17.8.07

எங்கே போகிறோம்?

தினமணி ஆசிரியர் திரு மாலன் அவர்களுக்கு மடல்.

நாள்: 17-07-1994.

அன்புள்ள தினமணி ஆசிரியர் திரு. மாலன் அவர்களுக்கு வணக்கம்.

இந்தியா டுடேவில் தங்கள் எழுத்து நடையைப் பார்த்தவுடனே ஆங்கில இதழியலாளர்கள் கையாளும் மிடுக்கான ஆங்கில நடைக்கு இணையாகக் தமிழில் எழுதும் தங்களின் திறம் கண்டு மகிழ்ந்துள்ளேன். ′சன்னலுக்கு வெளியே′ நீங்கள் கண்டு சிந்தித்தவற்றை அறிந்து புதிய உலகம்(தமிழகம்) படைக்கும் தங்கள் வேட்கையை நினைந்து இறும்பூது எய்தியுள்ளேன். தொடர்ச்சியான மேம்பட்ட இயற்பாடுகளை அமெரிக்கா சென்றிருந்த தங்களின் வருகைக்குப் பின் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால் ′′எங்கே போகிறோம்′′ என்ற தொடரைக் தொடங்கி திரு. இராமதாசு அவர்களைப் பேட்டி கண்டுள்ளமை நீங்கள் எங்கே போகீறீர்கள் என்பதைச் சுட்டி எனக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எந்தவொரு நிறுவனத்தையும், அது ஒரு சிறிய அரசு அலுவலகமாயினும் முதன்முதல் தொடங்கி வைப்பவரின் தன்மையில்தான் அதன் நடை அமையும். அத்தன்மையில் மாற்றங்களை எளிதான நடவடிக்கைகளால் நிகழ்த்த முடியாது. ′′புரட்சிகள்′′ தேவைப்படும்.

″விடுதலை″ பெற்ற இந்தியாவின் போக்கின் திசையை வகுத்த நேருவின் ′′பேரொளி′′யின் பின்னனியில் இருந்த அவரது இருள் மிகுந்த பகுதியின் தொடர்ச்சியில் மிக முற்றிய ஒரு பேராளர் இராமதாசு. ஒருவேளை இந்தத் திசைவழியில் இறுதிக் கட்டத்தைச் சேர்ந்தவர்களில் இவரும் ஒருவராக இருக்கக் கூடும்.

மக்களில் சிந்திக்கவும் சினக்கவும் கவலைப்படவும் முடிந்தவர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் வகையில்தான் அவரது விடைகள் அமைந்திருந்தன. நீங்கள் வெளியிடப்போகும் அடுத்த சந்திப்புகளிலும் இதுபோன்ற விடைகள் தாம் கிடைக்கப்போகின்றன. நாளொரு நிலைப்பாடு பொழுதொரு கூட்டணி என்று பொதுமைக் கட்சியினர் தொடங்கிவைத்த நாடகத்தில் உச்ச கட்டத்தை நீங்கள் முதல் காட்சியாகக் காட்டியுள்ளீர்கள் அவ்வளவு தான்.
வன்னியர்களின் வெறிபிடித்த வன்முறை எனும் புகைமண்டலத்திலிருந்து தோன்றிய தேவன் தான் இராமதாசு. தமிழகத்தில் நயன்மைக் கட்சியாலும் (இது சரிதானா) இந்தியாவின் அம்பேத்காரின் போராட்டங்களாலும் சிறிது தலைநிமிரத் தொடங்கியிருக்கும் தாழ்த்தப்பட்டோர் மீது ஏற்பட்ட வன்மத்தின் விளைவாக அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களுடன் பொதுச் சொத்துகளை கண்மூடித்தனமான அழித்தலுடன் அவரது பொதுவாழ்வின் தொடக்கம் அமைந்தது.

அமெரிக்காவில் மருத்துவம் முடிந்து பேச இயலாத நிலையில் திரும்பி வந்த மா.கோ.இரா. ஒதுக்கீட்டில் பங்கு கேட்டு நிற்போரை அழைத்து அவர்களைப் பேச வைத்து அவர்கள் தந்த புள்ளிக் கணக்கை வைத்தே தமிழகத்தின் மக்கள் தொகை 11½ கோடி என்ற அவர்களது கோமாளிக் கணக்கை வெளிப்படுத்தி அவர்கள் முகத்தில் காறி உமிழ்ந்தார்.

தேர்தல் ஆதாயத்துக்காகத் தமிழகச் சமுதாயத்தை ஒவ்வொரு நூற்றாண்டாகப் பின்னோக்கி நகர்த்தும் ஒவ்வொரு நகர்வையும் முன்னின்று நடத்தி ஆதாயம் கண்ட கருணாநிதி காலத்தில் இராமதாசு ஏதோ பலனும் கண்டார்.

சிக்கல் தீர்ந்து போனால் அடுத்து என்ன செய்வது? அரசியல் கட்சி தொடங்கினார். ஒவ்வொரு சாதியிலும் உள்ள ′′கட்டப் பஞ்சாயத்துத்′′ தலைவர்களை அமைப்பாளர்களாகக் கொண்டார். (கட்டப் பஞ்சாயத்தென்றால் என்னவென்று தங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். சச்சரவுகள் வரும் போது வலியோர் பக்கம் நின்று கொண்டு எளியோரை மிரட்டிப் பணம் பறிப்பது கட்டப் பஞ்சாயத்து). எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை.

″தீவிர″ இடதுகளின் பேச்சைக் கேட்டு தன் தீர்மானிப்பு(சுய நிர்ணய) உரிமைத் தீர்மானம் இயற்றி மானமிழந்தார். [1] தீவிர இடதுகள் என்பவர்கள் அப்பாவிகளை அடுத்து நம்ப வைத்து அழித்துத் தாம் மட்டும் தப்பித்துக் கொள்ளும் கயவர்கள் அல்லது தாமே அழிந்து போகும் முட்டாள்கள்.

அடுத்த கட்டமாக எந்தத் தாழ்த்தப்பட்டவர்களைத் தாக்கிப் பொதுவாழ்வைத் தொடங்கினாரோ அவர்களுடன் பிற்படுத்தப்பட்டோரை இணைத்து அரசியல் நடத்தத் தொடங்கினார். இருப்பினும் வன்னியர்களுக்கு வெளியே செல்வாக்கு எதுவும் உருவாகிவிடவில்லை. பாராளுமன்ற முறையின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான மக்கள் முன் அறிமுகம் என்ற வகையில் அவருக்கு முன்னேற்றம் தான். திரைப்பட நடிகர்கள் அரசியல் களத்தில் எளிதில் வெற்றி பெறுவதில் அவர்களுக்கு மக்கள் மத்தியில் எளிதில் கிடைக்கும் இந்த அறிமுகம் மிகப்பெரும் பங்காற்றுகிறது. இதை நாம் பிறழ உணர்ந்து ′′சினிமா மாயை′′ என்கிறோம்.

திரைப்பட நடிகர்களை மிஞ்சித் தன்னால் அரசியலில் வெற்றி பெற முடியாது என்பது அவருக்குத் தெரியும். எனவே முதல் கட்டமாக தேர்தல்களில் தன் கட்சி போட்டியிடப்போவதாக அறிவித்துப் பின்வாங்குவதன் மூலம் காலத்தை ஓட்டினார். அது நீடித்தால் கட்சி கலைந்து போகும். எனவே அடுத்த வளர்ச்சி நிலை ஒரு கட்சிக்கு உதவியாக இன்னொரு கட்சியின் வாக்குகளை உடைக்கத் தேர்தலில் போட்டியிடுவது. ′′பெயர்′′ பரவிவிட்டது. எனவே இப்போது கூட்டணிக் கட்டம். அடுத்தது என்னவென்று பார்ப்போம். நாட்டின் அடிப்படைச் சிக்கல்கள் பற்றிய புரிதலோ தெளிந்த சிந்தனையோ இல்லாதவர். ஆனால் இருக்கும் அரசியல் சூழ்நிலைகளில் நெளிவு சூழிவுகளுடன் நீந்திச் செல்லத் தெரிந்த வித்தகர்.

40 வயது வரை திராவிட அரசியலை நம்பிக்கையோடு பார்த்து ஏமாந்து புதிதாகத் தோன்றும் இயக்கங்களைத் தொலைவில் நின்று நோட்டமிட்டு அடுத்து சிலவற்றினுள் நுழைந்து வெளியேறி இறுதியில் இராமதாசின் கட்சியின் வாசலினுள் ஒரு காலை வைத்துப் பின்வாங்கி விட்டவன் என்ற தகுதியில் இதனைக் கூறுகிறேன்.

தாங்கள் உண்மையாக குமுகக் கவலைகளுடன் தங்கள் இதழியல் பணியில் ஈடுபட்டுள்ளீர்கள் என்ற நம்பிக்கையில்தான் இக்கருத்துக்களைக் கூறுகிறேன். நம் அரசியல்வாதிகளின் பேட்டிகளை வெளியிடுவதென்பது பொய்யென்றும் பாசாங்கென்றும் அனைவரும் அறிந்தவற்றையே மீண்டும் மீண்டும் மக்கள் முன் வைத்து அவர்களது எரிச்சலைத் தூண்டுவதாகும். மாறாகத் தாங்கள் ஒன்று செய்யலாம்.

எடுத்துக்காட்டாக என் கருத்தொன்றை எடுத்துக் கொள்ளுங்கள். மக்களாட்சி என்ற பெயரில் ஐரோப்பியர்கள் உருவாக்கியுள்ள பாராளுமன்ற முறை உண்மையில் ஒருசிலராட்சி அல்லது குழுவினராட்சி(அலிகார்க்கி)யே. 19 ஆம் நூற்றாண்டில் முற்றிப் போன தொழிற்புரட்சியின் முதன்மை முரண்பாடான முதலாளி - தொழிலாளி முரண்பாட்டின் பாதிப்பால் இக்குழுவாட்சிக்கு மாற்றாகப் பாட்டாளிய முற்றதிகாரத்தை மார்க்சும் ஏங்கெல்சும் முன்வைத்தனர். பல கட்சி வாக்களிப்பு முறை என்ற மாயப் போர்வையைப் போர்த்திக் கொண்ட பாராளுமன்ற மக்களாட்சி நீண்ட நாள் தாக்குப்பிடித்து வருகிறது. ஆனால் பாட்டாளிய சர்வாதிகாரமோ குழுவினராட்சியின் அம்மண வடிவம். ஆதலால் எழுபதே ஆண்டுகளில் நொறுங்கிப் போய்விட்டது. அன்று தொழிற்புரட்சியின் மூலம் உலகை ஆண்ட ஐரோப்பிய நாடுகளில் மட்டும் நிலவி தம் வரம்பு மீறிய செழிப்பால் பெரும் நெருக்கடியைச் சந்திக்காமல் தப்பிவிட்ட பாராளுமன்ற மக்களாட்சி இன்று உலகின் பெருபான்மை மக்களின் பரந்துபட்ட பட்டறிவின் அடிப்படையில் உண்மையான ஒரு மக்களாட்சியை நோக்கி நம் சிந்தனையைத் திருப்ப வேண்டியுள்ளது. இதைப் பற்றி திட்டவட்டமான எண்ணங்கள் உள்ளன. அதை இன்னொரு வாய்ப்பில் தங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நம் நாடு வரலாற்று வழிப்பட்ட காரணங்களால் மேன்மேலும் இருளடைந்து கொண்டிருந்த நிலையில் முற்றிலும் தன்னலத்துக்காக வெள்ளையர்கள் நம்மைத் தட்டியெழுப்பி ஓரளவு வெளிச்சத்தைத் தந்தார்கள். அவர்களது பொருளியல் வளர்ச்சிக் கோட்பாடுகள் அவர்களுக்காகவே உருவானவை. அவை நமக்கு எதிரானவையாகவே இருக்கும். அதேநேரத்தில் அவர்கள் விரும்பாமலே நாம் எய்திய குமுக மாற்றங்கள் நமக்கு வழிகாட்டத் தக்கவை என்பது என் கருத்து. அவர்களது அரசியல், பொருளியல் நலன்களும் நம் அரசியல், பொருளியல் நலன்களும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்றாலும் பொருளியலிலும் வாழ்வியலிலும் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களின் பட்டறிவுகள் எனும் வெளிச்சத்தைத் துணையாகக் கொண்டு 19ஆம் நூற்றாண்டின் சப்பானிய மீட்சித் தலைவர்களின் உணர்வோடு செயற்பட்டால் மேலையரை நாம் மிஞ்சுவதில் தடையேதுமிருக்கப் போவதில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் என்று நான் சொல்வதன் பொருள் இன்றைய கட்டத்தில் அவர்களுடைய நிலையை நம்முடைய இன்றைய கட்டத்துக்கு வழிகாட்டியாகக் கொள்ளக் கூடாது. நம்முடைய கட்டம் ′′வாக்கப்பட்ட பூமி″யில் சுசி.கணேசன் படம் பிடித்துக் காட்டி வருகிறாரே அது தான். ஐரோப்பாவில் இப்படிப்பட்ட கட்டத்தைத் தொடர்ந்து என்ன நடந்தது? அதை அவர்கள் எதிர்கொண்ட முறை என்ன? அல்லது அவர்களுக்கு ஏற்பட்ட சேதாரங்கள் என்ன? அந்தச் சேதாரங்களின் கடுமையையும் கால நீட்சியையும் குறைக்கும் முயற்சிகளுடன் அந்தக் கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்துக்குத் திட்டமிட்டு நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். (கடுமையையும் காலநீட்சியையும் குறைக்கத்தான் முடியுமே தவிர சேதாரங்களைத் தவிர்க்க முடியாது என்பது மார்க்சின் கருத்து.)

எடுத்துக்காட்டாக அமெரிக்காவிலிருந்து தாங்கள் எழுதிய ஒரு கடிதத்தை உங்களுக்கு நினைவூட்கிறேன். அமெரிக்கப் பெண்களின் ′′சமத்துவம்′′ பற்றியது, கடந்த காலத் ′′தவறைத்′′ திருத்தும் போக்கு உருவாகியுள்ளது. ஆனால் நாம்? என்று கேள்வி எழுப்பியுள்ளீர்கள். அதற்கு என் விடை என்னவென்றால் குடும்ப வாழ்வில் பெருந்துயர்ப்பட்டு முதுமை எய்திய ஒருவன் திருமணமாக வேண்டிய இளைஞனைப் பார்த்துத் திருமணம் செய்யாதே என்று கூறுவது எவ்வளவு தவறோ அதுபோல் வளர்ச்சிப் பாதையில் தூய்மையியல் கிறித்தவர்களான அமெரிக்கர்களையும் மீறி நடந்த, ஆண் - பெண் சமத்துவம் பற்றிய தெளிவான சிந்தனையுள்ளவர்கள் மகிழத்தக்க ஒரு நிலையை அடையும் வழியில் நிகழ்ந்த தவிர்க்க முடியாத சில ′′சேதாரங்களை′′க் காரணமாகக் காட்டி அந்த வளர்ச்சித் திசையே வேண்டாம் என்பது தவறு என்பது தான்.

நம் நாடு உலகில் உள்ள மக்களின் ஆற்றல் தொகுதியிலும் செல்வத்திலும், மூலவளத்திலும் முழுமையானது. ஆனால் காலங்காலமாக அதன் மீது படிந்துவிட்ட அழுக்குகளும் நேர்ந்துவிட்ட அழுகல்களும் நம்மைத் தலைநிமிரவிடாமல் செய்து வருகின்றன. அவற்றை அகற்ற நம் முழு ஆற்றலையும் உடனடியாகச் செலுத்தியாக வேண்டும். காலம் கடந்தால் பணி மிகக் கடுமையாகும்.

ஆனால் இதில் உள்ள சிக்கலே உண்மையான செல்வங்களை அழுகல்களாகவும் அழுகல்களைச் செல்வங்களாகவும் திரித்துக் காட்டும் போக்கு வெற்றி பெற்று நிற்பதுதான். அதை உடைத்தெறிய வேண்டுமென்பது என் அவா. ஆனால் அதை முழுமையாகச் செய்வதற்கு நீங்கள் எனக்கு உதவ வேண்டுமென்று விரும்பினாலும் உங்கள் ஆளுகையிலுள்ள களம் அதற்கு இடம் தராது என்பது எனக்குத் தெரியும். உங்களுக்கு இசைவிருந்தால் அந்த எல்லைக்குள் இயன்றதைச் செய்யலாம். இல்லையென்றாலும் நான் வருந்தப் போவதில்லை. வேறு களம் தேடிக் கொள்வேன். ஆனால் அந்தத் திசையில் ஒரு விவாத மேடையை உருவாக்கினால் நல்லது. நீங்கள் ஏற்கனவே உருவாக்கியுள்ள விவாதமேடை குமுக இயற்பாடு என்ற நீர் நிலையில் உருவாகும் நுரைகளான சில துறைகளையே. உண்மையான குமுக இயற்பாடு பொருளியல் வளர்ச்சியிலிருந்தே தொடங்க வேண்டும். இது உங்களுக்குச் சரியாகப்படுகிறதா?

நல்வாழ்த்துக்களுடன்,
குமரிமைந்தன்.


அடிக்குறிப்பு:

[1] நாட்டுப் பகை நடவடிக்கை என்ற குற்றச்சாட்டிலிருந்தது தன்னைக் காத்துக் கொள்ள உறவினரும் பேரவைக் கட்சிப் பெருமகனுமான வாழப்பாடி இராமமூர்த்தியின் காலில் விழுந்து தப்பினார். ஆட்சியாளர்களின் கையாட்களான ″தீவிரர்கள்″ தலை நிமிர்ந்து திரிய அப்பாவி பெருஞ்சித்திரன்தான் அடிவாங்கிச் செத்தார்.

0 மறுமொழிகள்: