17.6.07

குமரிக் கண்ட அரசியல்

காலத்தின் சுவடுகள் - குழப்பத்தின் முடிவுகள்
சு.கி. செயகரனின் குமரி நில நீட்சி என்னும் நூலுக்கான எதிர்வினைகள் இந்த தளத்தில் இடம்பெறும்


குமரிக் கண்ட அரசியல் வலைப்பதிவில் காணப்படும் கருத்துகளில் சில இங்கே.

//குமரிக்கண்டம் பற்றிய அனைத்தும் தழுவிய ஒரு பெருநூல் எழுத வேண்டும், அதற்கான கருப்பொருட்களைத் தேட வேண்டும், அப்போது செயகரனின் குமரி நிலநீட்சி நூலில் எழுப்பப்பட்டுள்ள வினாக்களுக்கும் விடைகாண வேண்டும் என்ற எண்ணத்தில் இந்நூலைப் படிப்பதையே தள்ளிப்போட்டு வந்தேன். ஆனால் ஒரு சூழலில் இந்நூலைப் படிக்க வேண்டி வந்தது. படித்த பின் தான் தெரிந்தது, நூலினுள் ஆசிரியர் தந்துள்ள செய்திகளே குமரிக் கண்ட கோட்பாட்டுண்மையை மேலும் உறுதியான தளத்தில் நிறுத்தப் போதுமானவை என்பது.//

//தமிழார்வலர்களும் குமரிக் கண்டக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளும் தமிழறிஞர்களும் குமரிக் கண்டம் பற்றி பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பவற்றையும் மேலை நாட்டு அறிஞர்கள் கூறியிருப்பவற்றையும் மட்டுமே பெரும்பாலும் தொகுத்துத் தந்துள்ளனர். செயகரனோ குமரிக் கண்டக் கோட்பாட்டை மறுப்பவர்களின் கருத்துகளையும் ஏற்றுக்கொள்பவர்கள் அல்லது பேரா.பண்டிதர் க.ப. அறவாணன் போன்று ஏற்றுக்கொள்வது போல் பாய்ச்சல் காட்டுபவர்களின் ஆக்கங்களில் ஈரெட்டாக இருப்பவற்றையும் வெறுமே தொகுத்துத் தந்திருப்பதோடு ஆங்காங்கே தன் கருத்துகளையும் பதிந்துள்ளார். அக்கருத்துகள் எதிலுமே அறிவியல் அல்லது புவியியங்கியல் சாயலே இல்லை. புவியியங்கியல் செய்திகள் என்று அவர் தந்திருப்பவை ஒன்றேல் காலங்கடந்தவை அன்றேல் அரைகுறையானவை, பொய்யானவை, ஏமாற்றும் நோக்கம் கொண்டவை. எனவே அவரது நூல் பற்றிய இத்திறனாய்வில் அவர் மேற்கொண்டுள்ள ஆசிரியர்கள் மீதான திறனாய்வு ஒரு முகாமையான இடத்தைப் பெறும். அடுத்து அவரது போலி அறிவியல் - புவியியங்கியல் முக்காடு கிழித்தெறியப்படும்.//

//ஓர் எச்சரிக்கை! குமரிக் கண்டக் கோட்பாட்டை நிறுவுவதற்கு இந்துமாக்கடல் எனப்படும் குமரிமாக்கடலினுள் அகழ்வாய்வு செய்யும் வேண்டுகோளைத் தமிழார்வலர்கள் முன்வைக்குமாறு சீண்டுவதற்கென்றே குமரிக் கண்டக் கோட்பாட்டைப் பழித்துரைக்கும் இதுபோன்ற நூல்கள் வெளியிடப்படுகின்றனவோ என்றொரு ஐயம் எனக்குண்டு. கடல் அகழ்வு இன்றியே குமரிக் கண்டக் கோட்பாட்டை நிறுவிட முடியும். அகழாததால் குமரிக் கண்டக் கோட்பாடு நிலைக்காமல் போனாலும் தாழ்வில்லை. நம் மண் மீதும் கடல் மீதும் அயலவர் எவரும் மேலாளுமை செய்வதற்கு நம் ஆர்வக் கோளாறுகள் காரணமாகி விடக்கூடாது! கடந்த காலத்தை விட நம் எதிர்காலம் முகாமையானது. இதுவே நம் அனைத்து நடவடிக்கைகளின் நடுப்புள்ளியாய் அமைய வேண்டுமென்று வேண்டுகிறேன். இந்த அரசியல் நிலைப்பாட்டிலிருந்தே நான் வரலாற்றை அணுகுகிறேன். உலக வல்லரசியத்திலிருந்து உலக மக்களை விடுவிக்கும் போராட்டத்தின் ஒரு கருவியாகவே நான் என் வரலாற்று வரைவை முன் வைக்கிறேன் என்பதைத் தெரிவிப்பதில் உண்மையிலேயே பெருமைகொள்கிறேன்.//

1 மறுமொழிகள்:

சொன்னது…

நண்பரே!

நம் இந்திய அரசு கடவுள் மொழிக்குதான் (கடவுள் மொழியென்றால் அதை கடவுளே வைத்திருக்க வேண்டியது தானே!அதை ஏன் மனிதனுக்குக் கற்று தந்து சீரழிக்க வேண்டும்?)செலவு செய்யும். பழமையான பல அரிய இலக்கியங்களையும், சிறந்த வரலாற்றையும் கொண்ட மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மொழி/இனத்திற்காக (தமிழ்) செலவு செய்ய மாட்டார்கள்.

1999 ஆம் வருடமே குமரிக்கண்டம் இருந்தமைக்கு அறிவியல் ரீதியான சான்று வந்து விட்டது. இங்கே காணவும்

http://news.bbc.co.uk/1/hi/sci/tech/353277.stm