4.5.09

நரிதனைப் பரியாக்கி பரிதனை நரியாக்கி......

கவர்ச்சித் திட்டங்கள் தமிழக வ.செ.திட்டத்தை உறிஞ்சுகிறது (Populism eats into Tamilnadu Budget) என்ற தலைப்பில் 29-9-2008 டைம்சு ஆப் இந்தியா, சென்னைப் பதிப்பு ஒரு செய்திக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. பொய்யிலே பிறந்து ... என்ற தலைப்பில் நாம் ஏப்பிரல் 2008 தமிழினியில் எப்படி உரூ 9752.00 கோடி பற்றாக்குறை வ.செ.திட்டத்தை உரூ 84.00 கோடி மீத வ.செ.தி. என்று அரங்கத்தில் சாற்றினார்கள் என்பதைக் குறிப்பிட்டிருந்தோம்.

அந்த வ.செ.தி. உரையை நிகழ்த்திய ″பேராசிரியர்″ எப்படி சாராய வாணிகத்தில் கிடைக்கும் வருமானத்தில் அரசின் நலத்திட்டங்களை, அதாவது இலவயத் திட்டங்களை நிறைவேற்றுகிறோம் பாருங்கள் என்று பெருமிதம் கொண்டார். எனவே சாராய விலை உயர்வு அதனால் கூடுதல் வரவு என்பதில் வியப்பில்லை. ஆனால் இன்னொரு சிக்கல், தமிழினத் தலைவர் அறிவித்த திட்டங்களில் தொ.கா.பெட்டி பல இடங்களில் இன்னும் வழங்கப்படவில்லை. எரிவளி தட்டுப்பாட்டினால் வளி இணைப்பு நடுவில் நின்று போயுள்ளது. இவை எல்லாம் கட்டுரையாளருக்குத் தெரியாது போலும். களத் தொடர்பு சரியில்லை.

இன்னொரு உண்மையை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். உங்களை மனமகிழ வைத்துத்தான் உங்களிடமிருந்து வாக்குகளைப் பெற வேண்டுமென்ற தலை எழுத்து எங்கள் தலைவருக்கு இல்லை. பின் எதற்கு இதெல்லாம் என்கிறீர்களா? தொ.கா.பெட்டியும் எரிவளி அடுப்பும் கொள்முதல்வதில் ஏதாவது கிடைக்காதா? அதற்காகத்தானே அரசியல் நடத்துகிறோம். கட்டடம் கட்டுவோம். அதில் பணியாற்ற ஆள் அமர்த்த மாட்டோம். கப்பல் வாங்குவோம், பூம்புகார் போக்குவரத்துக் கழகத்துக்கு. மாலுமி அமர்த்த மாட்டோம். அது கடலில் மிதந்து கிடந்து துருப்பிடிக்கட்டும். அது ஓடி எங்களுக்கு என்ன ஆகப் போகிறது?

யானை வாங்கியவர்கள் துறட்டி வாங்கவில்லை என்று சொல்கிறார்களே! அதன் பொருள் என்ன? யானையில் கிடைக்கும் தரகுக்கும் துறட்டியில் வாங்கும் தரகுக்கும் எவ்வளவு வேறுபாடு. இதற்கென்று துறட்டிக்கெல்லாம் தரகு கேட்டு இழிவுபட்டு நிற்க முடியுமா? பொதுப் பணித்துறையில் ஒரு செயற்பொறியாளர். மொத்தத்தில் நல்லவர்தான். எண்ணற்ற சின்னஞ்சிறு ஒப்பந்தக்காரர்களிடமெல்லாம் சல்லிக்காசு வாங்கமாட்டார். அங்குள்ள ஒரேயொரு பெரிய ஒப்பந்தக்காரரிடம் தாராளமாக வாங்கிக் கொள்வார். அனைவரிடமும் தூய்மையானவர் என்று பெயரெடுத்து விட்டார். ஆனால் இங்கு இன்று நாட்டில் ஊழல் பேர்வழி என்று பெயர் வாங்கினால் என்ன கெட்டுவிட்டது?

1977- 78 இல் பெரியகுளத்தில் ஓர் 6 மாதம் பணியாற்றினேன். ஒரு நாள் காலையில் வராகநதி எனப்படும் பன்றியாறாகிய பழனியாற்றின் பாலத்தில் நடந்து சென்ற போது இருவர், அவர்களைப் பார்த்தால் பள்ளி ஆசிரியர்களைப் போல் தோன்றியது, பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் கூறுகிறார், ″கருணாநிதி கொள்ளையடித்தாலும் பரவாயில்லப்பா, நமக்கும் நிறையக் கொடுத்தான்″ (ஒற்றைப்படைக் குறிப்பு உரையாடிவருக்குரியது, எனவே பொறுத்தருள்க) என்றார். அப்போது ஆட்சியிலிருந்த ம.கோ.இரா. நம் தமிழினத் தலைவரைப் போல இந்த ஒட்டுண்ணிகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கவில்லை போலும். இந்த ஒட்டுண்ணிகளுக்கு ஏற்றவர்களாகத்தானே நம் ஆட்சியாளர்கள் இருப்பார்கள்? விதை ஒன்று போட்டால் கரையொன்று முளைக்குமா?

யானையிலிருந்து திடீரென்று வேறெங்கோ போய் விட்டோம். பொறுத்தருள்க. யானை அன்று ஒரு போர்க் கருவி அல்லவா? அதனால் இன்று போல் அன்றும் ஆயுத பேர ஊழல் நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? நன்று, நன்று, பாராட்டுகள். உங்களுக்கு ஏதாவது ஐயமிருந்தால் சேக்கிழார் பெருமானைக் கேட்டுப்பாருங்கள். அமைச்சராயிருந்த மாணிக்கவாசக அடிகளார் குதிரை வாங்க என்று அரசுக் கருவூலத்திலிருந்து பணத்தை எடுத்துச் சென்று சிவனுக்கு ஆலயம் எடுப்பித்தது ஆயுத பேர ஊழல்தானே! போபோர்சு பகரத்தில் 20% மேல் ஆட்சியாளர்களுக்குக் கிடைத்தது என்று போபர்சு நிறுவனத்தின் போட்டி நிறுவனம் கூறியது. உலகச் சந்தையில் ஆயுத பேரத்தில் குறைந்தது 20%க்கு தரகு, உண்டாம். அவர்களும் 20% தரகு கொடுக்க முன்வந்தார்களாம். ஆனால் போபோர்சு கூடுதல் தரகு கொடுத்ததால் அங்கே போய்விட்டார்கள் என்பது அந்த நிறுவனத்தின் மனக்குறை. அடிகளார் செய்தது 100% ஊழல் அல்லவா?

சரி, அவர் சிக்கியதும் என்ன நடந்தது? அசல் சிவபெருமானே முன்வந்து அவரைக் காக்கவில்லையா? யார் சொன்னது சிவன் சொத்து குல நாசம் என்று? வாருங்கள் அடியவர்களே! சமயத் தொண்டர்களே! துணிந்து சிவன் தொண்டில் ஈடுபடுங்கள். எவ்வளவு ஊழல் செய்தாலும் சிவன் உங்களைக் காப்பார்.

ஆனால் ஒரு சின்ன ஐயப்பாடு. மாணிக்கவாசகர் ஊழல் செய்தது அதே சிவனுக்குக் கோயில் கட்டத்தானே. வேறு நோக்கத்துக்காக அல்லது கோயில் கட்டுபேர்வழி என்று அதிலும் கொஞ்சம் சுருட்டியிருந்தால் சிவன் விட்டிருப்பாரா? நம் கடவுள்கள், துட்ட நீக்கி இட்ட பரிபாலம் செய்பவர்களன்றோ, அதாவது தீயவர்களை அழித்து தமக்கு வேண்டியவர்களைப் பாதுகாப்பவர்கள் அல்லரோ? காப்பது நல்லவர்களை அல்ல வேண்டியவர்களை என்றால் அப்போது அழிக்கப்படுபவர்கள், அதாவது துட்டர்கள் எனப்படுவர்கள் தமக்கு வேண்டாதவர்கள், அதாவது வேறு கடவுள்களை வழிபடுபவர்கள் அல்லது தன்னை வழிபடாதவர்கள் என்று பொருளாகுமல்லவா? அப்படியானால் தன் அடியவர்கள் தனக்குச் செய்யும் பணியில் தவறுகள் செய்தாலும் பொறுத்துக்கொள்வார்கள் நம் கடவுள்கள் என்று தேறலாம். மொத்தத்தில் ஊழல், வேண்டியவர் - வேண்டாதவர் பார்த்து ″நயன்மை″, நன்மை, தீமை, செய்தல் என்பவை எல்லாம் முறை என்றும் நெறி என்றும் கடவுள் பண்பாகவும் காட்டப்பட்டு நம் குருதியினுள் ஏற்விட்டது. இந்தக் குருதியை மாற்ற வேண்டும் ஈழத்தில் நடைபெறுவது போல்.

அண்மைக் காலமாக தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் நுழைந்தாலே பொய் பேசும் கலை நன்றாகக் கைவந்துவிடுகிறது. சிக்குன் குனியா, பேருந்துக் கட்டண உயர்வு,″மீத″ வ.செ.தி. பற்றிய பொய்களை எல்லாம் விட்டுவிடுவோம். பெரியவர் மின்வெட்டார், மன்னிக்க, ஆர்க்காட்டர் அடுக்காத பொய்களை விடவா இலவயத் திட்டங்களால் எந்தப் பணவியல் இல்லை என்று சொன்ன இந்த அதிகாரி சொல்லிவிட்டார்?

பொய்யே பிழைப்பாகக் கொண்ட ஒருவன் தன் மகனைப் பொய் சொல்லச் சொன்னானாம். அவன் சரியாகச் சொல்லவில்லையாம். நீ பிழைச்சுக்க மாட்டலே என்று கூறி அவனைக் கிணற்றுக்குள் எறிந்துவிட்டுப் போய்விட்டானாம். சிறுவன் எப்படியோ கரை ஏறிவிட்டான். தந்தை கேட்டான், எப்படிடா மேலே வந்தே என்று. மகன் சொன்னான் தண்ணீரில் மல்லாக்கப் படுத்துக்கிட்டு ஒன்னுக்கு அடிச்சேன்பா, அதைப் பிடிச்சுக்கிட்டே மேலே ஏறிட்டேன் என்று. மகனைத் தந்தை மகிழ்ச்சிப் பெருக்கால் கட்டிப் அணைத்துக் கொண்டானாம். அந்தச் சிறுவனெல்லாம் நம் தலைமைச் செயலக வாழுநர்களின் முன் எம்மாத்திரம்?

கல்வித்துறையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் ஐந்தாண்டுகளுக்கு எழுத்தும் கிடையாது ஏடும் கிடையாது. ஆனால் அந்த ஐந்து வகுப்புகளுக்காகவும் 25 கோடி செலவில் புத்தகம் அச்சடித்து வைத்துள்ளனர். நோக்கம் என்ன?

எழுதப் படிக்கச் சொல்லித் தராத பள்ளியில் படித்து எதற்கு என்று ஏழை மக்கள் ஒன்றிரண்டு தலைமுறைகளுக்கு முன்பிருந்ததைப் போல் படிக்காமலே இருந்து விடுவோம் என்று முடிவு கட்டிவிடுவார்கள். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் பார்ப்பனர்கள், அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களின் தலைமையில்தான் ஆட்சி நடைபெறுகிறது. எனவே அடித்தள மக்களுக்கு எழுத்தறிவு தேவையில்லை என்று அவர்கள் நினைப்பது சரிதான். அவர்கள் மட்டுமல்ல எல்லாச் சாதியின் மேல்மட்டத்தில் இருப்பவர்களுமே தாங்களும் தங்கள் மட்டத்திலுள்ளவர்களும் மட்டும் கல்வி கற்றால் போதும் என்று நினைக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, நாடார் மகாசன சங்கத்தின் பொறுப்பாளர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடும் பனையேறிகளுக்கு கள்ளிறக்கும் உரிமையும் வேண்டும் என்று கேட்கவில்லையா?

தமிழக வரலாற்றைப் பார்த்தால் ஏதோவொரு வெளிவிசை தமிழகத்தைப் பிடிப்பதற்காக மத வடிவில் நுழைந்து அடித்தள மக்களுக்கு எழுத்தறிவு வழங்கிவிட்டு வந்த வேலை முடிந்ததும் கைவிட்டு விட்டிருப்பதை உய்த்தறிய முடிகிறது. அத்தகைய ஒரு நிகழ்முறை வெள்ளையர் வந்த பிறகு தொடங்கி முடிவுகாலத்தை நெருங்குவதை இப்போது உணர முடிகிறது.

கல்வித்துறையில் முதன்மைக் கல்வி அலுவலர் போன்ற பதவிகளில் நேரடி அமர்த்தல் நடைமுறையிலிருக்கிறது. 30 அகவைக்கு உள்ளடங்கிய இளைஞர்கள் தங்கள் தந்தை அகவையுள்ள ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மேல் ஆளுமை செய்ய வந்துவிடுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் ஆங்கில வழிப் பள்ளிகளில் பயின்ற மேட்டுக்குடி (எந்தச் சாதியாயினும்) மக்களிலிருந்து வந்தவர்கள். இவர்களில் எவரும் சேரிப் பிள்ளைகள் படிக்கும் இந்த அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் பக்கமே எட்டிப் பார்த்திருக்க மாட்டார்கள். அத்துடன் தங்கள் வாழ்நாளில் ஒரு நாள் கூட ஒரு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய பட்டறிவுப் இருக்காது. பட்டறிவில் பழுத்த மூத்த ஆசிரியர்களுக்கு எப்படி கற்பிப்பது என்று இவர்கள் அறிவுறுத்துவார்கள். எவராவது உண்மை நிலையை எடுத்துரைக்க முயன்றால் அவர்களுக்குத் தண்ணீர் இல்லாக் காட்டுக்கு மாறுதல் கிடைக்கும். இவர்கள் அனைவரும் சேர்ந்து சேரிப் பிள்ளைகளுக்கான இந்தப் பள்ளிகளை இழுத்து மூடாமல் ஓயப்போவதில்லை.

இனி, பாசனத்துறையை எடுத்துக்கொள்வோம். பாசன அமைப்புகளைப் பராமரிப்பது இல்லை; உரிய பொறியாளர்களை அமர்த்துவதில்லை. உழவர்களும் இதைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஓர் உரூபாவுக்கு ஒரு கிலோவென்று அரிசி விற்கும் போது, அது தீட்டப்பட்டு மலிவாகச் சந்தைக்கு வரும்போது, ஒரு நாளைக்கு உரூ 250/- கூலி கொடுத்து வேளாண்மை செய்து கிடைக்கப் போவதென்ன? தமிழினத் தலைவர் நடுவரசில் தனக்கிருக்கும் செல்″வாக்கை″ வைத்து வேண்டிய அளவு நெல்லை நடுத் தொகுப்பிலிருந்து பெற்று ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி வழங்கிவிடுகிறார். ஆக, அதிலும் செலவு மிச்சம். அத்துடன் அரியினால் வரும் அரிசியல் சிக்கலையும் தவிர்த்துவிடலாம். ஆளுவோருக்கோ எத்தனையோ வகைகளில் வருமானம்.

தமிழகத்தில் கரும்பு வேளாண்மை செய்வோருக்கு உரிய விலை வழங்காததால் இங்கு சீனி விளைப்பு குறைந்து வருகிறது; கருநாடகத்தில் கூடுதல் விலை வழங்குவதால் அங்கு வளர்ச்சியடைகிறது என்றும் கரும்பிலிருந்து சீனி எடுத்தபின் வெளியேறும் கசடைச் சாராய ஆலைகளுக்கு வழங்கி ஆதாயம் பெறுகின்றனர்; அதில் ஒரு பகுதியை உழவர்களுக்குக் கொடுத்தால் என்ன என்றும் கேட்கிறது 25-10-2008 தினமணியின் ஆசிரிய உரை (அடிக்கரும்பும் நுனிக்கரும்பும்).

தமிழகத்தில் பாசன நீரை அண்டை மாநிலங்களுக்கு வழங்கி ஆதாயம் பார்த்தது போல் கரும்பு வேளாண்மையையும் சீனி ஆலைகளையும் சாராய வடிப்புத் தொழிற்சாலைகளையும் கர்னாடகத்துக்கு மாற்றி ஆதாயம் பார்க்கத் திட்ட மிட்டுள்ளார்களோ என்னவோ?

ஆக, இதனால் எல்லாம் செலவை மிச்சம்பிடித்து மக்களுக்கு இன்னும் எத்தனையோ ″நலப்பணிகளை″ச் செய்ய இருக்கிறார் தமிழினத் தலைவர்.

தான் என்னென்ன பணிகள் செய்யப் போவதாகச் சொல்வதை விட்டு எத்தனை கோடிகளுக்குப் பணிகள் செய்யப்போவதாக அரசு என்று அறிவிக்கத் தொடங்கியதோ அன்றே அந்த ″ஒதுக்கீட்டின்″ பொருள் வேறாகிவிடுகிறது. இந்த ஒதுக்கீட்டில் தத்தமக்கு எவ்வளவு எவ்வளவு கிடைக்கும் என்பது கட்சித் தொண்டர்கள் வரை இப்போது தெரிந்து போய்விடுகிறது. ஆகவே எனது அருமை உடன் பிறப்புகளே, இரத்தத்தின் இரத்தங்களே ஆயத்தமாகுங்கள்; கட்டுப்பாட்டோடு பாடுபட்டு அடுத்த தேர்தலில் வெற்றி தேடித் தாருங்கள்; உங்களுக்கு வளமான ஓர் எதிர்காலம் காத்திருக்கிறது. ″ஒதுக்கீடு″ பற்றிய இந்த அறிவிப்புகளின் நோக்கம் இதுத்தான்.

நாங்கள் பொய்களைச் சொன்னால் நீங்கள் எங்களை என்ன செய்ய முடியும்? இதுவரை சொல்லிய பொய்களுக்காக எங்களை என்ன செய்துவிட்டீர்கள்? ஏதோ ஆங்கிலன் எழுதிய அரசியல் சட்டத்தைப் படியெடுத்து உருவாக்கிய புதிய அரசியல் சட்டமும் சொல்கிறது என்பதற்காக ஆண்டுக்கு ஒரு வ.செ. திட்டத்தையும் ஒரு திருந்திய மதிப்பீட்டையும் அவையில் வைத்து நிறைவேற்றித் தொலைக்க வேண்டியிருக்கிறது.

எம் மூதாதைகளான சேரனும் சோழனும் பாண்டியனும் வ.செ.தி.யும் திருந்திய மதிப்பீட்டையும் போட்டா ஏரி, குளங்கள், கோயில்கள் கட்டினார்கள்? சத்திரங்கள், சாவடிகள், சாலைகள் அமைத்தார்கள்? மரங்கள் நட்டார்கள்? அந்த உயர்ந்த, ஒப்பற்ற பீடும் பெருமையும் கோலோக்சும் ″உன்னத″ நிலையை விரைவில் எய்துவோம் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறோம்!

ஓங்குக அய்யன் திருவள்ளுவர் புகழ்!

(இக்கட்டுரை தமிழினி நவம்பர்-2008 இதழில் வெளிவந்துள்ளது.)

1 மறுமொழிகள்:

சொன்னது…

நல்ல விறுவிறுப்பான கட்டுரை. சுத்தமான தமிழில் ஒரு பதிவு.

தாங்கள் வசிப்பது கன்னியாகுமரியிலா??? அடியேனுக்கு நாகர்கோவில்தான்.