28.6.09

தேசியம் வெல்லும் .....6

மார்க்சியமும் அமெரிக்காவும்:

பதிவாகியுள்ள மனித வரலாற்றில் மனிதனின் மெய்யியல் எய்தல்களில் மிக உயர்வானது மார்க்சியம். அது நடைமுறையை அல்லது களச் செயற்பாட்டை மெய்யியல் அல்லது அறிவியலின் அறுதி நிலையாகக் கொண்டுள்ளது. உலகில் மிக உயர்ந்த மெய்யியலைக் கொண்டுள்ளதாகக் கூறிப் பெருமைப் பட்டுக்கொள்ளும் நம் அறிவு“சீவி”களில் பலர் முன்வைக்கும் இந்திய மெய்யியலின் “குண்டலினி” எனத் தவறாகக் குறிக்கப்படும் “குண்டிலினி”க் கோட்பாட்டைப் போல் குண்டி மீது அமர்ந்து கண்ணிரண்டையும் மூக்குநுனி மீது அல்லது கொப்புளின் மீது குவித்து மூச்சை எண்ணிக் கொண்டிருப்பதால் மனித இனத்தின் மட்டுமல்ல அண்டத்தின் மறையங்களையெல்லாம் ஒளிவு மறைவின்றி அறிந்துகொள்ளலாம் என்று சொல்லி நாட்டுக்கும் மக்களுக்கும் வளம் சேர்க்க வேண்டிய திறன் மிக்க மனித ஆற்றல்கள் அனைத்தையும் அரங்குகளுக்குள் அமர்த்தி அழிம்பு வேலை செய்யவில்லை மார்க்சியம். இயற்கையும் மனிதனும் நிகழ்த்தும் செயல்களையெல்லாம் கண்டு நாள்தோறும் தன்னை வளப்படுத்திக்கொள்ளும் கோட்பாட்டு அடித்தளம் கொண்ட வளமான மெய்யியல் ஆகும் அது. எல்லைக்குட்பட்ட வாழ்நாளைக் கொண்ட நேர்மையான மனிதர்களாகிய மார்க்சும் ஏங்கல்சும் லெனினும் டிராட்கியும் சேகுவாரா போன்றவர்களும் தங்கள் வெற்றிகளாலும் தோல்விகளாலும் அக்கோட்பாட்டுக்கு மேலும் மேலும் வளம் சேர்த்துள்ளனர். இவர்கள் அன்றி அமெரிக்க ஆளும் கும்பலும் கூட மானிடத்துக்கு எதிரான தன் அழிம்பு வேலைகளுக்கு நேர்மையான மார்க்சிய மரபின் பெருமை மிக்க மனிதர்களின் குழப்பங்களையும் மயக்கங்களையும் தவறுகளையும் பயன்படுத்தி உலகின் பெரும் கொடுமை மிக்க வல்லரசாகத் தம் நாட்டை வளர்த்துவிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அவ்வாறு பயன்பட்டவற்றில் ஒன்று மார்க்சியத்தின் பாட்டாளியப் பிறழ்ச்சி, மற்றொன்று மாந்தவியலுக்கும் குமுகியலுக்கும் மார்க்சியம் தந்துள்ள மிகப்பெரும் பங்களிப்பு. இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மார்க்சியம் இரண்டு அடிப்படைக் கூறுகளைக் கொண்டது.


1. இயங்கியல் பருப்பொருளியம்.

2. வரலாற்றுப் பருப்பொருளியம்.

இயங்கியல் பருப்பொருளியம், இயற்கை, குமுகம், மனிதச் சிந்தனை ஆகியவை இயங்கியலாகச் செயற்படுகின்றன என்கிறது. இயங்கியல் என்பது எதிரிணைகளின் மோதல், ஒன்றையொன்று அழிக்காத, ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறும் தன்மையுள்ள எதிரிணைகளின் முரண்பாடுகளிலிருந்து மாற்றங்கள் இடைவிடாமல் நிகழ்கின்றன. மாற்றம் மேல் நோக்கியதாகவும் இருக்கலாம்; கீழ் நோக்கியதாகவும் இருக்கலாம். முரண்பாடுகளில் எது வெற்றிபெறுகிறது என்பதைப் பொறுத்தது அது. பருப்பொருளிலிருந்து தோன்றிய சிந்தனையாகிய நுண்பொருளும் கூட பருப்பொருளுடன் இயங்கியலாகச் செயற்படுகிறது என்கிறது மார்க்சியம்.

வரலாற்றுப் பருப்பொருளியம் சொல்வது, ஒரு குமுகத்தின் குமுகத் தன்னுணர்வு ஆகிய பண்பாடுகள் எனப்படும், தெய்வம், குடும்பம், உணவு, அறிவியல், தொழில்நுட்பம், கலை இலக்கியங்கள், சட்டம், அரசியல், நம்பிக்கை முதலியவை அக்குமுகம் இருக்கும் பண்ட விளைப்புப் பாங்குக்கும் ஏற்ப மாறுபடுகிறது. ஒவ்வொரு பண்ட விளைப்புப் பாங்குக்கும் ஏற்ப மனித உறவுகள் அமைகின்றன. பண்ட விளைப்புப் பாங்கு மேம்படுந்தோறும் மனித உறவுகளும் மேம்படுகின்றன. குக்குலக் குமுகம் ஒருவகை மனித உறவுகளைக் கொண்டிருந்தது. அப்போது அண்டைக் குழுக்களோடு போர் நடந்தால் பிடிபட்டவர்களைக் கொன்றார்கள் அல்லது கொன்று தின்றார்கள். அடுத்த விளைப்புக் கட்டமான அடிமைக் குமுகத்தில் பிடிபட்டவர்கள் அடிமைகளாயினர். நிலக்கிழமைக் கட்டத்தில் அடிமைகள், அதைவிட மேம்பட்ட உரிமைகள் கொண்ட கொத்தடிமைகள் ஆயினர். அதற்கும் மேம்பட்ட முதலாளியக் கட்டத்தில் கொத்தடிமைகள் தொழிற்சாலைக்கு வெளியே சட்டப்படி பிறருக்குச் சமமான உரிமையுள்ள கூலித்தொழிலாளிகளாயினர், இனி வர இருக்கும் பொதுமைக் குமுகத்திலே தொழிலாளி முதலாளி வேறுபாடு இருக்காது; அனைவரும் சமம் எனும் நிலை உருவாகும் என்பது வரலாற்றுப் பருப்பொருளியத்தின், அதாவது மார்க்சியத்தின் நிலைப்பாடு.

குக்குலக் குமுகம் → அடிமைக் குமுகம் → நிலக்கிழமைக் குமுகம் → முதலாளியக் குமுகம் → பொதுமைக் குமுகம் என்ற வரிசையில் குமுகம் மேலேறிக்கொண்டிருக்கிறது என்று மார்க்சு கூறினார். எந்தச் சட்டத்தாலும் அல்லது நடவடிக்கையினாலும் இந்த வரிசையில் வராமல், ஒரு கட்டத்திலிருந்து அடுத்தடுத்துள்ள கட்டங்களுக்குள் நுழையாமல் எந்தக் குமுகமும் தாண்டிச் செல்ல முடியாது என்று வரையறுத்த மார்க்சே உருசியாவில் பழைய குக்குல வடிவாகிய முந்தியல் பொதுமைக் கூறுகள் கொண்ட ஊர் அவைகளைக் கண்டு அதிலிருந்து நேராக பொதுமைக் குமுகத்துக்குள் நுழைந்துவிட முடியுமோ என்று ஐயுற்றார். அதற்கேற்ப லெனின் முழு முதலாளியத்தினுள் நுழையாமல் இருந்த உருசியக் குமுகத்தில் முதலாளியம் முழுமை பெற்றுவிட்டதாகக் கணித்து பொதுமைப் புரட்சியை நடத்தினர். அது போலவே சீனத்திலும் பிற நாடுகளிலும் பொதுமைப் புரட்சிகள் நடந்து தோல்வியைத் தழுவின.

லெனினை மறுத்து அவரது தோழரான டிராட்கி கூறியது போல் உலகின் ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும் முதலாளியம் முழுமை பெற்ற பின்தான் பொதுமைப் புரட்சி நிலையான வெற்றியைத் தரும் என்ற முடிவுதான் சரி என்பதை நடைமுறை தெளிவாக்கியுள்ளது. இந்தக் கோணத்தில் ஏழை நாடுகளில் முதலாளியம் முழுமைபெற வேண்டும். அதை இயலச் செய்வது மார்க்சியர்களின் கடமையாகும். ஆனால் நடப்பது என்ன? நடந்தது என்ன?

சோவியத்தின் தலைமையில் இருந்த மூன்றாம் பொதுமை அனைத்துலகியம் ஆயுதப் புரட்சி மூலம் தங்கள் தங்கள் நாடுகளில் பொதுமைக் குமுகத்தை அமைக்கும் செயல்திட்டத்தை வகுத்துக் கொடுத்தது. அதற்கு அது முன்வைத்த செயல்முறை நிலத்தை உழுதொழிலாளிக்குப் பங்கிட்டுக் கொடுப்பது, நிலவுச்ச வரம்பு, தொழிலாளர்களுக்குக் கூலி உயர்வு, சங்கம் அமைக்கவும் வேலை நிறுத்தம் செய்யவும் உரிமை வழங்குதல் என்பவையாகும். ஐரோப்பியரின் தலையீட்டினால் நிலக்கிழமையின் ஊடே முதலாளியக் கூறுகள் ஏழை நாடுகளில் அரும்பியிருந்த சூழலில் இச்செயல்முறை அதைக் கருவிலேயே கருக்கியது. அதே நேரத்தில் அமெரிக்கா இதே செயல்முறையைத் தன் கீழிருந்த நிகர்மை அனைத்துலகியத்தின் மூலம் முன்வைத்தது. அனைத்து ஏழை நாடுகளும் இவ்விரண்டு வல்லரசுகளில் ஒன்றின் செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டு தங்கள் வளர்ச்சியைத் திட்டமிட்டன. அதற்கு உதவுவது என்ற பெயரில் ஏழை நாடுகளில் உள்ள இயற்கை வளங்கள், மனித வளம், ஆற்றல் வளங்கள், அடிப்படைக் கட்டமைப்புகள் ஆகியவற்றை உறிஞ்சி இரு வல்லரசுகளும் எடுத்துக் கொண்டன. என்புருக்கி நோயாகிய ஆட்சியாளர் - கட்சிவாணர்களின் ஊழலால் பீடிக்கப்பட்ட சோவியத் வீழ்ந்தது. அமெரிக்கா பேயாக, காட்டேரியாக வளர்ந்து நிற்கிறது.

இன்னும் காலம் கடந்துவிடவில்லை. மார்க்சியத்துக்கு ஒப்பற்ற ஒரு பட்டறிவு அதன் நடைமுறைச் செயற்பாட்டிலிருந்து கிடைத்துள்ளது. அடுத்த நடவடிக்கைக்கு, அதாவது அந்தந்த நாட்டில் அல்லது தேசத்தில் பெருவழக்காக இருக்கும் பொருளியல் கட்டத்திலிருந்து அதற்கு அடுத்த பொருளியல் கட்டத்துக்கு அந்தந்த நாட்டை அல்லது தேசத்தை அழைத்துச் செல்வதற்கு அது தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

சோவியத்து தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில் அமெரிக்கா சீனத்தோடு கூட்டுச் சேர்ந்து உலகிலுள்ள ஏழை நாடுகளில் எல்லாம் அங்கங்கே உள்ள தேசிய முதலாளிய அரும்புகளை அழித்தொழிப்பதோடு அத்தேசியங்களை எதிர்காலத்தினுள் இட்டுச் செல்லத்தக்க துடிப்பும் துணிவும் தெளிவும் நேர்மையும் உள்ள இளம் தலைமுறையினரையும் அழித்தொழிக்கத் திட்டம் தீட்டி நிறைவேற்றி வருகிறது. பாட்டாளியக் கோட்பாடு என்ற பெயரில் முதலாளிய உருவாக்கத்துக்கு எதிரான மனநிலையை அனைத்து மட்டங்களிலுள்ள மக்களின் மனதிலும் விதைப்பதில் வெற்றிபெற்றுவிட்டது.

இதற்காக வல்லரசு நாடுகள் தங்கள் சொந்த நாட்டு வரவு செலவுத் திட்டத்துக்கு ஒதுக்குவதிலும் குறையாத அளவு பணத்தை ஏழை நாடுகளில் செலவிடுகின்றன. பணத்தை வாரி இறைத்து ஏழை நாடுகளில் “தொண்டு” நிறுவனங்களை இயக்குகின்றன. அவற்றின் முதன்மைப் பணி பாட்டாளியக் கோட்பாட்டு நஞ்சை விதைப்பது. அடுத்து, தாங்கள் செய்யப்போகும் “தொண்டு” பற்றிய தெளிவை அடைவதற்காக உள்ளூர் அடிப்படைச் செய்திகளைத் தொகுத்துக் கொடுப்பது. இந்தத் தரவுகள் வல்லரசு நாடுகளுக்கு ஏழை நாடுகளின் அனைத்துக் கூறுகளையும் வெள்ளிடை மலைபோல் காட்டுகின்றன. அவற்றிலிருந்து அந்நாடுகளிலிருந்து எவ்வெவற்றைச் சுரண்டலாம், எவ்வாறு மக்கள் குழுக்களிடையில் மோதல்களை உருவாக்கலாம் எவ்வெவற்றை அழிக்கலாம் என்பவை போன்ற கேள்விகளுக்கு வல்லரசுகளுக்கு நம்பகமான விடைகள் கிடைக்கின்றன.

அடுத்து ஏழை நாடுகளின் பல்கலைக் கழகங்களுக்கு ஆய்வுகளுக்காகவென்று பெரும் மானியங்களை வழங்கி அப்பணத்தைப் பெற்றுக்கொள்வோர் மேற்கொள்ளும் “ஆய்வுகள்” மூலமும் பலவகையான தரவுகளைப் பெற்றுக்கொள்கின்றன, ஆய்வாளர்கள் தாங்களாக எந்த முடிவுகளையும் ஆய்வுகளில் வெளியிடக்கூடாது என்ற மறைமுகக் கட்டுறவுடன், அதாவது, முந்தைய ஆசிரியர் ஒருவரின் மேற்கோள் அத்தகைய முடிவுகளுக்கு வேண்டும் என்பதன் மூலம்.

தொழிற்சங்கங்களுக்குள் புகுந்து மக்களை, எடுத்துக்காட்டாக, மலைசார் பழங்குடியினர், கடல் சார் பழங்குடியினர் என்பது போல் பிரித்து அவர்களைத் தமக்குள் பகைக் குழுக்களாக ஆக்கி வைக்கின்றன அமெரிக்கா தலைமையிலான வல்லரசுகள்.

காந்தியின் உண்மையான படிமத்தை மறைத்து எவ்வாறு கடவுளின் தோற்றரவு(அவதாரம்) என்ற தோற்றத்தை உருவாக்கினார்களோ அதுபோல் இன்று சிதையத் தொடங்கியிருக்கும் பெரியாரின் படிமத்துக்குப் புத்துயிருட்ட எசு.வி.இராசதுரை போன்றாரைப் பயன்படுத்தி நூல்களை வெளியிட வைத்துள்ளனர். அதன் மூலம் அவரது பங்களிப்பான தமிழக மக்களையும் இந்திய மக்களையும் அணு அணுவாகச் சிதைக்கும் ஒதுக்கீட்டு வேண்டுகைக்கு நீண்ட வாழ்நாளை அளித்து வருகின்றனர்.

இந்த எல்லாவகை நடவடிக்கைகளிலும் பாட்டாளியக் கோட்பாட்டுப் பரப்பல் கட்டாயம் இருக்கும்.

இவ்வாறு உலகின் மிகப் பெரும்பான்மை மக்களான ஏழை நாட்டு மக்களின் உழைப்பு, அந்நாடுகளின் அனைத்துவகை வளங்களிலிருந்து கிடைக்கும் பலன்கள் என்று அனைத்தும் வல்லரசுகளை, அவற்றின் தலைவனான அமெரிக்காவை அளவுக்கு மீறி, மனித குலத்துக்கே பெரும் அச்சுறுத்தலாகும் அளவுக்கு வளர்த்து வைத்துள்ளன. இதிலிருந்து மனித குலத்தை மீட்டெடுக்கும் வழி உண்டா?


(தொடரும்)

0 மறுமொழிகள்: