1.6.08

உலகத்தின் கூரையிலே விரிசல்

அண்மைக் காலத்தில் திபேத் மீண்டும் ஒரு முறை உலகத்தின் கவனத்தைத் தன்பால் ஈர்த்துள்ளது. 1959இல் தலை லாமா இந்தியாவுக்கு ஓடி வந்ததும் அவருக்கு இந்தியா அரசியல் அடைக்கலம் வழங்கியதும். ″இந்தி - சீனி பாய் பாய்″ என்று கட்டி அணைத்துக் கொண்டு இந்தியாவுக்கு நட்பு வருகை தந்த சீனத் தலைவர்கள் இந்தியா மீது சீனத்தின் ″மக்கள் விடுதலைப் படை″யை ஏவியதும், அதனால் இந்தியப் பொதுமைக் கட்சியில் ஒரு சாரார் சீனத்துக்குச் சார்பாகக் குரலெழுப்பியதும் அதனால் கட்சிக்குள் தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்ததும் இறுதியில் சீனச் சார்பாளர் பிரிந்து இந்திய மார்க்சியப் பொதுமைக் கட்சியை அமைத்ததும் போர் முடிவில் சீனம் இந்திய எல்லைக்குள் புகுந்து கணிசமான பரப்பைக் கைப்பற்றித் தன் வசம் கொண்டு சென்றதும் பழங்கதைகள்.

இந்தியாவைப் பொறுத்தவரை திபேத் ஒரு தனிநாடு, அதைக் கைப்பற்றியது இந்தியாவும் சீனமும் வகுத்துக் கொண்ட பஞ்ச சீலக் கொள்கைக்கு முரண்பட்டது என்பது நிலை. சீனமோ வரலாற்றில் திபேத் சீனத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. தலை லாமா சீனக் குடிமகன். எனவே எங்கள் நாட்டைச் சேர்ந்த ஓர் அரசியல் தலைவருக்கு இந்தியா அரசியல் அடைக்கலம் கொடுத்தது எங்கள் உள்நாட்டுச் சிக்கல்களில் தலையிடுவதாகும் என்று வாதிட்டது. தலை லாமா தொடர்ந்து இந்தியாவிலேயே தர்மசாலா என்ற இடத்தில் ஒரு நாடு கடந்த அரசை நடத்தி வருகிறார்.

இந்த நிகழ்வுகளில் உள்ள வரலாற்றுப் பின்னணியைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

உலகின் மனிதன் வாழும் பீட நிலங்களில் மிகுந்த உயரத்தில் உள்ளது திபேத். அதன் சராசரி எழுமம் 4900 மீற்றர்கள் - 16,000 அடி. எனவே அதனை உலகத்தின் கூரை என்று அழைக்கின்றனர். இதனை நடு ஆசியாவின் ஒரு பகுதி என்று சிலரும் தெற்காசியப் பகுதி என்று இன்னொரு சாரரும் கூறுகின்றனர்.

திபேத்தில் வழங்கும் ஒரு பழங்கதை, கடல் மேலெழும்பி வந்துகொண்டிருந்ததாகவும் அப்போது கடவுள் வங்கத்தில் உடைப்பை உண்டாக்கி நீரை வடியவிட்டதுடன் நாகரிகம் மிக்க மக்களை விட்டு குரங்கு மனித நிலையிலிருந்த தங்களுக்கு நாகரிகம் கற்பித்ததாகவும் கூறுகிறது. இது இந்திய நிலத்துண்டு தெற்கிலிருந்து ஆசியப் பகுதி நோக்கி வந்து அதனுடன் மோதி இமயமலையை உருவாக்கிய புவி இயங்கியல் நிகழ்வை நமக்கு நினைவூட்டுகிறது. இவர்கள் கூறும் கடல் டெத்தீசு கடல் என்று புவி இயங்கியலாளர்கள் குறிப்பிடும் கடலாகலாம். வங்காளத்தில் உடைப்பெடுத்துச் சென்ற இடமே இன்றைய கங்கைக் கழிமுகமாக உருவாகி இருக்க வேண்டும்.

இந்தப் புவி இயங்கியல் நிகழ்ச்சி நடந்தது ஏறக்குறைய 8.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்று இந்த ஆண்டு எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் நூல் கூறுகிறது.

இந்த நிகழ்வைத் திபேத்திய மக்கள் கண்டிருப்பதால் 8.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பே உலகில் நாகரிகம் உள்ள மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று கொள்ள முடியுமா?

திபேத்தியப் பழங்கதை பற்றிய செய்தி திரு.சு.கி. செயகரன் என்பார் எழுதியுள்ள குமரி நில நீட்சி என்ற நூலில் உள்ளது.
திபேத்தை கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து 11 ஆம் நூற்றாண்டு வரை அரசர்கள் ஆண்டுள்ளனர். சில வேளைகளில், அவர்களின் ஆட்சி தெற்கே வங்காளத்திலிருந்து வடக்கே மங்கோலியா வரை பரந்திருக்கிறது. இப்பகுதிகளில் வலிமையான அரசர்கள் இன்றி வெறும் குறுநில மன்னர்கள் ஆண்ட காலங்களில் இவை நிகழ்ந்திருக்கலாம். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டிலும் பேரரசுகள் உருவாவதும் அவை அழிந்து குறுநில மன்னர்களும் படைமானியத் தலைவர்களும் செல்வாக்குப் பெறுவதும் மாறி மாறி நிகழ்ந்துள்ளதைக் காண முடியும்.

இதற்குத் தலைமாறாக, சீனத்தில் வலிமையான அரசுகள் உருவான போது திபேத் அவர்களுக்கு அடங்கிய பகுதியாக மாறியதும் உண்டு. இவ்வாறு சீனத்தினுள் ஏற்பட்ட அரசியல் சூறாவளிகளில் திபேத்தும் அலைக்கழிந்து வந்தது. சீனத்திலும் திபேத்திலும் வரலாற்றுக் காலத்தில் புத்த சமயத்தில் பிளவுகளும் பூசல்களும் தொடர்ந்து இடம் பெற்றன. அவற்றின் விளைவுகள் திபேத் அரசியலிலும் ஏற்பட்டன.

16 ஆம் நூற்றாண்டின் மங்கோலியர்களின் ஆட்சிக் காலத்தில் ஒரு புத்த சமயப் பிரிவின் தலைமைக் குருவான லாமா சானம் கியாட்சோ என்பவனை மங்கோலியனான அல்டான் கான் என்பவன் வரவழைத்து அவனுக்கு தலை லாமா என்ற பட்டத்தை வழங்கினான். இவன் தலை லாமாக்களில் மூன்றாமவனாவான். தலை லாமா என்பவர் புத்தர்களில் ஒருவரான அவலோகிதேசுவரரின்[1] தோற்றரவாக(அவதாரமாக)க் கருதப்படுகிறவர். அவரை சமயத் தலைவராகவும் ஆட்சித் தலைவராகவும் சீன அரசு பயன்படுத்தியது.

1903 இல் பிரிட்டனின் படைத் தலைவன் எங்கசுப்பண்டு என்பவன் ஒரு படையுடன் வந்து திபேத்தியப் படைத் தலைவனுக்கு ஒரு பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி ஏறக்குறைய 1300 திபேத்திய வீரர்களைக் கொன்று குவித்தான். கி.மு. நான்காம் நூற்றாண்டில் அலெக்சாந்தர் இந்தியாவிலும் பின்னர் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பியர்கள் உலக முழுவதும நடத்திய அதே காட்டு விலங்காண்டித்தனத்தைத் திபேத்திலும் செய்தனர். திபேத்தியர்களோடு ஒரு தரப்பான ஓர் ஒப்பந்தத்தை ஆங்கிலரே வகுத்துக் கொண்டனர். திபேத் மக்கள் வாழ்ந்த பகுதிகளை இந்தியாவுக்குள்ளும் இருக்குமாறு மக்மோகன் எல்லைக் கோட்டை வகுத்துக் கொண்டனர். ஏற்கெனவே திபேத் மக்கள் தலை லாமாவின் கட்டுப்பாட்டிலிருந்த லாசாவைத் தலை நகராகக் கொண்டிருந்த பகுதிகள் நீங்கலாக சீனாவின் வேறு சில மாகாணங்களிலும் பிரிந்து கிடக்கின்றனர்.

உலகில் பெரும்பாலான மொழித் தேசியங்களும் ஆட்சியாளர்களின் கொள்ளைப் போர் வெறியினால் இவ்வாறு சிதைந்து கிடக்கின்றன. ஐரோப்பாவில் செருமானியர்கள் 19ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில்தான் ஒரே அரசின் கீழ்வர முடிந்தது. ஆனால் அந்த ஒருங்கிணைவுக்கு அவர்களின் தலைவர்கள் கையாண்ட உத்திகளின் விளைவாக அவர்கள் இரு உலகப் போர்களை உருவாக்க வேண்டியிருந்தது.

இப்படிப்பட்ட சூழலில் மா சே துங் தலைமையில் நடைபெற்ற சீனப் புரட்சிக்குப் பின் 1951 இல் சீன மக்கள் விடுதலைப் படை திபேத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதற்கு தலை லாமா எந்தத் தடையும் சொல்லவில்லை. உள்ளூர் மேற்குடியினர் வரவேற்றனர். இது தலை லாமாவுக்கும் அவர்களுக்கும் இருந்த முரண்பாடுகளின் விளைவு. திபேத் அரசுக்கும் சீன நடுவரசுக்கும் உள்ள உடன்பாட்டின்படி தலை லாமாவின் கட்டுப்பாட்டில் இருந்த, லாசாவைத் தலைநகராகக் கொண்ட நிலப்பகுதிக்குப் பெருமளவு தன்னாட்சி இருக்கும் என்று வரையறுக்கப்பட்டது.

1956இல் சீன அரசு மேற்குடியினரிடத்திலும் புத்த மடங்களிலும் இருந்த நிலங்களைப் பிடுங்கி அவற்றில் வாரத்துக்குப் பயிரிட்ட உழவர்களுக்குப் பகிர்ந்தளித்தது. அதற்கு எதிர்ப்பு முதலில் திபேத்துக்கு வெளியிலிருந்த திபேத்திய மேற்குடியினரிடத்திலிருந்தும் மடங்களிலுமிருந்தும் தொடங்கி லாசாவுக்குப் பரவியது. அதற்குப் பின்புலமாக அமெரிக்க நடுவண் உளவு நிறுவனம் (சி.ஐ.ஏ.) செயல்பட்டது. அந்த எதிர்ப்புகளை 1959இல் சீன அரசு கடுமையாக ஒடுக்கியது. பல்லாயிரக்கணக்கான திபேத்தியர்கள் கொலைப்பட்டனர். தலை லாமா இந்தியாவுக்கு ஓடி வந்தார். திபேத்திலும் சீனாவிலும் உள்ள திபேத்தியர்கள் சீன அரசை எதிர்த்து நடத்திய வன்முறை போராட்டங்கள் இடைமுறிந்து போகாமல் உதவி வந்த ந.உ. நி. 1972இல் அதைத் திடீரென்று நிறுத்தியது. அதற்குக் காரணம் வாட்டர் கேட் ஊழல் புகழ் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் நிக்சன் சீனத் தலைவர் மா சே துங்குடன் உடன்பாடு கொண்டதுதான்.

இருப்பினும் ஒவ்வோர் ஆண்டும் திபேத்தியர்கள் தோல்வியடைந்த தங்கள் 1959 போராட்டத்தின் நினைவு நாளைத் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு மார்ச்சு 10 அன்று திபேத்தில் புத்தத் துறவிகள் பட்டினிப் போராட்டங்கள், தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டனர். சீனப் படை மடங்களைச் சூழ்ந்து கொண்டு போராட்டங்களை ஒடுக்கியது.

இது தலை நகர் லாசாவிலும் வன்முறை எதிர்ப்புகளை உருவாக்கியது. சந்தைகள் கொளுத்தப்பட்டன. அரசு அலுவலகங்களும் தீயணைப்பு ஊர்திகளும் அழிக்கப்பட்டன, மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டன. சீனர்களின் கடைகளும் ஊர்திகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. வன்முறையில் 100 பேருக்கு மேல் இறந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கூறுகின்றன.

திபேத்துக்கு முழு விடுதலை வேண்டுமென்ற வேண்டுகைக்குத் தலைமை தாங்குபவராகத் தோற்றமளித்த தலை லாமா 2005 இல், அவ்வேண்டுகையைக் கைவிட்டால், பேசுவதற்கு ஆயத்தமாக இருப்பதாக சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவோ அழைத்தபோது தாங்கள் சீனத்தின் ஒரு பகுதியாக இருக்க ஆயத்தமாக இருப்பதாகவும், ஆனால் தங்கள் பண்பாடு, சமயம் ஆகியவற்றில் தங்களுக்கு முழுத் தன்னாட்சி வேண்டுமென்றும் சொன்னார். தமிழகத்தில் சென்ற நூற்றாண்டில் நிகழ்ந்தவற்றை இது நமக்கு நினைவூட்டுகிறது.

2007 சனவரியில் ஒரு தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் திபேத்தியர்கள் பண்டை வரலாற்று நினைவிலேயே மூழ்கி இருக்காமல் திபேத் சீனத்தின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

இன்றும் அதையே சொல்லி வருகிறார். ஆனால் நாடுகடந்த அரசில் அவரோடு இடம் பெறும் பெரும்பாலான பிறரும் குறிப்பாக இளைஞர்களும் திபேத்திலும் (இதனை திபேத்திய தன்னாட்சிப் பகுதி என்று குறிப்பிடுவர்) சீனத்தினுள்ளும் வாழும் திபேத்தியர்களும் இதை ஏற்கவில்லை. அதாவது இப்போது முரண்பாடுகளில் தலை லாமாவுக்கும் திபேத்தியர்களுக்கும் இடையிலான முரண்பாடு முகாமை பெற்று வருகிறது.

அமெரிக்கா, தலை லாமாவின் மனப்போக்கை மாற்றுவதில் மிகுந்த பங்காற்றியிருக்க வேண்டும். அதனால்தான் அண்மையில் அவரை அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு வரவழைத்து மதிப்புச் செய்துள்ளது. 2008 மார்ச்சு 14க்குப் பிறகு பேசிய தலை லாமா திபேத்தியர்கள் வன்முறைப் போராட்டங்களைக் கைவிடவில்லையானால் தான் தன் பதவியிலிருந்து விலகி ஒரு சராசரிக் குடிமகனாகத் திபேத்தில் வாழ்வேன் என்று திபேத்தியர்களைப் பார்த்து மிரட்டியதிலிருந்து நமக்கு இந்த உண்மைகளெல்லாம் வெளிப்படுகின்றன..

இப்போது அமெரிக்கா – தலை லாமா கூட்டணியில் வெளித்தோன்றாத கூட்டாக சீனமும் இணைந்து செயல்படுகிறது. இந்தக் கூட்டணியின் நோக்கம் திபேத்தியர்களிடையில் தலை லாமாவின் பக்கம் சாயத்தக்க ஒரு குழுவை உருவாக்கி திபேத்திய மக்களுக்கு இரண்டகம் செய்வதற்குத் தலை லாமாவுக்கு உதவ வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் தலை லாமா முழு விடுதலை கேட்கவில்லை என்று சொன்னாலும் அவர் உள்ளத்தில் அந்த நோக்கம் மறைந்துள்ளது என்று சீனம் குற்றம் சாட்டி வருகிறது. தலை லாமா திபேத்திய மக்களுக்கு நாணயமாகப் பாடுபடும் ஒரு தலைவர் என்ற ஒரு பொய்ப் படிமத்தை திபேத்திய மக்களிடையில் உருவாக்கி அவரது முழுத் தன்னாட்சிச் சரக்கைச் சந்தைப்படுத்தப் பார்க்கிறது சீனம். அப்படியானால் தலை லாமாவின் மிரட்டலைப் பொருட்படுத்தாத அளவுக்கு அவரை மிஞ்சிய விசைகள் திபேத்தியர்களிடையில் உருவாகிவிட்டன என்று தோன்றுகிறது.

சென்ற நூற்றாண்டிலிருந்து நம் நினைவுக்கு உட்பட்ட காலத்துக்குள்ளேயே இது போன்ற இரண்டகங்கள் தொடர்ச்சியாக நடந்துள்ளன. அவற்றைத் தொடங்கிவைத்தவர் காந்தி. தமிழ்நாட்டில் வ.உ.சி. இந்தியத் தேசிய விடுதலை விரும்பிகளின் முழு ஒத்துழைப்புடன் வெள்ளையர்களுக்கு எதிராக்க் கப்பலோட்டி அவர்களது சட்டத்துக்கு உட்பட்ட அனைத்து முயற்சிகளையும் முறியடித்து வென்று நின்றதால் தங்களுடைய வல்லரசின் அடித்தளமான பொருளியல் சுரண்டலுக்கு வந்த இந்த அறைகூவலை எதிர்கொள்ள தென்னமெரிக்காவிலிருந்த காந்திக்கு கெய்சர் - இ - இந்த் (Kaisar - I – Hind, இந்தியாவின் பேரரசர் – 1876 முதல் 1947 வரை பிரிட்டிஷ் பேரரசருக்குரிய ஒரு விருது பார்க்க Chambers Twentyeth Century Dictionary-1972) என்ற பட்டத்தை வழங்கிக் கொண்டு வந்து இறக்கி, அவரது ஒப்பற்ற திறமையைப் பயன்படுத்தி அன்றைய முனைப்பியத் தலைர்வகள் ஒவ்வொருவரையும் அவரவர்க்குரிய வெவ்வேறு உத்திகளில் அகற்றியது ஆங்கிலப் பேரரசு.

தென்னாப்பிரிக்க நிறவெறி அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டம் உருசியாவின் உதவியுடன் வலிமை பெற்று வருவதைக் கண்டு 25 ஆண்டுக் காலம் சிறையில் இருந்த நெல்சன் மண்டேலாவுடன் பேசி அவரை வெளியில் கொண்டு வந்து ஆட்சியில் அமர்த்தி அங்கு தனக்குள்ள பொருளியல் நலன்களைக் காத்துக் கொண்டது அமெரிக்கா.

சிம்பாபுவே, பாலத்தீனம் என்று எத்தனையோ நிகழ்வுகள், அவற்றின் தொடர்ச்சியில் ஒன்றுதான் திபேத்தில் இப்போது நடைபெறுகிறது. அமெரிக்காவின் இந்த உத்தியின் சிறு சிறு திவலைகள்தாம் நம் நாட்டில் மரண தண்டனை பெற்றுச் சிறையிலிருந்த அதிமுனைப்பியர்களிடம் பேசி இணக்கம் கண்டு வெளியில் கொன்டுவந்து ஆட்சியாளர்களின் உதவியோடு அவர்களைத் தமிழ்த் தேசியம் பேச வைத்து ஏமாற்றும் ″மனித உரிமைத்″ ″தொண்டு″ செய்யும் பெரிய மனிதர்களின் நடவடிக்கைகள் என்பதை இங்கு இடைக்குறிப்பாகக் குறித்துக் கொள்கிறோம்.

அமெரிக்காவின் இது போன்ற திருவிளையாடல்கள் ஊடுருவ முடியாத ஒரு பாசறையாக ஈழ விடுதலைப் போராட்டம் இருக்கிறதென்று தோன்றுகிறது.

மொழியை அடையாளமாகக் கொண்டு தொடர்ச்சியுள்ள நிலப்பரப்புகளில் வாழும் தேசிய மக்களின் எழுச்சிகள் 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வெளிப்படத் தொடங்கின. முதலாளி – பாட்டாளி முரண்பாடுதான் ஒரே முரண்பாடு என்று கருதிக் கொண்டிருந்த மார்க்சும் ஏங்கெல்சும் பாட்டாளிகளுக்கு நில எல்லைகள் கிடையாது என்றுதான் நினைத்தனர். ஆனால் ஐரிசு மக்கள் விடுதலை வேண்டி போராட்டங்கள் நடத்திய போது இங்கிலாந்தினுள் ஐரிசுத் தொழிலாளர்களை ஆங்கிலத் தொழிலாளர்கள் தாக்கியதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆங்கிலத் தொழிலாளர்கள் ஐரிசுத் தொழிலாளர்களோடு இணைந்து நின்று ஐரிசு விடுதலைக்குப் போராடினால்தான் இரு தேசியத் தொழிலாளர்களும் விடுதலை பெறுவார்கள் என்றெல்லாம் சொல்லிப் பார்ததனர். எதுவும் நடைபெறவில்லை.

உருசியப் புரட்சியில் முதன்மையான பங்கேற்றவர்கள் மாருசியர்களால் சுரண்டப்பட்டுவந்த உருசியப் பேரரசின் பிற தேசிய மக்கள்தாம். அவர்களுக்குப் பிரிந்து செல்லும் உரிமையுள்ள தன்தீர்மானிப்புரிமை வழங்கப்படும் என்று லெனின் அளித்த உறுதி மொழியை நம்பித்தான் தங்கள் இன்னுயிர்களை ஈந்து அவர்கள் புரட்சியை வெற்றிபெற வைத்தனர். லெனின் தன் வாக்குறுதிக்கு நாணயமாக நடந்துகொள்ள முயன்றாலும் அவர் படுக்கையில் இருந்த போதே தேசிய ஒடுக்கல் முனைப்படைந்துவிட்டது. அதன் விளைவாக அவர் உருவாக்கிய ஒன்றிணைந்த சோவியத் உருசியா முக்கால் நூற்றாண்டு கூட நிலைக்க முடியவில்லை.

ஐரிசுப் புரட்சிக்கு முன் பல்வேறு நாடுகளுக்குள் சிதறிக் கிடந்த சிலாவிய மக்கள் தாங்கள் வாழ்ந்திருந்த நிலப் பரப்புகள் ஒருங்கிணைந்த தேசமாக விடுதலை பெற வேண்டுமென்று போராடிக்கொண்டிருந்தனர். அவர்களை வரலாற்றிலிருந்து மறைந்துவிட்ட தேசியங்கள் என்று மார்க்சும் ஏங்கல்சும் அப்போது புறக்கணித்தனர். ஆனால் அத்தேசியங்களின் விடுதலைப் போர்களின் ஒரு பக்க விளைவாகவே முதல் உலகப் போர் தொடங்கியது. இரண்டாம் உலகப் போர் முடிந்த கையோடு தேசிய அரசியல் எல்லைகளைப் பெற்ற அவை சோவியத் உருசியா உடைந்ததும் அதன் மேலாளுமையிலிருந்தும் விடுபட முடிந்திருக்கிறது. ஆனால் பொருளியல் மேலாளுமையிலிருந்து விடுபட வேண்டியிருக்கிறது. ஆனால் செக்கோசுலொவேக்கியாவைத் துண்டு துண்டாக உடைத்து கொசவோவாவைத் தன் படைத்தளமாக்கிக் கொண்டுள்ளது அமெரிக்கா.

செர்பியர்கள் வாழ்ந்த பகுதிகளை இணைத்து ஒரு நாடாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்பட்ட முனைப்பியர்கள் அங்கு வந்த ஆத்திரிய இளவரசனைக் கொன்றதிலிருந்து முதல் உலகப் போர் தொடங்கியது. அப்போர் 1919 இல் முடிவுற்ற போது 27 ஆக இருந்த ஐரோப்பிய நாடுகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது. இரண்டாம் உலகப் போர் முடிந்த போதும் பல புதிய நாடுகள் உருவாயின. ஐரோப்பிய நாடுகளிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகள் ஒவ்வொன்றாக அரசியல் விடுதலை பெற்றன. ஆனால் இந்த முன்னாள் அடிமை நாடுகளுக்குள் முந்திய காலங்களில் அரசர்கள் நடத்திய இடைவிடா கொள்ளைப் போர்களால் பிய்த்தெறியப்பட்ட எண்ணற்ற தேசியங்கள் சிக்கிக் கிடக்கின்றன. முன்னாள் வல்லரசுகள் தம்மோடு இணக்கம் கண்டவர்களின் கைகளில் அந்நாடுகளை ஒப்படைத்து வெளியேறிய போது தங்களின் பிரித்தாளும் உத்தியைத் தொடரும் நோக்கத்துடன் அவற்றை அப்படியே வைத்துச் சென்றனர். அவ்வாறுதான் தனித்தனியாக ஆங்கிலரின் கட்டுப்பாட்டினுள் இருந்த சிற்றரசுகளை புதிதாக உருவான இந்திய அரசு படை கொண்டு தன்னுடன் இணைத்துக்கொண்டது. அந்தத் தேசியங்கள் இந்தியாவில் நடத்திய போராட்டங்களின் பயனாக மொழிவழி மாநிலங்கள் என்ற ஓர் இடைநிலை மாற்றம் அரைகுறையாக நிகழ்ந்துள்ளது. அத்தகைய ஒரு கட்டத்தில் இன்றைய திபேத் உள்ளது. தலை லாமா – அமெரிக்கா – வென் சியா போ முக்கோணக் கூட்டணியின் திட்டப்படி ஒரு பண்பாட்டுத் தன்னாட்சி, அதாவது மடங்களுக்குப் பழைய சொத்துகளைத் திருப்பித் தருதல் முதலானவை ஏற்றுக்கொள்ளப்பட்டால் முழுமையான விடுதலைக்கான போராட்டம் விலக்கிக் கொள்ளப்படும் என்பது தலை லாமாவின் வாக்குறுதி. அப்படி நடந்தால் மதத்தலைமை சாராத அல்லது தலை லாமாவுக்குப் போட்டியான புத்த சமய விசைகள் முழு விடுதலைக்கான போராட்டத்தைத் தொடர்வர். அது மூன்றாம் உலக நாடுகளுக்குள் அடிமைப்பட்டுக் கிடக்கும் நான்காம் உலக[2] மக்களின் விடுதலைக்கான உலகம் தழுவிய போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும். இவற்றை ஒருங்கிணைந்து ஒடுக்குவதற்காக இதே போன்ற 19 ஆம் நூற்றாண்டு ஐரோப்பியச் சூழலில் ஆத்திரேலியத் தலைமை அமைச்சர் மெட்டர்னிக் உருவாக்கிய மேற்கு பேலியாத் திட்டம் உதவாதது போலவே இரைசீவ் காந்தி உருவாக்கிய தெற்காசிய நாடுகளின் மண்டல ஒத்துழைப்புப் பேரவையும்(சார்க்) எதையும் செய்ய முடியவில்லை, வாணிகச் சுரண்டல் ஒத்துழைப்பைத் தவிர.

சீன – அமெரிக்க உறவு ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இருவரும் ஒருவரை மற்றவர் நம்பவில்லை. சீனத்தைச் சுற்றியுள்ள நாடுகளில் அமெரிக்கா ஊடுருவி வருகிறது. நிக்சன் தொடங்கிவைத்து 700 வானூர்திகளில் வந்திறங்கிய பில் கிளின்றன் காலம் வரை வலுப்பெற்ற இந்த உறவில் சீனப் பொருளியல் எந்த அளவுக்கு அமெரிக்காவின் பிடிக்குள் இருக்கிறது என்று தெரியவில்லை. அமெரிக்க டாலரோடு ஒப்பிட இந்திய உரூபாயின் மதிப்பு உயர்ந்திருக்கும் அதே வேளையில் விலைவாசி ஏற்றம் காரணமாக உரூபாயின் உள்நாட்டு மதிப்பு வீழ்ந்துள்ளது என்ன பொருளியல் விந்தையோ தெரியவில்லை.[3] அதே நேரத்தில் சீனச் சரக்குகள் கொள்ளை மலிவாக இங்கு குவிகின்றன. இந்தியா - அமெரிக்கா, அமெரிக்கா – சீனம், சீனம் – இந்தியா என்ற முக்கோண பணமதிப்பு விகிதங்களில் ஏதோ சித்துவேலை நடக்கலாம் என்று தோன்றுகிறது.

அமெரிக்கா, இந்தியா, சீனம், உருசியா ஆகியவற்றுக்கு இடையிலுள்ள உறவுகளில் பெரும் ஊசலாட்டங்கள் நிலவுகின்றன. அமெரிக்காவோடு கள்ள உறவு வைத்து உருசியாவின் அணுக்குண்டுகளை அழித்த எல்த்சினின் அழிம்பிலிருந்து உருசியா மீண்டு வருவதாகத் தெரிகிறது. ஐரோப்பாவில் உருசியாவைக் குறிவைத்து அமெரிக்கா புதிதாகத் தளம் அமைத்தால் உருசியா தாக்கும் என்ற புதினின் அறிவிப்பை ஒரு சுட்டியாகக் கொள்ளலாம்.
இந்திய – அமெரிக்க அணு ஆற்றல் உடன்பாட்டைப் பொதுமைக் கட்சியினர், குறிப்பாக சீனச் சார்பான மார்க்சியக் கட்சியினர் கடுமையாக எதிர்ப்பது சீன அரசின் அறிவுரையின் பேரிலாகலாம். அத்துடன் தன்னால் பதவியைப் பிடிக்க முடிந்த கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா தவிர வேறெங்கும் கட்சியை வளர்ப்பதில் ஆர்வம் காட்டாமல் மகமை தண்டுவதிலும் கூட்டணி பகரம் பேசுவதிலும் காலங்கழித்தவர்கள் திடீரென்று ஊரூருக்கும் கட்சி மாநாடுகள் நடத்தத் தொடங்கியிருப்பது, பாராளுமன்றத்தில் கூடுதல் இடங்களைப் பிடித்து சீனத்துக்குச் சார்பான இந்திய நிலையை உருவாக்கவா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இவர்களால் மக்களின் உண்மையான சிக்கல்களைத் தடம் பிடித்து அவர்களின் ஏற்பைப் பெற முடியுமா என்பது ஐயமே.

தேசிய விடுதலைப் போர் ஒரு மக்களிடையில் உருவானால் அவர்கள் முதலாளியத்தினுள் நுழையத் தொடங்கியுள்ளனர் என்பது அதன் பொருள். ஆனால் அதைப் புரிந்துகொள்ளாமல் அல்லது கூலி பெற்றுக் கொண்டு திசைதிருப்புவதற்காகவே பொருளியல் உரிமைகளுக்கான முழக்கங்களை முன்வைக்காமல் அந்தத் தேசியத்திலுள்ள படித்த ஒட்டுண்ணிக் கூட்டம் அதை மொழி, பண்பாட்டு, சமய விடுதலைப் போராட்டமாகத் திரிக்கின்றனர். இவர்களது இரண்டகத்தைப் பயன்படுத்தி ″புரட்சிகர″த் தனிமங்கள் அதை பாட்டாளியப் புரட்சியாக்கிச் சிதைக்கின்றனர்.

இத்தகைய சிக்கலான சூழ்நிலையில் இன்றைய வல்லரசுகளுக்குள் எதிர்பாராத ஒரு பெரும் மோதல் வெடித்து, அனைவரிடமும் அணுகுண்டு இருந்தால் அது வெறும் அட்டைப் புலிதான் என்ற மா சே துங்கின் புகழ் பெற்ற கூற்று பலித்து உலகம் பிழைத்திருந்தால் நான்காம் உலக நாடுகளுக்கு அரசியல் விடுதலை கிடைக்கலாம். ஆனால் பொருளியல் உரிமையை முன்னெடுத்துப் போராடினால் அந்த விடுதலை எளிதாகலாம். அதுவரை இந்த மக்களின் போராட்டம் தொடரும். இன்று திபேத்தில் போன்று விடுதலை வேண்டிப் போராடி உலகத்தின் கவனத்தை அவ்வப்போது கவரும் நிகழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் நமக்கு இதை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.


(இக்கட்டுரை தமிழினி ஏப்பிரல்-2008 இதழில் வெளிவந்துள்ளது.)

அடிக்குறிப்புகள்:

[1] அவலோக முனிவர் என்ற சொல்லில் அபிதான சிந்தாமணி ″இவர் சைனர். அகத்தியருக்குத் தமிழாசிரியர் என்பர். இவர் இருக்கை பொதிகையில் என்பர். இவரை அவலோகிதர் என்றும் கூறுவர்″ என்று குறிப்பிடுகிறது.

[2] இந்த நான்குலகக் கோட்பாட்டை நானறிய முதன்முதலில் முன்வைத்தவர் நண்பர் வெங்காளூர் குணா. இன்று அவர் அந்தக் களத்தையே விட்டு விலகி முழு சாதி வெறி சார்ந்த ஆய்வுகளுக்குள் முழுகிப் போனார்.

[3] உரூபாயின் மதிப்பு குறைந்திருக்கும் போது டாலர்களைக் கொண்டுவந்து கூடும் போது எடுத்துச் செல்கின்றனர் அமெரிக்கர்கள் என்று கூறுகிறார் எம் நண்பர் திரு.மோகன்தாசு. ஒருவேளை பச்சை அட்டை வைத்திருக்கும் ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்கள் ஏம வங்கியின் ஒத்துழைப்புடன் இதைச் செய்யலாமல்லவா?
அது போலவே சுற்றுலா வரும் அமெரிக்கர்கள் பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்திருக்கும் சூன்-சூலை மாதங்களில் டாலரைப் பெருமளவில் முதலிட்டு பங்குகளை வாங்கி திரும்ப திசம்பர் மாதத்துக்குப் பின் விலை ஏறும் போது விற்றுக் காசு பார்த்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள் என்று இன்னொரு நண்பர் கூறுகிறார். அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க பண அமைச்சர் சிதம்பரம் முற்பட்ட போது அயல்நாட்டு முதலீட்டாளர்கள் கடும் எதிர்ப்பு காட்டியதால் முயற்சியைக் கைவிட்டாராம். நமது ஐயம், நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னது எதையோ எதிர்பார்த்த மிரட்டலா அல்லது எதிர்ப்பைக் காட்டியவர்கள் பச்சை அட்டைக்காரர்களா என்பதுதான்.

0 மறுமொழிகள்: