22.6.09

முதலாளியமும் வல்லரசியமும் .....5

இந்தியா, பாக்கித்தான், சீனம் போன்ற நாடுகள் தங்கள் உள்நாட்டு நிகர விளைப்பில் (உ.நி.வி.யில்) ஏறக்குறைய பாதி அளவுக்கு ஏற்றுமதி சார்ந்த சந்தையையே நம்பியுள்ளன. சீனம் உ.நி.வி.யில் 35.3% அளவுக்கே உள்நாட்டு நுகர்வைக் கொண்டுள்ளது(Financial Chronicle, 30-09-2008 p.Ⅱ). அதன் ஏற்றுமதி 64.7% என்பது இதன் பொருள். அப்படியானால் சீனத்தின் படைப்புகளை நுகரும் நாடுகளில் வாங்குதிறனில் விழும் ஒவ்வொரு அடியும் சீன மக்களின் வாழ்க்கையின் அடிப்படையைக் குலுங்க வைக்கும்.

இந்தியாவிலும் பண்டப் படைப்பும் ″மனித வள மேம்பாடும்″ கூட ஏற்றுமதியைச் சார்ந்தே அமைந்துள்ளன. எனவே உலகம் முழுவதும் வரவிருப்பதாக ஏறக்குறைய அனைத்து வல்லுநர்களும் ஒரே குரலில் கூறும் உலகின் இரண்டாவது மீப்பெரும் பொருளியல் பின்வாங்கலில் இந்நாட்டின் இடைத்தர மக்கள் படப்போகும் அல்லல்களுக்கு அளவே இருக்காது. இந்த அல்லல்களிலிருந்து மீள்வது எப்படி?

நாம் கூறியுள்ள தேசிய முதலாளியம் கைகொடுக்கக் கூடும். அனைத்துவகை விளைப்புகளும் பணிகளும் பங்கு முதலீட்டில் செயற்படும் பெரும் நிறுவனங்களாகவும் பண்ணைகளாகவும் மாறி மிகப் பெரும்பான்மை மக்களும் அவற்றில் தொழிலாளர்களாவார்கள். அவர்களது வாங்கு திறன் உயரும். நம் நாட்டில் விளைக்கப்படும் பண்டங்களுக்கும் கிடைக்கத்தக்க பணிகளுக்கும் நம் நாட்டிலேயே சந்தை உருவாகும்.

இந்த வளர்ச்சி நிலை உருவாவதற்கு கணிசமான கால இடைவெளி தேவைப்படும்தான். ஆனால் இதை விட்டால் வேறு வழி இல்லை. இத்தனை காலமும் நாம் செய்த தவறுகளுக்குக் கழுவாயாக, இப்போது கிடைத்திருக்கும் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி அனைத்து மக்களையும் நாட்டின் முதன்மைப் பொருளியல் நீரோட்டத்தினுள் கொண்டுவரும் இன்றியமையாப் பணியை உடனே தொடங்குவோம்.

அந்நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கும் முதலீட்டுப் பங்குகள் இருந்தால் தேசத்தின் மிகப் பெரும்பாலான குடிமக்களில் ஒவ்வொருவரும் ஒரே நேரத்தில் தொழிலாளியாகவும் முதலாளியாகவும் இருப்பர். அப்போது தமது ஒவ்வொரு நடவடிக்கையும் தமது உடனடி ஆவல்களை நிறைவேற்றுவதா, தனது எதிர்கால, நீண்டநாள் நலனுக்கு உகந்ததா என்று எடை போட்டுப் பார்க்க வேண்டிய கட்டாயம் அல்லது சிந்தனை உருவாகும். அதுவே தனி நலன், குமுக நலன் ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு சமநிலையைப் பேண வேண்டிய தேவையை வாழ்க்கையின் நடைமுறைகள் அனைவருக்கும் உணர்த்தி படைப்புச் செயல்முறைக்கு எதிராக நிற்பதைவிட அதற்கு ஆதரவாக அவர்களது செயற்பாடுகள் அமையும். மக்களின் பண்பாட்டு மட்டம் உயரும். இலவயங்களையும் வெற்று ஆரவாரங்களையும் நம்பி ஆட்சியாளர்களை எடைபோடுவதைக் கைவிட்டு கோட்பாடுகள், திட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்சியாளர்களின் செயல்களை எடைபோடும் பக்குவம் உருவாகும்.

மார்க்சியமும் பொதுமைக் கோட்பாடும்

பொதுமைக் குமுகத்தின் முதல்படி நடவடிக்கைகள் எப்படி என்பது பற்றி மார்க்சும் ஏங்கெல்சும் பொதுமைக் கட்சியின் கொள்கை அறிக்கையில் கூறியிருப்பவை:

″இந்த நடவடிக்கைகள் கண்டிப்பாக வெவ்வேறு நாடுகளுக்கும் வெவ்வேறாக இருக்கும்.

″இருந்தாலும் மீமுன்னேறிய நாடுகளில் கீழே உள்ளவை ஓரளவு பொதுவாகக் கையாளத்ததவை.

″1. நிலத்தில் தனியுடைமையை ஒழித்தலும் அனைத்து நிலவாடகையையும் பொது நோக்கங்களுக்காகக் கையாளுதலும்.


″2. சிறுகச் சிறுக உயர்ந்து செல்லும் கனத்த ஒரு வருமான வரி.

″3. அனைத்து மரபுவழிச் சொத்துரிமையையும் ஒழித்தல்.

″4. நாட்டைவிட்டு வெளியேறுவோர், கலகக்காரர் ஆகியோர் அனைவரின் சொத்துக்களையும் பறிமுதல் செய்தல்.

″5. கடன் வழங்குவதை நடுப்படுத்தி ஒரு தேசிய வங்கி மற்றும் அரசு மூலதனத்துடன் அரசின் கைக்குள் கொண்டு வருதல்.

″6. செய்தித் தொடர்பு மற்றும் போக்குவரத்துகளை அரசின் கைக்குள் நடுப்படுத்தல்.

″7. அரசுக்குச் சொந்தமான தொழிலகங்களையும் விளைப்புத் தளவாடங்களையும் விரிவுபடுத்தல்; ஒரு பொதுவான திட்டத்தின் அடிப்படையில் தரிசு நிலங்களைப் பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தி மண்ணின் வளத்தை மேம்படுத்தல்.

″8. அனைவருக்கும் உடலுழைப்புக்குக் கடப்பாடுண்டு. தொழிற்படைகளை, குறிப்பாக வேளாண்மையில் நிறுவுதல்.

″9. வேளாண்மை மற்றும் பண்ட விளைப்புத் தொழில்களை ஒன்றிணைத்தல்; நகருக்கும் ஊருக்குமான வேறுபாட்டைச் சிறுகச் சிறுக, மக்கள் செறிவை இன்றை விடவும் சமநிலையிலான பரவல் ஆக்குவதன் மூலம் ஒழித்தல்.

″10. அனைத்துக் குழந்தைகளுக்கும் பொதுப்பள்ளிகள் மூலம் இலவயக் கல்வி. தொழிலகங்களில் இன்றிருக்கும் வடிவிலான, குழந்தை உழைப்பை ஒழித்தல். கல்வியையும் தொழிலியல் விளைப்பையும் இணைத்தல் போன்று இன்னும் இன்னும்.

″வளர்ச்சி முன்னேறி வகுப்பு வேறுபாடுகள் மறையும் போது, முழுத் தேசத்தின் ஒரு பரந்த விரிந்த கூட்டமைப்பின் கைகளில் அனைத்து விளைப்புகளும் வரும்போது பொது அதிகாரம் என்பது தன் அரசியல் பண்பை இழந்துவிடும். அரசியல் அதிகாரம் என்று சரியாக அழைக்கப்படுவது, ஒரு வகுப்பு இன்னொன்றை ஒடுக்கும் நோக்கம் கொண்ட கட்டமைக்கப்பட ஆதிகாரமாகும். பாட்டாளியர், சூழல்களின் கட்டாயத்தால் தங்களை ஒரு வகுப்பாக ஒருங்கிணைக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானால், ஒரு புரட்சியால் தன்னை ஆளும் வகுப்பாக ஆக்கி அதிகாரத்தைக்கொண்டு விளைப்பின் பழைய நிலைமைகளுடன் வகுப்புப் பகமைகளும், பொதுவாக வகுப்புகளும் இருப்பதற்கான நிலமைகளைத் துடைத்து அகற்றிவிட்டால் அப்போது அதன் மூலம் தான் ஒரு வகுப்பென்ற முறையில் மேலாளுமை செய்வதையும் அகற்றிவிடும்."[1
]

இந்த இறுதி நிலையை "அரசு உதிர்ந்து போதல்" என்று ஏங்கல்சு கூறினார்.
[2]

இது தொடர்பாக ஒரு நிகழ்வை நாம் நினைவுக்குக் கொண்டுவர வேண்டும். புரட்சி பற்றி லெனினுக்கும் டிராட்கிக்கும் ஓர் அடிப்படையான கருத்து வேறுபாடு இருந்தது. உலக நாடுகளிலெல்லாம் முதலாளியம் வந்த பின் உலகம் தழுவிய ஒரே பொதுமைப் புரட்சியாகவே நடத்த வேண்டும் என்றார் டிராட்கி. லெனினோ ஒரு நாட்டில் மட்டும் பொதுமைப் புரட்சியை உடனே நடத்திவிட முடியும் என்று பிடிவாதமாகக் கூறினார்.

தன் கருத்துப்படி, எடுத்த எடுப்பிலேயே பொதுமைக் குமுகத்தை அமைக்கும் ″நிலையான″ புரட்சியாக புரட்சி இருக்க வேண்டும் என்பது டிராட்கியின் கருத்து. லெனினோ, புரட்சி என்பது அரசைக் கைப்பற்றுவதோடு நின்றுவிடாது, இன்றைய குமுகத்திலிருந்து நிகர்மைக் குமுகத்தினுள் செல்வது, அங்கிருந்து படிப்படியாகப் பொதுமைக் குமுகத்தினுள் நுழைவதுவரை இடைவிடாமல் ″நிலைத்து″ நின்று புரட்சி செய்ய வேண்டும் என்றார். இருவரும் ″நிலையான புரட்சி″ (Permanent Revolution) என்ற சொல்லை வைத்துக் கொண்டு சிலம்பம் ஆடினார்கள்.

டிராட்கியின் கருத்தை ஏற்றுக்கொள்ளாமல் புரட்சியை நடத்திய லெனின் அவரைத் தன் அரசில் அயலுறவுத்துறை அமைச்சராக வைத்திருந்தார். லெனின் காலத்துக்குப் பின் தாலினுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தான் வேட்டையாடப்படுவதிலிருந்து தப்பிக்க அவர் அமெரிக்காவில் குடியேறி அங்கேயே காலமானார். அவர் பெயரில் டிராட்கியர்கள் என்று செயற்பட்டவர்கள் பெரும்பாலும் அமெரிக்க உளவு நிறுவனத்தின் படைப்புகளாகவே இருக்க வேண்டும்.

இந்த நிகழ்வுகளிலிருந்து லெனின் தன் நடவடிக்கைகளில் பருவம் தவறி, அவர் குறிப்பிட்ட புரட்சிக்கு உரிய பருவத்தை அடையாத குமுகத்தின் மீது அந்தக் குமுகத்தின் வளர்ச்சிக்குப் பொருந்தாத ஒரு புரட்சியைத் திணித்துவிட்டார் என்பது தெளிவாகிறது. அவருக்கும் அது தெரிந்துதான் இருந்தது.

குமுகியல் புரட்சியாளர்கள்(Social Revolutionaries) என்றொரு அமைப்பு உருசிய உழவர்களது சிக்கல்களை முன்னெடுத்து வைத்து ஒரு செயல்திட்டம் தீட்டியிருந்தது. அந்தத் திட்டத்தைப் பொடிப் பூரிய(Petty bourgiois)த் திட்டம் என்று புரட்சிக்கு முன்பு திறனாய்ந்திருந்தார் லெனின். புரட்சியில் அந்த இயக்கம் லெனினது கட்சியோடு தோழமை கொண்டு செயற்பட்டு சோவியத் ஆட்சியிலும் பங்கேற்றது. அப்போது சோவியத் அரசின் வேளாண் கொள்கை என்னவென்ற கேள்வி எழுந்தபோது அந்தக் கட்சியின், இவர் திறனாய்ந்திருந்த அதே செயல்திட்டத்தை எடுத்து முன்வைத்தார். பின்னால் இதைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர்களின் திட்டத்தை முழுமையாக, ஒரே ஒரு மாற்றம் கூட இல்லாமல் தான் பயன்படுத்தியதாகக் கூறினார்(Left Wing Communism - An infentile Disorder, V.I.Lenin,Novosti Press Agency Publishing House, Moscow, 1970, p.72-73. வலியுறுத்தம் லெனினுடையது). அது மட்டுமல்ல, முதலாளியத்துக்குத் தேவையான மின்னாக்கல் போன்ற பெரும் பெரும் திட்டங்களைத் தொடங்கும் போது நிகர்மை வளர, இத்தகைய திட்டங்கள் வேண்டும் என்று கூறுவார். அவர் மனதில் நிகர்மை என்ற பெயரில் முதலாளியத்தை முழுமையாக வளர்க்க வேண்டும் என்றிருக்கலாம். தொழிலகங்களின் தொழிலாளர்கள், தங்கள் தொழிலகத்தை அரசுடைமையாக்க வேண்டும் என்று அணுகிய போது, முதலில் தங்கள் தொழிலகங்களை வெளி உதவி இல்லாமல் ஆதாயத்தில் இயங்குபவையாக வளர்த்துவிட்டு வாருங்கள் என்று கூறுவார். ஆனால் நீருக்குள் முழுகிய பின் நீச்சல் பழக முடியுமா என்ன?

பொதுமைக் குமுகத்தைப் பற்றிய மார்க்சின் கூற்றுப்படி நாம் முதலில் முழுமையான, பெருமரபு முதலாளிய நாடாக, தேசிய முதலாளிய நாடாக, அயல்நாடுகளைச் சுரண்டாமலும் நம்மை அயலவர்கள் சுரண்டாமலும் உள்ள ஒரு முதலாளிய நாடாக நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது புலனாகிறது.

ஆனால் மார்க்சின் பொதுமைக் குமுகம் என்ற செயல் திட்டம் மார்க்சியம் என்ற மெய்யியலிலிருந்து மாறுபடுவதாக எமக்குத் தோன்றுகிறது.


(தொடரும்)

அடிக்குறிப்பு:


[1] மேல்படி நூல் பக்.75-76.
[2] பிரெடரிக் ஏங்கெல்சு, டூரிங் மறுப்பு, மேற்கோள், State and Revolution, V.I.Lenin, Progress Publishers, Moscow, 1972, P.16-17

0 மறுமொழிகள்: