2.6.08

தமிழினி 2008 மார்ச்சு மாத இதழ் ஒரு பார்வை

நாகர்கோயில்,
11.04.2008.

அன்புள்ள தமிழினி வசந்தகுமார் அவர்களுக்கு வணக்கம்.

2008 மார்ச்சு மாத தமிழினி பற்றிய கருத்தைத் தாங்கள் கேட்டிருந்தீர்கள். அம்மாதம் முழுவதும் இருந்த பணிச்சுமைகளால் அது இயலவில்லை. இப்போது அதை நிறைவேற்றுவதில் தவறில்லை என்று கருதுகிறேன்.

திரு. கரு. ஆறுமுகத்தமிழன் அவர்கள் நம் பெரும்பான்மை தமிழார்வலர்களைப் போல் மொழியை ஒரு தனித்த பொருளாகவே பார்க்கின்றார். மொழி என்பது மக்களின் வாழ்வோடு இணைந்ததாக, அவர்களை வாழவைப்பதாக இருக்க வேண்டும். கல்வியும் அவ்வாறே இருக்க வேண்டும். அப்போதுதான் மொழி மீதும் கல்வி மீதும் மக்களுக்கு இயல்பான ஆர்வம் ஏற்படும். கல்வி என்பதே சராசரி குடிமக்களை விட, மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றும் எண்ணிறந்த துறைகளில் பணியாற்றும் மக்களைவிட, அம்மக்களிலிருந்து மேம்பட்டு அவர்கள் மீது அதிகாரம் செலுத்துவோராகத் தங்களை வளர்த்துக் கொள்ளும் வழி என்ற நிலையில்தான் பிற மொழிகளின் நுழைவு தொடங்குகிறது. நாமறிந்த வரலாற்றில் நேற்று சமற்கிருதம், இன்று ஆங்கிலம், நாளை இந்தி என்று சராசரி மனிதனுக்குப் புரியாத ஒரு மொழி ஆட்சியிலும் ஆலயத்திலும் இவ்வாறுதான் பயன்பட்டிருக்கிறது. பயன்பட இருக்கிறது. இரண்டு மூன்று நூற்றாண்டுகள் முந்திய ஐரோப்பாவிலும் கிரேக்கமும் இலத்தீனமும் இவ்வாறுதான் பயன்பட்டன. வளர்ச்சியடைந்த முதலாளியமும் அதன் விளைவான மக்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வும் அம்மொழிகளை ஆய்வுக் கூடங்களுக்குள் அடைத்துவிட்டன.

நம் நாட்டின் வளர்ச்சி தடுக்கப்பட்டிருக்கிறது. கல்வி அரசதிகாரம் பெறுவதை மட்டும் நோக்கமாக கொண்டுள்ளது. அந்தத் தேவையை ஈடு செய்ய முடியாதவனைப் பார்த்து ஆசிரியக் கூட்டம் கூச்சலிடுகிறது, நீ மாடு மேய்க்கத்தான் போவாய் என்று. அந்த இந்த ஆசிரியக் கூட்டத்தை அடித்துத் துரத்திவிட்டு மாடு மேய்ப்பதை, சிரைப்பதை, வெளுப்பதை என்று பள்ளிக் கூடங்களில் சொல்லித் தருகிறோமோ அன்று தமிழும் வாழும் தமிழகமும் வாழும் தமிழனும் வாழ்வான்.

அதைப் போலவே நமது பொருளியல் அனைத்தும் மேலை நாடுகளை, குறிப்பாக ஆங்கிலம் பேசும் நாடுகளை முற்றிலும் சார்ந்து நிற்பதால் அவர்களுடைய பண்பாட்டுக் கூறுகள் நம்மவற்றை அழிக்கின்றன. நம் அறிவு″சீவிகள்″ அன்று பிரிட்டன் அடுத்து உருசியா அதற்கடுத்து சப்பான் இன்று அமெரிக்க மக்களின் பண்பாட்டு உயர்வுகளை வானளாவப் புகழ்ந்து வந்திருப்பதும் வருவதும் இதனால்தான். நம் பொருளியல் வளவாழ்வு என்று நம் சொந்த மண்ணின் மீது வேரூன்றி நிற்கிறதோ அன்றுதான் நம் மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் தம் தேசியத் தன்மைகளைப் பேண முடியும் என்பது எனது கருத்து.

கோசொவா அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட ஒரு ″விடுதலை″ பெற்ற நாடு என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார் அகில்.

உள்ளூர் முனைவுகளை பாட்டாளியம் பேசி நசுக்கிவிட்டு அயலாரை அமர்த்துவதற்காக மண்ணின் மக்களைக் கூசாமல் கொலை செய்த கட்சிக்கும் அவர்களின் ஆட்சிக்கும் மனச்சாட்சி இல்லாமலிருக்கலாம். நம் ஊர் தோழர்களாவது பழைய தவறை உணர்ந்து உள்ளூர் மக்களின் முனைவுகளுக்குத் தடைக்கற்களாயிருப்பதிலிருந்து விலகி நிற்பார்களா?

இந்தியாவில் ஒரேயொரு குழு, மார்வாரிகளும் குசாரத்திகளும் முழுப் பொருளியலையும் தன் கைப்பிடிக்குள் வைத்துள்ளது. அதனோடு இன்று ஆட்சியாளர்களும் உலக விசைகளுடன் கூட்டுச் சேர்ந்து மக்களின் நிலங்களை அரசியல் - பொருளியல் நெருக்குதல்களால் மறைமுகமாகவும் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் நேரடியாகவும் பறித்து வருகின்றனர். வாழ்விழந்த மக்கள் தங்கள் தேசங்களை(மாநிலங்களை) விட்டு ஓடுகிறார்கள். அரசியல்வாணர்கள் தங்கள் வாக்கு வேட்டைக்காக எல்லை தாண்டிய மக்கள் மீது போர் தொடுக்கின்றனர். இந்தச் சூழலில் இந்திய - உலக அளவிலான பொருளியல் விசைகளிடமிருந்து தத்தம் நிலத்தைக் காக்க, 1956 நவம்பர் 1ஆம் நாள் அமைக்கப்பட்ட மாநில எல்லைகளுக்கு வெளியிலிருந்து நிலம் வாங்கியவர்கள், தொழில் அமைத்தவர்கள், பெருவாணிகத்தில் நுழைந்தவர்களை அப்புறப்படுத்த வேண்டும். வேலை செய்ய வந்த மக்களுக்குத் தங்கள் சொந்த மாநிலம் தவிர வேறெங்கும் முழுக் குடியுரிமை கூடாது என்பது எமது தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகத்தின் வரைவுத் திட்டத்தின் ஒரு பகுதி. அத்துடன் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின்கரையில் பாதி, சித்தூர், திருப்பதி என்று மாநிலச் சீரமைப்பின் போது அண்டை மாநிலங்களிடம் பறிகொடுத்த பகுதிகள் மீட்கப் பட வேண்டும் என்பதும் அதில் அடக்கம். 1956 நவம்பர் 1 வரையறையை அப்பகுதிகளிலும் நிறைவேற்ற வேண்டும். இதுதான் இந்திய மக்களின் உண்மையான தன்னாட்சிக்கான வழி என்பது எமது கருத்து. இன்றைய செய்திப்படி மராட்டிய முதல்வர் இதே கருத்தை நேற்று முன்வைத்திருக்கிறார்.

பாமயனை நன்றாகத் தெரியும். உழவனின் துன்பங்களுக்கெல்லாம் சீமை உரமும் பூச்சிக் கொல்லி மருந்தும்தாம் காரணம் என்பவர். அரசியல் காரணியைச் சுட்டிக் காட்டினால் திசை திருப்புவார். ஏழை நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காகவே அமெரிக்கா பொதிந்து காப்பாற்றி வரும் கியூபாவை முன்சுட்டாகக் காட்டுபவர்.

நாட்டிய சரசுவதியின் சிற்பநூல் விளக்கம் அத்தெய்வத்தின் பின்னணியில் ஒரு நீண்ட வரலாறு புதைந்து கிடப்பதைக் காட்டுகிறது. ″மாடன் - ஒரு தெய்வத்தின் தோற்றமும் வளர்ச்சியும்″ என்று ஒரு கட்டுரை அரைகுறையாக நிற்கிறது. இதில் அத்தெய்வத்தின் பின்னணியில் மறைந்து கிடக்கும் எல்லைக்கெட்டாப் பழம் வரலாற்றை மீட்க முயன்றிருக்கிறேன்.

இன்றைய வேலூர் - சேலம் மாவட்டங்களுக்கு இடையில் ஏறக்குறைய 100 கி.மீ. நீண்டு கிடக்கும் மலையாளக் காடுகளில்(இதனைச் சவ்வாது மலை என்பர்) வாழும் பழங்குடி மக்கள்(தமிழர்களான அவர்களை அப்பகுதியில் மலையாளிகள் என்று அழைப்பர்) சித்திரை முழு நிலவன்று ஆற்றில் கூடி தத்தம் விருப்பத்துக்கேற்ற இணையரைக் கூடுவர் என்று அப்பகுதியில் பணியாற்றிய போது 1968இல் அறிந்திருக்கிறேன். மதுரையில் அதே நாளில் அழகர் ஆற்றில் இறங்குவது போல் தமிழகமெங்கும் நடைபெறுகிறது. திருவிதாங்கூரில் அது ஆறாட்டு என்ற பெயரில் பங்குனி உத்திரத்தன்று நடைபெறுகிறது. உண்மையில் இது மார்ச்சு 21இல் நடைபெற வேண்டிய நிகழ்ச்சியே. ″தமிழன் கண்ட ஆண்டு முறைகள்″இல் நான் குறிப்பிட்டது போல் தென்மதுரையிலிருந்து கபாடபுரத்துக்குத் தலைநகர் மாறியதால் வந்த குழப்பத்தின் விளைவாகும் இது. இது குறித்து ″பங்குனி உத்திரமும் சித்திரை வெள்ளுவாவும்″ என்ற கட்டுரையை நானும் நண்பர் வெள்ளுவனும் இணைந்து எழுதியுள்ளோம். வேர்கள் என்ற இதழில் அது வெளிவந்துள்ளது.

″பாபா ஆம்தே″ ″கால்களின் கடவுள்″ இரண்டு கட்டுரைகளும் ஒரு குறிப்பிட்ட துறையில் உலக மக்களுக்குப் பெருந் தொண்டாற்றிய உயர்ந்த மனிதர்கள் என்ற வகையில் சிறந்த படைப்புகள். சுசாதாவின் படைப்புகள் எத்தனை காலம் நிலைத்திருக்கும் என்று கூற முடியாது. ஆனால் அவர் அறிமுகம் செய்த நடை ஒரு சுற்று வரும் என்று நம்பலாம். குமுதம் இதழில் அவர் எழுதத் தொடங்கிய கருப்பும் சிவப்பும் என்ற தொடர்கதையில் ″கள்ளச் சாணான்″ என்று அவர் பயன்படுத்திய ஒரு சொல்லால் அவருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் அவரது எழுத்தின் திசையையே மாற்றியிருக்குமோ என்றொரு ஐயம். தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?
விளையாட்டுக்கென்று ஒரு கட்டுரை வருவது மகிழ்ச்சியே. இந்தியாவில் தெருக்களில் அலைந்து திரிந்து வித்தைகாட்டும் உடல்திறன் பெற்ற சிறுவர்களை ஊக்கினாலே உலகின் மிகத்திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்கிவிடலாம். இருப்பதிலேயே இவ்வளவு ஆதாயம் பார்க்கிறவர்களுக்கு எதற்கு இந்த வீண் வேலை என்கிறீர்களா?

உணர்ச்சிப் பாக்களாக அரசியல் சார்ந்து பாடியவை தரங்குறைந்தவை என்றும் அவர் பொதுவாழ்வில் நுழையாமலிருந்ததால் மேலான படைப்புகளை உருவாக்கியிருப்பார் என்றும் கூறியுள்ள கட்டுரை ஆசிரியரின் கலை இலக்கியங்கள் பற்றிய கண்ணோட்டம் மிகக் கண்டிக்கத் தக்கது. நூலின் நோக்கம் நல்ல மனிதனை உருவாக்குவது என்று இறையனார் அகப்பெருள் கருத்தின் அடிப்படையில் நன்னூல் ஆசிரியர் தந்துள்ள மிக உயர்வான கருத்தைப் பாருங்கள்.

உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமைப்
புரத்தின் வளமுருக்கி பொல்லா - மரத்தின்
கனக்கோட்டம் தீர்க்குநூல் அஃதேபோல் மாந்தர்
மனக்கோட்டம் தீர்க்குநூல் மாண்பு.

பாரதியாரைப் பற்றிய இந்தக் கருத்துரைப்பு கலை இலக்கியங்களைப் பற்றிய இரக்கமற்ற ஓர் இழிவுபடுத்தலாகும்.

கவிதை எந்தப் பிரசாரத்துக்கும் போகாது என்பது இலக்கியத்தைப் பற்றிய ஒரு மிகவும் அரைகுறையான பார்வை. பரப்பல் இலக்கியம் மருந்து போன்றது, அறிவு இலக்கிய உணவு போன்றது, சுவை இலக்கியம் தின்பண்டம் போன்றது என்று சொல் புதிதுவில் வெளிவந்த ″அழகியலும் மெய்ப்பாட்டியலும்″ கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.

செயமோகன் கிண்டல் செய்கிறாரா உண்மையைக் கூறுகிறாரா என்று புரியவில்லை. அதே நேரத்தில் புதுக் கவிதை எழுத வேண்டும் என்று நினைப்போருக்குத் தேவையான உதவியும் ஊக்குவிப்பும் உள்ளன. கழக இலக்கியங்கள் என் பார்வையில் புதுக்கவிதைகளே. அவற்றுக்கு நான் கொடுக்கும் விளக்கம் தனி மனிதர்கள் தங்கள் உணர்வுகளை வெளியிடப் பயன்படுத்திய வடிவம் அது என்பது. பொதுவாக இலக்கணச் செய்யுள்கள் அதனுடைய வரிகளின் நீளத்தின் அடிப்படையில் ஒரு செவ்வகத்தைப் போல் இருக்கும். புதுக்கவிதைகள் அவ்வாறு இருப்பதில்லை. ஒழுங்கற்ற வடிவத்தில் இருக்கும்.

புதுக் கவிதை தனிமனித உணர்ச்சிகள் என்றால் வெண்பா போன்ற இறுக்கமான செய்யுள்கள் பலர் சேர்ந்து அல்லது தனியாள் இசையுடன் பாடுவதற்காக யாத்ததிலிருந்து திரிவாக்கம் பெற்றிருக்கலாம் என்பது எனது கருத்து.

″நூற்றுவர் கன்னர் - சிலம்பில் வரலாறு″ என்ற கட்டுரையில் உள்ள செய்தியை ″பெருஞ்சோற்று உதியஞ்சேரல்″ என்ற கட்டுரையில் சுருக்கமாகச் சுட்டிக் காட்டியுள்ளோம் நானும் நண்பர் வெள்ளுவனும். கட்டுரை இந்திய வரலாற்றில் புராணங்கள், இலக்கியங்கள், வானியல் என்ற நூலில் வெளிவந்துள்ளது.

அன்புடன்,
குமரிமைந்தன்.

0 மறுமொழிகள்: