28.3.08

தமிழ்த் தேசியம் ... 26

மனந்திறந்து... 16

1996 ஆம் ஆண்டு ஒரு நாள் பறம்பை அறிவன் என்பவர் பாளையங்கோட்டையில் எனக்குத் தெரிந்த ஒருவருடன் வந்து சந்தித்தார்.

இவர் ″தமிழ்″ வட்டாரங்களில் பரவலாக அறியப்பட்டவர். எல்லோரோடும் தொடர்பு வைத்திருப்பவர். மூன்றாம் அணி எனப்படும் மா.லெ. இயக்கத்தினருடனும் தொடர்பு வைத்திருப்பவர். கியூ கிளையினர் எனப்படும் உளவு நிறுவனம் தன்னை உசாவியதைப் பெருமையாகக் கூறிக் கொள்பவர்.

எமது தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகத் தொடக்க விழா மதுரையில் நடைபெற்ற போது தலைமை தாங்க அழைக்கப்பட்ட கரூர் வழக்கறிஞர் திரு. பூ. அர. குப்புசாமி அவர்கள் வராததால் திரு. பறம்பை அறிவன் அவர்களே தலைமையை ஏற்றார். அவர் பெயரைக் கேட்டிருந்தாலும் அங்குதான் முதன் முதலில் அவரை நான் பார்த்தேன்.

பாளையங்கோட்டைச் சந்திப்பின் போது பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் தான் தொடங்கிய உலகத் தமிழின் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகத் தன்னை அமர்த்தியதாகவும் ஆனால் பொறுப்பு எதையும் கொடுக்கவில்லை என்றும் கூறினார்.

பெருஞ்சித்திரனார் காலமானதும் தங்களை வந்து சந்தித்து பொறுப்பைத் தொடர்வதற்கான இசைவைப் பெற்றுக்கொள்வார் பறம்பை அறிவன் என்று பெருஞ்சித்திரனாரின் துணைவியாரும் குடும்பத்தினரும் எதிர்பார்த்ததாகவும் ஆனால் தான் அதை விரும்பாததால் சென்று பார்க்கவில்லை என்றும் அதனால் அவர்களுக்குத் தன் மேல் மனத்தாங்கல் இருப்பதாகவும் கூறினார் பறம்பை அறிவன்.

எனவே தான் தனித்தியங்க முடிவு செய்துள்ளதாகவும் தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகத்தை உலகத் தமிழின் முன்னேற்றக் கழகத்தின் உறுப்பமைப்பாகக் கொள்ள வேண்டுமென்றும் விரும்பினார். நான் அதற்கு உடன்பட்டு எனது இரண்டு நூலாக்கங்களை(குணாவின் திராவிடத்தால் வீழ்ந்தோம் பற்றிய குறிப்புகள், சாதிகள் ஒழிய.....) என் செலவில் உ.த.மு.க. பெயரில் வெளியிட்டோம்.

இந்த நிலையில் பெருஞ்சித்திரனார் குடும்பத்தோடு தொடர்பு வைத்திருந்த பலர் உ.த.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்ட ஏற்பாடு செய்தனர். பெரும்பாலும் இது பெருச்சித்திரனாரின் குடும்பத்தினர் நெருக்குதலில் விளைவாகத்தான் நடந்திருக்கும்.

திருச்சியில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் ஏறக்குறைய 50 பேர் வந்திருந்தனர். வேலூர் மாவட்டத்திலிருந்து ஒரு உந்துவண்டியில் திரு. மா.செ. தமிழ்மணியுடன் வந்திருந்தவர்கள் கணிசமானவர்களாகப் பங்கேற்றனர். திரு. மா.செ. தமிழ்மணி பெருஞ்சித்திரனார் குடும்பத்தாருக்கு நெருக்கமானவர் என்று கூறினார் பறம்பை அறிவன். அவருக்கு மனைவியர் இருவர் என்றும் அவர் கூறினார். அவர்களையும் சேர்த்து உந்து வண்டியில் அவர்களது பிள்ளைகளோடு மேலும் சில இளைஞர்கள் இருந்தனர்.

உ.த.மு.க.வுக்குப் புதிய பொறுப்பாளர்களை முடிவு செய்ய வேண்டுமென்று கேட்டனர். வேலூர் மாவட்டத்திலிருந்து வந்தவர்கள் உ.த.மு.க.வைக் கைப்பற்றத் திட்டமிட்டு வந்திருந்தார்கள் என்று அவர்களது நடத்தைகளிலிருந்து தெரிந்தது. புதிதாக வந்தவர்கள் அனைவரும் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர். முறைப்படியான தேர்தல் நடத்தி விடலாம் என்று நான் கருத்துரைத்தேன். பதவிக்காக மோதல் வருவதை நான் விரும்பவில்லை. அவ்வாறே புதிய உறுப்பினர்களையும் வாக்காளர்களாக்கி நடைபெற்ற தேர்தலில் நான் எதிர்பார்த்தது போலவே மா.செ. தமிழ்மணி பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கழகத்தின் ஆவணங்களை விரைவில் ஒப்படைப்பதாகக் கூறிய பறம்பை அறிவனுடன் நானும் திரும்பினேன்.

பறம்மை அறிவனுக்கு உலகத் தமிழின் முன்னேற்றக் கழகம் கைநழுவிப் போனதில் பெரும் ஏமாற்றம்தான். த.ம.பொ.உ.க.வின் செயற்பாட்டில் முழுமையாக ஈடுபடலாம் என்று நான் ஆறுதல் கூறினேன்.

காவிரி காப்புக்குழு வைத்திருக்கும் பெரியவர் திரு. பூ. அர. குப்புசாமி அவர்கள் காவிரி நீர்ச் சிக்கல் குறித்து திருச்சியில் ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார். நானும் பறம்பை அறவனும் சென்றிருந்தோம். வந்திருந்தோர் அனைவரும் உழவர் அமைப்புகளைச் சேர்ந்த உழவர்கள் என்பது சிறப்பு.

நான் பேசும் போது நிலஉச்சவரம்பு வந்தபின் உழவர்களின் அரசியல் வலிமை சரிந்து விட்டதென்றும் அத்துடன் உழவர்களின் மீது ஆட்சியாளர்கள் நிகழ்த்தும் எண்ணற்ற கெடுபிடிகளுக்கு எதிரான போராட்டத்துடன் இணைத்தால்தான் காவிரி நீருரிமைக்கான போராட்டத்தில் சிதறிப் போய்க் கிடக்கும் சிறு உழவர்களைத் திரட்ட முடியும் என்றும் கூறினேன். கூட்டத்தினர் ஆரவாரமிட்டு இந்தக் கருத்தை ஏற்றனர்.

சில நாட்கள் சென்று கரூரில் ஒரு கருத்தரங்கு நடத்தினார் பூ.அர.குப்புசாமி. அதற்கும் நாங்கள் சென்றிருந்தோம். அதில் சில உழவர் சங்கத் தலைவர்களும் ஏராளமான ″தன்னார்வ″த் தொண்டர்களும் வந்திருந்தனர்.

இங்கு காவிரி நீருரிமையைப் பற்றிப் பேசுவதை விட தொழிற்சாலைகளால் நீர் மாசுறுவது பற்றியும் உழவர்களின் சிக்கலுக்கு, அவர்களது பல்வேறு உரிமைகளை ஆட்சியாளர்கள் முடக்கிப் போட்டதோ, காவிரியில் நீர் வறண்டு போனதோ காரணம் அல்ல, சீமை உரங்களும் பூச்சி மருந்துகளும் நிலத்தின் வளத்தைக் கெடுத்துவிட்டதுதான் என்றும் நம்மாழ்வார் தன் பரப்புரையைச் செய்தார்.

சங்கத் தலைவர்கள் என்று வந்தவர்கள் எவரும் காவிரி நீருரிமையை நிலை நாட்ட எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி எதுவுமே உருப்படியாகக் கூறவில்லை.

என் முறை வந்தபோது நான் சில உண்மைகளை எடுத்துரைத்தேன். முன்னாள் பெருவுடைமையாளர்களில் சிலர் ஒரு சங்கம் அமைப்பதற்கு வேண்டிய எண்ணிக்கையில் ஒரு சிலரைச் சேர்த்துச் சங்கத் தலைவராகி அந்தப் பதவியைப் பயன்படுத்தி மாவட்ட ஆட்சியர், அமைச்சர் ஆகியோரிடத்துத் தமக்கு வேண்டியவற்றை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்ற உண்மையை எடுத்துக் கூறினேன். அது மட்டுமல்ல, இந்தச் சங்கத் தலைவர்களும் பொதுப்பணித் துறையினரும் வருவாய்த் துறையினரும் கூட்டு வைத்து ஏரி நிரம்ப நீரிருந்தாலும் வாய்க்கால் வழிய நீர் ஓடினாலும் உழவர்களிடமிருந்து பணம் பிரித்துத் தமக்குள் பங்கு போட்டுக் கொள்கிறார்கள் என்று இன்று தமிழகத்தில் நிலவும் உண்மை நிலையை எடுத்துரைத்தேன். அதன் பின்னர் காவிரி தொடர்பான கூட்டம் எதனையும் பெரியவர் பூ.அர.குப்புசாமி அவர்கள் நடத்தவில்லை.

பெரியவர் பூ.அர.குப்புசாமி பழம்பெரும் பெரியார் பற்றாளர். திருச்சி நிகழ்ச்சியில் நான் பேசும் முன்னர் பெரியாரைப் பற்றி எதுவும் கூறக்கூடாது என்று கேட்டுக் கொண்டார். அப்படிப் பேச வேண்டும் என்று நான் நினைக்கவுமில்லை.

இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற போது செயலலிதா ஆட்சி நடைபெற்றது. திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி அப்போது செயலலிதா பக்கம் இருந்தார். எனவே பெரியார் பூ.அர. குப்புசாமியின் பணி காவிரிச் சிக்கலில் கருணாநிதியின் இரண்டகத்தை மக்கள் அரங்கில் எடுத்து வைப்பதாகத்தான் இருந்ததே தவிர தமிழக நீர்ச் சிக்கல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை நோக்கியதாக இருக்கவில்லை.

சென்ற 20 ஆம் நூற்றாண்டில் காந்தி முதல் திரு .பூ.அர.குப்புசாமி போன்ற கீழ்மட்டத் தலைவர்கள் வரை நடந்து கொண்டது மனதில் ஒரு நோக்கத்தை மறைத்து வைத்துவிட்டு மக்களுக்கு இன்னொரு செய்தியைச் சொல்வதும் அவர்கள் சொல்வதைத் தாண்டியும் மக்கள் தங்கள் உடல் பொருள், ஆவி அனைத்தையும் கொடுக்க அணியமாயிருந்ததும்தான். அது சிறிது சிறிதாக மாறி கருணாநிதி போன்ற வெட்கமற்றவர்கள் போராட்டங்களை அறிவித்துவிட்டு அதை இழிவான முறையில் முடித்து வைப்பதான வெளிப்படையான ஏமாற்றுகளால் இன்று நம்பிக்கை இழந்து நிற்கிறார்கள்.

இதற்கிடையில் பறம்பை அறிவன் தனக்குத் தெரிந்த தனித் தமிழ், மார்க்சியம், தி.க., தாழ்த்தப்பட்டோரர் அமைப்புகளைச் சேர்ந்தோர் பலரையும் அறிமுகம் செய்து வைக்க நானும் அவரும் பொருளியல் உரிமைக் கோட்பாடு பற்றித் திரு.அமரன் என்பவரோடு இணைந்தும் சந்தித்தும் மடல்கள் மூலமாகவும் தொடர்பு கொண்டும் கூட்டங்கள் நடத்தியும் எடுத்துரைத்தோம். பொருளியல் உரிமை என்ற இதழை 1997 சனவரி முதல் தொடங்கி அதனைப் பலருக்கு விடுத்தும் வந்தோம். எவரும் ஊக்கமான ஒத்துழைப்பைத் தரவில்லை.

அவ்வாறு சந்தித்தவர்களில் ஒருவர் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கத் தலைவர் திரு.கே.எம்.அப்பாசு அவர்கள். அவரைச் சந்தித்து பெரியாற்று அணை நீர் உரிமைக்காக அதன் ஆயக்கட்டு உழவர்களை ஒருங்கிணைப்பதற்காக நிலவுச்ச வரம்புச் சட்டத்தையும் உழவர்களுக்கு எதிராகத் தமிழக அரசு ஏவிவிட்டிருக்கும் கெடுபிடிகளையும் எதிர்த்தும் தேவைப்பட்டால் கேளரத்துக்குச் செல்லும் வேளாண் விளைபொருட்களை நிறுத்தியும் ஒரு போராட்டம் நடத்த வேண்டும் என்றும் அதற்கு அவர் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம். அவர் நாளை தங்கள் சங்கத்தின் பிற பொறுப்பாளர்களுடன் கலந்து பேசலாம் என்று எங்களை அழைத்தார். அடுத்த நாள் சென்ற போது அவர் எங்கோ காலையில் வெளியே சென்று விட்டார் என்று அவர் வீட்டிலுள்ளோர் சொன்னார்கள். நாங்கள் காத்திருக்கிறோம் என்று கூறிய போது எங்களைத் திட்டி விரட்டி விட்டனர்.

இதற்குப் பின்னர்தான் மதுரையில் 19-09-98 அன்று தமிழக ஆற்று தமிழ் - தமிழர் இயக்கம் நீருரிமை மாநாட்டை நடத்தியது. அங்கு வைத்த பல தீர்மானங்களில் ஒன்று தன் சொந்தச் சொத்துகளை விற்றுப் பெரியாற்று அணையைக் கட்டிய பொறியாளர் பொன்னிக்குயிக்குக்கு நூற்றாண்டு விழா, எடுத்து அவரது உருவச் சிலையையும் எடுக்க வேண்டும் என்பதாகும். இதை அப்போது ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசு கட்டாயம் நிறைவேற்றும். தங்கள் வேண்டுகை வெற்றியடைந்து விட்டதாக அதனை நடத்திய தி.மு.க. வைச் சேர்ந்த கே.எம்.அப்பாசும் அதன் தொங்கு சதையாக உருவாக்கப்பட்ட தமிழ் - தமிழர் இயக்கத்தினரும், குறிப்பாக, சுப.வீரபாண்டியன் வகையறாக்களும் தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். சிலை அமைப்பதிலும் நூற்றாண்டு விழா நடத்துவதிலும் நிறைய பணம் வேறு புழங்குமே. ஒரே கொண்டாட்டம்தான் தோழர்களுக்கு!

தினமணி இதழில் ஐராவதம் மகாதேவன் அவர்கள் ஆசிரியராக இருந்த போது இற்றை(நவீன) இலக்கிய வட்டத்தையும் முன்னாள் மா.லெ.இயக்கத்தைச் சேர்ந்த சிலரையும் தன் உதவி ஆசிரியர் குழுவில் சேர்ந்திருந்தார். ஐராவதம் மகாதேவனுக்கு அடுத்து மாலன் ஆசிரியராக இருந்த காலத்தில் இடையில் ஒன்றரை ஆண்டுக்காலம் அவர் ஒரு படிப்புக்காக அமெரிக்காவில் இருந்தார். அந்தக் காலகட்டத்தில் திரு. சுதாங்கன் பொறுப்பிலிருந்தார். அவர் இந்த முற்போக்கு வட்டத்தினரிடம் பல பொறுப்புகளைக் கொடுத்திருந்தார். அவர்கள் குறிப்பாக க.சந்தான கிருட்டினன் என்பவர் என் ஆக்கங்களுக்கும் மடல்களுக்கும் முன்னுரிமை கொடுத்து வெளியிட்டனர். இவ்வாறு நான் தினமணி நேயர்களுக்கு நன்கு அறிமுகமானேன். இவ்வகையில் எனக்கு அறிமுகமானவர்தான் சேலம் மாவட்டம் ஆறகழூர் திரு. சி. வையாபுரி அவர்கள்.

இவர் தமிழக உழவர்களின் நலன் பற்றி தெளிவான சிந்தனையுடன் கட்டுரைகளையும் மடல்களையும் தினமணியில் எழுதிவந்தார். அவர் வாழப்பாடி இராமமூர்த்தியுடன் நெருக்கமான உறவுடையவர்.. இராமமூர்த்தியின் ராசீவ் காந்தி பேரவைக் கட்சியின் மாநாடு ஒன்று நெல்லையில் நடைபெற்ற போது எனக்கு முன்கூட்டியே தெரிவித்துவிட்டு அவரது தோழர்களுடன் வந்து சந்தித்தார். என் அலுவலகத்தில் இடமில்லாததால் நெல்லை சந்திப்பில் இருக்கும் கருணாநிதி மாநகராட்சி திருமண மண்டபத்தின் முன்வாயில் படிகளில் அமர்ந்து பேசினோம். பறம்பை அறிவனுக்கும் நான் செய்தி தெரிவித்து அவரும் வந்திருந்தார்.

திரு.வையாபுரி அவர்கள் இயக்கம் பரவ வேண்டுமாயின் போராட்டங்கள் நடத்த வேண்டும். சிறு ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள் நடத்த வேண்டும். அப்போதுதான் நம்மைப் பற்றிய அறிமுகம் மக்களுக்குக் கிடைக்கும். அப்படி ஏற்பாடு செய்யும்போது எனக்கும் தெரிவியுங்கள், நானும் வந்து கலந்து கொள்வேன் என்றார்.

அவரிடம் விடைபெற்றுத் திரும்பும்போது ″ஆமாம், போராட்டம் நடத்துவாங்க, நடத்துவாங்க″ என்று முணு முணுத்தார் பறம்பை அறிவன்.

பறம்பை அறிவன் அடிக்கடி சொல்வது, தனக்குத் தங்க இடமும் உணவும் தரும் நண்பரோ, உறவினரோ இருக்கும் இடங்களுக்குத்தான் தான் சென்று வருவேன் என்பது. பிற இடங்களுக்கும் செல்வார். பெரும்பாலும் எங்கும் புறப்படும் முன், குமுகப் பணி அல்லது அரசியல் பணி செய்ய விருப்பமும் ஆனால் சூழல் வாய்ப்பு இல்லாமலும் இருக்கும் சிலரை இனங்கண்டு அவர்களிடம் சென்று தன் செலவுக்கென்று ஏதாவது பணம் பெற்றுக் கொண்டுதான் வருவார். பல வேளைகளில் நானும் செலவழிப்பேன். பொருளியல் உரிமைக்கென்றும் இயக்கத்துக்கென்றும் கொஞ்சம் பணம் தண்டியும் கொடுத்துள்ளார். பல வேளைகளில் சென்னையின் அண்மையில் இருக்கும் அவரது மகனோ, மகளோ வீட்டில் சென்று தங்கி விடுவதும் உண்டு.

இந்த இடைவேளையில் பறம்பை அறிவனின் ஊரான பறம்புக்குடியிலிருந்து இரா. சுகுமாரன் என்ற இளைஞர்(இப்போது அவர் தன் பெயரை தமிழ்மண்ணன் என்று மாற்றியுள்ளார்) பொருளியல் உரிமையைப் படித்துவிட்டு அவராகவே என்னைத் தொடர்பு கொண்டார். அடுத்த முறை பறம்புக்குடி சென்ற போது அவர் தன் தோழர்களுடன் என்னைச் சந்தித்தார். அவர் பள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர். தம் சாதி மக்கள் மீது அப்பகுதி முக்குலத்தோர் நிகழ்த்தும் வன்முறை ஒடுக்குதலுக்கு எதிராக வன்முறையை கையாண்டு காவல்துறையின் இடைவிடாத் தொல்லைகளுக்கு ஆளானவர். அதிலிருந்து விடுபட்டு ஓர் அரசியல் இயக்கம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று விரும்பி வந்தவர். அவர் வந்தது பறம்பை அறிவனுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை. உள்ளூரில் தாழ்ந்த சாதியிலும் பொருளியல் நிலையிலும் உள்ளவர் என்பதால் தமிழ்மண்ணனை அவர் மதிக்கவில்லை, விரும்பவில்லை என்பது அவர் அவ்வப்போது கூறும் சொற்களிலிருந்து தெரியவந்தது. அத்துடன் அவரையும் அவரது தோழர்களையும் வெறும் எடுபிடிகளின் நிலையில் வைத்தால் போதும் என்பதும் அவரது கருத்து. எனக்கோ, ஒடுக்கப்பட்ட மக்கள் நடுவிலிருந்து ஒரு எதிர்காலத் தலைமையை உருவாக்கும் ஒரு வாய்ப்பாக இதை எண்ணி மகிழ்ந்தேன்.

தமிழ் மண்ணனின் தந்தையார் திரு பூ. இராமநாதன் அவர்கள் பறம்புக்குடி வட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவர்; அம்மக்களிடையில் நல்ல மதிப்பைப் பெற்றவர்; முதுகுளத்தூர் கலவரத்துக்குக் காரணமாக இருந்த இமானுவேல் சேகரன் கொலை வழக்கு உசாவில் பசும்பொன். முத்துராமலிங்கருக்கு எதிராகச் சான்று சொன்னவர்; பறம்புக்குடி பேருந்து நிலையத்தை ஒட்டி அவர் குடும்பத்துக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை அதனாலேயே ஆதிக்க சாதியினரின் தூண்டுதலால் ஆட்சியாளர்கள் பறித்துக் கொண்டார்கள் என்றெல்லாம் அவர் கூறுகிறார். இன்று அவருடைய குடும்பம் வறுமையில் வாடுகிறது. இருப்பினும் தமிழக மேம்பாட்டுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் மீட்சிக்கும் பாடுபட வேண்டும் என்ற உந்துதல் அவரிடம் உள்ளது.

பறம்பை அறிவன் சில மாதங்கள் தொடர்ந்து ஆவடியில் இருந்து கொண்டு எந்தச் செயற்பாடும் இன்றி இருந்த நிலையில் தமிழ்மண்ணனிடம் தொடர்புகொண்டு பெரியாற்று நீருரிமை மீட்பை முன்வைத்து பறம்புக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஓர் ஆர்ப்பாட்டத்துக்கு ஆயத்தம் செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். பறம்பை அறிவனுக்கும் இது பற்றித் தெரிவித்திருந்தேன். தமிழ்மண்ணனும் துண்டறிக்கைகள் கொடுத்து ஏற்பாடுகளெல்லாம் செய்து கொண்டிருந்த நிலையில் பறம்பை அறிவன் திடீரென்று சென்னையிலிருந்து வந்து அவரைக் கடிந்து கொண்டு ஆர்ப்பாட்டம் எதுவும் செய்யக்கூடாது என்று நிறுத்திவிட்டார். ″மக்கள் நாயக″ நடைமுறைகளைக் கடைப்பிடித்து நிலைக்குழுவின் ஒப்புதலைப் பெறவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். ஏற்கனவே ″அரசியலில்″ ஈடுபட்டிருந்தவர்களாக அவரால் அறிவிக்கப்பட்டவர்கள் எவரும் ஒத்துழைப்புத் தராமல் கைவிட்டு விட்டனர். நிலைக்குழுவின் மூன்றாம் உறுப்பினரான அமரன் மருத்துவமனையில் படுத்திருந்தார். பறம்பை அறிவனுக்கோ போராட்டங்களில் உடன்பாடில்லை. அப்படி இருக்கும்போது எனது முடிவில் மனத்தாங்கல் கொள்ள பறம்பை அறிவனுக்கு எந்தக் காரணமும் இல்லை என்பதை விளக்கி மதுரையில் ஒரு நிலைக் குழுவைக் கூட்டி உறுப்பினர்களிடமும் அவரிடமும் எடுத்துச் சொல்லி நிலைக்குழுவைக் கலைத்துவிட்டேன். பொருளியல் உரிமையையும் நிறுத்திவிட்டேன்.

மேற்கொண்டு மருத்துவமனையிலிருந்து திரும்பிய அமரன் அவர்களும் புதிதாகச் சேர்ந்திருந்த அருப்புக் கோட்டையைச் சேர்ந்த தொல்காப்பியன் என்பவரும் அருப்புக்கோட்டையில் வேளாண்மை சார்ந்த ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர். உள்ளூர் உழவர்களின் உதவியில் அவை நடைபெறுவனவாக நான் நினைத்திருந்த போது அது நம்மாழ்வாரின் தொண்டு நிறுவனம் அல்லது புதுச்சேரி ″ஆரோவில்″ உதவியுடன் நிகழ்ந்ததாக அறிந்தேன். அவ்வாறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்று நான் கூறிய போது தேவையான பணத்துக்கு வேறு வழி இல்லை என்று அவர்கள் கூறிவிட்டார்கள். அவ்வாறு அந்த முயற்சியும் நின்றுபோய் இயக்கம் தேங்கிக் கிடக்கிறது.

இப்போது பெருஞ்சித்திரனார் குடும்பத்துக்கும் மா.செ. தமிழ்மணி அவர்களுக்கும் இடையில் என்ன முரண்பாடோ தெரியவில்லை அவர் அங்கிருந்து விலகி திரு. நா. அரணமுறுவல் தொடங்கிய திருவள்ளுவர் அறக்கட்டளையின் தலைமைப் பொறுப்பாளராக உள்ளார்.

(தொடரும்)

0 மறுமொழிகள்: