17.6.07

விதைக்காமல் "அறுவடை" நடைபெறுமா?

தமிழக அரசின் தளர்வில்லா நெருக்குதலால் தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளிலும் பிற கட்டடங்களிலும் மழை நீர் அறுவடை அமைப்புகள் நிறுவப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. மழை நீரை அறுவடை செய்வதற்கான பயிராகிய மழைநீரைத் தான் இப்போது தமிழக மக்கள் எதிர்பார்த்து ஒவ்வொரு நொடியும் நிலைத் திணைகளாகிய தாவரங்களைப் போலவே வானத்தை நோக்கி நிற்கிறார்கள். தனித் தனிச் சமய வழிபாடுகள், கூட்டு வழிபாடுகள், வேள்விகள், நடத்துகின்றனர். கழுதைகளுக்கு, பருந்துகளுக்கு, மரங்களுக்கு மணம் நடத்திப் பார்க்கிறார்கள். ஆனால் மழைதான் பெய்யவில்லை. திரளும் மேகம் மேலே நின்று நம் மாநிலத்தைப் பார்த்துவிட்டு இடி, மின்னல் எனும் வழக்கமான முணுமுணுப்புகள் கண்சிமிட்டல்கள் கூட இன்றி அப்பால் நகர்ந்து விடுகின்றன. ஏன்?

காடுகள் அழிக்கப்பட்டது தான் காரணம் என்கிறார்கள். உண்மையில் காடுகள் மழைப் பொழிவில் ஆற்றும் பங்கு தான் என்ன? பொதுவாகக் கூறப்படுவது போல் மரங்களுக்கு மேகத்தையோ மழையையோ ஈர்க்கும் மந்திர ஆற்றல் கிடையாது. காற்றில் கலந்திருக்கும் நீராவியின் செறிவால் காற்றின் அழுத்தம் உயர்கிறது. நீராவியின் விகிதம் "ஈரிப்பு"(Hcemidity) அல்லது ஆவி அழுத்தம் எனப்படும். ஒரு குறிப்பிட்ட ஈரிப்புக்கு ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் காற்றிலுள்ள ஆவி நீர்த்துளியாக மாறும். இதனைத் "துளிநிலை" என்பர். காற்றின் வெப்பநிலை உயருந்தோறும் "துளிநிலை"யும் உயரும். அதாவது குறைந்த வெப்ப நிலையில் துளி நிலையை ஏற்படுத்தம் ஈரிப்பு விகிதம் வெப்பநிலை உயர்ந்தால் துளிநிலையை ஏற்படுத்தாது. இந்த வகையில் காடுகள் காற்றின் வெப்ப நிலையை மட்டுப் படுத்துவதில் பங்காற்றுகின்றன. காற்றின் வெப்பம் உயருந்தோறும் நிலைத் திணைகள் தங்கள் இலைத்துளைகளின் வழி நீராவியை வெளியேற்றி அந்த வெப்பத்தைச் சமன் செய்கின்றன. காற்றில் ஏற்கனவே உள்ள நீராவியுடன் அது கடலைக் கடந்து வரும் போது சுமந்து வரும் நீராவியும் நிலைத் திணைகளால் வெளியிடப்படும் நீராவியும் அதனால் குறையும் வெப்பமும் துளிநிலையைத் தூண்டி மழைப்பொழிவு எளிதாகிறது.

காடுகள், ஒரு குளத்தில் அமைந்துள்ள மறுகால் போன்று செயற்படுகின்றன. பெருமழைகளின் போது குளத்தின் கொள்ளவுக்கு மேல் நீர் தேங்கி குளத்தை உடைக்காமல், உரிய நேரத்தில் மிகுதி வெளியேற்றிக் குளத்தை மறுகால் காப்பது போல் வெப்பம் மிகுந்து அதனால் காற்றில் துளிநிலை உருவானது தடைபட்டு அளவுக்கு மீறி நீராவி காற்றில் தங்கி அதன் விளைவாகப் பெரும் புயல்களும் பேய்மழைகளும் உருவாகி அழிவுகளை விளைவிக்காமல் காற்றில் திரளும் நீராவியை அவ்வப்போது துளிநிலைக்குக் கொண்டு வந்து மழையைப் பொழிவிப்பதில் காடுகள் முதன்மைப் பணி ஆற்றுகின்றன. இதனால் நீண்ட வரட்சிகளும் பேய்மழைகளுமான பாலைவனங்களின் நிலைமை உருவாகாமல் காடுகள் தடுக்கின்றன.

இத்தகைய விளைவைத் தருவதற்கு கதிரொளி ஊடுருவ முடியாத அடர்காடுகளால் தான் முடியும். உயர்ந்தோங்கிய மரங்கள், அவற்றிற்கிடையில் உயரம் குறைந்த பல்வேறு வகைச் செடிகள், அவற்றைப் பின்னிப் பிணைந்து மரங்களின் உச்சி வரை படர்ந்து செல்லும் கொடிகள் என்ற நிலைத் திணைப் பன்மையம் இதனால் தான் சூழிலியர்கள் எனப்படும் இயற்கைச் சமநிலைக் காப்பாளர்களால் வலியுறுத்தப்படுகிறது.

காற்றில் திரளும் நீராவியை அவ்வப்போது மழையாக்கும் காடுகள் வளர்க்காமல் வெறும் மழை நீர் அறுவடை அமைப்புகளை மட்டும் உருவாக்கினால் சீர்மை அழிந்த மழைப் பொழிவு பேய் மழைகளை உருவாக்கி அவ்வமைப்புகளை ஒரே நேரத்தில் அழித்துவிடும்.

எனவே பாதுகாக்கப்பட்ட காடுகளை நிலைப்படுத்த வேண்டும். மரங்கள், தோட்டப்பயிர்கள், எவையாயினும் காடுகளை அவற்றுக்காகப் பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த வேண்டும். இன்று தோதகத்தி உட்பட அனைத்து வகை மரங்களையும் சமநிலத்தில் உருவாக்கி வரலாறு படைத்துள்ளனர் தமிழக வனத்துறையினர். ஆற்றுப் படுக்கைகளில் பொதுப் பணித் துறையின் துணையுடன் இவ்வருஞ்செயல் நிகழ்ந்துள்ளது. அனைத்து வகைத் தோட்டப் பயிர்களையும் பசுமைக் குடில்கள் மூலம் இயலச் செய்து மனித குலத்துக்கே வழிகாட்டியுள்ளனர் இசுரேலியர்கள். எனவே தமிழகத்திலுள்ள தரிசுநிலங்கள் அனைத்திலும் மரக்காடுகளும் பசுமைக் குடில் தொழில் நுட்பத் தோட்டங்களும் அமைப்பதில் பொருளியல் வலிமையுள்ள உள்நாட்டுத் தொழில் முனைவோரை ஈடுபடுத்தி முழு ஊக்குவிப்பையும் அரசு வழங்க வேண்டும். மலைவாழ் மக்கள் அனைவரையும் சம நிலத்துக்குக் கொண்டு வந்து இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும். மழைச் சீர்மை அழிந்து பஞ்சம் ஏற்பட்டு பஞ்சைகளாய், அடிமைகளால் நாட்டை விட்டோடுவதை விட திட்டமிட்ட மறுவாழ்வு உறுதியானது; தன்மானத்துக்குப் உகந்தது. பாதுகாக்கப்பட்ட காடுகளுக்குள் அவற்றின் காவல் ஊழியர் தவிர்த்த எவரும் நுழைவது மரண தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட வேண்டும். நாட்டு மக்களின் உயிர்த்துணையாகிய நீரைத் தரும் மழையைப் பொழிவிக்கும் ஒரு பொறியாக பாதுகாக்கப்பட்ட காடுகளைக் கருதினால் இது ஒரு கடும் தண்டனை என்று யாரும் கருத முடியாது.

மழைநீர் அறுவடை அமைப்புகளைக் கட்டுவதால் இயல்பு மீறிய பெருமழை நீரை அறுவடை செய்ய முடியாது என்பது மட்டுமல்ல, பாறையைத் துளைத்து நீரை உறிஞ்சும் "உயர்" ஆழ்த்துளைக் கிணறுகளால் உறிஞ்சப்பட்ட நீரையும் மீண்டும் உட்செலுத்த முடியாது. நீரை வாங்கி உட்செலுத்துவதுடன் தன்னிடமும் வைத்திருக்கும் புரைமையுடைய நீர்கொள்ளி மண் வகைகளினுள் அல்லது அத்தகைய நீர்கொள்ளிகளுடன் தொடர்பு கொண்டுள்ள பாறையடி நீர் கொள்ளிகளின் தான் மழைநீர் அறுவடை அமைப்புகள் மூலம் நீரைத் திரட்டி வைக்க முடியும். எனவே தமிழக்த்தை நிலத்தடி நீர் கொள்ளல் என்ற அடிப்படையில் நிலத்தடி மண்ணை முழுமையாக ஆய்வு செய்து மண்டலங்களாகவும் உள்மண்டலங்களாகவும் பிரித்து ஒவ்வொன்றிலும் மழைநீர் எளிதில் உட்சென்று, உறிஞ்சப்படும் நீரை மழைப் பொழிவால் எளிதில் மிட்கும் ஆழத்தை வரையறுத்து அதற்கு மிகாமல் துளைக்கிணறுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இத்தகைய கட்டுப்பாடுகளை மாநில அரசு நேரடியாகச் செயற்படுத்து முடியாது. உள்ளாட்சிகள் தாம் இதற்குப் பொருத்தமான அமைப்பு. அதுவும் உள்ளாட்சிகளுக்கும் மக்களுக்கும் இன்றிருப்பதை விட பலமுனைகளிலும் நெருக்கமான உறவு வேண்டும். எனவே மழைநீர் அறுவடை என்பது மழையே "விதைப்பது" விதைத்ததை முளைக்க வைப்பது, முளைத்ததை அறுவடை செய்து உரிய வகையில் திரட்டி வைப்பது, திரட்டியதை வீணாகாமல் பகுத்தறிவுடன் பயன்படுத்துவது ஆகிய பல உறுப்புகளைக் கொண்ட நடைமுறையாகும். அடிப்படையான இந்த ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளாமல் மழை நீர் சேமிப்பு அமைப்பு என்ற பெயரில் தமிழ் நாட்டு அரசு வடிவமைத்துக் கொடுத்துள்ள அமைப்பை உருவாக்குவது பிளாஸ்டிக் பைகளுக்கு விதிக்கப்பட்ட தடைகளால் தற்காலிகத் தொய்வடைந்த தொழிலகங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டமாகச் சுருங்கி விடும்.

(இப்போது தமிழக அரசு பிறப்பித்து நிறைவேற்றியிருக்கும் "தலைக்கவச ஆணை"க்கு இணையானது இது.)

0 மறுமொழிகள்: