30.11.08

செயமோகனின் "மத்தகம்"

திருவிதாங்கூர் நாட்டின்(சமத்தானத்தின் அல்ல - வெள்ளையர் ஆதிக்கத்திற்கு முன்பு) இறுதிக் காலத்தில் அரசர்களும் அவர்களைச் சூழ்ந்திருந்த சுற்றத்தார் என்று தமிழ் இலக்கியம் கூறும் ஆள்வினையாளர்களும் ஆடிய ஆட்டங்களை ஒரு யானையின் பிடரியைக் குறியீடாக்கி சொல்லோவியமாகத் தீட்டியிருக்கும் மத்தகம்(தமிழினி நவம்பர்-2008) நண்பர் செயமோகனின் படைப்பாற்றலுக்கு ஒப்பற்ற ஓர் எடுத்துக்காட்டு.

அரசன் விரும்பும் ஒரு யானை அதைப் புரிந்து கொண்டு நிகழ்த்தும் கொடுமைகளும் அதற்கு ஈடுகொடுக்காமல் போனால், அரசனின் வருத்தத்துக்கு ஆளானோர் எப்போதும் எதிர்பார்த்து அஞ்சியிருந்த கழுக்கோலுக்கு இரையாக வேண்டிய கொடுமையும், கழுவேறிச் சாவதை விட யானை மிதித்துச் செத்துப் போவது மேல் என்ற எண்ணமும் அன்றைய சராசரிக் குடிமகனின் அவல வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. யானை மிதித்து இறந்தால் நொடியில் சாவு விழுங்கிவிடும்; கழுவேற்றினால், நாள் கணக்கில் ஊணின்றி நீரின்றி அணு அணுவாகச் செத்து உயிர் இருக்கும் போதே காக்கையும் கழுகும் கொத்திக் கொத்தித் தின்ன, ஓ, ஓ என்று ஓலமிட அந்த வட்டாரத்தில் அறியாமல் நுழைந்துவிடும் மனிதர்களைக் கிலிபிடித்துச் சாக வைக்கும் கொடுமை அது. நாகர்கோயிலில் இன்று மத்தியாசு மருத்துவமனை இருக்கும் பகுதியை முன்பு கழுவன்தட்டு அல்லது கழுவன்திட்டை என்று கூறுவார்கள். கழுவேற்றுதல் நின்று இரண்டு நூற்றாண்டுகள் சென்ற பின்னரும் அந்த வட்டாரத்தில் நடமாடவே மக்கள் அஞ்சினர்.

யானைப் பார்ப்பார்(பாகன்)களின் மனைவிகளின் நிலையை நினைத்துப் பார்த்தால் நெஞ்சு பதறுகிறது. கணவன் இறந்து ஓரிரண்டு நாளிலேயே தன்னையும் தன் பிள்ளைகளையும் காப்பாற்ற இன்னோர் ஆடவனுக்குத் தயங்காமல் தன்னை ஒப்படைக்க வேண்டிய வெட்கப்பட வேண்டிய அவர்களது நிலை தொல்காப்பிய காலத்திலிருந்து இன்றுவரை நம் நாட்டில் பெண்கள் பட்டுவந்துள்ள பாடுகளின் உச்சத்தை உள்ளம் ஒடுங்கும் வகையில் படம் பிடித்துக் காட்டியுள்ள பாங்கு வியக்கத்தக்கது.

தங்களை விடத் தாழ்ந்த சாதிகளைச் சேர்ந்த பெண்கள் தங்கள் எதிரில் வரும் போது முலைகளைத் திறந்து போட்டுக்கொண்டு நடக்க வேண்டும் என்ற கேரளத்தின் நடைமுறை பெண்கள் மீது நம் நாட்டில் பார்ப்பனியம் எனப்படும் சாதியத்தின் வடிவத்தில் நடைபெற்ற மிகக் கொடுமையான சுரண்டலாகும். அம்பிலி என்ற பெண்ணின் வடிவத்தில் அதனையும் கோயில்களினுள் நடைபெறும் முறைகேடுகளையும் மென்மையாகக் காட்டியுள்ளார். இன்னும் கொஞ்சம் காட்டத்துடன் இதைக் கையாண்டிருக்கலாம்.

தீண்டாமை, காணாமை, கேளாமை போன்ற கொடுமைகளுக்கு உட்பாடாத நால்வரண வரம்புக்கு உட்பட்ட மக்களுக்கே இந்த நிலை என்றால் அதற்கு வெளியே, அத்தகைய கொடுமைகளுக்கு ஆட்பட்ட மக்களின் வாழ்நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கவே எம் மனத்துக்குத் துணிவில்லை.

தன்னை விரும்பும் அரசனையும் தெய்வப் படிமத்தையும் தவிர வேறெவரையும் தன் மத்தகத்தில் ஏறவிடாத யானை அந்த அரசனும் மாண்டு, அரண்மனைச் சூழலும் மாறிய உடன், குறிப்பாகத் தன்னை நோக்கிக் குறிபார்த்த துப்பாக்கியைக் கண்ட பின்னர் துணிச்சலுடனும் நேர்மையாகவும் தனக்குப் பணியாற்றிய பாகனுக்குப் பணிந்து அவனைத் தன் மத்தகத்தில் ஏந்திக் கொண்டது மனிதர்கள், குறிப்பாக அரசியல்வாணர்கள் தங்கள் சார்பை அவ்வப்போதைய ஆட்சிச் சூழலுக்கேற்ப மாற்றிக் கொள்வதை நினைவூட்டுகிறது.

புதிய அரசனுடன் வந்து சேர்ந்த வெள்ளையர்கள், நம் நாட்டில் பழைய அரசு முறை மாறி புதிய ஒன்று உள்ளே நுழைந்ததைக் குறியீடாகக் காட்டுகிறது. ஆனால் அந்தப் புதிய ஆட்சிமுறை நிலைத்து நிற்குமா? நாம் மீண்டும் பழைய நிலையை நோக்கிப் போவதைத் தடுக்க வழியுள்ளதா என்பது இந்தக் குறும் புதினத்துக்கு வெளியே நம்மை நோக்கி நிற்கும் கேள்வி. "வரலாற்று ஆய்வாளர்" பண்டிதர் உயர்திரு. எசு.பத்மநாபன் அவர்கள் திருவிதாங்கூர் முன்னாள் அரசர்களின் பிறங்கடை(வாரிசு)களைத் தேடிப்பிடித்து குமரி மாவட்டத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அழைத்து வந்து அவர்களது முன்னோர்கள் நடத்திய "தரும இராச்சியத்"தின் சிறப்புகளை விளம்பரம் செய்து அவர்களை மக்கள் முன் அறிமுகமும் செய்வதையே முழு நேர "ஆய்வு"ப் பணியாகக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது நமக்கு இந்த ஐயங்களும் கேள்விகளும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. குமரி மாவட்டத்தை மீண்டும் கேரளத்தோடு இணைக்க வேண்டும் என்ற வேட்கையைக் கொண்டிருப்பவர்களின் தீய நோக்கத்துக்கு மக்களிடையில் ஆதரவு திரட்டுவதாக இவரது "ஆய்வுகள்" அமைந்துள்ளதைக் கண்டும் காணாமல் இருக்கும் குமரி மாவட்ட, தமிழக அறிஞர் பெருமக்களை இப்போக்கைக் கைவிட்டு அவரது செயல்களை உரியவகையில் தடுத்துநிறுத்தும் வகையில் செயல்பட வேண்டுகிறேன்.

இலக்கியத் திறனாய்விலிருந்து அரசியல் திறனாய்வுக்குள் நுழைந்துவிட்டமைக்குப் பொறுத்தருள்க. எல்லோரது இலக்கியச் செயற்பாடுகளுக்கும் அவ்வவற்றுக்குரிய நேரடியான அல்லது மறைமுகமான அரசியல் உள்ளடக்கம் உண்டு. என்னைப் பொறுத்தவரை என் அரசியலை நான் மறைப்பதில்லை.

மீண்டும் "மத்தகத்தி"னுள் நுழைவோம். நிகழ்ச்சிகளைச் சொல்லும் போது நாம் உள்ளாகும் மெய்ப்பாடு ஈடு இணையற்றது. பெரும் பேய்மழையைப் பற்றிய விளக்கத்தைப் படிக்கும் போது நாமே அந்த வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது போன்ற பதறல், யானை மனிதர்களைத் தாக்கும் போது நாமே யானையின் தும்பிக்கையில் அகப்பட்டது போலவும் அதன் காலுக்குள் நசுங்க இருப்பது போலவும் ஒரு கிலி.

வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் மெய்ப்பாட்டிலும் உயர்வான ஒரு படைப்பை நண்பர் செயமோகன் வழங்கியுள்ளார். கருவுயிர்க்க நாளானாலும் ஈன்றுள்ளது ஒரு கொம்பனானைக் குட்டியை.

2 மறுமொழிகள்:

பெயரில்லா சொன்னது…

தாங்களைப்பற்றியும் தாங்களின் வலைப்பதிவும் எனக்கு இப்போதுதான் அறிந்தேன்.ஆராய்ச்சிகளுக்கு வாழ்த்து சொல்லும் அளவிற்கு வயதில்லை. நன்றாக இருக்கிறது.
என்னுடைய ஒரு கருத்தும் இங்கே வைத்துளேன்

பெரியரும், அம்பெத்கரும், போராடி பெற்றெ ஆலய பிரவேசம், ஜாதி ஒழிப்பு இப்போது பிராமண ஒழிப்பாக மட்டுமே ஆகிவிட்டது, எல்லாமே தலைகீழாக பிராமண ஆதிக்கம் குறைந்து ஊரில் எவன் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறாணோ அவர்கழுக்கு மற்றவர்கள் பணிந்து போகவேன்டிய நிலை இப்போது தலைவிரித்து ஆடுகிறது.

மேலும் பிராமணர்களிடமிருந்து அந்த ஆயுதத்தை இப்போது எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ளவர்கள் கையில் எடுத்துள்ளனர், எடுத்துக்காட்டாக, கன்னியாகுமரி மாவட்டம் நாடார் சமுதாயம் பெரும்பான்மையாக உள்ளனர்,
அவர்கள் வீடுகளுக்கு செல்லும் சமூதயத்தில் கீழ் வகுப்பை சார்ந்த்வர் என உருவகபடுத்தப்பட்ட நாவிதர், சாம்பவர், மற்றும் பலதரப்பட்ட கீழ் வகுப்பை சார்ந்த்வர்களை வீடுகளின் முன்பாக அனுமதிப்பது இல்லை. அவர்கள் வீட்டின் பின் பக்கமாகவே வந்து எதாவது வாங்கவேண்டுமானாலும், செய்ய‌ வேண்டுமானாலும் சென்றுவர வேண்டும். இது அந்த வீட்டு பெண்மணிகளின் எழுதப்படாத சட்டம். (இது இனபாகுபாடு இல்லை என கூறிக்கொள்ழும் கிறிஸ்தவர்களின் வீடுகளில் மிக அதிகம். அவர்கள் கிறிஸ்தவ நாடார் கழாம்)

இந்த மாவட்டத்தில் நாகர்கோவில் அருகே முகிலன்விழை என்ற கிராமத்தில் ஊரில் உள்ள ஊர்கோவிலில் நாடார்களை தவிர மற்ற ஜாதியினருக்கு கோவிலில் வரி குடுக்க அனுமதி இல்லை. கோவில் கல்வெட்டிலேயெ இது நாடார்களுக்கு மட்டுமே பாத்திய பட்டது என்று எழுதப்பட்டுள்ளது.
ஊரில் உள்ழ ஒரு தாழ்ந்த வகுப்பை சேர்ந்தவர் கோவில் சித்திரை திருவிழவில் அன்ன தானத்திற்கு நன்கொடை தந்ததாலும் அவருடைய பெயர் விழா அழைப்பிதழில் இடம்பெற்ற காரணத்தாலும் விழாவை புறக்கணித்த ஊர்தலைகள் பலர்.

சொன்னது…

அன்புள்ள தேசாபிமானி அவர்களுக்கு வணக்கம்,

தங்கள் பின்னூட்டம் படித்தேன்.

பெரியாரின் செயற்பாடுகள் சாதிகளை ஒழிப்பதற்குப் பகரம் அவற்றை நிலைப்பதற்கே பயன்பட்டுள்ளன. சாதியை மந்திரத்தால் மாங்காய் பறிப்பது போல் பரப்புரைகளால் அழித்துவிட முடியாது. பணம்தான் சேர்க்க முடியும் பெரியாரைப் போல்.

சாதியைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுவதென்றால், தேங்கிப்போன தொழில்நுட்பத்தின் விளைவு அது. இங்குள்ள படித்த கூட்டமும் முற்போக்கர்கள் என்போரும் அரசியல்வாணரும் ஆட்சியாளரும் இந்தத் தேக்கத்தை எவரும், எதுவும் உடைத்துவிடாமல் மிக விழிப்பாகக் கண்காணிக்கிறார்கள்.

இன்னொன்று, சாதி இழிவுகளை எதிர்த்து ஒரு சாதி மக்கள் போராட வேண்டுமாயின், அடுத்த வேளை கஞ்சிக்குத் தம்மை ஒடுக்கும் சாதியினர் முன் வேலைக்காகவோ உதவிக்காகவோ கையேந்தி நிற்கத் தேவையில்லாத நிலை வேண்டும், அதாவது பொருளியல் தற்சார்பு வேண்டும். அதை வெறும் கல்வியாலோ, அரசுப் பணிகளாலோ, வெள்ளை வேட்டி வேலைகளாலோ அனைவரும் எய்திவிட முடியாது. அந்த வாய்ப்புகளைப் பெற்றவர்கள்தாம் சாதி அமைப்புக்கு எதிராகப் போராடிய தம் முன் தலைமுறையினர் செயற்பாட்டுக்கு எதிராகப் பார்ப்பனியத்தை இன்று முழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சாதியை ஒழிக்க இறக்குமதித் தொழில்நுட்பமும் ஏற்றுமதிப் பொருளியலும் உதவாது. கீழேயுள்ள மக்களை மேலும் அழுத்தவே அவை பயன்படும். தேங்கிப் போன தொழில்நுட்பத்தை உள்ளிருந்தே தோன்றும் விசைகள் உடைக்க வேண்டும். பொருளியல் வளர்ச்சி அடிமட்டம் வரை பரவ வேண்டும். வேலை வாய்ப்புக்குத் தனிமனிதர்களைச் சார்ந்திருப்பதிலிருந்து உள்நாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருப்பதாக மாற வேண்டும். அதாவது சிற்றுடைமைகளும் சிறு, குறு தொழில்களும் மறைந்து உள்ளூர் மூலதனம், உள்ளூர் மூலப் பொருள், உள்ளூர் தொழில்நுட்பம், உள்ளூர் சந்தையை அடிப்படையாகக் கொண்ட பெரும் வேளாண் பண்ணைகளும் தொழில்களும் உருவாக வேண்டும்.

ஊர்கள் உடைபட வேண்டும். மக்கள் வெளியேறி புதிய இடங்களில் குடிபெயர வேண்டும். இந்தப் பெயர்ச்சி மேலே கூறிய தொழில் வளர்ச்சயின் ஊடாக நடைபெற வேண்டும். பழம் விசைகள் தங்களை மீளமைத்துக்கொள்ள நேரம் கிடைக்காத விரைவில் இது நடைபெற வேண்டும்.

கோயில்கள் வெறும் அடையாளங்களே. அதில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் குமுக மாற்றம் ஏற்பட்டுவிடாது. பொருளியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எதிரான விசைகளை உடைப்பதற்கான பொருளியல் உரிமைப் போராட்டத்தின் ஓர் உறுப்பாகச் சமயத்திலும் நாம் செயற்பட வேண்டியிருக்கும்.

குமரி மாவட்டத்தில் 20 ஆம் நூற்றாண்டில் சாதியத்துக்கு எதிராக நாடார்கள் போராடியதில்லை. 19 ஆம் நூற்றாண்டில் வைகுண்டர் எனப்படும் முத்துக்குட்டி அடிகளின் போராட்டங்களுக்குக் கூடக் கிழக்கு வட்ட நாடார்கள் துணை நிற்கவில்லை. தோள்சீலைப் போராட்டம் கூட ஒரு வெள்ளைக்காரப் பெண் தொடங்கி வைத்து அவர்களின் பின்னணியைப் பெற்று மேற்சாதியினரின் சார்பின்றி வாழ முடிந்த கிறித்துவ நாடார்கள் கையிலெடுக்க அவர்களைத் தொடர்ந்து ″இந்து″ நாடார்களும் களம் இறங்கிய ஒரு நிகழ்வாகும். அதிலொரு விந்தை என்னவென்றால் திருவிதாங்கூர் அரசும் கிறித்துவத் தலைவர்களும் ஓர் இணக்கம் கண்டு கிறித்துவ நாடார்கள் மட்டும் தோள்சீலை அணிய ஆணை கிடைத்தது. ஆனால் ″இந்து″ நாடார்களும் தோள்சீலை அணியத் தொடங்கினர். அதைக் கிறித்துவ நாடார்கள் எதிர்த்தனர். ″இந்து″ நாடார்கள் இதற்கு எதிர்வினையாகக் கிறித்துவக் கோயில்களைக் கொளுத்தல் போன்ற கலவரங்களில் ஈடுபட அப்புறம்தான் அவர்களுக்கு அந்த உரிமை கிடைத்தது. இப்படி மிக நுட்பமாக சாதிக்குள்ளேயே உயர்வு தாழ்வு பார்ப்பது சாதிகளின் பொதுவான இயல்பாகும். இவ்வாறு நம் உயிரின் ஒவ்வொரு அணுவினுள்ளும் ஊடாடி நிற்கும் சாதியை ஒழிக்க எளிய வழிகளைக் காட்டுவோர் எத்தர்களாக அல்லது முழுமூடர்களாகத்தான் இருக்க முடியும்.

குமரி - நெல்லை மாவட்டங்களில் கோயில் நுழைவு உரிமை வழங்கப்பட்ட போது தாழ்த்தப்பட்ட மக்களும் தாங்களும் ஒரே நாளில் கோயில் நுழைவு உரிமையைப் பயன்படுத்தக் கூடாது என்று நாடார்கள் மூன்று நாட்கள் முன்கூட்டியே கோயில்களில் நுழைந்தனர் என்பது வரலாறு. விரைவில் வெளிவர இருக்கும் நாடார்களின் வரலாறு - ஓர் உரையாடல் என்ற என் நூலில் விரிவான அலசல் இருக்கிறது.

முகிலன்விளை, பொட்டல் போன்ற ஊர் நாடார்கள் தங்களை நாடார்களில் உயர்ந்தவர்களாகக் கருதுகிறார்கள். எல்லாச் சாதிகளிலும் இந்த அடுக்குகள் உள்ளன. அவர்கள் மட்டுமல்ல, இன்றும் செல்வர்களாயிருக்கும் ஊர் நாடான்கள் வீடுகளில் கீழேயுள்ள சாதியினர் மட்டுமல்ல, சொந்தச் சாதியினரில் ஏழைகள் கூட புறவாயில் வழியாகத்தான் வர முடியும். இது ஏறத்தாழ எல்லாச் சாதிகளிலும் இருக்கிறது.

சாதிகளின் நான்கு அடிப்படைகள் பற்றி நான் எழுதிய சாதிகள் ஒழிய ....... என்ற நூலை விரைவில் என் வலைப்பக்கத்தில் இடுவேன். படித்துப் பார்த்து கருத்துக் கூறுங்கள்.

அன்புடன்
குமரிமைந்தன்.