24.4.07

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 17. சாதியத்தின் தோற்றம்

இதுவரை இருவேறு பண்பாடுகள் என மேற்சாதிக் கீழ்ச்சாதிப் பண்பாடுகள் பற்றி எடுத்துக்கூறிக் கீழ்ச்சாதிப் பண்பாடே உலகின் படைப்பாளிகளாகிய உழைக்கும் மக்களின் பண்பாடு என்பது விளக்கப்பட்டது.

உருசிய மக்களின் பண்பாட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது லெனின் காட்டிய அதே உணர்வுகளை நாமும் பகிர்ந்து கொள்ளலாம். உலகிலேயே மிகப் பழமையானது என்று உலக வரலாற்றாசிரியர்களில் ஒருசாரார் கூறுமளவுக்கு ஒரு பெரும் நாகரிகத்தை அதாவது ஒரு மொழியையும் தொழில் நுட்பத்தையும் கலைகள், இலக்கியங்கள், ஆட்சி முறைகள், மெய்யியல்கள் ஆகியவற்றையும் தம் உழைப்பு மூலம் படைத்தளித்த கீழ்ச்சாதியினரின் பண்பாட்டைக் கண்டு நாம் பெருமிதமுறுகிறோம். அதேவேளையில் உலகில் எங்கும் காணப்படாத வகையில் மனிதனை மனிதன் இழிவுபடுத்தியும் உழைப்பைப் பழித்தும் உழைக்கும் மக்களைச் சிறுமைப்படுத்தியும் தாய்மொழியைப் பழித்தும் வினைசெய்யா வாழ்வை உயர்த்தியும் அதுவே உயர்வுக்கு வழியென்று கூறியும் பிறப்பறுப்புக் கோட்பாடு எனும் மலட்டுக் கோட்பாட்டை உருவாக்கியுள்ள மேற்சாதியினரின் பண்பாட்டைக் கண்டு நாம் தலைகுனிகிறோம், வருந்துகிறோம், நம் மீதே கழிவிரக்கம் கொள்கிறோம், ஆத்திரப்படுகிறோம், அதனை அழித்தொழிக்கச் சூளுரைக்கிறோம். எனவே குமுக மாற்றம் காண உண்மையிலேயே விழையும் உண்மை மார்ச்சியர்கள் கீழ்ச்சாதிப் பண்பாட்டின் பக்கம் நின்று அதனை அனைத்துலகப் பாட்டாளியர் பண்பாடாக மேம்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும்.

சாதியத்தின் பண்பாட்டு வேறுபாடுகளைப் பற்றிக் கூறிய பின்னர் சாதியத்தின் தோற்றத்தின் முகாமையான நிகழ்ச்சிகளைப் பற்றி இங்கு குறிப்பிடுதல் இன்றியமையாததாகும். சாதிகளின் தோற்றம் பற்றி நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோட்பாட்டை முன் வைத்திருக்கிறார்கள். குமுக வளர்ச்சி, அதன் இயக்கம் ஆகியவற்றிலிருந்து சாதியத்தின் தோற்றத்தைத் தடம் பிடிக்க நாம் இங்கு முயல்கிறோம்.

மனிதன் நான்கிலக்கம் ஆண்டுகளுக்கு முன் நெருப்பைக் கையாளத் தொடங்கினான்; ஆனால் முப்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன் தான் அதைச் சமையலுக்குப் பயன்படுத்தினான் அதுவரை நெருப்பை எதற்குப்பயன்படுத்தினான் என்பது மாந்தநூலாருக்குப் புரியவில்லை. [1] கொல் விலங்குகளிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காகத்தான் நெருப்பை மனிதன் முதன்முதலில் பயன்படுத்தினான்.[2] அதுவே அவனுக்குத் தற்காப்புக்காகச் சிந்தனையையும் நேரத்தையும் செலவிடுவதைக் குறைத்துத் தன்னைச் சுற்றி நோட்டமிட்டுச் சிந்தனையை வளர்த்து விலங்கு நிலையிலிருந்து அவன் விடுபட வழிவகுத்தது. எனவே நெருப்பைப் பேணுதல் அல்லது நெருப்போம்பல் மிகப்பெரும் குமுகக் கடமையாகியது. நெருப்போம்புவோர் நாளடைவில் குமுகத் தலைவராயினர்; நெருப்பு கடவுளாகியது. பின்னர் சிறு வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் தோன்றியபோது விளைபொருட்களையும் கால்நடைகளையும் நெருப்புக் கடவுளுக்குக் காவு (பலி) கொடுப்பது வழக்கமாயிற்று.[3] காவு கொடுப்பது சடங்காகி அதுவே தனியாக வளர்ந்து வந்தபோது வேளாண்மை, வாணிகம் முதலியவற்றின் தேவைகளுக்காகக் கால்நடைகளின் தேவையும் வளர்ந்தது. பூசாரிகளுக்கும் வாணிகர் வேளாளர் மற்றும் கால்நடை வளர்ப்போராகிய ஆயர்களின் கூட்டணிக்கும் கால்நடைகளைக் காவு கொடுப்பது தொடர்பாக முரண்பாடுகள் ஏற்பட்டு வேள்வியழிப்புகள் நிகழ்ந்தன. வேள்விகள் ஒழிந்தன. இந்த நிகழ்முறையிலிருந்து தோன்றிய அரசுக்கும் வாணிகர், வேளாளர், ஆயர் கூட்டணிக்கும் ஏற்பட்ட முரண்பாட்டில் அரசர் பூசாரிகளின் உதவியை நாடினர்; அவர்களின் மேலாளுமையை ஏற்றுக்கொண்டனர். குதிரையைக் கொண்டு வட இந்தியாவிலும் நெய் கொண்டு தமிழகத்திலும் வேள்வி புதுப்பிக்கப்பட்டது.[4] பழைய நெருப்போம்பல் பாடல்கள் தொகுக்கப்பட்டு வேதங்களாயின. [வேது = சூடான ஆவி, வெப்பம் (நெருப்பு), வேதல் = வேகுதல், எரிதல்; வேதம் = நெருப்பின் முன் பாடப்பட்ட பாடல்]. வேள்விபற்றி முன்போரிடத்தில் மேற்கொள்ளப்பட்ட தேவிப்பிரசாத் சட்டோபாத்தியாயாவின் நூற்பகுதியோடு அதிலிருந்து எடுக்கப்பட்ட இதனையும் கூட்டிப் படிக்க.

“எனவே கடவுள்களுக்குக் கிடைத்தது வன்முறையால் தாக்கப்பட்ட முன்பிருந்த வேள்வியில் சிதறிய துண்டுகளே; அசுவினிகளின் மருத்துவக் கலை அவர்களுக்குத் தேவைப்பட்டது.

“பிராமணங்களின் காலத்தில் மீளக்கட்டப்பட்ட வேள்விகளில் தெள்ளத் தெளிவான பார்ப்பனச் சார்பு தெரிந்தது”.[5]

“பிரசாபதி வேள்வியைப் படைத்தான், வேள்வியைப் படைத்த பின் தெய்வீக அதிகாரமும் (பிராமணன்) அரச அதிகாரமும் (சத்திரியன்) படைக்கப்பட்டன. தெய்வீக அதிகாரத்தையும் அரச அதிகாரத்தையும் தொடர்ந்து அவிப்பாகத்தை[6] உண்பவர் என்றும் அவிப்பாகத்தை உண்ணாதவரென்றும் இருவகைப் பிறங்கடையினர் தெய்வீக அதிகாரத்திலிருந்து அவிப்பாகத்தை உண்பவர்களும் அரச அதிகாரத்திலிருந்து அவிப்பாகத்தை உண்ணாதவர்களும் படைக்கப்பட்டனர். பிராமணர் அவிப்பாகத்தை உண்ணும் பிறங்கடையினர்.[7] அரச, வைசிய, சூத்திரர்கள் அவிப்பாகத்தை உண்ணாத பிறங்கடையினர். அப்போதிலிருந்து வேள்வி அகன்றது; அதனைத் தெய்வீக அதிகாரமும் அரசு அதிகாரமும் பின் தொடர்ந்தன. தெய்வீக அதிகாரம் தெய்வீக அதிகாரத்தின் ஆயுதங்களுடன் பின் தொடர்ந்தது. அரச அதிகாரம் அரச அதிகாரத்தின் ஆயுதங்களுடன் பின் தொடர்ந்தது. தெய்வீக அதிகாரத்தின் ஆயுதங்கள் வேள்விக்கான ஆயுதங்கள்; அரச அதிகாரத்தின் ஆயுதங்கள் குதிரையும் தேரும் கவசமும் வில்லும் அம்பும். அரச அதிகாரம் அதை அடைய முடியாமல் திரும்பியது; தன் ஆயுதங்களைப் போட்டுவிட்டு நடுங்கிக் கொண்டு நின்றது. தெய்வீக அதிகாரம் அதைப் பெற்றது; அதைப் பெற்ற பின் அதை மேலிருந்து மறித்துக் கொண்டு நின்றது; பெறப்பட்டு மேலிருந்து மறித்து நிறுத்தப்பட்டு நின்ற அது தன் சொந்த ஆயுதங்களை இணங்கண்டு தெய்வீக அதிகாரத்திடம் சென்றது. எனவே இப்போதும் கூட வேள்வி தெய்வீக அதிகாரத்திடமும் பிராமணனிடமும் ஆதரவைக் காண்கிறது. அப்போது அரச அதிகாரம் அதனைத் தொடர்ந்தது; ‘இந்த வேள்விக்கு என்னை அழைப்பாயாக’, என்றது. ‘அப்படியே ஆகட்டும், உன் சொந்த ஆயுதங்களைக் கீழே வைப்பாயாக, தெய்வீக அதிகாரத்தின் ஆயுதங்களுடன், தெய்வீக அதிகாரத்தின் வடிவத்தில் தெய்வீக அதிகாரமாக மாறி வேள்விக்கு வருவாயாக’ என்று அது மறுமொழி கூறியது. ‘அப்படியே ஆகட்டும்’ என்றது அது. இவ்வாறு அரச அதிகாரமும் தன்னுடைய சொந்த ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுத் தெய்வீக அதிகாரத்தின் ஆயுதங்களுடன் வேள்விக்குச் சென்றது. எனவே இன்றும் கூடச் சத்திரியன் தன் சொந்த ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுத் தெய்வீக அதிகாரத்தின் ஆயுதங்களோடு தெய்வீக அதிகாரத்தின் வடிவத்தில், தெய்வீக அதிகாரமாக மாறி வேள்வியின் தலைவனாக வேள்விக்குச் செல்கிறான்” - அயித்திரேயப் பிராமணம்.[8]

இவ்வாறு நால் வருணங்கள் உருவாயின. கலைகளைப் பற்றிக் குறிப்பிடும் போது தமிழகத்தில் கலைகள் வேத்தியல், பொதுவியல் என இருவகையாகப் பிரிக்கப்பட்டிருந்தன என்று கூறப்பட்டது. இது முதலில் அரசு வேறு எல்லாவற்றுக்கும் மேலாக நின்ற நிலை. அடுத்து அயித்திரேய பிரமாணம் சுட்டும் நிலை. இதற்கும் (அரசு, பொதுமக்கள் என்ற பகுப்பு) இன்றைய வரண வரிசைக்கும் இடைப்பட்டதாகத் தமிழகத்தில் முதலில் சிறிது மாறுபட்ட நிலை இருந்ததாகத் தெரிகிறது. சிலப்பதிகாரத்தில்[9] (1) பார்ப்பனர், (2) அரசர், (3)வேளாளர் - வாணிகர், (4) பாணர் - கூத்தர் என்ற வரணப் பாகுபாடு கூறப்படுகிறது. பின்னர் பார்ப்பனர், அரசர், வாணிகர், வேளாளர் என்ற நால்வரணப் பகுப்பு கலைகள், இலக்கியங்கள், இலக்கணங்கள், அரசியல், பொருளியல், தொழில்நுட்பத் துறைகள் என்று அங்கிங்கெனாதபடி எங்கும் இடம் பிடித்துக் கொண்டது. இதுவே வரண முறையின் திரிவாக்கத்தின் (Evolution) சுருக்கமான வரலாறு.

இந்திய வரண அமைப்பு போன்ற பிரிவுகள் பண்டை உரோமிலும் இடைக்காலப் பிரான்சிலும் இருந்திருக்கின்றன. பல்வேறு குமுகக் குழுக்களின் அரசியல் படிநிகராளி (பிரதிநிதி)க் குழுக்களாக அவை விளங்கியுள்ளன. ஆங்கிலத்தில் அவற்றை Social Estates என்று குறிப்பிடுவர். இங்கும் வரணப் பிரிவுகள் அவ்வாறே தோன்றியிருக்கும். முதலிரண்டு குழுக்களான பார்ப்பனரும் அரசரும் தம்முள் கூட்டணி கொண்டு பெரும்பான்மை மக்களான பின்னிரு குழுக்களின் அரசியல் அதிகாரங்களையும் உரிமைகளையும் பறிக்கும் முயற்சியே அர்த்தசாத்திரம் எனப்படும் பொருள் நூலிலும் மனுச் சட்டத்திலும் காணப்படுபவை. அதனையே மேற்சுட்டிய அயித்திரேயப் பிராமனப் பகுதி காட்டுகிறது. அன்றிலிருந்தே இந்தியாவின் உள் நாட்டு வலிமை வீழ்ச்சியடைந்து வந்திருக்கிறது.

தமிழகத்திலும் நெருப்போம்பலின் மூலம் ஏற்பட்ட பார்ப்பனர்களின் மேலாளுமை முறியடிக்கப்பட்டிருக்க வேண்டும். தக்கன் என்பவன் (தெற்கன் → தெக்கன் → தக்கன் → தட்சன் ஒ-நோ. தெற்கு → தட்சிணம்) நடத்திய மிகப் பெரிய வேள்வியை அவன் மகளான தக்காயனி அழித்தாள் எனும் தொன்ம நிகழ்ச்சி இதைக் குறிப்பதாகலாம். இது ஒருவேளை குமரிக் கண்ட காலத்திலேயே நிகழ்ந்திருக்கலாம். வடக்கில் புத்தமும் சமணமும் செய்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டமை வரலாறு காட்டும் உண்மை.[10] இவ்வாறு தம் சொந்த வலிமையால் வேள்வியை மீட்க முடியாமலிருந்த சூழ்நிலையில் இங்கிருந்த அரசர்கள் அம்முயற்சியில் வெற்றி பெற்று விட்ட கங்கைக்கரைப் பார்ப்பனர்களையும் அவர்களது வேதங்களையும் வேள்வியையும் துணை கொண்டிருக்கலாம். இங்குள்ள முன்னாள் பூசாரிகளும் அவர்களின் பாடல்களும் அவற்றோடு சேர்க்கப்பட்டிருக்கலாம். அதனால் தான் வேதங்களும் வேள்வியும் இங்கு வடக்கிலிருந்து புகுத்தப்பட்டவை என்ற வலுவான கருத்து நிலவுகிறது.

பார்ப்பனர்களின் மீட்சி கேரளத்திலேயே இருந்து கூட தொடங்கியிருக்கலாம். கேரளத்தின் பண்பாட்டுத் தலைவனாகப் போற்றப்படும் பரசுராமன் அரசர்களை (சத்திரியர்களை)க் கொன்றொழித்தாகக் கூறும் தொன்மச் செய்தி இதைக் குறிப்பதாக இருக்க வேண்டும். அத்துடன் வைப்பாட்டி மக்கள் எனப் பொருள்படும் சூத்திரர் என்ற சொல் உண்மையிலேயே நடைமுறைப்பட்ட இடம் கேரளமே.

தமிழக வரலாற்றில் நெருப்புக் கடவுளும் நெருப்போம்பும் பூசாரியரும் முற்றிலும் முறியடிக்கப்பட்டு அவர்களுக்குப் பகரம் ஐந்நிலத் தெய்வங்களும் ஐந்நில ஒழுக்கங்களும் ஏற்பட்டுவிட்டன. வேதங்களிலும் சங்கதத் தொன்மங்களிலும் முதலில் வருணனும் அவனைத் தொடர்ந்து இந்திரனும் அவனை முறியடித்துக் கண்ணனும் முதன்மைத் தெய்வங்களானமைக்குச் சான்றுகள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் தொல்காப்பியத்தில் ஒரே நேரத்தில் தமிழகம் ஐந்து வகை நிலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு கடவுளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தமைக்குச் சான்று உள்ளது. இவ்வாறு ஏற்பட்டதற்குச் சரக்கு விளைப்பு, வாணிகம் ஆகியவற்றின் முழுமையான வளர்ச்சி பழைய குக்குலக் குமுகத்தை முற்றாக அழித்து விட்டதே காரணமாக இருக்க வேண்டும். பின்னர் கடற்கோள்களினால் சரக்கு விளைப்பும் வாணிகமும் தொழில் நுட்பமும் அறிவியலும் தேங்கிச் சோர்ந்த நிலையில் கங்கைச் சமவெளியிலிருந்து வந்த பண்பாட்டுத் தாக்குதலை எதிர்த்து நிற்க முடியாமல் குக்குலத் தன்மை வாய்ந்த சாதிக் குமுகத்துக்குத் தமிழகம் இழிந்திருக்கலாம். கழக (சங்க) இலக்கியங்கள் காட்டும் தமிழகக் குமுகத்தின் வளர்ச்சிக் கட்டம் எது என்பது பற்றி மார்க்சியர்கள் குழம்பி நிற்கிறார்கள். குக்குல நிலையிலிருந்து உடைபட்டு வகுப்புக் குமுகத்தினுள் நுழையும் நிலையையே அவை காட்டுகின்றன என்பது அவர்களது நிலைப்பாடு. இது முன் கூட்டியே ஏற்றுக் கொண்ட முடிவுக்கேற்பச் சான்றுகளைத் தேடி அமைத்துக் கொண்டதாகும். ஆனால் சீர்தூக்கி ஆய்ந்தால் வகுப்புக் குமுகத்திலிருந்து வருணக் குமுகத்தினுள் நுழைந்து விட்ட ஒரு குமுகக் கட்டத்தையே கழக இலக்கியங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன என்பது புரியும். பார்ப்பனர்களின் குமுகத் தலைமையை வலியுறுத்துவதே கழக நூற்களின் தொகுப்பின் நோக்கம் என்பது காய்தல் உவத்தலின்றி ஆய்வோருக்குப் புரியும்.

தமிழ்நாட்டு வரலாறு போடும் இன்னொரு புதிர் சிலப்பதிகாரம் காட்டும் வரணப்பாகுபாடாகும். அதில் நான்காம் வரணமாகப் பாணர் - கூத்தர் இடம் பெறுகின்றனர். வரணப் பூதங்களைப் பற்றி விளக்கும் ஆசிரியர் நான்காம் பூதத்தை,

“ஆடற் கமைந்த அவற்றொடு பொருந்திப்
பாடற் கமைந்த பலதுறை போகி”
[11]

எனக் கூறுகிறார்.

கழகக் காலத்திலேயே பாணர் கூத்தர்கள் பெரும்பாலும் செல்வாக்கிழந்து விட்டனர். பாணர்கள் பெயரில் பாணாற்றுப்படைகள் பாடியோர் உண்மையில் பாணர்களாகத் தெரியவில்லை. பெரும்பாலோர் பார்ப்பனராகக் காணப்படுகின்றனர். எனவே பாணர் - கூத்தர்களைக் கொண்ட வரண வரிசை மறைந்து அவர்கள் இல்லாதவொரு வரணவரிசை ஏற்பட்டது இயல்பே. ஆனால் பாணர் - கூத்தர்களுக்கு அதற்கு முந்திய ஒரு காலத்தில் வலிமையான செல்வாக்கு இருந்ததென்பதற்கு இந்தச் சிலப்பதிகார வரண விளக்கம் சான்றாக நிற்கிறது.

தொன்மங்களில் வலிமை மிக்கவர்களாகக் கூறப்பட்டு பெரும் பங்கு ஏற்கும் கந்தருவர் தமிழில் யாழோர் எனக் குறிப்பிடப்படுவோர் பாணரே” ஏனென்றால் பேரியாழ் (பெரிய + யாழ்) இசைப்போர் பெரும்பாணர் என்றும் சீறியாழ் (சிறிய + யாழ்) இசைப்போர் சிறுபாணர் என்றும் அழைக்கப்பட்டனர் என்பது அனைவர்க்கும் தெரியும். இலங்கை அரசனாக இராமாயாணத்தில் கூறப்படும் இராவணனின் கொடி யாழே. அவனும் சிறந்த யாழ் வல்லான் என்பது தொன்மங்களின் மரபு. யாழ்ப்பாணம் (யாழ் + பாணம்) என்றொரு நாடும் இலங்கையிலுள்ளது. பரசுராமனின் தந்தையான சமதக்கினியைக் கொன்றவனும் அவனது தாயின் மனதைக் கவர்ந்தவனுமான கார்த்தவீரியார்ச்சுனன் கந்தருவனே. அச்செயலுக்குப் பழிவாங்கவே 21 தலைமுறைச் சத்திரியர்களைக் கொல்வேன் என்று பரசுராமன் சூளுரைத்துப் புறப்பட்டான். இதிலிருந்து கந்தருவர் எனப்படும் யாழோர் சத்திரியர்களே அதாவது ஆட்சி புரிந்த மரபினரே என்பது பெறப்படும். பாண்டவர்களின் தந்தையான பாண்டுவின் தாயின் கணவனான சித்திரவீரியன் என்பானைக் கொன்றவனும் அதே பெயருடைய கந்தருவனே. கந்தருவர்களைப் பற்றித் தொன்மங்கள் கூறும் சிறப்புச் செய்தி அவர்கள் வான வெளியில் பறந்து திரிந்தனர் என்பதே. கார்த்தவீரியார்ச்சுனன் வானவெளியில் செல்லும்போது தான் பரசுராமன் தாய் அவனைப்பார்த்து மனதைப் பறிக்கொடுத்தாள். இராவணனும் பூவிமானத்தில் சீதையை ஏற்றிச் சென்றான் என்று இராமாயணம் கூறுகிறது. தமிழ் இலக்கியங்களும் மாய வித்தைகளில் வல்லவர்கள் இவர்கள் என்ற பொருள்பட அவர்களை “விஞ்சையர்” என்று கூறுகிறது. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையினும் கந்தருவர்கள் வருகின்றனர். சீவக சிந்தாமணியில் சீவகனின் முதல் மனைவியாகிய கந்தருவதத்தை கந்தருவப் பெண். யாழ்ப் போட்டியில் வென்று தான் சீவகன் அவளுக்கு மாலையிடுகிறான்.

பாணர் மரபினர் வரலாற்றுக் காலத்தில் நெடுங்காலம் ஆங்காங்கே ஆட்சி புரிந்துள்ளனர். மாலிய இலக்கியத்தில் யாழ்ப்பாணர் என்றொருவரைப் பற்றிய செய்தி வருகிறது. தேவாரத் திருமுறைகளுக்கு இசையமைத்தவரும் ஒரு யாழ்ப்பாணரே. சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றுக் காதையில் அரசருமாரரும் பரதகுமாரும் யாழாசிரியன் முதலியோருடன் ஆடல் விருதாகிய தலைக்கோலின் ஊர்வலத்தில் கலந்து கொள்கின்றனர். இந்திரனின் அவையில் அவனையும் அவையோரையும் மகிழ்விக்கவும் அவனுக்கு வரும் அரசியல் இடையூறுகளைக் களையவும் ஆடல் மகளிர் பேருதவி புரிகின்றனர்.[12] இச்செய்திகள் தமிழகத்தை அல்லது இந்தியாவை ஆய்வு செய்யும் மாந்தனூலாருக்கு மட்டுமல்லாது உலகின் பழம் நாகரிகங்களை ஆய்வு செய்வோருக்கும் கவனத்துக்குரியதாகும். யாழ் ஏந்துவோர் வாளேந்தி ஆட்சி புரிந்த சூழ்நிலை என்ன என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

உலகில் ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் கொடிகளில் இடம் பெறுபவை இயற்கைப் பொருட்களே. ஆனால் தமிழகத்தில் மட்டும் மனிதனின் படைப்புகளைக் கொடிகளாகக் கொண்ட மன்னர்களும் தெய்வங்களும் உண்டு. வில் சேரனின் கொடி; கலப்பை வெள்ளையன் என்றும் பலதேவன் என்றும் அழைக்கப்படும் பலராமனின் கொடி. இவை எளிய கருவிகள். ஆனால் யாழ், அதிலும் ஆயிரம் நரம்பு கொண்ட யாழ் என்பது ஒலியியல் என்னும் அறிவியல் துறையின் உச்சியில் நிற்கும் படைப்பாகும். எனவே தம் அறிவியல் வளர்ச்சியின் மேன்மையைக் குறிப்பதற்காக யாழைத் தம் கொடியாகக் கொண்டனர் போலும். பண்டை உலகில் வானூர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கு வலிமையான சான்றுகளை எரிக் வான் டெனிக்கான் என்ற அறிஞர் தந்துள்ளனர்.[13] அவ்வாறு வானூர்தியைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தியோர் விஞ்சையர் என்ற அழைக்கப்படும் இந்தக் காந்தருவர்கள் தானா என்பது ஆய்வுக்குரியது.


சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரையை எரித்ததாகக் கூறப்படும் நிகழ்ச்சி ஒரு மக்கள் எழுச்சியாக இருந்து அதில் பழைய வரணப் பூதங்கள் அழிக்கப்பட்டதாக இருந்தால், இந்தப் பழைய வரண முறையை ஒழித்துப் புதியதொன்றை ஏற்படுத்தும் நோக்கமும் அவ்வெழுச்சிக்கு இருந்திருக்கலாம். தன்னோடு மூன்றாம் இடத்திலிருந்த வேளாளக் குழுவை நான்காம் இடத்துக்கு மாற்றுவதாக அதன் விளைவு இருப்பதால் அவ்வெழுச்சியை வாணிக வகுப்புத் தலைமை தாங்கி நடத்தியிருக்கலாம். தன்னோடு இணைந்து போரிட்ட ஐந்தொழிற் கொல்லர்களைக் காட்டிக்கொடுத்து அவர்களைக் கண்ணகிக்குக் காவு (பலி)ப் பொருளாக்கிவிட்டு வாணிகக் குழுவினர் ஆளும் கூட்டத்துடன் உடன்பாடு செய்து கொண்டிருக்கலாம்.

வரணத்தோடு சில வேளைகளில் ஒன்றியும் பல வேளைகளில் முரண்பட்டும் வரும் சாதிகளுக்கு வருவோம். ஒரு கட்டத்தில் இந்தியாவில் தொழில் முறை ஆட்சி நடைபெற்றிருக்கிறது. குயவரின் சக்கரம் கண்டு பிடிக்கப்பட்டு மட்பாண்டம் பெரும் செல்வாக்குப் பெற்றது. ஒரு வேளையில் மட்பாண்டங்கள் ஆடம்பரப் பொருட்காளகவும் செல்வத்தைக் குறிப்பனவாகவும் கருதப்பட்டன. அரசர்கள் மற்றும் செல்வர்களின் பிணங்கள் மட்பாண்டங்களாகிய முதுமக்கள் தாழி எனப்படும் கூனைகளில் வைத்துப் புதைக்கப்பட்டன. வெளிநாடுகளுக்குச் சரக்குகள் தாழிகளில் வைத்து ஏற்றுமதி செய்யப்பட்டன. திருமணங்களில் மண்கலங்கள் வைக்கப்பட்டன. இன்றும் இது தொடர்கிறது. எனவே அவற்றை மங்கல விழா என்றனர். (மண் + கலம் → மட்கலம், மண் → மன், மன் + கலம் → மங்கலம்). சிவப்பு நிறமான மட்கலத்திலிருந்து தான் செவ்வாய்க் கோளம் மங்கலம் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். விக்கிரமாதித்தன் கதையில் மண் பொம்மைகளால் விக்கிரமாதித்தனைக் குயவனான சாலிவாகனன் வென்றதாகக் கூறப்படுவதும் குயவர்கள் ஆட்சி உருவானதின் அல்லது நடைபெற்றதன் நினைவில் ஏற்பட்ட கதையாகத்தான் இருக்க வேண்டும். கண்ணன் சக்கராசுரன் என்ற ஓர் அரக்கனைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. குயவர்களின் சக்கரத்திலிருந்து தான் பேரரசர்களைக் சக்கரவர்த்தி எனும் வழக்குத் தோன்றியிருக்க வேண்டும். தமிழில் அரசர்களை ஆழி உருட்டுவோன் (ஆழி = சக்கரம்) என்று கூறும் மரபு இருந்தது. தமிழகத்தில் சில பகுதிகளில் இன்னும் வேளார்கள் எனப்படும் குயவர்கள் கோயிற் பூசாரிகளாக இருக்கிறார்கள். பண்டைக் காலத்தில் கோயிற் பூசாரித் தொழில் என்பது குமுகத் தலைமையைக் குறிப்பதாகும். இவர்களது சாதி உட்பிரிவுகள் சுமேரியர்களின் கோயிற் பணியாளர்களின் பிரிவுகளை ஒத்திருக்கின்றன.[14]

இன்னொரு தொழில்முறை ஆட்சி நெசவாளர் ஆட்சி. கலிங்கத்தின் மீது கொடுமை நிறைந்த போர் நடத்தி வெற்றி கொண்ட அசோகன் புத்த சமயத்தைத் தழுவினான். தருமச் சக்கரம் என்ற பெயரில் 24 ஆரங்களைக் கொண்ட ஒரு சக்கரத்தைத் தனக்கு இலச்சினையாகக் கொண்டான். அதுவே இன்றும் இந்திய அரசின் இலச்சினையில் இடம் பெற்றுள்ளது. அது நெசவாளர்களின் இராட்டையை நினைவு படுத்துகிறது. அசோகன் தன்னைச் சாம்ராட் என்று அழைத்துக் கொண்டான். ராட் என்பது நூல் நூற்கும் கைராட்டையையே குறிக்கும். அத்துடன் பூணூலின் குமுக மதிப்பு நாமறிந்ததே. துணி எனப்படும் அறுவை ஏற்றுமதி வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்தே நம் பொருளியலில் ஏற்றிருக்கும் பங்கையும் பார்த்தால் நெசவாளர் ஆட்சி ஒரு காலத்தில் நடைபெற்றிருக்கலாம் எனக்கொள்ள முடிகிறது.

“ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின்”

என்ற திருக்குறளின் ஆபயன் என்பதை உழவுக்கும் அறுதொழில் என்பதை தொழிலுக்கும் ஏற்றிச் சொன்னால் அறு(வை)த் தொழிலான நெசவுத் தொழிலாளர் தம் தொழில் மூலப்பொருளான நூலை மறந்துவிட்டு வேறு தொழில் தேடிச் செல்வர்; என்ற பொருள் வரும்.

வேளாண்மை, வாணிகம், முதலியவற்றுக்காவும் ஆனைத்து (பால், தயிர், மோர், வெண்ணெய், நெய்) ஆகிய உணவுப் பொருட்களை வழங்குவதற்காகவும் கால்நடை வளர்ப்பு செல்வாக்கும் செல்வமும் தரும் தொழிலாக வளர்ந்த நிலையில் இடையர் எனப்படும் ஆயர் ஆட்சி ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் நடைபெற்றது. இந்தியா முழுவதையும் ஒரே நேரத்தில் தழுவிய இறுதியான தொழில்முறை ஆட்சியாக அது இருந்திருக்கக் கூடும். இன்று கூட இந்தியக் குமுகத்தில் ஆயர் பண்பாட்டுக் கூறுகளே மிகுந்த ஆதிக்கம் செலுத்துவதைப் பார்க்கலாம்.

ஒன்றில் தான் தமிழகத்துக்கும் வட இந்தியாவுக்கும் ஒரு வேறுபாடு உள்ளது. ஐந்நில நாகரிகங்களில் இறுதியாகிய முருகன் வழிபாடு அது. மலைபடு பொருட்கள் தமிழகத்திலிருந்து கி.மு. பல ஆயிரமாண்டுகளுக்கு முன்பே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகத் தொடங்கிவிட்டன. யூதப் பேரரசன் சாலமோனின் அரண்மனைக்காக பினீசிய அரசன் தென்னிந்தியாவிலிருந்து அகில், தேக்கு, மயிலிறகு, தந்தம், குரங்கு முதலிய மலைபடு பொருட்களைக் கொண்டு சேர்த்தான் என்பது கிறித்துவத் திருப்பொத்தகத்திலிருந்து அனைவரும் எடுத்துக்கட்டும் ஓர் உண்மையாகும். உலகில் எவ்வளவு பழமையான தொல்லியல் அகழ்வு நடைபெற்றாலும் அங்கு தமிழக மலைபடு பொருட்கள் கிடைக்கின்றன. எனவே தான் குறிஞ்சித் தெய்வமான முருகனுக்குத் தென்னிந்தியாவிலிருக்கும் அளவுக்கு வடக்கில் செல்வாக்கில்லை. தொன்மம் எழுதியோர் முருகனைக் கங்கையில் தோன்றியவனாகக் கூறி அவனுக்குக் காங்கேயன் என்று பெயரிட்டாலும் நிலைமை இதுதான். குமரிக் கண்டத்தில் ஒரு முறை நிகழ்த்துவிட்ட நிகழ்ச்சிகளுக்கு இணையான நிகழ்ச்சிகளாகவே வடக்கிலுள்ள வரணன், இந்திரன், கண்ணன் ஆகிய தெய்வங்களை நாம் கொள்ள வேண்டும். வடக்கிலுள்ள தெய்வங்களின் கதைகளில் தெற்கே நடைபெற்ற நிகழ்ச்சிகளும் கலந்திருக்கின்றன.

கடல் வாணிகம், கடற்போர் ஆகியவற்றால் பரதவர் எனப்படும் பரவர் (பரவு, பரவை = கடல்; பரவு = பரந்து செல்) செம்படவர் ஆகியோரும் கருப்பட்டி, கள்[15] ஆகியவற்றின் செல்வாக்கினால் பனை ஏறிகளும் மாழையியலின் செல்வாக்கினால் கம்மாளர்கள் எனப்படும் கண்மாளர்களும், தோற் பொருட்களின் ஏற்றுமதியால் சக்கிலியர்கள் எனப்படும் செம்மார்களும்[16] என்று இவ்வாறு இன்னும் எத்தனையோ சாதிகள் குமுகத் தலைமையைத் தத்தம் கைகளில் ஏதோவொரு காலத்தில் வைத்திருக்கலாம். ஆனால் இறுதியில் அரசும் சமயமும் ஒன்று சேர்ந்து தம்மைப் படைப்புத் தொழிலிலிருந்து அயற்படுத்திக் கொண்டு படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருப்போரை இறை என்ற பெயரில் சுரண்டவும் திறை (கப்பம்) என்ற பெயரில் தம் போன்ற அரசுகளைக் கொள்ளையடிக்கவும் முற்பட்டபோது அரசைக் கைப்பற்றுவதற்கென்று ஒவ்வொரு குழுவும் தன்னை வளர்த்துக் கொண்டது. அப்படி வளர்ந்தவற்றுக்கும் அவற்றால் வீழ்த்தப்பட்டவற்றுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள் தாம் மகட்பாற் காஞ்சி என்ற வகையில் வெளிப்பட்டன என்று முன்பு கூறினோம். படைப்புத் தொழிலிலிருந்து உருவான அரசு இவ்வாறு படைப்புத் தொழிலுக்கே எதிரியாய் மாறியது. இது முதலாளிகளைச் சார்ந்து, முதலாளிகளுக்காக அரசு இருக்கிறது என்ற மார்க்சு - ஏங்கல்சு முடிவுக்கு மாறானது. அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஐரோப்பிய அரசுகள் இருந்த நிலை அது தான். ஆனால் நம் வரலாற்றில் அந்த நிலை இருந்த காலம் வரலாற்றுக்கு முந்தியதாகும்.

முன்பு மூதாதையர் வழியில் பிரித்தறியப்பட்ட குக்குல மக்கள் தொல்காப்பியம் சுட்டும் ஐந்திணை அடிப்படையில் தாம் வாழும் நிலத்திற்கொப்பப் பிரிந்தனர். எனவே ஒவ்வொரு நிலத்திலும் பல்வேறு குக்குல மக்கள் இருந்தனர். தொழிற் பிரிவுகளிலும் அக்குக்குல எச்சங்கள் தொடர்ந்திருக்கும். பின்னர் போரிடும் கொள்ளை அரசுகள் தோன்றிய காலத்தில் அவற்றில் ஈடுபட்டுத் தேட்டையிடுவதற்கென்றே மறவர் சாதிகள் தோன்றியிருக்க வேண்டும். போர்களும் கொள்ளைகளுமாகக் குறைந்தது மூவாயிரமாண்டுகளாக இந்த நாடு அலைக்கழிந்த போது அதனுடன் வரண ஆட்சியை நிலைநிறுத்தும் முயற்சிகளும் அவற்றை எதிர்த்து நடைபெற்ற மக்கள் போராட்டங்களும் சேர்ந்து கொண்டன. வரண அடக்குமுறைகளுக்கும் பொருளியல் ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக மக்களிடமிருந்த உணர்வுகளைப் பயன்படுத்திக் கொண்டு நுழைந்த பல்வேறு சமயங்களால் அவற்றிலிருந்தே தோன்றிய எண்ணற்ற சாதிகள், தமிழகத்தினுள் படையெடுத்து வந்து ஆட்சி புரிந்த பிறமொழியாளர்களாலும் பிழைப்பு தேடி அல்லது அடைக்கலம் தேடி வந்தவர்களாலும் உருவான சாதிகள் என்று எண்ணற்ற வகையில் சாதிகள் உருவாயின. இவை ஒன்றோடொன்று இணைந்தும் பிணங்கியும் கூடியும் முரண்பட்டும் நடத்திய போராட்டங்களின் விளைவாகப் புதிய சாதிகளும் சாதிப் பிரிவுகளும் தோன்றின. இன்றும் தோன்றிக் கொண்டிருக்கின்றன. இந்தியாலிலேயே தமிழகத்தில் தான் சாதிகளின் எண்ணிக்கை மிகுதி எனக் கூறப்படுகிறது. இவையனைத்தையும் ஆய்வு செய்து சாதிகளின் ஆணிவேர் முதல் சல்லிவேர் வரைக் கண்டறிந்தால் தான் சாதியம் இடையில் தோன்றிய ஒன்றென்பதும் எனவே இடையில் தோன்றிய ஒன்று இடையிலேயே அழியும் என்ற இயங்கியல் உண்மை விளங்கி அதனை அழிப்பதற்கான நம்பிக்கையும் ஊக்கமும் உண்டாகும்.

இவ்வாறு எண்ணற்ற வகைகளில் உருவான சாதிகளில் புதிதாக அதிகாரம் பெற்ற குழுக்கள் தம்மால் வெல்லப்பட்டு ஆனால் இறுதிவரை எதிர்ப்புக் காட்டிய குமுக்களை அடக்கி ஒடுக்கி வைத்தன. நடுவழியில் புறமுதுகுகாட்டி எதிரியோடு இணக்கம் கண்டு இரண்டகம் செய்த குழுக்கள் புதிய ஆட்சியாளர்களின் உதவியோடு அக்குழுக்களைத் தாங்களும் ஒடுக்கி வந்தனர். இவைதான், அதாவது படை வலிமையும் அரசியல் வலிமையும் தான் சாதிய ஒடுக்குமுறையின் மூல விசைகள்.

வேறு சொற்களில் கூறுவதாயின் தமிழகத்தின் மீது வெளியிலிருந்து படை எடுத்தவர்கள் நிகழ்த்திய தேசிய ஒடுக்குமுறையின் போது உள்நாட்டுத் தன்னல விசைகள் அத்தேசிய ஒடுக்குமுறையினரோடு இணக்கம் கண்டு உள்நாட்டுப் பெரும்பான்மை மக்கள் மீது நிகழ்த்திய அடக்குமுறைதான் சாதிய ஒடுக்குமுறை. அதாவது தேசிய ஒடுக்குமுறையின் பக்க விளைவுதான் சாதிய ஒடுக்குமுறை.

இவ்வாறு சாதிகளின் தோற்றம், வளர்ச்சி, மாற்றங்கள் ஆகியவற்றைக் கண்டறியும் நோக்குடன் தமிழ்நாடு மாநிலத் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பு தமிழகச் சமூக வரலாறு வினாப்படிவமும் வழிகாட்டிக் குறிப்புகளும் என்ற பெயரில் இவ்வாசிரியர் எழுதிய நூலொன்றை வெளியிட்டுள்ளது. இது சாதியம் எழுப்பும் கேள்விகள் அனைத்துக்கும் விடைகாணத் துணைபுரியும். இதைப் பயன்படுத்திச் செய்திகள் திரட்டுவது இன்றியமையாததாகும்.

அடிக்குறிப்புகள்:

[1] Joseph Campbell Masks of God-Primitive Mythology.

[2] குளிரிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ள நெருப்பை வளர்த்து அதனைச் சுற்றி அமர்ந்து கொண்டனர் துருவப் பகுதி மக்கள்; அப்படி வாழ்ந்து வந்த மக்கள் இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளை அடைந்தபோது தம் பழமரபைப் பேணும் முகத்தான் நெருப்போம்பலைக் கடைப்பிடித்தனர் என்று ஆரியக் கோட்பாட்டினர் கூறுகின்றனர். ஆனால் இன்றும் நிலக்கோடியில் வாழும் எற்கிமோ மக்கள் நெருப்பை அவ்வாறு கையாளவில்லை. பனிக்கட்டியினுள் குடையப்பட்ட இருப்பிடங்களையே தமக்குக் குளிரிலிருந்து காப்பாக அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்ற உண்மை ஆரியக் கோட்பாட்டாளரின் வெற்று வாதத்தைப் பொய்யாக்குகிறது.

[3] The Holy Bible

[4] வேதியம் (வைதகம்) எனப்படும் வேத மதத்துக்கும் சைவம் எனப்படும் சிவனியத்துக்கும் இடையிலுள்ள எல்லைக்கோடு மிக மெல்லியதே. வேதங்கள் எழுதப்படாமல் விடப்பட்டன. வேதங்களை எழுத்தில் வடித்தால் அவற்றின் பொருளின்மை, கீழ்மை ஆகியவை மற்றையோருக்கு வெளிபட்டுவிடும் என்பதற்காக அவற்றை எழுதாமல் “எழுதாக் கிளவியாக வைத்திருந்தனர் பார்ப்பனர் என்று திருவள்ளுவமாலைப் பாடல் ஒன்று கூறுகிறது. எனவே ஒலிப்பு மாறாமல் வேதங்களைப் பாட வேண்டுவது இன்றியமையாததாகியது. ஆகவே வேதமே கடவுள். அதை ஒலிப்பு மாறாமல் பாடுவதே இறைவழிபாடு என்று வேதியம் கூறுகிறது. சிவனியம் சிவன் ஒலி (நாத) வடிவானவன் என்கிறது. மறைகள் எனப்படும் வேதங்கள் அவனைப் பின் தொடர்ந்து ஏத்திக் கொண்டிருக்கின்றன என்கிறது. இவ்வாறு வேதியர்களோடு இணக்கம் கண்டு தன் தனி நலனைப் பேணும் சமயமாக உருவானது தான் சிவனியம். எனவே தான் சமணர்கள் காக்கப் போராடிய காளையைச் சிவனுக்கு ஊர்தியாக்கினர். தலையில் மாட்டுக் கொம்புடன் காணப்படும் சிந்து சமவெளி உருவத்தைச் சிவனின் முந்தியல் வடிவமென்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். (விருசபம் = காளை) எனவே சிவன், விருசப தேவர் இருவரது வழிபாடுகளும் ஒரே வழிபாட்டிலிருந்து உருவானவை என்பது புலப்படும். இவ்வாறு தான் காளை சிவனின் ஊர்தியாகி இருக்கிறது. அது மட்டுமல்ல சமணத் துறவிகள் பலரது பெயர்களின் இறுதியில் நந்தி (காளையைக் குறிப்பிடும் ஒரு சொல்) என்ற சொல் உண்டு. சிவனின் கணத் தலைவனாகவும் வாயிற் காவலனாகவும் யாழ், மூழவு முலியன இசைப்பவனாகவும் கூறப்படும் நந்திக்குக் காளைத்தலை உண்டு.

[5] Lokayatha - தேவிப்பிரசாத் சட்டோபாத்தியாயா.

[6] அவிப்பாகம் - வேள்வியில் வெந்த (அவிந்த) பலிப்பொருள்.

[7] பிறங்கடையினர் - சந்ததிகள்.

[8] மேற்படி நூல் பக். 611-22. இன்றிருக்கும் நிலைமைக்குத் தலைகீழாக முன்பு பார்ப்பனர் மட்டும் மாட்டிறைச்சியுண்ணுவோராகவும் பிறரனைவரும் மாட்டிறைச்சி உண்ணாதோராகவும் திகழ்ந்த உண்மையும் இம்மேற்கோளிலிருந்து புலனாகிறது.

[9] சிலப்பதிகாரம். அழற்படு காதை.

[10] ஒருவேளை நாம் முன்பு குறிப்பிட்ட பாரசீக. கிரேக்க. உரோம. சீனப் பேரரசுகளின் துணையை வடக்கிலிருந்த ஆளும் குழுக்கள் பெற்றிருக்கலாம். அதனால் தான்; போலும் அந்தப் பேரரசுகள் மேற்கொண்ட ஆதிக்க முயற்சிகளுக்கான எதிர்ப்பு உணர்ச்சிகளைச் சங்கத இலக்கியங்களில் காண் முடியவில்லை. அதற்கு மாறாகத் தென்னகத்தின் மீதே அவை காழ்ப்புக் காட்டுகின்றன. தென்னக வாணிகர்களின் சார்பு இயக்கங்களாக புத்தமும் சமணமும் தம் தோற்றக் காலத்தில் செயற்பட்டிருக்கலாம்.

[11] அழற்படு காதை 99 - 100

[12] அரசுக்கு அடங்காத குக்குலத் தலைவர்களிடையில் கலகத்தையும் பனகமையையும் உண்டாக்க விலைமகளிரையும் பாணர்களையும் பயன்படுத்த வேண்டும் என்று அர்த்தசாத்திரம் எனப்படும் கவுடிலியரின் பொருள் நூல் கூறவதற்கும் இதற்கும் தொடர்பிருக்குமா என்பது ஆய்வுக்குரியது.

[13] Chariots of Gods.

[14] கே.ஏ. நீலகண்ட சாத்திரி. தென்னிந்திய வரலாறு. பார்ப்பனரல்லாத. அதாவது வேள்வி செய்யாத பூசாரியரை வேளாப் பார்ப்பனர் என்று சொல்லும் தமிழ் மரபு ஒன்று உள்ளது. அதைக் குறிக்கும் சொல்லே வேளார் என்று ஆகியிருக்கலாம். நெருப்பை வேள்விக்குப் பயன்படுத்தாமல் மட்பாண்டம் உருவாக்கப் பயன்படுத்துவதாலும் வேளாப் பார்ப்பனர். வேளார் என்ற பட்டப் பெயர்களை அவர்கள் பெற்றிருக்கலாம்.

[15] யானை மருப்பு. மயிலிருறகு போன்ற ஏற்றுமதி மதிப்புள்ள பொருட்களைப் போட்டுவிட்டுக் கள்ளுக் கடைகளில் மக்கள் குடித்துச் சென்றனர் என்ற குறிப்புகள் கழகப் பாடல்களில் காணப்படுகின்றன. எனவே கள்ளுக்கு ஓர் உயர்ந்த பண்டமாற்று மதிப்பு இருந்திருக்கலாம். புல்லி என்ற வேங்கடமலைக் குறுநில மன்னன் கள்ளைக் கொடுத்து யானைக்டகுட்டிகளை விலையாகப் பெற்று அவற்றை அரசர்களின் படைகளுக்கு வழக்கியுள்ளான். அவன் நண்பனான பாண்டிய மன்னது படை வலிமைக்கு அவனே காரணம் என்றெhரு கழகப்பாடல் கூறகிறது. கொற்கை முத்துகளை முத்துக் குளிப்போருக்குத் கள்ளைக் கொடுத்து பாண்டியன் பெற்றான் என்று கூறும் கழகப் பாடலும் உள்ளது. இந்தச் செய்தி இரா. இராதவய்யங்காரால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

[16] தோல் தொழில் செய்வோரைத் துன்னர் என்றழைப்பது கழக வழக்கு. இது ஆங்கிலத்தில் Tanner, Tanning என்று வழங்கப்படுகிறது.

0 மறுமொழிகள்: