14.5.07

பழைய பாண்டம் - புதிய பண்டம் (3)

உலகில் உள்ள ஆண்டுமுறைகள் அனைத்தையும் உருவாக்கியவர்கள் குமரிக்கண்ட மக்களே. 29½ நாட்களைக் கொண்ட நிலா மாதங்களையும் 354 நாட்களைக் கொண்ட நிலவாண்டையும் வகுத்தவர்கள் அவர்களே. இன்று உலகில் தூய நிலவாண்டு முகம்மதிய ஆண்டே. ஊதர்கள், சீனர்கள், சப்பானியர்கள் மற்றும் தென்கிழக்காசிய, தென்னமெரிக்க நாடுகளில் வழங்கும் 19 ஆண்டுகளைக் கொண்ட சுழற்சியில் 7 ஆண்டுகளுக்கு 13 மாதங்களுடன் ஒரு கதிர்-நிலவாண்டு (நிலா மாதங்களைக் கொண்ட ஆண்டுகளைக் கதிராண்டுகளுடன் இணைத்தல்) முறை உள்ளது. நம் ஐந்திரங்களில் (பஞ்சாங்கங்களில்) இந்த ஆண்டுப் பிறப்பை “துவாபர யுகாதி” என்று குறிக்கிறார்கள். வட இந்தியாவிலும் ஆந்திரத்திலும் கருநாடகத்திலும் வழங்கும் ஆண்டுமுறை 2½ ஆண்டுகளுக்கு ஒரு மாதத்தைச் சூனிய மாதம் என்று கழித்து கதிராண்டுடன் நிலவாண்டை இணைக்கும் முறையாகும். வாரம் → மாதம் → ஆண்டு என்று ஒரே சீராக இருக்க வேண்டும் என்பதற்காக 27 உடன் அபிசித்து எனும் ஒன்றைச் சேர்த்து 28 நாண்மீன்களாக்கி (நட்சத்திரங்களாக்கி) 28 x 12 = 336 நாட்களைக் கொண்ட சாவனம் (அபிதான சிந்தாமணி “சம்வச்சரம்” பார்க்க) எனும் ஆண்டையும் நம் முன்னோர் உருவாக்கிப் பின்னர் கைவிட்டுள்ளனர்.

கதிரவன் தன்னைத் தானே ஒரு முறை சுற்றிக் கொள்ள கிட்டத்தட்ட 25⅓ நாட்களாகின்றன. புவி கதிரவனைச் சுற்றி வருவதால் இங்கிருந்து பார்க்கும் போது அது ஏறக்குறைய 27⅓ நாட்களுக்கு ஒரு முறையாகத் தோன்றுகிறது. கதிரவனின் ஊடாகச் செல்லும் ஒரு துளை கரும்புள்ளியாகத் தெரிகிறது. அதுவும் 27⅓ நாட்களுக்கு ஒரு முறை புவியை நோக்கி வருகிறது. அப்போது வீசும் காந்தப் புயலினால் புவியில் தொலைபேசிகளின் இயக்கம் தடுமாறுவதாகக் கூறப்படுகிறது. நாம் நோன்பு கடைப்பிடிக்கும் கார்த்திகை நாளுக்கும் இதற்கும் தொடர்பு உண்டா என்பதை ஆய வேண்டும்.

இந்த அடிப்படையில் வான மண்டலத்தை 27 ஆகப் பிரித்து ஒவ்வொரு பிரிவிலும் உள்ள துலக்கமான விண்மீன் கூட்டத்தைத் தேர்ந்தெடுத்து அதற்கு ஒரு வடிவம் கொடுத்து அந்த வடிவப் பெயர்களை அந்த 27 நாண்மீன்களுக்கும் இட்டனர். தனி மீனை விண்மீன் என்றனர். (சமற்கிருதத்தில் நாண்மீன் விண்மீன் இரண்டையும் நட்சத்திரம்; நாள் + சத்திரம் = நாள் இருக்குமிடம் என்றே அழைக்கின்றனர்).

ஒரு நிறைமதி நாளில் நிலவுக்கு அப்பால் இருக்கும் விண்மீன் அடுத்த நிறைமதி நாளில் இருப்பதில்லை. ஏறக்குறைய 12 மாதங்களுக்குப் பின்பே மீண்டும் அவ்வாறு நிகழ்கிறது. எனவே 12 மாதங்கள் கொண்ட ஒரு காலச் சுழற்சியை ஆண்டு எனக் கடைப்பிடித்ததுடன் வான மண்டலத்தை 12 சம பாகங்களாகப் பகுத்;து ஒவ்வொன்றுக்கும் அடையாளமாக ஒரு விண்மீன் கூட்டத்தையும் அதிலிருந்து ஓர் உருவத்தைக் கற்பனை செய்து அதற்குப் பெயரையும் வழங்கினர். அதற்கு ஓரை (ராசி) என்று பெயரிட்டனர்.

ஓரை என்ற சொல் நேரம் எனப் பொருட்படும் ஓரா (Hora) என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்ததாகப் பல தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் தமிழில் ஓரை என்பதற்கு மகளிர் விளையாட்டு மகளிர் சேர்ந்து தங்குமிடம், மகளிர் கூட்டம் என்ற பொருட்களும் உண்டு. விண்மீன் கூட்டங்களாக இருப்பதால் தான் அவற்றை ஓரைகள் என்றனர் நம் முன்னோர். ஓரை என்பதற்கு Team என்ற ஆங்கிலச் சொல் பொருத்தமாக இருக்கும். ஓரை முதலில் கூட்டத்தை, பின்னர் விண்மீன் கூட்டத்தை, அப்புறம் அவ்விண்மீன் கூட்டம் காட்டும் நேரத்தைக் குறிப்பதாகி அந்த வடிவத்தில் கிரேக்கத்துக்குச் சென்றுள்ளது.

கதிரவன் சுழற்சியை நோட்டமிட்டு உருவாக்கிய நாண்மீன் பகுப்பை நிலவுடனும் நிலவின் இயக்கத்தை நோட்டமிட்டு வகுத்த ஓரைப் பகுப்யைச் கதிரவனின் இயக்கத்தைக் கணிக்கவும் தமிழர்கள் பயன்படுத்தினர். கதிரவனைப் பொறுத்து இதற்கு ஒரு தேவையும் ஏற்பட்டது. கதிரவன் ஆண்டுக்கொருமுறை தெற்கு வடக்காக நகர்ந்து கொண்டிருக்கிறது. தெற்கே மகரக் கோட்டிலிருந்து புறப்பட்டு வடக்கே கடகத் திருப்பம் சென்று மீண்டும் மகரக் கோட்டுக்கு வருகிறது. இது தெளிவான காலச் சுழற்சி. உலகெங்கும் பருவ காலங்களும் உயிர்களின் இனப்பெருக்கமும் இந்தச் சுழற்சியின் வரிசையிலேயே இயங்குகின்றன.

புவியின் நிலப்பரப்பில் பெரும்பகுதி தெற்கில் இருந்தது. நிலநடுக்கோடு மக்கள் புகமுடியாத அடர்ந்த காடு. மகரத் திருப்பம் பாலையும் பனிப் பகுதியும் நெருங்கி மனிதன் மயிர் உதிர்த்து முழுமை பெற்ற இடம். இங்கு தெற்கே விழும் நிழல் ஒரேயொரு நாள் மட்டும் காலடியில் விழுந்து விட்டு மீண்டும் தெற்கு நோக்கித் திரும்பிவிடும். இதனை ஆண்டுப் பிறப்பாகக் கொள்வது பொருத்தம். இவ்வாறு இன்றைய தைப்பொங்கலுக்கு இணையான ஒரு நாளில் கதிராண்டு தொடக்கம் வைக்கப்பட்டது. இங்கு தான் இராவணனின் தென்னிலங்கை இருந்தது.

இராவணனின் தமையன் குபேரன். அவன் தன் தந்தையான மாலியவந்த னிடமிருந்து இலங்கையைக் கைப்பற்றினான். மாலியவந்தன் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து இராவணனைப் பெற்றான். அவன் இலங்கையிலிருந்து குபேரனைத் துரத்தினான். குபேரன் நில நடுக்கோட்டிலிருந்த மேருவிற்குச் சென்றான் என்கின்றன நம் தொன்மங்கள்.

மேரு என்பது ஒரு மலைமுகடு. பொதுவாக மலைமுகடுகளை மேரு என்பதுண்டு. யாழில் உள்ள மேடுகளை மேரு என்று தான் அழைப்பர். இங்கு மேரு என்பது நில நடுக்கோட்டில் இருந்த மலைமுகடு. பனி மூடிய அதன் உச்சியால் அது வெள்ளி மால்வரை என்று அழைக்கப்பட்டது. அதைத் தான் கயிலை என்று நம் தொன்மங்கள் கூறின. அங்கிருந்து இடம் பெயர்ந்த மக்கள் தாங்கள் குடியேறிய இடத்தை “சுமேரு” “சுமேரியா” என்றனர். மேருவே உலக நடு; அதனைச் சுற்றியே மேகங்கள் நகர்கின்றன என்கின்றன ஐந்திறங்கள்.

நம் மரபில் மூன்று இலங்கைகள் உள்ளன. ஒன்று தென்னிலங்கை. அது இராவணனின் தலைநகரம். மகரக்கோட்டில் உள்ளது. இன்னொன்றின் பெயர் “நிரட்ச”லங்கை. அதாவது அட்சம் இல்லாதது. அதாவது 0°அச்சக் கோட்டில், அதாவது நில நடுக்கோட்டில் உள்ளது. இது பற்றிய பதிவு ஐந்திறங்களில் உள்ளது. இந்த நிரட்சலங்கையை “லங்காபுரி” என்று மயனால் எழுதப்பட்ட சூரிய சித்தாந்தம் கூறுகிறது. லங்காபுரி, உரோமகபுரி, சித்தபுரி, பத்திராசுவம் என்ற நான்கு நகரங்கள் ஒன்றிலிருந்து ஒன்று 90° மேற்காக அமைந்திருப்பதாக அபிதான சிந்தாமணி, தமிழ் மொழி அகராதி மற்றும் சூரியசித்தாந்தம் ஆகிய நூல்கள் குறிப்பிடுகின்றன. இவற்றுக்கு மேகலா நகரங்கள் என்று பெயர். நில நடுக்கோட்டை நம் முன்னோர் மேகலைக்கோடு (மேகலாரேகை) என்றே குறிப்பிட்டனர். மேகலை என்பது “மேல்கலை” அரையில் (உடலின் நடுவில்), உடைக்கு (கலைக்கு) வெளியே அணியும் ஓர் அணி ஆகும்.

மணிமேகலைக் காப்பியத் தலைவி மணிமேகலைக்கு மணிமேகலைத் தெய்வத்தின் பெயரை அவளது தந்தை கோவலன் இட்டான். அதற்குக் காரணம் அவனது மூதாதையரில் ஒருவர் கடலில் கப்பல் உடைந்து தத்தளிக்கையில் மணிமேகலைத் தெய்வம் அவரைக் காப்பாற்றியதற்கு நன்றி தெரிவிப்பது.

புத்த சாதகக் கதைகள் என்பவை புத்தர் எடுத்த 550 பிறவிகளில் நடந்தவையாகக் கூறப்படும் கதைகளின் ஓரு தொகுதி. அதில் ஒன்றில் காவிரிப்பூம்பட்டினத்து வாணிகரான அவர் கடலில் தத்தளிந்த போது அவரது மன ஊக்கத்தை மெச்சி மணிமேகலைத் தெய்வம் காப்பற்றியது என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கரை சேர்ந்த வாணிகன் அந்நாட்டு மக்களால் அரசனாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அக்கதை கூறுகிறது. தாய்லாந்து மன்னன் அவ்வாறு அரசனாக்கப்பட்டவன் என்று அந்நாட்டு வரலாறு கூறுகிறது. இவ்வாறு நில நடுகோட்டில் சமதொலைவுகளில் நான்கு நகரங்களும் அவற்றுக்கு மேகலா நகரங்கள் என்ற பொதுப்பெயரும் கடலில் கப்பல் கவிழ்ந்து தத்தளிப்போரை மணிமேகலைத் தெய்வம் என்றொரு தெய்வம் காப்பாற்றியதாகப் பழங்கதைகள் பதிந்திருப்பதாலும் இந்நான்கு நகரங்களும் கடல் கண்காணிப்பு நிலையங்கள் என்றும் அவை கப்பல்கள் கவிழ்ந்து தத்தளிப்பவர்களைக் காக்கும் பணியைச் செய்து வந்தன என்றும் கொள்ளலாம். அந்தக் கட்டமைப்பே பின்னர் மணிமேகலா தெய்வம் என்று தொன்ம வடிவம் பெற்றுள்ளது.

பண்டை உலகில் இருபெரும் மக்களினத்தினர் வாழ்ந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர். அவர்களில் ஒரு சாரார் மஞ்சள் இனத்தினர். இவர்கள் சுறவ(மகர)க் கோட்டுப் பகுதியில் வாழ்ந்தனர். இன்னொரு பகுதியினர் கறுப்பர்கள். இவர்கள் நில நடுப்பகுதியில் வாழ்ந்தனர். மஞ்சள் இனத்தினர் அடிக்கடி கப்பல்களில் வந்து கறுப்பின மக்களைத் தாக்கிவிட்டுக் விரைந்து கப்பலில் சென்று மறைந்துவிட்டனர். கறுப்பர்களிடையில் தலைவராக இருந்த அகத்தியர் என்பார் தாங்களும் கடலைக் கடக்கும் உத்தியை வகுத்துத் தந்ததும் இருவரும் இணக்கத்துக்கு வந்தனர் என்று கொள்வதற்குத் தடயம் உள்ளது. இவர்களது சண்டையில் ஒருவரையொருவர் அரக்கர் என்று தொன்மங்களில் பதிந்து வைத்துள்ளனர்.

அரக்கன் ஒருவன் தாக்கிவிட்டுக் கடலினுள் மறைந்து விட்டதாகவும் அகத்தியர் கடல் நீர் ழுழுவதையும் குடித்து அவனை வெளியில் கொண்டு வந்ததாகவும் கூறும் ஒரு தொன்மக்கதை இதைத் தான் கூறுகிறது என்று கொள்ளலாம்.

மக்களின் உடல் நிறம் அவர்களது வாழிடங்களைப் பொறுத்து மாறுகிறது. அடந்த காடுகளுக்குள் வாழ்பவர்கள் எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் வகையில் இயற்கையாகவே கருமை நிறம் பெறுகின்றனர். பாலைவனப்பகுதியில் வாழ்பவர்கள் மஞ்சள் நிறமாகவும் பனிபடர்ந்த பகுதிகளில் வாழ்பவர்கள் வெண்மையாகவும் ஓரிரு தலைமுறைகளில் மாறிவிடுவார்கள். வீடு உடைகள் போன்ற செயற்கைப் பாதுகாப்புகள் உருவாகும் போது இந்த உடல் நிறமாற்றம் வேகம் குறைகிறது.

மனித வரலாற்றில் கடலில் செல்வோருக்கு திசைகாட்டியின் கண்டுபிடிப்பு ஒரு பெரும் புரட்சி. சீனர்கள் முதலில் ஆமை வடிவிலான ஒரு திசைகாட்டியை வைத்திருந்தனர் என்ற பதிவு உள்ளது. நம் தொன்மத்தில் திருமால் ஆமை வடிவம் எடுத்துக் கொள்ள அதன் மீது மகேந்திர மலையை மத்தாகவும் நிலவைத் தறியாகவும் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு அசுரரும் தேவரும் கடலைக் கடைந்ததாகக் கூறுவது எதிரெதிராக இருந்த இருவகையின மக்களும் தங்களுக்குள் இணக்கம் கண்டு கடலை ஆண்டனர் என்பதன் தொன்ம வடிவமாகும். நிலவின் கலை(phase) மாற்றங்களைக் கடலில் செல்வோர் காலத்தை அளக்கும் அடையாளமாகக் கொண்டிருந்ததனை அதைத் தறியாகக் கொண்டதாகக் கூறுகிறது. நிரட்சலங்கை என்று நாம் குறிப்பிட்ட நிலநடுக்கோட்டிலிருந்த மேருமலையை நடுப்புள்ளியாக வைத்து உலகை அளந்ததை மகேந்திரகிரியை மத்தாகக் கொண்டதாக இக்கதை கூறுகிறது.

கடைந்ததில் அமுதம் கிடைத்ததாம். அதைத் தேவர்கள் திருடிக் கொண்டார்களாம். உண்மையில் அந்தச் சாவா மருந்து தான் என்ன?

விதேகன் என்பவனைப் பற்றி நம் தொன்மங்கள் கூறுகின்றன (அபிதான சிந்தாமணி). நிமி என்பவன் இறந்து போக அவனுடலை ஓர் எண்ணெய்யில் வைத்துப் பாதுகாத்தனர். பின்னர் அவ்வுடலைக் கடைந்து அதிலிருந்து ஒரு மகனை உருவாக்கினர். அவன் பெயர் தான் விதேகன். அவன் நாடு தான் விதேகம். அங்கு பிறந்தவள் தான் வைதேகி எனும் சீதை.

எகிப்தில் மம்மிகளை எவ்வாறு உருவாக்குகிறார்கள் என்று கி.மு.ஆறாம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் வாழ்ந்த எரோடோட்டர் என்பவர் தான் எழுதிய வரலாறு(Historia) எனும் நூலில் எழுதி வைத்துள்ளார். இறந்த உடலிலிருந்து மூளை, குடல், ஈரல் போன்ற பகுதிகளை அகற்றிவிட்டு ஓர் எண்ணெய்க் கலவையில் 41 நாட்கள் ஊற வைத்துப் பின்னர் அதன் மீது துணியைச் சுற்றி மெழுகால் பொதிந்து வைத்தனர். மெழுகு எனப் பொருள்படும் கிரேக்கச் சொல்லிலிருந்து மம்மி என்ற பெயர் வந்தது என்கிறது Chambers Dictiorary. நிமி என்ற சொல்லிலிருந்தும் வந்திருக்கலாம். மம்மிகளின் உடலிலுள்ள உயிரணுக்களில் இன்னும் உயிர் உள்ளது; அவற்றிலிருந்து படியாக்க முறையில் (Cloning) மனிதர்களை உருவாக்கலாம் என்கிறார் எரிக் வான் டெனிகன். நிமியின் உடலிலிருந்து விதேகன் தோன்றியது கற்பனையாயிருக்க முடியாது. ஆக இந்த எண்ணெய் தான் அமுதமா?

உலகை ஒரு பேரழிவு தாக்க இருக்கிறதென்றும் அதிலிருந்து தப்புவதற்காக அனைத்து உயிர்களின் விந்தணுக்களையும் திரட்டி ஒரு குடத்தில் (கும்பத்தில்) அமுதத்தினுள் வைத்து கும்பகோணத்தில் வைத்தனர் என்றும் ஊழி முடிந்ததும் கும்பத்திலிருந்து உயிர்களை மீட்டனர் என்றும் கும்பகோணத் தலபுராணம் கூறுவதாகத் தமிழ் நாடு சுற்றுலாத்துறை வெளியீடு கூறுகிறது. அந்தக் கும்பத்தை கங்கையும் யமுனையும் கூடும் திரிவேணி சங்கமத்தின் மீது கொண்டு வரும் போது அங்கு விழுந்து விட்டதாகவும் கும்பமேளா பற்றிய வரலாறு கூறுகிறது. ஊத மறை நூலிலும் மணிமேகலையிலும் அனைத்து உயிர்களிலும் ஒவ்வொரு இணையைக் கப்பலில் எடுத்துச் சென்று பாதுகாத்தனர் என்பதற்கு மேம்பட்ட ஒரு தொழில்நுட்ப மட்டத்தில் விந்தணுக்களைத் திரட்டிப் பாதுகாத்தனர் என்ற கதை அமைந்துள்ளது. இன்றும் நாம் விந்தணுக்களைத் திரட்டிப் பாதுகாத்து வருகிறோம். இப்படிப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஊடகம் தான் அமுதமா?

மனிதனைச் சாவில்லாதவனாகப் படைத்தார் கடவுள்; அவரது திட்டத்தைச் சிதைத்து அறிவுக் கனியை உண்ணவைத்துச் சாவுடையவனாக மாற்றி கடவுளைத் தோற்கடித்தான் பாம்பு வடிவில் வந்த சாத்தன் என்கிறது ஊத மறைநூல்.

கில்காமேசு என்பது பாபிலோனில் உருவான, இதுவரை நாம் அறிய வந்துள்ளவற்றுள் மிகப் பழமையான காப்பியம்; அதில் ஊத மறைநூலின் நோவாவின் மூலவடிவமான உட்நாப்பிட்டிம் வருகிறான். அவனிடமிருந்து சாவாமருந்தைப் பெற்று வருகிறான் கதைத் தலைவனான கில்காமேசு. அவனிடமிருந்து அதை ஒரு பாம்பு திருடிச் சென்று விடுகிறது. மகாபாரதத்தில் பாம்புகளுக்காக கருடன் இந்திரனிடமிருந்து அமுதத்தைப் பறித்துக் கொண்;டு தருகிறான். அதனை இந்திரன் தந்திரமாக மீட்டுக் கொள்கிறான் என்று கூறப்பட்டுள்ளது. ஆக நாகர்களுக்கும் மற்றவர்களுக்கும் அமுதத்தைப் பங்கிடுவதில் ஏற்பட்ட பூசல் உலக முழுவதும் பதிவாகியுள்ளது. அமுதத்தை எவரும் ஒளித்து வைக்கவில்லை. உலக அழிவுகளும் நேர்ந்துள்ளன. மனிதர்களும் பிற உயிர்களும் இன்றும் வாழ்கிறோம்.

பனி ஊழிகள் ஓர் இலக்கம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்ந்தன என்று சு.கி. செயகரன் கூறுகிறார், பக்: 88. நீர் பனிக்கட்டியாகப் படிந்து கடல் நீர் மட்டம் குறைவதும் அது உருகி கடல்மட்டம் உயர்வதுமாக மீண்டும் மீண்டும் நிகழ்ந்த போது சுறவக் கோட்டில் மயிர் உதிர்ந்து முழுவடிவம் பெற்ற மனிதன் சிறுகச் சிறுக வடக்கு நோக்கி நகர்ந்தான். நில நடுக்கோட்டை அடைந்தான். அத்தகைய ஒரு சூழலில் தமிழர்கள் நில நடுக்கோட்டிலுள்ள மாதுறை என்ற துறைமுகத்தில் குமரி என்ற பெண் தலைமையில் மீன் கொடியுடன் பாண்டிய அரசமரபைத் தோற்றுவித்தனர். சிலம்பு இவளை மதுராபதி என்கிறது. மீனைக் கொடியாகக் கொண்டு ஆட்சி செய்ததால் மீனாட்சி என்கின்றனர். மீனைப்போல் கண்ணை இமைக்காதவள் என்று கூறுகின்றனர் தொன்மப்பூசாரிகள். கடல் விழுங்கிய தன் பெயரைக் கொண்ட நிலத்தின் ஓரத்தில் நின்று காவலும் காக்கிறாள் குமரி அன்னை.

பாண்டிய நாட்டை பாண்டியா என்ற பெண் ஆண்டாள் என்று சந்திரகுப்த மோரியன் அரண்மனையில் இருந்த கிரேக்கத் தூதன் மெகாத்தனி பதிந்துள்ளதை கனகசபையார் தன் ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தில் குறித்துள்ளார். பண்டை நாட்களிலிருந்து செவிவழியாக வந்த செய்தியை மெகாத்தனி உசாவிப் பதிந்திருக்கலாம்.

ஒரு பெண் பாண்டிய அரசை உருவாக்கினாள் என்று கூறுவது தமிழர்களின் “ஆண்மைக்கு” இழுக்கு என்று கருதும் தமிழ் அறிஞர்கள் பலர் இன்றும் வாழ்கின்றனர். அவர்களில் சிலர் குமரி என்ற செடி இருந்தது, காட்டை எரித்து உண்டாக்கப்பட்ட நிலத்துக்குக் குமரி நிலம் என்பது பெயர் என்றெல்லாம் தம் கற்பனைகளைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். அவர்களுக்கு எண்ணற்ற சான்றுகள் காட்டி வாயடைத்துள்ளார் கார்க்கி. வாழ்த்துகள்.

கழக இலக்கியங்களைத் தொகுத்தவர்களும் பெண்களுக்கு உள்ள சிறப்பை, தாய்வழிக் குமுக அடையாளங்களை வெறுப்பவர்கள். நம் குமுகத்தில் குடும்ப நிகழ்ச்சிகளில் குறிப்பாகத் திருமணத்தில் தாய்மாமனுக்கு அனைத்துச் சாதி மக்களிடையிலும் சிறப்பான பங்குண்டு. ஆனால் கழக இலக்கியத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகத்துறைப் பாடல்களில் ஓரிடத்தில் கூட தாய்மாமனைப் பற்றிய குறிப்பு இல்லை. இது தொகுப்பாளர்களின் மனப்பான்மையின் வெளிப்பாடு. அதுபோல் குமரியைப் பற்றிய செய்திகளும் இல்லை. “குமரியந்துறை அயிரை மாந்தி” என்று ஒரு வரியில் மட்டும் நன்னீர் மீனாகிய அயிரையைக் குறிப்பிடுவதன் மூலம் குமரியாறு பற்றி மறைமுகமாகத் தெரிய வருகிறது. மற்றப்படி குமரிமலை, குமரியாறு போன்ற செய்திகளை இளங்கோவடிகள் தாம் பிற்காலத்தவர்க்காக விட்டுச் சென்றுள்ளார்.


(தொடரும்)

0 மறுமொழிகள்: