28.3.06

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 3. உணவு

மரக்கறி உணவு, புலால் உணவு என்ற இருவகை உணவுகளைப் பற்றி இந்தியாவைப் போல் உலகில் எங்கும் இவ்வளவு கூக்குரல் எழுவதில்லை. மரக்கறி உணவு சாதி உயர்வுக்கு ஓர் இன்றியமையாத தேவை என்பது நம் நாட்டு மரபு. இன்று மேற்சாதிகளாகக் கருதப்படும் சிலவற்றில் புலால் உண்பவர் இருந்தாலும் தாம் புலால் உண்பதில்லை என்று காட்டிக் கொள்வதில் அச்சாதிகளிலுள்ள பணக்காரர்கள் மிகக் குறியாயிருக்கிறார்கள். அதே நேரத்தில் கீழ்ச்சாதிகளில் சில விதிவிலக்குகள் நீங்கலாக அனைவரும் புலால் உணவினரே. மாடு, பன்றி போன்ற சில குறிப்பிட்ட விலங்குகளின் இறைச்சியைத் தவிர்ப்பவர் வேண்டுமானால் இருக்கலாம்.

இயற்கையில் மண்ணிலும் விண்ணிலுமிருந்து மூலகங்களைப் பெற்று அவற்றை உயிர்மப் பொருட்களாக மாற்றுபவை இடம் பெயராத தாவரங்களெனப்படும் நிலைத்திணைகளாகும். இவ்வகையில் அவற்றை முதனிலை உயிரிகள் எனலாம். இந்நிலைத்திணைகளை உண்டு வாழ்கின்ற தழையுண்ணிகளாகிய விலங்குகளை இரண்டாம் நிலை உயிரிகள் எனலாம். தழையுண்ணிகளை உண்ணும் கொல்விலங்குகளை மூன்றாம் நிலை உயிரிகள் என்பது பொருந்தும். இடம் பெயர்கின்ற உயிரிகளாகிய விலங்குகளில் அனைத்துண்ணிகள் (தழைகளையும் விலங்குகளையும் உண்பவை) உண்டு. மனிதன் இத்தகைய ஓர் அனைத்துண்ணியாகும். அவன் தன் உடல் வளர்ச்சிக்கும் உயிர் நிலைப்புக்கும் வேண்டிய பல்வேறு சத்துகளை நிலைத்திணைகளிலிருந்து பெறும்போது பல்வேறு ஊட்டப் பொருட்களையும் வெவ்வேறு வகை நிலைத்திணைகளிலிருந்து பெற வேண்டியுள்ளது. ஆனால் புலாலுணவு உண்ணும் போது ஏற்கனவே அந்த விலங்கு நிலைத்திணைகளைத் தின்று உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துகளாக மாற்றிய உணவை அவற்றின் உடல் உறுப்புகளிலிருந்து நேரடியாகப் பெறுகிறான். எனவே புலாலுணவாயின் உடலுக்கு வேண்டிய ஊட்டப் பொருட்களைக் குறைந்த அளவு உணவிலிருந்தே பெற முடியும்.[1] அதே நேரத்தில் அதே அளவுள்ள ஊட்டப் பொருட்களைப் பெற எண்ணற்ற வகையும் அதிக அளவும் கொண்ட புல்லுணவு தேவை. இந்த வகையில் புலாலுணவு எளிமையானது, மலிவானது புல்லுணவு சமைப்பதற்குச் சிக்கலானதும் சிக்கன மற்றதுமாகும். எனவே தான் மேற்சாதியினரால் பொருளியலில் தாழ்ந்துவிட்டோர் தாமாகவே புலாலுணவுக்கு மாறி விடுகின்றனர். அதே நேரத்தில் பொருளியலில் உயர்ந்துவிட்ட கீழ்ச்சாதியைச் சேர்ந்தவர்கள் வகைவகையாகக் காய்கறிகள் வாங்கவும் சமைக்கவும் பணமும் நேரமும் வந்தவுடன் மரக்கறி உணவுக்குத் தாவி விடுகின்றனர்.

புலாலுணவு மலிவென்பது உணவகங்களில் உண்பவர்களுக்குப் பொய்யாகத் தோன்றக் கூடும். ஆனால் நாட்டுப்புறங்களில் குளங்களிலும் ஆறுகளிலும் மக்கள் தாமே பிடிக்கும் மீனையும் காட்டுப் பகுதிகளில் அல்லது ஊரின் புறத்தே புதர் மண்டிய இடங்களில் தாமே வேட்டையாடும் சிறு விலங்குகளையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.

புலாலுணவு, புல்லுணவு என்ற வகைப்பாட்டில் இன்னொரு வேடிக்கையான நிகழ்முறையையும் நாம் கவனிப்பதில்லை. புல்லுணவினர் எனத் தங்களைத் தம்பட்டமடித்துக் கொள்வோர் மாடாகிய விலங்கிலிருந்து கிடைக்கும் விலங்குணவாகிய ஆனைந்து எனப்படும் பால்படு பொருட்கள் (பால், மோர், தயிர், வெண்ணெய், நெய்) குறிப்பாக நெய் இன்றி உண்ணவேமாட்டார். நெய்விட்டு உண்பதென்பது குமுக உயர்வுக்கு இன்றியமையாத அடையாளமாகக் கருதப்படுகிறது. முதலியார் சம்பம் விளக்கெண்ணெய்க் கேடு என்ற பழமொழி வட மாவட்டங்களில் நிலவுவது இதற்குச் சான்று. பார்ப்பனர்களும் அவர்களைப் பின்பற்றி பிற வெள்ளாளக் கட்டாளர்களும் இப்போது முட்டையையும் புல்லுணவென்று முத்திரை குத்தி விட்டனர்.

நம் நாட்டில், குறிப்பாக வட இந்தியாவில் “விலங்குக் கொழுப்பு” பற்றிய கூக்குரல் அடிக்கடி எழும். பாராளுமன்றத்தில் கூட இது எழுப்பப்படும். ஆனால் நெய் ஒரு விலங்குக் கொழுப்பு தானே என்று கேட்கும் தெளிவு இதுவரை யார்க்கும் ஏற்படவில்லை. மாட்டிறைச்சியைத் தின்போரைச் சாதிகளிலெல்லாம் இழிந்த சாதியினராகக் கொள்ளுவது நம் நாட்டு மரபு. புலையர், சக்கிலியர், பறையர் ஆகியோரைத் தாழ்த்துவதற்கு இதையே காரணமாகக் காட்டுகின்றனர். ஆனால் மாட்டைப் “பிழிந்து” அதன் குருதியிலிருந்து தோன்றும் பாலையும் நெய்யையும் பெருமையுடன் அருந்தும் பார்ப்பனர் அந்தனர்களென்று போற்றப்படுகின்றனர். அவ்வாறு குருதியும் ஆற்றலும் மேற்சாதியினரால் பிழியப்பட்ட பின் எஞ்சிய சக்கையை உண்ணும் கீழ்ச்சாதியினர் புலையர், சக்கிலியர், பறையர் என்று பழிக்கப்படுகின்றனர். இந்த மடைமையையும் கயமையையும் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டியது நம் கடமையாகும்.

பாலின் புலாலுணவுத் தன்மையை இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய ஒரு நூல் திறம்பட எடுத்துக் கூறுகிறது. காய்கறி உணவுகள் இருக்கும் சமையலறையில் பூனை அவற்றில் எதனையும் நாடாது உறியிலிருக்கும் பால்படு பொருட்களையே நாடுவதையும், பால் கெட்டுப் போனால் அதிலிருந்து எழும் கெட்ட நாற்றத்தையும் சான்றுகளாக எடுத்துக்காட்டியிருக்கிறது அந்நூல். வருண ஒற்றுமை விளக்கம் என்பது நூலின் பெயர். ஆசிரியர் பெயர் இராசகோபால பாரதி என்பது. பாரதத்தின் மக்களெல்லோரும் பாரதி என்ற பட்டத்தை மட்டுமே சூட்ட வேண்டு மென்ற கொள்கையின் அடிப்படையில் இவர் தன் பெயருக்குப் பின்னால் பாரதி என்ற பட்டத்தைச் சூடிக்கொண்டார். இவர் பார்ப்பனர் என்று தெரிகிறது. நூலின் படிகளைப் பெரியாரின் குடியரசு இதழுக்கும் அனுப்பியுள்ளார். அவ்விதழ் மட்டுமல்ல வேறு பல இதழ்கள், தனி மனிதர்களின் திறனாய்வுகளையும் நூலில் வெளியிட்டுள்ளார்.

இருந்தும் பெரியார் இந்த உண்மையைத் தன் கருத்துப் பரப்பலில் சேர்க்கவே இல்லை. இதைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தால் நமக்குக் கிடைக்கும் முடிவு இதுதான். பெரியார் புல்லுணவு உயர்ந்தது என்றிருக்கும் கருத்தை உண்மையாகவே உடைக்க விரும்பவில்லை. உண்மையான புல்லுணவாளர்கள் சைவ வெள்ளாளர்களும் சமணர்களுமே, பார்ப்பனர்களல்ல என்று நிலைநிறுத்துவதே அவரது நோக்கமாக இருந்திருக்க வேண்டும். பார்ப்பனர்கள் வேள்விகளின் போது மாட்டிறைச்சியை உண்டார்கள் என்று வேதம் முதலிய நூல்களிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செய்திப் பரப்பல் மாட்டிறைச்சியின் பெருமையை எடுத்துரைத்து, ‘எனவே ஒரு காலத்தில் பார்ப்பனரே புலாலை உண்டனர், ஆகையால் நாமும் அதை உண்பதில் தவறில்லை’ என்று கூறுவதற்கல்ல. பார்ப்பனர்கள் உண்மையான புல்லுணவினர் அல்ல என்றும் உண்மையான புல்லுணவினர் யாரென்றும் குறிப்பிட்டுச் சொல்லும் ஓர் உத்தியேயாகும் இது.

இன்னொரு புறம் புலால் உணவுக்கெதிரான கருத்துப் பரப்பல் வல்லரசுச் சுரண்டலுக்குக் கருவியாக இன்று செயற்படுகிறது. மூன்றாம் உலக நாடுகளிலிருந்து இறைச்சியையும் மீனையும் பிடுங்கிச் செல்வதற்காகப் பன்னாட்டு நிறுவனங்கள் கருத்தரங்குகள் நடத்திப் புல்லுணவின் மேன்மையைப் பறைசாற்றுகின்றன. மனிதத் தேவைக்கு மிக அதிகமான அளவில் புலாலுணவு தின்று நோய்களுக்கு ஆளாகும் மேலை நாட்டினரைச் சான்று காட்டி “அறிவியலாளர்கள்” அறிவுரைகள் வழங்குவர். சில முகம்மதியர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவர். இங்கு தம் சாதிப் பண்பாட்டைக் காக்க எப்போதும் முனைந்து நிற்கும் கூட்டம் அதற்குப் பெரும் விளம்பரம் கொடுக்கும். மக்கள் தம்மால் இந்த “இழிந்த” புலாலுணவை விட முடியவில்லையே என்று உள்ளுக்குள் குமைந்து நிற்பர், அல்லது அதை விட்டு விடவும் செய்வர். இங்குள்ள ஆடும் மாடும் இறைச்சியாகி மேலை நாடுகளுக்கு ஏற்றுமதியாகி அங்குள்ளோரின் உடலையும் பணப்பைகளையும் கொழுக்க வைக்கும். எனவே ஏழை எளியவர்க்கும் எளிதில் ஊட்டச்சத்தைத் தருவனவும் மனிதன் நேரடியாக உட்கொள்ள முடியாத புல்பூண்டுகளை உட்கொண்டு வளருவனவுமாகிய விலங்குகளின் இறைச்சி உணவே நமக்குப் பொருத்தமானது என்ற வகையில் புலால் உணவாகிய பண்பாட்டுக் கூற்றினை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

தொல்பழங்காலத்திலேயே வாணிகம்(போக்குவரத்து), வேளாண்மை, பால்படு பொருட்கள் ஆகிய தேவைகளின் பொருட்டு மாட்டைக் கொல்வதற்கு எதிராகப் பெரும் போராட்டங்கள் நம் நாட்டில் நடந்துள்ளமைக்குச் சான்றுகள் நம் பண்பாட்டில் விரவிக் கிடக்கின்றன. வேள்விகளில் மாடுகள் பலியிடப்பட்டதால் வேள்விகளை எதிர்த்துப் பல போர்கள் நடந்துள்ளமை புராணங்களிலிருந்து புலப்படும். தக்கன் வேள்வியை அழித்த உமையை(தக்காயணி)த் தவிர வேள்விகளை அழித்தோர் அனைவரும் அரக்கர்களாக்கப்பட்டனர். (வேள்விகளை அழித்தவளென்று இராமனால் கொல்லப்பட்டவளாகக் கூறப்படும் தாடகை கூடத் தென்தமிழ் நாட்டில் உள்ள ஓர் மலையின் பெயராக நிலவுகிறாள். உமையாக மதுரையில் வணங்கப்படும் மீனாட்சியாகிய தடாதகைப் பிராட்டியின் இன்னொரு வடிவம் தானோ இவளும்?) புத்த சமண சமயங்களும் வேள்வியை எதிர்த்து எழுந்தனவே.

இன்று போக்குவரத்திலும் வேளாண்மையிலும் மாட்டின் தேவை மிகக் குறைந்துவிட்டது.

தமிழ்நாட்டில் பாலுக்கு வளர்ப்பதை விடக் கன்று ஈனுவதற்கென்றே மாடுகள் பெரும்பாலும் வளர்க்கப்பட்டு வந்துள்ளன. அடிவாரத்துக்குக் கொண்டு வராமலே மேற்குத் தொடர்ச்சி மலையினுள் கன்றுகளை ஈனுவதற்கென்றே மாடுகளை அம்மலையின் அடிவாரத்திலுள்ள மக்கள் மலைத்தொடர் நெடுகிலும் வளர்க்கிறார்கள். முன்பு காளைக் கன்றுகள் வளர்ந்ததும் வண்டியிழுப்பதற்கும் உழவுக்கும் விற்கப்பட்டன. சமநிலத்திலும் இதுவே பெரும்பான்மை வழக்கம். கன்றுக்குப் பால் கொடுப்பதைத் தவிர மனிதத் தேவைக்காகப் பால் கறக்கப்படாமையால் தமிழ்நாட்டு மாடுகளில் ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர பால்மடி வளர்ச்சியடையவில்லை. எனவே தமிழ்நாட்டில் தரமுள்ள பால்மாட்டு இனங்கள் உருவாகவில்லை. அதே வேளையில், முன்பு போல் கன்று ஈனும் மாடுகள் ஈன்று கொண்டே இருக்கின்றன. கன்றுகள் அண்டையிலுள்ள கேரளத்தில் இறைச்சியாக்கப்பட்டு மேலை நாடுகளுக்கு ஏற்றமதியாகின்றன.

இந்த நிலையில் மாட்டிறைச்சி மீது மக்களுக்கிருக்கும் தவறான கருத்துகளை மாற்றி அதனை உணவாகக் கொள்ளுவதன் பயன்கள் பற்றி எடுத்துரைக்க வேண்டும். அதன் மூலம் மலிவு விலையில் அவர்களால் இறைச்சியைத் தாராளமாகப் பெற முடியும். உலகில் உடல் நிறத்திலும் தோற்றப் பொலிவிலும் உயரம், உடல் வலிமை, மூளை வலிமை ஆகியவற்றிலும் மேம்பட்ட மக்களில் மிகப் பெரும்பாலோர் மாட்டை இறைச்சியாக நேரடியாகவோ அல்லது பால், நெய் என்று மறைமுகமாகவோ உண்போரேயாவர். எனவே நம் மக்களும் வளமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான மாட்டிறைச்சி உண்பதற்குத் தேவையான மாட்டையும் அதை உண்பதற்கான மன இசைவையும் வளர்த்தெடுப்பது தேவையாகும்.

சங்க இலக்கியங்கள் மூலம் தமிழ்நாட்டில் அந்தணர் முதல் அடியோர் வரை இறைச்சியை உட்கொண்டதை அறிய முடிகிறது. அதில் இன்று போன்று இழிவுணர்ச்சி எதுவும் புலப்படவில்லை. சோற்றோடு இறைச்சியை வேகவைத்து உண்ணும் பழக்கம் பரவலாக இருந்தது. இன்று பிரியாணி என்று முகம்மதியார்கள் விரும்பி உண்ணும் உணவு வகை அன்று புலவுச் சோறு என்று வழங்கப்பட்டது. அதில் பயன்பட்ட மெல்லிய அரிசி இன்று புலவரிசி (புலவு அரிசி) என அழைக்கப்படுகிறது. இந்த உண்மைகளிலிருந்து இறைச்சிக்கெதிரான கருத்துகள் பிற்காலத்திலேயே உருவாயின என்பது புலப்படும். இவ்வுண்மைகளை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.

புலாலுணவுக்கெதிரான கருத்துப் பரப்பல்களிலொன்று விலங்குக் கொழுப்பு உடல் நலத்துக்குத் தீங்கானது என்பதாகும். அதில் அடங்கியிருக்கும் கொலற்றரால் எனும் பொருள் குருதி நாளச் சுவர்களில் படிந்து குருதியோட்டத்தைத் தடுத்து குருதிக் கொதிப்பிற்கும் நெஞ்சாங்குலை நோய்க்கும் மார்படைப்புக்கும் இட்டுச் செல்லும் என்று கூறப்படுகிறது. இந்த மருத்துவக் கருத்தை எதிர்க்கும் ஆய்வு முடிவுகளும் வெளிவந்துள்ளன. அத்துடன் விலங்குக் கொழுப்புகளை விட நிலத்திணைக் கொழுப்புகளே பெரும்பான்மையாகக் கொலற்றராலைக் கொண்டுள்ளன. மீன் கொழுப்பு உண்மையில் கொலற்றராலைக் கரைக்கும் தன்மை வாய்ந்தது. கோழிக் கொழுப்பில் கொலற்றரால் கிடையாது. ஆனால் நிலைத்திணைக் கொழுப்பில் நாட்டில் புழக்கத்திலிருப்பவற்றில் நல்லெண்ணைய் ஒன்று தான் கொலற்றரால் இல்லாதது. இந்நிலையில் விலங்குக் கொழுப்புக்கெதிரான இந்தப் பரப்பல் பொய்ம்மையானது, குறும்புத்தனமானது.

அதே நேரத்தில் நம் நாட்டு மக்களின் சராசரி கனலி (Calorie) நுகர்வோ உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு. புலாலுணவு நுகர்வோ அதை விடவும் குறைவு. அப்படியிருக்க நம்மிடையில் “கொழுப்புச் சத்து மிகுதி தொடர்பான நோய்கள்” மட்டும் மிகுதி. இது ஏன்? அரேபியர்களும், ஆத்திரேலியர்களும் அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் உருசியர்களும் உணவில் பெரும்பகுதியாகப் புலாலையே உட்கொள்ளுகின்றனர். அப்படியிருந்தும் அவர்களுடன் ஒப்பிட நம் மக்களுக்கு இந்நோய்கள் ஏன் மிகுதி?

இதற்குப் பொருளியல், குமுகியல் சூழல் தான் காரணம். இந்நாட்டில் ஆண்மகன் குடும்பம் எனும் மிகப்பெரும் தளையால் பிணைக்கப்பட்டவன். மனைவி அவன் கால்களுக்குக் கட்டுப்போடுகிறாள். தன் மக்களுடன் சேர்ந்து அவன் தோள் மீது அமர்ந்து கொள்கிறாள். நிலவும் சூழ்நிலையில் என்னதான் பாடுபட்டாலும் குடும்பத்தின் தேவைகளை அவனால் ஈடுசெய்ய முடியவில்லை. வெளிஉலகிலோ தலைவிரித்தாடும் ஊழல், ஏமாற்று, உழைப்புக்கு மதிப்பின்மை, நேர்மைக்கு ஏற்பட்டுள்ள இழுக்கு, உண்மை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பகைமைகள், அடாவடி அரசியல், உலகம், கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு செய்யும் கயவர் கூட்டங்களுடன் காவல்துறையின் கூட்டு இவையனைத்தும் அவனுக்குக் கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. பொருளியல் வாழ்வு, கல்வியியல், வேலைவாய்ப்பு என்ற அனைத்திலும் கைக்கூலியே நோக்கமாகக் கொண்ட சட்டதிட்டங்களைக் கைகளில் வைத்துக் கொண்டு மிரட்டும், அலைக்கழிக்கும் ஆட்சி முறை என்று அமைதியில்லா மனம்.

பெண்ணுக்கோ பிறந்ததிலிருந்தே ஒதுக்கி வைக்கப்படும் நிலை. பெண் விடுதலை என்ற பெயரால் கிடைத்த கல்வி வாய்ப்போ ஓயாத பாடபுத்தகங்களுடன் மாரடிப்பு. அத்துடன் வீட்டில் தாயாருக்கு உதவி, திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், இதழ்கள், புத்தகங்கள் ஆகியவற்றில் இடைவிடாமல் காதலின் வலிமையைப் பார்த்துவிட்டு நடைமுறையில் பெற்றோர் நிகழ்த்தும் கொடுங்கோண்மை. அரசூழியம் போன்ற வேலைக்குச் சென்றால் அவ்வேலையுடன் அவ்வாறு செல்லாத பெண்கள் செய்யும் பணிகளில் இவளுக்கு எந்தச் சலுகையுமின்மை. அலுவலகத்திலும் வெளி உலகிலும் அவள் மீது தொடுக்கப்படும் பாலியல் கணைவீச்சுகள், அதனால் பாதிப்புறும் அவளுக்கு மறுபுறத்தில் சற்றும் நெகிழ்ந்து கொடுக்காத காலத்துக் கொவ்வாத கற்பு நெறி அளவீடுகள். பழமையை விட்டுக்கொடுக்காத குமுகச் சூழ்நிலையில் மாறிவரும் நடைமுறைகளை நாடிப்போகும் மக்களைக் கட்டுப்படுத்த முடியாமை என்று பலதிசை இழுவிசைகளுக்குள் அவளுக்கு அமைதியில்லா மனம்.

வேலைக்குச் செல்லாத பெண்கள் வெளி உலகின் கவர்ச்சிகள் இழுத்தாலும் அதற்கு இடங்கொடுக்க முடியாத மனச்சூழல். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதால் உண்டாகும் இறுக்கம், பிறரெல்லாரும் வளமாகவும் மகிழ்வாகவும் வாழ்வது போன்ற மாயத்தோற்றம் தன் மீதும் கணவன் மீதும் ஏற்படுத்துகின்ற வெறுப்பு என்று அனைவருக்கும் இந்தக் குமுகச் சூழல் அமைதியின்மையை உருவாக்கி விட்டிருக்கிறது.

வாணிகம், தொழில் துறைகளில் ஈடுபட்டிருப்போர் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளின் மிரட்டலுக்கு உட்பட்டாலும் வரித்துறையினரின் அதிலும் வருமானவரித் துறையினரின் அச்சுறுத்தல் அவர்களை விழிப்பிலும் தூக்கத்திலும் விரட்டுகிறது. இவற்றாலெல்லாம் நம் மக்களுக்கு அவர்கள் உண்ணும் உணவுக்குத் தொடர்பில்லாத நோய்கள் உருவாகின்றன.

புறநானூற்றில் பிசிராந்தையார் தனக்குத் தலை நரைக்காமைக்குக் கூறிய காரணங்கள் உயர்வு நவிர்ச்சியல்ல என்பதற்கு இன்றைய நம் நாட்டு மக்களே சான்று.

அதே நேரத்தில் புல்லுணவு உயர்வானதென்று கூறித் தம் மேன்மையை நிலைநாட்ட விரும்பும் பொய்ம்மையாளர் இச்சூழலை எல்லாம் மறைத்து புலாலுணவு தான் இதற்குக் காரணம் என்று கூறிப் பொய்ப் பரப்புகிறார்கள்.

அத்துடன் இயற்கை மருத்துவம் என்ற பெயரால் முகாம்கள் நடத்துவதில் பெரும் ஊக்கம் காட்டுகிறார்கள். வல்லரசு நாடுகள் இதற்குப் பெரும் பணம் செலவழிக்கின்றன.

வளர்ந்தவர்களையும், முதியவர்களையும் நோக்கியதென்ற பெயரால் பொதுத் தொடர்புக் கருவிகள் (வானொலி, தொலைக்காட்சி, தாளிகைகள், திரைப்படம்) மூலமாகச் செய்யப்படும் இப்பரப்பல் சின்னஞ்சிறு பிஞ்சுகளின் உள்ளங்களைப் பற்றிக் கொண்டு “இதில் கொழுப்பிருக்கிறது”, “அதில் கொலற்றரால் இருக்கிறது” என்று சொல்லி சத்தான உணவு வகைகளைப் புறக்கணிக்க வைக்கிறது. அதனால் நடுத்தர வகுப்பினரின் வளரும் தலைமுறையே உடல் வலிமையிலும் மூளை வலிமையிலும் சுண்டிப்போய் விட்டிருக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில் வலுமிக்க வளருந் தலைமுறையின் நலனுக்காகவும் மக்களுக்கு இன்றியமையாத புலால், ஏற்றுமதி என்ற பெயரால் கடத்தப்பட்டு நமக்குக் கிடைக்காமற் போவதைத் தடுத்து நிறுத்தவும் புலாலுணவின் மேன்மையையும் புல்லுணவின் போதாமை, இயலாமைகளையும் மக்களிடம் வலிமையாகப் பரப்ப வேண்டும்.



அடிக்குறிப்பு:

[1] நம் நாட்டு மரபு மருத்துவ முறையிலும் சீன மருத்துவ முறையிலும் ஒரு குறிப்பிட்ட உறுப்பு நோயுற்றால் அல்லது வலிமை குன்றினால் கால்நடைகளின் அதே உறுப்பை உண்பதன் மூலம் அதனைச் சரி செய்ய முடியும் என்ற கருத்து உள்ளது. அதனை மேலைநாட்டு மருத்துவம் படித்த நம் நாட்டினர் ஏற்றுக் கொள்ளாமல் ஏளனம் செய்கின்றனர். ஆனால் ஆங்கில மருத்துவத்தில் கல்லீரல் பிழிவுகள் ((Liver extracts) போன்ற மருந்துகள் பயன்படுவதை அவர்கள் கவனிப்பதில்லை.

0 மறுமொழிகள்: