13.5.07

பழைய பாண்டம் - புதிய பண்டம் (1)

(Geetham.net இணையதளத்தில் குமரி நாடு என்ற தலைப்பில் வெளியான கார்க்கி மற்றும் அனைத்து நண்பர்களின் கருத்தாடல்களின் விளைவு இக்கட்டுரை.)

முக்கழகங்களும் தமிழ் இலக்கியம் கூறும் இரு கடற்கோள்களும் அன்றி அவற்றுக்கு முன்னும் பின்னும் கூட கடற்கோள்கள் நிகழ்ந்துள்ளமைக்கு நம் பண்பாட்டில் தடயங்கள் உள்ளன. கார்க்கி சரியாகக் குறிப்பிடுவது போல் மனிதனின் புறமயிர் உதிர்வு நிகழ்ந்தது சுறவக்கோட்டை (மகர ரேகை Tropic of capricon) ஒட்டிய பாலைவனத்துக்கும் அதனைத் தொடர்ந்துள்ள தென்முனைப் பனிப்பகுதிகளுக்கும் இடையிலிருக்க வேண்டும். அங்குள்ள பகலில் தாங்கொணா வெப்பமும் இரவில் தாங்கொணாக் குளிரும் இரு வேளைகளிலும் ஈரமில்லாக் காற்றும் தோலாடையின் தேவையை ஏற்படுத்தியிருக்கும். தோலால் பொதியப்பட்ட உடம்புக்கு இயற்கையான மயிர்ப் போர்வை தேவையில்லாமல் அது உதிர்ந்திருக்கும். பனிப்படர்வால் நீர் உலர்ந்து உப்பு படிந்திருந்த இடங்களில் செத்த விலங்குகளின் தோல் அழுகாமல் இருப்பதைப் பார்த்து தோல் பதனிடும் தொழில்நுட்பம் உருவாகியிருக்கும். நம் தொன்மங்களில் ரிசபன் என்று ஒருவன் வருகிறான். ரிசபம் என்றால் காளைமாடு; ரிசபன் என்பது மாடன் என்பதன் சமற்கிருத வடிவம். சிவன், சமண சமயத்தாரின் முதல் தீர்த்தங்கரர் விருசபதேவர். சிவனுடைய தோலாடை தோலை பதப்படுத்தி ஆடையாக்கிக் கொண்டதன் அடையாளம்.

ரிசபன் தன் உடலில் மலத்தைப் பூசிக்கொண்டு காட்டில் அலைந்ததாக சமற்கிருதத் தொன்மங்களிலிருந்து அபிதான சிந்தாமணி செய்தி தொகுத்துத் தருகிறது. அதனால் தான் சிவனைப் பித்தன் என்கிறார்கள் போலும். தோல் பதனிடும் போது உண்டாகும் முடை நாற்றம் இந்த விளக்கத்துக்குக் காரணமாகலாம். சிந்து சமவெளி முத்திரைகளில் ஓகத்திலிருக்கும் சிவனுடையது என்று கூறப்படும் வடிவத்தின் கால்கள் எந்த ஓக இருக்கைக்கும்(ஆசனத்துக்கும்) பொருந்துவதில்லை. செருப்பு தைக்கும் செம்மார்கள் மட்டுமே அவ்வாறு இருப்பார்கள். சிந்து சமவெளியின் மேற்படி வடிவத்தின் தலையில் உள்ள கொம்புகளையும் அதனைச் சுற்றி பொறிக்கப்பட்ட பல்வேறு விலங்குகளையும் பார்த்தால் அது செம்மானின் வடிவம் என்பது உறுதிப்படும். சிவந்த பொருட்களால் தோல் பதனிடும் செம்மார் என்ற சொல்லுக்கும் சிவனுக்கும் சிவப்பு பொது.

நம் மரபில் மகிடம் மையிடம்(மை = கருமை - இருக்கும் இடம்; மையிடம் → மகிசம் - சமற்கிருதம்; மை + இல் = மயில்; கூ + இல் = குயில் - கால்டுவெல்) எருமையைக் குறிக்கும். உலகில் பல்வேறு தேவைகளுக்கான தோலை வழங்கியதால் அத்தொழிலின் மூலம் செல்வாக்குற்றிருந்த மகிடர் மீது ஏற்பட்டிருந்த பூசல்களால் அவர்களை மகிசாசுரர்கள் என்றனர். தோல் தொழிலில் மேம்பட்டிருந்த மகிடர்களை[ஆந்திரத்தில் இவர்களை மடிகர்கள் என்கின்றனர் (மகிடர் → மடிகர்). தமிழகத்தில் பகடைகள் என்கின்றனர். பகடு - எருமை] வென்றதால் மகிடாசுர மார்த்தனி என்றழைக்கப்படும் காளியை தோல் பதனிடும் தொழிலைத் தொடங்கி வைத்த சிவனுக்கு திருமணம் செய்து வைத்துப் பார்த்தனர் நம் தொன்மர்கள். ஆனால் இருவரும் ஒரே கருவறையில் சேர்ந்திருக்கும் கோயில் ஒன்று கூடத் தமிழகத்தில் இல்லை. இன்றும் அவர்கள் தனித்தனி கருவறைகளில் தான் வாழ்கின்றனர்.

புவியியங்கியலார்கள் (Geologists) குறிப்பிடுவது போல் கண்டப்பெயர்ச்சியின் போது, அதாவது இந்தியா ஆசியாக் கண்டத்தை நோக்கி தெற்கிருந்து, காண்டவனத்திலிருந்து, உடைந்து சென்று அதனுடன் இணைவதற்கு முன் மனித இனம் தோன்றியிருக்கவில்லை என்று கூறுவது தவறு. அது மட்டுமல்ல, உலகமெல்லாம் மக்களின் இலக்கியப் பதிவுகளாகவும் செவிவழிச் செய்திகளாகவும் மரபுகளாகவும் நிலவுகின்ற கடற்கோள்கள் நிகழ்ந்த காலங்களில் மனிதன் தோன்றியிருக்கவில்லை என்று இவர்கள் கூறுகின்றனர். புவியியங்கியலார் கூறும் முடிவுகள் இவர்கள் பெற்ற புலனங்களிலிருந்து உய்தறிந்தவை. அதே நேரத்தில் மக்களின் பதிவுகள் என்றோ வாழ்ந்த மக்கள் கண்ட உண்மைகள். புவியியங்கியலாரின் காலக் கணிப்புகள் இன்று வரை ஒரு திடமான விடையைத் தரவில்லை. எனவே இவர்களின் காலக்கணிப்புகள் சரியானவையா என்பதற்கு மனிதர்களின் பதிவுகள் தாம் உரைக்கல்லாக முடியுமேயொழிய மக்களின் பதிவுகளைச் சரிபார்க்க இன்றைய புவியியங்கியலார்களால் இயலாது. மனிதர்களின் தோற்றக்காலம் பற்றிய ஆய்வுகளும் இன்னும் திடமான விடைகளைத் தர இயலாதவையாகவே உள்ளன.

எடுத்துக்காட்டாக, பொய்களையே சொல்வதற்கென்று திரு.சு.கி. செயகரன் என்பார் எழுதி நாகர்கோயில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள குமரி நில நீட்சி (இரண்டாம் பதிப்பு -2004 அக்டோபர்) எனும் நூல் பாவாணர் அடிக்கடி கூறும் “எண்ணெயும் உண்மையும் மேலே வந்தே தீரும்” என்பது போல் சில அரிய உண்மைகளைத் தந்துள்ளது. திபெத்தில் உள்ள வெள்ளப்பெருக்குக் கதை: “ஒரு பெரும் வெள்ளத்தால் உலகம் முழுகும் நிலையில் இருந்தது. கடவுள் மக்கள் பட்ட வேதனையைக் கண்டு வங்காளம் வழியாக நீரை ஓடவிட்டு வெள்ளத்தை வற்றச் செய்தார். அப்போது திபெத்தில் வாழ்ந்த மக்கள் குரங்குகளை விட சற்றே மேம்பட்ட நிலையில் இருந்தனர். இவர்களை மேம்படுத்தவும் அறிவுப் பாதையில் இட்டுச் செல்லுமுகமாகவும் சில சான்றோர்களைக் கடவுள் இங்கு அனுப்பியுள்ளதாகக் கூறுகிறது” (பக். 64).

அந்த நூலில் தாலமி என்ற கிரேக்க அறிஞர் வரைந்த உலகப்படம் பற்றி ஆசிரியர் குறிப்பிடுகிறார். “அப்பகுதிகளை உலகப் படத்தில் வரைந்த போது செய்த பிழைகள் பல. அவற்றில் முக்கியமானவை இரண்டு : இந்தியா ஒரு தீபகற்பம் என்பது தெரியாமல் இந்தியாவை ஒரு பெரும் தீவாகக் காட்டியது மற்றும் இலங்கையின் அமைப்பை ஏறத்தாழ பதினான்கு மடங்கு மிகைப்படுத்திக் காட்டியது” (பக். 35).

தாலமியின் உலக வரைபடம் என்ற பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட வரைபடங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அவை ஒன்றுக்கொன்று அடிப்படை வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. அவற்றுள் ஒன்று இன்றைய உலக வரைபடத்தின் திரிபடைந்த வடிவம் என்று சொல்லலாம். இன்றைய அக்க மற்றும் நேர் வரைகளே (Latitudes and Longitudes) அதிலும் தரப்பட்டுள்ளன.

ஆனால் பிற வரைபடங்களில் அக்க, நேர் வரைகள் மாறுபட்டுள்ளன. அத்துடன் ஒரு படத்தில் இந்தியா என்பது ஒரு தீவாகக் காட்டப்பட்டுள்ளது. வேறு படங்களில் தீவாகக் காட்டப்பட்டுள்ள பகுதியில் “தாப்பிரபேன்” என்ற பெயரில் இலங்கை என்று காட்டப்பட்டுள்ளது. திரு.சு.கி. செயகரன் இந்த இரண்டு படங்களில் எதையுமே முழுமையாகக் காட்டாமல் அவற்றில் ஒன்றில் தாம்பிரபேன் என்று குறிப்பிடப்பட்டுள்ள பகுதியை மட்டும் தனியாகப் போட்டுவிட்டு இந்தியா தீவாகக் காட்டப்பட்டிருப்பதும் “தாப்பிரபேன்” காட்டப்பட்டுள்ளதும் ஒரே படம் என்பது போன்ற ஒரு பொய்மையை உருவாக்கியுள்ளார்.







எனக்கு நண்பர் ம. எட்வின் பிரகாசு 6 உலக வரைபடங்களை வலைத் தளங்களிலிருந்து எடுத்துக் கொடுத்துள்ளார்.

(1) http://libraries.uta.edu/specColl/Exhibits/wenromaps/tm5-plolemy


இது இன்றைய உலகப் படத்தைப் போன்று தோற்றமளிப்பது.



(2) http://www.ibiblio.org/expo/vatican.exhibit/exhibit/d-mathematics/images/math 15.jpg

இதில் “இந்தியா” ஒரு தீவு போன்று ஒரு புள்ளியில் மட்டும் “ஆசியா”வோடு தொடர்பு கொண்டுள்ளது. இதைத் தான் சு.கி. செயகரன் முதல் பிழையாகச் சுட்டியுள்ளார் போலும். ஆனால் இந்தப் படத்தில் குமரி(இந்து)மாக்கடல் பகுதி மட்டுமே துண்டித்துத் தரப்பட்டுள்ளது.



(3) http://www.wls.wels.net/conted/science/day03/PTOLOMY'S %20GLOBE.JPG.


(4) http://upload.wikimedia.org/wikipedia/en/2/23/PtolomyWorldMap.jpg

(5) http://www.geocities.com/mhaille21/Ptol1Col.jpg
(6) http://www.nmm.ac.uk/upload/img/C8584-2.jpg

இந்த இறுதி நான்குக்கு இடையில் பெரும் வேறுபாடுகள் இல்லை. இதில் காட்டப்பட்டிருக்கும் “தாம்பிரபேனை” அடுத்துள்ளதாகக் கூறப்படும் “இந்தியா”வுக்கும் (2) ஆம் படத்தில் “இந்தியா” தொட்டுக் கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டுள்ள “ஆசியா”வுக்கும் பெரும் வேறுபாடு இல்லை.

தாலமியின் உலக வரைபடம் ஓர் ஏமாற்று என்று கூறுவோரும் உண்டு. அதில் உண்மையும் உண்டு தவறும் உண்டு. இன்று துல்லியமானதாகக் கூறப்படும் உலக திணைப்படம் வரையும் முயற்சியில் முதலில் உருவாக்கப்பட்ட ஒரு வரைபடத்தைத் தாலமியின் வரைபடம் என்று எவரோ கூறி வெளியிட்டிருக்கலாம் (முதல் படம்) என்று தோன்றுகிறது. (2) ஆம் வரைபடம் பெரும்பாலும் தாலமிக்குக் கிடைத்த ஒரு பழம் வரைபடம் என்று தோன்றுகிறது. அதில் இந்தியா ஒரு தீவாகக் காட்டப்பட்டிருப்பதால் அதை நீக்கிவிட்டு அதன் இடத்தில் “தாப்பிரபேனை” அவர் வைத்துள்ளார் போலும். ஆனால் “தாப்பிரபேன்” இந்தியாவிலிருந்து பலநாள் கடல் செலவில் செல்ல வேண்டிய இடம் என்று அரேபியக் கடலோடிகளும் அங்கு நிழல் தெற்கு நோக்கி மட்டும் விழும் என்றும் அதனைச் சுற்றிக் கடலில் வந்தவர்கள் எவருமில்லை என்றும் கிரேக்கர்களும் எழுதி வைத்துள்ளனர் (பார்க்க “தென்னிலங்கை” கட்டுரை இந்திய வரலாற்றில் புராணங்கள், இலக்கியங்கள், வானியல், ஆசிரியர் குமரிமைந்தன், வேங்கை பதிப்பகம், 80 அ, மேலமாசி வீதி, மதுரை - 625 001). அவற்றைப் பார்த்து அவர் காலத்தில் “தாப்பிரபேன்” என்று அழைக்கப்பட்ட இலங்கைத் தீவுக்குக் கூடுதல் பரப்பை அளித்து தாலமி உலகப்படம் வரைந்து விட்டார் போலும்.

மேலே கூறிய (2) ஆம் திணைப்படம் திபேத் மக்களிடையில் வழங்கும் வெள்ளப்பெருக்குக் கதைக்குப் பொருந்தி வருகிறது. கிழக்குக் கோடியில் ஒரேயொரு புள்ளியில் ஆசியாவைத் தொட்டுக் கொண்டிருக்கும் இந்தியா மேலும் நெருங்கி மேற்குக் கோடியிலும் வால்போல் உள்ள பகுதியில் தொட்டு நெருங்கினால் இடையில் சிக்கிய நீர்மட்டம் உயர்வது இயல்பு. அவ்வாறு உயர்ந்து அந்த நீர் கீழ்க்கோடியில் உடைத்துக் கொண்டு இன்றைய கங்கைச் சமவெளி உருவாக வழியமைத்ததையே திபெத்திய வெள்ளப் பெருக்குக் கதை கூறுகிறது எனலாம்.

அப்படியானால் இந்த வெள்ளப்பெருக்குக் கதை கூறும் நிகழ்ச்சி நடைபெறுவதற்குப் பல இலக்கம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த உலகத்திணைப் படத்தை வரைந்திருக்க வேண்டும். எரிக் வான் டெனிக்கன் போன்ற ஐரோப்பிய-அமெரிக்கர்களைக் கேட்டால் இது வேறு உலகங்களிலிருந்து நம்மை விட நாகரிகத்தில் உயர்ந்த மனிதர்கள் இங்கு வந்து வரைந்த படமாக்கும் என்பர். ஏனென்றால் உலகில் சொந்தமாக நாகரிகத்தை வளர்ப்பதற்கு வெள்ளைத் தோலர்களால் தான் முடியும் என்று நம்மை நம்ப வைப்பது அவர்களது குறிக்கோள். ஆனால் உண்மை அதுவல்ல, உலகின் தென் அரைக் கோளத்தில் குமரிக் கண்டத்தில் வாழ்ந்த மக்கள் வரைந்த உலகத் திணைப்படத்தின் ஒரு பகுதி தான் இது.

(தொடரும்)

0 மறுமொழிகள்: