31.12.17

பாழ்பட்டுக்கிடக்கும் தமிழகக் கடற்கரை - 3

முதலாளிய முறைக்கு எதிராகக் கூறப்படும் இன்னொரு குற்றச்சாட்டு நம் மரபுத் தொழில்கள் நம் மக்களுக்குப் பெருமளவில் வேலைவாய்ப்பளிக்கின்றன ; இந்த நிலையில் முதலாளிய விளைப்பு முறைக்கு மாறினால் மரபுத் தொழில்களில் ஈடுபட்டிருப்போர் அனைவரும் வேலையிழப்பர் என்பதாகும். ஆனால் நம் சிந்தனைக்கு எட்டாமல் உள்ள எத்தனையோ பணிகள் நம் நாட்டை வளமுடனும் நலமுடனும் வைத்துக்கொள்ளத் தேவைப்படுகின்றன என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். அகன்ற நேரான சாலைகளை நாடு முழுவதும் அமைத்து அவற்றை மாசுறாமல் அழகுறப் பராமரித்தல், ஏரிகள், குளங்கள், ஆறுகள், வாய்க்கால்கள் ஆகியவற்றைச் சீராகவும் துப்புரவாகவும் அழகுறவும் பராமரித்தல், இன்று சீர்படுத்த முடியாத அளவுக்குப் பழமை எய்திப் போன நகர்களையும் ஊர்களையும் கைவிட்டுப் புதிய சாலைகளுக்கேற்பப் புது நகர்களையும் ஊர்களையும் உருவாக்குதல், மின்சாரம், குடிநீர் போன்றவை தடையின்றிக் கிடைக்கும் வகையில் அவற்றின் வழங்கலை மேம்படுத்தல், நாட்டில் ஒரு காலடி நிலம் கூடத் தரிசாக இல்லாத அளவு எங்கும் காடுகளை வளர்த்தல், பயிர்களையும் மரங்களையும் மரக் கன்றுகளையும் தின்று அழித்து நாட்டைப் பாலைவனமாக்கும் ஆடுகளையும் மாடுகளையும் வளர்க்க அறிவியல் அடிப்படையில் தொழுவங்களையும் பண்ணைகளையும அமைத்தல்; நேராக இன்று சந்தைக்கு வரும் உணவுத் தவசங்களை(தானியங்களை)ப் பகுதிப் பக்குவம் செய்த நிலைக்கு மேம்படுத்தல், குறிப்பிட்ட காலங்களில் மட்டும் ஏராளமாக விளைந்து இன்று அழிவுக்குள்ளாகும் தக்காளி, வெங்காயம், முருங்கைக்காய், வாழைக்காய், மாம்பழம், மீன்வகைகள் என்ற கணக்கிலடங்கா வகைப் பொருட்களையும் பதப்படுத்தி பகுதிப் பக்குவம் செய்த நிலையில் அல்லது தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தும் வகையில் பக்குவம் செய்து வைத்தல், மக்கள் குடியிருப்புகளிலும் தொழிலகங்களிலும் சேரும் குப்பைகளிலும் நீர்க் கழிவுகளிலும் இருந்து உயிர்வளி, எரிபொருட்கள் போன்வற்றைப் பிரித்தெடுத்து மின்சாரம், எரிவளி போன்ற ஆற்றல்களை உருவாக்கல், மிஞ்சும் கழிவுகளிலிருந்து உரம் உட்பட எண்ணற்ற பொருட்களைப் பிரித்தெடுத்து மறு சுழற்சிக்குக் கொண்டுவரல், ஊர்திகள் போன்ற பயன்பாட்டுப் பொருட்களைக் குறிப்பிட்ட காலம் முடிந்த பின் கைவிட்டு அவற்றிலுள்ள மூலப் பொருட்களை மறுசுழற்சிக்குக் கொண்டு வந்து மக்கள் எப்போதும் புதுமை மாறாத கருவிகளைப் பயன்படுத்துவதும் அதனால் இயக்காற்றல்(எரிபொருள் மின்சாரம் போன்றவை) செலவைக் குறைக்க வழி கோலுதல், உலகின் எந்த நாட்டையும் விட மிகுதியாகக் கிடைக்கும் சூரிய ஒளியாற்றலை வீணாக்காமல் முழுவதும் பயன்படுத்தத் தக்க அமைப்புகளை நாடெங்கும் அமைத்தல், நீர் நிலைகளிலும் நிலத்திலும் இடையூறாக வளரும் செடி கொடிகளைத் திரட்டி எரிவளி, உரம், தீவனங்கள், மருந்துகளுக்கான மூலப் பொருட்களை உருவாக்குதல் என்று திரும்பிய பக்கமெல்லாம் எல்லையில்லாத வேலைவாய்ப்புகள் நம் கவனிப்புக்காகச் காத்திருக்கின்றன. நாம் மேலே விளக்கியுள்ள தடங்கல்களை அகற்றுவது மட்டுமே தேவை. எடுத்த எடுப்பில் விரிவான வேலை வாய்ப்பை உருவாக்கும் ஓர் முயற்சி அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவயக் கல்வியை உடனடியாக நடைமுறைப்படுத்துவதாகும். அதற்காகத் தரமான பள்ளிக் கட்டடங்களையும் வளாகங்களையும் அமைத்தல், தேவைக்குச் சற்றும் குறையாத ஆசிரியர்களை அமர்த்தல், அந்த ஆசிரியர்கள் தடங்லின்றிக் கிடைக்கும் வகையில் முழு நிறைவான ஆசிரியப் பயிற்சி நிலையங்களை நிறுவுவதல் என்ற ஒரு துறை மட்டுமே வேலையின்மையின் ஒரு பெரும் பகுதிக்குத் தீர்வு கண்டுவிடும்.

இப்போது எழும் கேள்வி, இவ்வளவு பெரும் பணிகளுக்குத் தேவையான மூலதனத்துக்கு என்ன செய்வது என்பதாகும். விலைக்கு விற்கத்தக்க பண்டங்களையும் கட்டணம் பெறத்தக்க பணிகளையும் செய்வதற்கு வேண்டிய பணத்தைப் பொதுமக்களிடமிருந்தே திரட்ட முடியும். அந்த அளவுக்குப் பணப் புழக்கம் உள்ளது. அதைத் திரட்டுவதில்தான் சிக்கல். ஏற்கனவே பங்கு மூலதனம் பற்றிக் கூறினோம். இங்கு, சிறு பண நிறுவனங்கள் மக்களை ஏமாற்றிவிட்டதாக எழும் கூச்சலைப் பற்றிப் பார்ப்போம். இங்கும் ஆட்சியாளர்களின் கை உண்டு. முதலில், தமிழகத்தில் உள்ள 36 நிறுவனங்கள் நம்பகமானவை அல்லவென்று ஏம (ரிசர்வு) வங்கி விளம்பரம் செய்துவிட்டு வாளாவிருந்துவிட்டது. அதனால் ஏற்பட்ட பதற்றத்தில் முதலீட்டாளர்கள் போட்ட பணத்தை ஒரே நேரத்தில் திரும்பக் கேட்டதால் அனைத்து நிறுவனங்களும் வீழ்ந்தன. உண்மையிலேயே ஏமாற்று நிறுவனம் எதுவென்று இனம் காண முடியாது போயிற்று. இவ்வாறு ஒரே நேரத்தில் முதலீட்டாளர்கள் அனைவரும் பணம் கேட்டால் ஏம வங்கி கூடத் தாக்குப்பிடிக்க முடியாது. காவல்துறையினர் கேட்ட கைக்கூலியைக் கொடுக்க இயலாததால் முதலீட்டாளர்களைத் தூண்டிவிட்டு வீழ்ந்த நிறுவனங்களும் உண்டு. வழக்கு மன்றமும் காவல்துறையும் சேர்ந்து முதலீட்டாளர்களை ஏமாற்றுவதும் நடைபெறுகிறது. பல நிறுவனங்கள் வீட்டுமனை விற்பனையை நம்பித்தான் மக்களிடம் முதலீடுகளைப் பெற்றன. அன்று வீட்டுமனை வாணிகம் இருந்த நிலையில் அந் நிறுவனங்கள் அறிவித்த வட்டியையும் பிற சலுகைகளையும் வழங்கினாலும் கணிசமான ஆதாயம் கிடைக்கும். ஆனால் வருமான வரித்துறையினர் உள் நுழைந்தனர். இந் நிறுவனங்களிடம் மனை வாங்குவதற்கு முன்பணம் செலுத்தியவர்களின் முகவரிகளைப் பெற்று அவர்களைத் “தேடுதல்” வேட்டையாடினர். மனை வாணிகமும் கட்டுமானத் துறையும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன. ப.சிதம்பரம் இந்தியப் பண அமைச்சராக இருந்த போது இது நடைபெற்றது. நடுவரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட நகர்ப்புற நில உச்சவரம்பைக் கைவிட்ட கையோடு அதற்கு உட்கையாகச் செயற்பட்ட பனியா - பார்சிக் கும்பல்கள் அசையாச் சொத்துத் துறையில் காலடி எடுத்துவைக்க ஆயத்தமான போது போட்டியாளர்களைக் களத்திலிருந்து அகற்ற ப.சிதம்பரம் எடுத்ததுதான் இந் நடவடிக்கை என்பது இப்போது தெளிவாகியுள்ளது. இவ்வாறு அரசின் திட்டமிட்ட அழிம்பு வேலைகள் புதிய முனைவர்களுக்கு மூலதனத் திரட்சியைத் தடுக்கின்றன. வருமான வரித்துறை இதில் முதன்மைப் பங்காற்றுகிறது. வருமான வரியை முற்றாக ஒழித்து பண நிறுவனங்கள் திரட்டும் பணத்துக்கு உறுதியான பிணைகளை ஏற்படுத்தி, இரண்டாம் நிலை பங்குச் சந்தையையும் ஒழித்து முதல்நிலை பங்குச் சந்தைக்கு வலுவூட்டி அவற்றை மக்களின் ஒத்துழைப்போடு கண்காணித்தால் கிடைக்கும் பணத்தால் நாம் மேலே கூறிய விற்கத் தக்க பண்டங்களையும் கட்டணம் பெறத்தக்க பணிகளையும் செய்யும் நிறுவனங்களுக்குத் தேவையான மூலதனத்தைத் திரட்டிவிடலாம்.

பண நிறுவனங்களை அழிப்பதற்கு ஏம வங்கி திட்டமிட்டுச் செயலாற்றியது என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள்: சீராம் சீட்டு நிறுவனம் வலிமை குன்றியிருப்பதாக ஏம வங்கி அறிவித்தது. அந் நிறுவனம் தாளிகை(பத்திரிகை)கள் மூலமாகவும் நேரடியாகவும் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு உண்மை நிலையை விளக்கியது. ஏம வங்கி வலுவற்றவை என்று அறிவிக்காத நலப் பண நிறுவனங்கள்(பெனியிட் பண்டுகள்) பலவும் தனியார் நிறுவனங்களும் மக்களை ஏமாற்றியுள்ளன. மக்களின் பணத்தை முதலீடாகப் பெற்று நாட்டின் பொருளியல் நடவடிக்கையில் முகாமைப் பங்காற்றும் பண நிறுவனங்களில் வலுவற்ற நிலையில் உள்ளன என்பதை அறிவிப்பதோடு வாளாயிருந்துவிட்ட ஏம வங்கி பண மூலதனத்தின் இயக்கத்தைக் கண்காணிக்கும் தலைமை அமைப்பு என்ற வகையில் தன் கடமையை நிறைவேற்றவில்லை என்பதோடு அதற்கு எதிராகச் செயற்பட்டது என்பதுதான் உண்மை. உடனடியாக மக்களின் மூதலீட்டைப் பாதுகாப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குதிரை ஓடிய பின் கொட்டிலை அடைத்த கதையாக அனைத்தும் அழிந்த பின் பண நிறுவனங்களுக்கான நெறிமுறைகளை அறிவித்தது.

இனி, அரசால் மட்டும் செயல்படுத்தக்க கட்டணம் பெற முடியாத பணிகளுக்கும் விலைக்குப் விற்க முடியாத பண்டங்களுக்கும் மூலதனத்துக்கு என்ன செய்வது என்று பார்ப்போம். அதனை முழுவதும் மக்களின் வரிப்பணத்திலிருந்து பெற முடியாது. இதற்கென்று ஒரு வழியை 20ஆம் நூற்றாண்டின் பொருளியல் மேதையான கெயின்சு என்பார் வகுத்து அதைப் பணக்கார நாடுகள் கையாண்டு வலிமை பெற்றுள்ளன. இத்தகைய பணிகளுக்குத் தேவையான பணத்தை அரசே அச்சிட்டு வெளியிடுவதுதான் அவர் கூறிய வழி. இவ்வாறு வெளியிடப்படும் பணம் மேலே கூறிய இலக்குகளை எய்தப் பயன்படுவதுடன் மக்களிடையில் பணப் புழக்கத்தை உருவாக்கி அனைத்துத் துறைகளிலும் பாய்ச்சல் நிலையைத் தோற்றுவித்து நாட்டின் வளம் பெருகவும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் வழியமைக்கும் .

19ஆம் நூற்றாண்டில் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை கடும் பொருளியல் நெருக்கடிகள் ஏற்பட்டு உலக முழுவதும் மக்கள் பட்டினியால் செத்தார்கள். இதன் காரணம் தொழிற்சாலைகளில் படைக்கப்பட்ட அளவுக்குமீறிய பண்டங்களை வாங்க அத் தொழிற்சாலைகளில் பணியாற்றிய மக்களாகிய பெரும்பான்மையினருக்குப் போதிய கூலி வருவாயில்லாததால் அவை தேங்கின; அதனால் பணி முடக்கம் ஏற்பட்டு வேலையிழந்த மக்கள் பட்டினியால் செத்தனர். நாடு முழுவதும் பண்டங்கள் தேங்கிக் கிடந்த நிலையில் மக்கள் பட்டினியால் செத்த இந்த இரங்கத்தக்க விந்தைச் சூழலில் இருந்துதான் பாட்டாளியப் புரட்சியாகிய பொதுமைப் புரட்சி ஏற்படும் என்று காரல் மார்க்சு 19ஆம் நூற்றாண்டில் கருதினார். ஆனால் 20ஆம் நூற்றாண்டில் 1933 - 36இல் ஏற்பட்ட பொருளியல் நெருக்கடியின் போது மேலே குறிப்பிடப்பட்ட கெயின்சு அறிவுரையை ஏற்ற அமெரிக்க அரசினர் நடவடிக்கையால் உலகில் இப் பட்டினிச் சாவுகள் முடிவுக்கு வந்தன. இந்த உத்திக்குப் பற்றாக்குறைப் பணமுறை(டிபிசிட் பினான்சிங்) என்று பெயர். இதில் சாலைகளை, பாசனம், மின்சாரம், துறைமுகங்கள் போன்ற அடிப்படைக் கட்டுமானங்களைக் கட்டுவதற்காகப் பணத்தை அச்சிட்டுப் புழங்கவிடுவதன் மூலம் மக்களின் வாங்கும் ஆற்றல் வளர்ந்து தொழிற்சாலையில் விளைக்கப்படும் பண்டங்கள் விலையாகும்; தொழில் சுழற்சி முறையாக இயங்கும். இந்த அடிப்படைக் கட்டுமானங்களில் பண்டங்கள் நேரடியாகப் பயன்படுவதன் மூலமும் தொழில் தேக்கம் முடிவுக்கு வரும்.

முந்திய நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து தங்கம் போன்ற பொருட்களை எடுத்து அவற்றை அடித்தளமாகக் கொண்டு வல்லரசுகளாக வளர்ந்தன. 20ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவும் உலகப் போர்களால் வலிமையிழந்திருந்த சப்பானும் ஐரோப்பிய நாடுகளும் இந்தப் பற்றாக்குறைப் பணமுறையைப் பயன்படுத்தி வல்லரசு நிலையை எய்தியுள்ளன. ஆனால் நம் ஆட்சியாளர்களும் கூலிக்கு மாரடிக்கும் போலிப் “பொருளியல் வல்லாரும்” பற்றாக்குறைப் பணமுறையைப் பற்றிப் பூச்சாண்டி காட்டுகிறார்கள்- பணவீக்கம் ஏற்பட்டுவிடும் என்று. பற்றாக்குறைப் பண்முறையில் இடையூறு உண்டு. அரசு புழக்கத்துக்கு விடும் பணத்தைப் பெறும் மக்கள் அதைக் கொண்டு வாங்கத்தக்க பண்டங்கள் வேண்டிய அளவில் சந்தையில் கிடைக்க வேண்டும். இல்லை என்றால் பண்டங்களின் கேட்பு அளவு மீறி அவற்றின் விலை விரைந்து ஏறி ஏழைகளின் வாழ்வைப் பாதிக்கும். இதற்குப் பணவீக்கம் என்று பெயர் கொடுத்துள்ளனர். இந்தப் பணவீக்கம் ஓர் அளவுக்குள் இருந்தால் பண்டங்களை விளைப்போர் கூடுதல் ஆதாயம் கிடைக்குமென்பதால் ஊக்கத்துடன் பண்ட விளைப்பைப் பெருக்குவார்கள். பண்ட விளைப்போ பணவீக்கமோ அளவு மீறும் போதுதான் சிக்கல். எனவே பண்ட விளைப்புக்கேற்ப அரசு வெளயிடும் பணத்தைக் கட்டுப்படுத்துவது கடினமல்ல.

பணப்புழக்கம் பெருகுவதால் மட்டும் பணவீக்கம் ஏற்படுவதில்லை. பண வீக்கம் என்பது பணப்புழக்கத்துக்கும் பண்ட விளைப்புக்கும் இடையிலான ஒரு விகிதமே. பணப்புழக்கம் அளவு மீறுவதாலும் வரலாம், பண்டங்களின் வழங்கல் குறைவதாலும் வரலாம். நம் ஆட்சியாளர்கள் இரண்டையும் செயற்பட வைக்கிறார்கள். வெளிக் கடன்களை வாங்கி உள்நாட்டில் பணப்புழக்கத்தைப் பெருக்குகிறார்கள். அதே வேளையில் அக் கடன்களை அடைப்பதற்காக என்று கூறிப் பண்டங்களை ஏற்றுமதி செய்து வழங்கலைக் குறைக்கிறார்கள். இவ்வாறு பொருளியலில் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமலும் எதைச் செய்யக் கூடாதோ அதைச் செய்தும் தலைகீழாக நிற்கிறார்கள். எல்லாம் வெளியார் தரும் தரகின் திருவிளையாடல். இன்று வரம்பின்றி வெளிநாடுகளில் இருந்து பண்டங்களை இறக்குமதி செய்து உள்நாட்டுத் தொழில்களை அழித்து மக்களின் பணப்புழக்கத்தை முறித்து சென்ற நூற்றாண்டின் பட்டினிச் சாவுகளை மீண்டும் அரங்கேற்றிக் காட்டப்போகிறார்கள்.

நம் நாடு முதாளியத்துக்கு மாறாமல் இருப்பதற்கு இன்னொரு முகாமையான காரணம் தொழில்களைத் தொடங்குவதற்கு அரசிடம் உரிமம் பெறுவதற்கும் மூலப் பொருட்களுக்கு அரசின் ஒதுக்கீட்டைப் பெறுவதற்கும் உள்ள சிக்கலாகும். நெல்லை அவித்து உலர்த்தி அரிசியாக்கும் ஒரு சராசரி அரிசியாலைக்கு தில்லி வரை சென்று உரிமம் பெற வேண்டியுள்ளது. மூலப் பொருட்களை வாங்குவதற்கு, அது தாராளமாகக் கிடைத்தாலும் கட்டுப்பாடுகளை விதித்து ஒதுக்கீடுகளை வகுத்து அதன்படிதான் வழங்கின்றனர். இதனால் போலி நிறுவனங்கள் உருவாகியுள்ளன. அவற்றிடம் இருந்து கள்ள விலையில் மூலப்பொருட்களைப் பெறவேண்டியுள்ளது. மின்சார வழங்கல் அரசின் வாரியங்களின் கைகளுக்குச் சென்ற பின் மின் இணைப்புக் கொடுப்பதற்குத் தம் துறைக்குத் தொடர்பில்லாத சிக்கல்களையெல்லாம் கிளப்புகிறார்கள். மாசுக் கட்டுப்பாடு, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு என்று புதிது புதிதாகச் சிக்கல்களை உருவாக்கித் தடங்கல் செய்கிறார்கள். இதில் ஆட்சியாளர்கள் நேர்மையாக இருப்பதில்லை, வேண்டுமென்றே பொய்க் காரணங்களைக் கூறுவார்கள். கைக்கூலி பெறுவதே அவர்கள் நோக்கம். இவர்களைத் தட்டிக் கேட்கவும் கண்டிக்கவும் தண்டிக்கவும் நம் நாட்டில் ஓர் அமைப்பு இல்லாமையே காரணம். நம்மை ஆண்ட ஆங்கிலர் அடிமைகளாகிய நம் மக்களை அடக்கியாளவென்று தான் உருவாக்கிய உள்நாட்டு அதிகார வகுப்புக்குப் பகுத்தறிவுக்கு ஒவ்வாத பல அதிகாரங்களையும் பாதுகாப்புகளையும் எண்ணற்ற சலுகைகளையும் வழங்கியிருந்தனர். அந்த அமைப்பே “விடுதலை” அடைந்த பின்னும் தொடர்கிறது. ஆங்கிலரும் போய்விட்டதால் தட்டிக் கேட்பாரின்றி அவர்கள் துள்ளாட்டம் போடுகின்றனர். ஆங்கிலரிடமிருந்த ஓரளவு மக்களாட்சிப் பண்பும் மனிதநேயமும் சாதி - வருணங்களின் அடிப்படையில் அமைந்த நம்மவரிடையில் குறைவு என்பதால் ஆங்கிலர் வருவதற்கு முன்பிருந்த நிலையை நோக்கி நாம் விரைந்துகொண்டிருக்கிறோம்.

நம் ஆட்சியாளர்கள் ஒருவருடைய வேண்டுகை தொடர்பாக ஏதாவது தவறு செய்துவிட்டால், தான் செய்த விட்ட தவற்றைத் திருத்துவதற்குப் பலருடைய ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளது எனவே பணம் கொடு என்று கேட்பார்கள் இந்த வெட்கங்கெட்டவர்கள். கைக்கூலியே அவர்களது இலக்கு. இவர்கள் கேட்கும் அளவுக்கு உள்நாட்டு முதலாளிகளால் கைக்கூலி கொடுக்க இயலவில்லை. கர்னாடகத்தில் ஒரு வானூர்தி நிலையம் அமைக்க ஒப்புதல் பெறுவதற்கு தன்னால் இயலாத அளவுக்குக் கைக்கூலி கேட்கிறார்கள் என்று இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாட்டாவே அத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டது என்றால் பாருங்களேன். எனவே இவர்களையும் விடக் கூடுதல் கைக்கூலி தரத்ததக்க பெரும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் நேரடியாகவோ உள்நாட்டு நிறுவனங்களுடன் மூலதனம், தொழில்நுட்பம், சந்தைப்படுத்தல் என்று ஒன்றிலோ, கூடுதலாகவோ கூட்டு வைத்துக்கொண்டால்தான் ஒப்புதல் பெற முடியும் என்பதுதான் நிலை. இதை விரும்பாத வெளிநாட்டு நிறுவனங்கள் பின்வாங்குவதால்தான் இவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு “தாராளமயம்” இங்கு நடைபோடவில்லை. பெருங்கையான டெர்லைட் ஆலையின் நச்சுச் சூழலால் சுற்றிவாழும் மக்கள் துயரிழந்தும் உயிரிழந்தும் நடவடிக்கை எடுக்காத அரசும் “நய மன்றமும்” திருப்பூர், வாணியம்பாடி போன்ற இடங்களில் பல சிறு தொழிற்சாலைகளை மூடவைத்தன. அத் தொழில்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எந்த மாற்று ஏற்பாடும் செய்ய நேரமும் வாய்ப்பும் வசதியும் செய்து கொடுக்கவில்லை. இவற்றை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இத்தனை தடங்கல்களையும் செய்துவிட்டு, நம் குடியரசுத் தலைவர்களும் அமைச்சர்களும் நம் அரசின் ஆய்வு நிறுவனங்கள் உருவாக்கும் தொழில்நுட்பங்களை நம் நாட்டுத் தொழில் முனைவோர் பின்பற்ற முன்வருவதில்லை என்று கூசாமல் மேடையேறிப் பொய் பேசுகின்றனர்.

முதலாளியத்துக்கு மாறாமல் நம்மைத் தடுப்பதில் பன்னாட்டு நிறுவனங்கள் எனப்படும் உலக வாணிக குழுக்கள் ஏராளமான பணத்தை இங்கு பாயவிட்டு பல முனைகளிலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் ஒற்றர்களை நாடெங்கும் உருவாக்கி உலவவிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன ஆதாயம்?

முதலாளிய விளைப்பு முறையில் தொழிலகம் கட்டவும் உயர் தொழில்நுட்பக் கருவிகள் நிறுவவும் அடிப்படைக் கட்டமைப்புகளையும் தொழிலாளர்களுக்கேற்ற அடிப்படை வசதிகளையும் உருவாக்கவும் அவற்றை முறையாகப் பராமரிக்கவும் ஏராளமான முதலீடும் நாளாவட்டச் செலவுகளும் தேவைப்படுகின்றன. ஒரே தொழிலகத்தில் பணிசெய்யும் தொழிலாளர்கள் ஒன்றுதிரண்டு தங்களுக்குக் கூடுதல் சம்பளம், சலுகைகள் வசதிகள் வேண்டுமென்று வேலைநிறுத்தப் போராட்டம் செய்து முதலாளிகளுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். தான் செய்திருக்கும் பெரும் முதலீடு செயலற்றுக் கிடப்பதைத் தவிர்ப்பதற்காக முதலாளி தன்னால் இயன்றவரை முயல்வார். தொழிலை மூடுவதை விட தொழிலாளர்களின் கேட்புகள் இழப்பேற்படுத்தும் அளவுக்குச் சென்றால் ஒழிய அத்தகைய முடிவுக்கு வரமாட்டார். இதைத்தான் தொழிலாளர் இனத்தின் “பகரம்(பேரம்) பேசும் வலிமை” என்பர். வீடுகளில் அல்லது சிறு பட்டறைகளில் வைத்துச் செய்யப்படும் தன் தொழில்கள், குறுந்தொழில்களில் “முதலாளி” என்ற பொருந்தாப் பெயர் கொண்ட உழைப்பாளிக்குக் கிடைக்கும் கூலி என்பது அவன் செய்த பண்டத்தின் விற்பனையில் கிடைக்கும் பணத்தில் இடுபொருட்களுக்காகச் செய்த முதலீடு, அதைக் கடனாகப் பெற்றிருந்தால் அதற்குரிய வட்டி, உதவிக்கு ஆள் வைத்திருந்தால் அவனுக்குரிய கூலி ஆகியவற்றைக் கழித்துக் கிடைப்பதேயாகும். இங்கு தன் கூலியை அதாவது தன் பண்டத்தின் விலையைக் கூட்டித் தரும்படி எவரையும் எதிர்த்து அவன் போராட முடியாது. வேலைநிறுத்தம் செய்தால் அவன் வயிறுதான் காயுமே யொழிய வேறெவருக்கும் இழப்பு கிடையாது. பகரம் பேசும் வலிமை என்பது அவனுக்கு அறவே கிடையாது. சந்தையைக் கையில் வைத்திருக்கும் வாணிகன் வைத்ததுதான் சட்டம். எனவே பண்டத்தின் அடக்கவிலையை(இதில் அவன் கூலியும் அடக்கம்) விடக் குறைத்து விற்றுவிட்டு அவன் பட்டினியும் கிடந்து கடனாளியாகவும் மாறலாம். அதன் மூலம் அவன் கந்துவட்டிக்காரனுக்கும் வாணிகனுக்கும் கொத்தடிமையாவான். அவனது இந்த இழப்பு வாணிகர்களாலும் கந்துவட்டிக்காரர்களாலும் இறுதியில் உலகவாணிகக் குழுக்களாலும் ஆதாயமாக வரவு வைக்கப்படுகிறது. வாணிகர்கள், கந்துவட்டிக்காரர்கள் பெறும் பங்கைத் தவிர்ப்பதற்கு அரசு உருவாக்கியுள்ள வங்கி உட்பட்ட பல்வேறு கடனளிப்பு நிறுவனங்களும் கூட்டுறவு அமைப்புகளும் பல்வேறு தொழில் வாரியங்களும் கழகங்களும் களத்திலுள்ளன. அவை விளைப்போனிடம் வட்டியும் பெற்றுக்கொள்கின்றன. தங்கள் அமைப்புகளிலுள்ள மாபெரும் ஊழியர் படையின் செலவையும் அவன் மீது சுமத்துகின்றன. அது போதாதென்று ஊழலும் கையூட்டும் “நல்லூதியமாக”(போனசாக) அவனுக்குக் கிடைத்துள்ளது. இப்போது தன்னுதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் விளைப்போர், குறிப்பாகப் பெண்கள் பணம் சேமிக்க ஊக்கப்படுகின்றனர். அவ்வாறு சேமிக்கப்பட்ட பணத்திலிருந்தே கடன் பெற்று தொழில் செய்து உருவாகும் பண்டங்களைத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்கின்றன, அல்லது அதற்கென இயங்கும் பிற நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்கின்றன. இந்தத் திட்டத்தின் பின்னணியில் “தாராளமயத்”துக்குத் தோதான சில கூறுகள் உள்ளன. இப்போது பல்வேறு வேலைவாய்ப்பு நலத்திட்டங்களின் பேரில் ஏழைகளுக்கு அரசு வங்கிகளின் மூலம் வழங்கும் கடனுதவிகள் முறையாகத் திரும்பச் செலுத்தப்படுவதில்லை. இதனால் வங்கிகள் சிக்கல்களுக்குளாகின்றன. இந்த நிலையில் வெளிநாட்டு வங்கிகள் இங்கு நுழையப் பார்க்கின்றன. அரசுடைமை வங்கிகளை அயலவர்க்கு விற்கும் முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றை எதிர்ப்போர் முன்வைக்கும் கருத்து என்னவென்றால் இப்போது அரசுடைமை வங்கிகள் மூலம் நடைபெறும் “மக்கள் நலப்பணிகளை” அயலார் வங்கிகள் ஏற்றுச் செயற்படுத்தா என்பதாகும். எனவேதான் கடன்பெற்றுத் தொழில் செய்வதற்கு மாறாகச் சேமித்து அதிலிருந்து கடன்பெறும் பழக்கத்துடன் சொந்தத் தொழில் செய்வாரின் எண்ணிக்கையையும் பெருக்கிப் பலவழிகளில் அயலவருக்கு ஆதாயம் தரும் இந்தத் திட்டம் செயற்பட்டு வருகிறது. இப்போது கடன் மூலம் வங்கிக்கு வெளியே பணம் நிலுவையில் நிற்பதற்குப் பகரம் சேமிப்பின் மூலம் சொந்தத் தொழில் செய்வோரின் பணம் வங்கியின் கைகளுக்கு வந்து வங்கியின் வைப்பு(டெபாசிட்) நிலையை மேம்படுத்துகிறது. சேமிப்புக்குப் கொடுக்கும் வட்டியை விடக் கடனுக்குக் கூடுதல் வட்டி விதித்து ஆதாயம் பெறலாம். சொந்தத் தொழில் செய்வோரின் எண்ணிக்கையைக் கூட்டி அவர்களின் விளைப்புகளை வாங்கி விற்பதன் மூலம் உலக வாணிகக் குழுக்களுக்கு ஆதாயம்.

இப்படி எல்லாம் கூறித் தொடங்கிய இந்தத் தன்னுதவிக் குழுக்கள் இப்போது அயல்நாட்டு நிறுவனங்களின் முத்திரையோடு விற்கப்படும் பல்வேறு நுகர்பொருட்களை நம் பெண்கள் வாங்கி பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதாயம் சேர்ப்பனவாகவே செயற்படுகின்றன.

இது போலக் கிறித்துவத் திருமண்டலங்கள், மறை மாவட்டங்கள் மற்றும் எண்ணற்ற “ஆர்டர்கள்” எனப்படும் தொண்டமைப்புகள் மூலம் ஏழை எளிய பெண்களைத் திரட்டி அவர்கள் மூலமாகப் பண்டங்களைச் செய்து அவர்களுக்கு மிகக் குறைந்த கூலியை அல்லது விலையைக் கொடுத்து வாங்கி வெளிநாடுகளில் விற்றுக் கொள்ளை ஆதாயம் பெறுகின்றனர். இந்த ஆதாயம் நூறு மடங்கு வரை செல்லும். இவ்வாறு உழைப்பாளர்களின் வருவாயைப் பறிப்பதன் மூலம் அவர்களது நுகர்வும் அதனால் வாழ்க்கைத் தரமும் குறைகின்றன. அதனால் உள்நாட்டில் மிஞ்சும் பண்டங்கள் ஏற்றுமதிக்கென்று குறைந்த விலையில் தாராளமாகக் கிடைக்கின்றன.

இத் தொண்டு நிறுவனங்கள் கிறித்துவ நிறுவனமாயினும் அல்லவாயினும் இவையனைத்தும் முதலாளியத்துக்கு எதிரான ஓர் அரைகுறை மார்க்சியத்தைக் கற்பித்து மக்களுக்கு முதலாளியத்தின் மீது வெறுப்பை ஊட்டுகின்றன.

நேற்றுவரை பெருந்தொழிலகத் தொழிலாளர்களுக்குச் சங்கம் அமைத்துத்தான் அனைத்துக் கட்சிகளும் செயற்பட்டு வந்தன. முதலாளிகளின் ஆதாயத்திலிருந்துதான் தொழிலாளர்களுக்கு நலன்கள் பெறப்பட்டன என்று கருதப்பட்டாலும் நம் நாட்டில் விலை உயர்வு கண்காணிக்கப்படாததால் வாடிக்கையாளரிடமிருந்து பறித்து ஒரு பகுதியைத் தொழிலாளர்களுக்குக் கொடுத்துவிட்டு மீதியை முதலாளியே வைத்துக்கொள்வதாகத்தான் ஊதிய உயர்வுப் போராட்டங்களின் “வெற்றி” அமைகிறது. புதிய தொழில்நுட்ப உத்திகளைக் கையாண்டு விளைப்பைப் பெருக்கினால் மட்டுமே மக்களைக் கொள்ளையடிக்காமல் தொழிலாளர்கள் கூடுதல் ஊதியம் பெற முடியும். அல்லது முதலாளியின் ஆதாய விகிதம் குறைக்கப்பட வேண்டும். இரண்டுமே இங்கு நடைபெறவில்லை. அதே வேளையில் அரசுடைமையாக்கப்பட்ட தொழில்களில் இழப்பு ஏற்பட்டாலும் தொழிலாளர்களுக்கு நலன்களும் சலுகைகளும் அதுவும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத அளவுக்கு வழங்கப்பட வேண்டுமென்று தொழிற்சங்கங்கள் அடம்பிடிக்கின்றன. ஆட்சியாளர்களின் தேர்தல் நடுக்கத்தால் வெற்றியும் பெறுகின்றன. எ-டு. அரசுப் போக்குவரத்து ஊழியர்கள். அரசுடைமையானால் முதலாளிகள் கைக்குச் செல்லும் ஆதாயம் அரசுக்குக் கிடைக்கும்; அதன் மூலம் மக்களின் வரிப்பளு குறையும் என்று கூறப்பட்டது. இன்று தலைகீழாக அரசுடைமை நிறுவனங்களின் இழப்பை ஈடுசெய்யவும் அவற்றின் ஊழியர்களுக்குக் கேட்பதை எல்லாம் அள்ளிக் கொடுக்கவும் மக்களின் மீது வரிச்சுமையும் கடன் சுமையும் ஏறிக்கொண்டே போகின்றன. தொழிற்சங்கங்கள் இந் நிறுவனங்களுக்கு அரசு “மானியம்” வழங்கவேண்டுமென்று கேட்டுப் பெற்றுவிடுகிறார்கள். இதனால்தான் தொழிற்சங்கங்களும் பொதுமை பேசும் கட்சிகளும் மக்களுடைமை(தனியார் உடைமை)யை எதிர்க்கின்றன. அரசுடைமை நிறுவனங்களைப் போல் எந்த மக்களுடைமை நிறுவனமும் இழப்பைச் சுமந்து கொண்டே ஊழியர்களுக்கு மேலும் மேலும் சலுகையளிக்க இயலாது. அவை உயிர் வாழவே முடியாது. (தனியார் உடைமை என்ற சொல்லில் அயலாரும் அடங்குகின்றனர். பொதுமைக் கட்சிகளும் ஆளும் கணங்களும் அயலாருக்கும் உள்நாட்டினருக்கும் உள்ள வேறுபாட்டை மறைத்து நம்மை ஏமாற்றுகின்றன. எனவே உள்நாட்டுத் “தனியார்” நிறுவனங்களை மக்களுடைமை என்ற அடைமொழியால் குறிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். அரசுடைமை X மக்களுடைமை)

அரசுடைமை நிறுவனங்களின் இழப்புகளுக்குக் கட்டுப்படுத்த முடியாத ஊழியர்களின் அட்டூழியங்களும் அனைத்து மட்டங்களிலும் நடைபெறும் ஊழல்களும்தாம் காரணங்கள். இந் நிறுவனங்கள் ஊழல் ஆட்சியாளர்களுக்கும் கடமை உணர்வற்ற பொறுப்பில்லாத் தொழிலாளர்களுக்கும் பொன்முட்டையிடும் வாத்து. தொழிலாளர் இனத்தின் பண்பாட்டை அழிக்கும் நச்சுச் கிடங்குகள். நாம் எடுத்துக்கொண்ட அரசு போக்குவரத்து நிறுவனங்களின் வண்டிகளையும் மக்களுடைமை வண்டிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரியும் நமக்குக் கிடைக்க வேண்டிய பணிகளின் தரத்தை அரசுடைமையின் மூலம் எந்த அளவுக்குப் பறிகொடுக்கிறோம் என்று.

இவ்வாறு “ஒருங்கிணைக்கப்படத்தக்க” துறைகளின் தொழிலாளர்கள் ஆதாயம் பெறும் போது தாமே ஒருங்கினைய வழியற்ற உதிரித் தொழிலாளர்களை விடக்கூடாதல்லவா? (முதலாளிய விளைப்பு முறையில் அனைத்துத் தொழிலாளர்களும் ஒரே களத்தில் இணைகிறார்கள் என்பதைத் தொழிலாளர் ஒருங்கிணைவுக்கு வழி என்று நம் கூறியதை நினைவுபடுத்திக் கொள்க) அதனால் வெளிநாட்டுப் பண உதவியுடன் இயங்கும் சிலர் இத்தகைய தொழிலாளர்களை ஒருங்கிணைக்கத் தொடங்கினர். ஆட்டோ ஒட்டுநர்கள், கட்டடத் தொழிலாளர்கள் என்று தொடங்கி பால்வினை(விபச்சார)த் தொழிலாளர் உட்பட ஒரு துறை விடாமல் இது விரிவடைந்துள்ளது. இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர்களைக் கொண்டு போராட்டங்கள் நடத்தி அந்தந்தத் துறைப் பணியாளர்களுக்கு நல வாரியங்கள் அமைக்கப் போராடி வெற்றியும் ஈட்டுகின்றனர். உடலுழைப்புத் தொழிலாளர்கள் மட்டுமல்ல, வழக்கறிஞர்கள், வாணிகர்கள் என்று வாக்கு வங்கியாகத் திகழத்தக்கவரும் ஆட்சியாளர்களிடத்தில் செல்வாக்குப் பெற்றவர்களுமான அனைத்துத் தரப்பினரின் வேண்டுகைகளும்(கோரிக்கைகளும்) ஏற்கப்படுகின்றன . ஒரு தொழிலாளி இறந்தால் ஏதத்துக்கு(விபத்துக்கு) உட்பட்டால் நோய்வாய்பட்டால், மகள் பருவமெய்தினால், மகளுக்குத் திருமணமென்றால் இவ்வளவு பணம் என்று இலவயமாகக் கொடுக்கப்படுகிறது. இவ்வாறெல்லாம் உதவுவது மனித நேய அடிப்படையிலும் மக்கள் நல ஆட்சி என்ற வகையிலும் தக்கதாய்த் தோன்றும். ஆனால் ஓர் உண்மையைத் தெரிந்துகொண்டால் இதிலுள்ள கொடுமை புரியும். கேரளத்தில் கட்டடத் தொழிலாளர் நலநிதிக்கு ஒவ்வொரு தொழிலாளியும் செலுத்துவதற்குச் சமமான பணத்தை அரசும் செலுத்துகிறது. அந்த அளவுக்குத்தான் அவருக்குப் பலன்கள் கிடைக்கும். ஆனால் தமிழகத்தில் கட்டடம் கட்டுவோர் அதற்கு உரிமம் எனப்படும் இசைவு பெறும் போது அவரிடமிருந்து கணிசமான தொகை நலநிதியாகத் தண்டப்படுகிறது. எந்தத் தொழிலாளிக்கு எவ்வளவு என்ற வரைமுறையில்லை. அரசியல் தொடர்பு உள்ளவர்ககும் கைக்கூலி கொடுப்பவர்க்கும் அவர் தொழிலாளியில்லையாயினும் “நல உதவிகள்” கிடைக்கும். இது ஓர் ஊழல் களம்.

இதில் இன்னொரு கோணத்தையும் பார்க்க வேண்டும். தொழிலாளர் இயக்கம் மார்க்சியத்தோடு தொடர்புபடுத்தப்படுவது வழக்கம். மார்க்சியம் பொதுமை என்ற அரசியல் – பொருளியல் – குமுகியல் உலக அமைப்பைப் பரிந்துரைக்கிறது. அது, பகுத்தறிவும் மனிதப் பண்பும் மனித நேயமும் தன்மானமும் பொறுப்புணர்வும் போன்ற முழுமையான மக்களாட்சிப் பண்பு நிறைந்த மக்களைக் கொண்ட ஓர் உலகை அமைப்பதை மனித குலத்தின் இலக்காகத் தந்ததுள்ளது. ஆனால் அதன் பெயரால் நடத்தப்படும் தொழிலாளர் இயக்கங்கள் தங்கள் உறுப்பினர்களின் பண்பாட்டை எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குச் சிதைத்து வைத்துள்ளன. ஒரு தொழிலாளி எவருக்காவது அல்லது பொதுவிலாவது தவறிழைத்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால் உடனே வேலை நிறுத்தம், மறியல், வன்முறை என்ற காட்டுவிலங்காண்டி நிலைக்குச் சென்று விடுகின்றனர். இதன் மூலம் தொழிலாளர் வகுப்பு மீதும் சங்கங்கள் மீதும் மக்களுக்குப் பெரும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

இதைவிடப் பெருங்குறை, தொழிலாளர்களின் செலவுப் பண்பாட்டை இச் சங்கங்கள் வளர்த்தெடுக்காதது. இன்று தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் தாங்கள் ஈட்டும் வருவாயைக் குடியிலும் பரிசுச் சீட்டுகளிலும் அழிக்கிறார்கள். பெண்கள் வேலை செய்யும் குடும்பங்களில் அவர்கள் வருவாய்தான் குடும்பம் நடத்தப் பயன்படுகிறது. அந்தப் பணத்தையும் பறித்துக் கொள்ளும் நிலையும் உள்ளது. குழந்தைகளின் படிப்பை நிறுத்தி வேலைக்கு விடுவது முதலியவற்றுக்குக் காரணமே இந்தப் பழக்கங்களுக்கு அடிமையான குடும்பத் தலைவர்கள்தாம். ஆனால் நம் தோழர்கள் இதைக் கண்டுகொள்வதே இல்லை. குடிப்பது தொழிலாளர்களின் அடிப்படை உரிமை என்று கருதுகிறார்கள் போலும். முன்பு காந்தி குடியால் ஏழைகளின் வாழ்வு சிதைவுறும் கொடுமையை எடுத்துரைத்து அதற்கெதிராகப் போராடிய போது, அவர் முதலாளிகளின் சுரண்டலை மறைத்துத் திசைதிருப்புவதற்காக அதைச் செய்கிறார் என்றனர். இன்று ஒட்டு மொத்ததமாகக் சாராயத்துக்கு எதிராகப் போராடாமல் “கள்ள”ச் சாராயத்துக்கு எதிராக மட்டும் போராடுகின்றனர், ஆக, “நல்ல” சாராயமாகிய “உள்நாட்டில் செய்யப்படும் அயல்நாட்டுச் சாராயத்”தைக் குடித்துத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தையும் குமுகத் தரத்தையும் ஒட்டுண்ணிகளுக்கு இணையாக வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று விரும்புகின்றனர் போலும் . இதில் அயல்நாட்டுச் சாராய நிறுவனங்கள், கள்ளச் சாராயம் காய்ச்சும் குழுக்கள் ஆகியவற்றுக்கு இடையிலுள்ள போட்டியில் இவர்கள் நிலைப்பாட்டையும் நமக்குக் கோடி காட்டுகிறது.

இந்த இடத்தில் குடிப்பது பற்றி நம் குமுகத்தில உருவாக்கி வைத்துள்ள ஒரு தீய கருத்தை நாம் அலச வேண்டியுள்ளது. உடலுழைப்பில் ஈடுபடுவோர் உழைப்பால் உண்டான உடல் நோவைத் தீர்த்துக் கொள்ள குடிப்பது இன்றியாமையாதது என்பது அந்தக் கருத்து. குடிப்பவன் உண்மையில் தன்னினைவின்றி உடலைத் தள்ளாட விடுவதாலும் கீழே விழுந்து புரள்வதாலும் தன் உடலுக்கு ஊறு விளைவிக்கிறான். பசியுணர்வு குன்றி உடல் நலம் கெடுகிறது. மறுநாள் காலையில் தலை கிறுகிறுப்பும் உடல் சோர்வும் ஏற்பட்டு அவன் செயல்திறன் குறைகிறது. மாறாக உழைப்பினால் வரும் பசிக்கேற்ற உணவை வயிராற உண்டபின் அவனுக்கு வரும் தூக்க மயக்கம் சாராயத்தால் வரும் மதிமயக்கத்தை விட எவ்வளவு உயர்வானது? இனிமையானது? அது சுவைத்துணரத்தக்கது. அவ்வாறு உறங்கி விழிந்த பின் அவனது உடலும் மனமும் எவ்வளவு புத்துணர்ச்சியுடனும் தெளிவுடனும் ஊக்கத்துடனும் செயற்படும்? இவற்றை அறியாத, உழைத்தறியாத சோம்பேறி வாழ்க்கையினர், உழைக்காததால் உடல் சோர்வே அறியாமல் தூக்கம் வராமல் சாராயம் அருந்திப் பழகிய சோம்பேறிகளான “அறிஞர்”களும் தலைவர்களும்தாம் குடி உடல் நோவைத் தீர்க்கும் என்ற பொய்யான தீக் கருத்தைப் பரப்புகின்றனர். கருணாநிதி 1971இல் மதுவிலக்குச் சட்டத்தின் செயற்பாட்டை “நிறுத்தி வைத்ததற்கு” முன்பு 20 ஆண்டுகள் மிகப் பெரும்பாலான மக்கள் குடியையே மறந்திருந்தனர். தொழிலாளர்களும் சாராயமோ கள்ளோ குடிக்காததால் உடல் நோவால் துடிக்கவில்லை. தன் கட்சிக்காரர்களும் கள், சாராயத்துக்கு எதிராக ஒரு காலத்தில் பேரியக்கம் நடத்திய பேரவைக் கட்சியினரும் கொடுத்த நெருக்குதலால்தான் கருணாநிதி இந்த நடவடிக்கையை எடுத்தார். அதுவரை மதுவையே அறியாத இளைய தலைமுறையினரைப் பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டார். தி.மு.க.வினருக்கும் பேரவைக் கட்சியினருக்கும் கள், சாராயக் கடைகள் நடத்திப் பணம் சேர்க்க வேண்டுமென்ற திட்டம் இருந்தது. நம் பொதுமைக் கட்சித் தோழர்களும் இந்த நடவடிக்கையை எதிர்க்காதது ஏன்?

அடுத்தது பரிசுச் சீட்டு “விழுந்தால் வீட்டுக்கு விழாவிட்டால் நாட்டுக்கு” என்ற முழக்கத்துடன் “பேரறிஞர்” அண்ணாத்துரையால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கேடு தரும் திட்டம் தமிழகத்தின் உயிராற்றலையே உறிஞ்சி நிற்கிறது. தங்கள் வருவாயை முறையாகச் செலவு செய்து சேமித்து வளம் காண விரும்பாத, தன்னம்பிக்கையற்ற மன நோயாளிகளின் புகலிடங்களாகப் பரிசுச் சீட்டுக் கடைகள் விளங்குகின்றன. பல்வேறு பண்டங்களை விற்பனை செய்யும் கடைகளைப் பற்றிய ஒரு புள்ளிக் கணக்கு ஆய்வை மேற்கொண்டால் தமிழகத்தில் பரிசுச் சீட்டு விற்கும் கடைகளே முதலிடம் பெறும். பெரும்பாலான மக்கள், குறிப்பாகத் தொழிலாளர்கள் பரிசுச் சீட்டை பொறுத்தவரை போதை அடிமைகள் நிலைக்கு வந்து விட்டனர். இங்கு தமிழக அரசை விட வெளி மாநில அரசுகளும் அங்குள்ள தனியார் நிறுவனங்களும் தமிழகத்திலிருந்து அள்ளிச் செல்லும் பணமோ ஏராளம். போலிச் சீட்டுகளால் மக்களை ஏமாற்றுவோர் ஒரு புறம், மார்வாரிகள் வருமான வரியிலிருந்து தப்ப பரிசுச் சீட்டு பயன்படுகிறது .

திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள் போன்றவற்றுக்குத் தங்கள் ஆற்றலுக்கு மீறிக் கடன் வாங்கிச் செலவழிப்பதாலும் தொழிலாளர் வகுப்பு வறுமையெய்திக் கடன்பட்டுச் சிரழிகிறது. சங்கம் என்ற அமைப்பின் கீழ் அவர்களுக்கு இத் தவறான பழக்கங்களிலிருந்து விடுபடும் பயிற்சிகளை அளிக்கலாம். ஆனால் ஆயுத பூசை போன்ற விழாக்களை ஆரவாரத்தோடு நடத்துவதும் தீபாவளி போன்ற பண்டிகைகளில் பணத்தை வீணடிக்க நல்லூதியம்(போனசு) கேட்டுப் போராட வைப்பதுமாக தொழிலாளர்களின் செலவுப் பண்பாட்டைச் சீரழிக்கின்றன சங்கங்கள். நல வாரியங்கள் தொழிலாளர்களின் குடும்பச் செலவுகளை ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் தொழிலாளர்களும் ஊதாரித்தனம், குறிப்பாகக் குடி, பரிசுச் சீட்டு, குடும்ப நிகழ்ச்சிகளிலும் சமய நிகழ்ச்சிகளிலும் பொருட்களை வீணடித்தல் என்ற வகையில் அவர்களுக்கோ நாட்டுக்கோ பயன் தராத வகையிலும் ஒட்டுமொத்தப் பண்பாட்டுச் சீரழிவை நோக்கித் தொழிலாளர்களை இட்டுச் செல்கின்றன.

இந்த முற்போக்கர்களின் இரண்டகம் தவிர்த்து தொழிலாளர்களின பண்பாட்டு வீழ்ச்சிக்கு வேறொரு உளவியல் அடிப்பையும் உண்டு. உடலுழைப்பையும் உடலுழைப்போரையும் இழிவாகப் பார்த்து அவர்களை ஒதுக்கி வைத்துள்ளது நம் மரபு. அதனால் அம் மக்களுக்கு இயல்பாகவே தம் மீதும் தம் தொழில், வாழ்நிலை ஆகியவை பற்றியும் இழிவுணர்ச்சியும் வெறுப்பும் உள்ளது. குமுகத்தின் உயர் மட்டத்திலுள்ளோர் போன்று தங்களை மென்மையாக, உயர்ந்த நடத்தையுள்ளவர்களாகக் காட்டிக் கொள்ள வேண்டுமென்ற அவாவோ அவ்வாறு காட்டிக்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையோ அவ்வாறு உண்மையாகவே நடந்து கொண்டாலும் குமுகம் அதைப் புரிந்து ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையோ அவர்களுக்கு இல்லை. உழைப்பின் மீதும் உழைப்போர் மீதும் நாம் மதிப்பு வைத்து அவர்களுக்குக் குமுகத்தில் உள்ள முகாமையான இடம் பற்றிய உண்மையை உணர்த்திக் காட்டினால்தான் அவர்களை இத்தகைய பண்பாட்டுச் சீரழிவுகளிலிருந்து மீட்க முடியும்.

இவ்வாறு நாம் பட்டியலிட்டுள்ள மேற்கூறிய தடைகளை உடைத்து முதலாளியப் பொருளியலை அமைத்தால் அதன் மூலம் உருவாகும் கூடுதல் பண்டங்களை எங்கு எவ்வாறு விற்றுமுதலாக்குவது? இங்குதான் ஓர் அடிப்படைப் பொருளியல் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்று உலகில் மக்கட் தொகையில் ஒரு குறுகிய குழுவே நுகர்கிறது. பிறரெல்லாம் பல்வேறு காரணங்களால் தங்கள் வாங்கும் ஆற்றலை இழந்து நிற்கிறார்கள். இந்தப் பெரும்பான்மைப் பண்டங்களும் உலக வாணிகக் குழுக்களால் கையாளப்படுகின்றன. இது இன்று நேற்று உருவானதல்ல. தொல்பழங்காலத்திலேயே உருவானதாகும். கழக இலக்கியங்கள் காட்டும் காலத்திலேயே நம் முடியுடை மூவேந்தரும் குறுநில மன்னரும் கள்ளைக் கொடுத்தே மக்களிடமிருந்து பண்டங்களைப் பெற்றனர். யானை மருப்பு(தந்தம்) தொடங்கி பல்வேறு விலைமதிப்புள்ள மலைச் சரக்குகளைக் கள்ளைக் கொடுத்தே நம் அரசர்கள் பெற்றனர். கொற்கையில் மீனவர் குளித்தெடுத்த முத்துக்களைக் கள்ளைக் கொடுத்துப் பெற்றான் பாண்டியன். இப் பண்டங்கள் கப்பலேறி கிரேக்கத்துக்கும் உரோமைக்கும் சென்றன. அங்கிருந்து திராட்சை மதுவும் கண்ணாடி, பீங்கான் பொருட்களும் தமிழ்நாட்டு அரண்மனைகளையும் வளமனை(பங்களா)களையும் வந்தடைந்தன. மதுவைக் கண்ணாடிக் குவளைகளில் ஊற்றிக் கொடுக்க யவன மகளிரும் இறக்குமதி செய்யப்பட்டனர். ஆனால் அப் பண்டங்களைத் திரட்டிக் கொடுத்த மலைவாழ் மக்களும் அலைவாய்க்கரை(கடற்கரை) மக்களும் காட்டில் காய்கனிகள், எலி, முயல்களையும் மீனையும் நண்டையும் தின்று வாழ்ந்தனர். உடுத்த உடைதான் நமக்குத் தேவையில்லையே! தாழ்ச்சீலை(கோவணம்) போதுமே! இயற்கை தந்த “வரம்” அல்லவா அது, அதாவது நம் நாட்டுத் தட்பவெப்பம். அதனால்தான் வெள்ளையரைப் போல் சட்டையும் முழுக்காற் சட்டையும் தொப்பியும் கருப்புக் கண்ணாடியும் அணிந்த “மனித நேயர்கள்” பலர் திறந்த உடம்புதான் நம் மக்களுக்கு, அதிலும் குறிப்பாக வெய்யிலிலும் காற்றிலும் மழையிலும் பனியிலும் பாடுபடும் உழைப்பாளிகளுக்கு நம் “மரபுப்படி” ஏற்றது என்று அறிவுறுத்துகிறார்கள்! அதே நிலையை இன்றும் தொடர்ந்து இங்குள்ள பாட்டாளி மக்களின் நுகர்வு மட்டத்தைத் தாழ்த்தி அவர்களை வறுமைக்குள்ளாக்கி அவர்களது பகரம் பேசும் ஆற்றலை அழித்து அவர்களது உழைப்பை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைந்த விலைக்குத் தட்டிப்பறிப்பதற்காகத்தான் முதலாளிய விளைப்பு நம் நாட்டில் வேர் கொண்டு விடாமல் தடுக்க இத்தனை முனைகளில் முயல்கிறார்கள்.

உலக மக்களில் மிகப் பெரும்பாலான மக்களை விலங்குகள் போல் வாழ்க்கையின் அடிமட்டத்தில் அமிழ்த்தி ஒரு சிறு குழுவுக்கு உலக வளங்களையெல்லாம் பகிர்ந்து கொடுக்கும் உலக வாணிகக் குழுக்களின் பிடியில்தான் இன்று வரையிலான உலகின் அரசுகளெல்லாம் சிக்கியிருந்துள்ளன. அரேபியர்களிடமிருந்து வெள்ளையர் தம் கடலாதிக்கத்தை மீட்ட போது அதன் உடனிகழ்வாக தொழிற்புரட்சியும் முதலாளிய வடிவில் வல்லரசியமும்(ஏகாதியத்தியம்) உருவாயின. அப்போது தோன்றிய பொருளியல் கோட்பாடுகள் உலக வாணிகத்தை, அதாவது ஏற்றமதி -இறக்குமதியை அடிப்படையாகக் கொண்டே தோன்றின. பணத்துக்காகத் தங்க ஈடு, நாணயமாற்று குறித்த அடிப்படை விதிகள் இந்த நோக்கிலேயே உருவாயின. பண்டத்தைப் படைத்த நாட்டு மக்களின் நுகர்வும் தம் நாட்டுப் பண்டங்கள் மீது அவர்களுக்கிருந்த பிரிக்க முடியாத நுகர்வு உரிமையும் எவராலும் கணக்கிலெடுக்கப்படவில்லை. அதனால்தான் எந்த மூலப் பொருளும் இல்லாத சப்பான், குடிக்கும் தண்ணீரைக் கூட இறக்குமதி செய்யும் சிங்கப்பூர் போன்ற நாடுகளின் மக்கள் உலகிலேயே மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை எய்த முடிந்திருக்கும் முரண்பாட்டை நாம் காண வேண்டியுள்ளது.

மக்களாட்சி என்பதன் உண்மையான நோக்கம் அல்லது அடிப்படை ஒரு நாட்டின் வளங்கள் மீது அம் மக்களுக்குள்ள பிரிக்க முடியாத உரிமையின் அடிப்படையில் அமைய வேண்டும். வாக்குரிமை, கருத்துரிமை, செயலுரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை என்ற எந்த உரிமையை விடவும் இந்த உரிமைதான் முதலிடம் பெற வேண்டும். மக்களின் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றாத எந்த உரிமையாலும் பயனில்லை. இன்றைய பாராளுமன்ற மக்களாட்சி மக்களின் கையில் வாக்குச் சீட்டைக் கொடுத்து அவர்கள் “தேர்ந்தெடுக்கும்” ஆட்கள் பாராளுமன்றம் என்ற ஓர் அவையில் மேற்கொள்ளவிருக்கும் முடிவுகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படாத அதிகார வகுப்பு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், அவை மக்களுக்குப் பெருங்கேடு விளைவிப்பவையாயிருந்தாலும் முன் கூட்டியே ஒப்புதல் கொடுப்பதாகும். தேர்தலில் போட்டியிடுவோரை முடிவு செய்யும் உரிமை மக்களுக்கில்லை. கட்சியும் அரசு நிறுவனமான தேர்தல் ஆணையமுமே அதைச் செய்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் மக்களுக்குக் கட்டுப்பட்டவரல்ல, கட்சிக்குக் கட்டுப்பட்டவர், அதாவது கட்சியின் பேராளர். இத்தகைய ஆட்சியை எப்படி மக்களாட்சி என்று கூற முடியும்? அத்துடன் பராளுமன்றம் மேற்கொள்ளும் முடிவுகளை நடைமுறைப்படுத்துவது மட்டுமல்ல, பாராளுமன்றம் மேற்கொள்ள வேண்டிய முடிவுகளை சட்ட முன்வரைவு வடிவிலும் பிறவகையிலும் தீர்மானிப்பவர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளே. உண்மையில் பாராளுமன்ற மக்களாட்சி என்பது பாராளுமன்றம், தேர்தல், கட்சிகள், கொள்கைகள் என்ற முகமூடிகளை அணிந்து கொண்ட அதிகாரிகளின் ஆட்சியே, அதாவது அரசின் ஆட்சியே, “அரசாட்சியே”, மக்களாட்சி அல்ல.

உண்மையான மக்களாட்சி என்பது மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பண்டப் படைப்பிலிருந்து தொடங்க வேண்டும். முதலாளிய விளைப்பு முறையில் மிகப் பெரும்பான்மை மக்களும் தொழிலாளர்களாகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் பணிபுரியும் தொழில் நிறுவனங்களிலிருந்து பெறும் நல்னகளின் ஒரு பகுதியை அவர்களுக்கு அந் நிறுவனத்தின் மூலதனப் பங்குப் பத்திரமாக வழங்கச் சட்டத்தில் வகை செய்ய வேண்டும். அத்துடன் அவர்கள் தங்கள் சேமிப்பிலிருந்தும் தாங்கள் பணியாற்றும் அல்லது வேறு நிறுவனப் பங்குகளிலும் முதலிடலாம். இவ்வாறு அவர்கள் ஒரே நேரத்தில் முதலாளிகளாகவும் தொழிலாளிகளாகவும் செயற்பட முடியும். தொழிற்சாலைகளின் ஆள்வினையை (நிர்வாகத்தை) முடிவு செய்வதில் அவர்கள் பங்கேற்க முடியும். சம்பளம் போன்ற உடனடிப் பலன்கள், ஆதாய வடிவிலான சேமிப்பு, அதாவது சம்பளத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு நிறுவனத்தின் விரிவாக்கத்துக்கு உறுதுணை புரிந்து அதன் மூலம் தன் பங்கை வளர்த்துக் கொள்வது என்ற நீண்டகால நலன்கள் ஆகிய இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தின் மூலம் பொருளியல், பண்ட விளைப்பு, நுகர்வு, சேமிப்பு, ஆள்விணை இவையனைத்தும் தழுவிய அரசியல் அறிவும் விழ்ப்புணர்வும் அவற்றின் அடிப்படையிலமைந்த அரசியல் செயற்பாடும் என்று மக்களாட்சிக்கு இன்றியமையாத அடிப்படைத் தகுதிகளையும் பயிற்சிக்களையும் மக்கள் பெற்றுக்கொள்ள முடியும். அதோடு கூடவே கூட்டுப் பொறுப்புணர்வும் கூட்டுச் செயற்பாடும் பிறரை மதிக்கும் பண்பும் அவர்களிடையில் உருவாகும். இந்த மக்களாட்சியிலும் ஏதோவொரு வடிவிலான தேர்தல் முறை இருக்கலாம். ஆனால் அவ்வாறு தேர்த்தெடுக்கப்பட்டவர்களை மக்களின் கூட்டு நடவடிக்கை கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு ஏற்றுமதி - இறக்குமதி, உலக வாணிகம் ஆகியவை ஒழிக்கப்பட வேண்டும். உள்நாட்டு அனைத்துத் தேவைகளையும் அங்குள்ள மூலவளங்களைக் கொண்டே நிறைவேற்றுவதே உண்மையான அறிவியல் - தொழில்நுட்பங்களின் இலக்கணம் என்றாக வேண்டும். உள்நாட்டு மக்களின் தேவைகளையும் மீறிக் கிடைக்கும் மீட்கத் தக்க வளங்களை மட்டும் பிற நாட்டு மக்களுடன் நேரடியாகப் பரிமாறிக்கொள்ளும் நடைமுறை உருவாக வேண்டும். இந்த அடிப்படையை நோக்கிய ஒரு பொருளியல் கோட்பாட்டை உருவாக்க வேண்டும்.

நம் கடலோரத்தில் வாழும் மக்களின் தேவைகளை இன்றைய விளைப்புமுறை, தொழில்நுட்பங்கள், வாணிக முறைகள் ஆகியவற்றால் நிறைவு செய்ய இயலாமையால் அவர்கள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொள்ளும் சூழ்நிலையை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது என்று அலசத் தொடங்கினோம். இந்தச் சிக்கலை மீனவர்களின் சிக்கலாக மட்டும் தனித்துப் பார்க்க இயலாது; இதனுள் அனைத்து மக்களின் பண்பாடு, தொழில்நுட்பங்கள், மரபுகள், பொருளியல் நிலை, குமுக அமைப்பு ஆகிய அனைத்தும் பின்னிக் கிடக்கின்றன; உண்மையில் பிற மக்கள் அனைவருக்கும் உரிய சிக்கல்களுக்கு நடுவில் மீனவர்கள் சிக்கிக் கிடக்கிறார்கள் என்பதைப் பார்த்தோம். தமிழகம் அளாவிய முதலாளிய விளைப்பு முறைதான் இந்த ஒட்டுமொத்தச் சிக்கலின் தீர்வு என்பதையும் அதை எய்துவதில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் தடைகளையும் அவற்றை எவ்வாறு தகர்க்கலாமென்பதையும் பார்த்தோம். இப்போது மீண்டும் கடற்கரைக்கு வருவோம்.

மீன்பிடிப்பதற்கு இன்று விசைப்படகுகள் புழக்கத்தில் வந்தாலும் இன்னும் கட்டுமரங்களே கூடுதலாகத் தொழிலில் உள்ளன. இதனால் விசைப் படகுகள் கூட துறைமுகங்களோ இறங்கு தளங்களோ இன்றி வெறும் கடல் மணலிலேயே “மடியை” இறக்குகின்றன. நம் நாட்டில் நாம் நிலத்தை எவ்வாறு வைத்திருக்கிறோமோ அது போலத்தான் கடற்கரையையும் திறந்த கழிவறையாக வைத்துள்ளோம். அதனால் மீனெனும் உணவுப் பண்டம் அதற்குத் தேவையான தூய்மையுடன் கையாளப்படவில்லை. மீன்பிடித் துறைமுகங்களும் தூய்மையான நிலையில் பேணவோ கையாளவோ படவில்லை. அதனால்தான் நம் நாட்டுக் கடலுணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகள் அவை தூய்மையான நிலையில் கையாளப்படவில்லை என்று குறை கூறுகின்றன. ஏற்றுமதி சார்ந்திருக்கும் மனநிலையை நாம் வளர்த்து விட்டதனால் இதைக் காட்டி நம்மைக் கையேந்தும் நிலைக்கு அயலவர்கள் தள்ளியிருக்கிறார்கள். அவர்களுக்காக என்றில்லாமல் நமக்காகவும் நாம் நம் உணவுப் பொருட்களைத் தூய்மையான நிலையில் கையாள வேண்டும்.

கடலுணவுப் பொருட்கள் என்றில்லை, நாம் உண்ணும் காய்கறிகள், கீரைகள் என்று அனைத்துமே தூய்மையற்ற சூழ்நிலையில் விளைக்கப்பட்டு தூய்மையற்ற சூழ்நிலையில் கடவப்பட்டு தூய்மையற்ற சூழ்நிலையில் விற்கப்படுகின்றன. தினசரிக் சந்தைகள் எனப்படும் நாளங்காடிகள் தூய்மைக் கேட்டின் பிறப்பிடங்களாக உள்ளன. மழைக் காலங்களில் அவற்றினுள் நடப்பதற்குத் தமிழர்கள் போன்ற “தனிப் பிறவிகளால்”தான் முடியும். பல நகரங்களில் நாளங்காடிகள் சாலையின் இரு மருங்குகளிலும்தாம் கூடுகின்றன. சாலையில் ஒடும் பல்வேறு ஊர்திகள் கிளப்பும் புழுதி, மழைக்காலங்களில் அவை அள்ளி வீசும் சேறும் சகதியும், சாலையின் இரு மருங்குகளிலும் உள்ள கட்டடங்களிலிருந்து வெளிவரும் கழிவுகள், அங்காடி கூடும் முன் அவ்விடத்தில் மக்கள், கழிக்கும் கழிவுகள் என்பவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்தால் உணவு நம் தொண்டைக்குள் இறங்காது.

இந்த நிலையில் உழவர் சந்தைகளைக் கருணாநிதி அறிமுகம் செய்துள்ளார். இனி மீனவர் சந்தையும் அறிமுகம் செய்யவுள்ளார். அவற்றைப் பற்றிச் சில கூறியாக வேண்டும்.

வாணிகன் என்பவன் மனித இனத்தில் ஓர் இன்றியமையாத சூழலில் தோன்றியவன். மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றை தாங்களே இயற்கையிலிருந்து திரட்டிப் பயன்படுத்திவந்தனர். தாங்கள் வாழும் பகுதிகளில் வளங்கள் போதாதபோது அடுத்த இடம் நோக்கி நகர்ந்தனர். புதிய இடத்தில் ஏற்கெனவே மக்கள் கூட்டம் இருந்தால் இரு கூட்டங்களுக்கும் மோதல்கள் நிகழ்ந்தன. தொடர்கதையான இந்த மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர, ஒரு பகுதியில் கிடைக்காத, ஆனால் இன்னொரு பகுதியில் தேவைக்கு மேல் கிடைக்கின்ற பொருட்களை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொண்டனர். இதுதான் நில எல்லைகளும் அதனடிப்படையிலான தேசியங்களும் உருவான பொருளியல் அடிப்படை. இவ்வாறு ஒவ்வொரு குழுவும் ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களுடன் பண்டங்களை மாற்றிக் கொள்ளும் நிலை வந்ததும் அவ்வாறு பண்டங்களைக் கொண்டுசெல்லவும் மாற்றுப் பண்டங்களை வாங்கி வரவும் ஒவ்வொரு குழுவிலும் தனித்தனி ஆட்கள் அல்லது குழுக்கள் உருவாயினர். அடுத்த கட்டமாக இந்த நிகழ்முறை விரிவடைந்த போது தன்னிடம் இருக்கும் பொருளைத் தேடும் இன்னொரு குழுவிடம் தான் விரும்பும் பொருள் இல்லாதிருந்தால் அதே போல் தான் விரும்பும் பொருளை வைத்திருக்கும் மூன்றாவது ஒரு குழுவுக்குத் தன்னிடம் இருக்கும் பொருளின் தேவை இல்லாதிருந்தால் இந்தப் பரிமாற்றம் சிக்கலாகிறது. அப்போது பண்டங்களைச் சுமந்து கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட குழுவினரை அணுகி ஒன்றோடொன்று மாற்றி இறுதியில் தாம் விரும்பும் பண்டத்தைத் பெற வேண்டும். இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்குத்தான் பணம் என்ற ஒரு செயற்கைச் செல்வம் மனிதனால் படைக்கப்பட்டது. அத்துடன் பல்வேறு குழுக்களிலும் பண்டப் பரிமாற்றத்துக்கென்று ஒதுக்கப்பட்ட தனி மனிதர்கள் இணைந்து வாணிகக் குழுக்கள் உருவாயின. பணம் அனைத்துப் பண்டங்களோடும் மாற்றத்தக்கது. தன்னிடம் இருக்கும் பொருளுக்குப் பணத்தையும் பணத்துக்குத் தனக்கு வேண்டும் பொருளையும் எளிதில் மாற்றிக்கொள்ள முடிந்தது. அனைத்துப் பொருட்களும் குவியும் அங்காடிகள் உருவாயின. பணம் முதலில் உப்பு, மாடு, தோல் ஆகிய வடிவங்களில் இருந்தன. பின்னர்தான் பொன்மத்தில்(உலோகத்தில்) செய்யப்பட்டு நாணயங்களை வாணிகக் குழுக்கள் வெளியிட்டன. அந் நாணயங்கள் குறிப்பிட்ட வடிவங்களில் இருந்தன. உருண்டை வடிவத்தில் சிறிது தட்டை, வட்டத்தில் சிறு ஓட்டை போன்றவை அந்த வடிவங்கள். நாளடைவில் அரசர்கள் தலையிட்டு நாணயங்களைத் தங்கள் பெயரில் வெளியிட்டனர். இதனை வாணிகக் குழுக்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது. அதனால் அரசன் நாணயங்கள் அச்சிடும் வேலையைத் “தம்பட்டம்” (தன் + பட்டம்) அடித்தல் என்று அழைத்தனர். “தம்பட்டம்” அடித்தல் ஒரு கேலிச் சொல்லாய் இருப்பது அதனால்தான் போலும்.

உலகில் தொலைவிலுள்ள பகுதிகளை வாணிகர்கள்தாம் இணைத்தனர். பெரும் பேரரசுகளுக்கு வழிகோலினர். இயற்கை வழிகளான கடல், ஆறுகள் மூலம்தான் இது தொடக்கத்தில் இயன்றது. உலகின் மிகத் தொன்மையான அசர மரபான பாண்டிய மரபு மீனவர்களால் அவ்வாறுதான் அமைந்தது. உள் நாட்டிலும் வாணிகர்களால்தான் அரசுகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் வெவ்வேறு நிலப்பகுதிகளை இணைக்கும் பாதைகளை அவர்கள்தான் வகுத்தனர். எடுத்துக்காட்டாக மனிதன் கடக்க வொண்ணாத பாலை நிலத்தை ஒருபுறம் முல்லை நிலத்திலிருந்தும் மறுபுறம் மருத நிலத்திலிருந்தும் கடந்தவர்கள் வாணிகர்களே. அவர்களின் போக்குவரத்தின் விளைவாகவே பாலை நிலத்தின் இரு மருங்கிலுமிருந்து வழிப்பறிக் கள்ளர்கள் பாலை நிலத்தில் குடியேறினர். இதுவும் தமிழ்ப் பொருளிலக்கணம் நமக்குக் காட்டும் சான்று. ஆக நிலத்திலும் ஆட்சியமைத்தவர்கள் வாணிகர்களே. அதற்கு அடிப்படையாயமைந்தது வழிப்பறிக்காரர்களை எதிர்கொண்ட அவர்கள் ஒரு போர்ப் படையாக இயங்க வேண்டியிருந்த வரலாற்றுத் தேவையே.

4.12.17

பாழ்பட்டுக்கிடக்கும் தமிழகக் கடற்கரை - 2

பாழ்பட்டுக் கிடக்கும் தமிழகக் கடற்கரை - 2

மீனவ மக்களை இந்த நெருக்கடியிலிருந்து விடுவிக்க முடியும். அதற்கு எல்லையில்லா வாய்ப்புகள் உள்ளன. அவ்வப்போது மிச்சமாகும் மீனை இப்போது போல் கருவாடாக மாற்றுவதைக் கைவிட்டு அவற்றை இற்றை(மாடர்ன்)த் தொழில்நுட்பங்கள் மூலம் பதப்படுத்தி போணிகள் (டப்பாக்கள்) அல்லது வேறு கொள்கலன்களில் அடைத்து சந்தைக்கு விடுதல், மீனை ஓரளவு சமையல் செய்து அடைத்து விற்பனைக்கு விடுதல், மீனுடன் நண்டுகள், நத்தைகள், சிப்பிகள், கடல் அட்டைகள், நட்சத்திர மீன்கள், பாசிகள் போன்று உண்ணத்தக்கவை அனைத்தையும் திரட்டிப் பதப்படுத்தியும் ஒரளவு சமையல் செய்தும் அடைத்து சந்தையில் விடுதல் என்று தொழிலை விரிவுபடுத்தலாம். கடற்கரையில் கிடைக்கும் கிளிஞ்சல்கள், சங்குகள் போன்றவற்றைத் திரட்டி அலங்காரப் பொருட்கள் செய்யலாம். இவை அனைத்துக்குமான தொழிற்சாலைகளைக் கடற்கரையில் அமைக்கலாம். துலை, நளி (ஐப்பசி, புரட்டாசி) மாதங்களில் கணக்கின்றிக் கிடைக்கும் மீன்களை இப்போது போல் ஆழுக வைத்து ஏற்றுமதி செய்யாமல் பிடித்த உடனே பதப்படுத்தி அடைத்து வைத்துக் கொண்டு பாடுகுறைந்த மாதங்களில் அவற்றை மக்களுக்குக் கிடைக்கச் செய்யலாம், மீனவர்களுக்கும் வேலை தொய்வின்றிக் கிடைக்கும். மீன் தொடங்கி உண்ணத்தக்க அனைத்துக் கடல் பொருட்களையும் சமைக்கும் முறைகளை அனைவருக்கும் கற்பிக்கும் பணியையும் மேற்கொள்ளலாம்.

இவையனைத்துக்கும் மேலாக இன்னொரு பெரும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பணக்கார நாட்டு மக்கள் விடுமுறை நாட்களில், தாங்கள் எவ்வளவு தொலைவிலிருந்தாலும் கடற்கரை நோக்கிச் செல்கின்றனர். அங்கு படகுவிடல், ஒற்றைப் பாய்மரப் படகுகளில் திறனை வளர்த்தல், பல்வேறு வகை நீர்ச் சறுக்கல்களில் ஈடுபடல் என்று பொழுதை இனிமையாகக் கழிக்கின்றனர். அது போல் நீண்ட கடற்கரையையுடைய நம் நாட்டு மக்களையும் கடற்கரைக்கு ஈர்த்து இவை போன்ற விளையாட்டுகளில் பழக்கி ஆர்வமூட்ட வேண்டும். இதற்காக மீனவ இளைஞர்களே முதலில் பயிற்சி எடுக்க வேண்டியிருக்கும். இந்த முயற்சி வெற்றி பெற்றால் நீச்சல் தொடர்பான விளையாட்டுப் போட்டிகளில் பணக்கார நாடுகள் வெற்றி பெறுவதைப் பார்த்து நாம் ஏக்கப் பெருமூச்சுவிட வேண்டியிருக்காது. இவ்வாறு செய்வதால் மீனவர்களே கடற்கரைகளுக்குத் தனியுரிமை பெற்றிருந்த நிலை மாறலாம். ஆனால் மீனவர்களுக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்குள் ஊடுருவித் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளும் நோக்கம் உருவாகி அதற்கான வாய்ப்புகளும் பெருகும்.

தொழில் வளர்ச்சி, தொழில் பன்முகமாதல் என்பவையெல்லாம் கடற்கரையில் மட்டும் தனித்து நிகழ முடியாது. நாடு மொத்தமும் அந்நிலைக்கு மாறினால்தான் மக்களின் வேலைவாய்ப்புகள் விரிவடைந்து பணப்புழக்கம் ஏற்பட்டு கடற்கரையில் படைக்கப்படும் பண்டங்கள் உள்நாட்டில் நுகரப்பட்டு அவற்றைச் செய்தவர்களுக்கு விற்றுமுதல் ஆகும். எனவே இந்தப் பன்முகமாதல் அனைத்துத் தொழில்களிலும் துறைகளிலும் நிகழ வேண்டும்.

எடுத்துக்காட்டாக, தேங்காய் மிகுதியாக விளையும் இடங்களில் தேங்காயைப் பால், பொடி, சிரட்டை எண்ணெய், சிரட்டைகள், அதிலிருந்து கிடைக்கும் பிற பொருட்கள், கதம்பல் எனப்படும் தேங்காய் மட்டையிலிருந்த தும்பு, அதிலிருந்து கழியும் தூளிலிருந்து உரம், ஈரத்தைப் பிடித்து வைக்கும் அட்டைகள், ஈர்க்குப் பொருட்கள், ஓலையையும் மட்டையையும் மட்கவைத்து உரம் என்று எத்தனையோ தொழில்களைத் தொடங்க முடியும். வாழைப் பழத்திலிருந்து இனிப்புப் பொருட்கள், வாழைப்பழத் தோலிலிருந்தும் தண்டு, பூ ஆகியவற்றிலிருந்தும் உணவுப் பொருட்கள், மருந்துகள், வாழை இலை, பட்டை, சருகு ஆகியவற்றில் கிடைக்கும் வளிகளைப் பிரித்தெடுத்து ஆற்றல் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தி எஞ்சிய கழிவிலிருந்து கிடைக்கும் வேதிப்பொருட்களையும் பிரித்தெடுத்த பின் உரமாகவும் பயன்படுத்தலாம். நன்செய், புன்செய்த் தவசங்கள் (தானியங்கள் - நெல், சோளம், கம்பு, வரகு போன்றவை), பயிறு வகைகள் பருப்பு வகைகளில் இன்று நாம் விதைகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். அவற்றிலிருந்து கிடைக்கும் பதர், உமி(மேலுறை), தொலி(விதைத் தோல்) போன்ற அனைத்தையும் எரித்தழிக்கிறோம். இதன் மூலம் காற்றும் மாசுபடுகிறது. இவற்றைப் பல்வேறு வகைகளில் பதப்படுத்தி அவற்றிலிருந்து வேதிப்பொருட்களையும் வளிகளையும் பிரித்தெடுத்து எஞ்சியவற்றை உரமாகவும் கால் நடைத் தீவனமாகவும் பயன்படுத்தலாம்.

இன்று தமிழகத்தில் மிகப் பெரும்பாலான மாடுகள் தொழுவங்களில் அடைத்து வளர்க்கப்படுவதில்லை. தொழுவங்களை வைத்திருந்த பண்ணையார்கள் கடந்த காலத்தினுள் மறைந்துவிட்டனர். ஆட்சியாளர்கள் கூட்டுறவுப் “பால் பண்ணைகளை” உருவாக்கிக் குடியிருக்க வீடே இல்லாத வறியவர்களுக்குக் கடன் கொடுத்து மாடு வாங்கி அக் கடனுக்கு வட்டிக்கும் முதலுக்குமாகப் பாலை வாங்கிக்கொள்கின்றனர். கொஞ்சம் மிச்சமும் மாட்டுக்காரனுக்குக் கிடைக்கிறது. அவன் மாட்டை வெட்ட வெளியில் ஓட்டிவிடுகிறான். அது நகரமாயிருந்தால் தெருக் குப்பைகளை உண்ணுகிறது, நாட்டுப் புறங்களில் தரிசு நிலம், விளைநிலம் என்ற வேறுபாடின்றி மேய்கிறது. தெருவிலும் வெட்ட வெளியிலும் படுத்துக்கொள்கிறது. சரியான உணவோ குடிக்க நீரோ இன்றி அது வளர்கிறது. கன்று ஈன்றால் அறிந்து வந்து மாட்டுக்காரன் கன்றைத் தூக்கிச் செல்கிறான். பின்னர் கன்றுக்குப் பாலுட்ட வரும் மாட்டின் பாலைக் கறந்துவிட்டுத் துரத்திவிடுகிறான். இதனால் மாட்டின் சாணமும் சிறு நீரும் உரமாகாமல் வீணாகின்றன, மாட்டின் உடலமைப்பே நாளடைவில் நசிந்து போகிறது. தரத்தில் குறைந்த இன மாடாக நம் மாடுகள் இழிந்து போகின்றன (மாடுகள் மட்டுமென்ன மக்களுமே வறுமையால் அந்நிலையை எய்தியுள்ளனர்). இதன் இன்னொரு பக்கவிளைவாய் நகரத்திலும் தரிசுகளிலும் மரம் மட்டைகள் புற்கள் கூடத் தலைகாட்ட முடியவில்லை. சீமை உடை என்ற வகை மரம் மட்டும்தான், தன் முள்ளால் மாடுகளைத் தடுப்பதால், தாக்குப் பிடிக்க முடிகிறது. ஆடுகளும் அப்படித்தான். இதே முறையில் கடனாக ஆட்சியாளர்கள் கொடுக்கிறார்கள். அவை ஆட்சியாளர்கள் நட்டுவிட்டுச் செல்லும் மரக் கன்றுகளைத் தின்றுவிட்டு மரம் நடு விழாக்கள் ஆண்டு தோறும் தொய்வின்றி நடக்க அவர்களுக்கு வழியமைத்துக் கொடுக்கின்றன. ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான கோடி உரூபாய்களை மரம் நடுவதற்காக வெளிக்கடன் வாங்கித் தங்கள் பக்கறைகளை(பைகளை) நிரப்பிக்கொள்கிறார்கள். இந்த ஒற்றை இரட்டை ஆடுகள் வளர்ப்பவர்களோ தனியார் நிலங்கள், சாலை ஒரங்களிலும் குளக்கரைகளிலும் நிற்கும் மரங்கள் என்ற வேறுபாடின்றிக் கிளைகளை வெட்டித் தொண்டு செய்கிறார்கள். “மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! வந்தே மாதரம்!”.

இதற்கு மாறாகப் பெரும் பெரும் ஒருங்கிணைந்த பண்ணைகளில் இந்த மாடுகளையும் ஆடுகளையும் வளர்ப்பதாய் வைத்துக்கொள்வோம். அவற்றின் சாணம், பிழுக்கை, சிறுநீர் ஆகியவற்றைச் சேர்த்து அவற்றிலிருந்து முதலில் எரிவளி எடுக்க முடியும். வெளியேறும் கழிவை உரமாகப் பயன்படுத்தலாம். அவற்றிலிருந்து காய்கறிகள், தீவனப் புல்கள் என்று விளைவிக்கலாம். நல்ல உணவும், தண்ணீரும் கிடைத்தால் நம் மாடுகள் உயர்ந்த தரத்தை எய்தி நிறையப் பால் தரும். பாலாக விற்றது போக எஞ்சியதைப் பதப்படுத்தித் துணைப் பொருட்கள் செய்யலாம். இந்தப் புது வாய்ப்புகள் மூலம் எண்ணற்ற வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம். நம் நாட்டு பசுமையைப் பாதுகாக்கலாம் என்பது எல்லாவற்றுக்கும் மேலான நன்மை.

இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் கணக்கற்ற வேலை வாய்ப்புகளைத் உருவாக்க வாய்ப்புத் தருகிறது முதலாளிய விளைப்பு முறை. இந்த வேலை வாய்ப்புகளைத் தேடி மக்கள் இடம் பெயர்வது தேவையாகும். சாதிகளின் அடிப்படையில் அமைந்த ஊர்ப்புறங்கள்(இங்குதான் இந்தியாவின் “இதயமே” இருப்பதாக மோகன்தாசு கரம் சந்து காந்தி கூறினர். அந்தச் சாதியமைப்புதான் இந்தியக் குமுக அமைப்பின் மிக உயர்ந்த பண்பு என்று பெருமிதப்பட்டார்) கலைவதும் அவற்றின் தொழிலடிப்படை மறைவதும் இன்றியமையாதது என்று கருதுவோருக்கு முதலாளியம் இன்றி வேறு வழியில்லை. தேங்கிய தொழில்நுட்பத்தின் விளைவுதான் தொழில் சார்ந்த சாதிகள். முதலாளியம் தொழில் நுட்பத்தைத் தேங்க விடுவதில்லை. இடைவிடாமல் அதைப் புதுப்பித்துக் கொண்டிருப்பது அதன் இருப்புக்கு இன்றியமையாததாகும். இவ்வாறு சாதியத்துக்கு நிலைக்களனின்றிச் செய்துவிடும் முதலாளியம்.

சொந்தத் தொழில் என்ற பெயரில் விளைப்பு வகைதுறைகள்(உற்பத்திச் சாதனங்கள்) என்ற கருவிகளோடும் மூலப் பொருட்களோடும் செய்பொருட்களோடும் பிணைக்கப்பட்டு புற உலகத்துடனும் மக்களுடனும் உள்ள குமுக உறவுகள் அறுக்கப்பட்டு ஒவ்வொருவரும் தனித் தீவாய் இருக்கும் நிலை மாறி முதலாளியத்தால் தொழிலாளி வேலை நேரம் போக எஞ்சிய நேரத்தைத் தன் குமுக வாழ்வுக்குப் பயன்படுத்தலாம்.

இந்த நிலையை எய்துவதற்குப் பெரும் முதலீடு தேவை. அதைப் பெறுவதற்கு நம் ஆட்சியாளர்களும் அறிவாளிகளும் காட்டும் வழி உலக வங்கி மற்றும் வெளிநாடுகளில் கடன் வாங்குவது அல்லது நாட்டின் பொருளியலை வெளிநாட்டினருக்குத் திறந்து விடுவது ஆகும். உள்நாட்டில் மூலதனம் திரட்டும் வாய்ப்பு உள்ளதா, அதை எய்துவுது எப்படி என்ற சிந்தனையையே வளர்ப்பதில்லை. நம்மிடம் மூலதனம் இல்லை என்ற கருத்தை முன்வைத்தே அவர்கள் அரசியல் நடத்துகின்றனர். இது உண்மைக்கு மாறானதாகும். நம் மக்களிடம் ஏராளமான பணம் உள்ளது. ஆனால் தனித்தனியாக அவை எந்த உருப்படியான தொழிலுக்கும் போதாது என்ற வகையில் பயனற்றுக் கிடக்கிறது. இதே போன்ற சூழலை எதிர்கொள்ளத்தான் முந்திய நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் பங்கு மூலதனம் என்ற மிகச் சிறந்த உத்தியை வகுத்து நடைமுறைப்படுத்தினர். அதைச் சரியாகக் கடைப்பிடித்தால் நம்மில் உரூ 5000/- வைத்திருப்போர் கூட தங்கள் பணத்தை முதலிட்டு நாட்டின் விளைப்புச் செயல்முறையில் பங்கேற்க முடியும். ஆனால் இங்கு நடந்ததென்ன? முப்பதாண்டுகளுக்கு முன் மக்களிடையில் பங்குச் சந்தை மீது பேரார்வத்தை ஏற்படுத்தினர் ஆட்சியாளர்கள். தாளிகை (பத்திரிகை)களெல்லாம் பங்குச் சந்தையைப் பற்றி மக்களுக்கு கற்பிப்பதற்கென்று தனிப் பகுதிகளை ஒதுக்கின. பல இலக்கம் கோடி உரூபாய்கள் பங்குச் சந்தையில் பாய்ந்தன. ஆட்சியாளர்கள் அறிவித்த “தாராளமாக்கலை” நம்பிப் பல இளைஞர்கள் புதிய தொழில் திட்டங்களோடு களத்தில் இறங்கினர். “தாராளமாக்கல்” அயல் நாட்டினருக்கும் அதிகாரிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும்தான் என்பதைக் காலங்கடந்து உணர்ந்தனர். ஆட்சியாளர்களின் கையாளான அர்சத் மேத்தா என்பவன் அரசு நிறுவனங்களின் பணத்தைப் பயன்படுத்தி ஓர் இலக்கம் கோடி உரூபாய் அளவுக்குச் பங்குச் சந்தையில் கொள்ளையடித்து ஆட்சியாளர்களுடன் பங்கு போட்டுக்கொண்டான். அரசு நிறுவனமான செபி எனும் பங்குச் சந்தைக் கட்டுப்பாடு வாரியத்தினர் போலித் “தொழில் முனைவர்”களோடு கூட்டுச் சேர்ந்து அவர்கள் அறிவித்த போலித் தொழில் நிறுவனங்களைப் பங்குச் சந்தையில் பட்டியலிட்டுக் கொடுத்து பல ஆயிரம் கோடி உரூபாய்களைக் கொள்ளையடித்தனர். இப்படிப் பல முனைகளிலும் தாங்க முடியாத வகையில் சூடுபட்ட பொதுமக்கள் பங்குச் சத்தைப் பக்கமே வராமல் ஒதுங்கிக்கொண்டனர். அதே வேளையில் பங்குச் சந்தை என்ற பெயரில் இன்று நடைபெறும் வாணிகம் இரண்டாம் நிலை பங்குச் சந்தை எனப்படும். இதில் ஒரு தொழில் நிறுவனத்தில் முதலிட்டதற்குச் சான்றாக ஒருவருக்குத் வழங்கப்படும் சான்றிதழை ஒருவர் இன்னொருவருக்கு விற்பார். இவ்வாறு போடப்படும் பணத்தில் ஒரு தம்பிடி கூட அந்தப் பங்கினை முதன் முதலில் வெளியிட்ட நிறுவனத்துக்குச் சேராது. தொழில் முதலீட்டோடு தொடர்பு அறுந்து போன “தூய” சூதாட்டம்தான் இது. இந்த உண்மை அனைத்து மக்களுக்கும் மறைக்கப்படுகிறது. இதன் மூலம் பெருங்கொண்ட மக்களுக்கு பங்கு மூலதனத்தின் மீது வெறுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் நாட்டுப் பொருளியல் நடவடிக்கைகளில் பங்குகொள்வதன் மூலம் அரசியல் மக்களாட்சிக்கு அடிப்படையாக அமையத்தக்க ஒரு பொருளியல் மக்களாட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

முதலீடு, மூலதனம் என்ற களங்களில் இடங்கைக் கட்சிகள் எனப்படும் பொதுமைக் கட்சிகளும் நிகர்மை(சோசலிச)க் கட்சிகளும் வெளிக்கடன், வெளிநாட்டு மூலதனம், உள்நாட்டு மூலதனம் அனைத்தையும் எதிர்ப்பர். ஆனால் மாற்றுவழியைக் கூறமாட்டார்கள். அவர்கள் ஆட்சி செய்யும் மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா மாநிலங்களில் வெளிக் கடன்களையும் வெளியார் முதலீடுகளையும் வரவேற்றுப் போற்றுகின்றனர். அடக்கத்தில் அவர்கள் நம் நாட்டு ஆளுங்கணத்தாரின் பொதுவான திட்டத்திற்குள்ளாகவே - அதாவது அயலாருக்காக உள்நாட்டுப் பொருளியல் விசைகளை நசுக்குதல் - வருகின்றனர்.

முதலாளியத்துக்கு எதிரான மூன்றாவது தடை இந்தப் பரவலான தொழில் வளர்ச்சியில் உடலுழைப்பின் மூலம் பங்கு கொள்வதற்கு நம் இளைஞர்களின் தயக்கம். அண்மைக் காலம் வரை தொழில் மற்றும் வாணிக நிறுவனங்களின் வாயில்களில் “வேலை காலி இல்லை” என்ற அறிவிப்புகள் தவறாமல் தொங்கும். ஆனால் இன்று தேநீர்க் கடையிலிருந்து பெரும் பெரும் தொழிற்சாலைகளின் வாயில்கள் வரை “வேலைக்கு ஆள் தேவை” என்ற அறிவிப்புகள் தொங்குகின்றன. அதே நேரத்தில் வேலையற்றோர் படை நாளுக்கு நாள் பெருகி வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன. இந்த விந்தையான முரண்பாட்டுக்கு நம் பண்பாட்டுப் பின்னணியும் இந்த நூற்றாண்டு வரலாற்றுப் பின்னணியும் அவற்றுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும் நம் கல்விமுறையும் காரணங்களாகும்.

உழைப்போரை இழிந்தோராகப் பார்ப்பது நம் பண்பாடு. தொல்காப்பிய காலத்திலேயே (இதன் காலம் கி.மு. 7600 வரை மதிப்பிடப்படுகிறது) உடலுழைப்போர் மீது இந்த இழிவு சுமத்தப்பட்டுவிட்டது. அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரையில புறத் தென்மனார் புலவர் என்ற வரிகளின் பொருள், அடிமைகள், கைத்தொழில் வல்லோர் ஆகிய உடலுழைப்பாளர்கள் ஐந்திணை எனப்படும் மேற்குடி மக்களின் களவு, கற்பு ஒழுக்கத்துக்கு உரியவரல்லர் என்பதாகும். தொல்பழங்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி மேம்பாட்டிராத நிலையில் மக்களின் எண்ணிக்கையில் மிகப் பெரும்பாலோர் உடலுழைப்பாளர்களாகவே இருந்திருக்க முடியும். அவர்களை எஞ்சிய ஒரு மிகச் சிறு குழு ஒடுக்கி ஒதுக்கி வைத்திருந்ததையே இவ் வரிகள் குறிப்பிடுகின்றன. வரலாற்றுக் காலத்தில் இடங்கைப் பிரிவினுள் தொழிற் சாதிகள் சேர்க்கப்பட்டதும் இதே அடிப்படையில்தான். இதைவிடப் பெரிய ஒரு தாக்குதல் உளவியல் மட்டத்தில் உழைக்கும் மக்கள் மீது சுமத்ததப்பட்டது. அதுதான் சித்தர்களின் பெயரில் கூறப்பட்ட “குண்டிலினிக் கோட்பாடு”. தரையில் புலித்தோல் அல்லது மான்தோல் மீது “ஆசன” மிட்டு அமர்ந்து மூக்கு நுனியை உற்றுநோக்கி மூச்சை வலஞ்சுழி, இடஞ்சுழி, சுழிமுனை என்று மூக்கின் தனித்தனியான இரு வேறு துளைகளிலும் பின் இரு துளைகளிலும் உள்வாங்கி மூக்கின் உள் சந்திப்பில் இணையவைத்து அதனைக் கிழ்நோக்கிச் செலுத்தினால் அவ்வாறு அமர்ந்திருப்பவனின் குண்டியில் அல்லது மூலத்தில்(“மூலாதாரத்தில்”) பாம்பு போல் சுருண்டு படுத்திருக்கும் குண்டலினி(குண்டி → குண்டலினி) ஆற்றல் எழுந்து தொப்புள், நெஞ்சு, தொண்டை போன்ற நிலைகளைத் தாண்டித் தலை உச்சிக்கு ஏறி அந்த மனிதனுக்கு உலகத்திலுள்ள அறிவு அனைத்தையும் எய்தும் ஆற்றலைத் தருமாம். அவன் கடவுளுக்கு இணையான ஆற்றல் பெற்றுக் கடவுளாகவே மாறிவிடுவானாம். காடுமேடெல்லாம் அலைந்து ஒவ்வொரு மூலிகையாகத் தேடி அவற்றின் வேர் முதல் விதை வரை அனைத்துப் பண்புகளையும் நேரிலும் ஆய்வகங்களிலும் ஆய்ந்தும் சுடுகாடு இடுகாடுகளில் பேயாண்டிகளாய் அலைந்து செத்த மனித உடல்களை ஆய்ந்தும் நிலத்தில் கிடைக்கும் கனிமப் பொருட்களைப் பிரித்தெடுத்து பொன்மங்களைப் பாடம் செய்தும் மருந்துகளையும் மருத்துவ முறைகளையும் வகுத்தும் வானிலுள்ள கோள்கள் விண்மீன்களின் இருப்பு நிலைகளையும் இயக்கங்களையும் அவற்றுடன் புவிக்குரிய உறவியல் இயக்கத்தையும் வரையறுத்து அந்த உறவியல் நிலையால் புவிக்கும் புவிவாழ் உயிர்வகைகளுக்கும் மனிதனுக்கும் ஏற்படுகின்ற உடலியல் உளவியல் விளவுகளைக் கண்டுணர்ந்தும் கூறிய கடும் உழைப்புக்குரிய சித்தர்களின் பெயரால் குத்தகை உழவனின் உழைப்பால் உண்ட வஞ்சகச் சோம்பேறிகள் தங்கள் ஒட்டுண்ணி வாழ்வின் இழிவினைப் பெருமையாக்கிக் காட்டக் கட்டிவிட்ட கட்டுக்கதை இது. ஆனால் இந்த கோட்பாடுதான் கல்லாத மக்களை விடக் கற்றவர் அனைவரையும் இன்று பிடித்துள்ளது. இன்று புதிய போலி அறிவியல் விளக்கங்களுடன் மிக விரிவாக இளம் தலைமுறையினரிடையில் புகுத்தப்படுகிறது. மன அமைதிக்கும் சிந்தனையை ஒருமுகப்படுத்தவும் “தியானம்” இன்றியமையாதது என்று அவர்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது. உண்மையில் நம் புதிய தலைமுறைக்குத் தேவைப்படுவது மன அமைதியல்ல, தேடல், புதியவற்றை அனைத்துக் களங்களிலும் தளங்களிலும் படைக்கும் வெறி. மனதை ஒருமுகப்படுத்துவதற்கு நமக்கு ஓர் இலக்கு, குறிக்கோள் தேவை. இலக்கில்லாமல் குறியில்லாமல் மனதை ஒருமுகப்படுத்தல் என்பது ஏமாற்று. சமயம் சார்ந்த உணர்வுகளால் மனதை நிறைப்பதையே “தியானத்”தால் கிடைக்கும் மன ஒருமுனைப்படுத்தல் என்கின்றனர். ஒரு செயலில், தொழிலில் அல்லது வேலையில் முழு மனதுடன் ஈடுபடும் போது கிடைக்கும் மன அமைதியும் மன ஒருமைப்பாடும் இவர்கள் கூறும் “தியானத்”தால் கிடைக்கவே கிடைக்காது. நெடுநேரம் ஒரே பணியில் ஈடுபடும் போது ஏற்படும் சோர்வை, பணியை மாற்றுவதாலோ, விளையாட்டுகள், குமுக - அரசியல் இயக்க ஈடுபாடுகள், குமுகப்பணி, கலைகள் என்றோ செயற்பாட்டைத் திருப்புவதன் முலம் போக்கிக்கொள்ள முடியும். அத்தகைய குறிக்கோள்களையும் வழிமுறைகளையும் இளைய தலைமுறைக்கு மறுத்துத் திசைதிருப்பும் முயற்சியே “தியானம்” பற்றிய புதிய பரப்பல்கள். “ஒடிவிளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா” என்ற பாரதியின் பெயரை முழங்கிக் கொண்டே குழந்தைகள் மனதில் ஓய்ந்திருத்தல் என்ற நச்சை விதைக்கிறார்கள் “வேலை நேரத்தில் வேலையில் முழுமையாக ஈடுபாடு, விளையாடும் போது விளையாட்டில் முழுமையாக ஈடுபடு” என்ற ஆங்கிலப் பொன்மொழியை(Work while you work and play while you play) இளையோர் மனதில் ஊன்றுவதற்குப் பகரம் ஓய்ந்திருத்தலின் புகழைப் பதிக்கிறார்கள்.

ஒட்டுண்ணி வாழ்க்கை மீதான பற்று இந்த நூற்றாண்டில் இன்னொரு முனையிலும் தூண்டிவிடப்பட்டு அந் நஞ்சு நம் குமுகத்தின் சல்லிவேர் வரையிலும் பரவி நிற்கிறது. இதைத் தொடங்கி வைத்தவர்கள் “திராவிட” இயக்கத்தின் முன்னோடிகளான நயன்மை (நிதி)க் கட்சியினர். அயலவர்களான வெள்ளையர்கள் தமிழகத்தினுள் நுழைந்த போது அவர்களிடம் மொழிபெயர்ப்பாளர்களாகவும் தரகர்களாகவும் வாணிகப் பொருட்களை வாங்குவோராகவும் அவர்களுக்கு வழங்குவோராகவும் செயற்பட்டுப் பயனடைந்தவர்கள் பார்ப்பனரல்லா மேற்சாதியினராவர். ஆனால் நாளடைவில் ஆங்கிலர் இந்த நாட்டின் ஆட்சியாளர்களாக மாறிய போது அவர்களுக்குத் தேவைப்பட்டது படிப்பறிவுள்ள உள்நாட்டுக் கூட்டம். காலங்காலமாகப் பாராயணம் (பாராமல் படித்தல், மனப்பாடம் செய்தல்) செய்து அதுவே குருதியில் ஊறிப்போன பார்ப்பனர்கள் எளிதில் அந்த இடத்தைப் பிடித்தனர் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இந்தத் “திறமை” மட்டும் செயற்படவில்லை. பார்ப்பனர்களின் கட்டுக்குள் இருந்த கோயில் தாசிப் பெண்களால் அவர்களுக்கு வெள்ளை ஆட்சியாளருடன் ஏற்பட்ட நெருக்கமும் இதன் பின்னணியில் இருந்தது. மனப்பாடம் செய்யும் திறமை அனைவருக்கும் சம அளவில் உண்டு என்ற உண்மையை இன்று கல்வி வாய்ப்பைப் பெற்ற அனைத்துச் சாதி மக்களும் மெய்ப்பித்து வருகின்றனர். இவ்வாறு மிகப் பெரும்பாலான வாய்ப்புகளைப் பார்ப்பனர் பிடித்து ஆட்சிப் பொறியின் முகாமையான இடங்களில் அமர்ந்துகொண்டனர். அத்துடன் பிற துறைகளில் இருந்த பார்ப்பனரல்லா மேல் சாதியினர் அரசிடம் தாம் முடித்துக் கொள்ள வேண்டிய வேலைகளுக்கு இந்தப் பார்ப்பன அதிகாரிகளின் முன் கைகட்டி நிற்க வேண்டியிருந்தது. அவர்கள் வெளிப்படுத்திய திமிரும் அகம்பாவமும் இவர்களுக்கு ஆத்திரமூட்டியது. எனவே தாங்களும் அவர்கள் அமர்ந்துள்ள பதவிகளில் அமர வேண்டுமென்று விரும்பினர். அதன் விளைவுதான் நயன்மைக் கட்சியின் தோற்றம். அதாவது ஆங்கிலருக்கு அடிமை செய்து பயன்பெறுவதில் பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாத மேற்சாதியினருக்கும் ஏற்பட்ட போட்டிதான் நயன்மைக் கட்சியின் அடிப்படை. இதில் பேரவை (காங்கிரசு)க் கட்சி பார்ப்பனர் நலன்களுக்காகப் பாடுபட்டு வந்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த இடத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய முகாமையான ஒன்று உள்ளது. நம் நாட்டுச் சாதியமைப்பின் விளைவாக நாம் ஒரு குறிப்பிட்ட மனப்பான்மையை எய்திவிட்டோம். நமக்குப் பிறர் மீது ஆதிக்கம் செலுத்தவும் பிறருக்கு அடிமை செய்யவும்தாம் தெரியும். பிறரை நமக்குச் சமமாக மதிக்கவோ பிறருடன் சமமாக நிமிர்ந்து நிற்கவோ தெரியாது. நம் சாதியமைப்பின் ஒட்டுமொத்த இயல்பே இதுதான். நம் கீழுள்ள சாதியினர் மீது நம் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக்கொள்ள நம் மேலுள்ள சாதியினரின் ஆதிக்கத்தைப் பொறுத்துக் கொள்ள நாம் தயங்குவதே இல்லை. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நயன்மைக் கட்சி தொடங்கி வைத்த பார்ப்பனர் எதிர்ப்பு விரிவடைந்து சாதி மறுப்பு இயக்கமாகத் தமிழக மக்களால் வளர்த்தெடுக்கப்பட்ட போது ஒரு கட்டத்தில் ஒவ்வொரு சாதியினரும் தம் கீழுள்ள சாதியினர் தமக்குச் சமமான நிலை நோக்கி மேலெழும்பி வருவது பொறுக்காமல் தம் மேலுள்ள சாதியினரிடம் இன்னும் முறியடிக்கப்படாமல் எஞ்சி நிற்கும் ஆதிக்க நிலையை ஏற்றுக்கொள்ளத் துணிந்துவிட்டனர். அதன் விளைவாகத்தான் பாரதீய சனதா, இரா.சே.ச., இந்து முன்னணி போன்ற சாதியத்தை நிறுத்துவதைத் தங்கள் நோக்கமாக கொண்டு “இந்து” சமயப் போர்வையில் செயற்படும் இயக்கங்களும் சாதிச் சங்கங்களும் சாதி சார்ந்த அரசியல் கட்சிகளும் புயல் போல் வேகங்கொண்டு வருகின்றன. இவ்வாறு தம் மீது ஆதிக்கம் செலுத்தும் சாதிகளையும் தம் ஆதிக்கத்துக்கு உட்பட்ட சாதிகளையும் ஒரே நேரத்தில் கொள்ளாத சாதிகளும் மக்களும் மிக மிகக் குறைவே. அடிமட்டத்தில், மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட ஒன்றிரண்டு சாதிகள் இருக்கலாம். ஆனால் மேல் மட்டத்திலிருக்கும் பார்ப்பனர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் உள்ளூர்ச் சாதிகள் இல்லை. அவற்றின் இடத்தில் வெளியிலிருந்து நம் மண் மீது ஆதிக்கம் செலுத்த வரும் அயலார்களைப் பார்ப்பனர்கள் வைத்துள்ளனர். இதில் பிற மேல் சாதியினரோடு அவர்களுக்கு எப்போதுமே போட்டி உண்டு. இந்தப் போட்டியில் இந்த நூற்றாண்டில் அனைத்துச் சாதிகளிலுமிருந்து படிப்பாலும் பதவிகளாலும் மேலுயர்ந்தவர்களும் சேர்ந்துகொள்கிறார்கள். பார்ப்பனர்கள் மீது தாங்கள் நடத்த நினைக்கும் தாக்குதல்களுக்குப் “தமிழ்த் தேசியப் போராட்டம்” என்ற பெயரையும் சூட்டியுள்ளனர். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு வெளிநாட்டு விசைகள் மேற்சாதிகளாலும் மேனிலையடைந்த பிற சாதி மக்களாலும் ஒடுக்கப்படும் கீழ்ச்சாதி மக்களின் அவலங்களைப் பயன்படுத்தி அவற்றை ஆற்ற வருவது போல் அவர்களது ஆதரவையும் பெற்றுக்கொள்கின்றன. இவ்வாறு நம் மக்கள் தங்களுக்கிடையிலான ஆதிக்கப் போட்டிகளைத் தீர்த்துக்கொள்ளப் பல நூற்றாண்டுகள் முயன்று வந்து அவற்றைப் தீர்த்துக்கொள்ள வகையறியாது அதில் தொடர்ந்து தோல்வியடைந்து அயலவருக்கு அடிபணிந்து உலகின் மிகச் சிறந்த அடிமைகள் என்ற பெயரைப் பெற்று உலகின் முன் இழிந்து நிற்கின்றனர். இதற்கு அடிப்படைக் காரணம் இந்த இயக்கங்களைத் தொடங்குவோரும் அவற்றில் இணைவோரும் உடலுழைப்பின்றி, உழைக்கும் மக்கள் உருவாக்கும் செல்வத்தின் பெரும் பகுதியைத் தாமே பெற வேண்டும் என்று விரும்புவதே. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நயன்மைக் கட்சியை தொடங்கியவர்கள் சாதி ஒடுக்குமுறைக்கு ஆளான மக்களின் துணையைப் பெறுவதற்காக அவர்களை இணைத்துக்கொண்டனர். பின்னர் அது பெரியாரின் தலைமையில் ஒரு பெரும் சாதி மறுப்பு இயக்கமாகப் பொய்த் தோற்றம் கொண்டது. அதனுள் புகுந்துகொண்ட ஒட்டுண்ணி வாழ்க்கை நோக்கம் படிப்பிலும் வேலை வாய்ப்பிலும் ஒதுக்கீடு என்ற ஒற்றை முனையிலிருந்து விலகப் பிடிவாதமாக மறுத்தது. இதுவே சாதிச் சங்கங்கள் புத்துயிர் பெறவும் மங்கிக் கிடந்த சாதி வெறி மீளவும் வழியமைத்தது. எனவே இந்த நிலை மீண்டும் ஒரு முறை திரும்பாமல் இருக்க நாம் ஒட்டுண்ணி வாழ்க்கையினருக்கு எதிர்காலமில்லாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அதற்கு இரு முனைகளில் பாடுபட வேண்டும். முதலில் கல்வித் துறை.

பொதுக்கல்வி என்பது நம் வரலாற்றில் கிடையாது. அதுவும் ஆங்கிலர் நமக்களித்த கொடைதான். அதற்கு முன் பார்ப்பனர், வெள்ளாளர் ஆகிய உயர் சாதியினருக்குக் கோயில்களும் மடங்களும் இலவச உணவு, உடை, உறையுள் அளித்து எழுத்தறிவும் ஆட்சி, அரசியல், இலக்கியம், போர் ஆகிய அனைத்திலும் பயிற்சியும் கொடுத்து உயரிய பதவிகளில் அமர்த்திய நிலை இருந்தது. பிற மேற்சாதி மக்கள் தங்கள் சொந்த முயற்சிகளில் கல்வி கற்றனர். “கீழ்ச்சாதி” மக்கள் கல்வி அதாவது எழுத்தறிவு பெறக் கூடாது என்றே மனுச்சட்டம் தடை விதித்திருந்தது. இந்தச் சூழ்நிலையில் நயன்மைக் கட்சியும் திராவிட இயக்கமும் கல்வியில் ஒதுக்கீடு என்ற ஓர் இடைநிலை முழக்கத்தை கொண்டதேயன்றி அனைவருக்கும் கல்வி என்ற இறுதி இலக்கைக் கொள்ளவில்லை. இந்த வகையில் கல்வி என்பதைச் சிறப்புரிமையாகக் கொண்ட குழுவை விரிவுபடுத்தும் முயற்சியாகவே அந்த முழக்கம் அமைந்துள்ளது. இந்த முழக்கத்துக்கு முடிவுகட்டி அனைவருக்கும் கட்டாய இலவயக் கல்வி என்ற நோக்கத்தை நாம் முன் வைத்துச் செயலாக்கப் போராட வேண்டும்.

கல்வி என்ற சொல்லின் உண்மையான பொருளுக்கும் இன்று கல்வி என்று நாம் குறிப்பிடுவதற்கும் எந்த உறவும் இல்லை. கற்கப்படும் அனைத்தும் கல்விதான். ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அது மனிதனாக வளர்ந்து முதுமை எய்தி இறப்பது வரையிலும் இடைவிடாமல் கல்வி தொடர்கிறது. பெற்றோரிடமிருந்தும் மற்றோரிடமிருந்தும் நேரடியாகவோ மறைமுகமாவோ கற்றுக்கொள்ளும் ஒவ்வொன்றும் கல்விதான். ஆனால் நாம் கல்வி என்று சிறப்பித்துக் கூறுவதில் எழுத்தறிவு முகாமையான இடத்தைப் பெறுகிறது. அதன் காரணம் என்னவென்றால் ஒவ்வொரு துறையிலும் முன்னோர் எய்தியவை, சிந்தித்தவை, விரும்பியவை, தோற்றவை என்று அனைத்தையும் எழுத்தில் பதிந்து வைப்பது நாகரிகம் பெற்ற மக்களின் இயல்பு. அவற்றை அறிந்துகொண்டு அவர்கள் எய்தியவற்றை விடவும் மேலான எய்தல்களை நோக்கி மக்களை இட்டுச்செல்ல உதவுவது எழுத்தறிவு. ஆனால் நம் நாட்டில் கல்வியும் எழுத்தறிவும் பிரித்துவைக்கப்பட்டுள்ளன. நாம் மேலே குறிப்பிட்டவாறு ஒட்டுண்ணி வாழ்க்கை வாழ்ந்த மேற்சாதியினருக்கு இலவயமாகப் பல்வேறு வசதிகளுடன் எழுத்தறிவு வழங்கப்பட்டது. ஆனால் உழைக்கும் மக்களுக்கு அது மறுக்கப்பட்டது. தொழில்கள் அனைத்தும் மூத்தோர் வாய் மொழியாகவும் செயல் முறையிலும்தாம் கற்பிக்கப்பட்டன. தன் பட்டறிவினாலும் கூரறிவினாலும் புதியன கண்டுபிடித்தாலும் எழுத்தறிவற்ற காரணத்தால் அது அடுத்த தலைமுறைக்குக் கிட்டாமல் போயிற்று. மிஞ்சிப் போனால் அது ஒரு குடும்பத் தொழில் மறையமாக (இரகசியமாக) நிலவி கால வெள்ளத்தில் அழியக் கூடும். அத்துடன் தமிழில் இருந்த தொழில்நுட்ப நூல்களைச் சமற்கிருத்தில் மொழி பெயர்த்துவிட்டுத் தமிழ் மூலங்களை அழித்துவிடுவதும் அவற்றை மீறிப் புதுப்புது நூலாக்க முயற்சிகள் நடைபெறுவதும் அவை மீண்டும் மேற்கூறிய வழியில் அழிக்கப்படுவதும் தொடர்ந்தது. எழுத்தறிவற்ற தொழில் வல்லாருக்கு அவற்றால் எந்தப் பயனும் இருக்கவில்லை. தொழில்துறையில் பெரும் விரிவாக்கம் ஏதுமின்றி காலம் ஓடியது. வாணிகர்களை ஒடுக்குவதில் குறியாயிருந்த ஆட்சியாளர்களின் செயலால் ஏற்பட்ட தேக்கநிலை இது. எனவே வழக்கமான தேவைகளை வழக்கமான முறையில் அதாவது சாதி சார்ந்த தொழில் அடிப்படையில் வழங்கிவந்தனர். எனவே குமுக நெருக்கடி எதுவும் உருவாகவில்லை. ஆனால் இன்னொரு துறையிலிருந்து வந்தது. சோழப் பேரரசு தன் கட்டற்ற ஆட்சி அதிகாரத்துக்குத் தடங்கலாயிருந்த வேளிர்கள் எனும் குறுநில மன்னர்களின் வலிமையைக் குறைப்பதற்காகவும் மக்களிடம் நிலவுடைமை வடிவில் செல்வம் திரளாதிருக்கவும் எண்ணற்ற கோயில்களைக் கட்டியது. எனவே கோயில் தொடர்பாக புதிய எண்ணற்ற தொழில்துறைகளும் வேலை வாய்ப்புகளும் உருவாயின. நூல்களும் தோன்றின. இவ்வாறு தோன்றிய புதிய வகுப்புகள் தங்களுக்கான குமுக ஏற்பை நாடின. அத்துடன் கோயில்கள் கட்டவும் போர்களுக்குமாக மக்கள் மீது சுமத்தப்பட்ட கணக்கற்ற வரிகளும் கோயில்களுக்காக மக்களிடமிருந்து நிலங்கள் பறிக்கப்பட்டதும் அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளைத் தூண்டின. இவ்வாறு மூண்ட ஒரு பெரும் மக்கட் கிளர்ச்சியின் போது சோழ அரசன் அதிராசேந்திரன் கொல்லப்பட்டான். கோயில்கள் இடிக்கப்பட்டன, பார்ப்பனப் பூசாரிகள் படுகொலைப்பட்டனர். இந்தக் கிளர்ச்சியை மறைமுகமாகத் தூண்டி நடத்தியவன் என்று ஐயுறத்தக்க ஒருவன் உண்டு. அவன் சோழ மரபில் பெண்வழியில் பிறந்து சாளுக்கிய நாட்டை ஆண்டு வந்தான். கிளர்ச்சியின் விளைவாக சோழ அரியனையில் ஏற்பட்ட வெற்றிடத்தைப் பயன்படுத்திக் குலோத்துங்கன் என்ற பெயரில் அரசேறினான். இவன் தான் பட்டமேற்றதும் சில வரிகளைக் குறைத்துவிட்டு “சுங்கந் தவிர்த்த சோழன்” என்ற பட்டத்தைச் சூட்டிக்கொண்டான். அடுத்து முன்பு கிளர்ச்சியில் ஒன்றுபட்டு நின்ற மக்களிடையில் புதிய விருதுகளை வழங்கியதன் மூலம் வலங்கை - இடங்கைப் பாகுபாட்டை ஊதிப் பெருக்கி அவர்களை என்றும் ஒன்றுசேர இயலாத பகைவர்களாக்கினான். அன்றிலிருந்து தமிழகத்தில் ஒரு தேக்கமும் தளர்ச்சியும் ஏற்பட்டன. தொழில்நுட்ப நூல்கள் சமற்கிருத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆகமங்கள் என்ற பெயரில் கோயில்களினுள் பதுங்கின. இந்தத் தேக்க நிலையில் இங்கு புகுந்த ஆங்கிலர் நம்மை விட அறிவியல் - தொழில்நுட்பங்களில் தேர்ந்திருந்தனர். தங்கள் நாட்டில் பெரும் முதலாளியத் தொழில் வளர்ச்சியும் எய்தியிருந்தனர். இந்தியாவை ஆள்வதற்குத் தமக்குத் துணை புரியத் தேவையான அளவு இந்தியர்களுக்குக் கல்வியளிக்கத் தொடங்கினர். தம் நாட்டில் நிலவிய கல்வி முறையையும் பாடத் திட்டத்தையும் இங்கு புகுத்தினர். இங்கிலாந்துச் சூழலில் மக்களின் வாழ்நிலையோடு பொருந்திய அந்தக் கல்விமுறை இங்கிருந்த பிற்பட்ட சுழலுடன் பொருந்தாமல் அதைக் கற்றவர்கள் மக்களிடமிருந்து அயற்பட்டனர். அது மட்டுமல்ல, தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட தொழில்நுட்பச் செய்திகளைச் சரி பார்ப்பதற்கோ செய்து பார்ப்பதற்கோ தகுந்த பொருளியல் சூழல் இங்கு இல்லாததால் அக் கல்வி வெறும் எழுத்தறிவாக, “பாராயணம்” செய்வதாக, மனப்பாடம் செய்து தாளில் எழுதி மதிப்பெண்களும் பட்டமும் பெறுவதாகச் சுருங்கிப்போயிற்று. இன்றும் பாடத் திட்டங்கள் நாள்தோறும் மேம்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை நாள்தோறும் நம்மை விட உயர்ந்துகொண்டே செல்லும் பணக்கார நாடுகளின் சூழல்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்டனவாக உள்ளன. எனவே இந்தக் கல்வியைப் பெறுவோரும் நாளுக்கு நாள் கூடுதலாக இம் மண்ணிலிருந்து அயற்படுகின்றனர். முன்பு உள்நாட்டில் அயலவர்க்குப் பணி செய்த நிலை விரிவடைந்து அயல் நாட்டினரோடு கூட்டு வைத்தும் அவர்களோடு வாணிகத் தொடர்பு வைத்தும் செயற்படுகின்ற நிறுவனங்களிலும் பணி செய்யத் தொடங்கியுள்ளனர். அது மட்டுமல்ல, இந்த மண்ணை விட்டு ஓரேயடியாக வெளிநாடு செல்வதே வாழ்வின் நோக்கமாகவும் அதற்காகவே கல்வி கற்பது என்றும் தலைகீழ் நிலைமை உருவாகிவிட்டது. திராவிட மரபினர் இன்று “தமிழ்த் தேசியம்” என்ற பெயரில் இங்கும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் “ஒதுக்கீடு” கேட்டுக் கையேந்தி நிற்கின்றனர். இந்த வேலை வாய்ப்புகளைப் பெற முடியாதவர்கள் இங்கு ஒட்ட முடியாமல் நாட்டுக்குப் பலவகைகளிலும் சுமையாகவும் தீங்காகவும் வாழ்கின்றனர். தங்கள் “கல்வித் தகுதி”க்கு இழிந்ததாக அவர்கள் கருதும் எந்த வேலையையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. அதிலும் குறிப்பாக உடலுழைப்பு அவர்களால் மிகவும் வெறுக்கப்படும் ஒன்றாகும். இப்படித்தான் ஒருபுறம் நிறைய வேலைவாய்ப்புகளும் இன்னொரு புறம் வேலையற்ற இளைஞர்களின் பெரும்படையும் நிலவும் விந்தையான முரண்பாடு நிலவுகிறது. இவர்களது “கல்வித் தகுதி” எதற்கும் பயன்படாதது. குறைந்தது 10 ஆண்டுகள் புத்தகத்தையும் தாளையும் எழுதுகோலையும் தவிர வேறெதையும் அறியாத இவர்கள் கைத்திறன் தேவைப்படும் எந்தப் பணிக்கும் தகுதியற்றவர்கள். தப்பித் தவறி வயிறு காய்ந்த நிலையில் உழைப்பு சார்ந்த அல்லது தம் “கல்வித் தகுதி”க்கு குறைவான பணியில் ஈடுபட வேண்டி வந்தால் அவர்களால் முழுமனதுடன் அதில் ஈடுபட முடிவதில்லை. எனவே சிறு வாணிக, பணி நிறுவனங்களில் பணியாற்றுவோரிடமிருந்து நமக்கு நிறைவான, தரமான பணிகள் கிடைப்பதில்லை. மதிப்பெண்ணும் பட்டமும் நோக்கங்களாகக் கொண்ட இன்றைய “கல்வி” முறையின் அவலம் என்ன தெரியுமா? இக் கல்வியைப் கற்று முடித்து வருவோருக்கு எந்த மொழியிலும் பிழையின்றி ஒரு சொற்றொடர் கூட எழுதவோ பேசவோ முடியாது என்பதாகும்.

இந்த நிலை மாற்றப்பட வேண்டும். கல்வி என்பது எழுத்தறிவும் செயலறிவும் ஒன்றையொன்று மேம்படுத்துவதாக இணைக்கப்பட வேண்டும். செயலறிவே மூளை வளர்ச்சியைத் தூண்டுகிறது. எனவே எழுத்தறிவையே மாண்டிசோரிக் கல்வித் திட்டப் பாணியில் செயல்களின் மூலம்தான் புகட்ட வேண்டும். குழந்தைகளுக்கு அவர்களின் அகவைக்கேற்ற உழைப்புக் கருவிகளின் கையாட்சியை அறிமுகப்படுத்த வேண்டும். 8ஆம் வகுப்பு முடிவதற்குள் அடிப்படையான உடலுழைப்புத் துறை அனைத்திலும் ஒவ்வொரு மாணவனும் அறிமுகம் பெற்றிருக்க வேண்டும். இதுவே அவனது குடியுரிமைக்கான தகுதியாய் நிறுவப்பட வேண்டும். 8ஆம் வகுப்பின் மேல் உயர்நிலைக் கல்வி பெறவேண்டுமாயின் ஒவ்வொருவரும் தத்தமக்கு உகந்ததான துறையில் குறிப்பிட்ட காலம் பணியாற்றியிருக்க வேண்டும். இவ்வாறு கல்வி இடையில் நின்று போனதாலும் தாம் விரும்பும் உயர்கல்வித் துறை பற்றிய அறிமுக அறிவைப் பெறவும்தான் நுழைவுத் தேர்வு தேவைப்படுகிறது. நாம் இங்கு விளக்கியுள்ள சூழ்நிலையில் தொழில் வள நாடுகள் கடைப்படிக்கும் நுழைவுத் தேர்வு உத்தியை அந்தச் சுழ்நிலை பற்றிய சிந்தனையே இல்லாத நம் நாட்டில் புலியைப் பார்த்துக் பூனை சூடு போட்டாற்போல் நாம் போலச்செய்துகொண்டிருக்கிறோம். மேற்சொன்ன முறை கடைப்பிடிக்கப்பட்டால் ஒவ்வொருவரும் தத்தம் ஆர்வங்களையும் திறமைகளையும் இனங்கண்டு அவற்றுக்கேற்பத் தங்கள் தகுதியை மேம்படுத்தித் தம் சொந்த முயற்சியிலேயே தங்கள் நிலையை உயர்த்திக்கொள்ளலாம். இன்று போல் மாணவர்களின் கல்வியைத் தேர்ந்தெடுப்பது, அவர்களது இன்றியமையாத் தேவைகளை மட்டுமின்றி ஊதாரிச் செலவுகளுக்கும் ஈடுகொடுப்பது, அவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுப்பது உட்படப் பெற்றோரின் கால்களையும் கைகளையும் பிணைத்திருக்கும் விலங்குகள் உடையும். 13ஆம் அகவையிலிருந்தே மாணவர்கள் வேலை செய்யப் போவதால் நாட்டின் பணியாளர் படையும் பெருகும். மாணவர் படிப்பின் இரு வேறு கட்டங்களுக்கிடையில் பணியில் ஈடுபடுவதால் தம் படிப்பைப் பணியின் மூலமும் பணியைப் படிப்பின் மூலமும் செழுமைப்படுத்தி இரு களங்களிலும் தர மேம்பாடு கிடைக்கும். முழுமையான புரிதலுக்கும் புதுப்புது கண்டுபிடிப்புகளுக்கும் வழி பிறக்கும். இதனால் பட்டப் படிப்பை எய்துவதற்கு ஒருவருக்கு 30 அகவை கூட ஆகிவிடும். இவ்வாறு படிப்பு, உழைப்பு என்று தன் முயற்சியால் படிக்கும் மாணவர்களிடையில் இன்று நம்மிடையில் நிலவும் வன்கேலி(ராகிங்) போன்ற பொறுப்பற்ற செயல்கள் இடம்பெறா. உழைப்பு, பணம் கல்வி என்பன பற்றிய பொறுப்பை உணராமல் வசதி படைத்த பெற்றோரால் தறுதலைகளாக வளர்க்கப்படும் இளைஞர்களாலேயே இக் கொடுமைகள் நிகழ்கின்றன.

இத்தகைய முறை கடைப்பிடிக்கப்பட்டால் இன்று போல் தேவையற்ற, பயனற்ற பட்டந்தாங்கிகளை உருவாக்க வேண்டியிராது. மாநிலத்துக்கு ஒரு பல்கலைக் கழகமும் மாவட்டத்துக்கு ஒரு கல்லூரியும் போதும். பிற கல்வி நிலையங்கள் அனைத்தும் தொழில் கற்பிப்பவையாய் இருக்கும். கல்வி நிலையங்களைச் சார்ந்து பணிமனைகளும் வயல்வெளிகளும் தோட்டங்களும் தொழிலகங்களும் பயிற்சிப் பட்டறைகளாக விளங்கும் அல்லது இப் பயிற்சிப் பட்டறைகளைச் சார்ந்து கல்வி நிலையங்கள் இயங்கும். கல்விக் கட்டங்களின் இடைப்பட்ட பணிக் காலங்களில் முழு நேரமும் கல்விக் காலங்களில் பகுதி நேரமும் வேலை செய்து தம் கல்வி, வாழ்க்கைச் செலவுகளைத் தாங்களே பார்த்துக்கொள்ளும் போது வாழ்க்கையையும் உலகையும் குமுகத்தையும் பொருளியலையும் பற்றிய உண்மைகளை ஒவ்வொருவரும் அறிந்துகொள்வர். இன்று ஓர் எல்லையைக் கல்வி அடைந்ததும் ஒரு வேலை உறுதிப்பட்டவுடன் எல்லாம் முடிந்துபோகிறது. பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவையே ஒரே குறிக்கோளாகிவிடுகின்றன. ஆனால் மேலே விளக்கிய முறையில் வாழ்க்கை முடிவது வரை ஒவ்வொருவரும் தத்தம் திறமையைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. இவையனைத்தையும் விட முகாமையான நன்மை, இன்று உடலுழைப்பு அடிப்படையில் மக்கள் இழிந்த சாதியினராகவும் உழைப்பறியாதோர் உயர்ந்த சாதியினராகவும் கருதப்பட்டு உழைப்பு கொச்சைப்படுத்தப்படும் நிலை முடிவுக்கு வந்து உடலுழைப்பறியாதோர் குடியுரிமையே பெற முடியாத நிலை உருவாகி சாதிய ஏற்றத்தாழ்வுகளின் ஒரு முகாமையான அடிப்படை அடிபட்டுப்போகும். உடலுழைப்புக்கு நம் குமுகத்தில் இன்று வரை இல்லாதிருக்கும் மதிப்பு கிடைக்கும்.

ஒரு நாட்டின் மக்கள் உடலுழைப்புக்கு அளிக்கும் மதிப்பில்தான் அந் நாட்டின் செல்வச் செழிப்பும் வலிமையும் மதிப்பும் இருக்கும் என்பதற்கு அமெரிக்காவின் வரலாறு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஐரோப்பியரில் (சு)பானிய மக்களால் கண்டறியப்பட்ட அமெரிக்கக் கண்டத்திலிருந்த மூலக் குடிகளான செவ்விந்தியரில் மிகப் பெரும்பாலானோரை அவர்கள் கொன்றொழித்தனர். பின்னர் குடியேறியவர்களில் வட அமெரிக்காவில் ஆங்கிலர் மிகுதி. அவர்களிலும் அப்போது இங்கிலாந்திலிருந்து விடுதலை பெறுவதற்காகப் போராடிக்கொண்டிருந்த அயர்லாந்திலிருந்து தப்பியோடி வந்தவர்கள் மிகுதி. பின்னர் அமெரிக்க மண் வளத்தை இங்கிலாந்தின் பயனுக்குக் கொண்டுவருவதற்காக இங்கிலாந்தில் சிறைத் தண்டனை பெற்றவர்களை, அவர்கள் அமெரிக்காவுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்தால் சிறைத் தண்டனையிலிருந்து விடுவித்து அமெரிக்காவுக்கு அழைத்துவந்தனர். அவ்வாறு சென்றவர்கள் அங்கிருந்த கன்னி மண்ணில் தாமே உழைத்து உருவாக்கிய செல்வம் இங்கிலாந்தை வளப்படுத்தியது. பின்னர் இங்கிலாந்தின் சுரண்டல் கொடுமை தாங்காமல் அவர்கள் போரிட்டு விடுதலை பெற்றனர். அந்த உழைப்புப் பண்பாடு அமெரிக்கர்களது குருதியில் இரண்டறக் கலந்துள்ளது. நம் நாட்டில் இதுவரை நிலவி வரும் ஒட்டுண்ணிப் பண்பாடான உழைப்பை வெறுத்து இழிவுபடுத்தும் சாதியப் பண்பாட்டை அழித்து உழைப்புப் பண்பாட்டை உருவாக்குவதற்குக் கல்வியில் இந்தத் தலைகீழ் மாற்றம் இன்றியமையாதது.

இதை முடிப்பதற்கு முன் வெளி உலகுக்கு உரிய வகையில் புலப்படாமல் உள்ள நயன்மைக் கட்சியின் இன்னொரு தோற்றத்தை நம் அறிந்துகொள்ள வேண்டும். தொழில் துறையிலும் பிற பொருளியல் நடவடிக்கைகளிலும் மும்பையின் ஆதிக்கத்தை எதிர்த்து மேற்கொண்ட முயற்சிகளாகும் அது. தி.மு.க. ஆட்சிக்கு வருவது வரை தமிழகத்தில் பார்ப்பனர், செட்டியார் அல்லாதாரிடமிருந்த பெரும்பாலான பெருந்தொழில்களும் நயன்மைக் கட்சி ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டவையாகும். பேரவை(காங்கிரசு)க் கட்சியை எதிர்த்து நிற்க மாட்டாமல், தலைவர்களுமில்லாமல் அக் கட்சியின் தலைமையைப் பெரியார் ஏற்றுக்கொண்ட பின் அவர் கட்சியின் பொருளியல் கண்ணோட்டத்தை வீசீயெறிந்து விட்டுத் தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காகவும் பொருளியல் ஆதாயங்களுக்காகவும் அப் பேரியக்கத்தின் ஆற்றல்களைப் பயன்படுத்திக்கொண்டார். பொருளியல் பக்கத்துக்கு உரிய இடம் கொடுக்கப்பட்டிருந்தால் இன்று நம் நாட்டில் முதலாளிய விளைப்பு முறை நோக்கிய பாய்ச்சல் இருந்திருக்கும். ஒதுக்கீட்டின் மாற்றாகிய அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை வாய்ப்பு என்று இரு முனைகளிலும் நாம் வெற்றிநடை போட்டுக்கொண்டிருப்போம்.

நயன்மைக் கட்சி ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட பல தொழில்கள் இன்று மார்வாரி கைகளுக்குச் சென்றுவிட்டன. இதற்குத் திராவிடக் கட்சிகள் உறுதுணையாயிருந்திருக்கின்றன என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை.

முதலாளிய விளைப்பு முறை நம் நாட்டில் வேர் கொள்ளாமல் தடையாயிருப்பவற்றில் இறுதியானதும் தலையாயதும் உலக வாணிக விசைகளும் உள்நாட்டு அதிகாரிகள், அரசியலாளர்கள் ஆகிய ஆட்சியாளர்களும் ஒட்டுண்ணிப் படிப்பாளிகள், பல்கலைக் கழக முன்னாள், இந்நாள் துணைவேந்தர்கள், ஓய்வு பெற்ற உயரதிகாரிகள், வேலை வாய்ப்பின்றிக் கிடக்கும் திறமை மிக்க இளைஞர்கள் ஆகியோரைக் கொண்டு பரப்பிவரும் முதலாளிய விளைப்பு முறைக்கு எதிரானதும் மரபுத் தொழில்கள் எனப்படும் சாதி சார்ந்த தொழில்களையும் சொந்தத் தொழில்களையும் அழியவிடாமல் பாதுகாப்பதுமான கருத்துகளைப் பரிந்துரைத்துச் செயற்படுத்தி வரும் திட்டங்களாகும். இதில் பிறரெல்லார் முயற்சிகள் பாதியாயின் பொதுமைக் கட்சியினரின் பங்கு பாதியாகும்.

இது பல கோணங்களில் நடைபெறுகிறது. முதலாளியம் பாட்டாளியரைச் சுரண்டுகிறது என்பது ஒரு கோணம். சுரண்டல் முதலாளியத்தில் மட்டும் இல்லை. சொந்தத் தொழில், சாதித் தொழில், சிறுதொழில் என்று அனைத்திலுமே சுரண்டல் உண்டு. ஆனால் இந்தச் சுரண்டல் வாணிகர்களாலும் கந்துவட்டிக்காரர்களாலும் நடைபெறுகிறது. அவர்களிடமிருந்து தொழில் செய்வோரைக் காக்கிறோம் என்ற பெயரில் அரசு உள் நுழைந்து கூட்டுறவென்றும் வாரியங்கள் என்றும் கழகங்கள் என்றும் உருவாக்கும் போது இந்த சுரண்டல் ஆட்சியாளர்களிடம் சென்றடைகிறது. இவ்வாறு சுரண்டப்படும் செல்வம் சட்டப்படியும் பிறவகைகளிலும் ஒன்றுதிரண்டு குமுகச் செல்வமாவதில்லை. அந்தச் செல்வத்துக்கு எந்த உரிமையுமில்லாத ஆட்சியாளர்களின் வரம்பற்ற நுகர்வில் அது அழிந்து போகிறது. அதே வேளையில் முதலாளிய விளைப்பு முறையில் சுரண்டப்படும் செல்வம் மீண்டும் மூலதனமாகிறது. தொழில் வளர்ந்து விரிவடைகிறது. பல்வேறு மூலதனத் திரட்சிகளின் போட்டியால் புதுப்புதுத் தொழில்நுட்பங்கள் புனையப்படுகின்றன. அதற்கும் இந்தச் சுரண்டல் பணம் பயன்படுகிறது. மலிவாகவும் எளிதாகவும் விரைவாகவும் பண்டங்களும் பணிகளும் நிறைவடைகின்றன. இதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குத் தேவையான பருப்பொருள் அடித்தளம் அமைகிறது. அது மட்டுமல்ல, நாம் ஏற்கெனவே கூறியது போல சொந்தத் தொழில் போன்றவற்றில் தொழிலாளர்களாகிய “முதலாளிகள்” தொழில் தொடர்பான இடர்களோடு நாள் முழுவதும் வாழ வேண்டியுள்ளது. அத்துடன் முதலாளிய விளைப்பு முறையில் கிடைக்கத்தக்க, தொழிலகத்தோடு இணைந்த பல்வேறு வசதிகளும் கிடைப்பதில்லை. முதலாளிய விளைப்பு முறையின் இயல்பான கூடுதல் விளைப்புத் திறன், அத்துடன் சுரண்டல் எனப்படும் ஆதாயம் முதலாளியாகிய ஒருவர் அல்லது ஒரு நிறுவனத்தின் கைகளிலேயே திரள்வதாலும் தொழிலாளர்கள் ஒரே இடத்தில் குழுமிப் பணியாற்றுவதாலும் இந்த வசதிகள் கிடைப்பதற்கு வாய்ப்பேற்படுகிறது. மொத்தத்தில் முதலாளிய விளைப்பு முறையில் நடைபெறும் சுரண்டல் என்பது ஒரு வகையில் குமுகம் தன்னுணர்வின்றி கண்டறிந்துள்ள ஒரு குமுகச் சேமிப்பு முறை ஆகும். இந்தச் சேமிப்பின் அளவைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் இன்னும் கூடுதல் நன்மைகளைக் குமுகம் பெற முடியும்.

முதலாளியத்துக்கெதிராக வைக்கப்படும் இன்னொரு குற்றச் சாட்டு அது நிலத்தையும் நீரையும் வளியையும் மாசுபடுத்துகிறது என்பதாகும். அது உண்மைதான் ஆனால் அவ்வாறு மாசுறுவதைக் கண்டறியவும் மாசுபாடமல் தடுக்கவும் உருவான மாசை அகற்றவும் தேவையான தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கவும் அந்த முதலாளியத்தின் பின்னணியில் இருக்கும் அறிவியலால்தான் முடியும். இன்று பணக்கார நாடுகளில் உள்ள பெருந்தொழில்களால் இயற்கையில் ஏற்படும் மாசைச் சரி செய்ய வேண்டும் என்ற இயக்கங்கள் அந் நாடுகளில் வலுப்பெற்றமையால் அந்தச் செலவுகளைத் தவிர்க்க விழிப்புணர்வு இல்லாத ஏழை நாடுகளுக்கு அந் நாடுகளின் விலைபோன ஆட்சியாளர்களின் ஒத்துழைப்புடன் அங்குள்ள தொழிற்சாலைகள் மாற்றப்படுகின்றன. அத்துடன் ஏழை நாடுகளிலுள்ள மின்சாரம், குடிநீர்த் தரமுள்ள நீர், போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றை மலிவாகவும் இலவயமாகவும் பெற்றுக்கொள்கின்றன. இவற்றுக்காக நாம் இறக்குமதி செய்யவேண்டிய கன்னெய்யம்(பெட்ரோலியம்) உட்படப் பல்வேறு பண்டங்கள், பணிகளின் சுமைகளையும் நம் தலை மீது ஏற்றுகின்றன. அதே நேரத்தில் உலக வாணிகர்களின் நலனுக்காக ஏற்றுமதி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள ஆடைத் தொழில், தோல் தொழில் போன்றவற்றால் ஏற்படும் மாசுகளைக் களைவதற்காக இத் துறைகளில் பணக்கார நாடுகள் உருவாக்கி வைத்திருக்கும் தொழில்நுட்பங்களையும் கருவிகளையும் நம் மீது சுமத்துவதற்காகப் பணம் கொடுத்து தன்னார்வ இயக்கங்களை இயக்கி இத் தொழில்களுக்கு எதிரான பரப்புரையுடன் பல்வேறு இடையூறுகளையும் ஏற்படுத்தி நம் மக்களுக்கு ஒரு உளவியல் நெருக்கடியைக் கொடுத்து எதிர்த்துப் போராடுவதற்குப் பகரம் எப்போதுமே குற்ற உணர்வில் குன்ற வைக்கின்றன.

இதற்கு மாற்று, நம் மரபுத் தொழில்களின் அழிவிலிருந்து புதிய தொழில்நுட்பங்களை நாமே வளர்த்தெடுக்க வேண்டும். அவ்வாறு வளர்த்தெடுக்கும் போது ஏற்படும் இயற்கை மாசடைதல் உட்பட அனைத்துச் சிக்கல்களுக்கும் நெருக்கடிகளுக்குமான தீர்வை நாமே கண்டறிய வேண்டும், கண்டறிய முடியும். அந்தத் தொழில்நுட்பங்கள் மூலம் விளைக்கப்படும் பண்டங்களும் பணிகளும் நமக்கே பயன்பட வேண்டுமென்பது மிக முகாமையானது. அதாவது நமக்குத் தேவைப்படும் பண்டங்களுக்கும் பணிகளுக்காகவும் மட்டும் ஏற்படும் மாசுகள் இன்று போல் பேரளவில் இருக்காது, எனவே அவற்றை எதிர்கொள்வதும் ஒரு பெரும் சிக்கலாக இருக்காது.

அடிக்குறிப்புகள: இல்லை

பாழ்பட்டுக் கிடக்கும் தமிழகக் கடறகரை - 1

பாழ்பட்டுக்கிடக்கும் தமிழகக் கடற்கரை - 1.

மனந்திறந்து………..

பாழ்பட்டுக் கிடக்கும் தமிழகக் கடற்கரை என்ற இந் நூல் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறப்பிதழுக்காக கட்டுரையாக எழுதப்பட்டது. இறுதியில் ஒரு நூலாகும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. சிறப்பிதழில் ஒரு பகுதி மட்டும் வெளியானது.

இந் நூலில் கடற்கரையில் என்னென்ன மாற்றங்கள் தேவையென்று கூறியுள்ளோமோ அம் மாற்றங்கள் நிகழ ஏற்பட்ட வாய்ப்புகளுக்கு எதிராக கடற்கரை வாழ் மக்களை அணிதிரட்டிப் போராட வைக்கும் ஒரு சூழ்ச்சி அரங்கேறிக் கொண்டிருந்தது. அந்தச் சூழலில் சுனாமி என்றழைக்கப்படும் ஓங்கலை எழுந்து கடற்கரையை அழித்துத் தாண்டவமாடியது.

இன்று தமிழகக் கடற்கரை வாழ் மக்கள் தங்கள் அடுத்த இலக்கு பற்றி முடிவெடுக்க முடியாமல் திகைத்து நிற்கிறார்கள். ஆட்சியாளர்களும் மக்கள் நலம் நாடிகளும் கூட குழம்பி நிற்கின்றனர். இந் நிலையில் ஏறக்குறைய பதினைந்தாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந் நூல் தோராயமான ஒரு வழியைக் காட்டும் என்பது உறுதி. இன்னும் திட்டவட்டமான நடவடிக்கைகளை நாமும் வகுத்துச் செயற்பட வேண்டும் என்று தமிழக மக்களையும் அவர்களை முன் நின்று வழி நடத்த வருமாறு மக்கள் நலம் நாடுவோரையும் வேண்டுகிறேன்.

திருமங்கலம் (மதுரை மாவ.) அன்புடன்
17 - 01 – 2014 குமரிமைந்தன்.
பாழ்பட்டுக் கிடக்கும் தமிழகக் கடற்கரை
குமரிமைந்தன்

தமிழகத்துக்கு ஒரு நீண்ட கடற்கரை உண்டு. அந்தக் கடற்கரைக்கு ஒரு நீண்ட வரலாறும் உண்டு. அக் கடற்கரையில் வாழும் மீனவர்களுக்கும் ஒரு நீண்ட, பெருமை மிகு வரலாறு உண்டு. தமிழர்களின் முதன்மைத் தாயகமாகிய குமரிக் கண்டத்தில் ஒரு மாபெரும் பேரரசைத் தோற்றுவித்து அதை உலகமெல்லாம் பரவச் செய்தவர்கள் மீனவர்களே! தமிழர்களின் முதல் அரசை நிறுவிய பாண்டியர்கள் மீனவர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். அவர்களது கொடியும் மீனே. பாண்டியரின் குலதெய்வமாக இன்று மதுரையில் கொலுவிருக்கும் தெய்வத்தின் பெயரும் மீனாட்சி என்பதே!

இந்தச் சான்றுகள் நமக்குக் கூறும் செய்தி, கடல் வாணிகம் கடற்படைகள் மூலம் அண்டையிலும் தொலைவிலும் இருந்த மக்களையும் நாடுகளையும் தொடர்பு கொண்டு அவற்றைத் தம் ஆளுகையினுள் கொண்டு வந்து முதன்முதலில் வரலாற்றில் ஒரு பேரரசை நிறுவியவர்கள் நெய்தல் நிலத்தவரான குமரிக் கண்ட மீனவர்கள் என்பதாகும். அது மட்டுமல்ல, கடற்கரையிலிருந்து உள்நாட்டுடன் தொடர்பு கொள்ள ஆறுகள் போன்ற நீர்வழிகளே முதலில் பயன்பட்டன. ஆறு என்பதற்கு வழி என்ற பொருளிருப்பதும் வழி என்ற சொல் வழிதல் என்ற நீரின் பண்பின் அடிப்படையில் அமைந்திருப்பதும் இதற்குச் சான்றுகள்.

மீனவர்களைப் பரவர்கள், பரதவர்கள், பரதர்கள் என்று அழைக்கிறோம். பரவை என்பது கடலைக் குறிக்கும் சொல். பரந்திருப்பதால் அது பரவை எனப்பட்டது. பரவையைத் தங்கள் செயற்களமாகக் கொண்டு தாமும் பரந்து திரிந்ததால் அவர்கள் பரவர் எனப்பட்டனர். அச் சொல் பரதர், பரதவர் என்ற திரிபுகளைக் கொண்டது.

குமரிக் கண்டத்திலிருந்து வட இந்தியாவுக்கு மேற்கு, கிழக்குக் கடற்கரைகள் வழியாகக் பெயர்ந்த மக்களால் புனையப்பட்டவை இராமாயண, மகாபாரதக் கதைகள். குமரிக் கண்டத்தில் வாழ்ந்து மறைந்த மாமனிதர்கள், ஆட்சித் தலவைர்கள் ஆகியோரின் நினைவுகளையும் அவர்கள் தொடர்பான நிகழ்ச்சிகளையும் புதிய இடத்தில் குடியேறிய பின் ஏற்கெனவே தங்களுக்கு முன்னால் அங்கு குடியேறியிருந்த மக்களையும் அவர்களுடன் தங்களுக்கு ஏற்பட்ட போராட்டங்களையும் கலந்து புனையப்பட்டவை அவை. அவற்றுள் முந்தியதாகக் கொள்ளத்தக்கது மகாபாரதம். அது குமரிக் கண்டச் செய்திகளை நிறையவே தன்னகத்தில் கொண்டுள்ளது. அவற்றுள் முதன்மையானது குரு மரபினர் எனப்படும் கவுரவர் - பாண்டவரின் முன்னவர்களில் ஒருவரானான பரதன் என்னும் அரசன் பெயரிலிருந்து பரத நாடு, பரத கண்டம் என்ற பெயர்கள் வந்தன என்று கூறப்படுவது. பரதர் நாடு, பரதர் கண்டம் என்பதை மறைக்கத்தான் இக் கதை கூறப்பட்டதோ என்று தோன்றுகிது. இந்தப் பரதன் சகுந்தலைக்கும் துசியந்தன் என்ற மன்னனுக்கும் பிறந்தவனாம். அவளைத் திருமணமின்றியே கூடியவன் (யாழோர் மணம் - கந்தருவ மணம்) அவளை மறந்து விட அவளுக்கு அவன் கொடுத்த மோதிரத்தை ஆற்றிலிருந்து மீட்டுவந்த இரு மீனவர்கள் மூலம் அவன் நினைவு மீண்டு அவளை ஏற்றுக் கொள்வதாகக் கதை செல்கிறது . இங்கு ஒரு வகையில் மீனவர்களின் தொடர்பு வெளிப்படுத்தப்படுகிறது. அது மட்டுமல்ல, கவுரவர் - பாண்டவர்களின் பூட்டியான (பாட்டன், பாட்டிகளின் தாய் பூட்டி - கொள்ளுப்பாட்டி) பரிமளகந்தி எனப்படும் மச்சகந்தி ஒரு மீனவப் பெண் என்கிறது மகாபாரதம். மகாபாரதப் போர் உண்மையில் மீனவர்களிடமிருந்து அரசியல் ஆதிக்கம் மருத நில மக்களின் கைகளுக்குப் போய் அவர்களிடமிருந்து முல்லை நிலமக்களாகிய ஆயர்களுக்கு மாறியதைக் குறிப்பதேயாகும். கண்ணனான ஆயர் குலத்தவனுக்கு உதவுபவனான அருச்சுனன் எனப்படும் மருதன் மருத நிலத் தெய்வமாகிய இந்திரனுக்குப் பிறந்தவன் என்கிறது மகாபாரதம்.

இராமாயணமும் மீனவர்களுக்கும் உள்நாட்டினருக்குமான அதிகாரப் போட்டியைக் கோடி காட்டுகிறது. பரதனுக்குப் பட்டம் சூட்டுமாறு அவன் தாய் கேட்பதும் அதன் மூலம் ஏற்படும் முரண்பாடுகளும் சிக்கல்களும் அதற்குத் தடயங்களாகும். அத்துடன் இராவணனுடனான இராமனின் போர் இராமனைப் பற்றிய மூலக்கதையான தசரத சாதகத்தில் இல்லை. சீதையைத் தூக்கிச் செல்வதும் அவளை மீட்பதற்கான போரும் கிரேக்கர்களுடன் வட இந்தியர்களுக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்ட கி.மு. 4ஆம் நூற்றாண்டுக்குப் பின்னால் சேர்க்கப்பட்டு வால்மீகி இராமாயணம் எழுதப்பட்டது. ஆனால் அதில் குரங்கைக் குலக்குறியாக்க கொண்ட தென்னிந்திய மக்கட் குழுவினரைப் பற்றிச் சொல்கிறது. வானில் பறந்து இலங்காபுரிக்குச் சென்ற அனுமன் கடந்து சென்ற இடங்களின் விளக்கம் இராவணனின் இலங்காபுரி இன்றைய ஈழத்து இலங்கைத் தீவல்ல, அது ஆத்திரேலியாவின் பக்கத்தில் இருந்தது என்பதைப் புலப்படுத்துகிறது. தசரத சாதகம் இராமனின் தலைநகர் காசி (வாரணாசி) என்கிறது, இராமாயணம் அயோத்தி என்கிறது. அண்மையில் ஓர் ஆய்வாளர் அது மேற்காசியாவில் இருந்தது என்கிறார். உண்மையில் அவன் குமரிக் கண்டத்தில்தான் இருந்திருக்க வேண்டும். அங்கிருந்து பல்வேறு இடங்களுக்குச் சென்றவர்கள் அவன் பெயரோடு தங்கள் இடங்களைத் தொடர்புபடுத்திக் கொண்டார்கள். எகிப்தின் பாரோவர்கள்(பரவர்கள்?) எனப்படும் அரசர்கள் ராம்சே என்று பெயர் வைத்துக்கொண்டனர். தசரத சாதகம் இராமனின் மனைவியாகிய சீதை அவன் உடன்பிறந்த தங்கை என்கிறது. பரோவர்களும் தங்கள் உடன்பிறந்த பெண்களையே மணந்து கொண்டனர் என்பது வரலாறு. எகுபதியர்கள் குமரிக் கண்டத்திலிருந்து குடியேறியவர்கள் என்பது பெரும்பான்மை வரலாற்றாசிரியர்கள் கருத்து . முதல் மனிதர்களாக கிறித்தவமும் முகம்மதியமும் கூறும் ஆதாம், ஏவாள் ஆகியோரின் மகன்களாகிய காயின், ஆபேல் ஆகிய இருவருக்கும் இரட்டையர்களாக உடன் பிறந்த பெண்களில் ஆபேலுடன் பிறந்தவளான அக்கிளிமா அழகு மிகுந்தவளாக இருந்ததால் அவளை மணக்க விரும்பிய காயின் ஆபேலைக் கொன்றதாக ஒரு கருத்து உள்ளது (விக்கிபீடியா – ஆங்கிலம் Cain and Abel பார்க்க).

பாண்டிய அரசு குறைந்தது நான்கு மரபினரால் ஒன்றன் பின் ஒன்றாக ஆளப்பட்டது. முதலாமவர் மீனவராகிய நெய்தல் நில மக்கள், அடுத்தவர் இந்திரனைத் தெய்வமாகக் கொண்ட மருத நிலத்தோர், மூன்றாவதாக வந்தோர் ஆயர்களாகிய முல்லை நிலத்தோர், முல்லை நிலத்தினரை அகற்றிவிட்டு வந்தவர்கள் வேடர்களாகிய குறிஞ்சி நிலத்தவர். இந்த உண்மைகளை நாம் ஆரியருக்குரியவை என்று தவறாகக் கருதி ஒதுக்கும் வேதங்கள், தொன்மங்கள், பிற சமற்கிருதம், பிராகிருதம், பாலிமொழி நூல்கள், தொல்காப்பியம், நம் கழக(சங்க) இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்கள் ஆகியவற்றிலிருந்து நுணுக்கமாகத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. எகிப்திய, சீன வரலாறுகளிலும் இதே போன்ற எண்ணிக்கைகளில் அரச மரபுகள் பட்டியலிடப்படுகின்றன. அவற்றை விரிவாகவும் நுணுக்கமாகவும் பகுத்தாய்ந்தால் குமரிக் கண்டத்தில் பாண்டிய அரசில் இடம் பிடித்த மரபுகளை அங்கேயும் தடம்பிடிக்க இயலக் கூடும்.

நம் உய்த்துணர்விலிருந்து (அனுமானத்திலிருந்து) தெளிவுப்படுத்தப்பட வேண்டியவை ஒருபுறமிருக்க, இன்னும் தெளிவான தரவுகளடிப்படையிலும் மீனவர்கள் பற்றிய சில செய்திகளை நாம் தொகுக்க வேண்டியுள்ளது. கடல் மூலம் ஐரோப்பாவுக்குச் சென்று கிரேக்கர்களுக்கு நாகரிகத்தை அறிமுகம் செய்தவர்களும் அ முதல் ன வரை 16 எழுத்துகளை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தவர்களும் பீனீசியர்கள் என்பது வரலாறு. இவர்கள் இந்தியாவின் தென்கோடியிலிருந்து கடல்வழி சென்றவர்கள்; நடுக்கடலில் காற்றின் திசையறிந்து பாய்மரங்களின் உதவியோடு கலம் செலுத்தினர். அண்மைக் காலம் வரை இப்போலாசு என்ற கிரேக்க மாலுமிதான் முதன் முதலில் பருவக் காற்றுகளின்(மன்சூன்கள்) உதவியுடன் நடுக்கடலில் கப்பல் செலுத்திய மாலுமி என்று கூறிவருகின்றனர். ஆனால் அவனுக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பினிசீயரிகள் அந்த உத்தியைக் கண்டுபிடித்தவர்கள். தென்னையையும் பனையையும் மேற்காசியப் பகுதிகளில் அறிமுகம் செய்தவர்கள். நண்ணில(மத்தியதர)க் கடலின் கிழக்குக் கரையோரத்தில் வாழ்ந்தவர்கள். உலகின் மிகத் தொன்மையான கடலோடிகள். எகிப்திய அரசன் ஒருவனின் வேண்டுகோளுக்கிணங்க ஆப்பிரிக்கக் கண்டத்தைக் கப்பல் மூலம் வலம் வந்தவர்கள். வெள்ளையர் கண்டுபிடித்ததாகக் கூறப்படும் நன்னம்பிக்கை முனையை அவர்களுக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அறிந்தவர்கள். வெடிமருந்து, கண்ணாடி ஆகியவற்றைக் சீனர்களுக்கு முன்பே கண்டுபிடித்தவர்கள். கடல் வாணிகம், கடற்கொள்ளைகள் மூலமாக ஏழு கடல்களையும் கட்டி ஆண்டவர்கள். ஐரோப்பா, ஆசியா ஆகிய கண்டங்களின் பெயர்கள் இரண்டு பினீசீயப் பெண்களின் பெயர்களிலிருந்து வந்தனவாகக் கூறப்படுகின்றன. கிரேக்கத் தொன்மங்களில் இடம்பெறும் பல மாந்தர்கள் பினீசியர்களே. ஓமரின் இலியட் காப்பியித்தில் வரும் எலனின் கடத்தலும் அதைத் தொடரும் போரும் பினீசீயர்கள் நடத்திய ஒரு பெண் கடத்தலின் தொடர்விளைவுகளே என்றும் கூறப்படுகிறது. கிரேக்கர்களுடன் நடத்திய ஒரு கடற் போரின் போது வீசிய ஒரு பெரும் சூறாவளியின் விளைவால் இவர்களுக்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து அலக்சாந்தரால் இவர்கள் வரலாற்றிலிருந்தே மறைந்து போயினர். ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் கறுப்பின மக்களை ஆப்பிரிக்கக் கண்டத்தில் பிடித்து உலகெங்கும் குறிப்பாக, அமெரிக்காவுக்கு அடிமைகளாகக் கொண்டு சென்று வாணிகம் செய்தவர்கள் ஐரோப்பாவின் நுழைவாயிலில் அமைந்துள்ள ஐபீரியத் தீவக்குறை(தீபகற்பம்)யில் அமைந்துள்ள பெயின், போர்ச்சுக்கல் நாட்டினரே. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அந் நாட்டு மக்களைப் பினீசீயர்கள் பிடித்துப் போய் உலகமெல்லாம் அடிமைகளாக விற்றனர் என்பது ஒரு வரலாற்று விந்தை. இந்தியாவின் தென்கோடியாகிய தமிழகம் அல்லது குமரிக் கண்டத்திலிருந்து சென்ற இவர்களது சிறப்பு என்னவென்றால் இவர்கள் சிவந்த படகுகளில் சென்றனர் என்பதாகும். இந்தச் செய்தி நமக்குத் தெரியவந்ததும் நம் கவனத்துக்கு வருவது செம்படவர் (செம்படகர்?) என்ற பெயரில் ஒரு மீனவர் பிரிவு நம்மிடையில் உள்ளது தான். இவர்களது பண்பாட்டை ஆய்வுக்குட்படுத்தினால் பினீசீயர்களைப் பற்றிய புதிய செய்திகள் நமக்குக் கிடைக்கலாம். இன்று இவர்கள் உள்நாட்டு நீர்நிலைகளின் மீன்பிடிக்கும் சாதியாராக வாழ்கின்றனர்.

சிலப்பதிகாரக் காலம் வரை தமிழகத்தில் மீனவர்கள் செல்வாக்குடன் வாழ்ந்திருக்கின்றனர். கடல் வாணிகர்கள் பரதர் என்றே அழைக்கப்பட்டனர். அவர்களை மன்னவர் பின்னவர் என்றே அது குறிப்பிடுகிறது. கடல் வாணிகர்கள் நாயக்கர்கள் என்றே அழைக்கபட்டனர்(நாவாய் → நாய்க்கன்). கண்ணகியின் தந்தையின் பெயர் மாநாய்கன் என்பதாகும். உள்நாட்டு வாணிகர்களாகிய சாத்துவர்களும் அரசனுக்கு இணையான செல்வாக்குப் பெற்றிருந்தனர். மாசாத்துவான் எனும் நிலவாணிகனின் மகன் கோவலன். ஆனால் கடல்வாணிகர், நில வாணிகர்களின் பட்டங்களை இந்த வரையறைக்குள் கண்டிப்பாக நிறுவ முடியவில்லை. மணிமேகலையில் வரும் சாதுவன் ஒரு கடல் வாணிகன். கோவலன் தான் ஈடுபட்ட கடல் வாணிகத்தில் தான் வறுமை எய்தியதாகவும் மாதவி எனும் வஞ்சகம் நிறைந்த பொய்மகளோடு உறவாடியதால் முதாதையர் திரட்டி வைத்திருந்த மலைபோலும் செல்வத்தை இழந்தேன் எனவும் இருபொருட் படும்படி, தான்,
சலம் புணர் கொள்ளை சலதியோடாடிக்
குலந்தரு வான்பொருட் குன்றம் தொலைத்த... தாகக்
கண்ணகியிடம் கூறினான். சலம் என்பதற்கு நீர், வஞ்சகம் என்றும் சலதி என்பதற்கு பொய்ம்மை நிறைந்தவள், கப்பல் என்றும் இரு பொருட்கள் உண்டு. (இவ்வாறு இரு பொருட்கள் இருப்பதை எமக்குச் சுட்டிக் காட்டியவர் புலவர் த.ச.தமிழனார்) கோவலனின் இந்தச் சொல்திறனைப் பார்த்துத்தான் கண்ணகி புன்முறுவல் காட்டினள் என்று இளங்கோவடிகள் குறிப்பாக உணர்த்தினாரோ?

தமிழகக் கடற்கரையையும் அங்கு வாழ்ந்த வாணிகர் குல மக்களையும் பற்றிச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இவ்வளவு விரிவாகக் கூறுகின்றன. ஆனால் சங்க இலக்கியங்கள் எனப்படும் கழக இலக்கியங்களில் கடலோடிகளைப் பற்றிய குறிப்புகள் அரிதாகவே காணக்கிடக்கின்றன. 1862 அகத்துறைப் பாடல்களில் பெரும்பாலானவை பாலை எனப்படும் காதலர் பிரிவு பற்றியவை. அவற்றுள் கடல்வழிப் பிரிவு பற்றிய பாடல் ஒன்றே ஒன்றுதான் உள்ளது என்கிறார் பர்.வ.சுப.மாணிக்கனார், தமிழர் காதல் என்ற தன் பண்டிதர் பட்ட ஆய்வேட்டில்.

போர்களையும் காதலையும் பற்றி விரிவாகக் காணப்படும் கழக இலக்கியத் தொகுப்பில் கடல் வாணிகர்களைப் பற்றிய செய்திகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இது அவற்றைத் தொகுத்தவர்களின் கைவண்ணமே. உண்மையில் தமிழக வரலாற்றை இருட்டடிப்பதே கழக நூல் தொகுப்பின் நோக்கம் என்று தெரிகிறது. வட இந்தியாவில் குமரிக் கண்ட மக்கள் பெருமளவில் குடியேறிய போது ஏற்கனவே அங்கே வாழ்ந்த மக்களுக்கும் புதிதாகக் குடியேறியவர்களுக்கும் இடையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை ஏதோவொரு வகையில் பதிந்து வைத்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் அச் செய்திகளை முற்றிலும் இருட்டடித்துள்ளனர். அதே போல் ஆட்சியாளர்களின் வரம்பற்ற அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்திய வாணிகர்கள் பற்றிய செய்திகளையும் இருட்டடித்துள்ளனர். அதுமட்டுமல்ல, பாண்டிய அரசின் முதல் மரபைத் தோற்றுவித்த பெண்ணான குமரியின் பெயரையும் அவர்கள் புறக்கணித்தனர். சிலப்பதிகாரம் மதுராபதி என்ற பெண் தெய்வத்தைத்தான் பாண்டியர் குல முதல்வி என்று கூறுகிறது. அவர்களை மீறி வந்த குறிப்பு தான் குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி (குமரித் துறையிலுள்ள அயிரை மீனை அள்ளி உண்ட நாரைகள்) என்ற வரி. அயிரை என்ற மீன் நன்னீரில் வாழ்வது. எனவே குமரியம் பெருந்துறை ஓர் ஆற்றின் கரையில் அதாவது குமரியாற்றின் கரையில் அமைந்திருந்தது என்பது புலனாகிறது. (ஒரு கருத்தரங்கில் இவ் வரியைச் சுட்டிக் காட்டியவர் ப-ர்.க.ப.அறவாணன்). குமரி மலையைப் பற்றியும் அதனைக் கடல் கொண்டது பற்றியும் கூறும் சிலப்பதிகார வரிகளிலிருந்துதான் குமரிக் கண்டம் என்ற பெயரையே நம்மால் எய்த முடிகிறது. அதே போல் குமரிக் கண்டத்திலிருந்து இன்றைய தமிழகத்தினுள் குடிபெயர்ந்த சேர, சோழ. பாண்டியர்களுக்கு எதிர்ப்புக் காட்டியவர்கள் முறையே பறையர், துடியர், பாணர், கடம்பர் எனப்படும் பெயர்களைப் பெற்ற குடித் தலைவர்களின் கீழ் வாழ்ந்த உள்நாட்டு மக்கள். இவர்களைப் பற்றிய குறிப்பு நூற்தொகுப்பாளர்களை மீறி வந்துள்ளது. இக் குடித் தலைவர்களில் எதிர்த்து நின்றவர்களை ஒடுக்கி அவர்கள் இழிந்தவர்களாக அழுத்தப்பட்டு நெடுநாட்களுக்குப் பின்னுள்ள ஒரு காலகட்டத்தைக் காட்டுகின்ற பாக்களே தொகுக்கப்பட்டுள்ளன. அதனால் இம் மக்களைப் பற்றிய செய்திகள் ஒன்றோடொன்று மயங்கி ஒருவரை மற்றொருவரிடமிருந்து பிரித்துக்காண இயலாத நிலையில் நம்மைக் குழப்புகின்றன. இவ்வாறு மறைக்கப்பட்ட வரலாற்றிலிருந்துதான் நாம் இன்றைய தமிழகத்தின் மூலக் குடிகளைப் பற்றியும் கடலோடிகளைப் பற்றியும் செய்திகளை தேடிப் பிடிக்க வேண்டியுள்ளது.

பறையர், துடியர், பாணர் என்ற மூன்று குடிகளுக்கும் பொதுத்தன்மை அவர்களது பெயர்களோடு ஏதோவோர் இசைக் கருவி இணைந்துள்ளது. பறை→ பறையர், துடி (உடுக்கு) → துடியர், யாழ் → பாணர். இவ்வாறு தொல்பழங்குடிகளில் இசைக் கருவிளோடு தொடர்புடையவர்களை சாமன்கள் என்று மாந்தநூலார் குறிப்பிடுவர். இவர்கள் தத்தம் குடியிருப்புகளின் பூசகத் தலைவர்கள். இவர்கள் பல்திற ஆற்றல் படைத்தவர்கள். இவர்களது அடிப்படை ஆற்றல் வசியமாகும். இதனை எய்த இவர்கள் நம் தொன்மங்களில் முனிவர்கள் மேற்கொண்டனவாகக் கூறப்படும் “தவமுறைகளை”த் தங்கள் உடலை வருத்தி மேற்கொள்வதால் எய்தினர். மருத்துவத்துக்காக அந்த ஆற்றலைப் பயன்படுத்தினர். அந்த ஆற்றலைப் பயன்படுத்தி தங்களுக்கு அவர்களால் தீங்கு விளைவிக்க முடியும் என்று மக்கள் நம்பினர்; அதனால் அவர்களுக்கு அடங்கி வாழ்ந்தனர். வசியம் செய்வதற்காகவே அவர்கள் இசைக் கருவிகளைப் பயன்படுத்தினர். இன்றும் குறி சொல்வோரில் பெரும்பாலோரும் பேயோட்டுவோரும் பல்வேறு இசைக் கருவிகளைப் பயன்படுத்துவதை நாம் காண்கிறோம். சாமன் என்ற சொல் உருசிய மொழி சார்ந்தது. சாம்பன் (பறையன்) என்ற தமிழ்ச் சொல்லுக்கும் சாம வேதம் எனப்படும் மறை நூலுக்கும் இச் சொல்லோடு தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நான்கு வேதங்கள் இறுதியில் வரும் அதர்வண வேதம் பிறருக்குத் தீங்கிழைக்கப் பயன்படும் மந்திரங்களை (பிளாக்மேசிக்) கொண்டிருப்பதாகக் கூறுவர். இசைக் கருவிகளோடு தொடர்புடைய இந்த மூன்று வகைக் குடியினரோடு இணைத்துக் கூறப்படும் கடம்பர்களும் இம் மூவரைப் போன்று சாமன்களாகவே இருந்திருக்க வேண்டும். மூவேந்தர்கள் குமரிக் கண்டத்திலிருந்து இன்றைய தமிழகத்துக்குக் குடிபெயர்ந்த போது சாமன்களாகிய இந் நான்கு பெயர்களிலமைந்த தலைவர்களின் கீழ் திரண்ட உள்நாட்டுக் குடிகளே அவர்களை எதிர்த்து நின்றிருக்க வேண்டும். இந்த உண்மையைக் கழக நூல் தொகுப்பாளர்களின் பார்வைக்குத் தப்பி இடம்பெற்று விட்ட இந்த வரிகள் நமக்குத் தெரிவிக்கின்றன.

இந்த நால்வரில் கடம்பர் எனப்படுவோர் கடலோடும் ஒரு மக்கட் குழுவினர் என்பதற்குக் கழக இலக்கியத்தில் சான்று உள்ளது. இன்றைய கோவா மாநிலத்துலுள்ள மக்கள் இந்தக் கடம்பர்களின் வழிவந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் பண்டைத் தமிழகத்தின் மேற்குக் கடற்கரையாகிய இன்றைய அரபுக் கடலில் கடற் கொள்கைகளில் ஈடுபட்டுவந்தனர், அதனால் தமிழகத்தோடு வாணிகத் தொடர்பு வைத்திருந்த உரோமர்களுக்கு ஏற்பட்ட இடையூற்றை நீக்க சேரன் செங்குட்டுவனின் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கப்பற்படை கொண்டு அவர்களது வலிமையை அழித்தான் என்று கழக இலக்கியமும் சிலப்பதிகாரமும் கூறுகின்றன. கிழக்குக் கடற்கரையில் கடம்பர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் பதுமாசூரனோடு முருகன் போரிடும் போது அவன் கடம்ப மரமாக மாறி நின்றான் என்றும் அதனை வேல் கொண்டு முருகன் அழித்தான் என்றும் கந்தபுராணம் கூறுகிறது. அதனால் கடம்பன் என்றும் முருகன் அழைக்கப்படுகிறான். இது கிழக்குக் கடற்கரையில் கடம்பர்க்கள் ஒடுக்கப்பட்டதைக் குறிக்குமா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு புதைந்து கிடைக்கும் வரலாற்று உண்மைகளைத் தடம் பிடிப்பதற்கு உறுதுணையாகப் பல தடயங்கள் நமக்குக் கிடைக்கின்றன. கடல் மேல் செலவு(பயணம்) மேற்கொள்வோர் இழிகுல மக்கள் என்று மனுச் சட்டம் குறிப்பிடுகிறது. தமிழகத்தில் வலங்கை, இடங்கை என்று இருவகைச் சாதிக் குழுக்கள் இருந்தன. இந்தப் பாகுபாடு 19 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. ஆங்கிலர்தாம் இதற்கு முடிவுகட்டினர். இவ் விரு வகுப்பினரும் தம்முள் இடைவிடாத கொலைவெறித் தாக்குதல்களை ஏறக்குளைய 900 ஆண்டுகள் நடத்திவந்தனர். இவர்களது பிணக்குகளுக்கு அடிப்படையாயிருத்தவை விருதுகள் எனப்படும் 72 உரிமைகளே. செருப்பணிதல், குடைபிடித்தல், குதிரையில் செல்லல், பல்லக்கில் செல்லல், வாள்போன்ற ஆயுதங்கள் வைத்திருத்தல், நடைபாவாடை என்ற பெயரில் நடப்பதற்குத் துணி விரித்தல், தலைக்கு மேல் துணி பிடித்துச் செல்லும் மேற்பாவாடை, முன் சங்கு, பின் சங்கு, ஒற்றைச் சங்கு, இரட்டைச் சங்கு ஊதல், பெண்கள் முன்னும் பின்னும் சதிராடல், தோளில் துண்டு அணிதல், தலைப்பாகை அணிதல், பூணூல் அணிதல் என்று நீள்கிறது இந்தப் பட்டியல். இவ் வுரிமைகளை மக்களில் ஒரு சாரருக்கு மறுப்பது என்பது இன்றைய தீண்டாமையை விடக் கொடியது. வாணிகர்களும் கடலோடிகளும் இடங்கைச் சாதியினராக ஒதுக்கப்பட்டனர். இந்தப் பின்னணியில்தான் கப்பல் மூலம் இங்கிலாந்துக்குச் செலவை மேற்கொண்ட இராசாராம் மோகன்ராய் சாதி விலக்கப்பட்டதையும் கணிதமேதை இராமானுசம் இங்கிலாந்து செல்ல அவரது தாயின் உறுதியான பிடிவாதம் தேவைப்பட்டது என்பதையும் குமரி அம்மன் கோயில் நுழைவு காந்திக்கு மறுக்கப்பட்டது என்பதையும் பார்க்க வேண்டும்.

இந்த இருட்டடிப்பின் பின்னணியில் தமிழகக் கப்பல் வாணிகர்களைப் பற்றிய பல வரலாறுகளையும் கதைகளையும் நாம் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றின் மூலம் அறிகிறோம். மணிமேகலைத் தெய்வம் கோவலனின் குலதெய்வமான கதையைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்து விட கடலில் தத்தளித்த கோவலனின் முன்னோன் ஒருவனைக் கடலின் காவல் தெய்வமான மணிமேகலைத் தெய்வம் காப்பாற்றிக் கரை சேர்த்தது. இதே கதை புத்த சாதகக் கதைகளில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. அதில் வரும் வாணிகன் புத்தரின் முற்பிறப்பாகச் சொல்லப்படுகிறான். தாய்லாந்து இளவரசனுக்கும் இதே கதை கூறப்படுகிறது. இவற்றின் மூலம் தமிழகக் கப்பல் வாணிகர்களின் பண்டை நாள் செல்வாக்கும் பெருமையும் நமக்குத் தெரியவருகின்றன. மணிமேகலையில் சாதுவன் என்ற தமிழகக் கப்பல் வாணிகன் கப்பல் உடைந்து, நக்க நாகர்கள் எனும் காட்டுவிலங்காண்டிகள் வாழும் தீவில் ஒதுங்கி அவர்களோடு உறவு கொண்டது கூறப்படுகிறது. நிக்கோபார்த் தீவுகள் எனப்படும் நக்குவாரித் தீவுகளுக்கு அப் பெயரைத் தமிழகக் கடல் வாணிகர்களே சூட்டியுள்ளனர். (நக்குவாரித் திவிலிருந்து கொண்டு வரப்பட்ட தேங்காய் வகை இன்றும் நக்குவாரித் தேங்காய் என்றே அழைக்கப்படுகிறது. நக்க என்றால் ஆடையில்லாத என்று பொருள்; நேக்கட் என்ற ஆங்கிலச் சொல்லின் மூல வடிவம் இது. நக்க நாகர்கள் ஆடையின்றி இருந்ததோடு மனிதனைக் கொன்று உண்பவராகவும் இருந்தனர். இன்றும் நிக்கோபார் தீவுகளின் மூலக்குடிகளின் உடை அன்றைய நிலையிலிருந்து பெரும் மாற்றம் எதையும் பெற்றுவிடவில்லை.)

இவ்வாறு கடல் மீதான நம் ஆட்சி உள்நாட்டு அரசர் - பார்ப்பனர் கெடுமதியால் அழிக்கப்பட்டது. நம் கடல் வாணிக வகுப்புகள் அழிக்கப்பட்டன. உள்நாட்டு ஒடுக்குமுறைக்குத் தப்பிய நம் கடல் வாணிகர்கள் இந்தோனேசியா, மலேயா போன்ற கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து வாணிகம் செய்தனர். அதே போல் நிலவழி வாணிகர்கள் தமிழக எல்லைக்கு வெளியே கழகங்கள் அமைத்துச் செயற்பட்டனர். சோழப் பேரரசு காலத்தில், குறிப்பாக இராசேந்திரன் அக் கழகங்கள் மேல் படைசெலுத்தி அழித்தான். இந்தோனேசியத் தீவுகளான சாவகம் (சாவா) சுமத்திரா(கடாரம்) போன்ற தீவுகள் மீது படையெடுத்து அங்கிருந்த தமிழகக் கடல் வாணிகர்களை ஒடுக்கினான். இன்று பண்டை நாகரிகத் தொடர்ச்சியுள்ள மக்களில் மிக எளிதாக மதமாற்றத்துக்கு உள்ளாவோர் இந்தியர்கள், அதிலும் குறிப்பாகத் தமிழர்கள்தாம். கிழக்காசிய நாடுகளில் முகம்மதியத்தைத் தழுவியுள்ளவர்களில் மிகப் பெரும்பாலோர் தமிழர்கள்தாம். அதனால்தான் அங்குள்ள முகம்மதியர்களின் பெயர்களோடு தமிழ் தழுவிய “இந்து”ப் பெயர்களைக் காண முடிகிறது. இதற்குக் காரணமே நம் நாட்டில் தொழில் - வாணிகம் சார்ந்த மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறையே.

இது போன்ற ஒடுக்குமுறைப் பின்னணியில்தான் தங்கள் புதிய சமயமாகிய முகம்மதியத்தை அரபு வாணிகர்களால் எளிதாகக் கடற்கரையில் வாழ்ந்த தமிழகக் கப்பல் வாணிகர்கள் ஏற்க வைக்க முடிந்தது. அவர்கள் மரக்கலராயர்கள் என்ற சொல்லின் மருவாகிய மரைக்காயர் என்று அழைக்கப்படுகின்றனர். அரேபியர்களின் சிறப்புப் படைப்பும் முகாமையான வாணிகப் பண்டமுமான போர்க் குதிரைகளைப் பழக்கிப் பயன்படுத்தும் தமிழக அரசர்களின் குதிரைப்படை வீரர்களை மதமாற்றி இராவுத்தர்களாக்க முடிந்தது. இவ்வாறுதான் தில்லியின் மாலிக்காபூர் மதுரையின் வீரபாண்டியன் மீது போர் தொடுத்த போது போரின் நடுவில் வீரபாண்டியன் படையிலிருந்த 30 ஆயிரம் முகம்மதிய வீரர்கள் கட்சி மாறி மாலிக்காபூர் பக்கம் ஓடித் தங்கள் தாய்மண்ணுக்கு இரண்டகம் செய்ததன் மூலம் தமிழகத்தின் உரிமை வாழ்வுக்குப் பேரிடியாகிய வரலாற்று அவலம் நிகழ்ந்தது.

இவ் விரு சாரார் தவிர தமிழகத்தின் ஏற்றுமதிப் பண்டங்களில் முதன்மை பெற்ற துணியை நெய்து வாழ்ந்த சாலியப் பள்ளர் என்ற மக்களும் பெருமளவில் மதம் மாறினர். இந்த மதமாற்றங்களால் ஒடுக்கப்பட்ட இந்த மக்களுக்கு எந்த விடிவும் ஏற்படவில்லை. நாளடைவில் அரபு வாணிகர்கள் கடற்கரையோரங்களில் சூறையாடல், தீவைத்தல், பெண்கள் மீது பாலியல் வன்முறைகளை நிகழ்த்தல் என்று பேயாட்டம் ஆடினர். உள்நாட்டு மக்களும் அவர்களுக்கு இடையூறு விளைவித்தனர். மனுச் சட்டத்தின்படி ஆட்சி செய்த நம் அரசர்களால் மீனவர்கள் ஆயுதங்கள் வைத்திருப்பது தடை செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு இருதலைக் கொள்ளி எறும்புகளாக வாழ்ந்த மீனவ மக்கள் இன்னொரு மதமாற்றத்துக்கு உள்ளாயினர். இந்த மதமாற்றம் தூய சபேரியார் என்ற பழஞ்சபை (கத்தோலிக்க)த் துறவியாரால் மேற்கொள்ளப்பட்டது. அத் துறவியார் போர்த்துக்கல் நாட்டைச் சேர்நதவர். தமிழக மீனவர்கள் போர்த்துக்கல் நாட்டு மன்னரின் குடிமக்களானால் அவர்களுக்கு அவர் ஆயதங்கள் வழங்கிப் பாதுகாப்பார் என்ற வாக்குறுதியின் பேரில் அவர்கள் மதமாற்றம் பெற்றனர் என்று வரலாறு கூறுகிறது. உண்மையில் இது மதமாற்றமல்ல, ஒரு நாட்டின் ஒரு பகுதி மக்களின் வாழ்நிலத்தை எங்கோ நெடுந்தொலைவில் உள்ள இன்னொரு அரசரின் ஆளுகையின் கீழ்க் கொண்டு வர மேற்கொண்ட முயற்சியாகும். இதற்காக நாம் மதம் மாற்றியவர்கள் மீதும் மதம் மாறியவர்கள் மீதும் சீற்றம் கொள்வதில் பொருளில்லை. இத்தகைய ஒரு சூழ்நிலையை உருவாக்கி மக்களின் மனநிலையைச் சிதைத்து வைத்திருந்த உள்நாட்டு ஆதிக்க விசைகள் மீதுதான் நம் சீற்றம் பாய வேண்டும். இன்று இரா. சே.ச. (இராட்டிரீய சுயம் சேவக் சங்கம் – ஆர்.எசு.எசு.) தலைவர், இந்தியாவிலுள்ள முகம்மதியர்கள், கிறித்தவர்கள் ஆகியோரின் முன்னோர் ஒரு காலத்தில் “இந்து”க்களாக இருந்தனர் என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டுமென்கிறார். அப்படி ஒப்புக்கொள்வதில் நமக்கு அட்டி யொன்றுமில்லை. ஆனால் அதற்கு முன்னால் அவர்களின் முன்னோர்கள் மதம் மாறியதற்குக் காரணம் இன்று குற்றம் சாட்டுவோரின் முன்னோர்கள் அவர்கள் மீது நடத்திய ஒடுக்குமுறைதான் என்பதை இவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல, சாதியும் வருணமும் “இந்து” சமயத்தின் மிக உயர்ந்த அடிப்படைக் கோட்பாடு என்று இன்று கூறுவதை அவர்கள் நிறுத்த வேண்டும். சாதி உயர்வு - தாழ்வைக் கற்பிக்கும் பூணூல், புலாலுணவை இழிவாகக் கூறுதல், மக்களின் தாய்மொழிகளை இழிவுபடுத்திச் சமற்கிருத்தைத் தேவ மொழி என்று கூறும் ஆணவம், மக்களைச் சாதி, வருண அடிப்படையில் பிரித்து வைக்கும் சிறு தெய்வம் மற்றும் ஆகம வழிபாட்டு முறைகள் என்று “இந்து” சமயத்தைக் காலத்துக்கும் நாகரிகமடைந்த ஒரு மக்கள் குழுவுக்கும் மக்களாட்சி அமைப்புக்கும் பொருந்தாமல் ஆக்கி வைத்திருக்கும் கூறுகளைக் கைவிட்டு அனைத்து மக்களையும் சரிசமமாக மதிக்கும் ஒரு புதிய சமயமாக இந்தச் சமயத்தை மறுவடிவமைக்க முன்வர வேண்டும். அத்துடன் நாட்டை அயலவர்க்கு ஒட்டுமொத்தமாக விலை பேசும் பா.ச.க.வும் அதன் “தாராள”ப் பொருளியல் கோட்பாட்டை எதிர்ப்பது போல் பாய்ச்சல்(பாவலா) காட்டி விட்டு மரபுத் தொழில்களைப் பாதுகாப்பது போல் நடித்து, இக் கால மிக உயர் அறிவியல் தொழில்நுட்பங்கள் உள்நாட்டில் உருவாகாமல் உளவியலில் தடுத்து வெளிவிசைகளுக்கு திரைமறைவில் துணைபோகும் “சுதேசி” விழிப்புணர்வு இயக்கத்தை நடத்தும் இரா.சே.ச.வின் குருமூர்த்தியும் நடத்தும் கண்ணாமூச்சி விளையாட்டை முடிவுக்குக் கொண்டுவரட்டும். தற்சார்புள்ள அத்தகைய ஒரு பொருளியல் உருவாகி நாட்டில் வளம் மலிந்து மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டால் வெளிநாட்டுப் பணத் துணையுடன் மதமாற்ற வருவோருக்கு சப்பானில் போல், சீனத்தில் போல் தோல்விதான் கிடைக்கும்.

முகம்மதியமும் கிறித்தவமும் மேற்கொண்ட மதமாற்ற முயற்சிகள் முழு வெற்றி பெற முடியவில்லை. அவ்வப்போது புதுப்புதுக் கதைகளைப் புனைந்து பொய்யான இறும்பூதுகளை (அற்புதங்களை) நிகழ்த்திக்காட்டி சிறு சிறு கோயில்களை உருவாக்கி அவற்றில் புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களில் தலைமைப் பண்புள்ள சிலரைப் பிடித்து சில பொறுப்புகளை அல்லது வரிசைகளை (மரியாதை, முதல் மரியாதை என்பது போல்) அவர்களுக்கு வழங்கி எதிர்கொண்டனர் “சாதி இந்துக்கள்” எனப்படுவோர். நெல்லை மாவட்டம் உவரியிலிருக்கும் சுயம்புலிங்கசாமி கோயில், குமரி மாவட்டம் மண்டைக்காட்டம்மன் கோயில், நெல்லை மாவட்டம் சங்கரநயினார்கோயிலிலிருக்கும் சங்கரநாராயண சாமி கோயில் என்று பட்டியலிட்டால் தமிழகக் கோயில்களில் கணிசமான ஒரு விகிதம் இந்த வகைப்பாட்டில் அடங்கிவிடும். புதிய சமயங்களைச் சேர்ந்த ஆட்சியாளர்களின் காலத்தில் அவர்களது அதிகாரத்துக்கு அடங்கியும் அதனால் கிடைக்கும் பொருளியல் நலன்களுக்காகவும் பிறர் மேல் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புக் கிடைக்கும் என்பதற்காகவும் மதம் மாறியோர் பெருமளவில் உண்டு. பெரும் நிலவுடைமைகளைக் கொண்டிருந்த மேற்சாதி நிலக்கிழார்கள் அவற்றைப் பாதுகாத்துக்கொள்ள மதம் மாறினர்; அவ்வாறு புதிய மதங்களிலும் பழைய ஆதிக்கங்களைத் தொடர்ந்தனர். இன்று மத வெறி இயக்கங்களைக் கட்டி வளர்ப்பதில் இவர்கள் தலைமை தாங்குகின்றனர், அல்லது பின்னணி கொடுக்கின்றனர்.

இவ்வாறு மக்கள் திசைக் கொருவராய் பிரிந்து நிற்கும் சூழ்நிலையில் 1076 கிலோமீற்றார் நீளம் கொண்ட வளமிக்க தமிழகக் கடற்கரை கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. தமிழகமும் அதன் கடற்பகுதியும் வளம் மிக்கவை. இங்கு நிலவும் தட்பவெப்ப நிலை உலகில் வேறு எங்கும் இல்லாதது, அதிலுள்ள ஏற்ற வற்றங்கள் மிகக் குறைவானவை. உயிர்கள் பல்கிப் பெருகவும் விரைந்து வளரவும் மிகத் தோதானவை. நிலத்தில் போலவே நம் கடலினுள்ளும் எண்ணற்ற மீன்வகைகள், நிலைத் திணைகள் (தாவரங்கள்) அவை தவிர்த்த பிற உயிர்வகைகள் என்று மிக உயர்ந்த பல்லுயிர்த் திரட்சி உள்ளது. அவற்றை நாம் பேணிக் காக்கவும் இல்லை, முழுமையாகப் பயன்படுத்துவும் இல்லை.

கடலோடுதல் போன்றே தமிழக மீன்பிடித் தொழிலும் பழமையானது. கடல் தொடர்பான மீனவர்களின் தொழில்நுட்ப அறிவும் ஒப்பற்றது. கடலில் வீசும் காற்றுகள், நீரோட்டங்களின் தன்மைகள், அலைகளின் வகைகள், நீர் கொள்ளும் நிறத்தின் அடிப்படையில் மழை, புயல் போன்ற பருவநிலைகளை முன்கணித்தல், வெவ்வேறு பருவ நிலைகளில் கிடைக்கும் மீன்வகைகள், மீன்கள் முட்டையிடல், பொரித்தல் போன்ற அவற்றின் வாழ்க்கைச் சுழற்சி, கரையிலிருந்து எவ்வளவு தொலைவில் அல்லது நீர் மட்டத்திலிருந்து எவ்வளவு ஆழத்தில் எந்ததெந்தக் காலத்தில் என்னென்ன மீன்வகைகளும் பிற கடல் உயிரிகளும் கிடைக்கும் போன்ற எண்ணற்ற புலனங்களை நன்கறிந்தவர்கள் மீனவர்கள், எந்தெந்தப் பருவத்தில் எந்தெந்த வகை வலைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிந்தவர்கள். அத்துடன் கனம் குறைந்த வகை மரங்களைச் சேர்த்துக்கட்டி உருவாக்கப்பட்ட கட்டுமரங்கள் எனப்படும் மிதவைகளில் கடலினுள் நெடுந்தொலைவு சென்று மீன் பிடிக்கும் திறன் பெற்றவர்கள். விண்மீன்களின் துணையுடன் திசையையும் நேரத்தையும் கணித்து தம் கடற்செலவை நெறிப்படுத்தப் பயின்றவர்கள். உயிரைப் பணயம் வைத்துத் தொழில் செய்யும் துணிவைத் தம் வாழ்க்கைச் சூழலால் பெற்றவர்கள்.

தமிழர்களின் பண்பாட்டில் மட்டுமல்ல உலக மக்களின் பண்பாட்டிலும் நம் மீனவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. உலகமெல்லாம் தமிழர்களின் நாகரிகத்தைச் சுமந்து சென்று பரப்பியவர்கள் என்பதோடு உப்பின் பயன்பாட்டைக் கண்டுபிடித்து உலகுக்கு உணர்த்தியவர்கள் அவர்களாகும். கடற்கரையில் இயல்பான நிலைமையில் அலை எட்டும் தொலைவுக்கு அப்பால் ஏற்றவற்றங்களின் போது அல்லது புயல்கள், ஓங்கலைகளின் போது கடல் நீர் தேங்கிய குட்டைகளில் உப்பு செறிந்திருக்க, அதில் செத்து ஒதுங்கிய மீன்கள் நீர் வற்றிய போது அழுகாமல் சிதையாமல் காய்ந்திருப்பதைப் பார்த்து உப்பு என்ற பதிய பண்டத்தைக் கண்டார்கள். உயிர்களின் சதைகள் சிதைவதைக் கடலுப்பு தடுக்கிறது என்பதைக் கண்டறிந்து கருவாடு தொடங்கி எண்ணற்ற ஊறுகாய் வகைகள் தோன்றவும் தோல் பதனிடும் தொழில் தோன்றவும் காரணமானவர்கள். இவ்வாறு பதனிடப்பட்ட தோலிலிருந்து தோலாடைகள் உருவான பின்னர்தான் உலகின் பனிப் பகுதிகளில் மனிதன் குடியேறியிருக்க முடியும். கருவாட்டை “உணங்கல்” என்று கேரளத்தில் கூறுவர். சிலப்பதிகாரமும் அவ்வாறே குறிப்பிடுகிறது. ஆனால் உணங்கல் என்பது கருவாட்டில் ஒரு வகைதான். உப்பிடப்பட்ட மீனை வெய்யிலில் உலர்த்துவதால் கிடைப்பது அது. சிறிய மீன்கள் தாம் இவ்வாறு பதப்படுத்தப்படுகின்றன. இவற்றை எந்த மசியல்(மசாலா)ப் பொருளும் சேர்க்காமல் சுட்டோ பொரித்தோ உண்ணலாம். அதே நேரத்தில் பெரிய மீன்களைப் பதப்படுத்த மணலில் குழிகளைத் தோண்டி மீன்களின் வயிற்றைப் பிளந்து குடல் போன்ற பகுதிகளை நீக்கி உள்ளே உப்பைத் திணித்து உப்பினுள் இட்டுப் புதைப்பார்கள். இதற்குக் குழியுப்பு முறை என்று பெயர். இவ்வாறு கிடைக்கும் கருவாட்டுக்கு ஊதைக் கருவாடு என்பது பெயர். இதைச் சமைப்பதற்கு மசியல் பொருட்களின் துணையும் சமையல் கலையில் தேர்ச்சியும் தேவை.

கடல் அறிவியல் - தொழில்நுட்பம் பற்றி மேலே குறிப்பிட்டவற்றில் இன்று எத்தனை நூற்றுமேனி(விழுக்காடு) நம் நாட்டு மீனவர்களிடம் எஞ்சியுள்ளது என்பதைக் திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. புதிதாக நுழைந்த விசைப் படகுகள், அவற்றுக்கு ஏற்ற வலைகள் போன்றவற்றின் போட்டியின் முன்னால் பழைய உத்திகள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இந்தப் பின்னணியில் ஓர் இரண்டுங்கெட்டான் நிலை உருவாகியுள்ளது. புதிய கருவிகளின் வரவால் பழைய தொழில்நுட்பக் கூறுகள் கைவிடப்பட்டு அவற்றை அறியாத ஒரு புதிய தலைமுறை மீனவர்கள் உருவாகிவிட்டனர். புதிய தொழில்நுட்பம் மேலை நாடுகளில் உருவானதற்குப் பின்புலமான வலிமைமிக்க பொருளியல் சூழல் நம் நாட்டில் இல்லை. எனவே அப் புதிய தொழில்நுட்பத்தை அதன் முழுமையான வடிவில் இங்கு கடைப்பிடிக்கவும் முடியவில்லை. இந்தத் தொழில்நுட்ப வெறுமைச் சூழல் கடல்தொழில் துறையில் மட்டுமல்ல, நம் நாட்டின் அனைத்துத் துறைகளிலும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ளது, அது பொருளியல் சார்ந்ததாயினும் சரி பண்பாட்டுக் களமாயினும் சரி. இந்த நிலைமைக்கு இங்குள்ள ஆட்சியாளர்களும் அவர்களுக்குத் துணைபோகும் பல்வேறு அரசியல் கோட்பாடுகளும்தாம் காரணம். குறிப்பாகப் பாட்டாளியர் கோட்பாடாகச் சிதைக்கப்பட்ட மார்க்சியத்தின் பெயரால் இயங்கும் இயக்கங்களின் பங்கு இதில் பெரிது.

தமிழக மக்களில் கடல் மீனை விரும்பி உண்போரின் விழுக்காடு மிகக் குறைவு. கடல் மீன் கருவாட்டை விரும்பி உண்போர் கூடக் கடல் மீனை விரும்புவதில்லை. அதற்குக் காரணம் உண்டு. கடற்கரையிலிருந்து தலைச் சுமையாகத்தான் முன்பு மீன் உள்நாட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. பின்னர் மிதிவண்டியும் பயன்பட்டது. பேருந்துகளில் மீனையோ கருவாட்டையோ கொண்டு செல்ல விடுவதில்லை. எனவே கடல் மீனின் பயன்பாட்டு எல்லை கடற்கரையிலிருந்து 15 கிலோமீற்றர்களுக்கு உள்ளாகத்தான் இருந்தது. கருவாட்டைத் தலைச் சுமையிலும் வண்டிகளிலும் பின்னர் சரக்குந்துகளிலும் எங்கு வேண்டுமாயினும் கொண்டுசெல்ல முடியுமாதலால் அது எல்லாக் காலங்களிலும் நாடு முழுவதும் கிடைத்தது. எனவே அதை உண்ணும் பழக்கமும் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குக்கும் எட்டியிருந்தது. கருவாடு, தவிர ஆறு, ஏரிகள் குளங்களிலிருந்து கிடைக்கும் நன்னீர் மீன்களே உள்நாட்டில் பயன்பட்டன. கடற்கரையை ஒட்டிய மக்களுக்கு நன்னீர் மீன் சமையலில் தேர்ச்சியில்லாதது போலவே உள்புற மக்களுக்குக் கடல்மீன் சமையலில் பயிற்சி இருக்கவில்லை. இப்போது பனிக்கட்டியைப் பயன்படுத்திக் குளிர்வித்து உந்துவண்டிகளில்(வேன்கள்) விரைந்து கடவப்படுவதால் கடல் மீனை உட்புற மக்களும் பரவலாக உண்ணத் தலைப்பட்டுள்ளனர். கடற்கரையை ஒட்டிய மக்கள் தாங்களே சிறு மீன்களைச் செதில் நீக்கி அறுத்துச் சமையலுக்கு ஆயத்தம் செய்யக் கற்றவர்கள். உட்புற மக்களுக்கு இதில் சில்லரை வாணிகனின் உதவி தேவைப்படுகிறது. அத்துடன் சிறு மீன்களை விடப் பெரிய மீன்களைச் சில்லரை வாணிகனிடமிருந்து துண்டு செய்து வாங்கிவிட்டால் பொரித்து உண்பது எளிதாக இருக்கும். எனவே உட்புறப் பகுதிகளில் பெரிய மீன்களை விரும்பி வாங்கிகுன்றனர். ஆனால் ஏழைகள் விலை மலிவு, சமையலில் எளிமை மற்றும் சிக்கனம் கருதியும் சிறிய மீன்களையே விரும்புகின்றனர்.

பொதுவாக துலை, நளி(ஐப்பசி, கார்த்திகை) மாதங்கள் மீன் ஏராளமாகப் “படும்”. (மீன் அறுவடையை மீன்பாடு என்று கூறுவர்.) கடந்த காலங்களில் சாளை (மத்தி என்றும் அழைக்கப்படும்), நவரை, இறால், நெத்திலி(நெய்த் தொலி, நெய்த்தலை இவற்றின் மருவல் என்ற இரு கருத்துகள் உள்ளன) போன்றவை இம் மாதங்களில் குவிந்து கிடக்கும். அக் காலங்களில் கடற்கரையை அடுத்து வாழும் மீனவரில்லா மக்கள் கடற்கரைக்குச் சென்று இச் சிறுமீன்களை இலவயமாகப் பெற்று நெருப்பில் சுட்டுப் பனை வெல்லத்துடன் சேர்த்து உண்பர். இயல்பான காலங்களிலும் இது நடப்பதுண்டு. இன்று வெளிநாட்டு மீன்பிடிக் கலங்கள் நம் நாட்டுக் கடல் எல்லையினுள் முன்பு திருட்டுத் தனமாக இப்போது நம் ஆட்சியாளரின் ஒத்துழைப்புடன் நுழைந்து மீன்களை அள்ளிச் செல்கின்றன. (ஆனால் இதுவெல்லாம் தமிழ் நாட்டு மீனவர்களை எல்லை மீறியதாகக் கூறிச் சுட்டுக் கொல்லும் இந்தியக் கரைக்காவல் படையினரின் “கண்களில் படுவதில்லை”!) அத்துடன் உந்து வண்டிகள் மூலம் இங்குள்ள மீன்கள் தொலைவான இடங்களுக்குக் கொண்டுசெல்லப்படுவதால் முன் போன்று கடற்கரையை அடுத்துள்ள மக்களுக்குச் செழிப்பாக மீன் கிடைப்பதில்லை.

இவ்வாறு தாராளமாக மீன்படும் துலை, நளி மாதங்களில்தான் காலரா என்றும் வாந்திபேதி என்றும் அழைக்கப்படும் கக்கல் கழிச்சல் நோய் நம் நாட்டை 40 - 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை தாக்கி ஆண்டு தோறும் பல்லாயிரவரைப் பலிகொண்டு வந்தது. அதிகமான மீன்பாடு இந் நோய்த் தொற்றை விரிவும் விரைவும் படுத்தும். அதைத் தடுப்பதற்காக அரசினர் காவல் துறையினரைக் கடற்கரைக்கு விடுத்து கடலிலிருந்து வரும் மீனைப் பறித்துக் குழிகளைத் தோண்டிப் புதைத்து அழித்தனர். இப்போது அந் நோய் தடுக்கப்பட்டுவிட்டது. அத்துடன் இவ்வாறு அளவுக்கு மீறி வரும் மீனை அழுக வைத்து கோழி, பன்றி போன்றவற்றுக்குத் தீவனத்துக்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

நம் நாட்டினரின் மீன் சமையல் தன் முழுவீச்சை எட்டவில்லை. சமையல் குறிப்புகளைத் தரும் இதழ்களும் தொலைக்காட்சி நிறுவனங்களும் புலாலுணவுச் சமையலைப் புறக்கணிக்கின்றன. தப்பித் தவறி ஏதாவது தந்துவிட்டால் ஏதோ தகாத செயலைச் செய்து விட்டாற்போன்று நெளிகின்றன. உண்ணும் உணவின் அடிப்படையில் மனிதர்களிடையில் ஏற்றத்தாழ்வைப் பாராட்டும் தாங்கெட்ட பண்பாடு “தமிழ்ப் பண்பாடு”. புலாலுண்பதை குடித்தல், புகைத்தல், பரத்தையரை நாடுதல் போன்ற தீய பழக்கங்களுக்குச் சமமாகப் பேசுவது அந்தப் பண்பாடு. சாதியப் பண்பாட்டைப் போலவும் கோயிலில் மக்களைச் சாதி அடிப்படையில் பிரித்து வைக்கும் நம் சமயப் பண்பாட்டையும் போலவும் நமது உணவுப் பண்பாடும் ஒழிக்கப்பட வேண்டியதாகும். தங்களைப் புல்லுணவினர் என்று கூறிக் கொள்ளும் மேற்சாதியினரான பார்ப்பனர்களும் வெள்ளாளர்களும் அவர்களைப் போலச்செய்யும் பிறரும் விலங்குணவான பாலையும் அதிலிலிருந்து கிடைக்கும் மோரையும் தயிரையும் வெண்ணெய்யையும் நெய்யையும் சுவைத்துச் சுவைத்துச் சப்பிச் சப்பி உண்டுகொண்டுதான் பிறரைப் புலாலுணவினர் என்று இழித்துக் கூறுகின்றனர். நாமும் சொந்தச் சிந்தனையின்றி அறிவு மழுங்கிய நிலையில் புலாலுண்பதன் மூலம் ஏதோ தகாததைச் செய்துவிட்டது போன்று தலைகுனிந்து நிற்கிறோம். அந்தத் தாழ்வு மனப்பான்மையை நாம் கைவிட வேண்டியது உடனடித் தேவை. மீன் சமையலில் பல்வகைகளையும் அனைத்து மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் செயல்விளக்கி மீனுணவைப் பரப்ப வேண்டும்.

புலாலுணவுக்கு எதிரான இன்று முடுக்கிவிடப்பட்டுள்ள பரப்புரையின் மூலவர்கள் நம் நாட்டு மேற்சாதியினர் மட்டுமல்ல, இங்குள்ள மீனையும் இறைச்சியையும் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் உலக வாணிகக் குழுக்கள் இதில் முழு ஈடுபாடு கொண்டுள்ளன. அவைதாம் இந்தப் பரப்பலுக்குத் தேவையான பொருளியல் பின்புலத்தை அளிக்கின்றன. அவற்றின் நோக்கம் நூற்று முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் அனைவரும் புலாலுணவில் இறங்கிவிட்டால் இவர்களின் ஏற்றுமதி வாணிகம் படுத்துவிடுமே என்ற அச்சத்தில் எழுந்ததுதான். மாட்டிறைச்சித் தடைச் சட்டமும் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் கருவிகளே. நம் நாட்டில் சிறுகச் சிறுகப் பரவி வரும் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் ஏற்றுமதியாளர்களிடையில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டில் உழவுக்கும் சரக்குப் போக்குவரத்துக்கும் மாடு பயன்படுவது மிகவும் சுருங்கிவிட்டது. தமிழகத்து ஆமாடு(பசு)கள் பால் கறப்பதற்காக வளர்க்கப்படவில்லை. காளைகளை ஈனுவதற்காகவே வளர்க்கப்பட்டன. அதனால்தான் கறவைக்கு என்று ஒன்றிரண்டு உள்ளூர் வகைகளைத் தவிர பிறவனைத்தும் கலப்பினங்களாக உள்ளன. இந்த நிலையில் மாட்டை இறைச்சியாக உண்ண வேண்டும் அல்லது ஏற்றுமதி செய்ய வேண்டும். இதில் சிக்கலை ஏற்படுத்திவிட்டால் மாட்டின் விலை வீழ்ந்து விடும். அதன் மூலம் ஏற்றுமதியாளருக்கு மலிவாக மாட்டிறைச்சி கிடைக்கும். அந்த மிச்சத்தில் ஒரு பகுதியை இந்தப் “பசுவதை” எதிர்ப்பாளர்களுக்குக் கொடுத்துவிட்டால் போதும்.

இயற்கை உணவு இயக்கம் என்று ஒன்றைச் சிலர் நடத்துகின்றனர். காய்கறிகளைச் சமைக்காமல் பச்சையாக உண்ண வேண்டுமாம். இது நடைமுறைக்கு உகந்ததல்ல, ஏனென்றால் காய்கறிகளைப் பச்சையாக உண்ண வலிமையான பற்கள் தேவை. பல் வலிமை குன்றியவர்கள் இதைக் கடைப்பிடிக்க முடியாது. ஆனால் இயற்கை உணவு என்ற பெயரில் இவர்கள் உண்ண வற்புறுத்துவது புலாலல்லாத காய்கறிகளைத்தான். ஆனால் நாம் கேட்கிறோம், மீனும் முட்டையும் இறைச்சியும் காய்களையும் கனிகளையும் கீரைகளையும் போல் இயற்கையில் உருவாகின்றவைதாமே, சீமையுரங்களைப் போல் செயற்கையானவை அல்லவே. அப்படிப் பார்த்தால் காய்கறிகளின் விளைப்பில்தான் புலால் வகைகளின் விளைப்பைவிடக் கூடுதலாகக் செயற்கை இடுபொருட்கள் உள்ளன.

புலாலுணவை உண்போரும் செவ்வாய் வெள்ளிக் கிழமைகள், கிருத்திகை, காருவா (அமாவாசை) நாட்கள், ஆடவை, கன்னி, நளி, சிலை (ஆடி, புரட்டாசி, கார்த்திகை, மார்கழி) ஆகிய மாதங்கள் என்று புலாலுண்ணாமையைக் கடைப்பிடிக்கிறார்கள். இம் மாதங்களைப் பொறுத்தவரை அவற்றில் தொற்றுநோய்கள் பரவும் என்ற காரணத்தால் பண்டை நாளில் புலாலுணவு தவிர்க்கப்பட்டிருக்கலாம். அந் நோய்கள் இன்று தடுக்கப்பட்டுவிட்டன. அத்துடன் புலால் மட்டுமல்ல, காய்கறிகள் விற்கும் அங்காடிகளைக் கூடத் தூய்மையாகப் பேண வேண்டும்மென்று வலியுறுத்த வேண்டிய தேவையுள்ளது. செவ்வாய், வெள்ளி நாட்கள் தெய்வத்துக்கு உகந்த நாட்கள் என்று புலாலுணவைப் புறக்கணிப்பதும் பொருத்தமற்றது. செவ்வாய். வெள்ளி ஆகிய நாட்களில்தாம் சிறு தெய்வங்களுக்கு வழிபாடு நடத்தி ஆடு, கோழி, பன்றி ஆகியவற்றைப் பலியிட்டுச் சமைத்துப் படைத்துத் தாமும் உண்கின்றனர் மக்கள். அந்த வகையில் செவ்வாயும் வெள்ளியும் கூடப் புலாலுணவுக்கு ஏற்ற நாட்கள்தாம். சோம(திங்கள்) விரதம் என்றும் கிருத்திகை, காருவா நாட்களிலும் நோன்பிருப்பது உடலுழைப்பிலும், தொழில்களில் ஓடியாடியும் ஈடுபடுவோருக்குப் பொருந்தாது. அவர்கள் உண்ணாமல் இருந்தால் குடல் தொடர்பான நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது. உழைக்காமல் மூன்று வேளையும் உண்டு திண்ணைகளில் தூங்கி அல்லது ஊர் வம்பு பேசிக் காலத்தைக் கழிப்போருக்கும் இருக்கையில் அமர்ந்திருந்து வேலை செய்வோருக்கும்தான் பொருந்தும். புலாலுணவினர்க்குத் தீங்கு தரும் கொழுப்புச் சத்து உடலில் சேர்ந்து செஞ்சாங்குலை(இதய) நோய், குருதிக் கொதிப்பு போன்றவை உண்டாவதாகத் தவறான ஒரு கருத்து புகுத்தப்பட்டுள்ளது. புலால் கொழுப்பை விட நிலைத்திணை(தாவர)க் கொழுப்புதான் கூடுதல் தீங்கு விளைவிப்பவை என்பது இன்றைய மருத்துவ அறிவியல் நிலை. அதிலும் மீன், கோழி போன்றவற்றின் கொழுப்பு ஏற்கெனவே குருதி நாளங்களில் உள்ள தீங்கான கொழுப்புப் பொருட்களின் படிவைக் கரைத்துவிடத்தக்கது என்கின்றனர். அத்துடன் நம்மைப் போல் பல மடங்கு சத்தான உணவு வகைகளையும் புலாலுணவையும் உட்கொள்ளும் பணக்கார நாட்டு மக்களை விட நம் நாட்டு மக்களை இத்தகைய நோய்கள் மிகுதியாகத் தாக்குவது ஏன்? நம் மக்கள் மீது பழைய பண்பாட்டின் கிடுக்கிப்பிடி சிறிதும் அகலாத நிலையில் புதிய புதிய சுமைகள் ஏறி நிற்கும் குடும்ப, குமுகச் சூழல்களும் தங்கள் ஞாயமான ஒவ்வொரு நடவடிக்கைளிலும் முயற்சிகளிலும் அரசின் தலையீடுகளை எண்ணி எப்போதும் அச்சவுணர்வோடும் பதற்றத்தோடும் நாளைக் கழிக்க வேண்டிய பொருளியல் - அரசியல் சூழலும்தாம் காரணங்கள்.

பொய்யான காரணங்ளைச் சொல்லி மக்களை மீன் போன்ற புலாலுணவு உண்பதைத் தடுத்து சுவையும் சத்துமுள்ள பலவகை மீன்களை வெளிச்செலவாணி என்ற போலிக் காரணம் காட்டி ஏற்றுமதி என்ற பெயரில் கடத்துகின்றனர் ஆட்சியாளர்களும் அவர்களின் கூட்டாளிகளான ஏற்றுமதி வாணிகர்களும். எந்தக் காரணத்தைச் சொன்னாலும் வறுமையில் வாழும் மக்களைக் கொண்ட நம் நாட்டில் மக்களுக்குப் பயன்படத்தக்க எந்தப் பண்டத்தையும் ஏற்றுமதி செய்வது அவர்களுக்குச் செய்யும் இரண்டகமேயாகும்.

அண்மை ஆண்டுகள் வரை மீனவர்கள் கடற்கரையில் ஒதுக்கப்பட்டு அவர்களை அடுத்து வாழும் மக்களால் முற்றுகையிடப்பட்டுச் சிறைப்பட்டாற் போன்ற நிலையில் வாழ்ந்தனர். அவர்களது நிலை தீண்டத்தகாதவர் நிலையை ஒத்திருந்தது. மீனவப் பெண்கள் காலையில் எழுந்து மீனைத் தலையில் சுமந்து ஊர் ஊராகச் சென்று விற்றனர். சில பணக்கார வீடுகளுக்கு மீனை வழக்கமாக வழங்கிவிட்டு அறுவடையின் போது நெல்லாகப் பெற்றுக்கொண்டனர். அவர்களது நிலங்களில் விளையும் புளி, காய்கனிகள் போன்றவையும் கிடைக்கும். மீன் கொடுக்கும் போது அவ் வீடுகளில் பழைய சோறோ வேறு பண்டங்களோ கிடைத்தால் உண்டனர். பிறரிடம் காசுக்கு விற்கின்றனர். மீன் விற்ற பின்னர் திரும்புகின்றனர். அவர்களைப் பேருந்துகளில் ஏறவிடவில்லை; எனவே நடந்தே போய்த் திரும்ப வேண்டும். உணவு விடுதிகளில் அவர்களை விடவில்லை. எனவே வழியில் காய், கனிகள் என்று எது கிடைத்தாலும் நடுத் தெருவில் நின்று உண்டு பிறருடைய ஏளனத்துக்கு ஆளாக வேண்டிய நிலை. வீடுகளில் தாங்கள் பயன்படுத்தும் கலன்களில் உணவோ நீரோ அவர்களுக்கு யாரும் கொடுப்பதில்லை.

அண்டை மக்களுடன் மோதல் வந்தால் இவர்கள் நாட்டின் உட்பகுதிக்குச் செல்ல முடிவதில்லை. தங்களுக்கு வேண்டிய பண்டங்களை வாங்க முடிவதில்லை. தப்பி ஓட வேண்டி வந்தால் கடல் தவிர வேறு போக்கிடமில்லை. கடந்த 1982ஆம் ஆண்டு குமரி மாவட்டத்தில் மீனவர்களுக்கும் நாடார்களுக்கும் மோதல் ஏற்பட்ட போது இது தெற்றென விளங்கியது. நாடார்களால் சூழப்பட்ட மீனவர்கள் பெண்டுகள் பிள்ளைகளுடன் கட்டுமரங்களிலேறி தூத்துக்குடி போன்ற இடங்களில் தஞ்சம் புக வேண்டி வந்தது. கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் முன் போல் பெண்கள் மீன் கொண்டு வந்து விற்க முடியவில்லை. அதனால் மூன்று வேளைகளும் மீன் உண்டு பழகிய நாடார்களும் இடருழந்தார்கள்.

முன்பு தலைமீது கடகம் எனப்படும் பனை ஓலைப் பெட்டிகளில் மீன் சுமந்து விற்ற பெண்களின் தலைமுறை மறைந்துவிட்டது. அலுமினியம் அல்லது துருவேறாத உருக்குக் கலன்களில் மீனை அடைத்துக் கைகளில் தூக்கிச் செல்லும் புதிய தலைமுறை தோன்றிவிட்டது. அவர்களைப் பேருந்துகளில் ஏற்றிக் கொள்கிறார்கள், உணவு விடுதிகளில் விடுகிறார்கள். மகிழ்ச்சியூட்டத்தக்க மாற்றம்தான் இது. இந்தக் கலவரத்துக்கு அடிப்படையே நாடார்கள் மீனவர்கள் மீது நடத்திய ஒடுக்குமுறைகள்தாம். இன்று அது மட்டுப்பட்டுள்ளது.

மீனவர்களின் பொதுவான இருப்பே வறுமைதான். அவர்கள் வாழ்வது குடிசைகள் அல்லது சிறு வீடுகளில்தான். மீன்பாடு குறைவான நாட்களில் தங்கள் வயிற்றுப்பாட்டைப் பார்க்க கருவாட்டையாவது விற்க வேண்டும். அதற்காக வீடுகளில் எப்போதும் கருவாட்டைச் சேர்த்து வைத்திருப்பார்கள். அக் கருவாட்டின் நெடி அவர்கள் மீதும் அவ் வீட்டிலிருக்கும் பண்டங்கள் மீதும் வீசும். அவர்கள் வெளியில் செல்லும் போது என்னதான் நறுமண எண்ணெய்கள் தடவிக் கொண்டாலும் அவற்றையும் மீறிக்கொண்டு இந்த நெடி, குறிப்பாக அவர்களது உடைகளிலிருந்து பக்கத்திலிருப்போரைத் தாக்கும். இது அவர்களிடையில் ஒரு தாழ்வு மனப்பான்மைக்குக் காரணமாக அமைந்துள்ளது. இது போன்ற ஒரு நிலையிலிருந்து அவர்கள் மீள்வது எவ்வாறு என்று பார்ப்போம்.

தன்(சுய) தொழில், சிறு - குறுந்தொழில்கள், சாதி சார்ந்த மரபுத் தொழில்களில் ஈடுபடுவோர் அந்தத் தொழிலையே முழுமையான வாழ்க்கைச் சூழல் ஆக்கிக்கொள்கின்றனர். அவர்களது வாழிடம் அந்தத் தொழிலில் முகாமையான பங்கேற்கிது. கன்றுகாலிகள் வளர்ப்போர், குறிப்பாக மாடு வளர்ப்போர் தங்கள் வீட்டோடு இணைந்த தொழுவங்களிலேயே அவற்றை வளர்க்க வேண்டியுள்ளது. அதனால் அவர்கள் குடியிருக்கும் தெருக்களில் மாட்டுச் சாணமும் சிறு நீரும் கலந்த சேறு காணப்படுகிறது. கொசுக்களின் வளர்ப்பிடமாக மாறி அவர்களின உடல் நலைனைக் கெடுக்கிறது. மழைக் காலங்களில் அத் தெருக்கள் நரகக் குழிகளாகக் காட்சியளிக்கின்றன. அவ்வாறுதான் குயவர்கள் வண்ணார்கள் செம்மார்கள், பன்றி வளர்க்கும் சக்கிலியர்கள் என்று அனைத்துத் தொழில் மக்களின் குடியிருப்புகளும் அமைந்துள்ளன. இத்தகைய சாதி சார்ந்த தன்தொழில், சிறு - குறுந்தொழில்களை முதன்மையாகக் கொண்ட பொருளியல் அமைப்பு நிலக்கிழமை(feudal)ப் பொருளியல் அமைப்பு எனப்படும். இந்த அமைப்பில் இந்த மக்களின் உழைப்பை வாணிகர்களும் கந்து வட்டிக்காரர்களும் சுரண்டுவர். தொழிலில் ஈடுபடுவோர் தனித்தனியாகச் செயற்படுவதாலும் இவர்கள் சார்ந்து நிற்க வேறு அமைப்பு இல்லாததாலும் சுரண்டுவோரை எதிர்த்து வாழ முடிவதில்லை. இவ் விரு சாரரிடமிருந்து அவர்களைக் காப்பதென்ற பெயரில் கூட்டுறவு சங்கங்களையும் வாரியங்கையும் ஆட்சியாளர்கள் அமைத்துள்ளனர். கடன்கள், மானியங்கள் என்றும் வழங்குகின்றனர். ஆனால் இங்கு ஆட்சியாளர்கள் ஊழலும் கையூட்டும் என்று வாணிகர்கள், கந்து வட்டிக்காரர்கள் நடத்தியதை விட மிகுதியான சுரண்டல்களில் ஈடுபடுவதுடன் இழப்புகளைச் சரிசெய்வது என்ற பெயரில் பொதுமக்கள் பணமான அரசுப் பணத்தையும் ஏப்பம் விடுகின்றனர். அரசியல் கட்சிகளும் உச்சி முதல் உள்ளங்கால் வரையில் உள்ள ஆட்சிப் பொறியும் இந்தச் சுருட்டலைப் பங்கிடுகின்றன. இவ்வாறு சாதி சார்ந்த தன்தொழில் சிறு - குறுந்தொழில்களில் தன்மானமுள்ள வாழ்க்கையை நடத்த முடியாது என்பது உறுதியாகிறது. இந்த நெருக்கடியிலிருந்து விடுபட உழைக்கும் மக்களுக்கு வரலாறு காட்டியிருக்கும் வழிதான் முதலாளியம், இங்கு பணியிடம் உழைப்பாளியின் வாழிடத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. குறிப்பிட்ட வேலை நேரம் முடிந்த பின் மிகுதி நேரமெல்லாம் பாட்டாளியின் ஆளுகையில் உள்ளது. பணியிடத்தில் அவர்களுக்கு ஓய்விடங்களும் கழிவறை, குளியலறைகளும் பணி நேரத்தில் அணிந்து கொள்ள சிறப்பு ஆடைகளும் உள்ளன. தொழில் தொடர்பான இடர்களைக் களைவதற்கான காப்பு ஏற்பாடுகளை தொழில் நிறுவனமே அமைத்துத் தருகிறது. ஆக, அன்றாட வேலையிலிருந்து விடுபட்டவுடன் தொழிலாளி எந்தத் தொழிலில் உள்ளார் என்பதைக் காட்டும் அடையாளம் மறைந்து போகிறது. அத்துடன் தங்கள் ஊதியம், பண நலன்கள், பணி நலன்கள் போன்றவற்றுக்காகப் போராடத் தேவையான ஒருங்கிணைப்பைத் தொழிற்சாலை என்ற கட்டமைப்பே உருவாக்கித் தருகிறது.

இத்தகைய முதலாளிய முறைக்கு மாறுவதற்கு இன்றுள்ள தடைகளைப் பார்ப்போம். கடல் இன்றுவரை மீனவர்களின் ஆளுகையில் இருந்து வந்துள்ளது. இங்குள்ள மக்கள் நாட்டின் பிற பகுதியினரைப் போல் எண்ணிக்கையில் பெருகியுள்ளனர். விசைப்படகுகளின் போட்டி, அயல்நாட்டு மீன்படிப் படகுகள் நம் கடல் எல்லைக்குள் நடத்தும் மீன் திருட்டு, இலங்கைக் கடற்படையும் “நம்” கடலோரக் காவற்படையும் நடத்துகின்ற காட்டுவிலங்காண்டித் தனமான தாக்குதல்கள் ஆகியவற்றால் கட்டுமர மீனவர்களுக்குக் கிடைக்கத்தக்க மீன்வளம் மிகவும் சுருங்கிவிட்டது. அதனால் கட்டுமர மீனவர்களுக்கும் விசைப்படகு மீனவர்களுக்கும் தொடங்கிய மோதல் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த கட்டுமர மீன்வர்களுக்கிடையிலான மோதலாக வளர்ந்து இன்று ஒரே ஊரைச் சேர்ந்த பல்வேறு குழுக்களுக்கிடையிலான மோதலாகப் பேயுருக் கொண்டுள்ளது. எந்தெந்த வலைகளை எந்தெந்த பருவங்களில் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த பொது மரபை உடைப்பதாலும் மோதல்கள் நிகழ்வதைப் பார்க்கிறோம். இந்த வரையறைகள் உரிய பருவத்தில் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதையும் குஞ்சுகள் பேணப்படுவதையும் நோக்கமாகக் கொண்டவை. வயிற்றுப்பாடு திண்டாட்டமானவுடன் விதை நெல்லை அவித்துண்ணும் வயிறு காய்ந்த உழவனைப் போல் இவர்கள் செயற்படுகின்றனர். நிலத்தில் எல்லை கட்ட முடியும், ஆனால் கடலில் ஒவ்வொரு மீனவனுக்கென்றும் கடலைப் பிரித்துப் பட்டயம்(பட்டா) போட முடியுமா? அந்தப் பட்டயத்துக்கு மீன்கள்தாம் கட்டுப்படுமா? ஆக இந்த மோதல்கள் அனைத்தும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருக்கும் வளத்தை நாள்தோறும் எண்ணிக்கையில் பெருகிக் கொண்டிருக்கும் மக்கள் பங்குபோட வேண்டிய சூழ்நிலையின் விளைவுகளாகும். இந்தச் சூழ்நிலை மீனவர்களிடையில் மட்டுமல்ல, தமிழகத்து அனைத்து மரபுத் தொழில்களிலும் உருவாகி விட்டது. சாதிச் சங்கங்களும் அவற்றுக்குள் போட்டிச் சங்கங்களும் சாதிக் கட்சிகளும் அவற்றுக்குள்ளும் போட்டிக் கட்சிகளும் ஒவ்வொரு சாதிக்கும் தோன்றுவதன் காரணங்களில் முகாமையான ஒன்று இது. சாதிகளின் வரலாற்று அடிப்படை தொழில்தானே!


அடிக்குறிப்புகள்:
1.சகுந்தலையைக் கூடும் முன் துசியந்தன் அசரீரி எனப்படும் உருவிலித் தெய்வத்தைச் சான்று வைத்ததாகவும் சகுந்தலை அரசவைக்கு மகனோடு வந்த போது இந்த நிகழ்வை அவையோர்க்கு எவ்வாறு சொல்வது என்று தயங்கி மறந்து போனதாகப் பாசாங்குடன் உருவிலி வரட்டும் என்று காத்திருந்ததாகவும் அவ்வாறே உருவிலி வந்து கூறியதாகவும் ஒரு கதை வேறுபாடு உண்டு.
2.தமிழ் மொழி அகராதி - மிசிரத்தானம் – துருக்கரால் மிசிரு என்று வழங்கப்படுபகின்ற ஒரு தேசம், தற்காலத்தில் ஐரோப்பியரால் ஈசிப்ட் என்று வழங்கப்படுகின்றது. யயாதியால் தன் தேசத்தினின்றும் ஓட்டப்பட்ட அவன் புத்திரர் நால்வரும் இந்த மிலேச்ச தேசத்திற் சென்று அந்தத் தேசத்துச் சனங்களோடு கலந்தமையால் இது மிசிரத்தானம் என்னும் பெயருடைத்தாயிற்று. மிசிரம் – கலப்பு. Mixing?
3.பினீசியர்களைப் பற்றிய செய்திகளை அறிய எசு.வி.எசு. ராகவன் என்பார் எழுதியுள்ள இரோடோட்டசு எனும் நூலும் சியார்சு தாம்சன் என்பார் கிரேக்க நாடகங்கள் பற்றி எழுதியுள்ள Athens and Aeschilles என்ற நூலும் உதவும்.
4.மாநக்கவரம் என்பது இராசேந்திரன் கல்வெட்டுகளில் இடம் பெற்றிருக்கும் பெயர்.
5.புவியுடன் ஒப்பிட நிலவும் கதிரவனும் இருக்கும் நிலைகளால் உருவாகும் கோணத்திற்கு ஏற்ப ஓர் விளைவு(resultant) ஈர்ப்பை அவை இரண்டும் இணைந்து புவியின் மீது நிகழ்த்துகின்றன. அதற்கு ஏற்ப கடலலைகள் உயர்கின்றன. இந்த உயர்வு புவிக் கோளத்தின் எதிர் எதிர்க் கோடிகளில் நிகழ்கின்றன. அதற்குச் செங்கோணத்தில் இந்த உயர்வுக்கு இணையான ஒரு தாழ்வும் உருவாகிறது. புவி தன்னைத் தானே சுற்றும் போது இந்த உயர்வுகளும் தாழ்வுகளும் புவியைச் சுற்றி வருவகின்றன. இவ்வாறு ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் இடத்திலும் இரு முறைகள் இவ்வுயர்வுகளும் தாழ்வுகளும் இடம்பெறுகின்றன. புவியின் எதிரெதிர்ப் பக்கங்களில் கதிரவனும் நிலவும் வரும் வெள்ளுவா(நிறைமதி) நாளிலும் ஒரே பக்கமாக வரும் காருவா(இருள்மதி) நாளிலும் புவியின் மீது மிகக் கூடிய விளைவு ஈர்ப்பு இருக்கும் ஆதலால் அந் நட்களில் இவ் வுயர்வு தாழ்வுகள் மிகக் கூடுதலாகவும் கதிரவனும் நிலவும் புவியுடன் ஒப்பிடச் செங்கோணமாக இருக்கும் எட்டாம் பக்கல்(அட்டமி) அன்று விளைவு ஈர்ப்பு மிகக் குறைவாக இருப்பதால் அன்று உயர்வு தாழ்வுகள் மிகக் குறைவாகவும் இருக்கும் அதனால் எட்டாம் பக்கல் அன்று கடலோடிகளுக்கு மிகத் தோதான நாள். அதனாலேயே, கடலோடிகளை இழிவுபடுத்தவே அட்டமியை ஒரு தீய நாளாக காட்டுகின்றனர். எட்டாக இருந்த இசைச் சுரங்களை ஏழு என்று திரித்துள்ளனர். எட்டாக இருக்கும் மெய்ப்பாடுகளை “நவரசம்” என்று மாற்றியுள்ளனர் ஒடுக்கும் வகுப்பார்.
6.மரக்கறி உணவினர், “சைவ” உணவினர்.


சாதியத்தின பண்பாட்டுச் சிக்கல் -

25. முதலாளியத்துள் நுழைவோம்! சாதியத்தை வெளியேற்றுவோம்!
சாதியமும் வருணமும் நிலக்கிழமைக் குமுகத்தின் இயல்புகள். இதை வரலாற்று நெடுகிலும் காணலாம். புரட்சிக்கு முந்திய பிரான்சும் ஒன்றாம் சார்லசுக்கு முந்திய இங்கிலாந்தும் 1852க்கு முந்திய சப்பானும் சாதிகளையும் வருணங்களையும் கொண்டிருந்தன என்பதும் புரட்சிக்குப் பின் உருவான முதலாளியப் புரட்சியால் பழைய குடியிருப்புகளை விட்டு முன்னாள் பண்ணையடிமைகளான பெரும்பான்மை மக்கள் பெயர்ந்து நகரங்களிலும் பெருந்தோட்டங்களிலும் உருவாகிக்கொண்டிருந்த முதலாளியத் தொழில்களைச் சுற்றியும் தோட்டங்களிலும் புதிய குடியிருப்புகளிலும் பழைய உறவுகளைக் கைவிட்டுத் தொழிலாளர்கள் என்ற ஒரே அடையாளத்துடன் ஒன்றுகலந்தன்னரென்பதையும் நாம் மேலே கண்டோம். வளரும் நாடுகளென தவறாகக் குறிப்பிடப்படும் வளர்ச்சி தடுக்கப்பட்ட இந்தியா போன்ற நாடுகளில் நிலக்கிழமை மட்டுமல்ல அதற்கும் முந்திய விளைப்புமுறைகளிலும் குமுக உறவுகளிலும் தேங்கிக் கிடக்கும் நாட்டு மக்களிடையிலிருந்து சாதியம் மட்டுமல்ல மொழி, இன வழிப்பட்ட மக்களை அவர்கள் வாழும் நில அடிப்படையிலான தேசியங்களின் அடிப்படையில் அந்தந்த நிலத்ததுக்குரிய இயற்கை வளம் காலநிலைகளுக்கேற்ற அறிவியல் – தொழில்நுட்பங்களின் அடிப்படையில் தத்தம் பொருளியலை வளர்த்துக்கொள்ளும் உரிமைகளுக்காகப் போராடி முதலாளியத்தை வளர்க்க வேண்டும். இதற்காக நான் முன்வைக்கும் சில கருத்துகள்:

1. வருமான வரியை ஒழிக்க வேண்டும்.
2. தொழில்நுறுவனங்களுக்குக் வங்கிகள் கடன் வழங்கக் கூடாது. சேமிப்புக் கணக்குகள் பராமரித்தல், வீட்டுக்கடன், நகைக்கடன், வாடிக்கையாளர்களின் பண வரவு – செலவுகளைக் கையாள்தல் போன்றவற்றோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இப்போதிருக்கும் காப்பீட்டு நிறுவனங்களில் கடைப்பிடிக்கப்படும் முகவர் முறையை ஒழித்து அத்துறையை வங்கிகளின் நேரடிப் பொறுப்பில் விட்டுவிடலாம். இந்தப் பணத்திலிருந்து அரசுக்குக் கடன் கொடுத்து, நிலவும் விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் விகிதத்தில் வட்டி பெற வேபண்டும். முடிந்தால் உறுதியான பிணைகளுடன் தனியாருக்கும் கடன் கொடுக்கலாம். ஆனால் பிணைச் சொத்துகளை மதிப்பிடவும் விற்கவும் நம்பகமான கட்டமைப்பை உருவாக்கியிருக்க வேண்டும்.
3 இரண்டாம் நிலை பங்குச் சந்தை என்ற சூதாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். 5 கோடிக்கு மேல் முதலீடு தேவைப்படும் தொழில் முனைவுகளுக்கு 51%க்குக் குறையாத மூலதனம் பங்குகள் மூலம் திரட்டப்பட வேண்டும். முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்க முற்பட்டால் அவற்றை வாங்குவதற்கென்று ஒரு குறிப்பிட்ட சதவீதம் மூலதனத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். அவற்றை மறு விற்பனை செய்யும் போது கூடுதல் விலைக்கு விற்றால் பிற பங்குகளின் முக மதிப்பையும் அதற்குச் சமமாக உயர்த்த வேண்டும்.
4. மாவட்டத்துக்கு ஒரு அறிவியல் – தொழிலநுட்பக் காப்புரிமை அலுவலகம் வேண்டும். தொழில் தொடங்க இசைவு வழங்கும் அலுவலகம் ஊராட்சி ஒன்றிய அளவில் வேண்டும்.
5. துண்டுதுண்டாகக் கிடக்கும் நிலங்களை ஒன்றிணைத்து கூட்டாண்மைப் பண்ணைகளை உருவாக்க வேண்டும். நில உடைமையாளர்களை நிலப்பரப்புகள், அவற்றின் தரம் ஆகியவற்றின் அடிப்படையிலும் முதலிடுவோரின் தொகை அடிப்படையிலும் பங்கு முதலீட்டாளர்களாகக் கணக்கிட்டுப் பங்கு நிறுவனமாகப் பண்ணையை உருவாக்க வேண்டும். கால்நடை வளர்ப்பு, நீர்வளம் - மண்வளத்துக்கேற்ற பயிர்களையிட்டு அவற்றை முடிந்த, பகுதிமுடிந்த பண்டங்களாக மேம்படுத்தி நிறுவனப் பெயரிட்ட பொட்டணங்களாக்கிச் சந்தைக்கு விட வேண்டும். 10 நூற்றுமேனி காடு வளர்க்க வேண்டும். மட்காத குப்பைகளால் ஒரு சிறு குன்று உருவாக்கி அதில் முருங்கை, இலவு போன்ற மரங்களை நட்டு அது மழைநீரைப் பிடித்துவைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தினுள் இறங்க வகை செய்ய வேண்டும். ஒரு சிறு குளமும் அமைக்க வேண்டும். எந்தப் பொருளையும் எரித்தழிக்கக் கூடாது, மறுசுழற்சி செய்ய வேண்டும்.. வேளாண்மைக்கு இடையூறு செய்யும் எலிகளையும் முயல்களையும் பிடித்து அவற்றின் இறைச்சியைச் சந்தைக்கு விட வேண்டும். மான் போன்றவற்றையும் காடுகளுக்கு உரிய வேலியிட்டு வளர்த்து இறைச்சியைச் சந்தைப்படுத்தலாம். தொழிலாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும் வகையில் பண்ணைகள் செயல்பட வேண்டும். பணியாளர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு பண்ணையிலும் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்ணைகள் இணைந்து மழலைப் பள்ளிகளை உருவக்க வேண்டும். இப்பள்ளிகளில் ஒன்றுக்கு மேற்பட்டவை இணைந்து தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளைத் தேவைக்கு ஏற்ப அமைக்க வேண்டும். மழலையிலிருந்து தொடங்கி பண்ணையின் சூழலில் இயற்கையைப் பார்த்து அறிவை வளர்த்துக்கொண்டே எழுத்தறிவைப் புகட்டும் கல்வி முறையை வகுக்க வேண்டும். குழந்தைகளின் அறிதிறன், ஆர்வங்கள், மனச்சாய்வு, ஆற்றல்கள், குறைபாடுகளை இனம் காணும் பயிற்சியுள்ள உளவியல் அறிந்தவர்களை மழலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்களாக அமர்த்த வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் குழந்தைகளின் அகவைக்கேற்ப படிப்படியாக உடலுழைப்பில் பயிற்சி அளிக்க வேண்டும். எழுத்தறிவில் ஆர்வம் குறைந்த குழந்தைகளுக்கு உடலுழைப்புப் பயிற்சியில் முன்னுரிமை வழங்க வேண்டும். அவர்களுக்கு எப்போதாவது படிப்பில் நாட்டம் ஏற்பட்டால் அதை வழங்கவும் வழிவகை வேண்டும். நடுநிலைப் படிப்பு முடிந்ததும் உழைப்பு இணைந்த பகுதிநேரப் படிப்பைக் கையாள வேண்டும். அவ்வாறு உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்ததும் இடைநிறுத்தி குறிப்பிட்ட ஆண்டுகள் உடலுழைப்பிலீடுபட்டு தனக்கு ஆர்வமுள்ள படிப்பில் நுழைவுத்தேர்வெழுதி படிப்பைத் தொடரும் முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். பொறியியல், மருத்துவம், வேளாண்மை என்று எந்தத் துறையாயிருந்தாலும் அத்துறையில் அடிப்படைத் தொழிலாளியாக நுழைந்துதான் படிப்படியாக படிப்பு → வேலை → நுழைவுத்தேர்வு → அடுத்த கட்டப் படிப்பு → வேலை என்றிவ்வாறு பட்டப்படிப்பு நோக்கி முன்னேற வேண்டும். மண்வெட்டியும் சுத்தியலும் பிடிக்கத் தெரியாத ஒருவன் பள்ளி இறுதித் தேர்வில் பங்கேற்கவோ அப்புறம் எழுத்தறிவு சார்ந்த எந்தப் படிப்பிலும் சேரவோ முடியாத நிலை வேண்டும். இதன் மூலம் நாட்டின் மனித வளத்தில் மிகப் பெரும்பான்மையும் வறுமையினாலும் ஊழலினாலும் செயலற்றுக்கிடக்க தகுதியில்லாதோர் உயர் படிப்புகளில் நுழைவதால் நாட்டுக்கு ஏற்படும் மனித வள வீண்டிப்பு முடிவுக்கு வரும். அது மட்டுமின்றி உடலுழைப்பு இழிவு எனும் நம் நெடுநாள் பண்பாட்டு நோய் குணமடைய இது ஒன்றே சிறந்த வழியுமாகும்.
வேளாண் பண்ணைகளை அடிப்படையாகக் கொண்ட சாலைகள், தொழிலகங்கள், நகரமைப்புகள், உயர்கல்வி நிறுவனங்கள் என்று புதிய தமிழகம் உருவாக வேண்டும்.
இவ்வாறு சாதி – சமய அடிப்படையில் இனங்காணத்தக்க குடியிருப்புகளில் இன்று வாழும் மக்கள் அவற்றிலிருந்து வெளியேறி அடுக்குமாடிகளாய் அமைந்த புதிய குடியிருப்புகளில் குடியேற வேண்டும்.
6. அந்தந்த மாநிலத் தேவைகளை ஈடுசெய்யும் பயிர்களையும் மரங்களையும் மட்டும் மாநிலங்கள் வளர்க்க வேண்டும். நம் தேவைக்கு மேல் இருக்கும் தேயிலைத்தோட்டங்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி நமக்குக் கிடைக்கும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி நம் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
7. அவ்வாறே செய்பொருட்களைப் பொறுத்தும் அந்தந்த மாநிலத் தேவைகளை நிறைவேற்றும் தொழில்கள் தவிர பிற அனைத்தையும் உடனே மூட வேண்டும். இதனால் குறிப்பாக தேவையற்ற பண்டப் போக்குவரத்தால் இயற்கை வளங்கள் அழிவதும் சூழல்கேடுகளும் முடிவுக்கு வரும்.
சாலைகள், குளங்கள் அவற்றின் கரைகள், வாய்க்கால்கள், அவற்றின் கரைகள் முதலியவற்றை ஆண்டு முழுவதும் அழகுடனும் தூய்மையாகவும் பேணுதல், கழிவுகளை அகற்றி மறுசுழற்சிக்கு உட்படுத்தி மீண்டும் பயனுக்குக் கொண்டுவருதல், முதியோரைப் பேணல் என்று நோக்கிய பக்கமெல்லாம் எல்லையற்ற வேலைவாய்ப்புகள் காத்துக்கிடக்கின்றன. எனவே மேற்கூறிய மாற்றங்களால் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் பறிபோய்விடுமென்று அஞ்சத் தேவையில்லை.
8. சாதி அடிப்படையில் அமைந்த குலதெய்வக் கோயில்களைக் கைவிட்டு எந்த அடையாளமும் இல்லாத வழிபாட்டு மண்டபங்களில் எந்த ஓசையும் எழுப்பாமல் தான் விரும்பும் தெய்வத்தை மனதுக்குள் வழிபடும் முறையைப் புகுத்த வேண்டும். இந்த வழிபாட்டு மண்டபங்கள் நிலப்பரப்பு அடிப்படையில் வரையறுக்கப்பட வேண்டும். ஓரிடத்திலிருந்து வேறிடங்களுக்குப் பணிகள் நிமித்தமாகப் போவோர் தாம் செல்லுமிடங்களிலுள்ள மண்டபங்களைப் பயன்படுத்தலாம்.

9. திருமணங்கள் பதிவகங்களில்தான் நடைபெற வேண்டும். மண உறுதி(நிச்சயதார்த்தம்), மகப்பேறு, பெண் பூப்பெய்தல், குழந்தைகளுக்கு காதுகுத்தல் போன்ற விழாக்கள் தடைசெய்யப்பட வேண்டும்.
10. இறந்தோரை எரிப்பதை நடைமுறையாக்க வேண்டும். இறந்த பின் இரு வாரங்களுக்குள் விரும்புவோர் ஒரு நினைவேந்தல் நாள் கொண்டாடலாம். இவற்றில் மத அடிப்படையிலான எந்தச் சடங்குகளும் கூடாது.
11. எதற்காகவும் படிவங்களில் சாதி சமயம் மொழி பற்றிய கேள்விகள் இடம்பெறக்கூடாது. தமிழ்தான் கல்வி மொழியாகவும் ஆட்சிமொழியாகவும் இருக்கும். பிற மொழி பயில விரும்புவோருக்கு அம்மொழி கற்பிக்கப்படும். ஆனால் தமிழ்மொழியைக் கற்பது கட்டாயம்.
12. 01 – 11 – 1956இல் தமிழகம் அமைக்கப்பட்ட அன்று தமிழகத்துக்கு வெளியே வேரின்றி தமிழகத்தில் வாழ்ந்தவர்கள், அவர்கள் வழி வந்தோர், அவர்களை மணந்ததன் மூலம் இங்கு குடியோறியோறியோர் மட்டும் தமிழக முழுக்குடியுரிமை பெற்றோர் ஆவர். அவர்களுக்குத் தனியான குடிமக்கள் அட்டை வழங்கப்படும். அவர்களுக்கு மட்டும் இங்கு நிலம், வீடு போன்ற அசையாச் சொத்து வைத்திருக்கவும் வாங்கவும் தொழில் தொடங்கவும் வாணிகம் செய்யவும் உரிமை உண்டு. வெளியிலிருந்து இங்கு கூலிவேலை செய்ய வருவோருக்குத் தனிக்குடியுரிமை அட்டை வழங்கப்படும். அவர்கள் அசையாச்சொத்து வாங்கவோ தொழில் வாணிகத் துறைகளில் ஈடுபடவோ முடியாது.
13. வாக்குச் சீட்டுத் தேர்தல் முறை ஒழிக்கப்படும். மக்கள் நேரடியாகப் பங்கேற்கும் ஊராட்சி முறையை அடிப்படை அலகுகளாகக் கொண்ட புதியதொரு மக்களாட்சி முறை கடைப்பிடிக்கப்படும். குறிப்பிட்ட பொறுப்புகளுக்குரிய தேர்வுகளில் வெற்றி பெறும் முழுக்குடியுரிமை பெற்றோரிலிருந்து ஆள்வினையாளர்கள் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஊர்க்கூட்டங்களில் அவர்களது செயற்பாடுகள் திறனாயப்படும். ஆண்டுக்கொரு முறை ஊர்க்கூட்டத்தில் முடிந்த ஆண்டின் செயற்பாடுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அடுத்த ஆண்டுக்குரிய திட்டங்கள், வரவு – செலவுகள் குறித்த முன்னீடுகள் முன்வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும். தமிழகத்தின் முழுக்குடியுரிமை பெற்றோர் மட்டும் இந்த நடவடிக்கைகளில் கலந்துகொள்ள முடியும். ஊர் என்ற ஆட்சி அலகுக்கு அடுத்ததாக சிறுவட்டம், வட்டம், மாவட்டம், மண்டலம், தமிழகம் என்ற ஆட்சியாளர்களுக்கு நிறுவப்படும் தனித்தனித் தகுதித் தேர்வுகள் ஒவ்வோர் ஊரிலும் நடத்தப்பட்டு அவற்றில் தேர்வானோர் அந்தந்த மட்டப் பதவிகளுக்கு நடைபெறும் குடவோலை முறைமூலம் தேர்வு செய்வப்படுவர். இவ்வாறு தேர்வாகும் தேர்வுக்குழு உறுப்பினர்கள் மூன்று மாதங்களுக்கொருமுறை நடைபெறும் அந்தந்தக் குழுக் கூட்டங்களில் தத்தம் ஊரின் நிலைப்பாடுகளை, தேவைகளை எடுத்துவைக்க வேண்டும். அதற்குரிய வரைவுகளை அந்தந்த ஊர்க்கூட்டங்கள் முடிவு செய்து வழங்கும். அங்கு மேற்கொள்ளப்படும் முடிவுகளை ஏற்பதா, மறுப்பதா அல்லது தேவை என்று கருதும் திருத்தங்கள் செய்வதா என்பதை ஊர்க்கூட்டத்தில் முடிவுசெய்து அடுத்த கூட்டத்தில் வாக்களித்து நிறைவேற்றப்படும். அவ்வாறு நிறைவேற்றப்படும் தீர்மானங்களில் தமக்குத் தேவை எனக் கருதும் மாற்றங்களை ஒட்டுமொத்த மாநில நலன்களுக்கு இடையூறு இல்லாத வகையில் ஊராட்சிகள் மேற்கொள்ளலாம்.

3 அல்லது 5 ஆண்டுகளில் இந்த அரசியலமைப்புத் திட்டத்தின் பட்டறிவிலிருந்து தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ள வேண்டும். பின்னர் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசியலமைப்பில் தேவையான மாற்றங்களைச் செய்யலாம்.
13. வரி விதிக்கும் அதிகாரம் ஊராட்சிகளின் ஒப்புதலுடன் மாநில ஆட்சியாளர்களுக்கு மட்டும் உண்டு. வரி தண்டும் அதிகாரத்தில் அடிப்படையானவை ஊராட்சிகளுக்கும் குறிப்பிட்ட சில மட்டும் மாநில அரசுக்கும் இருக்கும். இந்திய அரசுக்குக் குறிப்பிட்ட வரிகளை விதிக்கும் அதிகாரம் மட்டும் இருக்கும். தண்டும் அதிகாரம் எதுவும் இருக்காது.
14. பணம் அச்சிட்டு வெளியிடும் அதிகாரம் நடுவரசிடம் இருக்கும். ஊராட்சிகள் தங்கள் ஒவ்வோராண்டு வ – செ திட்டத்திலும் தங்கள் வரிவருவாய் போக புதிய திட்டங்களைச் செயற்படுட்ட கூடுதல் நிதி கேட்டால் அதனை வெளியிட்டு நடுவரசு வழங்க வேண்டும்.
❋ ❋ ❋