14.2.06

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 1. அறிமுகம்

தமிழகத்தில் திராவிடர் இயக்கம் தோன்றி வளர்ந்து மக்களிடம் செல்வாக்குப் பெற்று வந்த போது இங்கிருந்த “பொதுமை”யினர் அதனை வெறும் பண்பாட்டு இயக்கம் என ஒதுக்கித் தள்ளினர். தங்கள் கொச்சைப் பொருளிய(Economism)ச் சகதியினுள் சிக்கித் தடுமாறினர். பின்னர் சீனத்தில் மாசேதுங் பண்பாட்டுப் புரட்சியை நடத்திய பிற்பாடு அவரைப் பின்பற்றியோர் பீக்கிங்கில் பெய்த மழைக்கு இங்கு குடைபிடித்துக் கொண்டிருக்கின்றனர். அங்கு மழைவிட்ட பின்னரும் இங்கு குடை பிடிப்பது நிற்கவில்லை; பொருளியல் சிக்கல்களைத் தொழிற்சங்க வாணிகர்களின் மொத்த வேட்டைக் களமாக்கிவிட்டு இவர்கள் ஓடிவிட்டனர். அவ்வாறு ஓடியவர்கள் பண்பாட்டுப் பணிகள் என்ற பெயரால் வெறும் கலை இலக்கியங்களைக் கிளறி அதிலேயே இன்பம் காணுகின்றனர். எழுதப் பேனாவும் தாளும் அச்சிட அச்சகமும் சுவர்களில் விளம்பரம் எழுதவும் விற்றுக் கொடுக்கவும் நன்கொடை தண்டவும் இளைஞர் கூட்டமும் இருப்பதால் இதழ்கள் நடத்துவதோடு தங்கள் “பண்பாட்டுப் பணி” நிறைவு பெற்றதாக நம்பிவிடுகின்றனர். அல்லது நம்பச் சொல்கின்றனர். இந்த நிலையில் பண்பாடு என்பது என்ன, பொருளியல் வாழ்வுக்கும் அதற்கும் உரிய உறவு என்ன, பண்பாட்டுப் பணியில் கலை, இலக்கியம் ஆகியவற்றின் இடம் யாது, தமிழகம் இன்றுள்ள நிலையில் பொருளியல், பண்பாட்டுக் கலை இலக்கியப் பணிகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது, என்ற கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டியவர்களாகிறோம்.

பண்பாடு என்பதை மார்க்சியம் குமுகத் (சமுகத்) தன்னுணர்வு என்ற சொல்லால் குறிக்கிறது. இதில், ஒரு மக்களின் சமயம், உணவு முறை, திருமண உறவுகள், அவர்கள் அணியும் உடை, சட்டங்கள், அரசியல் அமைப்பு, மெய்யியல், அறிவியல், தொழில்நுட்பம், நம்பிக்கைகள், சடங்குகள், அவர்கள் கொண்டாடும் திருநாட்கள், மொழி, கலை, இலக்கியம் ஆகியவை அடங்கும். அறிவியல், தொழில் நுட்பம் ஆகியவை படைப்பு விசைகளான பொருளியல் அடித்தளத்தோடு நேரடியாகத் தொடர்பு கொள்ளும் அதே வேளையில் பொருளியல் அடித்தளத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் சுவையான வடிவங்களில் வடித்துக் காட்டுவனவாகக் கலையும் இலக்கியமும் செயற்படுகின்றன.

பொருளியல் மற்றும் பண்பாட்டுக் கூறுகளைத் தன்னுள் தேக்கி வைத்து அவற்றை வளப்படுத்துவதிலும் அதன் மூலம் தான் வளர்வதிலும் மொழி செயற்படுத்துகிறது. கலை இலக்கிய வடிவங்களில் பொருளியல் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துவதில் மொழியே எலும்பும் சதையுமாகச் செயற்படுகிறது.

கலை இலக்கியம் பற்றித் தெள்ளத் தெளிவாகத் தமிழ்ப் பெரும் புலவர் இளங்கோவடிகள் கூறுகிறார்.

குமரி வேங்கடம் குணகுட கடலா
மண்திணி மருங்கில் தண்டமிழ் வரைப்பில்
செந்தமிழ் கொடுந்தமிழ் என்றிரு பகுதியின்
ஐந்திணை மருங்கின் அறம்பொருள் இன்பம்
மக்கள் தேவர் எனஇரு சார்க்கும்
ஒத்த மரபின் ஒழுக்கொடு புணர
எழுத்தொடு புணர்ந்தசொல் அகத்தெழு பொருளை
இழுக்கா யாப்பின் அகனும் புறனும்
அவற்று வழிப்படூஉம் செவ்விசிறந்(து) ஓங்கிய
பாடலும் எழாலும்[1] பண்ணும் பாணியும்
அரங்கு விலக்கே ஆடலென்(று) அனைத்தும்
ஒருங்குடன் தழீஇ உடம்படக் கிடந்த
வரியும் குரவையும் சேதமும் என்றிவை
தெரிவுறு வகையால் செந்தமிழ் இயற்கையில்
ஆடிநல் நீழலின் நீடிருங் குன்றம்
காட்டு வார்போல் கருத்துவெளிப் படுத்து ….,
த்

தன் நூலை முடிக்கின்றார்.
[2]

சிந்தனை பற்றிய எதிரொளிப்புக் கோட்பாடு பற்றி லெனின் பருப்பொருளியமும் பட்டறிவுத் திறனாய்வும்[3] என்ற தன் நூலில் குறிப்பிடுகிறார்.
[4]

ஆனால் வாழ்க்கைக்கும் கலை இலக்கியங்களுக்கும் உள்ள தொடர்பு முற்றிலும் பொருளுக்கும் கண்ணாடியில் அதன் நிழலுக்கும் உள்ள தொடர்பு போன்றதல்ல. கலை இலக்கியங்கள் தங்கள் தாக்கத்தைக் குமுகத்தின் மீது ஏற்படுத்த முடியும். ஆயினும் அவை இரண்டுக்கும் உள்ள இடைவெளி அளவோடு இருந்தால் தான் இது நடைபெறும். இந்த எல்லையைத் தாண்டிக் கலை இலக்கியம் செல்ல முற்பட்டால் அது மக்களிடமிருந்து தனிமைப்பட்டு வெறும் வேடிக்கைப் பொருளாக அல்லது கனவாக மாறிவிடும். வாழ்க்கைக்கும் கலை இலக்கியங்களுக்கும் உள்ள இந்த இடைவெளியும் நிலையானதல்ல. குமுக மாற்ற வேகத்திற்கேற்ப அது கூடிக் குறையும்.

பண்பாடு என்ற பெயரால் கலை இலக்கியங்களை மட்டும் தூக்கிப் பிடிப்பது என்பது இவ்வகையில் நிழலைப் பிடிக்க முயல்வது போன்றதே. இவ்வாறு பண்பாட்டைத் தொடாத கலை இலக்கிய முயற்சிகளைச் சுட்டிக்காட்டிவிட்டு பண்பாட்டுச் சிக்கலினுள் நுழைவோம்.

ஒவ்வொரு நாட்டு மக்களிடையிலும் இருவேறு பண்பாடுகள் உள்ளன என்று லெனின் கூறினார். சொற்களில் கூறவதாயின் இவை இரண்டும் உழைக்கும் மக்களின் பண்பாடும் உடமை வகுப்பின் பண்பாடும் ஆகும். நம் நாட்டின் இப்பண்பாடுகள் எவ்வாறு நிலவுகின்றன என்று பார்ப்போம்.

நம் நாட்டில் சாதி அடுக்குகளுக்கும் பொருளியில் வகுப்பு அடுக்குகளுக்கும், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில விதிவிலக்குகள் இருந்தாலும், ஓர் ஒத்திசைவு உண்டு. எனவே மேற்கூறபட்ட இரு பண்பாடுகளும் சாதிப் பண்பாடுகளாகவே நம்மிடையே நிலவுகின்றன. அவற்றை நாம் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். அதற்கு முன் நாம் ஒன்றை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். நம் நாட்டின் வரலாற்றுப் போக்கில் பொருளியலில் மேல் நிலையிலிருந்த பல மக்கள் குழுவினர் அரசியல் மாற்றங்களினால் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். எனவே அவர்களிடம் முன்பு நிலவிய சில உடைமை வகுப்புப் பண்பாட்டுக் கூறுகள் அல்லது கருத்துக்கள் இன்றும் ஒட்டிக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் இன்றைய பொருளியல் நிலைமையின் காரணமாகப் பலர் இப்பண்பாட்டுக் கூறுகளைக் கைவிட்டாலும் இன்று நாம் அவற்றின் இடத்தில் கடைப்பிடிக்கும் புதிய கூறுகளைப் இழித்துக் கூறுவதன் மூலம் தம் முன்னாள் பண்பாட்டையே தாம் இன்னும் வைத்துக் கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்வார்கள். இந்த நிகழ்முறையை மனதில் கொண்டால் தான் நம் குமுகப் போக்கை நம்மால் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.

நம் நாட்டில் மேற்சாதியினரும் கீழ்ச்சாதியினரும் அடிப்படையில் முற்றிலும் வேறுவேறான இரு பண்பாடுகளைக் கொண்டுள்ளனர். இருந்தாலும் ஒரே மண்ணில் வாழ்வதாலும் அன்றாட வாழ்வில் ஏற்படுகின்ற தவிர்க்க முடியாத தொடர்புகளினாலும் பல வேளைகளில் இவ்விரு பண்பாடுகளுக்கும் இடையிலுள்ள எல்லைக்கோட்டைத் துல்லியமாக அறிய முடியாமல் கூட இருக்கும். பொருளியல் மற்றும் அரசியல் மாற்றங்களால் கீழ்ச்சாதியினரால் சிலர் மேம்பாடு அடையும் போது மேற்சாதிப் பண்பாடுகளைக் கைக்கொள்கின்றனர். இந்த நிகழ்முறை நம் மண்ணில் தொன்று தொட்டே நிலவி வரும் ஒன்றாகும். இதனைப் புதுப்பார்ப்பனியம் என்று நம்மில் சிலர் அழைக்கின்றோம். இந்த நிகழ்முறையை நாம் புதிதாக அறிகிறோமே தவிர நிகழ்முறை புதிதல்ல. எனவே இதனைப் பார்ப்பனியம் என்றே அழைக்க வேண்டும். தான் தன் சாதியினரின் சராசரிப் பொருளியல் நிலையை விட உயர்வடையும் போது தன் சாதியினரையும் அவர்களுடைய பண்பாட்டையும் இழிவாக் கருதி மேல் சாதியினருடன், அவர்கள் எட்டி உதைத்தாலும் அவ்வாறு உதைத்த காலை கட்டிப்படித்துக் கொண்டு உறவாடுவதைத் தான் பார்ப்பனியம் என்று கூற வேண்டும். இதுவே பார்ப்பனர்களின் தொடர்ச்சியான மேலாண்மைக்கு உயிரூற்றாகவும் கீழ்ச்சாதியினரின் மீளா அடிமைத் தனத்துக்கு உரமாகவும் விளங்குகிறது.

பார்ப்பனர்கள் தம் “சுயதர்மத்தை”க் கைவிட்டு வெளியே வந்தாலும் கூட நம் நாட்டிலுள்ள மேற்சாதியினர் உட்பட்ட “பார்ப்பனியர்கள்” (புதுப்பார்ப்பனர் என்பதைப் பார்ப்பனியர்கள் என்ற சொல்லால் குறிப்பதே சரி என்று கருதுகிறேன்.) அதை விரும்புவதில்லை. பார்ப்பனர்கள் தம் “சுயதர்மத்தை”க் கைவிட்டு வேறு வகை வாழ்க்கையில் புக முயன்றால் இந்தப் பார்ப்பனியர்கள் உடனே கூக்குரலிடுவர். வள்ளுவர் கூட,

மறப்பினும் ஓத்துக் கொள்ளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்

(வேதத்தைப் பார்ப்பான் மறந்துவிட்டால் கூட மீண்டும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அவன் தன் குலவொழுக்கத்தைக் கைவிட்டால் அதை மீட்க முடியாது) என்று கூறினார்.

அரிசி விற்றிடும் அந்தணர்க் கோர் மழை
வரிசை தப்பிய மன்னருக் கோர் மழை
புருச னைக்கொன்ற பூவையர்க் கோர் மழை
வருசம் மூன்றும ழையெனப் பெய்யுமே.

என்று மழை தப்புவதற்கான காரணங்களை விவேக சிந்தாமணி தொகுத்துக் கூறுகிறது.

“குலவொழுக்கம் குன்றிய் பார்ப்பான் கணவனைக் கொன்ற பெண்ணோடு ஒப்பிடப்படுகிறான். புத்தர் முதல் செயகாந்தன் வரை உண்மையான பார்ப்பனனின் இலக்கணத்தைக் கூறுவதன் மூலம் இதே கருத்தைத் தான் முன்வைக்கின்றனர்.

நாம் மேலே தொகுத்துக் கூறிய பண்பாடுகளில் பார்ப்பனர்களும் அவர்களை ஒட்டி பிற மேற்சாதியினரும் பின்பற்றுகிற ஒழுக்கங்களை ஆரிய ஒழுக்கங்கள் என்றும் கீழ்ச்சாதியினர் அவற்றைக் கைகொள்ளுவதைச் சங்கதப்படுத்துதல் (Sanskritisation) என்றும் கூறுகின்றனர் குமுக இயல் ஆய்வாளர்கள்.[5] ஆனால் சங்கதத்துக்கோ வேதத்துக்குரியவர் என்று நம்பப்படும் ஆரியர்களுக்கோ இந்தப் பண்பாட்டுக் கூறுகளுடன் எந்தத் தொடர்புமில்லை. எடுத்துக்காட்டுக்குச் சிலவற்றை மேற்கொள்வோம்.

வேதங்களோ வேள்வி நடத்தும் பார்ப்பனரோ ஊன் உணவை விலக்கவில்லை. உயிர்க்கொலை வேள்விகளை நடத்துவதே வேதிய (வைதீக) சமயமாகிய பார்ப்பன சமயமாகும். இதனை எதிர்த்தவையே புத்தமும் சமணமும். புத்த தமிழ்க் காப்பியமாகிய மணிமேகலையில் வரும் ஆபுத்திரன் வரலாறு இதனைத் தெற்றென விளக்குகிறது. வேள்வியில் பலியிடுவதற்காகக் கட்டப்பட்டிருந்த ஆமாட்டை அவிழ்த்து விடுவித்துவிட்டான் என்பதற்காகப் பார்ப்பனர்களால் தன் பார்ப்பன வளர்ப்புப் பெற்றோரிடமிருந்து அவன் துரத்தப்படுகிறான். இதிலிருந்து இரண்டாம் நூற்றாண்டின் இறுதிக் காலம் வரை பார்ப்பனர்கள் வேள்விகளில் மாட்டை அடித்துத் தின்று வந்தார்கள் அல்லது அத்தகைய கருத்து நிலவியது என்பது புலனாகிறது. பண்டப் படைப்பு வளர்ச்சியாலும் வேளாண்மை மற்றும் வாணிக வளர்ச்சிகளின் தேவைக்காகவும் ஏற்பட்ட மாட்டு உழைப்பின் தேவையால் மாட்டு வேள்வி எதிர்ப்பு உருவாகியது. பின்னர் வாணிகர்களின் மதமாகிய சமணத்தால் உயிர்க்கொலை எதிர்ப்பாக மட்டுமின்றி மூக்கில் திரையும் கையில் மயிற்பீலியும் இருட்டறை வாழ்வுமாகக் கோணல் வடிவம் பெற்றதே மரக்கறி உணவின் தோற்றம். அதே போல் பெண்ணின் அப்பழுக்கற்ற கற்பு வேதங்களிலோ புராணங்களிலோ வேண்டப்படவில்லை. அரசர்களின் மனைவிகள் ஆண்பிள்ளை பெறுவதற்காகக் கணவனின் உடன்பிறந்தோர், தாயாதிகள், குலகுரு, யாராவது ஒரு துறவி அல்லது எந்த ஓர் ஆண்மகன், பலிகொடுக்கப்பட்ட குதிரை இவர்களுடனெல்லாம் உடலுறவு கொள்ளக் கட்டாயப்படுத்தப் பட்டனர். தலைமகன் உரிமை (Male primogeniture) என்ற அடிப்படையில் அரசன் இறந்த பின் நாட்டின் ஆட்சி மாற்றத்தில் குழப்பங்கள் நிகழாமல் இருப்பதற்காக ஓர் ஆண்மகவைப் பெற்றெடுக்க வேண்டிய ஒரு குமுகக் கடமையாக அவள் இவையனைத்தையும் செய்ய வேண்டியிருந்தது. பார்ப்பனத் திருமணங்களில் கூறப்படும் மந்திரங்களில் மணமகள் மணமகனுக்குத் தன்னை ஒப்படைக்கும் முன் யார் யாருக்கு உடமைப்பட்டவள் என்பது தொகுத்துக் கூறப்படுகிறது.

ஆனால் முதன்முதலில் கூட்டுக் குடும்ப உழைப்புக்கு மாறான ஒரு வழியில் செல்வத்தைத் திரட்டிய வாணிக வகுப்பே தன் தனிச் செல்வத் திரளைப் பெற்றுக் கொள்வதற்குத் தனக்கேயுரிய பிள்ளைகள் வேண்டுமென்று பெண்ணடிமையை உருவாக்கியது. இந்த நோக்கத்தில் கணவனோடு வாழும் போது மட்டும் பிற ஆடவரை நாடக்கூடாது என்ற பகுத்தறிவு எல்லையை மீறித் திருமணத்துக்கு முன்னரும் கணவன் இறந்த பின்னரும் கூட எவரையும் பெண் நாடக்கூடாது என்ற கொடுங்கோன்மைக்கு அவளை ஆளாக்கினர். இவ்வாறு குமுக வளர்ச்சியில் வெவ்வேறு கட்டங்களில் புதியதாகத் தோன்றிய “உயர்ந்த” பண்பாட்டுக் கூறகளை யெல்லாம் குமுக மேல்மட்டத்திலிருந்த பார்ப்பனர் தம் நிலையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கடைப்பிடிக்க வேண்டியதாயிற்று. இவ்வாறு ஒவ்வொரு மேற்சாதிப் பண்பாட்டுக் கூறும் பணம் படைத்த பூரியப் பண்பாட்டுக் கூறு என்பதை நாம் பின்னால் விளக்குவோம். மேலைநாட்டு ஆய்வாளர்களும் அவர்களைப் பின்பற்றும் நம் நாட்டு அறிஞர்களும் அறியாத ஒரு சொல்வழக்கு இவ்வொழுக்கங்கள் பார்ப்பனர்ககுரியவையல்ல என்பதை நம் நாட்டுப்புற மக்கள் அறிந்திருந்தார்கள் என்பதைக் காட்டுகிறது. புலாலுணவைக் கைவிடல், காலையிலெழுந்து குளித்துத் திருநீறு பூசி மணியடித்துப் பூசைசெய்தல், உடுத்தும் உடையை அன்றாடம் துவைத்துக் கட்டல். பார்ப்பனரை வைத்துச் சடங்குகள் நிகழ்த்தல். கைம்பென் மறுமணத்தை மறுத்தல். மணவிலக்கு. மறுமணம் ஆகியவற்றை விலக்கல். உழைப்பை வெறுத்தல். சாதிவேற்றுமையை நுணுக்கமாகக் கடைப்பிடித்தல். ஆளுவோருக்கு எப்போதும் சார்பாக இருத்தல் போன்ற ஒழுக்கங்களைக் கையாள்வதற்கு வெள்ளாளக் கட்டு மேற்கொள்ளுதல் என்ற சொல் வழங்குகிறது என்பதை இங்கு சொல்லி விடுகிறோம். எனவே மேற்சாதிப் பண்பாட்டு ஒழுக்கங்களைக் கீழ்ச் சாதியினர் கைக்கொள்ளும் செயல்முறையைப் பார்ப்பனியம் என்று குறிப்பிடுவதை விட “பார்ப்பனியம் எனப்படும் வெள்ளாளக் கட்டு” எனக் குறிப்பிடுவது பொருத்தமாகவும் கருத்தைத் தெளிவாக விளக்குவதாகவும் அமையும்.

பண்பாட்டுப் புரட்சி பற்றிப் பேசும் நம் நாட்டிலுள்ள எந்தக் குழுவுக்கும் நாம் இங்கு கூற இருப்பவை தான் நம் நாட்டில் நிலவும் உண்மையான பண்பாட்டுக் கூறுகள் என்ற சிந்தனை கூடக் கிடையாது என்பதை நம்மால் அறுதியிட்டுக் கூற முடியும். அடுத்து, அவர்கள் கூறும் புதிய பண்பாடு எது என்பதிலோ அது எப்படி இருக்கும், எப்படி இருக்க வேண்டுமென்பதிலோ சிந்தனையோ தெளிவோ அவர்களிடம் இல்லை. அவர்கள் செய்வதெல்லாம் சில கலை, இலக்கியங்களைத் திறனாய்வதும் அக்கப்போர் அரசியல் பேசுவதும் “புதிய மக்களாட்சிப் புரட்சி” நடந்தவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுவதும் தான். எதுவென்று தாங்களே அறியாதவர்கள், எங்கிருக்கிறோம் என்பதையும் அறியாத நிலையில் பண்பாட்டுப் புரட்சி பற்றிப் பேசுவது நம் நாட்டில் உள்ள இரங்கத்தக்க நிலைகளில் மிகக் கொடியது. நிற்கிற இடமும் அறியாமல் கடக்க வேண்டிய பாதையும் புரியாமல் இலக்கிலும் தெளிவில்லாமல் புதிய பண்பாட்டைப் பற்றிக் கூக்குரல் எழுப்பும் இவர்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு நமது தேடுதலைத் தொடர்வோம்.

ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு நடக்க வேண்டுமாயின் முதலில் ஒரு காலை நின்ற இடத்தில் ஊன்றிக்கொண்டு மறுகாலைத் தூக்க வேண்டும். நமது குமுகத்தில் இருவேறு பண்பாடுகள் நிலவுகின்றன. இந்த இரண்டில் எதில் நாம் காலை ஊன்றிக்கொள்ள வேண்டும் எதிலிருந்து காலை நகர்த்த வேண்டுமென்று பார்ப்போம். ஒரு பாட்டாளி வகுப்புப் பண்பாட்டைப் படைப்பது நமது இலக்கு என்ற தெளிவிலிருந்து நாம் தொடங்க வேண்டும். நாம் மேலே கூறிய இரண்டு வகைப் பண்பாடுகளிலும் உழைக்கும் மக்களின் பண்பாடாக விளங்குவது கீழ்ச்சாதியினரின் பண்பாடே என்பதை நாம் காணலாம்.

பண்பாட்டுக் கூறுகளை ஒவ்வொன்றாக எடுத்து ஆய்வோம். இந்த ஆய்வில் முற்பட்ட சாதிகள் மேற்சாதிகளென்றும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகள் கீழ்ச்சாதிகளென்றும் குறிக்கப்பட்டுள்ளன. கீழ்ச் சாதிகளின் பண்பாடு எனும் போது அவர்களில் பெரும்பாலோர் வாழ்கின்ற நாட்டுப்புறங்களில் நிலவுவற்றையும் மேற்சாதிகளின் பண்பாடு எனும் போது அவர்களில் பெரும்பாலோர் வாழ்கின்ற நகர்ப்புறங்களில் நிலவுபவற்றையும் நாம் எடுத்துக்காட்டுகிறோம். இனி பண்பாட்டுக் கூறுகளை பார்ப்போம்.



அடிக்குறிப்புகள்:

[1] எழால் - யாழ்

[2] சிலப்பதிகாரம், நூற்கட்டுரை

[3] Materialism and Emprio Criticism

[4] சிந்தனை பற்றிய எதிரொளிப்புக் கோட்பாடு பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் தான் மேலை உலகில் தோன்றி வளர்ந்தது. சங்கம் மருவிய காலத்துக்கு (கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு) உரிய சிலப்பதிகாரத்தில் இலக்கியம் பற்றிய இத்தகைய தெளிவான கோட்பாடு உருவான குமுகச் சூழல் பற்றிப் பேசினால் நம் “மார்க்சியத்” தோழர்களுக்குக் எரிச்சல் வரும். சங்க காலத்தைக் குக்குலங்களின் (பழங்குடியினர்) காலமென்று காட்டவே அவர்கள் விரும்புவர். தொல்காப்பியத்தில் காணப்படும் எண்ணற்ற இலக்கிய வடிவங்கள் காட்டும் உயர்ந்த நாகரீகப் பின்னணியைப் பார்க்க அவர்களுக்குப் பிடிக்காது. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அனைத்தும் சமற்கிருதத்திலிருந்து தான் தமிழுக்கு வந்ததென்று காட்டும் பார்ப்பனியச் சிந்தனை. இன்னொன்று குமுகம் எப்போதும் முன்னோக்கியே நகரும் என்ற தவறான கருத்து அல்லது பொய்யான வாதம். முதல் காரணமே பெரும்பாலும் இரண்டாம் காரணத்துக்கு அடிப்படையாக இருக்கிறது. பேரா.க.சிவத்தம்பி, பேரா. கைலாசபதி ஆகியோர் இச்சிந்தனைகளை வளர்த்துப் பரப்பிய மிகப்பெரும் “மார்க்சியர்கள்” என்ற பெருமைக்கு உரியவர்கள். இப்பணியைத் தொடங்கி வைத்த பேரா.நா.வானமாமலையையும் நாம் மறந்து விடக்கூடாது. மார்க்கியம் என்பது தமிழ்பப் பழிப்பு, தமிழ் ஒழிப்பு என்பதே என்ற மனப்பான்மையைப் பரப்பியோரில் இம்மூவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை.

[5] சங்கதப்படுத்தல் என்ற சொல்லை எம்.என். சீனிவாசு என்ற பார்ப்பன ஆய்வாளர் பயன்படுத்தினார். அன்றிலிருந்து பலர் அச்சொல்லைப் பிடித்துக் கொண்டனர். ஆனால் எம்.என். சீனிவாசு ஆங்கிலத்தில் பயன்படுத்திய Sanskritisation என்ற சொல் சில பார்ப்பனரல்லா மேற்சாதி அறிஞர்களுக்குப் பிடிக்கவில்லை. வேளாளச் சாதியினராகிய முத்துச் சண்முகனார் அதை “மேனிலையாக்கம்” என மொழிபெயர்த்தார். அதாவது சங்கதமும் அதை அடையாளமாகக் கொண்ட மேற்சாதிப் பண்பாட்டுக் கூறுகளும் கீழ்ச்சாதியினரின் பண்பாடுகளையும் அவர்களது மொழிமையும் விட மேம்பட்டவை என்பதைச் “சங்கதப்படுத்தல்” என்ற சொல் வெளிப்படையாகக் காட்டவில்லை என்பது அவர்களது மனக்குறை. எனவே தான் “மேனிலையாக்கம்” என்ற சொல்லை வடித்து வழக்கிற்குக் கொண்டுவர முயல்கின்றனர். இவரைப் பின்பற்றியே சி. கனகசபாபதி என்பவரும் பாரதியும் பாரதிதாசனும் - ஒப்பியல் திறனாய்வு என்ற தன் நூலில் பார்ப்பனரின் பண்பாடு உயர்வானது என்ற கருத்தை வெளிப்படுத்துகிறார்.

0 மறுமொழிகள்: