3.2.16

காந்"தீய"ச் சிந்தனைகள்


காந்“தீய”ச் சிந்தனைகள்.
            இன்று அக்டோபர் 2ஆம் நாள். வழக்கம் போல் இன்றைய தினமணி நாளிதழில் காந்தியின் பெருமை பேசும் ஒரு கட்டுரை வந்தது. ஒருவரின் சாவின் போது அவரது குறைகளைக் கூறாமல் அவரிடம் பாராட்டத்தக்கவை எவையாவது இருந்தால் அவற்றை மட்டும்தான் கூற வேண்டுமென்று காலஞ்சென்ற நண்பர் பொறியாளர் அய்யூர் இ.அப்பாசு மந்திரி அவர்கள் கூறினார். அத்துடன் ஓர் எடுத்துக்காட்டையும் எடுத்துரைத்தார். பெரும் போக்கிரி ஒருவன் இறந்த போது வந்த ஒருவர் “இவன் சிறுவனாக இருக்கும் போது எவ்வளவு சிறப்பாகக் கோலியாடுவான் தெரியுமா?” என்று புகழ்ந்தாராம். அது போல் காந்தியின் மிகப் பெரும் பங்களிப்பு என்று நான் பாராட்ட விரும்புவது அவரது மதுவிலக்குக் கோட்பாடாகும். அதை விட்டால் மேலேயுள்ள எடுத்துக்காட்டு வழியில் கூறுவதாயின் அவரது எல்லையற்ற நடிப்புத் திறன். அவருக்கு முன்னும் பின்னும் இதில் அவரை விஞ்சிய எவரும் என் கவனத்துக்கு வரவில்லை.

              காந்தியைப் பொறுத்தவரை நண்பர் அய்யூர் இ.அப்பாசு மந்திரி அவர்களின் அறிவுரையை முழுமையாகப் புறக்கணிக்க முடியாமையால் மேலே அவரது இரு சிறப்புகளை எடுத்து வைத்துவிட்டேன். ஆனால் எடுத்துக்காட்டில் வரும் போக்கிரி போல் மோகன்தாசு கரம்சந்து காந்தி யாரோ ஒருவரல்ல, உலகின் மாபெரும் வரலாற்றுப் பெருமகனாகப் பேசப்பட்டுப் போற்றப்படுபவர். இந்திய மக்களைப் பொறுத்தவரை, அவர் பெற்றுத் தந்ததாகக் கூறப்படும் “விடுதலை”யால் இன்று அவர்கள் படும் தீரா இடும்பைகளுக்குக் காரணமானவர். குறிப்பாக, தமிழகத்தைப் பொறுத்தவரை வ.உ.சிதம்பரனார் மேற்கொண்ட பொருளியல் விடுதலைப் போராட்டத்தின் குறியீடான கப்பல் குழுமத்தால் ஆங்கில் ஆட்சியினருடன் இணைந்து கிலி பிடித்து இந்திய விடுதலை இயக்கத்தினுள் கால்வைத்தவர். அதன் மூலம் அன்று ஐரோப்பியருக்கு அடிமைப்பட்டுக் கிடந்த குடியேற்ற நாட்டு மக்களுக்கு ஒரு போலி “விடுதலை”யை வழங்கி அந் நாடுகளில் காலத்துக்குக் காலம் உருவாகிக் கொண்டிருக்கும் கோடாரிக் காம்புகளை ஆட்சியாளர்களாக்கித் தம் கொள்ளைகளை நாளுக்குநாள் வளர்த்துக்கொள்ள வல்லரசு நாடுகளுக்கு வழிகாட்டி அவர் வாழ்ந்த காலத்திலேயே மாபெரும் “மகாத்துமா”வாக அவர்களால் அறிவிக்கப்பபட்டவர். அதனால் அவரது உண்மையான முகத்தின் சில கூறுகளை தமிழக மக்கள் முன் எடுத்துவைப்பது எனது கடமை என்று கருதுகிறேன்.

            காந்தி பிறப்பால் அம்மணர்(சமணர்). படிக்கும் காலத்தில் இறைமறுப்பாளர், பின்னர் “இந்து” இலக்கியங்களைப் பயின்று “இந்து”வானவர் என்று வில் டூராண்டு (Will Durant) என்ற, அமெரிக்கரான வரலாற்று அறிஞர் Story of Civilization(நாகரிகத்தின் கதை) என்ற 14 மடலங்களைக் கொண்ட தொகுதியின் முதல் மடலமான Our Oriental Heritage(கிழக்கிலிருந்து நாம், அதாவது மேலையர் பெற்ற சொத்துகள்) என்பதில் கூறியுள்ளார்.

            இங்கிலாந்தில் பாரிட்டர் பட்டம் பெற்று இந்தியா வந்த காந்தி தென் ஆப்பிரிக்காவில் தொழில் நடத்திய ஓர் இந்திய முகம்மதியக் குழுமத்தின் வழக்குரைஞராக அங்கு சென்றார். அங்கு தொடர்வண்டியில் போகும் போது நிறமுடையவர்(coloured), அதாவது வெள்ளாயரல்லாதவர் என்பதால் அவர்களுக்கு மறுக்கப்பட்ட பெட்டியில் சென்றார் என்பதற்காக வழியில் இறக்கிவிடப்பட்டு அதற்கு எதிராகக் குரலெழுப்பி ஆங்கில ஆட்சியாளரின் கவனத்தை ஈர்த்தார் என்பது நமக்குத் தெரியும்.

            பின்னர் ஒரு கட்டத்தில் இந்தியர் தென்னமெரிக்காவில் குடியுரிமை பெற வேண்டுமாயின் கைவிரல்களின் வரை(ரேகை) பதிய வேண்டும் என்ற சட்டத்தை அங்கிருந்த வெள்ளையராட்சி கொண்டுவந்தது, இன்றைய ஆதார் அட்டையைப் போல் என்பது குறிப்பிடத்தக்கது. அதை எதிர்ப்பதற்காக அங்கு வாழ்ந்த இந்தியர்களை ஒருங்கிணைத்து எவரும் இந்தத் திட்டத்துக்கு உடன்படக்கூடாது என்று உறுதிமொழி(சத்தியம்) ஏற்க வைத்தார். இதை அடுத்து ஆங்கிலர் அரசு அவரை உரையாடலுக்கு அழைத்தது. அதனைத் தொடர்ந்து ‘விரும்புவோர் விரல் நாட்டி குடியுரிமை பெற்றுக்கொள்ளலாம் என்று குட்டிக்கரணம் அடித்தார். நாமறிய “சத்தியத்”துக்கு அவர் வைத்த முதல் “சோதனை” இதுதான். இதனை ஒரு முகம்மதியர் கடுமையாக எதிர்த்தார். காந்தியுடன் இருந்த ரசுட்டம்சீ என்ற இந்தியப் பார்சி காந்திக்குத் துணையாக நின்றார். நிகழ்ச்சி கைகலப்பில் முடிந்தது. அன்றிலிருந்து அங்கேயே காந்தி, பார்சி, ஆங்கில ஆட்சியாளர்கள் ஒரு புறமும் முகம்மதியர்கள் எதிர்ப்புறமும் அணி திரண்டு செயற்பட்டு வந்தனர். இந்தப் பின்னணியில்தான் காந்தியை முதலில் ஒரு முறை இந்தியா அழைத்து வந்து பேரவை(காங்கிரசு)க் கட்சியை நோட்டமிட வைத்து திரும்ப அழைத்துச் சென்றது ஆங்கில அரசு. பின்னர் 1915ஆம் ஆண்டில் பெட்டி படுக்கைகளுடன் இந்தியா வந்திறங்கினார் காந்தி. அவருக்கு Kaiser – I – Hind என்ற விருதையும் வழங்கியது ஆங்கில அரசு. இந்தியாவின் பேரரசர் என்று இங்கிலாந்து அரசருக்கு 1900 முதல் 1947 வரை இருந்த பட்டமாகும் இது.

            இவர் ஆங்கில அரசுக்கு அறிவுரை கூறி பேரவைக் கட்சியிலிருந்த முனைப்பியர்களை(தீவிரர்களை) களத்திலிருந்து அகற்றினார். திலகர் பர்மாவுக்கு, இன்றைய மியான்மருக்கு நாடுகடத்தப்பட்டார், அரவிந்தர் புதுச்சேரியில் அடைக்கலம் பெற்றார், பாரதியும் அங்குதான் சென்றார். வ.வே.சு.ஐயர் குருகுலம் அமைத்துப் பதுங்கிக்கொண்டார். இந் நிலையில் ஆங்கில அரசு இவரை அடிக்கடி உரையாடலுக்கு அழைத்து அவரது பெயரை மக்களிடையில் பரப்பியது. இவ்வாறு அவர் 1921இல் பேரவைக் கட்சியின் தலைவரானார்.

            இவ் வேளையில் இன்னொரு வரலாற்றுச் செய்தியினுள் சென்று திரும்ப வேண்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் கீழை நாடுகளை வேட்டையாடிக்கொண்டிருந்த போது காலந்தாழ்ந்து களத்தில் இறங்கிய அமெரிக்கா 1937இல் சப்பானியத் துறைமுகம் ஒன்றில் குண்டுவீசி சப்பானியர்களை உரையாடலுக்கு இழுத்து தங்களுக்கு மேலாளுமை தரும் ஓர் உடன்படிக்கையை உருவாக்கிக் கொண்டனர். இதே போன்ற உத்தியை இந்தியாவைப் பொறுத்து கடைப்பிடிக்க முடியவில்லை, ஏனென்றால் இந்தியா இங்கிலாந்தின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது. எனவே வேறொரு உத்தியைக் கையாண்டது. இறையியல் கழகம்(பிரம்மஞான சபை – Theosophical Society) என்ற ஓர் அமைப்பை என்ரி டீல் ஆல்காட் என்பவரும் பிளாவட்கி என்ற அம்மையாரும் 1875இல் அமெரிக்காவில் உருவாக்கினர். இந்து சமயத்தின் மறைகளும் கோட்பாடுகளும் உலகிலேயே உயர்ந்தவை என்றும் அவற்றை ஆங்கில ஆட்சியாளர்கள் குலைக்கிறார்கள் என்றும் அவர்கள் கூறினர். இக் கோட்பாட்டுடன் மும்பை வந்திறங்கிய அவர்களை அங்கிருந்தோர் எவரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. எனவே சென்னைக்கு வந்தனர். இந்து சமய சீர்திருத்த இயக்கங்களால் கதி கலங்கிப் போயிருந்த தமிழகப் பார்ப்பனர்களும் சாதி வெறியர்களும் அதில் மொய்த்தனர்.

            ஆங்கிலர் ஆட்சியில் இந்தியாவில் பணியாற்றிய ஆலன் அகடோவியன் இயூம் என்பவர் இக் கழகத்தில் இணைந்தார். இங்கு ஆங்கில ஆட்சிக்கு எதிரான பரப்பல் நடைபெறுவதைக் கண்டு பிளாவட்கி அம்மையார் ஓர் எத்தர் என்று குற்றம் சாட்டி வெளியேறி ஆங்கில ஆட்சி அதிகாரிகளின் நலனுக்கென்ற பெயரில் 1885இல் இந்தியத் தேசிய பேரவை(காங்கிரசு) கட்சியைத் தொடங்கினார். அதோடு மட்டுமல்ல இறையியல் கழகத்தைக் கைப்பற்ற இங்கிலாந்திலிருந்து அன்னி பெசன்று என்ற ஒரு பெண்மணியைக் கொண்டுவந்தனர். இவரும் காந்தியைப் போல் பிறப்பில் கிறித்துவர், இளம் அகவையில் இறைமறுப்பாளர், பின்னர் “இந்து” சமய இலக்கியங்களைக் கற்று “இந்து” சமய முனைப்பாளர் ஆனவர். அவர் பிளாவட்கி அம்மையாருக்குப் பின் இறையியல் கழகத்தின் தலைவரும் ஆனார்.

            இவர் பேரவைக் கட்சியில் இணைந்து இந்தியாவுக்குத் தன்னாட்சி வேண்டுமென்று கிளர்ச்சிகள் செய்து சிறைக்கும் சென்று வந்தார். ஆக, இந்திய விடுதலைப் போர் ஆங்கிலர் உருவாக்கிய ஓர் இந்தியர், ஓர் ஆங்கிலப் பெண்மணி ஆகியோரின் ஆடுகளமானது.

            இந்தக் காலகட்டத்தில் 1928இல் பிரிட்டீசு அரசு நிறுவிய சைமன் ஆணையத்தை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட லாலா லசபதி ராயை சேம்சு ஏ. காட்டு எனும் காவல்துறை அதிகாரி தாக்கியதால் அவர் நெஞ்சாங்குலை நோய் மிகுந்து இறந்தார். தாக்குதல் நிகழ்த்திய காட்டு என்பவனைக் கொல்ல பகத் சிங் தலைமையில் வந்த இளைஞர்கள் அடையாளம் தவறியதால் சாண்டர்சு என்பவனைக் கொன்றனர். இந்த வழக்கில் பகத்சிங் உட்பட மூவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை நிறைவேற்றினால் மக்கள் கிளர்ந்தெழுவார்களோ என்று ஆங்கில அரசு தயங்கிக் கொண்டிருந்தது. இந் நிலையில், 1931இல் பேரவைக் கட்சியின் மாநாடு சூரத்து நகரில் கூட இருந்தது. அப்போது வைசிராய் எனப்படும் துணையரையருக்கு காந்தி ஒரு மடல் எழுதினார். பகத்சிங்கைத் தூக்கிலிடுவதாயிருந்தால் சூரத்து மாநாட்டுக்கு முன்னரே தூக்கிலிடும்படியும் மாநாட்டின் போது அவர் உயிரோடிருந்தால் அங்கு மாபெரும் கலவரம் வெடிக்கும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். அதன்படி ஆங்கில அரசு தூக்குத் தண்டனையை நிறைவேற்றியது. சூரத்து மாநாட்டில் மா நடிகர் காந்தி தன் கையாலேயே ஒரு கண்டனத் தீர்மானம் எழுதி தன் வாயாலேயே படித்து நீலிக் கண்ணீர் வடித்தார். பகத்சிங் பற்றிய இந்தச் செய்திகளை வீரபாண்டியன் என்பவர் தான் எழுதியுள்ள மாவீரன் பகத்சிங் எனும் நூலில் சான்றுகளுடன் தந்துள்ளார்.

            ஏதோ காந்தி தமிழகத்துக்கு வந்த போது இங்குள்ள மக்கள் வெற்றுடம்புடன் நடமாடுவதைக் கண்டு கசந்து அவர்கள் முழு உடலையும் மூடுவது வரை தானும் வெற்றுடம்புடன் இருக்கப்போவதாக ஒரு சூளுரைத்ததாகப் பெருமைப்படுவர். ஆனால் தமிழக சராசரி மக்கள் வெற்றுடம்புடன் திரிவது ஏழ்மையாலல்ல, பண்ணையார்கள் பட்டு நேரியலால்(அங்கவத்திரத்தால்) போர்த்திக்கொண்டு குடை நிழலில் நடை போட, எதிரில் வரும் ஏழைத் தமிழன் தோளில் அல்லது தலையில் அணிந்திருக்கும் துண்டை எடுத்து கட்கத்தில் இடுக்கி அல்லது இடுப்பில் சுற்றிக்கொள்வது அவருக்குத் தெரியாது போலும். தமிழனுக்குச் சட்டையும் கால்சட்டையும் தெரியாது என்பது போன்ற ஒரு கருத்தோட்டம் நிலவுகிறது. படை வீரர்களும் செய்தி கொண்டுசெல்லும் தூதுவர்களும் கஞ்சுகம் எனும் மேல் சட்டை அணிந்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது. நம்மூர் கருப்பசாமி, சுடலைமாடன் சாமி சிலைகள் சல்லடம் எனும் கால் சட்டை அணிந்துள்ளன என்பதைப் போகிற போக்கில் கூறிக்கொள்கிறேன்.

            தன் எளிமையை மக்களுக்கு நடித்துக்காட்ட தான் மூன்றாம் வகுப்பு தொடர்வண்டிப் பெட்டியில்தான் செல்வேன் என்று மாகா எத்தர் அறிவிக்க, இவர் செல்லும் வண்டிகளிலெல்லாம் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் அவருக்காக முதல் வகுப்புப் பெட்டியிலுள்ள வசதிகளையெல்லாம் செய்து கொடுக்க ஆங்கிலர் அரசு பட்ட பாடுகளைச் சுட்டிக்காட்டி அவர் கட்சியைச் சேர்ந்த கவியரசி சரோசினி நாயுடு கடுமையாக நஃகலடித்துள்ளார்(நஃகல் = சிரித்தல், கிண்டல்).

            இனி இவரது “கிராம இராச்சியத்”தைப் பார்ப்போம். எல்லோரும் வருங்கால இந்தியாவில் மேற்கின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தாமல் உள்ளூர் மரபுத் தொழிலையை செய்ய வேண்டுமென்பது “பெருமகனா”ரின் “கொள்ளை” ஆசை. அதற்காகவே அவர் ஒரு கைராட்டையை வடிவமைத்தார். நாட்டுப்பற்றுள்ள அனைவரும் கைராட்டையில் நூல் நூற்று கைத்தறியில் நெய்து கதராடை எனும் கதிராடையைத்தான் உடுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதற்கான வேள்வி(யாகம்) எங்கே நடந்தது என்று கேட்கிறீர்களா? மார்வாரி பனியாவும் மாபெரும் நூற்பாலைகளின் உரிமையாளருமான பிர்லாவின், பிர்லா மந்திர் எனும் வளமனையில், மந்திர் என்றால் கோயில் என்றொரு பொருளிருக்கிறது. காந்தி அமர்ந்ததால்தான் அதற்கு அந்த அடைமொழியா அல்லது அதற்கு அப் பெயர் ஏற்கனவே இருந்ததா என்று தெரியவில்லை. ஒரு வேளை பிர்லா, தான் இனி ஆலையை மூடிவிட்டு அதை ராட்டை சுற்றும் கூடமாக மாற்றப் போவதாக வாக்குறுதி ஏதாவது கொடுத்திருந்தாரா? அப்படி எதுவுமே இல்லை. அப்படி இருக்க இந்த பச்சைப் பசப்பை, ஏமாற்றை, எத்துவாளித்தனத்தை, அதாவது பனியா, பார்சிகள் ஆலைகளை அமைத்து கொள்ளை அடிக்க வேண்டும், பிற அனைத்து ஏழை இந்தியனும் கைராட்டை சுற்றியும் வரட்டி தட்டியும் என்றும் சேற்றில் உழல வேண்டும். இதுதானே காந்தியின் கிராம ராச்சியமும் இராம ராச்சியமும்?  ஏன் எவரும் இன்றுவரை இதைக் கேள்விக்கு உட்படுத்தவில்லை? ஆனால் பிர்லா வளமனையில் காந்தியின் “நூற்பு வேள்வி” பற்றுப் போற்றாத நாவில்லை. அந்த ஆளை நம்பி வாழ்க்கையைப் பாழாக்கிக்கொண்ட தமிழகத்தின் மாபெரும் பேதை குமரப்பாவைப் பெற்றெடுத்ததற்காக தமிழகம் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

            1947இல் சென்னை மாகாணத்தில் பிரகாசம் என்பவர் தலைமையில் பேரவைக் கட்சி ஆட்சியமைத்தது. அப்போது பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி மாகாணத்திலுள்ள நூற்பாலைகள் அனைத்திலும் கதிர்களின் எண்ணிக்கையைக் கூட்ட தடை விதிக்கப்பட்டது. மாறாக மக்களுக்குக் கைராட்டைகள் வழங்க பெருந்தொகை ஒதுக்கப்பட்டது. கதிர்கள் என்பவை நூல் நூற்க நூற்பாலைகளில் பயன்படுத்தும் நூற்பு உறுப்பு. அவற்றின் எண்ணிக்கைதான் ஒரு நூற்பாலையின் நூற்புத்திறனின் குறியீடாகும்.

            அதே வேளையில் பம்பாய்(இன்றைய மராட்டியம், குசராத் முதலிய மாநிலங்கள் சேர்ந்தது) மாகாணத்தில் சவளி(மடித்தால் தாளைப் போல் தடம் விழாமல் சவள்வதால் சவளி எனப்பட்டது)த் துறையை மேம்படுத்துவதற்காக அயல்நாடுகளிலிருந்து புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவதற்காக 100 கோடி உரூவாக்கள் ஒதுக்கப்பட்டன. இன்றைய மதிப்பில் இலக்கம் கோடிக்கு ஈடாகுமா? அது மட்டுமல்ல சவளித் தொழிலைப் பொறுத்த வரை இந்தியாவை நான்கு மண்டலங்களாகப் பிரித்து சென்னை மாகாணத்தை பம்பாய் மாகாணத்தின் கீழ் கொண்டுவந்தனர். சென்னை மாகாணம் விளங்குமா சொல்லுங்கள். இந்தச் செய்திகளை அண்ணாத்துரை அந்தக் கால கட்டத்தில் எழுதிய பணத்தோட்டம் என்ற நூலில் விரிவாகக் காணலாம்.

            இந்தியாவில் சென்னை மாகாணம் பனியா – பார்சி மூலதனத்தால் முழுகடிக்கப்படுகிறது, உள்ளூர் மக்களின் முனைவுகள் முளையிலேயே கிள்ளப்படுகின்றன என்ற அரசியலைக் கையிலெடுத்து ஆட்சிக்கு வந்த நயன்மைக் கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் ஆட்சிக் காலத்தில்தான் தமிழகத்தில், பெரும்பாலும் பார்ப்பனரல்லாத தமிழக மக்களின் உடைமைகளான சவளி ஆலைகளும் பிறவும் உருவாக்கப்பட்டன என்பதும் இன்று திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்தான் அவற்றில் பல பனியாக்களால் இந்திய, தமிழக அரசுகளின் முழுமையான ஒத்துழைப்புடன் பிடுங்கி அழிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது

            தமிழகத்தில் கி.பி.2ஆம் நூற்றாண்டிலிருந்து ஒரு கொந்தளிப்பான நிலை உருவானது. குமரிக்கண்டத்திலிருந்து கி.மு.1700 வாக்கில் நிகழ்ந்ததும் கழகங்களின் வரலாற்றில் இரண்டாம் கடற்கொளாகக் கூறப்படுவதுமான நிகழ்வின் பின் தமிழகத்தினுள் நுழைந்த வந்தேறிகளான சேர, சோழ, பாண்டியர்கள் கடைக் கழக(சங்க) முடிவில் ஒன்றிணைந்து மூலக்குடித் தலைவர்களான குறுநில மன்னர்களைக் களத்திலிருந்து அகற்றினர். அதன் விளைகாக தமிழகத்தின் வட எல்லைப் பாதுகாப்பு வலுவிழந்தது. குறுநில மன்னர்களின் இடத்தை வாணிகர்கள், குறிப்பாக கடல் வாணிகர்கள் குமுகத் தரத்தில் கைப்பற்றினர் என்பதற்கு சிலப்பதிகாரம் தரும் வருண பூதங்களின் விளக்கம் சான்றாகிறது. இந்தக் காலகட்டத்தில் மகதத்தில் ஆட்சியை மகனிடம் ஒப்படைத்துவிட்டு தெற்கு நோக்கி நடந்த சந்திரகுப்த மோரியனுடன் வந்த 3500 அம்மண ஒற்றர்களுடன் கலிங்கத்துக் காரவேலனும் விடுத்த அம்மண ஒற்றர்களும் தலைவர்களாகிய குறுநில மன்னர்களைப் பறிகொடுத்து மனம் கொதித்துப் போயிருந்த குறிஞ்சி, முல்லை நில மக்களிடையில் மலைக் குகைகளில் பதுங்கியிருந்து மூவேந்தர்களுக்கு எதிராக அவர்களை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டார்கள். அதே வேளையில் செல்வப்பெருக்கில் அரசர்களுக்குப் போட்டியாக வாணிகர்கள் வளர்ந்துவந்தார்கள். அவர்களிடையில் புத்தமும் அம்மணமும் ஊடுருவியது. அரசர்களுக்கும் வாணிகர்களுக்கும் நடைபெற்ற மோதல்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் விரிவாகவே காணப்படுகிறது. எனவே களப்பிரர் காலத்துக்குப் பின் மீண்டும் ஆட்சிக்கு வந்தவர்கள், குறிப்பாக பேரரசுச் சோழர்கள் தமிழக வாணிகர்கள் மீது ஒடுக்குமுறைகளை ஏவினர். கடல் வாணிகர்கள் மீது மிகுந்த ஒடுக்குமுறைகள் ஏவப்பட்டன. இது இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. அம்மணர்களான பனியா(வணிகன், வாணிகன், வாணியன் என்ற தமிழ்ச் சொற்களின் திரிபு)க்களை இந்த ஒடுக்குமுறைகள் தாக்கவில்லை. அதாவது மக்களிடம் செல்வம் திரண்டால் அது தம் கட்டற்ற அதிகாரத்துக்கு அறைகூவலாகும் என்பதை ஆட்சியாளர்கள் கண்டுகொண்டார்கள். அதனால்தான் இராசராசன் தொடங்கி சோழப் பேரரசர்கள் அனைவரும் செல்வம் சேர்வதால் மக்கள் மட்டுமல்ல தங்கள் பேரரசு உருவாவதற்குத் துணை நின்ற சிற்றரசர்கள் கூட செல்வாக்கு பெற முடியாத படி எண்ணற்ற கோயில்களைக் கட்டி அவற்றுக்கு அளவற்ற சொத்துகளை வழங்கி அரசின் உள்ளூர் நடவடிக்கைகளை அவற்றின் கீழ் கொண்டுவந்தனர். ஆகமக் கோயில்களான அவற்றில் ஆறுகால பூசையும் இறைவனுக்கு 16 வகை பணிவிடைகளும்(சோடச உபசாரம்) என்று மக்களுக்கு இன்றியமையாத் தேவைப் பண்டங்களை பல்வேறு வகை முழுக்குகளில்(அபிசேகங்களில்) அழித்தனர். இதற்காக அரக்கப்பரக்க பார்ப்பனப் பூசகர்களையும் தேவரடியார்களையும் வெளியிலிருந்து இறக்கினர். இன்றும் தஞ்சைப் பெரிய கோயிலில் நந்தி எனப்படும் காளைச் சிலை மீது பல பத்து தன்கள் பழவகைகளைக் கோர்த்து அழிப்பதைப் பெருமையாய்த் தொலைக்காட்சிகளில் காட்டுவதைப் பார்க்கிறோம். அனுமன் சிலை மீது இலக்கக் கணக்கில் கோர்த்துத் தொங்கவிடப்படும் வடைகள் அவற்றை அகற்றும் போது ஊசிக் கெட்டு யாரும் பயன்படுத்த முடியாது போகுமே, அதை யாரும் கண்டுகொள்வதே இல்லை. இந்த அழிப்பு வேலையை ஒருங்கிணைக்கும் பூசாரி வேலைக்கு எங்கள் சாதியினருக்கும் பங்கு வேண்டும் என்று பலமுனைப் போராட்டங்கள் நடத்தி அடிப்படைச் சிக்கலைத் திசைதிருப்புவோரே களத்திலுள்ளனர்.

            பகுத்தறிவாளர்கள் என்று தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக்கொண்ட பெரியார் தலைமையிலான கூட்டம் இதைக் கண்டுகொள்ளவே இல்லை, மாறாக வயிற்றுப்பாட்டுக்கு அர்ச்சனைத் தட்டில் விழும் சில்லரைக் காசுக்காகப் பல்லிளிக்கும் பார்ப்பனப் பூசாரியைக் காட்டித் திசைதிருப்பல் அரசியலைத் திறம்படச் செய்தார் பெரியார். மங்கையர்க்கரசி என்ற திரைப்பட்டத்தில் கலைவாணர் நா.சு.கிட்ணன்தான் பால்பழமும் அபிசேகம் பண்ணுவதைப் பார் பாலில்லை என்று சிசு பதறுவதைப் பார் என்று உடுமலை நாராயண கவி இயற்றிய பாடலைப் பாடி நிலைமையைச் சுட்டிக்காட்டினார்.

            இந்தப் பின்னணியில் உடலுழைப்போரை இழிவாகக் கருதும் தமிழகப் பண்பாட்டுச் சூழலில்(அடியவர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரையில புறத்தென்மனார் புலவர் என்ற தொல்காப்பிய வரிகளுக்கு உடலுழைப்பாளர்களான அடிமைகளுக்கும் தொழில் வல்லாருக்கும் களவு, கற்பு எனும் அகத் துறைகள் பொருந்தா, அதாவது அவர்களது பெண்களை மேல் வகுப்பார் தங்கள் விருப்பம் போல் கையாளலாம் என்பது பொருள்) பூசகர்களையும் அரசர்களையும் இவ்விரு வகுப்பாரையும் சார்ந்திருப்போரையும் வலங்கையினரென்றும் வாணிகம், வேளைண்மை, நெசவு உட்பட அனைத்துத் தொழில்களையும் செய்வோரை இடங்கையினரென்றும் வகைப்படுத்தி இடங்கையினருக்கு குடை பிடித்தல், செருப்பணிதல், கத்தி வைத்திருத்தல் போன்ற  பொதுவான குடிமை உரிமைகளைப் பறித்தனர். 72 உரிமைகள் என்பர். இதன் விளைவாக வாணிகர்கள் நாட்டை விட்டு அகன்றனர். தமிழகத்துக்கு வடக்கில் நானாதேசிகள் என்றும் திசையையாயிரத்து நூற்றுவர் என்றும் குழுக்கள் அமைத்து வாணிகம் செய்தனர். அப்போதும் நம் அரசப் பயல்களுக்கு அச்சம் விலகவில்லை. வடக்கே படையெடுக்கும் சாக்கில் அந்த அமைப்புகளைத் தகர்த்தனர்.

            கழக(சங்க) இலக்கியத் தொகுப்பில் தமிழர்களின் கடல்தொழில் பற்றிய பாடல்களே இல்லை. பிரிதல் பற்றிய 1000க்கும் மேற்பட்ட பாடல்களில் கடல் மேல் பிரிவு பற்றி ஒரேயொரு பாடல்தான் இருக்கிறது என்பது மேனாள் மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் காலஞ்சென்ற பண்டிதர் வ.சுப.மாணிக்கனாரின் பண்டிதர் பட்ட ஆய்வேடான தமிழர் காதல் தரும் செய்தி. பண்டைத் தமிழகத்தின் கடல் வாணிகம் பற்றிய சில தடயங்களையாவது தருவது சிலப்பதிகாரமும் மணிமேகலையும்தாம். அந்த அளவுக்குத் தமிழகக் கடல் வாணிகர்கள் ஓடுக்கப்பட்டு கருவறுக்கப்பட்டுள்ளனர்.

            தமிழகத்து அரசப் பயல்களின் போர் வெற்றிகளைக் காட்டி அவற்றைத் தமிழர்களின் பெருமை என்று பெருமிதம் கொள்வது நம் தமிழன்பர்களின் இயல்பு. எடுத்துக்காட்டுக்கு இராசேந்திர சோழன் தமிழகத்தின் தென் கோடியிலிருந்து வங்காள விரிகுடாவைத் தொட்டு இரு புறங்களிலும் இருக்கும் நாடுகள் தொடங்கி கடாரம், சாவா போன்ற கிழக்காசிய நாடுகள் வரை படையெடுத்து வெற்றிக்கொடி நாட்டினான் என்று படம் போட்டுக்காட்டிப் பெருமைப் படும் காட்சிகளை முகநூலிலும் இணையத்திலும் அடிக்கடி பார்க்கிறோம். ஆனால் வரலாற்று ஆய்வாளர் அனைவரும் கடாரத்தின் மீது இராசேந்திரன் எதற்காகப் படையெடுத்தான் என்று புரியவில்லை என்று ஒரே குரலில் மனம்விட்டுக் கூறுகின்றனர். சிலப்பதிகாரத்தில் மணிமேகலா தெய்வம் கோவலனின் முன்னோன் ஒருவன் கப்பல் கவிழ்ந்து கடலில் தத்தளித்த போது மணிமேகலா தெய்வம் காப்பாற்றிய செய்தி வருகிறது. புத்தரின் 500க்கும் மேற்பட்ட “பிறவி”களின் கதைகளைக் கூறும் புத்த சாதகத் கதைகளில் ஒன்றில் காவிரிப்பூம் பட்டினத்தில் வாணிகனாகப் பிறந்த புத்தர் கடலில் கப்பல் கவிழ்த்துவிட ஊக்கமிழக்காமல் ஒரு கட்டையைப் பிடித்துக்கொண்டு நெடுநாள் கிடக்க மணிமேகலா தெய்வம் அவரைக் காப்பாற்றி தாய்லாந்தின் கடற்கரையில் விட அங்கு அரசன் இல்லாத நிலையில் மக்கள் பட்டத்து யானை கையில் மாலையைக் கொடுத்து ஊரைச் சுற்றி வர அது வாணிகன் கழுத்தில் மாலையைப் போட அவன் அந் நாட்டின் அரசனானான் என்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதி நாளில் அரங்கம் முழுவதையும் நாடக மேடையாக்கி இந் நிகழ்ச்சியை நிகழ்த்திக்காட்டினர். அத்துடன் அவ் வட்டாரத்தில் தமிழக வாணிகர்கள் கட்டிய எண்ணற்ற மாபெரும் கோயில்களைப் பற்றிய செய்திகள் நாளுக்கொன்றாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் இந்த வாணிகர்கள் தமிழகத்துடன் கமுக்கமாக வாணிகம் செய்து தங்கள் செல்வாக்கைத் தமிழகத்தினுள் மீட்கலாம் என்ற அச்சத்தில்தான் நட்பு நாடுகளாகிய சீர்(சிறீ) விசயம், சீனம் போன்ற நாடுகளின் உடன்பாட்டுடன் படையெடுத்து அவர்களை அழித்திருக்கலாம் என்னும் விளக்கம்தான் நமக்குக் கிடைக்கிறது. கண் முன் கண்ட காட்சியாக தமிழகத்து கருணாநிதி, செயலலிதா, நெடுமாறன் தொடங்கி காட்டிக்கொடுக்கும் ஒரு பெரும் படையின் மறைமுக ஒத்துழைப்புடன் அமெரிக்கா அமைதியான இசைவு தர இராசபச்சேவைக் கைக்குள் போட்டுக்கொண்டு ஈழத் தமிழர்களை இந்திய ஆட்சியாளர்கள் கொத்துக்குண்டுகளால் அழித்ததை இதற்கு இணையாகக் கூறலாம். இன்றும் சிங்கள அரசுக்கு இந்திய ஆட்சியாளர்கள் இடைவிடாத பயிற்சிகளும் பண உதவிகளும் வழங்கி வருவதைக் காண்கிறோமே! இதை வரலாற்றுக் காலத்தில் சிங்களர்களுக்கு தமிழகத்து பாண்டிய அரசப் பயல்கள் தொடர்ந்து செய்து வந்துள்ளனர்.              

            தங்கள் நாட்டு வாணிகக் குழுக்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் வாணிகத்தில் இறங்கிக் கொஞ்சம் கொஞ்சமாக நிலங்களைக் கைப்பற்ற, அவற்றை ஒரு கட்டத்தில் அரசு தன் அதிகாரத்தின் கீழ் எடுத்துத்தான் சென்ற இரண்டு மூன்று நூற்றாண்டுகளின் ஐரோப்பியரின் உலக மேலாளுமை தொடங்கி இன்றும் தொடர்கிறது என்ற உண்மையோடு இணைத்துப் பார்த்தோமானால், இராசேந்திர சோழன் என்ற சோதாப்பயல் எவ்வளவு கோழையாக, தாழ்வுணர்ச்சி மிக்க முட்டாளாக இருந்து ஒட்டுமொத்த தமிழ், தமிழக மக்களுக்கு எவ்வளவு பெரும் கேடு விளைத்திருக்கிறான் என்பது புரியும்.

            இத்தகைய ஒரு பண்பாட்டுப் பின்னணியில் முதன்மை சமய ஓட்டத்துக்கு மாறான அம்மண சமயத்தாரின் வாணிக நடைமுறைகள் தடையின்றி நடைபெற்றன. இவர்கள் உள்நாட்டுக் கடலோடிகளுக்கு எதிரானவர்கள், அயல் கடல் வாணிகர்களின் நிலையான தரகர்கள். வெளியிலிருந்து இறங்குபவற்றை உள்நாட்டில் விற்றும் இங்கு கிடைப்பவற்றை அயல் வாணிகர்களுக்கு விற்றும் செல்வம் திரட்டியவர்கள். தமக்குள் ஓயாச் சண்டைகளில் ஈடுபட்டிருந்த எண்ணற்ற சிற்றரசர்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்தும் செல்வாக்கு பெற்றவர்கள். இவர்களுக்கு முதன்முதல் அறைகூவல் இங்கு நுழைந்த அரேபியர்களிடமிருந்தும் தொடர்ந்த பல நாட்டு முகம்மதியர்களிடமிருந்தும் வந்தது. அவர்கள் கடல்வழி மட்டுமல்ல, நிலவழி வாணிகத்திலும் வல்லவர்கள். இருந்தாலும் இந்தப் போட்டியை எதிர்கொண்டு அவர்கள நிலைத்திருந்தார்கள். இரு குழுவினரும் வழக்கம் போல் அரசர்களுக்கும் சிற்றரசர்களுக்கும் போர்ச் செலவுகளுக்குக் கடன் கொடுத்தே வந்தனர்.

            ஐரோப்பியர் உலகைச் சுற்றிக் கடலோடத் தொடங்கியதே முகம்மதியர்களை எதிர்த்துத்தான். ஒரு கட்டத்தில் ஐரோப்பாவில் பல பகுதிகள் துருக்கியிலிருந்த ஓட்டோமான் முகம்மதிய அரசின் ஆளுகையின் கீழ் வந்து முகம்மதிய சமயக் கருத்துகள் ஐரோப்பியக் கல்வி நிலையங்களில் கற்பிக்கப்பட்டன என்று இராகுல சங்கிருத்தியாயன் ஒரு நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அடுத்து சிலுவைப் போர்கள் தோல்வியடைந்ததால் கிறித்துவத் தலைமை மீது உருவான கசப்புணர்வு மார்ட்டின் லூதரின் சமயப் புரட்சிக்கு வெற்றி தேடித் தந்தது. நண்ணில(மத்தியதரை)க் கடலைக் கடந்து அரேபியாவில் இறங்கி நிலம் வழியாக செங்கடலை அடைந்து இந்தியா வர வேண்டியிருந்த நிலையில் தடையாக இருந்த முகம்மதிய எதிர்ப்பைத் தவிர்ப்பதற்காக அங்கு உருவான அறிவியல் புரட்சியால் உலகம் உருண்டை என்ற புதிய அறிவு இவர்களுக்கு, அன்றும் மாறா வளத்தை வாரி வழங்குவதாக நம்பிய கிழக்கில் இருக்கும் இந்தியாவுக்கு வருவதறகு மேற்கு நோக்கிப் புறப்பட்ட கொலம்பன் அமெரிக்காவில் வந்து இறங்கினான். அடுத்து வாக்கோடகோமா அட்லான்றிக் பெருங்கடலைக் கடந்து ஆப்பிரிக்காவைச் சுற்றி இந்தியா செல்லலாம் என்ற நம்பிக்கையில் புறப்பட்டு அதன் தென் முனையைத் தாண்டி இந்து மாக்கடல் எனும் குமரி மாக்கடலைக் கண்டதும் ஆப்பிரிக்காவின் அம் முனைக்கு நன்னம்பிக்கை முனை எனப் பெயரிட்டுக் கேரளக் கரையில் வந்து இறங்கினான். பின்னர் படிப்படியாக முகம்மதியர்களை முறியடித்துத்தான் அவர்கள் இந்தியாவில் நிலைத்தார்கள். எனவே முகம்மதியர்கள் வாணிகத்துறையில் ஐரோப்பியர்களுக்குப் போட்டியாளர்கள். இந்த வகையில் பனியாக்களும் அவர்களது கூட்டாளிகளான பார்சிகளும் ஆங்கிலரும் முகம்மதியர்களுக்கு எதிரான கூட்டாளிகளாயினர். இந்தக் கண்ணோட்டத்தில்தான் காந்தி, அன்னி பெசன்று ஆகியோரின் இந்து சமயத் தாவலைப் பார்க்க வேண்டும்.

            பனியாக்கள் எனும் அம்மண சமய வாணிகர்களில் இரு பிரிவுகள் உண்டு. இராசத்தானிலுள்ள மார்வார் என்ற இடத்தின் அடிப்படையில் அழைக்கப்படும் மார்வாரிகள் ஒரு பிரிவு. இவர்கள் மத்தியப் பிரதேசத்திலும் இருக்கிறார்கள். இன்னொரு பிரிவு குசராத்தைச் சேர்ந்த குசராத்தி பனியாக்கள். காந்தி குசராத்தி பனியா. இன்று உலகில் இந்தியாவுக்கு வெளியே தொழில் வாணிகம் மட்டுமின்றி அரசியல், ஆள்வினை(நிர்வாக)க் களங்களிலும் கொடிகட்டிப் பறப்பவர்கள் குசராத்திகள். இந்தியவுக்குள் மார்வாரிப் பனியாக்களும் பார்சிகளும். இந்திரா காந்தியின் கணவர் பிரோசு காந்தி ஒரு பார்சி. ஆக, பா.ச.க.வின் தலைமை அமைச்சராக ஒரு குசராத்தியும் பேரவைக் கட்சியின் தலைமையாக ஒரு பார்சி – இத்தாலியக் குடும்பமும் இருக்கின்றனர்.

            இந்திய முகம்மதியர்கள் விடுதலைப் போராட்டக் காலத்தில் அவர்களாக பாக்கித்தான் பிரிவினையைக் கேட்கவில்லை. காந்தியின் “இராமநாம” பசனையும் “இந்து” நடிப்பும்தான் முதல் வித்தாக விழுந்தது. அப்போதும் சின்னா பிரிந்து போக வேண்டும் என்று கேட்கவில்லை. அவர் ஒரு சமயவாணரும் அல்ல, ஐரோப்பியர் அணியும் உடைகளையே அணிந்தார். இந்தியா விடுதலை பெற்றால் முகம்மதியர்களின் பொருளியல் நடவடிக்கைகள் பனியா – பார்சி கூட்டணியால் நசுக்கப்படும் என்ற அச்சத்தில்தான் அவர் முகம்மதியர்களுக்குத் தனி நாடு வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்தார். இங்கிலாந்து அரசு இந்தியாவுக்கு விடுதலை வழங்க முன்வந்த போது இவர் முன்வைத்தது, முழுத் தன்னாட்சி உடைய மாநிலங்களின் ஒரு கூட்டாட்சியான ஒருமித்த இந்தியா அல்லது முகம்மதியர்களுக்கு பாக்கித்தான் என்பதாகும். இது குறித்து சின்னாவுடன் பட்டேல், நேரு, அபுல்கலாம் ஆசாத்து போன்றவர்கள் உரையாடல்கள் நடத்திக்கொண்டிருந்த போது இங்கிலாந்து அரசு இந்தியாவிலிருந்து பாக்கித்தானைப் பிரித்து இரண்டுக்கும் விடுதலை வழங்குவதாக அறிவித்ததாக தினமணி கட்டுரை ஒன்றில் ரங்கராசன் என்பவர் எழுதியுள்ளார்(காந்தி பிறந்த அக்டோபர் 2 அல்லது மறைந்த சனவரி 30 நாளிட்ட ஒரு இதழில்). இந்தியா குறித்த எந்த முகாமையான முடிவையும் காந்தியைக் கலக்காமல் எடுக்காத இங்கிலாந்து இந்த அறிவிப்பையும் காந்தியின் அறிவுரையின் பேரிலேயே வெளியிட்டிருக்கும் என்பது உறுதி.

            பாக்கித்தானை இந்தியாவிலிருந்து பிரித்தாயிற்று. இப்போது மக்கள் இடம்பெயர்ந்தாக வேண்டும். ஒரு பகுதியிலிருந்து அந்தப் பகுதிக்கு உரியவரல்லாத மதத்தினரை வெளியேற்ற இரு பக்கங்களிலும் உள்ள மத வெறியர்களும் பொறுக்கிகளும் கொலை, கொள்ளை, தீ வைப்பு, பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டனர். எதிரி என அறிவிக்கப்பட்ட அயல் நாட்டுப் படைகளை எதிர்த்து ஆயுதம் தாங்கிய ஒரு விடுதலைப் போரை நிகழ்த்தி இருந்தால் சிந்தும் குருதி அந்நாட்டு மக்களிடையில் உணர்ச்சி ஒன்றிய ஓர் ஒற்றுமையை வளர்க்கும் நீராகப் பயன்பட்டிருக்கும், நூற்றாண்டுகளாக மத அடிப்படையில் ஒருவரையொருவர் தொலைவில் நிறுத்திப் பார்த்த வேற்றுமை உணர்வு மங்க வழி திறந்திருக்கும். ஆனால் காந்தி முன்மொழிந்த குருதி சிந்தா, ஆயுதம் தாங்காத “அற”வழிப் போராட்டத்தில் அரசுப் படைகளாலும் காந்தியின் சூழ்ச்சியில் உருவாகிய சமய மோதலிலுல் சிந்திய குருதி இந் நாட்டு மக்களைக் காலத்துக்கும் மோதலில் ஈடுபட்டிருக்கும் ஒரு மக்கள் கூட்டமாக மாற்றிவிட்டது. அதைத்தான் காந்தியும் எதிர்பார்த்தது. அப்படியானால்தானே பனியா – பார்சிகளுடன் சேர்ந்து ஆளும் கும்பல் செய்யும் அழிம்புகள், கொள்ளைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்ப முடியும்?

            காந்தி ஆயுதம் தாங்குவதை ஒட்டுமொத்தமாக எதிர்க்கவில்லை, குடி மக்கள் ஆயுதம் தாங்குவதைத்தான் எதிர்த்தார். ஆட்சியாளர் ஆயுதம் தாங்கி மக்கள் மீது எந்த விதமான தாக்குதலையும் நிகழ்த்துவதற்கு உரிமையுண்டு அதை வாய்மூடி ஏற்றுக்கொள்வதுதான் மக்கள் எதிர்ப்புக்காட்டும் வழிமுறை என்றார். ஆகா, எவ்வளவு “உயர்வான” சிந்தனை! மனுவும் சாணக்கியனும் இந்த ஆளின் காலில் விழுந்து தொழ வேண்டாமா? ஆளுபவனான “சத்திரியனு”க்கு ஆயுதம் தாங்கும் உரிமை இருப்பது போல் வாணிகனான பனியாவுக்கு மட்டுமே வாணிகம் செய்யும் உரிமை உள்ளது, அப்படித்தானே? அதைத்தான் தமிழக நாட்டுக்கோட்டைச் செட்டியான ஆர்.கே.சண்முகம் செட்டியாரிடம் “நீயும் பனியா, நானும் பனீயா” என்று காந்தி சொந்தம் கொண்டாடியதாக புதிய பார்வை இதழில் வெளிவந்த துணுக்கொன்று கூறியது. அதை அவர் ஏற்றுக்கொண்டிருந்தார் என்பதற்கு பணத்தோட்டம் நூலில் அண்ணாத்துரை தந்துள்ள செய்திகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம். அதே தடத்தில் தமிழகத்துப் பொருளியல் தலைதூக்காமல் செய்த ப.சிதம்பரம் நடந்து காட்டினார்.

            சேலம் நகரவையால் 1937இல் பூங்காவொன்றில் நிறுவப்பட்டிருந்த காந்தியின் சிலையை அப்போது சென்னை மாகாண ஆளுநராக இருந்த ஆங்கிலர் திறந்துவைத்த செய்தியை மேலே குறிப்பிட்ட ரங்கராசன் என்பவர் தினமணி கட்டுரை ஒன்றில் பெருமையாகக் குறிப்பிடுகிறார். ஆங்கிலருக்கு எதிராகக் கப்பலோட்டியதற்காக சிதம்பரனாரை வரலாற்றில் எங்கும் இல்லாதவாறு செக்கைச் சிறைச்சாலையில் நிறுவி இழுக்க வைத்தனர். தென்னாப்பிரிக்காவில் நெல்சன் மண்டோலாவை 25 ஆண்டுகள் கொடுஞ்சிறையில் அடைத்தனர், அங்கு உருசிய ஆதரவு போராளிகளின் கை ஓங்குவது கண்டே அவரை வெளியில் விட்டு தற்காத்துக்கொண்டனர், ஆனால் தங்கள் ஆட்சிக்கு எதிராக விடுதலை கேட்டுப் போராடும் ஓர் இயக்கத் தலைவருக்கு அந் நாட்டை அடிமை கொண்ட ஓர் அரசு சிலை எடுத்துச் சிறப்புச் செய்வது வியப்பாயில்லையா? அப்படியானால் அந்த ஆட்சியாளர்களுக்கும் அந்த “விடுதலை”ப் போராளிக்கும் இடையில் உள்ள உறவு எத்தகையது என்ற கேள்வி எழவில்லையா?

            “விடுதலை” கொடுப்பதாக இங்கிலாந்து அரசு அறிவித்த போது, தனியாகப் பிரிந்து செல்ல விரும்பும் சமத்தானங்கள் தீர்மானம் நிறைவேற்றினால் அவர்களுடைய வேண்டுகை ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதை நம்பி திருவிதாங்கூரின் சி.பி.இராமசாமியாரும் ஐதராபாத்து நிசாமும் தீர்மானங்கள் நிறைவேற்றினர். “விடுதலை” கிடைத்ததும் “இரும்பு” மனிதர் என்று புகழப்படும் குசராத்தி வல்லபாய் பட்டேல் படைகளைக் காட்டிப் பணிய வைத்தான். தமிழரான இராமசாமியார், “அகண்ட” கேரளம் என்ற அமைப்புக்குள் சிக்கினால் திருவிதாங்கூரில் பெரும்பான்மையாராக இருந்த தமிழ் பேசும் மக்கள் மிகச் சிறுபான்மையராகிவிடுவார் என்பதற்காக அதைச் செய்தார். ஆனால் அதைப் புரிந்துகொள்ளாத, தங்களைத் தமிழ்ப் பற்றாளர்களென்றும் தமிழர்களுக்காகப் பாடுபடுவோர் என்றும் காட்டிக்கொள்ளும் சில அறிவிலிகள் அவர் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்கள் என்று வசைபாடுவதில் இன்றும் இன்பம் காண்கின்றனர். பின்னர் கேரளத்திலிருந்து பிரிந்து தாய்த் தமிழகத்தோடு இணைவதற்காக அந்தத் தமிழ் மக்கள் பட்ட கொடுமைகளும் சிந்திய குருதியும் இழந்த உயிர்களும் வரலாற்றில் கறைகளாக உள்ளதைக் கண்ணாரக் கண்டும் இராமசாமியாரின் முயற்சியின் பெருமையை இவர்கள் புரிந்துகொள்ளாதது நம் மழுமண்டைத்தனத்தைத்தான் காட்டுகிறது. தமிழன் என்று நம்மில் பலர் பெருமைப்படும் காமராசரும் அம் மக்களைக் களத்திலிறக்கி தலைவர் அடைமொழி பெற்ற நேசமணியும் செய்த இரண்டகத்தால் அந்த மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இன்றும் மலையாளிகளிடையில் கிடந்து உழல்கின்றனர். நமக்குரிய நெய்யாற்று நீரையும் பெரியாற்று அணையையும் பறிகொடுத்து நிற்கிறோம். அன்றைய ஐதராபாத்தோ இன்றைய தெலிங்கானாவாக மலர்ந்துள்ளது. 

            விடுதலை பெற்ற இந்தியாவில் மொழி அடிப்படையில் மாநிலங்களை அமைப்போம் என்ற உறுதி மொழியுடன்தான் சென்னை மாகாணப் பேரவைக் கட்சிக் கிளைக்கு தமிழ்நாடு பேரவைக் குழு(தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி), தெலுங்கு பேசும் மக்கள் வாழ்ந்த பகுதிக் கிளைக்கு ஆந்திரப் பிரதேச பேரவைக் குழு என்பன போன்ற பெயர்கள் “விடுதலை”க்கு முன்பே வைக்கப்பட்டன. ஆனால் ஆந்திர மாநிலம் மாநிலம் மைவதற்காக பொட்டி சீராமுலு என்ற ஒருவர் உண்ணாநோன்பிருந்து உயிரிழக்க மாபெரும் கலகம் வெடித்து குருதியாறு ஒடி பல்வேறு இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. தமிழர்களைப் பற்றித்தான் ஏற்கனவே சொல்லியாயிற்று.

            காந்தி தன் திட்டங்களை நிறைவேற்ற தேர்ந்தெடுத்த ஆள் தன் மொழி பேசும் குசராத்தியான பட்டேலை. ஆனால் அந்த ஆள் முரடன், எந்தப் பாசாங்கும் இன்றி களத்தில் இறங்கினால் விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்து எழுச்சி நிலையில் இருக்கும் பல்வேறு மக்களும் கலகம் செய்து இந்தியா என்ற ஒரு பெரும் கொள்ளைக் களம் எனும் கனவு கலைந்துபோகும் என்பதனால் ஒரு முகமூடியாக நேருவை தலைமையமைச்சராகவும் செயற்பாட்டுக்கு பட்டேலையும் காந்தி அமர்த்தினார். பட்டேலின் கொடுமைகளுக்கு பட்டேலியம் என்ற பெயரை காந்தியத்துக்கு எதிரான ஒன்றாகக் கொடுத்தனர் “காந்தியத்”தை நம்பி ஏமாந்த தமிழகத்து திரு.வி.க. போன்ற ஏமாளிகள். “காந்தியம் செத்துவிட்டது, பட்டேலியம்தான் வாழ்கிறது” என்பது அவரது புகழ்பெற்ற கூற்று. காந்தியம்தான் பட்டேலியம் என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று நினைக்கிறேன்.

            தன் இலக்கை அடைந்தாயிற்று, இனி உயிருடன் இருந்தால், ஆட்சியில் எளிமை, மரத்தடியில் பாராளுமன்றத்தை நடத்துவேன் எனத் தான் வாக்களித்த பொய்ம்மைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திலிருந்து தப்பவும் ஏசுவை விட தான் ஒரு மாபெரும் அற வீரன் என்று காட்டி தன் கூட்டத்தாருக்குப் பெருமை சேர்க்கவும் மேற்கொண்ட உயிர் ஈகம்தான், தானே கோட்சேயை அமர்த்தி நிறைவேற்றிய கொலை என்று கருதுகிறேன். 30 - 01 - 2016 அன்று தினமணியில் வெளிவந்துள்ள, அ.பிச்சை என்பார் எழுதியுள்ள கட்டுரையைப் படித்துப் பாருங்கள். அந்த ஆளை பனியாக்கள் போற்றலாம், பார்சிகள் வணங்கலாம், வல்லரசியம் தலைமேல் வைத்துக் கூத்தாடலாம். பிற எந்த இந்தியக் குடிமகனும் பாராட்டுவது மடத்தனம்.

இதோடு காந்தியை விட்டுவிட்டு மோடியைத் தடம் பிடிப்போம். முன்பு இறையியல் கழகத்தைக் கொண்டு இந்தியாவினுள் தலையிட மேற்கொண்ட முயற்சியை அன்னி பெசன்றையும் பின்னர் காந்தியையும் கொண்டு ஆங்கிலர் முறியடித்துவிட “இந்து”ப் பண்பான சாதி வெறியின் பதுங்கு குழியான தமிழகத்தில் ஒடுக்கும் சாதிகளின் ஒரு சிறந்த பாதுகாவலனாக இருந்த மன்னன் சேதுபதியைத் தேர்ந்தெடுத்தது அமெரிக்கா. அங்கு நடைபெற “இருந்த உலக மதங்களின் பாராளுமன்றம்” என்ற அரங்கத்தில் பேச அழைத்தது. அவரோ விவேகானந்தரை விடுத்துவைத்தார். அங்கே உரையாற்றி பெருமையோடு திரும்பிவந்த விவேகானந்தரை இந்தியாவின் சாதி வெறியர்கள் பற்றிப் பிடித்துக்கொண்டனர். உழைப்பு பற்றியும் மக்களின் சமத்துவம் பற்றியும் அவர் கொண்டிருந்த கருத்துகளைப் புதைத்துவிட்டு சனாதனத்துக்கும் சாதிய ஒடுக்குமுறைக்கும் அவரை அடையாளமாகக் காட்டிவருகின்றனர். இந்த அடிப்படையில்தான் இந்து மகாசபை, இரா.சே.ச.(இராட்டிரீய சுயம் சேவக் சங்கம் – ஆர்.எசு.எசு.) ஆகிய இயக்கங்களைக் கட்டி எழுப்பினர். சன சங்கம் என்ற அரசியல் கட்சியையும் உருவாக்கினர். இதை எவரும் சீண்டவில்லை. 1974இல் இந்திரா காந்தி பிறப்பித்த நெருக்கடி நிலையின் போது உருவான கூட்டணியில் இக் கட்சியின் வளர்ச்சி தொடங்கியது. பின்னர் வி.பி.சிங்கின் ஆட்சியின் போது வளர்ச்சி பெற்று பதுங்கிப் பதுங்கி இன்று வளர்ந்து நிற்கிறது. தமிழகத்து இரு திராவிடக் கட்சிகளின் பதவி வேட்டையிலும் இதன் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு.

காந்தியின் குசராத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய மோடி அங்கு ஒரு மதக் கலவரத்தை உருவாக்கி முகம்மதியர்கள் மீது கொடும் அடக்குமுறையை ஏவி உலகப் புகழ் பெற்றார். அதனால் அமெரிக்கா அவர் அங்கு வரத் தடைவிதித்து நடித்தது. இதனால் இந்தியாவில் அமெரிக்காவின் சுரண்டல் நடவடிக்கைகளால் அதன் மீது இங்குள்ள மக்களுக்கு உருவாகியிருந்த வெறுப்பு மோடியின் தலைமையமைச்சர் போட்டியில் மிகப் பெருமளவு பயன்பட்டது. தேர்தல் முடிந்ததும் நடிப்பைக் கைவிட்டு இருவரும் கைகோர்த்துள்ளனர். இப்போது இந்தியா அமெரிக்காவின் 52ஆம் மாநிலமாக, ஆனால் தனித் தேசியக் கொடியுடன் விளங்குகிறது.

பா.ச.க.வின் வளர்ச்சியில் இடங்கைப் பொதுமைக் கட்சி எனப்படும் மார்க்சியப் பொதுமைக் கட்சிக்கு முதன்மையான பங்குண்டு. போபோர்சு பீரங்கி ஊழலை வெளிப்படுத்தியதால் வெளியேற்றப்பட்ட வி.பி.சிங் மக்கள் விடுதலை முன்னணி என்ற இயக்கத்தைத் தொடங்கி மக்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு ஓர் அரசியல் இயக்கம் அமைக்க முயன்றார். அவரைத் திசைதிருப்பி கூட்டணி அமைக்கவைத்து அதனுள் பாரதிய சனதாவாக பெயர் மாற்றம் பெற்றிருந்த சன சங்கத்துக்கு வளர்ச்சி வாய்ப்பளித்துக் கொடுத்தவர்கள் இவர்கள்தாம். இவர்கள் இப்படி எத்தனையோ கட்சிகளை அணைத்துக் கெடுத்துள்ளார்கள். இவர்களின் அணைப்பிலிருந்து தப்பியவர் ம.கோ.இரா. ஒருவர்தான்.

1953இல் உருசிய தாலின் இறந்த பின் உருசியாவுக்கும் சீனத்துக்கும் உருவான பகைமையில் இந்திய பொதுமைக் கட்சி இரண்டாக உடைந்து சீனத்துச் சார்பாக உருவானதுதான் இந்தக் கட்சி. தமிழகத்தைப் பொறுத்தவரை பார்ப்பனர்களுக்கும் சிவனிய வெள்ளாளர்களுக்குமான தலைமைப் போட்டியில் பாரப்பனர்களின் தலைமையில் இடங்கை, அதாவது மார்க்சியப் பொதுமைக் கட்சி உருவானது என்பது உண்மையான சாதிய அரசியல். இரு பிரிவுகளுக்கும் இடையில் கொலைப் பகை இருந்தாலும் பனியா – பார்சிகள்தாம் இந்தியாவின் தேசிய முதலாளிகள் என்பதில் எப்போதும் இப்போதும் உறுதியாக ஒற்றுமையாக இருக்காறார்கள். இதில் பார்ப்பனர்கள் மீதும் கூட இவர்களுக்கு பரிவு கிடையாது. 1980களின் தொடக்கத்தில் நான் மதுரையில் இருந்த போது டி.வி.சு. நிறுவனத்தைத் தகர்க்க இடங்கையினர் ஆயத்தமாகின்றனர் என்ற செய்தியை நண்பர் ஒருவர் கூறினார். இப்படி ஊருக்கே தெரிந்திருக்க அந்த நிறுவனத்தாருக்குத் தெரியாமல் இருக்குமா? அவர்கள் தங்கள் ஓசூர் தொழிற்சாலைகளுக்குப் பாதுகாப்பாக நெல்லை மாவட்டத்தில் நாடார்களின் தொழில் – வாணிக நிறுவனங்களைக் காப்பதில்  அடியாளாகச் செயற்பட்ட கராத்தே செல்வின் என்பவரை அமர்த்தினர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்குக் கணிசமாகப் பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். இவ்வாறு இவர்களின் சூழ்ச்சியிருந்து தப்பினர். இவ்வளவு ஆட்கட்டும் வலுவும் தொடர்புகளும் இல்லாத எத்தனை தமிழகத் தொழில் – வாணிக நிறுவனங்களை இக் கயவாளிகள் அழித்தார்களோ நமக்குத் தெரியாது.

கடந்த முறைக்கு முன்பு சிதம்பரம் பண அமைச்சராக இருந்த போது தமிழகத்தைச் சேர்ந்த 36 பண நிறுவனங்களை வலுவற்றவை என்று ஏம(ரிசர்வு) வங்கியைக் கொண்டு தாளிகை(செய்தி இதழ்)களில் விளம்பரம் கொடுத்துக் களத்திலிருந்து துடைத்தெறிந்தார்கள். இதே உத்தியை பார்ப்பர்களால் நடத்தப்படும் சிறீராம் சீட்டுப் பண்டு நிறுவனத்தின் மீது கையாண்ட போது அவர்கள் உடனே ஊடகங்களை அழைத்து தங்கள் நிறுவனம் வலுவாகவே இருக்கிறது என்று வலியுறுத்தித் தப்பித்துக்கொண்டனர். இவ்வாறு பனியா – பார்சிகளுக்காக தமிழக மக்களின் பொருளியல் நிறுவனங்கள் மீதும் முனைவுகள் மீதும் அரசும் பொதுமைக் கட்சியினரும் நிகழ்த்தி வரும் கொடுமைகளைப் பட்டியலிட்டால் அது எல்லையின்றி நீண்டு போகும். பிற மாநில மக்களும் இந்தக் கொடுமைகளுக்கு ஆட்பட்டே வருகின்றனர் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இருந்தாலும் வ.உ.சி. பிறந்த மாநிலம் என்பதாலும் தென்னாப்பிரிக்காவில் எத்தன் காந்திக்கு வலிமை சேர்த்த அப்பாவிகளின் வீறு மிகுதியை காந்தி கண்ணாரக் கண்டதாலும் சுபாசு சந்திர போசுக்கு ஆணும் பெண்ணுமாகத் துணை நின்று நிகழ்த்திய வீர வரலாற்றுடன் மாவீரன் பிரபாகரன் தலைமையில் உலகை நடுங்கவைத்த மறத்தாலும் தமிழக மக்களுக்கு என்று தனிக் கவனம் வைத்துள்ளனர் நயன்மை(நீதி)த் துறை உள்ளிட்ட முழு ஆட்சிப் பொறியும். இந்தப் பின்னணியில் இந்திய மக்களை பனியா – பார்சி – வல்லரசியப் பிடியிலிருந்து மீட்கும் மிகப்பெரும் போராட்டத்தில் தமிழகம் தலைமை தாங்க வேண்டிய பொறுப்பை வரலாறு தமிழக மக்களின் தலைகள் மீது சுமத்தியுள்ளது.

            சென்ற நூற்றாண்டில் இத்தாலியின் முசோலினி பாசியர்கள்(fascists) என்ற ஒரு படையை உருவாக்கி தலைநகரை நோக்கி அணிவகுக்க அதைக் கண்டு ஆட்சியாளர்கள் அஞ்சி ஓட ஆட்சியைப் பிடித்தான். அந்த முன்னுருவை வைத்துத்தான் நமது சாதி வெறியர்களும் இரா.செ.ச.வை உருவாக்கினார்கள். அது ஆங்காங்கு சில்லரை நச்சு வேலைகளில் ஈடுபட்டு வந்தாலும் அவர்கள் நினைத்த அளவுக்கு பயன்தரவில்லை. இந்திய மக்கள் இவர்களது அந்த அளவுக்கு இறங்கிவரவில்லை. இன்னும் வர மாட்டார்கள் என்று உறுதியாக நம்பலாம்.


முசோலினீயைப் பார்த்து தமிழகத்திலும் ஒரு தலைவர் ஒரு படையை உருவாக்கிய இழிவான வரலாற்றை இப்போது பார்ப்போம். முசோலியின் கட்சியின் பிரிட்டன் கிளையின் கொடி சிவப்புப் பின்னணியில் ஒரு வெள்ளை வளையத்துள் ஒரு நீல வட்டமும் அதில் ஒரு மின்னல் கீற்றும் கொண்டது. சப்பானின் கொடி வெள்ளைப் பின்னணியின் நடுவில் சிவப்பு வட்டத்தைக் கொண்டது. திராவிடர் கழகத்தின் கொடி கருப்புப் பின்னணியில் சிவப்பு வட்டத்தைக் கொண்டது. பாசியக் கட்சியின் தொண்டர்கள் கருப்பு Related imageஉடைகளை அணிந்திருந்தனர். அதே அடிப்படையில் பெரியாரும் ஒரு கருஞ்சட்டைப் படையை உருவாக்கினார். குடும்பப் பொறுப்புகளுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்துவிட்டு வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்கவோ உயிரை ஈகம் செய்யவோ அணியமாக உள்ளோர் வரலாம் என்று அவர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு 3500 பேர் முன்வந்தாதாகத் தெரிகிறது. கருஞ்சட்டைப் படையினர் என அழைக்கப்பட்ட அவர்கள் கழக மாநாடு தொடங்கும் முன் நடைபெறும் பேரணியில் கட்சிக் கொடியைத் தூக்கிக்கொண்டு முன்னணிப்படையாக வருவர். நான்றிந்த வரை ஒரு முறை பெரியார் விடுத்த ஆணைப்படி சீரங்கத்தில் குளித்துக்கொண்டிருந்த பார்ப்பனர்களின் பூணூல்களை அறுத்தது தவிர வேறெதையும் செய்ததில்லை செய்ய அவர் விட்டதில்லை. இது பற்றி மூத்த கருஞ்சட்டைப் படை வீரர்கள் ஓரிருவரைக் கேட்ட போது அவர் எதற்காகத் தங்களை வைத்திருந்தார் என்று தெரியவில்லை என்றனர்.

இவரால் தாக்கிப் பேசப்படுவோர், எழுதப்படுவோரை மிரட்டிப் பணம் கறக்கவே இவர்களை வைத்திருந்தார் என்று எனக்குத் தோன்றுகிறது. எடுத்துக் காட்டாக “விடுதலை” அடைந்த பின் கிழக்காசிய நாடுகளிலிருந்து துரத்தப்பட்டு வந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார்களுக்கு சென்னையில் தொழில் – வாணிக நிறுவனங்களை நிறுவ இங்கு பெரும் வாணிக நிறுவனங்களை வைத்திருந்த ஆந்திரத்தைச் சேர்ந்த செட்டியார்கள் இடையூறாக இருக்கிறார்கள் என்றே இசைச் சபைகளில் தெலுங்குப் பாடல்கள் மேலாளுமையைச் சுட்டிக்காட்டி தமிழிசைச் சங்கத்தைத் தொடங்கினார் செட்டிநாட்டரசர் அண்ணாமலைச் செட்டியார். அதன் தொடக்க நிகழ்ச்சியில் பெரியாரும் கலந்துகொண்டார். ஆனால் தமிழிசை வளர்ச்சிக்காக அவர் எதுவும் செய்யவில்லை. ஒன்றிரண்டு கல்வி நிறுவனங்களையும் பின்னால் நேருவால் பிடுங்கப்பட்ட இந்திய உயிர்க் காப்பீட்டு நிறுவனத்தையும் இந்திரா காந்தியால் பிடுங்கப்பட்ட இரு வங்கிகளையும் தவிர புது தொழில் முனைவுகளில் அவர்கள் எவரும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. தமிழ்த் தேசியம் பற்றிப் பேசிய பெரியார் தன் கருஞ்சட்டைப் படையைக் காட்டி ஆந்திரத் தெலுங்கு வாணிகர்களிடம் பணம் கறந்திருக்க வாய்ப்புள்ளது. அது போல் கோயில்களை இடிப்போம் என்று தொண்டர்களை முழங்க வைத்து 1938 இந்திப் போராட்டத்தின் போது சிவனிய மடங்களிடம் வெளிப்படையாகவே பணம் கேட்டிருக்கிறார் என்பது ஆ.இரா.வெங்கடாசலபதி என்பார் எழுதியுள்ள திராவிட இயக்கமும் வெள்ளாளரும் என்ற நூல் மூலம் தெரிய வருகிறது. மொத்தத்தில் தமிழக மக்கள் பெருமளவில் நம்பிய காந்தியும் பெரியாரும் அவர்களுக்குப் பெரும் இரண்டகங்களை இழைத்துள்ளனர். இனியேனும் உணர்ச்சி சார்ந்த வெற்று முழக்கங்களுக்கும் வீர வச்சனங்களுக்கும் மயங்காமலும் வாக்கு வேட்டைக்கரர்களை நம்பாமலும் பொருளியல் தற்சார்பு ஒன்றே தமிழக மக்களுக்கு மட்டுமல்ல இந்திய மக்களுக்கும் விடிவுக்கு ஒரே வழி என்ற புரிதலோடு வீடுவாசல்களை விற்றும் கடன் பட்டும் கவைக்குதவாத “பெரும்” படிப்புகளைப் படித்துவிட்டு மனம் வெம்பும் இளைஞர்கள் இன்றைய சூழலுக்கு இது ஒன்றே தீர்வு என்ற தெளிவுடன் பொருளியல் உரிமைப் போராட்டத்தில் பங்கேற்க வருமாறு தமிழக இளைஞர்களையும் மூத்தோரையும் அழைக்கிறோம்.     
                                                                                      

0 மறுமொழிகள்: