26.9.08

மின்சாரப் பொய்யர்கள்

எலக்கட்டறி விளக்க நம்பி எலையப் போடலாமா?
இந்தத் தண்ணிக் குழாய் நம்பி தலையில் எண்ணெய் வைக்கலாமா?

இது ஏறக்குறைய 60 அல்லது 65 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஒரு திரைப்படப் பாடல். ஆனால் இன்றைய நிலைமை என்றுமே இருந்ததில்லை. மின்சாரத்தைப் பொறுத்தவரை எங்கே எப்பொழுது மின்சாரம் நின்றுபோகும் எப்போது திரும்பிவரும் என்பது யாருக்கும் தெரியாது. மக்களைவிட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருப்போர் நாளில் பெரும்பகுதியும் மின்சாரம் இல்லாமல் நாள்தோறும் தங்கள் தொழில் நசிந்து வருவதைப் பார்த்து குருதிக் கண்ணீர் வடிக்க வைத்திருக்கிறது இன்றைய நிலை.

தமிழகத்தில் ஒரேயொருவரைத் தவிர வேறு யாரையும் சிக்குன்குனியா எனப்படும் மொழி முறித்தான் நோய் தாக்கவில்லை என்று நோயில் நொந்து கிடந்த மக்களைப் பார்த்துக் கொழுப்பேறி தமிழக மக்கள் நலவாழ்வு அமைச்சரும் தலைமைச் செயலரும் கூறிய போதும் தட்டிக் கேட்கவில்லை தமிழக மக்கள்.

பேருந்துக் கட்டணத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ உயர்த்தவில்லை என்று கூசாமல் பொய் சொன்னபோதும் வாய்பேசாமல் பொறுத்துக் கொண்டிருக்கின்றனர்.

நாள்தோறும் பல மணிநேரம் மின்வெட்டால் ஏறக்குறைய முக்கால் ஆண்டுக்கும் மேலாக அல்லல்பட்டுவரும் மக்களைப் பார்த்து மின்வெட்டே இல்லை என்று அமைச்சர் ஆர்க்காட்டு வீராசாமி திமிருடன் பொய் பேசிய போதும் மக்கள் ஆத்திரம் கொள்ளவில்லை. ஆனால் சிறு, நடுத்தர தொழில்கள் நிறைந்த திருப்பூர், கோவைத் தொழில் முனைவோர் போராட்டங்களைத் தொடங்கிய பின்னர்தான் அமைச்சர் கீழிறங்கி வந்து மின்வெட்டு இருக்கிறது என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். இருப்பினும் இடையிடையே பல பொய்களைக் கூறினார். காற்றோட்டம் இல்லை அதனால் காற்றாலைகள் செயற்படவில்லை என்றார். அந்த நேரத்தில் காற்றாலைகள் இயங்கி கொண்டுதான் இருந்தன. இப்போதும் அதையேதான் சொல்கிறார். இப்போதும் காற்று நன்றாக வீசுகிறது, காற்றாலைகள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படியானால் இந்த அமைச்சர் ஏன் வேண்டுமென்றே பொய் பேசுகிறார். அவருக்கு என்ன, பொய்பேசும் மனநோயா?

இதன் பின்னணியில் உள்ள வரலாற்றை நாம் பார்ப்போம். நெஞ்சை நடுங்க வைக்கும் மின்வெட்டைத் தமிழகம் கண்டது 1970களின் முற்பகுதியில். அப்போது மின்துறை அமைச்சராயிருந்தவர் ஓ.பி.இராமன். அவர்தான் பின்னாளில் கருணாநிதியின் மகனும் மதுரையின் ″ஆளுநரு″மான மு.க.அழகிரியின் மூத்த சகலர். கருணாநிதிக்கும் அமைச்சர் குடும்பத்துக்குமான நெருக்கமான உறவே இந்தத் திருமணத்தில் முடிந்தது. எனவே அவர் செயல்பாடுகளைச் கருணாநிதியின் செயல்பாடுகளாகவே கொள்ள வேண்டும். அவர் ஓர்அறிக்கை விட்டார்.

சில ஆண்டுகளுக்கு முன் அணைகளில் இருந்த நீர்த்தேக்க அளவே அந்தக் குறிப்பிட்ட ஆண்டில் இருப்பதாகவும், அந்த முன் ஆண்டில் கோடைகாலத்தில் 25% மின்வெட்டு நேர்ந்தது என்றும் எனவே தான் முந்தியே அந்த அளவு மின்வெட்டை நடைமுறைப்படுத்தப் போவதாகவும், கூறினார். இது செயற்கையாகத் தோன்றியது. இந்த இடைவேளையில் மழைபெய்து நீர்த் தேக்க நிலை மேம்படலாம் அல்லவா? அப்படியானால் இதன் பின்னணியில் ஏதோ இருக்கிறது. அதாவது தொழிற்சாலைகளுக்கு மின்னாற்றல் ஒதுக்கீடு செய்வதில் காசு பார்க்கத் திட்டமிடுகின்றனர் என்று எமக்குத் தோன்றியது, ஏனென்றால் அப்போது இந்த மின்வெட்டு மும்முனைப் பயன்பாட்டுக்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் அன்றிலிருந்து தமிழகத்தில் எந்த ஆட்சி வந்தாலும் மின்வெட்டு என்றும் தீராத ஒரு நோயாகி விட்டது. 2008 - 2009 ஆம் ஆண்டுக்கான தமிழக வ.செ.திட்டத்தில் உரூ9752 கோடியைப் பற்றாக்குறையாக வைத்துவிட்டு உரூ 84 கோடி மீதம் என்று பொய் சொன்னவர்கள் அல்லவா? (தமிழினி ஏப்பிரல் 2008 ″பொய்யிலே பிறந்து....″ பக்.8 பார்க்க). அவர்கள் காலம் காலமாகச் சொன்ன பொய்களைப் பார்ப்போம்.

1998 மார்ச்சு மாதம் திடீரென்று மாலை 6.00 மணிமுதல் 9.00 வரை மும்முனை மின்சாரம் கிடையாது என்றனர். இதற்கு அவர்கள் சொன்ன காரணம் நிறைய மழை பெய்து நிலத்தடி நீர் உயர்ந்து விட்டதால் இதுவரை ஓடாத மின் எம்பிகள்(பம்புகள்) ஓடத் தொடங்கி விட்டனவாம்! ஆனால் அந்த ஆண்டில் அந்த நேரத்தில் தமிழ் நாட்டிலுள்ள பெரும்பாலான அணைகளிலும் குளங்களிலும் தாரளமாக நீர் இருந்தது. அதே ஆண்டு கத்திரி வெய்யிலுக்கு நடுவில் ஒன்றிரண்டு நாட்கள் மழை பெய்தது. அதைக் காட்டி ஏரி குளமெல்லாம் நிரம்பிவிட்டன, எனவே மின்வெட்டு அகன்றுவிடும் என்று அமைச்சர் கூறினார். ஆனால் மின்வெட்டு தொடர்ந்தது. அந்தப் பொய்க்கும் இந்தப் பொய்க்கும் என்ன பொருத்தம் பாருங்கள். ஆனால் சிறுகச் சிறுக சிறு வாணிக நிலையங்கள் கையடக்க மின்னாக்கிகளை வாங்கி விட்டன. இதில் பல நூறு கோடி உரூபாய்கள் மின்னாக்கி நிறுவனங்களுக்குத் வாணிகம் நடந்துவிட்டது. இந்த மூன்று மணி நேரத் தட்டுப்பாட்டை அறிவித்த போது தொழிற்சாலைகளில் நிறுவுவதற்கு பெரிய மின்னாக்கிகளை வாங்கினால் 30% மானியம் வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்தது. இது பெரும் மின்னாக்கிகளை உருவாக்கும் தொழில் நிறுவனங்களுக்குப் பல நூறு கோடி உரூபாய்கள் விற்பனைக்கு வழிவகுத்திருக்கும்.

கடற்கரையிலிருந்து 1½ மைல்களுக்குள் வேளாண்மை மின் எம்பிகளுக்கு இணைப்பு கொடுக்கக் கூடாது என்று ஒரு தடை இருந்தது. நிலத்தடி நீராகக் கடல்நீர் உட்புகுந்து விடும் என்பதற்காக இந்தத் தடை. ஆனால் 1978, 1979ஆம் ஆண்டுகளில் நல்ல மழை பெய்ததைக் காரணமாகக் கூறி தடைசெய்யப்பட்ட அந்த எல்லைக்குள் இருந்த 50 ஆயிரம் வேளாண் எம்பிகளுக்கு இணைப்பு வழங்கினார் பண்டுருட்டி இராமச்சந்திரன். மின்வாரிய நண்பர்களைக் கேட்ட போது பல ஆயிரம் மின் மாற்றிகளும் மிகப் பெரும் அளவில் மின் கடத்திகளும்(மின் கம்பிகள்) வாங்க வேண்டியிருக்கும் என்றனர். ஆக, பக்க வருவாயைக் காரணமாக வைத்துதான் தடைகளும் நீக்கல்களும் செயல்படுகின்றன என்பது தெளிவு. இதில் நாம் அவர்கள் தரும் புள்ளிக் கணக்குகளை வைத்து எப்படி முடிவு எடுக்க முடியும்?

மின் வாரியத்துக்கு இழப்பு இலவய மின்சாரத்தால் என்றார்கள். ஆனால் ஒவ்வோர் ஆண்டு வ.செ.திட்டத்திலும் இலவய மின்சாரத்துக்கான தொகையை மின்வாரியத்துக்கு அரசு வழங்கிவிடுகிறது.

நடுவரசு தமிழ்நாட்டு எல்லைக்குள் உருவாக்கும் மின் ஆற்றலில் 15 நூற்றுமேனியைத் தமிழகத்துக்குத் தரவேண்டுமாம். ஆனால் 5 நூற்றுமேனியைத் தான் தருகிறது அப்போது அமைச்சர்கள் குறை சொன்னார்கள். இப்போதும் நிலையில் பெரும் மாறுபாடு இல்லை.

இங்கு நிலையான மின்வெட்டு இருந்த காலம் முழுவதும் கேரளத்துக்கு மின்சாரம் விலைக்குக் கொடுத்தார்கள். அன்னை செயலலிதாவுக்கு விருதெல்லாம் வழங்கினர் கேரளத்தார். தமிழினத் தலைவருக்கும் அவரது நிழலான ஆர்க்காட்டாருக்கும் எதை வழங்குகிறார்களோ!

பழைய பொய்களைப் பற்றிய தரவுகள் நிறைய இருந்தாலும் இத்துடன் முடித்துக்கொண்டு புதிய பொய்களினுள் நுழைவோம்.

கடந்த ஏழெட்டு மாதங்களாகத் தமிழகத்தில் ஒரு மணிநேரம் முதல் மூன்று மணி நேரம் வரை இரவு பகல் என்று பாராமல் எப்போது வேண்டுமானாலும் மின்சாரம் நின்றுபோகும். அமெரிக்காவின் நியூயார்க்கில் 1970களில் ஒருமுறை ஒரே ஓர் இரவு மின்சாரம் நின்றுவிட்டது. அடுத்த பத்தாம் மாதம் அங்குள்ள குழந்தைப் பிறப்பு முன் எப்போதையும் விட மிகுதியாக இருந்ததாம். எண்ணற்ற வன்புணர்ச்சிகளாம். நம் ″பண்பாட்டின்″ மேன்மைக்குச் சான்று கூறுவதற்காகவே இத்தகைய ஒரு மின்வெட்டு உத்தியை நம் ″திராவிட″ ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்கிறார்களோ என்னவோ! அல்லது நம் மரபுப்படி இதை வெளிவராமல் அமுக்கி விடுகிறோமோ என்னவோ! ஆர்க்காட்டார் எப்போதுமே மின்வெட்டு இருப்பதாக ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த மின்வெட்டு மிக வஞ்சகமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அரசு நினைத்திருந்தால் திட்டவட்டமான நேரங்களைக் குறிப்பிட்டு அதைக் கடைப்பிடித்திருக்கலாம். மின்சாரத்தை நம்பியிருக்கும் சிறு தொழில்கள் தங்கள் செயற்பாட்டை அதற்கேற்ப மாற்றியமைத்திருக்கும். இதனால் முற்றிலும் பாதிக்கப்பட்ட சிறுதொழில் துறையினரில் திருப்பூரிலும் கோவையிலும் செறிந்திருக்கும் தொழில் முனைவோர்கள் குரல் கொடுக்கத் தொடங்கிய பின்னர்தான் மின்வெட்டு இருப்பதை அமைச்சர் ஒப்புக் கொண்டு சென்னையில் நாளைக்கு ஒரு மணி நேரமும் பிற நகரங்களில் இரண்டு மணி நேரமும் 21-07- 2008 முதல் மின்வெட்டு செயற்படும் என்று அறிவித்தார். ஆனால் இன்றுவரை அந்த நடைமுறை ஒரே சீராகக் கடைப்பிடிக்கவில்லை. பொய்கள் குவிந்து கொண்டேயிருக்கின்றன.

இருந்தாலும் அவர்கள் இப்போது தந்திருக்கும் செய்திகளைப் பார்ப்போம்.

தமிழகத்தின் மொத்த மின் தேவை 9500 மெ.வா.


கிடைப்பு - 8500 மெ.வா.

பற்றாக்குறை - 1000 மெ.வா.

மின்சாரம் வரும் வகை:

காற்றுவிசை கட்டமைப்பு - 1260 கிடைப்பு - 1200 (மெ.வா.)

எரிவளி கட்டமைப்பு - 424 கிடைப்பு - 270 (மெ.வா.)

அனல் விசை கட்டமைப்பு - 2970 கிடைப்பு - 2300 (மெ.வா.)

நீர் விசை கட்டமைப்பு - 2180 கிடைப்பு - 900 (மெ.வா.)

மொத்தம் கட்டமைப்பு - 6834 கிடைப்பு -4670 (மெ.வா.)

(நியூ இந்தியன் எக்சுபிரசு 19-07-2008)

இந்தக் கணிப்பில் நடுவரசு வழங்கும் மின்சாரம் பற்றிய செய்தி இல்லை. நடுத் தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டியதில் 60 நூற்றுமேனிதான் கிடைக்கிறது என்று மட்டும் சொல்லப்பட்டிருக்கிறது. மொத்தம் கிடைப்பு 8500 என்றால் எஞ்சிய 8500 - 4670 = 3830 மெ.வா.வையும் நடுவரசுக் கணக்கில் எடுத்துக் கொள்ளலாமா? தமக்கு வர வேண்டியதில் 60 நூற்றுமேனிதான் நடுவரசு ஒதுக்கீட்டில் கிடைக்கிறது என்றால் மொத்த ஒதுக்கீடு 3830 ÷0.6 = 6383 மி.வா.
அப்படித்தானே! அப்படியானால் ஏறக்குறைய பாதிக்குப் பாதி நடுவரசிலிருந்து பெறுகிறோம் என்று கொள்ளலாமா? அப்படியானால் எஞ்சியிருக்கும் மாநிலத்தின் பொறுப்பிலிருக்கும் மின்னாக்கு வகைதுறைகளைக் கூட நடுவரசில் கொடுத்துவிட்டு வழங்கலை மட்டும் மாநிலம் வைத்துக் கொள்ளலாமா? அதில்தான் சிக்கல் என்கிறீர்களா? ஊருக்கு ஊர் அரசியல் கட்சியினரும் மி.வா. ஊழியர்களுக்கு ″வேண்டியவர்களும்″ கொக்கி போட்டு மின்சாரத்தைத் திருடுவதுதான் 30% மின் இழப்புக்கான காரணம் என்பது உங்களுக்குத் தெரியும். மின்வாரியங்கள் உருவாகும் முன்பு குழுமங்களில் 5%க்கு மேல் இழப்பு வந்தால் அடிநிலைப் பொறியாளர்களைப் பிய்த்து எடுத்துவிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? மின்வழங்கலைத் ″தனியாரி″டம் அதாவது அயல்நாட்டவரிடம் கொடுத்துவிடலாமென்றால் தொழில் சங்கத்தினர் விட மாட்டார்களே!

இன்றைய மின் பற்றாக்குறைக்கு ஒரு எளிய தீர்வை இந்தியத் தொழில் குழுவின் தமிழ்நாட்டுத் தலைவர் மாணிக்கம் இராமசாமி முன்மொழிந்துள்ளார். மின்வெட்டுக் காலங்களில் பயன்படவென்று தொழில் நிறுவனங்கள் வாங்கி நிறுவியிருக்கும் பெரும் மின்னாக்கிகளை ஓடவிட்டால் 3000 மெ.வா. மின்சாரம் பெற முடியும். இந்த மின்னாக்கிகளில் உருவாக்கும் செலவு வாரியத்தின் மின்கட்டணத்தை விட சராசரியாக நாளொன்றுக்கு உரூ 6 கோடி ஆகும். பருவ மழை வருவதற்குள்ள 150(5 மாதங்கள்) நாட்களுக்கும் 900 கோடி செலவில் சிக்கலை எதிர் கொள்ளலாம் என்பது அவரது கருத்துரை. மாராட்டிய மாநிலம் புனேயில் இந்தத் திட்டம் சிறப்பாகச் செயல்படுகிறது என்கிறார். பார்க்க, டைம்சு ஆப் இந்தியா, சென்னை 19-07-2008 பக் 4.

கருத்துரைகளுக்குப் பஞ்சமில்லை. சீரான வெப்பம் நிலவும் தமிழகத்தில்தான் ஏராளமான அளமிய(அலுமினியம்)மும் கிடைக்கிறது. மனம் வைத்திருந்தால் 1970களில் தொடங்கியிருந்தால் இதற்குள் நாம் நம் மின் தேவைகள் அனைத்தையும் அதைக் கொண்டே நிறைவேற்றியிருக்கலாம். அந்தத் தொழில் நுட்பமும் பாய்ச்சல் நிலை கொண்டிருக்கும். மின் ஆற்றலைப் பெறுவதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இவற்றில் நாட்டமே இல்லை. இவர்களின் குறிப்பாகத் தமிழக ஆட்சியாளர்களின் நோக்கம் பல் முனைப்பட்டது. அதைத் தெரிந்து கொள்ள இன்றைய மின்வெட்டுகளின் தீய விளைவுகளைப் பார்ப்போம்.

தமிழக மக்கள் மின்சார இணைப்பு இருந்தும் இருட்டில் வாழப் பழகி வருகின்றனர். நாளடைவில் மின்சாரம் இன்றியே கூட வாழ்ந்துவிடலாம்.
வசதி உள்ளவர்கள் மின்வாங்கிகளை(இன்வெர்ட்டர்களை) வாங்கி வைத்து இருட்டைத் தவிர்க்கிறார்கள். இன்னும் சில நாட்களில் இயன்றவர்கள் அனைவரும் இன்வெர்ட்டர்கள் வாங்கிவிடுவார்கள். மின் வாங்கி செய்யும் நிறுவனங்களுக்கு நல்ல வாணிகம். அரசாளுவோருக்கும் உரிய பங்கு கிடைத்து விடும்.
சிறு தொழில் முனைவோர் சிறுகச் சிறுகத் தொழிலின் இயங்குதிறனையும் ஆதாயத்தையும் இழந்து தொழில்கள் அடைப்புக்குள்ளாகும். வெளியிலிருந்து வரும் பெருந்தொழில்களுக்கு நாட்டை மொத்தக் குத்தகைக்கு விட்டுவிடலாம்.
மின்வாங்கிகளை வாங்க முடியாதவர்களின் பிள்ளைகள் வாங்க முடிந்தவர்களின் பிள்ளைகளோடு கல்வியில் போட்டி போடும் திறனை இழப்பார்கள். ″சமச்சீர்″ கல்வியையும் சேர்த்து ஏழைகளின் கல்வியைக் குழிதோண்டிப் புதைத்து விடலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, அணுமின் நிலையங்கள்தாம் மின்விசைச் சிக்கலுக்குத் தீர்வு என்ற இந்திய ஆட்சியாளர்களின் கருத்துக்கும் செயலுக்கும் மக்களிடம் வலுவான ஆதரவு உண்டாகும். எதிர்த்துப் பரப்பல் செய்வோர் செல்வாக்கு இழப்பர். ஏற்கனவே நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதற்காகத் தலைமை அமைச்சருக்கு வாழ்த்துச் சொல்லும் சாக்கில் தில்லி சென்று இரண்டு அணுமின் நிலையங்களைத் தமிழ்நாட்டில் அமைக்க இசைவு பெற்றுவிட்டார் தமிழினத் தலைவர்.

1967இலிருந்து தமிழகத்தை ஆளுவோர் காலம் காலமாக அடித்தள மக்களை எண்ணற்ற ஒடுக்குமுறைகளுக்கும், ஒதுக்குமுறைகளுக்கும் ஆளாக்கியவர்களின் வழிவந்தவர்கள். அவர்களுக்குத் துணைநிற்போர் ஐரோப்பியர்களின் தலையீட்டின் பக்கவிளைவால் அந்த ஒடுக்குமுறைகள், ஒதுக்குமுறைகளிலிருந்து தப்பி வெளிப்பட்டவர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து மேலேற முடியாமல் அடியில் தங்கிவிட்டவர்களைப் பழைய இருளிலேயே அழுத்தி வைக்க முயல்கின்றனர். அதன் ஓர் அடிப்படைச் செயற்பாடுதான் இந்த வரைமுறையற்ற மின்தடையும் தடையற்ற பொய்களும்.

இந்த நிகழ்முறை அனைத்திலும் நம்மிடமிருந்து மறைக்கப்படும், நாம் கவனிக்க மறந்துவிடும் ஓர் உண்மை என்னவென்றால் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் நுகரப்படும் மிகப் பெரும்பகுதி மின்சாரமும் ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்கே பயன்படுகிறது. இதற்கும் மேலே பல படிகள் கடந்து நேரடி அயல் முதலீட்டை ″ஈர்த்து″ நாட்டை வளப்படுத்துகிறோம் என்ற பெயரில் நாளொரு ″சிறப்பு″ப் பொருளியல் மண்டலமும் பொழுதொரு தொழில்நுட்பப் ″பூங்கா″வும் தொடங்குவதாகத் தொ.கா.க்களில் பல்லைக் காட்டுகிறாரே ″நம்″ முதல்வர் அவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில்(பு.ஒ.க்களில்) தடையில்லா மின்சாரமும் தண்ணீர், எரிபொருள் போன்ற அடிப்படைக் ″கட்டமைப்பு வசதிகளை″யும் அரசு செய்துதர வேண்டுமென்பது தவிர்க்க முடியாத கட்டுறவு. இந்த திடீர் மின்வெட்டின் அடிப்படைக் காரணங்களில் இது முகாமையானது. இப்பொழுது தெரிகிறதா இந்த வளர்ச்சி யாருக்கென்று? ஆமாம், இந்த ″அயல்″ முதலீட்டைச் செய்பவர்கள் உண்மையிலேயே அயலவர்கள்தாமா அல்லது ஆளுவோரின் போலிகளா என்பது பலரது ஐயம்.

நம் தேவைகளுக்கு மட்டும் என்றால் நமக்கு மின் தட்டுப்பாடே இருக்காது. ஏற்றுமதி சார்ந்த ஒரு பொருளியலைத் திட்டமிட்டு அதைக் காரணம் காட்டி எண்ணற்ற பொருட்களை இறக்குமதி செய்து திட்டமிட்ட ஒரு பற்றாக்குறையை உருவாக்கி பெரும்பான்மை மக்களைப் பட்டினிபோடும் இந்த ஏற்றுமதிப் பொருளியலுக்கு ஒரு முடிவுரை எழுதுவோம். உள்நாட்டு மக்களின் நுகர்வு நோக்கிய ஒரு பொருளியல் நடைமுறையை உருவாக்குவோம்.

(இக்கட்டுரை தமிழினி ஆகத்து-2008 இதழில் மின்வெட்டு என்ற தலைப்பின் கீழ் வெளிவந்துள்ளது.)

1 மறுமொழிகள்:

சொன்னது…

Thanks for that interesting post.Why don't you start a newspaper.