26.9.08

ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காண்போம்!

இந்தியாவில் பணவீக்க விகிதம் பல ஆண்டுகளுக்குப் பின் இரட்டை எண்ணைத் தாண்டி நிற்கிறது. அதன் பொருள் விலைவாசி கட்டுக்காடங்காமல் துள்ளிக் குதிக்கிறது என்பதாகும்.

பொதுவாக பேரவை(காங்கிரசு)க் கட்சி ஆட்சிக்கு வந்தால் பண்டங்களின் வழங்கல் குறைவதும் விலை தாறுமாறாக உயர்வதும் வழக்கம். மாற்று ஆட்சிகள் இதற்கு மாற்றாகச் செயற்படுவதுண்டு. 1977ல் பதவி ஏற்ற சனதாக் கட்சி ஆட்சியின் போது லால் பகதூர் சாத்திரி விதித்திருந்த உணவுப்பொருள் நடமாட்டக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதால் அரிசி, கோதுமை, சீனி, மண்ணெய் ஆகிய பண்டங்கள் வெளிச் சந்தையில் தாராளமாகக் கிடைத்ததால் அவற்றின் விலை பங்கீட்டுக் கடைகளில் அரசு வழங்கிய விலைக்கு கிட்டத்தட்ட தாழ்ந்துவிட்டது. எனவே பங்கீட்டுக் கடைகளே தேவை இல்லை என்ற நிலை உருவானது. 1979ல் சனதாக் கட்சி அரசை அமெரிக்க ஒற்றன் இராசநாராயணன் கவிழ்த்ததால் பேரவைக் கட்சி பதவிக்கு வந்தது. உணவுப் பொருள் நடமாட்டம் மீண்டும் கெடுபிடியானது. உணவுப் பொருட்களை அரசே கொள்முதல் செய்து பதுக்கி வைத்து கெட்டுப் போகவிட்டு பங்கீட்டுக் கடைகளில் தள்ளிவிட்டது. உரிமம் பெற்ற வாணிகர்கள் உழவர்களைப் பிழிந்து கள்ள விலைக்கு வாங்கி நல்ல விலைக்கு விற்று ஆதாயம் அடைந்தனர்.

சனதா தள ஆட்சியில் கூட கட்டுப்பாடுகள் தளர்ந்தன. மீண்டும் ஆட்சிக்கு வந்த பேரவை ஆட்சி கட்டுப்பாடுகளை இறுக்கியது.

பாரதீய சனதா ஆட்சியில் சமையல் வளி நிறுவனங்கள், காலி உருளையை வீட்டு வாயிலில் வைத்தால் போதும், தொலைபேசியில் பதிவு செய்யவே தேவை இல்லை, கதவைத் தட்டி வளியை வழங்குவோம் என்றனர். வந்தது அடுத்து பேரவைக் கட்சியின் மன்மோகன் சிங் ஆட்சி. ஓர் உருளை வழங்கி 23 நாட்களுக்குப் பிறகுதான் அடுத்த உருளை வழங்குவோம் என்று கூறிவிட்டார்கள். கணிப்பொறியெல்லாம் வைத்துள்ளனர் வளி வழங்கும் முகவர் நிறுவனத்தினர். அந்த 23 நாட்கள் ஆவதற்கு முன்பு நாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டால், 23 நாட்கள் ஆன பின் தொடர்பு கொள்ளுங்கள் என்று ஆணையிடுவர். பதிந்து வைத்து ஏன் உரிய நாளில் வழங்கக் கூடாது என்று கேட்டால் அதெல்லாம் முடியாது என்ற விடை வரும்.

இவற்றால் பேரவைக் கட்சி தவிர்த்த பிற கட்சிகள் தூய்மையானவை என்ற பொருளில்லை. பிற கட்சிகள் மக்களுக்குச் சிறிது மகிழ்ச்சியூட்டி மடிபறிக்கின்றன என்றால் வன்முறையை மறுத்துப் பேசிய காந்தியின் கட்சி மக்களை மிரட்டி நெருக்கிப் பறிக்கிறது. அத்துடன் அவர்கள் 1950க்குப் பின் 58 ஆண்டுகளும் அதற்கு முன் 1937இல் இருந்து 1942 வரையும் 1947க்குப் பின்னரும் ஆட்சி புரிந்துள்ளனர். இந்தப் பட்டறிவுகளெல்லாம் உண்டல்லவா? ஆதனால்தான் இந்த மதர்ப்பும் கொடுமையும். அத்துடன் நேரு குடும்பம் இந்தியா என்ற தன் சொத்தை வைத்துக் கொண்டு எவ்வளவு ஆதாயம் தேடலாம் என்பதையே குறியாகக் கொண்டு செயல்படுகிறது. அதன் பெரும் செல்வப் பெருக்குக்கு ஈடுகொடுக்க இன்று எந்தக் கட்சியாலும் இயலாது என்பதனால்தான் இந்த மதர்ப்பு.

இந்தப் பின்னணியில் நரசிம்மராவ் காலத்தில் உலக வங்கியின் முன்னாள் அதிகாரியான மன்மோகன் சிங் பண அமைச்சராக வந்ததிலிருந்து வெளிப்படையான உலகளாவுதல் செயலுக்கு வந்தது. ″மனித வள ஏற்றுமதி″ என்ற கருத்துரு முன்வைக்கப்பட்டது.

இந்தியாவின் பண்பாடு உழைப்பு, விளைப்பு போன்ற படைப்புச் செயலில் ஈடுபடும் மக்களை இடங்கையினர் என்று ஒதுக்கி வைத்து அரசு, கோயில் சார்ந்த ஒட்டுண்ணிகளை வலங்கையினர் என்று உயர்த்துவது. உழைப்பவனும், படைப்பவனும் வினைகளைச் செய்து அதன் நன்மை தீமைகளை நுகர மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து உழல்கிறான் என்றும் அவ்வாறு வினை எதுவும் செய்யாமல் தான்விடும் மூச்சைத் தானே எண்ணிக் கொண்டு அமர்ந்திருப்பவன் கடவுளாகி விடுவான் என்றும் கூறும் முழுநிறைவான ஒட்டுண்ணிக் கோட்பாட்டுக்கு நாம் சொந்தக்காரர்கள்.

அதன் தொடர்ச்சியாக நம் நாட்டில் ஆங்கிலர்கள் உருவாக்கிய இந்திய பொதுவியல் பணி(ஐ.சி.எசு.) அதிகாரிகள் முடிந்து ஒட்டுண்ணி மரபில் தோன்றிய நேரு பெருமான் உருவாக்கிய இந்திய ஆட்சியியல் பணி ஐ.ஏ.எசு அதிகாரிகள் வந்தனர். ஆங்கிலர் தங்கள் ஆட்சிக் காலத்தில் இந்த ஒட்டுண்ணி அதிகாரிகளின் கொடுமைகளிலிருந்து பொறியாளர்களையும் அறிவியல் அறிஞர்களையும் பாதுகாக்கும் வகையில் தம் ஆள்வினையைக் கட்டமைத்திருந்தனர். ″விடுதலை″க்குப் பின்போ இந்த அதிகாரக் கும்பலின் பிடியில் அவர்கள் சிக்கினர். தங்கள் அறிவுக்கும் உழைப்புக்கும் மதிப்பில்லாத இந்தச் சூழலை விட்டு வெளி நாடுகளுக்கு அவர்கள் வேலைதேடிச் சென்றனர். அங்கு அவர்களுக்கு மதிப்பும் நல்ல சம்பளமும் கிடைத்தன.

இதன் அடுத்த கட்டமாக இந்த அறிவுத் திறனையும் உழைப்பாற்றலையும் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டன வல்லரசு நாடுகள். அதன் விளைவுதான் இந்த ″மனித வள ஏற்றுமதி″த் திட்டம். அதற்கேற்பக் கல்வித்துறையையும் ″மனித வள மேம்பாட்டுத் துறை″ என்று பெயர் மாற்றினர். கல்வித்துறை உள்நாட்டுத் தேவைகளுக்கு என்று எவருக்கும் ஐயம் ஏற்பட்டுவிடக் கூடாது பாருங்கள்!

இப்பொழுது 20 அகவை நிறைவதற்குள்ளாகவே ″மனித வள இறக்குமதி″யாளர்களுக்குத் தேவைப்படும் திறமைகளை ஊட்டி நம் இளைஞர்கள் குறுகிய கால இறைச்சிக் கோழிகளாக (பிராய்லர் கோழிகளாக - தினமணி கட்டுரை ஒன்றில் நெல்லை சு.முத்து இந்தச் சொல்லைப் பயன்படுத்தினார்) மாற்றி ஏற்றுமதி செய்து வருகிறோம் நாம்.

அடுத்த கட்டமாக வல்லரசின் விழுதுகள் ஏற்றுமதி, புலனத் தொழில்நுட்பம் என்று பல்வேறு பெயர்களில் நம் ஆட்சியாளர்கள் அமைத்துக் கொடுக்கும் ″வளாகங்களி″ல் இறங்கியுள்ளன. அங்கெல்லாம் இந்த இறைச்சிக் கோழிகள் தங்களை ஒப்படைக்கின்றன. இதில் நூற்றுக்கு ஒன்று தவிர மீதியை எல்லாம் 5 அல்லது 10 ஆண்டுகளில் சாறு உறிஞ்சிவிட்டு அந்த வளாகங்கள் வெளியே வீசியெறிந்துவிடுகின்றன. அதற்குள் அவர்களுக்குக் கிடைக்கும் உயர்ந்த சம்பளங்களும் படிகளும் உள்நாட்டுச் சந்தையில் நுழைகின்றன. பொதுமைக் கட்சியினரின் முழு ஒத்துழைப்புடன் உள்நாட்டு விளைப்புத் துறையின் தற்சார்பு வளர்ச்சி நம் ஆட்சியாளர்களால் முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளது. எனவே அந்தத் துறைகளில் முதலிட வழிகள் இல்லை. உள்நாட்டு விளைப்பு என்பது மார்வாரி - குசராத்தி பனியாக்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டுவைத்து நடைபெறுவதாகவே உள்ளது. எனவே இந்தப் பணப்பாய்ச்சலின் பலன்கள் இந்த தரகு நிறுவனங்களின் வழியாக வல்லரசுகளுக்குப் பாய்கிறது.

உள்நாட்டில் உருவாகும் செல்வத்தில் ஒரு கணிசமான பகுதி ஆட்சியாளர்கள் மூலமும் அரசியல் கட்சிகள் மூலமும் சிற்றூர் வரையுள்ள கட்சித் தொண்டர்களைச் சென்றடைகிறது.

நாட்டில் உள்ள மீளப் பெறத்தக்க செல்வங்களையும் மீளப் பெறமுடியாத கல், மணல், கனிமங்கள் போன்றவற்றையும் பேரளவிலும் சிறு அளவுகளிலும் ஏற்றுமதி செய்வதிலிலிருந்து கிடைக்கும் பணமும் இங்குள்ள சந்தையினுள் பாய்கிறது.

இவ்வாறு பாயும் பணம் பணப்புழக்கத்தை உயர்த்தி விலைவாசியை ஏற்றலாம்.

ஆட்சியாளர்களும் வெளிவிசைகளும் நம் மக்களிடையில் கிளப்பியுள்ள மதவெறி பெரும் அளவிலான பணத்தை நன்கொடைகளாக உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் உறிஞ்சி கட்டுமானங்களாகவும் விழாக்களாகவும் மாற்றுகிறது. இவற்றால் எல்லாம் விளைப்பு சாராத, நுகர்வு சார்ந்த செலவுகளால் விலைவாசி ஏற வாய்ப்பிருக்கிறது.

புளுகு → அண்டப்புளுகு → புள்ளிக் கணக்கு என்றொரு சொலவடை உண்டு. நம் நாட்டில் உண்மையில் ஏற்றுமதி எவ்வளவு இறக்குமதி எவ்வளவு என்று பொதுமக்கள் யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு ஆண்டிலும் வேளாண் விளைச்சல் முன்கணிப்பு என்று ஒரு கணிப்பை வெளியிட்டு இவ்வளவு மிகுதி அல்லது பற்றாக்குறை இருக்கும் என்பர் புள்ளியியல் துறையினர். உடனே ஆட்சியாளர்கள் மிகுதி அல்லது குறைவை ஏற்றுமதி அல்லது இறக்குமதி ஒப்பந்தங்கள் மூலம் ″முன்னெச்சரிக்கை″யாக (நம் ஆட்சியாளர்கள் மக்களின் நலனில் அவ்வளவு விழிப்பாக இருக்கிறார்கள்) அதை எதிர்கொள்ள ஆயத்தமாகி விடுவார்கள்.

அறுவடைகள் முடிந்ததும் இன்னொரு புள்ளிக் கணிப்பு. இப்போது முண்கணிப்புக்கு மாறாக பற்றாக்குறை அல்லது மிகுதி என்று இது இருக்கும். உடனே பழைய ஒப்பந்தம், இப்போதைய பற்றாக்குறை அல்லது மிகுதியையும் கணக்கிலெடுத்துக்கொண்டு இன்னொரு இறக்குமதி அல்லது ஏற்றுமதி ஒப்பந்தம். இந்தப் பின்னணியில் 1964இல் லால்பகதூர் சாத்திரி செய்ததுபோல் இறக்குமதியை நிறுத்திவிட்டார்களா? அதனால்தான் விலைவாசி ஏற்றமா? நமக்குத் தெரியவில்லை.

1964இல் லால்பகதூர் சாத்திரி தொடங்கிவைத்து இன்றுவரை தொடரும் உழவர்களுக்கு எதிரான கெடுபிடிகளின் விளைவாக தமிழ்நாட்டில் நம் கண்ணெதிரே பெருமளவு வேளாண் நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன. அதற்கும் அதிகமான நிலங்கள் வீட்டு மனைகள் ஆகியுள்ளன. ஆந்திரத்திலும் மாராட்டிரத்திலும் எண்ணற்ற உழவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்த நிலையில் நம் உணவுத் தேவையின் வளர்ச்சிக்கு நம் வேளாண்மை ஈடுகொடுக்கிறது என்பது நம்பத்தக்கதாக இல்லை. உணவுத் தவசங்களின் இறக்குமதி கட்டாயம் இருந்தே ஆக வேண்டும்.

இந்தியாவில் நடுத்தர மக்களிடம் பணப்புழக்கம் கூடி விட்டது; அதனால்தான் விலைவாசி உயர்ந்துவிட்டது என்று அழையா விருந்தாளியாக(நமக்குத்தான் அழையா விருந்தாளி. சோனியா, மன்மோகன், சிதம்பரம் கூட்டணிக்கல்ல) அமெரிக்காவின் சியார்சு புசு திருவாய் மலர்ந்து அருளியிருக்கிறேரே! அவரது கையாள் சிதம்பரம் இது எதிர்பார்த்ததுதான் என்கிறாரே! இதில் என்ன நுட்பம் அடங்கியிருக்கிறது?

வெளி நாட்டினரைத் தொலைநிலை(ஆண்லைன்)ப் பேரத்தில் விட்டதனால் ஏற்பட்ட விலை உயர்வைப் பயன்படுத்தி வால்மார்ட், அம்பானி வகையறாக்களை தொடக்கத்தில் மலிவு விலையில் விற்க வைத்து மக்களின் ஆதரவு மனநிலையை உருவாக்கவா?

ஈராக்கில் புகுந்து கன்னெய்யச் சுரங்கங்களை வசப்படுத்தி கன்னெய்யப் பொருட்களின் விலையை உயர்த்தியது போல் இந்திய மொத்த, சில்லரை வாணிகங்களைக் கைப்பற்றவா?

சென்ற ஆண்டில் இந்திய அரசு வேளாண் விளைபொருட்களை வாங்க அம்பானிகளுக்கு உரிமம் வழங்கியிருக்கிறது. அவர்கள் பெருமளவு உணவுப் பொருட்களை வாங்கிப் பதுக்கி விட்டார்களாம். அதைக் கொண்டு அவர்கள் உணவுப் பொருள் விலையை ஏற்றிவிடாமல் தடுக்க வேண்டுமாம். அதனால் இந்த ஆண்டு அரசே நேரடியாகக் கொள்முதலில் இறங்கியதாம். நடு உணவு அமைச்சர் கூறியிருக்கிறார்.

உணவுத் தவசங்களை ஓராண்டுக்குமேல் இருப்பு வைத்தால் சரக்கின் தரம் கெட்டுப் போகும் என்பதுடன் மூதலீட்டுக்கு வட்டியும் இழப்பாகும். அத்துடன் அறுவடையாகிப் புதுத் தவசம் சந்தைக்கு வந்தால் விலை விழுந்துவிடும். இந்த ஆண்டும் அனைத்தையும் வாங்கிப் பதுக்கவும் பெரும் மூலதனம் தேவை. இந்த இக்கட்டில் இருந்து அம்பானிகளைக் காப்பாற்றத்தான் இந்திய அரசு உணவுத் தவசங்களைக் கொள்முதல் செய்து தானே பதுக்கியுள்ளது. அதனால் சந்தையில் சரக்கு இன்றி உணவுப் பொருள்களின் விலை கூடியுள்ளதோ?

அமெரிக்காவில் உயிரி எரிநீர்(பயோ டீசல்) உருவாக்குவதற்காக பெருமளவு காய்கறிகளை இறக்குமதி செய்கிறார்களாம். அதனால் இங்கு காய்கறி விலை ஏறவிட்டதாம்.

எதுவும் தெரியவில்லை ஐயனே!

ஆனால் ஒன்று மட்டும் உறுதி. அமெரிக்காவோடு கூட்டுச் சேர்ந்து மக்களைச் சுரங்கங்களிலும் பிற தொழிற்களங்களிலும் நூற்றுக்கணக்காகக் காவு கொடுக்கும் சீனத்தின் ″பாட்டாளியப் புரட்சி″யை நாம் விரைவில் மிஞ்சிவிடுவோம்.

ஒரு குறிப்பு: நம்மிடம் சொன்னால் தமிழ்நாட்டில் குடும்ப விழாக்களிலும் உணவு விடுதிகளிலும் எங்கேயும் எப்போதும் நடைபெறும் அன்னதானங்களிலும் விழும் வாழை இலைகளையும் காய்கறிக் கழிவுகளையும் உயிரி எரிநீர் உண்டாக்க கப்பல் கப்பலாக வழங்கலாமே.

பணப்புழக்கம் மிகுந்திருக்கலாம் என்பதை எற்றுக்கொள்ளலாம். மக்கள் தொகையின் ஒரு சிறு பகுதியினரிடம் சேரும் பெரும் செல்வம் கீழ் நோக்கிக் கசிந்து கீழ் மட்டத்திலுள்ளவர்களைச் சேரும் என்பது ஊறுதல் கோட்பாடு(Percolation Theory) என்று பொருளியலில வழங்கப்படும். எனவே செல்வம் படைத்தவர்கள் உருவாவது ஒரு குமுகத்துக்கு நல்லது என்பது இக்கோட்பாட்டளர்கள் கூற்று.

இன்று நாட்டில் பாயும் வெளிப்பணம் கீழ்நோக்கிக் கசிந்து அடித்தளத்திலுள்ள பெருவாரி மக்களை நோக்கிச் செல்லும் போது ஒவ்வொரு அடுக்கிலும் மேலுள்ள அடுக்கினை விடக் குறைவான விகிதத்திலேயே பங்காகும். அவ்வாறு கிடைக்கும் கூடுதல் வரவை விட விலைவாசி ஏற்றம் மிகுதியாக ஒரு குறிப்பிட்ட அடுக்கில் நிகழும். அந்த அடுக்கு எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப் பொறுத்து இந்த விலைவாசி உயர்வுக்கு எதிர்வினைகள் மக்களிடம் உருவாகும்.

அப்படி உருவானால் என்ன கெட்டுவிடும் அல்லது என்ன மாற்றம் ஏற்பட்டுவிடும்? அதற்குத்தான் இருக்கிறார்களே நம் பொதுமைத் தோழர்கள், கொதிக்கும் பதனீருக்கு பதம் போடுவதற்கு.

இலவச வேட்டி, சேலை, நிலப்பட்டா, வீட்டுமனைப்பட்டா, இலவச வீடு, மூடிதிருத்துக் கருவிகள், தேய்ப்புப் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி, வளி அடுப்பு, மண்வெட்டி முதல் உழுவுந்து வரை வேளாண் கருவிகள் என்று இந்தப் பட்டியலில் புதிதாகச் சிலவற்றைச் சேருங்கள் என்று தோழர்களை வைத்து - ஊரூருக்கும் ஆர்ப்பாட்டம் நடத்திவிடலாம்.. ஆட்சியாளர்கள் அழகாகச் செய்து கொள்முதலில் தரகும் பெற்றுக் கொள்வர். மக்கள் வாயைப் பிளந்து அந்தக் கோடிக்கும் இந்தக் கோடிக்குமாக ஓடமாட்டார்களா? போராடுவாவது ஒண்ணாவது. இந்த இலவயங்களை வாங்க மகிழுந்து வைத்திருக்கும் அடுக்கினர்களும் வருவார்களே! மக்களின் பண்பாட்டை எந்த உயரத்துக்கு உயர்த்தி காரல் மார்க்சுக்குப் பெருமை சேர்ததிருக்கிறோம் பார்த்தீர்களா!

தமிழர்கள் உலகுக்கே இன்றுவரை வழிகாட்டிகள். இன்றைய இந்தியாவில் எதிர்க்கட்சிகளைக் கவிழ்த்து ஆட்சியமைத்து வழிகாட்டியவர் அரசியலில் அறத்தைக் கடைப்பிடித்தவர் என்று புகழப்படும் ஆச்சாரியார்(இராசாசி). கொள்கையில்லாக் கூட்டணி வைத்துக் காட்டியவர் அண்ணாத்துரை. இந்த வரலாற்றுப் பெருமையால்தான் நெருக்கடிகள் வரும்போதெல்லாம் அன்னை சோனியா எங்கள் கலைஞரை அழைத்து அறிவுரை கேட்கிறார். இத்தகைய பெருமை பெற்ற அண்ணாதுரை கூறிய பொன்மொழி என்ன தெரியுமா?

ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காண்போம்!

ஏழைகள் எப்போதுமே இருக்க வேண்டும். அவர்களை அவ்வப்போது நாம் சிரிக்க வைக்க வேண்டும். அப்போது அந்த இறைவன் நமக்கு ஆட்சிக் கட்டிலை அருளுவார்.

சொல்லுங்கள்,
அண்ணா வழியில் அயராது உழைப்போம்!

(இக்கட்டுரை தமிழினி சூலை-2008 இதழில் வெளிவந்துள்ளது.)

0 மறுமொழிகள்: