4.5.09

முதலாளியமும் வல்லரசியமும் .....2

மார்க்சு, ஏங்கல்சு ஆகியோரைத் தொடர்ந்து வந்தவர் லெனின்.

உருசியா ஐரோப்பாவின் பிற்போக்கின் குப்பைத் தொட்டி என்று கூறப்பட்ட ஒரு நாடு. அங்கு சார் மன்னனின் கொடுங்கோன்மை தலைவிரித்தாடியது. ஐரோப்பிய முதலாளிகள் தங்கள் முதலாளிய வேட்டையை அங்கும் நடத்தினர். அதன் விளைவாக உருசியாவின் மேட்டுக்குடிகளிடையில் மக்களாட்சிக் கருத்துகள் பரவத் தொடங்கியிருந்தன. அது ஒரு கட்டத்தில் வன்முறை சார்ந்ததாக, சாரை ஒழித்துக்கட்டும் திட்டத்துடன் வளர்ந்து நின்றது. அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது. அதில் மரண தண்டனை அடைந்த இளைஞர்களில் ஒருவர் லெனினின் தமையன். இந்த நிகழ்ச்சி லெனினை அரசியல் களத்துக்குக் கொண்டு வந்ததில் முகாமையான பங்கேற்றது.

மக்களாட்சிக்காகப் போராடியவர்களிடையில் மார்க்சியம் பரவியது. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பரந்து கிடந்த இயக்கங்களை ஒன்று திரட்டி உருசிய குமுகியல் தொழிலாளர் மக்களாட்சிக் கட்சி என்ற அமைப்பு உருவானது. 1903இல் லண்டனில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சி பெரும்பான்மையினர் கட்சி(போல்சுவிக்) சிறுபான்மையினர் கட்சி(மென்சுவிக்) என்று இரண்டாகப் பிரிந்தது. பெரும்பான்மை - சிறுபான்மை என்றது, அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் அணி பிரிந்து நின்ற போது இருந்த பேராளரின் எண்ணிக்கையின் அடிப்படையில் அமைந்ததுதான். அமைப்புகளின் ஒட்டுமொத்த உறுப்பினர் எண்ணிக்கை இதற்குத் தலைகீழாக இருந்தது.

1905இல் இரண்டு பிரிவினரும் முன்வைத்த செயல்திட்டங்களை அலசி உருசிய குமுகியல் தொழிலாளர் மக்களாட்சி கட்சியின் இரு போர்த்தந்திரங்கள் என்ற நூலை லெனின் எழுதினார். அதில் இப்பொழுது நடக்க இருக்கும் புரட்சியில் முதலாளியருக்கே கூடுதலான நன்மைகள் கிடைக்கும்; ஆனால் பாட்டாளியருக்குத் தாங்கள் அமைப்பு வழியில் செயற்படுவதற்கான உரிமைகள் கிடைக்கும்; இது ஒரு புதுவகை மக்களாட்சி என்று அறிவித்தார்.

ஆனால் 1913இல் அவர் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். உருசியாவில் முழுமையான முதலாளியம் உருவாகி விட்டது என்று நிறுவும் வகையில் உருசியாவில் முதலாளியத்தின் வளர்ச்சி என்ற நூலை எழுதினார். அவரது போட்டியாளர்களை எதிர்கொள்ள வேண்டி இந்த நிலைப்பாட்டை அவர் கொண்டிருக்கலாம்.

இந்தக் காலகட்டத்தில் லெனின் எழுதிய குறுநூல் ஒன்று மிக முகாமையானது. முதலாளியத்தின் மீஉயர்ந்த படிவம் வல்லரசியம் (Imperialsim is the Highest Form of Capaitalism) என்பது அதன் பெயர். மார்க்சின் காலகட்டத்துக்குப் பின் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமுள்ள பெரும் தொழில் நிறுவனங்கள் ஒன்றிணைந்து கூட்டிணைவுகளை (Cartels) உருவாக்கி இருந்தன; அவற்றுக்கிடையில் உலகை மறு பங்குவைக்க அவை முயன்று கொண்டிருந்தன; இந்தப் போட்டியிலிருந்து ஓர் உலகப் போர் வெடிக்கும் என்று அவர் முன்கணித்தார். அது போலவே நடந்தது.

உலகப் போரைத் தொடங்கிய செருமனியின் வரலாறு பல பாடங்களைக் கொண்டது. உலகத்தின் கூரையில் விரிசல் என்ற கட்டுரையில் (தமிழினி, ஏப்பிரல், 2008) குறிப்பிட்டது போல் செருமன் மொழிபேசும் மக்கள் பல அண்டை நாடுகளுக்கிடையில் பிரிந்துகிடந்தார்கள். அவர்கள் வாழ்ந்த பகுதிகளை அந்தந்த நாடுகளிலிருந்து பிரித்து ஒரே நாடாக்குவதற்குப் பாடுபட்டவர் இளவரசர் பிம்மார்க்கு. ஆனால் இந்தியாவைப் போலவே வெவ்வேறு பகுதி மக்களுக்கிடையில் உணர்வு ஒன்றிய ஒற்றுமை உருவாகவில்லை. அதற்காக, பிம்மார்க்கு வேண்டுமென்றே பிரான்சின் அரசனாக இருந்த மூன்றாம் நெப்போலியனை அவன் அவையிலேயே இழிவுபடுத்தி ஒரு போரை உருவாக்கினார். அதன் மூலம் செருமனி உறுதியான நிலையடைந்தது.

இந்தப் பின்னணியில் நாடு பிடிப்பதில் இங்கிலாந்தும் பிரான்சும் உலகமெல்லாம் போரிட்டுக் கொண்டிருந்தன. இந்தப் போட்டியிலிருந்து பிரான்சைத் திசைதிருப்ப, பிரிட்டனின் தலைமை அமைச்சாராயிருந்த பிட்சு என்பவர் செருமனிக்குப் பணம், படைக்கலன்கள், கருத்துரைகளை வழங்கி பிரான்சின் மீது ஏவிவிட்டார். நீண்டநாள் நடைபெற்ற இந்தப் போருக்காகப் பிரான்சு வெளியே இருந்த தன் படைப் பிரிவுகளைத் திரும்ப அழைக்க வேண்டியதாயிற்று. இருப்பினும் இந்தியாவை நீக்கிவிட்டுப் பார்த்தால் இங்கிலாந்துக்கு அடுத்தபடி கூடுதலான குடியேற்ற நாடுகளைக் கொண்டிருந்தது பிரான்சுதான். ஐரோப்பாவில் செருமனிக்கும் பிரான்சுக்கும் போர் முடிந்தபோது உலகையெல்லாம் ஐரோப்பிய நாடுகள் தமக்குள் பங்கு போட்டு முடித்துவிட்டன. தான் இங்கிலாந்தால் கொடுமையாக, இழிவாக ஏமாற்றப்பட்டுவிட்டதைச் செருமனி அப்போதுதான் உணர்ந்தது. இந்தச் சூழலில்தான் மாக்சுமுல்லர் மனித இனத்துக்கே கேடு பயக்கும் தன் ஆரிய இனக் கோட்பாட்டை முன்வைத்தார். ஆரியர்களின் உடலமைப்பு என அவர் விரித்துரைத்தது முழுமையாகச் செருமானியரை மனதில் கொண்டே ஆகும். இதைப் பற்றிப் பிடித்துக்கொண்டுதான் உலகில் உள்ள தூய்மையான, கலப்பற்ற ஆரிய இன மக்கள் செருமானியரே, அவர்களே, உலகை ஆளத் தகுந்தவர்கள் என்ற இனவெறி அரசியலை இட்லர் உருவாக்கினார்.

ஆக உலகப் போர் உலகை மறுபங்கீடு செய்வதையும் இங்கிலாந்தைப் பழிவாங்குவதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.

தன் வினை தன்னைச் சுடும் என்பதற்கேற்ப, தன் நாட்டை ஒற்றுமைப்படுத்த பிரான்சுடன் பகைமை உணர்வை வளர்த்த பிம்மார்க்கின் செயலால் செருமனி ஒரேயொரு குடியேற்ற நாடுகூட பெறாமல் போனது. செருமனியைப் பிரான்சின் மீது ஏவிவிட்டுத் தான் உருவாக்கிய பேரரசை அதே செருமனியின் தாக்குதலில் நிலைகுலைந்த இங்கிலாந்து இழந்து நிற்கிறது. தான் உருவாக்கிய உலகப் போரின் இறுதியில் தானே இருகூறாக உடைந்து அரைநூற்றாண்டு காலம் செருமனி துண்டுபட்டுக் கிடக்க வேண்டி வந்தது.

உலகப் போரின் உச்ச கட்டத்தில் உருசியப் புரட்சி நடைபெற்றது. போரில் உருசியாவை ஈடுபடுத்திய சார் மன்னனால் படைவீரர்களுக்குத் தேவையான உணவு, உடை முதலியவற்றை வழங்க முடியவில்லை. எனவே போர்க்களத்தைக் கைவிட்டு ஓடிவந்த படைவீரர்கள் திரும்பிவந்து நாட்டினுள் நடமாடிக்கொண்டிருந்தனர். நாட்டில் வறுமையும் பிணியும் தாண்டவமாடின. இந்த நிலையில் ″சிறுபான்மை″க் கட்சியினர் புரட்சி செய்து சாரைத் தளை செய்து மரண தண்டனையை நிறைவேற்றிவிட்டனர். இது 1917ஆம் ஆண்டு பிப்ருவரியில் நடைபெற்றதால் இதனை பிப்ருவரிப் புரட்சி என்பர். புரட்சி தொடங்கிய போது லெனின் சாரின் ஒடுக்குமுறையிலிருந்து தப்பி சுவிட்சர்லாந்தில் இருந்தார். அவர் அங்கிருந்து உருசியாவுக்குச் சென்றார். அவர் பாதுகாப்பாகச் சென்று சேர்வதற்குச் செருமனி ஏற்பாடு செய்தது என்று வரலாறு கூறுகிறது. அங்கு புரட்சி நடந்து அரசின் வலிமை குறைந்தால் தன் படையெடுப்பு எளிதாக இருக்கும் என்பது செருமனியின் கணிப்பு.

உருசியா சென்றடைந்த லெனின் சிறுபான்மைக் கட்சி அரசிடம் சில திட்டங்களை முன்வைத்தார். புதிய அரசியலமைப்பு அவை கூட்டப்பட வேண்டும், புரட்சியை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளான சோவியத்துகளுக்கு முழுமையான ஆட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்பவை முகாமையான திட்டங்கள். இவற்றை அரசு ஏற்காவிட்டால் புரட்சி நடத்த வேண்டும் என்றார். இதுபற்றி ஆய்ந்து முடிவு செய்வதற்காக 1917ஆம் ஆண்டு அக்டோபர் 26
[1] ஆம் நாள் அனைத்து சோவியத்துகளின் பேராளர்களின் குழு கூட இருந்தது. ஆனால் லெனின் தன் கட்சியினருக்கு ஓர் அறிவுரை வழங்கினார். 25 ஆம் நாள் இரவிலேயே புரட்சியை நடத்திவிட வேண்டும். அதற்கு முன்பு நடந்தால் சோவியத்துக்களின் பேராளர்கள் புறப்பட்டு வரமாட்டார்கள். 26ஆம் நாள் விடிந்துவிட்டால் பேராளர்கள் வந்து சேர்ந்துவிடுவர். அப்போது அவர்கள் இசைவு இன்றி புரட்சி நடத்த முடியாது என்று கூறினார். எனவே 25 ஆம் நாள் இரவே அமைச்சர்களைத் தளையிட்டு பெரும்பான்மைக் கட்சியைச் சேர்ந்த சிறு எண்ணிக்கையிலான செயின்று பீட்டர்சுபர்க்குத் தொழிலாளர்களும் போர்க்களத்திலிருந்து திரும்பிவந்த படைவீரர்களும் கொண்ட ஒரு குழு கிரெம்ளின் அரண்மனையைக் கைப்பற்றியது. அடுத்த நாள் சோவியத்துகளின் பேராளர் கூட்டத்தில் புரட்சி நடந்துவிட்டது; நீங்கள் உங்கள் ஊர்களுக்குச் சென்று புரட்சியைத் தொடர்ந்து நடத்துங்கள் என்று அறிவுரை கூறப்பட்டது. சிறுபான்மைக் கட்சியினருக்கு பேரவையில் பெரும்பான்மை இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதைத் தொடர்ந்து உருசியா முழுவதும் பழமையாளர்களுக்கும் புரட்சியாளருக்கும் போர் நடந்து 1919இல் முடிவுக்கு வந்தது. இந்த வகையில் இது ஓர் ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்த புரட்சி என்றே வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

ஆட்சி கைக்கு வந்த பின் சிறுபான்மைக் கட்சி அரசிடம் கேட்டபடி அரசமைப்புச் சட்டப் பேரவை கூட்டப்படவில்லை. லெனினின் வரைவான சட்டமே நடைமுறைக்கு வந்தது.

உருசியப் புரட்சி பாட்டாளியரின் புரட்சி என்று கூறப்பட்டாலும் ″பாட்டாளியரின் முன்னணிப் படையாகிய″ பொதுமைக் கட்சியின் வழிகாட்டலிலும் தலைமையிலும் நடந்த தேசியங்களின் விடுதலைப் போரின் வடிவமாகவே அது இருந்தது.

உருசியாவின் நிலவுடைமைகள் அனைத்துமே மாருசியா எனப்படும் நடுப் பகுதியின் உயர்குடியினரின் சொத்துகளாகவே இருந்தன. ஆங்காங்குள்ள மக்கள் அந்நிலங்களில் பயிரிட்டுத் தங்கள் ஆண்டைகளான மாருசியர்களுக்கு வாரம் அளக்கும் கொத்தடிமைகளாகவே இருந்தனர். மாருசியா தவிர்த்த பெரும்பாலான தேசங்களும் அவற்றுக்கு, ″பிரிந்து செல்லும் உரிமையுள்ள தன்னாட்சி″ வழங்குவதாக வாக்குறுதி அளித்துத்தான் அத்தேசியங்களின் குடிமக்களைப் புரட்சியினுள் இட்டுவந்தார் லெனின். அந்த வகையில் உருசியாவில் நடைபெற்றது நிலக்கிழமை விளைப்பு முறையை எதிர்த்து நடந்த முதலாளியப் புரட்சியே. அதைத் தொடர்ந்து நிலங்கள் உழவர்களுக்கு உடைமையாக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த உடைமையாளர்கள் தமக்குள் ஒப்புக்கொண்டோ மூலதனத்தால் வாங்கப்பட்டோ இணைந்து பெரும் பண்ணைகள் ஆகியிருக்க வேண்டும். பெரும்பான்மை முன்னாள் உழவர்களும் அப்பண்ணைகளில் கூலித் தொழிலாளர்களாக மாறி இருக்க வேண்டும். கூலித் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து பண்ணைகளைத் தங்கள் கூட்டு ஆளுமையில் கொண்டுவந்திருக்க வேண்டும். இந்த இயல்பான மாற்றத்துக்கு இடம் தராமல் அதிகாரிகளும் கட்சியினரும் கட்டாயப்படுத்தி அல்லது பேசி இணங்கவைத்துக் கூட்டுப் பண்ணைகளையும் கூட்டுறவுப் பண்ணைகளையும அமைத்து அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். முதலாளியச் சுரண்டலை விடக் கீழான ஊழல் சுரண்டல் உருவானது. தேசிய மக்கள் போராடினர். அது ஒடுக்கப்பட்டது. இவை நிகழ்ந்த போது லெனின் நோய்ப் படுக்கையில் இருந்ததால் அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை.

சீனத்திலும் ″புதிய சனநாயகப் புரட்சி″, ″ஒன்றிய கூட்டணி″ என்றெல்லாம் பேசினாலும் இறுதியில் அரசின் ஊழல்தான் ஆட்சி செய்தது. இவ்வாறு, உருசியாவின் ஊர்ப்புறப் பொது நிலஉடைமை அடிப்படையிலான பழங்குமுகத்திலிருந்து நேரடியாக பொதுமைக்கு வரமுடியுமா என்ற மார்க்சின் குழப்பத்துக்கு வர முடியாது என்ற விடை உருசியாவிலிருந்தும் முதலாளியத்துக்குள் நுழையாமல் பொதுமைக் குமுகத்துக்குச் செல்ல முடியாது என்று அவர் முதலில் சொன்னதற்குச் சான்று உருசியாவுடன் சீனத்திலிருந்தும் கிடைத்துள்ளன.

முதலாளிய உருவாக்கமும் வல்லரசியமும்:

இயற்கையான வரலாற்று ஓட்டத்தில் உருவானது ஐரோப்பிய முதலாளியம். ஆனால் இதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது ஐரோப்பா உலகின் பிறநாடுகளின் மீது செலுத்திய வல்லரசிய மேலாளுமை. முதலாளியத்துக்குத் தேவையான மலிவான மூலப்பொருட்களையும் மேலும் மேலும் பெருகிக் கொண்டிருந்த பண்டங்களுக்குச் சந்தையையும் ஐரோப்பாவின் குடியேற்ற நாடுகள் தந்தன. ஆனாலும் முதலாளிய வளர்ச்சி ஐரோப்பியப் பெருங்கொண்ட மக்களுக்கும் குடியேற்ற நாடுகளின் மக்களுக்கும் நலம் பயப்பதாக இல்லை.

பொதுவாக ஒரு மனிதன், தன் உழைப்பினால், தன்னையும் தன் குடும்பத்தையும் பராமரிப்பதற்குத் தேவையானவற்றைப் போல் பலமடங்கு பண்டங்களைப் படைக்கும் ஆற்றல் உள்ளவன். மேம்பட்ட தொழில்நுட்பங்களால் இந்தப் படைக்கும் ஆற்றல் மேலும் உயர்கிறது. அவன் தேவைக்கு மிஞ்சியதை, முதலாளியத்துக்கு முந்திய நிலக்கிழமைக் குமுகத்தில் வாணிகனும் கந்துவட்டிக்காரனும் பறித்துக்கொள்கின்றனர். நம் நாட்டில் கூட்டுறவுகள், அரசுடைமை, வங்கிக் கடன்கள், ஊழல் ஆகியவை மூலம் ஆட்சியாளர்கள் பறித்துக்கொள்கின்றனர். முதலாளியத்தில் முதலாளி தன் தொழிலகத்தினுள் பறித்துக்கொள்கிறான். இந்த மிகுதிப் பண்டத்தை, அதன் மதிப்பாகிய மிகுதி மதிப்பை, அதாவது மீத்த மதிப்பைப் பெற வேண்டுமானால் அப்பண்டங்களை விற்க வேண்டும். பெரும்பாலான மக்கள் பாட்டாளிகளாகிவிட்ட முதலாளியக் குமுகத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் கூலியைக் கொண்டு இந்த மிகுதிப் பண்டங்களை வாங்க பெரும்பான்மை மக்களைக் கூலித் தொழிலாளர்களாகக் கொண்ட அக்குமுகத்தால் முடியாது. எனவே பண்டங்கள் தேக்க மடையும். எனவே தொழிலகங்கள் விளைப்பைக் கட்டுப்படுத்தும். மக்களின் வாங்குதிறன் இன்னும் குறையும். ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட எல்லாத் தொழிலகங்களும் மூடப்படும். பாட்டாளிகளின் பட்டினிச் சாவுகள் பெருகும். எங்கும் பண்டங்களின் தேக்கம்; வாங்கத்தான் மக்களிடம் பணம் இருக்காது.

விளைப்பு நின்று போனதால் மேலடுக்கிலுள்ள மக்களின் நுகர்வால் பண்டங்களின் தேக்கம் சிறிது சிறிதாகக் குறையும். மீண்டும் சிறுகச் சிறுக தொழிலகங்கள் திறக்கும். வாங்கும் திறன் மீளும். மீண்டும் விளைப்பும் வளமும் உச்சத்துக்குச் சென்று மீண்டும் இறங்கும். இது பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மீண்டுகொண்டிருந்தது. இவற்றை மாபெரும் பின்வாங்கல்கள் என்றும் மாபெரும் பொருளியல் நெருக்கடிகள் என்றும் கூறுவர். இந்த நெருக்கடிகளிலிருந்துதான் பாட்டாளியப் புரட்சிகள் நடைபெறும் என்று மார்க்சும் ஏங்கல்சும் எதிர்பார்த்தனர். ஆனால் அடிமை நாடுகளைச் சுரண்டிய செல்வம் அங்கு பெரும் சிக்கல்கள எழாமல் பார்த்துக்கொண்டது. ஆனால், மார்க்சு, ஏங்கல்சு, லெனின் ஆகியோர் தொழிலாளர் தலைவர்களைக் குறை கூறினர்.

20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளில் சான் மேனார்டு கெயின்சு என்பவர் இந்த பின்வாங்கல் நச்சுச் சூழற்சியை முடிவுக்குக் கொண்டுவர ஒரு திட்டத்தை அறிவித்தார். அது மார்க்சின் மீத்த மதிப்புக் கோட்பாட்டின் அடிப்படையில் அதன் அடுத்த கட்டத்தினுள் பொருளியல் சிந்தனையைக் கொண்டுசெல்வது.

மார்க்சு பண்ட விளைப்பு சார்ந்த தொழில்களையும் அது சார்ந்து உருவாகும் தேக்க நிலைமையையும் மட்டுமே கூறினார். கெயின்சு பண்ட விளைப்பு சாரா, அதே நேரத்தில் பண்டங்களை நேரடியாகவும் கூலி பெறும் தொழிலாளர்களின் வாங்கும் திறனைப் பெருக்குவதன் மூலம் மறைமுகமாகவும் இருவழிகளிலும் நுகர்வை உருவாக்கும் அடிப்படைக் கட்டமைப்புகளில் அரசு பணத்தாள்களை அச்சிட்டு முதலிட வேண்டும் என்று கூறினார். அதாவது அதுவரை இயற்கை தன் வழியே செல்லட்டும் என்று பொருள்படும் laissez - faire என்ற அணுகலைக் கைவிட்டு அரசு தலையிட வேண்டும் என்றார்.

இதனை ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. செருமனியின் இட்லர் ஏற்றுச் செயற்பட்டிருக்கலாம். 1919இல் முடிவுற்ற″முதல்″
[2] உலகப்போரின் முடிவில் செருமனி மீது விடுத்த பொருளியல் தாக்குதல்கள் அந்நாட்டு மக்களைச் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாக்கின. வீசி எறிந்துவிட்ட செருப்புகளிலிருந்த தோலை வேகவைத்து உண்ணும் நிலையில் அவர்கள் இருந்தனர் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்தச் சூழலில்தான் இட்லரின் நடவடிக்கைகளுக்கு ஒரு தகுந்த களம் அங்கு அமைந்தது. கெயின்சின் கோட்பாடுகளை நடைமுறைப் படுத்தியிருக்கவில்லையாயின் மிகக்குறுகிய காலத்தில் உலக நாடுகளை அச்சுறுத்தத்தக்க ஒரு வலிமையையும் வளர்ச்சியையும் அந்நாடு எய்திருக்க முடியாது.

கெயின்சின் கோட்பாடு வல்லரசு வடிவம் எடுத்துவிட்ட முதலாளியத்தினால் உருவாகும் நெருக்கடிகளை ஒரு தேசிய முதலாளியத்தால் தீர்க்க முடியும் என்பதை நடைமுறைப்படுத்திக் காட்டுகிறது. தொழில்கள் இயங்குவதற்குத் தேவையான மூலப்பொருட்களே இல்லாமல் மாபெரும் பொருளியல் வல்லரசாக வளர்ந்து நிற்கும் சப்பானைப் போல் அல்லாமல் அனைத்து வளங்களும் உள்ள இந்தியா, தமிழ்நாடு போன்ற பகுதிகளில் எந்த வெளி உதவியும் இன்றிப் பொருளியல் நெருக்கடிகளை உருவாக்காத ஒரு தேசிய முதலாளியத்தை உருவாக்க முடியும் என்பதைக் காட்டியுள்ளது.

அமெரிக்காவிலும் அதைத் தொடர்ந்து பிற பணக்கார நாடுகளிலும் உருவாகியிருக்கும் பொருளியல் நெருக்கடிகளால் மிகப் பாதிப்படைய இருப்பவை பாக்கித்தானம், இந்தியா, சீனம் போன்று பெருமளவு ஏற்றுமதி சார்ந்து, அத்தனாலேயே தாம் வளர்ந்துவிட்டதாகக் கொட்டம் அடிக்கும் நாடுகள்தாம் எனபது சரியான கணிப்புதான். இந்தியாவின் மொத்த வாணிகத்தில் எற்றுமதி 40 நூற்றுமேனிக்கும் மேல் என்றொரு கணிப்பு கூறுகிறது. இந்த நெருக்கடியை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?

நாட்டிலுள்ள அனைவரின் வாங்குதிறனை உயர்த்தி இங்கு உருவாகும் அனைத்துப் பண்டங்களுக்கும் பணிகளுக்கும் இங்ககேயே சந்தையை உருவாக்குவதுதான் ஒரே வழி. அனைவரின் வாங்குதிறனை உயர்த்த நம்நாட்டின் பொருளியல் வளர்ச்சி கடற்கரை முதல் மலை முகடு வரை இடைவெளி இன்றிப் பரவலாக வேண்டும். அத்தகைய, மூலப்பொருள் இறக்கிமதி தேவைப்படாத, சந்தைக்காக ஏற்றுமதியை நம்பி இருக்காத தேசிய முதலாளியம்தான் ஒரே வழி.

தேசிய முதலாளியத்தை உருவாக்க நாம் என்ன செய்ய வேண்டும்?


(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

[1] புரட்சிக்கு முன்பு உருசியாவில் சூலியன் ஆண்டுமுறை நடப்பிலிருந்தது. புரட்சிக்குப்பின் அது கிரிகோரியன் ஆண்டு முறைக்கு மாற்றப்பட்டது. பார்க்க, தமிழன் கண்ட ஆண்டு முறைகள், தமிழினி, பிப்ருவரி 2008 எனவே புதிய ஆண்டுமுறையின் படி இது நவம்பர் 7 ஆனது.

[2] நடைபெற்றது இரண்டு உலகப் போர்கள் அல்ல, ஒன்றேதான் என்கிறார் Dynamic Europe நூலின் ஆசிரியர், C.F.Strong. முதல் உலகப் போர் பிரான்சில்தான் முடிந்தது அது முதல் கூட்டம். இரண்டாம் கட்டத்தில் செருமனிக்குள் தேசப்படைகள் நுழைந்ததுதான் போரின் இறுதி என்கிறார் அவர் தன் நூலில்.

0 மறுமொழிகள்: