31.12.07

தமிழ்த் தேசியம் ... 22

மனந்திறந்து... 12

அடுத்து, மொழியின் பெயராலும் பண்பாட்டின் பெயராலும் செயற்படும் வேறு சிலரோடு என் பட்டறிவைப் பகிர்ந்து கொள்வது பயனுள்ளதாயிருக்கும்.

இன்று குமரிமுனையில் நிற்கும் திருவள்ளுவர் சிலையை நிறுவியதன் மூலம் உலகப் புகழ் பெற்றுவிட்ட வை. கணபதிச் சிற்பிக்கும் தினமணி ஆசிரியராக இருந்த ஐராவதம் மகாதேவனுக்கும் தெய்வச் சிற்பி என்றும் அசுரச் சிற்பி என்றும் ஒரே நேரத்தில் போற்றப்படும் மயனின் படைப்பென்று கூறி ஐந்திறம் என்ற பெயரில் கணபதிச் சிற்பியின் முன்முயற்சியால் தமிழக அரசால் வெளியிடப்பட்ட நூல் பற்றிய மோதல் தொடர்பாக அவரிடம் தொடர்பு கொண்டேன். அவர், மயன் என்பவன் குமரிக் கண்டத்தில் வாழ்ந்தவன்; சிற்பம், வானியல், வானூர்திப் படைப்பு என்று எண்ணற்ற அறிவியல் - தொழில்நுட்பங்களின் தந்தை; அவனது ஆக்கங்கள் தமிழிலேயே இருந்தன என்று கூறினார். சென்னையில் அவர் நடத்திய ஒரு கருத்தரங்கிலும் நான் கலந்து கொண்டேன். இந்தியாவில் உள்ள சிற்பிகளில் பலரோடு தொடர்பு வைத்துக் கொண்டு பல கருத்தரங்குகளில் பங்கேற்று அவர் ஆற்றிய உரைகளை எனக்கு விடுத்துவந்தார். மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி முதல்வராக இருந்தபோது பாடநூலாக அவர் எழுதிய சிற்பமாச் செந்நூல் என்பதில் அடங்கியிருந்த தெளிவான தொழில்நுட்பச் செய்திகளை அவருடைய பிற ஆக்கங்களிலும் எதிர்பார்த்தேன். ஆனால் அவற்றில் சிற்பிகள் எனும் சாதியினர்க்குப் பிறவியிலேயே அமைந்த அறிவியல் - தொழில்நுட்பப் பெருமைகளும் அச்சிற்பிகள் படைக்கும் கோயில்களிலும் சிலைகளிலும் தெய்வீகம் தானே வந்துவிடும் என்பன போன்ற கதைப் பொழிவுகள்(காலட்சேபங்கள்) தாம் இருக்கின்றன என்ற உண்மையை நான் சுட்டிகாட்டியதும் என்னுடனுள்ள தொடர்புகளை அவர் முறித்துக்கொண்டார். தமிழில் சிற்ப ஏடுகள் உள்ளனவா என்ற தேடுதலில் அவர் ஆர்வம் காட்டிய போது சுசீந்திரம் தாணுமாலயப்பெருமாள் கோவிலில் திருவிதாங்கூர் அரசரிடமிருந்து கலாநிதி பட்டம் பெற்ற சிற்பிகள் மரபொன்று உண்டென்றும் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரிடம் தமிழில் சிற்பத் தொழில்நுட்பம் பற்றிக் கூறும் தமிழ் ஏடுகள் உள்ளனவென்றும் அறிந்து கூறினேன். அவர் அந்த ஏடுகளைப் பெற்றாரா இல்லையா என்பதை என்னால் அறிய முடியவில்லை. ஆனால் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா தொடர்பாக அவர் கொடுத்த நேர்காணல் ஒன்றில், சமற்கிருதத்தில் தான் சிற்ப நூல்கள் உள்ளன என்ற தலைகீழ்ப் பாடத்தைப் படித்தார். வழக்கம் போல் இது போன்ற தொழில்நுட்பத் தமிழ் நூல்கள் சராசரி மக்களின் பார்வைக்குக் கிடைக்கக்கூடாது என்பதற்காக அவற்றைத் தேடி அழிக்கும் சாதி சார்ந்த, வேதியம் சார்ந்த நிலைப்பாட்டிலிருந்துதான் தொடக்கத்தில் அவர் தமிழ்ப்பற்று நாடகம் ஆடினாரோ என்ற ஐயம் இப்போது எழுகிறது. இன்று தமிழகத்திலும் உலகமெல்லாமும் பரந்து வாழும் தமிழர்களிடையில் புதிதாகக் கொழுந்து விட்டெரியத் தொடங்கியிருக்கும் ″இறையுணர்வால்″ கோடானு கோடி உரூபாய்கள் கோயில்கள் கட்டுவதற்கான தொழில் வாய்ப்பு கூடி வந்துள்ளதே; சோழர் காலம் மீண்டுள்ளதே அதைத் தன் சாதியினர் தவிர பிறருக்கு விட்டுக்கொடுப்பாரா? ஆகமக் கோயில் மரபிலிருந்து வந்த கருணாநிதியும் அவருடன் கைசேர்ந்து நிற்கிறாரே!

கணபதிச் சிற்பியுடன் மிக நெருங்கி நிற்பவர் பண்டிதர் எசு. பத்மநாபன். கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்திய மாநில வங்கியில் அலுவலராயிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்; இதழாளராகப் பணியாற்றியவர்; எனவே தன் பெயர் அடிக்கடி தாளிகைகளில் வரச் செய்யும் வாய்ப்புள்ளவர். அவர் ஒரு குமரிக் கண்ட ஆய்வுக் கருத்தரங்கு நடத்தினார். அதில் நான் கலந்து கொண்டு பேசும்போது குமரிக் கண்ட வரலாற்றை மட்டுமல்ல, தமிழக வரலாற்றையும் அறிய வேண்டுமானால் நாம் முதலில் ″ஆரிய இன″க் கோட்பாட்டைத் தூக்கியெறிய வேண்டும்; வேதங்களிலும் சமற்கிருதத்திலும் உள்ள செய்திகளைப் புதிய கண்ணோட்டத்தில் ஆய வேண்டும்; நம்மிடம் படிந்துள்ள சாதி ஆதிக்க வெறியின் விளைவான குற்றவுணர்வு தான் ″ஆரிய இன″த்தை நிறுத்தி வைத்து அதன் மீது நம் குற்றங்களை ஏற்றிவிடத் தூண்டுகிறது என்றேன். இது பலருக்கு உவப்பாக இல்லை. ஆனால் அந்தக் கருத்தரங்கில் உரையாற்றிய ராவ் என்ற உசுமானியப் பல்கலைக் கழகப் பேராசிரியர் இலங்காபுரி என்பது இன்றைய ஆத்திரேலியப் பகுதியில் அமைந்திருந்தது என்பதை கடல் மீது பறந்து இலங்காபுரியை அடைந்தவனாகக் கூறப்படும் அனுமன் கடந்த பாதையைக் கூறும் வால்மீகி இராமாயணப் பகுதியை வைத்து இன்றைய புவியியல் செய்திகளோடு ஒப்பிட்டு மிகச் சிறப்பாகக் காட்டினார். கந்தபுராணத்திலிருந்தும் சான்றுகள் காட்டினார். இன்றைய இலங்கைத் தீவு வேறு என்றார். இது குமரிக் கண்டத்தின் நிலக்கிடப்பு பற்றித் தமிழ் இலக்கியங்கள் கூறும் செய்திகளோடு மிக ஒத்து வருகிறது. தென் பாலிமுகம் என்பது இன்றைய பாலித்தீவைக் குறிக்கும் என்ற கருதுகோளோடு இது ஒத்துப் போகிறது. நீண்ட ஒரு கட்டுரையை நேரம் கருதிச் சுருக்கிப் படித்தார். அந்தக் கட்டுரையின் படியை நேரடியாகவும் பலமுறை மடல் வழியும் கேட்டும் பத்மநாபனிடமிருந்து எந்த மறுமொழியுமில்லை. அவர் நடத்தும் இதழான ஆய்வுக் களஞ்சியத்திலும் இக்கட்டுரை வெளிவரவில்லை. உசுமானியப் பல்கலைக் கழகத்துக்குப் பேராசிரியர் பெயருக்கு எழுதிய மடலும் திரும்பிவிட்டது.

இப்போது ப-ர்.பத்மநாபன் குமரிக் கண்டத்தையே குமரி மாவட்டத்திற்குள் அடக்க முயன்றுவருகிறார். அவரது விளம்பர உத்திகளாலும் படித்தவர்களின் பொதுவான அறியாமையினாலும் அதுவே உண்மையென்று பலரும் நம்புகிறார்கள். நாகர்கோயிலைத் தாண்டிச் செல்லும் பழையாறு தான் பஃறுளியாறு என்கிறார். நாஞ்சில் நாடு புத்தனாறு என்ற புதிய வாய்க்கால் தோண்டப்படுவதற்கு முன் அது பறளியாறு என்று அழைக்கப்பட்டது உண்மையாகவே இருக்கட்டும் (உண்மையில் அந்த ஆற்றின் பழைய பெயர் கோட்டாறு, அதாவது மலையாறு). ஆனால் அதே குமரி மாவட்டத்தில் இன்னொரு பறளியாறும் கேரளத்திலும் சேலம் மாவட்டத்திலும் பறளியாறுகளும் உள்ளன; இலங்கைத் தீவுக்கு சேரன் தீவு, தாமிரபரணி என்ற பெயர்கள் உள்ளன; குமரி மாவட்டத்தில் ஓடும் பறளியாறு எனப்படும் குழித்துறையாற்றுக்கு தாமிரபரணியாறு என்ற பெயர் உள்ளது; நெல்லையில் ஒடும் தாமிரபரணியாற்றுக்கு சோழனாறு, பொருனையாறு என்ற பெயர்கள் உள்ளன. இந்தோனேசியத் தீவுக் கூட்டத்தில் (இதை இந்திரன் இருக்கை என்று கருதலாம்) போர்னியோ, புரூனெய் போன்ற தீவுகள் உள்ளன. சுமத்ரா என்ற நாடும் உள்ளது. இவற்றில் எவை மூலப் பெயருக்குரியவை, எவை இடம் பெயர்ந்த மக்கள் தாங்கள் குடியேறிய இடத்தில் தங்கள் பண்டை இருப்பிடத்தின் நினைவாகப் பெயர் சூட்டியவை என்பதைத் தெளிந்தறிய வேண்டும். இலங்கைத் தீவு, தாமிரபரணி ஆறு ஆகியவற்றிற்கு இருந்தனவாக அறியப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் குமரிக் கண்டம் முழுக முழூக வெவ்வேறு நிலப்பகுதி மக்கள் ஒருவர் பின் ஒருவராக அப்பகுதிக்கு வந்து வடக்கு நோக்கி நகர்ந்துள்ளமைக்கு அசைக்க முடியாத சான்றுகளாக இவை உள்ளன. இந்தக் கருத்துகளை அவர் நடத்தும் இதழுக்கு எழுதினால் அவற்றை அவர் வெளியிடுவதில்லை. அதுபோல் திருவள்ளுவரும் தொல்காப்பியரும் குமரி மாவட்டத்தில் வாழ்ந்தவர்கள் என்பதற்கு ஊர்ப் பெயர்களையும் அவர்கள் கையாண்டுள்ள சில சொற்களையும் காட்டுகிறார்.

சொற்களைப் பற்றிய ஒரு செய்தியை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாயிருக்கும். வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டவுடனேயே அவனது வரலாற்றுக் கதைப்பாடல்கள் தோன்றிவிட்டன. அத்தகைய கதைப்பாடல் ஒன்றைப் பேரா.நா.வானமாமலை அவர்கள் பதிப்பித்துள்ளார்கள். கட்டபொம்மன் கதைப்பாடல்கள் பற்றி பண்டிதர் பட்டத்துக்கு ஆய்வு செய்த பேரா. வே. மாணிக்கம் அவர்களுக்குக் கிடைத்த ஓர் ஏட்டுச் சுவடியுடன் அப்புத்தகத்தை ஒப்பிட்டுப் பார்த்த போது, அவ்வேட்டில் இடம்பெற்றிருந்த, இன்று குமரி மாவட்டத்தில் வழக்கிலிருக்கும் ஆனால் நெல்லை மாவட்டத்தில் வழக்கொழிந்து போன பல சொற்களின் பொருள் புரியாமல் அச்சொற்களை மாற்றி அவர் பதிப்பித்திருந்தது தெரியவந்தது. ஒன்றரை நூற்றாண்டுகளுக்குள் நெல்லை மாவட்டத்தில் வழக்கிலிருந்த பல சொற்கள் வழக்கிழக்கவும் அதே நேரத்தில் அதன் எல்லையிலிருந்த, வேறு அரசின் கீழிருந்த குமரி மாவட்டப் பகுதியில் அவ்வழக்கு தொடரவும் முடியுமானால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறளிலும் 9 ஆயிரம் ஆண்டுகள் வரை முந்தியதாகக் கூறப்படும் தொல்காப்பியத்திலும் இடம்பெற்றுள்ள சொற்களை வைத்துக் கொண்டு இதுபோன்ற முடிவுகளுக்கு வர முடியாது. அது மட்டுமல்ல, தமிழகத்தின் உண்மையான சொல்வழக்கை இன்றைய கல்வி நிலையங்களில் ″கற்று″ வந்தோரிடம் நாம் காண முடியாது. நாட்டுப்புறக் ″கீழ்ச்சாதி″ மக்களிடையில் தான் காண முடியும். அதுவும் திரைப்படங்களாலும் அச்சு, மின்னணு ஊடகங்களாலும் பழைய சொல்வழக்குகள் விரைந்து அழிந்துவரும் இன்றைய நிலையில் அறிவது கடினம். கி.இராசநாராயணன் தொகுத்துள்ள அகராதியும் நாட்டுப்புற வழக்கில் எழுதப்பட்டுள்ள அண்மைக் கால இலக்கியப் படைப்புகளும் கூட முழுமையாக உதவ முடியாது.

குமரி மாவட்டத்துக்குப் பெருமை சேர்ப்பதற்காக வலிந்து பெறப்பட்ட ″உண்மைகளை″க் கூறக் கூடாது. உண்மையான உண்மையைத் தேடுவதே உண்மையான ஆய்வாளனின் உண்மையான பணியாக இருக்க வேண்டும். உண்மை எவ்வளவு கசப்பாக இருந்தாலும் தொல்காப்பியரும் அதங்கோட்டாசானும் திருவள்ளுவரும் அங்கு பிறந்தாலும் பிறக்காவிட்டாலும் குமரிக் கண்டத்தின் பஃறுளியாறு அதனூடாகப் பாய்ந்தாலும் பாயாவிட்டாலும் குமரி மாவட்டத்துக்கென்று தனிப்பெருமைகள் உண்டு. அப்படிப்பட்ட பழம் பெருமைகள் எதுவும் அதற்கு இல்லை என்று கண்டால் நேர்மையாளர்கள் எதிர்காலத்திலாவது அத்தகைய பெருமைகளுக்குரியதாகக் குமரி மாவட்டத்தை மாற்றுவதற்காகப் பாடுபட வேண்டுமேயொழிய ஐயத்துக்குரிய முயற்சிகளில் ஈடுபடக் கூடாது. தமிழகத்துக்கும் இது பொருந்தும்.

ப-ர். பத்மநாபனின் ஆய்வுக் கருத்துகளைப் பற்றி இவ்வளவு விரிவாக இங்கு கூறவேண்டுமா என்ற கேள்வி இதைப் படிக்கும்போதே ஏற்படலாம். அவரது இன்னொரு பக்கத்தைப் புரிந்துகொண்டால் அதற்கு விடை கிடைக்கும்.

இன்றைய குமரி மாவட்டத்திலுள்ள 3½ வட்டங்களையும் அவற்றைத் தொட்டுக் கிடக்கும் 2½ வட்டங்களையும் செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு ஆகிய வட்டங்களையும் சேர்த்து மொத்தம் 9 வட்டங்களைத் திருவிதாங்கூர் - கொச்சி சமத்தானத்திலிருந்து பிரித்துத் தமிழகத்தோடு இணைக்க வேண்டுமென்று பல்லாண்டு காலம் போராடி தாங்கொணா வன்முறைகளுக்கு ஆளாகி பல உயிர்களைக் களபலி கொடுத்து 1956இல் காமராசர் செய்த இரண்டகத்தால் 9 வட்டங்களில் 4½ வட்டங்கள் தமிழகத்தோடு சேர்க்கப்பட்டன. அவற்றில் செங்கோட்டை வட்டம் நீங்கலாக 3½ வட்டங்களைக் கொண்டதாகக் குமரி மாவட்டம் பிறந்தது. மீதியுள்ள 4½ வட்டங்களுக்காகவும் போராட்டத்தைத் தொடருவதைக் கைவிட்டுப் பதவி இன்பம் தேடி காமராசரின் கட்சியில் இணைந்தனர் குமரி மாவட்ட விடுதலை இயக்கத் தலைவர்கள். அவரோ இவர்களையும் ஏறிட்டுப் பார்க்கவில்லை, குமரி மாவட்டத்தையும் ஏறிட்டுப் பார்க்கவில்லை. திருவிதாங்கூர் தமிழ் மக்கள் போராட்டத்தைத் தொடங்கிய நாள் தொடங்கி காமராசர் 1967 தேர்தலில் தோற்கடிக்கப்படும் வரை அவரும் அவரது கட்சியும் குமரி மாவட்ட மக்களுக்குச் செய்த இரண்டகங்களையும் ஓரவஞ்சனைகளையும் கெடுதிகளையும் பட்டியலிட்டால் பெருகும். அப்படிப்பட்டவர் தன்னைத் தமிழகம் அரசியல் களத்திலிருந்து தூக்கியெறிந்தவுடன் தன் சாதியைச் சொல்லிக்கொண்டு குமரி மாவட்ட மக்களிடம் அடைக்கலம் தேடினார். குமரி மாவட்டம் பல காலமாகவே நாடார் - நாடாரல்லாதவர் என இரு சாதி அணிகளாகப் பிளவுண்டு நின்றது. அந்தச் சாதி அணிவகுப்பை உடைத்துக் கொண்டு ஓர் அரசியல் அணிச் சேர்க்கையை உருவாக்கிக் கொண்டிருந்தது திராவிட அரசியல். அதை மீண்டும் சாதியப் படுகுழிக்குள் தள்ளிய கொடுஞ்செயலைச் செய்தவர் காமராசர். அந்தப் படுகுழியிலிருந்து வெளியேற வழியில்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறது குமரி மாவட்டம். காமராசருக்குப் பின் வந்த ஆட்சியாளர்களும் குமரி மாவட்டத்தைப் புறக்கணிப்பதாக அம்மக்களிடையில் மனக்குறை உள்ளது. திருவிதாங்கூர் - கொச்சியுடன் ஓர் உயர்ந்த மட்டத்திலிருந்த ஆட்சியமைப்பையும் மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான மேம்பட்ட உறவையும் கல்வி வளர்ச்சியையும் கைக்கொண்டு அவற்றை விடத் தாழ்ந்த மட்டத்திலிருந்த தமிழகத்தை மேம்படுத்துவதற்கு மாறாக குமரி மாவட்டத்தைத் தன் மட்டத்துக்குத் தாழ்த்தியது தமிழகம். இவற்றையெல்லாம் மனதிற்கொண்டு குமரி மாவட்டம் பழையபடி கேரளத்துடன் இணைய வேண்டுமென்று ஒரு சாரரும் குமரி மாவட்டத்தை நடுவணரசின் நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டுவர வேண்டுமென்று இன்னொரு சாரரும் பேசத் தொடங்கியுள்ளனர். இந்த வேண்டுகைகளை வெளிப்படையாக முன்வைத்துப் போராடுவதில் தவறில்லை. தமிழகத் தலைவர்களின் கவனம் கொஞ்சம் குமரி மாவட்டத்தின் பக்கம் திரும்பும்; குமரி மாவட்டம் முன்வைக்கும் வேண்டுகைகள் தமிழகத்திலும் அரசியல் அதிர்ச்சி அலைகளை எழுப்பும். ஆனால் ப-ர்.பதம்நாபன் அதற்கு மாறாகக் கமுக்கமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். குமரி மாவட்டத்திலுள்ள மலையாளம் பேசும் நாயர்களும் குறுப்புகள் எனப்படும் கிட்ணவகையினரும் முன்பு அங்குள்ள தமிழ் பேசும் மக்கள் மீது சாதி மற்றும் பொருளியல் ஒடுக்குமுறைகளைச் செலுத்தியவர்கள். ″நாடான்″ என்று ஊர்த்தலைவனை நாடார், அதாவது சாணார் சாதி மக்கள் விளிப்பதும் அதே சாதி மக்களை அவர்களிலும் ″தாழ்ந்த″ சாதியினர் விளிப்பதும் உண்டு. அதுபோல் ″நாயனே″ என்ற விளி நாயர் சாதியினரைப் பார்த்து சாணார்கள் விளித்தது, அடிமை ஏமானைப் பார்த்து ″ஏமானே″ என்று விளிப்பதற்கு இணையானது. ″கடவுளே″ என்று விளிப்பதற்கும் இச்சொல் பயன்பட்டது. உண்மையில் நாயர் - சாணார் உறவு இப்படித்தான் இருந்தது. அதை மறைத்துவிட்டு ″நாயனே″ என்ற சொல் வள்ளுவரையே குறிக்கிறது என்று அவர் கூறுகிறார். திருநயினார்க்குறிச்சி என்ற ஊர்ப்பெயரிலுள்ள ″நயினார்″ என்ற சொல் திருவள்ளுவ நாயனார் என்ற சொல்லுடன் தொடர்புடையதல்ல, சமணர்களின் பட்டப்பெயராகும். இன்றும் தமிழகத்தின் வடமாவட்டங்களில் வாழும் தமிழ்ச் சமணர்களை நயினார் என்ற சொல்லால் தான் குறிப்பிடுகின்றனர். எனவே திருநயினார்க்குறிச்சி என்பது சமணர்கள் வாழ்ந்த ஊர் அல்லது ஒரு சமணக் கோயில் இருந்த ஊரையே குறிக்கின்றது.[1]

இன்று நாயர்களுக்கும் நாடார்களுக்குமான உறவில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதை விரும்பாத நாயர்கள் கேரளத்துடன் குமரி மாவட்டம் இணைந்துவிட்டால் தங்கள் பழைய ஆதிக்கத்தை நிலைநாட்டலாம் என்று நம்புகின்றனர் போலும். அவ்வாறு நடைபெறுமா அல்லது கேரள மக்களும் அரசும் இவர்கள் எதிர்பார்ப்பது போல் இவர்களை நடத்துவார்களா என்பது வேறு கேள்வி. குமரி மாவட்டத்திலுள்ள வளமிக்க மண்ணையும் குமரிமுனை போன்ற எண்ணற்ற சுற்றுலா இடங்களையும் குறிவைத்து கேரளத்தார் ஆதரவு தருவார்கள் தாம். ஆனால் தமிழ் நாட்டுத் தலைவர்கள் போலத்தான் மனிதர்களை நடத்துவார்கள் என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அந்த மலையாளிகளுடன் சேர்ந்து இவர் முன்னாள் அரச குடும்பத்தினரை ஒவ்வொருவராக அழைத்து வந்து அவர்களது முன்னோர்கள் குமரி மாவட்டத்துக்குச் செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து பெருமைப்படுத்துவதற்குத் தன் ஆய்வு மையத்தைப் பயன்படுத்துகிறார். ஊர்ப் பெயர்களை காட்டித் தேவார மூவர் பாடிய கோயில்கள் அனைத்தும் கேரளத்தில் தான் உள்ளன என்கிறார். கேரளம் தான் தமிழகம் என்று நிறுவும் திசையில் அவர் சென்றுகொண்டிருக்கிறார். ஒரே பெயரைக் கொண்ட ஊர்கள் தமிழகத்திலும் கேளரம், ஆந்திரம், கன்னட மாநிலங்களிலும் கணக்கற்றவை உள்ளன. வட இந்தியாவிலும் உள்ளன. அதே காரணத்தால் கேரளமும் தமிழகமும் ஆந்திரமும் கருநாடகமும் ஒன்றாகிவிட முடியாது. தமிழ் பேசும் மக்கள் வாழும் தமிழக எல்லைப் பகுதிகள் அந்த அயல் மாநிலங்களைச் சேர்ந்தவையுமாகிவிடா.

இவர் எப்போதும் போற்றிப் புகழும் கவிமணி அவர்கள் சிறந்த வரலாற்றாய்வாளராவார். குமரி மாவட்டத்திலுள்ள கல்வெட்டுகளை அரும்பாடுபட்டுத் தேடி வெளிக்கொணர்ந்தவராவார். கவிமணியின் இந்த முகத்தை எவரும் முறைப்படி வெளிப்படுத்தவில்லை. அவர் கண்டுபிடித்த சான்றுகளை வைத்து சதாசிவம் என்ற தமிழறிஞர் சேரநாடும் செந்தமிழும் என்ற புகழ் பெற்ற நூலை எழுதினார். அது தான் திருவிதாங்கூர்த் தமிழ் மக்களின் போராட்டத்துக்கு வரலாற்றுப் பின்னணி அமைத்துத்தந்தது. கவிமணியாரின் அதே உத்தியைக் கையாண்டு திரைமறைவில் அதே தமிழ்ப் பகுதிகள் மீண்டும் மலையாளிகளின் ஆதிக்கத்துக்குள் சென்றுவிடக் களம் அமைத்துக் கொடுப்பது அவருக்கும் நல்லதல்ல, குமரி மாவட்டத்தில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்ல மலையாளிகளுக்கும் நல்லதல்ல, தமிழகத்துக்கு மட்டுமல்ல கேரளத்துக்கும் நல்லதல்ல.

ப-ர்.பத்மநாபன் பழமையை மீட்பதில் வெறியாயிருக்கிறார். முன்பு நிலவிய குமுக ″ஒழுங்கு முறைகள்″, அதாவது சாதிய ஆதிக்கங்கள், ஒடுக்குமுறைகளை மீட்க வேண்டுமென்று விரும்புகிறார். அது, பிறந்த பிள்ளையைக் கருப்பையினுள் நுழைக்கும் முயற்சியாகும். குழந்தையும் தேறாது, தாயும் வாழமாட்டாள்.

கவிமணியார் தன் சாதியில் நடைபெற்ற சில கொடுமைகளை முடிவுக்குக் கொண்டுவர தான் எழுதிய மருமக்கள் வழி மான்மியம் என்ற பாவியத்தை(காவியத்தை)த் தான் கண்டெடுத்த பழஞ்சுவடியென்று பொய்யுரைத்து உயிருக்குத் துணிந்து வெளியிட்டு அச்சாதியினர்க்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அந்தக் கொடுமைக்கு முடிவு கண்டார். இன்றைய நிலையில் ப-ர்.பத்மநாபன் தன் சாதியினருக்கு ஏதாவது குறையிருக்குமென்று கருதினால் அவர் வெளிப்படையாகப் பேசிப் போராட முன்வரட்டும். அது ஞாயமாக இருந்தால் என் போன்றோர் தோள்கொடுக்க ஆயத்தமாக உள்ளோம். குமரி மாவட்ட மக்களிடையிலுள்ள பிளவுக்கு முடிவுகட்டுவோம்.

கணபதிச் சிற்பியாரையும் ப-ர்.பத்மநாபனையும் பற்றி இவ்வளவு விரிவாகக் கூறக் காரணம் தமிழ், தமிழ்ப் பண்பாடு என்று கூறியவுடன் அதைக் கூறுபவர் யார், எவர், உண்மையில் அவர், கூறுவது என்ன என்று பாராமல் அவர் பின்னால் ஓடும் பழக்கம் நம்மில் பெரும்பாலோருக்கு இருக்கிறது. தமிழ்த் தேசியத்துக்கு நாணயமாக இருப்பதற்கு அது தான், அது ஒன்று தான் அடையாளம் என்று உள்ளோம். அந்தப் போக்கைக் கைவிட்டு உண்மையான தமிழ்த் தேசிய நலன் என்னவென்பதில் தெளிவுடன் செயற்பட வேண்டுமென்று சுட்டிக்காட்டத்தான். இன்று கூடிக் குலவிக் கூத்தாடும் கணபதிச் சிற்பி, பர்.எசு.பத்மநாபன், கருணாநிதி, தமிழ்க்குடிமகன், நெடுமாறன், இவர்களைப் போற்றிப் புகழும் வகையறாக்களிடம் தமிழ்த் தேசிய ஆர்வமுடையோர் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டுமென்று கூறத்தான்.

பண்பாடென்பது நிலையானதல்ல. நிலத்தின் தன்மைக்கேற்ப அதன் சில கூறுகள் தொடர்ந்து வந்தாலும் அதன் உள்ளடக்கம் விளைப்புப் பாங்குகள் மாறுந்தோறும் மாறிவரும் மனித உறவுகள் அடிப்படையில் மாறிக்கொண்டிருப்பதாகும். தமிழகத்தின் பண்பாடு நாமறிந்த தமிழலக்கியங்கள் அனைத்திலும் இன்றைய நடைமுறையிலும் சாதி அடிப்படையில் தான் அமைந்திருப்பதை நாம் காணலாம். எனவே இந்தப் பண்பாட்டுக் கூறுகளையும் மரபுகளையும் அழித்துப் புதிய பண்பாட்டை, மனித உறவுகளை உருவாக்க வேண்டும் என்ற தெளிவுடன் நாம் செயற்பட வேண்டும்.

இன்று தமிழ்ப் பண்பாடு அழிந்து போகிறது, அதைக் காக்க வேண்டும் என்று குரல் எழுப்புவோர், தமிழ்ப் பண்பாடு என்று அவர்கள் கூறுவது எந்தெந்தப் பண்பாட்டுக் கூறுகளை, அவற்றை ஏன் பாதுகாக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறட்டும். அது குறித்து நாம் ஒரு கருத்தாடல் நடத்தலாம். இதனை நான் விடுக்கும் ஓர் அறைகூவலாகவே(சவாலாகவே) அவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1] திருநயினார்க்குறிச்சியை திருநாயனார்க்குறிச்சி என்ற விளக்கத்துக்கு மாறாக நயினார் என்பது சமணர்களைக் குறிப்பதால் ″சமணராகிய″ திருவள்ளுவர் பிறந்ததால் அது அப்பெயர் பெற்றது என்று கூட இவர்கள் வாதிடலாம். உண்மையில் திருவள்ளுவர் சமணர் என்று சொந்தம் கொண்டாடும் மார்வாரிகளின் முயற்சியின் ஒரு வெளிப்பாடு தான் ப-ர். பத்மநாபனின் அண்மைக்கால ஆராய்ச்சிகள் என்று தோன்றுகிறது. தான் அறநூல் எழுதப் பயன்பட்ட மொழியைக் கூறாமல் அகர முதல எழுத்தலாம் என்று பொதுமை கூறிய வள்ளுவருக்கு சமயச் சார்பு கற்பிப்பது பண்பாடற்ற ஒரு செயல். ஆங்கிலர் வெளியேறிய பின் மார்வாரிகளின் அரசாகிவிட்ட இந்திய அரசின் கீழ் இயங்கும் அனைத்துப் பல்கலைக் கழகங்களும் தங்கள் பாடத்திட்டங்கள் மூலமாக தமிழர்களுக்கு நாகரிகம் தந்தவர்கள் சமணர்கள் தாம் என்று ஒரே குரலில் முழங்குகின்றன. அதற்குப் பக்கமேளம் அடிக்க ப-ர்.க.ப.அறவாணன், ப-ர்.பத்மநாபன், ஐராவதம் மகாதேவன் போன்றவர்கள் கொண்ட ஒரு குழுவும் செயற்படுகிறது.

உலகில் வாழும் எந்தவொரு காட்டுவிலங்காண்டிக் கூட்டமும் கூட அரையில் ஒரு தழையாடையையாவது அணிந்திருக்கும். ஆனால் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் கூட அம்மணமாக சாலைகளில் அலையத் துணிந்த விலங்குகள், தங்கள் மயிரைத் தாங்களே பிடுங்கிக் கொள்ளும் கிறுக்கர்கள்தாம் தமிழர்களுக்கு நாகரிகம் கற்றுத்தந்தார்கள் என்று சொல்வதற்கு என்ன நெஞ்சழுத்தம் வேண்டும் அல்லது மூளை மழுங்கிப்போயிருக்க வேண்டும்! ஆசீவகக் கோட்பாடு தமிழர்க்குரியது என்று குணா கூறுவது ஒருவேளை சரியாயிருக்கலாம். ஆனால் நிறுவனப்பட்டுவிட்ட சமயம் உண்மையில் கோட்பாட்டின் மறுப்பாகும் என்ற உண்மையைப் அறியாதவர்கள் அவரது கூற்றைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள்.

0 மறுமொழிகள்: