20.4.07

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 10. நம்பிக்கைகள்

நம்பிக்கைகள் எனும் தலைப்பில் எண்ணிலடங்காத இனங்களைக் கொண்டுவர முடியும். இவற்றில் மேற்சாதிகள், கீழ்ச்சாதிகள் இருசாரருக்கும் பெரும் வேறுபாடு இருப்பதாகக் கூற முடியாது. ஆனால் பொருளியல் பற்றிய ஒரு நம்பிக்கை இவ்விரு சாரரையும் வேறுபட்ட அடிப்படைப் பிரிவினராக ஆக்குகிறது. பணத்தைச் சேர்த்து வைத்தால் நோய் நொடிகள் ஒழுக்கக் கேடுகள் போன்ற இன்னல்களால் அப்பணத்துக்கு எப்படியாவது செலவு வந்துவிடும்; எனவே பணம் சேரச் சேர அதைச் செலவழித்து விட வேண்டும் என்ற ஆழமான நம்பிக்கையுடையவர்கள் கீழ்ச்சாதியினர். எனவே திருநாட்கள், திருவிழாக்கள், மண விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் தம் ஆற்றலுக்கு மிஞ்சிய ஆடம்பரத்துடன் நடந்துகொள்கின்றனர். “வளர்ச்சி குன்றிய” உலக மக்கள் பலரிடையில் இந்த மரபு நிலவுகிறது; பணத்தைச் சேர்த்து வைத்திருப்பவர்கள் அதைச் சமய நிகழ்ச்சிகளில் முற்றிலும் செலவழித்து விடுவதே பெருமை என்ற குமுக வழக்கம் அப்படிப்பட்ட மக்களிடம் உள்ளது. செல்வத் திரட்சியினால் குமுகச் சமநிலை குலைந்துவிடாமலிருப்பதற்காக அந்த மக்கள் வகுத்துக் கொண்ட வழி இது என மாந்தநூலார் இதற்கு விளக்கம் தருகிறார்கள்.

இந்தப் போக்குக்கு மாறாக மேற்சாதியினர் பணம் திரட்டுவதே வாழ்வின் நோக்கமும் பயனும் என்று கருதுகின்றனர். பணத்தால் அனைத்தையும் அடைய முடியும், மேலுலகத்தில் சொகுசான வாழ்வைக் கூடப் பெறலாம்; எனவே பணம் சேர்ப்பதே வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கு ஒரே வழி என்ற நம்பிக்கை அவர்களுடையது.

மூட நம்பிக்கைகள் எனப்படுபவை உலகிலுள்ள அனைத்து மக்களிடையிலும் நிலவி வருபவை. நம் நாட்டிலும் இத்தகைய மூடநம்பிக்கைகள் நிறைய உண்டு. உண்மையில் எந்த மூடநம்பிக்கையும் தொடக்கத்திலிருந்தே “மூட” நம்பிக்கையாயிருப்பதில்லை. ஒரு காலத்தில் மிகக் குறுகிய காலத்துக்கேனும் நம்பத் தக்க நம்பிக்கையாயிருந்தவையே பின்னொரு நாளில் மூடநம்பிக்கைகளாகி விடுகின்றன. எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டை மேற்கொள்வோம்.

நாய் ஊளையிட்டால் யாருக்கோ சாவு வரப்போகிறது என்பது நம் நாட்டில் நிலவும் ஒரு நம்பிக்கை. இதை வெறும் மூடநம்பிக்கை என்றே பலர் கருதுகின்றனர். இன்னும் சிலர் நாய்கள் ஆவிகளின் நடமாட்டத்தைக் காணும் திறனுள்ளவை; அவை எமதூதர்கள் வருவதைக் கண்டு ஊளையிடுகின்றன என்று கூறுகின்றனர். ஆனால் சிறிது ஆழ்ந்து சிந்தித்தால் இந்த நம்பிக்கையின் அடிப்படை விளங்கும். கொல் விலங்குகளில் பொதுவாக நாய்க் குடும்பம், பூனைக் குடும்பம் என்று இரண்டு பிரிவுகள் உண்டு. அவற்றில் நாய்க் குடும்பத்தைச் சேர்ந்த ஓநாய், நரி, குள்ளநரி ஆகியவை கூட்டமாகவே சென்று இரையாகிய விலங்கைத் தாக்கிக் கொல்லும். அவை மோப்ப ஆற்றல் மிகுந்தவையாகையால் இரையை மோப்பம் பிடித்தே கண்டுபிடிக்கின்றன. குறிப்பாக நோய்வாய்ப்பட்டு செத்துக் கொண்டிருக்கும் விலங்குகளை மோப்பம் பிடித்தால் அவை விரைந்து செல்கின்றன; ஏனென்றால் தாக்கப்படும் போது அவ்விலங்குகளால் ஓடவோ எதிர்த்துத் தாக்கித் தப்பிக்கவோ முடியாது.

இவ்விடத்தில் இன்னொன்றையும் கூற வேண்டும். உயிர் என்பது உடலை விட்டு நீங்கும் ஒரு பொருளல்ல. உயிர் என்பது ஓர் உயிரியின் உடலின் ஓர் இயக்கமே. உயிரியக்கம் என்பது உணவு முதலியவற்றை உட்கொண்டு செரித்தல் - எச்சங்களைகக் கழித்தல், கண்ணறைகள் (செல்கள்) அழிதல் - புதியன தோன்றல், தன்னைக்காத்தல் - இனப்பெருக்கத்தின் மூலம் தன் இனத்தை நிலைபெறச் செய்தல் என்ற இயங்கியல் எதிரிணைகளைக் கொண்டது. உயிர் பிரிதல் என்பது அந்த உயிரியின் உடலின் உயிரியக்கம் நின்று வேறு வகையான சிதைவு இயக்கம் தொடங்குவதே. இயல்பாக முதுமையாலோ நோய்வாய்ப்பட்டோ சாகும் எந்த விலங்கும், மனிதன் உட்பட, ஒரு நொடியில் சாவதில்லை, சிறுகக் சிறுக உயிரியக்கம் நின்று சிதைவியக்கம் தொடங்கி முன்னேறுகிறது. அச்சிதைவு இயக்கத்தால் ஏற்படும் நாற்றம் அல்லது வீச்சமே நாய்க் குடும்ப விலங்குகளுக்கு மோப்பத்தின் மூலம் புலப்படுகிறது. இவ்வாறு ஒரு விலங்கின் மரண வீச்சத்தை நாய்க் குடும்ப விலங்கு அறியும் போது தன் கூட்டத்தைச் சேர்ந்த பிற விலங்குகளை அழைப்பதற்காக ஊளையிடுகிறது. பொதுவாக காட்டில் நரி ஊளையிட்டால் அந்தப் பக்கம் செல்வதை நம் நாட்டுப்புற மக்கள் தவிர்ப்பார்கள்; ஏனென்றால் ஊளையிடும் நரியுடன் வேறு நரிகள் வந்து சேர்ந்து தாக்கக் கூடும் என்ற அச்சம் தான்.

இவ்வாறு முன்பு காட்டு விலங்காக இருந்த நாய் தான் வேட்டையாடித் திரிந்த காலத்தில் மரண வீச்சத்தை முகர்ந்து ஊளையிட்ட இன உணர்வில் இப்போதும் ஊளையிடுகிறது. செத்துக் கொண்டிருப்பது மனிதனா வேறு விலங்கா என்பதில் வேறுபாடில்லை; எனவே பல வேளைகளில் நாய் ஊளையிடும் போது அந்தப் பகுதியில் மனிதர் எவரும் சாகிறார்களா என்று பார்க்க முடியாது.

அதே நேரத்தில் இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். குமுதம் இதழில் ஒரு கதை வெளியாகியது. ஒரு தெருவில் ஒருவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்கிறார். ஓர் இரவில் நோய் மிகக் கடுமையை எய்துகிறது. அதே வேளையில் தெரு நாய் ஒன்று ஊளையிடத் தொடங்கி தொடர்ந்து ஊளையிடுகிறது. வீட்டிலுள்ளோர் பதறுகின்றனர். இவற்றை விளக்கிக் கொணடிருக்கும் கதையின் ஆசிரியர் திடீரென்று ஒரு சரக்குந்து ஏறி நாயே மாண்டு விட்டதாகக் கதையை முடிக்கிறார். நாயின் “நுண்ணுணர்வுக்கு” யாரோ சாவது தெரிந்தது போலவும் அது தானே என்பது தெரியாமல் அது ஊளையிட்டது போலவும் கதையை நடத்தி நாம் மேலே விளக்கியதற்கு மாறாக அந்த நம்பிக்கையின் மூடப்பக்கத்தை அவர் பற்றுகிறார்.

இன்னொரு நம்பிக்கை, காக்கை கரைந்தால் வீட்டுக்கு விருந்தினர் வருவர் என்பது. இது இன்று வெறும் மூடநம்பிக்கைதான்; அதுவும் குறிப்பாக நகரத்துக்கு. ஆனால் ஒரு காட்டு வழியை எடுத்துக் கொள்வோம். அது ஒரு குறிப்பிட்ட இடத்துக்குச் செல்வதாக இருந்து அவ்விடத்தில் ஒன்றிரண்டு வீடுகள் மட்டுமே இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவ்விடத்தை நோக்கி ஒரு சிறு கூட்டம் செல்வதாக வைத்துக் கொள்வோம். மனிதனையே அண்டி வாழ்ந்து அவனிடமிருந்தே பெரும்பாலும் தன் உணவைத் தேடிக் கொள்ளும் காக்கை தன் பட்டறிவால் இந்தச் சிறு கூட்டம் அந்தச் சிறு குடியிருப்பை நோக்கித்தான் செல்லுகிறது என்பதைப் புரிந்து கொள்ளும். இந்தக் கூட்டம் அங்கு சென்றவுடன் விருந்து நடைபெறும்; தனக்கு நிறைய எச்சில் கிடைக்கும் என்பதையும் அது புரிந்து கொள்கிறது. எனவே தன் இயல்புக்கேற்பத் தன் கூட்டத்தைக் கூப்பிடுவதற்காக அந்தச் சிறு குடியிருப்பை அடைந்து அங்கிருந்து அது கரைகிறது.[1] இப்போது நகரத்தில் யார் எங்கு செல்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாத சூழ்நிலையில் ஏதோ இரையைக் கண்டு ஒரு காகம் கரைந்தால் அதைக் கேட்டு நாம் விருந்தினர் வருவார்கள் என்று எதிர்பார்த்தால் அது மூட நம்பிக்கையாகிறது.

பூனை பற்றி நிலவும் ஒரு மூடநம்பிக்கையையும் ஆய்வோம். பூனை குறுக்கே ஓடுவது கெடுதி என்பது அந்த நம்பிக்கை. ஆனால் பூனையின் நடவடிக்கையைக் கூர்ந்து கவனிப்பவர்க்கு ஒன்று புரியும். பூனை மிகச் கூச்சமுடைய ஓர் உயிரி. எனவே அது தெருவோரங்களில் பதுங்கிப் பதுங்கித் தான் செல்லும். இன்றியமையாத போது தான் கண்ணிமைக்கும் நேரத்தில் குறுக்கே பாய்ந்து ஓடும்.

அதுபோல் காட்டிலுள்ள ஒரு கொடிவழியில் நாம் சென்று கொண்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்போது திடீரென்று ஒரு பூனை அவ்வழியைத் தாண்டி ஓடுகிறதென்று வைத்துக் கொள்வோம். இதற்கு இரு காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று ஏதோவோர் இரையைத் துரத்திக் கொண்டு அது ஓட வேண்டும். அல்லது ஒரு கொடு விலங்கு அதைத் துரத்திக் கொண்டு வர வேண்டும். இதில் எதற்காகப் பூனை ஓடுகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் சிறிது காத்திருக்க வேண்டும். எதுவும் பூனையைத் தொடர்ந்து வரவில்லையெனில் அது ஏதோ இரையைத் துரத்திச் செல்கிறதென்று தெரிந்து நாம் நம் செலவைத் தொடரலாம். அவ்வாறின்றி ஏதேனும் துரத்தி வந்தாலும் அது சென்ற பின் நாம் பாதையைத் தொடரலாம். இதன் தொடர்ச்சியாகத் தான் நகர்ப்புறங்களிலும் பூனை குறுக்கே ஓடினால் நம் மக்கள் நின்று தண்ணீர் குடித்து விட்டுச் செலவைத் தொடர்கிறார்கள்.

இதைப் போலவே காட்டில் வாழ்ந்த மனிதன் தன்னைச் சுற்றி வாழும் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் நடத்தையைக் கண்காணித்து தன்னைப் பாதுகாக்கத் தன் பட்டறிவால் சிலவற்றை அறிந்து வைத்திருந்தான். அவை அவன் முன்பு வாழ்ந்த காட்டுச் சூழல் மாறிய பின்னரும் நம்பிக்கைகளாக அவனைத் தொடர்ந்தன, அவையே மூடநம்பிக்கைகளாயின. கழக (சங்க) காலத்தில் அரசர்கள் படையெடுத்துச் செல்லும் போதுகூட புள் நிமித்தம் முதலிய நிமித்தங்களைப் பார்த்தது இத்தகைய மூடநம்பிக்கையின் விளைவே.

மூடநம்பிக்கைகளைப் பற்றிக் கூறும்போது மூடநம்பிக்கையை ஒழிக்கக் கிளம்பிய அல்லது தம்மிடமிருந்து ஒழித்து விட்டதாகக் கருதும் “பகுத்தறிவாளர்கள்” சிலரிடம் நிலவும் சில மூடநம்பிக்கைகளையும் தொட்டுப் பார்ப்பது சுவைதரும். எடுத்துக்காட்டாக, எந்த ஒரு மனிதனுடைய நடத்தையும் முற்றிலும் அவனுடைய சூழலினாலேயே முடிவு செய்யப்படுகிறது என்பது பகுத்தறிவாளர் சிலரது நம்பிக்கை. எல்லாக் குழந்தைகளும் ஒரே வகையான தூண்டுதலுக்கு ஒரே வகையான எதிர் வினையைத் தருவதில்லை என்பது குழந்தைகளைக் கூர்ந்து கவனிப்போர்க்குத் தெரியும். ஊர்ப்புறத்தில் ஒரு தெருவிலுள் புதிதாக ஒரு மகிழுந்து வந்தால் சில குழந்தைகள் அதைப் பார்த்து மலைத்து நின்று விடுகின்றன; வேறு சில குழந்தைகள் அதை நோக்கி ஓடி வருகின்றன. இன்னும் சில குழந்தைகள் அலறி அழுது கெண்டு ஓடுகின்றன. ஒவ்வொரு குழந்தையும் தன் முதாதையர்களிடமிருந்து பல உடலியல், உளவியல் இயல்புகளையும் கருவிலிருக்கும் போது தாயின் மனநிலை, உடல்நிலை ஆகியவற்றின் தாக்கங்களையும் கொண்டு பிறக்கின்றன. அந்த இயல்புகளோடு குழந்தை வளரும் சூழ்நிலையும் இடைவினைப்பட்டு புதியதொரு ஆட்பண்பு (Personality) உருவாகிறது. அதனால் தான் ஒவ்வொரு மனிதனும் ஒரு தனித்தன்மையுடையவனாக இருக்கிறான். ஒவ்வொரு ஆட்பண்பும் மரபு. தகவமைப்பு (Heridity and adoptation) என்ற எதிரிணைகளின் இயங்கியல் முரண்பாட்டின் விளைவேயாகும்.

பகுத்தறிவாளர்களில் சிலபேர் மனத்தின் எல்லையில்லா ஆற்றலில் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பற்றி முன்னோரிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது போலவே சிலவகை நோய் தீர்க்கும் முறைகள் பற்றியும் பகுத்தறிவாளர்கள் அவை அனைத்தும் வெறும் பொய்ப் புரட்டுகள் என்று ஒதுக்கி விடுவதும். பேயோட்டுதல் என்று ஒன்று நம் நாட்டில் நடைபெறுகிறது. இப்பேய் பிடித்தல் பெரும்பாலும் பெண்களுக்கே ஏற்படும் நோய். தன் மனக்கிடக்கையை, குறிப்பாகப் பாலுறவு தொடர்பானவற்றைக் குறிப்பிடும் உரிமையற்ற பெண்ணுக்கு ஏற்படும் மன அழுத்தங்களும் குமுகச் சூழலால் அவளை அறியாமலே அமுக்கி வைக்கப்படும் உணர்வுகளால் அவளை அறியாமலே அவள் உடல் நிலையிலும் நடத்தையிலும் ஏற்படும் தடுமாற்றங்களும் நம் நாட்டில் பேய் பிடிப்பதால் ஏற்படுவனவாகக் கருதப்படுகின்றன. இதைப் போக்கச் செய்யப்படும் மருத்துவம் பேயோட்டுதல் எனப்படுகிறது. இதில் உடுக்கை அல்லது வேறு வகை இசைக் கருவி இசைக்கப்பட்டு அவள் ஆட்டுவிக்கப்படுகிறாள். பேயோட்டியோடு சேர்ந்து ஆடுகிறாள். அடித்துத் துன்புறுத்தவும் படுகிறாள். இதன் மூலம் அவளது பாலியல் அழுத்தம் சிறிது தளர்கிறது. சில பெண்கள் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி விடுவதும் உண்டு. இது போன்ற பழக்கத்துக்கு அடிமையாவதை மசோக்கியம் (Masochism) என்பர்.

இதே போன்ற நடைமுறை நம் கழக இலக்கியங்களிலும் விளக்கப்படுகிறது. அதை வேலனாட்டம், முருகாட்டம், வேலன் வெறியாட்டம் என்று கூறுவர். தன் துன்பத்துக்குக் காரணம் தன் காதலனைக் கூடாமையே என்பதை உணர்ந்திருந்த பெண்கள், தன் துன்பத்தைப் போக்க வேலனாட்டத்துக்கு ஏற்பாடு செய்யும் தாயையும் வேலாட்டம் ஆட வருபவனையும் அவன் மீது ஏறி ஆட்டுவிப்பவனாகக் கருதும் வேலனாகிய முருகனையும் எள்ளி நகையாடும் காட்சிகளும் நம் அகத்துறை நூல்களில் உண்டு; சிலப்பதிகாரத்திலும் உண்டு.[2]

பேயோட்டுவது பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட நாளில் தான் நடைபெறுகிறது. அப்படி நடைபெறும் போது ஒரே நேரத்தில் பலர் சேர்ந்து ஆடுவர் அல்லது பண்டுவம் (சிகிச்சை) பெறுவர். இதில் இன்னொரு வகை செயல்முறையும் நிகழ்கிறது. குழுப் பண்டுவம் (Group therapy) என்று மேலைநாடுகளில் செய்யப்படும் உளவியல் பண்டுவம் தான் அது. உளவியல் மருத்துவரோ, மருத்துவமனைகளோ அருகிய நம் நாட்டில் தொன்றுதொட்டு தாம் அறியாமலே நம் மக்களால் கையாளப்பட்டு வரும் உளவியல் மருத்துவங்கள் தாம் அவை.

பேயோட்டுதல் எனும் இந்த காலத்துக்கொவ்வாத “பண்டுவம்” முடிவுக்கு வர வேண்டுமாயின், உளவியல் மருத்துவர்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றை வேண்டிய எண்ணிக்கையில் உருவாக்கி மக்களுக்கும் விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். இவ்வாறு நம் நாட்டு “மூட”நம்பிக்கைகள் ஒவ்வொன்றும் ஆராயப்பட வேண்டிவை. அடுத்து நாம் முன்பு கூறிய பணம் பற்றிய நம்பிக்கைக்கு வருவோம். பணம் சேர்த்து வைத்திருந்தால் நோய்நொடிகள், பிற துன்பங்கள் வரும். தீயோர் நட்பும், தீய ஒழுக்கங்களும் ஏற்படும். எனவே பணத்தைச் சேரச் சேரச் செலவழித்து விட வேண்டுமென்பது நாட்டுப்புற மக்களின் குறிப்பாக உழைக்கும் மக்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையின் தோற்றம் பற்றிச் சிறிது பார்ப்போம். குக்குல வாழ்வில் இருந்த மக்களிடையில் முதன் முதலில் பணம் புகுந்தபோது ஏற்பட்ட சீரழிவுகள் பெரிது. அச்சீரழிவுகளிலிருந்து குமுகத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பணத்தைச் சேர்த்து வைத்திருப்போர் அப்பணம் முழுவதையும் தம் வாழ்நாளிலேயே செலவழித்து விட வேண்டுமென்ற மரபு ஏற்பட்டது. இதனால் உலகில் பல குக்குல மக்களிடம் இன்றும் பணம் படைத்தோர் அதனை ஏதாவொரு சமய நிகழ்ச்சியில் முற்றிலும் செலவு செய்து வறுமை எய்துவது பெருமை என்ற நம்பிக்கை நிலவுகிறது. அந்நிகழ்முறை நம் நாட்டிலும் நடைபெற்றுள்ளது. புத்த சமண சமயங்கள் செல்வர்கள் பலரைத் தங்கள் செல்வமனைத்தையும் கொடை அளித்து விட்டு இரந்து உண்ண வைத்துள்ளன. உலகில் எங்கும் இல்லாத அளவு நம் நாட்டில் இரந்துண்பதையே பெருமையாகக் கருதும் சாதிகளின் எண்ணிக்கை மிகுதி. “பஞ்சத்தாண்டி பரம்பரை ஆண்டி” என்ற மரபு பற்றியும் நாமறிவோம். ஆனால் குக்குல வாழ்விலிருந்து முற்றிலும் விடுபடாத ஒரு குமுகத்தில் ஏற்பட்ட இந்த மரபு பெரும் நிலக்கிழார்களும், மடங்க கோயில்களும் மடத்தடிகளும் வாணிகர்களும் ஒட்டுண்ணிகளும் பெருகிவிட்ட பின்னரும் ஒட்டிக்கொண்டிருப்பது தான் பெரும் கேடு. ஏழைகளையும், உழைப்பாளிகளையும் என்றும் தம் நிலையில் உயர முடியாதவர்களாக, உயர எண்ணாதவர்களாக இந்த நம்பிக்கை ஆக்கிவிட்டது; தாம் சேர்த்ததோடு கடனும் எடுத்து சமய நிகழ்ச்சிகளையும் பயணங்களையும் மேற்கொள்ளும் அளவுக்குச் செய்துவிட்டது. அத்துடன் வருண, சாதி அடிப்படையில் இன்னின்ன உணவு தான் உண்ண வேண்டும், இன்னின்ன உடைகள் தாம் உடுத்த வேண்டும், இன்னின்ன வகை வீடுகள் தாம் கட்ட வேண்டும் என்று கீழ்ச்சாதி மக்களைக் கட்டுப்படுத்தியதும் இத்தகைய ஊதாரித்தனத்துக்குக் காரணமாகும். சமய நடவடிக்கைகள் மட்டுமின்றி குடித்தல், திரைப்படம், பரிசுச்சீட்டு என்று புதிய தீய பழக்கங்களும் தோன்றிவிட்டன.

இன்று அது போன்ற கட்டுப்பாடுகள் இல்லை. எனவே நிலைத்து விட்ட பழைய ஊதாரிப் பண்பாட்டை உடைக்க வேண்டும். உணவு, உடை, உறையுள் அகியவற்றில் தம் சேமிப்பைச் செலவு செய்யும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.

இப்பழக்கம் ஏற்படாமலிருக்க ஆட்சியாளரும் பொதுமைக் கட்சியினரும் கூட பெரும்பாடு படுகிறார்கள். இலவச வீட்டுமனை வழங்கல், இலவச வீடுகள் கட்டித் தருதல், குழந்தைகளுக்கு இலவச உணவு அளித்தல் என்று பிறர் கையை நாடித் தற்சார்பு இழந்து தன்மானம் இழக்கும் நிலையிலேயே அவர்களை அமிழ்த்தி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சாதி இழிவுகளிலிருந்து கீழ்ச்சாதி மக்கள் விடுபட வேண்டுமாயின் முதலில் இந்த இலவசங்களை அவர்கள் புறக்கணிக்க வேண்டும். தற்சார்பும் தன்மானமும் பெற வேண்டும். அவர்களின் நம்பிக்கையைப் பெற்று விட்ட இயக்கங்கள் தற்சார்பும் தன்மானமும் தான் சாதி இழிவுக்கு முடிவு கட்டும் என்ற உண்மையை உணர்த்த வேண்டும்.


அடிக்குறிப்புகள்:

[1] செல்லும் கூட்டம் குடியிருப்பிலுள்ளோருக்கு எதிரிகளையிருந்தால் சண்டை நடைபெறும்; அதனாலும் காக்கைக்குத் தீனி கிடைக்க கூடும்.

[2] சிலம்பு, குன்றக்குரவை, பாட்டு மடை 10 - 14 செய்யுள்கள், நாட்டடார் உரை

0 மறுமொழிகள்: