், கப்பல் என்றும் இரு பொருட்கள் தோன்றுமாறும் இரட்டுற மொழிந்த அடிகளார் இங்கும் சிலேடை எனும் இந்த உத்தியைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார்.
ற்பயந் தோற்கிம் மண்ணுடை முடங்கல்
பொற்புடைத் தாகப் பொருளுரை பொருந்தியது
எவ்வாறு என்பதனை ‘குரவீர் நும் திருவடியை வணங்கினேன், தெளிவில்லாத என் புன்சொற்களை ஏற்றருள வேண்டும்; நுமக்குச் செய்யும் பணிவிடையை ஒழித்ததுமின்றி, இக் கற்புடையாளோடு நும்மை விட்டு நீங்கி இரவின்கண் கழிதல் காரணமாக உண்டாய என் பிழையினை உணராது அப் பிரிவால் ஏற்படும் நும் உள்ளத் தளர்ச்சியினைப் போக்குதல் வேண்டும்; குற்றம் தீர்ந்த அறிவினையுடைய பெரியோய் போற்றி’ என்று விளக்குகிறார் வேங்கடசாமியார்.

10.                                ஆடியல் கொள்கை அந்தரி கோலம்
பாடும் பாணரிற் பாங்குறச் சேர்ந்து
என்ற வரிகளில் ஆடு எனபதற்கு வெற்றி என்று பொருள் கொண்டு வெற்றி பொருந்திய கொள்கையையுடைய துர்க்கையது போர்க் கோலத்தைப் பாடும் என்று பொருள் கூறியிருக்கிறார் வேங்கடசாமியார் அவர்கள். பாணர் என்பதற்கு, ‘முற்காலத்து இவர்கள் அரசர்களைப் பாடிப் பரிசு பெற்று வாழ்ந்த அறிவுடையார். தற்காலத்திலும் சிலர் கூத்து முதலிய ஆடி சீவிக்கின்றனர்’ என்கிறது அபிதான சிந்தாமணி(பாணர் – 4). விறலி என்ற சொல்லுக்கு ‘எண்வகைச் சுவையும் மனத்தின்கண் பட்ட குறிப்புகளும் புறத்துப் போந்து புலப்பட ஆடுதல் விறலாதலின் அதனையாடுபவள் விறலி எனப்பட்டாள்’ எனக் கூறும் அந் நூல் விறலி கேட்பத் தோழி கூறல், விறலி தோழிக்கு விளம்பல், விறலியாற்றுப்படை ஆகிய சொற்களை விளக்கும் போது விறலியைப் பாணிச்சி என்றே குறிக்கிறது. எனவே இங்கு ஆடியல் கொள்கை அந்தரி கோலம் என்பதற்கு பாணன் பாட அந்தரியாகிய கொற்றவை கோலம் கொண்ட பாணிச்சியாகிய விறலி ஆடும் பாணர் என்ற பொருளே பொருத்தமாகும். இன்று பாணர்களில் பலர் தையல் தொழில் செய்துவந்தாலும் கோயில்கள் சார்ந்து கோயில்கள் கொடுத்த சொத்துக்களின் வருவாயைக் கைக்கொண்டு வாழ்பவர்களை நான் பார்த்துள்ளேன். இவர்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை இருப்பதாலோ என்னவோ தமிழகத்தில் கணிசமாக இருக்கும் இவர்கள் ஒன்றிணைந்து தங்கள் வாழ்வுரிமைக்காகப் போராடவில்லை என்று தோன்றுகிறது. பணக்காரர்களாகிவிட்ட பலர் தங்களை முதலியார் போன்ற உயர் சாதிகளாகக் காட்டிப் பதுங்கிக்கொள்கிறார்கள்.

11.  அரங்கேற்றுக் காதையில் யாழாசிரியனைப் பற்றி விளக்கும் போது பண் என்ற பொருளிலேயே யாழ் என்ற சொல்லைக் கையாண்ட ஆசிரியர் வேனிற் காதையில் யாழின் உருவாக்கம், உறுப்புகள், அமர்ந்து இசைக்கும் முறை ஆகியவை பற்றியும் பேசுகிறார். இங்கோ, பேரியாழ், மகரயாழ், சகோடயாழ் என்பவற்றோடு நால்வகை யாழ் வகைகளில் கடைசியான செங்கோட்டியாழைக் குறிப்பிடுகிறார். இதை விளக்க வந்த வேங்கடசாமியார், அதன் உறுப்புகள் ஆறென்று கூறி செங்கோட்டியாழே செவ்விதிற் றெரியின், அறுவகை யுறுப்பிற் றாகு மென்ப, அவைதாம், கோடே திவவே யொற்றே……தந்திரிகரமே நரம்போ டாறே என்ற பாடலையும் காட்டுகிறார். இவற்றில் திவவு என்பது ‘நரம்புகளை வலிபெறக்கட்டும் வார்க்கட்டு’ என்றும் ஒற்று என்பதற்கு ‘செங்கோட்டி யாழின் பண் மொழி நரம்புகள் நான்கொழிய ஏனை மூன்றும் தாளமும் சுருதியும் கூட்டுவனவாகலின் அவையே ஒற்றும் பற்றும் எனவாயின; ஒற்றொன்றே கொள்ளலுமாம்’ என்றும் தந்திரிகரம் என்பதற்கு, ‘நரம்பு துவக்குவதற்கு தகைப்பொழிய(தடையின்றியிருக்க) இரு சாண் நால்விரல் நீளமாகக் குறுக்கிடத்துக்குச் சேர்த்தும் ஐம்பத்தோருறுப்பு என்பர். இக் காலத்து இது மெட்டு எனப்படும்’ என்கிறார். ஒற்றுக்கு விளக்கம் கூறும் முன்பு ‘ஒற்றுறுப்பு – நரம்பினும் பத்தரினும் தாக்குவதோர் கருவி என்பர்’ என்றும் கூறுகிறார். இதனை வைத்துப் பார்க்கும் போது ஒற்று என்பது மூன்று நரம்புகளுடன் இன்றைய வயலின் அல்லது பிடில் எனப்படும் இசைக் கருவியில் பயன்படும் வில் போன்ற ஓர் உறுப்பாக இது இருக்கலாமோ என்று தோன்றுகிறது. குச்சி, சிரட்டை, மெல்லிய கம்பி ஆகியவற்றால் செய்து ஒற்றைக் கம்பியைக் கொண்ட வில் போன்ற கருவியால் ஊர்ப் புறங்களில் சிறுவர்கள் இசைக்கும் கருவி இதன் ஓர் எளிய முந்தியல் வடிவமாக இருக்கலாம். அதே வேளையில் செங்கோட்டியாழுக்கு உறுப்புகளைக் கூறுவதாக வேங்கடசாமியார் தந்துள்ள பாடலில் பத்தர் எனப்படும் குடம் போன்ற யாழுறுப்புக் கூறப்படவில்லை. எனவே இது சரோட் என்னும் இந்துத்தானி இசைக்கருவியைப் போன்று நரம்புகளை மீட்டும் ஒற்று என்ற புறக்கருவியை உடையதாய் இருக்க வேண்டும்.

      அம்மண ஒற்றர்கள் இங்கு மூவேந்தர்களுக்கும் மக்களுக்கும், குறிப்பாக குறிஞ்சி – முல்லை மக்களுக்கும் இருந்த பகை முரண்பாட்டைப் பயன்படுத்தி தமிழகத்தின் பருப்பொருள் பண்பாடுகள் அனைத்தையும் அழித்துவிட பிற்காலத்தில் தேவை கருதி மொழி மாற்றம் பெற்று தமிழகத்துக்கு வெளியே நிலவியவற்றை இங்கு மீண்டும் புகுத்தியதை வைத்து அவ்வாறு புகுந்தவற்றை ஆரியர்களின் பண்பாடுகளென்று இங்குள்ள தமிழார்வலர்கள் எனப்படுவோர் வசை கூறி அவற்றைப் புறக்கணிக்கின்றனர். உண்மையில் இன்று வழக்கிலுள்ள வீணைதான் தமிழர்களின் பேரியாழ் என்பதில் ஐயமில்லை. அது போல் மகரம், சகோடம், செங்கோட்டி என்பவற்றையும் உலகின் பிற பகுதிகளிலும் இந்தியாவிலும் உள்ள நரம்புக் கருவிகளை ஒப்பிட்டு இசைத்துறை ஆய்வர்கள் மீட்டெடுக்க வேண்டும்.

      அரங்கேற்றுக் காதையில் பாலையாழுக்கு 5 திறங்கள் என்ற செய்தியைத் தந்த வேங்கடசாமியார் அவை அராகம், நேர்திறம், உறுப்பு, குறுங்கலி, ஆசான் என்ற செய்தியைத் தருகிறார். அவற்றுள் ஆசான் என்னும் திறத்தின் அகநிலை காந்தாரமும் புறநிலை சிகண்டியும் அருகியல் தேசாக்கிரியும் பெருகியல் சுருதிகாந்தரமும் என்பதுடன் இறுதியில் கூறப்பட்டதன் பெயரைச் சுத்த காந்தாரம் என்றும் கூறுவர் என்கிறார். ஆக முன் சொன்னவற்றின் உறுப்புகளான, ஆனால் பெயர் குறிப்படப்படாதவற்றில் ஒன்றன் பெயரைக் குறிப்பிட்டு இங்கும் இசை பற்றிய தன் பாடநூல் பணியைத் தொடர்ந்துள்ளார் அடிகளார்.

      செங்கோட்டியாழ் பற்றி அறிந்துகொள்வதற்காக இணையத்தில் மேய்ந்த போது 2010 நவம்பரில் இட்ட செயமோகனின் தமிழிசை : காழ்ப்பே வரலாறாக…. என்ற இடுகை கண்ணில் பட்டது. தமிழார்வலர்கள் என்போர் எல்லாத் துறைகளிலும் போலவே தமிழிசையைப் பொறுத்தும் வெற்று மேடை நடிப்பிலேயே ஈடுபட்டு வந்துள்ளனர் என்றிருக்கிறார். அண்ணாமலையரசர் நிறுவிய தமிழிசைச் சங்க இசை நிகழ்ச்சிகளில் கூட இவர்கள் ஆரியர்கள் என்று தூற்றும் பார்ப்பனர்களே பாட வேண்டியுள்ளது மட்டுமல்ல அந்த இசை நிகழ்ச்சிகளுக்குச் சென்று சுவைத்து மகிழ்வோரும் பார்ப்பனர்களாகவே இருக்கின்றனர் என்ற உண்மையைப் போட்டு உடைத்துள்ளார். அதனால் மேடை ஏறினாலே “ஆரியர்”களைத் திட்டுவதையே கடமையாகக் கொண்டுள்ள “தமிழார்வலர்களின்” உரைகளை அண்மைக் காலங்களில் சங்கப் பொறுப்பாளர்கள் தவிர்க்கிறார்கள் என்றும் கூறுகிறார். அத்துடன் இந்தத் “தமிழார்வலர்கள்” தங்கள் பெண்கள் மேடையேறி பாடுவதோ ஆடுவதோ இழுக்கு என்று கருதி தங்கள் பெண்களுக்கு இசை, நாட்டியப் பயிற்சிகளே அளிப்பதில்லை என்கிறார். இதில் சிவனிய வெள்ளாளர்களைக் குறிப்பிட்டுக் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், பார்ப்பனரல்லா பிற சாதியினர் நிலை மட்டும் என்ன?

      உ.வே.சா. அவர்களின் ஆசானான மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் இசையை வெறுப்பவர் என்று படித்துள்ளேன். சிவனிய வெள்ளாளர்கள் முன்பு அவர்கள் சார்ந்திருந்த அம்மண சமயக் கோட்பாடுகள் எதிலிருந்தும் விடுபடவில்லை என்ற உண்மையிலிருந்து அவர்களின் இசை, நாட்டியக் கலை வெறுப்புகளின் அடிப்படையைப் புரிந்துகொள்ள முடியும். தேவார, திருவாசகங்களைப் பாடும் ஓதுவார்களுக்குச் சிவனியர்களிடையில் மதிப்பில்லை என்பதால் ஓதுவார் வகுப்பைச் சேர்ந்த பாடகர் சீர்காழி கோவிந்தராசன் இயற்கையாகவே இசையில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்த தன் மகன் சிவசிதம்பரத்தை மருத்துவப் படிப்புக்கு விடுத்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார் செயமோகன்.

      அவரது இடுகைக்கு எதிர்வினையாக இடுகையிட்ட ஒருவர், இன்றைய மேடை இசை(கச்சேரி)களைச் சுவைக்க ஓரளவு இசையறிவு வேண்டும். அதற்கு வேண்டிய குடும்ப, சுற்றத்தார் சூழல் பார்ப்பனர்களுக்கே உள்ளது என்கிறார். பாடல்களை இசையுடன் பாடிக் கேட்பது வேறு நிரவல்கள், சரளி வரிசைகளை வைத்து மணிக்கணக்கில் நீட்டுவதைப் பொறுமையுடன் சுவைப்பது வேறு என்று அவர் கூறியிருந்தார். தமிழில் உள்ள, தமிழிசை மூவர், வேதநாயகர் என்ற எண்ணற்றோரின் ஆக்கங்கள் மேடையில் ஆட்சி புரிய வேண்டுமென்றால் உண்மையான தமிழார்வலர்கள் இந்த வகைப் பாட்டு உத்தியைச் சுவைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

      இவற்றையெல்லாம் படித்த பின் எனக்கு ஒன்று தோன்றியது. இந்தச் சரளி வரிசை முறையை உருவாக்கியவர்கள் பாணர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பது அது. தங்கள் இருப்பிடத்திலிருந்து ஓரூருக்கு அல்லது ஓரூரிலிருந்து இன்னோரூருக்கு நடந்து கூட்டமாகச் செல்லும் போது பொழுது இனிதாகச் செல்லவும் செல்கைக் களைப்பு தோன்றாமலிருக்கவும் இசையை நீட்டுவதற்காக அவர்கள் உருவாக்கிய ஓர் உத்தியாகத்தான் இது தோன்றுகிறது. அந்த இசை அம்மணர்களால் அழிக்கப்பட்டு பாணர்கள் தையற்காரர்களாக இழிந்துவிட்ட சூழலில் தியாகராசர் போன்றவர்களால் அது மீட்கப்பட்டுள்ளது என்று தோன்றுகிறது.

      இன்று நிறைய ஓய்வு நேரம் உள்ள பார்ப்பனர்களுக்கு இது ஒரு பொழுதுபோக்காக உள்ளது. இந்த இசையைச் சுவைப்பதாகக் காட்டிக்கொள்வது குமுகப் பெருமை என்பவர்கள் இவர்களில் பெரும்பான்மையர் என்பதும் எமது கருத்து.
       
12.  அடுத்து மதுரை மாநகர் இருக்கும் தொலைவு பற்றிய கேள்விக்கு விடையாக, அது அண்மையில்தான் உள்ளது என்பதற்குச் சான்றாக கூறும் பாணர் கூற்றாக மதுரையிலிருந்து வீசும் காற்றில் கலந்துள்ள பல்வேறு வாசனைகளின் பட்டியல் ஒன்றினைத் தருகிறார் அடிகளார். அவை:
            1.   அகில் சாந்து,                       8.   மாதவி(குருக்கத்தி),              
            2.   குங்குமப் பூங்குழம்பு,             9.   மல்லிகை,  
            3.   புனுகுக் குழம்பு,                    10.  முல்லை,
            4.   சந்தனச் சாந்து,                    11.  அடுக்களைப் புகை,
            5.   கத்தூரிச் சாந்து,                   12. அங்காடி வீதியில் அப்பம் சுடும் புகை,
            6.   கழுநீர் மலர்,                        13.  மேல் மாடங்களில் கிளம்பும் அகில் புகை,
            7.   சண்பக மலர்,                       14.  வேள்விச்சாலைகளின் ஆகுதிப் புகை.
      பொதிகைத் தென்றல் போன்று மதுரைத் தென்றல் என்ற ஒன்றைப் புகுத்தியுள்ள அடிகளாரின் கற்பனை சுவையானது.     
           
13.  இரவில் நடந்து விடியும் வேளையில் மதுரையின் எல்லை வந்தடைந்த கவுந்தியடிகள், கோவலன், கண்ணகி குழுவினரை வரவேற்ற பல்வேறு விடிகாலைப்பொழுதின் ஓசைகளின் ஒரு பட்டியலைத் தருகிறார் அடிகளார்.
            1.   சிவன் கோயிலிலும் மன்னன் கோயிலிலும் காலை முரசங்களின் இனிய ஓசைகள்,
            2.   வேதியப் பார்ப்பனரின் வேத முழக்கங்கள்,
            3.   தவம் மேற்கொள்ளும் முனிவர்கள் ஓதும் மந்திர ஓசைகள்,
            4.   போர்களில் வீரம் காட்டியமைக்காக அரசன் கொடுத்த சிறப்பு முழவுகளை வாள்வீரர்கள் முழக்கும் ஓசைகள்,
            5.   போரில் எதிரிகளிடம் கைப்பற்றிய யானைகளின் பிளிறல்கள்,
            6.   காட்டிலிருந்து பிடித்து வந்த முரட்டு யானைகளின் முழக்கங்கள்,
            7.   பந்திகளில் நிற்கும் குதிரைகள் கனைக்கும் ஓசை,
            8.   போர்க் களம் பாடுவோராகிய பொருநரின் கிணைப்பறையோடியைந்த இசைப்பாடலும்
      என்ற இந்த ஓசைகளின் மழையில் நனைந்து தமது நடைத் துன்பமும் காட்டுவழியில் துரத்திய அச்சங்களும் முடிவுக்கு வந்ததாலும் நாடி வந்த நலன்கள் கைகூடப்போவது பற்றிய எதிர்பார்ப்பிலும் உருவான மகிழ்ச்சியில் அவர்கள் திளைத்ததை விளக்கும் இந்தச் சூழலை அடிகள் அவருக்கே உரிய சிறப்போடு உருவாக்கியுள்ளேர்.

14.  அடுத்து அவர்களுக்கு எதிர்ப்படும் வையையாற்றை அழகிய ஓர் இளம் பெண்ணாகக் காட்டும் அரிய காட்சியைப் பார்க்கிறோம். முதலில், ஆற்றின் கரையில் பூ விரித்து மணம் பரப்பும் மர வகைகள்:
      1.   குரா,                                         7.   மஞ்சாடி,
      2.   மகிழம்,                                      8.   மருத மரம்,
      3.   கோங்கு,                                   9.   உச்சிச் செந்தில்,
      4.   வேங்கை,                                  10.  செருந்தி,
      5.   வெண் கடம்பு,                           11.  செண்பக மரம்,
      6.   சுரபுன்னை,                               12.  பாதிரி.
      அவற்றினூடாக பின்னிப்பிணைந்து கிடக்கும் பல்வேறு மலர்க்கொடிகள்:
      1.   குருக்கத்தி,                                6.   வெட்பாலை,
      2.   செம்முல்லை,                             7.   மூங்கில்,
      3.   முசுட்டை,                                  8.   சிவதை,
      4.   மோசி மல்லிகை,                        9.   குட்டிப் பிடவம்,
      5.   வெள்ளை நறுந்தாளி,                  10. இருவாச்சி.
      இவை இரண்டும் கலந்து மயங்கிய கரைகளை அல்குலாகவும் மரங்களையும் மலர்க்கொடிகளையும் மேகலையாகவும் அடிப்பக்கம் அகன்று மரங்களாலும் பூங்கொடிகளாலும் போர்த்தப்பட்டு உயர்ந்து நிற்கும் ஆற்றிடைக்குறை மேடுகளை முலைகளாகவும் கரையிலிருந்து உதிர்ந்த முள்முருங்கை மலர்களைச் செவ்விதழ்களாகவும் அருவி நீரோடு வந்த முல்லை மலர்களை பற்களாகவும் குறுக்கும் நெடுக்கும் பாய்ந்தோடும் பெரிய கயல் மீன்களைக் கண்களாகவும் மலர்கள் நீங்காத கருமணல் பரப்பைக் கூந்தலாகவும் அழகுறக் காட்டுகிறார். அத்துடன் கோவலன் கண்ணகிக்கும் கவுந்தியடிகளுக்கும் வரவிருக்கும் துயரம் குறித்து கனாத்திறமுரைத்த காதையில் மிக மென்மையாகவும் நாடுகாண் காதையில் அம்மணத் துறவிகள் மூலம் சற்று அழுத்தமாகவும் உணர்த்திய அடிகளார் வையை ஆறு கண்ணகிக்கு நேர இருப்பதறிந்து கண்ணீராகிய தன் தண்ணீரைப் பூக்களாகிய போர்வை கொண்டு மறைத்ததாகக் கூறுகிறார். அவ்வாறு மலர்கள் நீர்ப் பரப்பு முழுவதையும் மறைத்ததால் இது புனல் ஆறு அன்று பூம்புனல் ஆறு என்று மகிழ்ந்து புகழ்ந்து வணங்கியதைக் கூறி வையை ஆற்றில் மிதந்துவரும் பூக்களின் பெருக்கத்தை உறுதிப்படுத்துகிறார்.

      வடக்கிலிருந்து வந்த மூவரும் ஆற்றைக் கடந்து நகருக்குள் செல்வதற்கு எப்போதும் மக்கள் நெருக்கமாக இருக்கும், குதிரை முகம், யானை முகம், அரிமா முகம் கொண்ட ஓடங்கள் இருக்கும் பெருந்துறைக்குச் செல்லாது நடமாட்டம் குறைந்த பக்கத்தில் கூட்டம் குறைந்த சிறு துறையிலிருந்து செல்லும் கட்டுமரத்தில் சென்றனர் என்று கூறுவதன் முலம் அவர்கள் மக்களின் கண்களில் படுவதைத் தவிர்த்தனர் என்பதைக் காட்டுகிறார். அத்துடன் ஆற்றைக் கடக்க அன்றிருந்த வசதிகளையும் நமக்குக் காட்டுகிறார்.

      நகரில் பல்வேறு தெய்வங்கள் இருப்பதால் நகரை வலமாகச் சுற்றிவருவதுதான் நன்றென்று காவற்காடு சூழ்ந்த அகழியைச் சுற்றிச் சென்ற போது அகழியில் பூத்திருந்த குவளையும் ஆம்பலும் தாமரையும் கோவலனும் தேவியும் அடைய இருக்கும் துயர முடிவினை ஐயத்திற்கிடமின்றி அறிந்தன போல் வண்டுகள் பாடும் பண்ணின் தன்மையால் கள்ளாகிய கண்ணீர் பெருக கால நடுங்கின என்று கூறி அவலச் சுவையுடன் கள் + நீர் = கண்ணீர் என்று இரட்டுற மொழிந்து இலக்கியச் சுவையையும் கலந்தூட்டுகிறார்.
      அடுத்து எதிரிகளின் தாக்குதல்களை முறியடித்ததற்கு அடையாளமாக கோட்டை மீது நிமிர்ந்து நிற்கும் நெடிய கொடிகள் இங்கே வராதீர்கள் என்று மூவரையும் கையசைத்து எச்சரிப்பவை போல் அசைவதாகவும் கூறி அவலச் சுவையுடன் படிப்போரின் ஆவலையும் மிகுக்கிறார் அடிகள்.

      அறம்புரி மாந்தர் அன்றிச் சாரா புறஞ்சிறை மூதூர் என்ற விளக்கத்தின் மூலம் முன்பு புகார், உறையூர் போன்ற நகரங்களுக்கு வெளிப் புறத்தில் இது போன்ற வளம் மிக்க செழுமையான நிலங்களைக் கைப்பற்றி சமயப் பெருமக்கள் தங்கள் இருப்பிடங்களாக வைத்திருந்தனர் என்பது தெரிகிறது. தமிழகத்தில் பல பேரூர்களின் விளிம்பில் சிந்தாமணி என்ற பெயரிள்ள ஊர்ப் பகுதிகள் உள்ளன. இந்த ஊர்கள் அக்காலத்தில் கல்வி புகட்டும் நடுவங்களாக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. சிந்தாதேவி என்பது கலைமகளைக் குறிப்பிடும் ஒரு சொல்லாகும்.

      ஆக கவுந்தியடிகள் உடன் வர கோவலனும் மதுரையின் புறநகர்ப் பகுதியை அடைந்துவிட்டனர். 
                                                                                        
              
     
     
     
     
     
     
     
     
       
     
     

                                                 
     
                            

  
                                                                       

  
   

    




                         


[1] பண்டை ஆசிய – ஐரோப்பிய எல்லையில் வாழ்ந்த பெண் போர் வீரர்களான அமேசானியர்கள் வில்லின் நாணை இழுத்துக் குறி பார்ப்பதற்கு இடையூறாக இருக்கிறது என்பதால் தங்கள் தங்கள் வலது மார்பகங்களை அகற்றி விடுவார்கள் என்று எரோடோட்டர் குறித்துள்ளார்..
[2] சிறு செடிகளில் அல்லது மரக் கன்றுகளில் இருந்து தோன்றும் கிளைகளை புடைப்பு(பொடப்பு) எனக் குறிப்பிடுவது குமரி மாவட்ட வழக்கு.

0 மறுமொழிகள்: