28.6.09

தேசியம் வெல்லும் .....3

தெளிவான நிலையில் “இந்தியா”

இனி, இந்திய அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன என்று பார்ப்போம்.

ஏற்கெனவே ஆங்கில வல்லரசுடன் கமுக்கமான ஓர் உடன்பாட்டுடன்தான் காந்தி 1919இல் தெற்கு ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்தது. ஆங்கில வல்லரசிய நலன்களுக்கு எந்தப் பாதிப்பும் இன்றி இந்தியாவை பனியா - பார்சிகளுக்கு முழு உரிமையாக்குவதே அந்த உடன்பாடு. அதற்கிசைய இந்தியாவை ஆண்ட ஆங்கிலரும் காந்தியும் திறமையாகக் காய்களை நகர்த்தினர். ஆயுதந் தாங்கிய போராட்டங்களால் ஆங்கிலரை வீழ்த்த வேண்டுமென்ற திட்டத்தினால் இந்தியாவிலுள்ள பல்வேறு தேசங்களைச் சேர்ந்த புரட்சிகரத் தனிமங்கள் மேலெழும்பிவிடக் கூடாது என்ற குறிக்ககோளுடன் அத்தகைய முயற்சியில் ஈடுபட்டவர்களைக் களத்திலிருந்து ஈவிரக்கமின்றி அகற்றினர். ஆனால் பனியா - பார்சிகளின் பொருளியல் போட்டியாளர்களில் முதன்மையானவர்களான வட இந்திய முகம்மதியர்களை அவ்வாறு அகற்ற முடியவில்லை. அவர்களின் தலைமை முன்வைத்தது, முழுத் தன்னாட்சியுடைய மாநிலங்களின் ஒரு கூட்டமைப்பை அல்லது தனி பாக்கித்தானை. காந்தியின் கட்சி தனிப் பாக்கித்தானைத் தீர்வாக வைத்தது. அதாவது, ஒருங்கிணைந்த இந்தியா என்ற மடைமைக்காக பனியா - பார்சி நலன்களை விட்டுக்கொடுக்க காந்தி ஆயத்தமாக இல்லை. இந்தியா பனியா -பார்சிகளுக்கும் பாக்கித்தானம் பஞ்சாபி முகமதியர்களுக்கும் வேட்டைக்காடாகியது.

காந்தியின் இந்த “மென்முறைப் புரட்சி” ஒப்பற்றது என்றும் மனித குல வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படத்தக்கது என்றும் 1930களிலேயே வெள்ளைத் தோல் வரலாற்றாசிரியர்கள் காந்தியை ஒரு கடவுளாக்கிவிட்டார்கள்.

இந்தியாவுக்கு ‘விடுதலை’ வழங்கத் தீர்மானித்த போது ஆங்கில அரசு, சமத்தானங்கள் தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று வாக்களித்தது. அதை நம்பி சில சமத்தானங்களின், குறிப்பாகத் திருவிதாங்கூர் சமத்தானத்தின் திவானாக இருந்த சி.பி.இராமசாமி ஐயர் விடுதலை பெற்ற திருவிதாங்கூர் பற்றிய அறிக்கையை வெளியிட்டார். ஆட்சியைக் கையிலெடுத்த பனியா - பார்சி நலன்களுக்கான காந்தியின் கட்சி படைகளைக் கொண்டு மிரட்டிப் பணிய வைத்தது. காந்தி மீது அளவுக்கு மீறிய பற்றும் நம்பிக்கையும் வைத்திருந்த திரு.வி.க. போன்று இந்தியா முழுவதையும் சேர்ந்த ஓர் ஆர்வலர் கூட்டம் “காந்தியம் வீழ்ந்துவிட்டது, பட்டேலியம்தான் ஆட்சிபுரிகிறது” என்று தவறாகக் கணித்தனர். (அப்போது உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய்ப் பட்டேல்தான் படைகளைக் காட்டி “இந்திய ஒருமைப்பாட்டை”க் காத்து “இரும்பு மனிதர்” என்று புகழப்பட்டவர்)

இவற்றை அறியாத தமிழ்நாட்டு அறிவிலிகள் இன்றும் சி.பி.இராமசாமியாரைத் தூற்றித் திரிகின்றனர். அவரது உள்நோக்கம் தமிழர்கள் சார்பானது. கேரளத்துடன் இணைந்தால் திருவிதாங்கூர் தமிழர்கள் மிகச் சிறுபான்மையாகிவிடுவர் என்பதுதான் அது. அது போலவே நடந்தது. திருவிதாங்கூரிலிருந்த தமிழர்களில் பாதிப்பேர் தமிழகத்தோடு சேர்வதற்கே பல நூறு உயிர்களைக் களப்பலியாக்க நேர்ந்தது பின் நடந்த வரலாற்று நிகழ்ச்சி.

காசுமீர மக்கள் இந்தியாவோடு இணைய விரும்பவில்லை. ஆனால் அதை ஆண்ட ‘இந்து’ அரசரைக் கையில் போட்டுக்கொண்டு ஒரு முழுத் தன்னாட்சியுடைய மாநிலமாக ஏற்பதாகக் கூறினர். பின்னர் பாக்கித்தான் ஆட்சியாளரும் நேருவும் சேர்ந்து ஒரு போரை நடத்தி அதனை இரண்டாக உடைத்தனர். பாதிச் சண்டை நடந்து கொண்டிருந்த போது ஒன்றிய நாடுகளவைக்குச் சிக்கலைக் கொண்டு சென்று போரை முடித்தவர் நேரு. இது அவரது தவறான அணுகலின் விளைவு என்று பலர் நம்புகின்றனர். ஆனால் உண்மையில் அது அவரது திட்டமிட்ட செயலே.

நேரு காசுமீரத்திலிருந்து வந்த பார்ப்பனக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர்கள் பாரசீகத்திலிருந்து அங்கு வந்தவர்கள் என்றும் கூறப்படுவதுண்டு. அவரது மகள் இந்திரா மணம் முடித்தது பிரோசு காந்தி எனும் பார்சியை. அவ்வாறுதான் காந்தி என்ற குடும்பப் பெயர் அவர்களுக்கு அமைந்தது. பெருமுதலாளி டாட்டா ஒரு பார்சி. அரைப் பார்சியான இராசீவை மணந்தவர் இத்தாலியரான சோனியா. ஆக, பார்ப்பன - பனியா - பார்சி - ஐரோப்பியக் கலவையான ஒரு குடும்பத்தின் தலைவியான ஓர் ஐரோப்பியப் பெண் கையில் இன்று இந்தியா இருக்கிறது.

காசுமீரின் தன்னாட்சி உரிமைகளைத் தந்திரமாகக் களவாடினர் தில்லி ஆட்சியாளர்கள். எதிர்ப்புகள் உருவாயின. பாக்கித்தானிய, இந்திய அரசுகள் திட்டமிட்டு அதை மதப் போரட்டமாக்கித் திசைதிருப்பினர். பாக்கித்தானில் சிந்து, பலூச்சித்தானம் போன்ற மாநிலங்களிலும் இந்தியாவில் தமிழகத்திலும் பஞ்சாபிலும் விடுதலைப் போராட்டங்கள் தலைதூக்கின. தமிழகப் போராட்டத்தின் தலைமை நேர்மையாளர்கள் கையில் இல்லை. பஞ்சாபு விடுதலைப் போராட்டத்தையும் மதப் போராட்டமாக்கித் தற்காலிகமாக முடக்கிவைத்துள்ளனர்.

இந்தச் சூழலில் ஈழப் போரைத் திசைதிருப்ப இந்திய ஆட்சியாளர்கள் செய்த முயற்சிகள் இன்றுவரை பயனளிக்கவில்லை.

1983 இல் ஈழ மக்களுக்கு ஆதரவாக தமிழக மக்களிடையில் வெடித்த போராட்டங்களைக் கண்டு திகைத்த தமிழக அரசியல் கட்சிகள் அந்தப் போராட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு அரசியல், பொருளியல் ஆதாயங்களை அடையத் தலைப்பட்டன. இந்திய ஆட்சியாளர்களோ, இலங்கை அரசைத் தங்கள் மேலாளுமையினுள் வைக்கவும் ஈழ விடுதலை இயக்கத்தைத் தம் கைப்பிடிக்குள் கொண்டுவரவும் இதுதான் வாய்ப்பென்று ஈழப் போராளிகளுக்கு போர்ப்பயிற்சி, ஆயுதம் வழங்குதல் என்று அனைத்து வகையிலும் உதவினர். அமெரிக்கா, தன்னை எதிர்க்கும் இயக்கங்களிலும் தன் கைக்கூலிகளை ஊடுருவ வைப்பது போன்ற உத்தி இது. இன்றும் ஈழ ஆதரவு இயக்கங்கள் என்று தமிழகத்தினுள் செயல்படும் இயக்கங்களின் நடவடிக்கைகள் இது போன்ற ஊடுருவல் தன்மை உள்ளவைதாமா என்ற ஐயத்தை அவற்றின் பொதுவான நடவடிக்கைகள் நமக்கு ஏற்படுத்துகின்றன.

ஆளுநர் என்ற பெயரில் இருக்கும் நடுவரசின் ஒரு கையாள் மாநில “அரசின்“ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது தமிழர்களாகிய நமக்குக் கிடைத்துள்ள மக்களாட்சி உரிமையின் உச்சம். சட்டமன்றத்தில் நிறைவேறும் சட்ட வரைவுகள் அந்தக் கையாள் அல்லது தில்லியிலிருக்கும் நடுவரசுத் தலைமை என்ற பொம்மை ஏற்றுக்கொண்டால்தான் சட்டமாகும். இவ்வாறு பனியா - பார்சி கும்பலின் நடுவரசின் மண்டல அலுவலகங்களாக மாநில “அரசுகள்” அமைந்த இந்திய அரசியல் சட்டத்துக்கு மேல் எதையும் ஈழ மக்கள் பெற்றுவிடக் கூடாது என்பதுதான் இந்திய அரசின் நோக்கம்.

இந்தக் குறிக்கோளுடன் அரைப் பார்சியான இராசீவ் ஈழத்துக்குப் படையை விடுத்து, இந்தியா திணிக்க முற்பட்ட அரசமைப்பை நடைமுறைப்படுத்துவதறகாக நடத்திய நாடகத்தை ஈழப் போராளிகள் முறியடித்தனர்.

அன்றிலிருந்து எத்தனையோ மாற்றங்கள். உலகில் எல்லா நாடுகளும் ஈழ மக்கள் மீது பரிவு கொண்டிருந்த நிலைமாறி இந்தியா - இலங்கை அரசுகளின் பரப்பல்களால் பல நாடுகள் ஈழப் போராளிகளைத் தடைசெய்யும் நிலை வந்தது. ஆனால் அந்தச் சூழலிலும் அவர்களது போர் வலிமை குன்றவில்லை, மாறாக மிகுந்தது.

இன்று ஈழத்தில் நடப்பது குறித்து எமக்கு ஐயங்கள் உள்ளன. இந்தியாவின் நிலைப்பாடு, இந்திய மாநிலங்களுக்கு உள்ளவற்றுக்குக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட மாநிலங்கள் அண்டை நாடுகளில் இருக்கக் கூடாது என்பதாகும். அதிலும் தம் அரத்த உறவுகளைத் தமிழகத்தில் கொண்டுள்ள ஈழத்துக்கு அத்தகைய உரிமைகள் கிடைத்துவிடக் கூடாது என்பது இந்தியாவின் உறுதியும் இறுதியுமான நிலைப்பாடு. ஒரு வேளை ஈழ விடுதலைப் போராளிகளை வெற்றி கொள்ள முடியாத சூழலில் இலங்கை அரசு கீழே இறங்கிவந்து ஈழ மக்கள் கேட்கும் உரிமைகளைக் கொடுக்கக்கூடும் என்ற ஐயம் ஏற்பட்ட உடனேயே இந்திய அரசு தலையிட்டு போர்த் தளவாடங்களும் பயிற்சிகளும் கள அறிவுரைகளும், கள ஒருங்கிணைப்பும் தொழில் நுட்ப, தொழில்நுட்பர் உதவியுடன் குறிப்பாக வானூர்திகளையும் வலவன்(பைலட்)களையும் சிங்களர்களுக்கு முனைப்பான போர்ப் பயிற்சியும் வழங்கி ஈழம் – இலங்கைப் போரை ஈழம் - இந்தியப் போராக மாற்றியிருக்கிறதோ என்பது எமது ஐயம். அந்த ஐயம் நாளுக்கு நாள் உறுதிப்பட்டும் வருகிறது. நார்வே நாட்டின் நடுமையில் பேச்சுகள் தொடங்கிய உடனேயே இலங்கையின் ஆட்சியாளர்களும் எதிர்க் கட்சியினரும் இங்கு அடிக்கடி வந்து போனதும் அவர்களை இந்தியாவிலுள்ள புத்த, “இந்து” சமயக் கோயில்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று விருந்தாட்டயர்ந்தது போன்ற நடவடிக்கைகளும் இங்கிருந்து அரசுமுறை அதிகாரிகளும் படைத்துறையினரும் அடிக்கடி சென்றுவந்ததும் எம் ஐயப்பாட்டுக்கு உரம் சேர்க்கின்றன. பாக்கித்தானம் பத்து நாட்களுக்கு ஒரு கப்பல் என்ற வகையில் தங்களுக்கு ஆயுதங்கள் விடுத்துக்கொண்டிருப்பதாக இலங்கை அரசு விடுத்த அறிக்கை பொய்யாகவும் இருக்கலாம். அல்லது தேசிய விடுதலைப் போராட்டங்களின் எதிரிகள் என்ற நிலையில் இந்தியா, பாக்கித்தானம், சீனம் ஆகியவை மறைமுகக் கூட்டணியுடன் இணைந்தும் செயற்படலாம். அதுதான் சீனச் சார்பு இந்தியப் பொதுமைக் கட்சி(மார்க்சியம்)யின் பிருந்தா காரத்தின் அறிக்கை மூலம் வெளிப்படுகிறது.

அதே நேரத்தில் உருசியச் சார்பு இந்தியப் பொதுமைக் கட்சியின் எச்.இராசாவும் தா.பாண்டியனும் ஈழத் தமிழர்களுக்குத் துணையாகத் திடமாகக் குரல் கொடுப்பது உலக வல்லரசியத்தின் கூட்டணிக்குள் ஏற்பட்டிருக்கும் சிறு பிளவின் அறிகுறியா? தங்கள் நாட்டிலுள்ள தேசங்களின் உணர்வுகளை ஒடுக்கி அவர்களது உரிமைகளைப் பறித்துத் தம் நாட்டின் வலுவைக் குறைத்து அமெரிக்க வல்லரசியத்தின் கீழ் ஓர் எடுபிடியாக இருப்பதைவிட தன்னுரிமையுள்ள தேசங்களைக் கொண்ட வலிமை மிக்க ஒரு நாடாக விளங்க அது முடிவுசெய்யலாம். முன்பு உலக ஏழை நாடுகளின் காவலன் என்று தனக்கிருந்த புகழை மீண்டும் நிலைநாட்ட புதின் தலைமையிலான உருசியா விரும்பலாம். வல்லரசுகளின் நோக்கம் உலகிலுள்ள ஒடுக்கப்படும் தேசங்களுக்கு விடுதலை பெற்றுத்தர வேண்டும் என்பதாக இருக்க முடியாது. ஆனால் அவற்றுக்கு இடையிலான முரண்பாடுகள் ஈழம் போன்று தேச விடுதக்காகக் களமிறங்கியுள்ள மக்கள் எதிர்கொள்ளும் முட்டுக்கட்டைகளை அவர்கள் தாண்டிச்செல்ல ஓர் இடைவெளியை ஏற்படுத்தும் எனும் நம்பிக்கை நம் நெஞ்சினுள் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதற்கேற்பவே உருசியாவின் அண்மைக்கால உலகளாவிய நடவடிக்கைகளும் அமைந்துள்ளன.


(தொடரும்)

0 மறுமொழிகள்: