27.11.15

இராமர் பாலப் பூச்சாண்டி - 5

இராமாயண அரசியல்


            இராமாயணப் போரில் ஈடுபட்ட இருவரில் ஒருவராகிய இராவணனாரின் அடையாளம் பற்றிய ஐயப்பாடு எதுவும் இல்லை. அவரது நாடு இலங்காபுரி என்பது ஐயத்திற்கிடமில்லாத செய்தியாகும். ஆனால் இராமபிரான் தோன்றிய இடம் எது என்பதில் முரண்பட்ட செய்திகள் உள்ளன. இராமாயணம் இராமபிரான் தோன்றிய இடமாக அயோத்தியைக் கூறுகிறது. ஆனால் புத்த சாதகக் கதைகளில் வரும் தசரத சாதகமோ அவரது இருப்பிடத்தைக் காசி(வாரணாசி) என்கிறது. ஓர் ஆய்வாளர் சில ஆண்டுகளுக்கு முன் மேற்காசியாவில் உள்ள ஓர் இடமே இராமபிரான் வாழ்ந்த இடம் என்றார்.

            இராவணனார் வாழ்ந்த நாடு சுறவக் கோட்டில் அல்லது அதற்கும் தெற்கே இருந்ததாகச் சான்றுகள் காட்டுகின்றன. அந்த இடத்தில் உருவான நாகரிகம் மிக முந்திய நாகரிகம் என்று கூறலாம். உலகின் மிகப் பழமையான நாகரிகம் இங்குதான் தோன்றியிருக்க வேண்டும். இன்றைய புவியியங்கியல் ஆய்வுகளின்படி அந் நாகரிகம் 8½ கோடி ஆண்டுகளுக்கும் சில கோடி ஆண்டுகள் முந்தியே முழுமை பெற்றிருக்க வேண்டும். நில இயங்கியல் வல்லுநராக அறியப்படும் திரு.சு.கி. செயகரன் என்பார் எழுதி நாகர்கோயில் காலச்சுவடு பதிப்பகம் கி.பி.2002 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள குமரி நில நீட்சி என்ற நூலில் பக். 64 இல் பிற கலாச்சாரங்களில் கடற்கோள், பிரளயம் பற்றிய மரபுகள் என்ற துணைத் தலைப்பில் திபெத் என்ற உள் தலைப்பில், ஒரு பெரும் வெள்ளத்தால் உலகம் மூழ்கும் நிலையில் இருந்தது. கடவுள் மக்கள் பட்ட வேதனையைக் கண்டு வங்காளம் வழியாக நீரை ஓடவிட்டு வெள்ளத்தை வற்றச்செய்தார். அப்போது திபெத்தில் வாழ்ந்த மக்கள் குரங்குகளை விட சற்றே மேம்பட்ட நிலையில் இருந்தனர். இவர்களை மேம்படுத்தவும் அறிவுப் பாதையில் இட்டுச் செல்லுமுகமாகவும் சில சான்றோர்களைக் கடவுள் இங்கு அனுப்பியதாக கூறுகிறது இக் கதைஎன்று கூறியுள்ளார் (பக். 64 -65). இத்துடன் இதையும் இணைத்துப் பாருங்கள்.

            “கோண்டுவானாக் கண்டம் உடைந்து நகர ஆரம்பித்தது 350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன். அப்போது இந்துமாக் கடலின் வட பகுதியில் இருந்தது ஒரு நிலநீட்சியல்ல, ′டெதிசு′ எனும் ஆதிப் பெருங்கடல். கோண்டுவானாக் கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்தியத் துணைக் கண்டம் வடக்கு நோக்கி நகர்ந்து வடக்கிலிருந்த லாரேசியா என்ற பெருங்கண்டத்தை நெருங்க, அப் பகுதியில் இருந்த டெதிசு எனும் ஆதிக்கடல் பரப்பு சிறுத்து, இடைப்பட்ட படிவங்கள் இமயமலை எனும் மடிப்புமலையாக உயர்ந்தன. இதில் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய விவரம்: இது நடந்தது சுமார் 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன். அதற்கும் 130 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னரே மனித இனம் தோன்றியது” (பக். 59. அழுத்தம் எமது).

            இந்த இரண்டு தரவுகளிலிருந்தும் நமக்கு விளங்குவது (ஆனால் திரு.சு.கி. செயகரனுக்கு விளங்காதது) திபெத் மக்கள், “வெள்ளத்தால் உலகம் மூழ்கும் நிலையிலிருந்தது” என்றது இந்தியா லாரேசியாவை நெருங்க நெருங்க இரண்டு நிலப்பரப்புகளுக்கிடையில் அகப்பட்ட டெதிசு கடலின் பரப்பு சுருங்கி நீர் மட்டம் உயர்ந்ததையும், “கடவுள்... வங்காளம் வழியாக நீரை ஓடவிட்டு வெள்ளத்தை வற்றச் செய்தார்” என்றது லாரேசியாவை நெருங்கிய இந்தியாவின் கிழக்கு முனையில் உடைப்பு ஏற்பட்டு டெதிசுக் கடல்நீர் வெளியேறியதையும் குறிப்பிடுகின்றன என்பதாகும். அவ்வாறு வங்காளத்தில் உடைப்பு ஏற்பட்டு டெதிசுக் கடல் நீர் வெளியேறிய பாதையிலேயே பின்னர் கங்கையாற்றுப் பள்ளத்தாக்கு உருவாகியிருப்பது தெளிவாகிறது.

            மேலே குறிப்பிட்ட நிகழ்வுகளின்போது திபெத்தில் “குரங்குகளை விட சற்றே மேம்பட்ட நிலையில்” மக்கள் வாழ்ந்தனர் என்பதும் இந்தியாவில் நாகரிகத்தில் மேம்பட்ட சான்றோர்கள் இருந்தனர் என்பதும் புலனாகிறது.

            அப்படியானால் திரு.சு.கி. செயகரன் நூலிலுள்ள தரவுகளின்படி 135 மில்லியன், அதாவது 13½ கோடி ஆண்டுகளுக்கு முன் உலகில் நாகரிமடைந்த மனிதர்கள் வாழ்ந்தனர் என்பது ஐயமறத் தெளிவாகிறது. இந்த அடிப்படையில்தான் காட் எலியட் லெமூரிய இனம் 13.5 முதல் 22.5 கோடி ஆண்டுகளில் வாழ்ந்தனர் என்று கூறியிருக்கிறார் போலும் (அதே நூல் பக்.52).

            இவையெல்லாம் 1¼ நூற்றாண்டுப் பழமையான (எக்கேல் 1876, அதே நூல் பக். 42) தரவுகளின் அடிப்படையில் கூறப்பட்ட கருத்துகள். ஐரோப்பியர்களின் புவியியங்கியல் இன்னும் மழலைப் பருவத்திலேயே உள்ளது. அதனடிப்படையில் அமைந்த வரலாற்றுவரைவும் அவ்வாறே. அதனால்தான் அவர்களால் ஓர் உறுதியான நிலைப்பாட்டை எய்த முடியவில்லை. புவியியங்கியல் நிகழ்வுகளின் காலக்கணிப்புகளும் தொல்மனித எச்சங்களின் புதிய கண்டுபிடிப்புகளும் மரபணுவியல் ஆய்வு வளர்ச்சியும் நாள்தோறும் கால வரிசைகளை மாற்றிக்கொண்டிருக்கின்றன. சென்ற(2005 - 06) ஆண்டுக்கான தமிழ்நாட்டரசு 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் இந்தியா கோண்டுவானாவிலிருந்து லாரேசியா நோக்கி நகர்ந்துவரும் பல்வேறு கட்டங்களைப் படம் போட்டு விளக்கி இந்தியா, ஆசியக் கண்டத்தோடு இணைந்த நிகழ்வு நடைபெற்றது 8.5 கோடி ஆண்டுகளுக்கு முன் என்று கூறப்பட்டுள்ளது. இப்போதைக்கு நாம் இந்தக் காலக் கணிப்பை வைத்துக் கொண்டு மனிதன் தோன்றியது 8½ முதல் 12 கோடி ஆண்டுகளுக்கு முன் என்று கொள்ளலாம்.

            இந்த முடிவு நம்மையே திகைக்க வைக்கிறது. அறிவியல் அடிப்படை என்ற பெயரில் எங்கெங்கோ எலும்புத் துண்டைக் கண்டோம், பாறைகளின் காலத்தைக் கணித்தோம் என்று கூறிக்கொண்டு தொல்வரலாற்றாய்வாளர்கள் தடுமாறிக்கொண்டு 50 ஆயிரம் முதல் 2½ கோடி ஆண்டுகள் வரையில் மனிதனின் தோற்றத்தைக் காட்டிக்கொண்டிருக்கும் போது திரு.சு.கி. செயகரன் தந்துள்ள தரவுகளின் அடிப்படையில் இன்றைய கணிப்புகளை ஒப்பு நோக்கி இந்தக் காலக்கணிப்பைத் தந்துள்ளோம். இவை அவர் காட்டியுள்ள தரவுகளின் அடிப்படையில் காட் எலியட் நிறுவிய காலக் கணிப்பை விட 10½ (22½ - 12) கோடி ஆண்டுகள் பின்னோக்கியதே என்ற வகையில் திரு. சு.கி. செயகரன் மகிழலாம்.

            திகைப்பாக இருந்தாலும் அறிவியல் ஆய்வாளர்கள் தரும் நம்பத்தக்க தரவுகளைப் புறக்கணிக்க முடியாத சூழலில் நாம் மனிதன் தோன்றிய காலத்தை 8½ முதல் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் என்று முடிவு செய்துள்ளோம். இதைக் கீழ்க் கண்டவாறு நிறுவவும் முடியும்.

            சுறவக்கோட்டிலிருந்து இன்றைய இந்தியாவின் தென்முனை ஏறக்குறைய 31½ பாகைகள் அக்கக் கோடு தொலைவு உள்ளது. அது 31½ × 111=தோராயமாக 3500கி.மீ. கண்டப் பெயர்ச்சிக் கோட்பாட்டின்படி நிலங்கள் நகரும் விரைவு ஆண்டுக்கு 3 முதல் 15 செ.மீ., சராசரி 9 செ.மீ. அப்படியானால் இன்றைய நிலைக்கு இந்தியா வர குறைந்தது 3500×1000×100÷9 = 3.89 கோடி. எனவே சுறவக்கோட்டிலிருந்து இந்தியா நகரத் தொடங்கியது 8.5+3.89 = 12.39. எனவே நாம் 12.00 கோடி ஆண்டுகள் என்றது சரியாகவே இருக்கிறது.

            மனிதன் தோன்றி இந்தியா ஆசியாக் கண்டத்துடன் இணைந்த இந்தக் கால இடைவெளியில் சுறவக் கோட்டை ஒட்டித் தொடங்கி புவியின் தென்முனை வரை இருந்த நிலப்பரப்பில் தெக்கன்(தக்கன்) என்ற மாமனிதன் வாழ்ந்தான். அவன் நிலத்தில் நிழல் வடக்கே விழாமல் தெற்கே மட்டும் சாயும் இடத்தின் எல்லையைக் கண்டு கதிரவனின் தென்வடல் செலவினையும் அதிலிருந்து 365 நாட்களைக் கொண்ட ஆண்டுமுறையையும் வகுத்து நமக்குத் தந்தான். அது மட்டுமல்ல, கதிரவனின் கரும்புள்ளி புவியை நோக்கி வரும் 27 நாட்கள் காலத்தை அறிந்து அதன் அடிப்படையில் 27 பகுதிகளாக வான்பரப்பை வகுத்து விண்மீன் தொகுதிகளை வைத்து நாண்மீன்களை நிறுவினான். அந்த நாண்மீன்களை நிலவின் இயக்கத்தோடு இணைத்து ஐந்திரத்தின்(பஞ்சாங்கத்தின்) அடிப்படையை உருவாக்கினான். இந்த அருஞ்செயலை, நாள்மீன்களாகிய தன் 27 மகள்களையும் நிலவுக்கு அவன் மணமுடித்து வைத்தான் எனத் தொன்ம வடிவில் நம் முன்னோர் பதிந்துவைத்துக்கனர். அதனாலேயே அவன் தென்திசைக் கடவுள் என்றும் தெற்கிணாமூர்த்தி எனவும் காலத்தைக் கணித்தறியும் வழி கண்டதால் காலன் என்றும் அழைக்கப்பட்டான்.

            தெக்கன் என்பதும் காலன் என்பதும் காரணப் பெயர்களாயிருப்பதால் அவை ஒரு மரபு சார்ந்த பெயர்களாகவே இருக்க வேண்டும்.

            இவர்களுக்கும் மேம்பட்டவர்களாக உருவானவர்கள் இயக்கர்களாவர். இவர்கள் வான் பொறிகளை இயக்கும் கந்தருவர்கள். இந்த இயக்கர் மரபைச் சேர்ந்தவர்களே இராவணன் முதலியோர். இவர்கள் காலத்தில் இந்தியா இந்துமாக் கடலின் ஓரிடத்தில் லாரேசியா நோக்கிய செலவில் நகர்ந்து கொண்டிருந்திருக்கும்.

            இனி இராமனுக்கு வருவோம்.

            இராமன் சிபி எனும் அரசன் வழிவந்தவன் என்று கம்பர் கூறுகிறார். புறாவுக்காகத் தன்னையே அளித்தவனாகக் கூறப்படும் இவன்தான் சோழர்களின் முன்னோனான செம்பியன். புள்ளுறு புன்கண் தீர்த்தோன் (வழக்குரை காதை), புறவுநிறை புக்கோன் (கட்டுரை காதை), புறவு நிறை புக்கு (வாழ்த்துக் காதை) என்று அவனைச் சிலப்பதிகாரம் சிறப்பிக்கிறது.

            சிபியைப் பற்றிய அபிதான சிந்தாமணியின் விளக்கம். உசிநரன் குமரன் எனவும் சாச்சுத மனுவுக்கு நட்வலையிடம் உதித்தவன் என்றும் கூறுவர். இரண்டு முறையாய்ப் பிறப்பு கூறியிருத்தலால் இவன் சூரிய வம்சம், சந்திர வம்சம் என்று துணியக் கூடவில்லை. என்பது.

            இவனுடைய முன்னோர்களை, அபிதான சிந்தாமணி, தமிழ் மொழியகராதி ஆகிய இரண்டிலுமிருந்து தடம்பிடித்தால் கிடைப்பது,
பிரமன்மரீசி(அரிசி→காசிபர் என்றும் ஒரு வரிசை உள்ளது)காசிபர்(+திதி)இரணியகசிபு பிரகலாதன்விரோசனன்பலிபாணாசுரன்மகாகாலன்மகாமனுஉசிநரன்சிபி கேகயன்.

            இவர்கள் பிரமனிலிருந்து வந்தவர்கள் என்றாலும் இரணியகசிபிலிருந்து அரக்கர்கள் என்று அறியப்படுகின்றனர். ஆனால் பிரகலாதன், பலி முதலியோர் சேர மரபினர். சிபி சோழ மரபினனாவான். இது இன்னோர் இடத்துக்கு நம்மை இட்டுச் செல்கிறது. துசியந்தன் பேரன் ஆச்சிரிதன் என்பவனுக்கு சேர, சோழ, பாண்டியர் மூவரும் மக்கள் என்று அபிதான சிந்தாமணி கூறுகிறது. ஆக, சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூன்று மரபினரும் ஒரே மூலத்திலிருந்து வந்திருக்கின்றனர் என்பது தொன்மங்களின் கூற்று. அதற்கேற்ப பாண்டியர் நிலா மரபினர், சோழர் கதிரவன் மரபினர், சேரர் நெருப்பு மரபென்று தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. அதே போல் இராமன் கதிரவன் மரபென்பதும் பாண்டவர் நிலா மரபென்பதும் தொன்மங்கள் தரும் செய்தி. குமரிக் கண்டம் முழுக முழுக அங்கிருந்து வெளியேறிய மக்கள் உலகெலாம் பரந்தபோது வட இந்தியக் கடற்கரையில் ஏறியவர்கள் இத் தமிழரசர் மரபுகளை அங்கும் தொடர்ந்தனர். சோழர்களின் ஒரு கிளையில் தோன்றிய இராமன் வழியினரும் அங்கெல்லாம் குடியேறி இருக்கவேண்டும். எனவே இராமர் தமிழ் மூவேந்தர்களின் சோழர் கிளையைச் சேர்ந்தவரென்பது உறுதி.

            பண்டை எகிப்திய மன்னர்கள் சிலர் தங்கள் பெயருக்குப் பின்னர் ராம்சே என்ற பின்னொட்டைச் சேர்த்தனர். இவர்கள் இராமன் வழி வந்தவர்கள் என்பதற்கு சான்று இது என்று காஞ்சி சங்கரமடம் காலஞ்சென்ற சந்திரசேகரேந்திர சரசுவதி அவர்கள் கூறுவார். இதற்கு இன்னொரு சான்றாக, தசரத சாதகத்தில் இராமனும் சீதையும் அண்ணன் - தங்கையர் என்ற உறவுமுறைக்கேற்பவே எகிப்திய அரச மரபில் உடன்பிறந்தார்களுக்கிடையிலும் மக்களிடையில் அக்காள் தம்பி இடையிலும் திருமணங்கள் நடைபெற்றன என்ற வரலாற்றாசியர்களின் கூற்று அமைந்துள்ளது.

            நாம் மேலே சுட்டிய மரபு வரிசையில் இரணிய கசிபு என்ற அரக்கன் வழிவந்த சிபியின் மரபில் தோன்றியவரே இராமபிரான் என்ற தொன்மச் செய்தி அரக்கர் தேவர் முரண்பாடு என்பது அரசியல் சார்ந்த ஒன்றே என்ற முடிவுக்கு நம்மை இட்டுச் செல்கிறது. அப்படி இல்லையாயின் சேர, சோழ, பாண்டியர்களும் இராமபிரானும் அரக்கர் வழியினர் என்றே கொள்ள வேண்டியுள்ளது.

            புத்த சாதகக் கதைகள் பண்டை வரலாற்றுத் துணுக்குகள் மற்றும் மக்களிடையில் நிலவிய பல்வேறு அறவழிக் கதைகளின் ஒரு தொகுப்பே என்பது அறிஞர் கருத்து. அந்த வகையில் இராமபிரானை ஒரு வரலாற்று மனிதராகவே, அதுவும் புகழ் மிக்க ஒருவராகவே கொள்ள வேண்டும். அதனால்தான் அவரது பெயர் பல பகுதிகளிலும் பரவி இருக்கிறது. அவர் வாழ்ந்த நிலம் கோண்டுவானாவிலிருந்து லாரேசியா நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருந்த ஓர் இடை நிலையில் அமைந்திருக்கலாம்.

            இவ்வாறு இரு காலகட்டங்களில் வாழ்ந்தவரும் தமிழர்களுமான இராமபிரான், இராவணனார் ஆகியவர்களைப் பகைவர்களாக்கி இதிகாசம் தோன்றிய வரலாற்றுப் பின்னணி பற்றி நாம் பார்ப்போம்.

            கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசு உருவானது. அதன் கீழ் 23 ஆம் மாநிலமாக சிந்து சமவெளி அடிமைப்பட்டது. அதே நூற்றாண்டில் பாரசீகம் கிரேக்கத்தின் மீது படையெடுத்தது. அப்போது நண்ணிலக் கடலில் வீசிய சூறாவளியில் சிக்கி பாரசீகப் போர்க் கப்பல்கள் அழிந்ததால் தோற்றது. அன்றிலிருந்து சிந்து சமவெளியில் கிரேக்கர்களின் பிடி இறுகத் தொடங்கி கி.மு. 4ஆம் நூற்றாண்டில் அலக்சாண்டர் படையெடுப்பின் போது முழுமை பெற்றது.

            இந்தக் காலகட்டத்தில் புத்தம், அம்மணம் ஆகிய சமயங்களின் தாக்குதலால் வேத சமயம் வீழ்ச்சியடைந்திருந்தது. அதனால் கலக்கமுற்றிருந்த பூசகர்களாகிய பார்ப்பனர்களைப் பற்றிக்கொண்டு கிரேக்க ஆளுநர்களாக இருந்தவர்கள் வைணவ சமயமாக வேத மதத்தை வளர்த்தெடுத்தனர். அதற்கு ஒரு காப்பியமாக, தசரத சாதகக் கதையில் கிரேக்கக் காப்பியமாகிய இலியதின் நிகழ்ச்சியை ஒட்டுப்போட்டு இராமாயணத்தை யாத்தனர். தசரத சாதகத்தில் இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது போல் சீதையை எவரும் தூக்கிச் செல்லவுமில்லை; போரெதுவும் நடக்கவுமில்லை.  அன்று தென்னிந்தியக் கடல் வாணிகர்களின் போட்டியை எதிர்கொள்ள கிரேக்கர்கள் வட இந்தியப் பார்ப்பனர்களோடு இணைந்து உருவாக்கியதே வட இந்தியத் தேசியம். நாளடைவில் பார்ப்பனர்கள், கிரேக்கர் - உரோமர்களின் நலனுக்காக இந்திய மக்களில் கடற்பயணம் செய்வோரைத் தீண்டத்தகாதவராக்கி இந்தியக் கடல் வாணிகத்தையும் ஆதிக்கத்தையும் அழித்தனர்.

            மேலையருக்கும் வடவருக்குமான இந்த உறவு இன்றும் தொடர்கிறது. வர்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாணர்கள் தமிழக வரலாற்றில் அடிக்கடி நிகழ்ந்தது போல் காட்டிக்கொடுக்க ஆயத்தமாகி வருகின்றனர்.
           
இராமாயணத்தில் இராமபிரானுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு சிறப்பு அவர் எவராலும் கையாள முடியாத ஒரு வில்லை வளைத்தார் என்பதாகும். அது ஐந்தடிக்கு மேல் நீளமுள்ள ஒரு வில். அதைக் கையில் தூக்கிப்பிடித்துப் போர் செய்வது கடினம். எனவே அதைத் தரையில் ஊன்றித்தான் அம்பெய் முடியும். இத்தகைய ஒரு வில்லின் கண்டுபிடிப்பு யானை ஒரு போர்க்கருவியான பின்னரே நிகழ்ந்திருக்க வேண்டும். தொலைவிலிருந்தே வீசி யானையை வீழ்த்தும் ஒரு போர்க்கருவியாகிய வேலைக் கண்டுபிடித்து அல்லது கையாண்டு புகழ் பெற்று தமிழகத்தில் வணங்கப்படும் முருகனைப் போல் பெரிய இந்த வில்லைக் கண்டுபிடித்து அல்லது கையாண்ட நிகழ்ச்சியை இராமபிரானோடு இணைத்து இராமாயணத்தை யாத்துள்ளனர்.

இதில் ஒரு வரலாற்று விந்தை என்னவென்றால் அலக்சாந்தருடன் இந்திய மன்னர்கள் போரிட்ட போது அவர்கள் தோல்விக்குக் காரணமாக இருந்தது இந்த வில்தான் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். கனம் மிகுந்த இந்த வில்களைத் தூக்கிக்கொண்டு ஓட இந்திய வீரர்களால் முடியவில்லையாம். கனம் குறைந்த சிறிய வில்களுடன் விரைந்து ஓடிவந்த கிரேக்க வீரர்கள் மிக எளிதாக இந்திய வீரர்களை வீழ்த்திவிட்டனர்.

            கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய அரசுகள் உலகின் பல நாடுகளில் வந்தேறிய (காலனிய) அரசுகளை அமைத்திருந்தன. ஆனால் சீனத்தில் இன்றைய சிறப்புப் பொருளியல் மண்டலங்களைப் போன்ற “செல்வாக்கு மண்டலங்”களை மட்டுமே அமைத்திருந்தனர். நாட்டின் ஆட்சி சீனர்களிடம் இருந்தாலும் இந்தச் செல்வாக்கு மண்டலங்களுக்குள் அதன் ஆளுமை செல்லாது. (பாக்சர் கலகம் தொடங்கி மா சே துங் வரை ஏறக்குறைய ஒன்றரை நூற்றாண்டு காலம் போராடி பல நூறாயிரம் சீன மக்கள் குருதி சிந்தி அகற்றிய அதே செல்வாக்கு மண்டலங்களைச் “சிறப்புப் பொருளியல் மண்டலங்கள்” என்ற பெயரில் சீன அரசு அமைத்துள்ளதை வானளாவப் புகழ்நது சீனத்தில் நிகழும் பொருளியல் புரட்சியைப் பாரீர் என்று நம் நாட்டிலுள்ள, பல்லாயிரம் பிரிவுகளாகப் பிளவுண்டு கிடக்கும் “பொதுமைப் புரட்சியாளர்கள்” முழங்குகின்றனர். இன்று இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொருளியல் மண்டலங்கள் அதே அச்சில் வார்க்கப்பட்டவையே!) வல்லரசியத்தினுள் காலங்கடந்து நுழைய முயன்ற அமெரிக்கா, செல்வாக்கு மண்டலங்களுக்கு மாற்றாக, எல்லாருக்கும் சம உரிமை என்ற அடிப்படையில் ஒரு “திறந்த வாயில் கோட்பாட்டை” (Open door policy) வலியுறுத்திப் பெற்று உள்ளே நுழைந்தது. ஆனால் இந்தியாவில் ஆட்சி ஆங்கிலர் கையில் இருந்ததால் இந்த உத்தி உதவாது. அதற்காக அது குறுக்கு வழியில் இறங்கியது. ஆரிய “இன”க் கோட்பாட்டை நம்பிய அமெரிக்கரான கர்னல் ஆல்காட் என்பவரும் உருசியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய பிளாவட்கி அம்மையார் என்பவரும் இணைந்து இறையியல் கழகம்(பிரம்ம ஞான சபை) என்று ஓர் அமைப்பைத் தொடங்கினர். வேதங்கள்தாம் மனித அறிவுகளின் மிக உயர்ந்த தொகுப்பு என்ற கோட்பாட்டைக் கொண்ட இவர்கள் தங்கள் அமைப்பின் தலைமையகத்தை இந்தியாவில் வைத்துக்கொள்ள மும்பையில் வந்து இறங்கினர். எவரும் சீண்டவில்லை. இந்து சீர்திருத்த இயக்கங்களால் மனம் வெறுத்துப் போயிருந்த பார்ப்பனர்களும் சாதிவெறியர்களும் நிறைந்த சென்னையைக் குறிவைத்து இடம் பெயர்ந்தனர். இங்கு நல்ல வரவேற்பு. சென்னை அடையாற்றில் அலுவலகம் அமைத்து பார்ப்பனியத்துக்கு உரம் சேர்த்துவந்தனர்.

            இங்கு வந்து சேர்ந்தார் ஆங்கில அரசின் ஓய்வு பெற்ற அதிகாரியான இயூம் என்பவர். ஆங்கில அரசு இந்தியர்களின் உயர்ந்த மரபான வேத வாழ்க்கையைச் சிதைத்துவிட்டது என்று பரப்பிக்கொண்டிருந்த கழகத்தவரின் சூழ்ச்சியைப் புரிந்துகொண்டு வெளியேறி அப்போது கழகத்தின் தலைவராயிருந்த பிளாவட்கி அம்மையாரை ஓர் ஏமாற்றுக்காரர் என்று குற்றம் சாட்டினார். இவர்களிடமிருந்து இங்கிலாந்தின் நலன்களைக் காக்க இந்தியத் தேசியப் பேரவைக் கட்சியைத் தொடங்கினார். இன்றுவரை ஆங்கிலர் உட்பட அயலவர்களின் நலன்களை தொடர்ந்து இன்று இத்தாலியரான சோனியாவின் தலைமை வரையில் நன்றாகவே பேணிக் காக்கிறது அக் கட்சி.

            அடுத்த நடவடிக்கையாக ஆங்கில அரசு ஒரு பெண்மணியை ஆயத்தம் செய்து இந்தியாவுக்கு விடுத்தது. அவர் பெயர் அன்னி பெசன்று. அவர் பிறப்பில் கிறித்துவர், மாணவராயிருந்த போது இறைமறுப்பாளர், பின்னர் “இந்து” இலக்கியங்களைக் கற்ற ஆணித்தரமான “இந்து”. அவர் பிளாவட்கி அம்மையாரின் பின்னர் கழகத்தின் தலைமையேற்றார். காந்திக்குப் போட்டியானவர் போன்று இந்தியாவுக்குப் பொறுப்பாட்சி வேண்டுமென்ற வேண்டுகையை முன்வைத்து அமெரிக்காவின் பிடியிலிருந்து கழகத்தை மீட்டார்.

            இதற்கிடையில் உலக சமய மாநாட்டுக்கு விவேகானந்தர் சென்று வந்தது, இந்து மகாசபை, இரா.சே.ச.(ஆர்.எசு.எசு.) ஆகிய இந்துவெறி அமைப்புகளின் தோற்றம் ஆகியவை அமெரிக்க ஒத்துழைப்புடன் நிகழ்ந்தன. 120 ஆண்டுகள் அரும்பாடுபட்டும் வளர முடியாத அமெரிக்காவின் கள்ள உறவில் பிறந்த சனசங்கம் 1977இல் மொரார்சி தேசாய், 1989 இல் வி.பி. சிங் ஆகியோரின் பதவி வெறியை நிறைவேற்றும் சாக்கில் வலுப்பெற்று திராவிடத் தரகுக் கும்பல்களின் வேட்டைக்காக வளர்க்கப்பட்டு இன்று அமெரிக்க - மார்வாரி நலன்களுக்காக, இந்தியக் கடல் மேலாளுமையில் இந்தியா வளர்ந்து விடக்கூடாது என்ற உள்நோக்கத்துடன் இல்லாத இராமர் பாலத்தைக் காட்டி சேதுக் கால்வாய் எனப்படும் தமிழன் கால்வாயைத் தடுத்து நிறுத்த முயன்று தற்காலிக வெற்றியையும் பெற்றுள்ளது. அதன் முன்பதிப்பான பேரவைக் கட்சியும் கிடைத்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி திட்டத்தை முடக்கிப் போட்டுள்ளது.

            ஏறக்குறைய 6000 கி.மீ. நீண்ட கடற்கரையைக் கொண்ட இந்தியா அதனை வெறும் மீன்பிடிக்கும் குட்டையாகவே பயன்படுத்துகிறது. பொருள் போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்து, சுற்றுலா, விளையாட்டு, பொழுது போக்கு, எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பு என்று எத்தனையோ வகையில் கடற்கரையைப் பயன்படுத்தலாம். ஆனால் இன்று கடற்கரை மக்களிடையில் அமெரிக்க ஒற்றர்கள் புகுந்து அவர்களை கடல்சார் பழங்குடியினர் என்று பெயர் சூட்டி உள்நாட்டு மக்களிடமிருந்து பிரித்து கடற்கரையின் முழுப் பயன்பாட்டை நம் நாடு அடைந்துவிடக் கூடாது என்று திட்டமிட்டு பரப்புரை செய்து வருகின்றனர்.

            கடற்கரை வாழ் மக்களின் பலமுனை வளர்ச்சிக்கு கடற்கரையின் பன்முறைப் பயன்பாடுதான் ஒரேவழி என்பதனை அவர்களுக்கு எடுத்துரைத்து தடுத்து வைத்திருக்கும் சூழ்ச்சிக்காரர்களை அம்பலப்படுத்தி தமிழன் கால்வாயை வெற்றிகரமாக முடித்து இந்தியக் கடற்ரையை அதன் முழுப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் பணியில் முதலடியை எடுத்து வைப்போம்!

இராமர் பாலப் பூச்சாண்டி - 4

இராவணனாரும் இராமபிரானும் ஒரே காலத்தவரா?


            இராமாயணப் போர் என்றொரு நிகழ்ச்சி நடந்ததே இல்லை என்பதற்கு வலிமையான சான்று ஒன்று உள்ளது. அது, இராவணனாரும் இராமபிரானும் சமகாலத்தவரல்லர் என்பது. அவர்களுக்குள் எட்டிலிருந்து 29 வரை தலைமுறை இடைவெளி உள்ளது.

            தொன்மச் செய்திகளிலிருந்து கார்த்தவீரியார்ச்சுனனும் வாலியும் இராவணனும் பரசிராமனும் சமகாலத்தவர் என்று தெரிகிறது. பரசிராமனின் தந்தை சமதக்கினி. அவனது ஆசிரமத்துக்கு கார்த்தவீரியார்ச்சுனன் வேட்டையாடிய களைப்புடன் வந்தான். சமதக்கினி காமதேனு எனும் தேவருலக ஆமாட்டின் உதவியால் சிறப்பான விருந்தொன்றை அவனுக்கும் அவனுடன் வந்த படையினருக்கும் வைத்தான். விருந்து முடிந்த பின் அந்தக் காமதேனுவைத் தனக்குத் தந்துவிடும்படிக் கேட்டான் கார்த்தவீரியன். சமதக்கினி மறுத்தான். கார்த்தவீரீயன் வல்லந்தமாக அதனைக் கவர்ந்து சென்றான். இதைத் தந்தை மூலமாக அறிந்த பரசிராமன் கார்த்தவீரீயனைக் கொன்றான். அதற்குப் பழிவாங்க கார்த்தவிரீயனின் மகன்கள் சமதக்கினியைக் கொன்றார்கள். அதனால் ஆத்திரமடைந்த பரசிராமன் 21 தலைமுறை அரசர்களைக் கொல்வதாகச் சூளுரைத்துக் கிளம்புகிறான். அவ்வாறு அவன் புறப்பட்ட பின் கதிரவன் மரபைச் சேர்ந்த மூலகன் என்பவன் பெண்களைக் கேடயமாகப் பயன்படுத்தித் தன்னைக் காத்துக் கொண்டான் என்று தொன்மம் கூறுகிறது. அதனால் அவனுக்கு நாரீகவசன் என்றும் ஒரு பெயர் உள்ளது. கதிரவ மரபை பரசிராமனின் தாக்குதலிலிருந்து மீட்டவன் என்ற பொருளில்தான் மூலகன் என்ற பெயரும் உள்ளது.

            மூலகனுடைய மகன் பெயர் தசரதன். ஆனால் இவன் இராமபிரானின் தந்தை அல்லன். இவனது வழியில் விருத்தசருமன் விசுவசகன் கட்டுவாங்கன் தீர்க்கபாகு இரகு அசன் என்ற வரிசையில் அசனின் மகன்தான் இராமனின் தந்தை தசரதன்.

            மேலேயுள்ள வரிசையில் முதல் தசரதனுக்கும் இரண்டாம் தசரதனுக்கும் இடைப்பட்ட காலத்தை இராமாயண ஆசிரியர் விழுங்கிவிட்டார். அது மட்டுமல்ல, பெண்களைக் கேடயமாகப் பயன்படுத்திய மூலகனை மறைத்து அந்தப் பெருமையையும் அசன் மகன் தசரதனுக்கு அளித்துள்ளார். நீண்ட நாட்கள் இடைவெளியை, தசரதன் 60,000 ஆண்டுகள் வாழ்ந்தான் என்று பொய்யுரைத்துச் சரிக்கட்ட முயன்றுள்ளனர்.

            அப்பொழுது கூட ஒரு கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. பரசிராமன் எப்படி 21 தலைமுறை வாழ்ந்தான்? இதற்கு விடை எளிது. இன்று திருவாடுதுறை போன்ற ஆதினங்கள், சங்கர மடம் போன்ற மடங்கள் போல் பரசிராமன் போன்றவர்களை அணுகினால் இந்தச் சிக்கல் தீர்ந்துவிடும். தொன்மங்களில் வரும் அகத்தியர்களைத் தொகுத்து மொத்தம் 34 பேரை இனங்கண்டு அகத்தியர் என்ற நூலில் தந்துள்ளார் துடிசைக்கிழார் சிதம்பரனார்.

            அரசர்களை பல தலைமுறைகள் முனிவர்கள் கொல்வது அல்லது அழிப்பது நம் நாட்டில் மட்டுமல்ல, பொதுவாக மனித வரலாற்றில் அடிக்கடி நிகழ்ந்த ஒன்றாகவே வருகிறது. அதுமட்டுமல்ல, நம் மரபிலுள்ள இந்திரன் ஏழு முனிவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளவனே என்பது மகாபாரதத்தில் நகுசன் என்ற குருமரபு அரசன் பற்றிய கதையிலிருந்து தெரிகிறது. தவமியற்றி இந்திர பதவி அடைந்த அவனை ஏழு முனிவர்களும் பல்லக்கில் தூக்கிக்கொண்டு இந்திராணியின் இருப்பிடம் சென்றனர். அப்போது விரைவாகச் செல்லுமாறு பணித்தான் என்பதற்காக அவனைப் பாம்பாகுமாறு பல்லக்குத் தூக்கி வந்த முனிவர்களில் ஒருவரான அகத்தியர் சபித்தார். அது மட்டுமல்ல இந்திரன் அவையில் முனிவர்களுக்குள்ள மேலாளுமையைக் காட்டும் நிகழ்வுகள் தொன்மக் கதைகளில் விரவிக் கிடப்பதைக் காணலாம். பண்டை எகிப்தில் பூசாரிகள் ஒன்றுசேர்ந்து ஒருவனை ஒரு குறிப்பிட்ட காலம் வரை தேர்ந்தெடுப்பதும் அக் காலம் முடிந்ததும் அவனை அகற்றிவிட்டு புதிய ஒருவனை அமர்த்துவதும் வழக்கமாயிருந்தது என்று கடவுளரின் முகமூடிகள்[1] என்ற நூல் கூறுகிறது.

            “எனவே கடவுள்களுக்குக் கிடைத்தது வன்முறையால் தாக்கப்பட்ட, முன்பிருந்த வேள்வியின் சிதறிய துண்டுகளே; அசுவினிகளின் மருத்துவக் கலை அவர்களுக்குப் பயன்பட்டது”.[2]

            பிரசாபதி வேள்வியைப் படைத்தான், வேள்வியைப் படைத்த பின் தெய்வீக அதிகாரமும் (பிராமணன்) அரச அதிகாரமும் (சத்திரியர்) படைக்கப்பட்டன; தெய்வீக அதிகாரத்தையும் அரச அதிகாரத்தையும் தொடர்ந்து அவிப்பாகத்தை உண்பவர் என்றும் அவிப்பாகத்தை உண்ணாதவர் என்றும் இருவகைப் பிறங்கடையினர், தெய்வீக அதிகாரத்திலிருந்து அவிப்பாகத்தை உண்பவர்களும் அரச அதிகாத்திலிருந்து அவிப்பாகத்தை உண்ணாதவர்களும் படைக்கப்பட்டனர். பிராமணர் அவிப்பாகத்தை உண்ணும் பிறங்கடையினர், அரச, வைசிய, சூத்திரர்கள் அவிப்பாகத்தை உண்ணாத பிறங்கடையினர்[3]. அப்போதிலிருந்தே வேள்வி அகன்றது; அதனைத் தெய்வீக அதிகாரமும் அரச அதிகாரமும் பின்தொடர்ந்தன. தெய்வீக அதிகாரம் தெய்வீக அதிகாரத்தின் ஆயுதங்களுடன் பின் தொடர்ந்தது. தெய்வீக அதிகாரத்தின் ஆயுதங்கள் வேள்விக்கான ஆயுதங்கள்; அரச அதிகாரத்தின் ஆயுதங்கள் குதிரையும் தேரும் கவசமும் வில்லும் அம்பும். அரச அதிகாரம் அதை அடைய முடியாமல் திரும்பியது; தன் ஆயுதங்களைப் போட்டுவிட்டு நடுங்கிக்கொண்டு நின்றது. தெய்வீக அதிகாரம் அதைப் பெற்றது; அதைப் பெற்ற பின் அதை மேலிருந்து மறித்துக் கொண்டு நின்றது; பெறப்பட்டு மேலிருந்து மறித்து நிறுத்தப்பட்டு நின்ற அது தன் சொந்த ஆயுதங்களை இனங்கண்டு தெய்வீக அதிகாரத்திடம் சென்றது. எனவே இப்போதும் கூட வேள்வி தெய்வீக அதிகாரத்திடமும் பிராமணனிடமும் ஆதரவைக் காண்கிறது. அப்போது அரச அதிகாரம் அதனைத் தொடர்ந்தது; ′இந்த வேள்விக்கு என்னை அழைப்பாயாக′ என்றது. ′அப்படியே ஆகட்டும், உன் சொந்த ஆயுதங்களைக் கீழே வைப்பாயாக, தெய்வீக அதிகாரத்தின் ஆயுதங்களுடன் தெய்வீக அதிகாரத்தின் வடிவத்தில் தெய்வீக அதிகாரமாக மாறி வேள்விக்கு வருவாயாக′ என்று அது மறுமொழி கூறியது. ′அப்படியே ஆகட்டும்′ என்றது அது. இவ்வாறு அரச அதிகாரமும் ... தன்னுடைய சொந்த ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுத் தெய்வீக அதிகாரத்தின் ஆயுதங்களுடன் வேள்விக்குச் சென்றது. எனவே இன்றும் கூடச் சத்திரியன் தன் சொந்த ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுத் தெய்வீக அதிகாரத்தின் ஆயுதங்களோடு தெய்வீக அதிகாரத்தின் வடிவத்தில் தெய்வீக அதிகாரமாக மாறி வேள்வியின் தலைவனாக வேள்விக்குச் செல்கிறான்.[4]

            ஏழு குக்குலங்களாக இருந்த தமிழ் மக்கள் ஒவ்வொரு நிலப் பகுதியிலும் தனித்தனிக் குழுக்களாக கோட்டைகள் எனும் குமுக ஒன்றிகளாக வாழ்ந்த ஒரு கட்டத்தில் அண்டை நிலப் பகுதியான நெய்தல் நிலத்தாரின் மேலாளுமையை எதிர்கொள்வதற்காக அக் கோட்டைகளை ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வருவதற்காக இந்திரன் என்ற பதவியை மருத நிலக் குக்குலப் பூசாரிகள் உருவாக்கினர். அவனுடைய முகாமையான பணி இந்த “கோட்டைகளை” அழித்து தன் ஆளுகையின் கீழ் கொண்டுவருவதாகும். இந்த நிகழ்முறையின் பின்விளைவாகத்தான் முதலில் வருணன், இந்திரன், மாயோன், சேயோன், கொற்றவை என்ற தலைமைகளின் கீழ் ஐந்து நிலங்களாகப் பிரிந்து அடுத்த நிலையில் ஐந்நிலங்களும் இணைந்த நாடுகள் உருவாயின. இந்த நிகழ்முறையில் புதிதாக உருவான அரசர்களுக்கும் பழைய பூசாரிகளுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகளின் ஒட்டுமொத்த வெளிப்பாடுதான் பரசிராமன் கதை.

            மன்னர்களுக்கும் பூசாரியருக்கும் வந்த மோதல்கள் காமதேனு எனும், கேட்டதை எல்லாம் கொடுக்கும் தெய்வீக ஆமாட்டைக் குறித்து எழுந்ததாகவே தொன்மங்களில் கூறப்பட்டுள்ளது. சமதக்கினி தவிர, கார்த்தவீரியனைப் போன்றே வேட்டையாடிய களைப்பில் வசிட்டரிடம் வந்த கெளசிகன் என்ற அரசனும் கார்த்தவீரியார்ச்சுனனைப் போல் ஆமாட்டைக் கவர முயன்றான். வசிட்டரின் தவ வலிமையால் அவன் மகன்கள் மடிந்தனர். தவ வலிமையை உணர்ந்து கெளசிகன் தவமியற்றி விசுவாமித்திரன் ஆனான் என்கிறது ஒரு கதை[5]. இங்கு ஆமாடு பூசகர்களின் செல்வமாக இருக்க வேண்டும். மக்களிடம் வரி அல்லது காணிக்கை வடிவில் பூசாரிகள் பெற்று அரசர்களுக்குத் தந்த வருமானத்தைத் தாங்களே நேரடியாகப் பெற அரசர்கள் முயன்றதால் இந்த முரண்பாடு தோன்றியிருக்க வேண்டும். இன்று மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்க நடுவரசு முயல்வது போன்றதே இது.

            மனித வரலாற்றில் பூசர்களின் மேலாளுமை இன்றும் தொடர்கிறது. இந்தியா போன்று அடித்தள மக்களைத் திட்டமிட்ட வறுமையில் அழுத்தி வைத்திருக்கும் நாடுகளில் பூசகர்களும் சாமியார்களும் பெரும் செல்வாக்குச் செலுத்துவதைக் காண்கிறோம். அப்படியாயின் வரலாற்றின் தொடக்க காலத்தில் அவர்களின் செல்வாக்கு எவ்வளவு வலிமையாக இருந்திருக்கும் என்பது தெளிவு. இந்தச் செல்வாக்குக்கு ஈடுகொடுக்க முடியாமல் பூசகர்களுடன் அரசர்கள் உடன்பாடு கொண்டதையே பரசிராமன் கதை கூறுகிறது. அவனைப் பூசகர்களின் மேலாளுமையை நிலைநிறுத்திய, பூசகர் ஆற்றலின் ஓர் அடையாளமாகவே பார்க்க வேண்டும். இந்த வகையில் பரசிராமனைப் புரிந்துகொண்டால் தொன்மத்தில் கார்த்தவீரியன் காலம் தொட்டு 21 தலைமுறைகள், பின்னர் மூலகன் முதல் 8 தலைமுறைகள் இடைவெளியின் தன்மையையும் நாம் புரிந்து கொள்ள முடியும். இந்த வகையில் இராவணனாரும் இராமபிரானும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களில்லை என்பது புலப்படும். எனவே இராவணனார் சீதையைத் தூக்கிச் சென்றதாகக் கூறப்படும் நிகழ்ச்சி முழுக் கற்பனை. எனவே இராமாயணப் போரும் கற்பனை. ஆகவே இராமர் பாலம் என்ற ஒன்று கட்டப்பட்டிருப்பதற்குத் தேவையோ வாய்ப்போ இல்லை.

            இராமர் பாலம் இருந்ததாக வாதிடுவோர் தொன்மத்தையும் இதிகாசம் எனப்படும் மறவனப்பையும் காட்டுவதால் நாமும் அதே தொன்மத்தை அடிப்படையாக வைத்தும் அதைச் சார்ந்த குமுக அறிவியலின் துணையுடனும் நம் பக்கத்தை எடுத்து வைத்துள்ளோம்.


[1] Masks of Gods – Vol.I Primetive Mythology by Joseph Campbell
[2] (Keith A.B., Rig-Veda Brahmanas, P.121,Cambridge 1925, as quoted in Lokayatha, Debiprasad Chattobadhyaya,P.611)
[3] அவிப்பாகம் எனப்படுவது வேள்வித் தீயிலிட்டு அவிந்த பொருள், இங்கு மாடு. வேள்வித் தீயில் வெந்த மாடுகளைப் பார்ப்பனர்கள் மட்டுமே உண்டனர் என்பதை இது குறிக்கிறது.
[4] அயித்திரேயப் பிராமணம் (Lokayatha, தேவிப் பிரசாத் சட்டோபாத்தியாயா. பக். 611-12)
[5] மகாபாரதம்

இராமர் பாலப் பூச்சாண்டி - 3


இராவணனார் வரலாறும் அவரது நாடும்

பிரமனின் மகன் புலத்தியர். புலம் என்பதற்கு தவம் என்பது வேதத்தில் பொருள் என்று கூறுகிறது அபிதான சிந்தாமணி. அந்தப் புலத்தியருக்கு இரு மகன்கள். மூத்த மகன் பெயர் விசிரவசு. இளைய மகன் அகத்தியர்.

            விசிரவசுவுக்கு இரு மனைவிகள். அவர்களின் முதல் மனைவியாகிய ஆவிற்பூவிற்குப் பிறந்தவன் குபேரன். இரண்டாம் மனைவி கைகேசி. அவளது மகன் இராவணன். இச் செய்தியை அபிதான சிந்தாமணி தருகிறது.

            மாலியவான் என்றும் மாலிய வாகு என்றும் அறியப்படுபவன் மாலியவந்தன். இவன்தான் மயன் அமைத்த இலங்கையில் முதன்முதலில் அரசமைத்தவன். இவனிடமிருந்து குபேரன் இலங்கையைக் கைப்பற்றினான். அதற்குப் பழிவாங்க விசிரவசுவிடம் கைகேசியை அனுப்பி அவள் மூலம் பிறந்த இராவணனைக் கொண்டு இலங்கையை மீட்டு இராவணனுக்கு அமைச்சனாகச் செயற்பட்டான் மாலியவந்தன் என்று தமிழ்மொழி அகராதி கூறுகிறது. குபேரன் மேருவில் இருந்த சிவனிடம் அடைக்கலம் புகுந்து அளகாபுரியில் இருந்து ஆட்சி செய்தான்.

            இராவணன் மயன் மகளாகிய மண்டோதரியை மணந்தவன். அவன் ஓர் இயக்கன். இயக்கர்கள் எனப்படுவோர் கந்தவருவர் என்றும் அழைக்கப்படுவர். இவர்கள் வானூர்திகளில் செல்பவர் என்று கூறப்படுகிறது. குபேரனது நாட்டைக் கைப்பற்றிய போது அவனுடைய புட்பக விமானத்தையும் இராவணன் பிடுங்கிக் கொண்டான் என்று மேற்குறிப்பிட்ட கதை கூறுகிறது.

            இராவணன் ஓர் இசை வல்லான். ஆயிரம் நரம்புடைய யாழை மீட்ட வல்லவன் என்று கூறப்படுகிறது. அவனது கொடியே யாழாகும். உலகில் நாட்டுக் கொடிகளில் இயற்கைப் பொருட்கள், உயிரிகள் நீங்கலாக மனிதப் படைப்புகளைக் கொடியாகக் கொண்டவர்கள் தமிழர்களே. சேரனின் வில், இராவணனின் யாழ் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும். வீணை எனப்படும் யாழ் மனித வரலாற்றிலேயே இசைக் கருவிகளில், குறிப்பாக நரம்புக் கருவிகளில் மிக உயர்ந்த படைப்பு. மகரயாழ் போன்ற வளைந்த தண்டுள்ள பல கருவிகளைச் சேர்த்து ஒருங்கிணைந்து இசைப்பதை ஒரே தண்டில் உள்ள மேருகள் எனப்படும் மேடுகளின் எண்ணிக்கைகள் மற்றும் நரம்புகளின் எண்ணிக்கையின் பெருக்குத் தொகை அளவுக்கு இசை ஒலிகளை எழுப்ப முடியும். இந்த இசை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நரம்பு என்ற கலைச் சொல்லால் குறிப்பிடுகின்றனர். இந்த வகை யாழின் இயக்கக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் இன்று உலகிலுள்ள நரம்புக் கருவிகள் வடிவமைக்கப்படுகின்றன.

            இராவணன் தான் வாழ்ந்த காலத்தில் சுற்றிலுமுள்ள பெரும் வேந்தர்களை எல்லாம் போருக்கழைத்து வென்றான் என்று அவனைப் பற்றிய தொன்மங்கள் கூறுகின்றன. அதே போல் ஒரு முறை சிவன் இருக்கும் கயிலை மலையை அவன் அசைத்துப் பார்த்ததாகவும் அதனை உணர்ந்த சிவன் தன் பாதத்தால் மலையை அழுத்த அதில் சிக்கிய இராவணன் தன் தலைகளிலொன்றையும் கைகளிலொன்றையும் பெயர்த்தெடுத்து தன் உடலிலிருந்து நரம்புகளை உருவி ஒரு யாழ் செய்து இசைக்கவும் அந்த இசை இன்பத்தில் திளைத்த சிவன் தன் அழுத்தத்தைத் தன்னை அறியாமலே தளர்த்த இராவணன் தப்பித்தாகவும் ஒரு தொன்மக் கதை உண்டு. இராவணன் யாழ் என்ற கருவியை உருவாக்கியவன் என்ற உண்மையின் தொன்ம வடிவத்திலான வெளிப்பாடு என்று இதைச் சொல்லலாம்.

            சாம வேதத்துக்கு இசையமைத்தவனும் இராணவன் என்று தொன்மங்கள் கூறுகின்றன.

            தசரதன் என்பதற்கு எட்டுத் திசைகளிலும் வானுலகிலும் நிலத்திலும் செல்லும் தேர்களை உடையவன் என்று விளக்கம் கொடுக்கிறது அபிமான சிந்தாமணி. தசரதன் என்ற சொல்லுக்குப் பத்துத் தேரை உடையவன் என்பது பொருள். அதே போல் எட்டுத் திக்கிலும் வானையும் புவியையும் அடக்கி ஆண்டவன் என்ற பொருளில் பத்துத் தலை இராவணன், தசகண்டன், தசக்கிரீவன் (பத்து மணிமுடியணிந்தவன்) என்றெல்லாம் அழைக்கப்பட்டான்.

            இவனை இழிவுபடுத்துவதற்கென்று இராமாயணத்திலும் பல்வேறு தலபுராணங்களிலும் சில செய்திகளைச் சொன்னாலும் அவனது வெற்றிகளையும் அவை பட்டியலிட்டுள்ளன. இராமாயணம் அவனது ஆட்சித் சிறப்புகளை மிக விரிவாகக் கூறுகிறது. இராமாயணமே இராவணனது சிறப்புகளைக் கூறும் ஒரு படைப்பு என்று கூட ஒரு நூலில் கூறப்பட்டுள்ளது. இராமாயணத்தில் சீதையைக் கடத்திச் சென்றதாக் கூறும் பகுதியை நீக்கிவிட்டுப் பார்த்தால் போர்த்திறனிலும் ஆட்சிச் சிறப்பிலும் அறிவியல்கள், கலைகள் ஆகியவற்றில் திறமைகள் என்ற வகையிலும் ஒப்பற்ற ஓர் அரசன் இராவணன்.

            கார்த்தவீரியார்ச்சுனன், வாலி ஆகியோரோடு ஒரே காலத்தில் வாழ்ந்தவன் இராவணன். கார்த்தவீரியார்ச்சுனனோடு போர் செய்து சிறைப்பட்டு புலத்தியர் வேண்டிக்கொள்ள விடுவிக்கப்பட்டவன். வாலியோடு போர் புரியச் சென்று தோற்று அவனுடன் நட்புக் கொண்டவன் என்பவை அபிதான சிந்தாமணி மூலம் நாம் அறியும் தொன்மச் செய்திகள்.

            இராவணன் ஆண்ட இலங்கையைப் பற்றிய செய்திகள் நமக்கு முகாமையானவை.

            லங்காபுரி / லங்கை என்ற சொல்லுக்கு “தென்கடலில் திரிகூட மலைச் சிகரத்திலே விசுவகர்மாவினால் உண்டாக்கப்பட்ட நாடும் நகரமுமாம்” என்று தமிழ்மொழி அகராதி கூறுகிறது. இதன் பரப்பு 700 காதங்கள் என்று கூறும் அகராதி “சூரிய சித்தாந்தத்திலே சொல்லப்பட்ட மேகலா நகரங்கள் நான்கினுள் ஒன்று” என்றும் “கடலாற் கொள்ளப்பட்ட இலங்கையின் ஒரு கூறே இக் காலத்துள்ளதாகும்” என்றும் கூறுகிறது.

            உலகத் திணைப் படத்தில் (Brijbasi World Atlas) இந்தியாவுக்குத் தெற்கில் தென்வடலாகச் செல்லும் ஒரு கடலடி மலைத் தொடரில் இரண்டிடங்களில் மேற்கு நோக்கிய கிளைகள் உள்ளன. ஒன்று சுறவக் கோடு என்னும் மகரக் கோட்டில், இன்னொன்று நிலநடுக்கோட்டில். மேலே கூறியுள்ள இரண்டு பகுதிகளில் தென்கடலில் திரிகூட மலைச் சிகரத்தில் என்று கூறப்படுவது மகரக் கோட்டில் இருந்த இராவணனின் தென்னிலங்கையாகும். இரண்டாம் பகுதியிலுள்ள மேகலா நகரங்களில் ஒன்றான இலங்காபுரி நிலநடுக்கோட்டிலுள்ளதாகும். இது நிரட்ச லங்கை என்று ஐந்திரங்களாகிய பஞ்சாங்கங்களில் சுட்டப்படுகிறது.

            நிரட்சம் என்றால் அட்சம் இல்லாதது. அதாவது 0° அக்க வரை[1], அதாவது நிலநடுக்கோடு ஆகும். எனவே நிரட்சலங்கை என்பது நிலநடுக்கோட்டிலுள்ள இலங்கை என்று பொருள்படும். மேகலை என்றால் அரையில் அணியப்படுவது, அதாவது நடுவில் உள்ளது. மேகலா ரேகை எனப்படுவது நிலநடுக்கோடு. இந்த இலங்காபுரி வழியாகச் செல்லும் தென்வடல் கோடு லங்கோச்சையினிக் கோடு என்று ஐந்திறங்களில் (மனோன்மணி விலாச  சுத்தவாக்கிய பஞ்சாங்கத்தில்) குறிப்பிட்டுள்ளது. இந்த இலங்கை - உச்சையினி நெடு வரை[2] (- தீர்க்கரேகை), அதாவது உச்சியினியிலிருந்து தெற்கே செல்லும் நெடுவரை இன்றைய இலங்கைத் தீவிலிருந்து 5° மேற்கே விலகிச் செல்கிறது. பழந்தீவு பன்னீராயிரம் என்று இராசேந்திரன் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கத் தீவுக் கூட்டத்தின் ஊடாகவும் கடலடியில் தென் வடலாகக் கிடக்கும் மலைத் தொடரை நில நிடுக்கோட்டிலும் சுறவக் கோட்டிலும் வெட்டியும் செல்கிறது. பின்னுள்ள இந்த இரண்டு இடங்களின் அருகில்தான் மேற்காகப் பிரிந்து செல்லும் இரண்டு மலைத் தொடர்களும் உள்ளன.

            நிரட்சலங்கையாகிய இங்காபுரியிலிருந்து 90° இடைவெளிகளில் உரோமகபுரி, சித்தபுரி, பத்திராசுவம் என்று, இலங்காபுரியுடன் சேர்த்து மொத்தம் நான்கு துறைமுக நகரங்கள் இருந்தவென்றும் அவற்றுக்கு மேகலா நகரங்கள் என்பது பெயர் என்றும் மயன் எழுதிய சூரியசித்தாந்தம் எனும் நூல் கூறுகிறது.[3]

            பண்டைக் கிரேக்கர்களும் உரோமர்களும் இலங்கைத் தீவு என்பதை தாமிரபரணி என்றே கூறியிருக்கின்றனர். அது இந்தியாவிலிருந்து பல நாள் கடலில் சென்று சேரத்தக்க நிலப்பரப்பு என்றும் அங்கு நிழல்கள் வடக்கில் விழுவதில்லை என்றும் கூறியிருக்கின்றனர். கதிரவன் தென்வடல் செலவின் தென்கோடியாகிய சுறவக் கோட்டிலோ அல்லது அதற்குத் தெற்கிலோ இலங்கை இருந்திருக்க வேண்டும் என்பது இதன் பொருள். இதில் ஒரு சிறப்பு, இராவணனைப் பற்றிக் குறிப்பிடும் அபிதான சிந்தாமணி பத்தாவது இனமாக, சூரியனை இலங்கையில் வரவொட்டாமல் தடுத்தவன் என்று கூறுவதாகும். இவ்வாறு இராவணனது இலங்கை சுறவக் கோட்டில் அல்லது அதற்குத் தெற்கே இருந்தது என்பது உறுதியாகிறது. சுறவக்கோடு ஏறக்குறைய 23½° தெற்கு அக்கவரையில் இருக்கிறது. இன்றைய குமரி முனை ஏறக்குறைய 8° வடக்கு அக்கவரையில் இருக்கிறது. இவற்றினிடையிலுள்ள தொலைவு (8+23½)×111=3496.5 அதாவது ஏறக்குறைய 3500 கி.மீ.க்கள் ஆகும்.

            எனவே இராமாயணம் குறிப்பிடும் இராவணனின் இலங்கைக்கு இராமேசுவரத்திலிருந்து 3500 கிலோ மீற்றர்கள் நீளத்துக்கு இராமனின் அணியினர் பாலம் கட்டியிருக்க வேண்டும், அல்லது அன்றைய இந்தியத் தென்முனை சூறவக் கோட்டுக்கு அருகில் இருந்திருக்க வேண்டும். இந்த இரு நேர்வுகளிலும் எதுவாக இருந்தாலும் சேதுக் கால்வாயைக் குறுக்கிடும் மேடு இராமன் அமைத்ததாகத் கூறப்படும் பாலமாக இருந்திருக்க முடியாது, ஏனென்றால் முதல் நேர்வில் இன்றைய இலங்கைத் தீவுக்கு இடமில்லை. இன்றைய இலங்கைத் தீவு அன்று இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருந்தால் இராமர் பாலம் எனப்படுவது இலங்கையையும் தாண்டித்தான் தொடங்கியிருக்கும்.

            அப்படியானால் குரங்குகள் கட்டியதாக இவர்கள்கள் கூறும் இராமர் பாலத்தின் அடிப்படைதான் என்ன?

இன்றைய இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையில் காணப்படும் திண்டுகள் எவராலும் உருவாக்கப்பட்டவையல்ல. கி.மு.1700 வாக்கில் நிலத் தாழ்ச்சியாலும் கடல் நீர் மட்ட உயர்ச்சியாலும் முழுகிய நிலப்பரப்பில் கடல் மட்டத்துக்கு மேல் தலையை நீட்டி நிற்கும் உச்சி மட்ட நிலப்பரப்புகளின் ஒரு தொடர்ச்சிதான் அது என்பதுதான் நம் விடை.

கங்கையைப் படகு மூலம் கடந்ததாக் கூறும் இராமாயணம் ஆழம் குறைந்த சேதுக்கடலைக் கடக்க பாலம் கட்டியதாகக் கூறுவது ஏன்? கடல் மேல் செலவைப் புறக்கணிக்கும் மனப்பாங்கின் வெளிப்பாடா?

கதை எழுதிய வால்மீகி தன் கற்பனைக் குதிரையை ஓடவிட்டு இயற்கையான நிலப்பரப்பை குரங்குகள் கட்டிய பாலம் என்று கதையளந்திருந்தாலும் அதற்கும் முன்பே அனுமன் இலங்கைக்குப் பறந்து சென்ற போது தாண்டிச் சென்றதாக வால்மீகி காட்டியுள்ள புவியியல் காட்சிகள் மூலம் இராவணனின் இலங்கை ஆத்திரேலியப் பகுதியில் இருந்ததாகக் காட்டித் தன் மனச்சான்றுக்கு அமைதி தேடியுள்ளார். 15 – 10 – 1995 அன்று ப-ர்.சு.பத்மநாபன் அவர்களால்  நாகர்கோயிலில் நடத்தப்பட்ட குமரிக் கண்டம் குறித்த கருத்தரங்கு ஒன்றில் உசுமானியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராவ் என்பவர் வால்மீகி இராமாயணத்திலிருக்கும் இந்தச் செய்தியை வெளியிட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது[4]. 


[1] Latitude
[2] Longitude
[3] விரிவுக்கு குமரிமைந்தன், வெள்ளுவன் எழுதிய ″தென்னிலங்கை″ கட்டுரை பார்க்க. இந்திய வரலாற்றில் புராணங்கள், இலக்கியங்கள், வானியல், வேங்கை பதிப்பகம், 2004, பக்.30.
[4] கட்டுரை நீண்டதாக இருந்ததால் நேரம் போதாது என்று அவர் மேடையில் செய்திகளைச் சுருக்கமாகவே சொல்லிவிட்டு கட்டுரை வரைவை ப-ர்.பத்மநாபடனிடம் கொடுத்தார். அவர் அதை அவரது மாதிகையான ஆய்வுக் களஞ்சியத்தில் வெளியிடவுமில்லை, கட்டுரையின் படியொன்றைக் கேட்டதற்குத் தரவுமில்லை. உசுமானியா பல்கலைக் கழகம் முகவரியிட்டு பேராசிரியருக்கு எழுதிய மடல் திரும்பிவிட்டது.

இராமர் பாலப் பூச்சாண்டி - 2

இராமர் பாலப் பூச்சாண்டி

அறிமுகம்

          ரு நாட்டைச் சுற்றிக் கடல் அமைந்திருப்பது என்பது இயற்கை அந் நாட்டுக்கு அளித்த வரம் என்பது உலக வரலாற்றை அறிந்தவர்களுக்கு மிக எளிதாக விளங்கும் உண்மை. பண்டை வல்லரசுகளான கிரேக்கமும் உரோமும் இடைக்கால அராபியர்களும் அண்மைக்கால இங்கிலாந்தும் இன்றைய அமெரிக்காவும் எவர் கவனத்திலிருந்தும் தப்ப முடியாத எடுத்துக்காட்டுகள்.

            ஆனால் இந்தியர்களாகிய நாம் தனிப்பிறவிகளல்லவா? நமக்கு எல்லாம் தலைகீழாகத்தான் நடக்கும். ஓர் அரிய வாய்ப்பாக 6000 கிலோமீற்றர் தொலைவு நீண்ட கடற்கரை நமக்கு இருக்கிறது. ஆனால் இந்த அரிய வாய்ப்பைத்தான் இங்குள்ள குறுகிய மனம் படைத்த ஆட்சியாளர்களும் அவர்களுக்குக் கூட்டாளிகளான பனியாக்களும் வரலாற்றுக் காலம் முழுவதும் இப் பாரிய நாட்டின் வலுக்குறைவாக்கி வைத்துள்ளனர். எவ்வாறு என்று கேட்கிறீர்களா? சொல்கிறோம்.

            கடல் தொழில் செய்வோர் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்குவதும் மேல் சாதியினர் கடலில் சென்றால் அவர்களைச் சாதி நீக்கம் செய்வதும் 20ஆம் நூற்றாண்டு வரை நம் நாட்டில் நடைமுறையிலிருந்தது. இராசாராம் மோகன்ராய் கடல் மேல் செலவு மேற்கொண்டதற்காக சாதி நீக்கப்பட்டது நமக்குத் தெரியும். “மகாத்துமா” காந்தியை கன்னிமாகுமரி கோயிலினுள் நுழையவிட அங்குள்ள பூசகர்கள் மறுத்ததை அறிவீர்களா?

            கடல் வாணிகம் அளவில்லாத ஆதாயம் தருவது. கடற்கொள்ளையர்களின் தொல்லைகள், எப்போது வேண்டுமானாலும் சீறிப் பேயாட்டம் ஆடும் கடலின் கொடுமை ஆகியவற்றுக்கு ஈடு கொடுத்து தாங்களே படைவீரர்களாகச் செயற்பட்ட கடல் வாணிகர்கள் வைத்த விலையைக் கொடுத்து அவர்கள் எங்கெங்கெல்லாமோ இருந்து கொண்டுவந்து கொட்டும் பண்டங்களை வாங்க அனைத்து நாட்டு மேல்தட்டினரும் ஆயத்தமாக இருந்தனர். இவர்களுக்கு வழங்குவதற்கென்று பண்டங்களைப் படைத்து இவர்கள் வைக்கும் தவிட்டு விலைக்கு விற்று வயிற்றைக் கழுவ அனைத்து நாட்டு அடித்தட்டு மக்களும் காத்துக்கிடந்தனர். இவ்வாறு அவர்கள் குவித்த செல்வம் ஆட்சியினரின் கண்களை உறுத்தியது. தமிழகத்தில் இவ்வாறு வளர்ச்சி பெற்ற வாணிகச் செல்வம் அரச கணிகையாகிய மாதவியை ஒரு வாணிகன் வைத்துக்கொள்ளும் அளவுக்கு வலிமை பெற்றுவிட்டதை ஒரு குறியீடாகக் கொள்ள வேண்டும்.

            சிலப்பதிகார மணிமேகலைக் காப்பியங்கள் அரசர்களுக்கும் வாணிகர்களுக்கும் நடைபெற்ற வாழ்வா சாவா மோதலின் ஒப்பற்ற இலக்கியப் பதிவுகளாகும். ஆனால் இதில் வடக்கத்தி அம்மணர்கள், சிங்களப் புத்தர்கள் ஆகியோரின் ஊடுருவலுக்கு முதன்மைப் பங்கு இருந்ததால் தமிழக அரசர்களும் அழிந்தனர் வாணிகர்களும் அகன்றனர். கழக நூல் தொகுப்பில் தமிழர்களின் கடல் வாணிகம் பற்றிப் பேசும் பாடல்களே இல்லை. அயல்நாட்டு வாணிகர்களைப் பற்றியே அவை பேசுகின்றன. காதலர்களின் பிரிவு பற்றிப் பேசும் பாலைத்திணைப் பாடல்கள் 1000க்கும் மேற்பட்டற்றில் கடல்வழிப் பிரிவைக் கூறும் பாடல் ஒன்றேயொன்றுதான் உள்ளது. உலகெலாம் பரவியிருக்கும் தமிழர்களின் கடலோடிப் பெருமை கூறும் பாடல்களைக் கழக நூல் தொகுப்பில் கழித்துக்கட்டியிருக்கின்றனர் தமிழகப் பண்டை அரசர்கள்.

ஏறக்குறைய 4 நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வாணிகப் பெண்ணான காரைக்காலம்மையார் தொடங்கிவைக்க, தமிழ் வாணிகர்களின் பின்னணியில் உருவான சிவனியப் புரட்சியில் உருக்கொண்ட சோழப் பேரரசு தமிழ் வாணிகர்களை அழிப்பதற்கு மிக உயர்ந்த முன்னுரிமை கொடுத்திருந்தது. கடலோடிகளை இடங்கைச் சாதியினராக்கி அவர்களுடைய சராசரி குடியுரிமைகளைப் பறித்தது. நில வாணிகர்களும் அதே ஒடுக்குமுறைகளுக்கு ஆளாயினர். இந்தக் கொடுமைகளைத் தாங்க முடியாத நில வாணிகர்கள் தமிழத்தை விட்டு வெளியேறி வடக்கில் கழகங்களை உருவாக்கியிருந்தனர். அவர்களை அழிக்கவென்றே வடக்கே பல முறை படையெடுத்தான் இராசேந்திர சோழன். கடல் கடந்து சாவகத்துக்குச் சென்று தங்கி வாணிகம் செய்த தமிழ் வாணிகரை அழிக்கவே கடாரத்தின் மீது அவன் படையெடுத்தான்.

            அது மட்டுமல்ல, பொதுமக்கள் கைகளில் பணம் திரளுவது கூட சோழப் பேரரசர்களுக்குக் கசப்பாக இருந்தது. செல்வம் படைத்தவர்கள், குறிப்பாக சிற்றரசர்கள் தங்கள் கட்டற்ற அதிகாரத்தில் குறுக்கிடுவார்கள் என்பதே காரணம். இதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கே எண்ணற்ற கோயில்களைக் கட்டி அவற்றுக்கு நிலங்களை எழுதிவைக்கும் பண்பாட்டை உருவாக்கனர். கோயில்களை ஆட்சி அலகுகளாக மாற்றி படைப்பிரிவுகளை அங்கே நிலைநிறுத்தினார்கள். ஆறு வேளைப் பூசை, இறைவனுக்கு பதினாறு வகைப் பணிவிடைகள் என்று நாட்டின் செல்வங்கள் அனைத்தையும் திட்டமிட்டு அழித்தனர். மக்கள் ஒன்றுசேர்ந்து வாழ்ந்தால் தங்களைக் கேள்வி கேட்பார்கள் என்பதற்காகவே விருதுகள் என்ற சிறப்புரிமைகளை வைத்து வலங்கையினர் – இடங்கையினர் என்று பிரித்து அவர்களுக்குள் தீராப் பகைமையை உருவாக்கி நாள்தோறும் கொலைவெறிக் கலவரங்களை உருவாக்கி தங்களை நடுத்தீர்ப்பர்களாக வைத்துக்கொண்டனர். ஆக குமுகத்தின் ஒட்டுமொத்த செல்வத்தை அழிப்பதையும் மக்களின் ஒற்றுமையை உடைத்து அவர்களின் வலிமையைச் சிதைத்து அழிப்பதையும் தமிழகத்தை ஒருவர் பின் ஒருவராக ஆண்டவர்கள் தங்கள் ஆட்சி இலக்காகக் கொண்டு செயற்பட்டனர். தமிழகம் மட்டுமல்ல இந்தியக் கடற்கரை முழுவதும் காவலற்ற திறந்த மடமாகக் கிடந்தது. வடக்கிலோ அங்கு வந்த அயல்நாட்டு வாணிகர்களிடம் பண்டங்களை வாங்கி உள்நாட்டில் விற்றும் உள்நாட்டில் கிடைக்கும் பண்டங்களை வாங்கி அயலவரிடம் விற்றும் கொள்ளையடித்துக் கொழுத்தனர் அம் மணர்களாகிய பனியாக்கள். அவர்களைப் பற்றிக்கொண்டு இந்தியாவினுள் நுழைந்த பாரசீகர்கள், கிரேக்கர்கள், உரோமர்கள், குசானர்கள் போன்ற அயலவர்களைப் பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையுமில்லை.

            பார்ப்பனர்களுக்கும் அரசர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் வாணிகர்களுக்கும் உருவான முரண்பாடுகளிலிருந்து தோன்றிய புத்த, அம்மண சமயங்களின் நெருக்குதலிலிந்து தப்பிப்பதற்கென்று கிரேக்கர்களுடன் இணக்கம் கண்டது வடக்கத்திப் பார்ப்பனியம். அப்போது கிரேக்கர்கள் தெற்கின் வாணிகர்களின் போட்டியை எதிர்கொண்டனர். எனவே தெற்கின் புகழ் பெற்ற மாவேந்தனான இராவணனை வடக்கின் அரச மரபைச் சேர்ந்த இராமன் வென்றதாக ஒரு கற்பனைக் கதையை இருவரும் சேர்ந்து உருவாக்கினர். இதற்குப் பயன்பட்டது புத்த சாதகக் கதைகளில் ஒன்றான தசரத சாதகம். இரண்டாம் மனைவியின் நெருக்குதலுக்கு அடிபணிந்த காசியை ஆண்ட தசரதன் மூத்த மகனான மூத்த மனைவியின் மகனை 14 ஆண்டுகள் காட்டுக்குத் துரத்துகிறான். அவனுடன் அவனுடைய தங்கை சீதையும் தம்பி இலக்குவனும் செல்கிறார்கள். மகனைப் பிரிந்த துயரம் தாங்காமல் 12 ஆண்டுகளில் தசரதன் இறந்து போக தம்பியையும் தங்கையையும் மட்டும் தலைநகருக்கு விடுத்து தான் மட்டும் தந்தையின் ஆணைப்படி 14 ஆண்டுகள் காட்டில் இருந்து திரும்பி தங்கையை மணந்து ஆட்சி புரிகிறான் என்பது அக் கதை. இந்தக் கதையின் நம்பகத் தன்மையே அண்ணனும் தங்கையும் மணம்புரிந்தது. மனித நாகரிக வளர்ச்சியில் உடன்பிறந்தார்களிடையில் திருமணம் அனைத்து நாடுகளிலும் நடைபெற்றுள்ளது. இந்தியாவிலும் அது நிகழ்ந்ததற்கான ஒப்பற்ற ஒரு பதிவு தசரத சாதகமாகும். இந்தக் கதையில் காட்டிலிருந்த சீதையை இராவணன் கடத்திச் சென்றதாக ஒரு கதைத் துணுக்கைச் சேர்த்து புனையப்பட்டதுதான் வான்மீக இராமாயணம். பெண் கடத்தும் இந்தக் கதைத் துணுக்கு ஏற்கனவே கிரேக்கர்களிடம் ஆயத்தமாக இருந்தது. அவர்களின் காப்பியமான இலியது என்பதன் கதை அடிப்படையே இதுதான்: விருந்தாளியாக வந்த திராய் மன்னனுடன் கிரேக்க அரசி எலன் என்பவள் ஓடிவிட்டாள். அவளை மீட்க கிரேக்க அரசர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து முயன்று திராய் நகரை அழித்து வென்றதுதான் கதை. நம் பெண்கள் கற்பின் திருவுருவங்களல்லவா? அதனால் சீதையை இராவணன் வலிந்து தூக்கிச் சென்றதாக ஒரு சிறு மாற்றம் செய்திருக்கிறார்கள் அவ்வளவுதான். அதிலும் கம்பன் ஓரடி என்ன பல அடிகள் முன்னே சென்று சீதையை இராவணன் தொடை மீது அமர்த்தித் தூக்கிச் சென்றதாக வான்மீகி கூறியிருக்க ஆகா, தமிழ்ப் பண்பாடு இடிந்து தலை மீது விழுந்துவிடுமே என்று துடித்துப்போன கம்பன் அவளை மண்ணோடு சேர்த்துப் பெயர்த்தெடுத்துப் போனான் என்று கூறி அதனைக் காப்பாற்றிவிட்டார். ஆனால் கெட்டிக்காரன் புளுகு எட்டே நாள் என்ற சொலவடை என்றும் பொய்க்காது என்பதை வரலாறு எப்போதும் போல இப்போதும் மெய்ப்பித்துவிட்டது. எப்படி என்று கேட்கிறீர்களா?

இராமர் பாலப் பூச்சாண்டி - 1

பதிப்புரை

            சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம் என்ற பாடல் வரியில் இலங்கையைச் சிங்களத்தீவு என்று என்ன உட்கருத்துடன் பாரதி குறிப்பிட்டாரோ நமக்குத் தெரியாது, இன்று இந்திய ஆட்சியாளர்கள், அவர்களின் கட்சிகளில் இருந்து இங்கு பிழைப்பு நடத்தும் “தமிழர்”கள், மாறிமாறி நடுவரசில் அமைச்சர் பதவி என்ற எச்சிற்காக நடு ஆட்சியாளர்களின் காலை நக்கத் தயங்காத தமிழகத்துப் பெருங்கட்சிகள் போன்றோரின் ஒத்துழைப்புடன் இலங்கைத் தீவு முழுவதையும் சிங்களத் தீவாகவும் தமிழகத்தைத் தமிழக மக்கள் இல்லாத நிலமாகவும் மாற்ற முடிவெடுத்து முழுமூச்சாகச் செயலில் இறங்கிவிட்டார்கள். புரட்டி விடப் போகிறான் என்று வழக்கம் போல் பெரும் வரவேற்பளிக்கும் தமிழ்த் தேசியர்கள் ஊட்டிய எதிர்பார்ப்புகளுக்கிடையில் பதவியேற்ற இரணில் விக்கிரமசிங்க கடல் “எல்லை”யைத் தாண்டும் தமிழக மீனவர்களைச் சுட்டுத்தள்ளுவோம் என்று திமிரோடு பேசுகிறான். அவன் அப்படிப் பேசியதற்கு பெயருக்குக் கூட ஒரு மறுப்பைக் கூறாத இந்திய அரசு மேம்பட்ட கப்பல்களையும் படகுகளையும் இலங்கைக்கு வழங்கியுள்ளது. தமிழகக் கடலோரக் காவல் படைக்கும் புதிய மேம்பட்ட கப்பல்களை இறக்கியுள்ளது. இவர்கள் தமிழர்களைத் தாக்க சிங்களக் கடற்படைக்குத்தான் உறுதுணையிருப்பார்கள் என்பது நம் நீண்டகாலப் பட்டறிவு. அது மட்டுமல்ல இலங்கைப் படையினருக்குத் தமிழக நீலகிரி மாவட்டம் உட்பட இந்தியாவில் மூன்றிடங்களில் பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறார்கள். சீனத்தின் செல்வாக்கிலிருந்து இலங்கையை விடுவிக்கத்தான் இவையெல்லாம் என்று நம் எத்தர்கள் சப்புக்கொட்டினாலும் இவர்கள் அளிக்கும் “உதவி” இன்று எத்தகைய வலிமையும் பாதுகாப்புமின்றி புற்றிலிருந்து வெளிப்பட்ட ஈசல்கள் போன்று இருக்கும் தமிழக, இலங்கைத் தமிழர்களை நசுக்கத்தான் உதவுமே ஒழிய யானை போன்று வளர்ந்து நிற்கும் சீனத்தைப் பொறுத்த வரை கொசுவுக்குக் கூட சமமாகாது. சொந்தத் தொழில்நுட்பம் என்ற ஒன்றின்றி வல்லரசுகள் இந்தியாவின் 135 கோடி மக்களின் உழைப்பையும் விளைப்பையும் இங்குள்ளோருக்கு உரிய தரகைக் கொடுத்து உறிஞ்சிவிட்டுக் கொட்டும் காலங்கடந்து போன போர்க் கருவிக் குப்பைகளுடன் பஞ்சாபு போன்ற இந்தியாவின் வடக்கிலுள்ள ஒன்றிரண்டு மாநிலங்களைத் தவிர தமிழகம் போன்ற அப்பாவி மாநிலங்களிலிருந்து செல்லும் வீரர்கள் ஓரங்கட்டப்பட்டு, தேவைப்பட்டால் மோதல்கள், ஏதங்கள், தற்கொலைகள் என்ற பெயரில் “அகற்றப்பட்டு” மனநிலை கெட்டுப் போய்க் கிடக்கும் இந்தியப் படையால் இன்று அமேரிக்காவே கண்டு நடுங்கி நிற்கும் சீனத்தை ஒரு நொடி கூடத் தாக்குப்பிடிக்க முடியாது. அந்தத் தெளிவிலும் துணிவிலும்தான் சீனத்து ஆட்சியாளர்கள் இப்போது தன் படைவீரர்களின் எண்ணிக்கையை அதிரடியாகக் குறைத்துள்ளனர். இந்த அழகில் இவர்கள் இலங்கையைச் சீனத்தின் பிடியிலிருந்து காக்கப் போகிறார்களாம்!

            இந்தப் பின்னணியில் அண்மையில் சிங்கள தலைமை அமைச்சர் இந்தியா வரவிருக்கும் நிலையில் தனுக்கோடியையும் தலைமன்னாரையும் இணைக்கும் சாலை அமைக்கும் உரூ. 34,000 கோடி திட்டம் பற்றி சிங்கள அரசுடன் பேச்சு நடத்த இருப்பதாக இந்திய அரசு வெளியிட்ட செய்தி 21 – 09 – 2015 தினமணியில் வந்துள்ளது.

            இந்தியாவின் தென் கோடி நிலப்பரப்புக்கு இடையில் ஏறக்குறைய 3700 ஆண்டுகளுக்கு முன் கடல் புகுந்து தமிழ் மக்களைத் தமிழகமாகவும் ஈழத்தீவாகவும் பிரித்துவிட அதற்கு ஏறக்குறைய 1200 ஆண்டுகளுக்குப் பின் பீகாரிலிருந்து துரத்தப்பட்ட விசயன் என்பான் ஈழத்தில் ஒரு பெண் பதவி வெறியால் தன் அண்ணனைக் காட்டிக்கொடுத்ததால் அவனைக் கொன்று ஈழத்தில் ஒரு பகுதியில் ஆட்சியை நிறுவ, அது வரை சேரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அத் தீவில் அயலான் ஒருவன் காலூன்றிய மகிழ்ச்சியில் பாண்டியன் காழ்ப்புணர்ச்சியால் தன் தங்கையை ஓடிப்போய் மணமுடித்துக் கொடுத்து சிங்களர் ஆட்சியை வலுவாக்கினான். இவ்வாறு காட்டிக்கொடுத்து காழ்ப்பையையும் பொறாமையையும் பதவி, பண வெறிகளைத் தீர்த்துக் கொள்வோருக்கும் அதன் மூலம் வளவாழ்வு வாழ்வோருக்கும் அடங்கி வாழ்ந்தே பழகிவிட்ட தமிழர்களாகிய நமது ஒட்டுமொத்த இருப்புக்கே இப்போது அறைகூவல் வந்துள்ளது. கடலால் பிரிக்கப்பட்ட நிலத்தைச் சுற்றி நம் முன்னோர் பயன்படுத்திய கடல்வழி இன்று சிங்களனின் கைப்பற்றில் இருக்கிறது. எனவே இடையில் மூழ்கிய நிலத்திலுள்ள, சேது என்று அழைக்கப்படும் கடலடி மேட்டுநிலத்தை அகழ்ந்து தெற்கிலிருந்து சென்னைத் துறைமுகம் செல்வதற்கு ஒரு கப்பல் தடம் அமைக்கவென்று நம்மை அடக்கி ஆண்ட ஆங்கிலர், நிலத்தில் கடல் புகுந்ததென்பது தெரியாமலே, கடலால் சூழப்பட்ட ஒரு நாட்டின் கடற்கரை முழுவதையும் இணைக்கும் ஒரு கடல் வழி அந் நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் எண்ணற்ற பொருளியல் சார்ந்த, சாரா நடவடிக்கைகளுக்கும் தேவை என்ற அடிப்படைச் சிந்தனையிலிருந்து  தீட்டிய திட்டத்தைச் செயற்படுத்த உலகப் போர்ச் சூழல்கள் இடம் கொடுக்காததால் அது வல்லரசியத் தரகர்களும் தமிழக வெறுப்பர்களுமான தில்லி ஆட்சியாளர்களிடம் மாட்டிக்கொண்டு திணறுகிறது. ஏறக்குறைய 2000 ஆண்டுகளாக அயல்நாட்டுக் கடல் வாணிகர்கள் குறிப்பிட்ட துறைமுகங்களில் இறக்கும் பண்டங்களை உள்நாட்டில் விற்றும் உள்நாட்டு மக்கள் விளைக்கும் குறிப்பிட்ட பண்டங்களை வாங்கி அயல்நாட்டுக் கடல் வாணிகர்களுக்கு விற்றும் தரகு பார்த்த அம்மண பனியாக்களால் இந்தியாவின் கடல் வாணிகமும் உள்நாட்டு அறிவியல் – தொழில்நுட்ப வளர்ச்சியும் கருவறுக்கப்பட்டு வந்துள்ளன. அவர்களின் விருப்பத்துக்கு இசையவே கிரேக்க, உரோமானிய கடல் வாணிகர்கள் உள்நாட்டு வாணிகத்தில் தலையிடவில்லை. அதனால் தமிழகக் கடற்கரையில் இராமேசுவரத்துக்கு வடக்கில் இருந்த மரபு மீனவர்கள் வெளியேறியிருக்கின்றனர். இப்போது இருப்போர் கடந்த 200 ஆண்டுகளுக்குள் கடற்கரையில் குடியேறியதாக அவர்களே கூறுகிறார்கள். அதனால் இவர்களுக்கு மீன் பிடிப்பதைத் தவிர கடல் தொழிலில் அவ்வளவு ஈடுபாடும் இல்லை.

ஆனால் அரேபியர்களும் உள்நாட்டில் ஒடுக்கலுக்கு ஆட்பட்டுக் கிடந்த, பனியாக்கள் தவிர்த்த பல்வேறு தேசிய வாணிகர்களில் பெரும்பாலோர் முகம்மதியத்துக்கு மாறி நில வழி வாணிகத்திலும் போட்டிக்கு வந்த போதுதான் பனியாக்களின் விழி பிதுங்கியது. இந்தச் சூழலில் அரேபியர்களின் உலக வாணிகப் போட்டியை முடிவுக்குக் கொண்டுவரவும் தங்களுக்கென்று தனி வாணிகத் தொடர்புகளை உருவாக்கவும் களத்திலிறிங்கிய ஐரோப்பியர் இந்தியாவினுள் நுழைந்து உள்ளூர் தரகர்களின் துணையுடன் நாட்டைக் கைப்பற்றினர். மக்களின், குறிப்பாகப் பார்ப்பனர்களின் முன்முயற்சியால் உருவான இந்திய விடுதலைப் போராட்டத்தில் சாதி, வருண வேற்றுமைகளைப் புறக்கணித்து மக்கள் ஒன்றிணைவதையும் அதன் உச்ச கட்டமாக தமிழகத்து வ.உ.சி. தேசிய கப்பல் குழுமத்தை வெற்றியுடன் நடத்தியதையும் கண்டு மிரண்ட ஆங்கிலராட்சி தென்னாப்பிரிக்காவில் இருந்த மோகன்தாசு கரம் சந்து காந்தியைக் கரத்தைப் பிடித்து இங்கு கொண்டு வந்து இன்று அப்துல் கலாமுக்குச் செய்வது போல் அனைத்து ஊடகங்கள் மூலமும் மகாத்துமா படிமம் உருவாக்கி பனியாக்களுக்குப் பெரும் போட்டியாளர்களான வடக்கத்தி முகம்மதியர்களை பாக்கித்தான் எனும் புது நாட்டுக்குத் தூக்கியெறிந்துவிட்டார்கள். எஞ்சிய அனைத்து மக்களையும் ஓர் ஒற்றையாட்சியின் கீழ் அனைத்து வகையிலும் ஒடுக்குகிறது பனியாக்களின் இந்திய அரசு. அதன் குறிக்கோள்களில் முதன்மையானது தமிழகத்தில், குறிப்பாக தமிழகக் கடற்கரையில் தொழில் முனைவுகள் எதுவும் உருவாகிவிடாமல் கண்காணிப்பாக இருப்பது. அந்த அடிப்படையில்தான் இந்த தமிழன் கால்வாய்த் திட்டத்தை முடக்கிப் போட்டுள்ளனர். தாழ் ஓதத்தின்(low tide) போது ஆங்காங்கு மேலே தலைகாட்டும் கடலடி மேட்டுநிலத்தை குரங்குகள் கட்டிய பாலம் என்று கற்பனை செய்து கதை எழுதிய வால்மீகியைப் பிடித்துத் தொங்குகிறார்கள் தமிழக மக்களின் பகைவர்கள். அன்று அத் திட்டத்தை நிறைவேற்ற தன் கட்சியின் டி.ஆர். பாலுவை நடுவரசு அமைச்சராக்கி ஆதாயம் பார்த்த கருணாநிதியின் நாக்கு இப் பொருள் பொறுத்து மட்டும் இன்று செத்துவிட்டதா என்ன?

            தமிழக மக்களின் கொந்தளிப்புக்கு எதிர்வினையாக, மாற்றுப்பாதை ஆய்வு நடைபெறுகிறது என்று கூறும் மோடியின் அமைச்சர் இப்போதும் அதையே கூறுகிறார். இராமாயாணப் போரும் இராமர் பாலமும் வெறும் கற்பனை என்றும் கடலியல் கோட்பாடுகளின் அடிப்படையிலும் இப்போதைய தடமே சிறந்தது என்பதை விளக்கும் இந் நூல், தமிழன் கால்வாய்ப் பணிகள் முடியும் முன் புதிதாகப் புறப்பட்டிருக்கும் இப் பாலம் கட்டப்பட்டால் கிழக்கில் சிங்களருக்கும் வடக்கிலும் மேற்கிலும் கன்னடர்களுக்கும் ஆந்திரர்களுக்கும் கேரளத்தாருக்கும் இடையில் தமிழக, ஈழ மக்கள் நசுக்கப்பட்டுவிடுவார்கள் என்பதுடன் பாலத்துக்கு வடக்கும் தெற்கும் வாழும் மீனவர்கள் மறுபக்கம் போக முடியாமல் சிறைப்பட்டுப் போவார்கள் என்பதால் உடனடியாக இடையில் நிறுத்தப்பட்ட தமிழன் கால்வாய்த் திட்டத்தை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந் நூலை வெளியிடுவதில் பெருமையடைகிறோம்.

            தமிழ் மக்களின் போர்க்குணத்தை இந்திய பனியா – பார்சி இந்திய அரசும் வல்லரசியமும் நன்றாகவே அறியும். வங்கத்து அரிமா சுபாசு சந்திர போசின் வழிகாட்டியாகிய எம்டன் புகழ் செய்கிந்து செண்பகராமனையும், மகா எத்தன் காந்தியைத் தூக்கிப்பிடித்த அப்பாவி தென்னாப்பிரிக்கத் தமிழர்களையும்(அதையும் வ.உ.சியையும் கண்டு அஞ்சியே தமிழகத்தை அந்த ஆள் குறிவைத்ததை நாம் மறந்துவிடக்கூடாது) சுபாசு சந்திர போசின் இந்தியத் தேசியப் படையில் மிகப் பெரும்பான்மையினராகிய அயல்நாட்டுத் தமிழர்களையும், குறிப்பாகத் தம் கூந்தலை அகற்றிப் போருடை அணிந்த தமிழ்ப் பெண்களையும் நம் கண் முன்னால் ஈழத்தில், வல்லரசியங்களின் மறைமுக ஆதரவுடன் இந்தியத் தரகு அரசினரை சிங்கள அரசின் பின்னணியில் இழுத்துவந்து நிறுத்திய ஈழத் தமிழர்களின் மாவீரத்தையும் கண்டு இந்திய ஆளும் கூட்டம் மட்டுமல்ல உலக வல்லிரசியமே தமிழர்களை எண்ணி நடுங்குகிறது. இந்தியாவை அடிமை கொண்ட ஆங்கிலரின் படை முன் மண்டியிட முன்வராத இந்தியத் தேசியப் படை வீரர்களுக்கு “விடுதலை பெற்ற” இந்தியாவில் இன்று வரை மரண தண்டனை காத்திருக்க, மண்டியிட்டு ஆதாயமடைந்தவர்கள் இங்கு தமிழக மக்களிடையில் சாதிய வெறித் தீயை தூண்டிவிட அது இன்றும் கனன்றுகொண்டிருக்கிறது. இன்று ம – ர். இராமதாசு, கொங்குநாட்டு ஈசுவரன் வகையறாக்கள் போன்றோர் பேரளவிலும் அதற்கு எதிர் அணிகள் என்ற பெயரில் நாளுக்கு ஒன்றாக முளைத்துக் கிளைத்து வரும் பிளவு விசைகளுக்கு பனியா – பார்சி – வல்லரசிய விசைகள் பணம் உட்பட அனைத்து உதவிகளையும் அளித்து வருவது கண்கூடு.

            தமிழக மக்களைப் பிளவுபடுத்தி பனியா – பார்சி – வல்லரசியக் கூட்டணியின் கொள்ளைகளிலிருந்து அவர்களின் கவனத்தை வேறுபுறம் திருப்பும் இந்தக் கும்பல்களின் கீழறுப்பு வேலைகளை முறியடிக்க வேண்டுமென்றால் பொருளியலில் தமிழக மக்களின் முனைவுகளை வேரறுத்து இங்கு வாழும் மக்களின் வேலைவாய்ப்புடன் இம் மக்களுக்கு உரிமைப்பட்ட அனைத்து வளங்களையும் பறித்தும் அழித்தும் அவர்களை நாட்டை விட்டு ஓட்டத் திட்டமிட்டுச் செயற்படும் பனியா – பார்சி இந்திய ஆட்சியாளர்களின் அனைத்தும் தழுவிய கட்டமைப்புக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதுதான் இம் மக்களை ஒன்று படுத்தவும் அவர்களின் வாழ்வு வளம் பெறவும் ஒரே வழி என்பதை மீண்டும் ஒரு முறை கூறி களத்தில் இறங்க தமிழக மக்களை அறைகூவி அழைக்கிறோம்.   

11 – 10 - 2015                                                                                                             த.ம.பொ.உ.க.


மனந்திறந்து………

            ஈழத் தமிழர்கள் மீதும் தமிழக மீனவர்கள் மீதும் இந்திய – இலங்கை ஆட்சியாளர்களின் கூட்டுக் கொடுமை நாளுக்கு நாள் வெளிப்படையாகி வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் தமிழ்த் தேசியர் என்று அறியப்படுவோரும் இந்திய அரசு தமிழக மக்களைக் காக்கும் என்ற மாயையை நிலைப்படுத்தும் வகையிலேயே தங்கள் நடவடிக்கைகளைக் கொண்டுள்ளனர். ஆனால் வரலாறு இவர்களின் நம்பிக்கைக்கு எதிரான நிகழ்வுகளையே காட்டுகின்றன.

            கி.மு.4ஆம் நூற்றாண்டில் அலெக்சாந்தரின் படையெடுப்பின் விளைவாக கங்கைச் சமவெளி கிரேக்கர்களின் முழுக் கட்டுப்பாட்டில் வந்த போது புத்த – அம்மண சமயங்களின் தாக்குதல்களால் பதுங்கியிருந்த வேதியர்களைத் துணை சேர்த்துக்கொண்டு புத்த சாதகக் கதைகளில் ஒன்றான தசரத சாதகத்தில் இராமன் காட்டுக்குச் சென்ற நிகழ்வோடு கிரேக்கர்களின் மறவனப்பான இலியதின் பெண் கடத்தலை இணைத்து வான்மீக இராமாயணம் எழுதப்பட்டதிலிருந்தே தென்னகத்தை வட இந்தியாவின் எதிரிகளாகக் காணும் போக்கு உருவாயிற்று. இதில் கிரேக்கர்களின் உண்மையான நோக்கம் தங்கள் வாணிக எதிரிகளான தமிழ்க் கடல் வாணிகர்களை வீழ்த்துவதுதான். தெற்கே கடலிலிருந்து இன்றைய தமிழகத்தினுள் நுழைந்த மூவேந்தர்களுக்கும் உள்நாட்டு மூலக்குடிகளுக்கும் நடைபெற்ற 13 நூற்றாண்டு மாபெரும் மோதல் கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் முடிவுக்கு வந்தது. மாபெரும் கடலோடிகளான பழந்தமிழ் கடம்பர்களை சேரர்கள் கோவாவுக்குத் துரத்தியதுடன் தமிழர்களின் கடல் வாணிகம் முடிவுக்கு வந்தது. அந்த இடத்தை “நம்” தமிழ் அரசர்கள் கிரேக்கர்களுக்கும் பின்னர் உரோமர்களுக்கும் வழங்கினர்.

            இருப்பினும் வட இந்தியாவில் உருவான நந்த, மகதப் பேரரசுகள் நிலம் வழியாகத் தமிழகத்தினுள் கால் பதிக்க முடியாமல் மூலக்குடிகளின் வழி வந்த குறுநில மன்னர்கள் எல்லையில் வேலியாகக் காத்தனர். மூவேந்தர்களுக்கிடையிலான போர்களில் இக் குறுநில மன்னர்களின் பங்கேற்பு, இன்றைய தேர்தல் கூட்டணிகள் போன்று, வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்க அவர்களுள் அதியமான் நெடுமானஞ்சி, பாரி போன்ற ஒரு சிலர் வலிமை பெறுவது பொறுக்காமல் மூவரும் ஒன்றிணைந்து அவர்களைக் களத்தை விட்டு அகற்றினர். அத்துடன் தமிழகத்துக்கு இருந்த காப்பரணும் அகன்றது. அயலவர்கள் ஒவ்வொருவராக தமிழகத்தைக் கைப்பற்றும் நிலை ஏற்பட்டது. இதற்கு மக்களுக்கும் அரசர்களுக்கும் இருந்த முரண்பாட்டைப் பயன்படுத்திய புத்த, அம்மண சமயங்கள் முகவர்களாகச் செயற்பட்டனர். தமிழ் வேந்தர்களோ மக்களுடன் இணக்கம் காண்பதற்குப் பகரம் வடக்கில் இச் சமயங்களின் நெருக்குதலால் தெற்கே நகர்ந்த வேதியப் பார்ப்பனர்களிடம் அடைக்கலமாயினர்.

            கழக இலக்கியங்களில் தமிழர்கள் கடலோடியதற்கான சான்று ஒன்றும் இல்லை. அகத்துறைப் பாடல்களில் ஆயிரத்துக்கு மேல் இடம் பெறும் பிரிவு குறிக்கும் பாலைத்திணைப் பாடல்களில் கடல்மேல் பிரிவைக் குறிக்கும் பாடல் ஒன்றே ஒன்றுதான் உள்ளது என்று                                 ப-ர்.வ.சுப.மாணிக்கனார் தான் எழுதிய பண்டிதர் ஆய்வேடான தமிழர் காதல் நூலில் கூறுகிறார். தொகுத்தோர் அத்தகைய பாடல்களை அழித்திருக்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் தமிழ்நாட்டுக் கடல் வாணிகம் பற்றிய நேரடிக் குறிப்பு ஒன்றும் இல்லை. கோவலன் முன்னோன் பற்றியும் வஞ்சின மாலையில் புகாரின் கற்புக்கரசியர் பற்றிக் கண்ணகி கூறுவதிலும் வெளிப்படும் ஒன்றும் தவிர வேறு குறிப்பு இல்லை. மணிமேகலையில் ஆதிரை கணவன் சாதுவன் குறித்தும் சோழனின் மகனை அழைத்து வந்து இடையில் தவற விட்ட கப்பலும் தவிர வேறெந்தக் குறிப்பும் இல்லை. பட்டினத்தார் எனப்படும் திருவெண்காடரின் கடல் வாணிகம் பற்றி இடைக் காலத்திய செய்தி ஒருவேளை பிற இடங்கைச் சாதிகளின் தொழில்கள் போல் குமுக மதிப்பில்லாத ஒரு தொழிலாகவே இருந்திருக்கும். அனந்தரங்கம் பிள்ளை பிரஞ்சியரின் காலத்தில் வாணிகர்கள் எதிர்கொண்ட குமுக ஒதுக்குமுறையைப் பற்றிக் கூறுகிறார். ஆனால் தற்கால வரலாற்றுத் தொடக்க காலங்களில் ஐரோப்பியர்கள் தமிழகத் துறைமுகங்களில் தமிழகத் தொழில்வல்லோரைக் கொண்டு தமக்கு வேண்டிய மரக்கலங்களை உருவாக்கினர் என்று பதிந்துள்ளனர். இப்போதும் பெரிய மீன்பிடி மரப் படகுகள் தமிழகக் கடற்கரையில் உருவாகிக்கொண்டுதான் இருக்கின்றன.

            இன்றும் பண்டப் போக்குவரத்துக் கப்பல்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தாம் மிகுதியாகப் பணியாற்றுகிறார்கள் என்று செய்திகள் கூறுகின்றன. ஆனால் அவர்களின் தாய் மண்ணின் கடற்கரையை மீன் படிப்பது தவிர வேறெதற்காகவும் பயன்படுத்த வேண்டும், பயன்படுத்த முடியும் என்ற சிந்தனையே கடற்கரையிலிருக்கும் மக்களுக்கோ ஆட்சியாளர்களுக்கோ இல்லை.

            இந்திய விடுதலைப் போர் திலகர் தலைமையில் இயங்கிய முனைப்பியர்கள் கைகளில் இருந்த போது தமிழகத்தின் சிதம்பரனார் ஆங்கிலருக்குப் போட்டியாக வெறும் பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கிய போதே ஆங்கிலருக்கு அடிவயிற்றைக் கலக்கியது. இந்த நெருக்கடியை எதிர்கொள்ள அவர் மீது ஏமாற்று வழக்குத் தொடர்ந்து இந்திய விடுதலை வரலாற்றில் எவருக்கும் வழங்கப்படாத கொடும் தண்டனையை வழங்கியதுடன் முனைப்பியத் தலைவர்களின் இடத்தில் தங்கள் கையாளாக மோகன்தாசு கரம் சந்து காந்தியை இனம் கண்டு தென் ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தது ஆங்கில அரசு.

            தென்னாப்பிரிக்காவில் இந்திய மரபினர் குடியுரிமை பெற விரல்கள் நாட்டு(ரேகை) வைக்க வேண்டும் என்ற திட்டத்துக்கு எதிர்ப்பாக இந்திய மரபினரைத் திரட்டி இத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அனைவரையும் ஆணையிட(“சத்தியம்” செய்ய) வைத்த காந்தி பின்னர் ஆங்கில உள்துறை அமைச்சருடன் கமுக்கமாகப் பேசி ‘விரும்புவோர் மட்டும் விரல் நாட்டு வைத்துச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்’ (முதல் திட்டத்துக்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்று காந்தியைத்தான் கேட்க வேண்டும் – இதுதான் “சத்திய சோதனை”யா?) என்று கூறியிருக்கிறார். இதில் காந்தி தரப்பினர்க்கும் பட்டாணிகளுக்கும் அடிதடிகள் நிகழ்ந்தன. காந்தி பக்கம் பெரும் பணம் படைத்த பார்சி ரசுத்தோம்சியும் ஆங்கிலரும் நிறைய ஏமாளித் தமிழர்களும் இருந்தனர். இவ்வாறு “சத்தியத்துக்குச் சோதனை”யாக வாய்த்த, ஆங்கிலரின் கூட்டாளியும் வழிகாட்டியுமான காந்தியின் வழிகாட்டலில் இந்திய “விடுதலை” “ஏற்பாடு செய்யப்பட்டது”. காந்தியின் சத்திய சோதனையைச் சான்று காட்டி 30-01-2014 தினமணியில் காந்திய அறிஞர் லா.சு.ரங்கராசன் என்பார் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து இச் செய்திகள் பெறப்பட்டன.
                        
            பகத் சிங்குக்கு தூக்குத் தண்டனை விதித்து விட்டு அதை நிறைவேற்றத் தயங்கிக் கொண்டிருந்த ஆங்கில ஆட்சியாளருக்கு வரவிருந்த சூரத்து பேரவைக் கட்சி மாநாட்டைக் காட்டி அப்போது பகத் சிங் சிறையிலிருந்தால் மாநாட்டில் பெரும் கலகம் வெடிக்கும் என்று கூறி, “தூக்கிலிடுவதாயிருந்தால் மாநாட்டுக்கு முன்பே தூக்கிலிட்டுவிடுங்கள்” என்று இவர் மடல் எழுத அவர்கள் தண்டனையை நிறைவேற்ற மாநாட்டில் இவரே கண்டனத் தீர்மானம் கொண்டுவந்து நீலிக்கண்ணீர் வடித்தார். வீரபாண்டியன் என்பார் பகத் சிங் பற்றி எழுதியுள்ள நூல் தரும் செய்தி இது.

            ஆக, தென்னாப்பிரிக்காவிலேயே வடக்கத்தி முகம்மதியர்களுக்கு எதிராக பனியாக்கள், பார்சிகள், ஆங்கிலர்களின் கூட்டணி உருவாகிவிட்டது. அம்மண சமயம் சார்ந்த காந்தி இந்து வேடமிட்டது இந்தியாவில் பரந்து வாழ்வோரில் பெரும்பான்மையரைக் குறி வைத்து என்றால் இந்திதான் இந்தியவின் ஆட்சி மொழி என்றது மொழி அடிப்படையில் இந்தியாவில் பெரும்பான்மையரான இந்தி பேசும் மக்களைக் குறி வைத்து. அவரது இலக்கு தன் வகுப்பினரான பனியாக்களும் அவர்களில் அடங்கிய தன் மொழியினரான குசராத்திகளும் இந்தியாவை ஆட்டிவைப்போராக வர வேண்டும் என்பதுதான். அதற்கு இன்றியமையாமல் தேவைப்படுவது பல நூற்றாண்டுகளாகவே பனியாக்களின் கடும் போட்டியாளர்களாக விளங்கும் வடக்கத்தி முகம்மதியர்களை அகற்ற வேண்டும் என்பது திட்டம். திட்டம் நன்றாகவே செயற்பட்டது. சின்னாவின் பின்னணியில் முகம்மதியர்கள் திரண்டு முழுத் தன்னுரிமை கொண்ட மாநிலங்களின் கூட்டாட்சி அல்லது தனி நாடு கேட்டுப் போராடினர். இறுதிக் கட்டத்தில் நேருவும் பட்டேலும் பிறரும் இந்தச் சிக்கல் பற்றித் தலைகளைப் பிய்த்துக்கொண்டிருக்க, வழக்கம் போல் அய்யாவின் அறிவுரையின் பேரில் பிரிட்டன் அரசு இந்தியாவை இரண்டாகப் பிரித்து ஆணையிட்டது.

            “பிரிவினை” நல்லபடியாக நிறைவேற “நடிகர் திலகம்” கால்நடையாகச் சென்றார். வழியில் பனியாக்களான தன் வகுப்பு மக்களுக்காக உயிர் ஈகம் செய்தார். இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திருப்பாராயின் இன்னும் இந்தியாவில் எஞ்சியிருக்கும் முகம்மதியர்களையும் அங்கே தள்ளுவதற்கு கூடுதல் மாநிலங்களைப் பாக்கித்தானுடன் இணைக்கப் பாடுபட்டு மனித நேயர் என்ற தன் படிமத்தை இன்னும் கூடுதலாக ஒளிரச் செய்திருப்பாரோ? அப்படியும் சொல்வதற்கில்லை. சமய வெறி வளர்ந்தால் இந்துக்களும் முகம்மதியர்களும்தாமே அடித்துக்கொள்வர்? பனியா பார்சிகளின் பக்கம் மக்களின் கவனம் திரும்பாதல்லவா?

            முகம்மதியர் தவிர்த்த பிறரின் நிலைதான் என்ன? விரும்பும் சமத்தானங்கள் இந்தியாவிலிருந்து பிரிந்து தனி நாடாகத் தீர்மானம் இயற்றிக்கொள்ளலாம் என்ற வாக்குறுதியை நம்பி திருவிதாங்கூரின் திவான் சி.பி. இராமசாமியும் ஐதராபாத்து நிசாமும் தீர்மானம் இயற்றினர். இராமசாமியை மலையாளிகள் வெளியேற்றிவிட்டனர். நேருவை முகமூடியாக வைத்து நடந்த இந்திய ஆட்சியின் முதல் உள்துறை அமைச்சரான குசராத்தி வல்லபாய் படேல் படைகளை விடுத்தும் மிரட்டினார். திருவிதாங்கூரின் பெரும்பாமைக் குடிகளான தமிழர்களின் எதிர்கால நலன் கருதி தமிழரான இராமசாமியாரது நடவடிக்கையைப் புரிந்துகொள்ளும் தெளிவற்ற சில அறிவுக் கழுந்துகள்(மழுங்கல்கள்) அவரை இன்றும் திட்டிக்கொண்டிருக்கின்றன. பாரிய ஆந்திரத்துக்குள் சிக்கிக்கொண்ட ஐதராபாத்து மக்கள் இன்று தெலுங்கானாவைப் பெற்று மகிழ்கிறார்கள். கேரளத்துக்குள் சிக்கிக்கொண்ட திருவிதாங்கூர் தமிழ் மக்களுக்கு என்று விடிவு?

            காந்தி திட்டமிட்டபடியே ஆங்கிலர் காலத்தில் மும்பையில் பனியா - பார்சிகளின் தொழில்கள் நன்றாகவே வளர்ந்தன. சென்னை மாகாணத்தில் நயன்மைக் கட்சி ஆட்சியில் பல தொழில்களுக்கு அடித்தளமிடப்பட்டது. ஆனால் “விடுதலை”க்குப் பின் சென்னை மாகாணத்தில் ஆட்சியமைத்த பேரவைக் கட்சி தமிழக நூற்பாலைகள் கதிர்களின் எண்ணிக்கையை மிகுப்பதற்குத் தடைவிதித்ததையும் கைராட்டைகளைப் பரவலாக்கப் பணம் ஒதுக்கியதையும் பம்பாய் மாகாணத்தில் நெசவாலைகள் வளர்ச்சிக்கு 100 கோடி ஒதுக்கப்பட்டதையும் பம்பாயைத் தலைமையகமாகக் கொண்ட சவளி மண்டலத்தின் கீழ் சென்னை மாகாணம் புதைக்கப்பட்டதையும் தமிழ்நாட்டாரின் பொருளியல் முனைவுகளை எப்படிக் கருவறுத்து இங்கு பனியாக்கள் காலூன்ற வாய்ப்பளித்தனர் என்பவற்றையும் அண்ணாத்துரையின் பணத்தோட்டம் நூலில் காணலாம். நடுவரசில் பண அமைச்சராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த கோடாரிக்காம்பு ஆர்.கே.சண்முகம்(செட்டியார்) பனியா – பார்சிகளின் வளர்ச்சிக்கு என்னென்ன திட்டங்கள் தீட்டினார் என்பதையும் அந் நூலில் காணலாம். “செட்டியாரை”ப் பார்த்து நமது “நடிகர் திலகம்” நீயும் பனியா(வணிகன் என்பதின் திரிபு) நானும் பனியா என்று உறவாடி மயக்கியதாக சில ஆண்டுகளுக்கு முன் புதிய பார்வை என்ற இதழில் ஒரு குறிப்பு வந்தது. இன்றும் ப.சிதம்பரம் அவரின் தடத்தில் இன்னும் முனைப்பான செயல்பாட்டில் உள்ளார்.

            இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால்தான் ஆங்கிலராட்சியில் பெருமுதலாளியாக வளர்ந்த பனியா பிர்லாவின் வளமனையில் அமர்ந்து கொண்டு கைராட்டை வேள்வி செய்து கதிராடை, வரட்டி தட்டுதல் போன்ற “மரபுத் தொழில்களின்” பெருமை குறித்து பிற இந்தியர்களுக்கு “மகான் காந்தி” வேதம் ஓதிய இறும்பூதின் சிறப்பு விளங்கும்.

            ஆங்கிலர் ஆட்சிக் காலத்தில் தமிழகக் கடற்கரையை ஒட்டி வாழ்ந்த மீனவரல்லாத மக்களின் வறுமையைப் பயன்படுத்தி இலங்கை மலையகத்தில் தேயிலைத் தோட்டங்களில் கூலிகளாக்கினர். பலர் கொழும்பைச் சுற்றி பல்வேறு தொழில் வாணிகங்களில் ஈடுபட்டு செல்வம் திரட்டி தமிழகத்தில் நிலங்கள் வாங்கிப் போட்டனர். இந்தியாவும் இலங்கையும் ஒரே ஆட்சியின் கீழ் ஒரே நாடு போல் செயல்பட்டதால் இது எளிதாக நடைபெற்றது. ஆனால் ஆங்கிலர் அகன்றதும் மலையகத் தமிழர்களைத் தமிழகத்துக்குத் திருப்பவும் கொழும்பில் தொழில் செய்த தமிழ்நாட்டவரைத் துரத்தவும் நடவடிக்கை எடுத்தது சிங்கள அரசு. அதற்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்த இந்திய பனியா அரசு இலங்கையுடன் பனியாக்களின் தொழில் – வாணிக நடவடிக்கைகளை ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி உரூபாய்வரை இன்று வளர்த்துள்ளது.

            கடலுக்கு இரு புறங்களிலும் தமிழர் வாழும் பகுதிகளில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கும் மாபெரும் கனிம வளத்தைக் கொள்ளையடிக்க வல்லரசியம் திட்டமிட்டது. முதலில் இதில் கால் பதிக்க நினைத்த அரபு நாடுகள் ஈழத் தமிழர்கள் நடுவில் சமய அடிப்படையில் பிளவை ஏற்படுத்தியும் ஆதாயம் காண முடியாமல் ஒதுங்கின. பின்னர் நடுவம் பேச வந்த நார்வேயும் பிரபாகரனிடமிருந்து இவ் வளங்களில் எதுவும் எவருக்கும் கிடைக்காது என்று அறிந்து ஒதுங்கியது. இப்போது வல்லரசுகளின் ஊக்குவிப்புடன் சிங்கள அரசின் பின்னணியில் நின்று இந்தியா ஈழத் தமிழர்களை அழித்து ஊழித் தாண்டவம் ஆடிவிட்டது. இனி கடலுக்கு மேற்கேயுள்ள தமிழர்களை அப்புறப்படுத்த வேண்டியதுதான். அதற்கான ஆயத்த வேலைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்துவிட்டன. அதுதான் காவிரி நீர்ச் சிக்கலின் பின்னணி. ஆனால் அதன் நோக்கம் முதலில் வேறாக இருந்தது. அமெரிக்காவில் மாடு வளர்க்கப் பயன்பட்ட சமவெளிகள் விளைநிலங்களாக மாற்றப்பட்டுவிட்டதால் தங்கள் இறைச்சித் தேவைகளுக்காக ஆசியாவில் தரிசு நிலங்களை உருவாக்கும் திட்டத்தில் தமிழகம் இடம் பெற்றிருந்தது. இப்போது அதனுடன் கனிமவளக் கொள்ளை நோக்கமும் இணைந்துள்ளது. எனவே காவிரிப் படிகையின் வேளாண் நிலங்களில் எண்ணெய்க் கிணறுகளும் எரிவளித் துளைகளும் அமைக்க ஆட்சியாளர்கள் முயல்வதும் மக்கள் எதிர்த்துப் போராடுவதும் இப்போது தொடர்கதையாகியுள்ளது. தெற்கில் மீனவர்களை அப்புறப்படுத்துவது என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் இந்தியக் கடலோரக் காவல்படை, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிவிட்டனர் என்று சான்றளிக்க, சிங்களக் கடற்படையினர் கடலில் அவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துச் சிறைப்பிடிப்பது. பல தடவைகள் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி சிங்களர்கள் தமிழக மீனவர்களைச் சிறைப்பிடித்துள்ளனர். அவற்றை இந்திய பனியா அரசு கண்டுகொள்ளவே இல்லை.

            மூன்றாவது உத்தி கூடங்குளம் அணுமின் நிலையம். செயல்பாட்டுக்குக் கொண்டுவந்து இரண்டு மூன்று ஆண்டுகளாகியும் இன்னும் அந்தக் கோளாறு இந்தக் கோளாறு என்று அந்த வட்டார மக்களை மிரட்டி வருகிறார்கள். அணுவுலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவர்களுக்கு எதிராக சாதியடிப்படையில் அவர்களை அடுத்து வாழும் மக்களை நிறுத்தியிருக்கிறார்கள் ஆட்சியாளர்களின் கைக்கூலிகள். ஒரு நாள் அணுவுலையில் பழுது, பாதுகாப்பான இடத்துக்கு ஓடுங்கள் என்று ஆளவந்தார் கூறினால் ஈழத் தமிழர்கள் போல் உள்நாட்டிலேயே ஏதிலிகளாவீர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள் என்று அம் மக்களைக் கேட்டுக்கொள்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி மாவட்ட தேரிக்காட்டில் 20,000 ஏக்கர் நிலத்தைப் பிடுங்கவந்த பார்சி டாட்டாக்கள் அப்படியே ஓய்ந்து விடுவார்கள் என்று நம்புகறீர்களா?

            தமிழக மீனவர்கள் மீதான சிங்களர்களின் தாக்குதலின் உச்சமாக சில ஆண்டுகளுக்கு முன் போதைப் பொருள் கடத்தினார்கள் என்று இந்திய எல்லைக்குள் தமிழக மீனவர்கள் 5 ஐந்து பேரைச் சிறைப்பிடித்து திடீரென்று அவர்களுக்கு மரண தண்டனையைச் சிங்கள அரசு இப்போது விதித்திருக்கிறது. இந்த நடைமுறை அனைத்துத் தரப்பினரையும் வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி சினவெறியைக் கிளப்பியுள்ளது. அத்துடன் இந்தியாவினுள்ளும் வெளியிலும் தமிழர்கள் சாவதைக் கண்டு மகிழும், பிடித்து வைத்திருக்கும் தமிழக மீனவர்களின் படகுகளைக் கொடுக்கக் கூடாது என்று சிங்கள அரசுக்கு அறிவுரை கூறும், அமெரிக்கா இலங்கை மீது மனித உரிமை மீறல் தீர்மானங்கள் கொண்டுவருவதும் அது வெற்றி பெற்றால் இந்திய ஆட்சியாளர்களின் திருவிளையாடல்கள் அம்பலமாகிவிடும் என்று மிரட்டி அமெரிக்காவுக்கு நலம் தரும் வகையில் இந்தியாவை மிரட்டி சலுகைகள் பெற்றுத் தரும் வல்லரசிய மரணத் தரகன் சுப்பிரமணியன்சாமி இந்திய – சிங்கள அரசுகளுக்கிடையில் உள்ள கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை அடிப்படையில் மோடி அரசு மரண தண்டனை பெற்றோரை இந்தியாவுக்குக் கொண்டுவரும் என்று கூறியிருப்பது நமக்கு ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

            பத்தாண்டுகள் தொடர்ந்து ஆட்சியிலிருந்த பேரவைக் கட்சி ஆட்சியில் தி.மு.க.வுடன் பிறரும் வெட்கமின்றி தொட்ட இடமெல்லாம் வகைவகையாக நடத்திய ஊழல் கூத்துக்களுடன் மக்களின் அன்றாட வாழ்க்கையை நடத்துவதையே கேள்விக்குறியாக்கிய விலைவாசி ஏற்றங்களும் உருவாக்கிய கசப்புணர்வைப் பயன்படுத்தி மீ இற்றை உத்திகளுடன் மாபெரும் பரப்பல் – விளம்பரம் மூலம் அவர்களே அதிர்ச்சியடையும் வெற்றியை எய்தினார் மோடி. இவர்கள் செலவு செய்த மாபெரும் பணத்தின் மூலம் குறித்து நிறைய ஐயங்கள் எழுகின்றன. இந்திய பனியா – பார்சி முதலைகளும் உலகம் முழுவதும், குறிப்பாக பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் தொழில் துறையிலும் அரசியலிலும் செல்வாக்குச் செலுத்தும் குசராத்திகளும், அமெரிக்க வல்லரசும் இந்த வெற்றிக்குப் பின்னணியில் உள்ளனர் என்பது எமது கணிப்பு. குசராத்துக் கலவரத்தைக் காரணம் காட்டி மோடிக்கு தங்கிசைவு(விசா) வழங்க அமெரிக்கா மறுத்தது ஒரு நடிப்பு என்பது எமது கருத்து. அமெரிக்கா மீது இந்திய மக்களுக்கு இருக்கும் வெறுப்பை நன்றாகவே உணர்ந்திருக்கும் அமெரிக்கா அதையே மூலதனமாக்கி மோடிக்கு வெற்றி வாய்ப்பை மிகுத்திருக்கிறது.

            இந்தியாவில் தமிழகத்தில்தான் மிகக் குறைந்த ஆதரவு மோடிக்குக் கிடைத்தது. மோடியின் அருஞ்செயல்களாகக் கூறப்படுபவற்றை மறுத்து, புள்ளிக் கணக்குகளைக் காட்டி குசராத்தை விட தமிழகம் தன் ஆட்சிக் காலத்தில் மிகுந்த வளர்ச்சியடைந்துள்ளது என்று செயலலிதா மேற்கொண்ட பரப்பல் மட்டும் இதற்குக் காரணமல்ல. மனித நாகரிகத்தையும் மொழியையும் உருவாக்கிய தமிழர்களின் முன்னோர் தங்கள் வளர்ச்சிக் கட்டங்களில் பல் வேறு துறைகளில் உருவான குழூஉக் குறிகளிலிருந்து பிராகிரதம்(முந்திச் செய்தது), சமற்கிருதம்(திருந்தச் செய்தது) ஆகிய மொழிகளை உருவாக்கினர். மக்களுக்குத் தலைவர்களாக முதலில் விளங்கிய பூசகர்களும் பின்னர் அவர்களாலேயே உருவாக்கப்பட்ட அரசர்களும் முதலில் மோதிக்கொண்டாலும் பொதுமக்களை எதிர்கொள்ள சமற்கிருதத்தைத் தங்களுக்கு மட்டும் மொழியாகக் கொண்டு தங்கள் நடவடிக்கைகளை மக்களிடமிருந்து மறைத்தனர், அதை மக்கள் படிப்பதற்கும் தடை விதித்தனர்.

தெற்கில் கடற்கோளால் இறுதியில் தமிழகத்துள் நுழைந்த சேர, சோழ, பாண்டியர்கள் பூசகர்களின் மேலாளுமையை முற்றிலும் அகற்றியிருந்தனர். ஆனால் அவர்களுக்கும் முன்னால் பல்வேறு கட்டங்களில் ஒருவர் பின் ஒருவராக வட இந்தியாவினுள் நுழைந்தவர்களால் பூசகர்களின் இந்த மேலாளுமையை முறியடிக்க முடியாமல் போயிற்று. அங்கிருந்து அம்மண, புத்தர்களின் நெருக்குதலால் மேலே[1] கூறியுள்ளவாறு இங்கே நுழைந்த வேதியர்களிடம் தமிழ் அரசர்கள் அடைக்கலமாக வேண்டி வந்தது.

            ஆனால் தமிழக வரலாற்று இயக்கம் பிற பகுதிகளிலிருந்து வேறாக இருந்தது. முன்னாள் களப்பிர(கள்ளர் பிறர்) படைமானியத் தலைவர்களாக இருந்து அம்மணர்களாக மாறியவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிவனிய வேள்ளார்களுக்கும் முதலில் அம்மணர்களோடும் பின்னர் பார்ப்பனர்களோடும் ஏற்பட்ட முரண்பாடுகளாலும் பின்னர் சிவனிய – மாலிய பூசல்களாலும் பார்ப்பன மேலாளுமை எதிர்ப்பும் சமற்கிருத எதிர்ப்பும் அதன் பக்க விளைவாக வடக்கு எதிர்ப்பும் இன்று வரை உயிர்ப்புடன் இருக்கிறது. அதைப் போல் சிதம்பரனாரின் கப்பல் குழுமம் காந்தியின் வயிற்றில் உருவாக்கிய கலக்கம் இன்றும் பனியா இந்திய அரசிடமிருந்து அகலவில்லை.

            பனியா பண்பாடு உள்நாட்டுத் தொழில் - வாணிகம் சராசரி குடிமக்களிடம் மேம்படுவதை விரும்புவதில்லை. அது போல் புதிய தொழில்நுட்ப வளர்ச்சியையும் விரும்புவதில்லை. அப்போதுதானே வெளியிலிருந்து இறங்கும் புதுமையான பண்டங்களை உள்நாட்டில் விற்றுக் கொள்ளையடிக்க முடியும்? உள்ளுரில் உருவாகும் பண்டங்கள் அண்டையிலேயே விற்றுப்போனால் இவர்களுக்கு இங்கு என்ன வேலை? சிவகாசியைச் சுற்றி உருவாகும் தீப்பெட்டியை வடக்கில் அவர்களைச் சில்லரைச் சந்தையில் விற்கவிடுவதில்லை. உப்பைக் கூட அதனை விளைக்கும் நாம் ஏற்றுமதி செய்ய முடியாது. அதே வேளை வடக்கில் உருவாகும் பண்டங்களை இங்கே தங்கள் ஆட்களை இறக்கி அவர்களைக் கொண்டு குறைந்த விலைக்கு விற்று அப் பண்டங்களில் வாணிகம் செய்யும் உள்ளுர் மக்களைக் களத்திலிருந்து அகற்றிவருகின்றனர்.

            உள்நாட்டுத் தொழில்நுட்ப வளர்ச்சி இவர்களுக்குப் பிடிக்காது என்றோம். அதனால்தான் கடலோடிகளைப் போல் நுண்வினைத் தொழிலாளர்களையும் இடங்கைச் சாதியராக்கி ஒடுக்கிவைத்தனர். இன்று புதிய தொழில்நுட்பங்களுக்கு பதிவுரிமம் வழங்க 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந் நாட்டுக்கு ஒரேயொரு அலுவலகம்தான் இருக்கிறது. கடவுச் சீட்டு வழங்க மட்டும் வெற்றிலைபாக்குக் கடைகளை விடக் கூடுதலான எண்ணிக்கையில் அலுவலகங்கள் உள்ளன. எனவே இந் நாட்டையே வெறுத்து வெளிநாடுகளுக்கு தொழில்நுட்பர்கள் ஓடிய நிலை மாறி “மனித வள ஏற்றுமதி” என்ற இழிவான பெயர் கொண்ட “புதிய” பொருளியல் கோட்பாடு அடிப்படையில் அவர்கள் வெளியேற்றப்படுகின்றனர். அங்கிருந்து அவர்கள் அயலவருக்கு உருவாக்கித் தரும் புதிய படைப்புகளை இறக்குமதி செய்து உள்நாட்டில் விற்றுக் கொள்ளையடிக்கின்றனர் இவர்கள். சீனத்திலிருந்து ஏறக்குறைய 1½ இலக்கம் கோடி உரூபாய்க்குப் பண்டங்களை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்திருக்கும் மோடி தனக்குத் தேர்தலில் வாக்களித்த மக்களின் வாழ்வின் அடித்தளம் அழிவது பற்றிய கவலை இல்லை. இறக்குமதியாகும் பண்டங்களை விற்றுக் காசு பார்க்கப் போகும் பனியாக்கள் நலனில்தான் நாட்டம். “இந்தியாவில் செய்வோம்” என்பவர் “இந்தியர்கள் செய்வோம்” என்று சொல்ல மனம் வருகிறதா? “மக்கள் செல்வம்” (சன்தன்) என்ற முழக்கத்தில் அன்றாடங்காய்ச்சிகளின் பணத்தை வங்கிகளிலிருந்து பனியா பெருமுதலைகளுக்கு அள்ளிக் கொடுத்து வாராக்கடனாக்கி பணத்தைப் வங்கிகளில் போட்டவர்களின் பணமதிப்பைப் புதைகுழிக்குள் தள்ளி வயிற்றிலடிக்கும் மோடி உலக உலா வந்து நெடுநாள் ஏமாற்ற முடியாது. என்னென்னவோ பேசும் மோடியின் வாயிலிருந்து தொழில்நுட்பத்தை மேம்படுத்துவோம் என்ற கூற்று தப்பித் தவறிக்கூட வர மறுக்கிறதே ஏன்? 

            இவ்வாறு இந்தியாவின் பிற பகுதிகளைப் போல் கேள்வி கேட்பாரற்ற பார்ப்பன மேலாளுமையோ சமற்கிருத, இந்தி மொழி ஏற்போ இல்லாததுடன் சிதம்பரனார் ஏற்றி நயன்மைக் கட்சி தூண்டிவிட்ட பொருளியல் உரிமை நெருப்பு இன்னும் கனன்றுகொண்டிருப்பதாலும் இந்திய ஆளும் கணத்தினரும் அவர்களை இயக்கும் பனியா – பார்சி - வல்லரசியக் கூட்டமும் தமிழகத்தை வெறுப்புடனும் அச்சத்துடனுமே கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெற்று இங்கு காலூன்றி விட்டால் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று கனவு காண்கின்றனர். அதன் முதற்படிதான் இந்த தூக்குத் தண்டனையும் அதிலிருந்து விடுதலை பெற்றுத் தருவதான நாடகமும். அடுத்து எந்த இராமர் பாலத்தைக் காட்டி தமிழன் கால்வாய்த் திட்டத்தை பா.ச.க.வினர் எதிர்த்தார்களொ அவர்களே இன்று அப் பாலத்துக்கு அப்பால் கால்வாயைத் தோண்டப் போவதாக அளக்கின்றனர். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இடைவெளி விட்டா பாலம் கட்டினார்கள்? நிலப்பகுதியில் தோண்டத் திட்டமிட்டால் நாளை இவர்களே சூழல் கேடு, பல்லுயிர்மப் பாதுகாப்பு அது இது என்று கூறி நிறுத்தமாட்டார்கள் என்பதற்கு என்ன உறுதி?

இந்த மாயமானைக் காட்டும் நாடகத்தின் ஓர் அங்கம்தான் பொன்.இராதாகிருட்டினனை சாலை – கப்பல் போக்குவரத்து இணையமைச்சராக்கியுள்ளது. முன்னரும் தமிழகத்தைச் சேர்ந்த டி.ஆர்.பாலுதானே இதே துறையின் “முதன்மை” அமைச்சராக இருந்தும் காரியம் ஒன்றும் நடக்கவில்லையே!

நிகழ்காலத்தில் தங்களுக்கு சாதி அடிப்படையில் உள்ளூரிலும் அரசியல் அடிப்பட்டையில் இந்தியாவிலும் செல்வம், நாட்டுரிமை அடிப்படையில் உலக அளவிலும் எந்த மதிப்பும் இல்லையே என்ற ஏக்கத்தால் பெரும் தாழ்வு மனப்பான்மை தமிழர்கள் மனதில் இருக்கிறது. அதைப் பயன்படுத்திப் புறப்பட்டிருக்கிறார் உத்திரகாண்டு மாநிலத்தைச் சேர்ந்த பா.ச.க.பாராளுமன்ற உறுப்பினர் தருண் விசை என்பவர். அவரைத் தலைமீது சுமந்து திரிகின்றனர் தன்னை உலகில் இது வரை தோன்றிய புலவர்களின் அரசன் என்று இறுமாந்து திரியும் வைரமுத்துவும் வேறு சிலரும். இதற்கு முன்னும் ஆங்கிலேயரும் நேற்று சப்பானியரும் இதே போன்று உறவு கொண்டாடியே நம்மைச் சுரண்ட எதிர்ப்பு இல்லாத மனநிலையை நம்மிடம் உருவாக்கினர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். வள்ளுவரும் பாரதியும் எங்கும் போய்விடமாட்டார்கள். ஆனால் நாம் மண்ணை இழந்தால் எதுவும் இருக்காது என்பதை மனதில் நிறுத்தி இவர்களோடு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செயலலிதாவால் குற்றஞ்சாட்டப்பட்டு பழிவாங்கத் துடித்துக்கொண்டிருக்கும் காஞ்சி சங்கராச்சாரியும் வல்லரசிய மரணத் தரகன் சுப்பிரமணியம்சாமியும் நாற்காலிகளில் ஒய்யாரமாக வீற்றிருக்க அவர்கள் முன்பு தரையில் தலை குனிந்து சப்பணமிட்டு அமர்ந்திருக்கும், தன் சாதி மக்களையே மதிக்காத பொன்.இராதாகிருட்டினனும் பதவிக் கனவில் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்தபடி பேசித் திரியும் தமிழிசையும் தமிழகத்தில் பா.ச.க.வை நிலைநிறுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் பயன்தரா. 1982இல் குமரி மாவட்ட மக்களிடையில் சமய மோதல் என்ற பெயரில் சாதி மோதலை ஏற்படுத்தி தாணுலிங்க நாடார் என்ற கோடாரிக் காம்பைப் பயன்படுத்தி உலகிலுள்ள பணக்கார “இந்து” நாடார்களிடம் பணம் கொள்ளையடித்து அவர்களின் தொழில்களுக்கே குழி தோண்டிக்கொண்டிருக்கும் தந்திரம் மீண்டும் எடுபடாது. தமிழக மக்கள் விழிப்பாக இருப்பார்கள், இருக்க வேண்டும்.

வந்திருக்கும் அறைகூவல் மீனவர்களுக்கோ காவிரிப் படிகை உழவர்களுக்கோ என்று நாம் ஒதுங்கியிருக்கக் கூடாது. 1956 நவம்பர் வரை திருவிதாங்கூரிலும் சுற்றிலுமிருந்த மநிலங்களிலுமிருந்த 9 வட்டங்களுக்காக இன்றைய குமரி மாவட்டத்தில் இருந்த மக்கள் போராடிய போது தமிழக மக்கள் அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்திருந்தால் அவற்றில் 4½ வட்டங்களை விட்டுக்கொடுத்துத் தமிழக மக்களுக்குக் காமராசரும் தன்னை நம்பி சிறை வாழ்வும் அடியுதையும் பட்டதோடு இன்னுயிர்களையும் ஈந்தவர்களுக்கு நேசமணியும் இரண்டகம் செய்த போது தட்டிக்கேட்டிருந்தால் பெரியாறு அணையையும் கண்ணகி கோயிலையும் இழந்திருக்க மாட்டோம். பெரியாற்று அணையின் நீர் மட்டம் உயர உயர மலையாளிகளின் அரசு என்ன செய்யுமோ என்று நொடிக்கு நொடி உள்ளம் பதற வேண்டியிராது. நெய்யாற்று நீருக்காக தமிழக அரசு நயமன்ற வாயிற்படியை மிதிக்க வேண்டி வந்திருக்காது. இனிமேலாவது தமிழகக் குடிமகன் எவனுக்கு எங்கு அயலவர்களால் சிறு தீங்கு ஏற்படினும் கொதித்தெழுந்து அவனுக்குப் பாதுகாப்பளிப்போம் என்று உறுதி எடுப்போம்.

தமிழன் கால்வாய் கடற்கோள் நம்மிடமிருந்து பறித்து விட்ட சொத்தைப் புதிய இடத்தில் உருவாக்கும் நடவடிக்கை. அதுதான் மீனவ மக்களின் இல்லாமை, கல்லாமை, வறுமை ஆகியவற்றை அகற்றி பல்லாயிரம் ஆண்டுகளாக ஒடுக்குமுறைச் சிறைக்குள் முடங்கிக் கிடந்தவர்களை வாழ்வின் ஒளியை நோக்கி இட்டுச் செல்லும் ஒளி விளக்கு.

ஆட்சியாளர்களை நம்பியிராமல், ஆட்சியாளரின் வருமான வரி மிரட்டலுக்கு அஞ்சி தமிழ்நாட்டு மக்களிடம் பதுங்கிக் கிடக்கும் மாபெரும் செல்வக் குவியலைக் கொண்டு நாமே நிறைவேற்றப் போராடுவோம். இப் பணிக்காக முதலிடப்படும் பணத்திக்கு மட்டுமாவது வருமான வரி விலக்குக் கேட்டுப் போராடுவோம். 
வருமான வரியை முற்றாக ஒழிப்போம்!
ஒன்றிணைவோம்! போராடுவோம்! வெற்றி பெறுவோம்!
வெல்க தமிழ்!
                                                வளர்க தமிழகம்!                                                 
                                                                                                                              அன்புடன்
குமரிமைந்தன்
திருமங்கலம்,
14 – 11 - 2014


[1] பக.1