18.6.07

வருமான வரி தேவையா?

இந்தியாவில் பொருளியலைத் தாராளமாக்குவது பற்றி ஒயாமல் பேசப்படுகிறது. ஆனால் அதன் பயன்கள் நம் மக்களுக்கு இதுவரை எட்டவில்லை. விலையேற்றம் தான் தாராளமாக்கலின் விளைவு என்றால் அத்தகைய தாராளமாக்கலை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?

மக்கள் மீது இடப்பட்டிருக்கும் பொருளியல் தளைகளில் முதன்மையானதும் கொடுமையானதுமான தளை, வருமான வரியாகும். பொருளியலைத் தாராளமாக்கல் பற்றிய பேச்சு வந்ததும் வருமான வரியின் கெடுபிடி தளரும், வருமான வரிக்கான குறைந்த பட்ச வரம்பு உயரும் என்றெல்லாம் மக்கள் கனவு கண்டார்கள். ஆனால் வி.பி.சிங் காலத்தில் ரூ. 22,000/-ஆக இருந்த வரம்பு ரூ.28000/-ஆவதற்கு மக்கள் மிகவும் கெஞ்ச வேண்டியிருந்தது. இவ்வளவுக்கும் இவ்வருமான வரி பணக்காரர்களிடமிருந்து ஏழை மக்களையும் தொழிலாளர்களையும் காப்பதற்காக விதிக்கப்படுவதாகவே பெரும்பாலோர் நம்புகிறார்கள். இந்நிலையில் 1993-91ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் வெளியிடப்படும் முன்பே தொழிலாளர்கள் சார்பில் குறைந்த பட்ச வரம்பை ரூ.50,000/-ஆக உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. இதை எழுப்பியவர் இந்தியாவின் ஆற்றல் மிக்க தொழிற்சங்கத் தலைவரான இராமானுசம் ஆவார். இவர் ஆளும் பேரவைக் கட்சித் தொழிற்சங்கத் தலைவர் என்பது முக்கியம். இதிலிருந்து வருமான வரி வாய்க்கும் கைக்கும் என வாழ்வோர் அல்லது நடுத்தர வகுப்பு மக்களையும் எட்டிவிட்டது புலனாகும். இந்த ஆண்டும் இக்கோரிக்கை தொடர்கிறது. ஆனால் நம் நிதியமைச்சர் மன்மோகன் சிங் வருமான வரி வரம்பில் மாற்றமேதுமிருக்காது, வேண்டுமானல் மிகுதி வரியைக் (சர்ஜார்ஜ்) குறைக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் இந்த வருமான வரி தேவைதானா? இதுவரை வருமான வரியால் நம் நாட்டின் பொருளியலிலும் சமூகத்திலும் ஏற்பட்டுள்ள விளைவுகள் யாவை? வருமான வரி தொடரத்தான் வேண்டுமா? அது இல்லை என்றால் என்ன கெட்டுவிடும்? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடுவோம்.

நாமறிந்தவரை வருமான வரியைக் கொண்டு நம் நாட்டில் எந்தப் பொதுவான வளர்ச்சியோ, அல்லது ஏழைகளுக்கு நன்மையோ ஏற்பட்டுள்ளதாகக் கூற முடியாது. அவ்வாறு வளர்ச்சியோ அல்லது ஏழைகளுக்கு நன்மையோ ஏற்பட்டிருப்பதாகக் கூற முடியுமானால் அவற்றோடு நம் மக்கள் மீது ஏறி நிற்கும் அயல்நாட்டுக் கடன் அளவையும் அயற் செலாவணி ஈட்டுவதென்ற பெயரில் ஏற்றுமதியாகும் உள்நாட்டு மக்களின் நுகர்வுக்கு மறுக்கப்படும் பண்டங்களின் மதிப்பையும் ஒப்பு நோக்கினால் நம் மக்களுக்குப் பெரும் இழப்பே மிஞ்சுவது புலனாகும். எனவே வருமான வரியால் நம் மக்களுக்கோ நாட்டுக்கோ எந்தப் பயனும் ஏற்படவில்லை. மாறாக அது விளைத்து வரும் தீங்குகள் எண்ணற்றவை. சிலவற்றைத் தொகுத்துப் பார்ப்போம்.

1) வெள்ளையராட்சிக் காலத்தில் இங்கு வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. விடுதலையை அடுத்த ஆண்டுகளிலும் நிலை இதுதான். வருமான வரி விதிப்புக்கு ஓரு முற்போக்குச் சாயம் ஏற்றப்பட்ட பின்னர் தான் கெடுபிடிகள் தோன்றின. வருமானத்தில் 97.5 சதவீதம் வரை வரிவிதிக்கும் கொடுமை அரங்கேறியது. இப்போது மக்களிடையில் பணக்காரர்களின் எண்ணிக்கையும் பெருகியிருக்கிறது. எனவே வருமான வரி பற்றிய கிலி மக்களிடையில் பெருகியுள்ளது. சட்டத்துக்குட்பட்டுத் தாம் ஈட்டும் பணத்தை வரைமுறையின்றிப் பறிகொடுப்பதை யார்தான் விரும்புவர்? எனவே வருமானங்கள் மறைக்கப்பட்டன. சட்டப்படி ஈட்டப்பட்ட பணம் ″சட்டத்துக்குப் புறம்பான″ கருப்புப் பணமாக மாறிப் பதுங்கியது.

2) தனிமனிதர்கள் கைகளில் திரளும் பெரும்பணம் லாபம் என்ற வடிவில் எளிய மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணம் தான். ஆனால் அவ்வாறு திரளுவதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே நேரம் அவ்வாறு திரளும் பணம் மூலதனமாக மீண்டும் பொருளியல் களத்தில் இறங்குமானால் அதனால் நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் பயன் கிடைக்கும். ஆனால் வருமான வரிக் கொள்கை இந்த நன்மை தரும் வாய்ப்பைக் கெடுத்து மூலதனமாக வேண்டிய பணத்தைக் கருப்புப் பணமாகப் பதுங்க வைத்தது.

3) இவ்வாறு பதுக்கப்பட்ட பணம் வாளாவிருக்குமா? அது திருமணச் சந்தையிலும் கல்விச் சந்தையிலும் புகுந்து அனைத்துத் துறையிலும் சராசரி மக்களின் வாழ்க்கையைக் கெடுத்து விட்டது. தேடுதல் வேட்டை என்ற பெயரில் வருமான வரித்துறையினர், வீடுகளிலும் நிறுவனங்களிலும் புகுந்து நகைகள் மற்றும் விலை உயர்ந்த நுகர்பொருள்களையும் அள்ளிச் சென்று விடுவதால் பணம் படைத்தோர் கட்டடங்களிலும் பிற ஆடம்பரங்களிலும் தேவைக்கு அதிகமாகக் செலவிட்டுப் பணத்தைக் கரியாக்கி விடுகின்றனர். இதன் மூலம் நாட்டுக்கு பெரும் கேடு பயக்கும் ஓர் ஊதாரிப் பண்பாடு பணக்காரர்களிடமிருந்து தொடங்கிச் சமூகத்தின் அடித்தளம் வரை ஊடுருவி விட்டது. நம் மக்களின் வாழ்நிலையையும் நாட்டின் பொருளியல் விடுதலையையும் பாதுகாக்க நம் நாட்டில் திரட்டத்தக்க கடைசித் தம்பிடியைக் கூடச் சேமிக்க வேண்டிய ஓர் உலகப் பொருளியல்ச் சூழலில் இந்த ஊதாரிப் பண்பாடு எனும் மாபெரும் தீமையை சிறுகச் சிறுக உரமிட்டு வளர்த்திருப்பது இந்த வருமான வரிக் கெடுபிடியாகும்.

4) வருமான வரிக் கெடுபிடி ஏற்கெனவே நிலைத்துவிட்ட முதலாளிகளுக்குப் போட்டியாக புதிய முதலாளிகள் உருவாவதைத் தடுக்கிறது. பழையவர்களுக்கு அரணிட்டுக் காத்து அவர்களது முற்றுரிமைக்கு வழிவகுத்து ஆரோக்கியமான ஓரு பொருளியல் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியுள்ளது.

5) வருமான வரி பற்றிய இடைவிடாத அச்சத்தாலும் பதற்றத்தாலும் நம் நாட்டுப் பணக்காரர்கள் முதுகெலும்பில்லாத பெரும் கோழைகளாகிவிட்டனர். நாட்டில் அதிகாரிகளும் அரசியல்வாணர்களும் அவர்களின் துணை பெற்ற போக்கிரிகளும் செய்யும் அட்டூழியங்களை எதிர்க்கும் ஒரு வலுவான இயக்கம் உருவாக முடியாமல் போனது நாட்டின் முதன்மைக் குடிமக்களாகிய பணக்காரர்களிடம் நிலைத்துவிட்ட இந்தக் கோழைத்தனமேயாகும். பணக்காரர்களே ஒதுங்கி ஓடும் போது ஏழை என்ன செய்வான்?

இன்று பொதுவாக அனைவரின் நடுவிலும் குறிப்பாக உயர்த்த வாழ்க்கைத்தரம் உடையவர்கள் நடுவில் குருதிக் கொதிப்பு, நீரழிவு, இதய நோய் போன்றவற்றிற்கு அவர்கள் உண்ணும் உணவு, வாழும் வாழ்க்கைமுறை ஆகியவை மட்டுமே காரணமாகக் கூற முடியாது. இடைவிடாத அச்சமும் பதற்றமும் முகாமையான காரணமாகும். தன் தலை நரைக்காமைக்கு சங்கப் புலவர் பிசிராந்தையார் கூறும் காரணங்களை இங்கு நினைத்துப் பார்ப்பது நன்று.

6) மத்திய அரசின் ஆளும் கட்சியினர் தங்கள் கட்சியிலுள்ளோரையும் பிற கட்சியிலுள்ளோரையும் தங்கள் விருப்பத்திற்கிசைய ஆட்டி வைக்க வருமான வரிக் கெடுபிடிகள் உதவுகின்றன. திரைப்பட நடிகர்களும் பணக்காரர்களும் வருமான வரிக் கொடுமைகளிலிருந்து தப்புவதற்காகவே அரசியல் கட்சிகளைச் சார்ந்து நிற்க வேண்டியுள்ளது.

ஊழல் செய்யும் அதிகாரிகளையும் அரசியல்வாணர்களையும் குற்றவியல் துறையினரைக் கொண்டு புலனாய்வு செய்யாமல் வருமான வரித்துறை கொண்டு தேடுதல் வேட்டை நடத்துவது அவர்களை வெறுமே அச்சுறுத்தி அதே வேளையில் அவர்களைத் தம் விருப்பத்துக்கு வளைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டதாகும். இதற்கும் வருமான வரித்துறை பயன்படுகிறது.

7) வருமான வரியிலிருந்து தப்புவது எப்படி என்ற ஓரே சிந்தனையே பெரும் சிந்தனையாகிவிடுவதால் பணம் வைத்திருப்போரின் கவனம், வளர்ச்சி, மேம்பாடு என்ற திசைகளிலிருந்து விலகி நிற்கிறது. வருமானத்தை மறைக்க வேண்டிய கட்டாயத்திலிருப்பதால் நாணயம், நேர்மை, போன்ற உயர்குணங்களைக் கைவிடுவதற்கு அனைவருக்கும் ஞாயம் கிடைத்து விடுகிறது. நாட்டின் ஒழுக்கப் பண்பாட்டின் சிதைவுக்கு இது அடித்தளமாகிறது.

8) வருமான வரித் தேடுதல் வேட்டைகள் வடிவத்தில் பகற்கொள்ளையை ஓத்தவை. தொலைபேசியைத் துண்டிப்பதற்குப் பகரம் ஓரு காவலர் தொலைபேசியில் நின்று கொள்வார். முன் வாசல் பின் வாசல், நான்கு புறங்கள், புகைபோக்கி, முகப்பு என்று கட்டடம் சுற்றி வளைக்கப்படும். திறவுகோல் கிடைக்கவில்லையானால் பேழைகள் உடைக்கப்படும், பொருட்கள் வாரியிறைக்கப்படும். கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லையானால் அருவருப்பான சொற்கள் உதிர்க்கப்பபடும். நடத்தப்படும் தேடுதல் வேட்டைகளில் மிகப் பெரும்பாலானவை கணக்கில் வருவதில்லை. இவ்வாறு சுருட்டப்படும் செல்வம் உயர்மட்டம் வரை செல்வதற்கான வாயில்களும் வழிமுறைகளும் உள்ளன.

தேடுதல் வேட்டையின் இந்த வடிவம் மத்திய காலத்தில் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் சிற்றரசர்கள் தத்தம் ஆட்சிப் பகுதியில் இருந்த பணக்காரர்களைக் கொன்று அவர்களின் செல்வத்தைக் கவர்ந்து கொண்டதைப் போன்றது. இங்கு கொலை மட்டுமே வேறுபாடு.

தீவட்டிக் கொள்ளையின் போது கொள்ளைக்கு ஆளாவோன் மீது அயலவர்களுக்கு பரிவு இருக்கும். உதவிக்கு வருவார்கள். ஆனால் இன்றோ மக்களின் நலன்களைக் காப்பதற்காக அரசு எடுக்கும் நடவடிக்கை என்று மக்கள் ஓதுங்கி விடுவதுடன் மக்களைக் கசக்கிப் பிழிந்து சேர்ந்திருக்கும் பணம் தானே என்ற பகை நிலையும் உருவாகி விட்டிருப்பது பெரும் வேதனை.

தேடுதல் வேட்டையின் இந்த வடிவத்தை ஆழ்ந்து அலசினால் நம் மக்களின் அடிப்படை உரிமைகள், குடி உரிமைகள், பொருளியல் உரிமைகள், போன்ற கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியாது.

இவ்வளவு தீங்குகளுக்கும் காரணமான இந்த வருமான வரியின் அளவுதான் என்ன? 1993-94 ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் மட்டும் இது மொத்த வருமானத்தில் 6 நூற்றுமேனியாக உயர்ந்துள்ளது. அதற்கு முன் தொடர்ந்து 5 நூற்றுமேனியாகவே இரூந்து வந்தது.

இவ்வாறு கிடைக்கும் பணம் பெரும்பாலும் சம்பளப் பட்டியலில் கையெழுத்திட்டுப் பெறும் ஊழியர்களிடமிருந்து வருவதுதான். பெரும் முதலாளிகளிடமிருந்து வருவது புத்தகக் கணக்கில்தான். ஏற்றுமதி இறக்குமதி உதவித்தொகைகள் மற்றும் பல்வேறு ஊக்குவிப்புத் தொகைகளைக் கணக்கிட்டால் இந்த முதலாளிகளுக்கு நிகரமாக அரசே ஆண்டுதோறும் பணம் வழங்குவதாக முடியும். அதுபோகக் கணக்கிலெடுக்க முடியாத மிகச் சிறு அளவு தான் சராசரிப் பணக்காரர்களிடமிருந்து கிடைக்கும்.

வருமான வரித்துறையின் மொத்த நடவடிக்கையையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் மாதச் சம்பளக்காரர்களிடமிருந்து பெறப்படும் வரிப் பணத்தில் செயற்படும் வருமான வரித்துறையை அரசியல்வாணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் நலன்களுக்காகப் பொதுமக்களையும் பணக்காரர்களையும் அச்சுறுத்துவதற்காகவும் தங்கள் அதிகார ஆதிக்கத்தை மக்கள் மீது நிலைநிறுத்துவதற்காகவும் பயன்படுத்துவதாகவே முடிகிறது. இதன் விளைவாக மக்களின் சேமிப்பு மனப்பான்மையும் முதலீட்டு மனப்பான்மையும் புதியன படைக்கும் சிந்தனையும் அழிக்கப்படுகிறது. உள்நாட்டு மூலதனம் துரத்தப்பட்டு ஓளிந்து கொள்வதால் உள்நாட்டுத் தொழில் நுட்பமும் வளர வழியற்றுப் போகிறது.

எனவே, வருமான வரித்துறை முற்றாக ஓழிக்கப்பட வேண்டும். அதன் மூலம் நமக்கிருக்கும் அயல்நாட்டுக் கடன்களைப் போல் பல மடங்கு மதிப்புள்ள கருப்புப் பணம் என்று வருமான வரித்துறையால் முத்திரை குத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ள பணம் மூலதனமாகப் பொருளியல் களத்தில் இறங்க வழி ஏற்பட வேண்டும். மக்களின் (தனியார் எனும் போது அது வெளிநாட்டவரைப் பிரித்துக் காட்டாது, மக்கள் என்றால் உள்நாட்டவரை மட்டும் குறிப்பிடும்) பொருளியல் நடவடிக்கைகள் பல்கிப் பெருகும். இதன் விளைவாகச் சுங்கவரி போன்ற வரி வரவுகள் ஓழிக்கப்பட்ட வருமான வரியை விடப் பல மடங்கு உயரும். மக்களின் முனைவுகளின் விளைவாக நம் சொந்தத் தொழில்நுட்பமும் நம் பொருளியல், தொழில்நுட்ப அடிமைத்தனம் நீங்கும்.

″ஒரு நாகரிகத்தின் வளர்ச்சிக்கு.............. மக்கள் பொதுவாகத் தாம் திரும்பிய இடமெல்லாம் சாவையோ வரிகளையோ எதிர்பார்க்க வேண்டியதில்லை என்று உணரும் நிலை வேண்டும்″ என்றார் நாகரிகத்தின் கதை என்ற புகழ் பெற்ற வரலாற்று நூலை எழுதிய வரலாற்று மேதை வில் டூராண்ட். இன்றைய இந்திய நிலைமைக்கு எவ்வளவு துல்லியமான விளக்கமாக இது அமைந்துள்ளது!

பின் குறிப்பு:-

வருமான வரித்துறை இப்பொழுது எளிய பெட்டிக் கடை உட்பட அனைத்துத் தொழில் மற்றும் வாணிக நிலைய உரிமையாளரையும் ஆண்டுக்கு ரூ. 1400/- வருமான வரியாகச் செலுத்தி ′′தேடுதல் நடவடிக்கைகளைத் தவிர்த்துக் கொள்ளுமாறு′′ அறிவுரை வழங்கி அதற்கென ஓரு படிவத்தையும் வழங்கி வருகிறது. இது நம் மக்களின் அடிப்படைப் பொருளியல் உரிமையில் மிச்ச மீதியையும் பறிக்கும் ஓரு கடுமையான அச்சுறுத்தலாகும். நமது அமைதியான வாழ்வுக்கும் பொருளியல் நடவடிக்கைகளுக்கும் விடப்பட்டுள்ள நேரடி அறைகூவலாகும். இவ்வறைகூவலை நாம் ஓன்றிணைந்து எதிர் கொண்டு முறியடிப்பது அனைத்து மக்களின் மன அமைதிக்கும் பொருளியல் வாழ்வுக்கும் இன்றியமையாததாகும்.

வரி செலுத்துவோர் சங்கத்தில் இணைந்து பயனடைவீர்.

(4-2-1991 தினமணி இதழில் வெளியான குமரிமைந்தனின் இக்கட்டுரை பொருளில் மாற்றமின்றி சில சொற்கள் மாற்றப்பட்டு பின்குறிப்புடன், திருநெல்வேலியிலிருக்கும் வரி செலுத்துவோர் சங்கத்தால் - பதிவு எண். 25/93 - துண்டறிக்கையாக வெளியிடப்பட்டது. தற்போது இங்கு வெளியிடப்படுகிறது.)

1 மறுமொழிகள்:

பெயரில்லா சொன்னது…

கலக்கல் பதிவு. உங்களுக்கு பாராட்டுக்கள். இதே போல விரைவில் ஒரு சூப்பர் பதிவு பிரபல வலைப்பூவில் வரப்போகிறது. அதுவரை உங்கள் போராட்டத்தை தொடர .
வருமான வரி ஒழிக!