26.9.08

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்

உலகை இன்று ஒரு பொருளியல் நெருக்கடி கவ்விப் பிடிக்கத் தொடங்கியுள்ளது. அடிப்படை விசை மூலமான கன்னெய்யப் பொருட்களின் விலை நஞ்சாக ஏறிக்கொண்டிருக்கிறது. உலகின் பொது நாணயம் என்ற நிலையிலிருந்த அமெரிக்க டாலர் அந்த இடத்தை இழக்கும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உலகெங்கும் விலைவாசி ஏறிக் கொண்டிருக்கிறது. பணவீக்கம் உச்சாணியில் நிற்கிறது. பண்டங்களின் விற்பனை குறைந்து வருகிறது. இதன் இறுதி விளைவாக உலக மக்களில் அடித்தளத்திலிருப்போர் பட்டினியால் மடிய நேரிடும் என்பது இன்றைய நிலை.

இதன் உண்மையான காரணம் என்ன? இதற்கு முன்பு நேர்ந்த பொருளியல் நெருக்கடிகளில் பெரும்பான்மையும் மக்களிடம் பணச் சுழற்சி குறைவால் உருவானவை. இந்தகுறை பணச் சூழற்சி மிகுந்ததால் நெருக்கடி முற்றி நிற்கிறது. இதற்கு முகாமையான காரணம் புலனத் தொழில்நுட்பத்தின் அளவுக்கு மீறிய வளர்ச்சி எனலாம்.

சென்ற 20ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா தலைமையிலான வல்லரசுகள் ஏழை நாடுகளைத் தங்கள் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஒன்றிய நாடுகளையின் மூலமும் தத்தம் நாடுகளிலிருந்தும் பல்வேறு உதவித் திட்டங்களைச் செயற்படுத்துகிறோம் என்ற பெயரில் ஏழை நாடுகளிலிருந்து எண்ணற்ற அறிவியல் - தொழில்நுட்ப, குமுகியல், வரலாற்றியல் தரவுகளைத் திரட்டிக்கொண்டன. அவற்றைத் ஒன்றிணைந்து ஒழுங்குபடுத்துவதற்கான முயற்சியிலிருந்துதான் கணினித் தொழில்நுட்பம் பாய்ச்சல் நிலை அடைந்தது என்று சொல்லவேண்டும். இதற்கு வேண்டிய பணிப்படையை உருவாக்குவதற்கேற்ற வகையில் ஏழை நாடுகளிலுள்ள கல்வி நிலையங்களை வடிவமைத்து அவற்றிலிருந்து வெளியேறியவர்களை மலிவாகப் பெற்றுக் கொண்டன. அவர்களுக்குத் தங்கள் நாட்டில் கிடைப்பதுபோல் பலமடங்கு சம்பளத்தை வழங்கியதால் மேலும் மேலும் மக்கள் அந்நாடுகளில் குவிந்தனர். அங்கே இந்த ஊழியர்கள் ஈட்டிய பணம் அவர்களின் தாய்நாடுகளுக்கு வந்தாலும் அதனை ஆக்க வழியிலான முதலீட்டுக்கு அந்த நாடுகளில் வழியில்லை. இந்த வல்லரசுகள் இந்த நாடுகளில் தங்கள் உதவித் திட்டங்கள் மூலமாகப் பரப்பியிருந்த பாட்டாளியக் கோட்பாட்டைப் பற்றிக்கொண்ட ஆட்சியாளர் இந்த முதலீடுகளைத் தடுத்ததுதான் அடிப்படையான காரணம். எனவே இந்தப் பெரும் பணம் அசையாச் சொத்துகள், நுகர்வு என்று பாய்ந்து நிலங்களை வேளாண்மையிலிருந்து விடுவித்தன. இதனை எளிமையாக்கியது பாட்டாளியக் கோட்பாட்டைப் பயன்படுத்தி உழவர்களின் வாழ்வைப் பறித்த ஆட்சியாளர்களின் செயல்பாடுதான். பணப் பாய்ச்சல் ஒருபுறம் என்றால் உணவு விளைப்பு முடக்கம் இன்னொரு பக்கம்.

அமெரிக்காவில் மக்களை ஈர்த்துத் தேர்தலில் வெற்றி பெற அங்கு ஆட்சிக்கு வந்த புசு குடும்பத்தினர் 10 ஆண்டுகளில் இரண்டு முறை ஈராக்கு மீதும் ஒருமுறை ஆப்கானித்தான் மீதும் படையெடுத்து குண்டுகளை மழையாகப் பொழிந்தார்கள். அங்கே தற்காலிகமாக உருவாகியிருந்த பொருளியல் நெருக்கடிக்குத் தீர்வாக அங்கு போர்க் கருவித் தொழிற்சாலைகளில் தேங்கிக் கிடந்த ஆயுதங்களை அரசே வாங்கி அயல் நாடுகளில் வானவேடிக்கை காட்டியது. இதனால் அந்தத் தொழிற்சாலைகள் புதிய ஆயுதங்களில் முதலிட்டு பணப் புழக்கத்தை உருவாக்கியிருக்க முடியும். ஆனால் அவற்றை மக்கள் நுகர்பொருட்களாக்க முடியாதே. இந்தப் பணப் புழக்கமும் அங்கு பணவீக்கத்தை ஏற்படுத்தியது.

அதுபோலவே தேர்தல் கவர்ச்சிக்காக காப்பீடு, மருத்துவம் முதலியவற்றிற்கு அரசு வழங்கிய உதவிகள் பணப்புழக்கத்தை மிகுத்தன. மருத்துவ மறுபெயர்ப்பு(Transcription) பணிகள் போன்று எண்ணற்ற வேலைகளை வெளிநாடுகளுக்கு வெளிப்பணியாகக் கொடுத்ததன் மூலம் அந்த நாடுகளிலும் பணப்புழக்கம் உயர்ந்தது. இந்தியாவில் அரசியல்வாணர்கள் ஊழலில் திரட்டிய பணத்தைப் பலவழிகளிலும் கட்சிக்காரர்களுக்கு வாரி வழங்கியதில் உழைக்காமல் பிழைக்கும் ஒரு பெருங்கூட்டம் உருவாகியுள்ளது. குறிப்பாகத் தமிழகத்தில் நாள்தோறும் அரசியலில் இறங்கும் திரை நடிகர்கள் அவர்களுக்கு மறைமுகமாகப் பணம் வழங்கும் பெரிய கட்சிகளிடமிருந்து பெற்றுப் புழக்கத்தில் விடும் பணம் ஏராளம். தமிழகத்திலுள்ள இளைஞர்களில் பெரும்பாலோர் ஒன்றுக்கு மேற்பட்ட, சிலர் நான்கைந்து கூட கட்சிகளின் உறுப்பினர் அட்டைகளை வைத்திருக்கின்றனர். இதனால் தமிழகத்தில் மிக வரண்ட மாவட்டங்களில் கூட உடலுழைப்புப் பணிகளுக்கு ஆள் கிடைக்காத நிலை இருக்கிறது. காந்திகிராமம் நிகர்நிலைப் பல்கலைக் கழகம் கருவிகளைக் குறைத்து மனித உழைப்பை மிகுக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படுகிறது. இங்கு கூட்டுறவுத் துறையின் தலைவர் ஊர்ப்புறங்களில் வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை, கருவிக்களை நாடுவது தவிர வேறு வழியில்லை என்று தன் கனப்பட்டறிவிலிருந்து கூறினார்.

ஓங்கலையால் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பான இடத்தில் தரமான குடியிருப்புகளைக் கட்டித் தந்து அவர்களது தொழில் மேம்பாட்டுக்கும் வழிவகுக்காமல் சகட்டுமேனிக்குப் பணத்தை அள்ளி வீசுவதால் அவர்கள் மீன்பிடிக்கச் செல்வது குறைந்து மீன் விலை கூடியுள்ளதுடன் தட்டுப்பாடும் ஏற்படும் நிலை உருவாகி வருகிறது.

இதற்கு ஊடாக, நம் நாட்டில் படிப்பவர்கள் எல்லாம் ஏதாவது வெளிநாட்டில் வேலை கிடைக்காதா என்றும் படைப்பவர்கள் எந்த நாட்டுக்காவது ஏற்றுமதி செய்யலாமே என்றும் கருதும் நிலை உறுதியாகிவிட்டது. அப்படியானால் வெளியில் வேலை செய்வோர் பணத்தை உள்ளே விடுவர். பண்டம் படைப்போர் அதனை வெளியே விடுவர். ஆக, பண அளவு கூடும். பண்டத்தின் அளவு கூடாது குறையவும் வாய்ப்புண்டு.

அத்துடன் இன்றைய தொழில் வளர்ச்சி என்பதை ″வெளிநாட்டு நேரடி முதலீடு″ என்ற வளர்ச்சியின் ஒரு வடிவம் என்று தவறாகப் புரிந்து கொள்ளப் படுகிறது. இதன் உள்ளடக்கம் நமக்குப் பயன்படாத பொருட்களை உருவாக்குவதற்கு நமது மின் ஆற்றல், நீர்வளம், நிலவளம், போக்குவரத்து வசதிகள் என்று அனைத்தையும் பயன்படுத்துவது. இதன் மூலம் நமக்கு இந்த வளங்களின் மீதுள்ள ஆளுமை குறைகிறது.

இதுதான் இன்றைய உலகின் நிலை. பணச் சுழற்சி இன்மையால் உருவாக்கி விளைப்புகாரத் துறைகளில் புழங்க விட வேண்டும் என்று கெயின்சு கூறியபடி த்தை சுழல விட்ட பணம் அளவுக்கு மீறி விட்டதால் பணத்தின் மதிப்பும் பண்டங்களின் வழங்கலும் குறைந்து அதனாலேயே மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. பண்ட வழங்கலுக்கும் பணப் புழகத்துக்குமான சமநிலையைப் பேண வேண்டிய இன்றியமையாமையை இது விளக்குகிறது.

இந்த இக்கட்டிலிருந்து விடுபடுவது எவ்வாறு?

நம் நாட்டில் நிலவுவது பொருளியலாளர்களின் கருத்துப்படி உண்மையான பணவீக்கம் அல்ல. உண்மையான பணவீக்கம் என்பது அனைத்து மக்களும் வேலைவாய்ப்பு பெற்று முழுமையான, அதாவது தன்னிறைவு பெற்ற தொழில்வளர்ச்சியும் எற்பட்ட பின்னரும் வரும் கூடுதல் பண வழங்கலால் உருவாவது (Monetary Economics, M.L.Seth,1992,p.160–1). அது இல்லாமல் நம் நாட்டில் போல் தன்னிறைவும் இன்றி முழுமையான வேலைவாய்ப்பும் இன்றி இருக்கும் ஒரு நாட்டில் கூடுதல் பணப்புழக்கம் தொழில்வளத்தைப் பெருக்கி மக்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும். இங்கே அது நடைபெறாததற்கு செயற்கையான தடைகள்தாம் காரணம். கெடுபிடியான வருமான வரிக்கு அஞ்சிய பணம் அரசின் கணிப்புகளை மீறி நுகர்வுச் சந்தையில் முக்காடு போட்டுக் கொண்டு நுழைவது ஒரு காரணம். ஐரோப்பாவில் பிறந்து நம் நாட்டுக்கு வந்த பங்குச் சந்தைச் சூதாட்டம் தொழில்துறையில் முதலாக வேண்டிய பல கோடி கோடி உரூபாய்களை அந்தச் சூதாட்டச் சந்தைக்குள் சுழலவிட்டிருப்பது ஒரு காரணம். பங்கு மூதலீட்டாளர்களுக்குச் சேர வேண்டிய ஈவுத் தொகை தொழில் முனைவோரால் ஏமாற்றப்பட்டு முன்பேரச் சூதாட்டங்களில் பயன்படுத்தப்பதுவது இன்னொரு காரணம். பெருந்தொழிலாகிவிட்ட கல்வி வாணிகர்களும் இதில் ஈடுபடுகின்றனர். அரசு திட்டமிட்டு மக்களின் முதலீட்டு வாய்ப்புகளை நசுக்கி குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அந்த வாய்ப்பை வழங்கி எஞ்சிய பணமெல்லாம் நுகர்வுச் சந்தையில் மட்டும் நுழைவது அனைத்துக்கும் அடிப்படைக் காரணம். அமெரிக்காவில் கூட பணித்துறைகளில் முதலீட்டைக் குறைத்து பண்ட விளைப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. இந்தியாவுக்கும் இது பொருந்தும்.

அனைத்து வளங்களுமே வேளாண்மையில் இருந்துதான் உருவாகின்றன என்பது ஒரு பொருளியல் கோட்பாடு. இது 18 ஆம் நாற்றாண்டில் பிரான்சில் வாழ்ந்த பிராங்கோயி குவிசுனே என்பவரால் உருவாக்கப்பட்டது. இதனை இயற்பாட்சிக் கோட்பாடு(Physiocracy) என்பர். இதனை மார்க்சு ஏற்கவில்லை. வளங்கள் தொழிற்சாலைகளினுள்ளிருந்துதான் வெளிப்படுகின்றன என்பது அவரது கட்சி. ஆனால் அவரது கட்சியை அவரது தலை மாணாக்கராக வெளிப்பட்ட லெனினே உடைக்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் வந்தது.

சோவியத் புரட்சி நடந்த நிலையில் ஐரோப்பிய முதலீட்டாளர்களையே நம்பியிருந்த உருசியத் தொழில்களை எல்லாம் அவர்கள் இழுத்து மூடிவிட்டனர். எதுவுமே இன்றி வெற்றுத்தாளாக இருந்த சோவியத்தின் பொருளியலை அடியிலிருந்தே பிடித்து வளர்க்க வேண்டிய வரலாற்றுத் தேவை லெனினுக்கு ஏற்பட்டது. எனவே அவர் புதிய பொருளியல் கொள்கை (New economic policy NEP) ஒன்றை வகுத்தார். அதன்படி உழவர்கள் வேளாண்மையில் கிடைக்கும் பண்டங்களில் அரசு குறிப்பிடும் ஒரு பகுதியை அரசு நிறுவும் விலையில் அரசிடம் கொடுத்துவிட்டு எஞ்சியதைத் தங்கள் விருப்பம் போல் விற்றுக் கொள்ளலாம் என்றார். (நம் ஆட்சியாளர்கள் அனைத்தையும் தாம் உரிமம் வழங்கியுள்ள வாணிகர்களுக்குத்தான் விற்க வேண்டும் என்று கொல்வதை விட தோழர் லெனினின் வேண்டுகோள் எவ்வளவு மாந்தன்மையானது என்று பாருங்கள்). அரசு அந்த உணவுப் பொருட்களை ஆலைத் தொழிலாளர்களுக்குக் கொடுத்து ஆலைகளிலிருந்து கருவிகளை உருவாக்கி உங்களுக்கு வழங்குவோம் என்றார். ஆக இயற்புக் கோட்பாடு இதன்மூலம் மெய்ப்பிக்கப்பட்டது.

இதனால் மார்க்சின் பெருமை குறைந்து விடவில்லை. அவரது கோட்பாடு என்றும் கையாளத்தக்கது. அடிமைக் குமுகம், நிலக்கிழமைக் குமுகம், முதலாளியக் குமுகம், பொதுமைக் குமுகம் என்ற ஒவ்வொன்றுக்கும் அவ்வவற்றுக்கே உரிய குமுகக் கட்டமைப்பு இயல்பாகவே அமையும் என்பதும் இயற்கையும் குமுகமும் மனிதச் சிந்தனையும் என்றுமே தேங்கிப் போவதில்லை மாறிக்கொண்டே இருக்கும், மாற்றம் ஒன்றே மாறாதது என்பதாகும். ஆனால் அவரது செயல்திட்டத்தில்தான் கோளாறு ஏற்பட்டுவிட்டது. அல்லது மகமை தண்டும் கட்சிக்காரர்களால் திசை திருப்பப்பட்டது எனலாம். ஐரோப்பாவை நினைத்துக்கொண்டு பாட்டாளியே புரட்சிகரமானவன் என்பதை வல்லரசுகள் வளர்ச்சியடையாத ஏழை நாடுகளை நசுக்குவதற்குப் பயன்படுத்திவிட்டன, பொதுமைக் கட்சியினரின் தந்திரமான ஒத்துழைப்புடன்

இதைவிடக் கொடுமையான குழப்பத்தைக் கெளதம புத்தர் ஏற்படுத்தினார். மார்க்சியக் கோட்பாட்டுக்கு இணையானது புத்த மதக் கோட்பாடு உலகில் எதுவுமே நிலையானதல்ல, மாயத்தக்கது, மாயை, அதாவது மாறிக்கொண்டே இருப்பது என்பது. ஆனால் மக்களின் இன்னல்கள் தீர வேண்டுமாயின் அவாவை அறுக்க வேண்டுமென்று திட்டம் வகுத்து சங்கத்து உறுப்பினர்கள் கையில் திருவோட்டைத் தூக்கிக் கொடுத்துவிட்டார், இன்று நம் தோழர்கள் பாட்டாளியரின் கைகளில் கொடுத்துள்ளது போல.

பணவீக்கத்தை எதிர்கொள்ள அருண் பிரோடியா என்பவர் பல வழிகளைக் கூறியுள்ளார் (How To Beat Inflation, The Times of India, 08-07-08, p.14). அவற்றில் ஒன்று 1000, 500, 100 உரூபாய்த் நாணயத் தாள்களை ஒரு குறிப்பிட்ட நாளிலிருந்து செல்லுபடியாகாதென அறிவிக்க வேண்டும். அதற்குள் அவற்றை அனைவரும் வங்கிச் சேமிப்பில் செலுத்திவிட்டு வருமானவரி கட்ட வேண்டும். அல்லது வளர்ச்சிப் பத்திரங்களில் முதலிட்டு வரி விலக்குப் பெறவேண்டும். பணம் வந்த வழியைக் கூற வேண்டியதில்லை என்கிறார். அரசியல் வாணர்களும் அதிகாரிகளும் பணக்காரர்களும் ஏமாற்றி பணமாகவோ எந்தவகை முதலீடாகவோ செய்திருந்தாலும் அவற்றை அறிவித்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அதை மடை திருப்பினால் ஒரே ஒரு முறை மன்னித்து ஏற்றுக் கொள்ளலாம் என்று அதில் ஒரு மேம்பாட்டை நாம் முன்மொழிகிறோம்.

உருசியாவில் ″திறந்த செயற்பாடு″ என்ற முழக்கத்தின் பின்னணியில் உருவான மக்கள் எழுச்சியின் போது ஓர் அரசியல் தலைவர் இதுபோன்றதொரு கருத்தை முன்வைத்தார். அதை அன்றைய கோர்ப்பசேவும் கூட்டாளிகளும் கேட்டு செயற்பட்டிருந்தால் இன்று அமெரிக்காவின் முன் உரு\சியா கையைப் பிசைந்துகொண்டிருக்க நேரிட்டிருக்காது. தங்கள் நாட்டில் உருவான செல்வங்களையே தங்கள் நாட்டு வளர்ச்சிக்குப் பயன்படுத்தியிருக்கலாம்.

செல்வம் சேர்ப்பவர்கள் பற்றி நம்மிடம் உள்ளவற்றில் மிகப் பழம் இலக்கிய இலக்கணமாகிய தொல்காப்பியம் கூறுவதைக் கொஞ்சம் பார்ப்போம்.

....நாளது சின்மையும் இளமையது அருமையும்
தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும்
இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும்
அன்பினது அகலமும் அகற்சியது அருமையும்
ஒன்றாப பொருள்வாயின் ஊக்கிய பாலினும் .... தொல். பொருள் .41

அதாவது யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை, தாளாண்மை, தகுதி, வறுமை, செல்வம், அன்பு, பிரிவு என்று எட்டுவகை மாந்த இயல்புகளையும் கூறுபாடுகளையும் கைவிட்டுப் பொருள் சேர்த்தல் என்பதனையே குறியாகக் கொண்டவர்களை இது கூறுகிறது. இவர்களை யாராலும் மாற்ற முடியாது. குமுகத்தின் ஒரு நோயாகவே விளங்குவர். ஆனால் அவர்களும் வட்டிக்குக் கடன் கொடுத்தல் போன்ற சில நடைமுறைகளால் தற்காலிக உதவிகளைப் பிறருக்குக் செய்யலாம். ஆனால் முதலாளியக் குமுகத்தில் முதலீடு என்ற ஆக்க வழியில் தங்கள் செல்வத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு வேலை வாய்ப்பும் அதனால் அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்வதும் ஒரு கட்டத்துக்கு மேல் அந்த செல்வத்திரட்சி தொழிலாளர்களின் கைப்பிடிக்குள் வருவதும் இயல்கின்றன. உலகளாவுதல் என்ற வஞ்சக வலையில் உலகம் சிக்காமல் இருந்திருந்தால் இது என்றோ பணக்கார நாடுகளில் நிகழ்ந்திருக்கும்.

இந்த நற்கூறைச் செயற்பட விடாமல், நிலக்கிழமைக் குமுகத்திலிருந்து நேரடியாகப் பொதுமைக் குமுகத்தினுள் குதித்துச் செல்லத் திட்டமிட்டதால் உலகம் இன்று பொறியில் சிக்கிக் கிடக்கிறது. அந்தப் பொறியிலிருந்து விடுபட வேண்டுமாயின் மக்களிடமிருக்கும் அனைத்துச் செல்வங்களையும் வளங்களையும் வளர்ச்சித்துறைகளினுள் பாயவிட வேண்டும். அதற்கு வேளாண்துறையில் முதலீட்டை ஊக்கவேண்டும் அவ்வாறு ஊக்குவதற்கு முதல் தேவை வேளாண்மை மீது பூட்டியிருக்கும் விலங்குகளை உடைப்பது. அதனைச் செய்வோம்!

(இக்கட்டுரை தமிழினி செப்டம்பர்-2008 இதழில் வெளிவந்துள்ளது.)

0 மறுமொழிகள்: