5.6.07

காமராசரின் எழுச்சியும் வீழ்ச்சியும் - 5

இந்திய அரசியலில் தலைமையமைச்சருக்கும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருக்கும் உள்ள முரண்பாடு விடுதலையடைந்த இந்தியாவின் தொடக்க நாளிலிருந்தே தொடர்வது. நேரு-பட்டேல் முரண்பாடு தொடங்கி வாசுபேய்- அத்துவானி வரை இது முடிவடையவில்லை. அது போல் முகலாயர்களின் தலைநகராகிய பழைய தில்லியாயினும் இன்றைய புதுதில்லியாயினும் தந்தையை மகன் கொல்வது, உடன்பிறந்தாரைக் கொல்வது, மகனைத் தாயும் தாயை மகனும் கணவனை மனைவியும் கொல்வது பற்றிய செவிவழிச் செய்திகளை நாம் அறிகிறோம். இவ்வளவு இழிவில்லையாயினும் நேருவுக்கும் மொரார்சி தேசாய்க்கும் இடையிலான போட்டியை திசைதிருப்ப வேண்டியும் மொரார்சியை, அவர் பொறுப்பிலிருந்த நி‌தியமைச்சகத்தில் அவர் செயற்பாடுகளால் பொதுவாக மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பைத் தணிக்கவும் அதே போன்று மாநிலங்களில் நிலவிய உட்கட்சியிப் பூசல்களைத் தடம் மாற்றவும் காமராசர் திட்டம் என்பது வகுக்கப்பட்டது. அதன்படி அமைச்சர் பதவியிலிருக்கும் மூத்த கட்சித் தலைவர்கள் பதவியைக் கைவிட்டுக் கட்சிப் பணிக்கு வர வேண்டும். காமராசர் தான் வகுத்த ‌திட்டத்தின் படி தானே முதலில் பதவி விலகினார். அதே நேரத்தில் அவர் அனைத்திந்திய பேரவைக் கட்சிக் குழுவின் தலைவராக்கப்பட்டார். இந்தப் பதவி உயர்வில் அவரது கட்சிப் பற்று என்று கூறப்படும் கட்சி வெறியும், அதாவது கட்சிக்காக எதையும் இழக்கத் தயங்காத மனப்பான்மைக்கு உள்ள அதே அளவு பங்கு அன்றைய இந்திய மற்றும் பேரவைப் கட்சியின் அரசியல் சூழலுக்கும் உண்டு.

பின்னர் நேரு மறைந்தார். இப்போதும் தலைமையமைச்சர் பதவியை மொரார்சி விரும்பினார். ஆனால் கட்சியின் பெரும்பான்மையினர் அதை விரும்பவில்லை. எனவே காமராசர் உரிய வகையில் "காய்களை நகர்த்தி" நேர்மையும் எளிமையும் மிக்கவர் என்று பெயரெடுத்த லால்பகதூர் சாத்திரியைத் தலைமையமைச்சராக்குவதில் வெற்றி பெற்றார். அவர் காலத்தில் உணவு விளைச்சல் குறைவாலும் வழக்கமான இறக்குமதியை நிறுத்தியதாலும் விடுதலை பெற்ற இந்தியா அதுவரை கண்டறியாத பஞ்சத்தால் மக்கள் வாடினர். கிழமைக்கு ஒருநாள் பட்டினி கிடக்குமாறு மக்களுக்கு அறிவுரை கூறி அதன் மூலம் மக்களிடம் நற்பெயர் பெற்ற வரலாற்று விந்தை இந்தியாவில் அரங்கே‌‌றியது. இந்தப் பின்னணியில் புகுத்தப்பட்ட ''பசுமைப் புரட்சி''யும் உழவர்கள் மீது பூட்டப்பட்ட விலங்குகளும் இன்னும் உடைபடவில்லை. இந்திய வேளாண்மை இழி தொழிலாக்கப்பட்டது. வேளாண் குடியினர் தொழிலிலும் தீண்டத்தகாதவராக்கப்பட்டனர்.

தன்னால் பதவியில் அமர்த்தப்பட்டவர், தனக்குக் கட்டுப்பட்டு நடப்பார் என்று எதிர்பார்த்த காமராசருக்கும் லால்பகதூருக்கும் முரண்பாடுகள் தோன்றின. அந்த நேரத்தில் இந்திய-பாக்கித்தான் போரில் அமைதிப் பேச்சு நடத்த சோவியத்து நாட்டின் தாசுக்கண்டு சென்ற லால்பகதூர் அங்கு மாரடைப்பில் உயிரிழந்தார். அது ஒர் அரண்மனைக் கொலை என்று எதிர்க்கட்சியினரும் லால்பகதூரின் மனைவியும் குற்றக் சாட்டினர்.

மீண்டும் மொரார்சி தலைமையமைச்சர் பதவிக்கு ஆயத்தமானார். காமராசர் தன் முயற்சியால் நேருவின் மகளாகிய இந்திரா காந்தியைத் தலைமையமைச்சராக்குவதில் வெற்றி பெற்றார். அரசர்களை உருவாக்குபவர் (கிங்மேக்கர்) என்ற தன் பட்டத்தை அதன் மூலம் அவர் உறுதி செய்தார். இந்த உச்சியை அடைந்த அன்றே அவரது வீழ்ச்சியும் தொடங்கியது. தன் கண் முன்னால் தன் தலைவரின் அரவணைப்பில் வளர்ந்தவர் தானே, தனக்குக் கட்டுபட்டு நடப்பார் என்று எதிர்பார்த்தார் காமராசர். ஆனால் தன் ஆட்சியில் எவரும் தலையிடுவதை இந்திரா விரும்பவில்லை. எனவே பேரவைக் கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் அவருக்கும் முரண்பாடுகள் அரும்பி வளர்ந்தன.[1] இந்த முரண்பாடுகள் முற்றிய நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் வந்தது. பேரவைக் கட்சி காமராசரின் பழைய நெருங்கிய தோழரான சஞ்சீவ ரெட்டியை வேட்பாளராக நிறுத்தியது. இந்திரா மராட்டிய மாநிலத்தின் ஆளுநராயிருந்த வி.வி. கிரியை நிறுத்தியதோடு கட்சியின் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிக் கட்டளைக்குப் பணியாமல் மனச்சாட்சியின் படி வாக்களிக்கலாம் என்று அறிவித்தார். பதவியிலிருப்போர் சொல்லுக்குத் தானே எப்போதும் மதிப்பு! கிரி குடியரசுத் தலைவரானார். பேரவைக் கட்சியினுள் இந்திராவின் பின்னணியின் நின்ற இண்டிகேட் என்றும் மூத்த தலைவர்களைக் கொண்ட சிண்டிகேட் என்றும் பிளவு உறுதியானது. கட்சியின் நடவடிக்கையில் இந்திரா பேரவை என்ற கட்சி உருவானது. பதிவுகளில் இந்திரா தலைமையிலான கட்சி இந்தியத் தேசியப் பேரவைக் கட்சி(இந்திரா)எனவும் மூத்த தலைவர்களின் பிரிவு இந்தியத் தேசியப் பேரவைக் கட்சி(நிறுவனம்) எனவும் அழைக்கப்பட்டன. இது நடந்தது 1969இல்.

இதற்கிடையில் தமிழகத்தில் புரட்சிகரமான கொள்கைகளைப் பேசித் தலைமையோடு முரண்பட்டு தி.மு.க.வை உருவாக்கிய அண்ணாத்தரை தன் அளவுகடந்த பதவி வெறியால் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டுத் தன் கட்சியின் அறிவிக்கப்பட்ட கோட்பாடுகளுக்கு எதிரான கோட்பாடுகளைக் கொண்ட கட்சிகளோடு கூட்டணி அமைத்து கொள்கை‌‌‌‌‌‌யில்லாக் கூட்டணியை முதன்முதல் இந்தியாவில் தொடங்கி வைத்தார். அண்ணாத்துரையால் குல்லூகப் பட்டர் என்று ஏசப்பட்ட ஆச்சாரியாரும் ஆச்சரியாரால் தன் முதல் எதிரிகள் என்று அறிவிக்கப்பட்ட பொதுமைக் கட்சியினரும் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருந்தனர். தி.மு.க. அறுதிப் பெரும்பான்மை பெற்று தனிக்கட்சியாக முதன் முதலில் விடுதலை பெற்ற பின் தமிழகத்தில் பேரவைக் கட்சியில்லாத ஆட்சி அமைத்தது. இது 1967இல் நடைபெற்றது. ஆங்கிலர் ஆட்சியை இந்தியர்களிடம் ஒப்படைத்த போது தலைமை ஆளுநர் (கவர்னர் செனரல்) பதவியை மவுண்டு பேட்டன் கோமகனிடமிருந்து பெற்ற தன்னை ஒதுக்கிவிட்டு இராசேந்திரப் பிரசாத்தை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக்கித் தன்னை இழிவுபடுத்திய பேரவைக் கட்சியின் மீதும் முதலமைச்சாராயிருந்த தன்னை வெளியேற்றிவிட்டு அந்த அரியணையில் அமர்ந்த காமராசரின் மீதும் ஒரே நேரத்தில் பழி தீர்த்துக் கொண்டார் ஆச்சாரியார்.

பேரவைக் கட்சி தமிழகத்தில் தோல்விடைந்ததற்கும் தி.மு.க.வெற்றி பெற்றதற்கும் காமராசருக்கு அடுத்து முதலமைச்சராயிருந்த பேரவைக் கட்சியின் பத்தவச்சலத்தின் முரட்டுத் தனம் ஒரு ‌காரணம். அதனால் தான் தி.மு.க. தன்னை வளர்த்துக் கொள்வதற்கென்று அறிவித்த இந்தி எதிர்ப்பு இயக்கம் அரசுக்கும் மக்களுக்குமான போராக வடிவம் பெறத் தொடங்கியது. தொடங்கி வைத்த தி.மு.க.வினரும் பிற கட்சித் தலைவர்களும் மக்களை அமை‌திப்படுத்த வேண்டியிருந்தது. உண்மையில், போராட்டம் முனைப்படைந்ததும் அதைக் கண்டு அஞ்சிய தி.மு.க.தலைமைகள் ஒடி ஒளிந்து கொண்டன. ஆனால் தேர்தல் அறுவடையை விட்டு வைக்கவில்லை. அந்த இந்திப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவரான பெ.சீனிவாசன் காமராசரை விருதுநகர் தொகுதியில் தோற்கடித்தார். தேர்தலில் முதன்முதலில் தோல்வியைச் சந்தித்தார் காமராசர். இதன் பின்னர் தான் பேரவைக் கட்சியில் பிளவு ஏற்பட்டது. பிற மாநிலங்களில் இந்திராவுக்குக் கூடுதலாகவோ குறைவாகவோ ஆதரவு இருந்திருக்கலாம். ஆனால் தமிழகத்தில் முற்றிலும் காமராசரைப் பின்பற்றிய பழைய பேரவை எனப்படும் நிறுவனப் பேரவைக்கே முழுமையான ஆதரவு இருந்தது. அண்ணாத்துரைக்குப் பின் பதவிக்கு வந்த கருணாநிதி பாராளுமன்றத்தில் இந்திராவுக்கு முழுப் பெரும்பான்மை இல்லாத சூழலைப் பயன்படுத்தித் தன் ஆதரவை நல்கி, தான் நடத்திய ஊழல்களுக்குப் பாதுகாப்புத் தேடிக் கொண்டார். இவ்வாறு பிறரின் அருளில் ஆட்சி புரிவது இந்திராவுக்குப் பிடிக்கவில்லை. எனவே பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு இடைத்தேர்தலுக்கு ஆணையிட்டார். தி.மு.க பதவியேற்றதும் முதல் ஆறு மாதங்கள் வரை பொறுத்திருந்து புதிய ஆட்சியின் சீர்த்துவத்தைப் பார்த்த பிறகு தான் கருத்துக் கூறுவோம் என்று அறிவித்த காமராசர் கருணாநிதியின் ஊழல்களைப் பட்டியலிடத் தொடங்கிவிட்டார். பேரவைக் கட்சி மீது என்னென்ன குற்றச்சாட்டுகளைத் ‌தி.மு.க. சுமத்தியதோ அவற்றை இன்றும் முனைப்பாகச் செய்தது தி.மு.க. அத்தடன் ஏற்கனவே பணக்காரர்களாயிருந்த பேரவைக் கட்சியினர் புதிதாகச் சொத்துகளைச் சேர்த்தது பொதுமக்கள் கண்களுக்குப் பளிச்செனத் தெரியவில்லை. ஆனால் அன்றாடங் காய்ச்சிகளாக இருந்த தி.மு.க.வினர் திடீரென மகிழுந்து வாங்கியதும் சிக்கலை உணர்ந்த அண்ணாத்துரை, சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தொகுதி மக்கள் மகிழுந்து அன்பளிப்பு விழா என்று ஊழலுக்கு விழா எடுத்தார். இதனால் எல்லாம் மக்களின் வெறுப்பை ஈட்டத் தொடங்கியதால் கருணாநிதியும் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு மறுதேர்தலைப் பாராளுமன்றத் தேர்தலுடன் நடத்தத் திட்டமிட்டார். தமிழ்நாட்டின் மொத்தப் பாராளுமன்றத் தொகுதிகளும் இந்திராவுக்கும் மொத்தச் சட்டமன்றத் தொகுதிகளும் கருணாநிதிக்கும் என்று தொகுதிப் பங்கிடு செய்தனர். 234 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 183ஐ அதாவது 78 நூற்றுமேனி இடங்களைப் பெற்று தி.மு.க இந்தியாவிலேயே வரலாறு படைத்தது. இந்தக் காலக் கட்டத்தில் தான் கருணாநிதி தமிழகத்தின் அடிப்படை உரிமைகளான காவிரி நீர், கச்சதீவு ஆகியவற்றை விலை பேசியது. இந்திராகாந்தி தன் கட்சியைத் தொடங்குவதற்கு முன்னோடியாக வங்கிகளை அரசுடைமையாக்கல், மன்னர் மானியம் ஒழித்தல் போன்ற ''நிகர்மை''(சோசலிச)த் திட்டங்களை அறிவித்து பொதுமை, நிகர்மை கட்சியினரையும் இளம் துருக்கியர் என்ற பெயரில் பேரவைக் கட்சியினுள் இருந்த நிகர்மைச் சார்பினரையும் தன் பால் ஈர்த்துக் கொண்டார்.

பொதுமைக் கட்சி ஆயுதப் புரட்சி மூலம் பொதுமைக் குமுகத்தை அமைப்பதைத் திட்டமாகக் கொண்டது. சோவியத் உருசியாவைத் தலைமையிடமாகக் கொண்டது. நிகர்மைக் கட்சி அதே இலக்கை அமைதி வழியில் எய்துவது. அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டது. ஆனால் இரண்டின் செயற்திட்டங்களும் ஒன்றே.

1. நிறுவனங்களை அரசுடைமையாக்குதல்,
2. தொழிலாளர்களுக்குக் கூடுதல் கூலி, சலுகைகள் வழங்குவது,
3. அனைத்துப் பொருளியல் நடவடிக்கைகளையும் அரசே எடுத்துக் கொள்வது,
4. நில உச்சவரம்பு கொண்டு வருதல்,
5. நிலமனைத்தையும் உழவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தல் என்பவையும்
பிறவும்.

இத்திட்டங்களைப் பின்பற்றிய சோவியத் நாடு இன்று இல்லை. அதன் கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளும் சீனமும் பாதை மாறிவிட்டன. அமெரிக்கா இத்திட்டத்தைத் தன் நாட்டில் கடைப்பிடிக்கவே இல்லை. ஆனால் உலகை இன்று ஆட்டிப் படைக்கும் வல்லமையை அது பெறக் காரணமாயிருந்த முதலாளிய விளைப்பு முறையை ஏழை நாடுகள் கடைப்பிடித்தால் தன் ஆதிக்கத்துக்கு அறைகூவல் வரும் என்பதால் தான் அந்நாடுகளில் தன் கட்டுப்பாட்டில் நிகர்மைக் கட்சியை வளர்ப்பதுடன் எண்ணற்ற பொதுமைக் கட்சிப் பிரிவுகளையும் பெரும் செலவில் ஏழை நாடுகளில் பேணி வருகிறது. நிகர்மை அல்லது பொதுமைக் கோட்பாட்டைப் பின்பற்றிய நாடுகள் தோல்வியடையக் காரணம் பெரும்‌பாலரான பொதுமக்களின் பொருளியல் முயற்சிகளை நசுக்கிவிட்டு அதிகாரிகளும் அரசியல் தலைவர்களுமான ஆட்சியாளர்களே அனைத்தையும் கொள்ளையடித்தது தான். சோவியத்தும் நம் நாடும் சான்றுகள். அத்துடன் மாநிலங்களின் பொருளியல் அடிப்படைகள் நடுவணரசின் கைக்குச் சென்றுவிடுவதால் கூட்டாட்சிக் கோட்பாடு மீறப்படுகிறது. எனவே பொருளியலில் ஆட்சியாளர்களின் ஆதிக்கத்தை முறியடித்து மக்களின் பொருளியல் உரிமைகளை மீட்பது தான் நம் நாட்டு மக்களின் மீட்சிக்கான ஒரே வழி.

1967இல் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற காமராசர் அதே ஆண்டு இயற்கை எய்திய நாகர்கோயில் பாராளுமன்ற உறுப்பினரும் திருவிதாங்கூர் தமிழ் மக்கள் தாய்த் தமிழகத்தோடு இணைவதற்காகப் போராடிய திருவிதாங்கூர் தமிழ் நாடு பேரவைக் கட்சியின் தலைவராக இருந்து பின் தன் கட்சியைப் பேரவைக் கட்சியோடு இணைத்தவருமான குமரித் தந்தை எனப்படும் திரு.ஏ.நேசமணி அவர்கள் காலமானதால் வந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.

குமரி மாவட்டத்தில் சாணார்களாயிருந்து நாடார்கள் என்ற புதுப்பெயருடன் புதுச் சாதியாக உருவெடுத்த மக்களும் பிற சாதியினர் அனைவரும் ஏறக்குறைய சம எண்ணிக்கையில் உள்ளனர். தீண்டத்தகாதவர்களாயிருந்து தம் உழைப்பின் மூலம் முன்னேறி மேனிலையடைந்த நாடார்களுக்கும் பிறருக்கும் உள்ள முரண்பாடே அங்கு முதன்மை முரண்டாக இருந்தது. ‌திருவிதாங்கூர் தமிழர் போராட்டம், திராவிட அரசியல் ஆகியவற்றின் பயனாக இவ்விரு முரண்பட்ட மக்கள் குழுக்களும் பண்டைய முரண்‌பாடுகளை மறந்து நெருக்கமடைந்து வந்தனர். சாதிக்கு வெளியே ஒரு விரிந்த பார்வை, அரசியல், பொது அறிவு குறித்த விழிப்புணர்வு என்று அவர்களது மனப்பான்மை மேம்பட்டு வந்தது. இந்தக் கட்டத்தில் தன் சாதி மக்கள் தான் உறுதியான தேர்தால் அடித்தளம் என்று நினைத்து காமராசர் இங்கு போட்டியிட்டார். தமிழகத் தலைவராயிருந்து இந்தியத் தலைவராக உயர்ந்து விட்ட காராசர் இதன் மூலம் ஒரு மாவட்டத் தலைவராகத் தாழ்ந்துவிட்டார் என்று இத்தேர்தல் நேரத்தில் ஒர் அரசியல் நோக்கர் கூறியது முற்றிலும் உண்மை. காமராசரின் அரசியல் வாழ்வில் அவர் சந்தித்த வீழ்ச்சிகளில் அவராகவே ஏற்படுத்திக் கொண்ட இந்த வீழ்ச்சி தான் மிகப் பெரியது.

தமிழக அரசியலில் தொகுதி மக்களில் பெரும்பான்மைச் சாதியைச் சார்ந்தவரை வேட்பாளராக நிறுத்தும் சாதி அரசியலைத் தொடங்கி வைத்தவர் காமராசர் என்று எதிர்க்கட்சியாக இருந்த வேளையில் தி.மு.க. குற்றம் சாட்டியதுண்டு. (தான் சுமத்தும் குற்றச்சாட்டுகளை தானே கடைப்பிடிப்பதும் தன் தவறுகளுக்கு மறுப்பாகப் பிறர் செய்யும் அதே தவற்றைச் சுட்டிக் ‌காட்டுவதும் கருணாநிதியின் கூச்சமற்ற இயல்பு) அதை ஐயமின்றி இச்செயல்மூலம் நிறுவினார் ‌காமராசர். அது மட்டுமல்ல, பாராளுமன்றம் அல்லது சட்டமன்றம் செல்லாமலும் மக்கள் தொண்டாற்ற முடியும் என்று வருங்காலத் தலைமுறையினர்க்குத் தன் செயல் மூலம் தானே எடுத்துக்காட்டாக வரலாறு தனக்குத் தந்த ஓர் அரிய வாய்ப்பையும் அவர் தவறவிட்டார்.

தான் அதிகாரத்திலிருந்த காலத்தில் குமரி மாவட்டத்தின் மீது காமராசர் ஒரவஞ்சவையாக நடந்து கொண்டார் என்று குமரி மாவட்ட மக்கள் கருதினர். குமரி மாவட்ட நாடார்களுக்குத் தன் அமைச்சரவையில் ஒர் இடம் அல்லது நேசமணிக்குத் தில்லியில் ஓர் அமைச்சர் பதவி வாங்கித் தர வேண்டுமென்று விரும்பினர். சாதி அடிப்படையில் அமைந்த குமுகத்தில் இந்த எதிர்பார்ப்பைக் குறை கூறுவதற்கில்லை. இவற்றில் எதையும் செய்யாததைத் தவறென்று கூற முடியாது. ஆனால் பல நிலைகளிள் நேசமணியை இழிவுபடுத்தினார் என்ற குமுறல் குமரி மாவட்ட மக்களுக்கு உண்டு. அதனால் தான் வாழ்ந்த காலத்தில் நேசமணியை இழிவுபடுத்தியவர் இன்று பதவிக்காக அவரது கல்லறை நிழலில் ஒதுங்குகிறார் என்று எதிர்க்கட்சியினர் தேர்தலில் போது குற்றம் சாட்டினர். இவ்வளவு இருந்தும் குமரி மாவட்ட நாடர்கள் நம் சாதிப் பெரியவர், நம்மை நம்பி, நம்மை நாடி வந்துவிட்டார் என்று பெருந்தன்மையுடன் ''அப்பச்சி'' என் றுசெல்லப் பெயர் சூட்டி தேர்தலில் வெற்றி பெறச் செய்தனர். ஆனால் நெருங்கி வந்த முரண்பட்ட இரு சாதிக் குழுவினரும் இப்போது பழைய பகையை நிலைக்குத் திரும்பினர். அவர்களிடையில் துளிர்விட்டுக் கொண்டிருந்த பரந்த பார்வை, அரசியல் விழிப்புணர்வு, உலகப் புரிதல் அனைத்தும் சாதிவெறியின் முன் கருகிப்போயின. இதன் மூலம் அதிகாரத்தில் இருந்த காலத்திலும் அதை இழந்த காலத்திலும் அவர் குமரி மாவட்ட மக்கள் அனைவருக்கும் செய்த தீங்கையும் .இரண்டகத்தையும் வரலாறு மன்னிக்கவே செய்யாது. அது மட்டுமல்ல 1962 வரை நாயக்கர்களைப் பெரும்பான்மை மக்களாகக் கொண்ட விருதுநகர்த் தொகுதியில் அம் மக்களின் முழு ஆதரவேபொடு வெற்றி பெற்று வந்தவர், தான் தோற்றது அரசியல் சூழலின் மாற்றத்தால் தான் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை என்று வாதிட்டால் அவரது அரசியல் மேதமை கேள்விக்குள்ளாகிறது. தேர்தல் வெற்றியே அவரது குறிக்கோள் என்றால் அவரது கொள்கை உறு‌தியும் கேள்விக் குள்ளாகிறது.

இன்று காமராசரின் ஆட்சியை மீட்போம் என்று கூறுகிறவர்களுக்குச் சில உண்மைகளைக் கூறுவது இங்கு இன்றியமையாததது. இன்றைய இந்தியாவின் சீர்கேடுகளின் வேர் மூலம் காந்தியாரிடமிருந்தே தோன்றுகிறது. காந்தியும் நேருவும் எல்லாத் துறைகளிலும் எதிரெதிரான கண்ணோட்டம் உள்ளவர்கள். காந்தி பழமையைப் போற்றுபவர்; நேரு புதுமை நாடுபவர். அப்படியிருந்தும் தனக்குப் பின் பேரவைக் கட்சித் தலைவராக, இந்தியாவின் தலைமையமைச்சராக நேருவைத் தேர்ந்தெடுக்க காரணம் என்ன? நேருவின் உறுதியற்ற மனப்பாங்கு அவரது மெலிவு. தனது பதவி, உயர்நிலை ஆகியவற்றுக்கு அறைகூவல் வருமாயின் எவருடைய நெருக்குதலுக்கும் பணிந்து விடும் அவரது இயலாமை ஆகியவையே வெளித்தோற்றத்தில் புதுமை விரும்பிகளை ஈர்ப்பதற்கும் நடப்பில் பழமையைக் காப்பதற்கும் பொருத்தமான தேர்வு என்று காந்தியார் முடிவெடுத்தார். முதற்கோணல் முற்றும் கோணல். உலகில் எல்லா வளமும் மிக்க நாடாயிருந்தும் 50 ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் உலகின் கடைக்கோடியில் நிற்கும் நாடாக இந்தியா தேய்வதற்கு இது தான் காரணம். இந்தத் தேய்வை நிரப்புவதற்கோ மாற்றியமைப்பதற்கோ இன்று நாட்டில் அரசியல் கட்சிகளோ இயக்கங்களோ தலைவர்களோ கோட்பாடுகளோ இல்லை என்பது வருந்தத்தக்க உண்மை. அவற்றை உருவாக்குவது இளந்தலைமுறையினரின் தலை மீது காலம் சுமத்தியுள்ள கடமை.

தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளது போல் வரலாற்று வரைவென்பது கடந்த காலத்தை நோக்கியதல்ல. எதிர்காலத்தைக் குறித்து நிற்பது. அது கடந்த காலத்தில் நாமும் நம் முன்னோர்களும் செய்த அருஞ்செயல்கள், செய்த தவறுகள், அவர்கள் கூறிய கருத்துகள், வகுத்த கோட்பாடுகள், அவை உருவான சூழல், இன்று நேர்ந்துள்ள சூழல் மாற்றம், அதற்கேற்ப கருத்துகளிலும் கோட்பாடுகளிலும் தேவைப்படும் மாற்றங்கள் ஆகியவற்றைத் தீர்மானிப்பதற்கு நிகழ்காலகத்திலுள்ளவர்களுக்கும் எ‌திர் காலத் தலைமுறையினருக்கும் வழி காட்டுவதாயிருக்க வேண்டும். வரலாற்று வரைவாளனது முடிவுகள் மீது அனைவருக்கும் உடன்‌பாடின்றிப் போகலாம். அவை தவறாகக் கூட இருக்கலாம். ஆனால் மு‌காமையான தரவுகள் மறைக்கப்படாமல் தரப்படுதல் இன்‌‌றியமையாதது. வருங்காலத்தவர் அந்தத் தரவுகளிலிருந்து தாமே முடிவுகளை மேற்கொள்ள முடியும்.

மனிதன் பகுத்தறிவுள்ள விலங்கு; அதாவது அடிப்படையில் மனிதன் ஒரு விலங்கு. தொலைநோக்கு, வருவனவற்றை முன் கூட்டியே ஆய்ந்த‌‌றிவதும் அவ்வாறு அறிந்தவற்றுக் கேற்றபடி தன்னை மேம்படுத்திக் கொள்வதும் அவனது இயல்பல்ல. விதிவிலக்கான அத்தகையவர்களின் எச்சரிக்கைகளைப் புறக்கணிப்பதோடு அவர்களை ஏளனம் செய்வதும் தண்டிப்பதும் கூட அந்த விலங்கின இயல்பு. ஆனால் மேற்கொண்டு எப்பக்கமும் நகர முடியாத நெருக்கடிகள் வரும் போது அத்தகைய முன்னறிவுடையோர் கருத்துகளைத் தேடி அவர்கள் அ‌‌றிவுரையைப் போற்றுவதும் அதன்படி நடக்க முயல்வதும் அவனது ''பகுத்தறிவு''. அப்போது கூட பண்டை அறிஞர்கள் கூறியவற்றை அறிந்து வைத்துக் கொண்டு தாம் கண்டறிந்தவையாகப் பொய்யுரைத்து ஏமாற்றுபவர்களை பெரும்பாலும் நம்பிச் செல்வதும் உண்டு. இவ்வாறு வரலாறு என்பது வளைவு நெளிவுகள் நிறைந்த ஒரு சிக்கலான ‌பாதை. அதற்குச் சரியான வழி காட்டியாக நின்று உதவுவது விருப்பு வெறுப்பற்ற, உண்மைகளை மறைக்காத ஈவு சாய்வற்ற வரலாற்று வரைவுதான்.

காமராசரைப் பற்றிய இந்த அலச‌‌லில் அவரிடம் உள்ள குறைகள் சுட்டிக் காட்டப்பட்டாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது அவர் காலத்தில் வாழ்ந்த தலைவர்களில் தனித்து உயர்ந்து அடித்தள மக்களுடன் இணைந்து நிற்கும் பெருமை மிகு தலைவர் ‌காமராசர் என்பதில் ஐயமில்லை. வரலாறு அவரை மறக்காது.

அடிக்குறிப்பு:

[1] காமராசரின் எழுச்சியும் வீழ்ச்சியும் - 3 இல் அடிக்குறிப்பு [1] காண்க.

2 மறுமொழிகள்:

சொன்னது…

a wonderful Leader legend life

is use to young people Good Luck

yours
siva
pondicherry

சொன்னது…

1)மராட்டியமாநில கவர்னராக இருந்த
வி.வி.கிரி......
அவர் அப்பொழுது துணைஜனாதிபதியாகவும், ஜனாதிபதி(பொறுப்பு)யாகவும் இருந்தார்

2)1971 தேர்தலில் காங்கிரஸ்(இந்திரா) கட்சிக்கு 11 நாடளுமன்றத்(புதுவை உட்பட)த் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன;
சட்டப்பேரவைத் தொகுதிகள் எதுவும்
ஒதுக்கப்படவில்லை