6.5.07

குமரி மாவட்டக் கலவரம் - ஒரு பகுப்பாய்வு (8)

இணைப்பு 1

நாள்: 04-04-2000.

அன்பு நண்பர் பொன்னீலன் அவர்களுக்கு வணக்கம்.


இதற்கு முன்பு நாம் சந்தித்த போது குமரி மாவட்டக் கலவரம் குறித்து ஒரு புதினம் எழுத இருப்பதாகத் தாங்கள் தெரிவித்தீர்கள். நான் அது தொடர்பாக ஒரு கட்டுரையெழுதியுள்ளதாக, அதைத் தங்களுக்கு விடுப்பதாகக் கூறினேன். ஏறக்குறைய 9 மாதங்களுக்குப் பின் அதை விடுக்கிறேன். என் வேலைப்பளு குறையும் என்பதற்காகத் தோழர் ஒருவரிடம் முதலில் எழுதிய குறிப்பைப் படியெடுக்க வேண்டினேன். அவரால் இயலவில்லை. எனவே அவரிடமிருந்து வாங்கிப் படியெடுத்து இப்போது விடுக்கிறேன் .பொறுத்தருள்க.


கலவரத்தின்போது நான் மதுரையிலிருந்தேன். நானும் திக்கிலான்விளையைச் சேர்ந்த கவிஞர் திரு.சா.வேலப்பன் என்பவரும் நாடார் மகாசன சங்கத்தில் சென்று செய்திகள் கேட்டோம். அவர்கள் திரு.பச்சைமாலைக் காட்டினார்கள். அப்புறம் தான் நான் அவரைச் சந்தித்தேன். அவர் மூலம் தான் புத்தளம் முருகேசன், ஆசிரியர் பரமசிவன் போன்றவர்களை அறிந்தேன். ஈத்தாமொழி தியாகராசனின் கருத்துப்படி நாடார் ஒற்றுமை இயக்கம் ஒன்று அமைக்க முயன்றோம். அதில் வெற்றிபெறவில்லையாயினும் பல செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அவற்றை வைத்து என் சொந்த அணுகளில் இக்கட்டுரையை முடித்தேன். இக்கட்டுரையை என் நெருங்கிய தோழராகச் செயற்பட்ட வெங்காலூர் குணாவுக்கு விடுத்தேன். அதில் கிறித்துவர்களைப் பற்றிய என் கருத்துகள் அவருக்கு வெறுப்பேற்றியிருக்கும்மென்று நினைக்கிறேன். வேறு சில கருத்து வேறுபாடுகளும் இருந்தன. ஒரு சில ஆண்டுகளில் அவர் தன் தொடர்புகளை அறுத்துக் கொண்டார். இக்கட்டுரை 1983 ஆண்டு இறுதியில் முடிந்தது.

இரண்டாம் கட்டுரை ஏறக்குறய 1½ ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. இக்கட்டுரை எழுதப்பட்ட பின் முத்துக்குட்டியடிகளைப் பற்றிய இரண்டு முகாமையான செய்திகள் என் கவனத்துக்கு வந்தன. ஒன்று தங்கள் அன்னையாரின் கவலை தருவது. தங்கள் முப்பாட்டனாரும் முத்துக்குட்டி அடிகளும் தொடக்கத்தில் இணைந்து செயற்பட்டாலும் பின்னர் பிரிந்து தனி வழிகளில் சென்றதும். வழிபாடு பற்றிய அணுகலில் இருவரும் எதிரெதிர் திசைகளில் சென்றனர். தங்கள் முப்பாட்டனர் பழைய முறையைத் தொடர்ந்தார். அடிகள் புதிய முறையொன்றைப் புகுத்தினார். இதில் அவர்களுக்கிடையில் உள்ள தனிப்பட்ட முரண்பாடுகளின் பங்கென்ன, குமுகம் பற்றிய கண்ணோட்ட முரண்பாட்டின் பங்கென்ன, அவர்கள் சார்ந்திருந்த குமுக உறுப்பினர் நலன்கள் யாவை என்பது குறித்து ஆய்வது பயனளிக்கும். இரண்டாவது செய்தி நண்பர் ஒருவர் மூலமாக அறிந்தது. சிவகாசி - இராசபாளையத்தின் பக்கத்திலுள்ள திருத்தங்கல் எனும் ஊரில் ஒரு அய்யாவழி நிழல் தாங்கல் இருக்கிறதாம். அக்கோயிலின் தலபுராணத்தில் உள்ள செய்தி: முத்துக்குட்டியடிகள் ஒரு பார்ப்பனரிடம் மூன்றாண்டுகள் தங்கிக் கல்வி பயின்றாராம். இந்தத் தலபுராணத்தைப் பெற நண்பர்கள் மூலம் முயற்சி மேற்கொண்டதில் பலனில்லை. எனக்கும் நேரமில்லை. எனக்கு ஒய்வூதியம் மிகக குறைவாகவே வருகிறது. குடும்பத்தை நடத்தவும் இதழ் நடத்தவும் இயக்கம் நடத்தவும் தேவைப்படும் பணத்தை நானே ஈட்ட வேண்டியுள்ளது. இதற்காகப் பெரும்பகுதி நேரம் செலவாகிவிடுவதால் என் விருப்பப்படி செயற்பட முடிவதில்லை. தாங்கள் ஒவ்வொரு நூலும் எழுதும் முன் களப்பணிக்காகக் கொஞ்சம் நாள் செலவழிப்பதாக ஒரு முறை கூறியுள்ளீர்கள். இது குறித்தும் களப்பணி செய்தீர்களாயின் நன்று.

இந்தச் செய்தி உண்மையாயின் திருச்செந்தூர்க் கடலில் அடிகள் தவமிருந்ததாகக் கூறப்படும் கூற்றின் பொய்ம்மை வெளிப்படும். தங்களுக்கும் என்னைப் போல் இறும்பூதுகளில்(அற்புதங்களில்) நம்பிக்கை இருக்காது என எண்ணுகிறேன். அடிகள் 19ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஐரோப்பியர் கல்வியால் நம் நாட்டில் பரவியிருந்த புதிய அறிவுத்துறைகளைப் பற்றி ஓரளவேனும் அறிந்திருந்தார் என்பது புலப்படும். அவரது இயக்கத்தின் முற்போக்குக் கருத்துகளின் பின்னணி பற்றிய உண்மைகள் வெளிப்படும். எனவே அருள் கூர்ந்து இந்தச் செய்திகளின் உண்மை பற்றித் தெரிந்து எழுதுக.

ஒருவேளை இந்தக் கட்டுரைகளை நான் தங்களுக்குக் காலங்கடந்து விடுக்கிறேனோ என்று ஐயுறுகிறேன். அப்படியாயின் பொறுத்தருள்க. இயன்றால் ஒரு மறுமொழி எழுதுக.

அன்புடன்,
குமரிமைந்தன்.

0 மறுமொழிகள்: