23.1.16

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 39


29.குமுகியல் வித்தகர்களன்றோ நாம்! - 8

.:  அன்றைய சோவியத்துக்கும் இன்றைய தமிழகச் சூழலுக்கும் அடிப்படை வேறுபாடு உண்டுதான். அதாவது லெனின் முன்வைத்ததை விடக் கொடுமையான ஒடுக்குமுறையை நம் உழவர்கள் எதிர்கொள்கின்றனர். லெனின் அரசிடம் ஒப்படைத்து எஞ்சியதைத் தங்கள் விருப்பம் போல் விற்றுக்கொள்ளலாம் என்று உழவர்களிடம் பேசி அவர்களின் இசைவுடன் அத் திட்டத்தைப் புகுத்தினார். ஆனால் இந்தியாவில் கொடுங்கோலன் லால்பகதூர் சாத்திரி “செய் சவான்! செய் கிசான்!” என்று வஞ்சகம் பேசிக்கொண்டே வயலில் அறுத்த நெல்லை வீட்டுக்குக் கொண்டுசெல்லக் கூட ஊர்க் கணக்குப்பிள்ளையின் வீட்டுக்கும் வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கும் அலைய விட்டான் அவர்களை. உழவன் வீட்டிலும் நெல் - அரிசி வாணிக உரிமம் பெறாதவரிடமும் நெல்லை அரைத்துத் தரும் கூலி அரிசி ஆலைகளிலும் நெல்லை கையிருப்பு வைப்பதற்கும் எல்லை நிறுவப்பட்டது. கூலி அரிசி ஆலைகளைக் கண்காணிப்பது என்ற பெயரில் அங்குள்ள மின்மானிகளின் அளவீடுகள் கண்காணிக்கப்பட்டன. வீட்டிலிருக்கும் நெல்லை அவ்வப்போது கைச்செலவுக்காக விற்கும் இல்லத்தரசிகளிடம் வாங்கி அதை அரிசியாக்கி விற்கும் வறுமைப்பட்ட பெண்களுக்கு விற்பதற்காக மிதிவண்டிகளில் அலையும் அன்றாடங்காய்ச்சிகளைத் திருடர்களை விரட்டுவது போல் வழங்கல் துறை, வருவாய்த்துறை, காவல்துறை ஒநாய்கள் சந்து பொந்து காடு மேடு என்று ஓட ஓடத் துரத்தினார்கள். இன்றும் வழங்கல் துறையில் உரிமம் பெற்ற வாணிகர்கள் தவிர்த்தோர் தவசங்களைச் சாலைகளில் கொண்டுசென்றால் பறிமுதல் செய்ய இவர்களுக்கு அதிகாரம் உண்டு.

செ.:“வயலை நம்பி வாழ்ந்திருந்தால் ஒரு பயலை நம்பத் தேவையில்லை” என்ற சொலவடை நம் நாட்டில் இருக்கிறதே?

.:  அதெல்லாம் 1960களுக்கு முன். 10,000, 15,000 வேலிகள் என்று நிலம் வைத்திருந்த மிராசுதார்கள் எனப்படும் பெருநிலக்கிழார்களாகிய பெரும்புள்ளிகள் தங்கள் வாழ்நாளில் ஒரு நாள் கூட தங்கள் நிலங்களைப் பார்த்திருக்கமாட்டார்கள். அந் நாள் தஞ்சை மாவட்டத்தில் ஒவ்வொரு வருவாய் ஊரிலும் வருவாய்த்துறையின் கணக்குப்பிள்ளை(கர்ணம்) நீங்கலாக அங்கு நிலம் உடைய பெருநிலக்கிழார் ஒவ்வொருவருக்கும் ஒருவர்,
அங்கு சொத்துகளைக் கொண்ட ஒவ்வொரு கோயிலுக்கும் ஒருவர் என கணக்குப்பிள்ளைகள் உண்டு. அவர்கள் மூலம் கணக்கில் வரும் நெல்லுக்குரிய பணம் மட்டும் பண்ணையாருக்குச் சென்று சேரும். அவர் அதை எடுத்துக்கொண்டு சென்னைக்குச் சென்று இசைக் காலம்(சங்கீத சீசன்) போன்ற நிகழ்ச்சிகளிலும் பிற வழிகளிலும் பணத்தைச் செலவழித்து உவப்பார். தேவதாசி முறை ஒழியும் முன் பண்ணையார்களின் வளமனைகளிலேயே களியாட்டங்கள் நடைபெற்றன. பாட்டையும் கூத்தையும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குத்தகை உழவர்களின் வியர்வையைப் பாய்ச்சி வளர்த்தார்கள் இவர்கள். இந்தக் களியாட்டத்துக்குத் தோராயமான ஒரு பதத்தை சிந்துபைரவி திரைப்படத்தில் காணலாம்.

     ஆனால் இந்த பெருநிலக்கிழார்கள் அல்லாத ஒரு நிலக்கிழார் வகுப்பு இருந்தது. அது 100 ஏக்கருக்கு உள்பட்ட நிலவுடைமை கொண்டவர்ளாலானது. அவர்களில் பெரும்பாலோர் குத்தகைப் பயிருக்குப் பகரம் நேரடிப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டிருந்தனர். பயிரிடும் காலத்தில் அரிசி ஆலைகளிடம் முன்பணம் பெற்றுக்கொள்வர். அறுவடை முடிந்ததும் வாங்கிய முன்பணத்துக்கு இணையாக அப்போது நடப்பிலிருக்கும், பெரும்பாலும் குறைந்த விலைக்கு நெல்லை அளந்துவிட்டு எஞ்சிய நெல்லை அடுத்த அறுவடைக்கு முன் விலை உச்சியில் இருக்கும் போது விற்று ஆதாயம் பார்த்தனர். இவர்களின் பணம் சென்னையில் முதலீடாகப் பாயத்தொடங்கிய போதுதான் ஒவ்வொன்றான கணைகளைப் பாய்ச்சினார்கள் ஆட்சியாளர்களாகிய பனியா – பார்சிகளின் கூலிப்படையினர்.

செ.:லால்பகதூர் சாத்திரி செய்தவை பற்றிச் சொன்னீர்கள். வேறென்ன தாக்குதல்கள் வேளாண்மை மீது நிகழ்த்தப்பட்டன?

.:  நடந்தவற்றை அசைபோடும் போது நமக்குப் பெரும் ஐயங்கள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. சோவியத்தின் தலைவர் தாலின் காலம் வரை போதுமை நாடுகள் எனப்படுபவை தவிர்த்த பிற நாடுகளில் ஆயுதப் புரட்சி செய்து பொதுமை அரசுகளை அமைப்பதே அந்தந்த நாட்டுப் பொதுமைக் கட்சிகளுக்கு செயல்திட்டமாக வகுக்கப்பட்டிருந்தது. ஆனால் 1919 புரட்சி நடந்ததைத் தொடர்ந்த நெருக்கடியான சூழலில் குழவிப் பருவத்திலிருந்த சோவியத்துக்கு எதிரிகளைக் குறைத்துக்கொள்வதை முதல் நோக்கமாகக் கொண்டிருந்த லெனினை அணுகினார் இந்தியப் பொதுமைக் கட்சியின் தலைவரான எம்.என்.ராய் என்பவர். மூன்றாம் பொதுமை அனைத்துலகியத்தின்(Communist International) தலைவராகவும் இருந்த லெனினிடம் இந்தியப் பொதுமைக் கட்சியை அனைத்துலகியத்தின் உறுப்பாகச் சேர்த்துக்கொள்ள வேண்டினார். ஆனால் லெனின் பிரிட்டன் பொதுமைக் கட்சியின் உறுப்பாகச் செயல்படுமாறு அவருக்கு அறிவுறுத்தினார். அதனால் ஆயுதம் தாங்கிய புரட்சி பற்றிப் பேசிய இந்தியப் பொதுமையாளர்கள் உள்நாட்டுக் குடிமக்களைத்தான் கொன்றார்களேயன்றி ஆங்கிலேயருக்கு எதிராக காந்தி கூறியதற்கு அப்பால் செல்லவே இல்லை. ஆங்கிலப் படைத்தலைவனைக் கொன்ற பகத்சிங் கூட அதன் பிறகு சிறைச்சாலையில் இருக்கும் போதுதான் பொதுமை இலக்கியங்களைப் படித்தார் என்பது வரலாறு.   

      இந்தப் பின்னணியில் தாலின் காலத்துக்குப் பின் சோவியத் ஆட்சிக்கு வந்தவர்கள் ஆயுதப் புரட்சிக்குப் பகரம் பாராளுமன்ற மக்களாட்சி முறைக்கு உட்பட்ட செயல்திட்டங்களைக் கைக்கொண்டு பொதுமை ஆட்சியை அமைக்க அறிவுறுத்தினர். அதற்கான செயல்திட்டம் 1844ஆம் ஆண்டில் காரல் மார்க்சும் பிரடரிக் ஏங்கெல்சும் உருவாக்கிய புகழ் பெற்ற பொதுமைக் கட்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ள முற்றிய முதலாளிய நாடுகளுக்கான செயல்திட்டமாகும். அதாவது, முதலாளிகளின் பணத்தை வருமான வரி மூலம் தண்டி ஏழைகளுக்கான நலத்திட்டப் பணிகளை மேற்கொள்வது, நிலவுச்ச வரம்பு விதிப்பது போன்றவையாகும் அவை. இதே செயல்திட்டத்தைத்தான் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட நிகர்மை அனைத்துலகியமும்(Socialist International) கொண்டுள்ளது. அதன் வழிகாட்டலில் செயல்பட்ட நிகர்மைக் கட்சிப் பிரிவுகள் 1970களின் முடிவு வரை இந்தியாவில் இயங்கின. பொதுமைக் கட்சியும் நிகர்மைக் கட்சியும் முன்வைத்த வேண்டுகையாலேயே இந்தியாவில் நில உச்ச வரம்பு, குத்தகை ஒழிப்பு முதலியவை நடைமுறைக்கு வந்தன என்ற கோணத்தில் பார்க்க வேண்டும். அதாவது இந்த இரண்டு “நிலச் சீர்திருத்தங்”களிலும் அமெரிக்காவுக்குக் கணிசமான பங்கு இருக்க வாய்ப்புண்டு.

செ.:நாம் பேசிக்கொண்டிருப்பவற்றோடு நீங்கள் இப்போது கூறும் செய்திகள் எங்கு பொருந்துகின்றன?

.:  இங்கேதான் சிக்கலின் அடிப்படையே இருக்கிறது. எந்த ஒரு தொழிலிலும் நிலைத்து நிற்க வேண்டுமாயின் அது தன் நடைமுறைத் திறனில் செயல்படும் போது முனைவரின் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிய பின்னும் ஒரு குறிப்பிட்ட விகிதம் மிகுதி வேண்டும்.

செ.:ஆதாயம் எதற்கு? தன்னிறைவு போதாதா?

.:  எந்த ஒரு தொழில் கட்டமைப்பிலும் எதிர்பார்க்கத்தக்க பழுதுகளை, எதிர்பாராத இடையூறுகளை எதிர்கொள்ள ஒரு மிகுதிப்பாட்டுத் திறனும்(Spare capacity) பணக் கையிருப்பு(Reserve)ம் வேண்டும் இந்த பணக்கையிருப்புக் கோட்பாட்டைப் பயன்படுத்தித்தான் பங்கு முதலீட்டார்களை பெரும் நிறுவனங்கள் ஏமாற்றுகின்றன என்று நாம் முன்பு குறிப்பிட்டது நினைவிருக்கும். முன்பு மக்களுடைமை(தனியார்) பேருந்து நிறுவனங்களில் மிகுதிப் பேருந்து(Spare Bus) என்று எழுதப்பட்ட வண்டிகளைப் பார்த்திருக்கலாம் மூத்த குடிமக்கள். தட உரிமை பெற்ற மொத்த பேருந்துகளின் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் இத்தகைய மிகுதிப் பேருந்துகளை ஒவ்வொரு பேருந்து நிறுவனமும் வைத்திருக்க வேண்டும் என்று அரசு கண்காணித்தது. இப்போது அரசின் பொறுப்பிலிருக்கும் பேருந்துக் கழகங்கள் அத்தகைய மிகுதிப் பேருந்துகளைப் பராமரிப்பதே இல்லை. எடுத்துக்காட்டுக்கு, மார்த்தாண்டம் – திருப்பூர் என்றும் இடையிலுள்ள பல ஊர்களின் பெயர்கள் பெரிய வண்ண எழுத்துகளில் பெருஞ்செலவில் நான்கு புறங்களிலும் எழுதப்பட்ட பேருந்துகள் நாகர்கோவிலிருந்து பள்ளம் என்ற ஒரு சிற்றூர் பெயர் எழுதப்பட்ட, நெருங்கிச் சென்று பார்த்தால்தான் தெரியும் ஒரு சிறிய பலகையோடு செல்வதையும் பெரிய எழுத்துகளைப் பார்த்து ஏமாறுவோர் பேருந்தைத் தவறவிட்டுத் தவிப்பதையும் காணலாம். இது போன்ற காரணத்துக்காகத்தான் மிகுதி தேவையாகிறது. இனி, வெளியிலிருந்து தொழிலாளர் அமர்த்திச் செயற்படுவதாயின் அவர்களுக்கு தகுதியான கூலியும் பிற சலுகைகளும் வழங்க வேண்டுமானாலும் அதற்கேற்ற விளைப்பு(உற்பத்தி)க் கொள்திறனுடன் அது இயங்க வேண்டும். அதற்கேற்ப பணக்கையிருப்பும் வேண்டும்.

செ.:இதற்கும் நிலச் சீர்திருத்தங்களுக்கும் என்ன உறவு?

.:  நிலச் சீர்திருத்தம் முறைப்படி முதன்முதலில் இடம்பெற்றது பிரான்சில்தான். பெருநிலக்கிழார்களிடம் குத்தகை உழவனாக, நிலத்தை விட்டு வெளியேற உரிமையில்லாத அடிமையாகக் கிடந்த உழவர்களின் புரட்சியால்தான் அங்கு குத்தகை உழவனுக்கே நிலம் சொந்தமாக்கப்பட்டது. “உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்பதன் உண்மைப் பொருள் அதுதான். ஆனால் இப்படிக் கிடைத்த நிலத்தை மூலதனமற்ற அவன் பயிர்ச் செய்கைக்குப் பெற்ற கடன்களால் விற்றுவிட்டு புதிதாக உருவாகிக்கொண்டிருந்த தொழில் நகரங்களுக்கு வேலை தேடிச் சென்றான். இவ்வாறுதான் பொருளியல் வலிமையே இல்லாத குத்தகை உழவர்களின் கைகளில் சிறு சிறு கைப்பற்றுகளாகச்  சிதறி, அதனால் பிற்பட்ட, காலங்கடந்த வேளாண் தொழில்நுட்பங்களால் தேங்கிக் கிடந்த நிலையிலிருந்து பெரும்பண்ணை வேளாண்மை உருவாகி வேளாண் தொழில்நுட்பத்தில் பெரும் பாய்ச்சல் ஏற்பட்டது. மார்க்சும் ஏங்கெல்சும் முன்வைத்தது போன்ற நில உச்ச வரம்புத் திட்டம் அதற்கு முன்னரோ பின்னரோ முதலாளிய நாடுகளில் எங்கும் நடைமுறைக்கு வரவில்லை.

செ.:அப்படியானால் உழவன், அதாவது குத்தகை உழவன் என்றும் நிலவுடைமையாளனாகக் கூடாது என்கிறீர்களா?

.:  சிறு உழவனின் இடர்ப்பாடுகளை, இழிவுகளை அறியாததால் இக் குற்றச்சாட்டை என் மேல் சுமத்துகிறீர்கள் என்று நினைக்கிறேன்.  

      உழவர்களுக்கு அரசு கடன் கொடுக்கிறது என நம்பி ஊராட்சி ஒன்றியத்துக்குப் போனால் உரத்தையும் பூச்சி மருந்தையும் கடன் கணக்கில் கொடுப்பார்கள். அடியுரம் தேவைப்படும் போது மேலுரத்தையும் மேலுரம் தேவைப்படும் போது அடியுரத்தையும் கொடுப்பார்கள். அதை வாங்கி உரக்கடையில் அவர்கள் சொல்லும் விலைக்கு விற்று அவர்கள் சொல்லும் விலையைக் கொடுத்து தேவைப்படும் உரத்தை வாங்கவும் வேண்டும்.

      நகை நட்டுகளை அடமானம் வைப்பதற்கு முன்பு ஊர் வட்டிக்கடைகள் இருந்தன. மாபெரும் புரட்சி என்று நம் பொதுமைக் கட்சியினர் போற்றிய இந்திரா காந்தியின் கடன் ஒழிப்புச் சட்டத்தால் அவை அனைத்தும் அகன்றன. அவர்களிடம் தண்டல்கார அடியாள்களாகச் செயற்பட்டவர்கள் அந்த இடத்தில் கந்துவட்டிக்காரர்களாக வந்து நிலங்களைப் பறிக்கின்றனர். ஆளையும் அவர்களது வருவாய் அல்லது சொத்தையும் நம்பி கடன் கொடுத்த வாக்குத்தத்தப் பத்திர(பிராமிசரி) முறையும் அச் சட்டத்தால் காணாமல் போய்விட்டது.

      அரசும் கூட்டுறவு வங்கிகள் மூலமும் அரசுடைமை வங்கிகள் மூலமும் குறைந்த வட்டியில் நகைகளின் மீது கடன் கொடுக்கின்றன. ஆனால் ஓராண்டுக்குள் திருப்பாவிட்டால் வட்டிச் சலுகை கிடைக்காது. அதனால் உழவன் நெல்லை உரிமம் பெற்ற வாணிகன் என்ன விலை தந்தாலும் பதற்றத்துடன் விற்றுவிட கட்டாயப்படுத்தப்படுகிறான். மொத்தத்தில் குறைந்த வட்டியில் கடன் பெற்று கந்துவட்டிக்கு விடுவோர்க்கே இக் கடன் பயன்படுகிறது.

நிலவுடைமையாளனான முன்னாள் குத்தகை உழவனுக்கு முன்னாளில் நிலக்கிழாரால் பட்ட இடர்ப்பாடுகள் நீங்கினவே அன்றி அவனது வாழ்நிலையில் பெரும் மாற்றம் ஏற்படவில்லை. முன் போலவே அவன் தன் வயலில் உழைக்க வேண்டியுள்ளது. புதிய வரவாகிய உழுவுந்து, அறுவடை இயந்திரங்கள் போன்றவற்றுக்கு வாடகை கொடுக்க வேண்டியுள்ளது. பயிர்ச் செலவுக்கும் விதை, உரம், பூச்சிக்கொல்லிகள் போன்ற இடுபொருள்களுக்கும் பட்ட கடன்களுக்கான வட்டிக்கும் செலுத்தியது போக எதுவும் எஞ்சாது என்பதுதான் நிலைமை. வெளியே கூலி வேலை செய்தால்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்பதுதான் அவனது உண்மை நிலை. முன்னாள் குத்தகை உழவன் மட்டுமல்ல முன்னாள் நிலக்கிழார் கூட தங்கள் வாழ்க்கையின் உண்மையான தேவைகளை நிறைவேற்ற ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட வேண்டியுள்ளது. வயலிலிருந்து வீட்டுக்கு நெல் வருகிறது என்ற பெருமைக்காகவே இன்று தமிழகத்தில் வேளாண்மையில் ஈடுபடும் நிலையிலேயே அனைவரும் உள்ளனர்.

மனம் விட்டுப் பேசுவதானால் காலங்காலமாகப் பண்ணையார்கள் முன் துண்டைக் கட்கத்தில் இடுக்கிக்கொண்டு குனிந்து நின்று பழகிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த ஏழை முன்னாள் குத்தகை உழவர்களுக்கு இந்த இழிவுகள் உறைக்கவில்லை என்று தோன்றுகிறது.

     ஆட்சியாளர் வல்லரசியர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு விளம்பரம் செய்து புகுத்திய விதைகளாலும் உரங்களாலும் பயிர்கள் பலன் தராது போக பட்ட கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட உழவர்களின் எண்ணிக்கை இந்திய அளவில் பல இலக்கங்களைத் தாண்டுகிறது. தமிழகத்தில் உழவர்களின் உடைமைகள் சிறிதாக இருப்பதாலும் முற்றிலும் வேளாண்மையை நம்பியோர் அரிது என்பதாலும் அந்த அவலங்கள் நிகழவில்லை.

செ.:இதற்கு என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?

.:  இன்றைய குத்தகை ஒழிப்புச் சட்டம் உண்மையில் குத்தகை நிலைப்புச் சட்டமாகும். சட்டத்துக்கு முன்பு நிலவுடைமையாளர் நினைத்தால் குத்தகையாளரை எப்போது வேண்டுமானாலும் மாற்ற முடியும். அது போல் மழை பொய்த்தல், நோய்த்தாக்கு போன்ற காரணங்களால் விளைச்சல் குறைந்தாலும் பயிர் கருகினாலும் கூட நிறுவப்பட்ட வாரத்தை குத்தகையாளர் அளந்துவிட வேண்டும். புதிய சட்டத்தின் படி குத்தகையாளர் வாரத்தை ஒழுங்காகச் செலுத்திவந்தால் அவரை வயலிலிருந்து அகற்ற முடியாது. நிலத்தை குத்தகையாளரிடமிருந்து மீட்கவோ விற்கவோ உடைமையாளர் விரும்பினால் நிலத்தின் பரப்பில் பாதியை அல்லது அதற்குரிய விலையைக் குத்தகையாளருக்குக் கொடுக்க வேண்டும். குத்தகையாளர் விரும்பினால் பாதி நிலத்துக்குரிய விலையை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டு மொத்த நிலத்தையும் அவரிடம் விட்டுவிட வேண்டும். இதனால் நிலத்தை விற்க வேண்டிய நெருக்கடியாலன்றி வேறெந்தச் சூழலிலும் குத்தகையில் மாற்றம் ஏற்படாது என்பதனால்தான் இச்சட்டத்தை குத்தகை நிலைப்புச் சட்டம் என்றேன்.

செ.:அப்படியென்றால் வேறு எத்தகைய குத்தகை ஒழிப்புச் சட்டம் வேண்டுமென்கிறீர்கள்?

.: கோயில் நிலங்கள், அறக்கட்டளை நிலங்கள் உட்பட அனைத்து நிலங்களிலும் குத்தகை முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். நில உச்ச வரம்பு விதிவிலக்கின்றி 200 எக்டேர் ஆக வேண்டும். விடுதலை பெறும் குத்தகை நிலத்தின் மதிப்பில் பாதியை நிலத்தைப் பெறும் உடைமையாளர் அல்லது குத்தகையாளர் மற்றவர்க்குச் செலுத்த வசதியாக ஒரு பணத்தொகுப்பை அரசு உருவாக்கி நிலத்தைப் பெற்றவர்க்கு எளிய தவணைக் கடனாக வழங்க வேண்டும்.

இத்தகைய ஒரு திட்டத்தை ம.கோ.இரா. முதலமைச்சராக இருந்த போது கோயில் நிலங்களைப் பொறுத்து முன்வைத்ததாக நினைவு. அது என்னவாயிற்று என்று தெரியவில்லை.

செ.:குத்தகை முறையும் ஒழிந்து நிலவுச்சவரம்பையும் உயர்த்திவிட்டால் அதனால் என்ன பயன் கிடைக்கும் என்று கூறுகிறீர்கள்?

.:  அத்துடன் வருமானவரியாயும் ஒழித்துவிட்டால் வேளாண்மையை, அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கத்தக்க ஆதாயம் தரும் ஒரு தொழிலாக நடத்தத் தேவையான பரப்புள்ள வேளாண் பண்ணைகளை உருவாக்கலாம். அவற்றுள் மாட்டுப்பண்ணையும் மேடான பகுதியில் குறிப்பிட்ட பரப்பு காடும் வளர்த்து தாழ்வான பகுதியில் ஒரு சிறு குளமும் அமைத்தால் பயிர்களுக்குத் தேவையான உரம், கால்நடைகளுக்குத் தேவையான தீவனம், எரிவளிகள் மூலம் மின்னாற்றல் என்று ஒரு கட்டத்தில் வெளியிலிருந்து எந்த இடுபொருளும் இன்றி ஆதாயம் மட்டும் பெறும் நிலையை எட்டலாம். காடுகளாலும் கட்டற்ற கால்நடை மேய்ச்சல் ஒழிக்கப்படுவதால் நிலத்தில் வளரும் செடிகொடிகளாலும் பயிர்களாலும் மண்ணரிப்பு கட்டுப்பட்டு குளத்தின் துணையுடன் நிலத்தடி நீர் வளம் பெருகும். பசுமை போர்த்திய நிலத்தில் வெய்யில் நேரடியாகத் தாக்காது, நிலைத்திணைகள்(தாவரங்கள்) நீராவியை வெளியிட்டு காற்று வெப்பத்தை மட்டுப்படுத்தும். அதனால் வானில் திரளும் மேகம் எளிதில் துளிநிலையை அடைந்து மழைப்பொழிவு சீர்மை எய்தும்.

செ.:அப்படியானால் வழக்கம் போல் பனியா – பார்சி கூட்டம் தமிழக நிலங்கள் அனைத்தையும் வளைத்துவிடுவார்களே!

.:  இப்போது மட்டும் என்னவாம்? ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கு முன்பே பார்சியான டாட்டா இராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பளம் அமைப்பதற்கென்று 20,000(இருபதினாயிரம்) ஏக்கர்கள் வாங்கிப் போட்டிருக்கிறானே! அங்கு விளையும் உப்பையும் இறக்குமதியாகும் அயோடினையும் கலந்துதான் உடலுக்குத் தீங்கு தரும் என்று அறிவியலாரில் ஒரு பகுதியினர் கூறும் அயோடின் உப்பைக் கட்டாயமாக்கி முன்பு தெருவில் அரிசி விற்ற அன்றாடங்காய்ச்சிகளைத் துரத்தியது போல் தெருவில் உப்பு விற்றவர்களையும் ஓட ஓட விரட்டினார்களே மறந்துவிட்டதா? நம் ஆட்சியாளர்கள் யாருக்காக ஆள்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

      உண்மை என்னவென்றால் நெல், சோளம் போன்ற ஒற்றைப் பயிர் நிலங்களுக்குத்தான் உச்சவரம்பு, கலப்புப் பண்ணைகளுக்குப் பொருந்தாது. இதைப் பற்றி நிலவுடைமையாளருக்குக்  கூட எடுத்துச்சொல்ல யாருமில்லை. எனவே வருமான வரியையும் குத்தகை முறையையும் ஒழித்தாலே போதும்.

      வெளியிலுள்ளவர்கள் நம் நிலங்களை வாங்கிவிடுவார்களே என்ற உங்கள் கேள்வி இன்றைய நிலைமைக்குப் பொருத்தமானதுதான். இங்குதான் தமிழ் – தமிழகத் தேசியப் போராட்டத்தின் உயிர் மூச்சே அடங்கியுள்ளது. 1956 நவம்பர் 1ஆம் நாள் வேறெங்கும் வேரின்றி இங்கு வாழ்ந்தவர்கள், அவர்கள் வழிவந்தவர்கள் தவிர யாருக்கும் இங்கு நிலம் வைத்துக்கொள்ளும் உரிமை கூடாது என்பதுதான் நம் அடிப்படை அணுகல்.

செ.:அப்படியானால் தமிழ்நாட்டில் பண்ணை நடத்துவதற்குத் தகுதியான நிலங்கள் அனைத்தையும் பண்ணைகளாக மாற்றுவதற்குத் தேவையான மூலதனத்தைத் தமிழக மக்களிடம் திரட்ட முடியுமா?

.:  உறுதியாக முடியும். தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளில் ஈடுபட்டிருப்போரும் சட்டத்துக்குட்பட்டு ஈட்டி வருமான வரிக்கு அஞ்சி பதுங்கியுள்ள பணம் கணக்கற்றது. அதில் ஒரு கணிசமான நூற்றுமேனி வீட்டுமனைகளில் புதைந்து கிடைக்கிறது. எஞ்சியவை ஒன்றுக்குள் ஒன்றான கள்ளக் கணக்குகளில் புதைக்கப்பட்டுள்ளன. அத்துடன் கள்ளச் சாராயம் காய்ச்சியோர் கைகளில் திரண்டுள்ள கணக்கற்ற பணமும் கந்துவட்டியில் திரண்டுள்ள மாபெரும் தொகைகளும் போக்கிடமற்றுக் கிடக்கின்றன.

செ.:கள்ளச்சாராயம் போன்ற குற்றச் செயல்களில் ஈட்டப்பட்ட பணத்தை சட்டப் பாதுகாப்புள்ள தொழிலில் முதலிட விடுவது எப்படி ஞாயமாகும்?

.:  நீங்கள் கேட்ட கேள்வி மிக ஞாயமானதுதான். ஆனால் இந்தப் பணத்தை அவர்களிடமிருந்து பறிக்க நமக்கு எந்த வழியுமில்லையே. அதனால் அது தறிகெட்டு முழுமையான குமுகப் பகை நடவடிக்கைகளில்தான் பயன்படுகிறது. ஒரு முறை இந்தப் பணத்தை இம் மண்ணை வளப்படுத்தும் வளர்ச்சி நடவடிக்கைகளில் பயன்படுத்துவதைச் சரியான ஓர் உத்தியாக நான் கருதுகிறேன். நம் மக்களிடமிருந்து தவறான வழியில் கைப்பற்றப்பட்ட செல்வத்தை குமுக மாற்றத்துக்கும் மேம்பாட்டுக்கும் அடிப்படையான ஒரு திசையில் முதலிடச் செய்வது தவறல்ல. அயல் நாட்டு நேரடி முதலீடு என்ற பெயரில் அரசியல்வாணரும் அதிகாரிகளும் அடங்கிய ஆட்சியாளரும் அவர்களுக்கு நெருக்கமானவர்களும் திருட்டுத்தனமாக முதலிட்டு பெரும் ஆதாயத்தை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்வதை மிகப் பெரும் பொருளியல் புரட்சி என்று புளுகும் சூழலில் நம் மக்களைச் சுரண்டி உள்ளுரில் வைத்திருப்பவர்களிடமிருக்கும் பணத்தை மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதில் தவறேதும் இல்லை. தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மகிழுந்து, சரக்கிகள் என்று அனைத்துவகை தானோடிகளின்(Automobiles) விற்பனையிலும் பழையவற்றின்  மறுவிற்பனையிலும் ஆங்காங்குள்ள உள்ளூர் முகவர்கள் மூலமாக வட்டித்தொழில் செய்து இந்திய மக்களைப் பனியாக்கள் பிழிவது அந்தந்தத் துறை சார்ந்த அனைவருக்கும் தெரியும். அது மட்டுமல்ல இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலுள்ள ஏறக்குறைய அனைத்துச் சிறு - குறுந்தொழில்களும் அவர்களின் முதலீட்டு, மூலப்பொருள், விற்பனைச் சந்தைக் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன. கோயில்பட்டி, சிவகாசி போன்ற ஊர்களில் பனியாக்கள் வந்தால் தங்குவதற்கென்றே தனி வசதிகளுடன் தங்ககங்கள்(Lodges) ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டுவிட்டன. எனவே இவர்களுடைய படையெடுப்பை எதிர்கொள்வதற்கு உள்ளுரில் பயனின்றித் தேங்கி நிற்கும் பணத்தை முதலில் வேளாண்மையில், குறிப்பாக பெரும்பண்ணை வேளாண்மையில் இறக்கிவிடுவதுதான் ஒரே வழி. இதன் மூலம்தான் நம் மண்வளத்தையும் மழைவளத்தையும் காக்கவும் மீட்கவும் முடியும்.

செ.:ஏற்கனவே “விலையில்லா” அரிசி மூலமும் விலைக் கட்டுப்பாடு மூலமும் நெல் வேளாண்மையையே உழவர்கள் கைவிடும் சூழலில் நீங்கள் குறிப்பிடும் கலப்புப் பண்ணைகளை அமைப்பதற்கு நீங்கள் சுட்டிக்காட்டும் பணம் வைத்திருப்பவர்கள் எப்படி மூன்வருவார்கள்?

.:  இதுவும் ஓர் அடிப்படைக் கேள்விதான். வேளாண்மையின் அடிப்படைச் சிக்கலே அதைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கொடுப்பதில்லை என்பதுதான். மரபு வேளாண்மையில் பயிர்ச் செய்கை காலத்தில் நிலத்தை உழது பணபடுத்தவும் நாற்று நடவும் செறிவான தொழிலாளர் தேவை உண்டு. அது போல் அறுவடைக் காலத்திலும் ஆட்கள் தேவை. இடையில் களை எடுப்பதற்கு பெண்களுக்குக் கொஞ்சம் வேலை கிடைக்கும். எஞ்சிய நாட்களில் வேறு வேலை கிடைத்தால் உண்டு. இல்லையென்றால் அரைப் பட்டினிதான். இந்த மக்களின் அவலங்களைத் தீர்க்க ஆண்டு முழுவதும் வேலை நடக்கத்தக்க பெரும் வேளாண் பண்ணைகளை உருவாக்குவதற்கான போராட்டங்களை நடத்தக் கடமைப்பட்ட பொதுமைக் கட்சியினர் அந்தத் தொழிலாளர்களைத் திரட்டி இந்தச் சிற்றுடைமையாளர்கள், குத்தகை உழவர்களுக்கு எதிராக கூலி உயர்வுப் போராட்டங்களை நடத்தி தமிழக வேளாண்மையைச் சாவுப் படுக்கையில் கிடத்திவிட்டார்கள்.

செ.:நீங்கள் மிகத் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறீர்கள். பாட்டாளிகளுக்காகப் போராடுவதற்காகத்தான் பொதுமைக் கட்சியை மார்கசும் ஏங்கெல்சும் ஆன மாமனிதர்கள் உருவாக்கினார்களே அன்றி தமிழகத் தொழிலாளியைச் சுரண்டும் முதலாளிகளுக்குப் போராடுவதற்காக அல்ல.

.:  மார்க்சும் ஏங்கெல்சும் கூறியவை நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை ஒரே கூரையின் கீழ் வேலைவாங்கும் மாபெரும் தொழிலகத் தொழிலாளர்களைக் குறித்து. அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் வாழ்நாளுக்கு முன்னால் நடந்து முடிந்த, குத்தகை உழவர்கள் குத்தகை முறை ஒழிப்பினால் சிற்றுடைமையாளராகி, தாக்குப்பிடிக்க முடியாமல் புதிய பணக்காரர்களுக்கு நிலத்தை விற்றுவிட்டு நகரங்களில் உருவாகிக் கொண்டிருந்த புதிய பெருந்தொழிலகங்களில் வேலை தேடிச் சென்றதைக் குறிப்பிட்டு அவை அனைத்தும் பழைய நிலக்கிழமைக் குமுகத்தை ஒழித்து முழு உரிமை கொண்ட, நாளில் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் வேலை செய்து எஞ்சிய நேரத்தைத் தன் விருப்பம் போலச் செலவிட முடிந்த பாட்டாளியர்களைக் கொண்ட புதிய குமுகத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள். அந்தக் குத்தகை உழவர்கள் மாபெரும் அல்லல்களுக்கு ஆளானாலும் மனித உறவுகளைப் பொறுத்த வரை தாழ்ந்த நிலக்கிழமை நிலையிலிருந்து மேம்பட்ட முதலாளியக் குமுகம் அமைந்ததை அவர்கள் வெளிப்படையாகவே தங்கள் பொதுமைக் கட்சி அறிக்கையில் புகழ்ந்திருக்கிறார்கள். அந்த முதலாளியக் கட்டத்திலிருந்து அனைத்தும் பாட்டாளிகளின் கட்டுப்பாட்டினுள் வரும் பொதுமைக் குமுகத்தை அமைப்பது குறித்துத்தான் அவர்கள் பேசினார்கள். அத்துடன் முதலாளியக் குமுகத்துக்கு முந்திய குமுகங்கள் அததற்குரிய வரிசையில்தான் முன்னேற முடியும் என்றும் கூறியிருக்கிறார்.
      … And even when a society has got upon the right track for the discovery of the natural laws of motion – and it is the ultimate aim of this work, to lay bare the economic law of motion of modern society - it can neither clear by bold leaps, nor remove by legal enactments, the obstacles offered by the successive phases of its normal development. But it can shorten and lessen its birth pangs.- Karl Mark, Capital, Vol.Ⅰ P.20, Preface to the first German Edition, Progress Publishers, Moscow.

      இயக்கத்தின் இயற்கை விதிகளைக் கண்டுபிடிப்பதற்கான சரியான தடத்தில் வந்தடைந்தாலும் ஒரு குமுகம் - இவ்வாக்கத்தின் அறுதி நோக்கமே இற்றைக் குமுகத்தின் பொருளியல் இயங்குநிலையின் விதிகளை அப்பட்டமாக வெளிக்காட்டுவதுதான் - தன் இயல்பான வளர்ச்சியின் அடுத்தடுத்து வரும் கட்டங்கள் தரும் தடங்கல்களை துணிச்சலான தாவுதல்களால் அப்புறப்படுத்தவோ சட்ட நிறைவேற்றங்களால் அகற்றவோ முடியாது. ஆனால், பேற்றுக்காலத் துடிப்புகளைக் குறைத்து காலநீட்சியைக் குறுக்க முடியும். - காரல் மார்க்சு, மூலதனம், மடலம் 1, பக்.20, செருமானியப் பதிப்பின் முன்னுரை, முன்னேறப் பதிப்பகம் மாசுக்கோ (ஆங்கிலப் பதிப்பு)

… The country that is more developed industrially only shows, to the less developed, the image of its own future.- Ⅰbid p.19

      தொழில்துறையில் கூடுதலாக முன்னேறிய நாடு குறைவாக முன்னேறிய நாட்டுக்கு அதன் சொந்த எதிர்கால வடிவத்தைத்தான் காட்டுகிறது. - அதேநூல், பக்.19.

      தமிழகத்தைப் பொறுத்தவரை நிக்கிழமைக் குமுகத்தின் மீ இழிந்த வடிவமாகிய சாதியத்தை அழிக்க முதலாளியத்துக்கு இணையாக வேறொன்றும் கிடையாது.

செ.:“பேற்றுக்காலத் துடிப்புகள்” என்று மார்க்சு எதைக் கூறுகிறார்?

.:  ஒர் குத்தகை உழவனுக்கு அவன் பயிரிடும் நிலத்தில் பாதியோ அல்லது நான் முன்வைத்திருப்பது போல் அரசு வைக்கும் பணத்தொகுப்பிலிருந்து கடன் பெற்று முழுவதுமோ கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந் நிலத்தில் பயிர் செய்து வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் நிலத்தை விற்கிறான் என்றும் வைத்துக்கொள்வோம். அவனது அகவை(வயது), கல்வி, ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் அவனுக்கு உரிய பயிற்சியளித்து பண்ணைகளிலோ வேறு துறைகளிலோ பணியாற்ற வைக்க வேண்டும். அகவை முதிர்ச்சியினால் இயலாதோர்க்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். இவற்றை அரசு செய்ய வேண்டும். தொடக்க காலத்தில் இத்தகைய வாய்ப்புகளோ வசதிகளோ இல்லாமல் அடித்தட்டு மக்கள் பட்ட துயர்களையே பேற்றுக்காலத் துடிப்புகள் என்று மார்க்சு கூறுகிறார். தங்கள் காலத்தில் நாம் மேலே குறிப்பிட்ட துயர் ஆற்றும் நடைமுறைகள் உருவாகிக்கொண்டிருந்ததை மனதில் கொண்டுதான் அத் துடிப்புகளையும் அவற்றின் காலநீட்சியையும் குறைக்க முடியும் என்கிறார்.  

செ.:பண்ணைகளின் உருவாக்கம் எவ்வாறு சாதிகளை அழிக்கும் என்று நம்புகிறீர்கள்?

.:  உங்களுக்கு நாட்டுப்புறத்து நடவடிக்கைகள் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அங்கு வெவ்வேறு சாதியினருக்குத் தனித்தனிக் குடியிருப்புகள் உண்டு. அவற்றில் ஒன்றிலிருந்து ஒன்று மாற்றி ஒரு சாதியைச் சேர்ந்த ஒருவர் வாழ முடியாது. ஓர் ஊரைச் சேர்ந்த உயர்வு – தாழ்வு கற்பிக்கப்பட்ட இரண்டு சாதிகளைச் சேர்ந்த இருவர் நகர் ஒன்றில் பணியாற்றும் போது நண்பர்களாக ஒரே அறையில் சேர்ந்து வாழலாம், சமைத்து உண்ணலாம். ஆனால் அவர்கள் தங்கள் ஊருக்கு விடுமுறை போன்ற காரணத்துக்காக வந்தால் அதே நடைமுறையைத் தொடர முடியாது. அதாவது சாதிகளின் நிலைக்களன்களில் ஒன்று இன்றைய ஊர்கள். இவற்றைக் கலைக்காமல் சாதிகளை அழிக்க முடியாது.

செ.:பண்ணைகளின் உருவாக்கத்துக்கும் ஊர்கள் கலைவதற்கும் எப்படி முடிச்சுப்போடுகிறீர்கள்?

.:  ஒருவர் தன்னிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு பண்ணை ஒன்று உருவாக்க விரும்பியதும் அவர் தொழில் நடத்துவதற்குக் கட்டுப்படியாகக் கிட்டத்தட்ட பொருத்தமான ஒரு விலைக்கு அவர் விரும்பும் நிலங்களை விற்க அனைவரும் ஆயத்தமாக மாட்டார்கள். வேறு வழியில்லாமல் ஒவ்வொருவாராகத்தான் நிலங்களை விற்க முன்வருவார்கள். எனவே உடனடியாகப் பண்ணை உருவாகி நிலத்தை விற்றவர்கள் அதில் வேலைக்குச் செல்வார்கள் என்று கூற முடியாது. அத்துடன் நான் முன்பு கூறியது போல் அவர் வேறு தொழில் ஏதாவது செய்துவந்தால் அதைக்கொண்டும் பிழைக்க முடியாத நிலை வந்தால்தான் மாற்று வேலை தேடுவார். அதிலும் இருக்கும் நிலையுடன் ஒப்பிட தாழ்ந்ததென்று கருதத்தக்க இன்னொரு வேலையை உள்ளூரில் ஏற்றுக்கொள்ள மிகப் பெரும்பாலோர் விரும்புவதில்லை. எனவே ஊர் கலையும் நடைமுறை முதலில் பளிச்சென்று கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெறாது. பண்ணை உருவாக்கம் எனும் நிகழ்முறை விரைவு பெறப் பெற ஊர்களின் கலைவு விரைவு பெறும். சாதிகளின் நிலைக்களன்களில் மிக அடிப்படையான ஒன்று இல்லாமல் போகும்.

செ.:சாதியை ஒழிக்கவென்று கிளம்பிய திராவிட இயக்கத்தால் சாதி அழியவில்லை. இப்போது சாதியை ஒழிக்கவென்று நீங்கள் புதிதாகக் கூறும் உத்தி மட்டும் வெற்றி பெறும் என்பதற்கு என்ன அடிப்படை.

.:  திராவிட இயக்கம் என்பதில் நயன்மைக் கட்சியையும் திராவிடர், திராவிட என்ற முன்னொட்டுகளைக் கொண்ட அமைப்புகளையும் ஒரே தரத்தில் எடைபோடுவது தவறு என்பது என் நிலைப்பாடு.

செ.:அப்படி அவற்றுக்கிடையில் என்ற வேறுபாட்டை நீங்கள் காண்கிறீர்கள்?

.:  நயன்மைக் கட்சியினர் பார்ப்பனர்களை ஒட்டுமொத்தமாக எதிர்க்கவில்லை. அதிகார பீடங்களில் அமர்ந்து தங்கள் நலன்களுக்குத் தடங்கலாக இருந்த பார்ப்பனர்களுக்கு எதிராக இட ஒதுக்கீடு கேட்டனர். கோயில்களில் இறையன்பர்கள் தட்டில் போடும் சில்லறைக்காகப் பல்லை இளிக்கும் பூசாரிப் பார்ப்பனர்களுக்கு எதிராக அவர்கள் செயல்படவில்லை. அரசியலில் பார்ப்பனர்களுக்கு எதிராகப் பேசிவிட்டு தனிப்பட்ட முறையில் கோயில் பார்ப்பனப் பூசாரி முன் மண்டியிட்டு முரண்பாடாக நயன்மைக் கட்சியினர் செயல்படுவதாக அண்ணாத்துரையே அவர்களைக் குறைகூறியிருக்கிறார். அதே வேளையில் வடக்கத்தி பனியா – பார்சி பொருளியல் படையெடுப்பு அவர்களை மிகவும் உறுத்திய சிக்கலாக இருந்தது. அத் திசையில் அவர்கள் ஆட்சிக் காலத்தில் நன்றாகவே செயல்பட்டனர். இந்த இரு திசைகளில் அவர்கள் முன்வைத்த முழக்கம் அவர்கள் எதிர்பாராமலேயே ஊர்ப்புறங்களில் கோயில் சார்ந்தும் நிலவுடைமை சார்ந்தும் வாழ்ந்த
பார்ப்பனர்களுக்கு எதிராக அங்குள்ள மக்களின் உணர்வுகளைத் தூண்டியது. அன்றைய தமிழகத்தில் பெருங்கோயில் சார்ந்த ஒவ்வோர் ஊரிலும் விதிவிலக்கின்றி வாழ்ந்த பார்ப்பனர் பிற அனைத்துச் சாதியினரையும் இழிவுபடுத்தியதையும், குறிப்பாக, பார்ப்பனப் பெண்கள் தெருவில் வரும் போது எதிரில் வரும் எவரையும் “ஒத்திப்போ, ஒத்திப்போ” என்று துரத்தியதையும் கடந்த இரு தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் அறியமாட்டார்கள். அதனால் நயன்மைக் கட்சியின் நிலைப்பாடு ஊர்ப்புறகளில் உள்ள படித்த, பணம் படைத்தவர்களை ஈர்த்ததில் வியப்பில்லை. அதனால்தான் அப்போதுதான் உருவாகியிருந்த நாடார் மகாசன சங்கம் தங்கள் பொருளியல் வளர்ச்சி நிலைக்குத் தகுந்த குமுகியல் மதிப்பு வேண்டும் என்பதற்காக நயன்மைக் கட்சியை அணுகி கூட்டணி வைத்துக்கொண்டது.

ஆனால் ஏற்கனவே மக்களிடையில் செல்வாக்குப் பெற்றுவிட்ட பேரவைக் கட்சிக்கு ஈடுகொடுக்க முடியாது வீழ்ந்த நயன்மைக் கட்சி பெரியார் கைக்கு வந்ததும் பார்ப்பனர்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் நீறுபூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டிருந்த வெறுப்பு அதே ஊர்ப்புறங்களில் நிலைகொண்டிருந்த நாடார் மகாசன சங்கத்தினரின் பின்னணி வலுவுடன் சேர்ந்து பெரியாருக்கு உதவியது. இப்போது அவரது பங்கு இயக்கத்தை நன்றாக வளர்த்துவிட்டு வளர உதவியவர்களை அகற்றுவது. அதை அவர் நன்றாகவே செய்தார். அதற்கு ஏற்றாற்போல் பல இதழ்களைத் தொடங்கித் தன் பெயரிலும் தன் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் வைத்துக்கொண்டார். தங்கள் தங்கள் குமுகக் குறிக்கோளுக்காகப் பெரியாருக்குத் துணை நின்ற ஊ.பு.அ.சொந்திரபாண்டியன், கி.ஆ.பெ.விசுவநாதம், திரிகூடசுந்தரம் போன்றவர்கள் பெரியாரை நம்பி ஏமாந்தனர். இயக்கத்தின் மீது தன் பிடி உறுதியானதும் 3500 ஈக மறவர்களை கருஞ்சட்டைப் படை என்ற பெயரில் திரட்டினார். தங்கள் குடும்பப் பொறுப்புக்கு மாற்று ஏற்பாடு செய்து எப்போது வேண்டுமாயினும் சிறை செல்லவோ உயிரை இழக்கவோ ஆயத்தமாக இருக்குமாறு விடுத்த அழைப்பின் பேரில் திரண்டவர்கள் அவர்கள்.
   அவர்களை ஒருமுறை தூண்டி விட்டு சீரங்கத்துப் படித்துறையில் குளித்துக்கொண்டிருந்த பார்ப்பனர்களின் பூணூல்களை அறுக்க வைத்து அப்புறம் தான் அப்படிச் சொல்லவில்லை என்று பிறழ்ந்தார். இது ஒரு முழுமையான மிரட்டுதல் உத்தி. அவரது கட்சி மாநாடுகளின் தொடக்கத்தில் நடைபெறும் ஊர்வலங்களில் அணிவகுக்கவும், மாநாட்டுப் பாதுகாப்புக்கும் தவிர இப்படையினரை வேறெங்கும் வேறெதற்கும் பயன்படுத்தவில்லை. “அய்யா”வின் ஆணை வரும் வருமென்று வாணாள் முழுக்கக் காத்தருந்ததுதான் மிச்சம். ஆனால் தமிழக மக்களின் நலன்களுக்கு எதிரானவர்களுக்கு எதிராக ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால் அங்கு பெரியார் இருப்பார். எடுத்துக்காட்டுக்கு தெற்காசிய நாடுகளிலிருந்து துரத்தப்பட்ட தமிழக வாணிகர்கள், தொழில்முனைவோருக்கு எதிராகவும் இடையூறாகவும் சென்னையில் செயல்பட்ட ஆந்திரம், கர்நாடகம் பேன்ற அண்டை மாநிலங்களைச் சார்ந்த பெரும் புள்ளிகளுக்கு எதிராக உள்ளூர் மக்களை அணிதிரட்டும் உத்தியாக இராசா.அண்ணாமலைச் செட்டியார் ஒருங்கிணைத்த தமிழிசைச் சங்கத்தின் கூட்டத்தில் பெரியார் கலந்துகொண்டார். பெரியாரை நம்புவோர் பெரியாருக்குத் தமிழ், தமிழக நலன்களின் மீது இருக்கும் பேரார்வத்தை இதில் காண விரும்புவர். ஆனால் ஒரு கருஞ்சட்டைப் படையை வைத்திருக்கும் பெரியார் அயல் மாநிலத்தைச் சேர்ந்த வாணிகர்களுக்கும் தொழில் முனைவோருக்கும் ஓர் அச்சுறுத்தலாகவே இருந்திருப்பார். எனவே அவரை அமைதிப்படுத்த, விலைக்கு வாங்க முனைந்திருப்பர். அவருக்கு பணத்தைக் கண்டால் மறுக்கவே தோன்றாது. சில்லறையான பல செய்திகளை ஏறக்குறைய அனைவரும் அறிவர். கணிசமான தொகைகள் தொடர்பான சில செய்திகளை அவரது தத்துப் பிள்ளை கி.வீரமணி ஆங்காங்கே, தன் செயல்பாடுகள் கேள்விக்குள்ளாகும் போது எடுத்துவைத்து ஞாயப்படுத்தியுள்ளார். ஆக, வெளியிலிருந்து தமிழகத்துக்குப் பணத்தோடு வந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் குறிப்பிடும்படியாக சென்னையிலோ தமிழகத்திலோ செழித்ததாகத் தெரியவில்லை.

செ.:நாம் சாதியொழிப்பில் பெரியாரின் பங்கு பற்றியல்லாவா பேசத்தொடங்கினோம்? நீங்கள் வேறு எங்கோ சென்றுகொண்டிருக்கிறீர்களே!

.:  நான் அங்குதான் வர இருக்கிறேன். வெளியிலிருந்து தமிழகப் பொருளியல் நலன்களுக்கு எதிராக வரும் அறைகூவல்களை எதிர்த்து உள்ளூர் பொருளியல் நலக் குழுக்களை அணிதிரட்டி அவர்களே தங்கள் போராட்டங்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் துணையைப் பெற, நயன்மைக் கட்சி காட்டிய வழியில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கும் குழுவினரே கருத்துப் பரப்பலும் கள நடவடிக்கைகளும் மேற்கொள்ள வைக்க இருந்த வாய்ப்பைக் கெடுத்து வெளிப் பொருளியல் விசைகளுக்கு விலை போய் வெற்று சாதி எதிர்ப்பு, ஒதுக்கீடு என்று போராட்டங்கள் நடத்தி வெளிக் கொள்ளையர்களிடமிருந்து மக்களின் கவனத்தைத் திருப்பி மக்களுக்குள் பகைமையை மூட்டிவிட்டார் என்ற உண்மையைச் சுட்டவே நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் பற்றிக் கூறினேன்.

பெரியார் இதை மட்டும் செய்யவில்லை. சாதி ஒழிப்புக்கு வழி என்று புத்தம், கிறித்துவம், முகம்மதியம் போன்ற வெளிச் சமயங்களுக்கு ஆள்பிடித்துக் கொடுக்கும் வேலையையும் செய்தார்.

செ.:யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத கற்பனையான குற்றச்சாட்டுகளைப் பெரியார் மீது வைக்கிறீர்கள்.

22.1.16

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 38


 29.குமுகியல் வித்தகர்களன்றோ நாம்! - 7

.:  கண்டிப்பாகக் கேட்க வேண்டிய கேள்வி. ஆனால் ஐரோப்பாவின் செல்லப்பிள்ளை நேருவின் காலத்திலேயே உள்நாட்டில் உருவாகும் தொழில்நுட்பங்களை அழிக்கும் பணி தொடங்கிவிட்டது. தமிழகத்தில் எடுத்துக்காட்டு கோ.து.நாயுடு. மாபெரும் தொழில்நுட்ப மேதையான அவரை நெஞ்சுடைந்து சாகவிட்டது நேருவின் தரகு உள்ளம். சில ஆண்டுகளுக்கு முன் இராமர் என்ற தமிழக இளைஞர் தன் புதுப்புனைவான நிலைத்திணை எரிநீரை முறைப்படி செய்துகாட்டக் கூட முடியாமல் அவரைப் பூட்டிய அரங்குக்குள் வைத்து இழிவுபடுத்திய மேற்குடியினரான இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியர்களின் பொறாமை நாம் கண்ணால் கண்டது. ஆனால் இந்திய(மார்கசிய)பொதுமைக் கட்சியின் தமிழகத் தோழர்களிடம் வெடித்தொழுந்த எதிர்ப்பு வெறியின் தோற்றுவாயையும் காரணத்தையும் என்னதான் முயன்றும் புரிந்துகொள்ள முடியவில்லை. யாரோ கணிசமாகப் பணத்தை அள்ளிக்கொடுத்து இவர்களைத் தூண்டியிருப்பார்கள் என்பது தவிர வேறு எந்த விளக்கமும் கிடைக்கவில்லை.

சேலம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் ஈருருளிகளின்(இரு சக்கர வாகனங்களின்) எரிதல் கட்டமைப்பில் தான் கண்டுபிடித்துள்ள ஒரு சிறு உறுப்பைப் பொருத்தினால் எரிபொருளில் 25% மிச்சமாகும் என்று ஊரூராகச் சென்று விளக்கினார். எவரும் கண்டுகொள்ளவில்லை. தென்காசியைச் சார்ந்த ஒருவர் நூலைப் பயன்படுத்தாமல் தான் கண்டுபிடித்துள்ள ஒரு பசையைக் கொண்டு உடைப் பகுதிகளை ஒட்டலாம் என்று அலறிப்பார்த்தார். அதற்கு காப்புரிமம் கிடைக்காத நிலையில் அத் தொழில்நுட்பம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகியுள்ளதாக பின்னாளில் செய்தி வந்தது. ஒன்றேல் “நம்” காப்புரிமை நிறுவனம் கண்டுபிடிப்பாளர் தனக்குத் தந்த தொழில்நுட்ப விளத்தங்களை அயல்நாட்டினருக்கு விற்றிருக்க வேண்டும், அன்றேல் கண்டுபிடிப்பாளரையே வெளிநாட்டினர் அணுகி விலை கொடுத்து வாங்கியிருக்க வேண்டும். எது நடந்திருந்தாலும் நம் மக்களுக்குரிய அயல்செலாவணி இழப்புதான் விளைவு. 

குடிமக்கள் கண்டுபிடிப்புகளின் நிலை இதுவென்றால் போர்த்தளவாடங்களைப் படைப்பதற்கென்றே செயற்படும் பாதுகாப்புத் துறை ஆய்வு - மேம்பாட்டுப் பிரிவில் பணியாற்றும், பணியாற்றி ஓய்வு பெறும் உயர் அலுவலர்கள் தாங்கள் வடிவமைத்துச் செயற்படுத்திக் காட்டிய படைப்புகளைப் பெருமளவில் உருவாக்கிப் படைப்பிரிவுக்கு வழங்குவதைவிட அவற்றிலும் தரம் குறைந்த அயல்நாட்டுத் தளவாடங்களை வாங்கிக் குவிப்பதிலேயே ஆட்சியாளர்கள் குறியாக இருந்ததாகப் புலம்பும் செய்திகள் அவ்வப்போது கசிவதுண்டு. ஆனால் அனைவருக்கும் தெரிந்து, ஆனால் எவரும் கண்டுகொள்ளாத ஒன்று, “தெற்கின் அறிவியல் கதிரவன்” என்று ஊடகங்கள் அனைத்தும் புகழ்ந்து தள்ளும் திருவாளர் அப்துல் கலாம் அவர்கள் கண்டுபிடித்தருளிய அக்கினி ஏவுகணையின் தரத்தை ஆய்ந்து ஏற்றுக்கொண்ட பின் நடைபெற்ற கார்கில் போருக்காக போபோர்சு ஏவுகணைகளை அப்போதைய வாசுபாய் அரசு மனம்போல் வாங்கி வெடித்தது. இந்த ஏவுகணைகள் தரமற்றவை என்று பெரும் கூச்சல் போட்டு வி.பி.சிங் தலைமையில் கூட்டணி அமைத்து இராசீவ் காந்தியைத் தோற்கடித்தவர்கள் பா.ச.க.வினர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்தக் கொள்முதலுக்காகவே இந்திய – பாக்கித்தான எல்லையில் ஓரிடத்தில், வழக்கமாக நடைபெறுவது போன்ற சிறு மோதலைப் பெரும் போராக்கினர் அன்றைய ஆட்சியாளர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்ததுண்டு. தான் கண்டுபிடித்த ஏவுகணையைப் புறக்கணித்தார்கள் என்று திருவாளர் அப்துல் கலாம் முணுமுணுத்து விடக்கூடாதே என்பதற்காகவே அவரைக் குடியரசுத் தலைவர் இருக்கையில் அமர்த்தினார்கள் என்பது எமது கணிப்பு. அதைப் போலவே என்ரான் என்ற அயல் நிறுவனம் மகாராட்டியத்தில் செயல்படுத்த இருந்த மின்னாக்கத் திட்டத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து அத்திட்டத்தைச் செயற்படாமலாக்கிவிட்டு தங்கள் கூட்டணி ஆட்சியின் போது அதே திட்டத்தை முன்பை விட கூடுதல் மின் கட்டண விகிதத்தில் ஏற்றுக்கொண்டார்கள் என்பதையும் இதோடு சேர்த்துப் பார்க்க வேண்டும். அதாவது ஊழல் அல்லது தரகு என்பதும் அதற்காக உள்நாட்டுத் தொழில்நுட்பங்களைக் கருவறுப்பது என்பதும் எந்த ஒரு கட்சிக்கும் உள்ள தனிப் பண்பல்ல, ஆளும் கட்சிகள் மாறினாலும் பதவியில் நிலைத்திருக்கும் வாய்ப்புள்ளோரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாணர்களுக்கு இல்லாத உண்மையான அதிகாரங்களைக் கைகளில் வைத்திருப்போரும், அரசூழியர் தேர்வு வாரியங்களால் அமர்த்தப்படுவோருமான அதிகாரிகளுடனான கூட்டுநடவடிக்கையே இது.

செ.:ஆனால் விண்வெளி ஆய்வில் நாம் மாபெரும் அருஞ்செயல்கள் ஆற்றியிருக்கிறோமே! செவ்வாய்க் கோளை ஆய்வுசெய்ய ஏவப்பட்டிருக்கும் மங்கள்யான் திட்டத்தைப் பற்றி உலகமே வியக்கிறதே!

.:  உண்மைதான்! ஆனால் நம் விண்வெளி ஆய்வகங்களில் முற்றிலும் உள்நாட்டுத் தொழில் நுட்பத்தில் ஏவுகணைகள் உருவாக்கப்படுவதாகச் சொல்வது உண்மையல்ல, வெளியிலிருந்து வரும் பல உறுப்புகளைப் பொருத்தும் பணியே நடக்கிறது என்று அங்கு பணிபுரியும் சிலரே கூறுவதைப் புறக்கணித்துவிட்டுப் பார்த்தாலும் செவ்வாய் நோக்கிப் பறக்கத் திட்டமிடும் நம்மால் சென்னையில் ஓட விடப்பட்ட பறக்கும் தொடர்வண்டியை மெக்சிக்கோவிலிருந்தும் இத்தாலியிலிருந்தும் தானே இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. மங்கள்யான் திட்டம் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் மிகவும் உயர்த்தியிருக்கிறது என்று மயிர் சிலிர்க்கிறார் விண்வெளி ஆய்வு இயக்குநர் இராதாகிருட்டினன். வெள்ளைக்காரன் விட்டுவிட்டுப்போன தகர தொடர்வண்டி துருப்பிடித்த நிலையில்தான் இன்றும் சராசரி குடிமகனுக்குக் கிடைக்கிறது. ஆனால் நம் ஆட்சியாளர்கள் ஊர்மெய்க்க(ஊருமெச்ச) 450 கோடியில் பட்டாசு விட்டுக்கொண்டிருக்கிறார்கள். வெள்ளைக்காரன் போட்டது போன்ற தரமான தண்டவாளங்களைக் கூட இவர்கள் நடத்தும் உருக்காலைகளில் உருவாக்க முடியவில்லை. அடிக்கடி பொதுமக்கள் கண்டு எச்சரிப்பதாலேயே பல தொடர்வண்டி ஏதங்கள் தவிர்க்கப்படுகின்றன. தண்டவாளங்களைக் கண்காணிக்க அயலவர் ஆட்சியில் தடம் நெடுக எப்போதும் அலைந்துகொண்டிருந்த ஊழியர்களைக் கூட இந் நாள்களில் காண முடியவில்லையே!

செ.:ஆனால் இது போன்ற பெருஞ்செயல்களைப் பார்க்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறது!

.:  நம் போல் வாழ்க்கையை நடத்துவது பெரும்பாடாக இல்லாதவர்களுக்கு, குறிப்பிட்டுக் கூறுவதென்றால் உடலுழைப்பில்லாமல் வள வாழ்வு வாழ இயலுகின்ற ஒட்டுண்ணிகளுக்குப் பெருமையாகத்தான் இருக்கும், அன்றாட வாழ்க்கைக்கே வழியற்றவர்கள் அது தங்கள் விதி என்ற நம்பிக்கையில் உறைந்து போயுள்ளதால் அவர்களுக்கும் இதைப் பார்க்கச் சற்று போதை ஏறத்தான் செய்யும், ஏனென்றால் ஆட்சியாளர்கள் சொல்லும் அனைத்தையும் நாம் அனைவரும் உண்மை என நம்புகிறோம். நம் இந்த வலுக்குறைவைப் பயன்படுத்தித்தான் ஆட்சியாளர்கள் இன்று வரை மக்களை ஏமாற்றி வருகிறார்கள். இப்போது “வல்லரசியத் தொழில்நுட்பத்”தில் “அயல் நேரடி முதலீட்”டில் போர்த்தளவாடங்களை உள்நாட்டிலேயே விளைப்பது பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இன்றோ நாளையோ அதையும் செய்யத்தான் போகிறார்கள். சீனத்தின், அதன் மூலம் மறைமுகமாக அமெரிக்காவின் ஊதுகுழலான இந்திய (மார்க்சிய)ப் போதுமைக் கட்சியினர் பெயருக்குக் கூச்சலிட்டு “எதிர்ப்பை”த் தெரிவித்துவிட்டு அடங்கிவிடுவார்கள். எப்போதும் போல் இந்திய படைக்கலத்தின் தரம் வல்லரசியம் விரும்பும் மட்டத்திலிருந்து உயர முடியாது.

செ.:அப்படியானால் இன்றைய இக்கட்டிலிருந்து விடுபட நீங்கள் முன்வைக்கும் தீர்வுதான் என்ன?

.:  இது பற்றி நாம் விரிவாகப் பேச வேண்டும், ஏனென்றால் அதைப் பற்றிப் பேசுவதுதானே இங்கு நாம் கூடியிருப்பதன் நோக்கம்?

செ.:அதை எதிர்பார்த்துத்தானே நானும் வந்துள்ளேன்!

.:  இப்போதுதான் நாம் நம் உரையாடலின் முதன்மைக் கட்டத்துக்கு வந்துள்ளோம். இது வரை நாம் பேசிக்கொண்டது வெறும் அறிமுக உரை அல்லது பின்னணி விளக்கம்தானே!

.:  நம் அடிப்படை நோக்கம் பொருளியலில் தற்சார்புடைய ஒரு குமுகத்தைக் கட்டியமைப்பது. எந்தப் பொருளியல் தற்சார்புக்கும் அடிப்படையானது உணவில் தற்சார்பு. உணவில் தற்சார்புடைய மக்களை எவராலும் எளிதில் வெல்ல முடியாது. அது போல் உணவு வழங்கலை இழந்தவர்களால் வாழவே முடியாது. எடுத்துக்காட்டாக இரண்டாம் உலகப் போரின் போது சோவியத்து உருசியாவினுள் செருமானியப் படைகள் வெள்ளமெனப் பாய்ந்த போது உருசிய மக்கள் பின்வாங்கினர். அப்போது தாம் விட்டுச்சென்ற நிலப்பரப்புகளில் நின்ற பயிர்கள் அனைத்தையும் தீவைத்து அழித்துக்கொண்டே சென்றனர். இதுவே செருமானியப் படைகளின் வீழ்ச்சிக்கு முகாமையான காரணங்களில் ஒன்றாக இருந்தது.

அதே சோவியத்திலிருந்து இன்னொரு எடுத்துக்காட்டை இங்கு பார்ப்போம்.1919இல் லெனின் தலைமையில் புரட்சி வெற்றி பெற்ற போது அங்கிருந்த மிகப் பெரும்பான்மையான பெருந்தொழிலகங்களின் உரிமையாளர்களான ஐரோப்பிய முதலாளியர் அவற்றை அப்படி அப்படியே விட்டுவிட்டு வெளியேறிவிட்டனர். அவை மீள இயங்கினால்தான் அவற்றில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு உணவுக்குத் தேவையான ஊதியம் கிடைக்கும். ஆனால் புதிய அரசிடம் அதற்குத் தேவையான பணம் இல்லை. அதனால் லெனின் ஓர் உத்தியை வகுத்தார். உழவர் பெருமக்களை அழைத்துப் பேசினார். தாங்கள் விளைக்கும் தவசங்களில் ஒரு பகுதியை அரசு நிறுவும் விலைக்குக் கொடுத்துவிட்டு எஞ்சியதைத் தாங்கள் விரும்பும் விலைகளில் விற்றுக்கொள்ளலாம். அவர்கள் அரசுக்குக் கொடுக்கும் தவசங்களைத் தொழிலாளர்களுக்கு வழங்கி ஆலைகளில் உருவாகும் வேளாண் கருவிகளை உழவர்களுக்கு வழங்க முடியும் என்றார். இந்த அடிப்படையில்தான் ஒரு புத்தம்புதிய பொருளியல் கட்டமைப்பு நாம் அறிய உலக வரலாற்றில் நடைபெற்றது.

செ.:ஆனால் அங்கிருந்தது போல் தமிழகத்தில் பெருந்தொழில்கள் இல்லையே. அத்துடன் உழவர்களே தொழிலை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கும் சூழலில் இது எப்படி நடைமுறைக்குப் பொருந்தும்?

தொடரும்.......

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 37

29.குமுகியல் வித்தகர்களன்றோ நாம்! - 6

.:  உங்கள் குழப்பம் ஞாயமானதுதான். பல ஆயிரம் கோடி முதலீட்டில் சிறப்பு தொழில் நகரங்களும், வளாகங்களும் தொடங்கப்படுகின்றன. அதற்காக அரசே மக்களின் நிலங்களை, அதிலும் நீர்வளம் மிகுந்த நிலங்களாகப் பார்த்து கட்டாயக் கையகப்படுத்தும் சட்டப் பிரிவுகளைப் பயன்படுத்தி பறிக்கின்றன. நிலத்தடி நீர்வளத்தை செயற்கைக் கோள்களைப் பயன்ப்படுத்தி இனம்காண்கின்றனர். பெரும்பாலும் சூழலைக் கெடுக்கும் கழிவுகளை வெளிவிடும் தொழில்களையே பணக்கார நாட்டு நிறுவனங்கள் இவ்வளாகங்களுக்குள் நிறுவுகின்றன.

செ.:இச் சிறப்பு வளாகங்களுக்குள் நம் நாட்டுச் சட்டங்கள் செல்லாது என்று சொல்கிறார்களே, அது உண்மையா?

.:  உண்மைதான். 19ஆம் நூற்றாண்டில் சீனத்தில் ஐரோப்பிய நாடுகள் தன்னாட்சி வளாகங்கள் என்ற பெயரில் உருவாக்கியவற்றை எதிர்த்துத்தான் பாக்சர் கலகம் என்ற புரட்சி வெடித்தது. அந்தச் சீனத்து ஆட்சியாளர்கள்தாம் சென்ற நூற்றாண்டில் கணக்கற்ற வளாகங்களை அமைக்க அமெரிக்காவுக்கு இடமளித்துள்ளனர். இன்று புணர் நாய்கள் நடுவீதியில் இழுத்துக்கொண்டு கிடப்பது போல் கீச்சிட்டுக்கொண்டிருக்கின்றனர் சீன - அமெரிக்க ஆட்சியாளர்கள். நம் ஆட்சியாளர்களுக்குத்தான் மான ஈனம் கிடையாதே. அதனால் இங்கு எல்லாம் “அமைதியாக” நடைபெறுகின்றன.

செ.:வெளியே முடிவில்லாத மின்வெட்டுகள் நடைமுறையிலிருந்த காலங்களில் கூட அங்கெல்லாம் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரமும் குடிநீர் தரமுள்ள நன்னீரும் வழங்கப்படுகிறதாமே?

.:  அது மட்டுமல்ல மின்கட்டணமும் மிகக் குறைவு. சில நேர்வுகளில் இலவயமாகக் கூடக் கொடுக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். தண்ணீரை எடுத்துக்கொண்டால் தூத்துக்குடி டெர்லைட்டு செம்பு ஆலைக்குப் பெருமளவிலான நீரை அவர்களே தாமிரபரணி ஆற்றிலிருந்து பேயளவான குழாய்களைப் பதித்து எடுத்துக்கொள்ள ஆட்சியாளர்கள் விட்டிருக்கிறார்கள்.

செ.:சாயப்பட்டறைகளையும் தோல் பதனீட்டுத் தொழிலகங்களையும் அடைக்கவும் உடைக்கவும் நயமன்றங்கள் ஆணையிட, சற்றும் தயங்காமல் ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க, டெர்லைட்டு தொழிற்சாலை குறித்து மட்டும் அதைக் காப்பாற்ற அனைவரும் முனைப்பாக இருப்பது ஏன்? இவ்வாலைக்கு எதிராகப் பலர் நயமன்றத்தில் வழக்குத் தொடுத்தும் எந்தப் பயனும் இல்லையே! 

.:  நயமன்றம் ஆட்சிப் பொறியின் ஓர் உறுப்புதானே! பதவி உயர்வு, இடமாற்றம் என்று எத்தனையோ பலன்களுக்காக ஆள்வினை அதிகாரிகளையும் அரசியலாளரான ஆளும் கட்சித் தலைமைகளையும் சார்ந்திருக்கும் அவர்கள் எவ்வாறு தன்னுரிமையுடன் செயல்பட முடியும்? நயவர் முன் வழக்கை எடுத்துவைக்கவே ஒவ்வொரு கேட்பின் போதும் பெஞ்சு கிளார்க்குக்கு கைக்கூலி கொடுத்தாக வேண்டிய நம் நயமன்ற நடைமுறையில் பணம் படைத்தோருக்குத் தனித் தீர்ப்பு இருப்பதில் என்ன வியப்பு? வழக்கில் தீர்ப்பைக் கூறிய பின் தண்டனையைத் “தவணையில்” கூறும் விந்தையான நடைமுறை அண்மைக் காலத்தில் பொதுவழக்காக மாறிவிட்ட மாயம் என்னவென்று தெரியவில்லை. நடைபெறுபவற்றைப் பார்த்தால் நம் நாட்டில் நடைபெறும் ஊழல்களில் புரளும் மாபெரும் பணத்தில் பெரும் பகுதி நயமன்றங்கள் வழியில் பங்காகின்றன என்று தோன்றுகிறது. அத்துடன் டெர்லைட் ஆலையைப் பொறுத்த வரை வழக்குத் தொடர்ந்தவர்கள் ஏறக்குறைய அனைவரும் தொழிலகத்தை மூடுவதை நோக்கமாகக் கொண்டு அதைச் செய்யவில்லை, தொழிலகத்தாரிடமிருந்து பணத்தை எதிர்பார்த்துத்தான் களத்தில் இறங்கினர் என்பது என் முடிவு. நய மன்றத்தைப் பொறுத்த வரை பசுமைத் தீர்ப்பாயம் என்ற துணை அமைப்பையும் உருவாக்கிப் பங்குபோட்டுக்கொண்டனர் என்பதுதான் என் கட்சி.

      டெர்லைட்டு தொழிலகத்தைப் பொறுத்தவரை வெளியிலிருந்து செம்புக் கனிமம் கடல் மூலம் தொழிற்சாலைக்கு வந்து அங்கு செம்பு பிரித்தெடுக்கப்பட்டு அப்படியே கடல் மூலம் வெளியேறிவிடுகிறது. நமக்கு கிடைப்பது கனிமத்தைக் கப்பலிலிருந்து இறக்கவும் தூய்மைப்படுத்தப்பட்ட செம்பைக் கப்பலில் ஏற்றவும் காவலர் முதல் உயர் பதவியில் ஒரு சிலருக்கு வேலை வாய்ப்பும்தான். அதற்காக நம் மக்களுக்கு உரிமையுள்ள மின்சாரத்தையும் குடிநீரையும் பறிகொடுக்கிறோம் என்பதுதான் உண்மை.

செ.:இத்தகைய திட்டங்களில் ஆட்சியாளர்கள் அளவுக்கு மீறிய ஆர்வம் காட்டுகிறார்களே அது ஏன் என்பதற்கு எனக்குக் கிடைக்கும் விடை சரியாக இருக்குமா என்று ஐயம் ஏற்படுகிறதே?

.:  உங்களுக்குக் கிடைக்கும் விடைதான் என்ன?

செ.:இம் மண்டலங்களிலும் வளாகங்களிலும் அயல் முதலீடு என்ற பெயரில் இறங்கும் பணத்தில் பெரும் பகுதி ஆட்சியாளர்களாகிய உயரதிகாரிகள், அரசியல் தலைவர்களுடையதாய் இருக்குமோ என்பதுதான் அது.

. :மிகச் சரியான கணிப்பு. ஐரோப்பியர்களிடமிருந்து அடிமை நாடுகள் விடுதலை அடைந்ததும் அந் நாடுகளின் ஆட்சியாளர்கள் ஊழல்கள் செய்து பணத்தை அள்ளிக்குவித்தார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை ஆங்கிலர் வெளியேறும் முன்பே சிறிது காலம் ஆட்சி செய்த பேரவைக் கட்சி, நயன்மைக் கட்சி ஆகியவற்றின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ‘விடுதலை’க்குப் பின் வெளிப்பட்ட பல்வேறு ஊழல்களில் ஈடுபட்ட அரசியல்வாணர்கள் அப்போதைய தலைமையமைச்சரும் இராகுல் காந்தியின் கொள்ளுப்பாட்டனுமான நேருவின் நெருங்கிய தோழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவரது காதலி என்று கூறப்பட்ட ஒரு வெள்ளைக்கார கிறித்துவக் ‘கன்னிகை’ தன் இறுதிக் காலத்தில் தன் சொத்துகள் முழுவதையும் நேருவின் பேரனான இராசீவ் காந்திக்கு எழுதி வைத்தார். இந்தச் சொத்தில் ஒரு பகுதியோ அல்லது முழுமையோ நேரு தானும் தன் தொழர்களுடன் இணைந்தும் ஊழலில் சுருட்டிப் பதுக்கியதாக இருக்கலாம் என்பது எனது ஐயம்.

      நேருவுக்குக் கிடைத்தது போல் காதலிகளோ காதலர்களோ எல்லோருக்கும் கிடைப்பார்களா? “நெருக்கடி காலம்” முடிந்ததும் நடைபெற்ற தேர்தலில் இந்திரா தோற்று மொரார்சி தலைமை அமைச்சரான பின் இந்திரா வீட்டில் உளவுத் துறையினர் தேடுதல் வேட்டை நடத்த இருப்பதை அறிந்து ஒரு பெரும் நிலைப் பேழையில் பணம், தங்கம் போன்றவற்றை வைத்துத் தோட்டத்தில் புதைக்க, அந்தச் செய்தி வெளியே கசிந்துவிட, அதை அங்கிருந்து அகற்ற, அன்றிரவு பெய்த பெரும் மழையில் மண்ணைத் தோண்டிய சுவடுகள் அழிந்துபோக, தேடுதல் வேட்டைக்குச் சென்றவர்கள் முகத்தைத் தொங்கப்போட நேர்ந்தது. இந்திரா ஆட்சிக் காலத்தில் வடக்கில் ஒரு தொடர்வண்டி நிலையத்தில் அவரது அமைச்சரவையிலிருந்த அமைச்சர் ஒருவர் சுடப்பட்டார். அவரை யாரும் கண்டுகொள்ளாததால் அவர் அங்கே கிடந்து செத்தார். அவர் இந்திராவின் சொத்துகளுக்கான ஒரு போலி(பினாமி) என்றும் இந்தக் கொலைக்கும் அதற்கும் தொடர்பு உண்டென்றும் தாளிகைகள் கூறின.

      நேரு, இந்திரா போன்ற பெருந்தலைகளுக்கு உள்ள வாய்ப்பு இல்லாத கீழ்நிலைத் தலைவர்களுக்குத் தம் கொள்ளைகளைப் பதுக்கி வைக்கக் கிடைத்த ஒரே இடம் சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகள். அளவுக்கு மீறிய வருமான வரியை வெறுத்து தத்தம் ஆதாயங்களைப் பதுக்கிய பணக்காரர்களும் உண்டு.

செ.:இந்தப் பணத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ச.க.வினர் கூச்சலிடுகிறார்களே, அவர்கள் தூய்மேயானவர்கள் என்பது இதன் பொருளா?

.:  கண்டிப்பாக இல்லை. பாராளுமன்ற முறை எனும் இன்றைய இந்தப் போலி  மக்களாட்சியில் ஒரு கட்சி சிறிது சிறிதாக வளர்ந்து வரும் போதே ஊழல் பற்றிய பாடங்களைத் தெளிவாகக் கற்றுக்கொள்கிறது. பெரும் திட்டங்களில் கைக்கூலிப் பணம் கைமாறும் போது ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் வரையறுக்கப்பட்ட விகிதங்களில் அது பங்காகிறது. அவ்வாறு பங்காகவில்லை என்றாலோ அல்லது இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் போன்று தணிக்கை அறிக்கை மூலமோ வேறு வகையிலோ வெளிப்படும் போதோ “பாராளுமன்ற நிலைக்குழு” உசாவலுக்காக எதிர்க் கட்சிகள் கூச்சலிட்டுக் குழப்பம் விளைவித்து மக்களவையையும் மாநிலங்களவையையும் முடக்குவது ஆளும் கட்சி அடித்த கொள்ளையில் தங்களுக்கும் உரிய பங்கைப் பெறுவதற்குத்தான். ஊழல் பணத்தில் முதல் பங்கைப் பெறுவதா இல்லையா என்பதுதான் இந்தியத் தேர்தல்களின் அடி நீரோட்டமே. மற்றப்படி ஆட்சியைப் பிடித்த எந்த “எதிர்க் கட்சி”யும் முன்பு ஊழல் செய்த எந்த ஆளும் கட்சியின் மீதும் நடவடிக்கை எடுத்த வரலாறு உண்டா? இதுதான் காந்தி “அடிகளின்” துன்புறுத்தாமைக் கோட்பாட்டின் நூற்றுக்கு நூறு “கடைப்பிடித்தம்”.     

      ப.ச.க.வைப் பொறுத்தவரை ஊழலில் கணிசமான பங்கைப் பெறும் வகையில் ஆளும் கட்சி வரிசையில் அல்லது எதிர்க்கட்சியின் இடத்தில் அமர்ந்த காலத்தில் இங்கு சூழ்நிலையில் பெரும் அடிப்படை மாற்றம் ஏற்பட்டுவிட்டது. நரசிம்ம ராவ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட “தாராளமாக்கல்”, வெளிநாடுகளின், குறிப்பாக அமெரிக்காவின் கணினிக் கணக்குப்பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றும் நோக்கத்துடன் புகுத்தப்பட்ட “மனித வள ஏற்றுமதி”க்கு ஏற்ப கல்வித்துறையின் பெயரையே “மனிதவள மேம்பாட்டுத் துறை” என்று மாற்றிய நிலையில், பெரும்பாலும் அமெரிக்காவில் குடியேறிய தம் குடும்பத்தினர் பெயரில் தங்கள் சுருட்டல்களைப் பதுக்கும் வாய்ப்பு ஆட்சியாளருக்குக் கிடைத்துவிட்டது. அதன் ஒரு பதம்தான் வாசுபாயின் வளர்ப்பு மகளின் கணக்கில் மாலியில் பெருந்தொகை முதலீடாகியுள்ளதாக வந்த பேச்சு. இவ்வாறு அங்கெல்லாம் பதுக்கப்பட்ட பணத்தை இங்கு கொண்டுவரும் ஓர் உத்திதான் “நேரடி அயல் முதலீடு”.

      முதல் உலகப் போரைத் தொடர்ந்த உலகப் பொருளியல் நெருக்கடியின் போது பட்டினிச் சாவுகளைத் தவிர்க்க கஞ்சித் தொட்டிகளைத் திறக்க வேண்டிய கட்டாயம் அமெரிக்காவில் வந்தது. அந்தச் சூழலில் பொருளியல் மேதை கெயின்சு என்பார் முன்வைத்த, அரசே பணத்தாள்களை அச்சிட்டு பண்ட விளைப்பை நோக்கமாகக் கொள்ளாத, சாலைகள் போன்ற உள்கட்டமைப்புகளை அமைப்பதில் செலவிட்டால் மக்களிடம் பணப்புழக்கம் பெருகி பொருளியல் தேக்கம் முடிவுக்கு வரும் என்ற உத்தியைக் கடைப்பிடித்தனர். அதாவது வரி விதித்தல் போன்று மக்களுக்கு எந்த நெருக்கடியும் கொடுக்காமல் அரசே பணத்தாள்களை அச்சிட்டு பொருளியல் தேக்க நிலைகளை எதிர்கொள்ளலாம் என்பது இதன் பொருள். இந்தப் பணத்துக்கு நிகரான நுகர்பொருட்கள் நாட்டில் இருக்க வேண்டுமென்பதே இந்த உத்தியைக் கட்டுப்படுத்தும் ஒரே காரணி. ஆனால் பண்ட விளைப்பின் ஒரே நோக்கம் ஏற்றுமதிக்கு என்பதும் ஏற்றுமதிக்குத் தகுதியில்லாத, இரண்டாம் தரம் எனப்படும் கழிவுப்பொருள்கள் மட்டும் இந் “நாட்டு மன்னர்களு”க்கும் என்பதே நமது பொருளியல் அடிப்படைக் கொள்கையாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாயிற்றே. எனவே ஏற்றுமதிக்காக உள்நாட்டிலிருந்து துறைமுகங்களுக்கும் இறக்குமதியானவற்றை உள்நாட்டினுள்ளும் கடவ என்றுதான் வாசுபாயின் அருஞ்செயல்களில் ஒன்றான “தங்க நாற்கரச் சாலை”த் திட்டம் உருவானது. அதில் இவர்களின் “நேரடி” அயல் முதலீடுகள் பாய்ந்தன. இன்று வழி நெடுகிலும் கூடாரம் அடித்து சுங்கம் என்ற பெயரில் வழிப்பறி செய்கின்றனர். ஊழல் பணத்தைக் கையாள்வதில் எத்தனை நுணுக்கமாக உத்தி வகுத்துச் செயற்பட்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா நம் பாரத புத்திரர்கள். முழங்குங்கள், பாரத மாதா கீ சே!  

      பேரவைக் கட்சி ஆட்சிக் காலத்தில் அயல் நாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் பணத்தை உடனடியாக இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று உரக்க முழங்கியவர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் என்ன செய்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

செ.:உண்மையிலேயே இந்த அளவுக்கு ஏற்றுமதியும் இறக்குமதியும் தேவைதானா?

.: உங்கள் கேள்விக்கு அடிப்படையுண்டு. ஒவ்வோராண்டும் புள்ளியியல் துறையை வைத்துப் பொய்யான ஒரு கணிப்பை குறிப்பிட்ட துறைகளில் பற்றாக்குறை அல்லது மிகுதி இருக்கும் என்று வெளியிட வைத்து அதற்கேற்ப இறக்குமதி அல்லது ஏற்றுமதி ஒப்பந்தங்களைச் செய்கிறார்கள். ஆனால் பின்னர் அக் கணிப்புக்கு எதிராக நடப்பு இருக்கும் போது அதற்கேற்ப ஏற்றுமதி அல்லது அறக்குமதி செய்கிறார்கள். அதனால் பெரும்பாலான பண்டங்கள் ஒரே நேரத்தில் ஏற்றுமதியும் இறக்குமதியும் ஆகின்றன. ஆக இரு வகைகளில் ஆட்சியாளர் தரகு பெற முடிகிறது. இது உலகெங்கும் பெரும்பாலும் நடைபெறும் ஒன்றாகும்.

செ.:தேவையற்ற இந்தப் போக்குவரத்தால் மிகப் பெரும் ஆற்றல் இழப்பு ஏற்படுமே!

.:  ஆம்! உலக கன்னெய்ய வளமே ஒரு சிறு குழுவின் பேய்த்தனமான பணத்தாசையால் அளவிறந்து அழிக்கப்படுகிறது. மக்களின் உழைப்பு மற்றும் பிற வளங்களும் வசதிகளும் பெரும்பான்மை மக்களுக்குப் பயன்படாமல் வீணாகின்றன.

செ.:கன்னெய்யமும் ஆயுதங்களும்தாமே நம் நாட்டின் இறக்குமதியில் மிகப் பெரும் பங்கேற்கும் இனங்கள் என்று கூறப்படுகிறதே?

.:  அது உண்மைதான். இந்தியாவில் அசாமைச் சுற்றியுள்ள இமயமலைப் பகுதியில் படிந்திருக்கும் கன்னெய்ய வளம் 200 ஆண்டுகளுக்கு இந்தியாவின் தேவைகளை எதிர்கொள்ளப் போதுமானது என்றும் இந்திய அரசு அவ்வளத்தை அறுவடை செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் ஏறக்குறைய 23 ஆண்டுகளுக்கு முன் தினமணி கட்டுரையொன்று கூறியது. ஆக, ஏற்றுமதியில் கிடைக்கும் தரகைக் கைவிட நம் ஆட்சியாளர்கள் ஆயத்தமாக இல்லை என்பதுதான் உண்மை நிலை.

செ.:உலக வங்கிக் கடன்கள் அனைத்துலகப் பணப் பண்டு(ஐ.எம்.எப்) என்று பெருந்தொகைகள் வருகின்றனவே?        

.:  ஆம். அதுதான் உலகின் மிகப் பெரும் ஏமாற்று. உலக வங்கித் திட்டங்கள் என்பவற்றுக்குத் தேவைப்படுபவை சில உயர் தொழில்நுட்பக் கருவிகள் தவிர பிற அனைத்தும் உள்நாட்டுப் பண்டங்களும் தொழிலாளர்களும்தாம். உ.வ.வும் அனைத்துலகப் பணப்பண்டும் பணமாக ஒரு தம்பிடி கூடக் கொடுப்பதில்லை. கணக்குப் பணமாக(Account money)த்தான் வழங்குகின்றன. அதாவது “உதவி” என்ற பெயரில் கொடுக்கப்படும் தொகை “உதவி”  பெறும் நாட்டின் கணக்கில் வரவு வைக்கப்படும். அந்தக் கணக்கிலிருந்து அவர்கள் காட்டும் நிறுவனங்களிடம் பண்டங்களை வாங்கிக்கொள்ளலாம். ஆனால் மேற்படி வங்கி அல்லது பணப்பண்டு பெயரில் செய்யப்படுவதாகக் கூறப்படும் திட்டங்களுக்காகத்தான் அப் பண்டங்கள் வாங்கப்பட வேண்டும் என்ற கட்டாயமில்லை. எடுத்துக்காட்டாக நம் நாட்டில் ஓராண்டு வ(ரவு) - செ(லவு) திட்டத்தில் படைக்கலன்கள் வாங்க ஓரிலக்கம் கோடி உரூவாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம். அதில் இறக்குமதிக்குத் தேவைப்படும் தொகையை டாலர்களில் மேற்கூறிய கடன் நிறுவனங்கள் ஒதுக்கியுள்ள தொகையிலிருந்து எடுத்துக்கொள்வார்கள். வ.செ. திட்டத்தில் அவ்வினத்துக்காக உரூவாக்களில் ஒதுக்கப்பட்ட தொகையை உலக வங்கி அல்லது அனைத்துலகப் பணப்பண்டு “உதவி” த் திட்டங்களுக்குத் திருப்பி விடுவர்.

      கடன் பெறும் நாடுகளில் திட்டங்கள் வகுப்பதிலும் செயலாக்கத்திலும் மேல் மட்டப் பணிகளில் இருப்போரை இக் கடன் நிறுவனங்கள் நன்றாகக் கவனித்துக் கொள்ளும். தொடக்கத்தில் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் உலகச் சுற்றுலா போன்றவற்றை ஏற்பாடு செய்தனர். அடுத்து அவர்கள் இளைய தலைமுறையினருக்கு அந் நிறுவனங்களில் நல்ல பதவிகள் வழங்கியதோடு அவர்களை திட்டப்பணிகளின் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் அதிகாரிகளாக அமர்த்துகின்றனர். இந்தியாவிலுள்ள அதிகாரி மேற்காசிய நாடுகளில் ஆய்வு செய்ய, மத்திய கிழக்கு அதிகாரி ஆப்பிரிக்க நாடொன்றில் ஆய்வு மேற்கொள்வார். ஆப்பிரிக்க அதிகாரி தென்னமெரிக்க நாடொன்றைக் கண்காணிக்க, தென்னமெரிக்க அதிகாரி இந்தியாவில் வலம் வருவார். இதைப் பார்க்கும் அந்தந்த நாட்டு மக்கள் மிக நேர்மையாக இத் திட்டப்பணிகள் நிறைவேறுவதாக மனம் குளிர்ந்து போவர்.

 இக் கடன்கார நிறுவனங்கள் இத்துடன் நிற்கவில்லை. இக் கடன் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் போது நிலத்தை இழக்கும் மக்களுக்கு உரிய இழப்பீட்டுடன் அவர்களின் மறுவாழ்வுக்காகவும் தாராளமாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துகிறது. குமரி மாவட்டத்தில் உ.வ. “உதவி”யில்  நிறைவேற்றப்பட்ட ஓர் அணைத் திட்டத்தில் நிலம் வழங்கிய மக்களது மறுவாழ்வுக்கு உரிய ஒதுக்கீடு செய்யவில்லை என்பதற்காக அத் திட்டத்துக்கான செயற்பாட்டு மதிப்பீடு உருவாக்கிய களப் பொறியாளரை இடைநீக்கம் செய்தனர். அது போலவே உ.வ. திட்டமாகிய வடக்கிலுள்ள சர்தார் சரோவர் திட்டத்தால் மலைவாழ் மக்களின் வாழ்க்கை அடிப்படை அழிவதையும் சூழியல் கேட்டையும் நிலநடுக்கங்கள் உருவாகும் ஏதத்தையும் முன்வைத்து உண்ணாமைப் போராட்டம் நடத்திய மேதா பட்கர் என்பவர் சில இலக்கம் கோடி உ.வ. “உதவி”யுடன் பாதிக்கப்படும் மலைவாழ் மக்களுக்கு மறுவாழ்வுத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று ஆட்சியாளர்கள் உறுதியளித்ததும் உண்ணாமையைக் கைவிட்டுக் காணாமல் போய்விட்டார். தொடக்கச் சிக்கலாக முன்வைக்கப்பட்ட சூழல் கேடு, நில நடுக்க வாய்ப்பு எல்லாமும் கூட காணாமல் போய்விட்டன. இந்த இரண்டாம் கட்ட உ.வ. கடனுக்காக இந்திய அரசை நெருக்கத்தான் இந்த உண்ணாமை நாடகமா, யாமறியோம் தன்னார்வத் தொண்டருக்குத்தான் வெளிச்சம்..
        
செ.:உள்நாட்டுக் கன்னெய்ய வளத்தைக் கைக்கொள்ள, அவற்றை இறக்குமதி செய்து தரகு பார்க்கும் சிலர் தடையாக இருக்கிறார்கள் என்று சென்ற ஆண்டு கன்னெய்யத் துறை அமைச்சர் வீரப்ப மௌலியே வாக்குமூலம் அளித்துவிட்டார், ஆனால் நீங்கள் மேலே குறிப்பிட்ட போர்த் தளவாடங்கள், உயர் தொழில்நுட்பக் கருவிகளை இந்தியாவிலேயே ஏன் உருவாக்கக் கூடாது? உலகின் மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒன்றைக் கொண்ட இந்தியாவுக்கு வெளியே சந்தையைத் தேட வேண்டிய தேவையே இல்லையே!

தொடரும்.........