21.12.07

தமிழ்த் தேசியம் ... 15

மனந்திறந்து... 5

இதற்கிடையில் மதுரையில் அன்று[1] வாழ்ந்திருந்த பெரியவர் திரு. பொன். திருஞானம் அவர்கள் என் மீது நம்பிக்கை கொண்டு அவராகவே முன்வந்து திராவிட இயக்கத்தவர் சிலரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். அஞ்சல் துறையில் பணிபுரியும் ஓர் இளைஞருடன் ஒரு நாள் பின்னிரவு முழுவதும் உரையாடினேன். பிற்படுத்தப்பட்டோருக்கு நடுவணரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு தான் தன் குறிக்கோள் என்று அடித்துக் கூறிவிட்டார். இட ஒதுக்கீடு முடிவில்லாமல் சென்றால் அது தாழ்த்தப்பட்டோருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்குமான பிளவைப் பகைமையாக மாற்றுமே, சாதி ஒழிப்புக்குத் தடையாகுமே, தமிழ்த் தேசியத்துக்கு எதிராகுமே. இட ஒதுக்கீட்டுக்கு ஒரு மாற்று வேண்டாமா? நிலையான ஒரு தீர்வுக்குப் போராட வேண்டாமா என்ற எந்தக் கேள்வியும் அவரது மனதில் உறைக்கவில்லை. பின்னர் ஒருமுறை பலரை ஒன்று திரட்டி மதுரை மாநகராட்சிப் பயணியர் விடுதியில் ஒரு சந்திப்புக்கும் திரு. திருஞானம் ஏற்பாடு செய்தார். அவர்களிலும் எவருமே எந்தச் செயற்பாட்டுக்கும் முன்வரவில்லை.

இந்தப் பட்டறிவுகளுக்குப் பின்னர் தான் நெல்லையில் திரு.பசல் ரகுமான் என்ற இராசா என்னும் தோழரின் ஊக்குவிப்பால் தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் எனும் பெயர் கொண்ட இயக்கம் கருக்கொண்டது. இந்த ஊக்குவிப்பு என்பதற்கு மேல் அவரால் இயக்க வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க எதையும் செய்ய முடியவில்லை. மதுரைத் தோழர்களுடனான தொடர்பு தொடர்ந்தது. 1988ஆம் ஆண்டளவில் மதுரைத் தோழர்கள் இரா. செல்வரசு, பொன்.மாறன் ஆகியோரின் முயற்சியில் மதுரை விக்டோரியா அரங்கத்தில் தொடக்க விழா நடைபெற்றது. தலைமைக்கு அழைக்கப்பட்டிருந்த பூ.அர.குப்புசாமி அவர்கள் வராமையால் தோழர் பறம்பை அறிவன் தலைமை தாங்கினார். அதன் பின்னர் 1989 தொடக்கத்தில் என்று நினைவு, திருவரங்கத்தில் தமிழ் இயக்கங்களை இணைத்து தமிழ்த் தேசிய இயக்கம் தொடங்குவதற்கான அமைப்புக் கூட்டம் நடைபெற்றுது. நான் மக்கள் பொருளியல் உரிமைக் கோட்பாட்டை எடுத்துரைத்தேன். அது எவர் கவனத்தையும் ஈர்த்ததாகத் தெரியவில்லை. அத்துடன் செயல்திட்டமாக அவர் உருவாக்கியிருந்த வரைவில் கோயில் சொத்துகளை உழவர்களிடமிருந்து ″மீட்க″ வேண்டுமென்றிருந்த திட்டம் தமிழ்த் தேசியத்தோடு எங்ஙனம் பொருந்துகிறது என்ற வினா என்னுள் எழுந்தது. இந்தக் கேள்வி கூட எவராலும் எழுப்பப்படவில்லை.

மதுரைத் தோழர் இரா.செல்வரசு திரு.நெடுமாறனோடு தொடர்புகொண்டு அவ்வவப்போது சந்தித்துவந்தார். பழனி அருகில் நடைபெற்ற த.தே.இ.மாநாட்டின்போதும் நாங்கள் அவரைச் சந்தித்தோம். பின்னர் 1989இல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிடுவதாகத் திட்டமிட்டுக் கருத்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. வருமான வரி எதிர்ப்பு போன்ற தேசியப் பொருளியல் கொள்கைகளைத் தேர்தலில் முன்வைக்க வேண்டுமென்று கருத்துக் கூறினேன். அதற்கும் எவரும் செவி சாய்க்கவில்லை. தேசியப் பொருளியல் சிக்கல்களைப் பற்றி திரு. நெடுமாறனிடம் நான் எடுத்துரைக்கும் போதெல்லாம் தனக்கு அதைப்பற்றி இன்னும் கூடுதலாகத் தெரியும் என்று புதிய செய்திகளைச் சொல்வாரே தவிர அவற்றின் அடிப்படையில் அவரது இயக்க அணுகல்களை அமைக்க அவர் எந்த முனைப்பும் காட்டவில்லை. தேர்தலில் சராசரி அரசியல் கட்சி போன்றே ஈடுபட்டார். கட்சி கடுமையான தோல்வியைத் தழுவியது. தேர்தலுக்குப் பின் தோல்வியின் காரணங்களை ஆய்வு செய்ய நான்கைந்து பேர் பங்கு கொண்ட ஒரு கலந்தாய்வு நடைபெற்றது. அதிலும் கூட்டல் கழித்தல் கணக்கு தான் போடப்பட்டதே தவிர கொள்கைகளைப் பற்றிய அலசல் எதுவுமே நடைபெறவில்லை. எனவே தமிழ்த் தேசிய இயக்கத்தில் தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் இணையாது என்று அறிவித்துவிட்டு அந்த உறவுக்கு ஒரு முடிவைக் கட்டினேன்.

இந்த இடத்தில் திரு.பழ. நெடுமாறன் அவர்களைப் பற்றி நான் அறிந்தவற்றைக் கூற வேண்டும்.

1989 தேர்தலுக்குப் பின் அவருடன் நடைபெற்ற கலந்தாய்வின் போது அவர் ஒரு செய்தியைக் கூறினார். அவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்ற போது திராவிட முன்னேற்றக் கழகத்தில் முனைப்பான ஈடுபாடு கொண்டிருந்தாராம். அப்போது ஒரு முறை அவரும் தி.மு.க. மீது ஈடுபாடுடைய வேறு மாணவர்களும் சேர்ந்து அண்ணாத்துரையைச் சந்தித்தனராம். அப்போது உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுக்கொண்டிருந்த தேசிய விடுதலைப் போராட்டங்களைப் போல திராவிட நாடு விடுதலைப் போருக்கு ஆயுதம் தாங்கிப் போராட தாங்களும் ஆயத்தமாகவும் ஆர்வமாகவும் உள்ளதாக அவர்கள் அண்ணாத்துரையிடம் கூறினராம். ஆனால் அண்ணாத்துரையோ, திராவிட நாட்டு விடுதலைக்காக ஒரேவொரு தோட்டாக்கூட சுடப்படாது, ஒரு சொட்டுக் குருதிகூடச் சிந்தப்படாது என்று கூறினாராம். இந்த அண்ணாத்துரை தான் ″ஓட்டு முறை, அது பயன் தரவில்லை எனில் வேட்டுமுறை″ என்று மேடைகளில் அடுக்கு மொழியில் ″வீர வச்சனம்″ பேசியவர் என்பதை நினைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பின்னணியில் தான் போலும் சம்பத்துடன் நெடுமாறனும் பிரிந்து சென்றார். தனிக் கட்சி நடத்த இயலாத நிலையில் சிற்றப்பா பெரியாரின் அறிவுரை, பரிந்துரைகளுடன் பேரவைக் கட்சியில் காமராசரின் அரவணைப்பைப் பெற்ற சம்பத்துடன் பேரவைக் கட்சியினுள் போய்ச் சேர்ந்தார். ஆக மனதில் பதிந்திருந்த கொள்கைகள் கோட்பாடுகளுக்கு நேர் எதிரான ஓர் இயக்கத்தினுள் சென்று சேர்ந்தாயிற்று. இனி அவற்றுக்குப் பகரம் பதவி, அரசியல் செல்வாக்கு, பணம், புகழ் என்று நாட்டம் கொள்வது இயற்கை தானே!

அண்ணாத்துரையும் கருணாநிதியும் கட்சியினுள் கொள்கை, கோட்பாடு, நேர்மை, போன்ற ″கவைக்குதவாத″ கருத்துகளை வைத்திருப்போரை ஆங்காங்கே இனங்கண்டு அவ்வப்போதே அவர்களை ஒதுக்கி வைத்து நேரம் கிடைக்கும் போது கழித்துக்கட்டிவிடுவர். இதைச் செயலாக்கியவர் களப்பணியில் கைதேர்ந்த கருணாநிதிதான். அண்ணாத்துரை களங்கமில்லாத் தூயவர் போன்று இருப்பார்.

கண்களிரண்டில் அருளிருக்கும்
சொல்லும் கருத்தினிலாயிரம் பொருளிருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும் அது
உடன் பிறந்தாரையும் கருவறுக்கும்

சம்பத்தோடு தி.மு.க.விலிருந்து வெளியேறியவுடன் கண்ணதாசன் அண்ணாத்துரையை மனதில் வைத்து தாய்சொல்லைத் தட்டாதே திரைப்படத்துக்காக எழுதிய ஒரு பாடலில் உள்ள சில வரிகள் இவை.

அண்ணாத்துரையுடன் சேர்ந்து நடத்திய இந்தக் கருவறுக்கும் சொல்லுக்கான முழுப்பழியையும் கருணாநிதி தாங்கிக் கொண்டார். ஆனால் அதற்குரிய பலன்களை இரண்டு தலைமுறைகளாக அறுவடை செய்திருக்கிறாரே! ஒரு தேனீரைப் பங்கு போட்டுக் கண்ணதாசனுடன் குடித்தவர் 60 ஆண்டுகளில் ஆசியாவின் பணக்காரக் குடும்பங்களின் பட்டியலில் இடம் பெறும் அளவுக்குப் பயனடைந்திருக்கிறாரே! ஆனால் பாருங்கள் தமிழக அரசியலில் புதிதாக, நேர்மையும் கொள்கைப் பிடிப்பும் உள்ள ஒரேயொரு ஆள்கூடத் தலையெடுக்க முடியாமல் தமிழகம் பாழ் நிலமாக, பாலைநிலமாகப் போய்விட்டதே!

இனி நெடுமாறனுக்கு வருவோம். மதுரையில் தி.மு.க.வின் தொடக்க நாட்களில் பேரவைக் கட்சியினரின் அடியாட்களை எதிர்கொண்டு தன் கீழும் ஓர் அடியாள் கும்பலை வைத்து கழகத்தை வளர்த்தவர் மதுரை முத்து; அதே மதுரையில் அது போலவே அடியாட்களைக் கொண்டு மதுரை முத்துவை எதிர்த்து பேரவைக் கட்சியை மீட்டவர் நெடுமாறன் என்று மதுரை நண்பர்கள் கூறியிருக்கின்றனர். அத்துடன் நெருக்கடி நிலைக் காலத்தில் தி.மு.க.வினர் மீது இந்திரா காந்தி நிகழ்த்திய அடக்குமுறை வெறியாட்டத்துக்கு வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் வகையில் 1977 தேர்தலில் தோல்வியை எதிர்கொண்ட இந்திரா மதுரையில் கலந்துகொண்ட ஊர்வலத்தில் அவரைத் தாக்கத் திட்டமிட்டனர் தி.மு.க.வினர். ஊர்வலத்தின் போது அவருடன் சென்ற நெடுமாறன் தி.மு.க.வினர் வீசிய கல்லடிகளைத் தான் தாங்கிக் கொண்டார். இதனாலெல்லாம் அவர் மாவீரன் என்ற பட்டம் பெற்றார். விருப்பம் போல் கண்டவர்க்கெல்லாம் பட்டங்கள் வழங்கும் வள்ளன்மையில் தமிழர்களை மிஞ்ச உலகில் எவருமே இல்லை.

ஆனால் இந்திராவின் இறுதிக் காலத்தில் தமிழ்நாடு பேரவைக் கட்சித் குழுத் தலைவராக இருந்த இவரை ஒதுக்கிவிட்டு கருப்பையா மூப்பனாரை இந்திரா அமர்த்திய போது வெறுப்படைந்து வெளியேறி தமிழ்நாடு காமராசு காங்கிரசு என்ற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கினார். இதே காரணத்துக்காக குமரி அனந்தனும் காந்தி - காமராசு காங்கிரசு என்ற ஒரு கட்சியைத் தொடங்கினார்.

இந்தச் சூழலில 1983 இல் இலங்கையில் தமிழர்கள் மீது சிங்களக் காடையர் மனித வரலாற்றையே இழிவுபடுத்தும் வகையில் கொடுமைகள் புரிந்தனர். தமிழக மக்கள் யாருடைய முன்முயற்சியும் வழிகாட்டலும் தலைமையும் இன்றி தன்னெழுச்சியாக தமிழகம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதைப் பார்த்த பின்தான் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றாகக் களம் புகுந்தன. அந்த வகையில் இரா.சே.ச.(ஆர்.எசு.எசு.)வின் துணையுடன் பழ.நெடுமாறன் இராமர் உருத்தாங்கி கையில் வில்லும் அம்பும் தலையில் மணிமுடியுடனும் படகில் ஏறிச் செல்ல ஒரு படகுகளின் அணி இராமேசுவரத்திலிருந்து இலங்கை நோக்கிச் செல்வதாகப் புறப்பட்டது. வழக்கம் போல் காவல் துறையினர் தளையிட்டுப் பின்னர் விடுவித்தனர். அன்றிலிருந்து அவரது ″தமிழ்த் தேசிய″ப் பயணம் மீண்டும் தொடங்கியது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இந்தியாவினுள் தம் பேச்சாளராக அவரை ஈர்த்துக்கொண்டனர்.

புலிகளுக்குப் பணி செய்யப் போகிறவர்களின் பாடு கொஞ்சம் சிக்கல் தான், புலிமீது ஏறியவனின் நிலை தான். அப்படியொன்றும் எளிதாகக் கீழே இறங்கிவிட முடியாது. அந்தச் சிக்கல் தான் அவரை இன்றுவரை அங்கு நிறுத்திவைத்துள்ளது என்று கருதுகிறேன்.

புலிகளின் இயல்பு அத்தகையது. அது தவிர்க்க முடியாதது. போர்க்களத்தில் இருப்பவன், அதிலும் உலகம் முழுவதுமே எதிரிகளாகப் படிப்படியாக மாறிக்கொண்டிருந்த சூழலில், எந்த நண்பன் எப்போது பகையாவான் என்று கணிக்க முடியாத உலகில் அதிலும் ″நட்பும் பகையும் நிலையானவையல்ல″ என்பதைப் பெருமைக்குரிய கொள்கையாக நாள்தோறும் அறிவித்துக்கொண்டிருக்கும் அரசியல் களத்தில் நட்பு, பகை, நன்றி போன்ற உணர்வுகளுக்கு இடமில்லை. இலக்கு நோக்கி முன்னேறுவது ஒன்று தான் நிலையானது. இந்த ஒரே இடத்தில் தான் கண்ணன் அருச்சுனனுக்குக் கூறியதாக வரும் அறிவுரைகளின் அந்தப் பகுதி நடப்பில் தவிர்க்க முடியாததாகிறது. அந்தப் பாணியைக் கைக்கொள்வதால்தான் இன்று விடுதலைப் புலிகளால் களத்தில் நின்றுகொண்டிருக்க முடிகிறது.

தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்களை வைத்துத் தமிழக அரசியல்வாணர்கள், குறிப்பாகத் திராவிட மற்றும் தமிழ் இயக்கத் தலைவர்கள் பெயரையும் புகழையும் அரசியல் செல்வாக்கையும் வளர்த்துவந்துள்ளனர். சென்ற(20ஆம்)நூற்றாண்டில் ஈழத் தமிழர்களின் ஆயுதப் போரட்டம் வெடித்து எண்ணற்றோர் புலம் பெயர்ந்து சென்ற போது இத்தலைவர்களுக்கும் ″அறிஞர்″களுக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒரு பெரும் சந்தையாகிவிட்டனர். அத்துடன் ஆங்கிலராட்சிக் காலங்களில் தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்து சென்று அங்கு தமிழ் மொழியையும் பண்பாட்டையும் மறந்துவிட்ட தலைமுறைகள் உருவான நிலையில் அந்நாடுகள் அரசியல் விடுதலை பெற்றன. உள்நாட்டு மக்கள் தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கத் தொடங்கினர். இதை எதிர்த்து நிற்பதற்கு அவர்களை ஒன்றுபடுத்தும் அடையாளங்கள் தேவைப்பட்டன. அவை தாம் மொழியும் பண்பாடும். அதற்காக அவர்கள் தமிழகத்தை நோக்கினர். தமிழையும் தமிழர்களையும் வாழவைப்போம் என்று அரியணை ஏறியவர்கள் எதையும் செய்யவில்லை. இந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு ஒரு பெரும் தமிழறிஞர் திருக்கூட்டம் தமிழர்கள் வாழும் நாடுகளுக்குப் படையெடுத்தது. நல்ல வேட்டை, நல்ல தேட்டை.. காலஞ்சென்ற தமிழ்க்குடிமகள், வாழும் வா.மு.சேதுராமன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். காலமுறையில் சென்று வந்தனர், வருகின்றனர். தாளிகைகள் என்று எடுத்துக்கொண்டால் காலச்சுவடு பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதனுடைய களம் ஈழத்தமிழர்களே. அதிலும் பார்ப்பன - மலையாள மனப்பான்மையுடன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துகளை, இன்னும் பழைய சாதிய மேலாண்மை மனப்பான்மை மாறாமலிருக்கும் புலம் பெயர்ந்த மேட்டுக்குடி ஈழத் தமிழர்களின் கருத்துகளை அது நஞ்சாகப் பரப்பி வருகிறது.

தமிழகத் திரையுலகின் இன்றைய தரங்கெட்ட திரைப்படங்கள் பெரும் வளர்ச்சி பெற்று கோடிக்கணக்கில் முதலீட்டில் படங்கள் எடுக்க முடிகிறதென்றால் தமிழ் கற்றுக்கொள்ள விரும்பும் புலம் பெயர்ந்த தமிழர்களின் தேவையை ஓரளவுக்காவது அவை நிறைவு செய்வதால்தான். இத்தகைய சூழலில் தான் நெடுமாறனின் செல்வாக்கு உலகத் தமழிர்களின் தனிப்பெரும் தலைவர் என்னுமளவுக்கு வளர்ந்துள்ளது.

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்குத் தேவை அவர்களை ஒன்றிணைக்கும் அடையாளங்களாகிய மொழியும் பண்பாடும். ஆனால் அதே வாய்ப்பாடு தாய்நாட்டுத் தமிழர்களுக்குப் பொருந்தாது. இங்கு அவர்களுக்குத் தாய்மொழி - பண்பாட்டுத் தொடர்ச்சிக்கு வெளிப்படையான அச்சுறுத்தல் இல்லை. பொருளியல் திரிபுகளால், திராவிட இயக்கம் கொடுத்த ஒதுக்கீட்டு ″அமுதக் கரைசலை″ உண்டதால், நிலத்திலிருந்தும் அது தரும் செல்வத்திலிருந்தும் கவனம் திருப்பப்பட்டு நாட்டை விட்டோடத் துடிக்கும் துடிப்பால் தாய் மொழியை வெறுத்து அயல் மொழிகளில் எழுதவும் சிறப்பாகப் பேசவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் புதிய தலைமுறையினர். அவர்களுக்கு நாம் நம் நிலத்தின் மீதும் அதன் வளங்கள் மீதும் நம் ஆற்றல்கள் மீதும் ஈடுபாட்டை உருவாக்கி அந்த வளங்கள் நமக்கு மறுக்கப்படுவதற்கு எதிராகப் போராட அவர்களை ஆயத்தப்படுத்துவது தான் தாய்நாட்டுத் தமிழர்களுக்குப் பொருத்தமான உத்தி. அதற்குப் பகரம் விதிவிலக்கின்றி அனைவரும் மொழி, பண்பாடுகளுக்கு ஏற்பட்டுள்ள அறைகூவலை முன்னிலைப்படுத்திக் கவனத்தைத் திருப்புகிறார்கள். காரணத்தை மறைத்து வினைவை முன்னிலைப் படுத்துகின்றனர். நச்சு மரத்தின் வேரை வெட்டியெறிவதற்குப் பகரம் கிளைகளை வெட்டினால் போதுமென்று ஒன்றுகூடிப் பெருங் கூச்சல் போடுகிறார்கள்.

இவர்கள் இதைச் செய்வதற்கு உள்நோக்கங்கள் உண்டு. காமராசர் வாழ்ந்த போது தன் காலத்துக்குப் பிறகும் நெடுமாறன் குமரிஅனந்தன் போன்றோருக்கு மாதந்தோறும் பணம் கொடுக்குமாறு மார்வாரிகளிடம் ஏற்பாடு செய்திருந்தார் என்றொரு செய்தி உண்டு. அதை அவர்கள் நிறுத்த முயன்றால், மார்வாரி கடைகளுக்கு முன்னால் மறியல் போன்ற போராட்டங்களை அறிவித்து அவர்களை வழிக்குக் கொண்டுவருவர்.

எனவே உள்நாட்டுத் தமிழர்களின் மீட்சிக்கு நெடுமாறன். உதவமாட்டார் என்பது உறுதி. வைக்கோவின் கதையும் அது தான். என்று தில்லி பாராளுமன்றம் போனாரோ அன்றே அவர் மார்வாரிகளுடன் இரண்டறக் கலந்துவிட்டார். எனவே தமிழக மக்கள் நிலம் சார்ந்த பொருளியல் வளர்ச்சி சார்ந்த கோட்பாட்டுடன் தமிழ் மொழியின் மீட்சி என்ற குறிக்கோளையும் இணைத்துப் போராடத் தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பழ.நெடுமாறன் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு இன்று போல் சோர்வின்றி உழைப்பார் என்று உறுதியாக நம்பலாம். எனவே அவரது எல்லைகளை நன்கு புரிந்து கொண்டு புதுவழிகாண வேண்டுமென்பதற்காகவே அவரைப் பற்றி இவ்வளவு விரிவாகக் கூறப்பட்டது.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1] பின்பு விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் வாழ்ந்து சென்ற 2005ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார். தமிழ்த் தேசிய இயக்கங்கள் என்ற கானல் நீரை நம்பி குடும்ப வாழ்க்கையையும் மன அமைதியையும் இழந்து அலைந்த எத்தனையோ நல்லுள்ளங்களில் அவருடையதும் ஒன்று.

0 மறுமொழிகள்: