26.9.08

அணுவைத் துளைத்து......

அணு என்பதற்கு இணையான atom என்ற சொல்லே a = இல்லாதது(எதிர்மறை) tomos = துமிபடும்(பிரிவுடும்) தன்மை என்ற வேர்களைக் கொண்ட atomos என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது. அதனாலேயே பிரிபடும் தன்மையுடைய மூலக்கூறுக்கு Compound atom என்ற பெயர் வைத்த பெர்சீலியசு என்பவரது முயற்சியைப் பின்னுக்குத் தள்ளி Molecule என்ற சொல்லை வடித்த அவகட்ரோ என்பவர் பெயரை அன்றைய வேதியியலாளர்கள் ஏற்றுக்கொண்டனர். அவ்வாறு பிரிக்க முடியாதது என்று கருதப்பட்ட அணுவைப் பிளக்க முடியும் என்பதைக் கண்டறிந்தனர் பின்னாளில். அணுக்களின் நடுவாகிய கருவில் எதிர் மின்னணுக்களும் சுற்றிலும் நேர்மின்னணுக்களும் உள்ளன. இதில் எதிர்மின்னணுக்களின் எண்ணிக்கை நேர் மின்னணுக்களை விடக் கூடுதல் இருந்து அவை கதிர்வீச்சாக வெளிப்படும் தன்மை இருந்தால் அவற்றிலிருந்து ஆற்றலைப் பெறமுடியும். அவ்வாறுதான் யுரேனியம் U₂₃₈ என்ற ஐசோட்டோப்புகளை உடைத்து U₂₃₄ ஐசோடோப்புகள் உருவாகும் போது பெருமளவில் ஆற்றல் வெளிப்படுகிறது.

எந்தப் பொருளையும் பிரிப்பதற்கு வெப்பம் தேவைப்படுகிறது. விறகைச் சூடாக்கினால் அது எரியும் பொருட்களாக உடைகிறது. அந்த வெப்பத்தில் அவை உயிர்வளியுடன் சேர்கின்றன. அந்தச் சேர்க்கை நிகழ்முறையைத்தான் நாம் தீ என்கிறோம். அந்த வெப்பத்தில் கொஞ்சத்தை எடுத்துக் கொண்டு விறகு மேலும் மேலும் சிதைந்து தொடர்ந்து வெப்பத்தைத் தருகிறது. அவ்வாறு 234 எண்ணிக்கையிலான U₂₃₈ அணுக்களை உடைத்து 238 எண்ணிக்கையிலான U₂₃₄ அணுக்களை உருவாக்கினால் நிகரமாகக் கிடைக்கும் ஆற்றல்தான் அணு ஆற்றல். இது ஒரு மொட்டைக் கணக்கு.

உலகப் போர் முடிந்து கொண்டிருந்த நிலையில் 1945 பிப்ருவரியில் சோவியத் உருசியாவின் யால்டாவில் உருசியத் தலைவர் தாலின், அமெரிக்காவின் ரூசுவெல்ட்டு, இங்கிலாந்தின் சர்ச்சில் ஆகியோர் ஒன்றிய நாடுகளவையைப் பற்றிய உரையாடல்களில் ஈடுபட்டிருந்த போது தாங்கள் ஒரு புதிய ஆயுதத்தைக் கண்டுபிடித்திருப்பதாக ரூசுவெல்ட்டு கூறினாராம். அந்த ஆயுதத்தின் வலிமையையும் கொடுமையையும் உலகத்துக்கு, குறிப்பாகப் பிற வல்லரசுகளுக்குக் காட்டத்தான் 1945 ஆகத்து 7ஆம் நாள் நாகசாகி, இரோசிமா ஆகிய சப்பானிய நகரங்களில் அணுக்குண்டை வீசி 2,80,000 மனித உயிர்களை அமெரிக்கா அழித்துக் காட்டியது. அதன் கொடிய விளைவுகளை அந்தப் பகுதியில் வாழும் மக்கள் இன்றும் நுகர்ந்து வருகின்றனர்.

போரில் சப்பான் ஒவ்வொரு களமாகச் சரண்டைந்து வந்த நிலையில் தேவையற்ற இந்த அணுக்குண்டு வீச்சு கல் நெஞ்சம் படைத்த அமெரிக்கத் தலைவர்களின் ஒரு கள ஆய்வு நடவடிக்கைதான் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.

1949இல் சோவியத்து உருசியா அணுக்குண்டு வெடித்து ஆய்வு நடத்தியது. அதற்கு வேண்டிய தொழில்நுட்பம் சோவியத்துக்கு எங்கிருந்து கிடைத்தது என்று அமெரிக்க அரசு தேடியது. இறுதியில் அமெரிக்கர்களான ரோசன்பெர்க்கு இணையர் என்ற கணவன் - மனைவியரைப் பிடித்தனர்.

ரோசன்பெர்க்கு இணையர் அமெரிக்கப் பொதுமைக் கட்சியைச் சேர்ந்தவர்கள். 1933இல் ஏற்பட்ட பொருளியல் நெருக்கடியின் போதுதான் அமெரிக்காவில் பொதுமைக் கட்சி உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

அணுக்குண்டு வெடிப்பில் இரு கட்டங்கள் உள்ளன. ஒன்று உள்வெடிப்பு. அதன் மூலம் அணுக்களைப் பிளப்பதற்கு வேண்டிய ஆற்றல் வழங்கப்படுகிறது. அவ்வாறு பிளந்த ஐசோடோப்புகள் இணையும்போது உருவாகும் ஆற்றல் வெளிவெடிப்பை உண்டாக்குகிறது. இவற்றில் இந்த உள்வெடிப்புத் தொழில்நுட்பத்தைத் திருடி சோவியத் உருசியாவுக்கு விடுத்து வைக்க வேண்டிய பொறுப்பை திருமதி ரோசன்பெர்க்கு அமெரிக்க அணு ஆற்றல் துறையில் பணியாற்றிய தன் தம்பியின் மூலம் நிறைவேற்றினர். தான் நேரடியாக பங்கெடுக்கவில்லை. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது அமெரிக்கக் கூட்டமைப்புக் காவல்துறை. நயமன்றம் இணையரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. மின்சாரம் பாய்ச்சி அவர்களைக் கொன்றனர். உலகத் தலைவர்கள் பலரின் வேண்டுகோள்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை அமெரிக்க அரசு.

இந்த வழக்கில் அவர்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு, அவர்களது இந்த நடவடிக்கை உலக அமைதிக்கு ஊறு செய்வதாக இருந்தது; குறிப்பாக கொரியா, வியத்தாம், லாவோசு, கம்பூச்சியா போன்ற கிழக்காசிய நாடுகளில் போர்கள் நடைபெற்றது இவர்கள் உள்வெடிப்புத் தொழில்நுட்பத்தை சோவியத் உருசியாவுக்கு வழங்கியதால்தான் என்பதாகும். இதன் பொருள் வெளிப்படை. அணுக்குண்டை வைத்து அச்சுறுத்தி உலக மக்களைக் காலாகாலத்துக்கும் தங்கள் அடிமைகளாக வைத்திருக்கலாம் என்ற அமெரிக்கக் கனவை ரோசன்பர்க்கு இணையர் தகர்த்துவிட்டனர். அவர்களது புகழை உயர்த்திப்பிடிக்க வேண்டியது உலக மக்களின் கடன்.

குறிப்பு: இந்த வழக்கு பற்றிய விரிவான செய்திகளை The Case of The Implosion Conspiracy என்ற நூல் தருகிறது. ஓர் அரசும் உள்ளூர் மக்களும் எவ்வாறு தங்கள் பொறுப்புகளைப் பங்குபோட முடியும் என்பதை இந்த வழக்கில் கடைப்பிடிக்கப்பட்ட ஆங்கிலோ - சாக்சன் நயமுறையையும் நூல் விளக்குகிறது. ஊரர்கள்(Juror - Jury) எனப்படும் உள்ளூர் மக்களின் குழு குற்றவாளியா இல்லையா என்று தீர்ப்பளிக்கிறது. அரசின் நயவர் தண்டனையை முடிவு செய்கிறார்.

அணுக்குண்டு செய்வதற்கு வேண்டிய கதிர்வீச்சுத் தனிமத்தைப் பெறுவதற்கு அணு உலைகளில் வெளியேற்றப்படும் யுரேனியத்தைச் செறிவூட்டுகிறார்கள். இந்தச் செறிவூட்டலைச் செய்யாமல் தடுப்பதுதான் அல்லது கட்டுப்படுத்துவதுதான் உலக அணு ஆற்றல் முகவாண்மை(Iiteriational Atomic Eiergy Ageicy – IAEA)யின் பணி. அதில் உலகிலுள்ள அணு ஆற்றல் நாடுகள் என்னும் 35(45என்றும் ஒரு செய்தி கூறுகிறது) நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். அணு ஆற்றலுக்குத் தேவையான யுரேனியத்தை வழங்கும் நாடுகளிடமிருந்து பெறப்படும் யுரேனியத்திலிருந்து மின்னாற்றலைப் பெற்ற பின் அதைச் செறிவூட்டி அணு ஆயுதம் செய்துவிடாமல் தடுப்பதற்கான எண்ணற்ற பாதுகாப்புகளை அணு ஆயுதம் அல்லாத நாடுகளின் மீது திணிப்பதும் அதைக் கண்காணிப்பது என்ற பெயரில் அந்த நாடுகளின் உள்நடவடிக்கைகளில் தலையிடுவதும்தான் இந்த முகவாண்மையின் நடைமுறை. சான்று ஈராக்கு.

இந்தியா இதற்கு முன் இரண்டு முறை அணுக்குண்டு வெடித்து ஆய்வு செய்து தாங்களும் ஓர் அணு வல்லரசு என்று குடிமக்களிடம் மார்தட்டிக்கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் யுரேனியப் படிவுகள் மேகாலயத்தில் உள்ளன. ஆனால் உள்ளூர் மக்களின் எதிர்ப்புகளாலும் சூழியல் குறித்த தடுமாற்றங்களாலும் அதனைத் தோண்டி எடுக்கும் பணி தள்ளிப்போகிறது. ஆனாலும் அவற்றை எதிர்கொள்ளும் முயற்சிகள் நடைபெறுகின்றன என்கிறது ஒரு செய்தி(Reflections on the power mix, S.K.N.Nair, THE HINDU Business Line, 19 - 07 – 08).

நம் நாட்டில் ஏராளம் கிடைக்கும் தோரியம் எத்தனை ஆண்டுகளுக்கு வேண்டுமானாலும் நம் ஆற்றல் தேவைகளுக்குப் போதும் என்று எல்லோரும் ஒருமுகமாகக் கூறுகின்றனர். அத்துடன் யுரேனியம் உலைகளை விட தோரியம் உலைகள் பாதுகாப்பானவை என்றும் கூறுகின்றனர். ஆனால் அதைப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை முழுமைப்படுத்த இன்னும் 15 ஆண்டுகள் ஆகுமே என்கின்றனர் ஆட்சியாளர்கள். இப்போது திட்டமிடும் அணு ஆற்றல் திட்டங்கள் முழுமை பெற 25 ஆண்டுகள் ஆகுமே என்ற கேள்விக்கு விடை சொல்ல யாருமில்லை. அதே நேரத்தில் கல்ப்பாக்கத்தில் 500 மெ.வா. திறனுள்ள தோரியத்தை மூலப்பொருளாகக்கொண்ட அதிவிரைவு அணு ஈனுலை 2011இல் செயல்படும் என்று 25 – 07 – 08 தினமணி இதழ்ச் செய்தி (திருநெல்வேலி பக்.7) ஒன்று கூறுகிறது. ஆட்சியாளர்களின் மரபு என்னவென்றால் வெளிநாட்டுப் பண்டங்களை இறக்குமதி செய்து தரகு பார்ப்பதும் உள்நாட்டில் உள்ள வளங்கள் வெளியாருக்குத் தேவைப்பட்டால் அவர்களுடன் கூட்டுச்சேர்ந்து அவர்கள் காட்டும் இடங்களில் தோண்டி எடுத்து விற்றுத் தரகு பெறுவதும். அதனால் நம் நாட்டிலுள்ள யுரேனியத்தை வெளியே காட்டமாட்டார்கள் என்று உறுதியாகக் கூறலாம். அதுபோல் உள்நாட்டில் உருவாகும் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தவும் மாட்டார்கள் என்பது வரலாறு காட்டும் உண்மை. ″விடுதலை″ அடைந்த உடன் வெளிப்பட்ட எண்ணற்ற தொழில்நுட்பங்களை நசுக்கி எறிந்தது நேருவின் அரசு. தமிழகத்துச் சான்று கோ.து.நாயுடு. அதைத் தொடர்ந்து எரிநீர் இராமர், தியாகராசன் என்று எண்ணற்றவர்கள். (எரிநீர் இராமர் தன் கண்டுபிடிப்பைச் சொன்னதும் ஒரு நொடி கூடக் காலந்தாழ்த்தாமல் வரிந்துகட்டிக்கொண்டு எதிர்த்தவர்கள் மார்க்சியப் பொதுமைக் கட்சியினர். அவரது கண்டுபிடிப்பு உண்மையா போலியா என்பதைக் கண்டுபிடிக்கக் கூட நமக்கு வாய்ப்பளிக்கவில்லை எவரும்). அவ்வாறே பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி - வளர்ச்சித் துறை அறிவியலாளர் எத்தனையோ பேர் தாங்கள் அரும்பாடுபட்டுக் கண்டுபிடித்தவற்றைப் பயன்படுத்தாமல் இறக்குமதி செய்கின்றனர் என்று குமுறி இருக்கின்றனர். இறுதியாக அப்துல் கலாம் கண்டுபிடித்ததாகச் சொல்லப்படும் அக்கினி ஏவுகணையைப் பயன்படுத்த இருக்கும் போதே கார்கில் போரின் போது ஏவுகணைகளை இறக்குமதி செய்தனர். கேட்டதற்கு, அக்கினி ஏவுகணை தேவையான அளவு செய்வதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றனர்.

அப்போது போபர்சு குண்டுமிழியையும் வாங்கினர். இதே போபர்சு குண்டுமிழி எதற்கும் உதவாது என்று வரிந்துகட்டிக்கொண்டு இந்தியன் எக்சுபிரசில் பா.ச.க.வின் அருண்சோரி கட்டுரைகள் எழுதித்தான் ராசீவ்காந்தியைப் பதவியிறக்கினர். அவர்களே இப்போது அதற்கு நற்சான்றும் வழங்கினர். கலாம் முணுமுணுக்காமலிருக்க அவருக்கு குடியரசுத் தலைவர் பதவியும் வழங்கினர். இன்று அவரே இந்த அணு ஆற்றல் வரைவு ஒப்பந்தத்துக்குச் சான்று வழங்கிவிட்டார் அதைப் பிடித்துக் கொண்டு சமாசவாதிக் கட்சியின் அமர்சிங் நாட்டுப் பற்று நாடகம் ஆட முடிகிறது. நாட்டு நலனுக்கு அணுமின் ஆற்றல்தான் வேண்டுமென்று. அதைப் பற்றிக்கொண்டு சமாசவாதிக் கட்சியின் அமர்சிங் நாட்டுப்பற்று நாடகம் ஆட முடிகிறது. தெற்கே தோன்றிய இந்த ″அறிவியல் பகலவனு″க்கு, நம் நாட்டில் ஏராளமாகக் கிடைக்கும் கதிர் ஆற்றல் கண்ணில் படவேயில்லை. காட்டாமணக்கை வளர்க்கச் சொன்னவர்தானே!

இந்த நிலையில் இவ்வளவு எதிர்ப்புகள், ஐயப்பாடுகளுக்கிடையில் இந்த ஒப்பந்தத்தை நீறைவேற்ற மன்மோகன் சிங்கும் சோனியா குடும்பத்தாரும் ஏன் இப்படிப் பறக்கிறார்கள் (Nuclear deal first, government later: Rahul, THE HINDU, 16 – 07 – 08,p.16)? இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் ஏன் இவ்வளவு குறியாகவும் வெறியாகவும் இருக்கிறார்கள்?

மன்மோகன் சிங் முன்னாள் உலக வங்கி அதிகாரி. உலக வங்கியும் ஒன்றிய நாடுகளவையும் நடப்பில் அமெரிக்காவின் நிறுவனங்கள். அந்த வகையில் மன்மோகன்சிங்கு அமெரிக்காவின் ஊழியர்படையில் ஒருவர். அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுக்கும் இந்தியாவை மறைமுகமாக அந்த வளையத்துக்குள் கொண்டுவர உதவும் ஒரு ஒப்பந்த முன்வடிவை உருவாக்கி அதற்கு உலக அணு ஆற்றல் முகவாண்மையின் ஒப்புதலைப் பெற்றதன் மூலம் அவர் தன் முன்னாள் மூதலாளிக்கு மிக நாணயமாகவே பணியாற்றி உள்ளார்.

அப்படியானால் அவர் எது சொன்னாலும் சோனியா அம்மையார் கேட்டுவிடுவார் என்பதா?

இன்னொரு கோணத்தில் இதை நாம் பார்க்க வேண்டும்.

ஒருவரை வழிக்குக் கொண்டுவர வேண்டுமென்றால் அதற்கு நான்கு உத்திகளைப் பரிந்துரைத்துள்ளனர் நம் பண்டைப் பெரியவர்கள்.

முதலாவது சாமம். அதாவது, பேச்சில் மயங்கவைத்து மசியவைத்தல். அல்லது மந்திரம் முதலியவற்றைப் பயன்படுத்தல். சந்திரசாமி, தீரேந்திர பிரம்மாச்சாரி போன்றவர்கள் இப்படிப் பயன்பட்டிருப்பார்களோ? இப்படிப்பட்ட ″சாமி″கள் அரசியல் களத்தில் இப்படியும் பயன்படுகிறார்களா என்பது ஒரு சுவையான ஆய்வாக இருக்கும். கணியர்களாகிய சோதிடர்களையும் பயன்படுத்தலாம்.

இரண்டாவது பேதம். அதாவது, எதிர் தரப்பினரின் அணியில் பிளவை ஏற்படுத்தல், அவர்களது நண்பர்களிடமிருந்து அவர்களைப் பிரித்தல். அதன் அடுத்த கட்டமாக அவ்வாறு பிரிந்து சென்ற தங்கள் முன்னாள் கூட்டாளிகள் மீது வன்மம் கொண்டு தாங்கள் விரும்பாத காரியத்தைக் கூடச் செய்ய வைப்பது.

மூன்றாவது தானம். பணம், பொருள், பதவி, முதலானவற்றைக் காட்டி எதிர் தரப்பினரை விலைக்கு வாங்கலாம். ஏன் கொள்கை அடிப்படையில் கூட அவாவை ஊட்டி வசமாக்கலாம்.

இவை எதற்கும் புள்ளி மசியவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது நான்காவது தண்டம். ஆளையே தீர்த்துக்கட்டிவிடலாம். முதலில் அச்சுறுத்திவிட்டு அப்போதும் காரியம் நடக்கவில்லை என்றால் இறுதித் தீர்வை நாடலாம். மிரட்டல் என்பது பாராளுமன்ற மக்களாட்சியில் தவிர்க்க முடியாத ஊழலை அம்பலப்படுத்திவிடுவோம் என்பதாகவும் இருக்கலாம். இராசீவ் காந்தியின் போபர்சு ஊழல் வெளிப்பாடு இத்தகையதுதான்.

இந்த நான்கில் ஒன்றோ பலவோ நடந்திருக்கலாமோ?

சோனியா அம்மையார் குடும்பத்தில் நான்காவது உத்தி இரண்டு முறையாவது கையாளப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் அரண்மனை ஆவலாதிகளின்(ஆவல்களின்) பங்களிப்பும் இருந்திருக்காது என்பதைத்தான் எம்மால் நம்ப முடியவில்லை.

இது பற்றிய சுருக்கமான சில செய்திகளை டெக்கான் கிறாணிக்கிள் சென்னைப் பதிப்பு 15 – 07 – 08 இதழில் பக்கம் 9இல் The Secret History of the American Empire : The truth about how economic hit men, jackals and how to change the world என்ற பெர்க்கின்சு என்பார் எழுதியுள்ள நூலின் மதிப்புரையிலிருந்து அறிந்துகொள்ளலாம். இந்த நூலின் நோக்கமே உலகை மிரட்டுவதுதான். கிடைத்தால் முன்னாள்களில் அமெரிக்க உளவு நிறுவனமாகிய நடு உளவு முகவாண்மை(சி.ஐ.ஏ.) ஒவ்வோர் ஆண்டும் வெளியிட்ட தங்கள் செயல்பாடுகள் பற்றிய மிரட்டல் அறிக்கைகளைப் படித்துப் பாருங்கள்.

இது காலங்காலமாக அரசியல் களத்திலும் மக்களின் வாழ்க்கையிலும் நாள்தோறும் நடப்பதுதான். இன்று நம் வாழ்நாளில் நடக்கும் விளையாட்டு இது. உலக மக்கள், குறிப்பாக வல்லரசு நாடுகளில் சீனத்தையும் வல்லரசு அல்லாத நாடுகளையும் சேர்ந்த மேல்தட்டினர் தவிர்த்த மக்கள் இதற்கு எப்படித் தீர்வு காணப்போகிறார்கள் என்பது வரலாறு நம் முன் வைத்துள்ள கேள்வி.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக பொதுமைக் கட்சிகள், குறிப்பாக மார்க்சியப் பொதுமைக் கட்சி அமெரிக்காவுடனான அணு ஆற்றல் ஒப்பந்தத்தை எதிர்த்துவந்துள்ளது. ஆட்சிக்கு வெளியிலிருந்து அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று மிரட்டிவந்துள்ளது. இறுதியில் இரண்டு நாள் கெடு, மூன்று நாள் கெடு என்று கூறியது. இதற்குள் ஆளும் கட்சி வெளியிலுள்ள சமாசவாதிக் கட்சியுடன் பகரம் பேசி இணக்கம் கண்டபின் பொதுமைக் கட்சி தன் ஆதரவைப் பின்வாங்கிக்கொண்டது. உண்மை என்னவென்றால் அமைச்சர்களுக்கு ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போட அதிகாரம் இல்லை. நம் நாடு வேறெந்த நாட்டுடனும் அல்லது நிறுவனத்துடனும் செய்து கொள்ளும் எந்த ஒப்பந்ததைக் குறித்தும் பாராளுமன்றத்துக்குக் கூட எந்த அதிகாரமும் கிடையாது. அரசுச் செயலர்களுக்குத்தான் அந்த அதிகாரம். அப்படியானால் உண்மையில் நடைபெற்றிருப்பது என்ன? பொதுமைக் கட்சிகள் ஆளும் கூட்டணியிலிருந்து விலகி அந்த இடத்தில் சமாசவாதிக் கட்சியினரும் இன்னும் சில பொறுக்குக் கட்சிகளும் வந்து சேர்ந்ததுதான்.

அணுவிசை ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை அணு வல்லரசுகள் இந்தியா ஒரு அணு வல்லரசாக வளர்வதை விரும்பவில்லை. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா தொடர்ந்து மறுத்துவந்திருக்கிறது. ஆனால் இந்த ஒப்பந்தம் நம் நாட்டிலுள்ள எந்த அணு ஆற்றல் களத்தில் வேண்டுமானாலும் உலக அணு ஆற்றல் முகவாண்மை தலையிட மறைமுகமாக வழி செய்கிறது. அத்துடன் நிலையான அணு எரிபொருள் வழங்கலுக்கு ஒப்பந்தத்தில் வழி செய்யப்படவில்லை. வழங்கும் நாடு அதை நிறுத்திவிட்டால் மாற்றுவழி எதுவும் திட்டவட்டமாகக் கூறப்படாத நிலையில் நம் அணு ஆற்றல் திட்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும். தாராப்பூர் திட்டத்தில் அந்த நிலையை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இந்த ஒப்பந்தம் என்றும் நிலையானது, என்றும் மாற்றத்தக்கதல்ல என்பவை மிக விந்தனையான கட்டுப்பாடுகள். யுரேனியத்தின் விலை கூட நிலையாகவோ மலிவாகவோ இல்லை. கடந்த சில ஆண்டுகளில் அதன் விலை 6 மடங்கு ஏறியிருக்கிறது(பார்க்க Is the nuclear deal really in the national interest?, Vikram Sood, The Deccan Chronicle Chennai, 16–07–08, p.9). ஆனால் விலையைப் பற்றிய எந்தவொரு குறிப்பும் வரைவு ஒப்பந்தத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உருவாகும் யுரேனியக் கழிவை உருசியா தன் நாட்டுக்கு எடுத்துச் சென்றுவிடும் என்று தெரிகிறது. அதே வேளையில் நம் நாட்டில் இந்தக் கழிவைச் செறிவூட்டி மீண்டும் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை நாம் உருவாக்கிள்ளோம். இந்த ஒப்பந்தம் இது குறித்து என்ன கூறுகிறது என்பதும் தெரியவில்லை. அவ்வாறு கழிவுகள் எடுத்துச் செல்லப்படுமானால் அது நமக்குப் பெரும் இழப்பில்லையா?

இந்த ஒப்பந்தத்துக்குப் பரிந்து பேசுவோர் அதில் இருப்பனவாகக் கூறும் நற்கூறுகள் எதனையும் ஒப்பந்தம் வெளிப்படையாகக் கூறவில்லை. அதன் முன்னுரையிலேயே உள்ளன. நாளை இது பற்றி கருத்து வேற்றுமைகள் வந்தால் அப்போது ஆட்சியில் இருப்போர் இவர்கள் மீது பழியைப் போட்டுவிட்டுப் பேசாமல் இருக்கலாம். அல்லது அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போகலாம்.

ஆனால் இதுநாள் வரை அந்த வரைவு ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகளை, இந்தியாவை ஓர் அணு ஆயுத நாடு என்பதை அந்த ஒப்பந்தம் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை என்பதை, அந்த ஒப்பந்தம் என்றுமே மாற்றத்தக்கது அல்ல என்பதை, உள்நாட்டு மூலப்பொருட்களைக் கொண்டு அணு ஆற்றல் எடுத்தாலும் தலையீடு இருக்காது என்பது குறித்த தெளிவு ஒப்பந்தத்தில் இல்லை என்பதை என்று எத்தனையோ குறைபாடுகள் இருந்தும் அவற்றில் எதனைக் குறித்தும் குறிப்பிடாமல் அமெரிக்காவை முதல் நிலைப்படுத்தியே ″தோழர்கள்″ முழங்குவதற்கான விளக்கம் என்ன?

சமாசவாதிக் கட்சியின் அமர்சிங் அமெரிக்காவுக்குச் சென்று அவர்களது அறிவுரையுடன் வேறு வசதிகளையும் பெற்றுக்கொண்டு திரும்பிவரும் வரை மன்மோகன்சிங்குக்கு ஒத்துழைப்புத் தந்துள்ளனர் பொதுமைக் கட்சியினர்.

இந்திய மார்க்சியப் பொதுமைக் கட்சியினர் இந்தியாவை விட சீனத்தை அதிகமாக நேசிப்பவர்கள். எனவே அவர்களது செயல்கள் சீனத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவனவாகவே இருக்கும். ஆனால் இதெல்லாம் வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஓர் ஆளும் கூட்டணி மாற்றத்தை அணு ஆற்றல் ஒப்பந்த எதிர்ப்பு என்பது போலக் காட்டிவிட்டனர். சீனம் உலகிலுள்ள வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்காவோடுதான் மிக நெருக்கமாக இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த செய்தி. இதிலிருந்து தோழர்களின் உண்மையான உருவத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.

இன்று உலக வல்லரசுப் போட்டியில் முன்னணியில் நிற்பது அமெரிக்கா. அதற்கு மிக நெருக்கமான போட்டியாளராக இருந்த உருசியாவின் அணு ஆற்றலை, அமெரிக்க ஒற்றர்களாகச் செயற்பட்ட கோர்ப்பசேவும் எல்த்சினும் அணு ஆயுதங்களை அழித்து நிலை குலையச் செய்துள்ளனர். உருசியா தன்னை வலுப்படுத்திக்கொள்வதற்காக சீனத்தையும் இந்தியாவையும் நாடியது. ஆனால் சீனம் அதை விரும்பவில்லை. தானே ஆசியாவின் ஒரே வல்லரசாக வர வேண்டும் என்று பார்க்கிறது. அதன் நோக்கம் இந்தியா ஓர் ஆணு வல்லரசாக வளர்ந்து விடக் கூடாது என்பது. அதன் திட்டத்தை நிறைவேற்ற தோழர்கள் திட்டமிட்டு நிறைவேற்றிவிட்டார்கள்.

இந்தியா அமெரிக்க அணு ஒப்பந்தத்தில் புசுதான் அதிக நாட்டம் காட்டுகிறார். அவரது ஆட்சி முடிந்தபின் அது ஏற்கப்படுமா என்பது உறுதியில்லை என்று உறுதியாகக் கூற முடியாது என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால் புதிய குடியரசுத் தலைவருக்குப் போட்டியிடும் ஒபாமாவும் இந்த ஒப்பந்தத்தில் ஆர்வம் காட்டியுளார்.

அமெரிக்க அமைச்சர் வில்லியம் பர்ன்சு புசு ஆட்சிக் காலத்திலேயே இந்த ஒப்பந்தத்தை முடித்துவிட முனைந்து செயல்படுவதாகக் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்றைய அணு உலைகள் அவற்றைவிட மிகப் பாதுகாப்பானவை என்று கூறுகிறார்கள். ஆனால் தவறுகளும் தற்செயல் நிகழ்வுகளும் எங்கும் தவிர்க்க முடியாதவை. அப்படி ஏதாவது நேர்ந்தால் இந்தக் குறிப்பிட்ட தொழில்நுட்பத்தின் தீய விளைவுகளின் தன்மைகளே அளவுகோல்களாக வேண்டும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

கன்னெய்யத்தின் விலை தொடர்ந்து ஏறிக் கொண்டிருக்கிறதாம். மாற்று ஆற்றல்மூலமாக அணுவிசையைக் கொள்ளலாமாம். ஆனால் அணுவிசைக்கு இப்போது மூலப்பொருளாக இருக்கும் யுரேனியத்தின் விலை ஒன்றும் நிலையாகவோ குறைவாகவோ இல்லை என்பதுதான் உண்மை.

அணு ஆற்றலுக்காகக் பரிந்து பேசுவோரின் கூற்று என்னவென்றால் நிலக்கரியிலிருந்து மின்னாற்றல் எடுக்கும் போது உலகம் மாசுபடுகிறதாம். அணு ஆற்றல் மாசில்லாததாம். செர்னோபிளும் 3 மைல் தீவுகளும் பேய்க் கதைகளைக் கூறும் காலத்தில் எப்படி எல்லாம் துணிந்து பொய் பேசுகிறார்கள் பாருங்கள்..

இதற்கொரு ″பசுமை″ இயக்கத்தை வல்லரசுகள் பெருமளவில் நடத்துகின்றன. இந்த ஓநாய்களிடமிருந்து உலகை யார் காப்பது?

(இக்கட்டுரை தமிழினி ஆகத்து-2008 இதழில் வெளிவந்துள்ளது.)

0 மறுமொழிகள்: