19.11.17

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல்

24. மார்க்சியம்
மார்க்சியர்களைப் பற்றி நாம் ஆங்காங்கே சுட்டிக்காட்டியிருக்கிறோம். பெரும்பாலும் அவர்களைக் குறைசொல்லியே வந்திருக்கிறோம். இன்னும் கூறப்போனால் “பண்பாட்டுப் புரட்சி”யைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கும் ஒரு பிரிவினரைப் பற்றியே நாம் நூலைத் தொடங்கினோம். இந்த நிலையில் மார்க்சியத்தையும் அதைப் பற்றிய நம் கருத்தையும் கூற வேண்டியுள்ளது.

மார்க்சியம் மனிதச் சிந்தனை வளர்ச்சியில் ஒரு முகாமையான கட்டத்தைக் குறிக்கிறது. மனித குலத்தின் உயர்ந்த மனங்கள் கண்டுவந்த கனவுகளை நனவாக்குவதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்க உதவுகிறது. குமுகத்தின் செயல்முறையில் ஊடாடும் விதிகளைக் கண்டு அறிவியல் முறைப்படி மனித உறவுகளை மேம்படுத்தும் வழிகளைக் காணும் ஒரு முயற்சியாகும் மார்க்சியம்.

மார்க்சியத்தின் தோற்றத்தின் பின்னணியை எடுத்துரைக்க முனையும் போது ஐரோப்பிய வரலாற்றைப் பற்றி ஏற்கனவே ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் நாம் கூறியவற்றை மீண்டுமொருமுறை கூற வேண்டியிருக்கும்.

நாகரிக வளர்ச்சியின் வரலாற்றுக்குக் கிரேக்கத்தையே தொடக்கப் புள்ளியாக்குவது வழக்கம். அதிலும் கிழக்கிலுள்ள தொல்நாகரிகங்களின் வரலாறுகள் தெளிவாகப் புலப்படாமலிருந்த 19ஆம் நூற்றாண்டில் அதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. எனவே மார்ச்சியம் கிரேக்க வரலாற்றிலிருந்து உலக வரலாற்றைத் தடம்பிடித்தது. உலக வரலாறு என்பது அன்றைக்கு ஐரோப்பிய வரலாறாகவே இருந்தது.

இவ்வாறு உலக வரலாற்றைத் தடம்பிக்கத் தேவை என்ன? அப்படித் தடம்பிடித்த பின்னணி என்ன?

ஐரோப்பாவில் ஏறக்குறைய 16ஆம் நூற்றாண்டிலிருந்து தொழிற் புரட்சி தொடங்கியது. அத்தொழிற் புரட்சியின் மூலமாகப் பழைய குமுக அமைப்பு தகர்ந்து புதிய குமுக அமைப்பொன்று எழுந்தது. அந்தப் புதிய அமைப்பில் உருவான பாட்டாளிகளின் வாழ்நிலை மிக இரங்கத்தக்கதாயிருந்தது. எனவே மிகக் கடுமையான குமுகியல், பொருளியல் நெருக்கடிகள் உருவாயின, போராட்டங்கள் எழுந்தன. அறிஞர்களும் சிந்தனையாளர்களும் இந்தப் புதிய சூழ்நிலையைப் பற்றி ஆராய வேண்டிய இன்றியமையாமை உருவானது. பல்வேறுபட்ட கருத்துகள் உருவாயின. அறிவியல் உண்மைகளிலிருந்தும் குமுக நடைமுறைகளிலிருந்தும் பல்வேறு மெய்யியல் பள்ளிகள் தோன்றின. இப்பள்ளிகளிலிருந்து குமுகச் சிக்கல்களுக்குப் பல்வேறு தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன. அவ்வாறு முன்வைக்கப்பட்ட மெய்யியல் கோட்பாடுகளிலும் குமுகச் சிக்கல்களுக்கான தீர்வுகளிலும் மிக உயர்வானதும் அனைத்தும் தழுவியதும் மார்க்சியமாகும்.

மார்க்சியம் இயங்கியல் பருப்பொருளியம், வரலாற்றுப் பருப்பொருளியம் என்ற இரு பகுதிகளைக் கொண்டதாகும். முதலில் வரலாற்றுப் பருப்பொருளியத்தை விளக்கிவிட்டுப் பின்னர் இயங்கியல் பருப்பொருளியத்தை விளக்குவோம்.

மார்க்சியம் பருப்பொருளை முதற்பொருளாகக் கொண்டது. அந்த அடிப்படையிலேயே பேரண்டம், உலகம், மனித வாழ்க்கை அனைத்தையும் விளக்குகிறது. அதனால் வரலாற்றையும் பருப்பொருளியக் கண்ணோட்டத்திலேயே பார்க்கிறது. பருப்பொருளியக் கண்ணோட்டம் என்பது மனிதன் தன் வாழ்வுக்குத் தேவையான பொருட்களை எந்த வகையில், அதாவது பாங்கில், விளைக்கிறானோ அந்தப் பாங்கே மனித வாழ்வின் பிற கூறுகளைத் தீர்மானிக்கிறது என்பது.

கிரேக்க வரலாற்றில் முதன்முதலில் தென்படுவது அடிமைக் குமுக அமைப்பாகும். அதற்கு முந்திய குமுக அமைப்பொன்று இருந்திருக்க வேண்டுமென்று தேடியபோது கிடைத்தன ஆப்பிரிக்காவிலுள்ள குக்குலக் குமுகங்கள் பற்றிய செய்திகள். இக்குக்குலங்கள் தனிச்சொத்து இல்லாத ஒரு நிலையைக் குறிப்பனவாகும். இக்குமுகங்கள் தங்களுக்குப் பொதுவாகச் சொந்தமான நிலத்தில் பாடுபட்டுத் தத்தமக்கு வேண்டிய பல்வேறு பண்டங்களைத் தங்கள் தங்கள் குடும்பங்களிலேயே உருவாக்கி நுகர்ந்து வந்தன. அரசனோ அரசு அமைப்போ கிடையாது. முதியவர்களின் வழிகாட்டுதல்தான் சட்டம். வெளியாருடன் போர் நடத்த வேண்டி வந்தால் அப்போதைக்கு ஒரு தலைவனின் கீழ் மக்களனைவரும் ஒன்றுபட்டு நின்று போராடுவர். தம் குக்குலத்து உறுப்பினர் எவரது குருதியையும் சிந்துவது பெரும் குற்றமாகும். தம் குக்குலத்து உறுப்பினருக்கு வெளியார் செய்த தீங்குக்குப் பழிவாங்குவது அக்குலத்து உறுப்பினர் ஒவ்வொருவரின் கடமையாகும்.

இங்கு பெரும்பாலும் பெண்களே குடும்பத் தலைவர்கள், பெண்கள் பெயராலேயே குடும்பங்கள் வழங்கப்பட்டன.

குக்குலங்கள் பட்டறைகள் எனவும் குலங்கள் எனவும் கணங்கள் எனவும் பிரிவுகளுக்குள் உட்பிரிவுகளாகப் பிரிந்தன. இறுதிப் பிரிவுகள் தம் உறுப்பினர்களுக்குள் திருமணத்தைத் தடைசெய்தன. இவை புறமணப் பிரிவுகள் எனப்பட்டன. அதை விட உயர்ந்த மட்டத்துப் பிரிவுகள் அகமணப் பிரிவுகள் எனப்பட்டன.

அரசுகள், நீதிமன்றங்கள், நிலையான படை அமைப்புகள், காவல்துறை என்று இல்லாமலிருந்தாலும் ஓர் குக்குல ஆட்சிமுறையிருந்தது. பட்டறைகள் மட்டத்திலும் குக்குல மட்டத்திலும் மன்றங்கள் இருந்தன. அவ்வம்மட்டங்களில் தோன்றும் சிக்கல்கள் இம்மன்றங்களில் தீர்த்துவைக்கப்பட்டன. பிற குக்குலங்களுடன் உள்ள உறவுகளும் இம்மன்றங்களின் மூலம் வரையறுக்கப்பட்டன.

ஒரே நிலப்பரப்பில் பல்வேறு குக்குலங்கள் வாழ்ந்து வந்தன. ஒரு பெரும் நிலப்பரப்பில் நில அடிப்படையில் அன்றி குக்குல அடிப்படையில் மக்கள் பிரித்துணரப்பட்டார்கள். ஓரிடத்திலிருந்து ஒரு குக்குலத்தின் உறுப்பினர் நெடுந்தொலைவிலிருக்கும் இன்னோரிடத்துக்குச் சென்றாலும் அவர் தம் குக்குலத்தின் புணர்முறையுள்ள உட்பிரிவை, அதாவது புறமணப் பிரிவைச் சேர்ந்த எந்தவொரு எதிர்ப்பாலருடனும் தடையின்றி உடலுறுவு கொள்ள முடியும். பெண்களுக்கு முழுமையான பாலியல் உரிமைகள் இருந்தன. மணம் விலக்கப்பட்ட உட்பிரிவுகளுக்குள் மட்டும் உறவுகொள்ளத் தடைகள் இருந்தன. குழந்தைகள் தாயின் குடும்பத்துக்கு உரிமையாயிருந்தன. தாயின் தலைமையிலேயே குடும்பம் இயங்கியது.

இந்தக் குமுகம் வகுப்புகளுக்கு முந்திய குமுகம் எனவும் முந்தியல் பொதுமைக் குமுகம் எனவும் மார்க்சு - எங்கெல்சால் பெயர் சூட்டப்பட்டது. இங்குள்ள பொருள் விளைப்பு முறையானது தத்தம் நுகர்ச்சிக்காக மக்கள் தாங்களாகவே விளைத்துக் கொள்வதாக இருந்தது. பண்டமாற்றோ வாணிகமோ இல்லை. எனவே மிகுதியோ செல்வத் திரட்சியோ இல்லை. இயற்கையில் கிடைக்கும் பொருட்களையும் எளிய தொடக்கநிலை வேளாண்மையையும் கால்நடை வளர்ப்பையும் நெசவு, மட்பாண்டம் வனைதல் முதலிய தொடக்க நிலைத் தொழில்நுட்பங்களையும் கொண்டது இக்குமுகம்.

இத்தகைய குமுகத்தில் இயற்கையாக விளைந்த மிகுதிப் பொருட்களை ஒருசிலர் தம் சொந்தமாக்கிக் கொண்டதிலிருந்து இருப்பவர் - இல்லாதவர் என்ற வேறுபாடும் பண்டமாற்று, வாணிகம் போன்ற புதிய பொருளியல் உறவுகளும் தனியுடைமை, தனிக் குடும்பம் போன்றனனவும் அரசு, அரசு இயந்திரங்களான நிலையான படைகள், காவல்துறை, நயமன்றங்கள், சட்டங்கள், சிறைக் கூடங்கள் போன்ற அமைப்புகளும் உருவாயின. அரசு என்ற இந்த வன்முறை ஒட்டுண்ணி அமைப்பு குமுகத்தில் செல்வத்தில் மிகுந்த உடைமை வகுப்புகளுக்காக இல்லாத வகுப்புகளை ஒடுக்குவதற்கென்றே தோன்றிச் செயற்பட்டன.

புதிதாக உருவான பொருளியல் வகுப்புகளாலும் பொருட்குவிவினாலும் பழைய குக்குலங்கள் உடைந்தன. குக்குலங்களின் அடிப்படையில் இதுவரை பிரிந்திருந்த மக்கள் கூட்டங்கள் இப்போது நிலங்களின் அடிப்படையில் பிரிந்து நின்றன.

இவ்வாறு வரலாற்றில் வகுப்புகளாகப் பிரிந்த குமுகத்தில் முதன்முதலில் உருவான விளைப்புப் பாங்கு அடிமை முறையாகும். வேளாண்மையிலும் தொழிலிலும் அடிமைகளை ஈடுபடுத்தி பண்டங்களை விளைவித்து அவற்றை வாணிகத்துக்குப் பயன்படுத்தினர். இந்தக் குமுகத்துக்கு எடுத்துக்காட்டாக உரோமப் பேரரசைக் காட்டுகின்றனர் மார்க்சும் எங்கெல்சும். இங்கு அடிமைகளாக அலெக்சாண்டர் படையெடுப்புகளில் பிடிக்கப்பட்ட போர் அடிமைகள் பயன்பட்டனர். இதற்கு முன் வகுப்புக்கு முந்திய குமுகங்களில் போர்களில் பிடிக்கப்பட்டவர்கள் ஒன்றேல் கொல்லப்பட்டனர் அல்லது தம் மக்களோடு இணைக்கப்பட்டனர். அடிமைகளாகப் பயன்படுத்தும் வகையில் பொருளியல் வளர்ச்சி நிலை இல்லை. புதிய வகுப்பு குமுகத்தில்தான் அடிமை உழைப்பின் தேவையும் பயனும் உருவாயின.

இந்த வகுப்புக் குமுகத்தில் அடிமைகளுக்கு உயிர் வாழும் உரிமை அடங்கலாக எந்த உரிமையும் கிடையாது. அவர்கள் வாய்பேசும் கருவிகள் என்றே அழைக்கப்பட்டனர். உழைப்புக் கருவிகளையோ விளைபொருட்களையோ இந்த அடிமைகள் பேணுவதில்லை. எனவே அவர்களால் உடைத்துக் கேடுறுத்த முடியாத அளவுக்கு முரட்டுத் தனமாக அக்கருவிகள் உருவாக்கப்பட்டன.

அடிமைகள் தப்பிச்செல்ல முயல்வது பெருங்குற்றமாகும். அவ்வாறு தப்பிச்செல்ல முயலும் அடிமைகளுக்குக் கொடுமையான மரண தண்டனை விததிக்கப்பட்டது.. பட்டினி போடப்பட்ட சிங்கத்தின் கூண்டில் அவர்கள் விடப்பட்டு அதற்கு இரையாக்கப்பட்டார்கள். உலகப் புகழ் பெற்ற ஈசாப்புக் கதைகளை எழுதிய ஈசாப்பு அத்தகைய தண்டனையிலிருந்து விந்தையான முறையில் தப்பியவனே.

ஈசாப்பு, தப்பிக் காடுகளில் திரிந்த போது முள் குத்திச் சீழ் பிடித்த சிங்கம் ஒன்றின் கால் புண்ணுக்கு மருந்திட்டு ஆற்றியிருந்தான். பின்னர் பிடிபட்ட போது கூண்டில் அதே சிங்கத்தைப் பிடித்து அடைத்திருந்தனர். கூண்டில் தனக்கு இரையாகத் தள்ளப்பட்ட ஈசாப்பை அடையாளம் கண்டு கொண்ட சிங்கம் அவனுக்குத் தீங்கு எதுவும் செய்யாததால் அவன் விடுவிக்கப்பட்டான் என்று கூறுகிறது அவனைப் பற்றிய கதை.

இந்த அடிமைகள் ஒன்று திரண்டு எழுந்து தங்கள் அடிமை விலங்கை உடைத்தனர். அவர்களை ஒன்றுபடுத்தி எழுச்சிகொள்ளச் செய்ததில் கிறித்துவம் பெரும் பங்காற்றியது. இதுவே அது அந்த மண்ணில் வேரூன்றவும் பயன்பட்டது. புதிய விளைப்பு முறைகளும் வகுப்பு உறவுகளும் உருவாயின. இந்தப புதிய குமுகத்துக்கு நிலக்கிழமைக் குமுகம் என்று பெயர்.

இந்த நிலக்கிழமைக் குமுகம் உரோமப் பேரரசின் சிதைவிலிருந்து உருவானது. அடிமைக் குமுகத்தின் மீது கட்டப்பட்ட உரோமப் பேரரசு ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மேற்காசியா ஏன் இந்தியாவின் ஒரு பகுதி வரை தன் வீச்சை எட்டவிட்டிருந்தது. இருப்பினும் அதனுடைய உண்மையான பிடிப்பு ஐரோப்பாதான். . அந்நிலப்பரப்பின் அனைத்துப் பகுதிகளிலும் கோட்டைகளையும் படைத்தளங்களையும் அமைத்து அங்கு நேரடியான ஆட்சியை ஆளுநர்கள் அல்லது கோட்டைத் தலைவர்கள் மூலமாகப் பேரரசு நடத்தி வந்தது. பிரிட்டன் உட்பட ஐரோப்பா முழுவதும் சாலைகள் போடப்பட்டிருந்தன. சிறந்த படையமைப்பும் சட்டங்களும் ஆள்வினை முறைகளும் உருவாக்கப்பட்டிருந்தன.

உரோமப் பேரரசு செல்வச் செழிப்பிலிருந்து உருவான ஆடம்பரத்தினாலும் பண்பாட்டு, ஒழுக்கச் சீரழிவினாலும் மெத்தனத்தினாலும், சிதைந்தது. ஆங்காங்கிருந்த ஆளுநர்கள் மீதும் கோட்டைத் தலைவர்கள் மீதும் பேரரசுக்கு இருந்த பிடி தளர்ந்தது. அவ்வப்பகுதித் தலைவர்கள் தத்தம் பகுதிக்குத் தாமே தன்னுரிமையுள்ளவர்களாக மாறினார்கள். தத்தமக்குக் கீழிருந்த நிலங்களுக்குத் தாமே உரிமையாளரானர்கள். அடுத்தடுத்திருந்த தலைவர்கள் ஒருவரோடொருவர் போரிட்டனர். இத்தகைய போர்களிலிருந்து தத்தம் பகுதி மக்களைப் பாதுகாப்பதற்காகத் திசைக்காவல் வரி தண்டினார்கள். இவ்வரி உழவர்கள் வழங்கும் தவசங்களாகவே பெரும்பாலும் இருந்தது.

ஒரு பெரும் நிலப்பரப்பை உள்ளடக்கிய பேரரசும் அதன் நிலையான படையும் இல்லாத இந்தச் சூழ்நிலையில் தியூத்தானியர்கள், கோத்துகள், அவுணர்கள், சிலாவியர்கள் என்று ஒருவர் பின்னொருவராக அநாகரிக மக்கள் ஐரோப்பா மீது படையெடுத்தனர். ஏற்கனவே இருந்த தலைவர்களை அகற்றிவிட்டு அங்கிருந்த நிலக்கிழமை அமைப்பைப் பயன்படுத்தி வாழ்ந்து வந்தனர்.

பழைய பேரரசு இருந்த இடத்தை உரோமைத் தலைநகராகக் கொண்ட கிறித்துவத் தலைவரான போப் பிடித்துக்கொண்டார். ஆனால் இது ஒரு படைத்தலைமை இல்லை. வெறும் பண்பட்டுத் தலைமைதான். இருந்தாலும் மக்களுக்கு இருந்த ஆழ்ந்த மத நம்பிக்கையால் நிலக்கிழமைத் தலைவர்கள் போப்பின் செல்வாக்கை ஏற்றுக்கொள்ள வேண்டி இருந்தது.

பண்டைக் கீழை உலகிலிருந்து கிரேக்கத்துக்குச் சென்று அங்கிருந்து உரோமப் பேரரசின் மரபுரிமையாயிருந்த அறிவியல், தொழில்நுட்பம், ஆட்சிக் கலை, படைத்துறை வளர்ச்சி அனைத்தும் மறக்கப்பட்டு கைவிடப்பட்டன. யூத, கிறித்துவ மறைநூலே அனைத்துக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிகாட்டியானது. மதகுருக்களும் நிலக்கிழார்களும் வைத்ததே சட்டமானது. மக்களுக்குச் சிந்திக்கவே உரிமையில்லாது போயிற்று. மதநூல்களும் வழிபாடும் இத்தாலிய மொழியிலிருந்தன. சட்டங்களும் அவ்வாறே. எனவே இத்தாலி மொழி படித்த ஆட்சியாளர்களும் மதகுருக்களுமே ஆதிக்கம் செலுத்தினர். இந்தக் காலத்தை ஐரோப்பாவின் இருண்ட காலம் என்றும் இடைக்காலம் என்றும் வரலாற்றாசிரியர்கள் கூறுவர். பிற்போக்கு ஆதிக்கம் செலுத்தும் கால கட்டத்தை இடைக்காலம் என்ற பொதுப்பெயரால் வரலாற்று வரைவியலில் குறிப்பதிடும் வழக்கமும் வேரூன்றிவிட்டது.

நிலக்கிழமைக் குமுகத்தின் பொருளியல் அமைப்பு நிலக்கிழமை விளைப்புப் பாங்கு எனப்படும். உழவன் தன் ஆண்டையாகிய நிலக்கிழாரின் நிலத்தில் உழுது பயிரிட வேண்டும். அத்துடன் தனக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் நிலத்திலும் பயிரிட்டுத் தன் உணவுத் தேவையை நிறைவுசெய்து கொள்ள வேண்டும். அத்துடன் கிழமையில் இத்தனை நாள் என்ற கணக்கில் தன் ஆண்டையின் வீட்டில் சென்று கூலியில்லா வெட்டி வேலை செய்ய வேண்டும். நிலத்தை விட்டு வெளியேறவோ வேறு சொந்த வேலைக்குச் செல்லவோ அவனுக்கு உரிமை கிடையாது. நிலங்கள் கைமாறும் போது உழவனும் நிலத்தோடு புதிய உடைமையாளருக்கு உரிமையாவான். இந்த உழவர்கள் பண்ணையடிமைகள் என அழைக்கப்பட்டனர்.

தொழில்துறை பிறப்படிப்படையில் மரபு வழியாக வழங்கி வந்தது. தொழில்நுட்பங்கள் அவ்வக்குடும்பங்களில் மறைபொருட்களாகப் பேணப்பட்டன. தொழிற்பட்டறைகளில் இத்தனை ஆட்களுக்கு மேல் வேலைக்கு வைக்கக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. எனவே வாணிகர்களே தொழில்துறையின் மூலம் ஆதாயம் ஈட்டினர்.

இருண்ட இந்த இடைக்காலத்தின் முடிவுக்குத் தொடக்க விழா நடத்தியவர்கள் முகம்மதியர்களாவர்.

சிதைந்த உரோமப் பேரரசு இரண்டாக உடைந்திருந்தது. ஒன்று உரோமைத் தலைநகராகக் கொண்டிருந்தது. இன்னொன்று காண்டாண்டிநோபுளைத் தலைநகராகக் கொண்டிருந்தது. முகம்மதியர்கள் காண்டாண்டிநோபுளைக் கைப்பற்றிவிட்டனர்.. ஐரோப்பாவினுள்ளும் நுழைந்து பல இடங்களைக் கைப்பற்றினர். இது ஐரோப்பியர்களிடையில் புதிய எழுச்சியை உண்டாக்கியது. மேற்காசியாவில் இருந்த கிறித்துவர்களின் திருத்தலமான எரூசலத்தை முகம்மதியர்களிடமிருந்து மீட்பதற்கான கூட்டணி ஒன்று உருவாகியது. இந்தக் கூட்டணியினர் மேற்காசியா மீது படையெடுத்தனர். பல போர்கள் நடைபெற்றன. இவற்றிற்கு வரலாற்றில் சிலுவைப் போர்கள் என்று பெயர்.

சிலுவைப் போர்களின் மூலம் ஐரோப்பியர்களுக்கு நேரடி வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் கீழை உலகோடு தொடர்புகள் ஏற்பட்டன. பழைய கிரேக்க அறிவு நூல்ககளின் இருப்பு தெரியவந்தது.

போப்பும் அவரது உள்ளூர் முகவர்களும் பலவகைகளிலும் மக்களைக் கொடுமைப்படுத்தி வந்தனர், பாவமன்னிப்பச் சீட்டுகள் என்று வெளியிட்டு அவற்றை மக்கள் விலை கொடுத்து வாங்க வேண்டுமென்று கட்டடாயப்படுத்தினர். இத்தகைய சமயக் கொடுங்கோன்மையை ஒரு சமய ஊழியரான மார்ட்டின் லூதர் எதிர்த்தார். ஏசுநாதரின் அறிவுரைகளுக்கும் உரோமின் சமயத் தலைமையின் நடவடிக்கைகளுக்கும் உள்ள இடைவெளியை அவர் சுட்டிக்காட்டினார். அவர் எதிர்பார்த்ததை விட மிகப் பெருமளவில் அவருக்கு ஆதரவு கிடைத்தது. கிறித்துவத்திற்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அது இரண்டாகப் பிளந்தது. இவையின்றி, இன்னும் சில சிறு பிரிவுகளும் உருவாயின. சமயத்தின் அடிப்படையில் ஏறக்குறைய 100 ஆண்டுகள் ஐரோப்பா முழுவதும் குருதியாறு பெருக்கெடுத்தோடியது.

முகம்மதியர்கள் காண்டாண்டிநோபுளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறி ஐரோப்பாவினுள் நுழைந்த கிரேக்கப் படிப்பாளிகளிடமிருந்தும் சிலுவைப் போர்களாலும் மக்களின் கவனத்துக்கு வந்த கிரேக்க நூல்களிலிருந்தும் சிந்தனையாளர்கள் பழம் அறிவியலைக் கண்டார்கள். கிழக்கிலிருந்து வானியல், வேதியல், மருத்துவம் போன்ற நுட்பங்களை அறிந்தார்கள். ஆய்வு முயற்சிகள் தோன்றின. கிறித்துவ மறைநூலின் கூற்றுகளுக்கு முராணான உண்மைகள் வெளிவரத் தொடங்கின. சமயம் அவற்றைக் கூறியவர்களைத் தீயிட்டுக் கொளுத்தித் தண்டித்தது. ஆனால் உண்மையை அறியும் வேட்கை தணியவில்லை, மாறாக மிகுந்தது.

இங்கிலாந்தின் எட்டாம் என்ரி தன் மனைவியாகிய பெயின் நாட்டு இளவரசியை மணவிலக்குச் செய்ய போப்பின் இசைவைக் கேட்டான். பெயின் நாட்டு மன்னனின் செல்வாக்குக்குள்ளிருந்த போப் மறுத்தார். என்ரி போப்பின் மேலாதிக்கத்தை உதறி இங்கிலாந்தில் சமயத்தை அரசனின் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தான். கோயில் நிலங்களை அரசனும் அவனது நண்பர்களும் பங்குபோட்டுக் கொண்டனர்; கிறித்தவ மதநூல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது.

புதிய கல்வி, புதிய சமயம், ஆகியவை புதுப்பனைவுகளுக்கு வழிகோலியது. வானியல், இயற்பியல், வேதியல் முதலிய துறைகள் வளர்ச்சி பெற்றன. உண்மையில் இவற்றில் பல மீளக் கண்டுபிடிப்புகளே; கிறித்துவ சமயத்தினால் புதையுண்டு போன பழைய அறிவியலின் புத்துயிர்ப்புகளே.

முகம்மதியர்கள் காண்டாண்டிநோபுளைக் கைப்பற்றியதும் ஐரோப்பியர்களிடமிருந்த வாணிகம் அராபியர்கள் கைகளுக்கு மாறியது. ஐரோப்பாவிலிருந்து கீழை நாடுகளுக்கு வரவேண்டுமென்றால் நண்ணிலக் கடற்கரை சென்று அங்கிருந்து பாரசீகம் வழியாக நிலவழி சென்று பாரசீக வளைகுடாவிலிருந்து மீண்டும் கடல்வழி செல்ல வேண்டும். இதில் இந்தத் தரைவழிதான் முகம்மதியர்களால் அடைக்கபட்டது.

இவ்வாறு கடல் வாணிகத்தில் முற்றுரிமை பெற்றுவிட்ட அரேபியர்கள் ஐரோப்பியர்களிடமிருந்து கொள்ளை ஆதாயம் பெற்று வந்தனர். எனவே ஐரோப்பியர்கள் கீழை நாடுகளுக்குச் செல்லப் புது வழி தேட வேண்டியதாயிற்று. உலகம் தட்டை என்ற கிறித்துவ மறையின் கூற்றுக்கு எதிராக உலகம் உருண்டை என்ற உண்மையை மக்களில் ஒரு பகுதியினர் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருந்த நேரம். அப்போது தான் கொலம்பன் இந்தப் புதிய கண்டுபிப்பு மீது நம்பிக்கை வைத்து மேற்கு நோக்கிச் சென்றால் இந்தியாவை அடையலாம் என்று பெயின் அரசரின் உதவியை நாடிப் பெற்று அமெரிக்காவின் கண்டுபிடிப்புக்கு வழிகோலினான். வாசுக்கோடகாமா நன்னம்பிக்கை முனை வழியாக இந்தியாவை அடைந்தான். அதிலிருந்து புத்துலகங்களைக் கண்டுபிடிக்கும் ஆர்வம் ஐரோப்பாவில் பொங்கி வழிந்தது. அமெரிக்காவிலிருந்து பொன்னுடன் பொருளும் ஐரோப்பாவில் குவிந்தன.

இந்தியாவிலிருந்து முகாமையான பொருளாகத் துணி ஏற்றுமதியானது. நாளடைவில் இங்கிலாந்திலேயே நெசவுத் தொழில் முடுக்கிவிடப்பட்டது. இத்தொழில் முடுக்கத்துடன் அறிவியல் வளர்ச்சியின் மூலம் நீராற்றல், வளியாற்றல், நீராவி ஆற்றல் முதலியனவும் இணைந்தன.

கம்பிளி ஆடுகள் வளர்ப்பதற்காக நிலக்கிழார்கள் தங்கள் நிலங்களில் இருந்த பண்ணையடிமைகளை வெளியேற்றினார்கள். வெளியேற்றப்பட்ட மக்கள் வேலை தேடி நகரங்களில் குவிந்தனர். புதிதாகத் தொடங்கப்பட்ட தொழில்களுக்கு மலிவான கூலியாட்கள் கிடைத்தனர். இந்த மாற்றத்தினால் பெருவாரியான மக்கள் பட்டினியால் மடிந்தனர்.

வாணிகமும் தொழிலும் வளர்ந்ததில் வாணிகர்கள், தொழில் முதலாளிகள் அடங்கிய புதிய நடுத்தர வகுப்பு தோன்றியது. அதற்கும் உயர்குடியினருக்கும் உயர்குடியினரைச் சார்ந்து நின்ற அரசனுக்கும் முரண்பாடுகள் தோன்றின. அவை முற்றி 1649இல் இங்கிலாந்து அரசன் முதல் சார்லே பாராளுமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுத் தலைவாங்கப்பட்டான். பழைய நிலக்கிழமைக் குமுகம் முடிந்து புதிய முதலாளியக் குமுகம் பிறந்தன் அடையாளமாகும் இது.

இதே போல் 1793இல் பிரஞ்சு மன்னனான 16-ஆம் லூயியைப் பிடித்து அந்நாட்டின் மக்கள் அவன் தலையைக் கொய்தார்கள். அங்கும் உயர்குடியினருக்கு எவ்வித வரிவிதிப்பும் கிடையாது. எல்லா வரிகளையும் நடுத்தர, கடைத்தர மக்களே வழங்க வேண்டியிருந்தது.

இவ்வாறு ஐரோப்பாவில் நிலக்கிழமைக் குமுகம் மாறி முதலாளியக் குமுகம் மலர்ந்தது.

புதிதாக மலர்ந்த முதலாளியக் குமுகத்தில் பழைய பண்ணையடிமைகள் ஆலைத் தொழிலாளர்கள் என்ற நிலையை அடைந்தார்கள். இங்கும் அவர்கள் வாழ்நிலையில் மேம்பாடு இல்லை. நகரங்களில் தூய்மையற்ற சேரிகளில் பன்றிக் கூடுகள் போன்ற உறைவிடங்களில் கடும் வறுமையில் அவர்கள் வாழ்ந்தனர். ஒரு நாளைக்கு 20 மணி நேரம் கூட வேலை செய்தனர். பச்சிளம் குழந்தைகளும் பெண்களும் அதே அளவில் வேலை செய்ய வேண்டியிருந்தது. போதிய சம்பளமோ கிடைப்பதில்லை. அத்துடன் நிலையான வேலையும் கிடைப்பதில்லை. புதிய புதிய கருவிகள் கண்டு பிடிக்கப்படும் போதெல்லாம் தொழிலகங்களிலிருந்து ஆட்கள் வெளியேற்றப்பட்டனர். வேலையின்மையால் பட்டினிச் சாவுகள் அடிக்கடி நிகழ்ந்தன.

இந்தச் சூழ்நிலையின் ஒரு தவிர்க்க முடியாத நிலைமை என்னவென்றால் பெரும் எண்ணிக்கையிலான உழைப்பாளர்கள் ஒரே கூரையின் கீழ் வேலை செய்வதாகும். ஒரே மூலத்திலிருந்து அதாவது பெரிய ஒரு நீராவிப் பொறியிலிருந்து வரும் விசையினால் இயக்கப்படும் பெரும் எண்ணிக்கையிலான கருவிகளை இயக்கும் பெருவாரியான உழைப்பாளிகளின் பணி ஒரு கூட்டுழைப்பாகும். அதன் இந்தத் தன்மையினால் இந்த உழைப்பாளிகள் ஒன்றுசேர்ந்து தங்களது குறைகளை எளிதாக வெளிப்படுத்தும் வாய்ப்பு இருந்தது. அவ்வாறு உருவான ஒற்றுமையின் மூலமாக அவர்கள் வேலைநிறுத்தப் போராட்டங்களில் இறங்கினர். அத்துடன் நாம் முன்னோரிடத்தில் குறிப்பிட்டது போல இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இருந்த முரண்பாடுகளினால் உழைப்பாளர்களுக்காகப் பாராளுமன்றத்தில் ஒரு சாரர் குரல் கொடுத்தனர். இந்த இருமுனை முயற்சிகளின் மூலம் உழைப்பாளர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டு வந்தன.

ஆனால் இது எங்கும் எளிதாக இருக்கவில்லை. பிரான்சில் உழைப்பாளர்களுக்கு இது போன்ற உரிமைகள் எளிதில் கிடைக்கவில்லை. எனவே அங்குள்ள உழைப்பாளர்கள் ஆயுதந் தாங்கிய போராட்டத்தை மேற்கொண்டனர். 1848இல் புரட்சி நடைபெற்றது. புரட்சி வெற்றி பெற்றது. உழைப்பாளர்கள் தங்கள் கைகளில் ஆட்சியினை எடுத்துக்கொண்டனர். கம்யூன்கள் எனப்படும் குமியங்களை உருவாக்கி அதன் முலம் மக்களுக்குத் தேவைகளை வழங்கி ஆள்வினையையும் கட்டுப்படுத்தினர். ஆனால் சில வாரங்களில் இப்புரட்சி ஒடுக்கப்பட்டது. ஆனால் இதுவே பொதுமையியம் எனும் குறிக்கோளுக்கு வித்திட்டது.

இதற்கு முன்பு இங்கிலாந்தில் ஓவன் எனும் தொழில் முதலாளி தன் தொழிலகத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு நல்ல வீடுகள் கட்டிக் கொடுத்து கூட்டுறவுப் பண்டகசாலைகள் அமைத்துக் கொடுத்து குழந்தைகளுக்குப் பள்ளிகள் ஏற்படுத்தி உழைப்பாளர்களின் உழைப்பிலிருந்து கிடைத்த ஆதாயத்தை அவர்கள் நலனுக்கே பயன்படுத்தினார். ஆனால் பிற முதலாளிகளின் சூழ்ச்சிகளினால் அவரது முயற்சி தோல்வியடைந்தது. மற்றும் அக்காலகட்டத்தில் வாழ்ந்த பல்வேறு சிந்தனையாளர்கள் நிகர்மை(சமதர்மம்,சோசலிசம்) எனும் கோட்பாட்டை மக்களுக்கும் முதலாளிகளுக்கும் எடுத்துச் சொல்வதன் மூலம் சட்டமன்றங்களில் சட்டங்களியற்றி நடைமுறைக்குக் கொண்டுவரலாம் என்று கூறிவந்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன் ஆங்கிலச் சிந்தனையாளர் தோமா மூர் என்பவர் எழுதிய உட்டோப்பியா என்ற நூலில் கூறியிருக்கும் ஒரு கற்பனை உலகத்தைப் படைப்பதற்குப் பெரும்பாலோர் விரும்பினர். நம் நாட்டில் சிலர் கூறுவது போன்ற 'இராமனாட்சி'(இராமராச்சியம்) இது.

ஆனால் மார்க்க இதை ஏற்கவில்லை. தான் கூறுவது அறிவியல் நிகர்மை என்றார். அவருடைய வாதம் பின் வருமாறு:
மனிதன் பிற விலங்குகளிலிருந்து உழைப்பு என்ற தன்மையில் வேறுபடுகிறான். பிற விலங்குகளுக்கில்லாத கை என்ற உறுப்பு அவனது உழைப்பிலிருந்து உருவாகி அவன் உழைப்புக்குக் கருவியுமாகிறது. இந்தக் கருவியின் மூலம் அவன் தனது தேவைகளுக்கு மேலாகவும் அவனால் உழைத்துப் பொருட்களைப் படைக்க முடியும். உழைப்பு உத்திகள் முன்னேறாமல் இருந்த காலத்தில் அவனால் அவன் தேவைகளுக்கு மிகுதியாகப் படைக்க முடியாமல் இருந்தது. ஆனால் மனிதன் இயற்கையை அறிந்து அறிவில் வளர்ந்து தன் விளைப்பு உத்திகளை மேம்படுத்திய போது மிகுதி விளைப்பு பிறந்தது. இந்த மிகுதி விளைப்பு சில சூழ்நிலைகளால் ஒரு சிலரால் கைப்பற்றப்பட்டது. இப்படிக் கைப்பற்றிய சிலர் எஞ்சிய பெரும்பான்மையனரை அடக்கி வைத்தனர். அவ்வாறு அடக்கி வைப்பதற்கென்றே அரசும் அதன் வன்முறைக் கருவிகளான நிலையான படை, சட்டங்கள், நயமன்றங்கள், சிறைச்சாலைகள், காவல்துறை முதலியன உருவாக்கப்பட்டன.

குக்குலக் குமுகம் உடைந்து தனியுடைமைகளாக நிலம் பிரிந்த போது வாணிகர்களும் கந்துவட்டிகாரர்களும் மக்களின் மிகுதி விளைப்பைச் சுரண்டினார்கள். அதிலிருந்து அடிமைக் குமுகம் உருவானது. அடிமைகளாகிய உழைப்பாளிகளை அடிமை உடமையாளர்கள் சுரண்டினார்கள். அடிமைகள் திரண்டெழுந்து அடிமைக் குமுகத்தைத் தூக்கியெறிந்தார்கள். அதிலிருந்து நிலக்கிழமைக் குமுகம் உருவானது. இப்போது பண்ணையடிமைகளின் உழைப்பை நிலக்கிழார்கள் சுரண்டினார்கள். சுரண்டலும் கொடுமையும் தாங்க முடியாத போது அவர்கள் கொதித்தெழுந்து நிலக்கிழமைக் குமுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள். அதிலிருந்து முதலாளியக் குமுகம் உருவானது. இங்கு தொழிலக உழைப்பாளிகளின் உழைப்பை முதலாளிகள் சுரண்டுகிறார்கள். இந்த முதலாளிய ஊழியில் குமுகத்தின் மூலதனமெல்லாம் தொழிலகங்களுக்குள் குவிகின்றன. படைப்போனுக்காக அன்றி ஊரும் பெயரும் தெரியாத வேறெவருக்கோ பண்டங்கள் படைக்கப்படுகின்றதன. இவ்வகையில் படைப்பு தனிமனிதனுக்கென்றிருந்த நிலைமாறி முழுக் குமுகத்தன்மை பெறுகிறது. எனவே படைக்கப் பயன்படும் மூலப்பொருட்கள், தொழிலகம், கருவிகள், படைக்கப்படும் பண்டம் இவையனைத்தும் முழுக் குமுகத்துக்கும் சொந்தமாவதே இயற்கை. இந்த இயற்கை விதி செயற்பட்டே ஆக வேண்டும். ஆனால் முதலாளிகள் தங்கள் கைகளிலிருக்கும் இந்த குமுகச் சொத்தை விட்டுக்கொடுக்க முன்வரமாட்டார்கள். எனவே அவர்கள் மீது வன்முறையைப் பயன்படுத்த வேண்டும். வன்முறையைப் பயன்படுத்தினால் மட்டும் போதாது, அவர்களுக்கு இதுவரை பயன்பட்டு வந்த வன்முறைக் கருவியான அரசுப் பொறியைத் தகர்த்து உழைப்பாளிகள் தங்கள் முற்றாதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும்.

பாட்டாளிகளின் இந்த முற்றாதிக்கம் சுரண்டுவோராகிய முதலாளிகள் ஒடுக்கப்பட்டு அவர்களும் பாட்டாளிகளாவது வரை நீடிக்கும். அனைவரும் பாட்டாளிகளான பின் ஒடுக்குதல் இருக்காது. ஒடுக்குதல் இல்லாத போது ஒடுக்குதலுக்குத் தேவையான வன்முறைக் கருவியான அரசும் அரசுப் பொறிகளும் தேவை இல்லை. எனவே அவை சிறுகச் சிறுக உதிர்ந்து போகும்.

புதிய பொதுமைக் குமுகத்தில் சுரண்டுவோனும் இல்லை, சுரண்டப்படுவோனும் இல்லை, சுரண்டலும் இல்லை. மக்களுக்குப் பொருளியலிலும், எனவே குமுகியலிலும் ஏற்றத்தாழ்வில்லை. உழைப்பு என்பது வாழ்வின் அடிப்படை இயங்குவிசையாயிருக்கும். ஆற்றலுக்கேற்ற உழைப்பு, தேவைக்கேற்ற வசதிகள் என்று குமுகம் செயற்படும்.

பொதுமைக் குமுகத்தில் ஏறக்குறைய அனைத்துப் பணிகளையும் இயந்திரங்களே செய்துவிடும். எனவே மக்களுக்கு உழைப்புக்கு நேரம் மிகக் குறைவாகவே தேவைப்படும். மிகக் குறைந்த உழைப்பில் மிகக் கூடுதலான வசதிகளை மக்கள் பெறுவர். கிடைக்கும் மிகுதியான ஓய்வு நேரத்தில் தங்கள் தனிமனித ஆற்றல்களை வளர்ப்பதில் மக்கள் செலவிடுவர். கல்வி, கலை, அறிவியல், அரசியல், போன்ற அனைத்துத் துறைகளிலும் தனிமனித ஈடுபாடும் மேம்பாடும் உண்டாகு ம்.

இவ்வாறு தொகுத்த பின் வரலாற்றைப் பற்றிய கீழ்வரும் முடிவுகளுக்கு மார்க்சு வந்தார்:
1. குமுகம் தனியுடைமைக்கு முன் வகுப்பு வேறுபாடுகளின்றி இருந்தது.
2. தனியடைமை ஏற்பட்ட பின் வகுப்புகளாகப் பிளவுண்டது.
3. உடைமை வகுப்புகள் இல்லாத வகுப்பினரைச் சுரண்டிவந்தன. அவர்களை ஒடுக்குவதற்காக அரசையும் அரசுப் பொறியையும் ஏற்படுத்திப் பயன்படுத்திவந்தன.

4. ஒவ்வொரு காலகட்டத்திலும் விளைப்பு ஆற்றல்களின் வளர்ச்சிக்கேற்ப விளைப்புப் பாங்கும் அவ்விளைப்புப் பாங்குக்கேற்ப வகுப்புகளும், அரசியல், சட்டங்கள், நயன்மைகள், நம்பிக்கைகள், குடும்ப அமைப்புகள், ஆண்-பெண் உறவுகள், ஒழுக்க விதிகள், அறிவியல் - தொழில்நுட்பங்கள், கலைகள், இலக்கியங்கள் ஆகியவை அமைந்தன. இவை திட்டமிடப்பட்ட வகையிலன்றி மக்களின் தன்னுணர்வின்றி உருவாக்கப்பட்டன. அவர்கள் மீது விளைப்பு விசைகள் ஏற்படுத்திய தாக்கங்களினால் இயற்கை விதிகளைப் போன்ற ஈவிரக்கமற்ற விதிகள் செயற்பட்டு, ஆனால் அவ்விதிகளைப் பற்றிய உணர்வின்றி மக்கள் அவற்றிற்குக் கீழ்ப்படிந்து செயற்பட்டனர்.

5. பொருளியல் அமைப்பு அடித்தளம் என்றும் மற்றவை மேற்கட்டுமானம் என்றும் அழைக்கப்படும். பொருளியல் அமைப்பு, அதாவது விளைப்புப் பாங்கு மாறுந்தோறும் மேற்கட்டுமானம் மாறும். அடித்தளம் மாறி நெடுங்காலம் சென்றும் கூட பழைய மேற்கட்டுமானத்தில் சில கூறுகள் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

6. ஒவ்வொரு பொருளியல் ஊழியிலும் அதன் உள்ளார்ந்த முரண்பாடுகளே முனைப்படைந்து பழையதை உடைத்து புதிய ஊழிக்கு வித்திடுகின்றன. அவ்வாறு உருவான புதிய ஊழியின் கருவிலேயே அதனை அழிக்கும் கூறும் தோன்றிவிடுகிறது. அடிமைக் குமுகத்தில் அதனை உடைக்கும் அடிமைகள் இருந்தது போலவே நிலக்கிழமையில் அதனோடு தோன்றிய பண்ணையடிமைகளும் முதலாளியக் குமுகத்தில் அதன் உறுப்பாகிய பாட்டாளிகளும் அவ்வக்குமுகங்களை உடைக்கும் கூறுகளாக அவற்றுடனேயே உருவாகிவிட்டமை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

7. உலக வரலாறே வகுப்புப் போராட்டங்களின் வரலாறாகும். வரலாற்றில் நிகழ்ந்த ஒரு போரின் வெற்றி தோல்வி போரிடும் குமுகங்களின் வகுப்பு உறவுகளைப் பொறுத்து அமைகிறது.

8. வரலாற்றில் நடைபெறும் நிகழ்ச்சிகள் தனிமனிதர்களாகிய தலைவர்களால் நடைபெறவில்லை. வரலாற்றுக் கருப்பொருளாகிய பெரும்பான்மை மக்களே வரலாற்றை உருவாக்குகிறார்கள்.

9. அரசு என்பது ஒரு வகுப்பு பிற வகுப்புகளை அடக்கிவைப்பதற்கான வன்முறைக் கருவியேயன்றி வகுப்புகளுக்குள் இணக்கத்தை எற்படுத்துவதல்ல.

10. குமுகம் ஒரு கட்டத்திலிருந்து முன்னேறி அடுத்த கட்டத்தினுள் நுழைவது ஓர் இன்றியமையா விதியாக இருந்த போதிலும் குமுகம் தன்னுணர்வுடைய அதாவது சிந்திக்கும் திறனுடைய மக்களைக் கொண்டது. எனவே ஒரு குமுகத்திலுள்ள பிற்போக்கு விசைகள் அக்குமுகம் முன்னேறிச் செல்வதன் வாயிலாகத் தங்கள் நலன்களுக்கு ஊறு நேரா வண்ணம் அக்குமுகத்தின் வளர்ச்சியைத் திட்டமிட்டுத் தடுக்கும் நிலை அடிக்கடி நேர்கிறது. எனவே குமுக வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட விசைகள் தங்களை ஒன்றிணைத்துக் கொண்டு பிற்போக்கு விசைகளை முறியடித்துக் குமுகத்தை முன்னோக்கி இட்டுச்செல்ல வேண்டும். அவ்வாறு எச்சரிக்கையாயில்லாமல் போனால் அக்குமுகம் பின்னோக்கிச் செல்லும் வாய்ப்புண்டு.

11. குமுகத்தின் இயக்க விதிகளை அறிந்து கொள்வதால் குமுக வளர்ச்சியின் ஒரு கட்டத்திலிருந்து இடையிலுள்ள கட்டங்களுக்குள் நுழையாமல் அடுத்த ஒரு கட்டத்தினுள் தாவிப்பாய்ந்து விட முடியாது. வேண்டுமானால் ஒரு புதிய வளர்ச்சி நிலையின் பேறுகால நோவையும் நீட்சியையும் குறைக்க மட்டுமே முடியும்.
இவையனைத்தின் தொகுப்புதான் வரலாற்றுப் பருப்பொருளியம் ஆகும்.

அடுத்து நாம் இயங்கியல் பருப்பொருளியம் பற்றிப் பார்ப்போம்.

இயங்கியல் பருப்பொருளியம் என்பது ஒரு மெய்யியல் பள்ளியாகும். தமிழில் அதனை முரணியல் பருப்பொருளியம் என்றும் உறழியல் பருப்பொருளியம் என்றும் கூடத் தமிழாக்கம் செய்துள்ளனர். இயங்கியலை விளக்கும் போது அச்சொல்லாக்கங்களின் பொருத்தமும் விளங்கும். முதலில் இயக்கவியல் என்றிருந்த தமிழாக்கத்துக்கு இயங்கியல் என்ற திருந்திய சரியான வடிவைக் கொடுத்தவர் தோழர் குணா தான்.

பொதுவாக இயற்கையையும், உலகையும், குமுகத்தையும் பற்றி இரு வேறுபட்ட கண்ணோட்டங்கள் உண்டு. ஒன்று, இயற்கை, உலகம், குமுகம் ஆகியவற்றை பருப்பொருள்தான் இயக்குகிறது என்பது. இந்தக் கண்ணோட்டத்துக்குப் பருப்பொருளியம் என்று பெயர். இதற்கு மாறுபட்ட கண்ணோட்டத்துக்கு நுண்பொருளியம் என்று பெயர். இதன்படி அனைத்தையும் இயக்குவது நுண்பொருளாகிய சிந்தனையே.

எதிரெதிராக வேறுபட்ட இந்த இரு கண்ணோட்டங்களிலும் பல்வேறு உட்பிரிவுகளும் உண்டு. பருப்பொருளியம் முகாமையாக இருவகையாகப் பிரிந்து நிற்கிறது. ஒன்று இயங்காவியல் பருப்பொருளியம் என்றும் இன்னொன்று இயங்கியல் பருப்பொருளியம் என்றும் அழைக்கப்படும். இயங்காவியல் பருப்பொருளியம் உலகாவிய பருப்பொருள் மாற்றமின்றி ஒரே சீராக இருக்கிறது என்கிறது. ஆங்காங்கு மாற்றங்கள் நிகழ்ந்தாலும் ஒட்டுமொத்தமாக ஒரே நிலையாகவே இருக்கிறது என்கிறது. மாறாக இயங்கியல் பருப்பொருளியம் இயற்கை இடைவிடாது இயங்கிக்கொண்டு, மாற்றமடைந்து கொண்டிருக்கிறது. மாற்றமே இயற்கையின் இயற்கை. இயற்கையில் மாறாதது மாற்றம் ஒன்று தான் என்கிறது.

நுண்பொருளியம் இரு பெரும் பிரிவுகளைக் கொண்டது. ஒரு பிரிவு நுண்பொருள் முதன்மையாயினும் இயற்கையில் பருப்பொருள் என்ற ஒன்று தனியாக உள்ளது என ஏற்றுக் கொள்கிறது. இது புறமை நுண்பொருளியம் எனப்படும். இன்னொரு பிரிவு இயற்கையில் பருப்பொருள் என்று எதுவுமே இல்லை; பருப்பொருள் என்பது நுண்பொருளாகிய மனத்தில் மட்டுமே இருக்கிறது. மனமாகிய அகத்துக்கு வெளியே புற உலகென்ற பருப்பொருள் எதுவுமே இல்லை என்கிறது. இதனை அகமை நுண்பொருளிம் என்பர்.

புறமை நுண்பொருளியமும் இயங்காவியல் நுண்பொருளியம், இயங்கியல் நுண்பொருளிம் என இரு பிரிவுகளாக உள்ளது.

கிரேக்கர்களால் தொடங்கப்பட்ட இயங்கியல் அணுகலைப் புதிய வடிவில் முழுமைப்படுத்தி வெளிக்கொணர்ந்தவர் எகல் எனப்படும் செருமானியச் சிந்தனையாளர். ஆனால் அவர் அதனை நுண்பொருளியக் கண்ணோட்டத்தில் கூறினார். அனைத்தும் தழுவிய ஒரு சிந்தனையில் இயங்கியல் இருக்கிறது. அந்த இயங்கியலால் இயற்கை இயங்கியலாக இயங்குகிறது என்றார் அவர். இறைவனையே மறைமுகமாக 'அனைத்தும் தழுவிய சிந்தனை' என்று அவர் கூறுகிறார்.

எகலின் இயங்கியல் விளக்கம் மார்க்சைக் கவர்ந்தது. இருந்தாலும் அதிலுள்ள நுண்பொருளிய அணுகலை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இயற்கையில் இயங்கியல் உள்ளது, அதன் எதிரொளிப்பாக மனிதச் சிந்தனையில் இயங்கியல் விளங்குகிறது என்றார் அவர். எகல் இயங்கியலை அதன் தலை(சிந்தனை) மீது நிற்க வைத்துவிட்டார் என்று குறை கூறினார். இருப்பினும் தன்னை அந்த மாபெரும் சிந்தனையாளரின் மாணவன் என்று கூறிப் பெருமைப் பட்டார்.

இனி இயங்கியலைப் பற்றிப் பார்ப்போம்.

இயற்கை, குமுகம், மனிதச் சிந்தனை அனைத்தும் இடைவிடாத மாற்றங்களை இயல்பாகச் கொண்டவை. இம்மாற்றங்கள் அவற்றின் உள்ளார்ந்த முரண்பாடுகளின் இடைவினைப்பாடுகளால் உருவாகின்றன. இயற்கை, குமுகம், மனிதச் சிந்தனை ஆகியவை தத்தமக்குள்ளும் இடைவினைப்பட்டு தத்தமக்குள் மாற்றங்களை நிகழ்விக்கின்றன.
முரண்பாடுகளிலுள்ள எதிர்க்கூறுகள் வினைப்படும் போது ஒன்று வீழ்ச்சியடைந்து இன்னொன்று வெற்றி பெறுகிறது. இப்போது புதிய முரண்பாடொன்று உருவாகிறது. வீழ்ச்சியடையும் அல்லது வெற்றி பெறும் கூற்றின் தன்மையைப் பொறுத்து புதிய முரண்பாடு ஒரு வளர்ச்சி நிலையையோ அல்லது தளர்ச்சி நிலையையோ காட்டலாம். ஆனால் ஒட்டுமொத்த உலகம் முன்னேற்றத்தையே கண்டு வந்துள்ளது.

இயங்கியலில் மூன்று விதிகள் செயற்படுகின்றன.
1.எதிரிணைகள் ஒன்றையொன்று ஊடுருவல், அதாவது எதிரிணைகள் ஒன்று மற்றொன்றாக மாறுதல்.
2.அளவு மாற்றம் இயல்பு மாற்றமாக மாறுதல்.
3.அகற்றுவது அகலல், ஒன்றை எது அகற்றுகிறதோ அதுவும் பின்னர் அகற்றப்படும்.

இனி இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:
1. எதிரிணைகள் ஒன்றையொன்று ஊடுருவுதல்:
இயற்கையிலும் குமுகத்திலும் மனித சிந்தனையிலும் எதிரிணைகள் செயற்படுகின்றன. ஒவ்வொன்றும் தம்முள் முரண்பட்டுப் போராடிக்கொண்டிருக்கும் எதிரிணைகளைக் கொண்டுள்ளன. ஒளியும் இருளும், நேர்மின்னும் எதிர்மின்னும், காந்தத்தின் வட, தென் முனைகளும், வெற்றியும் தோல்வியும், பிறப்பும் சாவும், கூட்டமும் பிரிவும், தெளிவும் குழப்பமும், அறிவும் அறியாமையும் என் று இவை நிலவுகின்றன.

ஒளி என்பது இருளால்தான் துலங்குகிறது. இருளில்லாதவிடத்தில் ஒளியில்லை. ஒளியில்லாதவிடத்தில் இருளில்லை. இருள் எங்கு முடிந்து ஒளி எங்கு தோன்றுகிறது என்ற எல்லையை வரையறுக்க முடிவதில்லை.

இந்தியாவிலும் பிற கீழைநாடுகளிலும் பிரான்சை முறியடிப்பதற்காக ஐரோப்பாவினுள் செருமனிக்குப் பணம், படைக்கலம், அறிவுரை கொடுத்து பிரான்சுக்கு எதிராக ஏவிவிட்டது இங்கிலாந்து. தான் எய்த நினைத்த வெற்றியையும் அது எய்திவிட்டது. ஆனால் ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளில் அதே வெற்றியின் விளைவாக வலிமை பெற்ற செருமனியால் இங்கிலாந்து தன் உலக வல்லரசை இழக்க நேர்ந்தது.

இயற்கையில் புதியதாக ஒன்றைக் கண்டுபிடிக்கும் அறிவியலாளர் இயற்கையைப் பற்றிய ஓர் புதிய உண்மையைக் கண்டு தெளித்தாலும் அவ்வுண்மை புதிய புதிர்களை வெளிப்படுத்தி அறியாமையின் புதிய பரிமானங்களைக் காட்டுகிறது.

சிந்து சமவெளி நாகரிகங்களின் கண்டுபிடிப்பு இந்திய வரலாற்றுவரைவிலும் உலக வரலாற்றுவரைவிலும் புரட்சிகரமான மாறுதல்களை ஏற்படுத்ததியது. ஆனால் அந்த நாகரிகம் எந்த மக்களுக்கு உரியது, அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், எப்படி மறைந்தனர், இன்றைய இந்திய நாகரிகத்துக்கும் அவர்களுக்கும் உள்ள உறவுகள் யாவை என்பன பற்றிய புதிய கேள்விகளையும் எழும்பியுள்ளது.

2. அளவு மாற்றம் பண்பு மாற்றமாவது:
நீரைச் சூடாக்கும் போது நீரின் வெப்பநிலை ஏறுகிறது. ஒரு கட்டம் வந்ததும் வெப்பநிலை ஏறுவதற்குப் பகரம் நீரின் இயல்பு மாறுகிறது. நீராக இருந்தது நீராவியாக மாறுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண்கள் மிதிவண்டி ஒட்டுவது விதிவிலக்கான ஒன்றாகவும் அரிதில் காணத்தக்க காட்சியாகவும் இருந்தது. இன்று அது இயல்பான ஒன்றாகிவிட்டது. விரைவில், மிதிவண்டி ஒட்டத் தெரியாத பெண்கள் விதிவிலக்காகவும் விந்தையானவர்களாகவும் ஆகிவிடுவர்.

ஓர் ஐம்பதாண்டுகளுக்கு முன் பிறவியில் ஏற்றத்தாழ்வு என்பது கிடையாது என்ற கருத்தைச் சொன்னவர்கள் சாதிமுறையால் ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்தே கடும் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இன்று அந்தக் கொள்கையைப் பெரும்பான்மை மக்கள் புரிந்து ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். அதனால் இன்று பிறவியில் ஏற்றத்தாழ்வு இருக்க வேண்டும் என்று உண்மையில் நினைப்பவர்கள் தங்கள் கருத்தை வெளியிடத் துணிவின்றி வேறு வழிகளை நாட வேண்டியுள்ளது.

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பது நம் நாட்டுப் பழமொழி.

அளவான மழை நிலத்துக்கும் பயிருக்கும் மக்களுக்கும் நன்மை செய்கிறது. அதுவே அளவு மீறும் போது அனைத்துக்கும் தீங்கு செய்வதாக மாறுகிறது.

இவை அளவு மாற்றம் இயல்பு மாற்றமாவதற்கு எடுத்துக்காட்டுகள்.

3. அகற்றுவது அகலல்:
இயற்கை, குமுகம் அல்லது சிந்தனையில் ஒரு வளர்ச்சி நிலை அல்லது மாற்றம் நிகழும் போது ஏற்கனவே இருந்த ஒன்று அகற்றப்பட்டு அந்த இடத்தில் புதிய ஒன்று வருகிறது. அப்படிப் புதிதாக வந்த ஒன்று இன்னொரு கட்டத்தில் அகன்று அல்லது அகற்றப்பட்டு அவ்விடத்தில் புததிய இன்னொன்று வரும்.
பழையன கழிதலும் புதியன புகுதலும்.
வழுவல கால வகையினான
என்பது தமிழிலக்கணம்.

முட்டையை அகற்றிவிட்டுக் கோழிக் குஞ்சு வருகிறது, கோழிக் குஞ்சை அகற்றிவிட்டு விடலை(விடை)க்கோழி வருகிறது, விடைக்கோழியை அகற்றிவிட்டு முட்டைக்கோழி வருகிறது, முட்டைக்கோழி உடனடியாக அகற்றப்படவில்லை ஆயினும் அக்கோழியினிடத்தில் முட்டையும் அதிலிருந்து கோழிக்குஞ்சும் உண்டாகின்றன.

இது சுழல் முறையாகத் தோன்றலாம். ஆனால் முன்பு தோன்றிய அதே முட்டையும் கோழிக்குஞ்சும் மீண்டும் தோன்றுவதில்லை. தன்மையிலும் சிறு வேறுபாடுகள் இருக்கும்.

அதுபோலவே குமுகத்திலும் ஒரு வளர்ச்சி நிலை அகற்றப்பட்டு இன்னொன்று வருகிறது, பின்னர் அதுவும் அகற்றப்பட்டு புதிய இன்னொன்று அந்த இடத்தைப் பிடிக்கிறது.

இவை இயற்கை, குமுகம், மனிதச் சிந்தனை என்பவற்றில் இயங்கியல் விதிகள் எனப்படும் மூன்றும் ஊடாடும் வகையாகும்.

இனி இயங்கியல் வகைத்திணைகள் என எதிரிணைகள் தொகுத்துக் கூறப்படுகின்றன.
காரணம் - விளைவு வியத்தி - சாரம் வடிவம் - உள்ளடக்கம் அமைப்பு - பயன்பாடு விதி - தற்செயல் நிகழ்தகவு - பட்டாங்கு
இவை பொதுவான இயங்கியல் வகைத்ததிணைகளாகும். அத்துடன்
மரபு - தகவமைப்பு
ஒப்பின்மை - மீளல் வரலாற்று மாந்தர் - குமுகம்
பருப்பொருள் - மனிதச் சிந்தனை
கோட்பாடு - நடைமுறை
பிறப்பு - இறப்பு
அகமை - புறமை
ஆண் - பெண்
உட்கொள்ளுதல் - கழித்தல்
வளர்ச்சி - தேய்வு
ஒளி - இருள்
என்று நாம் முன்பு தொகுத்துக் கூறதியவற்றையும் சேர்த்தால் இயற்கையிலும் குமுகத்திலும் மனிதச் சிந்தனையிலும் நாம் எண்ணற்ற வகைத்திணைகளைக் காட்ட முடியும். இங்கு ஒன்றிரண்டை மட்டும் எடுத்துக் கொண்டு அவற்றில் இயங்கியல் விதிகள் செயற்படும் பாங்கை விளக்குவோம்.

ஒரு விறகடுப்பு எரிவதை எடுத்துக் கொள்வோம். விறகைப் பற்ற வைப்பதற்காக நாம் முதலில் விறகைத் தீக்குச்சியால் கொளுத்துகிறோம். தீக்குச்சி தரும் வெப்பம் காரணமாக விறகு பற்றிக்கொள்கிறது. பற்றிக்கொண்டு எரியும் விறகிலிருந்து வெப்பம் பிறக்கிறது. அந்த வெப்பமே விறகு எரிவதன் காரணமாகவும் விளைவாகவும் ஒன்றையொன்று ஊடுருவுகின்றன. காரணம் எங்கே முடிகிறது, விளைவு எங்கே தொடங்குகிறது என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு ஒன்று மற்றொன்றாக மாறுகிறது.

அடுப்பில் ஒரு பானையில் தண்ணீர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். விறகு எரிந்து வெப்பம் வெளிப்படுந்தோறும் பானையிலுள்ள நீரின் வெப்பநிலை ஏறுகிறது. ஒரு கட்டத்தில் வெப்பநிலை ஏறுவது நின்றுவிடுகிறது. மாறாக நீர் கொதிக்கிறது. நீர் சிறிது சிறிதாக ஆவியாக மாறுகிறது. இப்பொழுது நீரின் வெப்பநிலையில் அளவு மாற்றமாயிருந்து ஒரு கட்டம் வந்ததும் பண்பு மாற்றமாக மாறிவிட்டது. அளவும் பண்பும் ஒன்றையொன்று ஊடுருவுகின்றன. பானையை காற்று வெளியேறாதவாறு மூடிவிட்டுச் சூடாக்கினால் கொதிக்கும் வெப்பநிலை உயர்கிறது. இவ்வாறு அளவு மாற்றத்துக்கும் இயல்பு மாற்றத்துக்கும் உள்ள எல்லைக்கோடும் மாற்றமடைகிறது.

விறகை வெப்பம் அகற்றுகிறது. வெப்பத்தை நீரின் வெப்பநிலை அகற்றுகிறது, வெப்பநிலையை நீராவி அகற்றுகிறது. அந்த நீராவி ஒரு இயங்கியின் சுரையினுள் செலுத்தப்பட்டிருந்தால் நீராவியை அதிலிருந்து உருவாகும் விசை அகற்றுகிறது. இவ்வாறு ஒவ்வொரு நிகழ்ச்சியலும் இயங்கியல் விதிகள் செயற்படுகின்றன.

முதலில் விதி - தற்செயல் என்ற வகைத்திணையை எடுத்துக்கொள்வோம். மழை பெய்ய வேண்டுமென்றால் வானில் மேகம் திரள வேண்டும். ஆனால் மேகம் திரளும் போதெல்லாம் மழை பெய்வதில்லை. அது அந்த வட்டாரத்திலுள்ள வான மண்டலத்தின் வெப்பநிலைக்கும் ஈரிப்புக்குமுள்ள(ஈரப்பதத்துக்குமுள்ள) உறவைப் பொறுத்துள்ளது. அத்துடன் வெப்பநிலையும் ஈரிப்பும் பொருந்தி வந்தால் கூட ஒரு வட்டாரத்தில் ஒரிடத்தில் மழை இறங்கும் போது அந்த இடத்தில் ஒரு தாழ்வழுத்தம் உருவாகும். சுற்றிலுமுள்ள அழுத்தத்துக்கும் இந்தத் தாழ்வழுத்தத்துக்கும் உள்ள வேறுபாடு அந்தச் சூழ்நிலைக்கேற்ற ஓர் எல்லையை மீறினால் பெருங்காற்று உண்டாகி அந்த மேகத்தைக் கலைத்து மழை இல்லாமல் செய்துவிடும். எனவே மேகம் குவிந்தால் மழை பெய்யும் என்ற விதி செயற்பட வேண்டுமாயின் அத்துடன் சில தற்செயல் நிலைமைகளும் தேவைப்படுகின்றன. ஆனால் இத்தற்செயல் நிலைமைகளும் ஏனோதானோவென்றதிருப்பதில்லை. அவையும் சில குறிப்பிட்ட விதிகளுக்கேற்பவே அமைகின்றன. அந்த வட்டாரத்தில் வளமான காடுகள் இருந்தால் வளிமண்டலத்தில் வெப்பம் எல்லை மீறாதவாறு மரங்களின் இலைகள் நீராவியை வெளியேற்றி மட்டுப்படுத்திக் கொள்ளும். இதன் மூலம் வளிமண்டலத்தின் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஈரிப்பு வந்தாலே மழை பெய்துவிடும். பெரும்புயலும் வெள்ளமும் சுடும் வறட்சியும் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

மழை பெய்தல் என்பது இத்துடன் நிற்கவில்லை. கதிரவன், நிலவு, பிற வான்பொருட்களின் தாக்கத்தினாலும் மழைப் பொழிவில் மாற்றங்கள் உண்டு. ஆனால் இவையும் விதிகளுக்கு உட்பட்டவைதாம். இவ்வாறு தான் ஒவ்வொரு நிகழ்விலும் விதியும் தற்செயலும் ஒன்றை ஒன்று ஊடுருவுகின்றன. மேகம் குவிந்தால் மழை பெய்யும் எனும் விதி மாறி மேகம் குவியாமல் மழை இல்லை, ஆனால் மழை பெய்வது வேறு விதிகளுக்குட்பட்ட ஒரு தற்செயல் நிகழ்ச்சியாகிவிடுகிறது.

மக்கள் திரளினர் - தலைவர்கள் எனும் வகைத்திணையை அடுத்து எடுத்துக்கொள்வோம். இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் தமிழகத்து அண்மைக் கால வரலாற்றையே எடுத்துக் கொள்வோம்.

காலங்காலமாகப் பார்ப்பனர்களாலும் பார்ப்பனியமாகிய வெள்ளாளக்கட்டினாலும் கொள்ளையடிப்பையே வாழ்வாகக் கொண்ட அரசுகளினாலும் ஒடுக்கப்பட்டுச் சாதிமுறை ஒடுக்கல், ஒதுக்கல், அறியாமை, தீண்டாமை, மூடநம்பிக்கைகள், வறுமை, நோய்நொடிகள், தூய்மையின்மை என்ற எண்ணற்ற விலங்குகளால் பிணைக்கப்பட்டு விலங்குநிலைக்குத் தள்ளப்பட்டிருந்த மக்களின் ஒரு சிறு பகுதியினர் உலக வரலாற்றுச் சூழலினால் இந்நாட்டைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் தங்கள் நலனுக்காக மேற்கொண்ட சில நடவடிக்கைகளால் சிறிது வெளிச்சத்தைக் கண்டனர். அவ்வெளிச்சத்தில் தாமும் தம் நாட்டு மக்களும் இருக்கும் நிலையையும் அவர்கள் எய்த வேண்டிய நிலையையும் அந்த நிலையை எய்தத் தடையாக இருக்கும் தடங்கல்களையும் தெளிவாகக் கண்டார்கள். எனவே அந்தத் தடைகளை உடைத்துக் குமுகத்தை முன்னோக்கிச் செலுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். எத்தனையோ தடுமாற்றங்கள், எதிர்ப்புகள், சூழ்நிலைத் தடைகள், சூழ்ச்சிகளைத் தாண்டி அந்த முயற்சி “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” என்றொரு வடிவத்தை அடைந்தது. இந்த இலக்கை அடைந்தவர்கள் அதற்காகத் தங்கள் உடல், பொருள், ஆவியைக் காணிக்கையாக்குவதற்குத் தயங்கவில்லை.

இந்த நிலையில் குமுக விதியொன்று இங்கு குறுக்கிட்டது. இந்தத் தலைவர்களுக்குப் பின்னின்ற பணக்கார வகுப்பு இந்த இயக்கம் மேலே செல்லுந்தோறும் தமது நலன்களுக்கு ஊறு நேரும், தம்மால் ஒடுக்கப்படும் வகுப்புகள் தலைநிமிரும் என்றுணர்ந்து விலகிக் கொண்டன. இது போன்ற வரலாற்று நிகழ்ச்சிகளை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம் .

இந்த நிலையில் இயக்கம் பெரியார் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. இயக்கத்தின் நோக்கும் போக்கும் குறுக்கப்பட்டன. இதற்கான காரணம் முன்னோரிடத்தில் ஆராயப்பட்டுள்ளது.

குமுகத்தின் புறநிலைக்கு அதன் அகநிலையான மக்களின் உளப்பாங்கும் இசைந்திருந்தது. ஆனால் அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் பெரியாரின் தலைமை இல்லை. இதைப் புரிந்துகொண்ட அண்ணாத்துரை அந்தக் குறையை ஈடு செய்யும் வகையில் பிரிந்து வந்து புதிய இயக்கத்தைக் தொடங்கினார். ஆனால் அவருடைய நோக்கம் எந்தக் கோணத்திலும் புரட்சிகரமாயிருக்கவில்லை. இருந்த குமுகச் சூழலைப் பயன்படுத்தி ஒரு முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றுவது தான் அவரது ஒரே குறிக்கோளாக இருந்தது. மோசே, முகம்மது நபி, கமால்பாட்சா, லெனின், மாசேதுங், கரிபால்டி, பிம்மார்க்கு, மாசினி, போலிவர், வாசிங்டன் போன்ற வரலாற்று நாயகர்களையும் விட உலகப்புகழ் பெறத்தக்க ஒரு மாபெரும் களம், தன்முன் இருப்பதைக் கண்டும் அதன் அகப்புறத் தன்மைகளைப் புரிந்திருந்தும் அதில் இறங்கி வெற்றி வாகை சூடத்தக்க ஆற்றலும் துடிப்பும் மிக்க ஒரு நாட்டின் இளைஞர் படை தன் பின்னால் ஆயத்தமாக அணிதிரண்டு நிற்பதை முற்றாக உணர்ந்திருந்தும் ஒரு சிற்றவாவாகிய பதவி ஆசையால் அவையனைத்தையும் உதறியெறிந்தார். தமிழகத்தின் பொருளியல் அடிமைத் தனத்ததை பணத்தோட்டம் மூலமும் பண்பாட்டு “இடைக்கால” நிலையை மாசிக் கடவுள்கள் மூலமும் குமுகியல் இழிவை ஆரிய மாயை மூலமும் அன்றாட அரசியல் பொருளியல் நிகழ்வுகளை திராவிட நாடு இதழில் வெளியான கட்டுரைத் திறனாய்வுகள் மூலமும் இன்னும் எத்தனையோ எழுத்தாக்கங்கள், கலைப்படைப்புகள் மூலமும் மேடை முழக்கங்கள் மூலமும் இளம் தலைமுறைக்கு எடுத்துரைத்து ஆற்றலும் அறிவுத் திறனும் தெளிவும் கொண்டு அனைவராலும் அறிஞர் என்று போற்றப்பட்ட அண்ணாத்துரை அவையனைத்தையும் கவைக்குதவாத ஒரு முதலமைச்சர் பதவிக்கு விலையாக்கிய கொடுமையும் அதன் மூலம் தமிழகத்தின் அரசியல், பொருளியல் குமுகியல், பண்பாட்டியல் வளர்ச்சி நின்று தேக்கநிலை ஏற்பட்டிருப்பதும் தற்செயல் நிகழ்ச்சியென்றுதான் வகைப்படுத்தப்படும்.

1962இல் அண்ணாத்துரை மற்றும் அவரது கும்பலின் ஏமாற்றை வெளியே எடுத்துரைத்த சம்பத்திடம் அந்தச் சூழ்நிலையை எதிர்கொண்டு வஞ்சிக்கப்பட்ட தமிழக மக்களை வழிநடத்தும் திறனோ தெளிவோ துணிவோ நேர்மையோ இருக்கவில்லை. தமிழகத்தின் எழுச்சி காலவரையறையின்றி தள்ளிப் போடப்பட்டது.
இவ்வாறு புறநிலைகளுக்கேற்ப மக்களின் சிந்தனையாகிய அகநிலை கனிந்திருந்த நிலையில் தலைமையென்றும் இயற்பாடு அமையாமையால் மக்களின் சிந்தனையில் வரட்சி வந்து விட்டது. தலைமையே திட்டமிட்டு அந்த அகநிலை வரட்சியைத் தூண்டி வளர்த்து வந்துள்ளது.

இன்னும் உரிய தலைமை உருவாகும் வரை இது தள்ளிப் போடப்படும்.

நெருக்கடியான புறநிலைகளில் தான் புரட்சிகரமான தலைமை உருவாக முடியும். அது உருவாகாமலும் போகலாம். ஆனால் நெருக்கடியான சூழல் தேவை. ஆனால் திறமையான தலைமையால் வாய்ப்பான புறச்சூழலைக் கூட உருவாக்க முடியும்.

எடுத்துக்காட்டாக சிதறிக் கிடந்த செருமனி தேசத்தை ஒன்றுபடுத்த வேண்டிய தேவை இருந்த காலத்தில் இளவரசர் பிம்மார்க்கு வந்தார். செருமன் மீது ஒரு புறத்தாக்குதல் நேர்ந்தால் அதனை உணர்வு ஒன்றிய ஒரு தேசமாக்கும் வாய்ப்பு உண்டு என்பதைக் கண்டார். அதற்கேற்றாற்போல் பிரான்சை ஆண்ட மூன்றாம் நெப்போலியன் தலைக்கனம் கொண்ட முட்டாளாக இருந்தான். ஒரு நிகழ்ச்சியில் அவனை இழிவுபடுத்தியதன் மூலம் அவனைப் பிம்மார்க்கு சீண்டிவிட்டார். அவன் செருமனி மீது படையெடுத்தான். அவனை ஒன்றுசேர்ந்து திரண்டு நின்று போரிட வேண்டிய கட்டாயத்துக்குச் செருமானியச் சிற்றரசர்கள் உள்ளானார்கள். அதனைப் பயன்படுத்தி ஒன்றுபட்ட இன்றைய செருமனியைப் பிம்மார்க்கு படைத்தார். இவ்வாறு தலைவர்கள் முற்றிக் கனியாமலிருக்கும் புறச்சூழ்நிலையை முற்றிக் கனியவும் வைப்பார்கள். இவ்வாறு மக்கள் திரளும் தலைமையும் ஒன்றோடொன்று இடைவினைப்பட்டு குமுக வளர்ச்சியை எய்துகின்றன. ஒன்றிருந்து ஒன்றில்லை என்றால் இரண்டாலும் பயனில்லை. தேக்கமடைந்த குமுகத்தில் புரட்சிகரத் தலைமை இயல்புள்ள மாந்தர்கள் வாழ்ந்தாலும் வெளித்தோன்றுவதே இல்லை. நெருக்கடியில் சிக்கிய குமுகம் தலைமையமையாமற் போனால் தேய்வடைகிறது.

இனி அகமை - புறமை என்ற வகைத்திணையைப் பார்ப்போம்.

மாற்றம், வளர்ச்சி எனப்படுபவை ஒரு பொருளின் அகத்தே நிகழும் நிகழ்ச்சிகளே. ஆனால் அவ்வளர்ச்சி புறத்தூண்டுதல்களும் புறவிளைவுகளும் இன்றி நிகழ முடியாது. அக முரண்பாடுகளே முதன்மையானவை என்று கூறுகிறவர்கள் கோழி முட்டையைச் சான்றாகக் காட்டுவர். கூழாங்கல்லைக் கோழி அடைகாத்தால் கோழிக் குஞ்சு வராது என்று வாதிடுவர். ஆனால் அடைகாத்தாலன்றி முட்டையிலிருந்தும் கோழிக் குஞ்சு உருவாகாது என்பதையும் கணக்கிலெடுக்க வேண்டும். அடைகாக்கும் கருவி வெப்பநிலையைச் சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆனால் கோழி அடைகாக்கும் போது அடிக்கடி வெப்பம் ஏறி இறங்கத் தக்க காலமழைக்கு முந்திய பருவங்கள் தகுந்தவையாயிருப்பதில்லை. இப்பருவங்களில் அடைக்கு வைத்தால் பெருமளவில் முட்டைகள் கூழ்முட்டைகளாகிவிடும்.

தமிழகத்தில் உள்ள சாதியக் கொடுமை அக முரண்பாடு; பம்பாயில் நடுவம் கொண்டிருந்த இந்தியத் தரகு முதலாளியம் தமிழகப் பொருளியல் மீது தொடுத்த நெருக்குதல் புற முரண்பாடு. அவை இரண்டையும் கையிலெடுத்துக் கொண்டு உருவானது திராவிட இயக்கத்தின் தொடக்க நிலையான தென்னிந்திய நல உரிமைச் சங்கம். இந்தியத் தரகு முதலாளிய நெருக்கலையும் சாதியக் கொடுமைகளையும் புற முரண்பாடுகளாகவும் திராவிட இயக்கத்தை அக முரண்பாடாகவும் எடுத்துக் கொண்டால் அக முரண்பாடாகிய கட்சியை ஆதரித்த பொருளியல் வகுப்புகள் இந்திய முதலாளியத்தை எதிர்த்து நிற்கமாட்டாமல் அதற்கு அடிபணிந்துவிட்ட நிலையில் இயக்கம் தானாகவே பொருளியலைப் பற்றிக் கவலைப்படாத பெரியாரின் கைகளுக்குச் சென்றுவிட்டது. இருப்பினும் பின்னால உருவாகிய பொருளியல் வகுப்புகள் உருவாக்கிய புறநிலைமைக்கு ஏற்ற அகநிலையைப் புதிதாகத் தோன்றிய தி.மு.க. ஏறபடுத்திக் கொடுத்தது. அதே நேரத்தில் காட்டிக் கொடுத்துவிட்ட தி.மு.க. தலைமை கனிந்திருந்த புற முரண்பாட்டைக் கொண்டு அக முரண்பாடுகளைத் தீர்க்கும் வாய்ப்பைப் பதவி வெறிக்குக் காவு கொடுத்து விட்டது. அத்துடன் தானே ஒரு தலைமையை உருவாக்கும் அளவுக்கு இங்குள்ள பொருளியல் வகுப்புகள் வலிமை பெறவில்லை. அத்துடன் புறத்தில் இந்திய அரசு மேற்கொண்ட அரசுடைமைப் பொருளியல் எனப்படும் நேரடியான பொருளியல் நடவடிக்கைகள் சிக்கலைத் திசைதிருப்பி விட்டன. அத்துடன் நிலைமையை உணர்ந்து முரண்பாடுகளை முற்றவைத்துத் தீர்வுகண்டு வளர்ச்சி நோக்கி வழிநடத்தும் புதிய தலைமை உருவாகவில்லை. இன்னொரு புறம் ஒட்டுண்ணி வகுப்புகளான அரசூழியர் - ஆசிரியர்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பனியா – வல்லரசியத் தரகர்களான பொதுமைக் கட்சிகள், அதிலும் சீனம் – அமெரிக்க கூட்டணியால் உருவாக்கப்பட்ட இடங்கைப் பொதுமைக் கட்சியும் எண்ணற்ற மார்க்கிச – லெனினியக் குழுக்களும் தேசியத்துக்கும் பனியாக்கள் தவிர்த்த இந்தியாவின் பல்வேறு தேசிய மக்களின் தொழில்முனைவுகளுக்கும் எதிராக உருவாக்கி வைத்திருக்கும் அகநிலை ஆகியவற்றால் தமிழகத்துக்கு வெளியிலிருந்து வரும் புற முரண்பாடுகள் முற்றிக் கொண்டேயிருக்கின்றன ஆனால் உள்ளிருந்து வெளிப்பட்டு அதனை எதிர்க்கும் விசைகள் தோன்ற முடியாத நிலை. இந்தியாவுக்கு உள்ளும் புறமுமிருந்து எண்ணற்ற விசைகள் சாதி, சமயம், பொருளியல், மாந்தனியம், சுற்றுச்சூழல் என்ற பெயர்களில் மக்களிடையில் பிளவுகளையும் குழப்பத்தையும் மோதல்களையும் உருவாக்கி அதை நிலைப்படுத்திவிட்டதாலும் மக்களின் சிந்தனையாகிய அகநிலை வளர்ச்சியடையவில்லை. இந்தச் சூழ்நிலையில் அக முரண்பாடுகளிலிருந்து மக்களின் சிந்தனையைத் திருப்பி ஒருமுகபடுத்தும் வகையில் புற முரண்பாட்டைக் கையிலெடுத்து அதன் மூலம் அக முரண்பாட்டுக்குத் தீர்வுகண்டு புற முரண்பாடுகளில் வெற்றி பெறுவது இன்றைய தேவையாகும்.

இவ்வாறு இயற்கை, குமுகம், மனிதச் சிந்தனை என்ற அனைத்திலுள்ள ஒவ்வொரு நிகழ்ச்சியையும் இயங்கியல் விதிகளையும் வகைத்திணைகளையும் கொண்டு விளக்க முடியும்.

இயங்கியல் பருப்பொருளியத்தை முடிக்கும் முன் இன்னும் சில முகாமையான இயங்கியல் தன்மைகளைப் பற்றித் தனியாகக் கூற வேண்டியுள்ளது, ஏனென்றால் இவற்றில் தெளிவில்லாத போது இயங்கியல் ஆய்வு அதன் எதிர்நிலையில் போய் நின்றுவிடும் வாய்ப்பு எப்போதும் உண்டு.

1. காலமும் இடமும்.
பருப்பொருள் என்பது எங்கே இருக்கிறது? அதன் இருப்பின் தன்மைகள் யாவை?

இக்கேள்விகளுக்குக் காலமும் இடமும் விடையாகிறது. பருப்பொருள் என்பது மாறத்தக்கது, இயங்கத்தக்கது. அந்த மாற்றம் காலத்தில் நடைபெறுகிறது. இடம்தான் அதன் அளவுகோல், அந்த காலம் என்னும் எல்லையில் அது நடைபெறுகிறது. மாற்றத்தின் அளவுகோல் காலமும் இடமும் என்பது போல் காலம், இடம் என்பவற்றின் அளவுகோலும் மாற்றமே. இவ்வாறு பருப்பொருளின்றி, அதாவது அதன் இயக்கமாகிய மாற்றம் என்பது இன்றி காலமும் இடமும் இல்லை, காலமும் இடமும் இன்றி பருப்பொருள் இல்லை.

காலமும் இடமும் முதற்பொருள் என்பது தொல்காப்பியம், இது உலகம் எனும் குறுகிய எல்லையைப் பற்றிய கூற்றாகக் கூறப்பட்டாலும் உண்மையில் பரந்துபட்ட ஒரு மெய்யியலின் வெளிப்பாடேயாகும். அதைப் போல் எந்த ஒரு நிகழ்வையும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் போது அது நிகழ்ந்த காலம், இடம் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரிடத்தில் ஒரு காலத்தில் நடந்தவற்றை அல்லது கையாளப்பட்டவற்றை இன்னொரிடத்தில் இன்னொரு காலத்தில் நடப்பவற்றோடு அல்லது கையாளப்பட்டவற்றோடு ஒப்பிட முனையும் போது காலம் இடம் என்ற இந்த இரண்டு இயங்கியல் அடிப்படைகள் எனும் துலாக்கோலில் வைத்து எடைபோட்டுப் பார்க்க வேண்டும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பாவில் நிலவிய சூழ்நிலையிலிருந்து உருவான பொதுமைக் கட்சியின் செயல் திட்டங்களை இருபதாம் நூற்றாண்டிறுதியில் இந்தியாவெனும் இன்னோரிடத்தில் கையாளத் தொடங்கும் முன் இந்த கால, இட மாற்றங்களை நன்கு சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த ஒதுக்கீடு பற்றிய முழக்கம் அந்நூற்றாண்டின் இறுதியில் அதே வலிமையைப் பெற்றிருக்கும் என்று நம்புவது காலம் இடம் பற்றிய தெளிவின்மையின் விளைவு தான்.

2.பருப்பொருளும் மனமும்.
பருப்பொருளுக்கும் மனத்துக்ககும் உள்ள உறவு யாது? மனம் என்றால் என்ன?

மனம் என்பதைக் தன்னுணர்வென்று கூறுவோம். தன்னுணர்வென்பது என்ன? தன்னுணர்வென்பது தன்னைத் தனியே நிறுத்திவைத்து தானே பார்க்கும் உள்ளத்தின் ஆற்றலாம். இந்த ஆற்றல் இயற்கையில் மனிதனிடமே முழுமை பெற்றுள்ளது. உயிரற்ற பொருட்களில் கூட ஏதோவோர் வடிவிலான உணர்வு இருக்கிறது. அவை ஏதோவொரு வகையில் வெளித்தூண்டலுக்கு எதிர்வினை தருகின்றன. ஆனால் அதனைத் தன்னுணர்வென்று கூற முடியாது. உயிர்வகைகளில் அந்த எதிர்வினையின் தன்மை மாறுபடுகிறது. அந்த எதிர்வினை உயிரற்ற பொருட்களைப் போல் எளிமையாக அன்றி சிக்கலுடையதாயிருக்கிறது.

உயிர்கள் திரிவாக்கம் பெறப்பெற அவற்றின் உணர்வுகள் மேன்மேலும் சிக்கலடைகின்றன. அவை வெறும் எதிர்வினைகள் என்ற நிலையிலிருந்து மேம்பட்டு தாமே திட்டமிட்டு நடத்தும் செயல்கள் உருவாகின்றன. ஆனால் அவை பகுத்தறிந்து செயற்படாமல் மரபூக்கத்தால் அல்லது உள்ளுணர்வால் நிகழ்கின்றன. உள்ளுணர்வை மீறி நிகழ்த்திய செயல்கள் சிறுகச் சிறுக திரிவாக்கத்துக்கு இட்டுச்சென்றன. திட்டமிட்டு நிகழ்த்தும் செயல்களும் எளிமையானவற்றிலிருந்து சிக்கலானவற்றுக்கு மேம்பட்டன. இவ்வாறு உணர்வுகளின் அளவு சிறிது சிறிதாகப் பெருகி ஒரு இயல்பு மாற்றம் நிகழ்ந்தது. அந்த இயல்பு மாற்றம்தான் மனிதச் சிந்தனை.

நாம் மேலே கூறிய உணர்வு வளர்ச்சிகள் தாமே தனித்து நிகழ்ந்தவையல்ல. உயிர்மப் பொருட்கள் தம் உயிரைப் பாதுகாக்கவும் இனப்பெருக்கத்துக்காகவும் தம்மைச் சூழ்ந்துள்ள இயற்கையுடன் இடைவினைப்பட்டதன் விளைவாகத் தாமும் மாறி அதே நிகழ்முறையில் தம்மைச் சூழ்ந்திருந்த இயற்கையையும் மாற்றின. அதே போல் மனிதனும் தானும் மாறித் தன்னைச் சுற்றியுள்ள உலகையும் மாற்றுகிறான். ஆனால் அது கீழ்நிலை உயிரிகளைப் போல் மரபூக்கத்தால் மட்டும் நிகழ்வதில்லை. மனிதன் சுற்றுச்சூழலிலிருந்து விலகியும் ஒட்டியும் தன்னுணர்வோடு திட்டமிட்டுச் செயற்பட்டு இதை நிகழ்த்துகிறான். இங்கு செயலிலும் சிந்தனையிலும் பல படிகளுண்டு.

மனிதனின் திரிவாக்கம் அவனுடைய உடலில் அவனே செய்து கொண்ட மாற்றத்திலிருந்து தோன்றுகிறது. முன்னங்கால்களிரண்டையும் கைகளாக்கியது அவனது செய்பாங்கினை விரிவுபடுத்தியது. கை நுணுக்கமடைந்த போது மூளையும் நுண்மையும் வளர்ச்சியும் பெற்றது.

இவ்வளர்ச்சியைப் பெற்ற போது அவன் இயற்கையிலிருந்த அதன் தன்மைகளைத் தன் சிந்தனையில் இறுத்தெடுக்கக் கற்றுக்கொண்டான். முப்பரிமாணங்களாக உள்ள இயற்கைப் பொருளிலிருந்து நீளம், அகலம், தடிமன் என்பவற்றையும் பொருட்களின் தொடர்பிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட எண்களையும் மரம், மலை என்பன போன்ற கருத்துக்களையும் உருவாக்கிக் கொண்டான். இவற்றை அருவப்பாடுகளென்றும் இறுப்புகள் என்றும் கூறலாம். இவ்வாறு இயற்கையிலிருந்தும் பருப்பொருட்களிலிருந்தும் பிரிக்கப்பட்ட இறுப்புகளை ஒன்றோடொன்று இணைத்தும் பிணைத்தும் புதியவற்றைப் படைப்பதற்கான அருவங்களை உருவாக்கி அவற்றைப் பருப்பொருட்கள் மீது கையாண்டு இயற்கையில் மாற்றங்களைப் படைத்தான். இந்தச் செயல்முறையிலேயே இந்த இறுப்புகளிலிருந்து மொழியும் உருவாகியது. அது மனிதனை வளர்த்ததோடு மனிதனோடு தானும் வளர்ந்தது, அவனது சிந்தனையையும் வளர்த்தது.

மனம் என்பது பருப்பொருளின் படைப்பு, பருப்பொருளிலிருந்து தோன்றியது. இன்னொரு வகையில் கூறுவதாயின் தன்னை உணர்ந்து கொள்ளும் வகையில் ஒருங்கமைப்புற்ற பருப்பெருளின் ஆற்றலே மனம். இங்கு மனம் என்பது மனத்தின் நிலைக்களான உயிருள்ள மனித உடல் என்னும் பருப்பொருளையும் உள்ளடக்கும். மனத்தின் இருப்பிடம் உடலாயினும் அதன் கருவறை மூளையேயாகும். அதன் வழியேதான் அது தனக்கு வேண்டிய புலனங்களை இயற்கையிலிருந்து இனம் பிரித்துப் பெறுகிறது. இவ்வாறு இயற்கையிலிருந்து பெறப்பட்ட புலனங்களிலிருந்து இறுப்புகளை எய்தி அவற்றை இணைத்து புதிய வடிவங்களையும் திட்டங்களையும் மனத்தில் சாயல்களாக உருவாக்குகிறது. அவற்றைப் பின்னால் பருப்பொருளில் கையாண்டு இயற்கையில் மாற்றத்ததை ஏற்படுத்துகிறது. இவ்வாறு இயற்கையும் அதாவது பருப்பொருளும் மனமும் ஒன்றன் மீதொன்று செயற்படுகின்னறன. இங்கே பருப்பொருள் முந்தியதா, மனம் முந்தியதா என்ற கேள்வி பயனற்றுப் போகிறது.

ஆனால் ஒன்றைத் தெளிவுபடுத்தியாக வேண்டும். பருப்பொருளும் மனமும் என்ற இந்த இயங்கியல் வகைத்திணை நன்கு சிந்திக்கும் மனதைக் கொண்ட மனிதனின் தோற்றத்துக்குப் பின்னர்தான் கையாளத்தக்கதேயன்றி அதற்கு முந்திய காலகட்டங்களுக்குப் பொருந்தி வராது. இதைக் கவனத்தில் கொள்ளாமல் அலசத் தொடங்கும் போது குழப்பங்களும் தடுமாற்றங்களும்தாம் மிஞ்சும். இந்த எச்சரிக்கையை மார்க்சு, ஏங்கல்சு, லெனின், மாசேதுங் என்ற யாரும் நானறிந்த வரை விடுக்கவில்லை. இந்த எல்லை வரையறை இல்லையானால் இயங்கியல் பருப்பொருளியம் இயல்பாகவே எகலின் இயங்கியல் நுண்பொருளியத்துக்கு இட்டுச் சென்றுவிடும்.

பருப்பொருள் என்பதற்கு லெனின் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். நம் மனம் அறிந்தாலும் அறியாவிட்டாலும் அதற்குப் புறத்தே மெய்யாக இருக்கும் அனைத்துமே பருப்பொருளாகும். அப்பருப்பொருளை எதிரொளிக்கும் மனிதனான எழுவாயின் மனமே உண்மையான நுண்பொருள். இந்த அடிப்படையில் பார்த்தால் எழுவாயாகிய மனிதனின் சிந்தனையைத் தவிர பிற மனிதர்களின் சிந்தனைகளும் எழுவாயின் மனத்துக்கு வெளியே அம்மனம் அதனை உணர்ந்து கொண்டாலும் இல்லையானாலும் நிலவுகின்ற பருப்பொருட்களாகும். இதனை “மனதுக்கும் பருப்பொருளுக்கும் இடையிலான வேறுபாடு மறைகிறது” என்று அவர் கூறுகிறார்.

3. கோட்பாடும் நடைமுறையும்.
கோட்பாடுகள் என்பவை உலகம், குமுகம் மனிதச் சிந்தனை ஆகியவை பற்றி மனிதச் சிந்தனை மேற்கொள்ளும் தெளிவாக முடிவுகளை வெளிப்படுத்துபவை. இந்தக் கோட்பாடுகள் நாம் மேலே குறிப்பிட்டவாறு இயற்கையிலிருந்து இறுப்பின் மூலம் பிரித்தெடுக்கப்பட்ட “தூய” நிலைகளை இணைத்தும் பிணைத்தும் மனதில் உருவாக்கப்பட்ட படிமங்களின் தொகுப்புகளாகும்.

இவ்வாறு தூய்மை நிலையிலிருக்கும் கோட்பாட்டை நடைமுறையில் கையாளும் போது கோட்பாட்டுக்கும் நடைமுறைக்கும் முரண்பாடுகள் தோன்றுகின்றன. அறிவியலில் இந்த முரண்பாடுகளுக்கு நடைமுறையில் புதிதான கோட்பாடுகளுக்கு வழி வகுத்துத் தீர்வு காணப்படுகின்றன. அதே நேரத்தில் குமுகத்தைப் பொறுத்த வரை இயற்கையைப் போலன்றி குமுகக் கருப்பொருளான மனிதன் தானே சிந்தித்துச் செயற்படும் ஆற்றலுள்ளவன். சூழ்நிலைகளத் தனக்கிசைவாக மாற்றும் வல்லமை உள்ளவன். எனவே கோட்பாடுகளுக்கும் நடைமுறைக்கும் உள்ள முரண்பாடுகள் பதிது புதிதாகத் தோன்றிக் கொண்டிருக்கின்றன. அதனால் கோட்பாடுகள் இடைவிடாமல் புதுப்பிக்கப்பட்டும் நடைமுறையில் அவை மீண்டும் மீண்டும் கையாளப்பட்டு மேம்படுத்தப்பட்டும் கொண்டிருப்பது தேவையாகிறது.

மார்க்சியத்தைப் பொறுத்தவரையில் வகுப்புப் போராட்டத்தை எடுத்துக்கொள்வோம். பாட்டாளியர் என்ற கருத்துரு குமுக மெய்ம்மையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு இறுப்பேயாகும். பாட்டாளி வகுப்பு என்பது உழைப்பு எனும் பண்டமாற்றுச் செய்யத்தக்க ஒரு பண்டத்தைத் தவிர வேறெதனையும் உடைமையாகக் கொள்ளாத வகுப்பு என்னும் வரையரை உண்மையில் ஓர் அருவமே. அத்துடன் அது புரட்சிகரமானது என்பதும் ஓர் அருவமே. உண்மையில் பாட்டாளி வகுப்பின் கருப்பொருளும் சிந்திக்கும் திறனுள்ள மனிதனே. எனவே உயிரில்லாத திடப்பொருட்களைப் போல் அவனது இயல்புகள் அமைந்துவிட முடியாது. தனியாக இருக்கும் போது என்றும் குழுவாக இருக்ககும் போது என்றும் மாறத்தக்க இயல்புகள் மனிதனுக்கு உண்டு. அத்துடன் வகுப்புக் கோட்பாடு கூறுவது போல் மக்கள் பாட்டாளிகள் என்றும் முதலாளிகளென்றும் இருவேறு வகுப்புகளாக மட்டும் பிரிந்து நிற்பதில்லை. இடைப்பட்ட வகுப்புகள் எத்தனையோ உண்டு. மூளை உழைப்புக்கும் உடலுழைப்புக்கும் உள்ள எல்லைக்கோடு எது என்று நிறுவுவதும் கடினம். உழைப்பும் கூலியும் என்று வரும் போது கூலி மதிப்புக்கும் பணமாகிய நாணய மதிப்புக்கும் உள்ள முரண்பாடு உண்மை நிலையை மறைக்கிறது. இதில் மீத்த மதிப்பு பற்றி மதிப்பிடுவதில் குழப்பம் ஏற்படுகிறது. உண்மையான மதிப்பின் ஒரு விகிதத்தில் கூலி வழங்கப்படுகிறது என்ற மனக்கோளை மார்க்சு எடுத்துக்கொண்டார். ஆனால் கையாளலின் போது இந்த மனக்கோள் நடைமுறையில் என்ன மாற்றத்துக்கு உள்ளாகிறது, அதைச் சரி செய்ய கோட்பாட்டில் என்ன மாற்றம் தேவை என்பது கண்கிடப்பட பணத்துக்கும் பண்ட மதிப்பிற்கும் உள்ள முரண்பாடு ஏற்படுத்துகிற பாதிப்பும் கருதப்பட வேண்டும். இது போன்று குமுகம், வகுப்புக் கோட்பாடு இவற்றைப் பற்றிய ஆய்வில் கோட்பாடும் நடைமுறையும் ஒன்றையொன்று ஊடுருவுகின்றன.

4. இயங்கியலைப் புரிந்து கொள்ளும் முறை.
இயங்கியலுக்கு எடுத்துக்காட்டுகளாக மின்சாரத்திலுள்ள இருமுனைகளையும் காந்தத்திலுள்ள இருமுனைகளையும் பொதுவாகக் காட்டுவர். இருப்பினும் இவை இயங்கியலின் தன்மையைத் தெளிவாக வெளிப்படுத்த மாட்டா. இயங்கியலைத் தெளிவாகப் புரிந்துகொள்ளத் தக்க ஓர் எடுத்துக்காட்டாக மனிதன் நடப்பதைக் கூறலாம். இங்கு நடத்தல் என்ற இயற்பாட்டுக்கு வலம், இடம் என்ற இரு கால்களும் சேர்ந்து இயங்க வேண்டும். ஒரு கால் முன்னோக்கி நகரும் போது அடுத்த கால் தான் முன்னோக்கி நகர்வதற்கான ஆயத்த அசைவுகளில் ஈடுபடுகிறது. முதல் கால் தன் இயல்பான எல்லையை அடைந்ததும் அடுத்த கால் முன்னோக்கிய நகர்வைத் தொடங்குகிறது. முன்பு இரண்டாம் கால் செய்த ஆயத்த வேலைகளில் இப்போது முதற்கால் ஈடுபடுகிறது. இவ்வாறு இரு கால்களும் மாறி மாறிப் பணிகளை ஏற்றுக்கொண்டு உடம்பை முன்னோக்கி நகர்த்துகின்னறன. இவற்றில் எது தலைமைதாங்குகிகறது, எது தொடர்கிறது என்ற கேள்விக்கே இடமில்லை. அது போல் முதல் தப்படியை எந்தக் கால் எடுத்து வைத்து நடையைத் தொடங்குகியது என்பதுவும் முகாமை இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் இடத்திலும் எந்தக் கால் நகர்விலும் எந்தக் கால் ஆயத்தப்பாட்டு நிலையிலும் இருந்தது அல்லது இருக்கிறது என்பதையும் வேண்டுமானால் சொல்லவிடலாம். அதே போல் இரண்டு கால்களும் ஒரே நேரத்தில் நடத்தல் என்ற செயலைச் செய்ய முடியாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து, நடக்கும் போது கால் முதலில் முன்னோக்கி நகர்ந்ததா அல்லது உடல் முன்னோக்கி நகர்ந்ததா என்ற கேள்வியும் இயங்கியலாக ஆய வேண்டியதே. நடந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனைப் பார்த்து உடல் காலை நடத்துகிறதா அல்லது கால் உடலை நகர்த்துகிறதா என்பதை அறிய இயலாது. ஒன்று இன்னொன்றை மாறி மாறி நடத்துவதுதான் தெரியும். ஆனால் அந்த மனிதன் நடக்கத் தொடங்கும் போது எது முதலில் நகர்ந்தது என்பதைப் பிரித்தறிய முடியும். வெளியிலிருந்து ஒரு வெளிப்படையான தூண்டல், ஓர் இடரிலிருந்து தப்பவோ இன்றியமையாத ஒன்றை எய்தவோ நடக்க அல்லது ஒடத் தேவைப்படும் போது உடல் தன்னையறியாமலே முன் நகர்ந்து கால் தன்னைத் தொடர வைக்கிறது. அதே வேளையில் அந்தத் தூண்டல் வெளிப்படையாகவன்றி மறைமுகமாக, பகுத்தாய்வின் மூலம் வெளிப்படுவதாயிருந்தால் காலை முன் நகர்த்தியே அந்த நடை தொடங்கும் என்று ஓரளவு பொதுப்படையாகக் கூறலாம். அது போல் குமுகத்திலும் வெளி முரண்பாடு வெளிப்படையாக இருந்தால் மக்கள்திரள் தலைமையை உருவாக்கும். அதில் அது தோற்றால் அழிந்து அல்லது சிதைந்து போகும். மாறாக வெளி முரண்பாடு வெளிப்படையாகவன்றி மறைமுகமாக வந்தால் அதைத் தகர்க்கும் வகையில் மக்களை ஆயத்தப்படுத்தத்தக்க தலைமை தோன்ற வேண்டும். அப்படித் தலைமை தோன்னறவில்லையாயின் அக்குமுகம் அழியும் அல்லது சிதையும். முன்னதற்கு ஈழத்தையும் பின்னதற்குத் தமிழகத்தையும் நடைமுறையில் கூறலாம்.

இனி மனிதச் சிந்தனை பற்றி மார்க்சியம் என்ன கூறுகிறதென்று பார்ப்போம். மனிதன் என்பவன் இயற்கையாகிய பருப்பொருளிலிருந்து தோன்றியவன். இயற்கையில் உயிரற்ற பொருட்களிலிருந்து உண்டான உயிருள்ள பொருள் அதே இயற்கையோடு வினையாற்றுவதன் மூலம் அந்த இயற்கையினையும் மாற்றி அதனால் தானும் மாறி ஒன்று மாற்றி ஒன்றாக வளர்ந்தவன். அதன் மூலம் தன்னையும் தன்னைப் படைத்துத் தன்னால் மாற்றம் பெற்ற இயற்கையையும் உணர்ந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவன்.
ஒரு விந்தையான செய்தி என்னவென்றால் தொடக்கத்தில் புவி மீது புறவூதாக் கதிர்கள் கதிரவனிடமிருந்து புறப்பட்டுத் தடையின்றி வந்து சேர்ந்து கொண்டிருந்ததாம். அந்தப் புறவூதாக் கதிர்களின் வினைப்பாட்டால்தான் உயிர்ப் பொருளே புவியில் தோன்றியதாம். அந்த உயிர்ப் பொருட்கள் வெளியிட்ட ஓசோன் என்னும் வளிதான் புவியைச் சுற்றி ஒரு படலத்தை அமைத்து அப்புறவூதாக் கதிர்கள் புவியை அடையாமல் தடுத்ததாம். அவ்வாறு புறவூதாக் கதிர்கள் தடுக்கப்பட்டதால்தான் புறவூதாக் கதிர்களால் புவியில் உருவாக்கப்பட்ட உயிர்ப்பொருள் அழியாமல் நிலைத்தது மட்டுமல்ல மேம்பட்டு வளரவும் முடிந்தது. இன்று உயிர்ப்பொருளின் மிக உயர்ந்த வடிவமான மனிதன் தன் மிக வளர்ச்சியடைந்த சிந்தனையால் உருவாக்கிய சுற்றுந்சூழல் மாற்றங்களினால் சிந்தனை என்ற சுவடே தோன்றாத முதல் உயிர்ப்பொருள் தன்னையறியாமலேயே தனக்கு ஏற்படுத்திக் கொண்ட அந்தப் பாதுகாப்புப் படலத்தில் ஓட்டை செய்துவிட்டிருக்கிறான். உருவாக்கி விட்ட ஓட்டை பெரிதாகாமலிருக்க என்ன செய்வதென்று திகைத்து நிற்கிறான். ஒன்று அதற்கெதிராவது என்னும் இயங்கியல் விதிக்கு வேறு சான்றே தேவை இல்லை.

இவ்வாறு தானும் மாறி உலகத்தையும் மாற்றும் மனிதனால் இயற்கையையும் அதன் விதிகளையும் முழுமையாக அறிந்துகொள்ள முடியுமா என்பது ஒரு அடிப்படை மெய்யியல் வினா. இதற்கு வெவ்வேறு மெய்யியல் பள்ளிகள் வெவ்வேறு விடைகளைத் தருகின்றன.

நுண்பொருளியம் உலகில் உண்மை என்ற ஒன்று சிந்தனைகளுக்குப் புறத்தே இல்லை, நாம் அறியும் யாவும் புலன்கள் நமக்குக் காட்டுவனவேயன்றி உண்மையல்ல. எனவே புலன்களால் உண்மையை அறிய முடியாது என்கிறது.

அறியொணாமையியம் எனும் ஒரு மெய்யியல் பள்ளி மனத்துக்குப் புறத்தே பருப்பொருள் உள்ளமையை ஏற்றுக் கொள்கிறது. அதைப் பற்றி மனிதன் அறியும் வாயில் புலன்களே. அந்தப் புலன்கள் நமக்குக் காட்டும் பருப்பொருளான உலகம் அவ்வுலகத்தின் உண்மையான வடிவம்தானா என்பதைக் கண்டுகொள்வதற்கு வழியெதுவுமில்லை. எனவே மனிதனால் உண்மையை அறிய முடியாது என்கிறது.

கொச்சைப் பருப்பொருளியம் என்பது புலனறிவால் பெறப்படும் தோற்றமே உலகம், அவ்வாறு புலப்படும் உலகமே அன்றி அதற்குள் புலனறிவுக்கு அப்பாற்பட்ட சாரம் என்ற ஒன்று கிடையாது என்கிறது அது. நெருப்பின்றிப் புகையாது, எனவே புகை தெரிந்தாலே அங்கு நெருப்பு இருப்பதாக முடிவு செய்யலாம் என்பதை அது ஏற்றுக் கொள்ளாது. புகை தெரிந்தால் அது புகை இருப்பதற்குத்தான் சான்றே அன்றி நெருப்பிருப்பதற்கு சான்றாகாது. இக்கோட்பாட்டாளரைப் பூதவாதிகள் என்பது நம் நாட்டு மரபு. மணிமேகலைக் காப்பியத்தில் பூதவாதியைச் சந்தித்த மணிமேகலை “உனக்குத் தாய் உண்டா?” என்று வினவுவாள் “ஆம்” என்பான். “அவள் உன்னைப் பெற்றதை நீ பார்த்தாயா?” என்பாள். அவன் விடையிறுக்க முடியாமல் விழிப்பான். தாய் தந்தையற்றவன் என்று கேலி செய்து அகல்வாள் மணிமேகலை.

ஆங்கிலத்தில் Empricism எனப்படும் பட்டறிவியம்தான் இது. அறிவதற்கு அடிப்படைக் கருவி நம் புலன்கள் தாம். ஆனால் வெறும் புலனறிவு மட்டும் பருப்பொருளின் மெய் இயல்புகளை நமக்கு வெளிப்படுத்திவிடா. உய்த்துணர்வும் அதைவிடவும் முகாமையாக அப்பருப்பொருட்களோடு அறிவறிந்த வினைப்பாடாகிய நடவடிக்கைகளாலும் நாம் பருப்பொருளின் உண்மையியல்பை உணர்ந்து கொள்ள முடியும். புலனறிவு, பகுத்தறிவு, நடவடிக்கை, உய்த்துணர்வு என்ற வகையில் இந்த நிகழ்முறை அமைகிறது.

இயங்கியல் பருப்பொருளியத்தின் அறிவுக் கோட்பாடு மிக உயர்வானது. அதுதான் இன்றைய அறிவியல் உலகில ஆதிக்கம் செலுத்தும் அறிவுக் கோட்பாடாகும். மனித மூளை முகம் பார்க்கும் கண்ணாடி போன்றது. அதில் புலன்கள் மூலம்தான் வெளியுலகு எதிரொளிக்கிறது. ஆனால் அந்த எதிரொளிப்பு முழுமையானதல்ல, தூய்மையானதல்ல, ஆடியின் தன்மைகளுக்கேற்ப மாற்றம் பெற்றதாகவே அந்தச் சாயல் நமக்குக் கிடைக்கிறது. இவ்வாறு கிடைக்கும் சாயலைக் கொண்டு அப்பருப்பொருளோடு நாம் வினை புரிந்தால் நாம் அப்பருப்பொருளின் உண்மையான இயல்பை அறிந்து கொள்ள முடியும். இங்கு பருப்பொருள் பற்றிய புலனறிவும் அப்பருப்பொருளோடு எழுவாயான மனிதனின் வினைப்பாடும் இயங்கியல் எதிரிணைகளாக ஒன்று மற்றொன்றாக, ஒன்று மற்றொன்றோடு இணங்கியும் பிணங்கியும் செயற்படுகின்றன.
இலக்கியத்தைக் காலக் கண்ணாடி என்கிறோம். இலக்கியப் படைப்பாளியின் மனதில் அவன் வாழும் உலகம் எத்தகைய எதிரொளிப்பை ஏற்படுத்துகிறதோ அந்தச் சாயல் இலக்கியத்தில் பதிவாகிறது, படைப்பாளியின் மனதாகிய அந்தக் கண்ணாடியின் தன்மையைப் புரிந்து கொண்டால் அவன் வாழ்ந்த காலத்தின் உண்மையான வடிவை நாம் காண முடியும்.

இந்தக் கருத்து சிலப்பதிகாரம் ஆசிரியர் வாயால் வருவதை இந்நூலில் அறிமுகம் பகுதியியல் நாம் ஏற்கனவே மேற்காட்டியுள்ளோம்.

புத்தரும் இயங்கியல் பருப்பொருளியக் கோட்பாட்டுக்கு மிக நெருக்கமான ஒரு கோட்பாட்டையே எடுத்துரைக்கிறார்.

உலகம் மாயை அதாவது மாயத்தக்கது.

இதன் பொருள், உலகிலுள்ளவை தோற்றம், வளர்ச்சி, அழிவு என்ற வளர்ச்சி அல்லது மாற்றத்துக்கு உட்படுபவை என்பதாகும். மாயை என்ற சொல்லை பொய்த் தோற்றம் என்று பொருள் கூறினர் பலர். (மாய்தல் என்ற தமிழ்ச் சொல் மாயை என்ற இச்சொல்லுக்கு அடித்தளமாயிருப்பதைக் காண்க)

வினை விளைவுக் கோட்பாடு முன் பிறவிகளில் செய்தவற்றின் விளைவுகளைப் பின் வரும் பிறவிகள் நுகர வேண்டும் என்பது. இவற்றை முழுக் குமுகத்துக்குமாக எடுத்துக்கொண்டால் பிறவிகள் எனப்படுபவை தலைமுறைகளாகும். தனிமனிதருக்குக் கையாளும் போது மறுபிறவிக் கோட்பாடு நுழைந்து விடுகிறது.

உலகு மாற்றத்துக்கு உட்படுவது, ஒவ்வொரு வினைக்கும் ஒரு விளைவு உண்டு. எனவே விளைகளைப் புரியும் போது அவற்றின் தன்மைகளை அறிந்து செய்ய வேண்டும். இதுவே உண்மையை அறிதல் என்பது. இது தானே அறிவுக் கோட்பாட்டில் கொண்டு போய் விடுகிறது.

புத்தரின் அறிவுக் கோட்பாடு ஐம்புலன்கள், ஐம்பொறிகள், ஐம்பூதங்கள், ஐந்தறிவுகள் மனம் ஆகியவற்றைக் கொண்டது, மும்மலங்கள் உண்மையான அறிவைத் தடுக்கின்றன. மும்மலங்கள் ஆவன விருப்பு, வெறுப்பு, அறிதற் கோளாறுகளாகிய ஐயம், திரிபு, மயக்கம் எதும் மூன்றுமாகும்.

இவ்வாறு ஏற்படும் தவறுகளை இன்றைய அறிதல் கோட்பாட்டில் எழுவாய் அல்லது கருத்தாவின் குற்றங்கள் என்பர். இக்குற்றங்களைக் களைவதற்கு ஒரே வழி நம் புலன் அறிவிலிருந்து பெறப்பட்டு மனதில் அலசப்பட்டு காணப்பட்ட முடிவுகளை நடைமுறையில், ஆய்வகங்களிலோ, நேரடி வாழ்க்கையிலோ கையாண்டு சரிபார்த்துத் தேவையான முடிவுகளை எடுத்துக் கொள்வதேயாகும்.

புத்தர் இவ்வாறு தெளிவுறக் கூறவில்லையாயினும் வினைகளைத் தெரிந்து தெளிந்து ஆற்றுவதற்கே உண்மையைப் பற்றிய அறிவு தேவை என்பதைக் குறிப்பிடுவதால் நடவடிக்கைகள் இன்னொரு கோணத்தில் உள்வருகிறது. உண்மையை அறிவதற்கு நடவடிக்கை என்பதும் நடவடிக்கைகாக உண்மையைக் காண்பது என்பதும் ஒன்று மற்றொன்றாக மாறுவதேயாகும்.

“இங்கே நமக்கு வேண்டியது வெறுமனே மெய்ம்மையைத் தெரிந்து கொள்வது அல்ல, அதை மாற்றுவதேயாகும்.” இது மார்க்சின் சிறப்பான கூற்றுகளில் முகாமையானதாகும். இதிலிருந்து புத்தத்தைப் பார்ததால் இருகோட்பாடுகளும் மிக நெருங்கி வருவதைக் காணலாம்.

புத்தத்தின் இந்தக் கோட்பாடு எவ்வாறு கொச்சைப் படுத்தப்பட்டுள்ளது என்பதை நாம் எளிதாகக் கண்டு கொள்ளலாம். மாற்றம் என்பதை அளவிறந்து நீட்டிச் சென்றால் அது உலகமே வெறும் பொய்த்தோற்றம் என்ற மாயக் கோட்பாட்டுக்ககு இட்டுச் செல்லும். குமுகத்துக்குரியதைத் தனி மனிதனுக்குச் கையாண்டால் வினைவிளைவுக் கோட்பாடெனும் சிறந்த அறிவியல் கோட்பாடு மறுபிறவிக் கோட்பாட்டுக்கு இட்டுச் செல்லும். விருப்பு வெறுப்பு மயக்கம் என்பவற்றுக்கு பெண்காமம், சினம், நிலையாமை என்று விளக்கம் கூறினால் உலக மறுப்பு வினையின்மைக் கோட்பாடுகளுக்கு இட்டுச் செல்லும். இவற்றைப் பற்றி ஏற்கனவே வேறு பொருள்கள் பற்றி வினையாடும் போது கூறியுள்ளோம்.

மேலே கூறியவற்றிலிருந்து நாம் புத்த சமயத்துக்குப் பரிந்து பேசுவதாகப் பொருள் கொள்ளக்கூடாது. நமக்கு புத்தர் கூறியனவாக எட்டியிருப்பது புத்தர் அவாவை வெறுக்ககும்படி அறிவுறுத்தினார் என்பதே. அத்துடன் உழைப்பின்றி இரத்தலை உயர்ந்த செயலாகக் காட்டினார் என்றே புத்தரைப் பற்றி நமக்குக் கூறப்படுகிறது. புத்த மெய்யியற் கோட்பாட்டுக்கும் இவற்றுக்ககும் எந்தத் தொடர்பையும் நம்மால் காண முடியவில்லை. இரத்தலை ஒரு மதிப்பிற்குரிய தொழிலாக ஆக்கிய ஒரு சமயமாகவே இன்று புத்த சமயம் நமக்கக் கிடைத்துள்ளது.

குமரிக் கண்டத்தைப் பற்றி ஆயும் ஒரு நூல் புத்த சமயம் கூறும் மெய்யியல்கள் குமரிக் கண்டத்தில் உருவாகியிருக்கலாம் என்று கருதுகிறது. அது ஏற்றுக் கொள்ளத் தக்கதாயிருந்தால் புத்த சமயக் கோட்பாடு குமரிக் கண்டத்தில் தோன்றிப் பின்னர் கௌதமர் மீது ஏற்றிக் கூறப்பட்டிருக்கலாம்.

கௌதம புத்தருக்கு முன்பு 28 புத்தர்கள் தோன்றியுள்ளதாக புத்த நூலகள் கூறுகின்றன. அவர்களில் ஒருவர் தொடங்க தொடர்ந்தவர்கள் மேம்படுத்தியதாக மேலே நாம் குறிப்பிட்ட புத்த சமயக் கோட்பாடுகள் உருவாகியிருக்கலாம். கௌதம புத்தருக்கு ஓரிலக்கம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தீபங்கர புத்தரைப் பற்றியும் தெரியவருகிறது.

இங்கே இதைச் சுட்டிக் காட்டக் காரணம் இயங்கியல் பருப்பொருளியத்தின் சாரங்கள் ஏற்கனவே நம் நாட்டு மெய்யியலில் காணக்கிடக்கின்றன; எனவே அத்தகைய மெய்யியல் கோட்பாடுகள் தோன்றுவதற்கேற்ற பருப்பொருட்சூழல் ஒரு காலத்தில் நம் நாட்டிலும் இருந்திருக்கலாமென்பதே.

இவ்வாறு இயற்கை, குமுகம், மனிதச் சிந்தனை ஆகியவற்றில் அடங்கியிருக்கும் இயங்கியல் பருப்பொருளியச் சாரத்தை மார்க்சியம் வெளிப்படுத்துகிறது.

மார்க்சியத்தின் தனிச் சிறப்பு குமுக இயற்பாடுகள் திட்டவட்டமான விதிகளுக்குட்பட்டவை என் று வரையறுத்ததாகும். அதுவரை தோன்றிய மெய்யியல் பள்ளிகள் எதுவும் குமுக இயற்பாடுகளில் எந்த விதியும் செயற்படுவதாகக் கூறவில்லை. குமுகம் அவ்வப்போது தோன்றும் தலைவர்களால்தான் அவர்கள் தலைசிறந்த ஆட்சியாளர்களாக, படைத்தலைவர்களாக அல்லது சிந்தனையாளர்களாக, குமுகத் தலைவர்களாக சீர்திருத்தர்களாக இருக்கலாம், இயங்குகிறது என்று கருதினர். இந்தக் கருத்தை மாற்றிக் குமுகம் படைப்பு விசைகள், அவற்றின் அடிப்படையில் தோன்றும் வகுப்பு முரண்பாடுகள், இந்த முரண்பாடுகள் முற்றும் சூழ்நிலையில் தோன்றும் வரலாற்று மனிதர்கள் ஆகியவற்றுக்கு இடையில் நிகழும் இடைவினைப்பாட்டிலிருந்தே வரலாறு உருவாகிறது என்று கூறுகிறது மார்க்சியம்.

மார்க்சியத்தின் சாரத்தைப் பார்த்தோம். இப்போது மார்க்சியத்தின் சில கூறுகளை அவற்றை மார்க்சும் அவரது மாணவர்களும் விளக்கிய முறையைப் பற்றிய நம் கருத்தை, ஒரு திறனாய்வை முன்வைக்கிறோம். எகலின் இயங்கியல் அணுகுமுறையின் அடிப்படையை ஏற்றுக்கொண்ட மார்க்சு அவரது நுண்பொருளிய அணுகலுக்காக அவரைக் குறை கூறினார். அதே வேளையில் தான் எப்போதும் அம்மாபெரும் சிந்தனையாளனின் மாணவன் என்று பெருமையுடன் கூறிக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார் . மார்க்சைப் பற்றிய நம் நிலைப்பாடும் அதுவே. மார்க்சியத்தில் மார்க்சால் சில பிழைகள் நேர்ந்துவிட்டாலும் மார்க்சியம் மனிதப் பண்பாட்டு வளர்ச்சியின் ஒரு முகாமையான காலகட்டத்தைக் குறிக்கிறது.
திறனாய்வுகள்:
1. வரலாற்றுப் பருப்பொருளியத்தில் ஏடறிந்த மனித வரலாறு என்பது வகுப்புப் போராட்டங்களின் வரலாறே எனப்படுகிறது. இங்கு வகுப்புகள் எனப்படுபவை படைப்புச் செயல்முறை என்ற வகையில் அமையும் முரண்பட்ட மக்கள் குழுக்களிடையில் நிகழும் போராட்டத்தையே முதன்மைப்படுத்துகிறது. ஆனால் வரலாற்றைப் பார்க்கையில் படைப்புச் செயல்முறையில் ஈடுபடும் இரு வகுப்புகளாகிய உழைக்கும் வகுப்பையும் அதன் உழைப்பை நேரடியாகச் சுரண்டுவதாகிய விளைப்பு விசைகளைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சுரண்டும் வகுப்பையும் ஒரு சேர அடக்கியாளும் ஒட்டுண்ணி வகுப்புகளாகிய அரசும் சமயமும் ஒடுக்குமுறைக்கு மூலங்களாக அமைந்துள்ளன. உலகில் நடைபெற்ற போர்களின் போது வெவ்வேறு நாடுகளிலுள்ள இந்த ஒட்டுண்ணி வகுப்புகளின் வலிமையே போர் முடிவுகளைத தீர்மானித்திருக்கின்றன. அதே வேளையில் போரில் ஈடுபட்டிருக்கும் நாடுகளில் அரசு என்னும் இந்த ஒட்டுண்ணி வகுப்பு இளமையும் துடிப்பும் கொண்டு தன் நாட்டினுள் உள்ள பல்வேறு செல்வாக்குள்ள வகுப்பின் மூலமாகப் பல்வேறு வகுப்புகளின் ஆதரவைத் தன் பக்கம் கொண்டிருக்கும் போது அது எளிதில் வெற்றி பெற முடீகிறது. அதே நேரத்தில் அதுவே முதுமை எய்தி தன் நாட்டு மக்களுடன் தனக்குள்ள பிணைப்பை இழந்து அயற்பட்டு நின்றால் தோல்வியடைகிறது. அத்துடன் போரிடும் நாடுகளில் ஒன்று போர்த் தொழில்நுட்பத்தில் தேலோங்கி நின்றால் அதற்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம். இங்கு விளைப்பு விசைகளின் வளர்ச்சி வெற்றி தோல்வியை முடிவு செய்கிறது. இவ்வாறு வெற்றி தோல்விகள் ஒரு குமுகத்தினுள் உள்ள உறவு நிலைகளை மட்டுமின்றி புறத்தே இருக்கும் முரண்பாடுகளையும் தழுவியதாகவே இருக்கிறது.

இங்கிலாந்து ஓர் உலகப் பேரரசாக மலர்ந்ததில் அதன் உள்ளிருந்த வகுப்பு முரண்பாடுகள் முனைப்பாகச் செயற்பட்டனவா அல்லது அது கைப்பற்றிய நாடுகளிலிருந்த சிதைவுற்றிருந்த வகுப்பு உறவுகள் முனைப்பாகச் செயற்பட்டிருந்தனவா என்பதைப் பிரித்துப் பார்க்க முடியாது. ஒன்று மற்றொன்றின் மீது இயங்கியல் வினை புரிந்தன. அத்துடன் இங்கிலாந்தின் கடற்படை வலிமை இறுதிக் காரணியாக இருந்தது.

மேற்காசியாவில் ஆதிக்கம் செலுத்திய பாரசீக அரசு வேளாண்மையை வெறுத்த துணிச்சல் மிக்க சிலரின் குழுவிலிருந்தே தோன்றியது. படை வலிமை கொண்டு உழவர்களைப் பணிய வைத்து அவர்களிடமிருந்து திறை பெற்றுத் அத்திறைப் பொருளிலிருந்து படையை வலிமைப்படுத்திப் பக்கத்து நாடுகளைக் கைப்பற்றி அவற்றிடமிருந்து இன்னும் அதிகம் கப்பம் பெற்றுப் பேரரசாக வளர்ந்தது. கிரேக்கத்தின் மீது படையெடுத்த போது நேரிட்ட ஒரு பெரும் புயலால் பாரசீகர்களின் கப்பல்கள் அழிந்தது அவர்களது தோல்வியின் முகாமையான காரணம். கார்த்தசீனியர்கள் எனப்படும் பினீசியர்களின் தோல்வியும் இவ்வாறு தற்செயலானதுதான். இவ்வாறு வகுப்புப் போர்களுக்கும் வரலாற்று நிகழ்ச்சிகளுக்கும் இடையில் இருப்பது இயங்கியல் உறவுதானே யொழிய வகுப்புப் போர்களே வரலாற்று நிகழ்ச்சிகளை நடத்துகின்றன என்பது இயங்கியல் அல்ல.

2. மனித இனத்தின் இறுதி நிலை பொதுமையே என்கிறது மார்க்சியம். அப்படியாயின் இயற்கை, குமுகம், மனிதச் சிந்தனை ஆகியவற்றின் உள்ளார்ந்த தன்மையாகிய முரண்பாடு என்னவாக இருக்கும். இயற்கைக்கும் மனிதனுக்குமுள்ள முரண்பாடு மட்டும்தான் எஞ்சியிருக்மா? இது ஒரு தேக்க நிலையா? இது வரை இருந்து வந்த முரண்பாடுகள் திடீரென்று நின்று போகுமா? இது போன்ற கேள்விகளுக்கு விடையே இல்லை.

இந்தக் கேள்விகளுக்கு விடைகளைக் காண்பதற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. அதுதான் உருசியப் புரட்சி. புரட்சியை நோக்கி அக்குமுகம் நெருங்கிய போது புரட்சிக்குப் பின் அரசு என்ற ஒன்று இருக்குமா இருக்காதா என்ற பெரும் கேள்வி எழுந்தது. அப்போது அரசும் புரட்சியும் என்ற நூலில் லெனின் இக்கேள்விக்கு விடையளிக்க முனைந்தார். புரட்சியால் தூக்கியெறியப்படும் முதலாளி வகுப்பையும் அதன் எதிர்ப்பையும் நசுக்குவதற்கென்றே பாட்டாளி மக்களின் முற்றதிகாரத்தைச் செலுத்தும் ஓர் அரசு தேவை. அந்த அரசைப் பாட்டாளியரின் முன்னணிப்படையாகிய பொதுமைக் கட்சி அமைக்கும்; அமைத்து முதலாளிய வகுப்பின் எதிர்ப்பு நசுக்கப்பட்ட பின் ஒடுக்கப்பட வேண்டிய வகுப்பென்று எதுவுமே இருக்காது. எனவே ஒரு வகுப்பை இன்னொரு வகுப்பு ஒடுக்குவதற்கென்றே உருவாக்கப்பட்ட வன்முறைக் கருவியாகிய அரசுக்குத் தேவையே இன்றி அது தானே உதிர்ந்து விடும் என்று கூறினார். ஆனால் உண்மையில அவ்வாறு நடைபெறவில்லை.

உருசியாவில் அரசும் படையும் நாளுக்கு நாள் வலிமை பெற்றன. அரசுப் பொறியும் கட்சித் தலைவர்களும் மக்களை ஒடுக்கி வந்தனர். அதன் விளைவே இன்றைய “பின்னடைவு.”

3. உருசியாவிலும் சீனத்திலும் நடைபெற்ற புரட்சிகள் பொதுமைப் புரட்சிகள் என்று காட்டப்பகின்றன. 1924இல் லெனின் எழுதிய இடங்கைப் பொதுமையியம் - ஒரு குழந்தை பிணி என்ற நூலில் 1917இல் நடந்த அக்டோபர் சோவியத் புரட்சி உண்மையான நிகர்மைப் புரட்சி அல்ல, ஒரு தனி நாட்டில் புரட்சி நடக்க முடியும் என்ற நம்பிக்கையை உலகுக்கு உணர்த்தும் வகையிலேயே அதன் முகாமை உள்ளது என்று கூறியுள்ளார். முழுமையான புரட்சிகள் ஐரோப்பாவில் நிகழும் என்றார். விரைவில் நிகழும் என்று எதிர்பார்த்தார், ஆனால் அவ்வாறு எதுவும் நிகழவில்லை.

1917 அக்டோபர் புரட்சி ஒரு நிகர்மை புரட்சி அல்ல என்பது புரட்சி முடிவடைந்த உடனேயே விளங்கிவிட்டது. இப்புரட்சிக்கு நெடுநாளைக்கு முன்பே பொதுமைப் புரட்சி உருசியாவில் நடைபெற வேண்டுமாயின் உருசியா முழுமையான முதலாளியத்தை எய்தியிருக்க வேண்டும், ஆனால் உருசியா இன்னும் முழுமையான முதலாளியத்தை எய்தவில்லை என்று ஒரு சாரார் கூறினர். ஆனால் லெனின் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. உருசியாவில் முதலாளியத்தின் வளர்ச்சி என்ற நூலை எழுதி உருசியாவில் முதலாளியம் வளர்ந்துவிட்டது என்று நிறுவ முயன்றார். அதே போல நில உடைமையாளரின் கட்சியான நிகர்மைப் புரட்சியாளர்கள் வேளாண்மைக்காக ஒரு செயல் திட்டம் வைத்திருந்தார்கள். இது பொடிப் பூரியர்களின் செயல் திட்டம் என்று விளக்கி உருகியாவில் வேளாண்மை முதலாளியப் பாங்கில் செயற்படத் தொடங்கிவிட்டது, என்பதை வேளாண்மைச் சிக்கல்கள் சில கு றிப்புகள் என்ற நூலில் விளக்கினார்.

ஆனால் அக்டோபர் புரட்சி வெற்றி பெற்றவுடன் வெளியிடப்பட்ட வேளாண்மைக் கொள்கை அறிவிப்பில் நிகர்மைப் புரட்சியாளர்களின் செயல்திட்டத்தை லெனின் அப்படியே பின்பற்றினார். இடங்கைப் பொதுமையியம் - ஒரு குழந்தைப் பிணி என்ற தன் நூலில் லெனின் “எழுத்துக்கு எழுத்து” அவர்களது செயல்திட்டத்தைத்தான் எடுத்துக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னணி என்ன?

குமுக வளர்ச்சியின் ஒரு கட்டத்தினுள் புகுந்து செல்லாமல் வேறு வகையில் பாய்ந்து சென்று அடுத்த இன்னொரு கட்டத்தினுள் செல்ல முடியாது என்று கூறிய மார்க்சே தனது பொதுமைக் கட்சியின் அறிக்கையின் உருசிய மொழி பெயர்ப்பு முன்னுரையில் ஓர் ஐயத்தை வெளியிடுகிறார். 19ஆம் நூற்றாண்டில் உருசிய நாட்டுப்புறத்தில் குவியத்தின் (கம்யூனின்) வடிவத்தைக் கொண்ட பண்டைய குமுக அமைப்பொன்று நிலவியது. இந்த அமைப்பு, தான் இதுவரை கருதி வந்தது போல் முதலாளியத்தினுள் நுழையாமல் நேரடியாகப் பொதுமைக் குமுகத்தினுள் இட்டுச் செல்லக் கூடுமோ என்ற ஐயப்பாடுதான் அது. மார்க்சின் இந்த ஐயப்பாட்டில் பொருள் இருப்பதாக லெனின் கருதியிருக்கலாம். அத்துடன் 1905இல் சார் மன்னின்ன கொடும் அடக்குமுறையை எதிர்கொளவதற்காக சோவியத்துகள் என்ற அமைப்புகளை மக்கள் உருவாக்கி சாரின் படைகளை எதிர்த்துப் போரிட்டனார். இப்புரட்சி முறியடிக்கப்பட்டது. இதைக் கண்ட லெனின் இக்குவியத்துக்களின் மூலம் முதலாளிய வளர்ச்சி இன்றியே பொதுமைக் குமுகத்தினுள் நுழையலாம் என்று முடிவு செய்தார்.

ஆனால் அவரது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்பதையே வரலாறு காட்டுகிறது. புரட்சி முடீந்ததும் முதல் நடவடிக்கையாக லெனின் நிலங்களைப் பயிரிடுவோர்க்கே சொந்தமாக்கினார். பொதுமை என்பது தனியார் உடைமைய ஒழிப்பதாயிருக்க இந்நடவடிக்கை சொத்துடைமையை உறுதிப்படுத்துவதாயிருந்தது. பல்வேறு தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் தங்கள் தொழிற்சாலைகளை நாட்டுடைமையாக்குமாறு அவரை வேண்டிய போது முதலில் அத்தொழிற்சாலைகள் தன்னிறைவானவையாக, அதாவது ஆதாயம் ஈட்டுபவையாக, ஆக்கும் வகையில் அவற்றை வளர்த்தெடுத்து வருமாறு கூறிவிட்டார். அத்துடன் மின்சாரம், போக்குவரத்தது, கனிமங்கள் என்று தொழில் வளர்சிக்குத் தேவையான அனைத்தையும் எய்துவதற்கான அடிப்படை நடவடிக்கைகளை அவர் தொடங்கிவைத்தார். அவருக்குப் பின் தாலின் நில உடைமைகளை மக்கள் கைவிட்டுக் கூட்டுப்பண்ணைகளையும் கூட்டுறவுப் பண்ணைகளையும் அமைக்கப் பல்வேறு உத்திகளைக் கையாண்டு வெற்றி பெற்றார். 1930களின் இறுதியில்தான் இப்பணி முடிவுற்றது. பெயரளவில் மக்களுடைமைகளாக அவை கூறப்பட்டாலும் அரசு அதிகாரிகளும் கட்சியினரும் தாம் மக்களை வழிநடத்தினர். இந்த “வழிநடத்தல்” எப்போதும் போல் அரசின் வன்முறைக் கருவிகளின் துணையோடுதான் நடந்தது என்பதில் ஐயமில்லை. இதுவே திட்டமிட்ட வளர்ச்சி என்ற பெயரில் திட்டமிட்ட பற்றாக்குறைப் பொருளியலாக மாறியது. (இந்தியாவில் போல்) குறைந்த விலையில் நுகர்பொருட்களை வழங்குதல் என்ற பெயரில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து அலுத்தனர். அதிகாரிகளுக்ககும் கட்சியினருக்கும் அனைத்துப் பொருட்களிலும் அனைத்து இடங்களிலும் முன்னுரிமை (இந்தியாவில் இது மறைமுகமாக நடைபெறுகிறது). 1980-களின் இறுதியில் கோர்ப்பச்சேவ் மாற்றங்களைப் புகுத்தியது வரை இதுதான் நிலை.

சீனத்திலும் மாசேதுங் மறைவுக்குப் பின் “பொதுமை மயக்கம்” தெளிந்தது. கம்யூன்கள் என்ற பெயரில் நடைபெற்ற அரசு முதலாளியம் சிறுகச் சிறுகக் கைவிடப்பட்டது. ஆனால் உருசியாவைப் போல் அரசியல் உரிமைகள் மக்களுக்கு வழங்கப்படவில்லை. பொதுமைக் கட்சியின் ஒருகட்சி ஆட்சியே நடைபெறுகிறது. எனவே உருசியாவைப் போல் சீனம் தன்னுரிமை நாடுகளாகச் சிதறுமா என்ற கேள்வி இன்று வரை எழவில்லை.

உண்மையில் உருசியாவிலும் சீனத்திலும் நடைபெற்றவை முதலாளியப் புரட்சிகளே. முதலாளியத்துக்கு முந்தியதாகிய நிலக்கிழமைக் குமுகத்திலிருந்து முழுமையான முதலாளியத்துக்கு மாறும் நிகழ்முறை பொதுமைக் கட்சியின் தலைமையில் நடந்துள்ளது. முதலாளியம்தான் குறிக்கோள் என்பதைப் புரிந்து கொண்டு இது நிகழ்த்தப்பட்டிருந்தால் குறுகிய காலத்திலேயே அந்தப் பணி முடிவுற்றிருக்கும். சப்பானில் 20 ஆண்டுகளில் இப்பணி முடிவடைந்துவிட்டது. ஆனால் உருசியாவில் 72 ஆண்டுகளுக்குப் பின்னும் நிலைமையில் தெளிவில்லை. நில உடைமைகள் இப்போது உடைக்கப்படுகின்றனவா அல்லது ஒன்றிணைக்கப்பட்ட பெரிய பண்ணைகள் தொடருகின்றனவா என்பது தெரியவில்லை. உடைக்கப்படுமாயின் வரலாற்றைப் பின்னோக்கித் தள்ளியதாகவே அது முடியும். ஏனென்றால் முழுமையான முதலாளியம் விளைப்பு வகைதுறைகளையும் உழைப்புக் கருவிகளையும் ஒரு சிலர் கைகளில் திரட்டி விளைப்பு விசைகளைப் பேரளவில் உசுப்பி விடுவதாகும். நிகர்மையியம் என்ற பெயரில் நில உடைமைகளைக் கூட்டுப்பண்ணைகளாகவும் கூட்டுறவுப் பண்ணைகளாகவும் குவித்தது ஏற்கனவே முதலாளியத்தின் உடைமை வடிவத்தை எற்படுத்திவிட்டது. கட்சியினர், அதிகார வகுப்பினரின் கட்டுப்பாட்டிலிருந்து அவ்விளைப்பு வகைதுறைகளும் உழைப்புக் கருவிகளும் விடுபட்டு முதலாளிகளின் உடைமை ஆன உடனேயே உள்ளடக்கத்திலும் முழு முதலாளியம் வந்துவிடும். குமுக வளர்ச்சி பற்றிய ஆய்வைக் கோட்பாட்டளவில் எடுத்துரைத்த மார்க்சியத்தைப் பின்பற்றிய நாட்டில் அவ்வாறு நிகழாமல் குவிந்த விளைப்பு விசைகள் மீண்டும் சிதறடிக்கப்படுமானால் அது ஒரு வரலாற்றுத் துயரமே.

உருசியாவில் பின்னால் நடைபெற்றதை வேறொரு கோணத்திலிருந்து பார்த்தால் அங்கு உருவான முரண்பாடு பெரும்பான்மை மக்களுக்கும் அரசுக்கும் ஏற்பட்ட முரண்பாடாக உள்ளது. இதைப் பற்றித் தனியாக நாம் பார்ப்போம்.

4. மார்க்சியம் பொதுவாக அரசு என்பதற்குத் தனி இருப்பு இருப்பதாக ஏற்றுக்கொள்வதில்லை. குமுகத்தின் முரண்பட்ட வகுப்புகளில் செல்வாக்குள்ள ஒன்றின் பணியாளாகவே அதாவது அடிமையாகவே அது படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் ஏங்கல்சு சிறப்பு வாய்ந்த தன் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் “அரசு என்பது குமுகத்திலிருந்து அயற்பட்டு, குமுகத்தின் மேலே நின்று கொண்டு குமுகத்தை ஆளும் வன்முறைக் கருவி” என்று வரையறுத்துள்ளார். இவ்வரையறையை மேற்கொண்டு தான் அரசும் புரட்சியும் என்ற நூலை லெனின் எழுதியுள்ளார். ஆனால் பொது அணுகலில் மார்க்சியர்கள் இதைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. லெனின் தன் அரசும் புரட்சியும் நூலில் “வரலாற்றின் பெரும்பாலான காலங்களில் அரசு ஏதாவதொரு வகுப்பைச் சார்ந்து அதற்குப் பணிபுரிந்தே வந்துள்ளது, நெப்போலியன் காலம் போன்று முன்பு செல்வாக்குப் பெற்றிருந்த ஒரு வகுப்பு (இங்கு நிலக்கிழமை) வலுவிழந்து புதிய ஒரு வகுப்பு (இங்கு முதலாளியம்) முழு வலிமை பெறாத இடைக்காலத்தில் இரு வகுப்புகளுக்கும் இடையில் சமநிலையைப் பேணுவதாக இருந்திருக்கிறது” என்றார். இத்தகைய நிலைமைகளைப் புறநடையானவை(விதிவிலக்கானவை) என்று அவர் கூறினார். ஆனால் வரலாறு அவ்வாறு கூறவில்லை. அரசு எனும் ஒட்டுண்ணி அமைப்பு மக்களிடமிருந்து அயற்பட்டு மக்களுக்கு மேலேயே நின்று கொண்டிருக்கிறது. விதிவிலக்கான, வரலாற்றின் திருப்பு முனையான காலகட்டங்களில்தான் குமுகத்தில் ஒரு வகுப்பு அரசின் மீது செல்வாக்குச் செலுத்தி அதன் வன்முறைக் கருவிளைத் தன் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியிருக்கிறது. இக்காலகட்டங்கள்தாம் விதிவிலக்கானவை. உரோமில் அடிமைக் குமுகம் உருவான போதும் ஐரோப்பாவில் முதலாளியக் குமுகம் உருவான போதும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. பிற காலங்ககளில் வகுப்புகளுக்கிடையில் உள்ள முரண்பாடுகளைப் பயன்படுத்தி அனைத்து மக்களையும் அது அடக்கி ஆள்கிறது.

மார்க்சியர்கள் குறிப்பிவது போல் சுரண்டும் வகுப்புக்கும் சுரண்டப்படும் வகுப்புக்கும் நடைபெறும் வகுப்புப் போராட்டத்தில் ஒரு வகுப்புக்கு (பொதுவாகச் சுரண்டும் வகுப்புக்கு)த் துணையாக அரசு நிற்கிறது என்னும் கூற்று தமிழக வரலாற்றைப் பொறுத்தவரை பொய்யாகிப் போகிறது. ஆயிரமாண்டுகளாக நடைபெற்ற வலங்கை - இடங்கைப் போர் இதற்கு அசைக்க முடியாத சான்று. வேளாண்மை - தொழில் என்ற அடிப்படையில் அரசு - சமயம் ஆகிய கூட்டணி வகுப்புகள் மக்களைப் பிரித்து பகையை மூட்டிவிட்டன. தங்களைச் சுரண்டும் இந்த ஒட்டுண்ணிக் கூட்டணியை எதிர்த்துப் போரிடத் துவங்கிய அவை பின்னர் தமக்குள்ளேயே கொலைவெறிக் தாக்குதல்களை நிகழ்த்தின. அது மட்டுமல்ல தங்களுக்குள் உள்ள பூசலுக்கு நடுவம் செய்து வைக்கத் தங்களைச் சுரண்டும் இந்த ஒட்டுண்ணிகள் முன்னாலேயே மண்டியிட்டு நின்றன. இந்நிகழ்ச்சிகள் மார்க்சியத்தின் வகுப்புப் போர்க் கோட்பாட்டையும் அரசு பற்றிய நிலைப்பாட்டையும் மீனாய்வு செய்ய நம்மைத் தூண்டுகின்றன.

5. மார்க்சியம் காலம் இடம் கருதுவது பற்றி உரிய முறையில் வலியறுத்தத் தவறிவிட்டது. மார்க்சு ஐரோப்பாவில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் வாழ்ந்தார். அது வரலாற்றில் திருப்புமுனையான ஒரு கட்டம். தொழில் முதலாளியம் எனும் இன்றைய முதலாளியம் வளர்ச்சியடைந்த தனது வீச்சை ஐரோப்பா முழுவதிலும் காட்டியது. அதன் விளைவுகளும் காரணங்களும் ஐரோப்பாவுக்கு வெளியில் முழு உலகுக்கும் எட்டியிருந்தன. இருப்பினும் ஐரோப்பாவை மனக்கண் முன் கொண்டே அவர் தன் முடிவுகளை முன்வைத்தார். வெவ்வேறு காலங்களுக்கு வெவ்வேறு இடங்களுக்கு அவற்றுக்கு ஏற்ற அணுகல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை அவர்கள் முன்வைத்தாலும் அதனைப் புறக்கணிக்கும் வகையில் இனி எதிர்காலத்தில் பாட்டாளியே புரட்சிகரமானவன் என்ற கருத்து வன்மையுடன் வலியுறுத்தப்பட்டது. அதுவே வளர்ச்சியடையாத ஏழை நாடுகளான குடியேற்ற நாடுகளுக்கும் கையாளப்பட்டது. இக்குமுகங்களின் பொருளியல் வளர்ச்சிக்கு மீறித் திணிக்கப்பட்ட இந்தச் செயற்கை விளைப்பு உறவு அவற்றின் வளர்ச்சிக்குப் பெரும் தடங்கலாகவும் சுரண்டும் வல்லரசுகளுக்கு இக்குழப்ப நிலை பெரும் சுரண்டல் வாய்ப்பை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

6. அக முரண்பாடுகளுக்கு முதன்மை: மார்க்சிய இயங்கியல் கோட்பாட்டை எடுத்துரைக்கும் போதே ஒவ்வொன்றும் அதனதன் அக முரண்பாடுகளிலிருந்தே வளர்ச்சி அல்லது தளர்ச்சியடைகிறது என்றும் அதே வேளையில் புற முரண்பாடுகளுக்கும் ஒரு இடம் உண்டு என்பதும் ஒரு வாய்ப்பாடாகக் கூறப்படுகிறது. ஆனால் பொதுவாகப் புற முரண்பாடுகள் கணக்கிலெடுக்கப்படுவதில்லை.

மார்க்சின் பெருநூலான மூலதனம் ஒவ்வோரிடத்தில் புற விசைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. ஆனால் அப்படி வரும் ஒவ்வோரிடத்திலும் “இது நம் ஆய்பொருளுக்கு அப்பாற்பட்டது” எனக் கூறி மார்க்சு அத்துடன் விட்டுவிடுகிறார். அப் புற நிலைமைகளைப் பற்றித் தனியாக ஆய்வு செய்ய நினைத்திருந்தோரோ என்னவோ தெரியவில்லை. ஆனால் ஆய்வு செய்யவில்லை.
பொதுமைப் புரட்சிகள் என்ற பெயரில் இந்நூற்றாண்டில் நிகழ்ந்த இரு புரட்சிகள் ஆகிய உருசியப் புரட்சியிலும் சீனப் புரட்சியிலும் புற முரண்பாடுகள் முகாமையான பங்கினை ஏற்றன. முதல் உலகப் போரில் உலகின் வல்லரசுகளும் உருசிய அரசும் சிக்கிக்கொண்டு இருந்த சூழ்நிலையில் நீண்ட நாள் போரினால் உருசிய மக்கள் அல்லலுழந்தனர். அது ஏற்கனவே இருந்த மக்களின் மனக்கசப்பைப் பெருக்கிப் புரட்சியைக் கனிய வைத்தது. புரட்சியை எதிர்த்து நிற்கவோ முறியடிக்கவோ உருசிய அரசால் இயலவில்லை. பிற வல்லரசுகள் போரில் சிக்கியிருந்தன. உருசியாவை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்த செருமன் தன்னால் இயன்ற வழியெல்லாம் புரட்சிக்கு உதவியது. புரட்சி முடிந்த பின்னும் அதை நிலைப்படுத்திக் கொள்ளும் வகையில் செருமனியின் கட்டுறவுகளுக்குப் பணிந்து ஓர் உடன்படிக்கையைச் செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தைக் கட்சியினருக்கு லெனின் விளக்க வேண்டியிருந்தது. இதனாலெல்லாம் லெனின் ஒரு செருமானிய உளவாளி எனக் குற்றம் சாட்டப்பட்டார்.

சீனத்தில் ஐரோப்பிய நாடுகள் அரசைக் கைப்பற்றாமல் அதனை அடிபணிய வைத்துச் சுரண்டியும் மக்களையும் அரசையும் இழிவுபடுத்தியும் வந்தன. அதன் எதிர்விளைவாகவே அங்கே புரட்சி இயக்கங்கள் தோன்றி வலுப்பெற்றன. ஆனால் அவை வெடித்துக் கிளம்பக் காரணமாக இருந்தது சப்பானின் நேரடிப் படையெடுப்பே. அப்படையெடுப்பை முறியடிக்க மா.சே.தூங் தலைமையில் சீனப் பொதுமைக் கட்சி முயன்ற போது சியாங் கே சேக் பொதுமைக் கட்சியே தன் முதல் எதிரி என்று அவர்கள் மீது பாய்ந்தான். இறுதியில் அக முரண்பாடுகளைப் புறக்கணித்து சியாங்கே சேக்கைக் கடத்தி வந்து கட்டாயக் கூட்டணி அமைத்து சப்பானை எதிர்த்துப் போராட வைத்தது மாசேதுங்கின் பொதுமைக் கட்சி.

பின்னர் கூட சப்பானைப் போரிட்டுச் சீனர்கள் வெளியேற்றவில்லை. அணுக்குண்டு வீச்சுக்குப் பின் சப்பான் அடிபணிந்து கைப்பற்றிய நாடுகளைக் கைவிட்டு வெளியேறியதன் விளைவுதான் சீனத்திலருந்து சப்பானியர் அகன்றது. பின்னர் சியாங்கேசேக்குடன் ஏற்பட்ட மோதலிலும் உருசியாவின் முழு ஒத்துழைப்பு இருந்தது. சீனப் பொதுமைக் கட்சியை அமைத்து அதற்கு ஆயுதங்கள் வழங்குவது வரை உருசியா நேரடியாக வந்து கலந்துகொண்டது. இதற்கு அப்போதைய சீனக குடியரசுத் தலைவர் சன்யாட்சன் இசைவளித்திருந்தார் என்பவை எல்லாம் வரலாற்று உண்மைகள்.

உண்மை இப்படியிருக்க இதே மாசேதுங்கின் பெயரால் வெளிவந்திருக்கும் முரண்பாடுகள் பற்றி என்ற நூல்தான் அக முரண்பாடே முதன்மையானது என்று கூறி நாம் முன்னே எடுத்துக்கூறியுள்ள முட்டை உவமையையும் கூறியுள்ளது.

உண்மையான நிலை என்ன? ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்திலும் இடத்திலும் ஒரு முரண்பாடு கூர்மையடையும். சரியான இயங்கியல் நிலைப்பாடு இந்தக் குறிப்பிட்ட சூழ்நிலையில் எந்த முரண்பாடு முதன்மை பெறுகிறது என்று விளக்குவதே ஆகும். அக முரண்பாடு பற்றிய மேற்குறிப்பிட்ட அணுகல் காணப்படும் அதே நூலில்தான் இதுவும் கூறப்பட்டுள்ளது நமக்கு வியப்பாக உள்ளது.

7. பாட்டாளியர் எப்போதுமே புரட்சிகரமானவர்கள் என்பது மார்க்சியத்தின் நிலைப்பாடு. வரலாற்றில் அவர்கள் தாங்கும் பங்கிற்கேற்ப அவர்கள் புரட்சிகரமானவர்கள் என்கிறது அது. முதலாளிகள் அனைவரையும் அரக்கமனம் படைத்தவர்களாகவும் அது காட்டுகிறது. அதே நேரத்தில் பொதுமைக் கட்சி அறிக்கையோ ஐரோப்பாவில் நிலக்கிழமைக் குமுகத்தின் பிற்போக்குக் கூறுகளைத் துடைத்தெறிவதில் முதலாளிய வகுப்பு ஆற்றிய வரலாற்றுப் பணியினை வானளாவப் புகழ்கிறது. காலம் இடம் வேறுபாடின்றி நிலக்கிழமைக் குமுகம் அழிந்து வளர்ச்சி பெற்ற முதலாளியக் குமுகத்தின் புரட்சிகர வகுப்பாகக் கருதப்பட்ட பாட்டாளியரை நிலக்கிழமை, சில இடங்களில் குக்குல மட்டத்தைக் கூட தாண்டாத ஏழை நாடுகளில் திணித்ததன் விளைவாக இந்நாடுகள் தம் பின்தங்கிய நிலையை உதறித் தள்ளிப் புதிய வளர்ச்சிக் கட்டங்களில் நுழைய முடியாமல் தவிக்கின்றன.

அத்துடன் பாட்டாளியரின் புரட்சித் தன்மை வெறும் கோட்பாட்டளவிலேயே நின்றுபோயிற்று. தொழிற் புரட்சியின் தொடக்க காலத்தில் பாட்டாளி வகுப்பு புதிதாக உருவான நிலையில் கூடுதல் சம்பளத்தையும் குறைந்த வேலை நேரத்தையும் வேண்டி நின்ற போது அவை கிடைப்பது எளிதாக இல்லை. சிறுகச் சிறுகத் தொழிற் சங்கங்கள் உருவான போது அவற்றின் உருவாக்கமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த எதிர்ப்புகள் பாட்டாளிகளின் வேகத்தையும் உறுதிப்பாட்டையும் மிகுத்தன. பாட்டாளிய வகுப்பு அது தோன்றிய இடங்களிலெல்லாம் புரட்சித் தன்மையைக் காட்ட ஆரம்பித்தது, முதலாளிகளும் அரசுகளும் தம்முன் புதிதாக உருவாகியுள்ள நிலைமைடைய உணர்ந்துகொண்டனர். சிறுகச் சிறுக உரிமைகள் வழங்கப்பட்டன. சங்கம் அமைத்தல், பகரம் பேசுதல், போராட்டம் அறிவித்தல், வேலைநிறுத்தம் செய்தல் இவை அனைத்தும் சட்டத்துக்குட்பட்ட செயல்களாயின. எனவே தொழிலாளர் வகுப்பு தன் புரட்சிகரத் தன்மையை இழக்கத் தொடங்கியிருந்தது. இது இங்கிலாந்தில் தொடங்கி பிற நாடுகளிலும் நடந்தேறி வந்த நிகழ்முறை. ஆனால் பிரான்சில் இத்தகைய உரிமைகள் எளிதாகக் கிடைக்கவில்லை. எனவே அங்கு வன்முறைப் புரட்சி தலைதூக்கியது; அது ஒடுக்கவும் பட்டது. அதன் விளைவாக ஐரோப்பிய நாடுகளிலெல்லாம் தொழிலாளர் இயக்கங்கள் மீது அரசுகள் ஒடுக்குமுறைகளைச் செலுத்தத் தொடங்கின. அதன் விளைவாகத் தொழிலாளர்கள் நடுவில் மீண்டும் புரட்சிகரச் சிந்தனைகள் வேர்கொள்ளத் தொடங்கின. மீண்டும் சிறிது சிறிதாகத் தொழிற் சங்க நடவடிக்கைகளுக்கு அரசுசளின் எதிர்ப்பு குறையத் தொடங்கியதால் அப்புரட்சி உணர்வுகள் மங்கத் தொடங்கின. புரட்சிகரச் சிந்தனையையும் செயற்பாட்டையும் எதிர்பார்த்த மார்க்சுக்கும் ஏங்கெல்சுக்கும் ஏமாற்றமாயிருந்தது. அவர்கள் உலகின், குறிப்பாக ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் தொழிற் சங்கத் தலைவர்கள் மீது குறை கூறினர். ஒரு புதிய பாட்டாளிய மேற்குடியினர் தோன்றிவிட்டதாலேயே பாட்டாளிகளிடையில் புரட்சி உணர்வு மங்கிவிட்டதென்று கருதினர்.

உருசியாவின் நிலையும் இது போன்றதே. சார் மன்னின் கொடுங்கோன்மையே தொடக்கப் புள்ளியாகும். மா பீட்டர் காலத்தில் தொடங்கிவைக்கப்பட்ட தொழில் முயற்சிகள் சிறுகச் சிறுக வளர்ந்து மக்களாட்சி உரிமைகளை மேற்குடி மக்கள் கேட்கும் நிலை உருவானது. சார் சிறிதும் இறங்கி வராததால் அவனைக் கொல்லும் முயற்சிகள் தொடங்கின. கடுமையாக அவை ஒடுக்கப்பட்டன. எனவே மக்களாட்சி வேண்டியோர் அடித்தள மக்களை நாடினர். அன்றைய நாளில் சிந்தனையாளர்களைக் கவர்ந்த மார்க்சியச் சிந்தனையின் மூலமாகவே அவர்கள் மக்களை அணுகியது தவிர்க்க முடியாத ஒன்று. மக்கள் மார்க்சியக் கோட்பாட்டுக்காக எவ்வளவு ஆதரவு அளித்தனர் அல்லது சாரின் கொடுங்கோன்மையிலிருந்து தப்புவதற்காக எவ்வளவு விரும்பினர் என்பதை இப்போது கணித்தறிவது கடினம். ஆனால் வரலாற்றின் எந்தவொரு கட்டத்திலும் நடைபெறும் மக்கள் எழுச்சியில் ஏற்கனவே பட்டுவரும் அல்லல்களிலிருந்து விடுதலை பெற்றால் போதும் என்பதே மக்களின் உடனடிக் குறிக்கோளாயிருக்கும். அத்துடன் இத்தகைய மாற்றங்களை முன்வைத்து மக்களை எழுச்சி கொள்ளச் செய்வோர் நேர்மையும் உயர்குணமும் கொண்ட பெருமக்களாய் அமைந்து விடுவது அவர்கள் மீதும் அவர்கள் கோட்பாடுகள் மீதும் மக்கள் அசையாத நம்பிக்கைகொள்ள வைத்து விடுகிறது.

இவ்வாறு தான் உருசியப் புரட்சியிலும் நடைபெற்றது.

1905இல் நடைபெற்ற உருசியப் புரட்சியிலும் உருசியப் பொதுமைக் கட்சியின் (உருசியக் குமுகியல் மக்களாட்சி உழைப்பாளர் கட்சி என்று அது அழைக்கப்பட்டது. புரட்சிக்குப் பின்தான் சோவியத் ஒன்றியப் பொதுமைக் கட்சி என்று அது அழைக்கப்பட்டது.) பொதுக்குழுவில் கட்சி இரண்டாக உடைந்தது. லெனின் தலைமையில் பெரும்பான்மைக் குழு (போல்சுவிக்கு) என்றும் மற்றையது சிறுபான்மைக்குழு (மென்சுவிக்கு) என்றும் அழைக்கப்பட்டது. 1917 பிப்ரவரியில் முதலில் நடைபெற்ற புரட்சி (இது பிப்ரவரி புரட்சி எனப்படும்) சார் பதவியிலிருந்து இறக்கப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளானான். உள்ளுர் ஆட்சி அமைப்புகளாகிய குவித்துக்களுக்கு (சோவியத்துக்களுக்கு) முழு அதிகாரம் கொடுப்பதாக சிறுபான்மைர் கட்சி வாக்குறுதியளித்திருந்தது. ஆனால் அவ்வாறு வழங்க அது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்துடன் புதிய அரசியல் சட்டமன்றத்தைக் கூட்டுவதாக அளித்திருந்த உறுதியையும் செயற்படுத்தவில்லை, இவற்றை முன்வைத்து லெனின் தலைமையில் நடைபெற்ற புரட்சியே புகழ்பெற்ற அக்டோபர் புரட்சி. நாடு முழுவதும் சிறுபான்மை, பெரும்பான்மைக் குழுக்களின் பின்னணியில் அணிவகுத்து நின்றது. வரலாற்றில் அரியதொரு நிகழ்ச்சியாகப் பழமைசார்ந்தோர் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் முறியடிக்கப்பட்டனர். அத்துடன் உலகப்போர் முடிந்து உலக வல்லரசுகள் நாற்புறமும் சூழ்ந்துகொண்டு தாக்கின. உறுதியுடனும், வீரத்துடனும் உருசிய மக்கள் போரிட்டு வெற்றி பெற்றனர். அந்த வீரத்தின் வேகத்தின், தொடர்ச்சிதான் தொடர்ந்து அவர்கள் காட்டிய வேகம். ஆனால் நடைபெற்ற மாற்றத்தை நிகர்மை மாற்றம் என்று கருதிய தவறுதான் இன்றைய பின்னடைவுக்கு காரணம். இந்தப் புரட்சியில் சார் ஆட்சியின் போது உருசிய அரசின் கீழ் சிக்குண்டிருந்த பல்வேறு தேசியங்களின் ஒத்துழைப்பும் இருந்தது, இவ்வகையில், உருசியப் புரட்சி ஒரு முழுமையான முதலாளியப் புரட்சியாகவே விளங்குகிறது. ஆனால் மார்க்சியத்தின் பட்டறிவின்மையால் அதன் பயன்கள் வீணடிக்கப்பட்டன.

அத்துடன் பாட்டாளி என்பவன் மனிதன்தான். அவன் பருப்பொருள் சூழலால் முற்றிலும் ஆட்டுவிக்கப்படும் கருவி அல்ல. தன் நலம், ஆதிக்க வெறி, ஒட்டுண்ணித்தன்மை ஆகிய குணநலன்கள் அவனுக்கும் உண்டு. பொதுவில் அடியான் புழுத்துச் சாவான் என்றொரு பழமொழி தமிழ்நாட்டில் உண்டு. பலருக்குப் பொதுவாக ஒரு அடிமை இருந்து அவனுக்கு ஒரு புண் வந்தால் மற்றவர் பார்த்துக் கொள்வர் என்று ஒவ்வொருவரும் கழித்துக்கட்டி விடுவர் என்பதுதான் இதன் பொருள். அத்துடன் அரசுப் பொறி என்பது என்றும் பொதுநலனைக் குறிக்கோளாகக் கொண்டதல்ல. அத்துடன் கட்சிக்கும் பிறப்பு, வளர்ச்சி, தேய்வு, அழிவு என்ற இயங்கியல் விதி பொருந்தும். பாட்டாளி வகுப்பும் அவ்வாறே பிறப்பு, வளர்ச்சி, தேய்வு, அழிவு என்ற இயங்கியல் விதிக்கு உட்படும்.

உலகில் இன்று உழைப்பவர்க்கு தொழிற்சாலையில் பங்கு என்ற முழக்கம் வலுப்பெற்று திட்டங்கள் செயற்படத் தொடங்கியுள்ளன. அத்துடன் வெறும் “உழைப்பு ஒன்றே செல்வம்” என்ற நிலையிலுள்ள தொழிலாளர்கள் பணக்கார நாடுகளில் இல்லை. இந்தியா போன்ற வறிய நாடுகளிலும் பெருந்தொழில், அரசுத் தொழில் தொழிலாளர்கள் மார்க்சியப் பாட்டாளி வரையறைக்கு வெளியிலேயே நிற்கின்றனர். இந்த வகையில் பார்த்தால் மார்க்சியப் பாட்டாளியக் கோட்பாடு ஐரோப்பாவில் 19-ஆம் நூற்றாண்டின் முன்பாதிக்கு உட்பட்ட ஒரு சிறிய காலத்துக்கு மட்டுமே உரிய ஒரு கோட்பாடாகச் சுருங்கிவிட்டது. காலம், இடம் என்ற வகைத்திணைகளைக் கையாண்டால் கிடைக்கும் முடிவு இதுதான்.

தொடர்ந்து உருசியாவையே எடுத்துக் கொள்வோம். உருசியாவில் புரட்சி வெற்றி பெற்றவுடன் ஐரோப்பாவின் தொழில் வளமிக்க நாடுகளில் உடனடியாக நிகர்மைப் புரட்சி நடந்தேறிவிடும் என்று லெனின் மிகுந்த நம்பிக்கையுடனிருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தது நடைபெறவில்லை. அதே நேரத்தில் சோவியத் உருசியா மீது வல்லரசு நாடுகள் தாக்குதல் எதுவும் நடத்த முடியாத அளவுக்கு அந்தந்த நாட்டுத் தொழிலாளர்கள் தத்தம் நாட்டு அரசுகளைக் கட்டுபடுத்தி வைக்கும் அளவுக்கு வீறுகொண்டிருந்தனர். உலகெங்கிலுமுள்ள பொதுமைக் கட்சியினரும் புரட்சிச் சிந்தனையாளர்களும் புத்துணர்ச்சி பெற்றனர். ஆனால் எங்கும் புரட்சி வெடிக்கிவில்லை. லெனின் ஐரோப்பிய நாடுகளிலுள்ள பொதுமைக்கட்சித் தலைவர்கள் மீது குற்றம் சாட்டினார்.

ஐரோப்பிய வல்லரசுகளால் அடிமைப்படுத்தப்பட்டிருந்த ஏழை நாடுகளில், உருசியப் புரட்சி பெரும் பாய்ச்சல் நிலையை ஏற்படுத்தியது உண்மைதான். அதனைக் கண்டு இனி அடுத்த புரட்சிகர வீச்சு அடிமை நாடுகளின் விடுதலைப் போர்களிலிருந்துதான் உருவாகும் என்று லெனின் கூறினார். ஆனால் அவற்றில் வடகொரியா, வட வியட்நாம், சீனா போன்ற நாடுகளில் மட்டும்தான், அதுவும் இரண்டாம் உலகப் போரின் பின்னணியில்தான் “பாட்டாளியப் புரட்சிகள்” நடந்தேறின.

இவ்வாறு ஐரோப்பாவில் நடந்தேறிய தொழிற்புரட்சியில் தோன்றிய பாட்டாளியரின் புரட்சிக் காலம் முடிந்து போயிற்று.
இந்த முடிவு மார்க்சிய இயங்கியலுக்கு முரண்பட்டதல்ல. வரலாற்றில் தோன்றும் எதையும் போல் பாட்டாளிய வகுப்புக்கு ஒரு தோற்றமும் வளர்ச்சியும் அழிவும் உண்டு. புரட்சிகரப் பாட்டாளியரின் காலம் முடிந்து போயிற்று. அப்படியானால் மார்க்சியத்தின் சிறப்புதான் என்ன?
இயங்கியல்தான் மார்க்சியத்தின் சிறப்பு. முரணிணைகளில் எந்த ஒன்று தனித்தோ, எப்போதும் முதன்மையாகவோ இயங்குவதில்லை. பண்டங்களின் விளைப்பு, பங்கீடு(விற்பனை) ஆகியவற்றை எப்போதுமே விளைப்புதான் தீர்மானிக்கும் காரணி என்று மார்க்சு கூறியது சரியல்ல. அது அவர் வாழ்ந்த காலத்தில் ஐரோப்பாவுக்கு மட்டும் பொருந்தும். ஐரோப்பிய வல்லரசு நாடுகளால் அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளில் அரசியல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்ட வாணிகம் ஐரோப்பாவின் விளைப்புச் செயல்முறையின் மறுபக்கம். இது மார்க்சால் கணக்கில் எடுக்கப்படவில்லை. இன்று உலகம் முழுவதும் வாணிகமும் விற்பனையும் பொருளியல் வடிவிலான மறைமுக அரசியல் நெருக்குதல்களும் ஒன்றிணைந்த விளைப்புமுறைதான் நிலவுகிறது. ஆனால் இங்கும் விளைப்புக்கே முதலிடம் கொடுத்து முதலாளிகளிடம் அதிகக் கூலி கேட்டுப் போராட்டங்கள் நடத்துவதன் மூலம் வாணிகர்களின் சுரண்டலிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்பி மார்க்சியக் கோட்பாடு பாட்டாளிகளின் கோட்பாடு என்ற நிலையிலிருந்து வாணிகர்களின் கோட்பாடாக இழிந்து நிற்கிறது.

மாறாக இயங்கியலைச் சரியாகக் கையாண்டிருந்தால் எந்தக் காலத்தில் எந்த இடத்தில் எந்த முரண்பாடு முனைப்பாக இருக்கிறது, அதற்குத் தீர்வு என்ன என்பதைக் காய்தல் உலத்தில் இன்றி ஆய்வு செய்து செயற்பட முயன்றிருந்தால் இந்த நிலை தோன்றியிருக்காது.

மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளாதவை போல் காட்டிக் கொள்ளும் பணக்கார நாடுகள், குறிப்பாக அமெரிக்கா வரலாற்று ஆய்விலும் குமுகியல் ஆய்வுகளிலும் மார்க்சியத்தைத் துல்லியமாகக் கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறது. ஏழை நாடுகளில் தங்களுக்கு எதிரான இயக்கங்கள் தோன்றி வெற்றி பெற்றுவிடாமல் இருப்பதற்கு இவ்வல்லரசுகள் மார்க்சியத்தையே பயன்படுத்துகின்றன.

உலகப் பொதுமை இயக்கத்தில் பிளவும் இயக்கத்தினுள் அமெரிக்க ஊடுருவலும்
அடுத்து மார்க்சியத்தின் வரலாற்றில் மிக முகாமையான நிகழ்ச்சி ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுவது இன்றியமையாதது. உருசியாவுக்கும் சீனத்துக்கும் இடையில் தோன்றிய பிணக்குதான் அது.

29 ஆண்டுக் காலம் சோவியத்தின் தலைமை ஆட்சியாளராகவும் உருசியப் பொதுமைக் கட்சி மற்றும் பொதுமை அனைத்துலகியத்தின் தலைவராகவும் விளங்கிய தாலின் 1953-இல் காலமானார். அவருக்குப் பின் தனக்குத்தான் உலகப் பொதுமையின் தலைமை கிடைக்குமென்று எதிர்பார்த்திருந்தார் மாசேதுங். ஆனால் உருசியாவில் தாலினுக்குப் பின் வந்த தலைவர்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை. மனம் குமுறியது மாவோவுக்கு. இந்நிலையில் உருசிய உள்நாட்டு அரசியலில் கெடுபிடி நிலையைத் தளர்த்த வேண்டிய கட்டாயம் அங்கிருந்த ஆளுவோருக்கு ஏற்பட்டது. தாலின் காலத்துக் கொடுமைகளுக்கு விடையளிக்க வேண்டியவர்களாக அவர்கள் இருந்தனர். தாலினையே எல்லாவற்றுக்கும் பொறுப்பாளியாக்கும் உத்தியை அவர்கள் தேர்ந்தெடுத்தனர். ஆனால் அந்த உத்தியை அளவுக்கு மீறிய கொடுமையுடன் அவர்கள் கையாண்டனர். பலவித சூழ்ச்சிகளால் கட்சியின் தலைமைப் பதவிக்ககு வந்த குருச்சேவ் மிக இழிவான முறையில் தாலினையும் அவர் நினைவையும் சிறுமைப்படுத்தினார். இது உலகிலுள்ள மார்க்சிய அன்பர்களிடையில் பெரும் உள்ளக்கொதிப்பை ஏற்படுத்தியது.

மாவோ இதைக் கடுமையாகக் கண்டித்தார். உலகப் பொதுமை இயக்கத்தில் இதனால் பெரும் பிளவு ஏற்பட்டது. உலக நாடுகளிலுள்ள பொதுமைக் கட்சிகள் அனைத்தும் உருசியச் சார்பானவை என்றும் சீனச் சார்பானவை என்றும் இரண்டிரண்டாக உடைந்தன.

உருசியா தன் பொருளியல் வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வதற்காக விடுதலையடைந்த ஏழை நாடுகளுக்கு “உதவ”த் தொடங்கியது. அமெரிக்காவின் அரட்டல் அரசியலை எதிர்த்துப் பாதுகாப்பது என்ற பின்னணியில் இந்த உதவி நடைபெற்றது. இது எப்போதும் உருசியாவுக்கே ஆதாயமாக இருந்தது. இதற்காக உருசியா ஒரு ″மூன்றுலகக் கோட்பாட்டை″ உருவாக்கியது. முதல் உலகம் அமெரிக்காவைத் தலைமையாகக் கொண்ட ஐரோப்பிய, பிரிட்டன் போன்ற பணக்கார நாடுகள், பொதுமை நாடுகள் இரண்டாம் உலகம், ஏழை நாடுகள் மூன்றாம் உலகம். முதல் உலகத்தின் பொருளியல் மற்றும் அரசியல் தாக்குதல்களிலிருந்து மூன்றாம் உலகத்தைக் காத்து நிற்பதைத் தம் வரலாற்றுக் கடமையாகக் கொண்டவை இரண்டாம் உலக நாடுகள் என்கிறது இந்தக் கோட்பாடு.

சீனம் இதற்கு மாற்றாக ஒரு மூன்றுலகக் கோட்பாட்டை வகுத்துரைத்தது. அமெரிக்காவையும் உருசியாவையும் முதல் உலகமென்றும், ஐரோப்பிய நாடுகளையும் பிற முதலாளிய நாடுகளையும் இரண்டாம் உலகமென்றும் ஏழை நாடுகளையும், சீனத்தையும் மூன்றாம் உலகமென்றும் இந்த வகைப்பாடு கூறியது. இந்த மூன்றாம் உலக நாடுகள் தமக்குள் பொருளியல் ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்று கருத்துரைத்தது. அதற்காக ஒரு நிதியத்தைத்தான் ஏற்படுத்தப்போவதாகவும் கூறியது.

ஆனால் சீனத்தை எந்த நாடும் நம்பவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். முதல் காரணம் சீனம் அண்டை நாடுகளுக்கு அச்சமூட்டும் ஒரு நாடாக இருந்தது. வெள்ளளையர்களால் தங்கள் நாட்டின் பகுதிகள் பிற நாடுகளோடு இணைக்கப்பட்டுவிட்டன என்று கூறி அண்டை நாடுகளை முழுமையாகவும் பகுதிகளையும் கைப்பற்றியது. மார்க்சியக் கோட்பாடுகளின்படி ஒரு நாட்டின் பகுதியை இன்னொரு நாட்டுடன் இணைக்க வேண்டுமாயின் அவ்வாறு இணைக்கப்படும் பகுதி மக்களின் ஆதரவும் ஒப்புதலும் அவ்விணைப்புக்கு இருக்க வேண்டும். ஆனால், சீனம் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அத்துடன் அண்டை நாடுகளில் வாழ்ந்த சீனர்களின் மூலம் அந்நாடுகளின் மீது செல்வாக்குச் செலுத்தவும் முயன்றது. அதனால் ஏழை நாடுகள் அதை நம்பவில்லை. அத்துடன் ஏழை நாடுகள் நம்பிக்கையும் மதிப்பும் வைத்திருந்த உருசியா மீது சீனம் பகைமை பாராட்டியதையும் அவை விரும்பவில்லை. சீனம் காட்டிய தேசிய வெறி அந்நாட்டைத் தனிமைப்படுத்தியது. இசுரேல், தென்னாப்பிரிக்கா போன்ற ஒரு நாடாக சீனம் உலகின் கண்களில் பட்டது.

இரண்டாவது காரணம் சீனத்தின் ஒத்துழைப்புத் திட்டம் ஏழை நாடுகளைச் சுரண்டுவதை நோக்கமாகக் கொண்டது என்பதை அவை புரிந்துகொண்டன. உருசியாவும் தன் “உதவி”களின் மூலம் சுரண்டினாலும், அது அமெரிக்கா மற்றும் அதன் சார்பு நாடுகளின் அச்சுறுத்தல் மற்றும் நெருக்குதல்களிலிருந்து அந்நாடுகளைப் பாதுகாக்கும் வலிமையும் உறுதியும் கொண்டது என ஏழைநாடுகள் நம்பின. அந்த நம்பிக்கையை உருசியா ஒரளவு நிறைவேற்றியும் வந்தது.

உருசியாவுக்கும் சீனத்துக்கும் நடைபெற்ற இந்தப் பூசலை அமெரிக்கா நன்கு பயன்படுத்திக்கொண்டது. உருசியாவை எதிர்ப்பதற்குத் துணையாகவும் பொருளியல் சுரண்டலுக்கு வழியாகவும் சீனத்தை நெருங்கியது. தன் படைத்துறைத் தொழில்நுட்பங்கள் சிலவற்றைச் சீனத்துக்கு அளிக்க முன்வந்தது. மறுபக்கம் சப்பான் பொருளியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காகச் சீனத்தை நெருங்கி வந்தது.

உருசியா புரட்சிக்குப் பின் தன்னை முழுமையான ஒரு தொழில்துறை நாடாக வளர்த்துக்கொண்டது. ஆனால் சீனம் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட குவியங்களை (கம்யூன்களை) அமைத்து ஆழ்ந்த தொழில்நுட்பங்களை நாடாத ஓர் எளிய வழியைக் கடைப்பிடித்தது. வேளாண் பொருட்களைப் பெற்றுக்கொண்டு தொழில்துறைப் பண்டங்களைச் சீனத்துக்கு உருசியா வழங்கிவந்தது. உருசியாவின் சார்பு நாடுகளான கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இதே முறையைக் கையாண்டது. “பொதுமை நாடுகளுக்குள் ஓர் உழைப்புப் பங்கீடு” என்ற ஒரு கோட்பாட்டை இந்த அடிப்படையில் உருசியா முன்வைத்தது. சீனம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் விளைவாக சீனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப வெற்றிடம்தான் அதனை அமெரிக்காவையும் சப்பானையும் நாட வைத்தது.

1936-இல் வெளியிடப்பட்ட ஒரு கணிப்பின்படி சீனத்தின் மொத்த இறக்குமதியில் 25 நூற்றுமேனி சப்பானிலிருந்து வந்ததாக ஒரு வரலாற்று நூல் கூறுகிறது . சப்பானுக்கெதிராகப் புரட்சி நடத்த வேண்டுமென்று அன்றைய நாளில் சீனப் பொதுமைக் கட்சியும் மக்களும் முடிவு செய்ததற்கு இதுவும் ஒரு காரணம். 1991இல் தினமணி நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையில் இன்றை சீன இறக்குமதியில் சப்பானின் பங்கு அதே 25 நூற்றுமேனி என்று கூறப்பட்டிருக்கிறது. எந்த நாடு இதே சப்பானின் மேலாண்மையையும் அதன் விளைவான பொருளியல் சுரண்டலையும் எதிர்த்து ஒரு மாபெரும் புரட்சியை வெற்றியுடன் நடத்தியதோ அதே நாடு இன்று அதே சப்பானின் அதே அளவு சுரண்டலை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் தானும் ஒரு வல்லரசு என்ற கூறி நெஞ்சை நிமிர்த்தி நிற்பது ஒரு வரலாற்று விந்தையே. பொதுமைக் கோட்பாட்டுக்கு நேர்ந்த நிலைதான் என்னே!

பண்பாட்டுப் புரட்சி
1967இல் சீனத்தில “மாபெரும் பண்பாட்டுப் புரட்சி” அரங்கேறியது. இதன் பின்னணியாகக் கூறப்படும் கதை சுவையானது.

சீனப் பொதுமைக் கட்சியின் பொதுச் செயலாளரும் சீனத்தின் முடிசூடாப் பேரரசனுமான மாசேதுங் ஒரு நாடகம் பார்த்தாராம். அதில் மிகப் பிற்போக்குக் கருத்துகள் கூறப்பட்டனவாம். அந்நாடகத் திறனாய்வு ஒன்றை ஒரு தாளிகைக்கு எழுதியனுப்பினாராம். அது வெளியிடப்படவில்லையாம். உடனே மாவோ தன்னைச் சுற்றி நடப்பவற்றைக் கண்ணோட்டமிட்டாராம். எல்லா இடங்களையும் புரட்சியின் பகைவர்கள் பிடித்து அமர்ந்து இருப்பதைக் கண்டு அதிர்ந்துபோனாராம். தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் தனக்குப் மிகப் பாதுகாப்பான தன் சொந்தச் சாங்காய் மாநிலத்துக்குச் சென்றுவிடுவதுதான் வழி என்று முடிவு செய்து அங்கே போனாராம். அங்கிருந்து கொண்டு “பண்பாட்டுப் புரட்சி″க்கு அழைப்பு விடுத்தார் என்று அந்தக் கதை செல்கிறது.

தமிழில் ஐம்பெருங்காப்பியங்களின் வரிசையில் முதலாவதாக இடம்பெற்றுள்ளது சீவக சிந்தாமணி. இதன் கதை இப்படி. நடுநாட்டின் மன்னன் சச்சந்தன். அவன் மனைவி விசயை பேரழகி. அவளை நொடிப்பொழுதும் பிரிய விரும்பாத சச்சந்தன் ஆட்சிப் பொறுப்பைத் தன் அமைச்சனான கட்டியங்காரனிடம் ஒப்படைத்துவிட்டு அரண்மனையுள் அடைந்து கிடக்கிறான். நாளடைவில் கட்டியங்காரன் அரசனைக் கொன்று தானே அரசனாக ஏற்பாடுகள் செய்து வருவது மன்னனுக்குத் தெரிய வருகிறது. ஆனால் காலங்கடந்துவிட்டது. எனவே வானில் பறக்கும் மயிற்பொறி எனும் விமானத்தைச் செய்வித்து அதில் பறக்கவும் விசயைக்குக் கற்பித்தான். எதிர்பார்த்ததைப் போலவே ஒரு நாள் கட்டியங்காரன் படைகளுடன் அரசனின் மாளிகையைச் சூழ்ந்தான். சச்சந்தன் நிறைசூலியான அரசியை மயிற்பொறியிலேற்றி அனுப்பிவிட்டுத் தான் கட்டியங்காரனின் படைகளோடு போரிட்டு மாண்டான் என்று செல்கிறது இந்தக் கதை.

சச்சந்தன் விசயையின் மயக்கத்திலிருந்தான். மாவோ யார் மயக்கத்ததிலிருந்தார்? தன்னை எதிரிகள் சுற்றி வளைப்பதைக் கூட அறியாமல் வாழும் ஒருவர் ஒரு தலைவர் என்று அழைப்பதற்கு எப்படித் தகுதியாக முடியும்? அதிலும் புரட்சிகரமான தலைவராக முடியும்? ஆட்சிக்கு வருவதற்கு முன் மாவோ நிகழ்த்திய புரட்சிப் போர் ஓர் அருஞ்செயல்தான். இதில் யாருக்கும் ஐயமிருக்க முடியாது. ஆனால் பண்பாட்டுப் புரட்சியின் பின்னணியாகக் கூறப்படும் இக்கதை அவருக்குப் பெருமை சேர்ப்பதாயில்லை. ஆனால் இக்கதையைப் பெருமிதத்தோடு கூறும் மாவோவின் அடியார்களிடம்(பக்தர்களிடம்) இந்தக் கேள்விகளைக் கேட்டால் அவர்களால் விடைகூற முடிவதில்லை.

இனி, இந்தப் பண்பாட்டுப் புரட்சியின் பொருளையும் அதன் தேவையையும் பற்றி அலசுவோம்.

ஒரு பொருளியல் கட்டத்திலிருந்து மற்றொரு பொருளியல் கட்டத்தினுள் ஒரு மக்கள் கூட்டம் நுழையும்போதும் பின்னரும் அந்த மக்களிடையிலுள்ள பண்பாட்டுக் கூறுகளில் புதிய பொருளியல் நிலைமைகளுக்கேற்ற மாற்றங்கள் ஏற்படுகின்றன. இருப்பினும் பண்டைய பொருளியல் கூறுகளின் அடையாளமாகச் சில பண்பாட்டுக் கூறுகள் எஞ்சி நிற்கின்றன. இதனைப் பண்பாட்டு எச்சங்கள் என்பர். இந்தப் பண்பாட்டு எச்சங்கள் புரட்சிகரச் சூழலில்தான் மறைய முடியும்.

இன்றைய அமெரிக்கா இங்கிலாந்திலிருந்தும் பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் அம்மண்ணில் குடியேறிய மக்களால் உருவாக்கப்பட்டது. அதன் பொருளியல் அடித்தளம் அம்மண்ணில் புத்தம் புதிதாக அம்மக்களால் உருவாக்கப்பட்டது. அதற்கேற்ற பதிய ஒரு பண்பாட்டுத் தொகுதி அங்கு உருவானது. இருந்தாலும் பண்டைய தொடர்பாலும் சமகாலத் தொடர்புகளாலும் ஐரோப்பியப் பண்பாட்டுக் கூறுகள் சில அங்கு நிலவத்தான் செய்கின்றன. ஆயினும் அமெரிக்கப் பண்பாடு ஐரோப்பியப் பண்பாட்டிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறி உள்ளது.

ஐரோப்பியப் பண்பாடும் அதன் நிலக்கிழமைப் பண்பாட்டின் எச்சங்களைப் பெரும்பாலும் கழித்துக்கட்டிவிட்டது. இதற்கும் ஒரு புரட்சிகரப் பின்னணி உண்டு. அதுதான் இரு பெரும் உலகப் போர்கள். இவ்வுலகப் போர்களினால் ஐரோப்பியக் குடும்பங்களில் ஏற்பட்ட நெருக்கடிகள் பழைய நிலக்கிழமைப் பண்பாட்டுக் கூறுகளை ஏறக்குறைய முற்றிலும் துடைத்தெறிந்துவிட்டன.

அது போலத்தான் புரட்சிக்குப் பின் இருந்த சீனத்திலும் ஒரு புரட்சிகரச் சூழல் தேவைப்பட்டிருக்கலாம். அதைப் புரிந்துகொண்ட மாவோ தன் அதிகாரத்தை நிலைநிறுத்தும் நோக்கில் பண்பாட்டுப் புரட்சியைத் தொடங்கி வைத்திருக்க வேண்டும், ஏனென்றால் பண்பாட்டுப் புரட்சியில் இளைஞர்கள் பேரெண்ணிக்கையில் கலந்து கொண்டதாக அறிகிறோம். அது உண்மையாயின் புரட்சிக்கு முந்திய நிலக்கிழமைப் பண்பாட்டின் எச்சங்கள் பெருமளவில் அகற்றப்பட்டிருக்கும். மாவோவுக்குப் பின் வந்தவர்கள் பண்பாட்டுப் புரட்சியைக் குறை கூறினாலும் அதன் தலைவர்களைப் பழி வாங்கினாலும் புரட்சியின் பலன்கள் நிலைத்து நிற்கும்.

ஆனால் இங்கு நம் கவனத்துக்குரியது, புரட்சிக்குப் பின் சீனத்தில் தேவைப்பட்ட பண்பாட்டுப் புரட்சி, புரட்சியைப் பற்றிய கனவு கூடக் காணாத இந்தியா போன்ற நாடுகளில் பரிந்துரைக்கப்பட்டதுதான். இதன் வரலாற்றை இப்போது பார்ப்போம்.

மூன்றாம் அணியும் புதிய இடதுகளும் அமெரிக்க உளவு நிறுவனமும்.
சோவியத்தில் புரட்சி வெற்றி பெற்றதும் உலகிலுள்ள அறிஞர்களில் ஒரு சாரார் மகிழ்ந்தனர். புரட்சியையும் அதை நிகழ்த்திய போல்சுவிக் கட்சியையும் தலைமை தாங்கிய லெனினையும் போற்றினர். ஆனால் புரட்சிக்குப் பின் எதிர்ப்புரட்சியும் வல்லரசுகளின் முற்றுகையும் முறியடிக்கப்பட்ட பின் புரட்சியின் எதிரிகள் கொல்லப்பட்டனர். இது உலகிலுள்ள அறிஞர் சிலருக்குப் பிக்கவில்லை. மனித நேயமற்ற செயல் என்றனர். ஆனால் இந்தத் திறனாய்வு ஏற்றுக் கொள்ளக்கூடியதுதானா?

அரசும் அவர்களைச் சார்ந்து நிற்கும் மக்கள் குழுக்களும் பெரும்பான்மை மக்கள் மீது இடைவிடாமல் பல்வகை, பல்துறைக் கொடுமைகளையும் வன்முறைத் தாக்குதல்களையும் தொடுத்துவருகின்றன. அதை வெறும் சொற்களில் கடிந்தோ இடித்துரைத்தோ மாற்ற முடியாத போது ஆர்ப்பாட்டஙகள், எதிர்ப்புப் பேரணிகள் போன்று மக்கள் ஒன்றுசேர்ந்து தெரிவிக்கும் முறையை கையாள்கிறார்கள். இதையும் ஆளும் வகுப்புகள் மதிப்பதில்லை. அடுத்த கட்டமாக சிறிய அளவிலான வன்முறையும் ஓரிருவர் சேர்ந்து நிகழ்த்தும் வன்முறையும் தொடங்குகின்றன. ஆளும் கூட்டம் இவை எதையும் பொருட்படுத்துவதில்லை. இது சட்டத்தை மதிக்காதவர் செயலென்றும் தவறாக வழி நடத்தப்பட்ட இளைஞர்களின் செயலென்றும் விளக்கம் கூறி மக்களிடையில் கருத்துப் பரப்புகிறது. ஆனால் இந்தக் கருத்துப் பரப்பல்களால் மக்களின் எழுச்சியைச் சிறிது தள்ளிப்போட முடியுமேயன்றி முற்றிலும் நிறுத்திவிட முடியாது. மக்களின் தேவைகளுக்கு ஆளும் கும்பல் செவிசாய்க்கவில்லை என்றால் வன்முறை மூலம் அவர்கள் தூக்கியெறியப்படுவது உறுதி. அது வரலாற்றில் நாள்தோறும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அது நேரடியான மக்களின் ஈடுபாட்டால்தான் நிகழ வேண்டுமென்பதில்லை. இரு நாடுகளுக்குள் நடைபெறும் ஒரு கொடிய போரின் பின்னணியில் கூட இது நிகழலாம். போருக்கு முன்பும் பின்பும் உள்ள சூழலை ஆய்ந்து பார்த்தால்தான் நிகழ்ந்தது என்ன என்பதைக் கணக்கிட முடியும்.

ஆனால் உலகிலுள்ள ஆளும் கும்பல்கள் நேரடிப் புரட்சியைக் கண்டு நடுங்குகின்றன ஏனென்றால் மறைமுகமான மாற்றங்களிலிருந்து மக்கள் அறிவு பெறுவதில்லை. ஆனால் ஒரு வன்முறைப் புரட்சி மக்களே இறுதி நாயகர்கள் என்ற உண்மையைப் புலப்படுத்திவிடுகின்றன.

இந்த வன்முறைப் புரட்சியில் மக்கள் காலங்காலமாக தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்குப் பழிதீர்த்துக் கொள்கிறார்கள். குற்றவாளிகளையும் அவர்களுக்குத் துணைநின்ற கூலிப்படைகளையும் காட்டிக்கொடுத்தோரையும் அறிவு தடுமாறி எதிரிக்குத் துணை போனோரையும் தண்டிக்கின்றனர். இது ஆளும் கும்பல் கூறுவதைப் போல் சட்டம் ஒழுங்கைப் பேணுதல் என்ற பெயரில் நடைபெறாததாலும் வெளிப்படையாக நடைபெறுவதாலும் சில போலி அறிஞர்கள் இதனை மனித நேயமற்ற செயல் என்று தூற்றுகின்றனர். பிரிட்டனைச் சேர்ந்த பெற்றன்று ரசல் என்பார் லெனின் மீது இதே குற்றச்சாட்டைச் சுமத்தினார்.

பொதுமை இயக்கத்தில் நாம் சுட்டிக் காட்டிய பாட்டாளியக் கோட்பாடு எனும் பெரும் பிழை மார்க்சியக் கோட்பாட்டுக்குப் பெரும் பின்னடைவை நிகழ்த்தியது.

நாம் தொடக்கத்தில் குறிப்பிட்டவாறு மார்க்சியம் மனித இனத்தின் மாபெரும் மனங்களின் கனவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழியொன்றைக் கண்டுபிடித்தது என்று கூறினோம்.

மனித இனத்தின் மாபெரும் மனங்களின் கனவுகள் யாவை?

பகுத்தறிவுள்ள மனதர்கள்,

செயலிலும் சிந்தனையிலும் பிறருக்கு அடிமையாகாத, பிறரை அடிமை செய்யாத மக்கள்,

பிறருடைய கட்டுப்பாடோ வற்புறுத்தலோ இன்றித் தத்தம் கடைமைகளை நிறைவேற்றும் மக்கள்,

ஆண்டான் - அடிமை, உயர்ந்தோர் - தாழ்ந்தோர், கற்றார் - கல்லாதோர், ஏழை - பணக்காரன் என்ற வேற்றுமையற்ற மக்கள்,

நாடு - நகரம் என்ற வேறுபாடற்ற உலகம்,

மூளை உழைப்பு - உடலுழைப்பு என்று வேறுபடுத்தாத உலகம்,

சுரண்டுவோரோ சுரண்டப்படுவோரோ இல்லாத உலகம்,

போர்கள் இல்லாத உலகம்,

அரசுகள் தேவைப்படாத உலகம் என்றவாறு.

இந்தக் கனவுகளை நனவாக்க மார்க்சியம் வகுத்த வழி என்ன?

மக்களின் துன்பங்களுக்கெல்லாம் பொருளியல் ஏற்றத்தாழ்வுகளே காரணம் என்பதை மார்க்சு கண்டறிந்தார்.

எனவே பொருளியல் ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதே மனிதனுக்கு விடுதலைக்காக வழி என வகுத்துரைத்தார்.

அது சரி. இந்த ஏற்றத்தாழ்வை எப்படி ஒழிப்பது?

அன்றைய நிலையில் ஐரோப்பாவில் அதுவும் குறிப்பாக இங்கிலாந்தில் உள்ள தொழில் முதலாளிகளிடம்தான் உலகின் மிகப்பெரும் செலவக்குவிவு இருந்தது. அந்தச் செல்வத்தை அம்முதலாளிகளின் எதிரிணைகளான பாட்டாளிகளுடன் பகிர்ந்துகொள்வதுதான் பொருளியல் ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்கும் அதன் பின்தொடர்ச்சியாக மனித உறவுகளில் உள்ள குறைகளைப் போக்குவதற்கும் வழி என்று அவர் கருதினார்.

அதிக ஊதியம் கேட்டுப் பெறுவதன் மூலம் இந்தப் பொருளியல் ஏற்றத்தாழ்வை நீக்கிவிடலாம் என்று மார்க்சு கருதினார். கூலி உயர்வை முதலாளிகள் பண்டங்களின் விலையை ஏற்றுவதன் மூலம் ஈடு செய்து விடுவர் என்ற மறுப்புரையை அவர் ஏற்கவில்லை.

உண்மையில் கூலி உயர்வு, வேலைநேரம் குறைப்பு என்ற கோரிக்கைகளை முன்வைத்துப் பாட்டாளியரை ஒன்றுசேர்த்து மனித உரிமைகள், மனித மேம்பாடு என்ற குறிக்கோள்களுக்கு அவர்களை நடத்திச்செல்வது என்பதே மார்க்சின் செயல்திட்டம். ஆனால் நடந்தது வேறு. பாட்டாளியர்களிடத்தில் மார்க்சோ பிறரோ எதிர்பார்த்த அளவு புரட்சி உணர்வு பொங்கி வழியவில்லை. கூலி உயர்வுதான் அவர்களுடைய குறிக்கோளாகிவிட்டது. கொடுமை என்னவென்றால் கூலி உயர்வு கேட்டு ஒன்றிணைந்த பாட்டாளியர் மனித உறவு மேம்பாடு நோக்கி நடைபோடுவதற்குப் பகரம் கேள்விமுறையற்ற தம் நடத்தைக்கு பாட்டாளியர் அமைப்புகளின் வலிமையைப் பயன்படுத்திவருகின்றனர். நாட்டிலுள்ள அனைவரும் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடின்றி சங்கங்கள் அமைத்து ஒருவர் மற்றவரைத் தாக்கவும் மற்றவர் தாக்குதலிலிருந்து தப்பவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தப் பின்னணியில் கட்டற்ற ஒரு காட்டாட்சியை நோக்கி மனித குலம் விரைந்து நடைபோட்டுச் செல்கிறது. இந்தக் கொந்தளிப்பில் உலகின் மிகப்பெரிய செல்வக் குவிப்பாளர்கள் கேள்வி கேட்பாரில்லாத நிலையில் உலகச் செல்வங்களனைத்தையும் தங்கள் காலடியில் குவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தச் சிதைந்த சூழ்நிலையில் ஒரு மாற்றுச் சிந்தனைக்கு சில சிந்தனையாளர்களிடையில் ஆதரவு பெருகியது. உலகின் நிகழ்ச்சிகளுக்கு திட்டவட்டமான விதிகளோ, ஒழுங்குக்குட்பட்ட நடைமுறைகளோ கிடையாது; எனவே கடந்த காலம் எதிர்காலம் என்ற அடிப்படையில் எந்த முன்திட்டமும் தேவையில்லை, அவ்வப்போது என்ன நடைபெறுகிறதோ அதுவே உண்மை. கடந்த காலம் அல்லது வருங்காலத்தோடு அதற்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பது அந்தச் சிந்தனை. அந்தச் சிந்தனைக்கு இருத்தலியம் என்று பெயர். இந்தக் கோட்பாட்டை சார்த்தர் என்ற பிரஞ்சியர் கூறினார்.

அதே போல் உலகில் அமைப்பு விதிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. வெவ்வேறு பொருட்களுக்கு வெவ்வேறு அமைப்புகள் உண்டு. அவ்வமைப்புகளே அவற்றின் இயல்புகளைத் தீர்மானிக்கின்றன என்பது இன்னொரு சிந்தனை. இதற்கு அமைப்பியம் என்று பெயர்.

பொதுமை நாடுகளுக்கு வெளியேயுள்ள முதலாளிய நாடுகளில் தோன்றிய சிந்தனைகள் இவை. பாட்டாளியர் இயக்கம் என்ற பெயரில் தோன்றிய தொழிற்சங்கங்களின் பேயாட்டங்களின் விளைவாக இச்சிந்தனைகளுக்குப் படித்தோர் சிலர் நடுவில் ஒரளவு செல்வாக்குக் கிடைத்தது. இந்தச் சிந்தனை உடையவர்களை புதிய இடதுகள் என்று அழைத்தனர்.

இதற்கிடையில் உருசியாவில் தாலின் காலத்துக்குப் பின் ஒரு புதிய நிலை தோன்றியது. அமெரிக்கா தலைமையிலான முதலாளிய உலகின் படைத்துறை அச்சுறுத்தலை எதிர்த்து நிற்கத் தேவையான பொருளியல் வலிமையை உருசியாவால் பேண இயலவில்லை. எனவே உலகிலுள்ள பிற நாடுகளோடு ஓர் இயல்பான உறவு நிலையைப் பராமரிக்கும் தேவை அதற்கு உருவானது. அதுவரை பொதுமை அனைத்துலகியம் என்ற அமைப்பின் கீழ் பல்வேறு நாடுகளிலுள்ள பொதுமைக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயற்பட்டன. முதல் இரண்டு அனைத்துலகியங்களுக்குப் பின் மூன்றாம் அனைத்துலகியம் லெனினால் உருவாக்கப்பட்டு உருசியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவந்தது. உருசியாவிலிருந்து வரும் ஆணைகளின் படியே உலகியத்தின் கீழ் இயங்கி வரும் எந்த நாட்டின் பொதுமைக் கட்சியும் செயற்பட்டு வந்தது.

அதுவரை உலக நாடுகளின் பொதுமைக் கட்சிகளுக்கு அனைத்துலகியம் வகுத்துக் கொடுத்திருந்த செயல்திட்டம் ஒரே வகையானதுதான். தத்தம் நாடுகளில் ஆயுதந்தாங்கிய புரட்சிகளின் மூலம் ஒரு பொதுமை அரசை நிறுவ வேண்டும் என்பதுதான் அது. இந்த அமைப்பில் சோவியத் உருசியாவின் நலன்களுக்கேற்ப நெளிவு சுளிவுகள் உண்டு.

எடுத்துக்காட்டாக, இந்தியப் பொதுமைக் கட்சித் தலைவர் திரு.எம்.என்.ராய் என்பவர் இந்தியப் பொதுமைக் கட்சியை அனைத்துலகியந்நில் சேரத்துக் கொள்ளுமாறு லெனினைச் சந்தித்துக் கேட்டுக் கொண்டார். ஆனால் லெனினோ இந்தியப் பொதுமைக் கட்சியைப் பிரிட்டனின் பொதுமைக் கட்சியுடன் சேர்ந்துகொள்ள அறிவுறுத்தினார் . பல முனைகளிலும் வல்லரசுகளின் பகைமையினால் துவண்டிருந்த இளம் சோவியத்து அரசுக்குச் சிறிது கால இடைவெளி தேவைப்பட்டதால் லெனின் பிரிட்டனின் எதிர்நடவடிக்கைக்கு அஞ்சி இதைச் செய்திருக்க வேண்டும். கோட்பாடுகளுக்கும் அக்கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கும் நாட்டின் அரசின் நலன் உட்பட்ட நலன்களுக்கும் வரலாற்றில் என்றென்றும் இருந்து வரும் முரண்பாட்டின் ஒரு நேர்வுதான் இது.
இரண்டாம் உலகப் போரில் வாகை சூடிவிட்ட சோவியத் நாட்டின் பொதுமைக் கட்சிக்கு இது போன்ற எச்சரிக்கை நடவடிக்கைகள் இப்போது தேவை இல்லை. எனவே உலக நாடுகள். அதிலும் புதிதாக விடுதலையடைந்த ஏழை நாடுகள் சோவியத் நாட்டையும் தத்தம் நாட்டுப் பொதுமைக் கட்சிகளையும் கண்டு நடுங்கின. இந்தச் சூழ்நிலையில்தான் தன் உள்நாட்டுப் பொருளியல் நெருக்கடியால் உந்தப்பட்ட தாலினுக்குப் பின்னைய உருசியா மூன்றாம் அனைத்துலகியத்தைக் கலைத்தது. அத்துடன் ஆயுதமேந்திய புரட்சியின்றி தேர்தல் மூலமாகவும் பொதுமைப் புரட்சியை எய்த முடியும் என்ற நிலைப்பாட்டைச் சோவியத்துப் பொதுமைக் கட்சி முன்வைத்தது.

இது போன்ற பின்வாங்கலை உள்வாங்க முடியாத பொதுமையினரும் பின்னாளில் மாவோவின் எதிர்ப்பால் உலகப் பொதுமைக் கட்சிகளில் ஏற்பட்ட பிளவுக்குக் காரணமாயிருந்தனர்.

இதற்குப் பிறகு தனியுடைமையை ஒழித்தல் போன்ற புரட்சிகரச் சிந்தனைகள் ஓரங்கட்டப்பட்டன. தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு முதலிடம் தரப்பட்டது. கூலி உயர்வு போன்ற பணம் தொடர்பான கோரிக்கைகளுக்கு வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களை நடத்துவதும் திரைமறைவில் முதலாளிகளிடமிருந்து கைக்கூலி பெறுவதும் வழக்கமாயின. நிலச் சீர்திருத்தங்கள், பங்கீட்டு அமைப்புகள் மூலம் மக்களுக்கு உணவுப் பண்டங்களை வழங்குதல்., தொழில் நிறுவனங்களை அரசுடைமை ஆக்குதல், என்று இயக்கத்தின் குறிக்கோள்கள் குறுக்கப்பட்டன.

தேர்தல்களில் எந்தவொரு நெறியுமின்றி வெவ்வேறு கட்சிகளுடன் மாறி மாறிக் கூட்டுச்சேர்தலிலும் பாட்டாளியர், ஒட்டுண்ணிகள் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் தொழிற்சங்கங்கள் அமைத்துக் கொடுத்து கூலி உயர்வு முதலியன பெற்றுத் தருவதிலும் கூலி பெறத் தொடங்கிவிட்டனர். மாவோவின் பெயரால் பிரிந்து சென்ற பிரிவினரிடமும் இதே தன்மைகள் காணப்பட்டன.

இதனால் வெறுப்புற்றிருந்த நேர்மையுள்ள சில மார்க்சியர்களிடையில் ஒரு புதிய கோட்பாடு பரப்பப்பட்டது. இது மாவோவின் பெயரால் பரப்பப்பட்டது. அந்தக் கோட்பாட்டைச் செய்தியாகப் பெற்றவர்களைக் கொண்ட இயகத்தின் பெயர் மார்க்சிய - லெலினியப் பொதுமைக் கட்சி என்பதாகும். இது மாவோவின் “மாபெரும்” பண்பாட்டுப் புரட்சியைத் தொடர்ந்து உருவானதாகும். இதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

″ஏழை நாடுகளிலுள்ள பொருளியல் அமைப்புக்கு அரை நிலக்கிழமையியம் - அரை முதலாளியம் எனப் பெயர் சூட்டப்பட்டது; இன்றைய குமுகியல் அமைப்பில் நிலக்கிழார்களே செல்வாக்குச் செலுத்துகிறார்கள்; இந்த நிலக்கிழார்கள் உலக வல்லரசு அமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்; அவர்கள் அந்த வல்லரசு அமைப்பால் வழிகாட்டப்படுகிறார்கள்; வல்லரசு என்ற வகையில் உருசியாவும் அமெரிக்காவும் ஒரே தன்மையுடையவை; ஏழை நாடுகளின் அரசுகளும் இவ்வல்லரசுகளாலேயே ஆட்டிவைக்கப்படுகின்றன; இந்த அரசுப் படைகளை நாம் தாக்கத் தொடங்கினால் இவ்வல்லரசுப் படைகள் தம் மறைமுக ஆதிக்கத்தைக் கை விட்டு வெளிப்படையாகவே வரும்.

“இந்த வல்லரசு எதிர்ப்புப் புரட்சியை நாம் மக்களின் எதிரிகளாகிய நிலக்கிழார்களைக் கொன்றொழிப்பதிலிருந்து தொடங்க வேண்டும்; புரட்சியாளர்கள் நிலக்கிழார்களின் முழு ஆதிக்கத்தின் கீழிருக்கும் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து அதனைத் தம் படைவலிமையால் கைப்பற்றி அதனைத் தம் தளமாக அமைத்துக்கொள்ள வேண்டும்; இந்த 'விடுவிக்கப்பட்ட பகுதி'யிலிருந்து நாம் பிற்போக்கு அரசுக்கு எதிரான நம் போராட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்” என்று ஒடியது இந்தக் கருத்ததுப் பரப்பல்.

இந்த அடிப்படையில் உலகிலுள்ள ஏழை நாடுகளிலெல்லலாம் தலைமறைவு இயக்கங்கள் நிறுவப்பட்டன. பொறுப்பாளர்கள் சீனத்துக்குச் சென்று பயிற்சி பெற்று வந்தனர் “அழித்தொழித்தலும்” “விடுவிக்கப்பட்ட பகுதிகளை” உருவாக்குவதும் முறையாக நடந்தேறின.

இந்தக் கருத்துப் பரப்பலிலும் இயக்கங்களை அமைப்பதிலும் அமெரிக்காவின் பங்கு என்ன என்பதற்குத் தெளிவான சான்றுகள் இல்லை. ஆனால் இந்தக் கருத்துப் பரப்பல் துவங்கிய காலத்திலேயே உருசியாவின் எதிரிகள் என்ற நிலையில் சீனமும் அமெரிக்காவும் நெருங்கிவந்துவிட்டன. உருவாக்கப்பட்ட இயக்கத் தொண்டர்களுக்கு உலகப் பாட்டாளியரின் முதல் எதிரி உருசியாவே என்று பாடம் உருவேற்றப்பட்டது.

“விடுவிக்கப்பட்ட பகுதி” உத்தி என்பது சீனப் புரட்சிக் காலத்தில் மாவோ கையாண்டு வெற்றி பெற்ற ஒன்றாகும். அப்போதைய சீனம் ஒரூ உண்மையான நிலக்கிழமை அரசியல் அமைப்பைக் கொண்டதாகும். அதாவது முழு ஆற்றலுள்ள ஒரு நடுவரசு இல்லாமல் ஆங்காங்குள்ள நிலக்கிழாரே தத்தம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவந்தனர். அவர்கள் தம்மைப் போன்ற அண்டை நிலக்கிழார்களுடன் நல்லுறவுகளைப் பேணுவதில்லை. எனவே இத்தகைய ஒரு நிலக்கிழமை அரசைப் புரட்சியாளர்கள் தாக்கினால் நடுவரசிலிருந்தோ அண்டை நிலக்கிழார்களிடமிருந்தோ எந்த உதவியும் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே மாவோவால் “விடுவிக்கப்பட்ட பகுதிகளை” உருவாக்குவதும் அவற்றைத் தளமாகக் கொண்டு புதிய பகுதிகளைப் பிடிப்பதும் எளிதாக இருந்தது .

ஆனால் முன்னாள் முழுக் குடியேற்ற(காலணி) ஆதிக்கத்துக்குட்பட்ட நாடுகளில் பொருளியலிலும் குமுகியலிலும் நிலக்கிழமைக் கூறுகள் மிகுந்திருந்தாலும் அரசுப்பொறி முழுமையாக நடுப்படுத்தப்பட்டிருந்தது. எங்காவது ஒரு மூலையில் ஒரு சிறு சலசலப்பு ஏற்பட்டாலும் அது உடனடியாக நடுவரசுக்கு எட்டிவிடும். ஒவ்வொரு மூலைமுடுக்கையும் எளிதில் சென்றடையும் வகையில் நடுவண் ஆதிக்கத்துக்கு உட்பட்ட படைகள் பரவலாக ஆயத்த நிலையில் வைக்கப்பட்டடிருக்கின்றன. இந்தக் காரணத்தால் இந்த “விடுவிக்கப்பட்ட பகுதி” உத்தி எதிர்மறையாகச் செயற்பட்டது. ஊக்கமும் உணர்வும் ஆற்றலும் நேர்மையும் புதியது படைக்கும் வேட்கையும் மிகுந்த இளஞர்களில் ஒரு கணிசமான தொகையினர் கைகளில் ஆயுதங்களுடன் வேறு எந்தப் பாதுகாப்பும் இன்றி நடுத்தெருவில் கொண்டு நிறுத்தப்பட்டனர். அனைத்து வசதிகளையும் கொண்ட அரசுப் படைகள் அவர்களை நாய்களைப் போல் சுட்டு வீழ்த்தின.

இந்த இளைஞர்கள் உள்ளூர் மக்களில் ஒரு சிறு பகுதியிரைத் தவிர பிறரனைவரிடமிருந்தும் அயற்படும் வகையிலான கருத்ததுகள் அவர்களுக்குக் கூறப்பட்டிருந்தன. வல்லரசுச் சுரண்டலினால் உடையோர், இல்லாதோர் என்ற பாகுபாடின்றி ஏழை நாடுகளில் மிகப் பெருந்திரள் மக்களும் சுரண்டப்படுகின்றனர். பண்டத்தைத் தம் நேரடி உழைப்பின் மூலமோ அல்லது உழைப்பை விலைக்கு வாங்கியோ உருவாக்குகிறவர்கள் நடுவில் பாட்டாளியர், உடைமையாளர் என்ற வேறுபாடு கற்பிக்கப்பட்டு, பாட்டாளியரே புரட்சிகரமானவர் என்ற கருத்து ஊன்றப்பட்டது. ஆனால் இந்தப் பாட்டாளியரே இது போன்ற ஒரு புரட்சிக்கான தொடக்க வலிமையை வழங்க இயலாதவர்கள். அதை வரலாற்றிலிருந்து தெரிந்தே வல்லரசுகளால் இவ்வாறு திட்டமிட்டு இந்த இஞைர்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள்.

இது போன்ற அழித்தொழிப்பில் சீனத்துக்கு எந்த ஆதாயமுமில்லை, ஏனென்றால் தனக்கு ஆதரவான ஒரு வலிமையான இயக்கம் ஒவ்வொரு நாட்டிலும் இருப்பதுதான் அதற்கு ஆதாயமாக இருக்க முடியும். ஆனால் வல்லரசுச் சுரண்டலை எதிர்க்கும் மக்களை அழித்தொழிப்பது வல்லரசுகளுக்கே ஆதாயம். இந்த வகையில் இவ்விளைஞர்களை அழித்தொழித்ததில் அமெரிக்க உளவுப் படையான நடுவண் ஒற்று நிறுவனம் பெரும்பங்காற்றியுள்ளது. உருசியா தன் பங்குக்கு இவ்விளைஞர்களைக் காட்டிக்கொடுக்குமாறு அவ்வந்நாட்டு பொதுமைக்கட்சிகளுக்கு அறிவுறுத்தியது. மாவோவின் புகழையும் மாவோயியத்தையும் பரப்புவது என்ற சீனத்தின் ஆர்வத்தை அமெரிக்கா பயன்படுத்தியிருக்க வேண்டும்.

இந்தியாவில் பொதுமை இயக்கத்தின் பங்கு
நாம் முன்பு குறிப்பிட்டபடி இந்தியப் பொதுமைக்கட்சி பிரிட்டனின் பொதுமைக் கட்சியின் ஒரு உறுப்பாகவே அனைத்துலகியத்தில் விளங்கியது. எனவே பேரவைக் கட்சியைப் போலவே அதுவும் புரட்சிகரமான வல்லரசு எதிர்ப்பைக் காட்டவில்லை. ஆங்காங்கே அரசின் அல்லது ஆளும் வகுப்புகளின் கொடுமை தாங்காது தாங்களாகவே மக்கள் தொடங்கிய எழுச்சிகளில் தாங்கள் எந்தப் பங்கும் ஆற்றாது அவ்வெழுச்சிகள் அரசால் ஒடுக்கப்பட்ட பின் அவை பாட்டாளியரின் புரட்சிகர நடவடிக்கைகள் என்று முத்திரை குத்திவந்தனர். ஏறக்குறைய அரை நூற்றாண்டுக் காலம் நடைபெற்ற இந்தய விடுதலைப் போரில் “ஆயதந் தாங்கிய” புரட்சியைப் பற்றி வானளாவப் பேசும் இந்தியப் பொதுமைக் கட்சியினர் எந்த வரையறுக்கப்பட்ட ஆயுதக் கிளர்ச்சியையும் நடத்தவில்லை. அது மட்டுமல்ல. ஏறக்குறைய 40 கோடி மக்கட் தொகையைக் கொண்ட இந்தியாவில் விடுதலைப் போராட்ட காலத்தில் ஒரேயொரு ஆயதந் தாங்கிய வன்முறைப் போராட்ட இயக்கங் கூட உருவாகவில்லை. அப்படி உருவாகிய ஒரேயொரு இயக்கமாகிய போசின் இந்தியத் தேசியப் படை முற்றிலும் இந்தியாவுக்கு வெளியிலேயே இயங்க வேண்டியிருந்தது. இது ஏன்?

இதற்கு நாம் பகத்சிங்கின் வரலாற்றை ஊன்றிப் படிக்க வேண்டும். இந்திய மக்களை விலங்குத்தனமாகக் கொன்றும் கொடுமைப்படுத்தியும் செயலாற்றிய வெள்ளை அதிகாரிகளைத் தன் தோழர்களின் துணையுடன் பழிவாங்கத் தொடங்கிய பகத் சிங் முதலில் சீக்கிய சமயத்தைக் கடைப்பிடிப்பவராயிருந்தார். பின்னர் மார்க்சியத்தால் கவரப்பட்டுப் பொதுமை இயக்கத்தில் இணைந்தார். சீக்கிய சமய அடையாளமாகிய தாடி, கொண்டை போன்றவற்றை அகற்றினார். பொதுமை இயக்கத்தின் உண்மையான இயல்பை அறியுமுன்னரே பகத்சிங்கை காந்தியின் தூண்டுதலால் வெள்ளையர்கள் தூக்கிலிட்டுவிட்டனர் .

எனவே பகத்சிங் பொதுமை இயக்கத்தால் உருவாக்கப்பட்ட ஒருவராகவே வெளி உலகுக்குக் காட்சியளிக்கிறார். ஆனால் “பொதுமைக் கோட்பாடுகளுக்கு மாறாக தனி மனிதத் துணிச்சலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அவரோடு அவரது நெருங்கிய தோழர்களும் உயிரை இழக்க வேண்டியதாயிற்று” என்று பகத்சிங்கின் மரணத்துக்கு அவர்கள் விளக்கம் தந்தனர். எனவே பகத்சிங்கின் வீரத்தினால் கவரப்பட்டுப் பொதுமை இயக்கத்தினுள் நுழைந்த இளைஞர்கள் திசைதிருப்பப்பட்டு உள்நாட்டுப் பணக்காரர்கள் மற்றும் நிலக்கிழார்களுக்கு எதிராகத் திருப்பப்பட்டனர். பொதுமை இயக்கத்தின் போராட்டம் பொது எதிரியான வெள்ளையர்களுக்கு எதிராக வலுப்பெறாமல் உள்நாட்டினுள் பிளவை ஏற்படுத்துவதாகவே இருந்தது. இதை மீறி யாராவது தீவிரமாக வெள்ளையரை எதிர்க்கத் தொடங்கினால் அவர்களை அழித்தொழிப்பதில் அவர்கள் தயங்கியதில்லை.

காந்தியின் முயற்சியினால் உருவான ஏற்பாட்டின்படி ஆட்சி அதிகாரத்தை இந்தியர்களின் கையில் வெள்ளையர்கள் ஒப்படைத்த பின்னர் அந்த அரசையும் அரசமைப்பையும் காப்பதே பொதுமைக் கட்சியின் நோக்கமாக இருந்தது. முன்னாள் தமிழகமான சென்னை மாநிலத்தில் 1952இல் பேரவைக் கட்சியை விட பொதுமைக் கட்சி அதிக சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருந்தும் பின்வாயில் வழியாக நுழைந்த ஆச்சாரியர்(இராசகோபாலாச்சாரி) அவரும் அவரது பற்றானர்களும் வழக்கமாகக் கூறும் “அரசியல், அறங்களை”க் காற்றில் பறக்கவிட்டுவிட்டு ஆட்சியமைத்த போது அதை எதிர்ப்பதில் போதிய கவனம் செலுத்தவில்லை. பேரவைக் கட்சியின் மறைமுக ஆரதவாளனாகவே கட்சி செயற்பட்டது.
.
1976-இல் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட போது இந்திரா காந்தியை அப்போது பிளவுபட்டுவிட்ட பொதுமைக் கட்சியின் “வலது” பிரிவினர் ஆதரித்தனர். அதற்கு அவர்கள் கூறிய அமைதி இந்திரா காந்தியும் பேரவைக் கட்சியும் தேசிய முதலாளிகளாகிய டாட்டா, பிர்லா, பசாசு, கிர்லோசுக்கர் போன்றோரில் நலன்களைக் காப்பவர்கள்; எனவே அமெரிக்காவாகிய வல்லரசின் தாக்குதலிலிருந்து இந்தியத் தேசிய நலன்களைக் காப்பதற்கு பேரவைக் கட்சியையும் இந்திரா காந்தியையும் அவர் குடும்பத்தையும் ஆதரிக்க வேண்டுமென்பதாகும்.

இடங்கைப் பிரிவுக்குச் சென்ற கட்சியினர் ஒரு நோக்கில் பார்த்தால் உருசியாவைத் தொடக்கத்திலருந்தே வெறுத்தவர்கள், பிரிட்டனை நேசித்தவர்கள். மூன்றாம் அனைத்துலகியம் கலைக்கப்படும் வரை இந்தியப் பொதுமைக் கட்சி பிரிட்டனின் நலனையே முதன்மையாகக் கொண்டிருந்தது. ஆனால் அனைத்துலகியம் கலைக்கப்பட்ட உடன் இந்தியக் கட்சி நேரடியாக சோவியத்துக் கட்சியின் செல்வாக்கினுள் வரவேண்டியிருந்தது. இது அவர்களுக்குக் கசப்பான பட்டறிவு. எனவே இந்த இக்கட்டிலிருந்து விடுபடக் காத்திருந்தனர். கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி சீனத்தின் பெயரில் ஐரோப்பிய முதலாளியத்தின் பக்கம் நின்றார்கள்.

இப்படி பிளவுபட்ட பொதுமைக் கட்சியின் பிரிவுகளும் கூட வல்லரசு நலன்களையே முதன்மையாகக் கொண்டிருந்தன. இன்னொரு வகையிலும் இந்த நம் முடிவு உறுதி பெறுகிறது.

மார்க்சும் ஏங்கல்சும் லெனினும் மாவோவும் வெறுத்தொதுக்கியது அவர்கள் “கற்பனை நிகர்மை” என்று கூறிய ஒன்றை. கற்பனை நிகர்மை என்பது ஆயுதந் தாங்கிய புரட்சி இன்றி தேர்தல்களில் பங்கேற்று சட்டமன்றங்களுக்குச் சென்று தொழிற்சாலைகளையும் தொழில்களையும் அரசுடைமையாக்கல், நுகர்பொருட்களை அரசே கொள்முதல் செய்து மக்களுக்குப் பொது வழங்கல், கூட்டுறவு அமைப்புகளின் கீழ் தொழில்களைக் கொண்டுவருதல், தொழிற்சங்கங்கள் அமைத்து தொழிலாளர் நலன்களுக்காகப் போராடுதல், வருமான வரி விதித்துப் பணக்காரர்களிடமுள்ள பணத்தைப் பிடுங்கி ஏழைகளுக்கு நலப்பணிகள் செய்தல் ஆகிய நடைமுறைகள் மூலம் ஏற்றத்தாழ்வற்ற ஒரு குமுகத்தை உருவாக்க முடியும் என்பதாகும். இந்த அணுகுமுறையுடன் அமெரிக்காவை நடுவமாகக் கொண்டு செயற்படும் அமைப்பின் பெயர் “நிகர்மை அனைத்துலுகியம்” என்பதாகும். இந்தியாவில் உள்ள நிகர்மைக் கட்சிகள் இவ்வமைப்பில் கீழ் இயங்குவனவாகும் .

நம் நாட்டுப் பொதுமைக் கட்சியும் இதே அணுகுமுறையைத்தான் கடைப்பிடிக்கின்றன. இரண்டுக்குமுள்ள வேறுபாடு பொதுமைக்கட்சி(வலதுமட்டும்) சோவியத் அணியையும் இடது பொதுமைக் கட்சியும், நிகர்மைக் கட்சிகளும் அமெரிக்க அணியையும் ஆதரிக்கின்றன.

மொத்தத்தில் ஐரோப்பாவில் தோன்றிய மார்க்சியம் தன் நோக்கமாகிய பொதுமைக் குமுகத்தை எய்த முடியாமல் அதே நேரத்தில் ஐரோப்பாவின் பொருளியல் ஆதிக்கத்தின் பிடியில் உழலும் ஏழை நாடுகள் அவ்வடிமைத்தளத்திலிருந்து விடுபடத் தேவையான சிந்தனைகளிலிருந்து அவர்கள் கவனத்தைத் திசைதிருப்பவே பயன்படுகிறது. வல்லரசியத்தின் ஆதிக்கதிலிருந்து விடுபடுவதற்காக போராடுவதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்காமல் ஏழை நாடுகளின் மக்களைத் தம்மிடையே பங்குச் சண்டையில் ஈடுபடுத்துகிறது. இந்த இடைவெளியில் மனித உரிமைகள், சுற்றுச் சூழல், ஆகியவற்றைக் காத்தல் என்ற பெயரில் வல்லரசியம் உள்ளே புகுந்து தன் ஆதிக்கத்ததை வலுப்படுத்துகிறது.

இந்திய வரலாற்றில் அசாத சத்ரு என்ற ஒரு மன்னன் இருந்தான். இவன் புத்தர் காலத்தவன். இவனிடம் அமைச்சனாக இருந்தவன் வசக்காரன் என்பவன். அப்போது அசாதசத்ருவின் பேரரசு விரிவாக்கத்துக்கு ஒரு குக்குல மக்கள்(லிச்சாவிகள் என்று நினைவு) தடையாக இருந்தனர். இதற்கு அவர்களிடையில் இருந்த குக்குல ஒற்றுமையே காரணம். இதை உடைக்க வசக்காரன் புறப்பட்டான். அசாத சத்ரு தன்னை இழிவு செய்துவிட்டதாகவும் எனவே அவனை விட்டுத்தான் வெளியேறிவிட்டதாகவும் அக்குக்குல மக்களிடம் கூறினான். அம்மக்கள் அவனை நம்பி அவனை நல்ல வசதிகளுடன் தங்களிடம் இருத்திக்கொண்டனர். வசக்காரன் குக்குலத் தலைவர்களுக்கு எதிராக அம்மக்களைச் சிறிது சிறிதாகத் தூண்டிவிட்டான். பொதுமக்களை விட அத்தலைவர்கள் பெற்றிருந்த சிறுசிறு சலுகைகளைக் காட்டி எங்களுக்கும் இவ்வசதிகள் வேண்டும் என்று கேட்கத் தூண்டினான். மக்களுக்கும் தலைவர்களுக்கும் பகையை உருவாகிவிட்டான். தாக்குதலுக்குக் கனித்திருந்த நிலையில் அசாத சத்ரு படையெடுத்து வந்து அவர்களை எளிதில் வென்று தன் பேரரசுடன் இணைத்துக்கொண்டான்.

இவ்வாறு வரலாற்றில் அடிக்கடி நிகழ்ந்துள்ளது. சிவனிய எழுச்சிக்கு முந்தைய தமிழகத்தில் புத்தமும் அம்மணமும் இதே பணியைத்தான் செய்தன. நாடுகளை அடிமைப்படுத்து முன் ஐரோப்பியர் கிறித்துவத்தை இப்படித்தான் பயன்படுத்தினர் அதையேதான் பொதுமைக் கட்சிகள் இன்று செய்து கொண்டிருக்கின்றன.

காலம், இடம் என்ற வேறுபாடு பார்க்காமல் எங்கும் எப்போதும் ஒரே முழக்கமாகப் பாட்டாளியப் புரட்சியைத் தந்த மார்க்சு, ஏங்கல்சு, லெனின், மாவோ ஆகியோரே மார்க்சியத்ததின் இந்த இழிநிலைக்குக் காரணம். மார்க்சியம் அதன் அடித்தளமாகிய இயங்கியல் அணுகுமுறையிலிருந்து அதனை விதைத்தவர்களாலேயே பிடுங்கி எறியப்பட்டது ஒரு வரலாற்று அவலம்.

இந்தியப் பொதுமைக் கட்சி அனைத்து வகையிலும் பிற்போக்காகவே செயற்பட்டு வந்திருக்கிறது. இந்திய அரசின் அளவுக் மீறிய அதிகார நடுவப்படுத்தலின் விளைவாக வெவ்வேறு பகுதி மக்கள் தனி மாநிலம் கேட்டும் தன்தீர்மானிப்புரிமை கேட்டும் போராடுகிறார்கள்.

தன்தீர்மானிப்புரிமை என்பது ஒரு நிலம் சார்ந்த மக்கள் அதாவது ஒரு தேசிய(இன) மக்கள் தாங்கள் தங்கள் தேசியத்துக்கு அப்பாற்பட்ட ஓர் அரசின் கீழ் இருப்பதா இல்லையா என்பதைத் திர்மானிக்கும் உரிமை. இந்த உரிமை மூன்றாம் அனைத்துலகியத்திலும் மூலக் கோட்பாடாக வைக்கப்பட்டது. உலக வரலாற்றில் தன்தீர்மானிப்புரிமை ஓர் அடிப்படை உரிமையாக வேண்டுமென்று நிலைநாட்டியவர் லெனினே. இந்த உரிமையைப் பற்றி வாயே திறவாதவர்கள் இந்தியப் பொதுமைக் கட்சியினர். ஏதோவொரு தேசிய மக்கள் இவ்வாறு போராடும் போது அது “பிரிவினைக் கூக்குரல்” என்றும் அது ஆயுதப் போராட்ட வடிவம் பெறும் போது “அரட்டலியம்” என்றும் முத்திரை குத்துவது இவர்கள் வழக்கம். ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்சிக்காகக் குரல் கொடுப்பது அவர்களது அகராதியிலேயே கிடையாது. மாற்றமே வளர்ச்சி என்பதை அடித்தளமாகக் கொண்ட மார்க்சியத்தின் பெயரால் கட்சி நடத்தும் இவர்கள் அரசியலிலோ, குமுகியலிலோ எந்த வித மாற்றத்தையும் முழு உணர்வுடன் எதிர்ப்போராகவே திகழ்கின்றனர்.

அரசியல் விடுதலை பெற்ற இந்தியாவின் பொதுமைச் கட்சியினரின் இரு நடவடிக்கைகள் அவர்களைப் பற்றிய பெரும் ஐயப்பாடுகளைக் கிளப்புகின்றன.

1. தொழிற்சங்கங்களைப் பயன்படுத்திப் பெரும் கோரிக்கைகளை முன்வைத்து நீண்ட வேலைநிறுத்தங்களைத் தொடங்குவார்கள். தொழிலாளர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறும் போது சமரசம் செய்துவிடுவர். இதில் முதலாளிகள், தொழிலாளர்கள் தரப்பிலிருந்து நிதி வெளிப்படையாகத் தண்டப்படுகிறது. பல நேர்வுகளில் இப்போராட்டங்களினால் பண்டங்களின் விலையை அல்லது பணிகளின் கட்டணத்தை முதலாளிகள் கூட்ட முடிகிறது. போட்டித் தொழில் நிறுவனத்துக்கு ஆதாயம் தேட முடிகிறது. இதன் மூலம் மறைமுகமாகச் கட்சித் தலைவர்கள் ஆதாயம் பெறும் வாய்ப்புள்ளது.

2. தேர்தல்களில் இந்தக் கட்சிகள் நடந்து கொள்ளும் முறை, ஆட்சி, குறிப்பாகத் தில்லியில் ஆட்சியமைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தக் கட்சிகள் என்றும் செயற்பட்டதில்லை. பிற கட்சிகளுடன் கூட்டுச் சேருவதிலும் எந்தவொரு நெறிமுறையையும் எந்த நோக்கத்தையும் குறிக்கோளையும் காணமுடியவில்லை, கூட்டிக் கழித்துப் பார்த்தால் பணம் என்ற ஒன்றைத் தவிர வேறெதையும் காண முடிவதில்லை.

இவையனைத்தையும் மீறி சில மார்க்சியச் சிந்தனையாளர்களின் பங்களிப்பை நாம் புறக்கணித்துவிட முடியாது. தேவிப் பிரசாத் சட்டோபாத்தியாயா, கோசாம்பி போன்ற ஆய்வாளர்கள் இந்தியச் சமூக வரலாற்றின் முகாமையான கூறுகளை ஆய்ந்து சிறப்பு மிக்க முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள், உலக வரலாற்று வரைவியலில் உள்ள அடிப்படைக் கோளாறுகளில் சிலவும் வட இந்தியச் சார்பு நிலையும் இருந்தாலும் இவ்வறிஞர்களின் பணி போற்றத்தக்கது. தாங்கள் தங்கள் சாதி நிலையிலிருந்து விடுபடாவிட்டாலும் கோட்பாட்டளவில் பார்ப்பனியத்தின் மூலவேரைக் கெல்லியெடுக்கத் தேவையான ஆய்வுப் பணிகளை இவர்கள் செய்துள்ளனர்.

தமிழகத்தில் மார்க்சியர்களின் பங்கு
தமிழகத்தில் மார்க்சியத்தின் அறிமுகம் சிங்காரவேலர் என்னும் அறிஞரிடமிருந்து தொடங்குகிறது. பொதுமைக் கட்சியின் அறிக்கையைத் தமிழில் மொழிபெயர்த்தார் அவர். அதனைப் பெரியார் வெளியிட்டார். பல ஆண்டுக் காலம் இருவரும் நெருங்கிப் பணியாற்றினர். தொழிலாளர்களின் சிக்கல், அறிவியல் வளர்ச்சி, மூடநம்பிக்கை எதிர்ப்பு, சமய நம்பிக்கை எதிர்ப்பு, இறைமறுப்பு தொடர்பான கட்டுரைகளை அவர் பெரியாரின் இதழ்களில் எழுதினார். பார்ப்பன எதிர்ப்பு என்ற வகையில் பெரியாரிடமிருந்து முரண்பட்டு சீவா போன்றோருடன் அவர் வெளியேறினார். நாளடைவில் பார்ப்பனர்கள், சிவனிய வேளாளர்களின் தலைமையின் கீழ் இயக்கம் சென்றது. சீவா முதலானிய எதிர்ப்பு என்பதை விட கம்பராமாயணப் பெருமை பேசும் இலக்கியவாதியாகத் திகழ்ந்தார். கட்சி அடிப்படையில் மேல்சாதி நலன்களைக் காப்பதற்காக வைத்த முழக்கம் பெரியார் இயக்கத்தின் பார்ப்பனிய எதிர்ப்பை முறியடிப்பதாயிருந்தது. பாட்டாளியருக்குச் சாதி வேற்றுமை கிடையாது என்று சாதியொழிப்பு முழக்கத்தை எதிர்த்தனர். அத்துடன் இறைமறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு முயற்சிகளையும் மறைமுகமாக எதிர்த்தனர்.

இவர்களின் புறக்கணிப்பையும் பொருட்படுத்தாமல் பெரியார் 1952 வரை நடைபெற்ற தேர்தல்களில் அவர்களை ஆதரித்தார். ஆனால் அந்த ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை பெறாத பேரவைக் கட்சிக்குப் பார்ப்பனரான ஆச்சாரியார் அமைச்சரவை அமைப்பதற்கு இடம் கொடுத்துப் பொதுமைக் கட்சியினர் ஒதுங்கிக்கொண்டனர். அதனால் வெறுப்படைந்த பெரியார் அன்றிலிருந்து பொதுமைக் கட்சியை எதிர்த்தார்.

தமிழகப் பொதுமைக் கட்சியினர் தமிழகம், தமிழக மக்கள், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு, தமிழக வரலாறு, தமிழகப் பண்பாடு ஆகிய அனைத்தையும் வெறுத்தனர், வெறுக்கின்றனர். வட இந்தியா, கங்கைச் சமவெளி ஆகியவற்றின் ஆதிக்கத்துக்கு உட்பட்டதாகவே தமிழகத்தின் வரலாற்றையும் மொழியையும் இலக்கியத்தையும், பண்பாட்டையும் பொருளியலையும் காட்ட விரும்புகின்றனர், அப்படியே எதிர்காலத்திலும் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றனர். எனவேதான் அவர்கள் திராவிட இயக்கத்திலிருந்து விலகி நின்றனர். அதனை கோட்பாட்டளவில் எதிர்த்து வந்தனர், ஒதுக்கி வைத்தனர்.

தமிழகப் பொதுமைக் கட்சியில் சிவனிய வெள்ளாளரும் பார்ப்பனரும் செல்வாக்குப் பெற்றிருந்தாலும் வெள்ளாளர்களின் கையே ஒங்கியிருந்தது. அதனால் மனம் புழுங்கியிருந்த பார்ப்பனர், கட்சி இடது, வலது என்று உடைத்த போது இடங்கைப் பிரிவின் பக்கம் சேர்ந்து நின்றனர்.

மூன்றாம் அணி என்ற ஒன்று உருவான பின்னர் அதற்குக் கோட்பாட்டு வடிவம் கொடுக்கவும் வழிகாட்டவும் துணைநின்றவர்கள் பார்ப்பனரே. குறிப்பாக அவர்கள் தொடங்கிய “படிகள்” என்ற இதழில் பலவகைக் கேள்விகளை எழுப்புவர். இக்கேள்வி ஒவ்வொன்றுக்கும் பல்வேறு விடைகள் கிளம்பும். இவ்வாறு கிளம்பும் விடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல் கட்சிகள் உடையும். இப்படி எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் அளிக்கப்பட்ட விடைகளுக்கும் இசைய முன்னூறுக்கும் மேற்பட்ட பிளவுகளாக மார்க்சிய - லெனியப் பொதுமைக் கட்சி என்றும் நக்சலியப் பொதுமைக் கட்சி என்றும் அழைக்கப்பட்ட மூன்றாம் அணி சிதறியது.

இந்தச் சிதறலுக்கும் தாக்குப் பிடித்து நின்ற கட்சி மக்கள் போர்க்குழு எனப்படும் பிரிவாகும். இதன் செயலார்வலர்கள் திராவிட கழகம், தனித் தமிழ் இயக்கம் போன்றவற்றிலிருந்து தமிழ் உணர்வு மிக்க இளைஞர்களைத் தந்திரமாக வசப்படுத்திக் தம் இயக்கத்தினுள் இழுத்துச் சென்று அரை நிலக்ககிழமைக் கோட்பாட்டை ஊட்டிக் கையில் துப்பாக்கிகளை எடுத்துக் கொடுத்து வெறியேற்றினர். அதன் விளைவாக வடாற்காடு மாவட்டத் திருப்பத்தூரிலும் தருமபுரியிலும் பல நூறு இளைஞர்கள் தமிழகக் காவல்துறையினால் நடுத்தெருவில் சுட்டுத்தள்ளப்பட்டனர்.
இது இப்படியிருக்க இன்னொரு புறம் பாட்டாளியக் கோட்பாடு தமிழகக் குமுகம் முழுவதும் ஊடுருவி நிற்கிறது. இளைஞர், முதியவர், கற்றோர், கல்லாதவர் என்று அனைத்துத் தளங்களிலும் ஆட்சிபுரிகிறது. இக்கோட்பாட்டை மனத்தளவில் ஏற்காதவர்களும், அதன் கேடுகளைப் புரிந்து கொண்டிருப்பவர்களும் கூட அதற்கெதிராகச் கருத்துரைக்கத் தயங்குகின்றனர். தொழிற்சங்க அடாவடித்தனங்களை மக்களெல்லோருமே வெறுக்கின்றனர். ஆனால் எதிர்த்துக் குரல் கொடுக்கத் தயங்குகின்றனர்.

இந்தியாவில் தமிழகத்துக்கு வெளியேயுள்ள மார்க்சியர்கள் தங்கள் தங்கள் மாநில வரலாற்றின் அனைத்துப் பரிமாணங்களையும் ஆய்வு செய்து நிலைநிறுத்துவதில் பாராட்டத்தக்க பணிபுரிந்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் மார்க்சியர்கள், அவர்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாயினும் தமிழக வரலாற்றில் அனைத்துத் துறைகளையும் கொச்சைப்படுத்துவதற்காக மார்க்சியத்தை எவ்வளவு தேவையானாலும் கொச்சைப்படுத்துவதற்கும் பளிச்சென்று தெரியும் உண்மைகளைக் கூட மறைப்பதற்கும், திரிப்பதற்கும் தயங்குவதில்லை. மார்க்சியர்கள் என்று தங்களைக் குறிப்பிடுவோரில் தமிழக வரலாற்றின் மீதும் மொழியின் மீதும் மக்கள் மீதும் மண்ணின் மீதும் அன்பு கொண்ட நானறிந்த ஒரேயொரு ஆய்வாளர் தோழர் குணா அவர்களே .

மார்க்சியர்களில் சிலர் திடீரென்று தாங்கள் தமிழ்த் தேசியத்தின் உரிமைகளையும் தனித்தன்மைகளையும் ஏற்றுக்கொள்வதாக முழங்குவர். ஆனால் அவர்கள் அனைவரும் தங்களை நம்பிப் பின்பற்ற வருவோரை நட்டாற்றில் விடுவதே வரலாறாக இருக்கிறது. இதற்கு யாரும் ஏற்க முடியாத காரணங்களைக் கூட அவர்கள் கூறத் தயங்குவதில்லை.

பொதுவாக தமிழகத்திலும் இந்தியாவிலும் மார்க்சியர்கள் அடுத்துக் கெடுப்பவர்களாகவே உள்ளனர். எந்த ஒரு புதிய இயக்கம் பெரிய அளவில் உருவானாலும் அவர்களுக்கு ஆதரவு தருபவர்கள் போல் நெருங்கி அவர்கள் புரட்சிகரமான திட்டம் எதையும் வகுக்க முடியாமல் நெருக்கி அவர்களைச் சிறுகச் சிறுகச் சிதைக்க வைக்கும் திருதராட்டிர அனணப்பில் பொதுமைக் கட்சியினர் வல்லவர்கள்.

திராவிட இயக்கம் வளர்ந்து வந்த போது எந்த அடிப்படையும் இன்றி அதனைப் புறக்கணித்து மறைமுகமாகவும் எதிர்த்தவர்கள் அதன் அடிப்படைக் கொள்கைகள் அனைத்தையும் கைவிட்டுப் பதவி ஒன்றே குறியென்று ஒடுங்கி நின்ற தி.மு.க.வுக்குத் தேர்தலில் கூட்டணி அளித்தனர்.

அது போன்றே வி.பி.சிங்கையும் அணைப்பது போல் அணைத்து அதனையும் வளரவிடாமல் செய்தனர். அவர்கள் உள்ளுக்குகள் ஒரேயொரு கட்சியை ஆதரிக்கின்றனர். அது பேரவைக் கட்சி.

தமிழகப் பொதுமைக் கட்சியும் இந்தியப் பொதுமைக் கட்சியும் இடைவிடாமல் பணியாற்றுவது இந்தியப் பேரவைக் கட்சிக்கும் இந்தியாவிலுள்ள பெருமுதலாளிகளுக்கும் உலகப் பெரும் வல்லரசியத்துக்குமாகும். என்னே மார்க்சியத்துக்கு ஏற்பட்டுவிட் ட கேடு!

பொதுமைக் கட்சியினர் தமிழகத்தில் செய்துள்ள ஒரு பெரும் நற்செயலையும் சுட்டிக்காட்ட வேண்டும். “உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்ற ஒரு முழக்கத்தை அவர்கள் முன்வைத்தனர். உழுபவனாகிய உழுதொழிலாளிக்கா அல்லது பயிரிடுவோனாகிய குத்தகைக்காரனுக்கா என்ற தெளிவை அவர்கள் இன்றுவரை ஏற்படுத்தவில்லை. இந்த முழக்கத்தினால் அரசு நடைமுறைப்படுத்திய நில உச்சவம்புச் சட்டத்தினால் எந்த ஓர் உழுதொழிலாளியும் பயனடையவில்லை. ஆனால் குத்தகை ஒழிப்புச் சட்டத்தினால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த எண்ணற்ற மக்கள் தாங்கள் பயிரிட்ட நிலங்களைப் பெற்றனர். நிலத்தைக் தம் வாழ்நாளில் எட்டிக்கூடப் பார்த்திராத மேற்சாதி “விவசாயிகள்” பிடியிலிருந்து நிலங்கள் விடுபட்டது ஒரு பெரும் முன்னேற்றம்.

இந்தப் புதிய உடைமை மேம்பாட்டோடு திராவிட இயக்கம், அம்பேத்காரின் பணி ஆகியவற்றால் கல்வியறிவும் பெற்றுவிட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று ஒரு வலுமிக்க முற்போக்கு விசையாக வளர்ந்ததிருப்பதில் தமிழகப் பொதுமைக் கட்சியின் பங்கை மறுக்க முடியாது. அதே வேளையில் இதன் உடன்விளைவாக அச்சாதி இளைஞர்களிடையில் வேரூன்றிவிட்ட பாட்டாளியக் கோட்பாடு அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தடையாகவும் நிற்கிறது.