25.12.07

தமிழ்த் தேசியம் ... 17

மனந்திறந்து... 7

குமரிக் கண்ட வரலாற்றை முழுமையாக ஆய்வு செய்ய ஓர் அமைப்பு தேவை என்று கருதினேன். இன்று வரை குமரிக் கண்ட ஆய்வென்ற பெயரில் எத்தனையோ மாநாடுகள், கருத்தரங்குகள், நூல் வெளியீடுகள் நடைபெற்றுள்ளன. ஆனால் அவை அனைத்தும் மேலை நாட்டு அறிஞர்கள் இலெமுரியாக் கண்டம் பற்றிக் கூறிய செய்திகளின் தொகுப்பாகவே அமைந்துள்ளன. கட்டுரையாளரின் வரிசை மாறும் அவ்வளவு தான். இத்துறையில் பலர் நேரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். பேரா. இரா. மதிவாணன் அவர்கள் தமிழர் பண்பாடு பற்றிய ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்துக்குள் தன்னைச் சுருக்கிக் கொண்டதால் அவரது ஆய்வு எல்லையும் சுருங்கிக் கிடக்கிறது. ப-ர். நா.மகாலிங்கத்தின் முடிவுகள் உண்மையை நெருங்கி வருவன போல் தோன்றினாலும் அவர் சில எல்லைகளையும் முன்முடிவுகளையும் அரசியல் பாதிப்புகளையும் மீறத் துணிவற்றிருக்கிறார்; வெறும் கணிய(சோதிட) அடிப்படையில் காலக் கணிப்புகளைக் கூறி முகஞ்சுளிக்க வைக்கிறார். ப-ர்.க.ப. அறிவாணன் ஆப்பிரிக்காவில் தான் பணியாற்றிய போது திரட்டிய சில செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு தான் குமரிக் கண்ட ஆய்வில் பெரும் பங்காற்றியது போல் பாய்ச்சல் காட்டுகிறார். செங்கம் கு.வெங்கடாசலம் அவர்கள் மோகஞ்சதாரோ, அரப்பா ஆகிய இடங்களில் கிடைத்துள்ள நீட்டல், முகத்தல், நிறுத்தல் அளவைகளை வைத்து இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட அளவைகள் தாம் அவை எனவும் இதே அளவைகள்தாம் உலகெங்கும் பரவியுள்ளன என்றும் நிறுவியுள்ளார். பேரா. இரா. மதிவாணன் சிந்து சமவெளிக் குறியீடுகள் தமிழ் எழுத்துகள் தாம் என்று அண்மையில் நிறுவியிருக்கிறார். சிந்து சமவெளி நாகரிகம் குமரிக் கண்டத்திலிருந்து சென்றதுதான், சிலர் கூறுவது போல் சிந்து சமவெளி மக்கள் தமிழகத்தில் வந்து குடியேறவில்லை என்பவற்றை நிறுவவேண்டியிருக்கும். எசு.ஆர்.ராவ் எனும் முன்னாள் இந்தியத் தொல்பொருளாய்வுத் துறைத் தலைவர் கூறியது போல் சிந்து சமவெளிக் குறியீடுகளிலிருந்துதான் வேதங்களும் தொன்மங்களும் சமற்கிருத மொழியும் தோன்றின என்ற கருத்தை எதிர்கொள்ளவும் நாம் அணியமாக வேண்டும். இதற்கு ஆரிய ″இனக்″ கோட்பாடும் சமற்கிருதம் அவர்களின் மொழி என்ற கருத்தும் தடையாக நிற்கின்றன. மாறாக தமிழ் → சிந்து சமவெளிக் குறியீடுகள் → வேதமொழி → சமற்கிருதம் + தொன்மங்கள் என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்டால், அதாவது நாம் கூறுவதையும் எசு.ஆர்.ராவ் கூறுவதையும் இணைந்தால் பல கேள்விகளுக்கு எளிதில் விடை காணலாம். இராமன், வாலி, இராவணன், மயன், கண்ணன், இந்திரன், வருணன் என்று எண்ணற்ற தொன்ம மனிதர்களின் வரலாறுகளையும் வாழ்நாளையும் கூடத் துல்லியமாக மதிப்பிடும் திசையில் நம்மால் முன்னேற முடியும்.

குமரிக் கண்டக் கோட்பாட்டை உறுதிசெய்ய வேண்டுமாயின் இந்து மாக்கடலை அகழ்வாய வேண்டுமென்று அனைவரும் ஒரே குரலில் பேசுகின்றனர். ஒருவகையில் இது வல்லரசுகளின் குரல். இந்துமாக்கடலில் என்னென்ன கனிமங்கள், தனிமங்கள் கிடைக்கும், எவ்வெவற்றைக் கொள்ளையடிக்கலாம் என்பவைதாம் அவற்றின் நோக்கம். உலகப் புவியியல் ஆண்டு என்ற பெயரில் அவை இந்து மாக்கடலை ஆய்ந்ததிலும் குமரிக் கண்டம் பற்றி நூல்களை எழுதியதிலும் இந்த நோக்கம் உண்டு. இருந்தாலும் இந்த ஆய்வின் போது உண்மையாகவே குமரிக் கண்ட நாகரிகத்தின் தடயங்கள் எவையாவது கிடைத்துவிட்டால் தமிழர்களின் தன்னம்பிக்கை உயர்ந்து விடுமோ என்ற தயக்கத்தில் தான் நாள்கடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்படும் உளவியல் தாக்குதல்களால் அவர்கள் முழுமையாகச் சொரணையற்றுப் போன பின் அவர்கள் தங்கள் ″ஆய்வுகளை″த் தொடரக் கூடும். சுரணையறச் செய்யும் பணி முழுமூச்சுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

குமரிக் கண்டக் கோட்பாடே புவியியல் சார்ந்த ஒன்று என்ற உணர்வு தான் தமிழக ஆய்வாளர்களிடம் உள்ளது. அது, ஒரு மக்கள் விலங்கு நிலையிலிருந்து படிப்படியாக மேம்பட்டு உலகில் இணையில்லாத ஒரு நாகரிகத்தையும் வரலாற்றையும் படைத்து ஒன்றன் பின்னொன்றாக நிகழ்ந்த கண்டப் பெயர்ச்சிகள், கடற்கோள்களின் ஊடாக வளர்ச்சிகளாகவும் தளர்ச்சிகளாகவும் நிகழ்ந்த தொடர்நிகழ்ச்சிகளைத் தடம்பிடிக்கும் ஆய்வு என்ற எண்ணம் எவருக்குமே இல்லை. இந்த வரலாறுகளை முழுகிய குமரிக் கண்டத்திலிருந்து நாலா திசைகளிலும் பெயர்ந்து சென்ற மக்களின் வழியினராக உலக நாடுகளில் வாழும் அனைத்து மக்களிடமும் தடம்பிடிக்க முடியும், தடம்பிடிக்க வேண்டும்; இந்த ஒட்டுமொத்த ஆய்வில் அகழ்வாய்வுக்கு மிகச் சிறிய பங்கு தான் உண்டு என்ற எண்ணமும் எவருக்கும் எழவில்லை. இது குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதனடிப்படையில் புதிய ஆய்வுகளை ஊக்கவும் உருவாக்கப்பட்டது தான் குமரிக் கண்ட ஆய்வுக் கழகம். அதன் தோற்றத்தில் பேரா.தே.லூர்து, பேரா.வே.மாணிக்கம், திரு.சு.முத்துசாமி, வைகை குமாரசாமி ஆகியோர் சிறந்த ஒத்துழைப்பு நல்கினர். ஒரு கருத்தரங்கு நடத்தப்பட்டது. கு. வெங்கடாசலம் அவர்கள் சிந்துவெளி நாகரிகம் பற்றிய கண்காட்சி ஒன்றையும் அமைத்திருந்தார். தொடர்ச்சியாகக் கருத்தரங்குகள் நடத்துவதற்காக 75 தலைப்புகளடங்கிய ஒரு பட்டியலும் வெளியிடப்பட்டு ஏற்கனவே குமரிக் கண்ட ஆய்வில் ஆர்வமுள்ளவர்களென்று அறியப்பட்ட அறிஞர்களுக்கு விடப்பட்டிருந்தது. கருத்தரங்குளில் தமிழகத்திலுள்ள தொழில்முனைவோர், புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிந்தோர் ஆகியவர்களின் பொருட்காட்சிகளையும் இடம்பெறச் செய்ய வேண்டுமென்ற எண்ணமும் இருந்தது. ஆனால் அறிஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. தேவையான ஆள்வலிமையும் பொருளியல் வலிமையும் கிட்டாததாலும் இந்த முயற்சி முடங்கிப்போனது.

தமிழகச் சமூக வரலாற்றுக் கழகம், குமரிக் கண்ட ஆய்வுக் கழகம் போன்றவற்றை அமைத்ததில் ஆய்வு நோக்கம் தவிர வேறோரு முகாமையான நோக்கமும் இருந்தது. தமிழகக் குமுகத்தைப் பற்றிய கவலையும் செயலார்வமும் உள்ளவர்களை ஓர் அரங்கினுள் இணைத்து தமிழக நலம் குறித்த ஓர் அரசியல் இயக்கத்துக்கு களம் அமைக்கலாம் என்பதே அது. அதாவது பழம் பெருமை பேசுவதற்காக இந்த ஆய்வுகளை நாம் சுருக்கிக்கொண்டால் நம் பண்டைப் பெருமையைப் புகழ்ந்து நம்மைச் சுரண்டுவோர் கூட அங்கு புகுந்துகொள்ள வாய்ப்புண்டு. நாமும் அந்தப் புகழிலேயே மகிழ்ந்து மயங்கிச் சோம்பிவிட வாய்ப்புண்டு. அந்தப் பெருமையை அறிந்து கொள்வது நம் எதிர்காலச் செயற்பாட்டுக்கு ஊக்கம் தந்து நம்மை முன்னோக்கிச் செல்லத் தூண்டுவதாக இருக்க வேண்டும் என்பது தான் என் திட்டம். ஆனால் இந்த முயற்சிகள் நம் படிப்பாளிகளின் பல்வேறு அடிப்படை இயலாமைகளையும் குறைபாடுகளையும் அவர்களது குறுகிய எல்லைகளையும் காட்டுவனவாகவே முடிந்தன.

(தொடரும்)

0 மறுமொழிகள்: